சென்னை வெள்ளம், கடலூர் வெள்ளம், தூத்துக்குடி வெள்ளம் எல்லாம் பின்னால் சென்று விட்டது. இப்போது இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகர் சிம்புவும் கூட்டாகச் சேர்ந்து இசையமைத்துப் பாடிய ‘பீப்சாங்’தான் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. அனிருத் சிம்புவுக்கு எதிராகப் பெண்கள் அமைப்புகள் ஒன்று திரண்டு நிற்கின்றன. இருவருக்கும் சம்மன் கூடப் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.
ஆபாசம், அதுவும் வக்ரமான ஆபாசம் என்பது சினிமாவுடன்பிறந்தது. குளிக்கிற காட்சியை யதார்த்தமாகக் காட்டுகிறேன் என்று, கதாநாயகி நடிகைகளைத் தண்ணீரில் குளிப்பாட்டுவது, கதாநாயகியின் தலைமுதல் கால்வரை வர்ணித்துப் பாடுவது என்பது சினிமாவில் இன்று நேற்று ஏற்பட்ட சமாச்சாரமல்ல. தியாகராஜ பாகவதர் காலம் தொட்டு பெண்களை மலினப் படுத்துவது என்பது சினிமாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிம்புவும் அனிருத்தும் ஏதோ புதுசாகப் பெண்களை மலினப்படுத்தவில்லை. வக்கரித்துப்போன சினிமா கலாசாரத்தைத்தான் அவர்கள் தங்கள் பங்கிற்கு நிலை நாட்டியுள்ளார்கள்.
‘எடுத்துப் பார்த்த பழங்களிலே இம்மாம் சைசு பாத்தியா, கைக்கு அடக்கமா, கடிச்சுப் பார்க்க வாட்டமா’ என்று பணமா பாசமா படத்தில் கண்ணதாசன் இலந்தைப் பழத்தை வர்ணித்து எழுதினார். அவர் இலந்தைப் பழத்தைவர்ணித்தாரா, பெண்ணின் உடல் உறுப்பை வர்ணித்தாரா என்றுகண்ணதாசனுக்கும் தெரியும், தமிழ் சினிமா ரசிக மகாஜனங்களுக்கும்தெரியும்.
‘பிஃப்டி கேஜி தாஜ்மஹால் எனக்கே’ என்று கதாநாயகியின் உடல் எடையை வர்ணித்து வைரமுத்து எழுதினார். கவியரசு, கவிப்பேரரசு, எல்லா அரசுகளும் காதல், சிருங்கார ரசப் பாடல்களை எழுதுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல.
கட்டை வண்டிப் பாட்டில் ‘ஆடி ஆடி அலுத்த வண்டி’, ‘உக்கி போட்டு ஏறடி புள்ளே’ என்றெல்லாம் வாலி எழுதினார். இந்த மகா கவிஞர்கள், இசையமைப்பாளர்களின் வழியில் வந்த அனிருத்தும், சிம்புவும் பீப்சாங் எழுதாமல், மகாகவி பாரதி மாதிரி தாய்நாட்டை வாழ்த்தியா எழுதுவார்கள்?
அனிருத்தையும், சிம்புவையும் எதிர்க்கிற இதே பெண் அமைப்புகள், யுகயுகமாகத் தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளை விரட்டி விரட்டிக் காதலிக்கிற காதல் காட்சிகளையும், நடனம் என்ற பேரில் பெண்களை அரைகுறை ஆடைகளில் ஆட விட்டு, நடன அசைவு என்ற பேரில் நடன நடிகைகள் ஆபாச சைகைகளைச் செய்வதையும் ரசித்துத்தானே வந்திருக்கிறார்கள்?
பெண்களை இழிவுபடுத்துவதற்கு எதிராகப் போராடுவது என்றால், வெள்ளிக்கிழமை தோறும் ரிலீஸாகிற ஒவ்வொரு தமிழ்ப் படத்தையும் எதிர்த்தல்லவா போராட்டம் நடத்த வேண்டிய திருக்கும். இத்தனை காலமாக இதையெல்லாம் இந்தப் பெண்கள் குடும்பத்தோடு தியேட்டர்களுக்குச் சென்று ரசிக்கவில்லையா? பெண்களை இழிவுபடுத்துவது என்பது தமிழ்ச் சினிமாவுலகின் வாடிக்கை. இந்த வழக்கத்தைத்தான் இந்த அனிருத்தும், சிம்புவும் தங்கள் பங்கிற்கு செய்திருக்கிறார்கள். பெண்கள் மலினப் படுத்தப்படுவதை பெண்களே ரசிக்கிற தமிழகத்தில் இந்தத் திடீர் வீறுகொள்ளல், வேடிக்கையாகவும், புரியாத புதிராகவுமிருக்கிறது.
பெண்களைப் பல கவிஞர்களே, அதுவும் பெண் கவிஞர்களே இழிவுபடுத்தி ஆபாசமாக எழுதி வருவதெல்லாம் இந்தப் பெண் எதிர்ப்பாளர்களுக்குத் தெரியுமா, இல்லை தெரிந்தும் பாராமுகமாக இருக்கிறார்களா? பல சிறுபத்திரிகைகளில் எழுதுகிற பெண் கவிஞர்கள், தங்கள் மறைவான பகுதிகளை எல்லாம் குறிப்பிட்டு சர்வ சாதாரணமாக எழுதுகிறார்கள். ‘இலக்கியம்’ என்ற போர்வையில் அவையெல்லாம் அங்கீகரிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. இதைப் பற்றியெல்லாம் எந்தப் பெண் அமைப்புகளும் அங்கலாய்த்துக் கொள்வதில்லை, எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.
நான் அனிருத்தையும், சிம்புவையும் ஆதரிக்கவில்லை. ஆனால், ஆபாசம், பெண்களை அவமரியாதை செய்வது என்பது தமிழ் சினிமாவின், இந்திய சினிமாவின் மரபு. இந்த மரபை, இந்தப் பாரம்பரியத்தைத்தான் சிம்புவும், அனிருத்தும் பின்பற்றியிருக்கிறார்கள்.
நன்றி: துக்ளக்
இட்லிவடை மீண்டு வருகிறது :-)
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Sunday, December 27, 2015
இது தமிழ் சினிமாவின் மரபு – சந்திரன்
Posted by IdlyVadai at 12/27/2015 07:15:00 AM 8 comments
Monday, November 16, 2015
2016 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவதால் என்ன பயன்? --- கல்யாண் ராமன்
அடுத்த தேர்தலில் திமுக வந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டைப் பற்றி சில விளக்கங்கள்.
முதலாவதாக, இந்த தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு புதியதன்று.
திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அரசியல் முழக்கம் எழுந்து பத்து ஆண்டுகள் சென்றுவிட்டன. சுருக்கமாக, 2006, விஜயகாந்த், தேதிமுக, 10% வோட் ஷேர். இந்த நிலைப்பாடு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. விசிக, பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் மதிமுக உருவாக்கியிற மக்கள் நலக் கூட்டணிக்கும் இதுதான் அடிப்படை.
இரண்டாவதாக, திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் இடையே பொதுவான அம்சங்கள் உண்டு. அவற்றில் சில பின்வருமாறு:
1. குறிப்பிட்ட எண்ணிக்கை பெரும்பான்மை கொண்ட சாதிகளின் ஆதிக்கக் கூட்டணி. (இவற்றில் 3 சாதிகளுக்கு அரசியல், சமூக, பண வலிமை மிக அதிகம். அச்சாதியினரின் தவறுகளை திமுக, அதிமுக இரண்டுமே அத்தனை கண்டு கொள்வதில்லை, கடுமையான நடவடிக்கை என்பதை எண்ணிப் பார்க்கக் கூட இயலாது)
2. அவர்களின் இலாபத்துக்காகவே வடிவமைக்கப்பட்ட அரசு கொள்கைகளும் செயல்பாடும்.
3. எதிலும், எங்கும் ரேட் போட்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்தல்
4. கல்வித் துறையில் அரசின் மெத்தனம்; தனியார் மயமாக்கல்; அரசுப் பள்ளி, கல்லூரிகளின் சீரழிவு; ஏழை, எளியவர்களுக்கு தரமான கல்வி மறுக்கபடுதல்
5. தலித் சாதியினருடன் அதிகாரப் பகிர்வு முற்றாக மறுக்கப்படுதல்; தலித்துகள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தடுப்பதில் சாதிமயம் ஆக்கபட்டிருக்கும் காவல்துறையின் செயலின்மை
6. சமூகத்தின் மேல்தட்டு மக்களின் மீது வரி சுமத்தாமல் வசதியாக டாஸ்மாக் மூலம் ஏழை எளியவர்களின் வாழ்வைச் சுரண்டுவதை அரசின் நிதி வளங்களுக்கு இன்றியமையாததாக ஆக்குவது
எனவே, தொடரும் இந்த அவலங்களுக்கு, திமுக திரும்பவும் ஆட்சிக்கு வருவதால் தீர்வு கிடைக்காது.
மூன்றாவதாக,
1989இல் தொடங்கி 2011 வரைக்கும் இரு திராவிட கட்சிகளுமே ஒவ்வொரு முறையும் மோசமாக தத்தம் ஆட்சியை நடத்தி மாற்றுக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்தன. தேர்தல் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வரும் என்ற நிச்சயப்பாடு இருக்கும்வரை நல்லாட்சியைத் தருவதற்கோ ஊழலை நிறுத்துவதற்கோ இரு கட்சிகளுக்குமே எந்தக் காரணமும் இல்லை. எனவே, முடிவற்றது போலத் தோன்றும் இந்த சுழற்சியை முடிக்கும் விதமாக மக்கள் நலன் விரும்பும் அனைவருக்கும் 2016-இல் திமுகவை எதிர்ப்பதற்கு எல்லாக் காரணங்களும் உண்டு. அதற்கு அதிமுக ஆதரவு என்று அர்த்தமாகாது என்பதை முளையைக் கசக்காமலேயே புரிந்து கொள்ள முடியும்.
இவ்வளவு இருந்தும் சிலபல திமுக ஆதரவாளர்கள் தாங்கள் ஏதோ முற்போக்காளர்கள் போல் சீன் போடுவதை கட்டவிழ்க்கவே இந்த விளக்கம். இவர்களின் இந்த பக்கச் சார்பு எதனால் விளைந்திருக்க்கூடும் என்பது ஊகத்தின்பாற்பட்டதே. மேற்படி அவலங்களைப் பற்றிய சீரியஸ் விவாதங்களை இவர்கள் தவிர்ப்பதிலிருந்து இவர்களின் சமூகப் பின்னணியை நாம் கண்டுகொள்ளமுடியும்.
திமுக எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சதியாக இவர்கள் ஏன் பார்க்கவேண்டும் என்று தெரியவில்லை. அந்த சாதியினருக்கு தமிழ்நாட்டின் தேர்தல் போக்குகள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எண்ணிக்கை பலமோ அரசியல் பலமோ இல்லை என்பது கண்கூடு. மேலும், இரண்டு கட்சிகளுக்குமே எதிரான பரந்துபட்ட செக்யூலர் அரசியல் உருவாகிக் கொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
எனவே, இந்த மாதிரி ”கும்பல்வாத” பூச்சாண்டி காண்பிப்பதை நிறுத்திவிட்டு, சமூகப் பிரச்சினைகளைப் பேசக்கூடிய அரசியல் அறிவையும், நேர்மையையும் வளர்த்துக்கொண்டால் எல்லோருக்கு நல்லது.
கல்யாண் ராமன் @kalyanasc
மைக் டெஸ்டிங் 1, 2, 3...
Posted by IdlyVadai at 11/16/2015 10:36:00 AM 7 comments
Labels: அரசியல்
Wednesday, November 04, 2015
விவாதச் சூழலை மாசுப்படுத்துவது யார்? மற்றும் உங்களால் .... போட முடியுமா ?
திரு.ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து:
ஜூலை, ஆகஸ்டு மாதங்களின் காலச்சுவடு இதழில் ஆ.திருநீலகண்டன் எழுதிய “திராவிடன் இதழில் அயோத்திதாசர்” என்ற கட்டுரை இரு பகுதிகளாக வெளியாகியிருந்தது. அயோத்திதாசர் மறைக்கப்பட்டதில் பெரியாருக்கும் திராவிட இயக்கத்திற்கும் தொடர்பிருந்ததாக முன்பு வெளிப்பட்ட தலித் தரப்பு விமர்சனங்களை தனக்குக் கிடைத்த தரவுகள் மூலம் அக்கட்டுரையாளர் எதிர்கொள்ள முற்பட்டிருந்தார். அக்கட்டுரை மீது நானெழுதிய எதிர்வினை கூட காலச்சுவடு இதழிலேயே வெளியாகியிருந்தது. ஆனால் என்னுடைய இப்பதிவு அக்கட்டுரை சார்ந்ததல்ல. மாறாக அயோத்திதாசர் தொடர்பான தலித் தரப்பு விமர்சனங்கள் இங்கு எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருந்தன? அவற்றை மறுக்கும் படியான திராவிடத் தரப்பு எழுத்துகள் வரும்போது அதுவரை மறைந்துகிடந்த எண்ணங்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன? என்பவற்றைப் பற்றியது.
ஜூலை மாதம் 21-ந்தேதியிட்ட தம் முகநூல் பக்கத்தில் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் மேற்கண்ட கட்டுரையின் முதல் பகுதியை (ஜூலை மாத காலச்சுவடு) பகிர்ந்திருந்தார். அவரின் சிறிய குறிப்போடு அக்கட்டுரை பகிரப்பட்டிருந்தது. அக்குறிப்பாவது : இந்துத்துவச் சக்திகள் பிற்படுத்தப்பட்ட மக்களையும் தலித்துகளையும் பிரித்து வைப்பதற்காகத் தொடர்ச்சியாக சொல்லிவரும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு ‘திராவிட இயக்கம் அயோத்திதாசரை திட்டமிட்டே மறைத்து விட்டது. உள்நோக்கம் உள்ள இந்தத் தவறான செய்தியை முறியடிப்பதாக உள்ளது திருநீலகண்டன் அவர்கள் எழுதியுள்ள இந்தக் கட்டுரை.
இக்குறிப்பின் மூலம் சாதி இந்துத்துவம் மற்றும் தலித்துகள் பற்றிய பொதுவான பார்வையையும், கட்டுரை பற்றிய குறிப்பான பார்வையையும் சுந்தர்ராஜன் வெளிப்படுத்திள்ளார். அதாவது அவரின் இப்பதிவு, சாதி பற்றிய சமகால எதார்த்தங்களையும் அதுதொடர்பாக தலித்துகள் எழுப்பி வந்திருக்கும் விவாதங்களையும் விமர்சனப் பூர்வமாகவேனும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அணுகுமுறையாக இருக்கிறது.
சாதியையும் அது தொடர்பான இன்றைய பிரச்சினைகளையும் முழுக்க பிராமணர்-பிராமணரல்லாதார் என்கிற இரட்டை எதிர்மறைக்குள்ளிருந்தே அணுகும் பார்வை அவருடையதாயிருக்கிறது. பொதுவாக தலித் அல்லாத ஆதிக்கச் சாதியினருக்கும் தலித்துகளுக்குமான சாதிய முரணை அதற்குரிய களத்தில் அல்லாது, தான் ஏற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நம்பிக்கையிலிருந்து இந்துத்துவப் பிரச்சினையாக மட்டுமே பலரும் பார்க்கின்றனர். இங்கு சுந்தர்ராஜனும் அவ்வாறுதான் பார்த்திருக்கிறார். இந்துத்துவம் என்பதைப் பார்ப்பனியம் என்று கொள்வது இத்தகு பார்வையின் விரிவு. மொத்தத்தில் ‘இன்றைய’ பிரச்சினைகளுக்குப் பார்ப்பனியம் என்கிற ‘வரலாற்றுக்’ காரணியை மட்டுமே காட்டுவது இதன் அடிப்படை.
இத்தகைய அணுகுமுறையால் பிராமணரல்லாத சாதிகளுக்கு வரலாற்றிலும் இன்றைய நிலையிலும் சாதியமைப்பில் இருக்கும் பங்கோ, அதனால் வரும் பயனோ சொல்லப்படாமல் போய்விடுகிறது. அவர்கள் (பாவம்) தூண்டப்படுவதாலேயே இதையெல்லாம் செய்கிறார்கள் என்கிற அர்த்தம் மட்டுமே மிஞ்சுகிறது. இது திராவிட இயக்கத்தின் சட்டகம். இதன்மூலம் ஒடுக்கப்படும் தலித்துகளின் பார்வையிலிருந்து சூத்திரர்கள் காப்பாற்றப்பட்டு பார்ப்பனர்கள் மட்டுமே குவிமையமாக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு வரலாற்றின் பேரில் தலித்துகளின் கோபம் பார்ப்பனர்கள் மீதே தொடர்ந்து தக்கவைக்கப்படுகிறது. அதே வேளையில் இதிலிருக்கும் சமகால எதார்த்தமின்மையையும் போலித்தனத்தையும் ஆராய்ந்து கேள்வியெழுப்புகிற தலித்துகள் இந்துத்துவத்திடம் ‘சோரம்’ போனவர்களாகக் காட்டப்பட்டு விடுகிறார்கள். இதிலிருக்கும் நுட்பமொன்றைக் கவனிக்க வேண்டும். தூண்டுகிறவர்கள் பார்ப்பனர்கள், சோரம் போகிறவர்கள் தலித்துகள் என்ற விமர்சனங்கள் சொல்லப்படுகிற அளவிற்கு இடையில் இருக்கும் சாதிகளின் நடைமுறை என்ன என்பது இதே அளவிற்கு எடுத்துக்காட்டப் படுவதில்லை. இவ்வாறு இந்துத்துவம் அல்லது பார்ப்பனியம் பற்றி அவர்களாக உருவாக்கி வைத்திருக்கும் சட்டகத்திலிந்துதான் அயோத்திதாசர் கட்டுரை பற்றிய இக்குறிப்பை சுந்தர்ராஜன் எழுதியிருக்கிறார்.
