சில வருடங்களுக்கு முன் உறவினர் வீட்டில் ஊர்க்கதை எல்லாம் பேசி, சாப்பிட்டு விட்டுக் கிளம்பும் போதுதான் ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. அட்டைப்படம் திரு. கோபுலுவின் கைவண்ணத்தில் மிக அருமையாக இருந்தது. புரட்டிப் பார்த்தால் சிறு வயதில் விகடனில் அம்மா சொல்லி நான் அவ்வப்போது படித்த தொடர்தான் என்று தெரிந்தது. உடனே உறவினரிடம் படித்து விட்டுத்தருகிறேன் என்று சொல்லிவிட்டு எடுத்துக் கொள்ள மனம் பரபரத்தது. ஆனால் அப்படிக் கேட்கவில்லை. காரணம் படித்து விட்டுத் தருகிறேன் என்பதன் அர்த்தம் அவர்களுக்கும் தெரிந்திருந்தால் என்ன செய்வது.... மதிப்பிற்குரிய புதிய உறவு வேறேயா.... மரியாதையைக் கெடுத்துக்கொள்ள விரும்பாமல் பிறகு நாமே வாங்கிக் கொள்ளலாம் என்று வந்து விட்டேன். விகடன் பிரசுரம் என்பதைத் தவிர வேறு விவரங்கள் மறந்து ஒரு வழியாய் இந்த வருடம் தான் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.
இந்தப் புத்தகத்தின் பல்வேறு சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமான ஒன்று , ' குடும்பப்படம் , குடும்பத்துடன் வந்து கண்டு களியுங்கள்' , என்று விளம்பரம் பார்த்திருப்போமே, அதுபோல் இது ஒரு குடும்பப்புத்தகம். வீட்டில் உள்ள எல்லா வயதினரும் அவரவர் வயதிற்கேற்ப மீண்டும் மீண்டும் படித்து மகிழ பலப்பல சுவாரசியங்கள் பக்கத்துக் பக்கம் கொட்டிக்கிடக்கின்றன.
புத்தகம் முழுவதும் ஆறு முதல் பத்து வயதில் இருக்கும் சிறுவனின் பார்வையிலேயே போவது இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பு. திரு மெரீனா, அல்ல அல்ல, சீலி ரசிக்க ரசிக்க தன் இளமைப் பருவத்தை எழுதியிருக்கிறார்.
முதல் அத்தியாயத்திலேயே சீலி என்ற சிறுவன் நம்மைக் கொள்ளை கொண்டு விடுகிறான். பள்ளி செல்லும் வயது தாண்டியும் பள்ளியில் சேர்க்கவில்லை என்பதால் தானே சேரப் போய்விடுகிறான். வகுப்பில் ஆசிரியர் புதுப் பையனைப் பார்த்து "நீ யார், உன் பெயர் என்ன " என்று வினவ வீட்டில் தன்னைக் கூப்பிடும் பெயரான சீலி என்பதையே சொல்ல, நிஜப்பெயரைத் தெரிந்து கொண்டு வரும்படிச் சொல்லி அனுப்பி விடுகிறார்.
இனிஷியலுடன் தன் பெயர் தெரிந்த வினாடியிலிருந்து சீலி அடைந்த பெருமிதம், அட்டெண்டென்ஸில் தன் பெயரை அழைத்தவுடன்," ப்ரெசென்ட் சார் " சொல்லும் உற்சாகம், தான் டபுள் ப்ரமோஷன் பெற்றது எப்படி, அதற்கான காரணம், சீலிக்காக "எவனையாவது இன்னிக்கு அடிக்கணுமா" என்று கேட்டு சீலி அவ்வப்போது கைகாட்டும் எனிமியைத் துரத்தித் துரத்தி அடிக்கும் அடாவடி நண்பன், என்று புத்தகத்தின் ஆரம்பப்பகுதியே நமக்கு சிரிப்பு மூட்டி அதே சிரிப்புடனே பக்கங்களைப் புரட்டுகிறோம்.
