பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 24, 2014

அசோக் குமார் அஞ்சலி - எ.அ.பாலா

பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் உடல் நலக்குறைவால் கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையும், வீடுமாக இருந்ததை செய்திகளில் வாசித்திருப்பீர்கள். மே மாதம் சாவின் விளிம்பு வரை சென்றவர் அதிலிருந்து மீண்டு தீபாவளி தினமன்று (அக் 22, 2014) தனது 70-வது வயதில் காலமானார்.

அறுபதுகளில் தொடங்கி ஒரு 30 ஆண்டுகள் இந்தியாவின் தலைசிறந்த 5 ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருந்தார் என்று தாராளமாகக் கூற முடியும். அவரது கேமரா வழிப் பார்வை அத்தகையது. அவரது மேஜிக் லென்ஸ் வழியாக பார்த்து பார்த்து நமக்கு பல அரிய பொக்கிஷங்களை வழங்கியிருக்கிறார் அசோக் குமார் அகர்வால்! அவரது ஸ்பெஷாலிட்டி, சினிமாவுக்காக அவர் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் ஒரு போதும் உறுத்தவே உறுத்தாது.

ஜானி, உதிரிப்பூக்கள் படங்களுக்கு ராஜாவின் இசை எந்த அளவுக்கு பலம் சேர்த்ததோ, அதற்கு குறைவில்லாமல் பலம் சேர்த்தது அசோக்கின் கேமரா என்பதை பலரும் ஏற்றுக் கொள்வர். கதை, திரைக்கதை, நடிப்பு ஆகியவற்றில் மிகச் சிறந்த படங்கள் கூட காலத்தால் அழியாமல் மனதில் நிற்க இசையும், ஒளிப்பதிவும் மிக முக்கியமானவை. ஜானி, உதிரிபூக்கள், மஞ்சில் விரிஞ்ச பூக்கள் (மோகன்லாலின் முதல் படம்), மெட்டி போன்றவை அந்த வகையைச் சார்ந்தவை. அசோக் வெற்றி விழா, நடிகன், சூரியன், மன்னன், ஜீன்ஸ் என்ற மசாலா படங்களுக்கும் அழகாக ஒளிப்பதிவு செய்திருப்பார்.

அசோக் குமார் 1980-ல் ”நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைப்படத்திற்கு தேசிய விருது வாங்கியவர். எவ்வளவோ தமிழ் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்..... இந்தியாவின் முதல் 3-டி படமான மை டியர் குட்டிச்சாத்தானின் ஒளிப்பதிவாளரும் கூட. பல மலையாளப்படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். தமிழ்நாடு, கேரள மாநில அளவில் விருதுகளும், நந்தி விருதும் வாங்கியிருக்கிறார். Back Waters என்ற ஆங்கிலப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அசோக் பாலு மகேந்திராவுக்கு பிடித்த ஒளிப்பதிவாளர் என்பதே மிகப்பெரிய விருது தான்.

எவ்வளவோ மனதைத் தொட்ட காட்சிகள் உண்டு. சட்டென்று தோன்றிய சில:

உல்லாசப்பறவைகள் (ஜெர்மனியின் செந்தேன் மலரே... கண்ணில் நிற்கிறது)
ஜானி (இசையும் ஒளிப்பதிவும் இப்படத்திற்கு 2 தூண்கள்)
நெஞ்சத்தைக் கிள்ளாதே (லேசான பனி விழும் காலையை, “பருவமே புதிய பாடல் பாடு” பாடலில் அவர் அற்புதமாக படம் பிடித்திருப்பார்.. எப்போது அந்தப் பாடலைக் கேட்டாலும் நாஸ்டால்ஜியா தான்)
மெட்டி (சந்தக்கவிகள் பாடும் மனதில் இன்பக்கனவுகளே!)

நிற்க.... அவர் மறைவு குறித்து அசோக் குமாரின் மகன் ஆகாஷ் பேசியதை வாசித்ததில் மனது கனமாகி விட்டது!