இதுவரை அயோத்திதாசரை முன்வைத்து திராவிட இயக்கம் பற்றி வெவ்வேறு அணுகுமுறையிலிருந்து விமர்சனம் எழுதியவர்கள் டி.தர்மராஜன், ரவிக்குமார் மட்டுமே. மற்றபடி சுந்தர்ராஜன் போன்றோர் கொண்டிருக்கும் சட்டகத்தின் படி ‘இந்துத்துவவாதிகள்’ என்று கூறப்படும் யாரும் அவற்றை எழுதவில்லை. ஆனால் சுந்தர்ராஜன் இந்த விமர்சனங்களைத்தான் ‘பிரித்துவைப்பதற்காக இந்துத்துவச் சக்திகள் செய்துவந்த குற்றச்சாட்டு’ என்று பொத்தாம் பொதுவாக ஒரு போடு போடுகிறார். இதுபோன்ற விவாதங்களில் குறிப்பான பெயர்களைச் சுட்டி விவாதிப்பதே நேர்மை. ஆனால் இப்பதிவிற்கு 40 பேர் விருப்பக்குறி இட்டுள்ளனர். இது திரிபு மட்டுமல்ல, அவரின் இந்தக் குறிப்பு எந்த விதத்திலும் அவர் படிப்பின் மூலமாக உருவாக்கிக் கொண்ட பார்வையாகவும் இல்லை. ஆனால் இங்கு படிக்காவிட்டால் என்ன?
இதையெல்லாம் கேள்விப்படும்போது தரவுகளைவிட கற்றுத்தரப் பட்டிருக்கும் அரசியல் நம்பிக்கைகளே போதுமானதாகிவிடுகிறது. இது போன்ற கருத்தை பார்ப்பனியமாகச் சொல்லும்போது, யாரும் ஆதாரம் கேட்கப்போவதில்லை, அப்படிதான் இருக்கும் என்று ஏற்கத் தொடங்கி விடுகிறார்கள். இந்த பொதுப்புத்தியை நம்பித்தான், தான் ஆராய்ந்திராத ஒன்றைப் பற்றி சுந்தர்ராஜன் இத்தகைய பதிவை எழுதியிருக்கிறார்.
இது தொடர்பான என் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு அவர் பதிவிற்கு கீழே பின்னூட்டத்தில் 2 கேள்விகளை எழுப்பியிருந்தேன். “அந்த இந்துத்துவச் சக்திகள் யாவர் என்று தெரிந்து கொள்ளலாமா? உங்களுடைய புரிதல் பற்றிய தெளிவிற்காகக் கேட்கிறேன்” என்பது நான் எழுப்பியிருந்த முதல்கேள்வி. அவரின் குறிப்பில் ‘தலித்துகளையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிரித்து வைப்பதற்கான இந்துத்துவச் சக்திகள்’ என்று குறிப்பிட்டிருந்தமையை வைத்து கேட்கப்பட்ட கேள்வி இது. ஆனால் இக்கேள்வியை எதிர்பாராத அவர் பெயர்களைச் சொல்லமுடியாததை மறைப்பதற்காக “பிறப்பால் உயர்வு தாழ்வு என்று சொல்லும் அனைத்து ஆதிக்க சக்திகளும் அவர்களை இயக்கும் தத்துவமும்” என்று இந்துத்துவம் பற்றிய வரையறையை கூறி ஒதுங்கிக் கொள்ள முற்பட்டார். ஒருவேளை இந்த விமர்சனங்களை எழுதிய தலித்துகளையே இந்துத்துவச் சக்தி என்கிறாரோ என்பதை தெரிந்து கொண்டலாவது அதன் தொடர்பில் விவாதத்தை மேற்கொள்ளலாம் என்றுக்கருதி, அடுத்த கேள்வியை மீண்டும் இப்படிக் கேட்டிருந்தேன்: கேள்வியைத் தெளிவின்றி கேட்டிருப்பின் மன்னிக்கவும். அயோத்திதாசர் சார்ந்த விவாதங்களைத் தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில், அத்தகைய குற்றச்சாட்டைச் சொன்ன இந்துத்துவவாதிகளின் பெயர்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.
முதல் கேள்விக்குப் பொத்தாம் பொதுவாகவும் சாதுரியமாகவும் பதிலளித்த அவர், குறிப்பிட்டுக் கேட்டவுடன் இந்த இரண்டாம் கேள்விக்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை. இவ்வளவு ஆதாரமாகக் குறிப்பெழுதிய அவர் அதற்குப் பதில் எழுதியிருக்க வேண்டும். திராவிட இயக்கத்தை விமர்சித்தாலே ஆதாரமில்லாமல் அவர்களை இந்துத்துவ சக்திகளென்று முத்திரை குத்தும் போக்கு இங்கிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இவற்றையெல்லாம் விட தலித்துக்களுக்கான முகவாண்மையே மறுக்கப்படுகிறது என்பதுதான் இது போன்ற விவாதங்களின் முக்கியமான பிரச்சினை. ஏற்பு-மறுப்பு என்பதைத் தாண்டி இந்த விமர்சனங்களை முதலில் தலித்துகளின் சுயசிந்தனைகளாகவோ விமர்சனங்களாகவோ பார்க்க மறுக்கிறார்கள். அவர்களை இந்துத்துவம் போன்ற ஒன்றே இயக்கமுடியும் என்று கருதுகிறார்கள். இவ்விடத்தில்தான் தலித்துகளின் ‘சோரம்’ என்கிற சிந்தனை இவர்களிடம் கண்ணுக்குத் தெரியாமல் வினையாற்றுகிறது. இவ்வாறு தலித்துகளின் சிந்தனைகளையோ விமர்சனங்களையோ சுயமானதென்று அங்கீகரிக்க மறுப்பது அவர்கள் மீது சமூகம் கொண்டிருக்கும் பொதுப்புத்திக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. தமிழில் தலித்துகளின் விமர்சனங்களை எதிர்கொள்ளும் எல்லாப் பதிவுகளும் இன்றைக்குத் தவறாமல் இப்பண்பையே கொண்டிருக்கின்றன. திராவிட இயக்கத்தின் பிராமணர்-பிராமணரல்லாதோர் என்ற சட்டகமே சுந்தர்ராஜனின் பார்வையாகவும் இருப்பதால் இப்பிரச்சினையை இவ்வாறு குறுக்கி அணுகியிருக்கிறார். சமூகச் சூழலில் கருத்தியல் மாசுகள் அண்டுவதற்கு ஏதோவொரு விதத்தில் தானும் துணைபோய்விட்டு, இயற்கைச் சூழலில் மட்டும் மாசுகள் அண்டாமல் இருக்கப் போராடுவது முழுமையானதல்ல என்பதை சுந்தர்ராஜன் தெரிந்து கொள்ளவேண்டும்.
திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து
தமிழகத்தில் ..... பன்றித்தனம் ...... அயோக்கியத்தனம் ..... ஈனத்தனம் (உங்களுக்குப் பிடிக்காத சாதிகளை/மதங்களை புள்ளி வைத்த இடங்களில் நிரப்பிக் கொள்ளுங்கள்) என்று சொன்னால் மனம் பதறி நாம் எத்தகைய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனப் பத்தி பத்தியாக எழுதும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் 'பார்ப்பன நரித்தனங்கள்' என்று யாராவது சொன்னால்/எழுதினால் அவர் முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டத் தயங்க மாட்டார்கள். தமிழகத்தில் மற்றைய சாதிகளை/மதங்களைச் சார்ந்தவர்கள் அனைவரிடமும் மனிதர்களுக்கு எத்தனை வேறு பட்ட குணங்கள் இருக்கின்றனவோ அத்தனையும் இருக்கின்றன, ஆனால் பார்ப்பனருக்கு கழிசடைக் குணங்கள் மட்டும் இருக்கின்றன என்பதை நிறுவ வேண்டிய தேவையே இல்லை என்று நினைப்பவர்கள்தான் இன்று தமிழகத்தின் பெரிய அறிவாளிகள் என்று சொல்லிக் கொண்டு உலவி வருகிறவர்கள். இவர்களிடமிருந்து எந்த நேர்மையையும் எதிர்பார்க்க முடியாது.
மஞ்சள் கமெண்டை யோசித்துக்கொண்டு இருக்கிறேன் :-)
Posted by IdlyVadai at 11/04/2015 07:16:00 AM 4 comments
Labels: சமூகம்
Friday, October 30, 2015
சதீஷ் வாசன் எனும் @sathishvasan - அஞ்சலி
சுஜாதா பற்றி ஏதாவது நல்ல கட்டுரை, இடுகை, செய்தி இணையத்தில் வந்தால், அதைப் பகிர்வது அவரது வழக்கம். இன்னபிற வாசிக்கத்தக்கவற்றின் இணைப்புகளையும் டிவிட்டரில் பகிர்ந்து வந்தார். இட்லிவடை வாசகர். எனது வைணவம் (குறிப்பாக ”தினம் ஒரு பாசுரம்” இடுகைகளை உடனுக்குடன் வாசித்து சிலவற்றை நெகிழ்ந்து பாராட்டியதை நினைக்கையில் மனம் கனக்கிறது :-( ), கிரிக்கெட், அரசியல் இடுகைகளின் வாசகரும் கூட. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர், டிவிட்டரிலிருந்து சில துளிகள்:
*****************************************
srinivasan @sathishvasan
”பிருகு பிராமணர்கள் “ - 28 Jun
anbudan BALA @AmmU_MaanU
@sathishvasan Link please - 28 Jun
srinivasan @sathishvasan
@AmmU_MaanU no big deal supposed to be ”பிறகு பிராமணர்கள் “
************************************************
சதீஷ் வாசன் என்கிற ஸ்ரீனிவாசனின் ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தார் இந்த பெரும் துக்கத்திலிருந்து மெல்ல மீளவும், அந்த வைகுந்த வாசனை பிரார்த்தனை செய்கிறேன். நீங்களும் பிரார்த்திக்கவும்.
--- எ.அ.பாலா
Posted by IdlyVadai at 10/30/2015 03:30:00 PM 0 comments
Thursday, October 29, 2015
@sathishvasan - அஞ்சலி
சதீஷ் வாஸன் என்கிற ஸ்ரீநிவாஸன், ட்விட்டரில் அறிமுகமான நண்பர், தமிழ் நண்பர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட பழகுதற்கினியவர், அவரது பேச்சில் எப்பொழுதும் மெல்லிய நகைச்சுவையும், கிண்டலும் இழையோடும், சிரித்த முகத்துடன் இள வயது சுஜாதாவின் படத்தை முகப்புப் படமாகக் கொண்டவர், பெரம்பலூரைச் சேர்ந்த இவர் போஸ்ட்வானாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி போஸ்ட்வானாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் படுகாயமடைந்த இவர், 26 ஆம் தேதியளவில் மாரடைப்பால் காலமானார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் நேற்றிரவு கிடைக்கப்பெற்றது. நம்புவதா வேண்டாமா என்ற நிலையில், பேஸ்புக்கிலிருந்த அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமாக கேள்வியுற்றது நிஜம்தான் என உறுதி செய்யப்பட்டது. தவிர அவரது மனைவியும், வாஸனது ட்விட்டர் கணக்கு மூலமாக அவரது நெருங்கிய சகாக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
சமூக வலைத்தளத்தைத் தாண்டி நேரில் அறிமுகம் இல்லையென்றாலும், கடந்த சில வருடங்களாக பழகிய வரையில், அவரது இழப்பு உற்றாரது இழப்பைப் போலவே உணர வைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு இட்லிவடை சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற இரைஞ்சுகிறோம்.
- யதிராஜ சம்பத் குமார்
Posted by IdlyVadai at 10/29/2015 09:17:00 AM 2 comments
Labels: அஞ்சலி, யதிராஜ சம்பத் குமார்
Wednesday, October 28, 2015
Wednesday, October 07, 2015
தனு வெட்ஸ் மனு - ரிடர்ன்ஸ்..(2015)
படத்தின் டைட்டில் ஓடும்போதே பழைய படத்தின் கல்யாணக் காட்சியை ஒரு பாடல் முழுக்க காட்டி டைட்டில் முடிந்ததும் "4 ஆண்டுகளுக்குப் பிறகு..." என போட்டுவிட்டு படம் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது. பழைய படம் பார்க்காதவர்களுக்குக்கூட எந்தப்பிரசினையும் இன்றி இந்தப்படத்துடன் ஒன்ற முடியும் இந்த உத்தியினால்.
முதல் ஷாட் ஒரு மெண்ட்டல் அசைலத்தின் கவுன்சிலிங்கிற்காக கணவனும் மனைவியும் செல்கிறார்கள். (மாதவன், கங்கனா ராவத்)
கவுன்சிலிங்கில் இருவரும் மாறி மாறி குறைகளை அடுக்குகின்றனர். ஒரு கட்டத்தில் மாதவன் கோபத்தின் உச்சத்தில் கத்த, அவரை பைத்தியம்போல அழைத்துச் செல்கின்றனர். அந்த கவுன்சிலிங்கின்போது இருவரும் மாற்றி மாற்றி குற்றங்களை அடுக்கும்போது எழுதப்பட்ட வசனம் கலக்கல். எத்தனை ரவுடிப் பெண்ணாய் இருந்தாலும் பொதுஇடத்தில் பெண்கள் எப்படி அழகாக வேஷம்போடுவார்கள் என்பதைக் காட்டியிருக்கின்றனர்.
இருவரும் பிரிந்ததும் அடுத்தடுத்து நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை அழகாகக் கோத்ததில் திரைக்கதை எழுதியவர் கலக்குகிறார். அழகான வசனங்கள். டெல்லி ஹிந்தி தெரிந்திருந்தால் படம் இன்னும் நிறைய பிடிக்கும். குறிப்பாய் குசும் ஆக வரும் கங்கன ராவத்தின் இரண்டாவது வேடத்தில் வரும் கேரக்டர்.
டெல்லி மற்றும் வட இந்திய மக்களின் கலாசாரத்திற்கும், நமக்குமான இடைவெளியும் படம்பார்க்கும் மதராசிகளுக்குப் புரியும். டைவர்ஸ் என்றதும் மூலையில் போய் உட்கார்ந்துவிடாத கேரக்டர். நம்மூரில் அந்தப் பெண்ணுக்கு வாழாவெட்டி எனப் பெயரிட்டு நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ அசிங்கப்படுத்துகிறது சமூகம்.
டைவர்ஸ் ஆனாலும் மாதவன் மீதான அன்பு குறையாமல் இருப்பதை சில ஷாட்டுகளில் அருமையாக காண்பித்திருப்பார் இயக்குனர். மொபைலில் கல்யாண ஃபோட்டோக்களைப் பார்த்துக்கொண்டிருப்பது, ஃபோன் செய்து மன்னிப்புக்கேட்க முயல்வது, குசும் உடன் மாதவன் காதல்வயப்பட்டு கல்யாணம் செய்ய முடிவெடுத்ததும் காண்பிக்கும் உணர்ச்சிகள் என கங்கனா ராவத் என்ற நல்ல நடிகை தெரிகிறார்.
சுதந்திரமான பெண்களின் அடையாளமாக கங்கனா ராவத்தை காண்பிக்க இயக்குனர் முயன்றிருந்தாலும் காதலித்து மணந்துகொண்ட கணவனைப் பிரிந்திருப்பதைப் பொறுக்கமுடியாமல் இருப்பதையும் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு. அதே அலைவரிசையில் சுதந்திரமான பெண் என்பதைக் காண்பிக்க-- குடிப்பது, பழைய காதலனுடன் சுற்றுவது, வகைதொகையில்லாமல் ஆண் நண்பர்களுடன் பழகுவது, ஊர் சுற்றுவது, சினிமா செல்வது எனவும் காட்டி இருக்கிறார்.
படத்தில் கருத்தோ செய்தியோ சொல்ல முயலவில்லை இயக்குனர். ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க முயன்று வெற்றியும் கண்டிருக்கிறார்.
படத்தில் நகைச்சுவைக்கென தனி ட்ராக்கெல்லாம் கிடையாது. வட இந்திய மக்களின் வாழ்க்கையே கொண்டாட்டமாக, ஜாலியாக போவதை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதிலேயே நகைச்சுவைப் பகுதியும் இயைந்து வருகிறது.
கங்கனா ராவத்தின் தங்கைக்கு பெண்பார்க்க வரும் காட்சியில் ஒரே ஒரு டவலுடன் வந்து சபையில் உட்கார்ந்துகொண்டு மாப்பிள்ளையிடம் கேட்கும் கேள்விகளும், கடைசியில் இப்படிப்பட்ட ஆட்களுடன் வாழ்க்கை பயங்கர போர் அடிக்கும் எனவும், எவனுடனாவது ஓடிப்போ என தங்கைக்கு அறிவுரை சொல்வதையும் புதுமைப்பெண்ணுக்கு சொல்ல ஆசைப்பட்டிருப்பார்போல. அந்த காட்சியமைப்பும், நகைச்சுவையும் அருமை.
தபங் படத்தில் பிரகாஷ்ராஜின் தம்பியாக வந்து செத்துப்போகும் நடிகர் இதில் மாதவனின் தம்பியாக வருகிறார். நகைச்சுவை நடிகராக ஒரு சுற்று வர நல்ல வாய்ப்பிருக்கிறது. அவர் பேசும் புல்லட் ஸ்பீட் ஹிந்தியும், அடிக்கும் காமெடியும் கலக்கல். அவரது வாட்சப் காதலும், அதன் சொதப்பலும் அருமை.
மாதவன் அவர் அப்பாவாக வருபவரிடம் நான் டைவர்ஸ் வாங்கப்போகிறேன் எனச் சொல்லும்போது அவர் அப்பா சொல்லும் வசனங்கள்தான் இன்றைய பெருவாரியான குடும்பங்களின் நிதர்சனம். எவ்வளவு தூரம் சேர்ந்திருக்க முடியுமோ அவ்வளவு தூரம் சேர்ந்திரு என்பதே விஷயம். புதுசா வருபவள் உன்னை இப்படிப் படுத்தமாட்டாங்கிறதுக்கு என்ன நிச்சயம்? உங்கம்மாவும் நானும் கூடத்தான் எம்புட்டு தூரம் சேர்ந்திருக்க முடியுமோ அப்படி இருக்கிறோம்,
மாதவன் : நான் டைவர்ஸ் வாங்கலாம்னு இருக்கேன்..