நண்பர்களை அறிமுகப்படுத்திய சுவாரசியத்துடனே தான் மிகவும் நேசிக்கும் தன் புரசைவாக்கம் வீட்டையும் வீட்டு உறுப்பினர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறான். காத்தாடியும் டீல் போட்டு, ஷேக்ஸ்பியர் வகுப்பும் எடுக்கும் "கலா நிலையம்" அண்ணா (அப்பா), சாப்பாட்டு வேளையில் வீட்டுப் பசங்களோடு தோழர்களுக்கும் சேர்த்து குழம்பு சாத உருண்டையைப் பிசைந்து தரும் அம்மா, ஸ்ட்ரிக்ட் கம் ப்ரெண்ட்லி சித்தப்பா, இதிகாச வகுப்புகள் எடுக்கும் அம்மணி பாட்டி, பெரிய டின்னில் திரட்டிப்பால் கிளறிக்கொண்டு வரும் ஜானகிப் பாட்டி, (ஜானகிப்பாட்டி வரும் கோச் வண்டியும் ஜாட் கோலும் இதில் கிளைக்கதை), மைசூரிலிருந்து வரும் அத்தை, நுங்கம்பாக்கத்திலிருந்து காரில் வரும் சின்ன அத்தை, அம்மாஞ்சி தான் நிஜப் பெயர் என்று நினைத்த பெரிய அண்ணன், மாஸ் வைத்து விளையாடும் கோலி ஆட்டத்தை ஸ்பெஷலைஸ் செய்த ராதா அண்ணன், அறுந்த காத்தாடியைப் பிடிக்க ஓட்டு வீட்டுக் கூரைகளின் மேல் ஓடி ஓடுகளை நொறுக்கிய சித்தப்பா பிள்ளை சுந்தரராமன், வேறு பெயர்களில் சண்டே இண்டுவில் கதை எழுதிப் படம் போட்ட அத்தை பிள்ளைகள் குஞ்சப்பா மற்றும் டூடூ ( யார் என்று தெரிகிறதா )
இப்படி உறவுகளைத் தவிர வீட்டுக்கு வந்து போகும் பலர் -- வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பதால், விடிய விடிய பல நாட்கள் திறந்தே கிடக்கும் வீட்டு வாயில் கதவு....
வீட்டுக்கு வருபவர்களெல்லாம் தவறாமல் கேட்கும் கேள்வி -- சீலி மிகவும் பெருமிதம் கொள்ளும் கேள்வி-- "இப்ப சீலி விஷமம் எப்படி இருக்கு?" . ஒரு தரம் சீலியின் விஷமத்துக்கு யாரோ செமத்தியாய் அடித்து விடுகிறார்கள். அடி வாங்கிய சீலிக்கு கண் மண் தெரியாத பெரும் கோபம் வந்து விடுகிறது. நம்மில் பலரும் கோபம் வ்ந்தால் கையில் கிடைத்ததைத் தூக்கி எறிவோம் அல்லவா !!! சீலி அப்படி எதை எடுக்கிறான் என்று யூகியுங்கள் பார்ப்போம்.
எங்கள் வீட்டில் அப்படி அடிக்கடி அகப்பட்டுக் கொள்ளும் பொருள் என்ன என்று யோசிக்காமலே ஞாபகம் வந்தது. டி.வி ரிமோட். அதுவும் கிரிக்கெட் பார்க்கும் போது ரிமோட் படும் பாடு சொல்லி மாளாது. யாராவது காட்ச் மிஸ் செய்யும் போது, பிடித்த விளையாட்டு வீரர் அவுட் ஆகும் போது, அம்பயர் எல் பி டபிள்யூ கொடுக்காத போது அல்லது ராங் எல் பி டபிள்யூ கொடுக்கும் போது என்று பல தருணங்களில் ரிமோட் மேலே பறக்கும் அல்லது சுவரில் முட்டிக் கொள்ள அனுப்புவோம். இனி ஏழேழு ஜென்மத்துக்கும் இந்த வீட்டில் மட்டும் ரிமோட்டாக வந்து விடக்கூடாது என்று வேண்டிக்கொள்ளும் அளவுக்கு அதைப் படுத்தியிருக்கிறோம்.
