பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 28, 2014

Phillip Hughes - அசாதாரணத் திறமை -- அஞ்சலி

ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் பலப்பல ஆண்டுகள் தொடக்க ஆட்டக்காரராக பரிமளித்திருக்க வேண்டிய பிலிப் அகாலமாக, ஒரு அசாதாரணமான நிகழ்வில் மரணம் அடைந்தது மிகவும் வருந்தத்தக்கது. ஒரு விவசாயின் மகனாகப் பிறந்து, தனது குடும்பத்தின் வாழைத்தோட்டத்தில் கிரிக்கெட் ஆடத் தொடங்கி, தனது அசாத்தியத் திறமையினால், 20 வயதிலேயே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கியவர், ஸ்டெயின், மார்க்கல், சோத்சோபே, நிதினி ஆகியோர் அடங்கிய தென்னாப்பிரிக்காவின் சூப்பர் வேகப் பந்துவீச்சை திறம்பட ஆடி, தனது முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 75 ஓட்டங்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவின் மகத்தான வெற்றிக்கு வழி வகுத்தவர்.

2வது டெஸ்ட்டில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டர்பன் ஆடுகளத்தில், 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து, உலக சாதனை நிகழ்த்தியவர். இதன் மூலம் ஜார்ஜ் ஹெட்லியின் 79 ஆண்டு சாதனை வீழ்ந்தது. சற்று நிதானமாக ஆடுபவர் என்ற முத்திரையை உடைத்து, வெலிங்டன் டெஸ்ட் ஒன்றில், 75 பந்துகளில் 86 ரன்களை விளாசி, ஒரு முக்கியமான வெற்றிக்கு காரணமானவர். அதற்கு நேர் மாறாக, 2011 கொழும்பில், இலங்கைக்கு எதிராக மட்டை போட்டு, சதமடித்து, டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வெல்ல வித்திட்டவர். ஒரு நாள் போட்டிகளிலும் 2 சதங்கள் அடித்துள்ளார். கிராமப்புறத்துக்கு உரித்தான தன்னடக்கமும், அமைதியும், தன்னம்பிக்கையும் மிக்க இளைஞரும் கூட.

இன்னும் எவ்வளவோ சாதித்திருக்க வேண்டிய, "Never say die" என்ற ஆஸ்திரேலிய சித்தாந்தத்திற்கு எடுத்துக்காட்டாக கிரிக்கெட் ஆடிய, ஒரு இளைஞர் 26 வயது நிரம்புவதற்குள் மரித்து விட்டார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.

-- எ.அ.பாலா

Read More...

Monday, November 17, 2014

உப பாரதம் - அத்தியாயம்-1 வியாசரின் வ்யாஸ சந்தேகம்

வியாசருக்கு உறக்கம் நன்றாக வந்தது.

வருடக் கணக்கில் ஒரு தவம் போல... தோராயமாக பத்து வருடம் இருக்கும். அப்பப்பா.. எவ்வளவு ஓலைச் சுவடிகள் எழுதித் தள்ள வேண்டியிருந்தது. ஓலைப் போதாமல் இருபத்தி எட்டு நாள் நடக்க வேண்டிய குருஷேத்திரப் போரைக் கூட பதினெட்டு நாள் என்று சுருக்கிவிட்டார். எலும்புகள் எல்லாம் தேய்ந்து விரல் சூம்பிப்போய் கடைசி அத்தியாயம் எழுதியபின் அவர் மோதிரமே கழன்று விழுந்தது.

எவ்வளவு பனை ஓலை என்று கணக்குப் பண்ண முடியாமல், பிற்காலத்தில் யாராவது இதை எல்லாம் டிஜிட்டல் செய்து பார்த்துக்கொள்ளட்டும் என்று அறை மூலையில் குவித்து வைத்தார்.

