பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 30, 2015

சதீஷ் வாசன் எனும் @sathishvasan - அஞ்சலி

எனக்கு ஒரு 8 ஆண்டுகளாக, இணையம் வாயிலாக, மிக முக்கியமாக, ஒரு சக சுஜாதா ரசிகராக சதீஷ் வாசனைத் தெரியும். என்னை விடத் தீவிரமான சுஜாதா ரசிகர், அவரது எல்லா புத்தகங்களையும் வாசித்திருக்கிறார். இளவயது சுஜாதா புகைப்படம் தான் அவரது இணைய அடையாளம். அமைதி, கண்ணியம் மிக்க எளிமையான மனிதர். அதிர்ந்து பேச மாட்டார். யாரிடமும் விடாப்பிடியாக தர்க்கம் பண்ணிப் பார்த்ததில்லை. சமூக வலை என்பது கருத்துகளைச் சொல்ல, வாசித்தவற்றை பகிர்ந்து கொள்ள, விவாதச்சண்டை போட அல்ல என்றஅளவிலேயே இத்தனை ஆண்டுகள் இந்த மனிதரால் எப்படி எல்லாரிடமும் நட்பாகவே இருக்க முடிந்தது என்பது ஆச்சரியம் தான்.

அக்டோபர் 8-ஆம் தேதிக்குப் பிறகு டிவிட்டரில் 2 வாரங்கள் அவரைக் காணவில்லை. என்னடா ஃபேஸ்புக்கிலிருந்து நல்ல இடுகைகளின் சுட்டிகளை டிவிட்டரில் பகிரும் ஆளைக் காணவில்லையே, பணி புரியும் போட்ஸ்வானாவிலிருந்து விடுமுறையில் சென்றுள்ளாரோ என்று எண்ணியிருந்தபோது, @vivaji பகிர்ந்தஅவரது மறைவுச் செய்தி இடி போலத் தாக்கியது. மிக மிக வருத்தமடைய வைத்தது. இணைய, டிவிட்டர் நண்பர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது அந்த நல்ல மனிதனின் திடீர் அகால மரணம், வாசனுக்கு 40-45 வயது தான் இருக்கும். மிக நல்லவர்களை இறைவன் சீக்கிரம் அழைத்துக் கொண்டு விடுவான் போலும்!

சுஜாதா பற்றி ஏதாவது நல்ல கட்டுரை, இடுகை, செய்தி இணையத்தில் வந்தால், அதைப் பகிர்வது அவரது வழக்கம். இன்னபிற வாசிக்கத்தக்கவற்றின் இணைப்புகளையும் டிவிட்டரில் பகிர்ந்து வந்தார். இட்லிவடை வாசகர். எனது வைணவம் (குறிப்பாக ”தினம் ஒரு பாசுரம்” இடுகைகளை உடனுக்குடன் வாசித்து சிலவற்றை நெகிழ்ந்து பாராட்டியதை நினைக்கையில் மனம் கனக்கிறது :-( ), கிரிக்கெட், அரசியல் இடுகைகளின் வாசகரும் கூட. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர், டிவிட்டரிலிருந்து சில துளிகள்:
*****************************************
srinivasan @sathishvasan
”பிருகு பிராமணர்கள் “ - 28 Jun

anbudan BALA @AmmU_MaanU
@sathishvasan Link please - 28 Jun

srinivasan @sathishvasan
@AmmU_MaanU no big deal supposed to be ”பிறகு பிராமணர்கள் “
************************************************
சதீஷ் வாசன் என்கிற ஸ்ரீனிவாசனின் ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தார் இந்த பெரும் துக்கத்திலிருந்து மெல்ல மீளவும், அந்த வைகுந்த வாசனை பிரார்த்தனை செய்கிறேன். நீங்களும் பிரார்த்திக்கவும்.

--- எ.அ.பாலா

Read More...

Thursday, October 29, 2015

@sathishvasan - அஞ்சலி

சதீஷ் வாஸன் என்கிற ஸ்ரீநிவாஸன், ட்விட்டரில் அறிமுகமான நண்பர், தமிழ் நண்பர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட பழகுதற்கினியவர், அவரது பேச்சில் எப்பொழுதும் மெல்லிய நகைச்சுவையும், கிண்டலும் இழையோடும், சிரித்த முகத்துடன் இள வயது சுஜாதாவின் படத்தை முகப்புப் படமாகக் கொண்டவர், பெரம்பலூரைச் சேர்ந்த இவர் போஸ்ட்வானாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி போஸ்ட்வானாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் படுகாயமடைந்த இவர், 26 ஆம் தேதியளவில் மாரடைப்பால் காலமானார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் நேற்றிரவு கிடைக்கப்பெற்றது. நம்புவதா வேண்டாமா என்ற நிலையில், பேஸ்புக்கிலிருந்த அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமாக கேள்வியுற்றது நிஜம்தான் என உறுதி செய்யப்பட்டது. தவிர அவரது மனைவியும், வாஸனது ட்விட்டர் கணக்கு மூலமாக அவரது நெருங்கிய சகாக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

சமூக வலைத்தளத்தைத் தாண்டி நேரில் அறிமுகம் இல்லையென்றாலும், கடந்த சில வருடங்களாக பழகிய வரையில், அவரது இழப்பு உற்றாரது இழப்பைப் போலவே உணர வைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு இட்லிவடை சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற இரைஞ்சுகிறோம்.

