என்னுடைய மனைவிகள் இருவரும் என்னை 'ஒய்வெடுத்துக்கொள்ளுங்கள்.. ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள். என்னால் தான் ஓய்வு பெற முடியவில்லை என்று இந்த வருடம் ஒருவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. அவரே ஓய்வு எடுக்காமல் இருக்கும் போது கல்யாணமே ஆகாத நான் எப்படி ஓய்வெடுப்பேன்? அப்படியே ஓய்வு எடுக்க வேண்டும் என்று சமயத்தில் எனக்குத் தோணினாலும் கூட கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. அப்படியே ஒரு வேளை தூங்கினாலும் கனவில் "நான் டெங்குக் கொசுவைவிட ஆபத்தானவன் கடித்தால் தாங்க மாட்டீர்கள்" என்று கெஜ்ரிவால் வந்து கொல்லுகிறார். தூக்கத்திலும் ஓட ஓட விரட்டறார்.
ஓடி ஓடி உழைத்தவர்கள் என்றால் இந்த வருஷம் அது போலீஸ்'துறை' மட்டும்தான். 'துரை'யைத் தேடு தேடு என்று தேடிக்கொண்டே இருந்தார்கள். பெங்களூர் முதல் நேபால் நேபாள் வரை பல இடங்களிலும் முழுவதும் சுற்றிவிட்டு, கடைசியில் அவரே வந்து சரண்டர் ஆனார். ராவணன் விடுதலை ஆகும் போது ராசா விடுதலை ஆக கூடாதா? என்று தலைவர் கேட்ட கேள்வி தான் ஞாபகம் வருது. எது எப்டியோ. கரண்ட் இல்லாத ஊரில் கிரானைட் முதல் ஈமு கோழிகள் பிரச்சினைகள் சௌக்யமாக ஜொலித்தன
பத்திரிக்கைகள் ? கல்கி இன்னுமும் கிராமம் ரவுண்டப் செய்துக்கொண்டு இருக்கிறது. விகடன் மதனின் பழைய கார்ட்டூன்களை தனது பொக்கிஷம் பகுதியில் Avoid செய்கிறது. குமுதம் திரும்பவும் சிறுகதை போட ஆரம்பித்துள்ளார்கள். நடிகைகளின் படத்தை போட தனியாக விகடன் தாத்தா டைம்பாஸ் கடலை போட ஆரம்பித்துள்ளார். சிவன் வந்து இவர்கள் கனவில் ஏதாவது சொன்னால் தான் 2013ல் எதாவது மாற்றம் வரும். இல்லை என்றால் பெரிதாக வராது.
மதுரை ஆதீனமாக நித்தியை ஏன் அருணகிரிநாதர் நியமித்தார் என்பது புரியாத புதிராக இருந்தது. சிவன் கனவு என்று உடான்ஸ் விட்டது ஒரு புறம் என்றால் தமிழக அரசு, நீதிமன்றம் என்று போன பிறகு நித்தியை மடத்தை விட்டு இரவோடு இரவாக பேக்கப் செய்தார். அதே போல தமிழ் புத்தாண்டு பேக்கப் செய்து மீண்டும் சித்திரை 1க்கு மாற்றினார் ஜெ. எங்களுக்கு எல்லாம் ஜனவரி 1 தான் புத்தாண்டு அன்று தான் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி கோயிலுக்கு போய்க் கடவுளைக் காண்போம் என்று தமிழர்கள் அடம்பிடிக்கிறார்கள்.
கடவுள் இல்லை என்று அடம்பிடிக்கும் கமல் அதே போல விஸ்வரூபத்தை டிடிஹெச்சில் ரிலீஸ் செய்ய போகிறேன் என்று அடம்பிடிக்க பலர் என்ன நடக்க போகிறது என்று ஆவலுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டர்கள். ஏது எப்படியோ படத்தை சீக்கிரம் போடுங்கப்பு என்று பலருக்கு அலுக்கவும் ஆரம்பித்துவிட்டது.
படம் எப்படி இருந்தாலும் நாங்கள் பார்த்துவிடுவோம் என்று தமிழகம் காத்துக்கொண்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர் சமாதியில் இருப்பது குதிரையின் இறக்கை. அது இரட்டை இலைக் குதிரை இல்லை என்று நம்பும் நமக்கு வக்கீலைப் போல பயாலஜியா தெரியும்?
ரெக்கை கட்டி பறக்குது அண்ணாமலை சைக்கிள் என்று முன்பு ஒரு படம் வந்தது. நடித்தவர் பெயர் மறந்துவிட்டது!. அவர் நடித்த இன்னொரு படத்தில் ஹீரோயின் வம்பு செய்ய உடனே உதட்டோடு உதடு கிஸ் அடித்து அவளை வீழ்த்துவார் இந்த ஹீரோ. அப்போது எல்லாம் கை தட்டி விசில் அடித்துவிட்டு இப்போது மெழுகு வத்தி ஏற்றுவது எந்த விதத்தில் நியாயம்? 12.12.12 அன்று உலகம் அழியாமல் காத்த சூப்பர் ஸ்டார் மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டு விடுங்கள் என்றார். இவர் அரசியலை விட்ட மாதிரி நாமும் அதை விடுவது தான் நல்லது.