ஒரு வாரம் முன்பு அசோக் குமார் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்ததும், கடந்த வாரம் அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆகாஷ் தமிழ்த்திரையுலக சங்கங்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று பலருக்கும் தனது தந்தையின் நிலைமை குறித்து செய்தி அனுப்பியும், அவரது இறுதிக் காலத்தில், கடினமானதொரு சூழலில் ஆதரவு அளிக்குமாறு வேண்டியும், குறிப்பிடும்படியாக ஒருவரும் அசோக்கை சென்று பார்க்கவுமில்லை, அவர் இறுதிச்சடங்குக்கும் எடிட்டர் லெனின், இன்னும் சிலர் தவிர்த்து யாரும் செல்லவும் இல்லை என்பது வருத்தமான விஷயம்.

ஆகாஷ் “என் அப்பா புகழின் உச்சியின் இருக்கையில், எத்தனையோ டைரக்டர்கள், நடிகர்கள், அவரிடம் விவாதிக்கவும், அவருடன் பணியாற்றும் வாய்ப்புக்காகவும், வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தது என் அம்மாவுக்கு ஞாபகமிருக்கிறது! இன்று அவருக்கு அஞ்சலி செலுத்த யாரும் வராததைப் பார்க்கையில், எப்படிப்பட்ட உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை! என் தந்தையின் ஆசிர்வாதத்தைப் பெற வராதவர்களுக்கு கொடுப்பினை இல்லை என்பதாக எடுத்துக் கொள்கிறேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். எடிட்டர் லெனினும் அசோக் குமாரின் இறுதிச்சடங்குக்கு யாரும் வராதது குறித்து வருந்தியதாகத் தெரிகிறது.

இத்தனை சோகத்திலும், ஆகாஷை தேற்றும் விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழுக்காக, தமிழில் மனு எழுத வேண்டியிருந்தது. அந்த அலுவலகத்திற்கு பக்கத்தில் இருந்த ஒரு சிறுகடையின் உரிமையாளரை ஆகாஷ் உதவிக்கு அணுகியபோது, பெயரைக் கேட்ட மாத்திரத்தில், மாலை நாளிதழ் ஒன்றை எடுத்துக் காட்டி, அதில் வந்திருந்த மரணச்செய்தியில் இருந்த அசோக் குமார் தான் ஆகாஷின் தந்தையா என்று அவர் வினவியிருக்கிறார். ஆகாஷ் ஆமோதித்தவுடன், அந்த சிறுகடை உரிமையாளர் மிகவும் மகிழ்ந்து, உதிரிப்பூக்கள் படத்தில், அசோக் குமார் பூக்களை பலவிதமாக, அழகாக படம் பிடித்ததை நினைவு கூர்ந்தாராம்! “This is my Dad's Legacy" Akash related.

ஏதோ ஒரு விதத்தில், கேமரா வழிக் காட்சிகள் வாயிலாக என்னை/நம்மை மகிழ்வித்த அசோக் குமார் என்ற ஜீனியஸின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

--எ.அ.பாலா

Read More...

லைக்கா அறிக்கை டெம்பிளேட்

சமீபத்தில் லைக்கா நிறுவனம் கத்தி படத்தை தயாரிப்பை எதிர்த்தவர்கள் சில மாதங்கள் முன் லைக்கா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது விடாத அறிக்கையை இப்போது ஏன் விடுகிறார்கள் ?

அடுத்து லைக்கா நிறுவனம் ஸ்பான்சர் செய்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டால் கீழ் வரும் அறிக்கையை ஒரு டெம்பிளேடாக உபயோகப்படுத்தலாம்.

இனவாத ராஜபக்ஷே தமிழர்களைக் கொத்துக் கொத்தாக அழித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக்கு அணு ஆயுதங்களை விநியோகித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில், காங்கிரஸுடன் எந்த ஒட்டுறவுமின்றி திமுகவுடன் கூட்டணியில் சேர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக்கு செல்லவிருந்த நல்லெண்ணக் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராக என்னையறியாமலேயே இணைத்திருந்தனர்.

