”உண்ட மயக்கம் குண்டருக்கும் உண்டு” என்று சும்மாவா சொன்னார்கள்!
”மார்கழிப் பொங்கல்
மடி நிறையப் பொங்கல்
சுடச் சுடப் பொங்கல்
சுந்தரப் பொங்கல்” - என்று கன்னா பின்னாவாக அபார்ட்மெண்ட்டின் எல்லார் வீட்டுப் பொங்கலையும் தின்று ’பேஸ்த்’ அடித்துக் கிடந்த எனக்கு, புத்தகக் காட்சிக்குப் போனால் என்ன என்று திடீரெனத் தோன்றியது. உடன் புறப்பட்டு விட்டேன்.
புத்தக ஆசையில் தெருக்கோடிக்கு வந்ததும் ஆட்டோ ஒன்று கண்ணில் பட்டது.
”வாங்க சார்” என்ற ஆட்டோ ட்ரைவர் பலத்த போதையிலிருப்பதாகப் பட்டது. தயங்கியவாறே ஏறி உட்கார்ந்தேன். ஆட்டோவில் எல்லாம் சாமிப் படங்களின் ஸ்டிக்கரையும் ஒட்டி வைத்திருந்தார். ”நீதான் சார் ஃபர்ஸ்ட்” என்றவாறே ஆட்டோவைக் கிளப்பினார். உடன் நான் சொல்லாமலே மீட்டரையும் போட்டு விட்டு, ”எங்க சார் போகணும்?” என்றார்.
YMCA மைதானத்திற்கு வந்து இறங்கியபோது மீட்டர் 110.00 காட்டியது. மனதுக்குள் ஆச்சரியப்பட்டவாறே பர்ஸைத் திறந்தேன்.
“எதுனா போட்டுக் கொடு சார், பொங்கலு அதுவுமா?” என்றவருக்காக ஒரு 10 ரூபாயை சேர்த்துக் கொடுத்தேன்.
ஏதோ முணுமுணுத்தவாறே வாங்கிக் கொண்டார். (வேறென்ன, சாவுக்கிராக்கி என்று திட்டியிருப்பார்..)
சாரி Sarei ஆகக் கூட்டம் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. நானும் பின்பற்றி நடக்கத் துவங்கினேன்.
கொஞ்ச தூரம் நடந்ததுமே கால் வலிக்க ஆரம்பித்தது. மூச்சிரைத்தது. அட, க்யூவில் வேறு நிற்க வேண்டும், அப்புறம் உள்ளே ஸ்டால் ஸ்டாலாக நடக்க வேறு வேண்டுமே என்று சலிப்பாக இருந்தது.
பொம்மை விற்பவர்கள், பபிள்ஸ் விற்பவர்கள், ஸ்டிக்கர், பொட்டு, பிளாஸ்டிக் சாமான் விற்பவர்கள், தேங்கா, மாங்கா பட்டாணி சுண்டல் விற்பவர்களைக் கடந்து அரங்கம் அருகே சென்றேன்.
டிக்கெட் கவுண்டரில் கூட்டமே இல்லை. ஆச்சரியமாக இருந்தது. அப்புறம் தான் தெரிந்தது, வந்த கூட்டம் எல்லாம் உணவகத்தை நோக்கியும், அதற்கு அப்புறமும் சென்று கொண்டிருக்கிறது என்பது. சிலர் மாங்கா, தேங்கா, பட்டாணி சுண்டலை வாங்கி ஆங்காங்கே நிழலில் உட்கார்ந்து கொண்டனர்.
”கலகம் வாள வேண்டும்; களகம் வால வேண்டும்” என்று எங்கிருந்தோ சப்தம் வந்தது. திரும்பிப் பார்த்தபோது அது பக்கத்தில் இருந்த அரங்கிலிருந்து என்பது தெரிந்தது. அங்கே சென்று பார்த்தேன். மேடையில் கருப்புச் சட்டை அணிந்து 4, 5 பேர் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு எதிரே 5, 6 பேர் அமர்ந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பேச்சாளர், “ கலகத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும். களகத்தை வளர்க்க வேண்டும். கரை வேட்டியை விட்டா தமிழ்நாட்டுக்கு யார்யா இருக்கா?” என்று பேசிக் கொண்டிருந்தார். திடீரென ”இந்தப் புத்தகச் சந்தையைக் கொண்டு வந்தது யார், இங்கே சீரும் சிறப்புமாக இந்தப் புத்தகச் சந்தை நடக்க யார் காரணம்?” என்று கேள்வி எழுப்பினார். ”வேறு யார்? நல்லிச் செட்டியாரும் பபாஸியும் தானே”என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, “இங்கே இவ்வளவு சிறப்பாக இந்தப் புத்தகச் சந்தை நடக்கக் காரணம் பெரியார். பெரியார் இல்லாவிட்டால் இந்தப் புத்தகச் சந்தை ஏது?” என்று அவர் உரத்த குரலில் கத்த ஆரம்பித்ததும் எனக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது.
