தேர்தல் சமயத்தில் இந்த செய்தியை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. கலைஞர் டிவி முன்னாள் மேலாண் இயக்குநர் சரத்குமார் சிபிஐ நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்தார் அதில் அவர் கூறியிருப்பது:
"2007-ஆம் ஆண்டு டிசம்பரில் மாறன் சகோதரர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது கலைஞர் டிவி தொடங்கப்பட்டபோது, அதன் நிர்வாக இயக்குநராகச் சேர்ந்தேன். இந் நிலையில், 2008-ஆம் ஆண்டில் மீண்டும் மாறன் சகோதரர்கள், கருணாநிதி குடும்பத்தாருடன் சேர்ந்தனர். அப்போது, என்னை மாறன் சகோதரர்கள் உடல் ரீதியாகத் தாக்கினர். அதில் எனது காலில் முறிவு ஏற்பட்டது.( அந்த சமயத்தில் தமிழகத்தில் கலைஞர் ஆட்சி தான் நடைப்பெற்றது. ஏன் ஒரு போலீஸ் கேஸ் கூட பதிவாகவில்லை ? )
தயாளு அம்மாள்தான் கலைஞர் டிவியின் 60 சதவீத பங்குதாரர். அவரது அறிவுரையின்படியே நான் முக்கிய முடிவுகளைச் செயல்படுத்தினேன். தயாளு அம்மாள் சார்பில் அவரது கருத்துகளைத்தான் கலைஞர் டிவி நிர்வாக குழு கூட்டங்களில் முன்மொழிந்தேன். நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.
சிபிஐ குற்றம்சாட்டியுள்ள ரூ. 200 கோடி தொடர்பான கலைஞர் டிவி நிதிப் பரிவர்த்தனை எனது கவனத்துக்கு உள்பட்டே நடைபெற்றது. அது சட்டப்பூர்வமான பரிவர்த்தனை. நான் அறிந்தவரை அப் பரிவர்த்தனையில் முறைகேடு எதுவும் கிடையாது. முறைப்படி வங்கிகள் மூலம்தான் பணம் கொடுக்கல் வாங்கலும் நடைபெற்றது. வரம்புக்கு உள்பட்டே நான் செயல்பட்டேன்.
அவை அனைத்தும் தயாளு அம்மாளுக்கு தெரிந்தே நடைபெற்றது. அதில் மறைக்க எதுவும் கிடையாது' என்றார் சரத்குமார்.
சங்கமித்திரன் என்ற அரசன் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு குரங்குகள் என்றால் மிகவும் பிரியம். ஆகையால் தன் அறைக்குள்ளேயே ஒரு குரங்கை வளர்த்து வந்தான். தன் படுக்கையறைக்குள் வருமளவுக்குச் சுதந்திரம் அளித்து வைத்திருந்தான் சங்கமித்திரன்.
ஒரு நாள் அரசவையில் அதன் அட்டகாசம் தாங்காது அமைச்சர்களும் மற்றவர்களும் குரங்கின் நட்பை விட்டுவிடுமாறு கூறினார்கள். அவர்களது அறிவுரையை ஏற்கவும் மறுத்தான் சங்கமித்திரன்.
ஒரு நாள் இரவில் தான் தூங்கப் போகும் போது குரங்கை தனக்கு விசிறி விடுமாறு சொல்லிவிட்டு ஆழ்ந்து தூங்கிப் போனான் அரசன். அப்போது ஒரு ஈ ஒன்று அவன் கழுத்தில் வந்து அமர்ந்தது. விசிறியால் மீண்டும் மீண்டும் விசிறியும் ஈ பறக்காமல் அமர்ந்திருந்தது. இதனால் கோபம் கொண்ட குரங்கு, "உன்னைக் கொன்று விடுகிறேன் பார்" என்று சொல்லி அரசனின் வாளால் அரசனின் கழுத்தில் அமர்ந்திருந்த ஈயை வெட்ட வாளை ஓங்கி வீசியது. அரசனின் கழுத்து துண்டானது.
கூடா நட்பு கேடாய் முடியும்.
குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
மீண்டும் மீண்டும் ஆராயாமல் கொள்கிற நட்பு, கடைசியில் ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.