- யதிராஜ சம்பத் குமார்





Read More...

Wednesday, October 28, 2015

@sathishvasan அஞ்சலி

 
அஞ்சலி  
 

Read More...

Wednesday, October 07, 2015

தனு வெட்ஸ் மனு - ரிடர்ன்ஸ்..(2015)

இது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த தனு வெட்ஸ் மனு படத்தின் தொடர்ச்சி.

படத்தின் டைட்டில் ஓடும்போதே பழைய படத்தின் கல்யாணக் காட்சியை ஒரு பாடல் முழுக்க காட்டி டைட்டில் முடிந்ததும் "4 ஆண்டுகளுக்குப் பிறகு..." என போட்டுவிட்டு படம் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது. பழைய படம் பார்க்காதவர்களுக்குக்கூட எந்தப்பிரசினையும் இன்றி இந்தப்படத்துடன் ஒன்ற முடியும் இந்த உத்தியினால்.

முதல் ஷாட் ஒரு மெண்ட்டல் அசைலத்தின் கவுன்சிலிங்கிற்காக கணவனும் மனைவியும் செல்கிறார்கள். (மாதவன், கங்கனா ராவத்)

கவுன்சிலிங்கில் இருவரும் மாறி மாறி குறைகளை அடுக்குகின்றனர். ஒரு கட்டத்தில் மாதவன் கோபத்தின் உச்சத்தில் கத்த, அவரை பைத்தியம்போல அழைத்துச் செல்கின்றனர். அந்த கவுன்சிலிங்கின்போது இருவரும் மாற்றி மாற்றி குற்றங்களை அடுக்கும்போது எழுதப்பட்ட வசனம் கலக்கல். எத்தனை ரவுடிப் பெண்ணாய் இருந்தாலும் பொதுஇடத்தில் பெண்கள் எப்படி அழகாக வேஷம்போடுவார்கள் என்பதைக் காட்டியிருக்கின்றனர்.

இருவரும் பிரிந்ததும் அடுத்தடுத்து நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை அழகாகக் கோத்ததில் திரைக்கதை எழுதியவர் கலக்குகிறார். அழகான வசனங்கள். டெல்லி ஹிந்தி தெரிந்திருந்தால் படம் இன்னும் நிறைய பிடிக்கும். குறிப்பாய் குசும் ஆக வரும் கங்கன ராவத்தின் இரண்டாவது வேடத்தில் வரும் கேரக்டர்.

டெல்லி மற்றும் வட இந்திய மக்களின் கலாசாரத்திற்கும், நமக்குமான இடைவெளியும் படம்பார்க்கும் மதராசிகளுக்குப் புரியும். டைவர்ஸ் என்றதும் மூலையில் போய் உட்கார்ந்துவிடாத கேரக்டர். நம்மூரில் அந்தப் பெண்ணுக்கு வாழாவெட்டி எனப் பெயரிட்டு நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ அசிங்கப்படுத்துகிறது சமூகம்.




டைவர்ஸ் ஆனாலும் மாதவன் மீதான அன்பு குறையாமல் இருப்பதை சில ஷாட்டுகளில் அருமையாக காண்பித்திருப்பார் இயக்குனர். மொபைலில் கல்யாண ஃபோட்டோக்களைப் பார்த்துக்கொண்டிருப்பது, ஃபோன் செய்து மன்னிப்புக்கேட்க முயல்வது, குசும் உடன் மாதவன் காதல்வயப்பட்டு கல்யாணம் செய்ய முடிவெடுத்ததும் காண்பிக்கும் உணர்ச்சிகள் என கங்கனா ராவத் என்ற நல்ல நடிகை தெரிகிறார்.

சுதந்திரமான பெண்களின் அடையாளமாக கங்கனா ராவத்தை காண்பிக்க இயக்குனர் முயன்றிருந்தாலும் காதலித்து மணந்துகொண்ட கணவனைப் பிரிந்திருப்பதைப் பொறுக்கமுடியாமல் இருப்பதையும் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு. அதே அலைவரிசையில் சுதந்திரமான பெண் என்பதைக் காண்பிக்க-- குடிப்பது, பழைய காதலனுடன் சுற்றுவது, வகைதொகையில்லாமல் ஆண் நண்பர்களுடன் பழகுவது, ஊர் சுற்றுவது, சினிமா செல்வது எனவும் காட்டி இருக்கிறார்.

படத்தில் கருத்தோ செய்தியோ சொல்ல முயலவில்லை இயக்குனர். ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க முயன்று வெற்றியும் கண்டிருக்கிறார்.

படத்தில் நகைச்சுவைக்கென தனி ட்ராக்கெல்லாம் கிடையாது. வட இந்திய மக்களின் வாழ்க்கையே கொண்டாட்டமாக, ஜாலியாக போவதை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதிலேயே நகைச்சுவைப் பகுதியும் இயைந்து வருகிறது.

கங்கனா ராவத்தின் தங்கைக்கு பெண்பார்க்க வரும் காட்சியில் ஒரே ஒரு டவலுடன் வந்து சபையில் உட்கார்ந்துகொண்டு மாப்பிள்ளையிடம் கேட்கும் கேள்விகளும், கடைசியில் இப்படிப்பட்ட ஆட்களுடன் வாழ்க்கை பயங்கர போர் அடிக்கும் எனவும், எவனுடனாவது ஓடிப்போ என தங்கைக்கு அறிவுரை சொல்வதையும் புதுமைப்பெண்ணுக்கு சொல்ல ஆசைப்பட்டிருப்பார்போல. அந்த காட்சியமைப்பும், நகைச்சுவையும் அருமை.

