ஒரு பிரபல நூடுல்ஸ் விளம்பரம் ஒன்றில்…
அம்மா கடைக்கு சென்றிருக்கையில், எதையாவது சாப்பிட நினைக்கும் பதின்ம வயது மகள், அந்த நூடுல்ஸ் பாக்கெட்டை எடுத்து, நூடுல்ஸ் உணவைத் தயாரித்து விடுகிறாள்.கடையிலிருந்த வந்த அம்மா அதை ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பார்க்கிறாள்.
மேற்கூறிய விளம்பர நூடுல்ஸ் போணியாகவே இல்லை. காரணம் இந்திய அம்மாக்களின் மைண்ட் செட். ”அதெப்படி, நான் இல்லாம என் குழந்தை, தானாகவே ஒரு சிற்றுண்டியை சமைப்பது?”
அப்புறம், அந்த விளம்பரத்தை, அம்மா, பசிக்குது என்று மகள் கேட்பது போலவும், இரண்டே நிமிடத்தில் அம்மா நூடுல்ஸைத் தயாரித்துக் கொடுப்பது போலவும் மாற்றியதும், விற்பனை படு ஜோராக உயர்ந்தது.
இப்போதும் நிறைய அம்மாக்கள், தனது பள்ளி, கல்லூரி செல்லும் மகள், மகன்களுக்கு காலை உணவை ஊட்டுவதிலிருந்து, ஷீ, சாக்ஸ் எடுத்து வைப்பது வரை எல்லாமே செய்கிறார்கள்.( நான் இல்லேன்னா அவ(னு)ளுக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.
ஆனால், நம் குழந்தைகளை சுயசார்புடையவர்களாக மாற்றுவது,,வெற்றிகரமான குழந்தை வளர்ப்பில் ஒரு முக்கியமான இலக்காகும்,பச்சிளம் குழந்தைகளாக இருக்கையில், போஷாக்கு, சுத்தம், நகர்தல் போன்ற எல்லாவற்றிற்கும் பெற்றோரையே சார்ந்திருக்கின்றனர்.ஆனால், வளர, வளர, குழந்தைகள் வாழ்வின் அடிப்படை விஷயங்களான உணவு உண்ணுதல் போன்றவற்றைத் தாமே செய்யப் பழகினாலும், அன்பு, அரவணைப்பு, வழிகாட்டுதல், ஒத்துழைப்பு போன்றவைகளுக்கு பெற்றோரையே சார்ந்து இருக்கின்றனர்.
குழந்தைகளை எல்லா முடிவுகளையும் எடுக்க வைத்து,அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுப்பது அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதுடன், சிலசமயம், தவறான முடிவுகளுக்கு வழிகோடலாம்.அதே சமயம், பெற்றோர்களாகிய நாம், நமது அனுபவத்தை மட்டுமே முன்னிறுத்தி, அவர்கள் எல்லா விஷய்ங்களுக்கும் நம்மையே சார்ந்திருக்குமாறு செய்வது,அவர்களுக்காக நாமே எல்லா விஷய்ங்களையும் செய்வது அவர்களது முடிவெடுக்கும் திறனையும், சுயசார்புத் திறனையும் வளர விடாது நசுக்கி விடும்.
இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு சமநிலைத் தன்மையைக் கடைப்பிடிப்பது, அந்தந்த வயதுக்கேற்ற சுயசார்புத் தன்மையைப் பயிற்றுவிப்பது உங்கள் குழந்தையை ஒரு சுயசார்புள்ள, வெற்றியாளராக உருவாக்க உதவும்.
ஒவ்வொன்றாகக் கற்பிக்கவும்:
உங்கள் குழந்தைகளுக்கு செய்யும் எந்த ஒரு விஷயத்தையும், நீங்கள் மெதுவாக , குழந்தை அதை நன்கு கவனித்துக் கற்றுக் கொள்ளும் வகையில் நிதானமாக செய்யவும். உதாரணத்திற்கு, சாக்ஸ் அணிவிக்கிறீர்கள் எனில், நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள் என்பதை உங்கள் குழந்தை கவனிக்க ஊக்குவியுங்கள். சாக்ஸின் உள், வெளி பக்கத்தை விரித்துக் காட்டி, சரியான, பக்கத்தைக் காட்டவும். சாக்ஸை மெதுவாக அணிவித்து, அடுத்த முறை உங்கள் குழந்தையையே அணியச் சொல்லவும்.
