பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 03, 2013

சன்டேனா இரண்டு (3-2-13) செய்திவிமர்சனம்இந்த வாரம்... நான் படித்ததில் பிடித்த, பிப்ரவரி மாதத்துடன் தொடர்புடைய இரண்டு செய்திகள். .

செய்தி # 1

இங்கே...சுஜாதா அவர்களின் நினைவுகள் குறித்து கவிஞர் திரு.குவளை கண்ணன் ஒரு இலக்கிய இதழில் எழுதிய ஒரு கட்டுரையின் சில பகுதிகள்.1979, 80இல் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது என் வகுப்புத் தோழனான ஸ்ரீதர் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த வீடு எனக்குப் பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தது. வீட்டின் பல இடங்களில் சுவரை மறைத்துக்கொண்டு புத்தகங்கள் நிரம்பிய கண்ணாடி வைத்த மர அலமாரிகள் நின்றன. மேசை நாற்காலிகள்மீது பக்க அடையாளம் வைக்கப்பட்ட புத்தகங்கள் கிடந்தன. பாடப் புத்தகங்களைத் தவிர வேறெந்தப் புத்தகமும் இல்லாத வீட்டில் வளர்ந்த என்னைப் புத்தகங்கள் நிரம்பிய அந்த வீடு கவர்ந்தது.ப்ளஸ் டூ முடித்துவிட்டு ஸ்ரீதரும் நானும் ஒரே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்ந்தோம். ஸ்ரீதரின் அப்பா டாக்டர் எஸ். கிருஷ்ணமாச்சாரி M.D., DMRD, சேலம் அரசு மருத்துவமனையில் ரேடியாலாஜிஸ்டாக இருந்தார். அந்த வீட்டோடு நெருக்கம் அதிகரித்தது. அந்த வீட்டில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். புத்தகங்களின் முதல் பக்கத்தில் எஸ். கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரும் ஒரு தேதியும் எழுதியிருக்கும். சில புத்தகங்களில் சீனிவாசராகவன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். புத்தகங்கள் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளுக்குள் அவசியம்போல் ஆகியிருந்தது. ஸ்ரீதரின் அம்மாவிடம் படிக்கப் புத்தகம் கேட்டபோது, டாக்டரிடம் கேட்கச் சொல்லிவிட்டார். நான் அதுவரை டாக்டரிடம் பேசியதில்லை.


