தாயார் சன்னதி தான் முதலில் வெளிவந்தது என்றாலும் நான் முதலில் படிக்க நேர்ந்தது என்னவோ, ஒரு கட்டுரைக்காக இட்லிவடை கையெழுத்திட்டு அன்பளித்த ‘மூங்கில் மூச்சு’ தான். அது முதல் சுவாரசியம். இரண்டாவது, பெரும்பாலும் நான் என் குடும்பத்தினரிடம் மட்டுமே பேசி மகிழும் அச்சுஅசல் ‘திருநெவேலித் தமிழி’ல் அது இருந்தது. ஒரு குழந்தையின் கையில் இருக்கும் குச்சி ஐஸைப் போல ஏக்கத்தோடும் தாக்கத்தோடும் படித்துக் கொண்டிருக்கையிலேயே புத்தகம் முடிந்து விடுகிறது. இரண்டு புத்தகங்களும் அப்படித் தான். படிக்கும் போது ரூமிலிருந்து எட்டி எட்டிப் பார்த்து “எம்மா.. இலங்கை வானொலீல ராஜேஸ்வரி சண்முகம்னு ஒருத்தங்க பேசுவாங்களோ?” “பூர்ணகலா தேட்டர் அப்பமேலருந்து இருக்கா?” “முந்திலாம் கார்த்திகைக்குச் சொக்கப்பானை எரிப்பாங்கள்லா?” “நீங்க ரோஜாவின் ராஜானு ஒரு படத்த ரொம்ப ரசிச்ச்சுப் பார்த்திருப்பேங்களே?” என ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருக்க, “இதையெல்லாம் யாரு உனக்குச் சொல்லுதா?” என்று அதிசயித்துக் கேட்ட அம்மாவிடம் அப்போதே ஒப்படைத்துவிட்டேன் அந்த இரு புத்தகங்களையும்.
“மங்கையராகப் பிறப்பதற்கே..” என எல்லாக் கட்டுரைப் போட்டிகளிலும் எழுதி வந்த என்னை “பையனா பொறந்திருந்திருக்கலாமோ?” என்று நினைக்க வைத்தது சுகாவின் எழுத்து. பெறகு என்ன.. தாமிரபரணியில் விழுந்து விழுந்து குளிப்பதற்கும், நினைத்த நேரத்தில் சைக்கிளில் ஊர் சுற்றுவதற்கும், ரசிகர் மன்றம் அமைத்துக் கொண்டு எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடினாலும் போய்ப் பார்ப்பதற்கும், டீக்கடை பென்ச்சில் அமர்ந்து அரசியல் பேசுவதற்கும், தெருவே அதிரும்படி பாடல்களை ஒலிக்கவிட்டு ரசிப்பதற்கும், அவ்வளவு ஏன்.. வீட்டு முற்றத்தில் இருக்கும் தெரணையில் (திண்ணை) உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதற்கும் (திருநெல்வேலி)பெண்கள் தகுதியற்றவர்கள் ஆச்சே. “நான் முதலமைச்சரானால்” “நான் கலெக்டரானால்” என்ற வரிசையில் “நான் ஆண்பிள்ளையாகப் பிறந்திருந்திருந்தால்...” என்று அடிக்கடி என்னைப் பொறாமையுடன் யோசிக்க வைத்துவிட்டது.
உருக்கமான ‘தாயார் சன்னதி’ அத்தியாயத்தைப் படித்த கொஞ்ச நேரத்துக்கு அழுதுகொண்டே இருந்தேன். ‘இருப்பு’ மற்றும் ‘ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்’ இரண்டிலும் மரணங்களை எதிர்கொள்ளும் எதார்த்த மனப்பக்குவம் விளங்கியது. ‘குப்பம்மா ஆச்சி’ இறந்து போன சில ஆச்சிகளை எல்லாம் கண்முன் நிறுத்தியது. தேவனின் கோயில் பாடலைப் பற்றி நான் அறிந்து கொண்டது சுகாவின் எழுத்தால் தான். பொதுவாகக் காட்சிகளை மனக்கண்ணில் ஓடவிடும் இவரது எழுத்து, இசை பற்றிய பதிவுகளில் பின்னணி இசையோடு அவற்றை ஓட்டுகிறது. அப்பதிவுகளைப் புத்தகங்களில் படிப்பதை விட ஆன்லைன் பக்கங்களில் பாடல் துணுக்குகளைக் கேட்டுக் கொண்டே படிப்பது சொர்க்கம். இசையைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் கூட என்னால் அவற்றில் லயிக்க முடிந்தது.
