பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 18, 2014

தோனி பதவி விலகுகிறார்

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று கேப்டன் மகேந்திர சிங் தோனி பதவி விலகக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளன.
தோனிக்கு இந்த தண்டனை குறைவு. அவருக்கு அதிகபட்ச தண்டனையாக அஞ்சானை இரண்டு முறை பார்க்க வைக்க வேண்டும்.

Read More...

Monday, August 11, 2014

நம்பெருமாளுடன் ஒரு நாள் - எ.அ.பாலா



ஸ்ரீரங்கம் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதை யோசித்து.... ஒரு நாள் பயணமாக ஸ்ரீரங்கம் செல்லலாம் என்று எடுத்த திடீர் முடிவின் காரணமாக, குடும்ப சகிதம் வெள்ளி (8.8.2014) அன்று காலையில், எப்போதும் போல லேட்டாகச் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் ஸ்ரீரங்கம் போய்ச் சேர்ந்தேன். ஹோட்டல் அறையின் பால்கனியிலிருந்து ரம்யமான ராஜ கோபுர தரிசனமும், முரளி காபிக்கடையின் ஃபில்டர் காபியும் புத்துணர்ச்சி அளிப்பதாய் இருந்தன.




வைணவ பாரம்பரித்தில், கோயில் என்று பொதுவாகக் கூறினால், அது ஸ்ரீரங்கத்தையே குறிப்பிடுவதாகும். அழகிய மணவாளன், அரங்கன் என்றழைக்கப்படும் அரங்கமாநகருளானுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் வந்ததற்கு ஒரு சுவையான காரணக்கதையை Jsri யின் வலைத்தளத்தில் (http://mykitchenpitch.wordpress.com) கண்டேன். அதன் சுருக்கம்:



ஸ்ரீரங்கத்தில் அயலாரின் படையெடுப்புக்கு (அப்போது தில்லி சுல்தான்) பயந்து, ஒளித்து திருமலைக்கு எடுத்துப்போன அரங்கன் விக்ரகத்தை 60 வருடங்கள் கழித்தே மீட்டு எடுத்து வந்தார்கள். அதுவரை வேறு ஒரு உத்சவமூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்துவந்தன. காணமல் போன அரங்கன் சிலை பற்றி அறிந்தவர்கள் யாருமே உயிருடன் அப்போது இல்லாமல் போனதால், திரும்பி வந்த விக்ரகஹத்தை அசல் என்று பலரும் ஏற்க மறுத்தனர். ஆனால், எப்போதோ காணாமல் போன ரங்கநாயகித் தாயாரின் விக்ரஹம், 60 வருடங்கள் கழித்து திருமலையிலிருந்து அரங்கன் விக்ரகம் திரும்பி வந்த அதே சமயத்தில், கிடைத்து விட, ஸ்ரீரங்கம் திரும்பிய உத்சவர் தான் அசல் அரங்கனோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது!

அரங்கன் விக்ரஹம் திருமலை செல்வதற்கு முன், அரங்கனின் ஆடைகளை சலவை செய்து வந்த, பின்னர் கண்பார்வை இழந்த 93 வயது வண்ணான் ஒருவர் இன்னும் உயிருடன் இருப்பது தெரியவருகிறது. அவரை அழைத்து விசாரித்ததில், அவர் கூறிய விக்ரஹ அடையாளங்கள் ஒத்துப் போனது. மேலும் அவர் தன்னால் அபிஷேக (திருமஞ்சன) தீர்த்தத்தை ருசித்து இனம் காணமுடியும் என்று சொல்ல, பழைய/புதிய உத்சவமூர்த்திகளின் அபிஷேக தீர்த்தமும் (ஈரவாடை என்று கூறுவர்) அவருக்கு அளிக்கப்படுகிறது. திருமலையிலிருந்து மீண்டு வந்த அரங்கனின் தீர்த்தத்தை அருந்திய அச்சலவைத்தொழிலாளி, ‘ இவரே நம் பெருமாள், இவரே நம் பெருமாள்! ’ என மகிழ்ச்சியில் கூவ, ‘நம்பெருமாள்’ என்ற பெயர் அரங்கனுக்கு நிலைத்தது. ஈரத்தமிழில் திருவாய்மொழி அருளிய காரிமாறப்பிரானை வாஞ்சையோடு “நம் ஆழ்வார்” என்று நாம் அழைப்பதில்லையா!