தபங் படத்தில் பிரகாஷ்ராஜின் தம்பியாக வந்து செத்துப்போகும் நடிகர் இதில் மாதவனின் தம்பியாக வருகிறார். நகைச்சுவை நடிகராக ஒரு சுற்று வர நல்ல வாய்ப்பிருக்கிறது. அவர் பேசும் புல்லட் ஸ்பீட் ஹிந்தியும், அடிக்கும் காமெடியும் கலக்கல். அவரது வாட்சப் காதலும், அதன் சொதப்பலும் அருமை.

மாதவன் அவர் அப்பாவாக வருபவரிடம் நான் டைவர்ஸ் வாங்கப்போகிறேன் எனச் சொல்லும்போது அவர் அப்பா சொல்லும் வசனங்கள்தான் இன்றைய பெருவாரியான குடும்பங்களின் நிதர்சனம். எவ்வளவு தூரம் சேர்ந்திருக்க முடியுமோ அவ்வளவு தூரம் சேர்ந்திரு என்பதே விஷயம். புதுசா வருபவள் உன்னை இப்படிப் படுத்தமாட்டாங்கிறதுக்கு என்ன நிச்சயம்? உங்கம்மாவும் நானும் கூடத்தான் எம்புட்டு தூரம் சேர்ந்திருக்க முடியுமோ அப்படி இருக்கிறோம்,

மாதவன் : நான் டைவர்ஸ் வாங்கலாம்னு இருக்கேன்..

அப்பா : ஏன்?

மாதவன் : எங்களுக்குள்ள பேசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை. சின்னச் சின்ன விஷயங்கள் கூட பெரிய சண்டையாய் ஆகிருது. அவளை நானோ இல்லை அவள் என்னையோ புரிந்துகொள்வதில்லை. என்னைய பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேர்த்துவிட்டது ரொம்பவே அதிகம்.

பப்பி (மாதவன் தம்பி) : நீ எப்படி பைத்தியக்கார ஆஸ்பத்திரியில போய்ச் சேர்ந்தே?

மாதவன் (அப்பாவிடம்): நானும் நாலு வருஷமா சமாளிச்சுட்டேன்,

அப்பா : எல்லோரும் அனுபவிக்கிறாங்க. நான் 40 வருஷமா சமாளிச்சிட்டிருக்கேன். உங்கம்மாவும் இப்படித்தான் சமாளிச்சிட்டிருப்பாங்க,

மாதவன் : அப்படின்னா?

அப்பா : அப்படின்னான்னா என்ன? சமாளி. அதுக்கும் மேல இது இருக்கு ( விஸ்கியைக் காண்பித்து) எப்பயாச்சும் தண்ணீர் சேர்த்து, அப்பப்ப சோடா சேர்த்து அடி..

பப்பி : அப்பப்ப நீட்டா ( தண்ணீர் சேர்க்காமல்) அடி..

அப்பா : டைவர்ஸ் ஆனபின் என்ன ஆகும்னு நெனைக்கிற? வாழ்க்கை முழுக்க தனியா இருக்கப்போறியா? தனியா இருந்தா போரடிக்கும் உனக்கு. இல்லைன்னா, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க. ரெண்டாவது கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டாவது பொண்டாட்டி உன்னைய சந்தோஷமா வச்சிருப்பான்னா நெனைக்கிற? மகனே, உலகத்தின் நியதி இது. ஆணும் பெண்ணும் காதலில் விழவேண்டும். அப்புறம், கல்யாணம், அப்புறம் ஒருத்தர் இன்னொருத்தரால போர் ஆகிருவாங்க,

பப்பி : சரியா சொன்னீங்க.. (சிரித்துக்கொண்டே)

அப்பா : இதனாலதான் சொல்றேன், எம்புட்டு தூரம் இழுத்துட்டுப் போகமுடியுமோ, போ. எப்ப தோத்துப்போறியோ, அப்ப முடிச்சிக்க.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் மாதவனின் அம்மா கத்திக்கொண்டே இருக்கிறாள், சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் வந்து சாப்பிடு, உனக்கு எடுத்து வைக்கிறதுக்கு இங்க உன் பொண்டாட்டி இல்ல, யார் லைட்ட போட்டுட்டு போறது, சர்மா ஜி மாத்திரை சாப்பிடுங்கன்னு விடாமல் கத்திக்கொண்டே இருக்கிறார்.

மாதவனுக்கும் , கங்கனா ரவத்தைப்போலவே தோற்றமளிக்கும் கல்லூரி சென்றுகொண்டிருக்கும் ஸ்போர்ட்ஸ் உமன் ஆன குசும் உடன் காதல் வருகிறது. மோதலில் வருகிறது காதல். காதல் வந்ததும் அதன் அடுத்த கட்டமாக இருவரும் போட்டிங் செல்கின்றனர். (குசும் பாஸ் ஆனதற்கான பார்ட்டி) அப்போது பாடும் I might be sentimental.. but, don't get so judgemental என்ற பாடல் முடியும்போது இருவரும் கிட்டத்தட்ட காதலர்களாய் ஆகியிருப்பர். இதில் விஷயம் என்னவெனில் மாதவனுக்கும் குசுமாக வரும் கங்கனா ராவத்துக்குமான வயது இடைவெளி. பப்பி ஒரு வசனமாகச் சொல்வான். அண்ணே, நீ கிராஜுவேஷன் முடிச்சிருக்கும்போது இவ பிறந்திருக்கக்கூட மாட்டா என.

