பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 31, 2013

பயறு அடை - ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்

தாளிக்கும் மாமி என்ற 'அடை'மொழியுடன்...
...ஐயோ குஜராத் அக்காவிடம் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமையல்குறிப்பு ஒன்றை கேட்டிருந்தோம்.

சமையல் குறிப்பை கிண்டல்செய்துகொண்டே குறிப்பு போடுவது என்ன மாதிரியான நேர்மை என்று சண்டைக்கு வந்தார். சமையல்குறிப்பிற்கு எதிரி என்றால் வலைப்பதிவுக்கு "இட்லிவடை" என்று பெயர் வைப்போமா என்று லாஜிக் பேசியவுடன் "அதெல்லாம் எழுதும் வழக்கமே விட்டுப்போய்விட்டது" என்று நழுவிவிட்டார்.

விடுவோமா ? ...

நேற்று இரவு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் காலையில் தான் செய்த ரெசிபி கலக்கல் என்று சொல்லி வாண்ட்டடாய் வண்டியில் ஏறியவரிடம் அதையே எழுதிக்கொடுக்கச் சொன்னோம். மறுக்க வழியில்லாததால் படம் எடுக்கவில்லையே என்று பம்மினார். பரவாயில்லை என்று சொல்லி குறிப்பை மட்டும் எப்படியோ வாங்கிவிட்டோம்.

பத்து நிமிஷம் இருங்க என்றார். சரி 'அரசியல்' ஃபேஸ்புக்கில் மோடி ஸ்டேட்டஸ் அல்லது டிவட்டரில் விட்ட சண்டையை தொடர போகிறார் என்று நினைத்த எங்களுக்கு பெரும் வியப்பு. 'அடை' மாவு தீர்ந்துவிட்டது ( நம்பிவிட்டோம் ) ஆனால் அடை செய்வதற்கு தேவையான சரக்குகளை ஃபோட்டோ எடுத்து அனுப்பிவிட்டார். 
'சரக்கு மாஸ்டர்' படத்தைவிட நன்றாக இருப்பதால் இங்கே அதை பதிவு செய்கிறேன்.

பயறு அடை

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) -- 1 கப்
கொத்துக்கடலை - 1/4 கப்
முழுத்துவரை (தோலுடன்) - 1/4 கப்
கருப்பு உளுத்தம்பருப்பு - 1/4 கப்
பச்சைப் பயறு - 1/4 கப்
கொள்ளு - 1 டேபிள்டீஸ்பூன்
கேப்பை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - பெரிய துண்டு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தேங்காய் எண்ணெய், நெய் (கலவை)

செய்முறை:
பயறு வகைகள், கொள்ளு, கேப்பையை நீரில் கழுவி 6 முதல் 8 மணிநேரம் ஊறவைக்கவும். தனியாக அரிசியைக் களைந்து 4 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.

பயறு வகைகள் ஊறவைத்த தண்ணீரை முற்றிலும் வடித்து மேலும் ஒன்றிரண்டு முறை அலசி நீரை வடிக்கவும். அரிசி ஊறவைத்த நீரை அரைக்கப் பயன்படுத்தலாம்.

அரிசி, பயறுகளுடன் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் அதிகம் நீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

கறிவேப்பில்லை, கொத்தமல்லித் தழைகளைப் பொடியாக அரிந்து சேர்க்கவும்.

சிறிது நெய்யை லேசாக உருக்கி, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து வைத்துக்கொள்ளவும்.

மாவை காய்ந்த கல்லில் மெல்லிய அடைகளாகத் தட்டி, அங்கங்கே துளையிட்டு, எண்ணெய் ஊற்றி நிதானமான தீயில் இருபுறமும் சிவக்க எடுக்கவும்.

மிகவும் சுவையான கரகரப்பான அடை. ( அப்படியா ? )

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
அவியல் அல்லது மோர்க்குழம்பு

பின்குறிப்பு (கொஞ்சம் டெக்னிக்கல்):
பருப்புகளைக் குறைத்து தோலுடன் கூடிய பயறுகளை உபயோகித்துச் செய்யவேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்து பார்த்தேன். என்றாலும் நிறத்தைப் பார்த்து, சுவை எப்படியிருக்கோமா, பாதிக்குப் பாதி பருப்பும் கலந்திருக்கலாமோ என்று தயக்கமாக இருந்தது. ஆனால் வீட்டில் பெரும் வரவேற்பைப் பெற்று இனி எப்பொழுதுமே அடை என்றால் இப்படித்தான் என்று சாப்பாட்டு மேஜையில் முடிவெடுக்கப் பட்டது. :) ( இதற்கு பெயர் தான் கூட்டணி தர்மம் )

- ஜெயஸ்ரீ
http://mykitchenpitch.wordpress.com/

இதனைச் செய்துபார்த்து வரும் விளைவுகளுக்கு இட்லிவடை நிர்வாகம் பொறுப்பில்லை.