அப்பா : ஏன்?
மாதவன் : எங்களுக்குள்ள பேசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை. சின்னச் சின்ன விஷயங்கள் கூட பெரிய சண்டையாய் ஆகிருது. அவளை நானோ இல்லை அவள் என்னையோ புரிந்துகொள்வதில்லை. என்னைய பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேர்த்துவிட்டது ரொம்பவே அதிகம்.
பப்பி (மாதவன் தம்பி) : நீ எப்படி பைத்தியக்கார ஆஸ்பத்திரியில போய்ச் சேர்ந்தே?
மாதவன் (அப்பாவிடம்): நானும் நாலு வருஷமா சமாளிச்சுட்டேன்,
அப்பா : எல்லோரும் அனுபவிக்கிறாங்க. நான் 40 வருஷமா சமாளிச்சிட்டிருக்கேன். உங்கம்மாவும் இப்படித்தான் சமாளிச்சிட்டிருப்பாங்க,
மாதவன் : அப்படின்னா?
அப்பா : அப்படின்னான்னா என்ன? சமாளி. அதுக்கும் மேல இது இருக்கு ( விஸ்கியைக் காண்பித்து) எப்பயாச்சும் தண்ணீர் சேர்த்து, அப்பப்ப சோடா சேர்த்து அடி..
பப்பி : அப்பப்ப நீட்டா ( தண்ணீர் சேர்க்காமல்) அடி..
அப்பா : டைவர்ஸ் ஆனபின் என்ன ஆகும்னு நெனைக்கிற? வாழ்க்கை முழுக்க தனியா இருக்கப்போறியா? தனியா இருந்தா போரடிக்கும் உனக்கு. இல்லைன்னா, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க. ரெண்டாவது கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டாவது பொண்டாட்டி உன்னைய சந்தோஷமா வச்சிருப்பான்னா நெனைக்கிற? மகனே, உலகத்தின் நியதி இது. ஆணும் பெண்ணும் காதலில் விழவேண்டும். அப்புறம், கல்யாணம், அப்புறம் ஒருத்தர் இன்னொருத்தரால போர் ஆகிருவாங்க,
பப்பி : சரியா சொன்னீங்க.. (சிரித்துக்கொண்டே)
அப்பா : இதனாலதான் சொல்றேன், எம்புட்டு தூரம் இழுத்துட்டுப் போகமுடியுமோ, போ. எப்ப தோத்துப்போறியோ, அப்ப முடிச்சிக்க.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் மாதவனின் அம்மா கத்திக்கொண்டே இருக்கிறாள், சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் வந்து சாப்பிடு, உனக்கு எடுத்து வைக்கிறதுக்கு இங்க உன் பொண்டாட்டி இல்ல, யார் லைட்ட போட்டுட்டு போறது, சர்மா ஜி மாத்திரை சாப்பிடுங்கன்னு விடாமல் கத்திக்கொண்டே இருக்கிறார்.
மாதவனுக்கும் , கங்கனா ரவத்தைப்போலவே தோற்றமளிக்கும் கல்லூரி சென்றுகொண்டிருக்கும் ஸ்போர்ட்ஸ் உமன் ஆன குசும் உடன் காதல் வருகிறது. மோதலில் வருகிறது காதல். காதல் வந்ததும் அதன் அடுத்த கட்டமாக இருவரும் போட்டிங் செல்கின்றனர். (குசும் பாஸ் ஆனதற்கான பார்ட்டி) அப்போது பாடும் I might be sentimental.. but, don't get so judgemental என்ற பாடல் முடியும்போது இருவரும் கிட்டத்தட்ட காதலர்களாய் ஆகியிருப்பர். இதில் விஷயம் என்னவெனில் மாதவனுக்கும் குசுமாக வரும் கங்கனா ராவத்துக்குமான வயது இடைவெளி. பப்பி ஒரு வசனமாகச் சொல்வான். அண்ணே, நீ கிராஜுவேஷன் முடிச்சிருக்கும்போது இவ பிறந்திருக்கக்கூட மாட்டா என.
இப்படி வயது வித்யாசம் இருக்கும்போதும் குசும் வீட்டில் அண்ணன் கல்யாணத்திற்கு சம்மதிப்பான். அண்ணியும்கூட வேறொரு பையனை பார்த்து வைத்துவிட்டதால் வேண்டாம் எனச் சொல்வார். நம்மூரில் இதெல்லாம் சொன்னாலே சிரிப்பார்கள். திக்விஜய் சிங் செய்தது நம்மளவில் பெரிய அநியாயம், ஆனால், வட இந்தியாவில் இது பெரிய விஷயமாய் விவாதிக்கப்படவில்லை என்பதை நாம் பார்த்திருக்கலாம்.
கங்கனா ராவத் மீண்டும் முதல் காதலனுடன் சுற்ற ஆரம்பிக்கிறாள். கடைசியில், அவனுக்கு நிச்சயமாகி இருக்கும் பெண்ணைத்தான் மாதவன் காதலித்துக்கொண்டிருப்பார். இது விஷயமாக கங்கனா ராவத்துக்கும், பழைய காதலனுக்கும் நடக்கும் உரையாடல்.
தனு : என்னாச்சு, ஏன் இம்புட்டு கோபமா இருக்க?
காதலன் : உன் பழைய புருஷன் டாக்டர் என் வாழ்க்கையில் மீண்டும் வந்துவிட்டான். இம்முறை அவனை சும்மா விடமாட்டேன், சுட்டுத்தள்ளத்தான் போகிறேன்.
தனு : ஏன் திட்டிக்கிட்டிருக்க, என்ன நடந்துச்சுன்னுதான் சொல்லேன்.
காதலன் : நாலு வருஷம், நாலுவருஷம் ஒரு பொண்ணத் தேடினேன்.அவள பாத்ததும் இல்ல, பேசுனதும் இல்ல, நேரா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன். ஏன்? அவளுக்கும் உன்னையப் போலவே முகம். சரி நீதான் இல்லை, உன்னைய மாதிரி இருக்குறவளையாவது கட்டலாம்னா, உன் புருஷன் அதுக்கும் விடமாட்டான் போல. ராஸ்கல், ஒரிஜினலும் அவனுக்குத்தான் வேணும், டூப்ளிகெட்டும் அவனுக்குத்தான் வேணும்..
மாதவன் தான் மனுவாக. மனு இப்படிச் செய்திருக்கிறான் என்றதும் இருக்காதே என்ற நப்பாசையில் எப்படி என ஒவ்வொரு கேள்வியாய் கேட்க கடுப்பாகும் முன்னாள் காதலன் கடைசியில் "ஏ தனுஜா த்ரிவேதி, உன் புருஷன் உன்னைய ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணுகூட சுத்திட்டிருக்கான். அதுல என் வாழ்க்கையிலும் மண்ணள்ளிப்போட்டுட்டான்.." என முடியும்.
படம் முழுக்க அழகான ஒளிப்பதிவும் நல்ல பின்ணணி இசையுமாக இருக்கிறது. ஒளிப்பதிவு பளிச்சென இருப்பதே ஓர் அழகைக் கொடுத்துவிடுகிறது. பாடல்களும், அதனை படமாக்கியிருக்கும் விதமும் அருமை.
என்னதான் கதையில் இத்தனை சண்டை சச்சரவும் இருந்தாலும், ஒருவருக்கொருவர் டைவர்ஸ் வரை சென்றாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பிரிந்திருப்பதை மனதின் அடியாழத்தில் வெறுக்கின்றனர் என்பதால் இறுதியில் சேர்வதன் மூலம் மங்களம். இரண்டாவது காதலியாக வரும் கங்கனா ராவத்தை (குசும்) அதற்கேற்றார்போல கேரக்டரைசேஷன் செய்திருப்பார்கள். நான் ஒன்னா, ஜெயிப்பேன், இல்லைனா தோப்பேன், ஸ்போர்ட்ஸ் உமன் ஆன எனக்கு ஆறுதல் பரிசில் எல்லாம் இஷ்டமில்லை எனச் சொல்லிவிட்டு கல்யாணப் பந்தலிலிருந்து இறங்கிச் செல்வாள்.
குசும் ஆக வரும் கங்கனா ராவத்தையும், தனுவாக வரும் கங்கனா ராவத்தையும் இரு துருவங்களாக ஒப்பனை செய்ததிலும், பாத்திர வடிவமைப்பு செய்ததிலும் இயக்குனரின் திறமை தெரிகிறது. குறிப்பாய் கிராமப்புற ஹிந்தி பேசும் குசும், கான்பூர்வாலி ஹிந்தி பேசும் மனு. பெரும்பாலும் கிராமப்புற உடையணிந்து டெல்லியில் சுற்றும் பெண்ணாக குசும், நவநாகரீக உடையணியும் தனு என, தலைமுடி ஒப்பனையில் இருந்து, உடல் அசைவுகள் வரை, முக ஒற்றுமை தவிர வேறெதுவும் கொஞ்சம்கூட ஒட்டாத அளவு பாத்திர வடிவமைப்பு செய்திருக்கிறார். அதிலும் குசும்மின் குரலும் ஹிந்தி பேசும் வேகமும் அருமை.
நம்மூரின் சாக்லேட் பாய் மாதவன் அங்கேயும் அவ்வாறே. ஒரு சண்டை கூட இல்லாமல் குரலுயர்த்திக்கூட பேசும் வாய்ப்பில்லை. ஆனால், படம் முழுக்க தன் இருப்பை அழகாக பதிவு செய்கிறார். தமிழ் சினிமாதான் அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.
ஏன் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் எனத் தெரியவில்லை. நான் நினைத்ததை, உணர்ந்ததை எழுதியதாகவும் தெரியவில்லை. எழுதாமற்போனாலும் ஒன்றும் ஆகிவிடாது, ஆனால், எழுதாமல் இருப்பது நான் ரசித்த நல்ல படத்தைக்குறித்து நாலுபேருக்கு சொல்ல வேண்டியதைச் சொல்லமுடியாமல் போகும்.
அவசியம் பார்த்தேயாகவேண்டிய வாழ்க்கையைப் புரட்டிப்போடும் சினிமாவா? இல்லை.
பின்னே, அருமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன், நல்ல இசையுடன், நல்ல ஒளிப்பதிவுடன், நல்ல திரைக்கதையுடன் வந்திருக்கும் படம். அவசியம் பாருங்கள் எனச் சொல்லவே இந்தப்பதிவு. அதை நியாயம் செய்யவே மேலே சொன்ன அனைத்தும்.
:)
இந்த விமர்சனத்தை எழுதியவர் யார் ? தெரிந்தால் பரிசு கிடையாது - எச்சரிக்கை !
Posted by IdlyVadai at 10/07/2015 08:12:00 AM 4 comments
Friday, October 02, 2015
வாசிம் அக்ரம் - @teakkadai
வாசிம் அக்ரம் - By @teakkadai
வாசிம் அக்ரம் என்ற பெயரை முதன் முதலில் கேள்விப்பட்டது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1985 உலக தொடர் கோப்பையின் போதுதான். இந்து பேப்பரில் ஒரு பத்தி அளவு மட்டுமே அப்போது அந்த போட்டிகளைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். ஸ்கோர்கார்டில் தென்பட்ட புதுப்பெயரான வாசிம் அக்ரம் அப்போது அவ்வளவாக ஈர்க்கவில்லை. ரவி சாஸ்திரியும் அசாருதீனும் என்ன செய்தார்கள் எனப்பார்ப்பதில் தான் ஆர்வம் முதன் முதலில் வாசிம் அக்ரத்தின் பந்துவீச்சைப் பார்த்தது 86 ஷார்ஜா கோப்பை போட்டிகளில் தான்.
ஸ்கோர்கார்ட் என்பது ஒரு பிளேயர் களத்தில் என்ன செய்தார் என்பதை அப்படியே பிரதிபலிக்காது என்பார்கள். அது வாசிம் அக்ரம் விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. 86ல் நடைபெற்ற அந்த ஷார்ஜா கோப்பை போட்டியானது ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட போட்டி. இந்தியா,பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். அதிக புள்ளிகள் பெறும் அணிக்கு கோப்பை. தனியே பைனல் எல்லாம் கிடையாது. இதன் கடைசிப் போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியை வைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு முன்னரே மேற்கிந்திய தீவுகள் மூன்று போட்டிகளையும் வென்று சாம்பியன் ஆகியிருந்தார்கள்.
வெற்றி பெறும் அணிக்கு இரண்டாம் இடம் என்ற இலக்குடன் இந்தியாவும் பாகிஸ்தானும் களமிறங்கின. இந்தியா முதல் பேட்டிங். அக்ரம் பந்து வீசுவதைப் பார்த்த எங்கள் தெரு அண்ணன்கள் இவன் என்னடா ஒரு டைப்பா போடுறான் என கமெண்ட் அடித்தார்கள். அப்போதெல்லாம் பாகிஸ்தான் மீது பெரும் வன்மம் இருந்த காலம். ”எறியுறாண்டா அதான் அடிக்க முடியலை” என்ற ஒற்றை வரியில் அக்ரத்தை கடந்து விட்டோம்.
ஆனால் அடுத்து வந்த பாகிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வாசிம் அக்ரம் யார் எனப் புரிய வைத்தது. மிகக்குறைந்த ரன் – அப். ஆனால் பந்தின் வேகம் சராசரியாக மணிக்கு 140 கிலோமீட்டருக்கு மேல்.
ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் வேகமாக பந்து வீச அதிக தொலைவு ஓடி வந்து, அதன் மூலம் கையில் வேகமான அசைவை ஏற்படுத்துவார்கள். ஆனால் வாசிம் அக்ரமின் தோள்பட்டை வலிமையானது. அவரது குறைந்த ரன் அப்பிலேயே அந்த வேகத்தை கொண்டுவந்து விடுவார். அவருடைய மணிக்கட்டும் அந்த அசைவுக்கு அபாரமாக ஒத்துழைக்கும். அந்த ரிஸ்ட் ஆக்சனின் மூலம் அவர் பந்து ஸ்விங் ஆகும் திசையை எளிதில் மாற்றிவிடுவார்.
பெரும்பாலான பந்துகள் குட்-லெந்த்தில், மிடில் அண்ட் ஆப்ஸ்டெம்ப் லைனில் விழும். அதே இடத்தில் அதே வேகத்தில் விழுந்த பந்து எந்த திசையை நோக்கித் திரும்பும் என பேட்ஸ்மென்களால் கணிக்க முடியவில்லை. ஷார்ட் பிட்ச்சாக போடப்பட்ட பந்துகள் இந்திய ஆடுகளங்களிலேயே நெஞ்சுக்கு மேல் எழும்பின. அதில் ஒன்று ஸ்ரீகாந்தின் மண்டையை பிளந்தது. 14 தையல்கள் போட்டார்கள். இது போக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து விழும் யார்க்கர் வேறு. பத்தும் பத்தாததிற்கு ரிவர்ஸ் ஸ்விங்.
பந்து புதிதாக இருந்தாலும் பிரச்சினை, பழசாகி விட்டாலும் பிரச்சினை என்று பேட்ஸ்மென்கள் அலுத்துக் கொண்டார்கள். அந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரையும் டெஸ்ட் தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது.
அதன்பின் வாசிம் அக்ரமின் புகழ் எந்தக் காலத்திலும் குறையவில்லை. ஹெர்குலிஸே வந்து பந்தை எறிந்தாலும் முட்டிக்கு மேலே பவுன்ஸ் ஆகாத ஆசிய ஆடுகளங்கில் வித்தை பழகியவருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் உற்சாகத்தைக் கொடுத்தன.
ஒரு சிறந்த பேட்ஸ்மென் நம்மை எதிர்த்து ஆடுகிறார் என்றால் அவருக்கு ஏற்ப வியூகங்கள் வகுப்போம். பந்து வீச்சாளர்களை மாற்றி பயன்படுத்துவோம். அப்போது ஆட்டமானது அந்த பேட்ஸ்மென் சார்ந்ததாக இருக்கும். ஆனால் அக்ரம் தனது பிரைம் பார்மில் இருக்கும் போது, அவர் பந்து வீசும் போது ஆட்டமானது பவுலர் சார்ந்ததாக இருக்கும். பேட்ஸ்மென்கள் தான் தங்கள் ஆட்டத்திற்கு வியூகம் அமைப்பார்கள். இந்த பேட்ஸ்மென் இவருக்கு இப்படி போட வேண்டும் என்ற வியூகமெல்லாம் அக்ரம் அப்போது பயன்படுத்தியதில்லை.
நான் பாட்டிற்கு ஓடி வந்து அப்போது என் மனநிலை என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்றபடி பந்தை வீசுவேன். களத்தின் நிலை, பருவ நிலை, பந்தின் நிலை தான் என் கணக்கு. அதற்கேற்ற படி ஸ்விங்கோ, ரிவர்ஸ் ஸ்விங்கோ. நீ ஆடு பார்ப்போம் என்று தான் வீசுவார். சச்சின், லாரா, ஸ்டீவ் வாவ்வாக இருந்தாலும் சரி, மெக்ராத்,ஸ்ரீநாத்,வால்ஸ் ஆக இருந்தாலும் சரி ஒரே எஃபர்ட்தான்.
நினைத்துப் பாருங்கள். நன்றாக செட்டில் ஆகி ஆடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மென்களே அக்ரமின் குட் லெந்த் அவிட் ஸ்விங்கர்களுக்கும், இன் ஸ்விங்கிங் யார்க்கர்களுக்கும் திணறுவார்கள். டெயில் எண்டர்கள் என்ன ஆவார்கள்?.
