பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Friday, November 30, 2012
Thursday, November 29, 2012
பெருமாளுக்குத் தீட்டு
கடலூரில் உள்ள வைணவ திவ்யதேசமான திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி எழுந்தருளியிருக்கிறார். நேற்று பதினெட்டு வயது பெண் ஒருத்தி பக்திப் பரவசத்தில், “கோவிந்தா கோவிந்தா” என்று உரக்க சொல்லியபடி பெருமாளின் சன்னதிக்குள் சட்டென்று நுழைந்து, உத்சவ மூர்த்தியை தொட்டு வழிபாடு செய்த காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயிலின் மூத்த அர்ச்சகர், கோயில் நிர்வாகிகள் அப்பெண்ணை போலீசிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அப்பெண்ணின் செய்கையால், தீட்டு ஏற்பட்டு கோயிலின் பவித்திரத்திற்கு தோஷம் உண்டானதால் கோயிலை உடனடியாக மூடி விட்டதாகவும் தெரிவித்தார்!
கோயிலின் நிர்வாக அதிகாரி, அப்பெண்ணின் மீது திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், புலவனூரில் இருக்கும் கண்ணன் பட்டாச்சாரியர் என்பவரை வரவழைத்து, பவித்திரோத்சவ காரியங்களை மேற்கொண்டதாக அவர் கூறினார் (இவ்விஷயத்தில் கண்ணன் வாத்தியார் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கக்கூடும்!). ஒரு 2 மணி நேர ஜல சம்ரோக்ஷண பூஜைக்குப் பின்னர் 4.45 மணி அளவில் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.
சன்னதிக்குள் நுழைந்த பெண்ணுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருந்ததாகவும், ஒருவித மோன நிலையில் அப்பெண் அப்படி செய்து விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருப்பதிக்கே லட்டா என்பது போல பெருமாளுக்கே தீட்டா (அவன் அண்டசராசர அதிபதி என்பதால், அந்த 2 மணி நேரம் சகல லோகங்களும் தீட்டு தோஷத்தில் இருந்திருக்க வேண்டும் அல்லவா?) என்பது ஒரு புறமிருக்க, ஒரு சாதாரண விஷயத்தை போலீஸ் வரை எடுத்துச் சென்று ஒரு பெரிய செய்தியாக்க வேண்டுமா என்பதும் தொக்கி நிற்கிறது! ஆண்டாள் என்ற சிறுமி அணிந்த மாலையை (விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) அதை தவறான செயலாக கருதியபோதும்) மனமுவந்து ஏற்றுக் கொண்டவன் அந்த திருவரங்கப் பெருமாள்! வைணவ வாழ்த்தே, “அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ” என்று அடியார்களுக்கு முதல் மரியாதை செய்கிறது!
அதே நேரம், பக்தியில் மனமுருகி ஒரு அடியவர் தன்னைத் தொடும்போது, கருணாகர மூர்த்தியான பெருமாளுக்கு மனம் குளிர்வதோடு, தீட்டும் தோஷமும் ஏற்படும் என்பதை வைணவ அடியார்கள் புரிந்து கொள்ள வேண்டும்!!
- எ.அ.பாலா
Posted by IdlyVadai at 11/29/2012 05:12:00 PM 21 comments
Labels: ஆன்மிகம், எ.அ.பாலா, செய்திவிமர்சனம்
ரிக்கி பாண்டிங்
Posted by IdlyVadai at 11/29/2012 01:22:00 PM 10 comments
Labels: செய்தி, விளையாட்டு
66(A)
சமூக வலைத்தளங்களில் ஆர்வலர்களை ஒடுக்கும் விதமாக 66 A சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் பரவால அடிபடுகின்ற நிலையில், ஷ்ரேயா சிங்கல் என்ற ஒரு மாணவி, இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்
சமீபகாலமாக, 66 A சட்டம் கருத்து சுதந்திரத்திற்கெதிராக மிகவும் பரவலாக அரசாங்க இயந்திரத்தால் பயன்படுத்தப்படுவதால், இதன் முக்கியத்துவம் கருதி, இவ்வழக்கை உடனே விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளார், இந்தியாவின் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர். மேலும் கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி, இவ்வளவு நாளாக ஏன் இதுபோன்ற ஒரு மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது எங்களுக்கே ஒரு ஆச்சர்யகரமான விஷயம் என்று குறிப்பிட்டார் இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் எடுக்கும் நிலைபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Posted by IdlyVadai at 11/29/2012 12:39:00 PM 1 comments
Labels: செய்தி
Wednesday, November 28, 2012
லைப் ஆப் பை
கீழே....
பேக்ஸ் ஆப் லைப்!... வேண்டாம் பிளாஸ்டிக் கேரி பேக்!
Posted by IdlyVadai at 11/28/2012 06:40:00 AM 4 comments
Labels: படம்
Tuesday, November 27, 2012
'கசப்பான' முடிவு
வால்மார்டில் சக்கரை கிடைக்குமா ?
Posted by IdlyVadai at 11/27/2012 10:12:00 PM 10 comments
பவர் ஸ்டார் பரிசு
முதல் பரிசு:
இரண்டு கமெண்ட் போட்டிருக்கேன் எதாவது பார்த்து போட்டு குடுங்க.. தயவு செய்து சாரு புக் அனுப்பிராதீங்க அதுக்கு இவர் படத்தையே பத்து வாட்டி பார்க்கலாம்
டேய்! நான் சலங்கை ஒலி கமல் போஸ் மாதிரி கேட்டா.. என்னை "கண்ணா! இரண்டு லட்டு தின்ன ஆசையா! விளம்பரத்திற்கு மாதிரி நிக்க வைத்துட்டீங்களேடா!!