Read More...

Wednesday, October 30, 2013

இட்லிவடையின் ஸ்லீப்பர் செல்கள் - சுபத்ரா

அப்பம் எனக்கு பதினாறு வயசிருக்கும், அதாங்க.. இட்லிவடை ஆரம்பிச்சப்பம். அதுக்கப்புறம் பத்து வருஷமாகிருச்சாம். நம்பவே முடியல. என்னது, இப்பம் எத்தனை வயசாச்சா? எனக்கு அதே வயசுதான் ஆகுது. ஆனா இட்லிவடைக்குத் தான் இது 11த் ஹப்பி பர்த்டேவாம். (அக்டோபர் 27) உடனே தீபாவளிக்குப் பட்டாசு வெடிச்சு கொண்டாடுற மாதிரி இதுக்கும் பட்னா குண்டுவெடிப்புக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கானு எல்லாம் ஆராய்ச்சி பண்ணாதீங்க. இட்லிவடை ஒரு அப்பிராணி.அதென்னவோ தெரியல, இ.வ.வில் நான் எழுத ஆரம்பிச்சப்றம் பயங்கர பிஸியாகிட்டேன். ‘கெடக்கறத எல்லாம் போட்டுட்டு கெழவிய தூக்கி மனையில வெச்ச’ கதையா இருந்த வேலைய எல்லாத்தையும் விட்டுட்டு இப்பம் படிச்சிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் முடிச்சிட்டு இட்லிவடையின் முழுநேர ‘எழுத்தாளர்’ ஆகிறலாமானு யோசிச்சேன். ஆனா நான் எழுதுறதயெல்லாம் நீங்க படிச்சாதான் எனக்குச் சம்பளம்ங்கறதுனால அந்த எண்ணத்தை உடனே கைவிட்டுட்டேன். எப்படி இந்த விபரீத எண்ணம் வந்துச்சினு சொல்றேன்.(பரீட்சையில் மார்க் கம்மியாக வாங்கும் போது அப்பா அம்மாவிடம் சூளுரைப்பது இல்லையா?).இது இட்லியோட வாசகம். இதப் படிச்ச கொஞ்ச நேரத்துக்கு எனக்குப் புரியவேயில்ல. அப்பா எதுக்காகப் பரீட்சை எழுதணும்? மார்க் ஏன் கம்மியா வாங்கனும்? அம்மாகிட்ட எதுக்குச் சூளுரைக்கணும்?”. அப்புறம்தான் புரிஞ்சது அப்பா-அம்மா அங்க சேர்ந்து வரணும்ங்கறது. (அதுதான் தமிழ்நாட்டுல சாத்தியமே இல்லையே). அதாவது இ.வ. இனிமேல் ரெகுலரா அப்டேட்ஸ் தர்றதா நம்மகிட்ட சூளுரைக்கிறாராம். அதனால நாமளும் ஒன்னு ரெண்டு போஸ்ட்ஸ் எழுதி அவருக்கு அப்பப்போ ப்ரேக் கொடுக்கலாமேனு தான் எனக்கு அந்த ‘எழுத்தாளர்’ எண்ணம்.மேலும் இ.வ.வின் ஸ்லீப்பர் செல்ஸை எல்லாம் இப்போ அவ்வளவா பார்க்கமுடியல. அர்ஜூன் அம்மா அஞ்சலி அம்மாவாகவும் விசாம்ரூபம் எடுத்ததுக்கப்புறம் ஆளையே காணோம். மத்தவங்களும் அரசியல் அப்டேட்ஸ்ல பிஸியாகிட்டாங்கனு இட்லிவடை சொல்றார். சூப்பர் குழந்தை சீரீஸ் வேற வந்த வேகத்துல முடிஞ்சிருச்சு. முனிக்கு லெட்டர் எழுதி முழுசா அஞ்சு மாசமாச்சு. சன்டேனா ரெண்டு இன்பா கட்டுரை பார்த்து பல சன்டேஸ் ஓடிருச்சு. காதல்-கள்ளக்காதல் கவிதைகள் வரைக்கும் இட்லிவடையில் போஸ்ட் பண்ணியாச்சு. கிட்டதட்ட ஒரு வருஷத்துக்கு அப்புறம் யதிராஜனும் இப்பதான் எழுத ஆரம்பிச்சிருக்கார். பத்ரியும் எ.அ.பாலாவும் மட்டும் அப்பப்போ சிக்ஸர் அடிச்சிட்டு இருக்காங்கனு நினைக்கிறேன். இந்த லிஸ்ட்ல ட்ராப் ஆன ஒருத்தர்தான் இட்லிவடைனு நீங்க நினைச்சா அதுக்கு கம்பேனி பொறுப்பேற்காது.சரி பர்த்டே பேபிகிட்ட வருவோம். வருஷா வருஷம் இ.வ.வைப் புகழ்ந்து புகழ்ந்து போர் அடிச்சுப்போச்சு. அதனால இந்த தடவை அவர்கிட்ட சில (பத்து) பொது அறிவுக் கேள்விகள் கேட்கலாம்னு தோனுது..மைடியர் இட்லிவடை,1. பாடிகாட் முனீஸ்வரனுடன் உங்களுக்கு என்ன பிரச்சனை?