இப்படி வயது வித்யாசம் இருக்கும்போதும் குசும் வீட்டில் அண்ணன் கல்யாணத்திற்கு சம்மதிப்பான். அண்ணியும்கூட வேறொரு பையனை பார்த்து வைத்துவிட்டதால் வேண்டாம் எனச் சொல்வார். நம்மூரில் இதெல்லாம் சொன்னாலே சிரிப்பார்கள். திக்விஜய் சிங் செய்தது நம்மளவில் பெரிய அநியாயம், ஆனால், வட இந்தியாவில் இது பெரிய விஷயமாய் விவாதிக்கப்படவில்லை என்பதை நாம் பார்த்திருக்கலாம்.

கங்கனா ராவத் மீண்டும் முதல் காதலனுடன் சுற்ற ஆரம்பிக்கிறாள். கடைசியில், அவனுக்கு நிச்சயமாகி இருக்கும் பெண்ணைத்தான் மாதவன் காதலித்துக்கொண்டிருப்பார். இது விஷயமாக கங்கனா ராவத்துக்கும், பழைய காதலனுக்கும் நடக்கும் உரையாடல்.

தனு : என்னாச்சு, ஏன் இம்புட்டு கோபமா இருக்க?

காதலன் : உன் பழைய புருஷன் டாக்டர் என் வாழ்க்கையில் மீண்டும் வந்துவிட்டான். இம்முறை அவனை சும்மா விடமாட்டேன், சுட்டுத்தள்ளத்தான் போகிறேன்.

தனு : ஏன் திட்டிக்கிட்டிருக்க, என்ன நடந்துச்சுன்னுதான் சொல்லேன்.

காதலன் : நாலு வருஷம், நாலுவருஷம் ஒரு பொண்ணத் தேடினேன்.அவள பாத்ததும் இல்ல, பேசுனதும் இல்ல, நேரா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன். ஏன்? அவளுக்கும் உன்னையப் போலவே முகம். சரி நீதான் இல்லை, உன்னைய மாதிரி இருக்குறவளையாவது கட்டலாம்னா, உன் புருஷன் அதுக்கும் விடமாட்டான் போல. ராஸ்கல், ஒரிஜினலும் அவனுக்குத்தான் வேணும், டூப்ளிகெட்டும் அவனுக்குத்தான் வேணும்..



மாதவன் தான் மனுவாக. மனு இப்படிச் செய்திருக்கிறான் என்றதும் இருக்காதே என்ற நப்பாசையில் எப்படி என ஒவ்வொரு கேள்வியாய் கேட்க கடுப்பாகும் முன்னாள் காதலன் கடைசியில் "ஏ தனுஜா த்ரிவேதி, உன் புருஷன் உன்னைய ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணுகூட சுத்திட்டிருக்கான். அதுல என் வாழ்க்கையிலும் மண்ணள்ளிப்போட்டுட்டான்.." என முடியும்.

படம் முழுக்க அழகான ஒளிப்பதிவும் நல்ல பின்ணணி இசையுமாக இருக்கிறது. ஒளிப்பதிவு பளிச்சென இருப்பதே ஓர் அழகைக் கொடுத்துவிடுகிறது. பாடல்களும், அதனை படமாக்கியிருக்கும் விதமும் அருமை.

என்னதான் கதையில் இத்தனை சண்டை சச்சரவும் இருந்தாலும், ஒருவருக்கொருவர் டைவர்ஸ் வரை சென்றாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பிரிந்திருப்பதை மனதின் அடியாழத்தில் வெறுக்கின்றனர் என்பதால் இறுதியில் சேர்வதன் மூலம் மங்களம். இரண்டாவது காதலியாக வரும் கங்கனா ராவத்தை (குசும்) அதற்கேற்றார்போல கேரக்டரைசேஷன் செய்திருப்பார்கள். நான் ஒன்னா, ஜெயிப்பேன், இல்லைனா தோப்பேன், ஸ்போர்ட்ஸ் உமன் ஆன எனக்கு ஆறுதல் பரிசில் எல்லாம் இஷ்டமில்லை எனச் சொல்லிவிட்டு கல்யாணப் பந்தலிலிருந்து இறங்கிச் செல்வாள்.

குசும் ஆக வரும் கங்கனா ராவத்தையும், தனுவாக வரும் கங்கனா ராவத்தையும் இரு துருவங்களாக ஒப்பனை செய்ததிலும், பாத்திர வடிவமைப்பு செய்ததிலும் இயக்குனரின் திறமை தெரிகிறது. குறிப்பாய் கிராமப்புற ஹிந்தி பேசும் குசும், கான்பூர்வாலி ஹிந்தி பேசும் மனு. பெரும்பாலும் கிராமப்புற உடையணிந்து டெல்லியில் சுற்றும் பெண்ணாக குசும், நவநாகரீக உடையணியும் தனு என, தலைமுடி ஒப்பனையில் இருந்து, உடல் அசைவுகள் வரை, முக ஒற்றுமை தவிர வேறெதுவும் கொஞ்சம்கூட ஒட்டாத அளவு பாத்திர வடிவமைப்பு செய்திருக்கிறார். அதிலும் குசும்மின் குரலும் ஹிந்தி பேசும் வேகமும் அருமை.

