இந்த வாரம்.... ஒரு படம், ஒரு கடிதம்.
செய்தி # 1
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான படங்கள்தான் இன்றைய மாணவர் போராட்டம், மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியது,அதிமுகவின் சட்டசபை தீர்மானம் போன்ற தொடர் நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம்.
பாலச்சந்திரனுக்கு முன்பே இது போன்ற ஒரு நம் தமிழ் நாட்டின், உலகின் கவனத்தை இலங்கையின் போர்குற்றங்கள் மீது திருப்பி இருக்கவேண்டியவர்.. இசைப்பிரியா.
மனிதர்கள், மிருக இனத்தைவிட மிகவும் கொடூரமானவர்கள் என்பது மட்டும் இந்த சேனல் 4 வெளியிட்டு இருக்கும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் வீடியோ ஆதாரத்தின் மூலம் உறுதிபடுத்தபட்டுள்ளது.
அப்போது,அந்த வீடியோவில் வெளியான ஒரு செய்தி....இசைப்ரியாவின் கோர மரணம்.
ஷோபா - ஒரு அழகான,எதையாவது சாதிக்கவேண்டும் என்கிற பெண். இலங்கையில் உள்ள யாழ்ப்பணத்தில் 1982 ஆம் வருடம் பிறந்தவர். பின், அவரது குடும்பம் வன்னிக்கு குடிபெயர்ந்தது.
அங்கேயே தனது படிப்பை முடித்த அவர், இலங்கையின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தி நிறுவனமான tamilnet என்ற நிறுவனத்தில் நிருபராகவும், செய்தி அறிவிப்பாளாராகவும் பணியில் சேர்ந்தார்.அழகிய பெயரில், இசைப்ரியா என்று தன்னை அழைத்துகொண்டார்.
2007 - ஆம் வருடம், புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து, ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆனார்.
அப்போதுதான், அவர் வாழ்வில் முதல் புயல் தாக்கியது. பிறந்து ஆறே மாதங்கள் ஆன அவர் குழந்தை குண்டு வீச்சில் பலியானது.
ஆனாலும், மனம் தளராத இசைப்ரியா, செய்தி வாசிப்பாளாராக, ஈழ தமிழ் மக்களின் மனசாட்சியாக ஒலித்தார்.
சேனல் 4 வீடியோவின் உச்ச கட்ட கொடுரம் இதுதான்...கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக கற்பழிக்கபட்டு, பிணமாக கிடந்தார் இசைப்ரியா.
ஆனால், பாலச்சந்திரனின் ஒரே படம் ஏற்படுத்திய தாக்கத்தை, ஏனோ இதற்க்கு முன்பு வெளிவந்த சேனல் 4 வீடியோ படங்கள் நம்மிடம் உண்டாக்காமல் போய்விட்டன.
காஷ்மீரில், தீவிரவாதிகள் தேடல் என்ற பெயரில் அங்கு உள்ள பெண்களிடம் நமது இந்திய ராணுவம் தகாத முறையில் நடந்து கொண்டதாக,காஷ்மீர் மாநில பெண்கள் அவ்வப்போது போராட்டங்களில் இறங்குவது இன்றும் வாடிக்கை.
இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையும், தமிழ் பெண்களை கற்பழித்தது என்கிறார் மட்டகளப்பை சேர்ந்த என் நண்பர் ஒருவர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு ஆதிவாசி பெண்ணை, இந்திய ராணுவ வீரர்கள் கற்பழித்துவிட, ராணுவ தலைமை அலுவலகம் முன்பு 'நிர்வாண போராட்டத்தில்' ஈடுபட்டார்கள் ஆதிவாசி பெண்கள்.
இவ்வளவு ஏன்?
வீரப்பனை தேடுகிறோம் என்று சென்ற நம் தமிழக காவல் படைகள், வாசாத்தி இன பழங்குடி இன பெண்களை சூறையாடியது நம் நினைவுக்கு வருகிறது.
இன்றும் அந்த வழக்கு நடந்து கொண்டே...இருக்கிறது.
இந்த பழங்குடி இன பெண்களை கற்பழித்த தமிழக காவலர்களை சட்டம் தூக்கில் போட்டதா?
அன்று ஆட்சியில் இருந்தவர்களை போர்குற்றவாளியாக அறிவித்தா?
அதைப்போலவே, இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே அவர்களை 'போர்க்குற்றவாளி' என்று அறிவித்து, சர்வதேச சமுகத்தின் முன் அவரை நிறுத்துவது என்பதெல்லாம். சாத்தியமே இல்லாத விஷயம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
இராக் பெண்களை, ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்திய அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளிடம் இதற்க்கு எப்படி தீர்வு கேட்க முடியும்??
செய்தி # 2
"எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,அவர் நல்லவர் ஆவதும்,தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே" எக்காலத்துக்கும், இலங்கை போன்ற எந்த நாட்டுக்கும் பொதுவான தத்துவம் இது.
குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு அருமையான தொடர் எழுதி, இட்லிவடை மூலம் நல்ல காரியம் செய்து வரும் டாக்டர்.ப்ரகாஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். பெற்றோரை போன்று ஒரு நல்ல மனிதனை வளர்ப்பதில் அவனது ஆசிரியருக்கும் மிக முக்கிய பங்கு உள்ளது.
தனது மகனின் பள்ளித்தலைமையாசிரியருக்கு ஒரு தந்தை எழுதிய கடிதம் உலக அளவில் கவனம் பெற்றது.
அந்த தந்தை....அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம் அவர்கள்.
ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை என்று பட்டியல் தருகிறார் திரு.ஆபிரகாம் லிங்கம். ஒரு சிற்றிதழில் நான் படித்த அந்தக்கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே.
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று, அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்,
ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.
அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.
இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கம்.
ஒரு கொசுறு செய்தி: சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், பல தனியார் பள்ளிகள் தங்களின் மாணவர்களுக்கு நொட்ஸ் கொடுத்து தேர்வுமையத்தில் உதவி(!?) புரிந்து பெரும் கல்விச்சேவை செய்து இருக்கிறார்கள்.
(நன்றி, இனி, அடுத்தவாரம்)
-இன்பா