இவ-பதில்: சரக்கு அடிக்கும் போது வந்த பிரச்சனை இன்னும் முடியலை

2. “நதி பாயும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் இலக்கியம் படைப்பதில் ஆச்சர்யமில்லை”னு புது எழுத்தாளர் ஒருத்தர் சொல்லியிருக்காரே? அது உங்களைத் தானா?

இவ-பதில்: கூவம் கூட நதி தான் என்றால் நானும் எழுத்தாளன் தான். கூவம் வாசனை பிடிக்கும். 

3. அது கிடக்கட்டும், போனமுறை நான் உங்க வீட்டுக்கு வந்தப்பம் மாமி கொடுத்த காபியில் சர்க்கரை போடலயே, ஏன்?

இவ-பதில்: ஸ்வீட்டுக்கு பிறகு காபி குடித்தால் அப்படி தான் இருக்கும். 

4. Ones, Tens, Hundreds, Thousands, Ten Thousands, Lakhs, Ten Lakhs.. Hits இப்படியே போனா சைட் பார்ல இடிச்சுக்காது?

இவ-பதில்: கருப்பு பணத்தைவிட இது கம்மி தான். விடுங்க. 

5. சைட் பார்னு சொன்னவுடனே தான் ஞாபகம் வருது. ஒரு தலை ராகம் பார்த்து என் அப்பா கஷ்டப்பட்டு எனக்கு வெச்ச பெயரை ஒரே செகண்ட்ல சைட்பார்ல ஏத்தியாச்சு, சரி. அதுக்கு ஏன் வயசான அந்த மாமி படம்? :(

இவ-பதில்: ஸ்பெல்லிங்கை பாருங்க அது நீங்க இல்லை. 

6. அப்புறம், பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கேட்கும் அந்தப் பழைய இலை எங்க? சாப்பிட்டதும் தூக்கி எறிஞ்சாச்சா?

இவ-பதில்: டைட்டில் அடிக்கடி மாறும். மாற்றம் தான் நல்லது. ஆனால் திரும்ப இலை வந்துவிடும். கவலையை விடுங்க

7. ‘எனக்கு இட்லி ரொம்ப பிடிக்கும்’னு சொன்ன ஹன்சிகாவே ஓவர், அதென்ன வடை பிடித்த நடிகைகள் வேற?

இவ-பதில்: நோ கமெண்ட்ஸ் 

8. முக்கியமான கேள்வி, இ.வ.வின் ஆதர்ஸ ‘repeatu’ கமெண்ட் எழுத்தாளரை எங்க ஆளைக் காணோம், நாடு கடத்திட்டாங்களா?

இவ-பதில்:  ஜெயமோகனின் கடைசி சொற்பெழிவுக்கு பிறகு அவரை காணோம். எனக்கும் கவலையா தான் இருக்கு.திருந்திவிட்டாரா ?

9. போன வாரம் உங்க நண்பர்கள் சட்னி, சாம்பாரோட முருகன் இட்லிகடையில் ஜிகர்தண்டா குடிச்சிட்டு பில் கொடுக்காம போயிட்டீங்களாமே, ஏன்?

இவ-பதில்: காரில் கட்சி கொடி இருந்ததை பார்க்கவில்லையா ? 

10. இப்படி இட்லிகிட்ட கேள்வி கேட்டுட்டு உட்கார்ந்திருக்கேனே, நான் பரீட்சையில பாஸ் பண்ணிருவேனா?

இவ-பதில்: ரிசல்ட் வந்தா தான் தெரியும்.  நான் ஆரம்பம் படத்தை பற்றி சொன்னேன்.அதனால போதும். பதினொன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் iVadai-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஸ்லீப்பர் செல்ஸ்க்கும் தான்! Keep rocking.


பின்குறிப்பு: இட்லிவடை யார்னு இன்னும் கண்டுபிடிக்காமல் இருப்பவர்களுக்காக - அவரது பெயரின் முதல் எழுத்து இந்தப் பதிவிலேயே இருக்கிறது. கண்டுபிடிச்சிக்கோங்க :-)​

இட்லிவடையின் ஸ்லீப்பர் செல்கள் எல்லாம் இப்ப ஸ்லீப்பிங் செலாகிவிட்டார்கள்!

