பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 16, 2015

2016 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவதால் என்ன பயன்? --- கல்யாண் ராமன்

அடுத்த தேர்தலில் திமுக வந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டைப் பற்றி சில விளக்கங்கள்.

முதலாவதாக, இந்த தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு புதியதன்று.

திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அரசியல் முழக்கம் எழுந்து பத்து ஆண்டுகள் சென்றுவிட்டன. சுருக்கமாக, 2006, விஜயகாந்த், தேதிமுக, 10% வோட் ஷேர். இந்த நிலைப்பாடு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. விசிக, பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் மதிமுக உருவாக்கியிற மக்கள் நலக் கூட்டணிக்கும் இதுதான் அடிப்படை.

இரண்டாவதாக, திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் இடையே பொதுவான அம்சங்கள் உண்டு. அவற்றில் சில பின்வருமாறு:


1. குறிப்பிட்ட எண்ணிக்கை பெரும்பான்மை கொண்ட சாதிகளின் ஆதிக்கக் கூட்டணி. (இவற்றில் 3 சாதிகளுக்கு அரசியல், சமூக, பண வலிமை மிக அதிகம். அச்சாதியினரின் தவறுகளை திமுக, அதிமுக இரண்டுமே அத்தனை கண்டு கொள்வதில்லை, கடுமையான நடவடிக்கை என்பதை எண்ணிப் பார்க்கக் கூட இயலாது)

2. அவர்களின் இலாபத்துக்காகவே வடிவமைக்கப்பட்ட அரசு கொள்கைகளும் செயல்பாடும்.

3. எதிலும், எங்கும் ரேட் போட்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்தல்

4. கல்வித் துறையில் அரசின் மெத்தனம்; தனியார் மயமாக்கல்; அரசுப் பள்ளி, கல்லூரிகளின் சீரழிவு; ஏழை, எளியவர்களுக்கு தரமான கல்வி மறுக்கபடுதல்

5. தலித் சாதியினருடன் அதிகாரப் பகிர்வு முற்றாக மறுக்கப்படுதல்; தலித்துகள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தடுப்பதில் சாதிமயம் ஆக்கபட்டிருக்கும் காவல்துறையின் செயலின்மை

6. சமூகத்தின் மேல்தட்டு மக்களின் மீது வரி சுமத்தாமல் வசதியாக டாஸ்மாக் மூலம் ஏழை எளியவர்களின் வாழ்வைச் சுரண்டுவதை அரசின் நிதி வளங்களுக்கு இன்றியமையாததாக ஆக்குவது

எனவே, தொடரும் இந்த அவலங்களுக்கு, திமுக திரும்பவும் ஆட்சிக்கு வருவதால் தீர்வு கிடைக்காது.

மூன்றாவதாக,

1989இல் தொடங்கி 2011 வரைக்கும் இரு திராவிட கட்சிகளுமே ஒவ்வொரு முறையும் மோசமாக தத்தம் ஆட்சியை நடத்தி மாற்றுக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்தன. தேர்தல் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வரும் என்ற நிச்சயப்பாடு இருக்கும்வரை நல்லாட்சியைத் தருவதற்கோ ஊழலை நிறுத்துவதற்கோ இரு கட்சிகளுக்குமே எந்தக் காரணமும் இல்லை. எனவே, முடிவற்றது போலத் தோன்றும் இந்த சுழற்சியை முடிக்கும் விதமாக மக்கள் நலன் விரும்பும் அனைவருக்கும் 2016-இல் திமுகவை எதிர்ப்பதற்கு எல்லாக் காரணங்களும் உண்டு. அதற்கு அதிமுக ஆதரவு என்று அர்த்தமாகாது என்பதை முளையைக் கசக்காமலேயே புரிந்து கொள்ள முடியும்.

