
முதல் நாள் முதல் ஷோவிற்கு சென்று ஏமாந்து திரும்பி பின் டிவிட்டர், முகநூல் பக்கம் சென்றால் - கமலின் அடுத்த மைல் கல், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார் கமல், மூன்று மணி நேரம் படம் கொடுத்த பாதிப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை என்ற கமெண்டுகளை பார்த்த பிறகு உடனே பார்த்துவிட வேண்டும் என்ற தூண்டுதலின் பெயரில் இன்று பார்த்தாகிவிட்டது.
படம் சுமார். ஏன் என்று சொல்லுகிறேன். கமல் படத்தில் என்ன பிரச்சனை என்றால் அவர் தான் படத்தின் ஆல் இன் ஆல் அழகு ராஜா. அவரே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எல்லாம் செய்துவிடுவார். திரைக்கதையில் வழக்கம் போல் சொதப்பிவிடுவார். அவர் யோசிக்கும் காட்சிகளை படமாக்கிவிடுவார் ஆனால் திரைக்கதையில் ஒட்ட வேண்டாமா ? இதிலும் அதுவே. படம் பார்த்த மக்கள் கடைசியில் அழுதுவிட்டேன் என்று சொல்லுவது எல்லாம் சுரேஷ் கண்ணன் காதில் விழுந்தால் கொலையே செய்துவிடுவார்.
இந்த படம் தமிழ் சினிமாவிற்கு புதுசு இல்லை, சாதாரண இரண்டு பொண்டாட்டி குடும்ப கதை. சினிமாவிலும் நிஜத்திலும் அதை சொல்ல முனைந்திருக்கிறார்.
கடைசியாக இரணியன் கதையை வித்தியாசமாக சொல்லுகிறேன் பேர்வழி என்று நரசிம்மரை சாகடிதத்து கமலின் முட்டாள் தனத்தை காண்பிக்கிறது. கமல் ரசிகர்கள் இதை மேதாவி என்பார்கள்.
இட்லிவடை மார்க் : 5.5/10
பின் சேர்க்கை:
ஏன் சார் படத்தில் அவ்வளவு இருக்கிறது சும்மா விமர்சனம் என்ற பெயரில் ஏதோ அச்சு பிச்சு என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று சில பேர் கேட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு என் பதில்:
படத்தின் கதையை நான் சொல்ல போவதில்லை. விஜய் படத்துக்கே இட்லிவடை கதை சொல்லாது. கமலின் நடிப்பு பற்றி ஒரு நண்பர் கேட்டிருந்தார். கமலின் நடிப்பு அருமை என்றால் நான் ஏதோ புதுசாக கண்டுபிடித்து சொல்லுவது போல ஆகிவிடும். கமல் எல்லா படத்திலும் அவர் பெஸ்டை கொடுத்துவிடுவார், இந்த படம் அதிக்கு விதிவிலக்கு இல்லை. ஆனால் நடிப்பு என்பது அவர் அழும், சோக சீன் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது.
படத்தில் ஊர்வசி நன்றாக நடித்துள்ளார். அதை குறிப்பிட மறந்துவிட்டேன்.
மீண்டுன் சொல்லுகிறேன்.
படம் முதல் நாள் வரவில்லை என்ற செய்தி கொடுத்த இம்பாக்ட் படம் பார்த்த பிறகு வரவில்லை. அது தான் இந்த படத்தின் பெரிய குறை.
அடுத்த இன்பாக்ஸ் கேள்வி:
கமல் தன் மகனிடம் தனக்கு வந்திருப்பதை சொல்லும் சீன், அவர் இரணியன் மாதிரி வேஷம் போட்டு நடனம் ஆடும் காட்சி என்று பல காட்சிகளை அடுக்கிக்கொண்டு போகலாம். அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?
ஒரு கல்யாண புகைப்பட ஆல்பம் தயாரிக்கும் போது எல்லா புகைப்படங்களும் கல்யாண வீட்டார் பார்க்கும் போது நன்றாக இருப்பதாக தோன்றும். ஆல்பம் தயாரிக்கும் போது எல்லாவற்றையும் சேர்த்து மெகா சைஸ் ஆல்பம் தயாரித்துவிடுவார்கள். எல்லா படங்களும் நன்றாக வந்திருக்கும்.
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு அதை கொடுத்து பார்க்க சொல்லுவார்கள். வருபவர்கள் எல்லாம் முதலில் ஆர்வமாக பார்ப்பார்கள். பின்னர் அலுப்படைந்து வேகமாக திருப்பிவிட்டு “ஆல்பம் நன்றாக இருந்தது” என்று சொல்லுவார்கள்.
உத்தம வில்லன் அதே போல தான், ஒவ்வொரு சீனும் நல்ல புகைப்படம். ஆனால் சேர்த்து வைத்து பார்க்கும் போது தலையணை சைஸ் கல்யாண ஆல்பம் மாதிரி தான்.
Read More...
Collapse...