Read More...

இட்லிவடை - 10 வருடம் - பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

கடந்த 10 வருடங்களுக்கு முன் திருநெல்வேலியில் ஒரு மென்பொருள் சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றிய போது எங்கள் நண்பர் இட்லிவடை பிளாக்கைப் பற்றி எடுத்துரைத்தார். அன்று முதல் இன்று வரை தினமும் இட்லிவடை பிளாக்கை நாம் பார்க்காமல் இருந்தது இல்லை.


ஆனால் ஒன்று இட்லிவடை பிளாக்கைத் தொடர்ந்து பின்பற்றி வருபவர்களுக்குத் தெரியும். இப்போது எழுதுபவர் இட்லிவடை இல்லையென்று.

ஒரு முகமூடி போட்டுக் கொண்டதன் விளைவு, இட்லிவடையை கடைசி வரை பார்க்க இயல்வில்லை.

பா.ரா, பத்ரி போன்ற பலரிடம் நீங்கள்தான் இட்லிவடையா? என கேட்ட காலமுண்டு.

எஸ்.வி.சேகர் பிரச்சனை, திடிரென்று இட்லிவடை ஐடியை ஹேக் செய்தது, எங்களது முதல் ராசிபலன் வெளியானது, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் கருத்துகணிப்பு, இலக்கியம் சார்ந்த விடயங்கள், அரசியல், நாட்டு நடப்புகள் போன்ற பலவிதமான சரமான பதிவுகளை மறக்க இயலாது.


10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இட்லிவடைக்கு வாழ்த்துக்கள்.

குறிப்பு: எம்மை பிளாக் எழுத தூண்டியவர்கள், 2 நபர்கள்.
[1] இட்லிவடை - முகமூடி அணிந்த பிளாக்கர்
[2] நிலாரசிகன் - எம் பள்ளித் தோழர்

வேண்டுகோள்:
[1] முதலில் உங்கள் பழைய இலை படத்தையேப் போடவும்.
[2] தினமும் ஒரு பதிவு போடவும்.
[3] பழைய காரசாரம் வேண்டும்.


ஜோசியம் பார்த்து தினமும் பதிவு வருமா என்று சொல்லுங்க :-)

Read More...

Tuesday, October 29, 2013

ஐயோ பாவம் நிதீஷ் குமார்!

நரேந்திர மோதி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கிட்டத்தட்ட அனைவருமே கருத்து சொல்லிவிட்டனர். நாமும் ஏதேனும் கருத்து சொல்லவில்லையென்றால் இணைய இலக்கிய உலகிற்கு மாபெரும் இழப்பேற்படும் என்பதால் இப்பதிவு. அதென்ன இணைய இலக்கிய உலகிற்கு என்ற கேள்வி எழலாம். இப்போதெல்லாம் பொதுவாக எழுதுவதெல்லாமே இலக்கியம் என்றாகிவிட்டதால், இதுவும் ஒரு விதமான இலக்கியம்தான் என்று சொல்லிக் கொள்வதில் தவறில்லையென்றே எண்ணுகிறேன். இனி விஷயத்திற்குச் செல்லலாம்.

இன்றைய தேதியில் இந்தியாவிலும், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படுகின்ற அனைத்து தீவிரவாதிகளின் முதல் குறியாக நரேந்திர மோதி இருக்கிறார். பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் இதுவரை நிகழ்ந்திராத திருச்சியிலேயே அவர் மீது ஒரு கொலை முயற்சி எடுக்கப்படவிருந்தது என்று ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்ட தமிழக "செக்யூலர்வாதிகளே" இதற்குச் சான்று. வட இந்தியாவில், குறிப்பாக, பிஹார் போன்ற பின்தங்கிய, மோதியைத் தனது ஜென்ம விரோதியாகக் கொண்டுள்ள ஒருவர் ஆளும் மாநிலத்தில் இத்தகைய ஒரு முயற்சி நடந்தேறியிருப்பதில் வியப்பேதும் இல்லையென்ற போதிலும், அதற்குப் பின்னர் அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய நபர்களின் அலட்சியமான போக்கு மிகுந்த அதிர்ச்சி மற்றும் கவலையளிப்பதாக இருக்கிறது.