அவரின் அஸுரத்தனமான எழுத்து வேகத்தால் அத்தியாயம் எழுதக் கூட போதுமான பனை ஓலை கிடைக்காமல் திண்டாடினார். சில சமயம் பனைமரத்துக்குப் பக்கத்திலேயே கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு மரத்தில் இலை துளிர்விடுகிறதா என்று கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். வியாசருடைய எழுத்தைப் படிக்கத் துடித்துக்கொண்டிருந்த வாசகர்கள் அவரைச் சுற்றி வட்ட வடிவமாக உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் தங்களை வியாசர் இலக்கிய வட்டம் என்று சொல்லிக்கொண்டாலும் ஊர் இவர்களை "வியாஸவாஸகவட்டம்” என்று ஊர் மக்கள் பாஸத்தோடு அழைத்தார்கள்.

இப்படியாக வியாசரும்பனை ஓலைக்குக் காத்திருந்த சமயத்தில் வாசகர் வட்டத்தில் சிலர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்; சில சமயம் அவர் பதில்கள் பெரிதாக இருக்க மேலே இருந்த வட்ட நிலாவே அரைவட்டமாகத் தேய்ந்தது.

பனை இலைக்குக் காத்திருந்த சமயம், தூக்கத்திற்கு அஞ்சி வியாசர் தியானம் கூட செய்யவில்லை, அப்படியும் ஒரு நாள் விடியற்காலை அவருக்குக் கொஞ்சம் தூக்கமும் கூடவே தூறலாய் கனவும் வந்தது.

கலியுகம் எந்த வருஷம் என்று சரியாகத் தெரியவில்லை. பெட்டியில் ஒருவர் டி.சர்ட் போட்டுக்கொண்டு மஹாபாரதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் “...இது யாருக்குப் பயன்படும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இந்துத்வாவின் மகத்தான எழுச்சிக் காலத்தில் நவீனத்துவர்கள் அதற்கு எதிர்திசையில் கடுமையாக வேலை செய்யவேண்டிய காலம் இது”

புரியாமல் வேறு சேனலை மாற்றினார் வியாசர். அதில் கிருஷ்ணர் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு பேசியதும் இவருக்கே புரியாமல் இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்துவிட்டார். பகல் கனவு பலித்துவிட்டால்?

நேராக பரந்தாமனிடம் சென்று "இது என்ன சோதனை கலியுக வரதா!! அவர்கள் பேசும் பாஷை எனக்கு சுத்தமாகப் புரியவில்லையே?”

கிருஷ்ணர் சிரித்துவிட்டு “நீர் சமஸ்கிருத்தில் எழுதினீர் அதையே தமிழ்’படுத்தி’விட்டார்கள்”

"சிலரது பாஷ்யம் புரியவில்லை.. தங்களுக்கு அவகாசம் கிடைத்தால்..” என்று சீரியல் அப்பா மாதிரி செண்டன்ஸை முடிக்காமல் வியாசர் இழுக்க... பதறிய பரந்தாமனோ, "என்னிடம் வராதே சீரியலுக்கு வசனம் எழுதும் என் சிஷ்யன் ஒருவன் சென்னையில் இருக்கிறான் அவன் பெயரும் ராகவன் தான்..” என்று சொல்லி யோகநித்திரைக்குத் திரும்பினார்.

தொடரும்...

Read More...

Friday, November 14, 2014

உங்க கருத்து என்ன சார் ? - கமல் கேள்வி பதில் !


''ஆனா, இப்போ எந்தப் படம் வந்தாலும் காப்பி, இன்ஸ்பிரேஷன்னு ஒரே சர்ச்சையா இருக்கே! இன்ஸ்பிரேஷன் எப்போ காப்பி ஆகுது? அதைத் தவிர்க்க முடியாதா?''