நம்மூரின் சாக்லேட் பாய் மாதவன் அங்கேயும் அவ்வாறே. ஒரு சண்டை கூட இல்லாமல் குரலுயர்த்திக்கூட பேசும் வாய்ப்பில்லை. ஆனால், படம் முழுக்க தன் இருப்பை அழகாக பதிவு செய்கிறார். தமிழ் சினிமாதான் அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

ஏன் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் எனத் தெரியவில்லை. நான் நினைத்ததை, உணர்ந்ததை எழுதியதாகவும் தெரியவில்லை. எழுதாமற்போனாலும் ஒன்றும் ஆகிவிடாது, ஆனால், எழுதாமல் இருப்பது நான் ரசித்த நல்ல படத்தைக்குறித்து நாலுபேருக்கு சொல்ல வேண்டியதைச் சொல்லமுடியாமல் போகும்.

அவசியம் பார்த்தேயாகவேண்டிய வாழ்க்கையைப் புரட்டிப்போடும் சினிமாவா? இல்லை.

பின்னே, அருமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன், நல்ல இசையுடன், நல்ல ஒளிப்பதிவுடன், நல்ல திரைக்கதையுடன் வந்திருக்கும் படம். அவசியம் பாருங்கள் எனச் சொல்லவே இந்தப்பதிவு. அதை நியாயம் செய்யவே மேலே சொன்ன அனைத்தும்.

:)

இந்த விமர்சனத்தை எழுதியவர் யார் ? தெரிந்தால் பரிசு கிடையாது - எச்சரிக்கை !

Read More...

Friday, October 02, 2015

வாசிம் அக்ரம் - @teakkadai


வெகு நாட்களுக்குப் பின், நண்பர் @teakkadai எழுதிய ஒரு நேர்த்தியான கிரிக்கெட் கட்டுரை டிவிட்லாங்கரில் காணக் கிடைத்தது. பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, உலகப்புகழ் ”இட்லிவடை”யில் பதிப்பிக்க நினைத்தேன். இ.வ கிரிக்கெட் வாசகர்களே, என்சாய். --- எ.அ.பாலா


வாசிம் அக்ரம் - By @teakkadai


வாசிம் அக்ரம் என்ற பெயரை முதன் முதலில் கேள்விப்பட்டது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1985 உலக தொடர் கோப்பையின் போதுதான். இந்து பேப்பரில் ஒரு பத்தி அளவு மட்டுமே அப்போது அந்த போட்டிகளைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். ஸ்கோர்கார்டில் தென்பட்ட புதுப்பெயரான வாசிம் அக்ரம் அப்போது அவ்வளவாக ஈர்க்கவில்லை. ரவி சாஸ்திரியும் அசாருதீனும் என்ன செய்தார்கள் எனப்பார்ப்பதில் தான் ஆர்வம் முதன் முதலில் வாசிம் அக்ரத்தின் பந்துவீச்சைப் பார்த்தது 86 ஷார்ஜா கோப்பை போட்டிகளில் தான்.




ஸ்கோர்கார்ட் என்பது ஒரு பிளேயர் களத்தில் என்ன செய்தார் என்பதை அப்படியே பிரதிபலிக்காது என்பார்கள். அது வாசிம் அக்ரம் விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. 86ல் நடைபெற்ற அந்த ஷார்ஜா கோப்பை போட்டியானது ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட போட்டி. இந்தியா,பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். அதிக புள்ளிகள் பெறும் அணிக்கு கோப்பை. தனியே பைனல் எல்லாம் கிடையாது. இதன் கடைசிப் போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியை வைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு முன்னரே மேற்கிந்திய தீவுகள் மூன்று போட்டிகளையும் வென்று சாம்பியன் ஆகியிருந்தார்கள்.
வெற்றி பெறும் அணிக்கு இரண்டாம் இடம் என்ற இலக்குடன் இந்தியாவும் பாகிஸ்தானும் களமிறங்கின. இந்தியா முதல் பேட்டிங். அக்ரம் பந்து வீசுவதைப் பார்த்த எங்கள் தெரு அண்ணன்கள் இவன் என்னடா ஒரு டைப்பா போடுறான் என கமெண்ட் அடித்தார்கள். அப்போதெல்லாம் பாகிஸ்தான் மீது பெரும் வன்மம் இருந்த காலம். ”எறியுறாண்டா அதான் அடிக்க முடியலை” என்ற ஒற்றை வரியில் அக்ரத்தை கடந்து விட்டோம்.