இவ்வளவு இருந்தும் சிலபல திமுக ஆதரவாளர்கள் தாங்கள் ஏதோ முற்போக்காளர்கள் போல் சீன் போடுவதை கட்டவிழ்க்கவே இந்த விளக்கம். இவர்களின் இந்த பக்கச் சார்பு எதனால் விளைந்திருக்க்கூடும் என்பது ஊகத்தின்பாற்பட்டதே. மேற்படி அவலங்களைப் பற்றிய சீரியஸ் விவாதங்களை இவர்கள் தவிர்ப்பதிலிருந்து இவர்களின் சமூகப் பின்னணியை நாம் கண்டுகொள்ளமுடியும்.

திமுக எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சதியாக இவர்கள் ஏன் பார்க்கவேண்டும் என்று தெரியவில்லை. அந்த சாதியினருக்கு தமிழ்நாட்டின் தேர்தல் போக்குகள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எண்ணிக்கை பலமோ அரசியல் பலமோ இல்லை என்பது கண்கூடு. மேலும், இரண்டு கட்சிகளுக்குமே எதிரான பரந்துபட்ட செக்யூலர் அரசியல் உருவாகிக் கொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

எனவே, இந்த மாதிரி ”கும்பல்வாத” பூச்சாண்டி காண்பிப்பதை நிறுத்திவிட்டு, சமூகப் பிரச்சினைகளைப் பேசக்கூடிய அரசியல் அறிவையும், நேர்மையையும் வளர்த்துக்கொண்டால் எல்லோருக்கு நல்லது.

கல்யாண் ராமன் @kalyanasc

மைக் டெஸ்டிங் 1, 2, 3...

Read More...

Wednesday, November 04, 2015

விவாதச் சூழலை மாசுப்படுத்துவது யார்? மற்றும் உங்களால் .... போட முடியுமா ?


திரு.ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து:

ஜூலை, ஆகஸ்டு மாதங்களின் காலச்சுவடு இதழில் ஆ.திருநீலகண்டன் எழுதிய “திராவிடன் இதழில் அயோத்திதாசர்” என்ற கட்டுரை இரு பகுதிகளாக வெளியாகியிருந்தது. அயோத்திதாசர் மறைக்கப்பட்டதில் பெரியாருக்கும் திராவிட இயக்கத்திற்கும் தொடர்பிருந்ததாக முன்பு வெளிப்பட்ட தலித் தரப்பு விமர்சனங்களை தனக்குக் கிடைத்த தரவுகள் மூலம் அக்கட்டுரையாளர் எதிர்கொள்ள முற்பட்டிருந்தார். அக்கட்டுரை மீது நானெழுதிய எதிர்வினை கூட காலச்சுவடு இதழிலேயே வெளியாகியிருந்தது. ஆனால் என்னுடைய இப்பதிவு அக்கட்டுரை சார்ந்ததல்ல. மாறாக அயோத்திதாசர் தொடர்பான தலித் தரப்பு விமர்சனங்கள் இங்கு எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருந்தன? அவற்றை மறுக்கும் படியான திராவிடத் தரப்பு எழுத்துகள் வரும்போது அதுவரை மறைந்துகிடந்த எண்ணங்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன? என்பவற்றைப் பற்றியது.
ஜூலை மாதம் 21-ந்தேதியிட்ட தம் முகநூல் பக்கத்தில் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் மேற்கண்ட கட்டுரையின் முதல் பகுதியை (ஜூலை மாத காலச்சுவடு) பகிர்ந்திருந்தார். அவரின் சிறிய குறிப்போடு அக்கட்டுரை பகிரப்பட்டிருந்தது. அக்குறிப்பாவது : இந்துத்துவச் சக்திகள் பிற்படுத்தப்பட்ட மக்களையும் தலித்துகளையும் பிரித்து வைப்பதற்காகத் தொடர்ச்சியாக சொல்லிவரும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு ‘திராவிட இயக்கம் அயோத்திதாசரை திட்டமிட்டே மறைத்து விட்டது. உள்நோக்கம் உள்ள இந்தத் தவறான செய்தியை முறியடிப்பதாக உள்ளது திருநீலகண்டன் அவர்கள் எழுதியுள்ள இந்தக் கட்டுரை.

