தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,668-க்கும், சவரன் ரூ.21,344-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.28,540-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையிலும் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.48.40-க்கும், பார்வெள்ளி மட்டும் கிலோவுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.45,265-க்கும் விற்பனையாகிறது.
அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்திருந்த நிலையில், 10.30 மணியளவில் 4 காசுகள் சரிந்து ரூ.60.16-ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 55.16 புள்ளிகள் சரிவடைந்து, 25,313.74 புள்ளிகளில் நிலைகொண்டது.
தமிழ்நாட்டில் வெப்பம் இந்த வார இறுதியில் அதிகரிக்கும் சூழ்நிலை இல்லை. இப்போது உள்ள வெப்பம்தான் தொடர்ந்து இருக்கும். ஒருவேளை குறையலாம். அதிகரிக்க வாய்ப்பில்லை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று(வெள்ளிக்கிழமை) ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வறண்ட வானிலைதான் நிலவுகிறது.
ஆம் அத்மி கட்சியிலிருந்து இன்று வெளியே சென்றவர் ஞாநி.
இப்போது தான் இவர் உண்மையான ஞாநி
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Friday, June 27, 2014
ஞாநியும் விலகினார்
Posted by IdlyVadai at 6/27/2014 11:44:00 AM 7 comments
Wednesday, June 25, 2014
சாதாச் சப்பாத்தி - ஜெயஸ்ரீ
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு – 2 கப்
உப்பு, எண்ணை – தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவு, உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
நன்கு ஒன்றுசேர்ந்து கெட்டியான பதத்தில் வரும்போது, 2 டீஸ்பூன் எண்ணை சேர்த்து கையில் ஒட்டாமல் நன்றாக அடித்துப் பிசையவும்.
இந்த மாவை அப்படியே குறைந்தது 4 மணிநேரம் வைத்துவிட வேண்டும். நாளை காலையில் செய்ய முதல் நாள் இரவே பிசைந்து வைக்கலாம்.
சப்பாத்தி தயாரிக்க ஆரம்பிக்கும்போது மீண்டும் ஒருமுறை அடித்துப் பிசையவும்.
ஒவ்வொரு சிறு உருண்டையாக(பெரிய எலுமிச்சை அளவு) எடுத்து, கோதுமை அல்லது மைதா மாவு தோய்த்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.
சப்பாத்தி இட்டபின் உடனே அடுப்பில் மிதமான சூட்டில் காய்ந்த, சப்பாத்திக் கல்லில் போடவும்.
ஒருபக்கம் லேசாகக் காய்ந்ததும்(10 நொடிகளில்), திருப்பிப் போடவும். இந்தப் பக்கமும் காய்ந்ததும் மீண்டும் திருப்பவும்.
இப்போது 1/4 டீஸ்பூன் அல்லது அதைவிடக் குறைவான எண்ணையை சப்பாத்தியைச் சுற்றி மெதுவாக விடவும். சப்பாத்தி பொங்கி மேலெழும்பும்.
அடுத்தப் பக்கம் திருப்பி மேலும் சிறிது எண்ணை விட, மொத்தமாக மேலெழும்பும்.
இரண்டு பக்கமும் மேலும் ஒரு 10 நொடிகள் கரண்டியால் கல்லில் பிரட்டி, பின் எடுத்துப் பரிமாறவும்.
* பிசைந்த சப்பாத்திமாவை ஈரத்துணியில் சுற்றி வைக்கலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மூடி உள்பக்கம் தண்ணீரால் துடைத்து ஈரமாக்கி பின்னர் மூடிவைக்கலாம்.
* மாவு நன்கு ஊறியிருப்பது, அடித்துப் பிசைந்திருப்பது, கல்லில் சப்பாத்தியை இருபுறமும் முதலில் காயவைத்து பின்னரே எண்ணை விடுவது போன்ற காரணங்களாலேயே சப்பாத்தி பொங்கி மேலே வருகிறது. சப்பாத்தியைக் கல்லில் போட்டதுமே, தோசைக்கு விடுவதுபோல் எண்ணை விடக் கூடாது.