படிக்க ஏதாவது புத்தகம் வேண்டுமென்று டாக்டரிடம் கேட்டேன். ஏதாவதுன்னா எப்படி, எந்தப் புத்தகம் வேண்டும் என்றார். தெரியவில்லை என்றேன். யாரையெல்லாம் படித்திருக்கிறாய் என்று கேட்டார். சுஜாதா படிச்சிருக்கேன் சார் என்றேன் ஆர்வமாக. வேற யாரையாவது சொல் என்றார். ஜெயகாந்தன் கதைகள் சிலவற்றைப் படிந்திருந்தேன். அவரது 'கங்கை எங்கே போகிறாள்' தொடர்கதை வேறு ஏதோவொரு பத்திரிகையில் தொடராக வந்துகொண்டிருந்தது. நான் அதை விடாமல் படித்துக்கொண்டிருந்தேன்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, கிரிகரி பெக், கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்றிருந்த என்னுடைய நாயகர்கள் பட்டியலில் ஜெயகாந்தனும் சுஜாதாவும் ரஜினி கமலோடு அப்போதுதான் சேர்ந்திருந்தார்கள். ஜெயகாந்தன் பெயரைச் சொன்னேன். டாக்டர் உள்ளே போய் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருந்த புதுமைப்பித்தன் சிறுகதைகள் புத்தகத்தை எடுத்துக் கொண்டுவந்து தந்தார். பின்னர் வரிசையாகப் புத்தகங்களைத் தந்தார். கார்க்கி, செகாவ், கொகால், டால்ஸ்டாய், டாஸ்டாய வெஸ்கி, காம்யு, ஜாய்ஸ் என்று ஒவ்வொரு புத்தகத்தையும் திருப்பித் தரும்போது அந்தப் புத்தகத்தைப் பற்றி, அந்தப் புத்தகம் என்னை என்ன செய்தது என்பதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவைத்தார்.அந்தச் சமயத்தில் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்த நான், பச்சைப் பாவாடை சட்டை, வெள்ளை நிறத் தாவணி அணிந்து சீருடையில் ப்ளஸ் ஒன் படிக்கப் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த பெண்மீது காதல் வயப்பட்டு, கவிதை கவிதையாக எழுதிக்கொண்டிருந்தேன். கவிதையெல்லாம் எழுதறயாமே கொண்டு வா பார்க்கலாம் என்றார் டாக்டர். பக்கம் பக்கமாக எழுதி வைத்திருந்ததில் இருந்து நன்றாக இருப்பதாகத் தோன்றிய சிலவற்றை எழுதி எடுத்துக்கொண்டுபோய் டாக்டரிடம் தந்தேன்.சில நாள்கள் கழித்துத் தினமணி கதிரில் இருந்து என்னைப் பற்றிய குறிப்போடு எனது கவிதைகளை அனுப்பும்படி கேட்டு ஒரு கடிதம் வந்தது. அப்போது தினமணி கதிரின் ஆசிரியராக இருந்த கஸ்தூரிரங்கன் டாக்டரின் நண்பர். இருபது பக்கங்களுக்குக் கவிதைகளையும் என்னைப் பற்றிய குறிப்பையும் அனுப்பினேன். எமதர்மன் சனீஸ்வரன் என்றெல்லாம் அர்த்தம் வருகிற எனக்கு வைக்கப்பட்ட ரவிக்குமார் என்ற பெயரில் இருந்து, பாரதிக்கு அணுக்கமாக இருந்த குவளைக் கண்ணனின் பெயரைத் தேர்ந்தெடுத்துப் புனைபெயராக்கிக் கொண்டேன். குவளைக் கண்ணன் எனும் பெயரை நான் தோந்தெடுத்ததற்கு மற்றொரு காரணம் அவரது முழுப்பெயர் குவளைக் கண்ணன் கிருஷ்ணமாச்சாரி.1981 தினமணி கதிர் தீபாவளி மலரில் எனது கவிதைகள் பிரசுரமாயின. கணையாழி என்று ஒரு மாத இதழ் வருவதாக ஸ்ரீதரின் அம்மா சொல்ல, கடை கடையாகத் தேடி ராஜகணபதி கோயிலுக்கு (சேலம்) எதிரில் உள்ள கடையில் கண்டுபிடித்து மாதாமாதம் கணையாழி வாங்க ஆரம்பித்தேன். கணையாழிக்குக் கவிதைகளை அனுப்பினேன். அதில் ஓரிரு கவிதைகள் பிரசுரமாயின.அப்போது கணையாழிக்கு அசோகமித்திரன் ஆசிரியராக இருந்தார். டாக்டர் ஒரு நாள் என்னிடம் 'ரங்கராஜன் இந்த ஞாயிற்றுக்கிழமை இங்க வரான், உன் கவிதைகளைக் கொண்டுவந்து அவங்கிட்டக் காட்டு, இலக்கியத்துல இப்போ என்ன நடந்துண்டு இருக்குன்னு அவனுக்குத் தெரியும். அவன் அப்டுடேட்டா இருப்பான்', என்றார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குத் தலைமை வகிக்க சேலம் வந்திருந்த டாக்டரின் தம்பியான ரங்கராஜன் என்கிற சுஜாதாவிடம் எனது கவிதைகளைத் தந்தேன். ஒரு பத்துப் பக்கம் இருக்கும். வேகமாகப் படித்துவிட்டு, ராத்திரியில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை என்ற ரீதியில் எழுதுவதெல்லாம் கவிதையில்லை, கவிதையில் எழுதப்படாத வரிகள் இருக்க வேண்டும், எது கவிதையில்லை என்றெல்லாம் பேசினார்.தமிழில் ந. பிச்சமூர்த்தி, சி. மணி, நகுலன், ஞானக்கூத்தன், ப்ரமிள், பசுவய்யா, கல்யாண்ஜி, கலாப்ரியா, விக்ரமாதித்யன் இவர்களது கவிதை வரிகளைச் சொல்லி, இவர்களைப் படிக்காமல் அடுத்த கவிதையை எழுதாதே என்றார். மதியம் இரண்டரை மூன்று மணிக்கு ஆரம்பித்தவர் விழாவுக்கு அழைத்துப்போகக் கார் வரும்வரை என்னிடம் பேசினார். இந்தப் புத்தகமெல்லாம் எங்க சார் கிடைக்கும்? என்று கேட்டேன். சென்னை ராயப் பேட்டையில் பைலட் தியேட்டருக்குப் பக்கத்தில் 'க்ரியா'வில் கேட்டுப்பார் என்றார்.புத்தகம் வாங்குவதற்காக இப்போது அமெரிக்காவில் இருக்கும் சென்னைக்கார நண்பன் ஆனந்தோடு சென்னை வந்து, அவனோடு 'க்ரியா'வுக்குப் போனேன். அங்கே சி. மணியின் ஒளிச்சேர்க்கை, வரும்போகும், நகுலனின் கோட் ஸ்டேண்ட் கவிதைகள், பசுவய்யாவின் நடுநிசி நாய்கள், ஞானக்கூத்தனின் கடற்கரையில் சில மரங்கள் போன்ற புத்தகங்களை வாங்கினேன்.வேலைகளுக்கு இடையில் இருந்தபோது ஒரு முறை ஸ்ரீதரின் அம்மா, 'வாடா சுஜாதாகிட்ட சொல்லி ஏதாவது டைரக்டர்கிட்ட சேர்த்துவிடச் சொல்றேன்' என்று என்னைத் தன்னோடு அழைத்துப் போனார். சுஜாதாவிடம் சொன்னார்.என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று கேட்டார் சுஜாதா. விற்பனைத் துறையில் இருப்பதைச் சொன்னேன். சுஜாதா என்னிடம், 'ஆணுறை விற்கப் போ, எதை வேண்டுமானாலும் விற்பனை செய், பரவாயில்லை, அது உனது தொழில், சினிமா உனக்கு வேண்டாம், நாசமாப் போயிடுவே, இது வேற உலகம், ஒருத்தன் டாக்டருக்குப் படிச்சிட்டு ஒரு டைரக்டர்கிட்ட கூஜா தூக்கிண்டு இருக்கான், எடுபிடி வேலை செய்யறான். தொழில்னு எதையாவது வித்துண்டு இரு, நிறையப் படி, உனக்குப் பிடிச்சதை எழுது. சொரணை கெட்டுப் போயிடுண்டா, சினிமா உனக்கு வேண்டாம்' என்றார்.அவரது குரலில் ஒலித்த கண்டனமும் கண்டிப்பும் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.