இக்குறிப்பின் மூலம் சாதி இந்துத்துவம் மற்றும் தலித்துகள் பற்றிய பொதுவான பார்வையையும், கட்டுரை பற்றிய குறிப்பான பார்வையையும் சுந்தர்ராஜன் வெளிப்படுத்திள்ளார். அதாவது அவரின் இப்பதிவு, சாதி பற்றிய சமகால எதார்த்தங்களையும் அதுதொடர்பாக தலித்துகள் எழுப்பி வந்திருக்கும் விவாதங்களையும் விமர்சனப் பூர்வமாகவேனும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அணுகுமுறையாக இருக்கிறது.
சாதியையும் அது தொடர்பான இன்றைய பிரச்சினைகளையும் முழுக்க பிராமணர்-பிராமணரல்லாதார் என்கிற இரட்டை எதிர்மறைக்குள்ளிருந்தே அணுகும் பார்வை அவருடையதாயிருக்கிறது. பொதுவாக தலித் அல்லாத ஆதிக்கச் சாதியினருக்கும் தலித்துகளுக்குமான சாதிய முரணை அதற்குரிய களத்தில் அல்லாது, தான் ஏற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நம்பிக்கையிலிருந்து இந்துத்துவப் பிரச்சினையாக மட்டுமே பலரும் பார்க்கின்றனர். இங்கு சுந்தர்ராஜனும் அவ்வாறுதான் பார்த்திருக்கிறார். இந்துத்துவம் என்பதைப் பார்ப்பனியம் என்று கொள்வது இத்தகு பார்வையின் விரிவு. மொத்தத்தில் ‘இன்றைய’ பிரச்சினைகளுக்குப் பார்ப்பனியம் என்கிற ‘வரலாற்றுக்’ காரணியை மட்டுமே காட்டுவது இதன் அடிப்படை.

இத்தகைய அணுகுமுறையால் பிராமணரல்லாத சாதிகளுக்கு வரலாற்றிலும் இன்றைய நிலையிலும் சாதியமைப்பில் இருக்கும் பங்கோ, அதனால் வரும் பயனோ சொல்லப்படாமல் போய்விடுகிறது. அவர்கள் (பாவம்) தூண்டப்படுவதாலேயே இதையெல்லாம் செய்கிறார்கள் என்கிற அர்த்தம் மட்டுமே மிஞ்சுகிறது. இது திராவிட இயக்கத்தின் சட்டகம். இதன்மூலம் ஒடுக்கப்படும் தலித்துகளின் பார்வையிலிருந்து சூத்திரர்கள் காப்பாற்றப்பட்டு பார்ப்பனர்கள் மட்டுமே குவிமையமாக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு வரலாற்றின் பேரில் தலித்துகளின் கோபம் பார்ப்பனர்கள் மீதே தொடர்ந்து தக்கவைக்கப்படுகிறது. அதே வேளையில் இதிலிருக்கும் சமகால எதார்த்தமின்மையையும் போலித்தனத்தையும் ஆராய்ந்து கேள்வியெழுப்புகிற தலித்துகள் இந்துத்துவத்திடம் ‘சோரம்’ போனவர்களாகக் காட்டப்பட்டு விடுகிறார்கள். இதிலிருக்கும் நுட்பமொன்றைக் கவனிக்க வேண்டும். தூண்டுகிறவர்கள் பார்ப்பனர்கள், சோரம் போகிறவர்கள் தலித்துகள் என்ற விமர்சனங்கள் சொல்லப்படுகிற அளவிற்கு இடையில் இருக்கும் சாதிகளின் நடைமுறை என்ன என்பது இதே அளவிற்கு எடுத்துக்காட்டப் படுவதில்லை. இவ்வாறு இந்துத்துவம் அல்லது பார்ப்பனியம் பற்றி அவர்களாக உருவாக்கி வைத்திருக்கும் சட்டகத்திலிந்துதான் அயோத்திதாசர் கட்டுரை பற்றிய இக்குறிப்பை சுந்தர்ராஜன் எழுதியிருக்கிறார்.