விஷயம் தெரியவந்த போது, இலங்கையின் இயற்கை வனப்பைத்தான் காட்டுவதற்காக காட்டுமிராண்டி காங்கிரஸார் அனுப்புகின்றனர் என்று நினைத்து நானும் விமானமேறி, வன்னியின் வனப்பை மனதில் உள்வாங்கிக் கொண்டிருந்தபோதே, விமானம் கொழும்பைத் தொட்டிருந்தது.

கொழும்பிலிறங்கி, விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்ததும் திடுமென்று எதிர்பாராமல் எங்களைச் சூழ்ந்து கொண்ட பேரினவாத அரக்கர்கள், ஏனையோரை விட்டு என் கண்ணை மட்டும் கட்டிக் காரிலேற்றினர். சுமார் ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பின்னர் காரை நிறுத்தி என்னைக் கீழிறக்கினர் புத்த மஹாவம்சக் கிங்கரர்கள். கண் கட்டையும் அவிழ்த்தார்கள், அங்கே கண்ட காட்சி...ஐயஹோ!

கண் பார்வையே பறிபோய்விடும் என்று நான் அஞ்சுமளவிற்கு எதிரே விரிந்திருந்தது சிங்களப் பேரினவாத அரக்கன் மஹிந்த ராஜபக்ஷேவின் அலரி மாளிகை. அப்போதுதான் காங்கிரஸின் சதி எனக்கு உரைத்தது. இவர்கள் தமிழினத்தை அழித்த அரக்கர்களாயிற்றே என்ற அதிர்ச்சியுடன், செய்வதறியாது திகைத்து, தடுமாறி, தயங்கி நின்ற கணமே, இன்னொரு பேரதிர்ச்சி., வாசல் வரை என்னை வரவேற்க தமிழனின் ரத்தம் தோய்ந்த அங்கவஸ்திரத்தை கழுத்தைச் சுற்றி மாலையாக இட்டு, மஹிந்த ராஜபக்ஷேவும், அவரது சகோதரரும், புலிகளெனும் போதிசத்வர்களைக் கொன்றொழிக்க ஆணை பிறப்பித்த கொடுங்கோலன் கோத்தபாயவும் வந்து கொண்டிருந்தார்கள்.

ஐயோ, என் தமிழினத்திற்கு நான் என்ன பதில் சொல்வேன் எனப் பதறிக் கொண்டிருந்த வேளையிலேயே, என் பதிலுக்குக் கூடக் காத்திராமல் என்னைப் பாய்ந்து வந்து உள்ளிழுத்துச் சென்றனர் இருவரும்

அங்கே, உள்ளே சென்று, என்ன செய்வதென்று கைபிசைந்து நின்ற வேளையில், அதே பதட்டத்துடன் பாலு அண்ணன் வந்தார், எங்கே கொண்டு வந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா என்று கொந்தளிக்கும் கோபத்துடன். நாங்களிருவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டிருந்த வேளையில், அதே ஆதங்கத்துடன் எம்முடன் வந்திருந்த இதர உறுப்பினர்களும் உறுமிக் கொண்டிருந்தனர். நான் கொந்தளிக்கு கோபத்துடன், இந்தப் பயணத்தையே ரத்து செய்து விடலாமா என்று கேட்டுக் கொண்டிருந்த போதே., என்ன விஷயம் என்று பயங்கரன் பஸில் ராஜபக்ஷே வந்து கைகுலுக்கினான், கனத்த இதயத்துடன் கை நீட்டினேன்.