''சினிமா பண்றவன் பண்ணிட்டே இருக்கான். அவன் எங்கே இருந்து என்ன காப்பி அடிக்கிறான்னு சிலர் தேடிட்டே இருக்காங்க. அதை நானும் பண்ணியிருக்கேன். அதெல்லாம் ஒரு பிராயத்தில் வரும். ஜெயகாந்தன் கதையைப் படிச்சுட்டு, 'இந்த மாதிரி படம் எடுக்கணும்’னு ஆரம்பிப்பேன். இது சினிமாவில் மட்டும் அல்ல... 'டைம்’ பத்திரிகையும் 'நியூஸ் வீக்’ பத்திரிகையும் கிட்டத்தட்ட ஒரே தலைப்போடு வரும். அது ஒருவகையான உத்வேகம். ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் போட்டி.

ஒரு விஷயம்... நான் இதுவரை வெளியே சொன்னது இல்லை. இப்போ சொல்லலாம். சுஜாதா இப்போ இருந்தாலும் கோவிச்சுக்க மாட்டார். 'தினமணி கதிர்’ல 'சொர்க்கத் தீவு’னு ஒரு கதை எழுதிட்டு இருந்தார் சுஜாதா. அந்தக் கதை பாதியில் நிறுத்தப்பட்டதற்குக் காரணமான நாலைஞ்சு பேரில் நானும் ஒருவன். இரா லெவின்னு ஓர் அமெரிக்க எழுத்தாளர் எழுதின 'திஸ் பெர்ஃபெக்ட் டே’ங்கிற நாவலுக்கும் 'சொர்க்கத் தீவு’க்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. இதை நான் சொன்னதும் அவரும் கதையை நிறுத்திட்டார். ஆனா, அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணேன். 'நீங்க கதையை நிறுத்தாம எழுதியிருக்கலாம் சார்’னு நான் சொல்லவும், 'நீயே நிறுத்திட்டு, இப்போ எழுதியிருக்கலாம்னு சொன்னா என்ன அர்த்தம்?’னு கடுப்பாகிட்டார். படைப்புத் தொழிலில் இதுபோல சில சங்கடங்களைத் தவிர்க்க முடியாது.

காப்பி, இன்ஸ்பிரேஷன் இவற்றுக்கு எல்லாம் எப்படி அணை போடுவீங்க? 'ஐ ரோபோ’ படம்தானே 'எந்திரன்’. ஆனா, 'ஐ ரோபோ’ படம் வெளிவர்றதுக்கு முன்னாடியே நானும் ஷங்கரும் அந்தக் கதை பத்தி பேசியிருக்கோம். 'ஐ ரோபோ’, அசிமோவோட நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். நம்ம கம்பனைப் பத்தி என்ன சொல்றது? 'எழுதின ராமாயணத்தைத் தானே நீ திரும்ப எழுதியிருக்கே...’னு சொல்லி அவரைச் சிறுமைப்படுத்த முடியுமா? ரவீந்திரநாத் தாகூரின் எந்த வேலையும் ஒரிஜினல் இல்லைதான். அதுக்காக அவரை மதிக்காம இருக்க முடியுமா? ஜெயகாந்தனுக்கும் இப்படி எங்கேயோ ஓர் உந்துதல் இருக்கும் இல்லையா? சிலர் எந்தச் சாயலும் இல்லாம தன்னிச்சையா எழுதுவாங்க. சிலர் எங்கே இருந்து எடுத்தாங்கனு தெரியுற சாயலோடு எழுதுவாங்க. அது இல்லாம கலை நடக்காதுனு தோணுது. இன்ஸ்பிரேஷன் இல்லாம இருக்க முடியாது. ஆனா அப்படியே அப்பட்டமா காப்பி அடிக்கிறது, ஓரளவு கலை கைவர்ற வரைக்கும் பண்ணுவாங்க. ஒண்ணுமே தெரியாம இருக்கும்போதுதான் பார்த்துப் பார்த்து டிரேஸ் எடுப்பான். வளர்ந்த பின்னாடி அதைச் செய்ய மாட்டான் கலைஞன். ஏன்னா, கலை கை வந்த பிறகு அவனுக்கு திமிர் வந்திரும்.