தாயார் சன்னதி புத்தகத்தின் முகப்பில் writerpayon.com “இந்தப் புத்தகத்தைக் குழந்தைகள் படிக்க முடியாது” என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் மூடிவைத்து விடலாமா என யோசித்தேன். ‘சிரிப்பாணி’ பொங்குகிறது என வண்ணதாசன் ‘கட்டன் ரைட்டா’கச் சொல்லிய பிறகும் எப்படிப் படிக்காமல் போவது? ‘சுவாரசியம் என்று ஒன்று உண்டு இல்லையா, அதுபோல இது ‘சுகாரசியம்’ என்று சொல்லுகிறார் அவர். சுகாவின் எழுத்தில் என்ன வசியமோ, அது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
சிலருக்குச் சில புத்தகங்களைப் பரிந்துரை செய்யலாம். ஆனால் பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் பிடித்த புத்தகங்களாக ‘தாயார் சன்னதி’ மற்றும் ‘மூங்கில் மூச்சு’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இணைய நண்பர்களே.. நீங்கள் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. தயவுசெய்து உங்கள் வீட்டம்மாக்கள் / பெண்குழந்தைகளுக்குக் கட்டாயம் வாங்கிக் கொடுத்துவிடுங்கள். மிகவும் ரசிப்பார்கள் :-) மூன்றாம் தொகுப்பை எதிர்பார்த்து ஆவலுடன்..
சுபத்ரா @
subadhraspeaks.blogspot.in
மீண்டும் வருக..
15 Comments:
//ஆங்க்ரி பர்ட்ஸை விட்டுவிட்டு ஐஸ்பால், குச்சிக்கம்பு, பாண்டி, பம்பரம் எல்லாம் விளையாடிவிட்டு வந்தால் எப்படி இருக்கும்? அடிக்கிற வெயிலுக்குத் தாமிரபரணி ஆற்றில் விழுந்து குளித்தால் எப்படி இருக்கும்? எழுத்துகளிலேயே ஒரு இளையராஜா பாடலைக் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? //
மொதப் ”பாரா”வைப் படிக்கிறதற்குள்ளாவே கண்ணைக் கட்டுதே!!
எத்தனை எப்படி இருக்கும்’ங்கள். கவிதைக்கு சிந்திக்கிற மாதிரியே கட்டுரைக்கும் சிந்திச்சா இதான் பிரச்சனை.
இருங்க.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து பாக்கி பொத்தக விமர்சனத்தை படிக்கிறேன்.
ஜெய் ஜெ
சுகா என்ற எழுத்தாளரை வெளிக்கொண்டு வந்த பெருமை சொல்வனத்துக்கே. அருமையான நடையில் ஊருக்கே அழைத்துச் சென்று விடுகிறார்.. லொக்கேஷன் பார்க்கப் போனது எந்த தொகுப்பில் வருகிறது? நான் சொல்வனத்திலேயே எல்லாவற்றையும்ம்படித்துவிட்டேன். புத்தகமாகவும் வாங்கி வைத்துப் படிக்க வேண்டும். இயக்குனராகவும் அவர் மிளிர்வார். ஒரு தின்னவேலிப் பெண்ணின் தின்னவேலி பத்திய புத்தக விமர்சனம் நன்று.. :)எனது பால்ய கால விடுமுறை முழுதும் திருநெல்வேலியிலேயே கழிந்தது. விடுமுறை விடவும் கம்பம் டு நாகர்கோவில் திருவள்ளுவரில் அப்பாவோ, பெரியப்பாவோ ஏற்றிவிட நெல்லையில் மாமா வந்து அழைத்துச் செல்வார். ஒருமாதம் காலையில் மாமாவுடன் படித்துறையில் குளித்துவிட்டு வீட்டிலோ, அல்லது கட்டிக்கொண்டு போனதை சாப்பிட்டோ வீடு திரும்புவோம்.. எத்தனை முறை குளித்தாலும் அலுக்காத நதி தாமிரபரனி... கள்ளத்தி முடுக்குத் தெருவில் எனது அத்தை ( அம்மாவின் அண்ணன் மனைவி)இருந்தார்கள்.. மீணாட்சி ”குஞ்சி”தபாதம் என்ற போஸ்டரைப்பார்த்து நானும் எங்கண்ணனும் அர்த்தமாய் சிரித்துக்கொண்டது இன்றும் நினைவில் இருக்கிறது. திருநெல்வேலி என்றாலே அத்தை வீட்டில் அடிபொளி உணவும், தாமிரபரனி குளியலும், அல்வாவும்தான்..சரி, அடுத்தவாட்டி ஊருக்கு வரும்போது இன்னொருவாட்டி குளிச்சி ஆசைய தீத்துக்க வேண்டியதுதான்..
சுகா அற்புதமான, அடக்கமான, வார்த்தை ஒவியர்.அவருடைய கட்டுரைகள் நேர்த்தியான ஆவணப்படங்கள் என்று கூட சொல்வேன். சுலபத்தில் எட்ட முடியாத உயரங்களைச் சுலபத்தில் தொட்டு விட்டு அவர் மேலே மேலே போவார் என்பது உறுதி.
உங்கள் கட்டுரை சிற்ப்பாக இருக்கிறது.
பாராட்டுகள். - பி எஸ். ஆர்
அருமையான விமர்சனம், சுபத்ரா!