* எப்பொழுதாவது பலகையில் சப்பாத்தியை இடும்போது தவறாக அல்லது அதிகமாக ஒரு இடத்தில் அழுத்திவிடுவதாலோ, அல்லது கல்லில் திருப்பும்போது கரண்டியால் எங்காவது குத்துப் பட்டிருந்தாலோ, சப்பாத்தி சரியாக முழுவதும் பொங்கி எழும்பாமல் அரைகுறையாக இருந்துவிடலாம். இதற்கெல்லாம் கவலைப்படாமல், நமக்கு நாமே பொதுமன்னிப்பு கொடுத்துக் கொண்டு- வேறு யார் கொடுக்க வேண்டும்?- தொடர்ந்து செய்யலாம். பொங்காமல் போனாலும் மாவின் தன்மை காரணமாக சப்பாத்தி சாப்பிட மெதுவாகவும், சுவையகாவுமே இருக்கும்.
* கோதுமை மாவுடன் 2 டேபிள்ஸ்பூன் சோயா மாவு கலந்து செய்யலாம்.
* கடைகளில் தயாரித்த கோதுமை மாவை உபயோகிப்பதை விட கோதுமை வாங்கி நன்றாகச் சுத்தம் செய்து மிஷினில் அரைத்து, உபயோகிப்பது, சிக்கனம், சுவை, ஆரோக்கியம். விரும்பினால் 5 கப் கோதுமைக்கு ஒரு பங்கு வறுத்த சோயா பீன்ஸ், 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பும் சேர்த்து அரைக்கக் கொடுக்கலாம். முதலிலேயே சுத்தம் செய்துவிட வேண்டும். அரைத்த பின் சலிக்கக் கூடாது. அல்லது அரைத்த மாவில் அவ்வப்போது சோயா மாவு கலந்தும் செய்யலாம்.
நன்றி: http://mykitchenpitch.wordpress.com/
ஸ்பெஷல் சப்பாத்தி செய்யும் முறை கீழே விடியோவில்..
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்: அம்மா’ உணவகங்களில் மாலை நேர உணவாக ரூ.3-க்கு, 2 சப்பாத்திகளும், பருப்பு கடைசலும் வழங்கப்படுகிறது...
Posted by IdlyVadai at 6/25/2014 01:40:00 PM 3 comments
Labels: சமையல் குறிப்பு, ஜெயஸ்ரீ
இன்றைய ஈராக் - ஈராக்கிலிருந்து ஜெயகுமார்
நான் ஊரில் இருந்த 8 நாட்களும் நம் தொலைக்காட்சி மக்கள் ஈராக்கை குறித்து வளைத்து வளைத்து செய்திகளை வெளிட்டுக்கொண்டிருந்தனர். வீட்டில் எல்லோரும், உறவினர்களும், நண்பர்களும் அப்பாடா, நீ தப்பிச்சு வந்துட்ட என சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால், நான் இன்னும் 10 நாட்களில் பாஸ்ரா கிளம்பிவிடுவேன் என்பதைச் சொல்லி இருக்கவில்லை.
முதலில் இந்த பிரச்சினையின் அடிநாதம் ஷியா, சன்னி பிரச்சினை மட்டுமே. தற்போதைய பிரதமரான நூர் அல் மாலிக்கி பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை சன்னிகளை ஓரம் கட்டியது. அவகளின் பகுதிகளுக்கு எந்த வசதியும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டது. சன்னி பிரிவு தலைவர்களை கட்டம் கட்டி வரிசையாக அழித்தது, அதற்கு உண்டான எதிர்ப்புக் குரல்களை நசுக்கியது இப்படியாக பல விஷயங்கள்.