அங்கு எம்மைச் சந்திக்க வந்திருந்த சகோதரர்கள் என்னவென்ரு கேட்டனர். அப்போது காங்கிரஸ் எங்களை ஏமாற்றி இங்கே அனுப்பி வைத்தது பற்றியும், ராஜபக்ஷேவிடம் நாங்கள் அழைத்துவரப் பட்ட முறை பற்றியும் விளக்கிய போது அவர்களின் ஆக்ரோஷம் அளவிடமுடியாமல் வெளிப்பட்டது. தமிழகத்தில் ராஜபக்ஷேவிற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் பற்றியும், தொப்புள் கொடி உறவுகளின் மனநிலை பற்றியும் விளக்கிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது சகோதரியும் அதே அதிர்ச்சி கலந்த பாவத்துடன், ஆனால் சற்றே திடமாக, கவலை வேண்டாம், அந்த அளவிற்கு ஏதும் நடந்துவிடவில்லை, ராஜபக்ஷேவின் சகலையின் முன்னோர் ஒருவர் பண்டார வன்னியனின் பக்கத்து வீட்டில்தான் வசித்தாராம் என்றும், அவரும் ஒரு மாவீரர்தான் என்றும் கூறியவுடன் சற்று ஆறுதலடைந்தேன். மேலும், இவ்விஷயத்தைப் பெரிதாக்கினால், பெரும்பாடுபட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விருந்தும், அதற்குப் பின்னால் கிடைக்கும் கிடைத்தற்கரிய பரிசுகளுக்கும் பங்கம் வந்துவிடும் என்று சொன்னபடியாலும், தமிழர்களுக்கேற்பட்ட அநீதிகளையும், கொடுமைகளையும் தற்காலிகமாகத் தள்ளி வைத்து.....ஆகவே குஜராத் படுகொலைக்குக் காரணமான நரேந்திர மோடியை.....
டெம்பிளேட் ஸ்பான்சர் யதிராஜ சம்பத் குமார் :-)

Read More...

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் - அஞ்சலி

அஞ்சலி

Read More...

Wednesday, October 22, 2014

கத்தி - FIR

Lyca தயாரித்த கத்தி படம் தமிழர்களின் ரத்தத்தில் உருவான படம் என்பதால் அதை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் ஃபேஸ்புக்கில் நடக்கிறது. நேற்று சில தமிழ் அமைப்பு பெட்ரோல் குண்டை போட்டு சத்தியம் உட்லாண்ட்ஸ் தியேட்டரை தாக்கி தங்கள் தீவிரவாதிதனத்தை காண்பித்துள்ளார்கள்.

இதற்காகவே இன்று கத்தியை பாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
முதல் பாதி வழக்கமான சினிமா பார்முலா - ஹீரோயின் அறிமுகம், விஜய் அடிக்கும் ஜோக், என்று என்ன படம் இது மொக்கையா இருக்கே என்று நினைக்கும் போது

ஒரு முக்கியமான பிரச்சனையை முருகதாஸ் நம் முன்னே வைக்கிறார்.

அடுத்த பாதி நகரத்து மக்களையும், மீடியாவையும் தன் வசனத்தால் துவைத்து எடுக்கிறார்.

இது எல்லாம் சாத்தியமா என்று லாஜிக் பார்க்காமல் படத்தை பார்க்க வைக்கிறார். குறிப்பாக மீடியாவிடம் பேசும் விஜயின் வசனங்கள் படத்தின் ஹைலைட். 2ஜி முதல் ஸ்டாபெரி காண்டம் வரை நச்.

படத்தின் முக்கியான ஹைலைட் அதில் நடிக்கும் கிழவர்கள். வழக்காக வரும் சினிமா தாத்தாக்கள் இல்லாமல், புதுசாக இருக்கிறார்கள். நிஜமாக அவர்கள் பாதிக்கபட்டவர்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

சமந்தா சமத்தாக வந்துவிட்டு போகிறார். அஞ்சான் மாதிரி ஒத்த பட்டனுடன் வராமல் எல்லா பட்டனுடன் வருகிறார்.

படத்தின் வில்லன் முதல் பாதியில் சில காட்சிகளை வெட்டாமல் விட்ட எடிட்டர் தான். படத்தில் வரும் அழகான வில்லன் வழக்கம் போல ஏதோ குத்தி இறந்து போகிறார்.

