பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 11, 2016

திருவிழாக்கடைகள்

வருஷா வருஷம் திருவிழாக்களின் (முக்யமா தீபாவளியின்) போது சென்னை தி.நகர் களை கட்டிவிடும்(1). தி.நகர் முழுக்கக் கூட்டம்தான். கார், ஆட்டோவெல்லாம் போக முடியாது. போலீஸ் டிராபிக்கைத் திருப்பிவிடுவார்கள்(2) எல்லாக் கடைகளிலும் வண்ண வண்ணப் பொருட்கள் குவிந்துகிடக்கும்(2). பார்க்கவே மலைப்பாக இருக்கும். வண்ண வண்ணப் பொருட்களுடன், அந்தக் கடைப் பக்கம் நடந்து போனாலே பாசமாகக் கூப்பிட்டு "எதையாவது வாங்கிக்கொள்ளுங்கள்” என்பார்கள்.(4)
காலையில் கடையைத் திறக்கும் போது கூட்டம் இருக்காது. ஆனால் மாலை நேரத்தில் திடீரென்று கூட்டம் அதிகமாக வர ஆரம்பிக்கும். அதுவும் தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது என்றால் இக்கூட்டம் கட்டுக்கடங்கா.(5)

நல்லி, ஆர்.எம்.கேவி, சென்னை சில்க்ஸ் போன்ற கடைகளில் கொஞ்சம் மேல்தட்டு மக்கள் வருவார்கள்(6)

போத்தீஸ், சரவணா, ஜெயச்சந்திரன் போன்ற கடைகளில் சகலமும் கிடைக்கும். போதாக்குறைக்கு அவர்கள் கடை முன் அலங்காரம் வைத்து மக்களை கவர்க் செய்வார்கள். மிடில் கிளாஸ் மக்கள் வரும் கடைகள் அவர்களுக்கு ஏற்றார் போல விலை கம்மியாக இருக்கும். அங்கே இருக்கும் துணிகளில் கருப்பு, சிகப்பு என்று வண்ணங்களில் ரசனையே இருக்காது. ஜீன்ஸிலும் எம்பிராய்டரி போட்டிருக்கும். ஆனால் அதையும் வாங்க ஒரு கூட்டம் இருக்கும்.(7)

கலர் ப்ளஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப், சோச் போன்ற கடைகளில் கூட்டம் அதிகம் இருக்காது. ஏஸி காரில் வந்து பில்லைப்பற்றிக் கவலைப்படாமல் எதையாவது அள்ளிப்போட்டுக்கொண்டு செல்வார்கள்.(8)


ஒவ்வொரு முறையும் ஏதாவது பாப்புலராக இருக்கும். அது எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். ”சார் இது புது டிசைன்” என்று கடைக்காரர் நமக்குத் தவறாமல் காண்பிப்பார். மக்களும் தங்களுக்கு அது தேவைப்படுகிறதோ இல்லையோ எதிர்த்தவீட்டு அங்கிளோ ஆண்டியோ வாங்கிவிட்டார். ஆகவே நாமும் ஒன்று வாங்கலாம் என்று வாங்கிக்கொண்டு செல்வார்.(9)

இதில் என்ன கூத்து என்றால் நமக்கு நல்லா இருக்குமா என்று துளியும் யோசிக்காமல் சென்னை வெயிலுக்கு மான்யவார் குர்த்தா துப்பட்டாவுடன் வாங்குவது தான். (10)

லூயி ஃபிலிப், ஏரோ போன்ற பிராண்ட்களை நம்பி வாங்கலாம். விலை அதிகமாக இருக்கும். ஆனால் கொடுத்த காசுக்கு நிச்சயம் ஏமாற மாட்டோம். எவ்வளவு டிஸ்கவுண்ட் கொடுத்தாலும் அவை பெரும்பாலும் நல்ல சரக்காகவே இருக்கும். டிஸ்கவுண்டில் தருவதால் கிட்டதட்ட அந்த மாதிரிக் கலரில் அல்லது அதே கலரில் கூட இருந்தாலும் பேக்கிங் நல்லா இருக்கு என்று வாங்கிக்கொள்ளுவோம்.(11)

இதை தவிர கைக்குட்டை, சாக்ஸ், போர்வை ( 12) ஜட்டி, பனியன் போன்ற ஓபன் ஸோர்ஸ் வகையான (13) சமாச்சாரங்களும் ”டெய்லி யூஸ்” என்று வாங்கிக்கொள்வோம்.“ஏங்க வீட்டுல போன முறை வாங்கியது அப்படியே இருக்கு” என்று மனைவி சொல்வதைக் கேட்காமல் கடைகளில் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருப்பதை பார்க்கும் போது “இருக்கட்டும்” என்று வாங்கிக்கொள்வோம்.