அரசியல் என்று சொல்லிட்டு தேதிமுக செய்தி இல்லாம இருந்தா நல்லாவா இருக்கும்? கொஞ்ச நாட்கள் முன்பு வரை தேமுதிகவில் இருந்து தினமும் யாராவது கேப்டனை விட்டு விட்டு அதிமுக பக்கம் வந்தார்கள். முதலில் பரபரப்பாக இருந்த இந்த நியூஸ் தினமும் யாராவது வந்ததால் அட போங்கப்பா என்று ஆகிவிட்டது. கடைசியாக மதிமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத் அதிமுகவிற்கு வந்து சர்பத் ஆனார். வைகோ வழக்கம் போல தன் கட்சிக்கு ஏதாவது நோய் வந்தால் உடனே வாங்கிங் போவார். திரும்பவும் ஆரம்பித்துவிட்டார். மீடியா இதைக் கண்டுக்கொள்ளவே இல்லை பாவம். இதுக்குதான் கட்சிக்கு ஒரு சேனல் அல்லது மீடியா சப்போர்ட் இருப்பது நல்லது என்று நம் தலைவர்கள் நினைக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்குக்கு எவ்வித இடையூறும் இன்றி ரத்தம் சிந்தாமல் வெற்றிகரமாக கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்றார் அம்மா. உதயகுமாரை இந்த வருட ஹீரோவாக சிலரும் சிலர் வில்லனாக சிலரும் பார்த்தார்கள். அமெரிக்காவிலிருந்து இவருக்கு பணம் வருகிறதா என்பது தான் இன்னும் புதிரான விஷயம்.
புதிருக்கத் தமிழ்நாட்டில் பஞ்சம் இல்லை. சட்டமன்ற வைர விழாவில் கலைஞர் பெயர் ஏன் விடுபட்டது? நாக்கை துருத்தி ஆவேசம் காட்டியதால் வியகாந்தை சஸ்பெண்ட் செய்த சபாநாயகரையே ஏன் ஜெ மாற்றினார் என்று பல புதிர்கள் நிறைந்த நன்நாடு நம் தமிழ்நாடு!

புதிர்களைப் போல வழக்கம் போல தமிழ்நாட்டில் கடித போக்குவரத்து அதிகரித்தது. கலைஞர் மன்மோகன் சிங்கிற்கும், ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கும் பல கடிதங்கள் எழுதினார். சில சமயம் ஸ்டாம்ப் செலவு குறைப்பதற்கு டெல்லிக்க்கு சென்று அங்கேயே எழுதிப் போட்டார். பேசப் 10 நிமிஷம் தான் கிடைக்கும் என்ற நிலையில் கடிதம் எழுதுவது தான் ஒரே தீர்வு என்று நம்ப வைத்துவிட்டார். அடுத்த சட்டமன்றத்துக்கு திண்டுக்கல் லியோனி, சாலமன் பாப்பையா போன்றவர்கள் சென்று மந்திரிகள் ஆகும் வாய்ப்புகள் இருக்கிறது. பெல் அடித்துப் பேச்சை நிறுத்துவதில் இவர்களுக்குத்தான் அனுபவம் அதிகம்.
எவ்வளவு அனுபவம் வந்தாலும் சிலர் அப்படியே தான் இருப்பார்கள் என்பதற்கு காவிரிப் பங்கீடு நல்ல எடுத்துக்காட்டு. பல பேச்சுவார்த்தை, நீதிமன்ற அட்வைஸ் என்று நடந்த பின்னும் பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது. அதே போல்தான் சிவகாசி பட்டாசு விபத்தும். வருடத்துக்கு ஒரு முறை நடந்துவிடுகிறது. இது எல்லாம் பெரிய பிரச்சனையே இல்லை. பெரிய பிரச்சனை என்றால் அது சென்னை மெட்ரோ ரயிலுக்கு அண்ணா வளைவை இடித்துவிட்டு பாதியில் திமுக அதிமுக அறிக்கை போரில் திரும்ப சீரைமக்க ஆரம்பித்துவிட்டார்கள் நம்முடைய காசில். இது மாதிரி பெரிய லிஸ்ட் இருக்கு!
மம்தா, முலாயம் சிங், மாயாவதி - சிபிஐ வழக்கு,
ராகுல் காந்தி மோடி தேர்தல் பிரச்சாரம்,
வடிவேலு, மன்மோகன் சிங், காமெடி,
சினேகா பிரசன்னா - டிவி திருமணம்,
எடியூரப்பா, கட்கரியின் நேர்மை,
சசிகலா, ஜெ - கோர்ட் விஜயம்,
டெசோ மாநாடு ஐநா தீர்மானம்,
நயந்தாரா பிரபுதேவா - காதல்,
சச்சின் ரிடையர்மெண்ட்,
ட்விட்டர் மொக்கைகள்,
ஏர் டெல் சூப்பர் சிங்கர்,
அப்சல் குரு தூக்கு,
அனிருத் ஆன்டரியா,
குஷ்பு புடவை,
என்று பலதைப் பற்றியும் எழுதத்தான் விருப்பம். ஆனால் அதற்குள் விடிந்து நியூ இயர் வந்துவிடும்.
Happy New year 2013.

உனக்கும், நம் கடைக்கு வரும் அனைவருக்கும் 2013 நல்லவிதமாக எல்லா வளங்களுடனும் அமைய வாழ்த்துகள்.
இப்படிக்கு,
இட்லிவடை