ஆனால் அடுத்து வந்த பாகிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வாசிம் அக்ரம் யார் எனப் புரிய வைத்தது. மிகக்குறைந்த ரன் – அப். ஆனால் பந்தின் வேகம் சராசரியாக மணிக்கு 140 கிலோமீட்டருக்கு மேல்.
ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் வேகமாக பந்து வீச அதிக தொலைவு ஓடி வந்து, அதன் மூலம் கையில் வேகமான அசைவை ஏற்படுத்துவார்கள். ஆனால் வாசிம் அக்ரமின் தோள்பட்டை வலிமையானது. அவரது குறைந்த ரன் அப்பிலேயே அந்த வேகத்தை கொண்டுவந்து விடுவார். அவருடைய மணிக்கட்டும் அந்த அசைவுக்கு அபாரமாக ஒத்துழைக்கும். அந்த ரிஸ்ட் ஆக்சனின் மூலம் அவர் பந்து ஸ்விங் ஆகும் திசையை எளிதில் மாற்றிவிடுவார்.
பெரும்பாலான பந்துகள் குட்-லெந்த்தில், மிடில் அண்ட் ஆப்ஸ்டெம்ப் லைனில் விழும். அதே இடத்தில் அதே வேகத்தில் விழுந்த பந்து எந்த திசையை நோக்கித் திரும்பும் என பேட்ஸ்மென்களால் கணிக்க முடியவில்லை. ஷார்ட் பிட்ச்சாக போடப்பட்ட பந்துகள் இந்திய ஆடுகளங்களிலேயே நெஞ்சுக்கு மேல் எழும்பின. அதில் ஒன்று ஸ்ரீகாந்தின் மண்டையை பிளந்தது. 14 தையல்கள் போட்டார்கள். இது போக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து விழும் யார்க்கர் வேறு. பத்தும் பத்தாததிற்கு ரிவர்ஸ் ஸ்விங்.

பந்து புதிதாக இருந்தாலும் பிரச்சினை, பழசாகி விட்டாலும் பிரச்சினை என்று பேட்ஸ்மென்கள் அலுத்துக் கொண்டார்கள். அந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரையும் டெஸ்ட் தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது.
அதன்பின் வாசிம் அக்ரமின் புகழ் எந்தக் காலத்திலும் குறையவில்லை. ஹெர்குலிஸே வந்து பந்தை எறிந்தாலும் முட்டிக்கு மேலே பவுன்ஸ் ஆகாத ஆசிய ஆடுகளங்கில் வித்தை பழகியவருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் உற்சாகத்தைக் கொடுத்தன.


ஒரு சிறந்த பேட்ஸ்மென் நம்மை எதிர்த்து ஆடுகிறார் என்றால் அவருக்கு ஏற்ப வியூகங்கள் வகுப்போம். பந்து வீச்சாளர்களை மாற்றி பயன்படுத்துவோம். அப்போது ஆட்டமானது அந்த பேட்ஸ்மென் சார்ந்ததாக இருக்கும். ஆனால் அக்ரம் தனது பிரைம் பார்மில் இருக்கும் போது, அவர் பந்து வீசும் போது ஆட்டமானது பவுலர் சார்ந்ததாக இருக்கும். பேட்ஸ்மென்கள் தான் தங்கள் ஆட்டத்திற்கு வியூகம் அமைப்பார்கள். இந்த பேட்ஸ்மென் இவருக்கு இப்படி போட வேண்டும் என்ற வியூகமெல்லாம் அக்ரம் அப்போது பயன்படுத்தியதில்லை.


நான் பாட்டிற்கு ஓடி வந்து அப்போது என் மனநிலை என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்றபடி பந்தை வீசுவேன். களத்தின் நிலை, பருவ நிலை, பந்தின் நிலை தான் என் கணக்கு. அதற்கேற்ற படி ஸ்விங்கோ, ரிவர்ஸ் ஸ்விங்கோ. நீ ஆடு பார்ப்போம் என்று தான் வீசுவார். சச்சின், லாரா, ஸ்டீவ் வாவ்வாக இருந்தாலும் சரி, மெக்ராத்,ஸ்ரீநாத்,வால்ஸ் ஆக இருந்தாலும் சரி ஒரே எஃபர்ட்தான்.
நினைத்துப் பாருங்கள். நன்றாக செட்டில் ஆகி ஆடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மென்களே அக்ரமின் குட் லெந்த் அவிட் ஸ்விங்கர்களுக்கும், இன் ஸ்விங்கிங் யார்க்கர்களுக்கும் திணறுவார்கள். டெயில் எண்டர்கள் என்ன ஆவார்கள்?.

டெஸ்ட் மேட்சுகளில் ஓப்பனிங் பேட்ஸ்மென்கள் அக்ரமின் முதல் ஸ்பெல்லை கடத்திவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே உள்ளே வருவார்கள். ஓவருக்கு ஒரு அப்பீலாவது இருக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் ஸ்லிப் பீல்டர்கள் ஏன் விக்கெட் கீப்பர்கள் கூட அக்ரமின் பந்து வீச்சில் பல கேட்சுகளை தவற விட்டுவிடுவார்கள். பார்க்கும் போது நமக்கே வயிற்றெரிச்சலாக இருக்கும். என்னடா ஒருத்தன் உயிரைக்கொடுத்து போட்டுக்கிட்டு இருக்கான். இவுங்க இப்படி பண்ணுறாங்க என்று அலுத்துக் கொள்வோம்.

