பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 08, 2016

ஜெய சகாப்தம் - பகுதி 1 - எ.அ.பாலா

ஒரு பெண்ணாக, ஜெயா அடைந்த உயரம் மிக மகத்தானது. கோமளவல்லி (கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாளின் நாயகியின் பெயர்) என்கிற இயற்பெயரில், மேல்கோட்டையில் ஆரம்பித்த வாழ்க்கைப்பயணம், ஜெயலலிதாவாகி, சென்னை  சர்ச்பார்க், கோடம்பாக்கம்(உச்சத்தில் இருக்கும்போதே நடிப்பைத் துறந்தார்), அரசியல் (ராஜ்யசபா, அதிமுக தலவைர், எதிர்க்கட்சித் தலைவர்), தமிழக மக்கள் மனதில் புகுந்தெழுந்து 4 முறை முதல்வர் என்று வரலாறு படைத்து, அண்ணா, எம்ஜியார் போல முதல்வர் பதவியில் இருந்தபோதே காலமானார்.

1980-ல் கடலூர் மஞ்சக்குப்பத்தில் “பெண்ணின் பெருமை” மாநாட்டில் “பாரதி கண்ட புதுமைப்பெண்” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய மேடைப் பேச்சு அரசியல் வாழ்வுக்கு அச்சாரமாக அமைந்தது. சில மாதங்களிலேயே எம்ஜியார் ஜெயாவை, அதிமுகவின் பிரச்சாரச் செயலாளர் ஆக்கினார். எம்ஜியாரை தனது அரசியல் குரு/வழிகாட்டி என்று சொன்னபோதிலும், அவரை மதித்துப் போற்றியபோதிலும், எம்ஜியார் லெகசியில் (Legacy)  சிக்கிக் கொள்ளாமல், ஜெயா தன்னைத் தனித்துவமாகக் காட்டிக் கொண்டு, “அம்மா” வழியை அமைத்துக்கொண்டவர்.

எம்ஜியார் போலவே, கேரிஸ்மா (Charisma) என்பது மிக இயல்பாகவே அவரிடம் இருந்தபோதிலும், அவரது பல (ஏழை)மக்கள் நலத்திட்டங்கள் ஜெயாவின் பொதுத்தோற்றத்தை பிரம்மாண்டமாக்கி நிலைநிறுத்தின என்றால் அது மிகையாகாது. அந்த கேரிஸ்மா, பொதுமக்கள் மட்டுமன்றி, அரசியல் தலைவர்கள் பலரையும் அவர் சொன்னதை செவி கொடுத்துக் கேட்க வைத்தது. அவரது 69% இடஒதுக்கீட்டுக் (திராவிடத்தின் முக்கியமான) கொள்கைக்காக அவவருக்கு வீரமணியே “சமூக நீதி காத்த வீராங்கனை” என்ற பட்டம் வழங்கிய பின் அதைச் சிலாகித்து எழுதவேண்டிய அவசியமே இல்லை!

பன்மொழித் திறமையோடு அசாத்தியமான பேச்சாற்றல் மிக்கவர். தமிழக அரசியலுக்கு மிகவும் தேவையான ஒன்று. பள்ளிக்கல்வி வரையே படித்திருந்தாலும், நிறைந்த வாசிப்பால், ஆங்கிலத்தில் சரளமும், சொல்வன்மையும் நிறைந்திருந்ததால், தனது ஆரம்பகால ராஜ்யசபா நாட்களில், விவாதங்களில் அருமையாக உரையாடினார். பல வட இந்திய அரசியல் ஆளுமைகளிடமிருந்து மதிப்பும், மரியாதையும் எளிதாகக் கிட்டியது.  ஆங்கிலப்புலமை மிக்க குஷ்வந்த் சிங்கே “அம்மா” ரசிகர் தான்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில், அரசியல் ஆதாயத்துக்காக ஜெயா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் என்று கூறுபவர்கள், பிறிதொரு சமயத்தில், இலங்கைப் பிரச்சினையை வைத்து தமிழக மக்கள் வாக்களிப்பதில்லை என்றும் முரணாகப் பேசுவர். யதார்த்தம் என்னவெனில், யார் என்ன கூறினாலும், (முக்கிய விஷயங்களில்) ஜெயா சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் குணம் கொண்டவர். ஈழப்போரின்போதும், விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்னும், இலங்கைத்தமிழர் பட்ட பெரும் இன்னல்களைக் கண்டு, அரசியல் ஆதாயத்தைத் தாண்டி, ஈழ நலனில் அக்கறை கொண்டே, ராஜபக்‌ஷேவை கடுமையாகச் சாடி, ஈழத்தமிழர்க்கு முழு ஆதரவு என்ற நிலைப்பாட்டுக்கு மாறினார் என்றே எண்ணுகிறேன்.

I could go on and on in this vein but I now conclude with these words of Tennyson:

So many worlds, so much to do,
      So little done, such things to be,
But there is more than I can see,
    And what I see I leave unsaid

Jaya Intervention in Rajyasabha, Apr 25, 1984

 ஜெயலலிதாவிற்கு சசிகலா மாதிரி இட்லிவடைக்கு எ.அ.பாலா

1 Comment:

கௌதமன் said...

http://m.behindwoods.com/tamil-movies-cinema-news-16/gautami-writes-to-modi-seeking-answers-for-jayalalithaas-death.html