என்ன... இதே போல் உங்கள் வீட்டிலும் கோபம் வந்தால் அகப்படும் பொருள் ஞாபகம் வந்திருக்குமே !!! சிலருக்கு மனைவி-- பூரிக்கட்டை ஜோக் கூட நினைவு வரும். ஆனால் சீலிக்குக் கையில் அகப்பட்டது என்னவென்று நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. புத்தகம் படித்தவர்கள் சொல்லாதீர்கள். இனிமேல்தான் படிக்கப்போகிறவர்கள் யூகித்துக்கொண்டே இருங்கள். படித்த பிறகு உங்கள் யூகம் சரியா என்று ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். :-)
நிமிஷத்துக்குப் பத்து பொய்கள் சொல்ல அஞ்சாதது , பால் என்று நினைத்து பினாயிலைக் குடித்தது, நெய் டப்பாவில் மணல் மணலாக இருக்கிறது என்று நினைத்து கைப்பிடி (நிஜ) மணலை அந்த டப்பாவில் போட்டது, குதிரை வண்டியில் அம்மா போய்க்கொண்டிருக்கும் போது நானும் வரேன் என்று வண்டியின் பின்னாடியே ஓடியது, என்று பல இடங்களில் திருமதி அருணா சாய்ராம் பாடும் விஷமக்காரக் கண்ணன் பாட்டு மனதில் ரீங்காரமிடுகிறது.
அப்படியென்றால் வெறும் விஷமம் மட்டும்தானா நம்ம சீலி ?? இல்லை. தேவைப்படும் நேரங்களில் அம்மாவுக்கு உதவியாக பத்து பாத்திரம் தேய்த்துக் கழுவித்துடைத்து வைப்பது, வீட்டைப் பெருக்குவது, ஒட்டடை அடிப்பது, சாக்கடையைக் குத்தி அடைப்பை நீக்குவது, ராத்திரி படுக்கைகளைச் சரியான ஆர்டரில் போடுவது என்று சீலி படு சமத்தும் கூட.
ஒரு இடத்தில் சீலி சொல்வதைப் பாருங்கள் -- எங்களை நாங்களே எண்டெர்டெயின் பண்ணிக் கொள்ளப் பழக்கப்படுத்திக் கொண்டு சந்தோஷமாக இருப்போம். மூட்டைப்பூச்சிக்கு மோட்சம் கொடுப்பது இரவு நேரப் பொழுதுபோக்கு என்றால் பகல் நேரங்களில் பல வழிகள். இது தவிர சீசன் வாரியாக காத்தாடி, கோலி, பம்பரம் வகையறா... வீட்டிற்குள்ளேயே முற்றத்தில் விளையாடும் பாட்மிண்ட்டனும் ரிங் டென்னிஸும்.... சாவு ஊர்வலம் வேடிக்கை பார்ப்பது, அப்படியே அதில் பணம் சம்பாதிப்பது....!!
இல்லையா பின்னே... சாலையில் இறைக்கப்படும் காசுகள் யாரும் எடுத்துக் கொள்ளத்தான் என்பது சரியான லாஜிக் தானே!!! அப்படிக் கிடைத்த காசில் பிடித்த பண்டம் வாங்கிச் சாப்பிடுவது எவ்வளவு இன்பம்..... ஆனால் வீட்டுப் பெரியவர்களுக்கு இதெல்லாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிகிறதா.... கடுமையான திட்டு, பயமுறுத்தல்களினால் இந்த அருமையான வழி கை நழுவிப் போன பிறகு, சீலி சில்லறைக் காசு சம்பாதிக்க மேற்கொள்ளும் புதுப்புது உத்திகள் ....
அப்போதே நாடகங்கள் போட்டுப் பழகிய சீலிக்கு மிகவும் பிடித்த வேஷம் பீமன். அதற்குக் காரணம் காஸ்ட்யூமோ வசனமோ அல்ல. அந்த வேஷத்துக்கு கிடைக்கும மூன்று உருண்டை குழம்பு சாதம் தான் !!!
முதன் முதலில் தொலைபேசியில் பேச ஆசைப்பட்டுப், பின்விளைவுகளைப் பற்றிச் சிறிதும் நினைத்துப்பார்க்காமல் சீலி டயல் செய்யும் நம்பரும் எதிர்முனைக்காரரிடம் சொல்லும் விஷயமும், பின்னர் பயந்து நடுங்குவதும்.. ரெயில்வே லெவல் க்ராஸிங் கேட் மூடவதற்கு சீலி நினைத்துக் கொண்டிருந்த காரணமும் நினைக்கும் போதே சிரிப்பை வரவழைக்கிறது.