அதன் பின்னர் சன்னிகள் வெகுண்டதும் முதலில் ஓடி ஆதரவு கேட்டது அமெரிக்காவிடம். அப்போதே அமெரிக்கா இது உங்கள் உள்நாட்டு விவகாரம், நாங்கள் இனி வரமாட்டோம் எனச் சொல்லி விலகிக்கொண்டது. அதன்பின்னர், சிரியாவில் சென்று பயிற்சி பெற்ற ஈராக்கியர்கள் மற்றும் சிரிய தீவிரவாதிகள் இணைந்து ஒரு படையாய் திடீர் தாக்குதல் நடத்த ஈராக்கிய படையினர் திக்குமுக்காடிப் போனார்கள். உண்மையில் அந்த தீவிரவாத கும்பல்கள் ஈராக் ராணுவம் மற்றும் போலிஸின் முன்பு சின்ன கொசு. நினைத்திருந்தால் நசுக்கி இருக்கலாம். ஆனால், போலிஸிலும், ராணுவத்திலும் இருந்த சன்னி இன ஆபிஸர்கள் ஏதும் செய்யாமல் இருந்து அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தனர். சிலர் வேண்டுமென்றே ஆயுதங்களையும், வாகனங்களையும் “பறி கொடுத்தனர்” இதுவரை 57 போலிஸ் ஆபிசர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். (3 ஸ்டார் அலுவலர்கள். போலிஸில் கிடைக்கும் ஈராக்கின் உயர்ந்த ஸ்டார் இது)
ஆரம்பத்தில் ஐ எஸ் ஐ எல் வரவை ஆரவாரமாக கொண்டாடிய மோசுல் மற்றும் டிக்ரித் மக்கள் அவர்களின் ஷரியா பெயரால் கொடுத்த தண்டனைகளைக் கண்டதும் ஆடிப்போயிருக்கின்றனர். தலைக்கு மட்டும் துணி கொண்டு மறைத்த பெண்ணை ஏன் முழு புர்கா அணியவில்லை என சவுக்கால் அடித்திருக்கின்றனர். லஞ்சம் வாங்கியதாக கேள்விப்பட்ட ஒருவருக்கு கையை வெட்டி இருக்கின்றனர். 1750 போலிஸ்களை கழுத்தை அறுத்தும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றதைக் கண்டதும் இப்போது ஐ எஸ் ஐ.எல்லுக்கு கொடுத்த ஆதரவை கைவிட்டுவிட்டு வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஈராக்கின் சன்னி பிரிவு தலைவர்களில் பெரும்பான்மையினருக்கு ஐ எஸ் எ எல்லின் வரவு பிடிக்கவில்லை. அவர்களும் நாங்கள் ஈராக்கியர்கள், நாங்கள் ஈராக் அரசின் பக்கம்தான் என தொலைக்காட்சிகளில் தோன்றி சொல்லிக்கொண்டு உள்ளனர். தீவிரவாதிகளை விரட்ட அரசுப்படையில் சேருங்கள் என அவர்களும், ஈராக்கை காப்பது நமது கடமை. நாளை கெர்பெலாவுக்கும், நஜஃபுக்கும் இவர்களால் கேடு விளையலாம், எனவே அரசுப்படையில் சேருங்கள் என பெரும்பான்மை ஷியா பிரிவின் மதத்தலைவர்களும் அழைப்பு விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
கெர்பலாவும், நஜஃபும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் புனிததலம் மற்றும் கல்லறைகள் உள்ள இடம். சன்னி இஸ்லாமியர்களைப் பொருத்தவரை இரண்டுமே அவர்களின் மதத்திற்கு எதிரான இணைவைக்கும் குற்றம். எனவே கெர்பலாவை அழிப்பது குறித்தும் சொல்லி இருக்கின்றனர்.
ஏகப்பட்ட ஆயுதங்கள் சவுதியில் இருந்தும், சிரியாவில் இருந்தும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. ஐ.எஸ் ஐ எல்லின் மொத்த உருப்பினர்களின் எண்ணிக்கை தோராயமாக 7000 இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதில் ஈராக்கியர்கள், சிரியா, பாலஸ்தீனம், துருக்கியைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவலை அடுத்து பெரும்பாலான துருக்கியர்கள் ஈராக்கில் இருந்து வெளியேறிவிட்டனர். எண்ணெய்துரப்பனப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க, பிரித்தானிய மக்களும் வெளியேறி வருகின்றனர். இவர்கள் வேலை செய்வதெல்லாம் சண்டை நடக்கும் இடத்திலிருந்து 700 கிலோமீட்டருக்கு அப்பால் என்றாலும் வெளியேறி வருகின்றனர்.
