நாட்டு நடப்புகள் குறித்து துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் கருத்துக்கள் படித்த, நடுத்தர வர்க்கத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் அழுத்தமானதும், பரவலானதும் ஆகும். ஒரு பிரச்னையில் அவரது நிலைப்பாட்டுக்கு நேர் எதிராக உள்ளவர்கள் கூட ‘சோ’ என்ன சொல்கிறார் என்று உற்று கவனிப்பது உண்டு. மக்களவைத் தேர்தல் களம் கொதி நிலையை அடைந்து வரும் இன்றைய சூழலில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு, கூட்டணிகளின் நிலைப்பாடு, கட்சிகளின் பிரசாரம் உட்பட பல விஷயங்கள் தொடர்பாகப் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ் மற்றும் சிறப்புச் செய்தியாளர் ப்ரியன் ஆகியோரின் கேள்விகளுக்கு இங்கே தனது பளிச் பதில்களைப் பதிவு செய்கிறார் சோ.
பா.ஜ.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும், தமிழகத்தில் கூட்டணி அமைக்க வேண்டுமென்று நீங்கள் தீவிரமாக முயன்றதாகத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தனவே!
இது குறித்து நான் தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் துக்ளக்கில் இந்தக் கூட்டணி அமைய வேண்டும் என்று எழுதி வந்திருக்கிறேன்."
தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பா.ஜ.க. இடங்களைப் பிரிப்பதற்கும், தொகுதிகளை ஒதுக்குவதற்கும் படாதபாடு படுகிறதே?
தே.மு.தி.க.வும், பா.ம.க.வும் பல விஷயங்களில் நேர் எதிரான கருத்துக்களைக் கொண்டவை. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே எப்போதும் உரசல்கள் இருந்து கொண்டே இருந்தன. இந்த இரண்டையும் கூட்டணிக்குக் கொண்டு வந்ததே பா.ஜ.க.வின் பெரிய சாதனைதான்."
மோடி மீதுள்ள 2002 கலவரக்கறை இன்னமும் அகற்றப்படவில்லையே!
இந்தக் கலவரம் குறித்து பல்வேறு நீதிமன்ற மட்டங்களில் ஏகப்பட்ட விசாரணைகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள், தங்கள் அரசியல் லாபத்துக்காகவும், சிறுபான்மையினரின் வோட்டுக்காகவும், தொடர்ந்து இது குறித்து மோடியை விமர்சித்து வருகிறார்கள்."
குஜராத்தின் வளர்ச்சி குறித்து ஒரு பக்கம் ‘ஓஹோ’ என்று பாராட்டும் போக்கும் ‘எல்லாம் மீடியாவின் கட்டுக்கதை’ என்ற விமர்சனமும் வருகிறதே?
குஜராத்தில் வளர்ச்சியே இல்லை என்று சொல்வது பொய். அந்த மாநிலத்தில் நடந்த வளர்ச்சியை எல்லோரும் பார்க்கிறார்கள்; பாராட்டுகிறார்கள்.
நீங்கள் (கல்கி) போய் பார்த்து விட்டு வந்து எழுதினீர்கள். நாங்களும் (துக்ளக்) பார்த்துவிட்டு வந்தோம். மோடி தலைமையில் குஜராத்தின் வளர்ச்சி குறித்து பல வருடங்களாகப் பேசப்பட்டு, எழுதப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு இப்போது விமர்சனம் வைக்கப்படுகிறது."
அரசியல் சட்டம் 370, ராமர் கோயில், பொது சிவில் சட்டம் ஆகியவற்றைக் குறித்த கருத்தை பா.ஜ.க. தேர்தலையொட்டி தெளிவுபடுத்த வேண்டும் என்று சிதம்பரம் சொல்கிறாரே!