டெஸ்ட் மேட்சுகளில் ஓப்பனிங் பேட்ஸ்மென்கள் அக்ரமின் முதல் ஸ்பெல்லை கடத்திவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே உள்ளே வருவார்கள். ஓவருக்கு ஒரு அப்பீலாவது இருக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் ஸ்லிப் பீல்டர்கள் ஏன் விக்கெட் கீப்பர்கள் கூட அக்ரமின் பந்து வீச்சில் பல கேட்சுகளை தவற விட்டுவிடுவார்கள். பார்க்கும் போது நமக்கே வயிற்றெரிச்சலாக இருக்கும். என்னடா ஒருத்தன் உயிரைக்கொடுத்து போட்டுக்கிட்டு இருக்கான். இவுங்க இப்படி பண்ணுறாங்க என்று அலுத்துக் கொள்வோம்.
ஒரு போட்டியின் நேரலையின் போது வக்கார் யூனுஸ் மிகக்குறைந்த டெஸ்டுகளிலேயே 200 விக்கெட் எடுத்தார் எனச் சொல்லி அது சம்பந்தமாக ஒரு அனாலிசிஸ் போட்டார்கள். அந்த 200 விக்கெட்டுகளில் 85 போல்டு, 85 எல்பிடபிள்யூ. இதைப் போலவே தான் வாசிம் அக்ரமும். அவரின் பெரும்பாலான விக்கெட்டுகள் போல்டு மற்றும் எல்பிடபிள்யூதான்.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க ஸ்லிப் பீல்டர்கள் பத்து நாள் பட்டினி கிடந்த ராஜபாளையம் நாயைப் போன்றவர்கள். பத்துநாள் கழித்து வீசப்படும் எலும்புத்துண்டை எப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் கவ்வுமோ அதைப் போல பந்தை கேட்ச் செய்வார்கள். விக்கெட் விழுவதற்கான அரை சந்தர்பத்தைக்கூட முழுதாக மாற்றி விடுவார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவு ருசியான சாப்பாட்டை கொடுத்தாலும் தட்டி விடும் பணக்கார குழந்தைகள் போல, கையில் விழும் பந்தை தட்டி விடுபவர்கள். அவர்கள் மட்டும் ஒழுங்காக பீல்டிங் செய்திருந்தால் அக்ரமின் விக்கெட் எண்ணிக்கை இன்னும் உயர்ந்திருக்கும்.
89 நேரு கோப்பை வெற்றி, பல ஷார்ஜா கோப்பைகள், 92 உலக கோப்பை, நிறைய டெஸ்ட் வெற்றிகள் என வாசிம் அக்ரம் பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்த போட்டிகள் ஏராளம். 92ல் உலக கோப்பையை வென்றபின்னர் இம்ரான் கான் ஓய்வு பெறவும்,கேப்டன் பதவி மியாண்டாட், ரமீஸ்ராஜா, சலிம் மாலிக் என பல கை மாறியது. அது அக்ரமின் கைக்கும் வந்தது. கேப்டனாகவும் நிறைய போட்டிகளை வென்று கொடுத்தார். ஆனால் அவரை மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்ல முடியாது. அவரின் திறமையாலும் சக வீரர்களின் திறமையாலுமே போட்டிகள் வெல்லப்பட்டன. வியூகங்கள் அமைத்து அதன் மூலம் பெறப்பெற்ற வெற்றிகள் மிகக்குறைவு.
அந்த விஷயத்தில் இம்ரான்கான் தான் கிரேட். எம்ஜியாரைப் போலவே அவரைப் பற்றியும் பல மித்துகள் அப்போது உலவியது. கல்லூரிகளுக்கு இடையிலேயான போட்டியை காணச்சென்ற இம்ரான், அக்ரமின் பந்து வீச்சைக் கண்டு உடனே தேசிய அணிக்கு அவரைத் தேர்வு செய்தார் என்பார்கள். ஒரு உள்நாட்டுப் போட்டியில் மியாண்டாட்டே திணறும்படி ஒருவர் பந்து வீசியதைக் கண்டு அவரைத் தேர்வு செய்தார். அவர்தான் வக்கார் யூனிஸ் என்பார்கள். வக்கார் யூனிஸின் பந்து வீச்சை அனாயசமாக சமாளித்து ஆடியதற்காகவே இன்சமாம் உல் ஹக்கை தேர்வு செய்தார் என்பார்கள். அவருடைய தேர்வுகள் எதுவுமே பொய்த்துப் போனதில்லை.
தர்மபுரியில் நக்சலைட்கள் தலை தூக்கியபோது அதை அடக்கியவர் வால்டேர் தேவாரம். ஆனால் அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்தது அப்போதைய ஐ.ஜி ஸ்ரீபால். அதே தேவாரம் காவல்துறை தலைவராக இருக்கும் போது வீரப்பனை பிடிக்க களமிறங்கி தோல்வி அடைந்தார். அதற்கு காரணம் அவருக்கு திட்டங்கள் வகுத்துக் கொடுக்க ஆள் இல்லை. விஜயகுமார் வீரப்பனை வீழ்த்திய போது கூட அவருக்கு திட்டங்களை தீட்டிக் கொடுக்க அதிகார்களின் வலுவான துணை இருந்தது. இதே போலத்தான் வாசிம் அக்ரமமும். அர்ஜுனனைப் போல களத்தில் வாழ்பவர். பிரம்மாஸ்திரங்களும், நாகாஸ்திரங்களும் அவரிடம் ஏராளம் உண்டு. அவரைத் தெளிவாகப் பயன்படுத்த வேண்டும். இம்ரான் கேப்டனாக இருந்த வரையில் அவரை பேட்டிங் ஆர்டரில் மேலேற்றி விடுவார். பின்ச் ஹிட்டராக பயன்படுத்துவார். பந்து வீச்சின் போது முதலில் நான்கு ஓவர், பின்னர் ஓய்வு பின்னர் நான்கு ஓவர் எனப் பயன்படுத்துவார். பேட்ஸ்மென் அன்கம்பர்டபிளாக இருப்பது போல தோன்றினால் உடனே அக்ரத்திடம் தான் பந்தைக் கொடுப்பார். ஆனால் வாசிம் அக்ரமே கேப்டனாக இருக்கும் போது இவை நடக்க வாய்ப்பில்லாமல் போனது. இம்ரானைத் தவிர மற்ற கேப்டன்கள் அவரை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
ஆனால் எல்லாக் கேப்டன்களும் (இங்கிலாந்து கவுண்டி கேப்டன்கள் உட்பட) செய்த விஷயம் ஒன்றுதான். அதுதான் டெயில் எண்டர்கள் வரும்போது அக்ரத்திடம் பந்தைக் கொடுப்பது. பாகிஸ்தானின் முஷ்டாக் அகமது கூட சொல்வார் “மிடில் ஆர்டர் விக்கெட் இரண்டு, மூன்று எடுத்திருப்பேன், பந்து நான் நினைத்த இடத்தில் விழுந்து, நினைத்த படி சுழலத் தொடங்கி இருக்கும். ஆனால் ஆறாவது விக்கெட் விழுந்து பவுலர்கள் வந்து விட்டால் எந்த கேப்டனும் அக்ரமிடம் பந்தை தூக்கி தந்துவிடுவார்கள்” என்று.
90களின் மத்தியில் அப்போது ஆக்டிவ்வாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆட்டக்காரர்கள் எல்லோருக்குமே அக்ரம் மீது பெரிய மரியாதை இருந்தது. அரவிந்த் டி சில்வா ஒரு பேட்டியில் சொன்னார் “ நான் அக்ரம் பந்து வீச்சில் சிக்ஸர் அடித்த பின்னால் தான் என்னை சிறந்த பேட்ஸ்மெனாக எங்கள் அணி வீரர்கள் ஒத்துக் கொண்டார்கள்” என. கிரிக்கெட் அணி வீரர்கள் மட்டுமல்ல, தெரு கிரிக்கெட் விளையாடியவர்கள், பார்க்க மட்டும் செய்தவர்களுக்கு கூட அக்ரமின் மீது ஒரு தனிப்பிரியம் இருந்தது. அப்போது இந்தியாவில் கல்லூரி விடுதிச் சுவர்களில் சச்சின் புளோ அப் அதிகமாக ஒட்டப்பட்டிருக்கும். நான் பார்த்த பல அறைகளில் வாசிம் அக்ரமின் புளோ அப்பும் இடம் பிடித்திருக்கும். என்னுடன் தங்கியிருந்த வட இந்திய நண்பர் ஒருவர், அக்ரம் மட்டும் நம்ம நாட்டில் பிறந்திருந்தால் எப்படி கொண்டாடி இருப்போம் என அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார். நான் என்ன நினைப்பேன் என்றால், நாமளே இவ்வளோ கிரேஸா இருக்கிறோமே, பாகிஸ்தான்காரர்கள் எவ்வளவு கிரேஸாய் இருப்பார்கள் என நினைத்துக் கொள்வேன்.
94ல் ஹம் ஆப்கே ஹெயின் கோன் வெளியாகி இங்கே மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படம் பாகிஸ்தானிலும் பெரிய ரசிகர்களைப் பெற்றது. முக்கியமாக மாதுரி தீட்சித்துக்கு. அந்தப் படத்தில் வரும் ஜூட்டே தோ பைசே லோ பாடலை (செருப்பைக் கொடுத்து பணத்தை வாங்கு) உல்டா செய்து மாதுரியை எங்களுக்கு கொடு அக்ரமை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பாடுவார்களாம். அந்த நேரத்தில் அவர்கள் விலை மதிக்க முடியாததாக கருதியது அக்ரமைத்தான்.
வாழ்வில் காட்சி இன்பமாக ஏராளமானவற்றை அனுபவித்து உள்ளேன். சினிமா மற்றும் கிரிக்கெட்டுக்கு அதில் தனி இடமுண்டு. கிரிக்கெட்டில் நான் மிகவும் ரசித்தவைகளில் வாசிம் அக்ரமின் பவுலிங்கிற்கு முக்கிய இடமுண்டு. 92 உலக் கோப்பை பைனலில் முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்த பந்துகளில் ஆலன் லாம்ப்பையும், கிறிஸ் லீவிஸையும் வீழ்த்தியது, ராகுல் ட்ராவிட்டை ஒரு டெஸ்ட் மேட்சில் கதகளி ஆடவிட்டது, நேரு கோப்பை பைனலில் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸர், சேப்பாக்கத்தில் அடித்த 5 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் அடித்த 53 ரன்கள், கணுக்காலில் இறங்கும் இன்சுவிங் யார்க்கர், ரிவர்ஸ் ஸ்விங்னா அது இப்படித்தான் இருக்கணும் என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் படி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கடைசி ஓவர்களில் போடும் பவுலிங் என சொல்லிக் கொண்டே போகலாம்.
கிரிக்கெட் உலக முக்கியஸ்தர்கள் எல்லோருமே, இதுவரை தோன்றிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களிலேயே அக்ரம்தான் சிறந்தவர் என்று நேரிடையாகவும் மறைமுகவாகவும் ஒத்துக் கொண்டார்கள். எப்படி கிரிக்கெட் சமுதாயம் புதிதாக ஒரு பேட்ஸ்மென் சிறப்பாக ஆடினால் அவரை பிராட்மெனுடன் கம்பேர் செய்கிறதோ அதுபோல உலகில் எந்த மூலையில் ஒரு இடதுகை பந்து வீச்சாளர் நன்றாகப் பந்து வீசினாலும் அவரை வாசிம் அக்ரமுடன் தான் கம்பேர் செய்கிறார்கள். இதைவிட என்ன சாதிக்க வேண்டும் அவர்?.
மக்களே உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பாலா மூலம் :-)
Posted by IdlyVadai at 10/02/2015 05:53:00 AM 7 comments
Labels: எ.அ.பாலா, விளையாட்டு
Wednesday, July 29, 2015
கலாம் எனும் கனவு - Senthilmurugan
கலாம் எனும் கனவு
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
கனவுகளின் கனவு நீ !
இந்தியாவின் உடைமை நீ !
இந்தியாவை இயக்கிய
இளைய தலைமுறையை எழுப்பிய
இணையில்லா தலைவன் நீ !
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
நீ
கனவு கண்டாய்…எங்களைக் காண வைத்தாய்
கல்வி கற்றாய்…எங்களைச் சிந்திக்க வைத்தாய் திறமை வளர்த்தாய்…எங்களைச் செயல்பட வைத்தாய் திறம்பட கடமை ஆற்றினாய் - மேலாக சேவை செய்தாய்….எங்கள் அறிவு மேம்பட ஊக்கம் ஊட்டினாய்….எங்கள் ஆக்கம் மேம்பட தியாகம் செய்தாய்….எங்கள் வாழ்க்கை மேம்பட
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
மனிதம் எழுப்பிய மகத்தான கனவு நீ…கலையாதே….
இந்தியாவின் இணையில்லா இமயம் நீ…சிதறாதே…
பாரதம் பெற்றெடுத்த பார்மிகு பரிசு நீ…தொலையாதே…
என்றும் வாழும் ஆத்மா நீ…
ஊக்கம் தரும் உண்மை நீ…
சாசுவதமான சத்தியம் நீ….
உன் வாழ்க்கை உன் செய்தி
உன் வார்த்தை எம் மந்திரம்
எப்படி நவில்வேன் நன்றி…
எம்செயலே உனக்கு (உண்மையான) நன்றி !
நீ வாழ்ந்து காட்டினாய் - எங்களுக்கு
வழி காட்டினாய் !
- Senthilmurugan
Posted by IdlyVadai at 7/29/2015 12:00:00 PM 0 comments
Labels: அஞ்சலி
புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம்
-எதிர்க்கலாம் என்று எவரும்
நினைக்க முடியாத எங்கள் கலாம்.
நீர்
விதைகளையும் விழுதுகளையும்
கோடிக்கணக்கில் விட்டுச் சென்ற ஆல மரம்
புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம்
இத் தேசத்தின் ஸ்தூலம் மறைந்த ஸ்தல விருட்சம் !
நீர்
விழுந்து விடவில்லை !
விட்டுச் செல்ல மனம் இன்றி
வீற்றிருக்கின்றீர் இதயங்களில் ..
நீர்
தாடி மீசையோ மழுக்கிய தலையோ
தலை மறைப்போ காவியோ
வெள்ளுடையோ மட்டும்
கொண்டிராத கொள்கை ஞானி !
மரங்கள் மறைகின்றனவே என்று நாங்கள்
கன்னத்தில் கை வைத்து
புலம்ப மட்டுமே செய்தோம்..
நீரோ
உம் கைகளுக்குள் விதைகளை கொண்டு சென்று
செல்லும் வழி எல்லாம் தூவிச் சென்றீர் !
நீர்
புலம்பியதே இல்லை ! - ஏனெனில்
உம் கண்களுக்கு எதிர்காலம்
எப்போதுமே புலனானது !
நாங்கள்
தொலைந்ததையே
தேடிக் கொண்டிருந்த போது - நீர்
தொலைவில் புதிதாய்
அதையே கண்டு கொடுத்தீர்!
நீர்
அணு சக்தியை உள்ளே வைத்திருந்தும்
அன்பு சக்தியால் எங்களை ஆட்கொண்டீர்!
எப்பொழுதுமே
உம் புன்னகையின் கவர்ச்சி
முதல் முறை முகம் பார்க்கும்
குழந்தையின் சிரிப்பைப் போலே
கள்ளங்கபடமற்றது !
நீர்
உம் கனவுகளை
மற்றவர் உறக்கத்திலும்
தோன்றச் செய்த
விந்தை விஞ்ஞானி !
அரசியலை நினைத்து
நாங்கள் நொந்த போது
நீரோ இதுதான்
இன்றைய 'அரசு இயல்' என்று அதை
இயல்பாக
எடுத்துக் கொண்டீர் !
சமூகக் கால்வாய் நாறுகிறதே என்று
நாங்கள் கவலைப்பட்ட போது
தூரத்தே தெரிந்த இளைஞர் கூட்டமென்னும்
காட்டு வெள்ளம் ஒருநாள் பாதை தேடி
புது நீராய்ப் பாயும் என்று நீர்
பொறுமையாய் நம்பி இருந்தீர் !
நீர்
நவீன இந்தியாவின் சிற்பி !
உம்மால் மட்டுமே இச்சிலையை
வடிக்க முடியாதென
உணர்ந்து
கோடி உளிகளை
குழந்தைகள் கையில் கொடுத்தீர் !
உம்மை தந்தை என்றோ மாமா என்றோ
தாத்தா என்றோ நாங்கள்
அடையாளம் காட்ட மாட்டோம்!
ஏனெனில்
நீர் எல்லா வயதினருக்கும்
தோழனாவீர் !
உம் தலையில்
எல்லா தலைமுறைக்கும் தகவல்
தகைந்து கிடந்தது!
அரசன் ஆட்சி செய்ய வேண்டியது
மண்ணை அல்ல மனங்களை என்பதை
நீர் முற்றிலும் உணர்ந்தவர் !
முடிந்தவன் சாதிக்கிறான்
முடியாதவன் போதிக்கிறான் என்பது பழமொழி ..
ஆனால் நீரோ
சாதிக்கவும் செய்தீர் போதிக்கவும் செய்தீர்..!
நீர் மதச்சார்பற்றவர் கிடையவே கிடையாது!
எல்லா மதத்தவற்கும் சார்பானவர் !
இன்றுதான்
புத்தர் சிரித்தாரோ ? - நீர் மீண்டும்
அவரிடமே வந்து விட்டீர் என்று !!
இன்றுதான்
இயேசு பிரான் கைகளை நீட்டினாரோ -
உம்மை வாரி அரவணைக்க ?
இன்றுதான் இறைவன் சற்றே
நகர்ந்து அமர்ந்தாரோ? -
உமக்கும் இடமளிக்க?
நாங்கள் தவிக்கவில்லை !
நீர் உயர்ந்தவர்-
அங்கேயே இரும் !!
மை லார்ட் !
இவர் எங்கள் கட்சிக்காரர் என்று
உலகமே உம்பக்கம் சாட்சி சொல்கிறது!!
இன்றுதான் தேசத்தையே தேசியக்கொடி
மூடியதைப் பார்க்கிறோம் !
உம் இதயம் இந்தியா இந்தியா என்றே
துடித்தது இறுதி வரை !
நீர்
பிற நாடுகளையும்
புற நானூற்றைப் பேச வைத்தீர் !
