பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 05, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 5

கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனப்படும் தகவல் தொடர்புத் திறனை குழந்தைகளிடம் திறம்பட வளர்ப்பதைப் பற்றிப் பார்ப்போம்.
"Seek first to understand, not to be understood." குழந்தைகளிடம் நாம் உரையாட வேண்டிய விதத்தின் சாரத்தை இந்த மேற்கோள் நமக்கு உணர்த்துகிறது.

வள்ளுவர் இப்போது இருந்திருந்தால், “கம்யூனிகேஷன் ஸ்கில் இல்லார்க்கு இவ்வுலகமில்லை” என்று மாற்றி எழுதி இருப்பார்.அந்த அளவுக்கு, அது ஒரு அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. சரியாக, தெளிவாக கம்யூனிகேட் செய்ய முடியும் குழந்தைகள் மகிழ்ச்சியுடனும், பள்ளியில் நன்கு திறமைசாலிகளாகவும்,பிற்காலத்தில் நன்கு பணம் சம்பாதிப்பவர்களாக இருப்பவர்களாகவும் விளங்குவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குழந்தைகள், அவர்கள் மனதில் இருப்பதைத் தெளிவாக வெளிப்படுத்த (express) வைப்பது எப்படி?

இதற்கு சிறந்த வழி, குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் எதையுமே விளையாட்டுகள் (Fun) மூலமும், அவர்களின் ஐம்புலன்களையும் முழுவதும் ஈடுபடுத்தும் செயல்களின் மூலமும் கற்றுத் தருவதே.
குழந்தைகளிடம் நீங்கள் தொடர்ந்து பேசுவதன் மூலமே அவர்களின் பேச்சுத் திறனை வளர்க்க முடியும். இதற்கு நல்ல நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்க வேண்டாம். குழந்தை பிறந்ததில் இருந்தே நீங்கள் அவளு(னு)டன்உரையாடத் துவங்கலாம்.
உங்கள் முகத்தை குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். குழந்தையின் அருகே சென்று அதன் முகம் பார்த்து, மெதுவாகப் பேசவும்.அதன் பின், உங்கள் குழந்தை எழுப்பும் ஒலிகளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்து, அதை கவனிக்கவும்.(Listen). குழந்தையின் பேச்சை நீங்கள் காது கொடுத்து கவனிப்பது, அதன் சுய மதிப்பை (Self-Esteem) அதிகரித்து, அவர்களை மகிழ்விக்கும்.பொதுவாக, குழந்தைகள் 18 மாதங்கள் முதல் சரளமாகப் பேச ஆரம்பிப்பர்.உங்களின் முயற்சியைப் பொறுத்து இதை இன்னும் விரைவாக்கலாம்.


குழந்தைகளிடம் நீங்கள் பேசுவதால்…
• நீங்கள் பேசுவதை, உங்கள் வாயசைப்பை நன்கு கவனித்து, பேசுவதைக் கற்றுக் கொள்கிறது
• குழந்தையின் மூளையின் நரம்புத் தொடர்புகள் தூண்டப்பட்டு, கற்றலைத் துரிதப் படுத்துகிறது
• பின்னாளில் நல்ல வாசிப்பாளராக, எழுத்தாளராக வருவதற்கு ஒரு சரியான அடித்தளம் அமைக்கிறது.
• சமூகத் திறன்கள் (Social Skills) மற்றும் பழகும் திறன்களை (good relationships) கற்றுக் கொடுக்கிறது
• உங்களின் அன்பை, குழந்தை புரிந்து கொள்ள ஏதுவாகி, அதன் சுய மதிப்பையும் அதிகரிக்கச் செய்யும்.
• குழந்தைக்கும், உங்களுக்குமான இணைப்பை (bond) வலுப்படுத்தும். நினைவிருக்கட்டும், இந்த இணைப்பின் பலத்தைப் பொறுத்தே, குழந்தைக்கும் உங்களுக்கும் இருக்கும் கம்யூனிகேஷன் ஆழமாகும்.

