பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 08, 2016

"சோ"ராமஸ்வாமி - அஞ்சலி


துரிதமான சாட்டையடி பதில்களுக்குச் சொந்தகாரர் “சோ” என்று பரவலாக அறியப்படும் ஸ்ரீநிவாஸன் ராமஸ்வாமி ஐயர். வழக்கறிஞராகத் துவங்கிய வாழ்க்கை, சட்ட ஆலோசகர், பத்திரிகாசிரியர், கதாசிரியர், நாடகாசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஆளுமையாக விளங்கியவர், தமிழக அரசியலில் ஏற்றாலும் இகழ்ந்தாலும் மு.க எவ்வாறு ஒரு தவிர்க்கவியலாத அளுமையாக இன்றும் விளங்குகிறாரோ, அதே போல் தமிழக பத்திரிகைத் துறையில், “சோ”வும் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக விளங்கியவர்.


இவர் தனது “துக்ளக்” இதழைத் துவங்கிய விதமே அலாதியானது. பொதுவாக தனது நாடகங்களில் அரசியல் நையாண்டி செய்வதை வழக்காமாகக் கொண்டிருந்த இவரை, இதெல்லாம் உன்னால் பேசத்தான் முடியும், எழுத முடியுமா என்று கேட்டதை சவாலாக எடுத்துக் கொண்டு ஒரு வீம்புக்காகத் துவங்கிய பத்திரிகைதான் “துக்ளக்”, 1970 ஆம் ஆண்டு ஜனவர் 14, பொங்கல் தினத்தன்று விளையாட்டாகத் துவங்கியது, இன்று 46 ஆண்டுகளைக் கடந்து, அடுத்த இதழ் வருமா என்று அவரது தீவிர வாசகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.


எதையும் நேரிடையாகவே எழுதுபவர், விமர்சிப்பவர், யாரையும் சார்ந்து தனது நிலையை வைத்துக் கொண்டதில்லை. தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்று பொதுவாக அவருடைய கடுமையான விமர்சகர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டு. அரசியலில் மொரார்ஜி தேசாய் துவங்கி, வாஜ்பாய், இந்திரா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, நரேந்திர மோதி வரை தனிப்பட்ட முறையில் பழக்கம் வைத்திருந்தவர், தவிர்க்க இயலாமல் ஜனதா கட்சியில் சிறிதுகாலம் உறுப்பினராக இருந்தார், மற்றபடி நேரிடை அரசியலில் அவர் தொடர்பெடுத்ததில்லை, ஆறு ஆண்டுகள் பாஜகவின் ராஜ்யசபை நியமன உறுப்பினராகவும் இருந்தார், அதுவே அவர் பாஜக சார்ந்தவர் என்று கூறுவதற்கு விமர்சகர்களுக்கு ஏதுவாக அமைந்தது.


இவரை இந்திய அரசியலின் நாஸ்ட்ரடாமஸ் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது, இந்திராவின் எமெர்ஜென்ஸியை முன்பே கணித்துக் கூறியதோடு மட்டுமல்லாமல், அதைக் கடுமையாக தனது துக்ளக் பத்திரிகை வாயிலாகத் தொடர்ந்து எதிர்த்தவர். இதழியல் தணிக்கை அமலில் இருந்த சமயம் இவரது இதழில் விளம்பரம் நீங்கலாக அனைத்துமே தணிக்கைக்குள்ளாக்கப்பட்டதால், ஒரு இதழில் சம்பந்தமே இல்லாமல் தமிழ் எழுத்துக்களை “கஙநியவலற” என்ற ரீதியில் இதழ் முழுக்க இட்டு நிரப்பி தணிக்கை அதிகாரிகளைத் திக்குமுக்காடச் செய்தார், இவ்வாறு எழுதியிருப்பதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது, இதன் மூலம் ஏதோ சொல்ல வருகிறார் என்று அந்த வார இதழ்கள் மொத்தத்தையும் இந்திரா அரசாங்கம் பறிமுதல் செய்து, இவரையும் விசாரணைக்கு சம்மன் செய்து விசாரித்ததில், எதை எழுதினாலும் தணிக்கை செய்வதால், உங்களை வேண்டுமென்றே அலைகழிக்கத்தான் இப்படி நிரப்பினேனேயொழிய மற்றபடி அதில் வேறேதும் இல்லை என்று சொன்னார்.’