இன்னொரு விஷயம்... யார் யாரெல்லாம் காப்பி அடிக்கிறான்னு தேடிட்டு இருக்குற ரசிகன், அடுத்த கட்டத்துக்கு வளரலைனு அர்த்தம். முழு ரசிகனா வளர்ந்துட்டா, அதை பெரிய விஷயமா யோசிக்க மாட்டாங்க. 'காப்பியடிச்சுட்டான் ஓ.கே அதை நல்லா பண்ணியிருக்கானா?’னு பார்க்க ஆரம்பிச்சிருவான். நான் எப்படித் தட்டுத்தடுமாறி கலைஞனா வளர்ந்தேனோ, அது மாதிரி ரசிகனா, அவனும் தன் விலாசத்தை தேடிட்டு இருக்கான். சீக்கிரமா கண்டுபிடிச்சிருவான்!''
( கேள்வி, பதில் நன்றி விகடன் )  


கமல் கேள்வி பதிலை பற்றி இவர்கள் என்ன கருத்து சொல்லுகிறார்கள் என்று கேட்க ஆவல்

ஞாநி
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்
ஹரன் பிரசன்னா
பத்ரி
சுரேஷ் கண்ணன் 

ராம்கி

Creativity is knowing how to hide your sources - Albert Einstein - சும்மா தகவலுக்கு :-)

Read More...

Tuesday, November 11, 2014

வெண்முரசு விழா அனுபவங்கள்


ஐநூறு பார்வையாளர் இருக்கைகளும், சிறப்புப் பார்வையாளர் இருக்கைகளும், படிக்கட்டுகளும் சேர்த்து எண்ணூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருப்பார்கள். வழக்கமான மேடைகள் போல் இல்லாமல் நவீனமாகவே மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது, "காக்கைச் சிறகினிலே" என்ற வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது விழா.

நாங்கள் சரியாக விழா ஆரம்பிப்பதற்கு முன் பத்து நிமிடத்தில் அரங்கத்தின் உள்ளே நுழைந்தேன். எளிமையாக வாசலில் நின்று கொண்டிருந்த ஜெயமோகன் அவர்களைப் பார்த்து விட்டு அறிமுகமில்லாததால் எதுவும் பேசாமல் உள்ளே நிழைந்தேன். அரங்கம் நிரம்பி வழிந்து உள்ளே நுழைந்தவர்கள் இருக்கை இன்றி பாதையில் நின்று கொண்டிருந்தனர். தூரத்தில் இரண்டு கடைசி வரிசை கதவோரத்தில் காலியாக இருந்தன. கூட்டத்திலிருந்து நழுவி அந்த இடம் நோக்கி அமர்ந்தவுடன் தான் தெரிந்தது, அவ்விருக்கையில் அரங்கம் தெரியாது என்று. இருந்தும் பேசும்போது பார்க்கமுடிந்த அளவில் ஒலிவாங்கி தளம் இருந்ததால் சமாதானப் படுத்திக் கொண்டு அமர்ந்தேன். விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் சுழன்று சுழன்று ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். உடையார் பாலகுமாரன், உயர்மை மனுஷ்யபுத்திரன், இயக்குநர் ராம், தயாரிப்பாளர் தனஜெயன், பதிப்பாளர் பத்ரி, எழுத்தாளர் ஷைலஜா, ஜடாயு, நடிகர் இளவரசு, எஸ்.கே.பி.கருணா போன்றோர் பார்வையாளர் வரிசையில் இருந்த பெயர் தெரிந்த பிரபலங்களில் சிலர். கமலைப் பார்ப்பதற்கு என்றே ஒரு சிறுவனை அழைத்து வந்த ஒரு தந்தை எங்கள் மின்னிருக்கையில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார். இளையராஜாவைப் பார்ப்பதற்கென்று வந்த ஒருவரும் முதல் சில மணிகள் அருகே அமர்ந்திருந்தார், இசைஞானி வந்தபிறகு முண்டியடித்து முன்வரிசை படிக்கட்டிற்கு ஈர்க்கப்பட்டார்.



பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் பேசுகையில் வியாசர் என்ற கழுகு பறந்த வானத்தில் மற்றொரு கழுகா ஜெமோ பறப்பார் என்று வாழ்த்தினார். அருண்மொழி, ஓவியர் சண்முகவேலுக்கு அடுத்தபடியாக வெண்முரசை வாசிக்கும் வாசகன் தான் என நாஞ்சில் நாடன் பேசுகையில் கூறினார். அசோகமித்திரன் அவர்கள், இந்த மேடை புதிதில்லை என்று தொடங்கி சுவைபட பேசினார். பிரபஞ்சன் நீலம் பகுதியைப் பற்றிப் பேசினார்.

யார் பேசினார்கள் என்பதை விட செய்திகள் அதிகம் கவர்ந்த இடங்கள். ஒவ்வொரு பகுதிகளிலும் பாரதக் கதை உள்வாங்கப்பட்டு வெவ்வேறாகப் புனைவாக்கம் செய்யப்பட்டுள்ளன, திரௌபதி துகில் உரியும் படலம் வட இந்தியக் கதைகளில் இல்லையாம். அஸ்வத்தாமன் இறந்ததாக துரோணரிடம் பொய் கூறக் கையாளப்பட தந்திரங்கள் கவர்ந்தன. நாளொன்றுக்கு எத்தனையோ பணிகளுக்கு நடுவே இணையத்தில் சண்டைகளும் செய்துகொண்டு இத்தனைப் பக்கம் எழுத ஜெமோவால் மட்டுமே முடியும் என்றார் ஒருவர், அரங்கம் ஆராவாரம் செய்தது. 30000 பக்கங்களை ஒருவரே எழுதியிருக்க முடியாது என்றும் ஜெமோ என்பவர் ஒரு நூறு பேர்கொண்ட குழு என்று எதிர்காலத்தில் சிலர் வாதம் செய்யலாம் என்றும் குறும்பு செய்யப்பட்டது. வெண்முரசின் சொல் நயத்தை மெச்சும் வகையில் அதன் சொற்களை எல்லாம் தொகுத்து ஒரு அகராதி வெளியிட வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

பாரதப் பிரசங்கிகள் ஐவர் விழாமேடையில் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் வடமாவட்டக் கலைஞர்கள் அதில் இருவர் கூத்துக் கலைஞர்களாவர். அதில் ஒருவரது கலைவாரிசாக அவரது மகளும் இக்கலையில் இருக்கிறார் என்று கூறும் போது, இக்கலையின் எதிர்கால நிலை சரியில்லை என்ற பொருள் கொஞ்சம் மனத்தைக் கனக்கவைத்தது. கூத்து பார்க்கவோ, பிரசங்கம் கேட்கவோ நேரம் இல்லாத இக்காலத்தில் இணையத்தில் உருவாக்கும் பெரிய திட்டம் கணினியுகத்தில் ஒரு கலாச்சார இழப்பை ஈடுசெய்கிறது.

ஓவியர் சண்முகவேல் அவர்களையும், இணையத்தில் பாரத மொழிபெயர்ப்பைச் செய்துவரும் அருட்செல்வப்பேரரசன் அவர்களையும், ஜெமோ அவர்களின் துணைவியார் அருண்மொழி அவர்களையும் மேடையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.