உரையாடல் ஆலோசனைகள் (Tips):
கீழ்க்கண்ட டிப்ஸ்களைக் கடைப்படிப்பதன் மூலம் உங்கள் குழந்தையின் மொழித் திறன்,(Language skills) மற்றும் கம்யூனிகேஷன் திறன்களை வளர்க்கலாம்.

விளையாட்டிற்கென தனி நேரம் ஒதுக்கி, அப்போது நன்கு உரையாடலாம்
நர்சரி ரைம்ஸ், மற்றும் குழந்தைப் பாடல்களைப் பாடிக்காட்டவும். மிக முக்கியமாக அவைகளை ஆக்சனுடன் பாடிக்காட்டவும்.
வித விதமான ஒலிகளை, வாகனங்கள், விலங்குகள் எழுப்பும் ஒலியைக் கேட்க வைக்கவும்.
நீங்கள் பேசும் போது, குழந்தையின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பவும்.
குழந்தை வளர வளர, அதன் சொல் வளத்தை (vocabulary)மேம்படுத்தவும்
(உதாரணம்) உனக்கு ஜீஸ் வேணுமா? பால் வேணுமா?
ஒரு செயல் நடக்கையிலேயே அதைப் பற்றிப் பேசவும்.

(உ.ம்) கடையில இருந்து என்னென்ன வாங்கிட்டு வந்தோம் என்று பையை அவிழ்த்து ஒவ்வொன்றாகக் காட்டுதல்
குழந்தையின் பேச்சுக்கு (அது உங்களுக்குப் புரியா விட்டாலும் கூட)ஏதாவது ஒரு பதில் மொழி கூறவும். குழந்தை அந்த வாக்கியத்தை முடிக்கும் வரை அமைதி காத்து, அதன் பின் நீங்கள் உங்கள் முறை எடுத்துப் பேச/ பதில் அளிக்கலாம்.
உங்கள் தொனி (tone) முக வெளிப்பாடுகள் (facial expressions) மீது கவனமாக இருங்கள். நீங்கள் சொல்லும் வார்த்தைகளை விட அதிக சக்தி வாய்ந்தவை இவை.

மேஜிக் வேர்ட்ஸ் எனப்படும் வார்த்தைகளான, ஸாரி, ப்ளீஸ், தேங்க் யூ, ஐ லவ் யூ போன்றவைகளை அடிக்கடி உணர்வு பூர்வமாக பயன்படுத்தவும்.

பொம்மைகள், படக் கதைகள் மூலம் உங்கள் குழந்தைகளுடன் விளையாட தினமும் கொஞ்ச நேரமாவது ஒதுக்கவும்.கதைகளில் வரும் விலங்குகள், பறவை, மனிதர்களின் குரலை, உணர்ச்சி பூர்வமாக ஏற்ற இறக்கத்துடன் மிமிக்ரி செய்யவும். உங்கள் குழந்தை பேச ஆரம்பித்தவுடன், அந்தப் படத்தில் என்ன நடக்கிறது என்று புத்தகப் படத்தைக் காட்டிக் கேட்கவும். நமது கேள்விகள் குழந்தையின் மூளையைத் தூண்டி, கற்பனா சக்தியை அதிகப் படுத்துகிறது.கதை சொல்வதன் மூலம்,முன்னர் குறிப்பிட்ட 9 multiple intelligences களில் ஏறக்குறைய எல்லாவற்றையும் தூண்டி விட முடியும்.
கதைகளை சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, சின்னச் சின்னக் கேள்விகளைக் கேட்டு, அவர்களை பதில் சொல்ல ஊக்குவிக்கவும். (அப்புறம் அந்தக் காக்கா என்ன பண்ணுச்சு?)

குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும். அப்படிப் பார்க்க வேண்டுமெனில், குழந்தைகளுக்கான சேனலைப் போட்டு, அதில் வரும் காட்சிகளை, உங்கள் குழந்தைகளுடன் பேசிய படியே பார்க்கலாம். (இங்க பாரு யானை வருது.. அது எப்படி நடக்குது பாத்தியா?)