அதே எமெர்ஜென்ஸி சமயம், இதழியல் தணிக்கையின் சமயம், தணிக்கை அதிகாரிகளிடம் சென்று, பத்திரிகை எடிட்டரான எனது பணியை நீங்கள் மிகவும் மெனக்கெட்டுச் செய்வதால், எனக்கான சம்பளத்தையும் நீங்களே எடுத்துக் கொள்வதுதான் முறையாக இருக்கும் என்று திகைக்க வைத்தவர். பின்பு இந்திரா காந்தியாலேயே ஒரு தினசரி துவங்கச் சொல்லி அழுத்தம் வந்தாலும், அதனை நாசூக்காக மறுத்தவர்.


சஞ்சய் காந்தி விமான விபத்தில் அகாலமாக உயிரிழந்திருந்த சமயம், இந்திரா காந்தி அரசாங்கம், சஞ்சய் காந்தியின் நினைவாக தபால்தலைகளை வெளியிட்டு கெளரவித்தது. அதற்கடுத்த துக்ளக் இதழில், சஞ்சய் காந்தியின் விமானத்தில் பயணம் செய்த பைலட் மற்றும் கோ பைலட் இவ்விருவரது புகைப்படங்களுடன் கூடிய தபால்தலைகள் இரண்டு பக்க அளவில் வெளியிடப்பட்டு, இந்திரா அரசு இவர்களை கெளரவிக்கத் தவறியதால், தாம் அவர்களைக் கெளரவிக்க எண்ணி இத்தபால் தலைகளை வெளியிட்டிருப்பதாகவும், தனது வாசகர்கள் அவற்றை தங்களது தபால் போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் விண்ணப்பம் விடுத்திருந்ததையடுத்து, அதனைப் பயன்படுத்தத் துவங்கினர், இந்தியத் தபால்துறையும், அவற்றை நிஜத் தபால்தலைகளாக எண்ணி அங்கீகரித்தது.


ஜெயலலிதாவின் 6 ஆவது வயதிலிருந்து அவருடைய மரணத்தறுவாய் வரை அவருடன் நட்பு பாராட்டியவர். 1996 தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த் ஆதரவுடன், திமுக-தமாக கூட்டணியை ஏற்படுத்தி, ஜெயலலிதா அரசாங்கம் வீழக் காரணமாக இருந்த போதிலும், அவர்கள் இருவரின் நட்பில் எந்த விரிசலும் ஏற்பட்டதில்லை, சோ மறைவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருந்த இரங்கற்செய்தியில் குறிப்பிட்டிருந்தது போல, பலருக்கு ஆசி வழங்கிய ஜெயலலிதாவே, தலைவணங்கி ஆசி பெறுபவர் என்று ஒருவர் இருந்தால், அவர் சோ-தான் என்று குறிப்பிட்டிருந்தது சற்றும் மிகையானதல்ல.


ஜெயலலிதாவின் 91-96 ஆட்சிக் காலத்து ஊழல்களைக் கடுமையாக விமர்சித்து எழுதியவர்; நான் எவரை ஆதரித்தாலும், அவர் ஆட்சிக்கு வந்த மறுகணமே அவரை விமர்சிக்கத் துவங்கிவிடுவேன், எனது பத்திரிகையே ஒரு எதிர்க்கட்சிதான் என்று கூறியவர். திமுக தலைவர் கலைஞரை விமர்சிக்காது வெளியான துக்ளக் இதழே இல்லை என சொல்லுமளவிற்கு எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கலைஞரது அரசியல் நிலைபாடுகளைக் கடுமையாக விமர்சித்தவர், ஆயினும், அவருடன் நெருங்கிய நட்பைப் பேணியவர்.