இதுவரை அயோத்திதாசரை முன்வைத்து திராவிட இயக்கம் பற்றி வெவ்வேறு அணுகுமுறையிலிருந்து விமர்சனம் எழுதியவர்கள் டி.தர்மராஜன், ரவிக்குமார் மட்டுமே. மற்றபடி சுந்தர்ராஜன் போன்றோர் கொண்டிருக்கும் சட்டகத்தின் படி ‘இந்துத்துவவாதிகள்’ என்று கூறப்படும் யாரும் அவற்றை எழுதவில்லை. ஆனால் சுந்தர்ராஜன் இந்த விமர்சனங்களைத்தான் ‘பிரித்துவைப்பதற்காக இந்துத்துவச் சக்திகள் செய்துவந்த குற்றச்சாட்டு’ என்று பொத்தாம் பொதுவாக ஒரு போடு போடுகிறார். இதுபோன்ற விவாதங்களில் குறிப்பான பெயர்களைச் சுட்டி விவாதிப்பதே நேர்மை. ஆனால் இப்பதிவிற்கு 40 பேர் விருப்பக்குறி இட்டுள்ளனர். இது திரிபு மட்டுமல்ல, அவரின் இந்தக் குறிப்பு எந்த விதத்திலும் அவர் படிப்பின் மூலமாக உருவாக்கிக் கொண்ட பார்வையாகவும் இல்லை. ஆனால் இங்கு படிக்காவிட்டால் என்ன?
இதையெல்லாம் கேள்விப்படும்போது தரவுகளைவிட கற்றுத்தரப் பட்டிருக்கும் அரசியல் நம்பிக்கைகளே போதுமானதாகிவிடுகிறது. இது போன்ற கருத்தை பார்ப்பனியமாகச் சொல்லும்போது, யாரும் ஆதாரம் கேட்கப்போவதில்லை, அப்படிதான் இருக்கும் என்று ஏற்கத் தொடங்கி விடுகிறார்கள். இந்த பொதுப்புத்தியை நம்பித்தான், தான் ஆராய்ந்திராத ஒன்றைப் பற்றி சுந்தர்ராஜன் இத்தகைய பதிவை எழுதியிருக்கிறார்.
இது தொடர்பான என் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு அவர் பதிவிற்கு கீழே பின்னூட்டத்தில் 2 கேள்விகளை எழுப்பியிருந்தேன். “அந்த இந்துத்துவச் சக்திகள் யாவர் என்று தெரிந்து கொள்ளலாமா? உங்களுடைய புரிதல் பற்றிய தெளிவிற்காகக் கேட்கிறேன்” என்பது நான் எழுப்பியிருந்த முதல்கேள்வி. அவரின் குறிப்பில் ‘தலித்துகளையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிரித்து வைப்பதற்கான இந்துத்துவச் சக்திகள்’ என்று குறிப்பிட்டிருந்தமையை வைத்து கேட்கப்பட்ட கேள்வி இது. ஆனால் இக்கேள்வியை எதிர்பாராத அவர் பெயர்களைச் சொல்லமுடியாததை மறைப்பதற்காக “பிறப்பால் உயர்வு தாழ்வு என்று சொல்லும் அனைத்து ஆதிக்க சக்திகளும் அவர்களை இயக்கும் தத்துவமும்” என்று இந்துத்துவம் பற்றிய வரையறையை கூறி ஒதுங்கிக் கொள்ள முற்பட்டார். ஒருவேளை இந்த விமர்சனங்களை எழுதிய தலித்துகளையே இந்துத்துவச் சக்தி என்கிறாரோ என்பதை தெரிந்து கொண்டலாவது அதன் தொடர்பில் விவாதத்தை மேற்கொள்ளலாம் என்றுக்கருதி, அடுத்த கேள்வியை மீண்டும் இப்படிக் கேட்டிருந்தேன்: கேள்வியைத் தெளிவின்றி கேட்டிருப்பின் மன்னிக்கவும். அயோத்திதாசர் சார்ந்த விவாதங்களைத் தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில், அத்தகைய குற்றச்சாட்டைச் சொன்ன இந்துத்துவவாதிகளின் பெயர்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

