கலாம் எனும் கனவு
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
கனவுகளின் கனவு நீ !
இந்தியாவின் உடைமை நீ !
இந்தியாவை இயக்கிய
இளைய தலைமுறையை எழுப்பிய
இணையில்லா தலைவன் நீ !
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
நீ
கனவு கண்டாய்…எங்களைக் காண வைத்தாய்
கல்வி கற்றாய்…எங்களைச் சிந்திக்க வைத்தாய் திறமை வளர்த்தாய்…எங்களைச் செயல்பட வைத்தாய் திறம்பட கடமை ஆற்றினாய் - மேலாக சேவை செய்தாய்….எங்கள் அறிவு மேம்பட ஊக்கம் ஊட்டினாய்….எங்கள் ஆக்கம் மேம்பட தியாகம் செய்தாய்….எங்கள் வாழ்க்கை மேம்பட
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
மனிதம் எழுப்பிய மகத்தான கனவு நீ…கலையாதே….
இந்தியாவின் இணையில்லா இமயம் நீ…சிதறாதே…
பாரதம் பெற்றெடுத்த பார்மிகு பரிசு நீ…தொலையாதே…
என்றும் வாழும் ஆத்மா நீ…
ஊக்கம் தரும் உண்மை நீ…
சாசுவதமான சத்தியம் நீ….
உன் வாழ்க்கை உன் செய்தி
உன் வார்த்தை எம் மந்திரம்
எப்படி நவில்வேன் நன்றி…
எம்செயலே உனக்கு (உண்மையான) நன்றி !
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
- Senthilmurugan
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Wednesday, July 29, 2015
கலாம் எனும் கனவு - Senthilmurugan
Posted by IdlyVadai at 7/29/2015 12:00:00 PM 0 comments
Labels: அஞ்சலி
புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம்
-எதிர்க்கலாம் என்று எவரும்
நினைக்க முடியாத எங்கள் கலாம்.
நீர்
விதைகளையும் விழுதுகளையும்
கோடிக்கணக்கில் விட்டுச் சென்ற ஆல மரம்
புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம்
இத் தேசத்தின் ஸ்தூலம் மறைந்த ஸ்தல விருட்சம் !
நீர்
விழுந்து விடவில்லை !
விட்டுச் செல்ல மனம் இன்றி
வீற்றிருக்கின்றீர் இதயங்களில் ..
நீர்
தாடி மீசையோ மழுக்கிய தலையோ
தலை மறைப்போ காவியோ
வெள்ளுடையோ மட்டும்
கொண்டிராத கொள்கை ஞானி !
மரங்கள் மறைகின்றனவே என்று நாங்கள்
கன்னத்தில் கை வைத்து
புலம்ப மட்டுமே செய்தோம்..
நீரோ
உம் கைகளுக்குள் விதைகளை கொண்டு சென்று
செல்லும் வழி எல்லாம் தூவிச் சென்றீர் !
நீர்
புலம்பியதே இல்லை ! - ஏனெனில்
உம் கண்களுக்கு எதிர்காலம்
எப்போதுமே புலனானது !
நாங்கள்
தொலைந்ததையே
தேடிக் கொண்டிருந்த போது - நீர்
தொலைவில் புதிதாய்
அதையே கண்டு கொடுத்தீர்!
நீர்
அணு சக்தியை உள்ளே வைத்திருந்தும்
அன்பு சக்தியால் எங்களை ஆட்கொண்டீர்!
எப்பொழுதுமே
உம் புன்னகையின் கவர்ச்சி
முதல் முறை முகம் பார்க்கும்
குழந்தையின் சிரிப்பைப் போலே
கள்ளங்கபடமற்றது !
நீர்
உம் கனவுகளை
மற்றவர் உறக்கத்திலும்
தோன்றச் செய்த
விந்தை விஞ்ஞானி !
அரசியலை நினைத்து
நாங்கள் நொந்த போது
நீரோ இதுதான்
இன்றைய 'அரசு இயல்' என்று அதை
இயல்பாக
எடுத்துக் கொண்டீர் !
சமூகக் கால்வாய் நாறுகிறதே என்று
நாங்கள் கவலைப்பட்ட போது
தூரத்தே தெரிந்த இளைஞர் கூட்டமென்னும்
காட்டு வெள்ளம் ஒருநாள் பாதை தேடி
புது நீராய்ப் பாயும் என்று நீர்
பொறுமையாய் நம்பி இருந்தீர் !
நீர்
நவீன இந்தியாவின் சிற்பி !
உம்மால் மட்டுமே இச்சிலையை
வடிக்க முடியாதென
உணர்ந்து
கோடி உளிகளை
குழந்தைகள் கையில் கொடுத்தீர் !
உம்மை தந்தை என்றோ மாமா என்றோ
தாத்தா என்றோ நாங்கள்
அடையாளம் காட்ட மாட்டோம்!
ஏனெனில்
நீர் எல்லா வயதினருக்கும்
தோழனாவீர் !
உம் தலையில்
எல்லா தலைமுறைக்கும் தகவல்
தகைந்து கிடந்தது!