அப்பறம் விஜய் இதில் இரட்டை வேடம் வழக்கமாக நடித்திருக்கிறார். கடைசி காட்சியில் அட இவருக்கு கூட நடிக்க வருகிறது என்று நினைக்க தோன்றுகிறது.

இது விஜய் படம் என்பதை விட முருகதாஸ் படம் என்று சொல்லலாம். படத்தின் மெசேஜ் புதுசு இல்லை ஆனால் அழுத்தமாக சொல்லியதற்கு ஒரு சபாஷ்.

இசை, கேமரா எல்லாம் சராசரி.

தல ரசிகர்கள் கூட படம் நன்றாக இருக்கிறது என்பார்கள்.

இட்லிவடை மார்க் 7/10


படம் Lyca ? Dis-Lyca என்றால் டபிள் லைக்!

Read More...

Friday, October 17, 2014

தீபாவளி வாழ்த்துக்கள்இன்று முதல் பட்டாசு வெடிக்க ஆரம்பிக்கலாம் !

Read More...

Sunday, October 05, 2014

இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு!

நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில், 'நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல்’ என்ற பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் மிகமிக முக்கியமானது. நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிக்கப்பட்டுள்ள 'முதல் முதலமைச்சர்’ ஜெயலலிதாதான்!

ஆனால், இந்தத் தீர்ப்பு வருவதற்கு... 17 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இடையில் ஒரு தலைமுறையே பிறந்து வளர்ந்துவிட்டது. '66 கோடி ரூபாய் எல்லாம் ஓர் ஊழலா?’ எனக் கேட்கும் அளவுக்கு, ஊழல்களின் பரிமாணம் அதிபயங்கரமாகக் கிளைத்திருக்கிறது. இருந்தாலும், நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் தீர்ப்பு, அரசியல்வாதிகளுக்குப் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அநீதி இழைத்தால் எத்தகைய அதிகாரம் படைத்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள்’ என்ற நம்பிக்கையை மக்களுக்கும், 'முறைகேடான வழிகளில் சம்பாதித்தால், நிம்மதியற்ற வாழ்வும் அவமானமும் தலைகுனிவும்தான் இறுதியில் மிஞ்சும்’ என்ற நிதர்சனத்தை அரசியல்வாதிகளுக்கும் அழுத்தமாக உணர்த்தியுள்ளது.

'மாதம் ஒரு ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு 60 ரூபாய் சம்பளம் பெற்ற ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம்பாதித்தார்?’ என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம். சாட்சிகள் மிகத் தெளிவாக உள்ள இதுபோன்ற வழக்கைக்கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. விரைந்து நீதி வழங்குவதில் ஏற்படும் இடர்களைக் களைவதற்கான தருணமாக, நீதித் துறை இதைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஆனால், 'செயற்கை’யாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பழமொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்!

கடந்த ஆண்டு வரை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்றவழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட‌ ஒரு மக்கள் பிரதிநிதி 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்தால், பதவியில் தொடர முடியும். ஆனால், கடந்த வருடம்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவி பறிக்கப்படும் விதமாக‌ச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தம்தான் இப்போது ஜெயலலிதாவின் பதவியை உடனடியாகப் பறித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெயலலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார்!

தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன; கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய நிலை ஏற்படும் என்பதைக் கணித்து, 'கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்த தொந்தரவும் அளிக்கக் கூடாது’ என்ற ஆற்றுப்படுத்தும் அறிக்கைகூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளிவரவில்லை. காவல் துறையினரோ, ஆளும் கட்சியினரின் வன்முறைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

மறுபுறம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து நாடே பேசுகிறது. ஆனால், இந்தத் தேசத்தில் ஜெயலலிதா மட்டும்தான் ஊழல் அரசியல்வாதியா? நீதித் துறையின் சாட்டை சுழல வேண்டிய ஊழல்வாதிகள் கட்சி, ஆட்சி பேதமின்றி நாடெங்கும் நிறைந்துள்ளனர். 2ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி சுரங்க‌ ஊழல்... என நம் தேசத்தை இறுக்கிச் சுற்றி வளைத்திருக்கிறது ஊழல் எனும் கொள்ளைநோய். நீதிமன்றத்தை அலைக்கழித்து, மக்கள் மன்றத்தை அவமதித்து, 'மாண்புமிகு’ அந்தஸ்துடன் உலாவரும் அவர்கள் ஒவ்வொருவரும், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக, முதல் படியாக அமையட்டும்!