/*“இந்தப் புத்தகத்தைக் குழந்தைகள் படிக்க முடியாது” என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் மூடிவைத்து விடலாமா என யோசித்தேன்.*/
இதுதான் "நம்ம திருநெவேலி" லொள்ளு ! :-)
Suka's blog: venuvanamsuka.blogspot.com
திருநெல்வேலியில் இருந்து பல நூறு மைல் தொலைவில் உள்ள கொங்கு மண்டலத்தில் பிறந்தவன் நான்......இருப்பினும் '' மூங்கில் மூச்சு '' படிக்கும்போது என் பால்யம் திரும்பிய உணர்வை அடைய முடிந்தது......அவரது தந்தையின் [ திரு. நெல்லை கண்ணன் ] மேடைப்பேச்சைப் போலவே நகைச்சுவை ததும்பும் எழுத்து....... வாழ்த்துக்கள் சுகா......
விகடனில் 'மூங்கில் மூச்சு' தொடர் படிக்கும் போது, எப்படி விகடன் இந்த மாதிரியான எழுத்தாளர்களை தேடித் பிடித்து பிரபலமாக்குகிறது என்று வியந்திருக்கிறேன். ஒருவரின் தனிப்பட்ட அனுபவங்கள் ஒரு பிராந்தியத்தை சுற்றி எழுதப் பட்டிருந்தபோதும் வாசிக்கும் எல்லோருக்கும் அந்த அனுபவங்களை உணரச்செய்து, அந்த மனிதர்களையும் நமக்கும் தெரிந்தவர்களாக / உறவினர்களாக நினைக்கச் செய்தது இந்த கட்டுரைத் தொடர். எழுத்த்தாள ரையும் வாசகர்களையும் மிக நெருங்கச் செய்த எழுத்து நடை, நகைச்சுவை, எமோஷன் - மிகவும் பாராட்ட வைக்கின்றன. தாயார் சந்நிதி படிக்க ஆவல் ஏற்படுத்தியதற்கு விமரிசகருக்கு நன்றி. சுகா அவர்களுக்கு வாழ்த்துக்கள். - ஜெ.
விமரிசகருக்கு - இ.வ.வின் கையெழுத்தை ஸ்கேன் செய்து போடுங்கள், அவர் பெயரை தெரிந்துகொள்ள முடிகிறதா என்று பார்ப்போம்!
//இருங்க.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து பாக்கி பொத்தக விமர்சனத்தை படிக்கிறேன்.
ஜெய் ஜெ/
இந்த கமெண்டை நான் போடலை. சத்தியமா? இதுக்காக என்னை திட்டின சுபத்திராவிடம் மன்னிப்புக்கோருகிறேன். வளர்ந்து வரும் எழுத்தாளரிடம் மன்னிப்பு கேட்பதை பெருமையாக நினைக்கிறேன்.
moongil moochu oru peru muchu thanks for subadhra for presenting that book to me
இ.வ.வின் கையெழுத்தை ஸ்கேன் செய்து போடுங்கள், அவர் பெயரை தெரிந்துகொள்ள முடிகிறதா என்று பார்ப்போம்!
திரு. R.J. அவர்களுக்கு,
எனக்கு அவர் கையெழுத்திட்டிருப்பதே, “அன்புடன் இட்லிவடை” என்றுதான் :-)
//எனக்கு அவர் கையெழுத்திட்டிருப்பதே, “அன்புடன் இட்லிவடை” என்றுதான் :-)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! - R. J.
Thanks for introducing two books of SUKA. Will be going to chennai soon and try to get one copy so that I will have a good company, beside(s) my wife, during return journey.
தில்லியில் செயல்படும் தில்லிகை என்ற அமைப்பில் இலக்கியத்தில் ஊர் என்ற தலைப்பில் பேசும்போது சுகாவின் பார்வையில் திருநெல்வேலி எப்படி மூங்கில் மூச்சாய் (வண்ணதாசன் சொன்னது :மூங்கிலில் புல்லாங்குழல் செய்வார்கள் தெரியும். சுகா அதில் மந்திரக்கோல் செய்திருக்கிறார்)வெளிவந்தது என்றுதான் பேசினேன். ஈர மனதுள்ளவர்களால்தான் இவ்வளவு சுவாரசியமாக, மனதுக்கு நெருக்கமான இலக்கியம் படைக்க முடியும். எனக்கு மிகப் பிடித்தமான புத்தகத்தின் விமர்சனத்தை அளித்த சுபத்ராவுக்கு நன்றி
You can order both the books online at the below link:
https://www.nhm.in/shop/Suka.html
சுகா பற்றிய சுபத்ராவின் கட்டுரையை எப்போதோ எதிர்பார்த்தேன். இப்போது தான் வந்திருக்கிறது. இரு புத்தகங்களும் பொக்கிஷங்கள். சுபத்ரா: One more Feather to your Cap :-)
ரசிகன்
எளிமையான விமர்சனம்
வாசிக்க முயற்சிக்கிறேன்
நன்றி சுபா
Post a Comment