அரசன் ஆட்சி செய்ய வேண்டியது
மண்ணை அல்ல மனங்களை என்பதை
நீர் முற்றிலும் உணர்ந்தவர் !
முடிந்தவன் சாதிக்கிறான்
முடியாதவன் போதிக்கிறான் என்பது பழமொழி ..
ஆனால் நீரோ
சாதிக்கவும் செய்தீர் போதிக்கவும் செய்தீர்..!
நீர் மதச்சார்பற்றவர் கிடையவே கிடையாது!
எல்லா மதத்தவற்கும் சார்பானவர் !
இன்றுதான்
புத்தர் சிரித்தாரோ ? - நீர் மீண்டும்
அவரிடமே வந்து விட்டீர் என்று !!
இன்றுதான்
இயேசு பிரான் கைகளை நீட்டினாரோ -
உம்மை வாரி அரவணைக்க ?
இன்றுதான் இறைவன் சற்றே
நகர்ந்து அமர்ந்தாரோ? -
உமக்கும் இடமளிக்க?
நாங்கள் தவிக்கவில்லை !
நீர் உயர்ந்தவர்-
அங்கேயே இரும் !!
மை லார்ட் !
இவர் எங்கள் கட்சிக்காரர் என்று
உலகமே உம்பக்கம் சாட்சி சொல்கிறது!!
இன்றுதான் தேசத்தையே தேசியக்கொடி
மூடியதைப் பார்க்கிறோம் !
உம் இதயம் இந்தியா இந்தியா என்றே
துடித்தது இறுதி வரை !
நீர்
பிற நாடுகளையும்
புற நானூற்றைப் பேச வைத்தீர் !
நீர்
திரும்பிய இடமெல்லாம்
திருக்குறளை திகட்டாமல் அளித்தீர் !
ஐயா
உம்மை
மறத்தமிழன் என்றோ
முதல் குடிமகன் என்றோ
ஆசான் என்றோ விஞ்ஞானி என்றோ கவிஞர் என்றோ ஒரு கூட்டுக்குள் அடைக்க முடியாது !
நீர்
பிரபஞ்சம் முழுதும் நிறைந்த பிரயாணி !
நீர்
வழிப்போக்கனாய் மட்டும் வாழாமல்
செல்லும் வழியெல்லாம் புதிதாய்ச்
செப்பனிட்டுக் கொண்டே சென்றவர் !
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது !
ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற மட்டுமே முடியும் !
நீரோ பேராற்றல் !
நீரின்றி அமையாது உலகு !
நீர் நாங்களாக மாறி விட்டீர் !
உம் பயணத்தைத் தொடரும் -
எம் கனவுகளிலும் செயல்களிலும் !!!
ஜெய் ஹிந்த் !! ஜெய் ஹிந்த் !!
உணர்வும் ஆக்கமும் --- ஈ. ரா. என்னும் சாமானியன் !
Posted by IdlyVadai at 7/29/2015 10:42:00 AM 0 comments
Labels: அஞ்சலி
Tuesday, July 28, 2015
டாக்டர் கலாமும் ஊக்கமுடைமையும் - எ.அ.பாலா
கலாம் ஒரு விமானியாக விரும்பியதும், அவர் 1957-ல் ஏரோனாட்டிஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதைத் தொடர்ந்து விமானப்படையின் நேர்முகத் தேர்வுக்கு தேராதூன் சென்றார். விண்ணப்பித்த நபர்களில், 4 நாட்கள் தொடர்ந்து நடந்த பலவகையான தேர்வுகளின் முடிவில், 8 பேர் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். கலாம் 9-வது இடத்தில் வந்ததால், வேலை கிடைக்கவில்லை!
கலாம் மிகவும் மனமுடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டார். தில்லிக்குத் திரும்ப பேருந்து ஏறிய கலாம், திடீர் முடிவாக ரிஷிகேசத்தில் இறங்கி, கங்கையில் நீராடி விட்டு, அருகில் இருந்த ஆசிரமத்துக்குச் சென்று, சுவாமி சிவானந்தாவின் பகவத்கீதை சொற்பொழிவை, கடைசி வரிசையில் அமர்ந்த வண்ணம் கேட்டார். சொற்பொழிவின் முடிவில், சுவாமி சிவானந்தா தன்னிடம் கேள்விகள் கேட்க/பேச இருவரை மட்டுமே தேர்ந்தெடுத்தார். அதில் ஒருவர், அப்போதைய இளைஞர் கலாம்!
கலாம் தன்னை சுவாமியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்துல் கலாம் என்ற தனது இசுலாமியப் பெயர் சுவாமியிடம் எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று கலாமே தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கலாம் அடுத்து ஏதும் சொல்வதற்கு முன், சுவாமி சிவானந்தா, கலாமின் அப்போதைய சோகத்திற்கான காரணத்தை வினவினார். அடுத்து, “உனக்கு விதிக்கப்பட்டதை ஏற்று, வாழ்வை எதிர்கொண்டு முன்னேறு, இத்தோல்வியை மறந்து விடு, இத்தோல்வியானது, உனக்கு விதிக்கப்பட்ட பாதையில் சரியாக உன்னைச் செலுத்த அவசியமானதாக இருந்தது! உனது இருப்பின் மெய் நோக்கத்தைத் தேடு. கடவுளின் விருப்பத்துக்கு பணிந்து நட, அது போதும்” என்று சுவாமி சிவானந்தா கூறினார்.