இந்தச் சர்ச்சைக்குரிய பிரச்னைகளைப் பற்றி பலமுறை பா.ஜ.க. சொல்லியிருக்கிறது. பா.ஜ.க. தனித்தே பெரும்பான்மை பெறும்போதுதான் இவை குறித்த மேல் நடவடிக்கைகள் எடுப்போம் என்றும் கூட்டணி அரசை நடத்தும்போது இவை குறித்து பேச மாட்டோம் என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு."
பா.ஜ.க. தனித்தே பெரும்பான்மை பெற வாய்ப்பிருக்கிறதா?
நாடு முழுவதும் மோடியின் தாக்கம் இருப்பதால் கூடுதலாக வோட்டு கிடைக்கும். பா.ஜ.க. தனித்தே பெரும்பான்மை பெற்று விடும் என்று நம்புவதற்கு ஏற்ற சூழல் இன்னமும் உருவாகவில்லை."
காங்கிரஸ் மீது பா.ஜ.க. வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு: ஊழல். இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எடியூரப்பா, ஸ்ரீநிவாசலு போன்றவர்களை கட்சி யில் இணைத்துக் கொள்ளும் பா.ஜ. க.வுக்கு தார்மிக ரீதியில் காங்கிரஸை குற்றம்சாட்ட உரிமையிருக்கிறதா?
ஊழல் குற்றச்சாட்டுக்களைப் பொறுத்தமட்டில் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்காத வரை ஒருவரை குற்றவாளி என்று சொல்ல முடியாது. கனிமொழி கைதானபோது இதைத்தான் எழுதியிருக்கிறேன். ஆனால் அதேசமயம் வலுவான புகார்கள் எழுப்பப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ஏஜென்ஸிகள் விசாரணை செய்யும்போது மீடியாக்களும், எதிர்கட்சியினரும் அந்த ஊழல்கள் குறித்து பேசத்தான் செய்வார்கள். இதைத் தவறு என்று சொல்ல முடியாது. பா.ஜ.க.வில் மேல்மட்டத் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கிடையாது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தலைவர்கள் கட்சியில் இணைவதை மக்கள் அனுமதித்தால் நாம் என்ன செய்ய முடியும்?"
மோடி குறித்து சிறுபான்மையோரிடம் ஒரு அச்ச உணர்வு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
அவர்களிடம் எந்தப் பயமும் இருப்பது போன்று எனக்குத் தெரியவில்லை. குஜராத்தில் இஸ்லாமியர்களும் ஏற்றுக் கொள்ளும் முதல்வராகத்தான் மோடி இருக்கிறார். நீதிபதி சச்சார் கூட குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு மோடி அரசு செய்துள்ளவைகளை பாராட்டியிருக்கிறார். ஆனால் குஜராத்தைத் தவிர நாட்டில் வேறெங்கும் சிறுபான்மையோரின் வோட்டு பா.ஜ.க.வுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. மோடி தலைமையில் வரும் காலத்தில் மத்திய அரசு அமையுமானால் நாடு முழுவதும் சிறுபான்மையோரிடம் இப்போதுள்ள கண்ணோட்டம் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு."
பெரும்பான்மை சமூகத்தின் வோட்டுக்களை ஒட்டுமொத்தமாக அள்ள சிறுபான்மையோரை டார்கட் செய்யும் யுக்தியை பா.ஜ.க. கடைப்பிடிக்கிறதா?
இதுபோன்ற யுக்தியால் பெரும்பான்மை வோட்டுக்களை கணிசமாக பெற முடியாது. பெரும்பான்மை வோட்டு என்பது, ஜாதி, சமயம், பிராந்திய உணர்வுகளால் தூண்டப்பட்டு, பல திசைகளாகத்தான் பிரியும். ஒரே திசையில் போகும் என்று சொல்ல முடியாது."
ஜெயலலிதா தனது பிரசாரத்தில் காங்கிரஸை காய்ச்சி எடுக்கிறாரே தவிர பிரதமர் வேட்பாளர் ஆன மோடி பற்றியோ, பா.ஜ.க. பற்றியோ எதுவும் பேசுவதில்லையே?