நன்றி: விகடன்.

Read More...

Saturday, October 04, 2014

எதிர்கால தமிழக அரசியல்! - சோ

பதினெட்டு வருடங்களாக நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்ட ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் - ஆகியவற்றின் அடிப்படையில் பெங்களூரு விசேஷ நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்மானித்து, அவருக்கு நான்கு ஆண்டு சிறைவாசமும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது; ஜெயலலிதாவுடன் கூட மூன்று பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. தங்கள் முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருந்தாலும், அந்த ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு இப்படி மட்டும்தான் அமைய முடியும் என்று சொல்லி விட முடியாது. அதே ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில், ‘எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை’ என்றும் தீர்ப்பு வந்திருக்க முடியும். அப்படி ஒரு தீர்ப்பு வருவதற்குப் போதுமான ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக வழக்கின் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இப்போது வந்துள்ள தீர்ப்பைப் பாராட்டி, ‘நீதிபதி நேர்மையாளர், துணிவு மிக்கவர்’ என்றெல்லாம் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. ‘குற்றம் எதுவும் நடக்கவில்லை’ என்று தீர்ப்பு வந்திருந்தால், இந்த மாதிரி பாராட்டுக்கள் வந்திருக்காது. அதாவது ‘ஜெயலலிதா குற்றவாளி என்று கூறி, அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படா விட்டால் நீதிமன்றத்தின் நேர்மையே சந்தேகத்துக்குரியதாகி விடும்’ என்ற அளவுக்கு வெளியே பிரசாரம் நடந்தது. அந்த மாதிரி சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில், இப்போதைய தீர்ப்பு அமைந்திருக்கிறது.

தீர்ப்பு இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று நாம் உட்பட பலரும் எதிர்பார்க்கவில்லை. தி.மு.க. மட்டும் எதிர்பார்த்தது; இதையே நம்பியிருக்கிற அளவுக்கு அக்கட்சியின் தலைவரும், அம்மாதிரி எதிர்பார்ப்புடனேயே கருத்துக்களைக் கூறி வந்தார்; இவர்கள் எப்படி இந்த மாதிரி ஒரு நிலைப்பாட்டுக்கு முன்கூட்டியே வந்தனர் என்பது நமக்குத் தெரியவில்லை. இதற்கு மேல் இது பற்றி விவரித்துக் கொண்டு போனால், அது ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்ற ஆபத்தான எல்லைக்குள் நுழைவதாகி விடும்.

சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பற்றி, தாங்கள் கொடுத்த விவரங்களை வருமான வரி இலாகா ஏற்றுக் கொண்டுள்ளது என்ற ஜெயலலிதா தரப்பினரின் வாதத்தை நீதிமன்றம் பரிசீலித்ததா, இல்லையா என்று தெரியவில்லை. தீர்ப்பின் முழு விவரங்கள் வெளியாகிறபோதுதான், இது பற்றியெல்லாம் நாமும் ஒரு கருத்துக்கு வர முடியும்.