இப்படி சிரிக்கச் சிரிக்க நம்மிடம் பேசிக் கொண்டு வரும் சீலி, பள்ளிக்கூடத்தில் முதல் தேதியே ஃபீஸ் கட்ட முடியாமல் ஃபைனுடன் சில நாட்கள் கழித்துக் கட்டுவதையும், தன் வீட்டில் ஏனோ சில சமயம் சாமான் உள் காலியாக இருந்ததையும், காலை உணவு சாப்பிடவே மதியமாகி விடுவதையும், யார் யார் வீட்டுக் கல்யாணங்களோ தங்கள் புரசைவாக்கம் வீட்டில் நடக்கும் போது அவர்களுக்கு டிபன் பரிமாறி (!) தானும் பந்தியிலேயே சாப்பிட்டு, கௌரவம் பார்த்துக் கொண்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸுக்கு தானே மாடிக்குச் சென்று சப்ளை செய்ததையும் கூட வேடிக்கையாகப் பகிர்ந்து கொள்ளும் சீலி, கடைசி இரு அத்தியாயங்களில் சொல்லும் விஷயங்களில் , நம்ம சீலிக்கு இப்படி ஒரு துயரம் நடந்து விட்டதே என்று வருத்தப்பட்டுக் கண் கலங்காமல் இருக்கவே முடியாது. சீலிக் கண்ணா, அழாதடா என்று சொல்லத்துடிக்கிறோம். கோவில் கோவிலாகச் சென்று சீலி ப்ரே பண்ணும் போது நாமும் அந்தப் ப்ரேயரில் சேர்ந்து கொள்கிறோம்.
ஒரே சமயத்தில் சீலியின் குறும்புகளையும் ரசித்து, நம்மையும் நம்முடைய இளமைப் பருவத்துக்குப் போகச் செய்து, கொடுத்த விலைக்கு (ரூ. 55/-) மேலே பல மடங்கு திருப்தியைத் தரும் இந்தப் புத்தகத்தில் சீலியை வரைந்திருப்பவர் ஓவியர் திரு கோபுலுஅவர்கள்.
சுருட்டைத்தலை முடியும், கட்டம் போட்ட சட்டையும், ஏற்கனெவே முகம் பூரா குறும்பும் அப்பிக்கிடக்கும் சிறுவனுக்கு ஒரு வால் வேறு வைத்திருக்கிறார். பொழுதை உபயோகமாகக் ( !! ) கழிக்க சீலி ஒரு தையல் கடையில் டெயிலர் வெட்டிப் போட்ட பெரிய துண்டுகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போடும் படம் ஆஹாஹா, பலே பேஷ்..... நாக்கைத்துருத்திக் கொண்டு சீலி மிகக் கவனமாக ( !!!! ) துணி வெட்டுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்தப் படத்தில் டெயிலரும் தான் துணி தைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் துணி தைக்கும் அவரை விட, சும்மா வெட்டிப் போடும் சீலியின் முகத்தில் தெரியும் அந்தக் கவனம்... அப்படியே உயிரோவியம் தான். . புத்தகத்தின் இறுதியில் போட்டிருக்கும் படமும் எழுதப்பட்ட வாசகங்களும் க்ளாசிக். சுவாரசியம் கெடக்கூடாது என்பதால் மற்ற படங்களைப் பற்றி விவரிக்கவில்லை.
வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருந்து விகடனை ஒளித்து வைத்துப் படித்த சீலி, ( பின் நாளில் அதே விகடனில் கார்ட்டூன்கள் வரைந்தவர் ) , முதன் முதலில் வரைந்து வெளியானது என்ன தெரியுமா? ( சீலியின் சிறு வயதுக் குறும்புகளில் அதுவும் ஒன்றாக்கும் )
மொத்தத்தில் புத்தகத்தைப் படிக்கப் படிக்க நம் வீட்டுச் சீலிச் சுண்டெலிகளின் ஞாபகம் ஆங்காங்கே வருவது உறுதி. யார் கண்டது, உங்கள் வீட்டின் சீலியாக நீங்களே கூட இருந்திருக்கலாம். ..
புத்தகம் -- சின்ன வயதினிலே
ஆசிரியர் -- திரு மெரீனா
விகடன் பிரசுரம் ரூபாய் 55 /-