ஜீரணம் ஆகாத விஷயம் டெல்லி தேர்தல்தான். இவர்கள் எல்லாம் எங்கே வர போகிறார்கள் என்று நினைத்த பலருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி டெல்லியில் 28 சீட் வந்த போது அதிர்ச்சியில் முழுகினார்கள். பிஜேபி அனுதாபிகள் இது எல்லாம் சும்மா டெல்லி தேர்தல் என்பது முனிசிபல் தேர்தல் மாதிரி என்று சப்பைக் கட்டு கட்டினார்கள். சிம்பு-நயன் சேர்ந்த போது பலருக்கு ஏற்பட்ட எரிச்சல் போல இவர்களுக்கு ஏற்பட்டது ஏனென்பதை உளவியல் நிபுணர்களின் ஆராய்ச்சிக்கு விட்டுவிடலாம்.
அடுத்த ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம் சரியாக சச்சின் ரிடையர் ஆகிறேன் என்று சொன்னவுடன் அவருக்கு பாரத் ரத்னா அறிவிப்பு. காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ‘தீயாவேலை செய்யணும் கொமாரு’ மாதிரி இருக்கிறார்கள் என்று நம்பத் தூண்டியது.
தீயா வேலை செய்து ஆனால் டப்பாவான படங்களில் கடல், தலைவா, இரண்டாம் உலகம், அழகு ராஜா என்று சில உருப்படி(யில்லாதது)கள் வந்தது. தியேட்டர் காலியாக இருந்தாலும் நண்பர் சுரேஷ் கண்ணன் கர்ம ஸ்ரதையுடன் பார்த்துவிட்டு இலக்கியப் பத்திரிகைகளில் அதைப் பற்றி எழுதி ஏதோ சம்பாதித்த்து ஒரு பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும். தலைவா படத்தில் “டைம் டூ லீட்” என்ற வாசகம் ஏதோ பெரிய கெட்ட வார்த்தை மாதிரி ஆகி விஜய் அதை எடுத்து படத்தை 15 நாள் கழித்து நெட்டில் வந்த பிறகு தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்தார். டைம் டூ லீட் என்ற வாசகம் “டைம் டீ ப்லீட்” என்று மாற்றியிருக்கலாம்.
அடுத்த பெரிய சாதனை என்று இந்த வருடம் பார்த்தால் மோடிக்கு சேர்ந்த கூட்டம் தான். அந்தக் கூட்டங்களில் அசால்டாக அதுவும் பிரதமர் வேட்பாளர் சில வரலாற்று உளறல்களை ஆங்காங்கே உதிர்த்துவிட்டுச் சென்றார். அவருடைய கூட்டத்தை ஷேர் செய்த மாமிகள் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. சென்னையில் பரவலாக எல்லா பகுதிகளிலும் ஆட்டோக்கள் மீட்டர் போட்டு ஓடுவது இன்னொரு சாதனை.
லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் தம் கட்சியைக் கலைத்துவிட்டு திமுகவில் மீண்டும் இணைந்ததை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் திமுகவிற்கு ஒரு ஓட்டும் முகவிற்கு ஒரு மஞ்சள் சால்வையும் லாபமாகக் கிடைத்தது இந்த வருட சாதனை. டி ஆர் சார், நீங்க உபயோகிக்கும் பேஸ்டில் உப்பு இருக்கா?
அடுத்த பெரிய சாதனை என்று பார்த்தால், தமிழ் சினிமா 100 விழாவிற்கு கலைஞரை அழைக்காமல் மறந்து போனது தான். அதில் கலந்துக்கொண்ட பேசிய பல நடிகர்கள்/நடிகைகள் எல்லோரும் “இங்க எல்லாருக்கும் டபுள் ரோல்தான். போதுமா?” என்று சொல்லாமல் சொன்னார்கள்.
”இங்க எல்லாருக்கும் டபுள் ரோல் தான் போதுமா” என்ற வசனம் பல அரசியல் கட்சித் தலைவர்களும் உபயோகித்தார்கள். இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் ப.சி.கருத்தரங்கில் பேச, டெஸோ என்று கோபாலபுரத்தில் சிலர் கிளம்பினார்கள். இலங்கை காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொண்டால் அதற்கான விளைவை மத்திய அரசு சந்திக்க வேண்டிவரும்!’ என்று கருணாநிதி எச்சரித்தார். இந்தியாவில் இருந்து யாருமே கலந்துகொள்ளக் கூடாது’ என்று தமிழகச் சட்டசபையும் தீர்மானம் நிறைவேற்றியது. எல்லா டிவியிலும் தோன்றும் டி-ஷர்ட் கவிஞர் சக்கரைப்பொங்கலுக்குpப் பெருங்காயம் போடலாமா? என்ற விவாதத்துடன் இதையும் விவாதித்தார். இதை எல்லாம் கண்டுகொள்ளாமல், தன்மானத் தமிழன் அஞ்சலியைக் காணும் என்பது போன்ற முக்கியமான செய்திகளில் உண்மையைத் தேடத் தொடங்கினான்.
விஷி என்று பலர் செல்லமாக அழைத்த ஆனந்த் சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் நார்வே நாட்டின் கார்ல்சனிடம் தோல்வியடைந்தார். நம்மூரில் ரிலீசான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெற்றி பெற்றது. இளையராஜா இசை ஓஹோ என்று பலர் உணர்ச்சிவசப்பட்டார்கள். தமிழர்களுக்கு உணர்ச்சிவசப்படச் சொல்லியா தரவேண்டும்?
சென்னையின் பெருமையை நிலைநாட்ட சென்னை எக்ஸ்பிரஸ் படமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயன்று கொண்டு இருக்க ஒசைப்படாமல் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் சிக்கி, என்.சீனிவாசனுக்கு செக் வைக்க முயற்சித்த ஸோ கால்ட் நம்பர் 1 மீடியா ஒன்றும் செய்ய முடியாமல் திக்குமுக்காடியது. மன்மோகன்சிங்கே அர்நாபிடம் பயப்படுவார் ஆனால் சீனிவாசன் விஸ்வரூபமெடுத்து ஐபிஎல் பார்த்த மக்களை மூடர் கூ(ட்)டம் ஆக்கினார்.
ஒருவழியா சச்சினுக்கு ரிட்டயர்மென்ட்குடுத்து இளைஞர் படையுடன் சௌத்ஆஃப்ரிக்கா சென்று உதை வாங்கியது இந்த வருஷக்கடைசியின் ஹைலைட். ஈஷ்வர் பாண்டேக்கு எல்லாம் சான்ஸ் குடுக்கும் நம்ம செலக்டர்கள் பூனம் பாண்டேக்கும் குடுக்கலாம்.
நாளை பிறக்கும் வருஷத்தில் இதெல்லாம் நடக்குமா/பார்ப்போமா/கிடைக்குமா என்று இட்லி வடை ஏங்கும் விஷயங்கள்:
பிரச்சனை இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீர்
தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் இலங்கை தமிழ்ர்கள் பாச அறிக்கை
கரண்ட் கட் இல்லாத தமிழ் நாடு
மன்மோகன் சிங் ராஜினாமா
ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற சோனியாவின் அறிக்கை
கோச்சடையான், விஸ்வரூபம்-2 மற்றும் ஜில்லா
ஒரே அணியில் ராமதாஸ், விஜயகாந்த் அவர்கள் தோற்ற பின் விடும் அறிக்கை
திராவிடக் கட்சிகளிடம் தொங்காத காங்கிரஸ்
பிரதமராக மோடி
அப்டியே, தொடர்ந்து இட்லிவடை பதிவுகள். எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்