பிஹாரில், புத்தகயாவில் வெகு சமீபத்தில்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. அதுவும், நரேந்திர மோதி பிஹாருக்கு விஜயம் செய்த மறுதினமே! தற்போதும் நரேந்திர மோதி விஜயம் செய்வதற்கு சில மணித்துளிகள் முன்பாக. அப்போதும் சரி, இப்போதும் சரி, தாக்குதலுக்கு சில தினங்கள் முன்பாகவே உளவுத்துறை எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு, அவை அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. அதையும் மீறி, உளவுத்துறை எவ்வித தகவலும் கொடுக்கவில்லை என்ற அண்டப் புளுகுகள் வேறு. காங்கிரஸ், நிதீஷுடன் கூட்டணிக் கனவில் இருப்பதால், அவரின் அண்டப் புளுகுகளைக் கண்டிக்காவிடினும், கண்டு கொள்ளாமல், கொடுத்துவிட்டோம், தெரியவில்லை, என்ற அளவில் நழுவிக் கொண்டது. இப்போதும் நிதீஷ் குமார் மறுபடியும் அதே பொய்யைக் கூறினார், ஆனாலும் எடுபடவில்லை. உடனடியாக உளவுத்துறைத் தரப்பிலிருந்து மறுப்பு வந்துவிட்டது, 23 ஆம் தேதியே எச்சரிக்கை கொடுத்ததாகவும், குறிப்பாக, நரேந்திர மோதி குறிவைக்கப்படலாம் என்று ஸ்பெஸிஃபிக்காகவே எச்சரிக்கை கொடுத்ததாகவும் கூறி, நிதீஷ் குமாரை மிகப்பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆக, உளவுத்துறை எச்சரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. காரணம்?? நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற ஹேஷ்யங்கள் கிளம்பிய வினாடியிலிருந்தே, நிதீஷ் குமார் அவர் மீதான தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை உரம் போட்டு வளர்க்கத் துவங்கிவிட்டார். பிறகு பாஜகவுடன் இருந்த கூட்டணியையும் முறித்துக் கொண்டு தனது செக்யூலரிஸத்தை நிலைநாட்டினார், அதற்கு முக மஞ்சள் துண்டிற்குக் கொடுத்த வ்யாக்யானங்கள் போல் பல விளக்கங்கள். அடுத்ததாக நரேந்திர மோதி பாட்னாவில் பொதுக் கூட்டம் என்றதும், கண்டது ஜுரம் அஸ்தியில். ஆனால் அன்றைய தினம் ஜனாதிபதி ப்ரணாப் அவர்களும் பாட்னா விஜயம் செய்யவிருந்ததால், எப்படியும் ப்ரோட்டோகாலைக் காரணம் காட்டி மோதியின் விஜயத்தை ரத்து செய்துவிடலாம் என்ற கனவு, ப்ரணாப் அவர்கள் தனது விஜயத்தை பாஜகவின் வேண்டுகோளிற்கிணங்க ஒத்திப் போட்டது நிதீஷின் வயிற்றெரிச்சலை மேலும் அதிகப்படுத்தியது.

விளைவு, பாதுகாப்பில் அலட்சியம்! என்ன நடந்தாலும் நடந்துவிட்டுப் போகட்டும், யார் என்ன செய்து விடமுடியும் என்ற ஆணவம். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், ஒரு கண்டனம் தெரிவித்தால் போதாதா? அதுதானே நடைமுறை?

கடைசியில் நிகழ்ந்தேவிட்டது. தொடர்ச்சியாக ஏழு குண்டுவெடிப்புகள். இதுவரை ஆறு மரணங்கள், நூறு பேர் படுகாயம். குண்டுவெடிப்பு நிகழ்ந்த மறுநொடியே, இது தீவிரவாதிகள் கைவரிசை என்று உடனே சொல்லிவிட முடியாது, காவியுடுப்பினரே விளம்பரத்திற்காக செய்திருக்கலாம் என்று திக்விஜய் சிங் முதல், கிட்டத்தட்ட அதே பாணியில், இவர்களாகவும் இருக்கலாம், அல்லது அவர்களாகவும் இருக்கலாம் என்று ஞானி உட்பட அனைத்து அறிவுஜீவிகளும் தத்தங்கள் இயங்கும் தளங்களில் கருத்துகளை அள்ளி வீசி மோதிக்கெதிரான தங்களது மனோபாவத்தைப் பதிவுசெய்து அன்றைய இரவு தூக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். கடைசியில், இதுவும் இந்தியன் முஜாஹிதீன் கைவரிசையென்று உறுதியாகிவிட்டது. முதலில் கருத்துதிர்த்த, திக்விஜய் சிங்கை அதற்குப் பிறகு வழக்கம்போல் காணோம்.

விசாரணை, கைதுகள், கண்டனங்கள் என்ற சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நடப்பவை எல்லாமே, இனியும் எவ்வளவு நடந்தாலும் திருந்த மாட்டோம் என்ற மத்திய அரசின் மெத்தனத்தையே மறுபடியும் மறுபடியும் தோலுரிக்கிறது. மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, அரசாங்கத்திலுள்ளவர்களே தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் இங்கு மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. சிறுபான்மை சமூகத்தினரைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரிலும், மதச்சார்பின்மை என்ற பெயரிலும், ஒரு சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக கேலிக்குரியதாக்கும் அவலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர், ஒருசில புல்லுருவிகளைக் காக்கும் நோக்கில்.