இசையுடனே ஆரம்பித்து பேசத் தொடங்கிய ராஜா மக்களுக்கு புத்தெழுச்சி கொடுக்காத எந்தக் கலையும் நாட்டில் இருப்பது வீண் என்றார். கறுப்புச் சட்டை யில் வந்த நடிகர் கமல். இசை உலகில் இளைய ராஜாவும், கலையுலகில் கமலும் செய்யாததை அவர்துறையில் ஜெமோ செய்துள்ளார் எனப் பாராட்டினார். "நீங்கள் விஷ்ணுபுரம், இவர்(இளையராஜா) சிவபுரம், நான் வேறுபுறம்" என்று அவருக்கே உரிய வார்த்தை விளையாட்டுடன் பேசினார். 'நான் அசோகமித்திரனின் கைத்தடியாகக் கொஞ்ச நேரம் இருக்க விரும்பினேன்' என்னும் அந்தப் பணிவு மனத்தைக் கவர்ந்தது. கலைப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம், மதம் முக்கியம் என்பதை விட கதைகள் முக்கியம் என்று விளக்கி இறுதியில் காந்தி கதையுடன் முடித்தார் கமல்.

ஏற்புரை நிகழ்த்திய ஜெமோ, ஒவ்வொருவராக குறிப்பிட்டு நன்றி தெரிவித்ததோடு, அனுபவங்களைப் பகிர்ந்தார். இறுதியில் அவரும் காந்தியைக் குறிப்பிட்டு உரையை முடித்தார். கமல் பேசிமுடித்தவுடன் கூட்டத்தில் சிலராவது நகரத்தொடங்குவார்கள் என்று பார்த்தால், அப்படியல்லாமல் ஜெமோ பேச்சையும் ரசிக்கத் தொடங்கியவிதம் யாருக்கு வந்த கூட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லியது. ஜடாயு மற்றும் சில டிவிட்டர் நண்பர்களை முதன்முதலாகச் சந்திக்க முடிந்தது. தனது துணைவியாருடன் வந்த பாலகுமாரன் முதுமையின் காரணமாக படிக்கட்டுகளைத் தவிர்க்க கதவருகேயே அமர்ந்து கொண்டார். அவருக்கு இருக்கையைக் கொடுத்து உதவிய மகிழ்ச்சியும், மனுஷ்யபுத்திரன் அவர்களைச் சக்கரயிருக்கைக்கு அமர்த்த உதவிய மகிழச்சியும், சந்திக்கக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி மற்ற பெரிய தலைகளைத் தூரத்திலிருந்து பார்த்துவிட்டு தென்சென்னைக்குப் போகும் வண்டியை விரட்டிக் கொண்டு ஓடினேன்.

அன்புடன்,
நீச்சல்காரன்

ஜெயஸ்ரீ மேடம் இந்த பதிவையும் ஃபேஸ்புக், டிவிட்டரில் ஷேர் செய்ய வேண்டுகிறேன் :-)

Read More...

Saturday, November 08, 2014

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் செஸ் உலகநாயகன் ஆவாரா? -எ.அ.பாலா



செஸ் ஆனந்த் குறித்து நான் முன்னர் எழுதிய இடுகைகள்:

http://idlyvadai.blogspot.in/2012/06/blog-post.html
http://idlyvadai.blogspot.in/2013/11/blog-post_17.html
http://balaji_ammu.blogspot.in/2013/11/deccan-chronicle.html

2007லிருந்து தொடர்ச்சியாக 6 ஆண்டுகள், (5 முறை) உலக செஸ் சேம்பியனாக வலம் வந்த ஆனந்த், சென்ற வருடம் சென்னையில் நடந்த உலக சேம்பியன்ஷிப் ஆட்டத்தில் இளம் செஸ் ஜாம்பவான் கார்ல்சனிடம் தோல்வியடைந்தபோது, பலரும் அவரது செஸ் வாழ்க்கைக்கு இறப்பறிக்கை எழுதி விட்டனர். அதற்குக் காரணம், 43 வயது ஆனந்தின் மனத்தளர்ச்சியும், முடிவாட்ட திறமைக்குறைவும் கார்ல்சனுக்கு எதிரான சில ஆட்டங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனந்த் ரிடையர்மெண்ட்டை அறிவித்து விடுவார் என்று தான் நானும் நினைத்தேன்.