நீர்
திரும்பிய இடமெல்லாம்
திருக்குறளை திகட்டாமல் அளித்தீர் !
ஐயா
உம்மை
மறத்தமிழன் என்றோ
முதல் குடிமகன் என்றோ
ஆசான் என்றோ விஞ்ஞானி என்றோ கவிஞர் என்றோ ஒரு கூட்டுக்குள் அடைக்க முடியாது !
நீர்
பிரபஞ்சம் முழுதும் நிறைந்த பிரயாணி !
நீர்
வழிப்போக்கனாய் மட்டும் வாழாமல்
செல்லும் வழியெல்லாம் புதிதாய்ச்
செப்பனிட்டுக் கொண்டே சென்றவர் !
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது !
ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற மட்டுமே முடியும் !
நீரோ பேராற்றல் !
நீரின்றி அமையாது உலகு !
நீர் நாங்களாக மாறி விட்டீர் !
உம் பயணத்தைத் தொடரும் -
எம் கனவுகளிலும் செயல்களிலும் !!!
ஜெய் ஹிந்த் !! ஜெய் ஹிந்த் !!
உணர்வும் ஆக்கமும் --- ஈ. ரா. என்னும் சாமானியன் !
Posted by IdlyVadai at 7/29/2015 10:42:00 AM 0 comments
Labels: அஞ்சலி
Tuesday, July 28, 2015
டாக்டர் கலாமும் ஊக்கமுடைமையும் - எ.அ.பாலா
கலாம் ஒரு விமானியாக விரும்பியதும், அவர் 1957-ல் ஏரோனாட்டிஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதைத் தொடர்ந்து விமானப்படையின் நேர்முகத் தேர்வுக்கு தேராதூன் சென்றார். விண்ணப்பித்த நபர்களில், 4 நாட்கள் தொடர்ந்து நடந்த பலவகையான தேர்வுகளின் முடிவில், 8 பேர் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். கலாம் 9-வது இடத்தில் வந்ததால், வேலை கிடைக்கவில்லை!
கலாம் மிகவும் மனமுடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டார். தில்லிக்குத் திரும்ப பேருந்து ஏறிய கலாம், திடீர் முடிவாக ரிஷிகேசத்தில் இறங்கி, கங்கையில் நீராடி விட்டு, அருகில் இருந்த ஆசிரமத்துக்குச் சென்று, சுவாமி சிவானந்தாவின் பகவத்கீதை சொற்பொழிவை, கடைசி வரிசையில் அமர்ந்த வண்ணம் கேட்டார். சொற்பொழிவின் முடிவில், சுவாமி சிவானந்தா தன்னிடம் கேள்விகள் கேட்க/பேச இருவரை மட்டுமே தேர்ந்தெடுத்தார். அதில் ஒருவர், அப்போதைய இளைஞர் கலாம்!
கலாம் தன்னை சுவாமியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்துல் கலாம் என்ற தனது இசுலாமியப் பெயர் சுவாமியிடம் எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று கலாமே தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கலாம் அடுத்து ஏதும் சொல்வதற்கு முன், சுவாமி சிவானந்தா, கலாமின் அப்போதைய சோகத்திற்கான காரணத்தை வினவினார். அடுத்து, “உனக்கு விதிக்கப்பட்டதை ஏற்று, வாழ்வை எதிர்கொண்டு முன்னேறு, இத்தோல்வியை மறந்து விடு, இத்தோல்வியானது, உனக்கு விதிக்கப்பட்ட பாதையில் சரியாக உன்னைச் செலுத்த அவசியமானதாக இருந்தது! உனது இருப்பின் மெய் நோக்கத்தைத் தேடு. கடவுளின் விருப்பத்துக்கு பணிந்து நட, அது போதும்” என்று சுவாமி சிவானந்தா கூறினார்.
மேலும், குருசேத்திரப் போருக்கு முன், கண்ணன் அருச்சுனனுக்கு வழங்கிய முக்கிய அறிவுரையான, தோல்விப்போக்கை, தோல்வி சார் எண்ணத்தை தோற்கடிக்க வேண்டிய அவசியத்தை சுவாமிஜி கலாமுக்கு எடுத்துச் சொன்னார். அந்த “தோல்விப்போக்கை தோற்கடி” (Defeat the defeatist tendency!) என்ற அறிவுரையை தான், தன் வாழ்நாள் முழுதும், முக்கியமாக கடினமான தருணங்களில், விடாமல் கடைபிடித்ததாகக் கலாமே சொல்லியிருக்கிறார்!
அதன் பின், DRDO, ISRO வெற்றிகள், பல விருதுகள், ஜனாதிபதி, பாரத் ரத்னா, இந்தியத்தாயின் தலைசிறந்த மகன்களில் மிக முக்கியமானவர் ....... அனைத்தும் பொன்னெழுத்து வரலாறு.
---எ.அ.பாலா
முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும்” - கலாம்
Posted by IdlyVadai at 7/28/2015 01:59:00 PM 1 comments
அக்னி சிறகை தழுவ ...
அக்னி சிறகை தழுவ
அக்னி கண்டதோ கனவு?
தூக்கத்தில் காணும் கனவு அல்ல;
தூக்கத்தை தொலைக்கும் கனவைக் காண
ஏக்கத்தை கொள்ளச் சொன்னவரே
கலாம் என்கிற பெயரில்
காலம் செய்த எழுத்துப் பிழையில்
காலமானதோ எங்கள் கனவும்?
அல்ல, அல்ல, அல்ல
மேக ஆலயத்திற்குச் செல்லவே
மேகாலயா சென்றீரோ அய்யா?
வள்ளியப்பாவாக குழந்தைகளுக்கு
வெள்ளை மனம் படைத்தவராக பெரியவர்களுக்கு
இனி என்று காண்போம் அய்யா?
கனியும் காலம் விரைவில்
தணியும் எங்கள் பிரச்சினைகளும்
துணிவை கொள்ள தூண்டிய மெழுகுவத்தியே
துயில் கொள் எங்கள் மனங்களில் நிரந்தரமாக.
c.s.veeraragavan
Posted by IdlyVadai at 7/28/2015 11:10:00 AM 0 comments
அப்துல் கலாம் - அஞ்சலி
Posted by IdlyVadai at 7/28/2015 08:11:00 AM 3 comments
Labels: அஞ்சலி
Tuesday, July 14, 2015
'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் - அஞ்சலி
Posted by IdlyVadai at 7/14/2015 10:53:00 AM 11 comments
Labels: அஞ்சலி
Monday, July 06, 2015
சென்னை மெட்ரோ - ஒரு பார்வை - ஸ்ரீராம் சுந்தரேசன்.
ரயில் நீல மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது - பிரேசில் இறக்குமதி. பச்சை, மஞ்சள், திராவிட கருப்பு எல்லாம் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி. முக்கியமாக இலை படம் வரையப்படவில்லை - செந்தில் பாலாஜி நோட் தி பாயிண்ட். ஸ்டாலின் பக்கத்தில் நிற்பாரோ என்று பார்த்தேன் - அரை தப்பியது. லண்டன் டியுப்பு வண்டியில் ஜுபிலி என்ற ரயிலில் பயணித்தது போல் ஒளி, ஒலி மற்றும் அனுபவம் இருந்தது. ஒரு வகுப்பை சார்ந்த பகுதி முழுவதும் வெச்டிபுல் மூலம் இணைத்திருப்பது நல்ல யோசனை.

போஸ்டர் ஓட்டும் புண்ணியவான்கள் ராஜ ஸ்ரீதர் அ(ழி)க்கிறார், 10, +2 படித்தவருக்கு வேலை கொடுக்கும் கணவான்கள், கடலை குப்பை போடும் குப்பை லாரிகள் தயவு செய்து மெட்ரோவை மன்னித்து விட்டு விடுங்கள். பொது மக்கள் தங்கள் அருகில் பப்பில்கம் ஓட்டுபவர்கள், இல்லை வேறு எந்தவிதத்திலாவது அசுத்தம் செய்பவர்களை யோசிக்காமல் அரைந்து விடுங்கள் - தெரியாமல் கன்னத்தில் கை பட்டது என்று சொல்லிகொள்ளலாம்.
மொத்தத்தில் இன்றைய நாள் இனிய நாள்.
- ஸ்ரீராம் சுந்தரேசன்.
Posted by IdlyVadai at 7/06/2015 01:30:00 PM 9 comments
Tuesday, June 30, 2015
மெட்ரோ ரயில் - காரணம் யாரு?
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்குச் சொந்தம் கொண்டாடி வெளிப்படையாகவே முக்கிய கட்சியினர் போட்டிப் போட்டுக்கொண்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் அவர்கள் மட்டும்தான் காரணமா என்று கோதாவில் சிலர் இறங்கியுள்ளனர். ஊடக வெளிச்சமின்றிச் சொந்தம் கொண்டாடிவரும் இவர்களைப் பற்றி நமது சிறப்பு லொல்லு படை சார்பாகச் சேகரித்த செய்திகள் இதோ:
மெட்ரோ ரயில் திட்டத்தைத் தாமதப்படுத்தினால் சிறைநிரப்பும் போராட்டம் நடக்கும் என்று எங்கள் கட்சி அறிக்கை எழுதும்போது காபி போட்டுக் கொடுத்ததால் ரயில் திட்டத்தில் தனக்கும் பங்கு இருப்பதாகப் பக்கத்து வீட்டாரிடம் கூறினார் மலர்விழி.
வருமானம் குறைவதால் இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மெட்ரோ ரயில் மறியலில் ஈடுபடமுயன்றோம் ஆனால் தண்டவாளம் அந்தரத்தில் இருந்ததால் மறியலில் ஈடுபடாமல் டிக்கெட்டை வாங்கி மறுவிநியோகம் செய்து நாங்கள்தான் மெட்ரோ ரயில் இயக்க உதவியுள்ளோம் என்று பேருந்து டிக்கெட் வழங்குநர் திரு. மணி கூறினார்
மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபட்ட வட இந்தியர்களைத் தமிழ் கற்றுத்தந்து டாஸ்மாக் கடைகளைக் கண்டுபிடிக்க உதவினேன் என்று குறிப்பிட்டதுடன் மெட்ரோ என்ற இந்திப் பெயரை நீக்கிவிட்டு தமிழில் "பெரிய ரயில்" என்று பெயர்வைக்க வேண்டும் என்று வோர்கிங் பீப்பில் பார்டி தலைவர் முருகதாஸ் கேட்டுள்ளார்.
ரயில் செல்வதற்கு வசதியாகப் பாதையில் இருந்த செம்மரங்களை எனது சொந்தச் செலவில் வெட்டி உதவியுள்ளேன் ஆனால் கடைசி நேரத்தில் சென்னைக்குள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஏமாற்றமடைந்தேன். இருப்பினும் மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பெரியளவில் எனக்கே பங்குண்டு என்று டி.எஸ்.பி. முத்துவேலு கூறியுள்ளார்.
மெட்ரோ ரயில் பணிகளுக்கு உதவுமாறு ஜப்பான் பிரதமரைச் சந்திக்கும் போது நான்தான் கூறினேன். அதனால் மகிழ்ச்சியடைகிறேன் என்று வெளிநாட்டில் வாழும் லலித் ரூடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சில கட்சியினர் இதுகுறித்து விளக்கம் அளிக்க ஜப்பான் பிரதமருக்கு தந்தி அனுப்பியுள்ளனர் என்பது வேறுகதை.
மெட்ரோ ரயில் தொடர்பாக 12முறை டெல்லி சென்று ஜனாதிபதியிடம் மனு கொடுத்து வந்ததாகக் கனவுகண்டுள்ளேன் எனவே நானும் இத்திட்டத்திற்குக் காரணமானவன் என்று முறுக்குக்கடை முருகன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
ரயில் நிலையங்களுக்கு வேண்டிய இடங்களை மக்களிடமிருந்து வாங்கித் தந்ததால் நான் தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முக்கிய காரணமாவேன். ஆனால் நில விற்பனையில் கமிஷன் அடித்ததாக வதந்தியைக் கிளப்புவது அரசியல் காற்புணர்ச்சி என்று அமைச்சரின் தம்பி ஓ.மன்னன் கூறியுள்ளார்.
இத்திட்டத்திற்காக பிரிடிஷ் காலத்திலிருந்து குரல் கொடுத்துவரும் கட்சி நாங்கள்தான் என்றும் பலமுறை சட்டசபையில் கேள்வி கேட்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்துள்ளோம் மேலும் இத்திட்டத்தால் மெட்ரோ குடிநீர் அனைவருக்கும் கிடைக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழ் மாநிலக் கட்சி ஒன்றின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டாக அவசரத்தில் அறிக்கை ஒன்றை மாற்றி வாசித்தனர்.
மெட்ரோ ரயில் தண்டவாளத்தைச் சொந்தமாகப் படத்தில் நடித்து அதில் வரும் வருமானத்தில் நாங்களே கட்டித்தருகிறோம் என்றோம். ஆனால் மெட்ரோ அதிகாரிகள் பதிலளிக்கவில்லை அதனால் இத்திட்டத்தில் எங்களுக்கும் பங்குண்டு என்கிறார் நாடக நடிகர் ஷிவால்
இந்தத் திட்டத்திற்குக் காரணம் நீங்களா என்று தயது செய்து என்னை கேட்காதீர்கள். ருஷ்ய எழுத்தாளர் சோகிபுலாவ் சென்னது போல ஒரு எழுத்தாளனின் எழுத்தைத் தொடர்ந்து படித்து வந்தாலே இத்தகைய கேள்வி வராது. மெட்ரோ ரயில் பற்றி அறிந்து கொள்ள எனது புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் என்று பதிவு எழுதியுள்ளார் அரசியல் விமர்சகர் ஆறு
இது சம்மந்தமான வழக்கொன்றில் முறையான தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு டீ தண்ணீ கொண்டுவந்து கொடுத்தது நான் தான். அந்தத் தீர்ப்பு இல்லாமல் மெட்ரோ ரயில் இயங்கியிருக்காது எனவே நான்தான் காரணம் என்றார் டீ மாஸ்டர் சாமிகுமார்.
அனைவரிடமும் கருத்து கேட்டுவிட்டு வரும் போது ஒரு உண்மை தெரிந்தது, அங்கு வேலை செய்தவர்களில் அநேகமானோர் காலையில் இட்லி அல்லது வடையை உண்டுவிட்டுதான் வேலை செய்துள்ளனர் எனவே மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலகாரணம் இட்லிவடை என்று வாசகர்கள் சார்பாக இதன் மூலம் நாமும் ஒரு அறிக்கையைத் தட்டி விடுவோம்.
எழுதியவர்:நீச்சல்காரன்
Posted by IdlyVadai at 6/30/2015 11:46:00 AM 4 comments
Labels: நகைச்சுவை
Wednesday, June 24, 2015
தினம் ஒரு பாசுரம் - எ.அ.பாலா
எ.அ.பாலாவிடம் இட்லிவடைக்கு எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது ஏதாவது எழுதி தாங்க என்று கேட்டவுடன் ஐந்தே நிமிடத்தில் ஒரு பதிவு அனுப்பிவிட்டார். அட என்று படித்தால் அவர் தினமும் டிவிட்டர் மக்களுக்காக எழுதும் தினம் ஒரு பாசுரம் பதிவாம்.
இட்லிவடைக்கு அரசியல், கோமாளித்தனமான பதிவு தான் வேண்டும் என்று பதில் அனுப்பினேன். உடனே அவர் இட்லிவடை வாசகர்கள் எதை போட்டாலும் படிப்பார்கள் சும்மா போடுங்க என்று சொல்லிவிட்டார்.
தினம் ஒரு பாசுரம் -36
செருமிகு வாள் எயிற்ற அரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணும் உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை ஒன்று நின்று முதுகிற் பரந்து, சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை அன்ன தன்மை அடல் ஆமையான திருமால் நமக்கோர் அரணே!
— — பெரிய திருமொழி
முந்தைய பாசுர இடுகையில், திருமங்கையாழ்வார் அருளிய மச்சாவதாரம் பற்றிய பாசுரத்தைக் கண்டோம். இன்று கூர்ம அவதாரம் (திருமாலின் 2-வது அவதாரம்) குறித்த ஓர் அற்புதமான பாசுரம். முந்தைய பாசுரத்தில் “ வரு மீனை (திரு)மாலை மறவாது இறைஞ்சு என் மனனே” என்று தனது நெஞ்சுக்கு அறிவுறுத்திய ஆழ்வார் இப்பாசுரத்தில் “அடல் ஆமையான திருமால் நமக்கோர் அரணே!” என்று அறுதியிட்டுச் சொல்கிறார்!
திருப்பாற்கடலை கடைந்த நிகழ்வை விவரிக்கும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் பற்றி நான் எழுதியதை நினைவு கூர்க! அதற்கான தொடுப்பு இதோ.
