
நண்பர்களை பார்த்திருக்கிறோம் ஆனால் காங்கிரஸ் பாஜக போன்ற நண்பர்களை பார்த்ததில்லை. மீடியா எவ்வளவு தான் இவர்களை உசுப்பேற்றினாலும் இவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு உயிர் நண்பர்களாக இருக்கிறார்கள்.
காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, ஊழல், ஊழலை மிஞ்சிய ஊழல்கள், உள்நாட்டுப் பாதுகாப்பில் குளறுபடி, பொருளாதார மந்தநிலை என தனது சாதனைகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லும் நிலையில், பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், காங்கிரஸையே ஆட்சியில் தொடர வைப்பது என்ற முடிவில் தீர்மானமாக உள்ளதாக கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் காட்டுகின்றன. வழக்கமாக தமிழக காங்கிரஸில் ஏற்படும் வேட்டி அவிழ்க்கும் சண்டை முறையை இந்த முறை பாஜகவிலுள்ள சிலரே முனைந்து செய்கின்றனர். அதற்கு தலைவர் ஜுரம் வந்த அத்வானி, உப தலைவர் காய்ச்சல் இல்லாத யஷ்வந்த் சின்ஹா, இரண்டுங்கெட்டான் தலவர் உமா பாரதி. இந்த உயர்'மட்ட' கூட்டத்தில் பிஜேபி தொண்டர்களுக்கு அத்வானியின் காய்ச்சல் பற்றி ரன்னிங் கமெண்டரி கொடுக்கிறார் ராஜ்நாத் சிங் என்ற பெரியவர்.
பாஜகவின் உயர்மட்டக் குழு கோவாவில் கூடி தேர்தலுக்கான வியூகங்களை கடந்த இரு நாட்களாக விவாதித்து வருகிறது. இதில் நரேந்திர மோதியைப் பற்றிய மிக முக்கியமான அறிவிப்பொன்று வெளியாகுமென மீடியாக்கள் அவதானித்து வந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்கள் சிறுபிள்ளைத் தனமாக காரணம் காட்டி இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. பாஜகவில் மோதியின் செல்வாக்கு உயர்வதையோ, அவரின் பதவி உயர்வதையோ விரும்பாத கூட்டணிக் கட்சிகள் வெவ்வேறு விதமான கருத்துகளைக் கூறி குழப்பங்களை அவ்வப்போது விளைவித்துக் கொண்டிருந்தாலும், பாஜகவிலிருந்தே வெளிப்படையாக அவருக்கு எதிர்ப்பு வெளிப்பட்டிருப்பது சற்றே வித்யாசமான காட்சி. ஏற்கனவே சில புகைச்சல்கள் இருந்து கொண்டிருந்தாலும், அவை தேர்தல் சமயத்தில் இவ்வளவு வெளிப்படையாகக் கிளம்புமென காங்கிரஸ் உட்பட எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை, அதுவும் மோதியின் அரசியல் வழிகாட்டி என பரவலாக அறியப்பட்ட அத்வானியிடமிருந்தும்.

ஆனால், அத்வானி என்ன மனநிலையிலிருக்கிறார், எதனால் இந்நிகழ்வைப் புறக்கணித்தார் என்பதில் குழப்பம் நீடித்துக் கொண்டிருக்கிறது. அவருடைய ஆழ்மனதிலுள்ள பிரதமர் பதவி அவா மட்டுமே மோதியின் செல்வாக்கு உயர்வதை அவர் விரும்பவில்லை என்று நம்பமுடியவில்லை. இந்நிகழ்வைப் புறக்கணித்திருக்கும் அத்தனை பேருமே, தனித் தனியாக தன்னைப் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், உமா பாரதி நீங்கலாக. இன்னொரு ஒற்றுமை, அனைவருமே மிகத் தீவிரமான ஆர்.எஸ்.எஸ் பின்புலமுடையவர்கள்! இதில், யஷ்வந்த் சின்ஹா, நான் ஏன் பிரதமராகக் கூடாது என்று ஒரு சமயத்தில் வெளிப்படையாகவே மீடியாவில் கேட்டவர். உமா பாரதி கட்சியில் ஒரு குழப்பவாதி என்ற அந்தஸ்தில் இருப்பதால், அவரின் புறக்கணிப்பு பற்றி அவ்வளவாக கவலைப்படத் தேவையில்லை. அத்வானி மட்டுமே இங்கு பிரதானமாகத் தெரிகிறார்.
அத்வானியின் உடல்நிலை சரியில்லை , நாளை கலந்து கொள்வார் என ராஜ்நாத் சிங் முதல் தினம் தெரிவித்தார், மறுதினமும் அவர் வரவில்லையாதலால், மருத்துவர்கள் அறிவுரை என்று மழுப்பிவிட்டார். விளைவு, மீடியாக்களுக்கு சரியான தீனி! நக்ஸல் பிரச்சனைகள், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் சரிவு போன்ற விஷயங்களெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஏன் ஷில்பாஷெட்டியே மண்ணை கவ்விவிட்டார்.