ஆனால், உண்மையான சேம்பியன்கள் தடாலடியாக முடிவெடுப்பதில்லை! சில மாதங்கள் ஓய்வுக்குப் பின், மார்ச் 2014ல் ரஷ்யாவில் நடைபெற்ற (கார்ல்சனுக்கு போட்டியாளரை தேர்ந்தெடுக்கும்) Candidates போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தார். உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்கள் (கிராம்னிக், டோபலோவ், ஆரோனியன், ஆண்ட்ரிகின், மமெதயரோவ், கர்ஜாகின், பீட்டர் ஸ்விட்லர்) பங்கு கொண்ட அந்த மிகக்கடினமான 14 சுற்றுகள் கொண்ட போட்டியில், மிகத் திறமையாக, புது உத்வேகத்துடன் விளையாடி, இறுதிச்சுற்றுக்கு முன்பாகவே, டோர்னமண்ட்டை வென்று, மீளொரு முறை 2014 உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டியில் கார்ல்சனை எதிர்கொள்ள தகுதி பெற்றார். நிச்சயமாக யாருமே எதிர்பார்க்காத விஷயமிது! ஆனந்தின் செஸ் மீதான காதல் அத்தகையது.

Candidates tournament பற்றி வாசிக்க:
http://www.thechessdrum.net/blog/2014/03/31/world-candidates-2014-14-anand-wins-naysayers-silenced/

உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டி இன்று (8 நவம்பர் 2014, மாலை 5.30) தொடங்குகிறது. எப்போதும் போல 12 கிளாசிக்கல் செஸ் ஆட்டங்கள் வாயிலாக, சேம்பியன் நிர்ணயிக்கப்படுவார். அதாவது, யார் முதலில் 6.5 புள்ளிகளைத் தொடுகிறாரோ அவரே சேம்பியன். 6-6 என்று நிலையில், 4 துரிதவகை செஸ் ஆட்டங்கள் நடைபெறும். இப்போட்டியிலும், ஆனந்த் under dog-ஆகத் தான் கருதப்படுகிறார் என்றாலும், அது அவருக்கு நல்லதே. சென்ற முறை அவர் சேம்பியனாக இருந்ததும், போட்டி சென்னையில் நடைபெற்றதும், அவருக்கு சற்று மன அழுத்தத்தை ஏற்படுத்தி பாதகமாகவே அமைந்தன. இம்முறை ஆனந்த் தனது இயற்கையான, சற்றே அதிரடியான ஆட்டத்தை (2013 உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டியின் 9வது ஆட்டம் போல) கைக்கொள்ளலாம்! அது பலன் தரும் என்பது என் எண்ணம். தற்காப்பு வகை ஆட்டம், ஒரு கால்பந்து ஆட்டக்காரருக்கு நிகரான கார்ல்சனிடம் பலனளிக்காது!

விஷி ஆனந்த் இன்று எழுதியிருப்பதை வாசிக்க: It is time to get into match mode!
http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=It-is-time-to-get-into-match-mode-08112014017005

மேலும், கார்ல்சன் இவ்வருடம் நடைபெற்ற சில போட்டிகளில் சோபிக்கவில்லை. அதனால், முதல் 6 ஆட்டங்களில் சமநிலை இருப்பின், அவருக்கும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. செஸ் ஆட்டக்காரர்கள் பலர், ஆனந்த் இம்முறை நல்ல மனநிலையிலும், முன்னேற்பாடுடனும் இருக்கிறார் என்று கருதினாலும், தனது 44 வயதில், கார்ல்சனை வென்று ஆனந்த் மீண்டும் உலக சேம்பியன் ஆவது எளிதன்று. முக்கியமாக, முடிவாட்ட நிலை (End Game position) என்பது எளிமைப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல் இருக்குமாறும், நீண்ட ஆட்டங்கள் தரும் சோர்வினால் ஆட்டத்தில் தவறுகள் (Blunders) ஏற்படாமலும் ஆனந்த் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

---எ,அ,பாலா
கமலுக்கு 60 பிறந்த நாள் வாழ்த்துகள் :-)

Read More...