இப்போது வந்திருக்கிற தீர்ப்பு இந்த விவகாரம் பற்றிய ஒரு இறுதியான முடிவல்ல. அப்பீல் இருக்கிறது. அதில் மறுபரிசீலனை நடக்கும். அப்போது இன்றைய தீர்ப்பு ரத்தாகக் கூடிய வாய்ப்பும் உண்டு. ஜெயலலிதா தொடர்பான வழக்குகளிலேயே கூட, ஓரிரு வழக்குகளில் கீழ்கோர்ட் விதித்த தண்டனை, அப்பீலில் ரத்தாகியுள்ளது. அம்மாதிரி வாய்ப்புகள் இருக்கிற சூழ்நிலையில், அவருடைய அரசியல் வாழ்க்கையே ஒரு பெரும் சோதனைக்கு உள்ளாகி விட்டது போல் நினைக்க வேண்டிய அவசியமில்லை.

சொல்லப் போனால், அவருக்கு மக்களிடையே ஏற்கெனவே உள்ள அபரிமிதமான ஆதரவு, இந்தத் தீர்ப்பின் மூலம் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் உண்டு. ஏனென்றால், தீர்ப்பின் கடுமை, மக்களிடையே ஜெயலலிதாவின் பக்கம் ஒரு அனுதாப சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறது. ஆகையால், இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விட்டதாக தி.மு.க. கருதிக் கொள்ள முடியாது. இந்த வழக்கோடு 2ஜி சமாச்சாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அக்கட்சியை நிராகரிக்கிற மனநிலையிலிருந்து மக்கள் மாறாமல் இருப்பார்கள் என்றுதான் எதிர்பார்க்க முடியும்.

இப்போது ஒரு புதிய முதல்வரின் கீழ் அமைகிற அ.தி.மு.க. அரசு, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன்தான் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது மாநிலத்திலும், மத்தியிலும் அரங்கேறிய அரசியல் அவலங்களும், ஊழல் விவகாரங்களும் மக்கள் மனதை விட்டு இன்னமும் அகலவில்லை.

இங்கு அமையவிருக்கிற அரசு செயல்படுகிற விதத்தின் மூலமாக, தி.மு.க.வுக்கு மீண்டும் செல்வாக்கு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்தத் தீர்ப்பின் காரணமாக தமிழக அரசியல், குழப்பத்தைச் சந்திக்க நேரிடலாம். அந்தக் கோணத்தில் பார்க்கிறபோது, இந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பின்னடைவோ, இல்லையோ - தமிழக அரசியல் எதிர்காலத்துக்கு, ஒரு சோதனைக் காலமாகி விடும்.


நண்பன் ல என்னடா நல்ல நண்பன் கெட்ட நண்பன் நண்பணாலே நல்லவன் தான் - ராஜா ராணி படத்தில் வரும் வசனம்.

Read More...

Friday, October 03, 2014

மெட்ராஸ் - லேட் FIR :-)

மெட்ராஸ் - தமிழ் சினிமாவில் எப்போதாவது நடக்கும் ஒர் அதிசயம். அட்டக்கத்தி பார்த்து விட்டு வெளியில் வரும்போதே ரஞ்சித்தின் அடுத்த படத்துக்கு "First day First show" , என்று முடிவுகட்டியிருந்தேன். ரஞ்சித் ஏமாற்றவில்லை திரும்பவும் ஒரு "Original Content" இதுதற்பொழுது தமிழ் சினிமாவில் ஒர் அரிய விஷயமாகிவிட்டது.


படத்தின் கதையென்று பார்த்தால் வழக்கமான தமிழ் சினிமாவின் கதைதான், நட்பு, காதல் துரோகம்,எழுச்சி என்னும், வட்டத்துக்குள் அடங்குவதுதான் (அதை இங்கே படிக்கலாம்) ஆனால் அதனுள் ரஞ்சித் புதைத்து வைத்துஇருக்கும் "Social Agenda" தான் படத்தின் Highlight.


