பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 28, 2015

டாக்டர் கலாமும் ஊக்கமுடைமையும் - எ.அ.பாலா

வாழ்வின் முக்கியத்தருணத்தில் கிட்டும் ஊக்கமானது, எத்துணை உன்னதமானது என்பதற்கு தமிழர் நமக்குப் பெரும் பெருமை தேடித்தந்த டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை நிகழ்வு ஒன்றை விட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. அப்துல் கலாம் அவர்களின் வாழ்வை நேர்மறையாக திசை திருப்பியவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடையில் பிறந்து, பின்னாளில் ரிஷிகேச ஆசிரமம் ஒன்றுக்குச் சென்றுவிட்ட சுவாமி சிவானந்தா என்பவர்.கலாம் ஒரு விமானியாக விரும்பியதும், அவர் 1957-ல் ஏரோனாட்டிஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதைத் தொடர்ந்து விமானப்படையின் நேர்முகத் தேர்வுக்கு தேராதூன் சென்றார். விண்ணப்பித்த நபர்களில், 4 நாட்கள் தொடர்ந்து நடந்த பலவகையான தேர்வுகளின் முடிவில், 8 பேர் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். கலாம் 9-வது இடத்தில் வந்ததால், வேலை கிடைக்கவில்லை!

கலாம் மிகவும் மனமுடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டார். தில்லிக்குத் திரும்ப பேருந்து ஏறிய கலாம், திடீர் முடிவாக ரிஷிகேசத்தில் இறங்கி, கங்கையில் நீராடி விட்டு, அருகில் இருந்த ஆசிரமத்துக்குச் சென்று, சுவாமி சிவானந்தாவின் பகவத்கீதை சொற்பொழிவை, கடைசி வரிசையில் அமர்ந்த வண்ணம் கேட்டார். சொற்பொழிவின் முடிவில், சுவாமி சிவானந்தா தன்னிடம் கேள்விகள் கேட்க/பேச இருவரை மட்டுமே தேர்ந்தெடுத்தார். அதில் ஒருவர், அப்போதைய இளைஞர் கலாம்!

கலாம் தன்னை சுவாமியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்துல் கலாம் என்ற தனது இசுலாமியப் பெயர் சுவாமியிடம் எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று கலாமே தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கலாம் அடுத்து ஏதும் சொல்வதற்கு முன், சுவாமி சிவானந்தா, கலாமின் அப்போதைய சோகத்திற்கான காரணத்தை வினவினார். அடுத்து, “உனக்கு விதிக்கப்பட்டதை ஏற்று, வாழ்வை எதிர்கொண்டு முன்னேறு, இத்தோல்வியை மறந்து விடு, இத்தோல்வியானது, உனக்கு விதிக்கப்பட்ட பாதையில் சரியாக உன்னைச் செலுத்த அவசியமானதாக இருந்தது! உனது இருப்பின் மெய் நோக்கத்தைத் தேடு. கடவுளின் விருப்பத்துக்கு பணிந்து நட, அது போதும்” என்று சுவாமி சிவானந்தா கூறினார்.

மேலும், குருசேத்திரப் போருக்கு முன், கண்ணன் அருச்சுனனுக்கு வழங்கிய முக்கிய அறிவுரையான, தோல்விப்போக்கை, தோல்வி சார் எண்ணத்தை தோற்கடிக்க வேண்டிய அவசியத்தை சுவாமிஜி கலாமுக்கு எடுத்துச் சொன்னார். அந்த “தோல்விப்போக்கை தோற்கடி” (Defeat the defeatist tendency!) என்ற அறிவுரையை தான், தன் வாழ்நாள் முழுதும், முக்கியமாக கடினமான தருணங்களில், விடாமல் கடைபிடித்ததாகக் கலாமே சொல்லியிருக்கிறார்!

அதன் பின், DRDO, ISRO வெற்றிகள், பல விருதுகள், ஜனாதிபதி, பாரத் ரத்னா, இந்தியத்தாயின் தலைசிறந்த மகன்களில் மிக முக்கியமானவர் ....... அனைத்தும் பொன்னெழுத்து வரலாறு.

---எ.அ.பாலா

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும்” - கலாம்

1 Comment:

joseph jeyabal said...

உங்களுடைய அத்துனைபதிவுகளும் மிகமிக அருமை