முதல் கேள்விக்குப் பொத்தாம் பொதுவாகவும் சாதுரியமாகவும் பதிலளித்த அவர், குறிப்பிட்டுக் கேட்டவுடன் இந்த இரண்டாம் கேள்விக்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை. இவ்வளவு ஆதாரமாகக் குறிப்பெழுதிய அவர் அதற்குப் பதில் எழுதியிருக்க வேண்டும். திராவிட இயக்கத்தை விமர்சித்தாலே ஆதாரமில்லாமல் அவர்களை இந்துத்துவ சக்திகளென்று முத்திரை குத்தும் போக்கு இங்கிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

இவற்றையெல்லாம் விட தலித்துக்களுக்கான முகவாண்மையே மறுக்கப்படுகிறது என்பதுதான் இது போன்ற விவாதங்களின் முக்கியமான பிரச்சினை. ஏற்பு-மறுப்பு என்பதைத் தாண்டி இந்த விமர்சனங்களை முதலில் தலித்துகளின் சுயசிந்தனைகளாகவோ விமர்சனங்களாகவோ பார்க்க மறுக்கிறார்கள். அவர்களை இந்துத்துவம் போன்ற ஒன்றே இயக்கமுடியும் என்று கருதுகிறார்கள். இவ்விடத்தில்தான் தலித்துகளின் ‘சோரம்’ என்கிற சிந்தனை இவர்களிடம் கண்ணுக்குத் தெரியாமல் வினையாற்றுகிறது. இவ்வாறு தலித்துகளின் சிந்தனைகளையோ விமர்சனங்களையோ சுயமானதென்று அங்கீகரிக்க மறுப்பது அவர்கள் மீது சமூகம் கொண்டிருக்கும் பொதுப்புத்திக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. தமிழில் தலித்துகளின் விமர்சனங்களை எதிர்கொள்ளும் எல்லாப் பதிவுகளும் இன்றைக்குத் தவறாமல் இப்பண்பையே கொண்டிருக்கின்றன. திராவிட இயக்கத்தின் பிராமணர்-பிராமணரல்லாதோர் என்ற சட்டகமே சுந்தர்ராஜனின் பார்வையாகவும் இருப்பதால் இப்பிரச்சினையை இவ்வாறு குறுக்கி அணுகியிருக்கிறார். சமூகச் சூழலில் கருத்தியல் மாசுகள் அண்டுவதற்கு ஏதோவொரு விதத்தில் தானும் துணைபோய்விட்டு, இயற்கைச் சூழலில் மட்டும் மாசுகள் அண்டாமல் இருக்கப் போராடுவது முழுமையானதல்ல என்பதை சுந்தர்ராஜன் தெரிந்து கொள்ளவேண்டும்.


திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து


தமிழகத்தில் ..... பன்றித்தனம் ...... அயோக்கியத்தனம் ..... ஈனத்தனம் (உங்களுக்குப் பிடிக்காத சாதிகளை/மதங்களை புள்ளி வைத்த இடங்களில் நிரப்பிக் கொள்ளுங்கள்) என்று சொன்னால் மனம் பதறி நாம் எத்தகைய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனப் பத்தி பத்தியாக எழுதும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் 'பார்ப்பன நரித்தனங்கள்' என்று யாராவது சொன்னால்/எழுதினால் அவர் முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டத் தயங்க மாட்டார்கள். தமிழகத்தில் மற்றைய சாதிகளை/மதங்களைச் சார்ந்தவர்கள் அனைவரிடமும் மனிதர்களுக்கு எத்தனை வேறு பட்ட குணங்கள் இருக்கின்றனவோ அத்தனையும் இருக்கின்றன, ஆனால் பார்ப்பனருக்கு கழிசடைக் குணங்கள் மட்டும் இருக்கின்றன என்பதை நிறுவ வேண்டிய தேவையே இல்லை என்று நினைப்பவர்கள்தான் இன்று தமிழகத்தின் பெரிய அறிவாளிகள் என்று சொல்லிக் கொண்டு உலவி வருகிறவர்கள். இவர்களிடமிருந்து எந்த நேர்மையையும் எதிர்பார்க்க முடியாது.

மஞ்சள் கமெண்டை யோசித்துக்கொண்டு இருக்கிறேன் :-)

Read More...