ஏன் பேச வேண்டும்? பத்தாண்டு காலம் இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸின் செயல்பாடுகளை விமர்சிப்பதுதானே சரியான அணுகுமுறையாக இருக்கக்கூடும்."
ஒருவேளை, தேர்தலுக்குப் பிறகு எது போன்ற சூழல் உருவாகும் என்பது புதிராக இருப்பதால், பா.ஜ.க. குறித்த விமர்சனத்தைத் தவிர்க்கிறாரா ஜெயலலிதா?
தேர்தலுக்குப் பிறகு யார் எங்கு போவார் என்பதை ஊகிக்க முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு வருமானால் மோடியே பிரதமராக வேண்டும். ஏதேனும் காரணங்களால் இது நடக்காமல் போனால், பிரதமர் பதவிக்கு ஜெயலலிதாவை பரிந்துரைத்து பா.ஜ.க. ஆதரவு கொடுக்க வேண்டும். இந்தக் கருத்தை முன்பே நான் சொல்லியிருக்கிறேன்."
ஈழப் பிரச்னையில், பொது வாக்கெடுப்பு, ராஜபட்சே மீது விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை என்று தீவிரமாகச் செயல்படுகிறார் ஜெ. ராஜீவ் கொலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னவுடன் ஏழு கைதிகளை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கிறார். தேர்தலில் ஆதரவைக் கூட்டுவதுதான் இந்த தீவிர செயல்பாடுகளின் நோக்கமாக இருக்குமோ?
நீங்கள் பட்டியலிட்ட ஜெயலலிதாவின் இந்த எல்லா செயல்பாடுகளிலும், என் சிந்தனை நேர் விரோதம். அடுத்து தமிழ்நாட்டில் ஈழப்பிரச்னை ஒரு தேர்தல் பிரச்னை கிடையாது. அப்படியிருந்தால் வைகோ, தனது வோட்டு சதவிகிதத்தை உயர்த்திக் கொண்டு முதல்வராகியிருக்கலாமே. ஈழத் தமிழர்கள் மீது தமிழ்நாட்டு தமிழர்களுக்கு அனுதாபம் உண்டு; பரிவு உண்டு. அவர்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற ஏக்கம் உண்டு."
பத்தாண்டு காலம் மத்திய அரசில் இருந்த நாங்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லும் ஜெயலலிதா 1998-99ல் ஒரு வருடம் பா.ஜ.க. அமைச்சரவையில் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு செய்ததென்ன என்று கேட்கிறாரே ஸ்டாலின்?
தி.மு.க. செய்த கெடுதல்கள் காரணமாக, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியும், நியாயமும், ஒத்துழைப்பும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கவில்லை. எனவே தான் மத்திய அரசில் முக்கிய பங்களிப்பை பெறும் வகையில் மக்களவைத் தேர்தலில் வெற்றியை அளிக்குமாறு மக்களை வேண்டுகிறார் ஜெயலலிதா. பத்து வருடம் மத்திய அரசில் இருந்து உருப்படியாக எதுவும் செய்யாத தி.மு.க. ஒரு வருடமே பங்கு பெற்ற ஜெயலலிதாவைப் பார்த்து கேள்வி கேக்கற உரிமை இல்லை."
தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி?
இந்தத் தேர்தலில் பெரிய தோல்வியை தி.மு.க. சந்திக்கும். ஆனால் கட்சி இருக்கும்; மறையாது."
தி.மு.க. தோல்விக்கு அழகிரியும் காரணமாக இருப்பாரோ?
தென் மாவட்டங்களில் தி.மு.க.வின் தோல்விக்கு அழகிரி விவகாரம் ஒரு காரணமாக இருக்கக்கூடும்."
தமிழ்நாட்டில் மோடி அலை அடிப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் சொல்கிறார்களே!
மோடி அலையில்லை; ஆனால் தாக்கம் உண்டு."
நன்றி: கல்கி