உடன் சற்றுத் தள்ளி இருந்த, கூண்டு போன்ற பகுதிக்குப் போனேன். அங்கே சிலர் க்யூவில் நின்று கொண்டிருந்தனர். “அட, இதற்கும் க்யூவா? ஒரு வேளை கட்டணக் கழிப்பிடமோ என நினைத்து எட்டிப் பார்த்தபோதுதான் அது ஏடிஎம் என்பது புரிந்தது. ’சே’ என்று என்னையே நொந்து கொண்டு, செக்யூரிடியிடம் விசாரித்து எதிர்த்த பக்கம் நகரத் துவங்கிய போதுதான் அவரைப் பார்த்தேன்.
ஒயிட் அண்ட் ஒயிட் நல்லப்பன்... sorry இவர் அவரல்ல. ஒயிட் அண்ட் ஒயிட்டில் இருந்த இவரை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அவரைப் பார்த்த அந்தக் கணத்திலேயே ”இஞ்சிச்சாறு” குடித்த மாதிரி என் வயிற்றுவலியும் உடன் சரியாகி விட்டது. அவர் அவசர அவசரமாக கவுண்டரில் டிக்கெட்டை வாங்கிச் செல்ல, நானும் டிக்கெட்டை வாங்கி அவரைப் பின் தொடர்ந்தேன். ”அட, இவர் ஓரிரு நாள் முன்பு டிவியில் வந்தாரே, எழுத்தாளர் அல்லவா, நல்ல பேராயிற்றே” என்று நினைத்தேன். ஞாபகத்திற்கு வரவில்லை. ”அட இவருடன் சேர்ந்து ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொள்ளலாம். மனைவியிடம், பேரன்களின் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்ளலாமே” என்று நினைத்து “சார், சாரே.. சாரூ..”என்று அவரைக் கூப்பிட நினைத்தேன். ஆனால் அவர் அதற்குள் ’சர்’ன்று உள்நுழைந்து ‘சரக்கென்று’ காணாமல் போயிருந்தார். எந்த வரிசையில் நுழைந்தார் என்பது தெரியாததால் அவரைப் பின் தொடர்வதை விட்டு விட்டு நான் ஸ்டால்களைப் பார்வையிட ஆரம்பித்தேன்.
ஸ்டால்களுக்கெல்லாம் நல்ல தமிழில் “ வ.சுப. மாணிக்கனார் பாதை”, ”மா. இராசமாணிக்கனார் பாதை”, “காவியக் கவிஞர் வாலி பாதை” என்றெல்லாம் தூய தமிழில் பெயர் வைத்திருந்தார்கள். ஆனாலும் எனக்கென்னவோ அது சற்று ஓர வஞ்சகமாகப் பட்டது. (அடுத்த முறை பெயர் வைக்கும்போது கி.வா.ஜ. பாதை (அ) உ.வே.சா. பாதை, வீரமாமுனிவர் பாதை, வள்ளல் பாண்டித்துரை பாதை, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பாதை, சார்லஸ் டிக்கன்ஸ் பாதை, கல்கி பாதை, பாப்லோ நெரூடா பாதை என்றெல்லாம் வைக்க வேண்டும் என்று பபாஸிக்கு இதன் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்)
மக்கள் கூட்டம் கூட்டமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இருபுறம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார்களே தவிர, யாரும் ஸ்டாலுக்குள் செல்லவில்லை. அப்படியே சென்றவர்களும் உடன் வேகமாகத் திரும்பி வந்து விட்டனர். இதற்கு புத்தகங்களின் விலை காரணமா அல்லது அவர்கள் தேவைக்கேற்றவாறு புத்தகங்கள் இல்லாதது காரணமா என்பதை பதிப்பாளர்களும் எழுத்தாளர்களுமே முடிவு செய்யட்டும்.
மனுஷ்யபுத்திரன் உயிர்மை ஸ்டாலில் சில அழகான பெண்களுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி சிலர் நின்று அதை உற்சாகமற்று (அல்லது பொறாமையுடன்) கவனித்துக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே சில திரைப்படத்துறையினரை, இளம், முதும் எழுத்தாளர்களை, அரசியல்வாதிகளைப் பார்க்க முடிந்தது.
மற்றபடி இந்த முறை பபாஸியின் ஏற்பாடுகள் எதையும் குறை சொல்ல முடியவில்லை. ஆங்காங்கே தண்ணீர் கேன்களை வைத்திருந்தனர். அதை மாற்றிப் பராமரிக்கவும் ஆட்கள் இருந்தனர்.