அவர் ஆணுறை விற்கப் போ என்று சொன்னது மிகவும் வருத்தத்தைத் தந்தது. பின்னர் தனியார் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் பெற்றுப் பொருளீட்டித் தரும் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிகையில் திரைப்படத் துறையை அருகில் இருந்து பார்க்கக் கிடைத்தபோது, சுஜாதா என்னைக் காப்பாற்றியது தெரிந்தது.

டாக்டர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. என் நாயகர்கள் பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இருந்தாலும் நேர்படப் பேசிய, நகரப் பேருந்துகளில் பயணித்த, பணத்தின் பின்னால் போகாத, அதிகம் பேசாத டாக்டர், பட்டியலில் முன்னணி நாயகராக இன்றைக்கும் இருக்கிறார்.

சுஜாதா நல்ல சிறுகதைகள் என்று தோன்றக்கூடிய சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார். நகரம், பூனை போன்ற சிறுகதைகளின் பெயர்களும் நைலான் கயிறு தொடர்கதைக்கு முன்னோடியாக அமைந்த அவரது ஒரு சிறுகதையும் நினைவுக்கு வருகின்றன. மங்கையர் மலரில் தொடர்கதையாக அவர் எழுதிய எப்போதும் பெண் நினைவுக்குவருகிறது. தமிழில் சரித்திர நாவல் என்னும் பெயரில் கோணி கோணியாக நமக்குக் கிடைப்பவற்றிலிருந்து அவருடைய ரத்தம் ஒரே நிறம் வித்தியாசமானது.

பெண்களைப் பற்றியும் பெண்களது மார்பகங்களைப் பற்றியுமான தனது முதிரா இளைஞர் மனத்து வெளிப்பாடுகளை, 'ரெண்டு கை பத்தாது போ', 'நாலுபேர் உட்கார்ந்து சீட்டாடலாம் பாஸ், அவ்ளோ பெருசு', என்றெல்லாம் வசந்த் என்ற கதாபாத்திரம் பேசுவதாக எழுதியவையும் பாய்ஸ் திரைப்படத்தில் அவர் எழுதிய சில வசனங்களும் அவருக்குப் பெருமை சேர்ப்பவை அல்ல. பொழுதுபோக்கு எழுத்தில் அவரது மொழிநடை சுவாரஸ்யமானது.