பொறுமையுடன் இருக்கவும்:
ஷீ லேஸை உங்கள் குழந்தை கட்டுகையில், அவனருகில் நின்று கவனிக்கவும்.மெதுவாக, பொறுமையாக அவன் கட்டி முடிக்கும் வரை அமைதி காக்கவும். தவறாக செய்தால் மட்டும், எப்படி சரியாக செய்வது என்று சொல்லிக் கொடுங்கள்.இன்னொரு முறை நீயாகவே செய்கிறாயா? என்று கேட்டு மீண்டும் செய்யச் சொல்லவும்.
கவனிக்கவும்:
இப்படியாக குழந்தையை , பல்விளக்குவது, உடைகள் அணிவது, சாப்பிடுவது, என்று ஒவ்வொரு விஷயமாக செய்யச் சொல்லி ஊக்குவித்து, அவன் அதை செய்கையில் கவனித்து வரவும். தவறாக செய்கையில் அதைத் திருத்துவதை விட, முதலிலேயே, அதை எப்படி சரியாக செய்வது என்று நீங்கள் ஒரு முறை பொறுமையாக சொல்லிக் கொடுத்தால், குழந்தை அதை சுலபத்தில் கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
முதல் பனிரெண்டு மாதங்களில், குழந்தை, பொம்மையைப் பிடிக்கையில், புரண்டு படுக்கையில்,கிலுகிலுப்பையை அசைக்கையில், சப்தம் எழுப்ப முயற்சிக்கையில், உட்கார முயல்கையில், பிடித்துக் கொண்டு எழுகையில் உண்மையான உற்சாகத்துடன் அதைப் பெருமிதமாக ஊக்குவிக்கவும்.
இரண்டு வயதுக்கு மேலான குழந்தைகளை செருப்பு,ஷீ அணியச் சொல்வது, தானாக உணவு உட்கொள்வது, சிறிய பிளாஸ்டிக் பாத்திரங்களை, அதனிடத்தில் வைக்கக் கற்றுக் கொடுப்பது உடைகளை அணியச் செய்தல் போன்ற செயல்களை நம்முடைய கண்காணிப்பில் செய்யச் சொல்லலாம். முதலில் தடுமாறும் குழந்தைகள், அடுத்தடுத்த முறைகளில் தேர்ச்சி பெற்று, எளிதில் இவைகளை செய்ய இயலும். இம்மாதிரி செயல்களில், சின்னச் சின்ன ஏமாற்றங்கள் நிகழலாம். பரவாயில்லை என குழந்தை அதை அனுபவிக்க அனுமதிக்கவும்.
மூன்று /நான்கு வயதிற்கு மேல் ஆன குழந்தைகள் தினசரி செயல்களான, பல் விளக்குதல், உடைகளை அணிதல், பொம்மைகளை எடுத்து வைத்தல், பழங்களைக் கழுவுதல் துணிகளை எடுத்துப் போடுதல் போன்ற சின்னச் சின்ன வேலைகளை எளிதில் செய்வர்.இதை வேலையாக செய்யச் சொல்லாமல், அவர்களது செயல்திறனை வளர்க்கும் பயிற்சியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்,. ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்னரும் அவர்களைப் பாராட்டி உற்சாகப் படுத்துங்கள்
உங்கள் குழந்தை, ஏதேனும் உதவிக்கு, உங்களை அழைக்கையில், அதைச் செய்வதற்கு முன், ”என் உதவி இல்லாமல் இதை அவன் வேறு ஏதும் முறையில் செய்ய முடியுமா?” என்று கேட்டுக் கொண்டு , மாற்று வழிகளைப் பற்றி யோசிக்கவும்.
வெவ்வெறு வகையான விருப்பத் தேர்வுகளை (choices) உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கவும். என் ஒன்றரை வயது மகனிடம், எந்த ரைம்ஸ் வேண்டும் என்றால், முதலில் சொல்வது ”இலா லா” என்பான். (நிலா நிலா ஓடி வா) அடுத்து என்ன வேண்டும் என்று கேட்டால், ”பஃப்” என்பான் (the wheels on the bus) ”பஸ்” என்று இன்னும் சொல்லப் பழகவில்லை. எந்த விளையாட்டு விளையாடலாம், எந்த நர்சரி பாடல் பாடலாம், மிருகக் காட்சிச் சாலைக்குப் போனால், அவனுக்கு இஷ்டமான எந்த விலங்கை முதலில் பார்க்கலாம், பெட் டைம் ஸ்டோரியாக எந்தக் கதைப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று இப்போதிருந்தே பல சாய்ஸ்கள் கொடுத்து தேர்ந்தெடுக்கச் சொல்லவும்.