பாதைகள் நல்ல அகலமாக இருந்தன. ஓரமாக உட்கார்ந்து கொள்ளவும், குழந்தைகளைத் தூங்கப் பண்ணவும் முடிந்தது.
ஒரே ஒரு குறை அரங்கினுள் காற்று இல்லாததுதான். மேலே சுழன்று கொண்டிருந்த மின்சிறிகளுக்கும் அரங்கிற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. (அதனால்தான் மக்கள் வியர்க்க விறுவிறுக்க ஸ்டாலில் நிற்காமல் வெளியில் வந்து விட்டார்களோ?)
கிழக்கு ஸ்டாலில் ஏனோ கூட்டமே இல்லை. ஹரன் பிரசன்னா ‘ஹாயாக’ அமர்ந்திருந்தார். அவர் இப்படி அமர்ந்து இதுநாள்வரை நான் பார்த்ததே இல்லை என்பதால் ஒரே ஆச்சரியமாக இருந்தது. கை கொடுக்கப் போனவன் ஏனோ தயங்கி கடந்து சென்று விட்டேன்.
உயிர்மை, காலச்சுவடு, கிரி ட்ரேடிங், அல்லயன்ஸ், நர்மதா, மணிமேகலை, விகடன் போன்ற ஸ்டால்களில் கூட்டம் இருந்தது.
ஒரு ஸ்டால் வாசலில் ‘டாய்லெட் க்ளீன்’ செய்வதை வீடியோவில் காட்டிக் கொண்டிருந்தனர். அதற்கும் புத்தகச் சந்தைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.
போன தடவை மாதிரி வற்றல், வடகம், ஊறுகாய் ஸ்டால்கள் எல்லாம் இல்லாதது நிம்மதியாக இருந்தது.
”கூட்டம் கூட்டமா மக்கள் வாராங்க. ஆனா போன தடவை விட இந்த தடவை விற்பனை ரொம்பக் கம்மி தான்” என்று ஒரு ஸ்டால்காரர் மற்றொருவரிடம் அலுத்துக் கொண்டார். ”சரிதான். மக்கள் கூட்டம் கூட்டமா வாறது பொழுது போக்கவும், வேடிக்கை பார்க்கவும், காபி, டிபன் சாப்பிடவும் தானே தவிர புக் வாங்கவா வாராங்க?” என எனக்குள் நான் நினைத்துக் கொண்டவாறே வெளியேறினேன்.
இப்போது வெளியே அரங்கில் ’பளபள தொளதொள’ சட்டைப் போட்ட வேறு யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். கூட்டம் கூட்டமாக மக்கள் சேர்களில் அமர்ந்து ஆர்வமாக சுண்டல் சாப்பிட்டுக் கொண்டும், சமோசா, சுக்குக் காபி குடித்துக் கொண்டும், தங்களுக்குள் உரக்கப் பேசிக் கொண்டுமிருந்தனர்.
நான் வாங்கிய புக் லிஸ்ட் :
சோட்டா பீம் கலரிங் புக் : (பேரப் பிள்ளைகளுக்காக)
உணவே மருந்து - காலச்சுவடு
இரவில் நான் உன் குதிரை - காலச்சுவடு
இன்றைய தலைமுறைக்கான உணவு வகைகள் - நர்மதா
10 நிமிடங்களில் எந்த ஜாதகத்தையும் எழுதுவது எப்படி - நர்மதா
நாடி சொல்லும் கதைகள் - மணிமேகலை பிரசுரம்
கர்ணனின் கவசம் - சூரியன் பதிப்பகம்
விவேகானந்தர் ஒரு வாழ்க்கை - கிழக்கு பதிப்பகம்
பட்டினத்தார் - கிழக்கு பதிப்பகம்
கடைசி பக்கம் - சூரியன் பதிப்பகம்
அரசு பதில்கள் - 1977 - குமுதம்
அரசு பதில்கள் - 1980 - குமுதம்
குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை - மணிவாசகர் பதிப்பகம்
பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள் - கயல் கவின் பதிப்பகம்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கபடுகின்றன - உயிர்மை
அம்புட்டுதான். இதற்கே கொண்டு போன பணமெல்லாம் காலியாகி விட்டது. பபாஸின் இலவச ஊர்தி என்னை ”பார்க்கிங், பார்க்கிங்” என்று சொல்லி ஏற்றிக் கொள்ளாததால் நம்ம ஆட்டோ பிடித்து ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
சுபம்.
ஹரன்பிரசன்னா பெரியார் கட்சியில் செர்ந்துவிட்டார் என்று சொன்னார்கள் அப்படியா ?
Read More...
Collapse...