ஒரு போட்டியின் நேரலையின் போது வக்கார் யூனுஸ் மிகக்குறைந்த டெஸ்டுகளிலேயே 200 விக்கெட் எடுத்தார் எனச் சொல்லி அது சம்பந்தமாக ஒரு அனாலிசிஸ் போட்டார்கள். அந்த 200 விக்கெட்டுகளில் 85 போல்டு, 85 எல்பிடபிள்யூ. இதைப் போலவே தான் வாசிம் அக்ரமும். அவரின் பெரும்பாலான விக்கெட்டுகள் போல்டு மற்றும் எல்பிடபிள்யூதான்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க ஸ்லிப் பீல்டர்கள் பத்து நாள் பட்டினி கிடந்த ராஜபாளையம் நாயைப் போன்றவர்கள். பத்துநாள் கழித்து வீசப்படும் எலும்புத்துண்டை எப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் கவ்வுமோ அதைப் போல பந்தை கேட்ச் செய்வார்கள். விக்கெட் விழுவதற்கான அரை சந்தர்பத்தைக்கூட முழுதாக மாற்றி விடுவார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவு ருசியான சாப்பாட்டை கொடுத்தாலும் தட்டி விடும் பணக்கார குழந்தைகள் போல, கையில் விழும் பந்தை தட்டி விடுபவர்கள். அவர்கள் மட்டும் ஒழுங்காக பீல்டிங் செய்திருந்தால் அக்ரமின் விக்கெட் எண்ணிக்கை இன்னும் உயர்ந்திருக்கும்.

89 நேரு கோப்பை வெற்றி, பல ஷார்ஜா கோப்பைகள், 92 உலக கோப்பை, நிறைய டெஸ்ட் வெற்றிகள் என வாசிம் அக்ரம் பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்த போட்டிகள் ஏராளம். 92ல் உலக கோப்பையை வென்றபின்னர் இம்ரான் கான் ஓய்வு பெறவும்,கேப்டன் பதவி மியாண்டாட், ரமீஸ்ராஜா, சலிம் மாலிக் என பல கை மாறியது. அது அக்ரமின் கைக்கும் வந்தது. கேப்டனாகவும் நிறைய போட்டிகளை வென்று கொடுத்தார். ஆனால் அவரை மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்ல முடியாது. அவரின் திறமையாலும் சக வீரர்களின் திறமையாலுமே போட்டிகள் வெல்லப்பட்டன. வியூகங்கள் அமைத்து அதன் மூலம் பெறப்பெற்ற வெற்றிகள் மிகக்குறைவு.

அந்த விஷயத்தில் இம்ரான்கான் தான் கிரேட். எம்ஜியாரைப் போலவே அவரைப் பற்றியும் பல மித்துகள் அப்போது உலவியது. கல்லூரிகளுக்கு இடையிலேயான போட்டியை காணச்சென்ற இம்ரான், அக்ரமின் பந்து வீச்சைக் கண்டு உடனே தேசிய அணிக்கு அவரைத் தேர்வு செய்தார் என்பார்கள். ஒரு உள்நாட்டுப் போட்டியில் மியாண்டாட்டே திணறும்படி ஒருவர் பந்து வீசியதைக் கண்டு அவரைத் தேர்வு செய்தார். அவர்தான் வக்கார் யூனிஸ் என்பார்கள். வக்கார் யூனிஸின் பந்து வீச்சை அனாயசமாக சமாளித்து ஆடியதற்காகவே இன்சமாம் உல் ஹக்கை தேர்வு செய்தார் என்பார்கள். அவருடைய தேர்வுகள் எதுவுமே பொய்த்துப் போனதில்லை.

தர்மபுரியில் நக்சலைட்கள் தலை தூக்கியபோது அதை அடக்கியவர் வால்டேர் தேவாரம். ஆனால் அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்தது அப்போதைய ஐ.ஜி ஸ்ரீபால். அதே தேவாரம் காவல்துறை தலைவராக இருக்கும் போது வீரப்பனை பிடிக்க களமிறங்கி தோல்வி அடைந்தார். அதற்கு காரணம் அவருக்கு திட்டங்கள் வகுத்துக் கொடுக்க ஆள் இல்லை. விஜயகுமார் வீரப்பனை வீழ்த்திய போது கூட அவருக்கு திட்டங்களை தீட்டிக் கொடுக்க அதிகார்களின் வலுவான துணை இருந்தது. இதே போலத்தான் வாசிம் அக்ரமமும். அர்ஜுனனைப் போல களத்தில் வாழ்பவர். பிரம்மாஸ்திரங்களும், நாகாஸ்திரங்களும் அவரிடம் ஏராளம் உண்டு. அவரைத் தெளிவாகப் பயன்படுத்த வேண்டும். இம்ரான் கேப்டனாக இருந்த வரையில் அவரை பேட்டிங் ஆர்டரில் மேலேற்றி விடுவார். பின்ச் ஹிட்டராக பயன்படுத்துவார். பந்து வீச்சின் போது முதலில் நான்கு ஓவர், பின்னர் ஓய்வு பின்னர் நான்கு ஓவர் எனப் பயன்படுத்துவார். பேட்ஸ்மென் அன்கம்பர்டபிளாக இருப்பது போல தோன்றினால் உடனே அக்ரத்திடம் தான் பந்தைக் கொடுப்பார். ஆனால் வாசிம் அக்ரமே கேப்டனாக இருக்கும் போது இவை நடக்க வாய்ப்பில்லாமல் போனது. இம்ரானைத் தவிர மற்ற கேப்டன்கள் அவரை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால் எல்லாக் கேப்டன்களும் (இங்கிலாந்து கவுண்டி கேப்டன்கள் உட்பட) செய்த விஷயம் ஒன்றுதான். அதுதான் டெயில் எண்டர்கள் வரும்போது அக்ரத்திடம் பந்தைக் கொடுப்பது. பாகிஸ்தானின் முஷ்டாக் அகமது கூட சொல்வார் “மிடில் ஆர்டர் விக்கெட் இரண்டு, மூன்று எடுத்திருப்பேன், பந்து நான் நினைத்த இடத்தில் விழுந்து, நினைத்த படி சுழலத் தொடங்கி இருக்கும். ஆனால் ஆறாவது விக்கெட் விழுந்து பவுலர்கள் வந்து விட்டால் எந்த கேப்டனும் அக்ரமிடம் பந்தை தூக்கி தந்துவிடுவார்கள்” என்று.