பொதுவாக நான் இருக்கும் பாஸ்ரா பகுதியில் ஷியாக்களின் எண்ணிக்கையே அதிகம். கிட்டத்தட்ட 90 சதவீதம். எல்லோருக்கும் இருக்கும் எரிச்சல் மீண்டும் அமெரிக்காவை உள்ளே வரவைத்துவிட்டாரே இந்த நூர் அல் மாலிக்கி என்பதாகவே இருக்கிறது. பாஸ்ராவுக்குள் இந்த ஐ.எஸ்.ஐ.எல் வரும் வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறார்கள். அதற்கு ஏற்றார்போலவே போலிஸும் பிரமாதமாக எல்லாம் சோதனை இடுவதில்லை. வழக்கம்போல பாஸ்போர்ட்டைக் காமி என்பதுடன் நிறுத்திக்கொள்கின்றனர்.
ஈராக்கிய தொலைக்காட்சிகளில் தீவிரவாத படைகளைச் சேர்ந்தோரை பிடிப்பதையும், அவர்களின் வாகனங்களை கைப்பற்றியதையும்காண்பிக்கின்றனர்.
இராக்கின் பரந்த நிலப்பரப்பில் வடக்கு பகுதி எப்போதும் பிரச்சினைக்கு உரியதாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போது அது அதன் முழு தீவிரத்துடன் வெளிவந்திருக்கிறது. அங்கிருக்கும் இந்தியர்களின் நிலைமைதான் கொஞ்சம் மோசம். பெரும்பாலான ஈராக்கியர்களுக்கு இந்தியர்கள் மீது நல்ல மதிப்பே இருக்கிறது. ஐ எஸ் ஐ எல்லின் கூட்டத்தில் ஈராக்கியர்களைத்தவிர பிற நாட்டவரும் இருப்பதால் இந்தியர்களை காஃபிர் என்ற கணக்கில் வைத்து ஏதேனும் செய்யலாம். குர்திஸ்தான் எப்போதும் அமைதியான பகுதி. கிட்டத்தட்ட துபாய்போல எல்லா வசதிகளும் நிறைந்த ஈராக்கின் தன்னாட்சிப் பகுதி. அவர்களும் இந்த தீவிரவாத கும்பல் நுழைந்துவிடாமல் இருக்க முன்னாள் ராணுவ உறுப்பினர்களையும், வாலண்டியர்களையும் படையில் சேர அழைத்துள்ளது. குர்திகளும், துருக்கியர்களும் நிறைந்த பகுதி. இந்தியர்கள் குறிப்பாய் ஆந்திர மக்கள் நிறைய வேலை செய்யும் மாநிலம் அது.
நான் இருப்பது ஈராக்கின் தென் கடைசியான பாஸ்ரா மாநிலம் அல்லது கவர்னரேட். இங்கே எல்லாம் முழு அமைதி. அங்கிருக்கும் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் திடீரென முளைக்குமா இல்லை அவர்களே பாக்தாதைத் தாண்டி இங்கே வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஏனெனில் இங்கேதான் ஈராக்கின் 70 சதவீத எண்ணெய் வளம் உள்ளது.
அமெரிக்க உதவியும், ஈராக்கிய படைகளும் சேர்ந்து அவர்களை விரட்டியடிப்பார்கள் என நம்பலாம்.
Posted by IdlyVadai at 6/25/2014 11:51:00 AM 6 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Monday, June 23, 2014
அப்பாவிற்கு லீவு தாங்க
:-)
Posted by IdlyVadai at 6/23/2014 10:03:00 AM 8 comments
Labels: செய்தி
Sunday, June 22, 2014
திரைப்பட இயக்குநர் ராமநாராயணன் - அஞ்சலி

Posted by IdlyVadai at 6/22/2014 10:24:00 PM 5 comments
Labels: அஞ்சலி
Thursday, June 19, 2014
பாஜகவில் குஷ்பு சேர்ந்தால் தப்பில்லை
குஷ்புவிற்கு தலைவர் கோச்சடையான் பாடல்வரிகளிலிருந்து சில வரிகளை ‘அட்வைஸாக’ இங்கே....
பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?
நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்
சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்
உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்…!
மாறு - மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு
அதனால் நீங்கள் பிஜேபிக்கு மாறுவது ஒன்றும் தப்பில்லை !
Posted by IdlyVadai at 6/19/2014 10:21:00 AM 6 comments
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Monday, June 16, 2014
திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்
நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது - குஷ்பு
Posted by IdlyVadai at 6/16/2014 06:53:00 PM 10 comments
Wednesday, June 11, 2014
அம்மா உப்பு !
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
Posted by IdlyVadai at 6/11/2014 04:46:00 AM 11 comments
Labels: செய்தி
Monday, June 09, 2014
மஞ்சப்பை - விமர்சனம்
ஊமை விழிகளில் விஜயகாந்த் மாதிரி பெரிய கோட்டுடன் தொப்பி இருந்தால் அவர் ஒரு Detective. கன்னத்தில் ஒரு பெரிய மச்சம் இருந்தால் அவன் ஒரு திருடன். முழுக்கை சொக்கா(பெரும்பாலும் நீல நிறம்) போட்டுக்கொண்டு ஒரு லேப்டாப் பையுடன் இருந்தால் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியார். விமலும் இந்த படத்தில் அப்படியே.
அழுக்கு கதர் சட்டை, நாலும் முழம் வேட்டி கிராமத்துக்காரர் அடையாளத்துடன் வருகிறார் ராஜ்கிரண். இவர் தான் படத்தின் அடிநாதம். இவர் இல்லை என்றால் திருப்பதி பிரதர்ஸ் திருப்பதிக்கே சென்றிருப்பார்கள்.
பிரட் டோஸ்டர் என்று நினைத்து லாப்டாப்பை அடுப்பில் வைத்து பொசுக்கும் அப்பாவியாக ‘நடிக்கிறார்’ ராஜ்கிரண். விமல் தினமும் வீட்டில் லேப்டாப் உபயோகிக்கும் போது அவர் பார்த்ததே இல்லையா ? என்ன லாஜிக் ? இத்தனைக்கும் முதல் வேலையாக சாஃப்ட்வேர் மக்கள் செய்யும் காரியம் லேப்டாபில் ஃபேஸ் புக்கில் படம் காண்பிப்பது தான் !
அந்த காலத்து எம்.ஜி.ஆர் ரசிகரான ராஜ்கிரண் Fountainல் குளிக்கிறார், துணி துவைக்கிறார், டிஷ் ஆண்ட்டனாவில் வடாம் காய போடுகிறார். காமெடியாம் ! படத்தில் உச்சகட்ட காமெடி அமெரிக்க தூதரகத்தின் முன்பு நடக்கும் கூத்து தான். ”I Dont know" என்ற மரண மொக்கை முடியலடா சாமி.
விமல் பிராஜெக்ட் முடிக்க இரவு பகலாக, இரவு பகலாக, இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக , இரவு பகலாக, இரவு பகலாக அவ்வளவு பெரிய காட்சி தேவையா ? இது என்ன டிவி சீரியலா ? கடைசியில் தாத்தவை தேடும் காட்சியும் இதே ரகம். இன்னும் கொஞ்சம் இழுத்திருந்தால் நாம் தாத்தாவாகியிருப்போம்!
பழைய கல்யாண கேசட்டில் மங்கலாக தெரியும் உருவம் மாதிரி பல இடங்களில் ஒளிப்பதிவாளர் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார். சபாஷ்!.
மாமியார் என்றால் வில்லியாக சித்தரிப்பது, மாமனார் என்றால் அன்பு, தியாகம் என்று காட்டுவது(மலையாள படத்தை தவிர:-) என்று பலகாலமாக நாம் பார்த்தது தான்( அடுத்த படம் சைவம் - நாசர் ) இந்த ஃபார்முலாவை மாற்ற முடியாது.
இவ்வளாவு இருந்தும் இந்த படம் B, Cல் நன்றாக ஓடும் - காரணம் தாத்தா செண்டிமெண்ட்.
படம் பார்க்க செல்பவர்கள் படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணி நேரம் கழித்து சென்றால் படம் ஒரு அளவு சுவாரஸியமாக இருக்கும்.