மேலும், குருசேத்திரப் போருக்கு முன், கண்ணன் அருச்சுனனுக்கு வழங்கிய முக்கிய அறிவுரையான, தோல்விப்போக்கை, தோல்வி சார் எண்ணத்தை தோற்கடிக்க வேண்டிய அவசியத்தை சுவாமிஜி கலாமுக்கு எடுத்துச் சொன்னார். அந்த “தோல்விப்போக்கை தோற்கடி” (Defeat the defeatist tendency!) என்ற அறிவுரையை தான், தன் வாழ்நாள் முழுதும், முக்கியமாக கடினமான தருணங்களில், விடாமல் கடைபிடித்ததாகக் கலாமே சொல்லியிருக்கிறார்!
அதன் பின், DRDO, ISRO வெற்றிகள், பல விருதுகள், ஜனாதிபதி, பாரத் ரத்னா, இந்தியத்தாயின் தலைசிறந்த மகன்களில் மிக முக்கியமானவர் ....... அனைத்தும் பொன்னெழுத்து வரலாறு.
---எ.அ.பாலா
முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும்” - கலாம்
Posted by IdlyVadai at 7/28/2015 01:59:00 PM 1 comments
அக்னி சிறகை தழுவ ...
அக்னி சிறகை தழுவ
அக்னி கண்டதோ கனவு?
தூக்கத்தில் காணும் கனவு அல்ல;
தூக்கத்தை தொலைக்கும் கனவைக் காண
ஏக்கத்தை கொள்ளச் சொன்னவரே
கலாம் என்கிற பெயரில்
காலம் செய்த எழுத்துப் பிழையில்
காலமானதோ எங்கள் கனவும்?
அல்ல, அல்ல, அல்ல
மேக ஆலயத்திற்குச் செல்லவே
மேகாலயா சென்றீரோ அய்யா?
வள்ளியப்பாவாக குழந்தைகளுக்கு
வெள்ளை மனம் படைத்தவராக பெரியவர்களுக்கு
இனி என்று காண்போம் அய்யா?
கனியும் காலம் விரைவில்
தணியும் எங்கள் பிரச்சினைகளும்
துணிவை கொள்ள தூண்டிய மெழுகுவத்தியே
துயில் கொள் எங்கள் மனங்களில் நிரந்தரமாக.
c.s.veeraragavan
Posted by IdlyVadai at 7/28/2015 11:10:00 AM 0 comments
அப்துல் கலாம் - அஞ்சலி
Posted by IdlyVadai at 7/28/2015 08:11:00 AM 3 comments
Labels: அஞ்சலி
Tuesday, July 14, 2015
'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் - அஞ்சலி
Posted by IdlyVadai at 7/14/2015 10:53:00 AM 11 comments
Labels: அஞ்சலி
Monday, July 06, 2015
சென்னை மெட்ரோ - ஒரு பார்வை - ஸ்ரீராம் சுந்தரேசன்.
ரயில் நீல மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது - பிரேசில் இறக்குமதி. பச்சை, மஞ்சள், திராவிட கருப்பு எல்லாம் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி. முக்கியமாக இலை படம் வரையப்படவில்லை - செந்தில் பாலாஜி நோட் தி பாயிண்ட். ஸ்டாலின் பக்கத்தில் நிற்பாரோ என்று பார்த்தேன் - அரை தப்பியது. லண்டன் டியுப்பு வண்டியில் ஜுபிலி என்ற ரயிலில் பயணித்தது போல் ஒளி, ஒலி மற்றும் அனுபவம் இருந்தது. ஒரு வகுப்பை சார்ந்த பகுதி முழுவதும் வெச்டிபுல் மூலம் இணைத்திருப்பது நல்ல யோசனை.

போஸ்டர் ஓட்டும் புண்ணியவான்கள் ராஜ ஸ்ரீதர் அ(ழி)க்கிறார், 10, +2 படித்தவருக்கு வேலை கொடுக்கும் கணவான்கள், கடலை குப்பை போடும் குப்பை லாரிகள் தயவு செய்து மெட்ரோவை மன்னித்து விட்டு விடுங்கள். பொது மக்கள் தங்கள் அருகில் பப்பில்கம் ஓட்டுபவர்கள், இல்லை வேறு எந்தவிதத்திலாவது அசுத்தம் செய்பவர்களை யோசிக்காமல் அரைந்து விடுங்கள் - தெரியாமல் கன்னத்தில் கை பட்டது என்று சொல்லிகொள்ளலாம்.
மொத்தத்தில் இன்றைய நாள் இனிய நாள்.
- ஸ்ரீராம் சுந்தரேசன்.
Posted by IdlyVadai at 7/06/2015 01:30:00 PM 9 comments