90களின் மத்தியில் அப்போது ஆக்டிவ்வாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆட்டக்காரர்கள் எல்லோருக்குமே அக்ரம் மீது பெரிய மரியாதை இருந்தது. அரவிந்த் டி சில்வா ஒரு பேட்டியில் சொன்னார் “ நான் அக்ரம் பந்து வீச்சில் சிக்ஸர் அடித்த பின்னால் தான் என்னை சிறந்த பேட்ஸ்மெனாக எங்கள் அணி வீரர்கள் ஒத்துக் கொண்டார்கள்” என. கிரிக்கெட் அணி வீரர்கள் மட்டுமல்ல, தெரு கிரிக்கெட் விளையாடியவர்கள், பார்க்க மட்டும் செய்தவர்களுக்கு கூட அக்ரமின் மீது ஒரு தனிப்பிரியம் இருந்தது. அப்போது இந்தியாவில் கல்லூரி விடுதிச் சுவர்களில் சச்சின் புளோ அப் அதிகமாக ஒட்டப்பட்டிருக்கும். நான் பார்த்த பல அறைகளில் வாசிம் அக்ரமின் புளோ அப்பும் இடம் பிடித்திருக்கும். என்னுடன் தங்கியிருந்த வட இந்திய நண்பர் ஒருவர், அக்ரம் மட்டும் நம்ம நாட்டில் பிறந்திருந்தால் எப்படி கொண்டாடி இருப்போம் என அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார். நான் என்ன நினைப்பேன் என்றால், நாமளே இவ்வளோ கிரேஸா இருக்கிறோமே, பாகிஸ்தான்காரர்கள் எவ்வளவு கிரேஸாய் இருப்பார்கள் என நினைத்துக் கொள்வேன்.

94ல் ஹம் ஆப்கே ஹெயின் கோன் வெளியாகி இங்கே மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படம் பாகிஸ்தானிலும் பெரிய ரசிகர்களைப் பெற்றது. முக்கியமாக மாதுரி தீட்சித்துக்கு. அந்தப் படத்தில் வரும் ஜூட்டே தோ பைசே லோ பாடலை (செருப்பைக் கொடுத்து பணத்தை வாங்கு) உல்டா செய்து மாதுரியை எங்களுக்கு கொடு அக்ரமை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பாடுவார்களாம். அந்த நேரத்தில் அவர்கள் விலை மதிக்க முடியாததாக கருதியது அக்ரமைத்தான்.


வாழ்வில் காட்சி இன்பமாக ஏராளமானவற்றை அனுபவித்து உள்ளேன். சினிமா மற்றும் கிரிக்கெட்டுக்கு அதில் தனி இடமுண்டு. கிரிக்கெட்டில் நான் மிகவும் ரசித்தவைகளில் வாசிம் அக்ரமின் பவுலிங்கிற்கு முக்கிய இடமுண்டு. 92 உலக் கோப்பை பைனலில் முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்த பந்துகளில் ஆலன் லாம்ப்பையும், கிறிஸ் லீவிஸையும் வீழ்த்தியது, ராகுல் ட்ராவிட்டை ஒரு டெஸ்ட் மேட்சில் கதகளி ஆடவிட்டது, நேரு கோப்பை பைனலில் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸர், சேப்பாக்கத்தில் அடித்த 5 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் அடித்த 53 ரன்கள், கணுக்காலில் இறங்கும் இன்சுவிங் யார்க்கர், ரிவர்ஸ் ஸ்விங்னா அது இப்படித்தான் இருக்கணும் என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் படி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கடைசி ஓவர்களில் போடும் பவுலிங் என சொல்லிக் கொண்டே போகலாம்.

கிரிக்கெட் உலக முக்கியஸ்தர்கள் எல்லோருமே, இதுவரை தோன்றிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களிலேயே அக்ரம்தான் சிறந்தவர் என்று நேரிடையாகவும் மறைமுகவாகவும் ஒத்துக் கொண்டார்கள். எப்படி கிரிக்கெட் சமுதாயம் புதிதாக ஒரு பேட்ஸ்மென் சிறப்பாக ஆடினால் அவரை பிராட்மெனுடன் கம்பேர் செய்கிறதோ அதுபோல உலகில் எந்த மூலையில் ஒரு இடதுகை பந்து வீச்சாளர் நன்றாகப் பந்து வீசினாலும் அவரை வாசிம் அக்ரமுடன் தான் கம்பேர் செய்கிறார்கள். இதைவிட என்ன சாதிக்க வேண்டும் அவர்?.

மக்களே உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பாலா மூலம் :-)

Read More...