ஸ்ரீரங்கம் கோயில் 7 பிரகாரங்கள் கொண்ட பிரம்மாண்டமான கோயில். 108 வைணவ திருப்பதிகளில் முதன்மையானது. 10 ஆழ்வார்களால் (except மதுரகவி & தொண்டரடிப்பொடியாழ்வார்) பாடல் பெற்றது திருவேங்கடம் எனப்படும் திருமலையும், திருப்பாற்கடலும். ஆனால், 11 ஆழ்வார்களால் (except மதுரகவியாழ்வார் – இவர் தன் ஆச்சார்யன் நம்மாழ்வார் பற்றி மட்டுமே பாடியுள்ளார் -கண்ணிநுண் சிறுத்தாம்பு) பாடல் பெற்ற ஒரே திவ்யதேசம் திருவரங்கம் மட்டுமே! 247 பிரபந்தப் பாசுரங்களில் ஸ்ரீரங்கம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும்கோயில்
திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!

என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி (பாகவத சிம்மம் என்று போற்றப்பட்ட) சுவாமி வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் அருளிய ”கங்குலும் பகலும் கண் துயிலறியாள்” பதிகமும், திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிப்பிரான் (10) பாசுரங்களும், தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலைப்பாசுரங்களும் எனக்குப் பிடித்தவை. தொண்டரடிப்பொடியின் இப்பாசுரம் கல்லையும் கரைக்க வல்லது!

ஊரிலே காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே (என்) கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா, அரங்கமாநகருளானே!

பெரியாழ்வாரின் பாசுர முத்து ஒன்று:

கன்னி நன் மாமதிள் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
மன்னியசீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன்வாழ்வுகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்*
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம் தா.

நாச்சியார் திருமொழியிலிருந்து:: அரங்கன் தன் முகத்தை கூட ஏறிட்டுப்பார்க்காமல் சேஷசயனத்தில் இருப்பதைக் கூறி நாச்சியார் ’புலம்புவதாக’ கீழுள்ள ஆண்டாள் பாசுரம் அமைந்துள்ளது :) இங்கு சங்கம் என்பதற்கு அரங்கனின் கைச்சங்கு என்றும், கைவளையல் என்றும் இரு பொருள்கள் உண்டு. “அம்மனே” வுக்கு ”அந்தோ” என்று பொருள் கொள்ளவேண்டும்

தாம் உகக்கும் தம் கையிற் சங்கமே போலாவோ
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும்? ஏந்திழையீர்
தீ முகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே

அடுத்து சேரமன்னனாக விளங்கிய குலசேகர ஆழ்வாரின், பேரன்பும், பெரும்பக்தியும் இப்பாசுரங்களில் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது, பாருங்கள்:

ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மாமலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திடத்
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே

கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்
கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி
வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே

கோயில் உள்/வெளிப் பிரகாரங்களில் பல சன்னதிகள் உள்ளன. செங்கமலவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமன், நுணுக்கமாக செதுக்கப்பட்ட. பிரம்மாண்டமான கருடாழ்வார், வாசுதேவன், மீசை வைத்த பார்த்தசாரதி, சுவாமி தேசிகர், தன்வந்திரி, ரங்கநாயகித் தாயாருக்குத் தனியாக என்று இப்படிப் பல. கோயில் விமானத்தில் மிக அழகான பரவாசுதேவர் கோலத்தை படத்தில் காணலாம்.


இங்குள்ள ராமானுஜரின் தனிச்சன்னதியில் அவரது “தான் ஆன” திருமேனியை தரிசிக்கலாம். அமர்ந்த நிலையில் உள்ள ராமானுஜரின் சிலைக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) கிடையாது. ஆண்டுக்கு 2 தடவை (ஐப்பசி,சித்திரை), பச்சைக்கற்பூரமும், குங்குமப்பூவும் கலந்து திருமேனியில் சாற்றுவது வழக்கம். அவரது ”தமர் உகந்த” திருமேனியை மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்திலும் ”தானுகந்த” திருமேனியை ஸ்ரீபெரும்புதூரிலும் தரிசிக்கலாம். பெருமாளின் துயிலணையாக விளங்கும் ஆதிசேஷனின் அவதாரங்களாக லட்சுமணன், பலராமன், ராமானுஜர் ஆகியோரைக் குறிப்பிடப்படுவர்.