நீங்கள் செய்யும் செயல்களையும், (அம்மா, இப்ப உனக்கு ரைம்ஸ் சொல்லப் போறேன், அப்பா, உனக்கு இப்ப வேற சட்டை போடப் போறேன்) குழந்தைகள் செய்யும் செயல்களையும் (பஸ்ஸ வச்சி விளையாடுறியா?) அவர்களிடம் சொல்லி உரையாடலாம்.

கண்டிப்பாக , அவர்களுடன் eye contact வைத்துக் கொண்டு உரையாடலை நிகழ்த்தவும்.
குழந்தைகளுக்கு க்ரேயான்கள், பென்சில்,பேப்பரைக் கொடுத்து, அவர்களை ஏதாவது எழுத வைக்க முயற்சிக்கவும். hand-eye coordination ஐ வளர்க்க இது உதவும்.

குழந்தைகளின் வயதுக்கு ஏற்றாற் போல உங்களது உரையாடலை/ கட்டளைகளை, ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தைகள், ஒரு சிறிய வாக்கியம் என்று அமைத்துக் கொள்ளவும்.

குழந்தைகளிடம் நீங்கள் உரையாடுகையில் டிவி, டேப் ரெகார்டர் போன்ற இடையூறுகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
குழந்தைகளிடம் நீங்கள் செய்யும் ப்ராமிஸ்களை கண்டிப்பாக நிறைவேற்றவும். ( ”நீ சமத்தா மம்மு சாப்டன்னா, அப்பா உன்னய பைக்ல ஒரு ரவுண்டு கூட்டிட்டுப் போவனாம்” என்றால், கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்)
Non–verbal communication எனப்படும், உடல் மொழிகளையும் உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவும்.
அம்மா, அப்பா இரண்டு பேரும் வேலைக்குப் போகும் இந்தக் காலத்தில் சர்வெண்ட் மெய்டிடம் குழந்தையை விட்டு விட்டுப் போகும் பெற்றோர்கள், சர்வெண்ட் மெய்டிடம் குழந்தையிடம் எப்படிப் பேசுவது, என்று ஒரு சில அடிப்படை விஷயங்களையாவது சொல்லிக் கொடுப்பது நல்லது. நினைவிருக்கட்டும். ஒரு நாளின் முக்கால்வாசி நேரத்தை உங்கள் குழந்தை அவருடனே கழிக்கிறது.

குழந்தைகளுக்குக் கம்யூனிகேஷன் ஸ்கில்லை வளர்க்கையில் ஒரு மிக முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் எந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ, அந்த விஷயத்தை மட்டுமே அவர்களிடம் சொல்ல வேண்டும்.

அவர்கள் அதை செய்யக் கூடாது என்று நாம் நினைக்கிறோமோ, அதை சொல்லக் கூடாது.
நாம் சொல்லும் எந்த ஒரு விஷயமும் குழந்தையின் மூளையில் படமாகப் பார்க்கப்படும். குழந்தையின் எதிர்வினையும் அது காணும் அந்தப் படத்தைப் பொறுத்தே அமைகிறது.

கோடை விடுமுறைக்கு எங்கள் ஊருக்கு வந்திருந்த என் உறவுக்காரக் குழந்தைகள் செந்தில், சங்கர் (இருவருமே பத்து வயதுக்குட்பட்டவர்கள்) வீட்டின் பின்புறமிருக்கும் புளிய மரத்தின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்து, எங்கே அவர்கள் விழுந்து விடுவார்களோ என்று பயந்து போன அவர்களின் பெற்றோர் சத்தமிட்டனர்.

சங்கரின் அம்மா ஓடி வந்து “சங்கர், கீழ விழுந்திராத!, கீழ விழுந்திராத!” என்று பலமாக சத்தமிட்டார்.சில விநாடிகளில், சங்கர் கீழே விழுந்தான்.அதே நேரத்தில் இன்னொரு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த செந்திலைப் பார்த்து, அவனது அம்மா, “செந்தில், கெட்டியாப் பிடிச்சுக்க, நல்லா கெட்டியாப் பிடிச்சுக்க” என்று பலமாக சொன்னார். மரக்கிளையை கெட்டியாக பிடித்துக் கொண்டு, விழாமல் தொங்கிக் கொண்டிருந்த செந்திலை மெதுவாகக் கீழே இறக்கி விட்டோம்.