21 ஆம் நூற்றாண்டில் கூட அதிகாரத்திற்காக உப்பு பெறாத விசயத்தை வைத்து எளிய மக்களின்வாழ்க்கையை கைக்குள் வைத்திருக்க துடிக்கும் அதிகாரவர்க்கத்தின் நயவஞ்கத்தனத்தை மிக அழகானகலை வடிவமாக ரஞ்சித்தால் மாற்ற முடிகிறது,


அதிகாரம் மற்றும் அடக்குமுறையின் குறியீடாக அந்த சுவரில் இருக்கும் படம் , அவர்களின் விருப்பம்இல்லாமலேயே அவர்களிடையே நின்று அவர்களின் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கிறது. அதைஎதிர்க்க முற்பட்டு, வாழ்வை இழந்து பைத்தியமாக பழம் பெருமை பேசித்திரியும் "Johnny" கதாப்பாத்திரம்அவர்களின் வாழ்க்கையாகவும் / மனசாட்சியாகவும் படத்தில் வந்து போகிறது.


உண்மையில் இந்த படம் "Johnny" கதாப்பாத்திரம்(அற்புதமான சித்தரிப்பு) வழியாகவே சொல்லப்பட்டுஇருக்க வேண்டும், "Studio Green , Karthi" மற்றும் வியாபார நிமித்தங்களுக்க படம் பல திசைகளில்அலைக்கழிக்க படுவதை உணர் முடிகிறது, அதேசமயம் ரஞ்சித்தும் எந்த இடத்திலும் படத்தை தரைதட்டவிடுவதில்லை.


கேமிரா என்று ஒன்று இருப்பதையே உணர முடிவதில்லை, படத்தின் முன் பாதியில் காட்சிகள் வேகமாகநகர்ந்தாலும் மிக மெதுவான அந்த "Theme music" :(


படம் பார்த்த நண்பர்கள் பலர், "மற்ற வடசென்னை படங்களுக்கும் இதுக்கும் என்ன பெரிய வித்யாசம்?"வித்யாசம் இதுதான், மற்ற படங்களில் நாம் பார்த்தது அவர்களின் கத்தியை மட்டும் தான். அந்தகலாச்சாரத்தின் எந்த கூறுகளும் இடம் பெறவில்லை, நாம் அவர்களின் வீடுகளுக்குள் போகமுடியவில்லை, அவர்களின் இசையை, மொழியை கேட்க முடியவில்லை அவர்களின் திருமணத்தையோ,சாவையோ நாம் அருகில் இருந்து பார்க்க முடியவில்லை, இந்த படத்தில் இவை எல்லாம் சாத்தியமாகிறது.


படத்தில் ஒரு காட்சி, நாயகனும் , நாயகியும் "Romance" செய்து கொண்டு இருக்கும் போது அம்மா வந்துவிட்டு உடனே ஏதோ மறந்துட்டேன் என்று வெளியேறி விடுகிறாள் - நான் வடசென்னை மக்களின்வாழ்க்கைத்தரம் எங்கோ இருக்கிறது என்று நினைத்த நொடி, என் பின்னால் இருந்தவரின் கமெண்ட்சொல்லியது, வாழ்க்கையை முடிவுசெய்வது வடசென்னையோ, அமெரிக்காவோ அல்ல மனசுதான்.


தன் மக்களின் வாழ்க்கையை இத்தனை கலை நுணுக்கத்தோடும் உத்வேகத்தோடும் பதிவு செய்ய முடிகிறரஞ்சித், தன் மக்களிடம் "திமிறி எழு, திருப்பியடி.. அடங்கமறு அத்துமீறு" என்று கார்த்தி வழியாகசொல்லிக்கொண்டு இருப்பது பெரிய முரணாகத் தெரிகிறது. அந்த இடம் தான் எனக்கு உங்களுக்கும்அந்த அரசியல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையோ என்று எண்ண வைக்கிறது.


உண்மையில் இதுதான் உங்கள் நம்பிக்கையா ரஞ்சித்? எனக்கென்னவோ, சுய நலமும், புறக்கணிப்பும்தான் இந்த நூற்றாண்டின் விடுதலை சாதனங்களாக தெரிகின்றது.ஏது எப்படி இருந்தாலும், ஒரு அருமையான படத்தை தந்ததற்க்காக நன்றி.

- Krish
Texas


Read More...