இப்பாசுரத்தில் ஒற்றை நீக்கி எண்ணினால், ஒவ்வொரு வரியிலும் சரியாக 23 எழுத்துக்களே இருக்கும். சிறப்பான சொல்லாட்சி, அருமையான விவரிப்பு என்ற இலக்கிய நயத்தைத் தாண்டி, இந்த இலக்கண நேர்த்தியையும் நோக்கும்போது திருமங்கை மன்னனின் தமிழ் வீச்சையும், ஆழ்ந்த புலமையையும் புரிந்து கொள்ள முடிகிறது. இவை திருமால் மேல் கொண்ட பெரும்பக்தி, பேரன்பால் விளைந்தவை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
திருமாலின் கூர்ம அவதாரம்

செருமிகு வாள் எயிற்ற — வலிமைமிக்க வெள்ளொளி வீசும் பற்களைக் கொண்ட
அரவொன்று சுற்றித் — (வாசுகி எனும்) பெரு நாகத்தை (மேருமலையில் கயிறாகச்) சுற்றி
திசை மண்ணும் விண்ணும் — எண்திசைகளிலும், பூவுலகிலும், விண்ணுலகிலும் வாழ்பவர்கள்
உடனே வெருவர — அவ்வேளையில் அஞ்சி நடுங்கும்படியாக
வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப — திருப்பாற்கடல் முழுதும் கலங்கும்படியாக
இமையோர்கள் நின்று கடைய, — தேவர்கள் (+அசுரர்கள்) நின்றவண்ணம் கடைய
பருவரை ஒன்று நின்று முதுகிற் பரந்து, — அகண்ட மலை (மேருவானது, தனது பெரிய) முதுகில் பரந்துயர்ந்த வண்ணம் நின்று
சுழலக் கிடந்து துயிலும், — சுழலும்படியாக, கிடந்த திருக்கோலத்தில் யோகக்துயில் கொண்ட,
அருவரை அன்ன தன்மை — ஓர் அரிய / மேன்மை மிக்க பெருமலைக்கு ஒப்பான தன்மையுடன்
அடல் ஆமையான திருமால் — வலிமையான கூர்ம(ஆமை) வடிவம் கொண்ட திருமால் (ஒருவனே)
நமக்கோர் அரணே! — நம் அனைவரையும் காத்தருள வல்லவன் ஆவான்
எ.அ.பாலா
Posted by IdlyVadai at 6/24/2015 06:09:00 PM 3 comments
Labels: எ.அ.பாலா
Thursday, May 28, 2015
மாஸ் - மாசு - குசு
ரசிகர்களுக்கு முதலில் வைத்த ஆங்கிலப் பெயர்தான் மனதில் நிற்கும், எவனாவது நாளைக்கு ”மாசு என்ற மாசிலாமணிக்கு” என்று சொல்லி டிக்கெட் வாங்குவானா ? சினிமாவே ஒரு ஏமாற்று விஷயம் அதில் இந்த தில்லாலங்கடி வேலை வேற.
வெங்கட்பிரபு தனது படத்துக்கு மாஸ் என்று பெயர் வைத்தார்.அதாவது “MASS". வரிச்சலுகைக்காக பிறகு, மாஸ் என்கிற மாசிலாமணி ஆக்கினார்கள். நேற்று மாஸு என்கிற மாசிலாமணியாக பெயர் மாறியது. இன்று மாசு என்கிற மாசிலாமணியாக மாற்றியிருக்கிறார்கள். மாசு என்றால் Pollution என்று பொருள் அதையே தமிழ் படுத்துகிறேன் என்று குசு என்று வைத்தாலும் ஆச்சரியப்பட கூடாது.
நிச்சயம் அஜித் இந்த மாதிரி செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்.
Posted by IdlyVadai at 5/28/2015 11:37:00 AM 6 comments
Labels: சினிமா, செய்தி விமர்சனம், விமர்சனம்
Sunday, May 24, 2015
ஓவியர் நடனம் - அஞ்சலி
"எனது வாழ்க்கையில் நான் பிரச்னைகளை சந்திக்கும்போதெல்லாம், எங்கிருந்தோ ஒரு தெய்வீக சக்தி வந்து என்னைக் கை தூக்கிவிட்டு அடுத்த படிக்குச் சுலபமாக இட்டுச்சென்று விடுகிறது" - ஓவியர், கார்ட்டூனிஸ்ட், ம்யூரலிஸ்ட் மற்றும் நடிகராகவும் விளங்கிய நடனம்
Posted by IdlyVadai at 5/24/2015 04:46:00 PM 0 comments
Saturday, May 23, 2015
Friday, May 22, 2015
இதய தெய்வமே, தாயே, அம்மாவே, போதி மரமே,போராளியே, கருணையே , சாமியே,....

இன்று சென்னையில் எங்கு திரும்பினாலும் அம்மா கட்டவுட்டும், அதிமுக கொடிகளும். அதனால் இங்கேயும் :-)
Posted by IdlyVadai at 5/22/2015 11:04:00 AM 3 comments
Labels: வாழ்த்து
Thursday, May 21, 2015
எம்.எம்.சி மாணவர் கல்வி உதவி தொடர்பாக
இட்லிவடை வாசகர்களே...
இந்த இடுகை வாயிலாக எ.அ.பாலா விடுத்த தாழ்மையான வேண்டுகோளை ஏற்று, பல நல்ல உள்ளங்கள் செல்வாவின் மருத்துவக் கல்விக்கு உதவி செய்துள்ளீர்கள் என்பதை அறிவிக்கவே இந்தப் பதிவு. இதுவரை சேர்ந்துள்ள தொகை, படிப்பின் முதல் 3 ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருக்கும். இந்த முயற்சிக்கு பொருளுதவி செய்தோ, ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தோ, வாழ்த்துக்களை தெரிவித்தோ, ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பது இட்லிவடையின் கடமையாகும்.
செல்வாவின் மருத்துவப்படிப்பு முடியும் வரை அவருக்கு உதவி, ஊக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஏதாவது உதவி பின்னாளில் தேவைப்பட்டால், உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.
இதற்கு முன் பல முறை ஆதரவளித்த நீங்கள் மீண்டும் கை கொடுப்பீர்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.
மீண்டும் நன்றி.
இட்லிவடை மற்றும் எ.அ.பாலா
Posted by IdlyVadai at 5/21/2015 10:49:00 AM 1 comments
Labels: உதவி
Tuesday, May 12, 2015
எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ? - அராத்து
தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மனசாட்சியும் இந்த பதிவை ஆமோதிக்கும்.
சுதாகரன் திருமணம் என்றெல்லாம் கூத்தடித்த அப்போதைய ஜெ ஆட்சி முடிந்த கையோடு , இந்த வழக்கில் ஜெ வுக்கு அப்போதே தண்டனை அளிக்கப்பட்டு இருந்தால் மொத்த தமிழகமும் கொண்டாடி இருக்கும். அப்போது அனைத்து மக்களும் ஜெ மீதும், அதிமுக ஆட்சி மீதும் அவ்வளவு வெறுப்புடன் இருந்தனர்.
அதற்குப்பிறகு திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சிகளைப் பார்த்த மக்கள் , ஜெ ஆட்சி எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்ததே , தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி.
இங்கு எந்த அரசியல்வாதியையும் அப்சல்யூட் நல்லவர் என்ற முடிவுக்கெல்லாம் வரமுடியாது. ரிலேடிவ்தான். எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளிதான்.இப்போது ஜெவுக்கு குடும்பம் இல்லை , தற்போதைய ஆட்சியில் அவர் தனக்கென சொத்து சேர்க்கவில்லை. நல்லது செய்கிறாரோ இல்லையோ , நல்லது செய்ய வேண்டும் என்ற முனைப்போடாவது செயல்படுகிறார் என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது. இலவசங்கள் , அம்மா திட்டங்கள் - நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ , ஓட்டுப்போடும் மக்களுக்கு பிடித்தே உள்ளது. இப்போதைய ஜெயலலிதாவிற்கு தண்டனை அளிப்பது மக்களுக்கு ரசிப்பாயில்லை.
ஜெயலலிதா நல்லவர் , ஊழலே செய்யவில்லை என்றெல்லாம் யாரும் நம்பவில்லை. மற்ற அரசியல்வாதிகளில் யார் நியாயமாக இருக்கிறார்கள்?
உதாரணமாக வரப்போகும் தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் ஸ்டாலினின் சொத்து மதிப்பு 2 கோடியே பதினோரு லட்சம் என தேர்தல் கமிஷனில் தெரிவித்து உள்ளார். சென்னையில் ஒரு கடைக்கோடி கவுன்சிலரின் சொத்து மதிப்பே 10 கோடியைத் தாண்டும் என்பது நண்டு சின்டுக்கு கூடத் தெரியும்.ஸ்டாலின் சொத்து மதிப்பு வெறும் 2 கோடி ....பாவம். கோடி ரூபாய் ஹம்மர் காரில் வெளிப்படையாக பவனி வருவார், கார் வேறு யாரேனும் பினாமி பேரில் இருக்கும். உதயநிதி , அன்பு செழியனிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கித்தான் படம் எடுத்து காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார் , பாவம் !
கூர்கில் இருக்கும் டாட்டா பிளாண்டேஷன் எஸ்டேட்டுக்கு சென்றிருந்தேன். சுற்றிக்காட்டிய அந்த ஊர்க்காரர், இதான் உங்க ஊர் சிதம்பரத்தோட எஸ்டேட் என்றார். அது இருக்கும் போல 200 ஏக்கர். எவ்ளோ வெலை இருக்கும் என்றேன். இதெல்லாம் இப்ப வாங்க முடியாதுங்க , 500 - 1000 கோடி போகலாம் என்றார். சிதம்பரம் சொத்துக்கணக்கில் இதை 10 லட்சமோ 12 லட்சமோ எனக் குறிப்பிட்டு இருந்ததாக நினைவு.
இதைப்போல பழம் தின்று கொட்டைப் போட்ட எல்லா அரசியல்வாதிகளும் , விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்து பக்காவாக செட்டில் ஆகி விடுகின்றனர். ஜெ , திடீரென முதல்வராகி , ஆர்வக் கோளாறில் வெளிப்படையாக ஓவர் ஆட்டம் போட்டு மாட்டிக்கொண்டார், அவ்ளோதான்.
இன்றைய சூழலே அபத்தமாக உள்ளது. திமுக ,அதிமுக என இரண்டு கட்சிகளுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றன. மக்களும் இளித்துக்கொண்டே வாங்கிக்கொள்கின்றனர்.அரசு கொடுக்கும் இலவசத்துக்கு வெக்கமே இல்லாமல் , பணக்காரர்களும் , மிடில் க்ளாஸ் மக்களுமே வரிசையில் பிச்சைக்காரர்கள் போல நிற்கிறார்கள். காண்ட்ராக்டர்களிடம் இரண்டு கட்சியுமே ஆட்சியில் இருக்கையில் கமிஷன் பெறுகின்றன.
மக்களோடு டை அப் போட்டுக்கொண்டு அரசு ஊழலில் ஈடுபடுகிறது. மக்களுக்கு கமிஷனை இலவசம் , விலையில்லா பொருள் என்ற வகையில் கொடுத்து விடுகிறது. அதனால் மக்களுக்கு ஊழல் ஒரு பிரச்சனையே அல்ல. ஏனெனில் அவர்களும் அதில் பங்குதாரர்கள். எப்போது கோபம் வரும் என்றால் , அவர்கள் சக்திக்கு மீறி ,அவர்களுக்கு பங்கு கொடுக்காமல் , அவர்கள் வயிறெரியும் அளவுக்கு ஊழல் செய்ய வேண்டும்.
இப்போது மக்களுக்கு 66 கோடி ஊழல் பெரிய எரிச்சல் இல்லை. சமீபத்தில் நடந்த 1,76,000 கோடி என்று சொல்லப்பட்ட ஊழல் வழக்கு , கலைஞர் டிவி வழக்கு ஆகியவைதான் எரிச்சல். சுதாகரன் திருமணத்தின்போது ஜெ எந்தளவுக்கு கூத்தடித்தாரோ அதைவிட பல மடங்கு கருணாநிதி குடும்பத்தினர் மாநிலத்திலும் , மத்தியிலும் சக்க கூத்து அடித்தனர்.பேரன்கள் சினிமா எடுத்தனர் , நடித்தனர் , பல விதமான தொழில்களில் ஈடுபட்டனர்.
பல தொழில் அதிபர்களுக்கு போன் போட்டு கமிஷன் வாங்க மாவட்ட வாரியாக ஏஜண்டுகள் செயல் பட்டனர்.மதுரையில் ரவுடி சாம்ராஜ்யமே தலைவிரித்து ஆடியது.செம்மொழி மாநாட்டில் தமிழகத்தின் மாபெரும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலர் கலர் உடைகளில் தோன்றி எரிச்சலடைய வைத்தனர்.குடும்ப பிரச்சனை முடிவுக்கு வந்ததால் 2ஜி பிரச்சனை முடிந்து விட்டது என தலைவர் அருள்வாக்கு சொன்னார்.
இப்போது ஜெ விடுவிக்கப் பட்டு தீர்ப்பு வந்திருக்கும் நிலையில் , நீதி , சட்டம் இவைகளை முன்வைத்து திமுகவினர் பொங்குவதை பார்க்கையில்தான் காமடியாக உள்ளது. கலைஞர் டிவிக்கு 200 கோடி வந்த வழக்கில் சொல்கிறார்கள்- கனிமொழி இயக்குநர் இல்லை , கலைஞரும் இயக்குநர் இல்லை , ஸ்டாலின் இல்லை. பேர்தான் கலைஞர் டிவி ! யார் இயக்குநர் ? யார் மொதலாளி ? டீ சப்ளை பண்றவனா ?
உழலுக்கு எதிராகவும் , அநியாயத்திற்கு எதிராகவும் , நீதி செத்து விட்டது , சட்டம் தோற்றுவிட்டது என பொங்கினால் மக்களும் உணர்ச்சி வசப்பட்டு பொங்குவார்கள்தான்.ஆனால் யார் பொங்குகிறார்கள் என்று பார்ப்பார்கள். இதை விட அநியாய ஊழல் செய்தவர்களும் , இதைவிட மோசமாக சட்டத்தை வளைத்தவர்களும் திடீர் நீதி தேவன்களாக மாறி ஊளை சதையையும் தொப்பையையும் குலுக்கி குலுக்கி அழுதால் செம காமடி என சிரிப்புதான் வரும் மக்களுக்கு !
நன்றி: அராத்து முகநூல் பக்கம்.
Posted by IdlyVadai at 5/12/2015 12:38:00 PM 7 comments
Labels: கட்டுரை
Sunday, May 10, 2015
நாளைய தீர்ப்பு
சத்தியமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் நம் தேசத்தின் நம்பிக்கை.
நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
Posted by IdlyVadai at 5/10/2015 12:35:00 PM 12 comments
Labels: அரசியல்
Thursday, May 07, 2015
கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல்
சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது குறித்து, அவருடன் பாதுகாப்புக் குச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் தான் போலீஸில் புகார் கொடுத் தார். பின்னர் போலீஸ் தரப்பில் இருந்தும், பலதரப்பில் இருந்தும் அவருக்குக் கடும் நெருக்கடிகள் வந்துள்ளன. ஆனால், கடைசி வரை தனது புகாரில் உறுதியாக இருந்த கான்ஸ்டபிள், காச நோயால் பரிதாபமாக இறந்துள்ளார்.
சல்மான் கான் உயிருக்கு, மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப் பட்டது. அதனால், அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ரவீந்திர பாட்டீலை, சல்மான் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினர்.
சல்மான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாட்டீல் அவருடன் காரில் சென்றுவந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ஒரு நாள் இரவு, அதிகமாக மது குடித்து விட்டு காரை தானே ஓட்டியுள்ளார் சல்மான்.
அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்துள்ளார். காரை மெதுவாக ஓட்டுங்கள் என்று கூறியுள்ளார். அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினார். இந்த விபத்தில் பாட்டீலுக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் பல பிரச்சினைகளை, மிரட்டல்களை, நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார்.
கார் விபத்து குறித்த வழக்கை முதலில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்தபோது, எதைப் பற்றியும் கவலைப்படாத பாட்டீல், துணிச்சலாக நடந்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடி மயக்கத்தில் இருந்ததால், காரை மெதுவாக ஓட்டும்படி சல்மானை எச்சரித்தேன். அதை அவர் கேட்கவில்லை என்று சாட்சியம் அளித்தார். இந்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லும்படி, பாட்டீலுக்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்துள்ளன.
நெருக்கடி முற்றியதால், பாட்டீல் திடீரென காணாமல் போனார். சல்மான் கானின் வழக்கறிஞர்களின் நெருக்கடி யைத் தாங்க முடியாமல் தலைமறை வானதாக அப்போது கூறப்பட்டது. அத்துடன் போலீஸ் துறையில் இருந்தவர்களே, சல்மான் மீது கூறப்பட்ட புகாரை மாற்றி சொல் லும்படி நிர்பந்தம் கொடுத்தனர் என்று புகார் எழுந்தது. அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி கடந்த 2006-ம் ஆண்டு போலீஸார் பாட்டீலை கைது செய்தனர். அத்துடன் கான்ஸ்டபிள் பணியில் இருந்தும் அவரை நீக்கினர்.
அதன்பிறகு கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீவ்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அநாதையாக பாட்டீல் கிடந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டி ருந்தார் பாட்டீல். அதனால், அவரது குடும்பத்தினரும் அவரை அநாதையாக விரட்டி உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2007 அக்டோபர் மாதம் பரிதாபமாக பாட்டீல் இறந்து விட்டார்.
பாட்டீலை மருத்துவமனையில் சேர்த்தது அவரது நண்பர் சுஷாந்த் சாவந்த் என்பவர் தான். அவர் கூறும்போது, ‘‘பாட்டீல் எனக்கு சிறந்த நண்பர்.
இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், பாட்டீல் என்னிடம் மனம் திறந்து பேசினார். ‘சல்மான் கான் மீது தான் கூறிய புகாரில் கடைசி வரை உறுதியாக இருந்தேன். ஆனால், என்னுடைய போலீஸ் துறையினரே எனக்கு ஆதரவாக இல்லை. எனக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலை வேண்டும். நான் வாழ வேண்டும். ஒரு முறை போலீஸ் கமிஷனரைச் சந்தித்துவிட வேண்டும்’ என்று கூறினார். ஆனால், பரிதாபமாக உயிரிழந்து விட்டார்’’ என்றார்.
இப்போது சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, இறந்தவர், படுகாயம் அடைந்த 4 பேருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, பரிதாபமாக உயிரிழந்த கான்ஸ்டபிளுக்கும்தான் என்கிறார் அவரது நண்பர்.
