மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து நரேந்திர மோடி பிரதமராவதுதான், நாட்டில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வழி செய்யும் – என்ற என் கருத்தை பலமுறை சொல்லியாகி விட்டது. வருகிற தேர்தல் பற்றிய தலையங்கங்களிலும் இதை நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
பா.ஜ.க.வே பாராளுமன்றத்தில் தனி மெஜாரிட்டி பெறுகிற அளவில் நாடெங்கும் வெற்றிகளைப் பெற்று விட்டால், அது சிறப்பான முடிவாக இருக்கும். ஆனால், அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவு. பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மெஜாரிட்டி பலம் பெறுகிற வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்தால், தேர்தலுக்குப் பின் வேறு கட்சிகளின் ஆதரவைக் கோருகிற அவசியம் பா.ஜ.க.விற்கு இருக்காது. மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி இருப்பதற்குள் பெரிய அணி என்ற அளவில் மட்டுமே வெற்றிகளைப் பெற்றால், ஆட்சி அமைக்க, தனது கூட்டணியில் இடம் பெறாத கட்சிகள் சிலவற்றின் ஆதரவு பா.ஜ.க.விற்குத் தேவைப்படும்.
இந்தப் பின்னணியில் தமிழக நிலவரத்தைப் பார்ப்போம். இங்கே, காங்கிரஸும் இடதுசாரிகளும் கடைசி இடத்திற்குப் போட்டியிடுகின்றன; இவர்களில் ஒரு சிலருக்குக் கூட டெபாஸிட் கிடைக்காது. ஆகையால் அக்கட்சிகள் அனுதாபத்திற்குரியவையே தவிர, அலசலுக்கும் ஆராய்ச்சிக்கும் உரியவை அல்ல.
பா.ஜ.க. கூட்டணியை எடுத்துக் கொண்டால், அதில் ம.தி.மு.க.வின் புலி ஆதரவு நம்மை விரட்டுகிறது; பா.ம.க.வின் ஜாதி அரசியல் நம்மைத் துரத்துகிறது; தே.மு.தி.க.வின் தெளிவற்ற அரசியலும் தேக்க நிலையும் நமக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பா.ஜ.க.விற்குச் சில தொகுதிகளில் நல்ல வாய்ப்பு இருக்கிறது; சிலவற்றில் இல்லை. ஆகையால், பா.ஜ.க.விற்கு நல்ல வாய்ப்புள்ள தொகுதிகளில் அதற்கு வாக்களித்து, அக்கட்சியின் வெற்றியை உறுதி செய்ய உதவலாம்; மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றன. இது வாய்ப்புள்ள தொகுதிகளில் பா.ஜ.க.வின் வெற்றியை நிச்சயமாக்கும் என்று எதிர்பார்க்கலாம். மற்றபடி அந்தக் கூட்டணி, வாக்குகளைப் பிளந்து தி.மு.க.விற்குத்தான் உதவும் என்பதால், அம்மாதிரி வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்து, தி.மு.க.வைப் பார்க்க வேண்டும். ‘துக்ளக்’ நிருபர்கள் சில ஆயிரக்கணக்கான மக்களை, சுமார் இருபத்தைந்து தொகுதிகளில் சந்தித்துப் பேசியதிலிருந்து, தி.மு.க. பல தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு கடும் போட்டியைத் தரக் கூடிய அளவில் இருக்கிறது என்று தோன்றுகிறது.
தி.மு.க.வை வளர விடுவது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல என்ற என் கருத்தை நான் பலமுறை ‘துக்ளக்’கிலும், ஆண்டு விழாக்களிலும் விளக்கியிருக்கிறேன். ஆனால், அந்த நிலை தோன்றவில்லை; தி.மு.க. கூட்டணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கக் கூடிய அளவில் ஆதரவு உள்ள கட்சியாகத் தெரிகிறது.
தி.மு.க. மோடியை ஏற்கவில்லை; பா.ஜ.க.வை ஏற்கவில்லை. ‘பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மதவெறி பெரிதாகத் தோன்றும்’ என்று ஸ்டாலின் பேசி வருகிறார். கலைஞரோ மோடியைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து, பா.ஜ.க.வை எதிர்க்கிறார். ஆகையால், பா.ஜ.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய தி.மு.க. ஆதரவு தராது.
‘இது தேர்தலுக்குப் பிறகு மாறும்; பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க, மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டால் தி.மு.க. தனது நிலையை மாற்றிக் கொண்டு பா.ஜ.க. கூட்டணியில் இணையும்’ என்று சிலர் நினைக்கலாம். அது மாதிரி நடந்தால், சேது சமுத்திரத் திட்டத்திலிருந்து பல விஷயங்களில் உரசல்கள் வரும்; காங்கிரஸ் ஆட்சியில் குடும்பத்தினருக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தை, பா.ஜ.க. ஆட்சியிலும் கலைஞர் எதிர்பார்ப்பார்; 2ஜி ஊழல் பற்றி மிகக் கடுமையாகப் பேசி வந்துள்ள பா.ஜ.க., இப்போது மாறுவது ஏன் என்ற நியாயமான விமர்சனம் எழும்.
ஆகையால், இப்போது தி.மு.க. கூறி வருவது போலவே, பா.ஜ.க. கூட்டணிக்கு தேர்தலுக்குப் பின் தி.மு.க. ஆதரவு என்ற பேச்சுக்கு இடமில்லை.