தன்னுடைய மாநிலத்திற்கு வந்த, சக முதல்வருக்கு ஒரு அசம்பாவிதம் ஏற்படவிருந்ததற்கு, தன்னுடைய அரசாங்க யந்திரத்தின் அப்பட்டமான அலட்சியம் காரணமாக அமைந்துவிட்டது என்ற ப்ரக்ஞை சிறிதும் இல்லாமல், ஒரு மாபெரும் பொய்யை அவிழ்த்த நிதீஷ் குமார், ஒரு நாகரிகத்திற்காகக் கூட நரேந்திர மோதியை தொலைபேசியில் அழைத்துப் பேசாதது அரசியல் காழ்ப்பை அவர் எவ்வளவு தூரம் பாராட்டுகிறார் என்பதைக் காட்டுகிறது. பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதி, காங்கிரஸிற்கு அவர்கள் அறிவிக்காவிடினும், ராகுல் காந்தி., மூன்றாவது அணியிலும் நிதீஷ் குமார் இல்லை என்ற நிலையில் நிதீஷ் குமாரின் பிரதமர் கனவு அம்போ என்றாகிவிட்டது. இந்நிலையில் அரசனை நம்பி, இருக்கின்ற புருஷனையும் கைவிடப் போகிறார்.
- யதிராஜ்

Read More...

காங்கிரஸின் நியாயமான கோரிக்கை

மத்திய பிரதேச மாநில காங்கிரசார் நேற்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்துள்ள தாமரைகளை திரை போட்டு மறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமரை பூக்களை மறைக்கும் கோரிக்கை பேத்தல் என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் எங்கே தேர்தல் கமிஷன் மறைத்துவிடுமோ என்ற பயத்தில் பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் தேர்தல் நடந்த போது மாயாவதியின் சின்னமான யானை சிற்பங்கள் எல்லாம் துணி போட்டு மூடப்பட்டன. அது போல தாமரை பூக்களையும் மூட வேண்டும் என்கிறார்கள்.
நாளைக்கு பெரிய துணிக்கொண்டு சூரியனை மறைக்கவும், மரத்திலிருக்கும் எல்லா இலைகளையும் மறைக்கவும் ஏற்பாடுகள் நடந்தாலும் நடக்கலாம்.

யானையையே மறைத்த தேர்தல் கமிஷனுக்கு தாமரை எல்லாம் ஜூஜூபி! காங்கிரஸ் கேட்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது!

முன்பு யானையும், இப்போது தாமரையும் மறைத்தால் அது ஹிந்து மதத்துக்கு எதிரானது.

Read More...

சின்ன இலை பெரிய விளக்கம்

ஏன் 'இட்லிவடை' முகப்பில் இருக்கும் இலையை காணவில்லையே என்று பலர் கேட்க தொடங்கிவிட்டார்கள். இலை பசுமையின் அடையாளம் அதை எடுக்க காரணம் இருக்கு.

மினி பஸ்ஸில் இலைச் சின்னம் இருப்பதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு மினி பஸ்ஸில் உள்ள இலைகள் பசுமையின் அடையாளமே தவிர அதிமுக அரசின் கட்சி சின்னம் அல்ல என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.   இட்லிவடையில் இருக்கும் இலைக்கும் ஏதாவது பிரச்சனை வந்தாலும் வரலாம் அதனால் தற்காலிகமாக எடுத்துவிட்டேன். அதிமுகவினர் மாதிரி விளக்கம் அளிக்க முடியுமா ? 

அதிமுகவினர் அளித்த விளக்கம் "வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உணவு தர படைப்பது வாழை இலை, உணவில் வாசத்தை ஏற்படுத்துவது கருவேப்பிலை, உணவாகவே சமைக்கப்படுவது கீரை இலை, சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை, வீட்டு வாசலில் அலங்கரிப்பது மா-இலை, மனிதனின் நோய் போக்குவது துளசி இலை, இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்தது இலை. செடியில் இலை, கொடியில் இலை, மரத்தில் இலை என எங்கும் இலை, எதிலும் இலை. இப்படி, மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இலையின் அலை..." என்று அடித்து சொல்லுகிறார்.

இலைகள், செடிகள் பிழைத்திருப்பதற்கு சூரியன் வேண்டும் என்று கூடவே இலைக்கு மேலே சூரியனின் ஓவியம் வரைந்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.

வாழை இலை சாப்பிட்ட பின் தூக்கி எறிய வேண்டும். வெற்றிலை போட்ட பிறகு துப்ப வேண்டும்...!

Read More...

இட்லிவடை - பத்தாண்டுக் கலைச் சேவை

இட்லிவடை ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சமயத்தில் இட்லி வடை வாசகர்களுக்கு (இன்னும் இருந்தால்) மிக்க நன்றி.