அவரது ஊடகப் பங்களிப்பு பற்றி ஊடகக்காரர்களும் திரைப்படங்களில் அவரது பங்களிப்பு என்ன என்பதைத் திரைப்படக்காரர்களும் எழுதலாம். தீவிரமாக ஆழ்ந்து செல்ல வேண்டிய விஷயங்களைக்கூடச் சுலபமாக, சாதாரணமாக ஆக்கிவிடுவதை சுஜாதா பாணி என்று சொல்ல வேண்டும். அவர் மறந்துகூடத் தனது ஆழம் தெரிவது போன்ற எழுத்தை எழுதியதில்லை. அவருடையது அவ்வளவு கவனமான எழுத்து.

தனது சிறந்த கதையை சுஜாதா கடைசிவரை எழுதவேயில்லை என்பதை, அவர் படித்த புத்தகங்களைப் பற்றியும் அவற்றின் தீவிரத் தன்மை பற்றியும் அறிந்த எவரும் சொல்லிவிடலாம்.சுஜாதா நல்ல புத்தகங்களைத் தேடிப் படித்தவர், தீவிரமான வாசிப்புப் பழக்கம் கொண்டவர், அநேகமாக உலகின் சிறந்த புத்தகங்களைப் படித்திருக்கக்கூடியவர். சுஜாதாவின் எழுத்துக்களைவிட சுஜாதா சுவாரஸ்யமானவர். தனது எழுத்தைப் போலன்றி அவர் தீவிரமானவர்.தனது நட்சத்திர அந்தஸ்துக்கும் புகழுக்கும் சுஜாதா தனது சிறந்த கதையைத்தான் விலையாகக் கொடுத்திருக்க வேண்டும்.- கவிஞர் திரு.குவளை கண்ணன்வரும் பிப்ரவரி 27, எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு நாள்.செய்தி # 2


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்குச் செல்லுமுன் பிப்., 8, 1943ல், தன் சகோதரர் சரத்சந்திரபோசுக்கு தன் கைப்பட வங்க மொழியில் ஒரு கடிதம் எழுதி, அதை அவரது ஆஸ்திரிய மனைவி எமிலி ஷெங்கில்லிடம் கொடுத்திருந்தார்.

நேதாஜி 1941ல் எமிலியை மணந்து கொண்டார். ஒரு வருடம் மனைவியுடன் தங்கி இருந்தார். பெண் பிறந்து 27வது தினத்தில் ஜப்பானுக்குப் புறப்பட்டார். 1935ல், "இந்தியப் போராட்டம்' என்னும் நூலை நேதாஜி எழுதிய போது, சுபாஷின் காரியதரிசியாக பணியாற்றினார் எமிலி. திருமதி எமிலி ஆஸ்திரியாவில் ஒரு மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பெண்.

அக்கடிதத்தை, 1948ல் வியன்னாவிற்கு சென்றிருந்த சரத்போசுவிடம் கொடுத்தார் எமிலி.

நேதாஜி எழுதிய வங்கக் கடிதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு...

பெர்லின், 8.2.1943
என் பேரன்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு,

இன்று நான் மறுபடியும் தாயகம் நோக்கிப் புறப்படுகிறேன். என் பிரயாணமோ பேராபத்து நிறைந்தது. இம்முறை தாயகம் வரவே கிளம்புகிறேன். ஒரு வேளை நான் அங்கு வந்து சேர இயலாமல் போனாலும் போகலாம். வழிப் பிரயாணத்தில் நான் ஏதும் விபத்திற்குள்ளானால் என்னைப் பற்றிய குறிப்பு ஒன்றை எழுதி, அதை தங்களிடம் உரிய காலத்தில் சேர்ப்பிக்கச் சொல்லியுள்ளேன்.