அடுத்து அ.தி.மு.க.வின் நிலையைப் பார்த்தால், அது தனித்துப் போட்டியிடுகிறது. இந்த தனித்துப் போட்டி, பா.ஜ.க.விற்கு எதிரானது என்று கூற முடியாது. ‘பா.ஜ.க.வை ஏன் விமர்சிக்கவில்லை? ரகசிய உறவுதானே காரணம்?’ என்று காங்கிரஸும், தி.மு.க.வும் தினமும் பிரசாரம் செய்தும் கூட, பல கூட்டங்களில் பேசி விட்ட தமிழக முதல்வர், இதுவரை பா.ஜ.க.வை எதிர்த்து எதுவுமே கூறவில்லை. இனியும் கூட, தேர்தல் பிரசாரங்களில் சூடு ஏற ஏற, அவர் பா.ஜ.க.வைப் பற்றி ஏதாவது குறை கூறினாலும், அது சம்பிரதாய எதிர்ப்பாகத்தான் இருக்குமே தவிர, ‘மதவெறி’ என்ற அபத்தமாக இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
இதற்கு ரகசிய உறவு எதுவும் காரணமல்ல. மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்று வலியுறுத்திப் பேசுகிற முதல்வர், அப்படி ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய சூழ்நிலை வருகிறபோது, தனது கட்சியின் நிலை என்ன என்பதையும் யோசித்துப் பார்ப்பார். ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு வருகிறபோது, அது நடந்தேற தன் கட்சியின் உதவி தேவைப்பட்டால் அதைத் தர வேண்டும் – என்ற முடிவுதான் அவர் மனதில் தோன்றியிருக்கும்.
இது யூகமாக இருந்தாலும், பா.ஜ.க.வைப் பற்றியோ, அதன் கூட்டணியைப் பற்றியோ விமர்சிக்காமலே, முதல்வர் பிரசாரம் செய்து வருவதற்கு இதைத் தவிர வேறு காரணம் எதையும் காட்ட முடியாது. பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. கணிசமான இடங்களைப் பெறுவது, பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கு மட்டுமல்லாமல் – இன்றைய மத்திய அரசின் புறக்கணிப்பினால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இடைஞ்சல்களையும் நீக்கிக் கொள்ள முடியும்.
இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறபோது, இந்தத் தேர்தலில் தமிழகத்தில், பா.ஜ.க.விற்கு வெற்றி வாய்ப்பு இருக்கிற இடங்களில் அதை உறுதி செய்கிற வகையில் பா.ஜ.க.விற்கும், மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கும் வாக்களிப்பது, மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைய உதவும் என்ற முடிவிற்கே, சிந்தனையுள்ள வாக்காளர்கள் வர முடியும் என்று நான் கருதுகிறேன்.
தி.மு.க. மீண்டும் பாராளுமன்றத்தில் கணிசமான இடங்களைப் பெறுவது ஒரு குடும்பத்திற்கு உதவுமே தவிர, மாநிலத்திற்கு உதவாது என்பதால், அக்கட்சியைத் தவிர்த்து விட்டு; காங்கிரஸும், இடதுசாரிகளும் டெபாஸிட் பெறவே போராடப் போவதால், அவர்களை வாழ்த்தி விட்டு; பல தொகுதிகளில் ஓட்டுப் பிளவிற்கு உதவி, அதன் மூலம் தி.மு.க.விற்கு உதவி விடக் கூடிய பா.ஜ.க. அணியை அம்மாதிரி தொகுதிகளில் தவிர்த்து விட்டு; அ.தி.மு.க. அணிக்கு வாக்களிப்பது, மத்திய ஆட்சி மாற்றத்திற்கும் உதவி, மாநிலத்தில் தி.மு.க. மீண்டும் வளர்ச்சி பெறாமல் இருக்கவும் உதவும்.
இந்தப் பகுதியில் நான் எழுதியுள்ள கருத்துக்கும், முன்பு இதே தேர்தல் பற்றி கேள்வி - பதிலில் நான் கூறிய பதில்களுக்கும் சிறிய வித்தியாசம் இருந்தால், அதற்குக் காரணம், நமது நிருபர்கள், ஆயிரக்கணக்கில் வாக்காளர்களைச் சந்தித்து அறிந்து வந்த மக்கள் கருத்துகள்தான்.
‘துக்ளக்’ ஜனநாயகப் பத்திரிகை, அதனால் மக்கள் கருத்துக்கு 16.66 சதவிகிதப் பங்கு; நிருபர்கள் கருத்துக்கு 16.66 சதவிகிதப் பங்கு; ‘துக்ளக்’ ஆசிரியரின் கருத்துக்கு 16.66 சதவிகிதப் பங்கு; இந்தக் கட்டுரையாளருக்கு 16.66 சதவிகிதப் பங்கு; எனக்கு 16.66 சதவிகிதப் பங்கு; இப்பத்திரிகையுடன் ஆரம்பத்திலிருந்து தொடர்பு வைத்துள்ள ‘சோ’விற்கு 16.66 சதவிகிதப் பங்கு – என்று சம அளவில் வாய்ப்பளித்து எழுதப்பட்ட இந்த பரிசுத்த ஜனநாயகக் கட்டுரைக்கு வாசகர்கள் மதிப்பளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்த இதழுக்கான வேலைகள் முடிகிறபோது, கிடைத்த தகவலின்படி, ‘காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டையும் டெபாஸிட் இழக்கச் செய்ய வேண்டும்’ என்று தமிழக முதல்வர் தனது பிரசாரத்தில் பேசியதாகத் தெரிகிறது. இப்படி காங்கிரஸுடன், பா.ஜ.க.வையும் இணைத்து அவர் பேசியது துரதிர்ஷ்டவசமானது; வருந்தத்தக்கது. இந்த அணுகுமுறையை நாம் சற்றும் ஏற்கவில்லை.
- சோ
Read More...
Collapse...