இந்த வருஷம், அதுவும் கடந்த சில மாதங்களாக கடையைச் சரியாக கவனிக்க முடியவில்லை. வேலை அதிகம் என்று சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை. வீட்டில் சமையல் வேலை செய்யும் அம்மணிகள் எல்லாம் அரசியல் ஸ்டேட்டஸ் போடும் போது உனக்கு என்ன கேடு? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

பலர் (அப்படித்தான் சொல்ல வேண்டும்) அரசியல் பற்றியும் இலக்கிய சர்ச்சை பற்றியும் ஏன் அவ்வளவாக இப்ப எல்லாம் பதிவுகள் போடுவதில்லை? ஜெ பற்றி வேண்டாம் அட்லீஸ்ட் கலைஞர் பற்றியாவது ஏதாவது நக்கல் அடிக்கலாமே என்று சாட்டிலும், கமெனண்டிலும் கேட்டுள்ளார்கள்.

சண்டேனா ரெண்டு, மண்டேனா ஒன்று என்று எழுதிக்கொண்டு இருந்த பெரியவர்கள் எல்லாம் பிஸியாகிவிட்டார்கள். அதே போல சரக்கு மாஸ்டரும் பிஸி.. !

வாசகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி. இனிமேல் இட்லிவடை அப்டேட் ரெகுலராகத் தொடரும். (பரீட்சையில் மார்க் கம்மியாக வாங்கும் போது அப்பா அம்மாவிடம் சூளுரைப்பது இல்லையா?).

இதற்கு எடுத்துக்காட்டாக ஸைடு பாரில் கை வைத்துள்ளேன்.

வரும் நாட்களில் பல நல்ல கட்டுரைகள் வருமென்று உங்களை போல நானும் எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு
இட்லிவடை

கைதட்டல்கள் தான் கலைஞனுக்கு உண்மையான சம்பளம் - கமல் ஹாசன்.. அதனால்... :-)

Read More...

Tuesday, October 22, 2013

சென்னை சத்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும் - பா.ரா


பதில் வருமா என்று தெரியாது ஆனால், வாசகர்கள் கேள்விகளை பின்னூட்டதில் கேட்கலாம்.

Read More...

Thursday, October 17, 2013

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் சச்சின் டெண்டுல்கர் ! - எ.அ.பாலா

ஓய்வு என்ற முடிவெடுத்த பின், 2 டெஸ்ட் போட்டிகள் எதற்கு என்ற எண்ணம் என் மனதிலும் எழுந்தது. 200 டெஸ்ட்கள் என்ற இலக்குக்கு வேண்டி சச்சின் ஆடுகிறார் என்பது தெளிவு! இது, சச்சின் ரெகார்டுகளுக்கு ஆடுபவர் என்று கூறுபவர்களின் வாதத்திற்கு வலிமை சேர்ப்பதாகவே உள்ளது. உலகின் தலை சிறந்த மட்டையாளரான பிராட்மேன் 99.94 என்று அவரது டெஸ்ட் சராசரி இருந்த நிலையில், ஓய்வு பெறவில்லையா ? சச்சின் ஏன் இதை யோசிக்கவில்லை?

இது ஒரு புறமிருக்க, ஒரு 2 ஆண்டுகள் முன்னமே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று சிலபலர் கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது. சச்சின் தனது கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், ஒரு சதம் கூட அடிக்கவில்லை, 4 ஐம்பதுகள், சராசரி 30.04, அதாவது அவரது மொத்த சராசரியை (53.86) விட 24 ரன்கள் குறைவு! இதை, மும்பையைச் சேர்ந்த மற்றொரு ஜாம்பவானின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்னும் தெளிவு கிடைக்கும். கவாஸ்கர், தனது கடைசி இன்னிங்க்ஸில், பந்து நர்த்தனமாடிய ஒரு square turning பங்களூர் ஆடுகளத்தில், பாகிஸ்தானின் மிகச் சிறந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகத் திறமையாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். இந்தியா தோற்றது என்பது வேறு விஷயம்! கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், கவாஸ்கர் எடுத்தது, 4 சதங்களும், 6 ஐம்பதுகளும், சராசரி 58 ரன்கள் !!!கிரிக்கெட் மேதையான சச்சின், ஏன் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக, தன்னை இவ்வாறு வதைத்துக் கொள்ள வேண்டும் !? அவர் லெவலுக்கு, வயதுக்கு எதிரான அந்த ஜீவமரண போராட்டம் பார்க்க சகிக்காமல் இருந்தது. கிரிக்கெட்டின் மேல் கொண்ட காதல் தான் காரணம் என்று நினைக்கிறேன். தனது ஃபார்ம் திரும்பி விடும் என்ற அவரது எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஆனால், இளமை திரும்புவதில்லை என்பதை சற்று மறந்து விட்டார். 28 வயதில் சுலபமாக கை கூடியவைகளை 38-ல் கை கூட வைக்க சச்சினால் கூட இயலாது என்பது தான் யதார்த்தம். Sachin should have gone in a blaze of glory for the ultimate cricket genius he is, but sadly that did not happen. அவரது கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தாலும், கடைசி 2 ஆண்டுகளில், சாமானிய பந்து வீச்சாளர்களிடமெல்லாம் போராடிய சச்சினின் இமேஜ் மனத்திரையில் விலக மறுக்கிறது.