இன்னிக்கு ப்ளூ சர்ட்டா, க்ரீன் ஷர்ட்டா?. தோசை வேணுமா? சப்பாத்தி வேணுமா? என்கிற கேள்விகளைக் கேட்டு அவனையே முடிவெடுக்கச் சொல்லுங்கள். இது போன்ற சமயங்களில் நாம் கொடுக்கும் சாய்ஸ்களை இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவும். நான்கைந்து சாய்ஸ்கள் அனாவசியம் மற்றும் தேவையற்ற குழப்பத்தைக் கொடுக்கும்.
குழந்தையிடம் நடத்தும் உரையாடல்கள் மூலம் அவனது சிந்தனையைத் தூண்டி விட்டு சின்னச் சின்ன விஷய்ங்களில் முடிவெடுக்கும் திறனை மெல்ல மெல்ல வளர்க்கவும்.முக்கியமாக,.
வளரும் குழந்தை முடிவெடுக்கும் ஒவ்வொரு சாய்ஸிலும் இருக்கும், நன்மை, தீமை, சாதக பாதகங்களை அறியக் கற்றுக் கொடுக்கவும்.
குழந்தை வளர வளர, நீங்கள் அதற்குக் கொடுக்கும் சுதந்திரத்தின் அளவையும் அதிகரிக்கலாம்.
பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த குழந்தைகளை, அவர்கள் செய்ய இருக்கும் பல்வேறு செயல்களை ஒரு லிஸ்ட் போடச் சொல்லி, ஒவ்வொன்றாக அவர்கள் அதை செய்து முடிக்கையில் அதை டிக் பண்ணச் சொல்லுங்கள்.
தாங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முடிவின் பின் விளைவுகளை குழந்தைகளை உணருமாறு செய்யவும்.
சுயசார்புத் தன்மையை வளர்க்கையில் உங்கள் சட்ட திட்டங்களை தெளிவாக சொல்லி விடுங்கள். உதாரணத்திற்கு, சாலையைக் கடக்கையில் என் கையை கண்டிப்பாகப் பிடித்துக் கொள்ளவும்.இந்த ரூல்ஸ்களில் எந்த மாற்றத்தையும் எதிர் பார்க்க முடியாது என்று உங்கள் குழந்தைக்கு தெளிவாக உணர்த்தி விடவும்,
சுயசார்புத் தன்மையை வளர்க்க, குழந்தைகளின் மொழித் திறனை நன்கு வளர்க்க வேண்டும். பள்ளியிலோ, நண்பர்களுடன் விளையாடுகையிலோ, தனக்கு வேண்டிய உதவியை ஆசிரியர்களிடமோ, நண்பர்களிடமோ, கேட்பதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், இது எல்லா நேரங்களிலும் அம்மாவையே எதிர்பார்க்கும் சார்புத் தன்மையைக் குறைக்க உதவும்
”இந்த செயலை செய்தால், உனக்கு இதைத் தருகிறேன்” என்று எல்லா விஷயங்களுக்கும் திருமங்கலம் ஃபார்முலா டீல்களை குழந்தைகளிடம் போடாதீர்கள். நல்ல விஷயங்களைச் செய்து முடிப்பதால் வரும் நேர்மறை உணர்வும், வெற்றிகரமான மனநிலையுமே எப்போதும் சிறந்த ஊக்குவிப்பாக இருப்பது நல்லது.
சுயசார்புத் தன்மையுள்ள குழந்தைகள் பின்னாளில், தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே தீர்க்கவும், தாங்கள் மேற்கொள்ளும் விருப்பத் தெரிவின் பின் விளைவுகளை அறிந்து நல்ல தீர்மானங்களை எடுப்பவர்களாகவும் வளர்கின்றன.
தீர்மானங்கள் சின்னதோ, பெரியதோ, வீட்டிற்கோ, நாட்டிற்கோ அதனதன் அளவில் நம்மை பாதிக்கின்றன.
டாக்டர் பிரகாஷ்
www.rprakash.in
தமிழ் நாட்டில் வயசான குழந்தைகள் இன்று கூட எல்லாத்துக்கும் அம்மாவையே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர் ;)