பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 27, 2015

இது தமிழ் சினிமாவின் மரபு – சந்திரன்


சென்னை வெள்ளம், கடலூர் வெள்ளம், தூத்துக்குடி வெள்ளம் எல்லாம் பின்னால் சென்று விட்டது. இப்போது இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகர் சிம்புவும் கூட்டாகச் சேர்ந்து இசையமைத்துப் பாடிய ‘பீப்சாங்’தான் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. அனிருத் சிம்புவுக்கு எதிராகப் பெண்கள் அமைப்புகள் ஒன்று திரண்டு நிற்கின்றன. இருவருக்கும் சம்மன் கூடப் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

ஆபாசம், அதுவும் வக்ரமான ஆபாசம் என்பது சினிமாவுடன்பிறந்தது. குளிக்கிற காட்சியை யதார்த்தமாகக் காட்டுகிறேன் என்று, கதாநாயகி நடிகைகளைத் தண்ணீரில் குளிப்பாட்டுவது, கதாநாயகியின் தலைமுதல் கால்வரை வர்ணித்துப் பாடுவது என்பது சினிமாவில் இன்று நேற்று ஏற்பட்ட சமாச்சாரமல்ல. தியாகராஜ பாகவதர் காலம் தொட்டு பெண்களை மலினப் படுத்துவது என்பது சினிமாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிம்புவும் அனிருத்தும் ஏதோ புதுசாகப் பெண்களை மலினப்படுத்தவில்லை. வக்கரித்துப்போன சினிமா கலாசாரத்தைத்தான் அவர்கள் தங்கள் பங்கிற்கு நிலை நாட்டியுள்ளார்கள்.

‘எடுத்துப் பார்த்த பழங்களிலே இம்மாம் சைசு பாத்தியா, கைக்கு அடக்கமா, கடிச்சுப் பார்க்க வாட்டமா’ என்று பணமா பாசமா படத்தில் கண்ணதாசன் இலந்தைப் பழத்தை வர்ணித்து எழுதினார். அவர் இலந்தைப் பழத்தைவர்ணித்தாரா, பெண்ணின் உடல் உறுப்பை வர்ணித்தாரா என்றுகண்ணதாசனுக்கும் தெரியும், தமிழ் சினிமா ரசிக மகாஜனங்களுக்கும்தெரியும்.



‘பிஃப்டி கேஜி தாஜ்மஹால் எனக்கே’ என்று கதாநாயகியின் உடல் எடையை வர்ணித்து வைரமுத்து எழுதினார். கவியரசு, கவிப்பேரரசு, எல்லா அரசுகளும் காதல், சிருங்கார ரசப் பாடல்களை எழுதுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல.

கட்டை வண்டிப் பாட்டில் ‘ஆடி ஆடி அலுத்த வண்டி’, ‘உக்கி போட்டு ஏறடி புள்ளே’ என்றெல்லாம் வாலி எழுதினார். இந்த மகா கவிஞர்கள், இசையமைப்பாளர்களின் வழியில் வந்த அனிருத்தும், சிம்புவும் பீப்சாங் எழுதாமல், மகாகவி பாரதி மாதிரி தாய்நாட்டை வாழ்த்தியா எழுதுவார்கள்?

அனிருத்தையும், சிம்புவையும் எதிர்க்கிற இதே பெண் அமைப்புகள், யுகயுகமாகத் தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளை விரட்டி விரட்டிக் காதலிக்கிற காதல் காட்சிகளையும், நடனம் என்ற பேரில் பெண்களை அரைகுறை ஆடைகளில் ஆட விட்டு, நடன அசைவு என்ற பேரில் நடன நடிகைகள் ஆபாச சைகைகளைச் செய்வதையும் ரசித்துத்தானே வந்திருக்கிறார்கள்?


பெண்களை இழிவுபடுத்துவதற்கு எதிராகப் போராடுவது என்றால், வெள்ளிக்கிழமை தோறும் ரிலீஸாகிற ஒவ்வொரு தமிழ்ப் படத்தையும் எதிர்த்தல்லவா போராட்டம் நடத்த வேண்டிய திருக்கும். இத்தனை காலமாக இதையெல்லாம் இந்தப் பெண்கள் குடும்பத்தோடு தியேட்டர்களுக்குச் சென்று ரசிக்கவில்லையா? பெண்களை இழிவுபடுத்துவது என்பது தமிழ்ச் சினிமாவுலகின் வாடிக்கை. இந்த வழக்கத்தைத்தான் இந்த அனிருத்தும், சிம்புவும் தங்கள் பங்கிற்கு செய்திருக்கிறார்கள். பெண்கள் மலினப் படுத்தப்படுவதை பெண்களே ரசிக்கிற தமிழகத்தில் இந்தத் திடீர் வீறுகொள்ளல், வேடிக்கையாகவும், புரியாத புதிராகவுமிருக்கிறது.
பெண்களைப் பல கவிஞர்களே, அதுவும் பெண் கவிஞர்களே இழிவுபடுத்தி ஆபாசமாக எழுதி வருவதெல்லாம் இந்தப் பெண் எதிர்ப்பாளர்களுக்குத் தெரியுமா, இல்லை தெரிந்தும் பாராமுகமாக இருக்கிறார்களா? பல சிறுபத்திரிகைகளில் எழுதுகிற பெண் கவிஞர்கள், தங்கள் மறைவான பகுதிகளை எல்லாம் குறிப்பிட்டு சர்வ சாதாரணமாக எழுதுகிறார்கள். ‘இலக்கியம்’ என்ற போர்வையில் அவையெல்லாம் அங்கீகரிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. இதைப் பற்றியெல்லாம் எந்தப் பெண் அமைப்புகளும் அங்கலாய்த்துக் கொள்வதில்லை, எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.

நான் அனிருத்தையும், சிம்புவையும் ஆதரிக்கவில்லை. ஆனால், ஆபாசம், பெண்களை அவமரியாதை செய்வது என்பது தமிழ் சினிமாவின், இந்திய சினிமாவின் மரபு. இந்த மரபை, இந்தப் பாரம்பரியத்தைத்தான் சிம்புவும், அனிருத்தும் பின்பற்றியிருக்கிறார்கள்.

நன்றி: துக்ளக்
இட்லிவடை மீண்டு வருகிறது :-)

Read More...