சமகாலத்தில் விளையாடிய (சச்சினுக்கு நிகரானவர் என்று சொல்லத்தக்க!) லாராவின் (கடைசி 25 இன்னிங்க்ஸ்கள்) புள்ளி விவரங்கள் பிரமிக்க வைப்பதாக உள்ளது. அவரது சராசரி 45 ரன்கள் என்பதை விட, தனது கடைசி வருடத்தில் லாரா, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என்ற பலமான அணிகளுக்குக் எதிராக, 2 சதங்களும், 2 இரட்டைச்சதங்களும் எடுத்தார். அதாவது, ஓய்வு பெறும் வரையில், லாராவின் ஒளிக்கீற்று பிரகாசமாகவே எரிந்தது! சச்சின் போன்ற ஒரு மேதை, கலைஞர் என்ற நிலையிலிருந்து கணக்காளராக மாறி விட்டது, அவரது பரம் விசிறிகளுக்கு சற்று வருத்தமான விஷயமே. விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டைலில் ஆரம்பித்தவர், இப்படி பாய்காட் போல சர்வைவலுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது அதை விட வருத்தமான விஷயமே!

கபில்தேவும் ஹாட்லியின் பந்து வீச்சு ரெகார்ட்டை முறியடிக்க, பரிதாபமாக மூச்சிரைக்க பந்து வீசிய அந்த கடைசி டெஸ்ட்கள் ஞாபகத்திற்கு வருகிறது. முரளிதரன் அந்த ரெகார்டை கபளீகரம் பண்ணி விட்டு, இலக்கை எங்கோ எடுத்துச் சென்று விட்டார் என்பது வேறு விஷயம்! இப்போது, சச்சின் தனது விருப்பப்படி (இந்திய மண்ணில்) ஓய்வு பெறுவதற்காக, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுருக்கப்பட்டு விட்டது. இதற்கு முன்னால், யாருக்காகவும் இப்படி நடந்ததாக ஞாபகமில்லை! வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடரை விட (வலிமையான அணிக்கு எதிரான) தென்னாப்பிரிக்கத் தொடர் மிக மிக முக்கியமானது. சச்சின் ஓய்வு பெற்றிருந்தால், இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரே நடைபெற்று இருக்காது என்பது தான் யதார்த்தம். மும்பையில் தான் ஓய்வு என்று சிறுபிள்ளை போல ஏன் இந்த பிடிவாதம் என்றும் புரியவில்லை!?

- எ.அ.பாலா

பிகு: 24 வருடங்களாக, நான் சச்சினின் பரம விசிறி. அவரது 90% ஆட்டங்களை நேரில் அல்லது டிவியில் ரசித்து வந்திருக்கிறேன்.
மன்மோகன் சிங் ரிடையர் ஆக போகிறேன் என்று அறிவித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் ?

Read More...

Monday, October 07, 2013

கூட்டு களவாணிகள்

கிட்டத்தட்ட 20 வருடம் ஆன பிறகு ஊழல் வழக்கில் லாலுவிற்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 25 லட்சம் அபராதமும் தண்டனையாக கிடைத்தது.

இதற்கிடையில் அவசர சட்டம் அமல் ஆகாமல் போனதற்கு ஜனாதிபதியே மூல காரணம் என்று அத்வானி முதல் பலர் சொன்னார்கள்.

நேற்று சிறையில் உள்ள லாலு பிரசாத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி நேற்று மாலை சந்தித்துள்ளார். வெளியே வந்த அபிஜித் முகர்ஜி மரியாதை நிமித்தமாக தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்ததாக கூறியுள்ளார்.

தினமும் எல்லைப் பாதுகாப்பில் இருக்கும் நம் வீரர்கள் பலர் உயிர் இழக்கிறார்கள், அவர்களை எல்லாம் ஜனாதிபதியின் மகன் போய் பார்ப்பதில்லை. ஆனால் ஊழல் குற்றவாளியை போய் பார்ப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று வாசகர்கள் ஊகிக்கலாம்.


தீபாவளிக்கு வீட்டுக்கு வர ஏற்பாடு செய்தாலும் செய்திருப்பார்.

Read More...