நன்றி: தி.இந்து
இன்றைய ஆங்கில செய்தி தலைப்பு கீழே:
Salman Khan returns home for two nights, receives a heroic welcome from fans
Posted by IdlyVadai at 5/07/2015 12:21:00 PM 1 comments
Labels: செய்தி
ஹீரோ வர்ஷிப்
ஆங்கிலத்தில் ஹீரோ வர்ஷிப் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
குடித்துவிட்டு குடிபோதையில் காரை ஓட்டி அது பிளாட்பாரத்தில் ஏறி ஒரு பேக்கரிக்குள் புகுந்து, இதில் பேக்கரிக்கு வெளியே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய ஒருவர் பலி, மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. உடனே நடிகர்கள் பட்டாளம் அவருக்கு ஆதரவாக களம் இரங்கியியிருக்கிறது. சல்மான் கான் வல்லவர் ரொம்ப நல்லவர் என்று புகழாரம் சூட்டுக்கிறார்கள். அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள்.கோர்ட் அவமதிப்பு வர கூடாது என்ற காரணத்துக்காக சட்டத்தை மதிக்கிறோம் என்று கடைசியில் ஒரு வார்த்தை. சல்மான் கான் செய்தது மிக பெரிய தவறு என்று அவர்கள் சொல்ல தவறிவிட்டார்கள்.
குடித்துவிட்டு கார் ஓட்டுவது தப்பு என்ற சின்ன விஷயம் கூட அவர்களூக்கு தெரியவில்லை. ஏன் என்றால் சப்போர்ட் செய்யும் பலர் இந்த மாதிரி குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பவர்கள். இது ஒரு சாதாரண குற்றம் இதற்கு எதற்கு 5 ஆண்டு ஜெயில் ? என்பது அவர்கள் வாதம்.
போன வாரம் ரிலீஸ் ஆன உத்தமவில்லன் படத்தில் கமலுக்கு முதலில் ஒரு காதலி, பிறகு மனைவி. பழைய காதலிக்கு கல்யாண வயசில் ஒரு மகள். மனைவிக்கு கல்யாண வயசில் ஒரு மகன் என்று இருக்க கமல் டாக்டர் ( ஆண்டரியாவுடன் ) ஜல்சா செய்கிறார்.
அவருக்கு மரணம் என்று தெரிந்தவுடன் அவர் செய்த தப்பு, துரோகம் எல்லாம் ‘பரவாயில்லை’ ரகமாகி அவர் மாமனாரே ( விஸ்வனாத் ) அவர் காலில் விழுகிறார். இதுவும் ஒரு வித ஹீரோ வர்ஷிப் தான்.
( உத்தமவில்லன் பாகம் இரண்டு எடுத்தால் அதில் சல்மான் கான் நடிக்கலாம். படத்தின் இரண்டாவது கதையாக ( தயவு செய்து அதை சுருக்கிவிடுங்கள் ) மனுநீதிச் சோழன் கதையை கொண்டு வரலாம். மக்கள் சூப்பார் என்று புகழ்வார்கள்.)
இதில் சிரிப்பு என்னவென்றால் பெண்கள் "Completely awestruck" என்று ஆதரவு தெரிவிப்பது தான்!
Posted by IdlyVadai at 5/07/2015 06:15:00 AM 6 comments
Labels: சமூகம், செய்திவிமர்சனம்
Sunday, May 03, 2015
உத்தம வில்லன் - இட்லிவடை விமர்சனம்.
படம் சுமார். ஏன் என்று சொல்லுகிறேன். கமல் படத்தில் என்ன பிரச்சனை என்றால் அவர் தான் படத்தின் ஆல் இன் ஆல் அழகு ராஜா. அவரே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எல்லாம் செய்துவிடுவார். திரைக்கதையில் வழக்கம் போல் சொதப்பிவிடுவார். அவர் யோசிக்கும் காட்சிகளை படமாக்கிவிடுவார் ஆனால் திரைக்கதையில் ஒட்ட வேண்டாமா ? இதிலும் அதுவே. படம் பார்த்த மக்கள் கடைசியில் அழுதுவிட்டேன் என்று சொல்லுவது எல்லாம் சுரேஷ் கண்ணன் காதில் விழுந்தால் கொலையே செய்துவிடுவார்.
இந்த படம் தமிழ் சினிமாவிற்கு புதுசு இல்லை, சாதாரண இரண்டு பொண்டாட்டி குடும்ப கதை. சினிமாவிலும் நிஜத்திலும் அதை சொல்ல முனைந்திருக்கிறார்.
கடைசியாக இரணியன் கதையை வித்தியாசமாக சொல்லுகிறேன் பேர்வழி என்று நரசிம்மரை சாகடிதத்து கமலின் முட்டாள் தனத்தை காண்பிக்கிறது. கமல் ரசிகர்கள் இதை மேதாவி என்பார்கள்.
இட்லிவடை மார்க் : 5.5/10
பின் சேர்க்கை:
ஏன் சார் படத்தில் அவ்வளவு இருக்கிறது சும்மா விமர்சனம் என்ற பெயரில் ஏதோ அச்சு பிச்சு என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று சில பேர் கேட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு என் பதில்:
படத்தின் கதையை நான் சொல்ல போவதில்லை. விஜய் படத்துக்கே இட்லிவடை கதை சொல்லாது. கமலின் நடிப்பு பற்றி ஒரு நண்பர் கேட்டிருந்தார். கமலின் நடிப்பு அருமை என்றால் நான் ஏதோ புதுசாக கண்டுபிடித்து சொல்லுவது போல ஆகிவிடும். கமல் எல்லா படத்திலும் அவர் பெஸ்டை கொடுத்துவிடுவார், இந்த படம் அதிக்கு விதிவிலக்கு இல்லை. ஆனால் நடிப்பு என்பது அவர் அழும், சோக சீன் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது.
படத்தில் ஊர்வசி நன்றாக நடித்துள்ளார். அதை குறிப்பிட மறந்துவிட்டேன்.
மீண்டுன் சொல்லுகிறேன்.
படம் முதல் நாள் வரவில்லை என்ற செய்தி கொடுத்த இம்பாக்ட் படம் பார்த்த பிறகு வரவில்லை. அது தான் இந்த படத்தின் பெரிய குறை.
அடுத்த இன்பாக்ஸ் கேள்வி:
கமல் தன் மகனிடம் தனக்கு வந்திருப்பதை சொல்லும் சீன், அவர் இரணியன் மாதிரி வேஷம் போட்டு நடனம் ஆடும் காட்சி என்று பல காட்சிகளை அடுக்கிக்கொண்டு போகலாம். அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?
ஒரு கல்யாண புகைப்பட ஆல்பம் தயாரிக்கும் போது எல்லா புகைப்படங்களும் கல்யாண வீட்டார் பார்க்கும் போது நன்றாக இருப்பதாக தோன்றும். ஆல்பம் தயாரிக்கும் போது எல்லாவற்றையும் சேர்த்து மெகா சைஸ் ஆல்பம் தயாரித்துவிடுவார்கள். எல்லா படங்களும் நன்றாக வந்திருக்கும்.
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு அதை கொடுத்து பார்க்க சொல்லுவார்கள். வருபவர்கள் எல்லாம் முதலில் ஆர்வமாக பார்ப்பார்கள். பின்னர் அலுப்படைந்து வேகமாக திருப்பிவிட்டு “ஆல்பம் நன்றாக இருந்தது” என்று சொல்லுவார்கள்.
உத்தம வில்லன் அதே போல தான், ஒவ்வொரு சீனும் நல்ல புகைப்படம். ஆனால் சேர்த்து வைத்து பார்க்கும் போது தலையணை சைஸ் கல்யாண ஆல்பம் மாதிரி தான்.
Posted by IdlyVadai at 5/03/2015 02:04:00 AM 14 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம்
Wednesday, April 29, 2015
எது இலக்கியம் மற்றும் குமுதம் ரிப்போட்டர் இலக்கியம்
அவர் உடனே என்னை திருப்பி சில கேள்விகள் கேட்டார்
நீங்க கர்நாடக சங்கீதம் கேட்பீர்களா ?
கேட்பேன் ஏன் ?
உங்களுக்கு ஏதாவது அதுல புரியுமா ?
சுத்தம்.. நமக்கும் ராகம் தாளம் எல்லாம் ரொம்ப தூரம்.
இளையராஜா ?
தினமும் கேட்பேன் எனக்கு பிடிக்கும்.
(மற்ற இசையமைப்பாளர்கள் பெயரை சொல்லி)அவர்களின் பாடல்கள் ?
சில பாடல்கள் கேட்பேன் எப்பவாவது.
பாடல்களின் நடுவில் வரும் கோரஸ் ?
லால்லா லுலூலூ தானே ? கேட்டிருக்கேன்
சரி கவனமா கேட்டுக்கோ...
கர்நாடக சங்கீதம் சிலருக்கு பிடிக்கும் அது இலக்கியம் மாதிரி.
இளையராஜா - சுஜாதா மாதிரி பலருக்கு பிடிக்கும்.
மற்றவர்கள் ’புயல்’ மாதிரி வருவாங்க சாரு மாதிரி எப்பவாவது படிக்கலாம்.
கோரஸ் கவிதை மாதிரி இரண்டு மூன்று முறை சத்தம் போடுவாங்க... ஆனால் புரியாது
ஏதோ புரிந்த மாதிரி இருந்தது...
இதை இட்லிவடையில் போடலாமா ?
தாராளமாக... ஆனால் என் பெயர் மட்டும் வேண்டாம் என்றார் அந்த உள்வட்டம்.
பின் இணைப்பு கீழே. நன்றி குமுதம் ரிப்போட்டர்
Posted by IdlyVadai at 4/29/2015 07:50:00 AM 0 comments
Monday, April 27, 2015
காமெடி பீஸ்
https://youtu.be/ZZKmxIV3suk
வந்துவிட்டார் கேப்டன். உங்களுக்கு தெரிந்த வடிவேலு ஒன் லைனர் தெரிந்தால் சொல்லுங்க
Posted by IdlyVadai at 4/27/2015 06:00:00 PM 4 comments
கேப்டனின் அடுத்த ரவுண்ட்
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் !
Posted by IdlyVadai at 4/27/2015 04:52:00 PM 0 comments
Labels: அரசியல்
Friday, April 24, 2015
வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து - பத்ரி
வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து
விக்கிபீடியா 'Hate Crime' என்பதை இவ்வாறு வரையறுக்கிறது:
In both crime and law, hate crime is a usually violent, prejudice motivated crime that occurs when a perpetrator targets a victim because of his or her perceived membership in a certain social group. Examples of such groups include but are not limited to: ethnicity, gender identity, language, nationality, physical appearance, religion, or sexual orientation.
எந்தவித நேரடி முன்விரோதமும் இல்லாத நிலையில், சம்பந்தமே இல்லாத ஒருவர்மீது இனம், மொழி, பால், தேசம், பாலுறவு விருப்பம், தோற்றம் ஆகியவை காரணமாக வெறுப்பினால் உந்தப்பட்டுத் தாக்குதல் நடத்துவதுதான் ‘வெறுப்புக் குற்றம்’ எனப்படுகிறது.
பொதுவாக இம்மாதிரியான குற்றங்கள் நடக்கும்போது அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் அறிவுஜீவிகளும் குறைந்தது வாய் வார்த்தையாலாவது கண்டிப்பார்கள். தமிழகத்தின் என்ன நடந்தது? பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் கண்டித்ததுடன் நேராகச் சென்று தாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள். காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர் நேரில் சென்று பார்த்ததுடன் மாநிலத் தலைவரின் கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
தினம் ஒரு அறிக்கை விடும், ராமானுஜர் சீரியல் எழுதும் திமுக தலைவர் கருணாநிதியோ, அறிக்கைத் திலகம் பாமக ராமதாஸோ வாயைத் திறக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள், ம்ஹூம், ஒரு வார்த்தை இல்லை. ஆளும் அஇஅதிமுகவிடமிருந்து ஒரு சத்தம் இல்லை. அதிகாரபூர்வ எதிர்க்கட்சி தேமுதிகவிடமிருந்து ஒரு முனகல் இல்லை. நடைப்பயண நாயகன் மதிமுக வைகோ, புதுப்புயல் தமாக வாசன், தலித்துகளின் ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் ஆகியோரிடமிருந்து ஒரு குரல் இல்லை. இந்தக் கட்சிகளின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்கூட வாய் திறக்கவில்லை.
திராவிடர் கழகத்தின் வீரமணி, தங்கள் அமைப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, தாங்கள் இதுபோன்ற தாக்குதல்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.
பத்திரிகையாளர் ஞாநி சொல்கிறார்: “இதுபோன்ற செயல்களை பெரியாருடன் தொடர்புபடுத்தவே கூடாது. அவர் அமைப்புரீதியான மாற்றங்களை வன்முறையற்ற வழியில் செயல்படுத்தவே விரும்பினார். இந்த நபர்கள் தங்களைப் பெரியாரியர்கள் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது. உரிமைகளை மீறும் இந்தச் செயல்கள் பகுத்தறிவின் வரையறைக்குள் வரமாட்டா.”
இம்மாதிரி பெரியாரியர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவே முடியாது. இம்மாதிரியான தாக்குதல்களில் தங்கள் பங்கு என்ன என்பதை பெரியாரியர்கள் விளக்கியே ஆகவேண்டும். இத்தனை ஆண்டுகளாகத் தாங்கள் பரப்பி வந்திருக்கும் வெறுப்பு விதைதானே இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது? ஸ்வராஜ்யா இதழில் நான் எழுதியுள்ள கட்டுரையில் 2006-ல் நடந்த சில செயல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
சரி, மனித உரிமை அமைப்புகள் என்று சில உள்ளனவே, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். அப்படி ஒன்றும் கருத்து சொல்லக்கூடிய செயலாக இது அவர்களுக்குத் தெரியவில்லை போல.அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் போன்றவர்கள் பொதுவான மனித உரிமைகளுக்காக மிகவும் போராடுபவர்கள். அவர்களுக்கு இதுகுறித்துச் சொல்ல ஏதுமில்லை.
தனிப்பட்ட முறையில் நீ கண்டித்தாயா, நீ கண்டித்தாயா என்று கேட்பது எனக்கு ஏற்புடையது அல்ல. ஆனால் இதற்காக என்று இருக்கும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும்கூட இதுகுறித்து ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர் நிலை என்ன, பார்ப்பன வெறுப்பு என்பது எப்படிப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை நன்கு விளக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நான் எழுதிய கட்டுரை ஒன்று மிகக் கடுமையான எதிர்வினைகளைப் பெற்றது. இல்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்குகிறேன் என்றார்கள். இன்று என்ன நடந்துள்ளது என்று பாருங்கள்.
சமூக வலைத்தளங்களில் பல தனி நபர்கள் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் unequivocal-ஆகக் கண்டிக்காமல், கூடவே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பல விஷயங்களைப் பற்றிப் பேசியதையும் பார்க்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தின் உண்மையான அவலம் அவர்கள்கூட இல்லை. இந்த விஷயத்தை எள்ளி நகையாடிய சிலர்தான். அவற்றைப் பார்ப்போம்.
1. ஆந்திராவில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூப்பாடு போடாத சிலர் இப்போது இரண்டு பேருடைய நூல் அறுந்ததற்குக் கொதிப்பது ஏன்?
இவை இரண்டும் ஒப்பிடப்படக்கூடிய செயல்களே அல்ல. நூல் அறுந்தது சாதாரண விஷயம்தான். உயிர் போகவில்லைதான். ஆனால் என்னவிதமான ஒப்பீடு? இரண்டும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதுதானே? இதைக் கண்டிப்பதற்கு அதைக் கண்டித்து வாங்கிவந்த சான்றிதழைக் காண்பிக்கவேண்டுமா? இருவரும் தமிழர்கள்தானே? ஒரு பக்கம் சுட்டது ஆந்திர போலீஸ். இன்னொரு பக்கம் தாக்கியது தமிழர்கள். தாக்கப்பட்டவர்கள் வெறும் பார்ப்பனர்கள். பிரச்னை அதுதானா?
2. நூலைதானே அறுத்தார்கள்? அதற்கு ஏன் இந்தப் பொங்கல்?
பிரமாதம். புடைவையைத்தானே பறித்தார்கள்? சட்டையைத்தானே கிழித்தார்கள்? லேசாக மேலேதானே கையை வைத்தார்கள்? கொஞ்சமாகக் கீழேதானே தள்ளினார்கள்? ஒரு தட்டுதானே தட்டினார்கள்? வெறும் இரண்டு பேரைத்தானே தாக்கினார்கள்? அடடா, அடடா!
3. அடக்குமுறையின் வெளிப்பாடுதான் பூணூல். அதனை அவர்களாகவே நீக்கியிருக்கவேண்டும். இல்லை என்பதால் இந்தச் செயலில் ஈடுபடவேண்டியிருந்தது.
இதனை இந்தப் பதிவில் எதிர்கொள்ளப்போவதில்லை. தனியாக எழுத உள்ளேன். எந்தச் சட்ட வரையறைக்குள்ளும் அடங்காத ஒரு எதிர்பார்ப்பு இது. பிறர் எம்மாதிரியான மதச் சடங்குகளைச் செய்யவேண்டும் என்று எவ்விதத்திலும் யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. அவரவர் விரும்பிய வகையில் சட்டத்துக்கு உட்பட்டு மத வழிபாடு செய்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
4. பொதுமக்கள் கூடும் இடங்களில் திறந்த மார்புடன் இருக்கும் இவர்களை சட்டை போடச் சொல்லவேண்டும்.
தமிழகத்தில் நான் பார்த்தவரை வயலில் விவசாயம் செய்வோர் முதல் வீடுகளில், தெருக்களில், பல பொது இடங்களில் வெறும் துண்டுடனோ, அதுகூட இல்லாமலோ திறந்த மார்புடன் கீழாடை மட்டும் அணிந்துகொண்டு அனைத்து சாதி ஆண்களும் செல்கிறார்கள். இதனை ஆபாசம் என்றும் பெண்களுக்கு எதிரானது என்றும் சொல்பவர்கள் சட்டம் கொண்டுவந்து மாற்ற முயலுங்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக, மாநிலத்தின் அனைத்து ஆண்களும் தெருவில் இறங்கும்போது இதனைச் செய்யவேண்டியிருக்கும்.