இதை எல்லாம் வாங்கிக்கொண்டு வெளியே வரும் போது இப்டிப்பட்ட உரையாடல் கேட்கும்..
”இங்க பாருங்க நீங்க வாங்கின துணி போலவே இல்லை?”
“இது வேற” என்று நாம் கடக்க முயன்றாலும் “ஏம்பா இது என்ன விலை”
“இரண்டு நூறு ரூபாய்..சொல்லித்தரேன் எடுங்க”
“ஏங்க நூறு தானா ... நீங்க எவ்வளவுக்கு வாங்கினீங்க... ஆயிரமா ?”
“இது பார்க்க பழசு மாதிரி இருக்கு” என்று
“நீங்க வாங்கினதையும் துவைத்தா அந்த அழகுலதான் இருக்கும்” (14)

சில கடைகள் niche என்று சொல்லக் கூடிய வகை. உதாரணம் ராம்ராஜ் வேஷ்டி கடை. அங்கே ப்யூர் காட்டன் வேட்டிகள் விதவிதமாகக் கிடைக்கும். இதெற்கென்றே ஒரு கூட்டம் வரும். (15)

முன்பொரு காலத்தில் காலத்தில் niche ஆக இருந்த நாயுடு ஹால் மகளிருக்கு ஏற்ற விஷயங்கள் மட்டுமே விற்றார்கள். ஆனால் எப்போது "எல்லாம்" கிடைக்கும். மற்றவர்களிடம் வாங்கி விற்கத் தொடங்கிவிட்டார்கள். பிழைக்க தெரிந்தவர்கள் :-) (16)

அவ்வளவு ஏன் காதியில் கதர் விற்றவர்கள், லெமன் ஊறுகாய் விற்கத் தொடங்கிவிட்டார்கள் ( 17 )

இதைத் தவிர சில கடைகளில் நமது தூரத்து சொந்தம், அல்லது அலுவலக நண்பர் போன்ற எதிர்பாராத சந்திப்பு நடைபெறும்.
“அட நீங்களுமா ?” ”தீபாவளிக்கு வாங்காம இருக்க முடியாது பாருங்க....” என்று வழியும் போது மனைவி “வாங்குவாங்க அப்பறம் போடவே மாட்டாங்க.. வீட்டுல வந்து பாருங்க.. போன தீபாவளிக்கு வாங்கினது அப்படியே இருக்கு பில்லோட”இவங்க வாங்கும் பட்டுப்புடவை கல்யாணத்துக்கு மட்டும் தான்..” என்று ஆரம்பித்தால் “தினமும் கட்டிக்க முடியுமாங்க ?... நைட்டி தான் லாயக்கு” ”சரி நீங்க என்ன வாங்கினீங்க ?” பையை திறக்கும் போது “நல்லா இருக்கு சார்... உங்க டேஸ்டே தனி... “(18)

எது வாங்கினாலும், பில் போடும் போது “சார் உங்க போன் நம்பரை இங்கே எழுதுங்க” என்று கேட்கும் போது எழுதாமல் இருப்பது நல்லது. அப்படியே நம்மையும் மதித்து போன் நம்பர் கேட்கிறார்களே என்று அவர்களிடம் “பிஸினஸ் எல்லாம் எப்படி சார்?” என்று பேச்சுக் கொடுத்தோமென்றால் “எங்கே சார்... இரண்டு மூன்று நாளா மழை. கூட்டம் கம்மி. தீபாவளிக்கு இரண்டு மூன்று நாள் முன்னாடி கல்லாக் கட்டினாதான்” என்பார்கள். (19)