"அத்வானி புறக்கணிப்பு, பாஜகவில் பிளவு" என தலைப்புச் செய்தியாக்கி தானும் குளிர் காய்ந்து, காங்கிரஸாரையும் குளிர்காய வைத்துக் கொண்டிருக்கின்றனர். வேடிக்கையாக, திக்விஜய் சிங் முதற்கொண்டு தன்னை விமர்சனம் செய்யுமளவிற்கு அத்வானி தானாக ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டு கட்சியையும் தர்ம சங்கடத்திலாழ்த்திவிட்டார். இது நிச்சயமாக தேசத்திற்கு நன்மை செய்யப் போவதில்லை. தவிர, காங்கிரஸிலிருக்கும் அத்தனை பூசல்களையும், பிரதமரின் செயலற்ற தன்மை மற்றும் அவருக்கும், சோனியாவிற்குமிடையிலான கருத்து வேறுபாடுகளைப் பற்றி மூச்சேதும் விடாத கைக்கூலி மீடியாக்கள், இன்று பாஜகவில் தோன்றியுள்ள களையக் கூடிய கருத்து வேறுபாட்டை வைத்து, அதன் மூலமாக மிகப்பெரிய பிளவை ஏற்படுத்த முனைவதுதான் சோகம், இதற்கு தீனி போடுவது போன்று பாஜக செய்தித் தொடர்பாளர்களும் தத்து பித்தென்று உளறுவது இன்னமொரு பெரிய துரதிருஷ்டம்.

கடந்த சில பத்தாண்டுகளாக சேர்த்து வைத்திருந்த நன்மதிப்பத்தனையையும். என் தேசம் என் மக்கள் என்ற புத்தகத்தை தவிர கடந்த சில நாட்களில் இழந்ததைத் தவிர அத்வானி பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. இனியும் சாதிப்பாரென்ற நம்பிக்கையில்லை.
இவர்களின் புறக்கணிப்பிற்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது என்ற யூகத்திலும் பொருளிருப்பதாகத் தெரியவில்லை. மோதியும் தீவிரமான ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உடையவராக அறியப்பட்ட போதிலும், தன்னிச்சையாகச் செயலபடக் கூடியவர் என்பதால் ஆர்.எஸ்.எஸ் அவரை பிரதமராக விரும்பவில்லை என்ற கருத்து அடிபட்டாலும், தேர்தல் வெற்றிக்குப் பின்னர்தான் ஆர்.எஸ்.எஸ் இதுபோன்ற காய் நகர்த்தல்களை மேற்கொள்ளக் கூடுமேயொழிய, தேர்தலுக்கு முன்னரே, வெற்றிக்கு வேட்டு வைக்கும் விதமான குழப்ப வேலைகளை நிச்சயம் செய்யாது. தவிர, யஷ்வந்த சின்ஹா போன்றவர்கள் வெகு நிச்சயமாக மோதியின் மேலுள்ள காழ்ப்பு மற்றும் பிரதமர் பதவி மோகத்தால் இதனைச் செய்கின்றனர் என்று உறுதியாகக் கூறிவிடும் நிலையில், குழப்பமான நிலை, அத்வானியின் முடிவு பற்றி மட்டுமே!
இனி பாஜக உயர்மட்டக் குழு, இந்த தடைகளத்தனையையும் தாண்டி, மோதிக்கு ஒரு முக்கியமான பொறுப்பொன்றை அளிக்குமாயின், அது எழுந்த எதிர்ப்புகளை நாளடைவில் மழுங்கச் செய்துவிடும். இதற்கு மாறாக, மற்ற தலைவர்களை சமாதானம் செய்யும் நோக்கில், இன்னும் இழுபறி நீடித்தால், பாஜக முனைந்து தற்கொலை செய்து கொள்கிறது என்றுதான் பொருள்.
ஒரு மாநில முதல்வர் மக்களிடையே நாடு முழுவதும் மக்கள் பேச கூடிய தலைவராக உள்ளார். மோடி ஆட்சிக்கு பிரதமரானால் பேசாமல் அத்வானிக்கு குடியரசு தலைவர் பதவி தருவதாக சொல்லி பிரச்சனையை தீர்க்க வேண்டும் அது தான் இந்த இந்திய நாட்டுக்கு நல்லது !
உயர்மட்டக் குழுவை அத்வானி கடந்த 33 வருடத்தில் இதுவரை புறக்கணித்தது இல்லை என்பது கூடுதல் தகவல்.
பள்ளியில் "நான் பிரதமரானால்..." என்று கட்டுரை எழுத சொல்லுவார்கள். எழுதியவர்கள் எல்லாம் பிரதமர் ஆக வேண்டும் என்றால் முடியுமா ?