இவ்வாறான பெருமைகளுக்கெல்லாம் உரிய சோ இன்று நம்மிடையே இல்லை, அவரது இழப்பைக் குறித்து வேறு எது கூறினாலும் அவை வெறும் சம்பிரதாயமான வார்த்தைகளாகவே இருக்கும்.

- யதிராஜன் 

நாவில் சரஸ்வதி குடியிருக்கிறாள் என்றால், அவள் மலம் கழிப்பது எங்கே? என்ற திமுகவினரின் பிதற்றலுக்கு, தேர்தலில் சீட்டுக் கொடுக்க முடியாத தொண்டர்களுக்கு அவர்கள் தலைவர் இதயத்தில் இடம் கொடுக்கிறாரே, அவர் இதயமென்ன பொதுக் கழிப்பிடமா? - இது தான் சோ. 
Idlyvadai Team misses :(

3 Comments:

ஹரன்பிரசன்னா said...

இந்தக் கட்டுரையில், ஜெயலலிதாவுக்கும் சோவுக்கும் எந்நிலையிலும் விரிசல் ஏற்பட்டதில்லை என்பது தவறு. ஜெயலலிதா முதல்முறை சிறையில் இருந்தபோது தன்னை வந்து பார்க்கவில்லை என்பதால் கோபம் கொண்ட ஜெயலலிதா, சோவுடனான தனது நட்பை முறித்துக்கொள்வதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் எவ்விதமான உறவையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டார். தினமலரில் அந்த நீண்ட அறிக்கையைப் படித்தது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. சோ துக்ளக் இதழில் இதற்கான தெளிவான பதிலை சுருக்கமாக வெளியிட்டிருந்தார். தான் ஜெயலலிதாவைச் சந்திக்க முயன்றது தொடர்பான ஆதாரம் அதில் இருந்தது. சில மாதங்கள் இந்த விரிசல் நீண்டது என்பதாக நினைவு. பின்னர் சரியானது.

Cinema Virumbi said...

1996 தேர்தலில் பெரிய விரிசல் உண்டானது! "சோ தனக்குப் பிடித்தது என்று அடிக்கடி சொல்லும் சப்பளாக்கட்டையை எடுத்துக்கொண்டு கதா காலட்சேபம் செய்யப் போகலாமே" என்றார் ஜெ. கூடவே "என் நண்பர் என்று இனிமேல் சொல்ல வேண்டாம்" என்றார். "நான் இப்போது செய்யும் அரசியல் விமர்சகர் வேலையை விடக் கதா காலட்சேபம் செய்வது எவ்வளவோ மேல்!" என்றார் சோ.

சினிமா விரும்பி

நட்டகுழியார் said...

நிறைகளை மட்டுமே சொல்வது அஞ்சலிக் கட்டுரையாகிவிடாது. (http://contrarianworld.blogspot.com/2016/12/blog-post.html)
“பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, அப்படியே சென்றாலும் அவர்கள் நர்ஸ் அல்லது துவக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்குத்தான் லாயக்கு” போன்ற அ(ஆ)பத்தமான கருத்துக்களுக்கும் சொந்தக்காரர். ஜெயலலிதாவின் பல நிறுவனங்களுக்கு நிர்வாகப்பொறுப்பு வகித்தவர், ஆனால், அவைகளைப்பற்றி எழுதவோ, விவாதிக்கவோ எந்தநிலையிலும் தயாராக இல்லாதவர். RSS மற்றும் மோடியின் குறைபாடுகளை பேசுவதை/எழுதுவதை முற்றிலும் தவிர்த்தவர். இப்படிப் பல உண்டு.