நான் இங்கே கலியாணம் செய்து கொண்டு குடும்பஸ்தனாகி விட்டேன். என் மனைவிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அண்ணா! தாங்கள் என் வாழ்நாள் முழுதும் என்னிடம் காட்டி வந்த அன்பு எல்லையற்றது. அதே அன்பை, கருணையை, என் மனைவி, மகள் இருவரிடத்தும்... நான் இம் மண்ணுலகினின்று நீங்கிய பின்னரும், ஒரு போதும் காட்டத் தவறாதிருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மனைவியும், பெண்ணும், நான் உலகில் அரை குறையாய் விட்டுச் செல்லும் பணியை வெற்றியுடன் செய்து முடிப்பார்களாக! இதுவே, நான் ஆண்டவனிடம் செய்து கொள்ளும் இறுதியான பிரார்த்தனை. விடை பெற்றுக்கொள்கிறேன்.அண்ணா! தங்களுக்கும், அண்ணியார் அவர்களுக்கும், மகா பூஜிதையாகிய நம் அன்னையார் அவர்களுக்கும், நமது குடும்பத்தார் அனைவருக்கும் எளியேனின் மதிப்பிற்குரிய வணக்கம்.

தங்கள் பேரன்பிற்குரிய

சகோதரர் சுபாஷ்.

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல...' என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர் நேதாஜி.

அவர் ஒரு மாபெரும் தியாகி. விவேகானந்தரின் கருத்துக்களால் 16 வயதிலேயே ஈர்க்கப்பட்டு, வீட்டை துறந்தவர். ஐ.சி.எஸ்., என்ற உயர் பதவியில், 24 வயதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்வு பெற்று அமர்ந்தவர், இந்த பதவியால் இங்கிலாந்து மக்களுக்கு மட்டுமே லாபம், இந்திய மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதை அறிந்த அடுத்த கணமே அந்த பதவியை துறந்தவர். குடும்ப சொத்தாக தனக்கு வந்த பங்களாவை 35 வயதில், "தேவையில்லை' என, தேசத்திற்காக அர்ப்பணித்தவர்.

காங்கிரஸ் கட்சி தலைவராக 42வது வயதில் வெற்றி பெற்ற போதும், அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனேயே அந்த பதவியை தூக்கி எறிந்தவர்.

ஜெர்மன், ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 44வது வயதில் பயணம் செய்து, நாட்டின் விடுதலைக்காக வித்திட்டவர். 85 ஆயிரம் வீரர்கள் கொண்ட இந்திய தேசிய ராணுவம் அமைத்து, மொத்தம் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலை நடுங்க வைத்தவர்; அந்த படையில் ஜான்சி ராணி என்ற பெண்கள் பிரிவையும் ஏற்படுத்தியவர்.

நம்மிடையே, "வாழ்ந்து' கொண்டு இருப்பவரான தேச தலைவர் நேதாஜி, சென்னைக்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு, 1939ம் ஆண்டு, செப்டம்பர் 3,4,5 ஆகிய தேதிகளிலும், பின் 1940 ம் ஆண்டு, ஜனவரி 10,11 ஆகிய தேதிகளிலும் வந்து தங்கியுள்ளார்.
தேச பக்தரான அய்யாசாமி என்ற பொறியாளர், 1930ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தங்கினார் நேதாஜி. இப்போது, அய்யாசாமியின் பேரனான, எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும், புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்.

நேதாஜி வந்து தங்கியிருந்த போது ஆன செலவு, தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போகிறது. கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட பல அரிய படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்தும் போட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் அவர் தங்கியிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும், இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது காங்கீரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது.

"காங்கிரஸ் தலைமை,நேதாஜியின் இறுதி காலம் குறித்து முழுமையான விசாரணை நடத்தாமல் விட்டுவிட்டதே அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் போனதற்க்கு காரணம்" என்று முதல்முறையாக பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.நாடு விடுதலை அடைந்ததும் காங்கிரசை கலைத்துவிடுங்கள் என்று சொன்னார் காந்தி. ஆனால்,காந்தியடிகளின் பெயரை அடித்தளமாக வைத்து ஆட்சி பிடித்துவிட்டது காங்கிரஸ் கட்சி. அதன்பொருட்டே காந்தி தாத்தா, நேரு மாமா என்று பெருமையுடன் பாடப்புத்தங்களை திட்டமிட்டு தயாரித்த காங்கிரஸ், நேதாஜியையும்,அவரது வரலாற்றையும் இருட்டிப்பு செய்துவிட்டது.