Posted by IdlyVadai at 6/09/2014 07:46:00 AM 9 comments
Friday, June 06, 2014
என்னமோ நடக்குது
இந்த முறைகேடான தொலைபேசி வழக்கு 2008 ஆம் ஆண்டே வெளிச்சத்திற்கு வந்தாலும், காங்கிரஸ் அரசின் தயவால் கிடப்பில் போடப்பட்டிருந்தது இவ்வளவு வருடங்களாக. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் முயற்சியால் இந்த வழக்கு தொடர்ந்தும் ஊத்தி மூடப்படாமல் உயிர்த்திருந்தது, தற்போது மீண்டும் கிளறப்படுகிறது.
இதனையடுத்து, தற்போது, இது தொடர்பாக சன் குழுமத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவை சிபிஐ தற்போது விசாரிக்கத் துவங்கியிருக்கிறது. இந்த முறைகேடான தொலைபேசி எக்ஸ்சேஞ்சின் மூலம், தயாநிதி மாறன், மத்திய அரசிற்கு சுமார் 440 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்பேரில், கடந்த ஆண்டின் இறுதியில் தயாநிதி மாறன் மற்றும் பி எஸ் என் எல் நிறுவனத்தின் அப்போதைய தலைமைப் பொது மேலாளர்களான ப்ரம்மதத்தன் மற்றும் எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தயாநிதி மாறனின் போட் க்ளப் வீட்டிற்கும், சன் டிவி குழும அலுவலகத்திற்கும் இடையே பதியப்பட்டுள்ள உயர்தர ஃபைபர் ஆப்டிக் கேபிள் தொடர்பில், சக்ஸேனாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், கேபிள் பதியப்பட்டது தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்களால் என்பதால், அத்துறையுடன் அதிகம் தொடர்பில்லாத தமக்கு அதிகமாக ஏதும் தெரியாதென்று, சக்ஸேனா தெரிவித்ததாகத் தெரிகிறது.
ஆரம்பகட்ட விசாரணையில், தயாநிதி மாறனின் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள 323 தொலைபேசி இணைப்புகளும், அப்போதைய பி எஸ் என் எல் பொது மேலாளர் வேலுச்சாமியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதும், மாறனின் வீட்டிலிருந்து, சன் குழும அலுவலகத்திற்கு ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
படத்தில் என்ன பேசிக்கொள்கிறார்கள் ?
Posted by IdlyVadai at 6/06/2014 04:24:00 PM 5 comments
Labels: செய்தி விமர்சனம்
Wednesday, June 04, 2014
படமும், வாழ்த்து செய்தியும் !

மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று என்றும் பெருமையுடன் அழைத்துக் கொள்ளும் பெம்மான், பெரியாரின் குருகுலச் சீடர், அண்ணாவின் அருமைத் தம்பி, லட்சோப லட்சம் உடன்பிறப்புக்களை உயிரினும் மேலாகக் கருதும் பாசமிகு நம் இனத் தலைவர் கலைஞர் அவர்கள் இன்று (3.6.2014) 91ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்;...- கீ.வீரமணி
Posted by IdlyVadai at 6/04/2014 11:52:00 AM 4 comments
Tuesday, June 03, 2014
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 3-6-2014
தேர்தல் முடிந்து எனக்கு ஏதாவது மந்திரி பதவி கிடைக்குமா என்று டெல்லி சென்றிருந்தேன். ஒண்ணும் தேறல. நமக்குத் தேவலை... ஆனால் தர்மபுரியில் வெற்றிபெற்றதுமே அன்புமணி அமைச்சர் என்று பா.ம.க-வினர் கிளப்பிவிட, பி.ஜே.பி கண்டுக்கொள்ளவில்லை. மோடி, ராஜ்நாத் சிங் இருவரையும் சந்தித்தும் ஒன்றும் நடக்கவில்லை. முன்பு இவர் அமைச்சராக இருந்த போது இவர் மேல் குற்றச்சாட்டுக்கள் இருந்தது தான் காரணமாம். ஏது எப்படியோ இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது பெரிய சந்தோஷம்.