மேலும் தகவல்களுக்கு:

எந்தை இராமானுச முனியை (எம்பெருமானார், யதிராசர், பாஷ்யகாரர், உடையவர், இளையாழ்வார் என்ற பிற திருநாமங்களும் இவர்க்கு உண்டு) வைணவம் தழைக்க வந்த ஒரு புரட்சித்துறவி என்று தாராளமாக அழைக்கலாம். 1000 ஆண்டுகளுக்கு முன்னமே, சாதி பேதம் பாராமல், வைணவக் கொள்கைகளை கைக்கொண்ட அனைவரும், திராவிட வேதம் எனும் பிரபந்தப் பாசுரங்களை ஓதவும், வைணவ மதச்சின்னங்களை அணியவும், சமாஸ்ரயணம் என்ற சடங்கு வாயிலாக சங்கு சக்கர முத்திரைகளை பதிந்து வைணவத்தைப் பற்றவும், இராமானுசர் வழி ஏற்படுத்தினார். பெருமாள் (திருமால்) மேல் அன்பும், பற்றும், பக்தியும் கொண்டு, அவன் தாள் பற்றி பூரண சரணாகதி மேற்கொள்ளும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவர் அண்ணல் இராமானுசர்.

”ரங்கா ரங்கா” கோபுரத்தின் இடது புறம் ஒரு 300 மீ தொலைவில், தெற்கு உத்தரவீதியில் மளவாள மாமுனிகளுக்கு தனிச்சன்னதி ஒன்று அமைந்துள்ளது. திருவாய்மொழிப்பிள்ளையின் சீடரான இவ்வைணவ ஆச்சார்யரன் உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் ஆகிய கிரந்தங்களை அருளியதுடன் ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.



கூட்டம் குறைவாக இருப்பின், திருவரங்கம் கோயிலை முழுமையாக சுற்றிப்பார்க்க, தரிசிக்க குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆகும். நான் சொன்னதற்கு மேல், திருவரங்கம் குறித்த செய்திகள் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. ஸ்ரீரங்கத்திற்கு அருகில் இருக்கும் இன்னும் சில கோவில்களுக்கு (கோயிலடி, திருஅன்பில், உத்தமர் கோயில், திருவெள்ளறை, குணசீலம்) சென்று வந்தது பற்றி பிறிதொரு சமயம் எழுதுகிறேன்.

---எ.அ.பாலா

Read More...

Thursday, August 07, 2014

மக்கள் பணம் !


செய்தி 1: குஜராத் மாநில ஆளுனராக கமலா பெனிவால் பதவி வகித்த காலத்தில், தனது விமான பயணத்தில் அவர் முறைகேடு செய்ததாக கடந்த வாரம் குற்றச்சாட்டு எழுந்தது. 2011 ஆம் ஆண்டு முதல் குஜராத் கவர்னராக பதவி வகித்த காலத்தில் அவர் 63 முறை விமானத்தில் சென்றுள்ளார். இதில் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகருக்கு 53 முறையும், டெல்லிக்கு 10 முறையும் அரசு செலவில் அவர் சென்றது தெரியவந்தது. இதற்காக அரசு பணத்தில் 1.5 கோடி ரூபாயை அவர் செலவு செய்துள்ளதாக கவர்னர் மாளிகையின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.


செய்தி 2: குஜராத் முதல்வர் ஆனந்திபென் பயன்படுத்துவதற்கு ரூ. 100 கோடியில் புதிய விமானம் வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஷீலா தீட்சித் மீது காமன்வெல்த் விளையாட்டு ஊழல் புகார் எழுந்துள்ளது ஏன் அவரை விட்டு வைத்திருக்கிறது மோடி அரசு ?

Read More...