***
தமிழகத்தில் பொதுவெறுப்பின் அடிப்படையில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திப்பது தலித்துகள்தான். சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தலித்துகளைத் தாக்குகின்றனர். தலித் மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்ததற்காக கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தின் ஒரு பள்ளியில் “தாளாளர் சாலமன் ஜெபா, அவரது மனைவியும் தலைமையாசிரியருமான ஜெயக்குமாரி, ஆசிரியர்கள் ஹெலன் அருள் எமிமாள், மேரி சுஜித்ரா, ஏஞ்சலின் ஸ்டெபி, ஜேக்கப், ஆக்னஸ், சரோஜா” ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இவை அனைத்துமே ஹேட் கிரைம் என்பதன்கீழ் வரும். சென்னையில் இரு பார்ப்பனர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதே வகையின்கீழ் வரும். இவற்றை அனைத்து மக்களும் கடுமையாக எதிர்க்கவேண்டும். நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால், நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்
இந்த பதிவு தான் ”நல்ல பதிவு. நன்றி பத்ரி”
நன்றி: பத்ரி வலைப்பதிவு.
Posted by IdlyVadai at 4/24/2015 12:55:00 PM 8 comments
Thursday, April 23, 2015
சுஜாதா விருதுகள் - ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் மற்றும் பலர்
ஜெ,
சுந்தர ராமசாமி விருது, ராஜமார்த்தாண்டன் விருதுக்கெல்லாம் பாராட்டு தெரிவிக்கிறீர்கள். சுஜாதா விருதுகளைப்பற்றிய உங்கள் வாழ்த்துக்களை காணவில்லையே?
சித்ரன்
அன்புள்ள சித்ரன். முதல் கடிதம். புரிகிறது. ஆனாலும் சீரியஸாகவே பதில்
சுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார். நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கியவாசகனும் அல்ல
இளையதலைமுறையினர் சிலர் அவர்களின் இளமைப்பருவ வாசிப்பை அவரிடமிருந்து தொடங்கியிருக்கலாம். மேலே வராமல் தொடங்கிய இடத்திலேயே நின்றிருப்பது பொதுவாக தமிழர் பண்பாடு. அவர்களே அவரை இலக்கியவாதி என்பவர்கள். அவர்களுக்கு வயது முப்பதுக்குள் என்றால் அவர்கள் மேலே வாசிக்கவேண்டும் என்றும் மேலே என்றால் சிறந்த சுகசௌபாக்கிய வாழ்க்கை அமையட்டும் என்றும் வாழ்த்துகிறேன்
சுஜாதாவை ஓர் இலக்கிய ‘ஐகான்’ ஆக்கும்பொருட்டு மனுஷ்யபுத்திரன் தொடங்கிய விருது இது. அதன்பொருட்டு அதை தீவிர இலக்கியம் எழுதியவர்களுக்கு அளிக்கத் தொடங்கினார். ஆனால் எந்த அடையாளமும் காலப்போக்கில் அதன் உண்மையான மதிப்பு என்னவோ அங்கேதான் வந்து நிற்கும். சுஜாதா விருதுகள் இன்று நடைமுறையில் பல்ப் ஃபிக்ஷனுக்கான விருதுதான்
சுஜாதா விருது பெற்ற பட்டியலில் வினாயக முருகன் எழுதிய சென்னைக்கு மிக அருகில் என்ற நாவலையும் போகன் சங்கரின் கவிதைத் தொகுதியையும் மட்டும் வாசித்தேன். இரண்டுமே தமிழின் தீவிர இலக்கியத்தின் தொடர்ச்சியை எவ்வகையிலும் உள்வாங்கிக்கொள்ளாதவை. சமகாலக் கேளிக்கை எழுத்து, மிகையுணர்ச்சி எழுத்து ஆகியவற்றிலிருந்து தொடர்ச்சியை உருவாக்கிக் கொண்டவை.
வினாயகமுருகன் எழுத்தை நான் ‘ஙேயிசம்’ என்று சொல்லத்துணிவேன். ராஜேந்திரகுமார் என்ற அமரர் எழுத்தாளர் உருவாக்கிய அழகியல்முறையைச் சேர்ந்தது. அதற்கு தமிழில் என்றுமே பெருவாரியான வாசகர்கள் உண்டு.முன்பு ஒரு நாவலின் முன்னுரையில் கண்ணதாசன் எழுதினார் [வேலங்குடித் திருவிழா] ‘தமிழ் வாசகனை எனக்குத் தெரியாதா? அவனுடைய அரிப்பு எனக்கும் இருக்காதா? ஆகவே என் அரிப்புக்காக நான் எழுதினேன். தன் அரிப்புக்காக தமிழர்கள் இதை வாசிக்கலாம்” வினாயகமுருகனும் அதை அவரது முன்னுரையில் சொல்லியிருக்கலாம்
போகன்சங்கர் கவிதைகள் தமிழின் பிறசமகாலக் கவிதைகளைக் கண்டு அவற்றை போலிசெய்பவை. பெரும்பாலான ஃபேஸ்புக் கவிதைகள் இத்தகையவைதான். உணர்ச்சிகரமான தீவிரமான மனநிலை ஒன்றை இவை போலியாக உருவாக்கிக்கொள்கின்றன. அதில் நின்றபடி மிகையுணர்ச்சியும் நாடகத்தன்மையும் கொண்ட குறிப்புகளையும் குட்டிச்சித்தரிப்புகளையும் புனைகின்றன.
இவை நீடித்தவாசிப்புக்குரியவை அல்ல. மறுமுறைகூட வாசிக்கப்படாதவை.உடனடியான ‘லைக்கு’கள்தான் இலக்கு. ஆகவே இவை பொய்யான ஓர் உணர்ச்சித்தளத்தை நிறுவி அதை அனைத்துக்கவிதைகளுக்கும் நீட்டிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. போகன் சங்கரின் கவியுலகில் துக்கம் கெட்டிப்பட்டு கிடக்கிறது. அவர் கலகக்காரராக, கண்ணீர்வடிக்கும் கதைசொல்லியாக, இருத்தலியல் துக்கம் கனத்தவராக மாறிமாறித் தோற்றமளிக்கிறார்.
நவீனத் தமிழ்க்கவிதையின் விதிகளில் ஒன்றாக இருந்தது அடக்கம். கவிதை என்பதனாலேயே மிகையுணர்ச்சி உருவாகிவிடும், பொய்யான ஆன்மிகதளம் உருவாகிவிடும் என்று அஞ்சி அடைந்தது அது. அதன் நுட்பங்களனைத்தும் அவ்வாறு உருவானவை. அவற்றைத் தூக்கிவீசி நவீனக் கவிதைகளின் வரியமைப்பு, மொழிநடை மற்றும் சில தேய்வழக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு வைரமுத்துக் கவிதைகளின் உணர்வுதளம் நோக்கிச் செல்கின்றன இவை
நான் இப்போது ஷங்கர் ராமசுப்ரமணியனின் ஆயிரம் சந்தோஷ இலைகள் என்ற கவிதைத்தொகுதியை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் மொழியின் அடக்கமும் நுட்பமும் அளிக்கும் பரவசத்துடன் இக்கவிதைகளை வாசிக்கும்போது என்ன இது என்ற திகைப்பு உருவாகியது. மேலும் சில இணையக்கவிதைகளை வாசித்தபோதுதான் இது ஒரு டிரெண்ட் என்றும் இது நவீனக்கவிதையை ஆப்ரிக்க நீர்ப்பாசி போல மூடி ஆக்ஸிஜன் இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கிறது என்றும் புரிந்தது. எண்பதுகளில் கவிதைக்கு எதிரான சக்தியாக இருந்த முற்போக்குக் கவிதைகளுக்கு நிகரான நோய் இது. நான் போகனை மட்டும் சொல்லவில்லை. அப்படி ஒரு இருபது பெயர்களைச் சொல்லமுடியும்.
இன்னும் ஒன்று, ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகளே என் நண்பர் இளம்பரிதியால் பெரிய நூலாக வெளியிடப்பட்ட பின்னர்தான் என் கவனத்தை முழுமையாகப் பெறுகின்றன. ஏனென்றால் இன்று பெருகும் இந்த உடனடிஎதிர்வினைக் கவிதைகள் நடுவே இத்தகையகவிதைகள் கவனம்பெறமுடியாமலிருக்கிறது.
வணிக எழுத்து தேவை என்று நினைப்பவன் நான். சுவாரசியமான எழுத்து பல தளங்களில் வந்துகொண்டே இருப்பது வாசிப்பு எனும் இயக்கம் நீடிக்க இன்றியமையாதது. ஆகவே வணிக எழுத்தை சுட்டிக்காட்டி பாராட்டுவது மட்டும் அல்ல விருதளிப்பதும் கூட சிறந்ததுதான். ஆனால் அதை இலக்கியமாகக் காட்டும் பசப்பு மிக ஆபத்தானது. மனுஷ்யபுத்திரனின் உயிர்மை இன்று ஓர் இயக்கமாகவே அதை முன்னெடுக்கிறது என ஐயப்படுகிறேன்.அவரைச்சுற்றி அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் ஒரு குழு கூடியிருக்கிறது. அதில் அவருக்கு வணிகலாபம் உள்ளது. ஆகவே அதை அவர் வழிநடத்துகிறார்.
பொதுவாக இன்று இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் பாராட்டும் அபூர்வம். ஆகவே அவர்களுக்கு அளிக்கப்படும் விருதுகளை பாராட்டவேண்டியது கடமை. விருது பெற்றுள்ள பலர் என் மதிப்பிற்குரியவர்கள். விருதைப் பெற்றதையோ விருதையோ நான் குறைத்துச்சொல்லவில்லை. ஆனால் இவ்விருது இன்று முன்னெடுக்கும் மதிப்பீடுகளை இங்கே சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இந்த மனநிலையில் இதை எழுதாவிட்டால் இது சொல்லப்படாமலேயே போய்விடலாம்.
உயிர்மை இன்று தமிழின் மிகப்பெரிய இணைய மாஃபியாக்களில் ஒன்று. ஆகவே எதிர்வரும் வசைகளையும் கொந்தளிப்புகளையும் முன்னரே காண்கிறேன். பரவாயில்லை. இலக்கியவாசகர்களில் சிலராவது இப்படி ஒரு கோணம் உள்ளது என அறிந்துகொள்ள்வேண்டும். இந்த விவாதங்கள் அடங்கியபின் இந்நூல்களை வாசிக்கையில் நான் சொல்வதென்ன என்பதைப் புரிந்துகொள்வார்கள்
ஜெ
நன்றி: http://www.jeyamohan.in/74452#.VTi2Ff6UdQF
------
உயிர்மை இன்று தமிழின் மிகப்பெரிய இணைய மாஃபியாக்களில் ஒன்று.
-ஜெயமோகன்
ஜெயமோகன் சுஜாதாவிருதுகள் மேல் மேற்கொண்டிருக்கும் கொலை வெறித்தாக்குதலில் மேலே சொன்ன வரி இடம் பெற்றுள்ளது. உயிர்மையை இணைய மாஃபியா என்று சுருக்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உண்மையில் நிழல் உலக மாஃபியாவாக மாறி ஜெயமோகனை மிரட்ட வேண்டுமென்பதுதான் என் ஆவல்.
இந்தப் பதிவில் அவர் விநாயக முருகனையும் போகன் சங்கரையும் மிக்க் கடுமையாக தாக்குகிறார். இதற்கான காரணம் மிக எளிமையானது. அவர்கள் இருவருமே ஜெயமோகனை தொடர்ந்து விமர்சிப்பவர்கள். அதற்கு பழிவாங்க இது ஒரு சந்தர்ப்பம். அதற்க்கா சுஜாதாவையும் சேர்த்து திட்ட வேண்டிய அவலம் ஜெயமோகனுக்கு.
ஆனால் ஜெயமோகன், சுஜாதா விருது பெற்ற சமஸ் பற்றி ஏதும் சொல்வதில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதற்காக காரணம் மிகவும் பச்சையானது. அந்த புத்தகத்தை ’ அழியாக் குரல்’ என வானளாவ புகழ்ந்து ஜெயமோகன் முன்னுரை எழுதியிருக்கிறார். போகனோடு ஒப்பிட்டு ஷங்கர்ராம சுப்ரமணியணை இப்போது புகழ்வதும் அதே அடிப்படியில்தான். சமஸ்சும் ஷங்கரும் தமிழ் இந்து அல்லாத வேறு இடத்தில் பணி புரிந்துகொண்டிருந்தால் இந்நேரம் ஜெயமோகனின் குண்டாந்தடிக்கு இருவருமே பழியாயிருப்பார்கள்
விருது பெற்ற பாவண்ணன் பற்றியோ சுரேஷ் கண்ணன் பற்றியோ, சந்தோஷ் பற்றியோ, அடவி, திணை சிற்றிதழ்கள் பற்றியோ ஜெயமோகன் எதுவும் சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இவர்களும் இதே சுஜாதா விருதைத்தான் பெற்றிறுக்கிறார்கள். ஜெயமோகனிடம் இருப்பது தனிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே. அதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மதிப்பீடு சார்ந்த முகமூடிகளை அணிகிறார் என்று தெரியவில்லை.
கடந்த காலத்தில் சுஜாதாவிருது பெற்றவர்கள் அனைவருமே தமிழுக்கு வெவ்வேறு வகையில் மிக தீவிரமான பங்களிப்பை செய்து வந்தவர்கள் என்பதை அந்தப் பட்டியலை திரும்பிப் பார்க்கும் எவருக்கும் தெரியும். மேலும் இந்த விருது தேர்வில் பங்கெடுத்த அனைவரும் தமிழ்ன் மிக முக்கியமான படைப்பாளிகள். அவர்கள் அனைவரையும் ஜெயமோகன் தனது வன்மத்தால் அவமானப்படுத்த முயற்சிக்கிறார்.
ஜெயமோகன் இதற்கு மேல் கீழே இறங்க முடியாது என்று யாராவது சொன்னால் இன்னும் இறங்கிக் காட்டுகிறேன் பார் என்று சவால வீட்டு அவசர அவசரமாக இன்னும் பத்தடி பள்ளம் தோண்டி உள்ளே போய் படுத்துக்கொள்வதில் அவர் வல்லவர்.
- மனுஷ்யபுத்திரன்
நன்றி: முகநூல் பக்கம்
நூறு மீட்ட ஓட்ட போட்டியில் இந்த மாதிரி பிரச்சனை வருவதில்லை, அதனால் இனிமேல் விருதுக்கு தேர்வானவர்களுக்கு ஓர் ஓட்டப்பந்தையம் வைத்து பரிசு கொடுக்கலாம். இதில் வாசகர்கள் யாரும் கலந்துக்கொள்ள கூடாது !
Posted by IdlyVadai at 4/23/2015 02:49:00 PM 4 comments
Wednesday, April 22, 2015
ஒரு விளம்பரம் - ஒரு கேள்வி
குங்குமம் இதழில் ஜோதிகா பேட்டியில் ஒரு கேள்வி பதில்
‘‘பசங்க ஷூட்டிங்க்கு வருவாங்களா?’’
‘‘ம்ம்... ஷூட்டிங் பார்க்க வந்திட்டு, அவங்களுக்கு கேரவன் பிடிச்சுப் போச்சு. ஆனா, அவங்க இதுவரைக்கும் சினிமாவே பார்த்தது இல்லை. கார்ட்டூன்தான். அவங்க பார்க்கிற மாதிரி நல்ல சினிமா வந்தால்தான் கூட்டிட்டுப் போக முடியும். இந்த வயதில் டபுள் மீனிங் டயலாக், கேர்ள்ஸ் காஸ்ட்யூம் எல்லாம் பார்த்துதான் கூட்டிட்டுப் போகணும். சின்ன வயதில் அவங்க பொல்யூட் ஆகிடக் கூடாது!’’
இன்றைய நாளிதழில் தனுஷ் 7அப் குளிர்பான விளம்பரம் முதல் அரைப் பக்கம் வந்துள்ளது. உடல்நலத்தை கெடுக்கும் இந்த குளிர்பானங்களை தனுஷின் குழந்தைகளுக்கு அவர் கொடுப்பாரா என்று தெரியாது.
நாமும் நம் குழந்தைகளை இவர்களிடமிருந்து பொல்யூட் ஆகாமல் ஜாக்கிரதையாக வளர்க்க வேண்டும்.
Posted by IdlyVadai at 4/22/2015 04:00:00 PM 1 comments
படச்சுருள்

தமிழ் ஸ்டுடியோ அருண் தன் ஐடி வேலையை விட்டுவிட்டு தான் மிகவும் விரும்பும் சினிமாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவுடன் பல முயற்சிகளை செய்துவருகிறார்.

நல்ல திரைப்படங்கள் திரையிடுதல், குறும்படங்கள் பற்றிய தொடர், சினிமா பற்றிய பட்டறை, நல்ல சினிமா எது போன்ற விமர்சன கட்டுரைகள் என்று வரிசையில் தற்போது படச்சுருள் என்ற சினிமா பற்றிய பத்திரிகையை ஆரம்பிக்க உள்ளார்.
ஒருவருட சந்தா 250/= செலுத்த முடிவு செய்துள்ளோம். நன்றாக இருந்தால் அடுத்த வருட சந்தா... இல்லை வேண்டாம் என்று விட்டுவிடலாம்.
நண்பனுடன் சினிமா பார்த்தால் 250/= செலவாகிவிடுகிறது, அதனால் 250/= ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது என் கருத்து.
சந்தா செல்லுத்த வேண்டிய விவரம் கீழே...
சந்தா செலுத்துவதற்கான விபரங்கள்:
படச்சுருள் வருட சந்தா: 250/-
ஆயுள் சந்தா: 15000/-
புரவலர் சந்தா: 25000/-
சந்தாவை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு விபரங்கள்:
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: PADACHURUL
வங்கிக்கணக்கு எண்: 035005500700
வங்கி பெயர் & கிளை: ICICI Bank, Adyar Branch
IFSC Code: ICIC0000350
சந்த செலுத்தியதும் மறக்காமல் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர், முகவரி, அலைப்பேசி எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்பி விடுங்கள்.
thamizhstudio@gmail.com
இந்த பதிவு யார் சொல்லியும் போடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
Posted by IdlyVadai at 4/22/2015 01:30:00 PM 0 comments