ஒரு சந்தோஷமான செய்திக்கு பிறகு ஒரு வருத்தமான செய்தி. அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் தான். உடனே பெரிசுகள் எல்லாம் ஃபேஸ்புக், டிவிட்டரில் அம்பாசிடர் கார் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அம்பாசிடர் கார் போனதை வருத்தமாக பேசியவர்கள், மன்மோகன் சிங் போனதை சந்தோஷமாக கொண்டாடினார்கள்!.
அடுத்த சந்தோஷமான செய்தி - இன்று கலைஞருக்கு 91வது பிறந்த நாள். இந்த நல்ல நாளில் அழகிரி, ஸ்டாலின் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பெரியாரை வேண்டுவோம். எஸ்.வி.சேகர் எப்போதுமே கொஞ்சம் அட்வான்ஸ். இன்றைய பிறந்த நாள் வாழ்த்தை நேற்றே அவருக்குச் செல்லிவிட்டார். மோதியின் பதவி ஏற்பு விழாவிற்கு இவர் சென்றாரா என்று தெரியவில்லை. யாராவது கேட்டு சொல்லுங்க. இல்லை இவரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தமிழ்நாட்டிலேயே இருந்துவிட்டாரா? இன்னொரு டவுட் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் இவரை யாரும் அவ்வளவாக ஏன் கண்டுக்கொள்ளவில்லை?
ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்து மாக்கான் தவிர வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. அமைச்சராவதற்குக் கல்வித் தகுதி தேவையில்லை, ஆனால் உண்மை பேச வேண்டும்! உடனே பிஜேபி மக்கள் “'இரானியின் கல்வித் தகுதி குறித்த காங்கிரசாரின் விமர்சனங்களை சோனியா கட்டுப்படுத்த வேண்டும். அல்லது, சோனியா தனது கல்வித் தகுதிகளை வெளியிட வேண்டும்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்த ஒருவருக்கு கிடைக்காமல் போனது - சுப்பிரமணியன் சுவாமி. எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை என்றாலும் அவர் நிதி அமைச்சராக ஆகிறார், வர்த்தகத் துறை அமைச்சர் ஆகிறார் என்று கடந்த சில நாட்களாக அவரின் ட்விட்டரடிபொடிகளிடமிருந்து வந்தபடியிருந்தது. ஆனால் மோதி இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு சுசாவை இன்று வரை எட்டவே வைத்துள்ளார்.
இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டு மோதி செய்த இன்னொரு நல்ல விஷயம் தன் பதவி ஏற்பு விழாவிற்கு அண்டை நாட்டு தலைவர்களை அழைத்தது. தமிழகத்தில் அடிச்ச அக்னிவெயில் மாதிரி மோதி பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்ஷே வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் நாட்டு தலைவர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் செய்து சூடாக அவர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். வெயிலின் சூடினால் வற்றல் காயும், இவர்களின் சூடால் ஒன்றும் ஆக போவதில்லை, சும்மா நாங்களும் எதிர்த்தோம் பதிவு செய்தார்கள். அவ்வளவு தான்.
ஒரு முன்னாள் பிரதமர் மோதி ஜெயித்தால் நாட்டை விட்டு வெளியே செல்வேன் என்று சவால் விட்டார். ஆனால் மோதி பதவி ஏற்ப்பு விழாவில் முதல் வரிசையில் இருந்தார். இந்த மாதிரிக் கேவலமாகச் சவால்விடலாமா என்று கேட்கலாம். ஆனால் சோனியா பிரதமர் ஆனால் என் தலையை மொட்டை அடித்துக்கொள்வேன் என்று முன்னாள் எதிர்கட்சி தலைவர் விட்ட சவாலைக் காட்டிலும் இது தேவலாம்.
ராசி கட்டம் எல்லாம் போலி என்று பேசுபவர்கள் இந்த வீடியோவைப் பார்க்கவும்!
எச்சரிக்கை: இட்லிவடை ஒரு பிரேக்கு பிறகு மீண்டும் வருகிறது..
Posted by IdlyVadai at 6/03/2014 10:08:00 PM 5 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்