(நன்றி, இனி, அடுத்தவாரம்)-இன்பா

5 Comments:

Anonymous said...

anna nagar tower? Nethaji visit appo yethu?

Ravi said...

Actually the dialogue "Pera Ketalle Summa Adhuridilla" is fit for only one man that is Nethaji Subhash. With due respect to our textbooks, some history is hidden.

Ravi
http://teashoptalks.blogspot.com/
http://filmbulb.blogspot.com/

ஜெ. said...

நாங்கள் சுஜாதாவின் தீவிரமான வாசகர்கள். நீங்கள் (குவளைக் கண்ணன்) அவரில் குற்றம் கண்டுபிடிக்க அலையும் / அவரால் கொஞ்ஜம் பிரபலம் அடைய முனையும் ஒருவர். அவர் எழுத்துகளில் சிறிது செக்ஸி வார்த்தைகள் இருந்தன, உண்மை - சாண்டில்யன் போன்ற விவரமான வர்ணனைகள் இல்லை. அவையும் ‘க்விக் விட்’ வகையில் தான் சேரும். அவை ஒரு குறிப்பிட்ட வயதினருக்கானதாகக் கருத வேண்டும். அவற்றை எல்லாம் தாண்டி, அவர் பாத்திரங்களின் மூலம் அவரின் புத்திசாலித்தனத்தையும், பரந்துபட்ட படிப்பின் தாக்கத்தையும் தான் நாங்கள் பார்த்தோம். சட்டம், காவல் துறை, கோர்ட்டுகள், மருத்துவம், சினிமா, இலக்கியம் (கவிதை), விஞ்ஞானம், கணினி இவற்றில் சாதாரண வாசகர்கள் மற்றும் வேறு துறைகளில் படித்தவர்கள் ஏதாவது தெரிந்துகொண்டோம் என்றால், அவை அவரின் எழுத்தினாலேயே. வெறும் கற்பனையில் அவர் வாழ வில்லை. இந்த உலகத்தை, இதன் மக்களை அவர் ஆழ்ந்து பார்த்து, ரசித்து எங்களுக்குக் கொடுத்திருக்கிறார். முக்கியமாக, அவர் எந்த எழுத்தாளரையும் குறைத்து மதிப்பிட்டதோ, பேசியதோ, எழுதியதோ இல்லை. அவரின் ரசிகர்கள் ’சிம்பிள் மெஜாரிடி’ இல்லை; அப்சல்யூட் மெஜாரிடி! M.G.R. எப்படி இறந்து இத்தனை வருஷங்களுக்குப் பின்னும் வாழ்கிறாரோ, அதே போல் சுஜாதாவும் இன்னும் நூற்றாண்டுகள் வாழ்வார் - கல்கி, தேவன் போல. உடனே அவர்களை ஒப்பிடாதீர்கள். அவர்கள் எழுத்துக்களில் / எழுத்து நடையில் வித்தியாசம் இருந்திருக்கலாம். ஆனால் வாசகனை வளைத்துப் போடுவதில் அவ்ர்கள் ஒரே இனம். - ஜெ.

ஜெ. said...

நேதாஜி இருட்டடிக்கப் பட்டார் என்று நான் நினைக்கவில்லை. அப்படிப் பார்த்தால், காந்திஜி, நேருஜி மாதிரி எந்தத் தலைவர்களும் முன்னிறுத்தப் படவில்லை. மேலும், சுதந்திரம் கிடைத்தது காந்திஜியின் சாத்வீகப் போராட்டத்தினால் என்பது சரித்திரம். நேதாஜியின் தேசப்பற்று எவரும் குறை சொல்ல முடியாதது. அவர் வழி முறை, மொத்த தேசத்தையும் அவர் வழியில் செல்ல வைக்க முடியாதது - இவை தான் நேதாஜி இருட்டடிக்கப் பட்டதாக நினைக்கத் தோன்றுகிறது. நேதாஜியின் மர்ம முடிவும் நிறைய ஆய்வுக்கு உள்ளானது என்று படித்திருக்கிறேன். - ஜெ.

Anonymous said...

நேதாஜி பற்றி படிக்கும் போது கண்களில் நீர் குளம் கட்டுகிறது. குவளைக் கண்ணனின் சுஜாதா பற்றிய எழுத்து சித்திரம் அருமை.