சங்கரின் அம்மா, அவனிடம் “கீழ விழுந்திராத” என்று சொன்னவுடன், சங்கரின் மூளை கீழே விழும் அந்தக் காட்சியைத் தான் முதலில் கண்டது. பின்பு, கீழே விழாமல் இருக்கும் காட்சியை அதனால் கற்பனை செய்ய இயலவில்லை. குழந்தை கீழே விழுந்தான். மாறாக, செந்திலின் அம்மா, அவனை, “நல்லா, கெட்டியாப் பிடிச்சுக்கோ” என்று கட்டளையிட்டவுடன், செந்திலின் மூளையில், மரக் கிளையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கும் காட்சி தோன்றி, அவ்வாறே அது செயல் படுத்தியது.
குழந்தைகளின் மூளை கேமரா மெமரி போல- தான் பார்ப்பதை, நினைப்பதை, படங்களாக நினைவு படுத்திக் கொள்ளும். மேலும், எதிர்மறைக் கட்டளை பெற்ற அந்தப் பிஞ்சு மூளைக்கு, கீழே விழுவதைத் தான் முதலில் கற்பனை செய்து பார்க்கத் தெரிந்ததே அன்றி, அது நிகழாமல் சரி செய்வது எப்படி என்று தெரியவில்லை.

இந்த சம்பவத்தில் இருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், குழந்தைக்கு எப்போதும் பாசிட்டிவ் கட்டளைகளை மட்டுமே தரவேண்டும். எதிர்மறைக் கட்டளைகளைக் கொடுத்தால் எதை நாம் செய்யக் கூடாதென்று சொல்கிறோமோ, அதையே அவர்கள் செய்வார்கள். கையை வாயில வைக்காத, என்று சொல்வதை விட கைய சேத்து வச்சுக்கோ, கைய நேரா கீழ வை போன்ற நேர்மறை வாக்கியங்கள் அவன் கையை வாயில் வைப்பதைத் தடுக்கும்.

நம்ம ஊரு அரசியல்வாதிகளைப் போல இதுதான் சான்ஸ் என்று குழந்தைகளிடம் ஒரேயடியாகப் பேசிக் கொண்டே இருந்து அவர்களை போர் அடிக்க வேண்டாம். அவர்கள், மெளனமாக இருந்து, சுற்றுப் புற விஷயங்களை கவனித்து கிரகிக்கவும் கொஞ்சம் அவகாசம் கொடுக்கவும் ;) ;)
டாக்டர்.பிரகாஷ்
www.rprakash.in

5 Comments:

லுங்கி லூர்துசாமி said...

அய்யா.. எனக்கு ஒரு டவுட்டு ... நீங்க எந்த டாக்டர் பிரகாஷ்??

Anonymous said...

Manchal comment missing....iv sleeping...or busy talking to bab(i)es

Anonymous said...

சமீபத்தில் குழந்தைகளைப் பற்றி சமஸ் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அது போன்ற விஷயங்களையும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் டாக்டர். - கமலா சுப்ரமண்யம், திருச்சி.
சமஸ் எழுதிய கட்டுரை இணைப்பு: http://writersamas.blogspot.in/2013/02/blog-post.html

டாக்டர் பிரகாஷ் said...

//சமீபத்தில் குழந்தைகளைப் பற்றி சமஸ் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அது போன்ற விஷயங்களையும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் டாக்டர். - கமலா சுப்ரமண்யம், திருச்சி.//

மிகவும் பயனுள்ள கட்டுரை. அவசியமானதும் கூட. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நானும் அது பற்றி எழுதுவேன்.

Anonymous said...

very good topic. its refreshing to see something useful in idlyvadai.-
k.rahman