திருவிழா ஷாப்பிங் முடித்துவிட்டு வரும் போது வேர்த்து விறுவிறுத்துவிடும். ஏதோ போர்களத்துக்குச் சென்று வெற்றி பெற்ற களைப்புடன் திரும்புவது போல வெளியே தன்னிச்சையாக வந்தவுடன் அங்கே விற்கும் லெமன் சோடாவையோ, அல்லது மசாலா சோளத்தையோ, கோன் ஐஸ்கிரிமையோ சாப்பிட்டு வீட்டுக்கு திரும்புவோம்.(20)

இந்த மாதிரி அனுபவம் இன்னும் எவ்வளவு வருஷத்துக்கு என்று தெரியாது. ஏனென்றால் ஆன்லைனில் நமக்கு தேவையானவற்றை மட்டும் வாங்கக் கற்றுக்கொண்டுவிட்டோம். (21)

இந்த இரண்டு மூன்று மணி நேரமே நமக்கு தாங்கவில்லை. நாள் முழுக்க அங்கே பணி செய்பவர்கள் எப்படித்தான் வேலை செய்கிறார்களோ என்று மலைப்பாக இருக்கு. (22)

இன்று புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்த விளைவுதானிந்தப் பதிவு. ஷகிலா படம் ( அட போஸ்டர்தான் சார் ) பார்த்துக்கொண்டு இருந்த சமயம் பின்னாடி ஒரே சத்தம். என்னவென்று பார்த்தால் பாகவதர் புத்தகம் ரிலீஸாம். ஓடி வந்துவிட்டேன்.

பிகு: கீழே இருக்கும் நம்பருக்கும் மேலே இருக்கும் நம்பருக்கும் சம்பந்தம் இல்லை.

(1) சென்னை புத்தகக் கண்காட்சி
(2) இன்று நல்ல கூட்டம்.Good crowd today
(3) பல வண்ண வண்ண அட்டைப்படங்களுடன் புத்தகங்கள்.
(4) பல கடைகளில் “உள்ளே வாங்க சார்” என்றார்கள். கையைப் பிடிச்சு இழுக்காத குறை. குறிப்பாக டைம்ஸ் ஸ்டால்
(5) இன்னும் இரண்டு நாள் தான் இருக்கிறது கண்காட்சி முடிய.
(6) Oxford, IBH போன்ற ஸ்டால்கள்.
(7) நக்கீரன், இடதுசாரிகள், திராவிட ஸ்டால்கள்
(8) சங்க இலக்கியம் 30 வால்யூம், Encyclopedia Britannica போன்ற சரக்கு.
(9) அந்த வருடம் எதுக்கோ பேசப்பட்ட புத்தகம் அல்லது அவர்ட் வாங்கிய புத்தகம் அல்லது சர்ச்சையான புத்தகம்
(10) மொழிபெயர்ப்பு புத்தகங்கள்.
(11) கெட்டி அட்டையில் கல்கியின் பொன்னியின் செல்வன், தி.ஜா, போன்றவை
12) சமையல் குறிப்பு, ஜோதிடம்.
(13) நாட்டுடமை ஆக்கபட்ட நூல்கள்
(14) பழைய புக் ஸ்டால், சக்தி ஸ்டால் ( எதை எடுத்தாலும் 50 ரூபாய் )
(15) காலச்சுவடு, விருட்சம் போன்ற இலக்கிய கடைகள்.
(16) கிழக்கில் சூரியன் உதித்த காலம்.
(17) கவிதை விற்றவர்கள் ஷகிலா விற்கும் காலம்
(18) சந்திக்கும் செல்ஃபி நண்பர்கள்
(19) பதிப்பாளர்கள்
(20) விவேகானந்தா காபி, வெளியில் விற்கும் ரோஸ் கலர் கோன் ஐஸ், இன்ன பிற சமாசாரங்கள்
(21) டயல் ஃபார் புக்ஸ், டிஸ்கவரி போன்றவை
(22) சரக்கு மாஸ்டர்
இந்த பதிவு உங்களை ஈர்க்கவில்லை என்றால் ’காந்த எழுத்தாளர்’ போல மேக்னெட் வாங்கி முயற்சிக்கவும்.

Read More...