மூட்டு வலிகளுக்கான சிறந்த ஆசனம் லட்டாசனம்
Posted by IdlyVadai at 11/27/2012 07:12:00 AM 9 comments
Monday, November 26, 2012
பிஜேபியின் துணிச்சல்
இதே துணிச்சலுடன் எடியூரப்பாவையும்... சரி விடுங்க... இது எல்லாம் அரசியலில்...
Posted by IdlyVadai at 11/26/2012 01:00:00 PM 7 comments
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Sunday, November 25, 2012
சன்டேனா இரண்டு (25-11-12) செய்திவிமர்சனம்
செய்தி # 1
நவம்பர் 26 மற்றும் நவம்பர் 27. தமிழின தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நினைவு நாள்.
இலங்கை ராணுவத்தின் கொடுர தாக்குதலால் பலியான புலிகள் இயக்கத்தை மட்டுமில்லாமல் அவர்களை விட பலமடங்கு
எண்ணிக்கையில் பலியான,அப்பாவி தமிழ்மக்களை நாம் நினைவு கூர்வது நம் ஒவ்வொருவரின் கடமை.
இன்றும் வாழ்வாதாரம் இல்லாமல் அநாதைகளாக நிற்கும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க நம்மைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?
ஆனால், "எங்களை வைத்து அரசியல் செய்யும் உங்கள் தமிழகத்து அரசியல்வாதிகளை விட ராஜபக்சே மேல்" என்பதே பெரும்பாலான ஈழத்தமிழர்களின் தற்போதைய வாதமாக மாறிவிட்டது.
இந்த தினத்தில் நம் தமிழகத்தில் தமிழினத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அனைத்து அரசியல்வாதிகளின் அறிக்கைகளை நீங்கள் பத்திரிக்கைகளில் எதிர்ப்பார்க்கலாம்.
“நாம் தமிழர்” தலைவர் சீமான் ஒரு படி மேலேபோய் இந்த நாட்களில் புதுவை உட்பட்ட நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தி, வீர உரை நிகழ்த்தப்போகிறார்.
பிரபாகரன் அவர்களை ஈழத்தமிழர்களில் பாதிப்பேர் தங்களின் ஒரே தலைவனாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது நிதர்சனம். விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு முதல் முக்கிய காரணம் கருணா தலைமையில் இயக்கம் உடைந்ததே. இவை
ஒருபுறம் இருக்க, இங்கே உள்ள பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் பிரபாகரன் அவர்களோடு என்றோ எடுத்துக்கொண்ட போட்டோவை இன்றும் காட்டிக்கொண்டு, அவரை வைத்து தங்களின் அரசியல் பிழைப்பை ஒட்டிவருகிறார்கள்.
'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்ற உவமைக்கு, நமது அரசியல்வாதிகளுக்கும், தமிழினம் என்று பேசிப்பேசியே காலம் தள்ளும் தலைவர்களுக்கும் இன்னொரு உதாரணம்...மறைந்த தலைவர் திரு.பிரபாகரன் அவர்கள்.
ஈழத்தமிழர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதில் முதலிடத்தில் இருப்பவர்....வேறு யார். மகன்,பேரன்,மகள் உட்பட கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம் பெற்று இருந்தாலும், உட்கார்ந்த இடத்தில் இருந்தே அறிக்கைகள் விட்டுக்கொண்டு, டொசோ மாநாடு என்று கட்சிக்கூட்டம் நடத்திகொண்டு காலம் தள்ளிவரும்... அவரே தான்.
இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டார் சீமான். தமிழகம் வந்த சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி பேசிய சீமான், தனது "தம்பி" படத்தில் சிங்கள நடிகையான பூஜாவை நடிக்கவைத்து ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் வந்தபாடில்லை.
இந்த பதிவின் சாரமாக நான் எடுத்துக்கொண்ட விஷயம்...இந்த வார ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில், "தருமபுரி கலவர பிரச்சனையில் தமிழ் தேசியவாதிகளின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது?" என்ற ஒரு கேள்விக்கு, திருமாவளவன் அளித்த பதில்தான்.
"தமிழராக ஒன்றுபடுவோம் என்கிற தமிழ் தேசியவாதிகள் தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார்கள். அவர்களுக்கு சாதி ஒழிப்பை பற்றிய புரிதலோ, அக்கறையோ இல்லை.
வெறும் மொழி உணர்வை, இன உணர்வை அடுக்குமொழியில் பேசி செயல்படுகின்றனர். ஈழத்தில் படுகொலைகளுக்காக கொந்தளிக்கும் இவர்கள் ஓவ்வொரு நாளும் தமிழ்நாட்டு சேரிகள் எரிந்து கொண்டு இருக்கும்போது கண்டும்,காணாமல் இருப்பது ஏன்? மனித நேயம் இருந்தால் இதையும் கண்டித்து களத்தில் இறங்க வேண்டும். இல்லை எனில் அவர்களின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டையே சந்தேகிக்க வேண்டி இருக்கும்."
திருமாவின் இந்த கூற்று நூறுசதம் உண்மை.
ஆனால், இதே பதில் அவருக்கும் பொருந்தும்
தருமபுரி களத்தில் முன்ணணியில் நிறகும் நாடளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் ஏன் வாரம் தவறாமல் நடைபெற்று வரும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத் தாக்குதல்களை கண்டித்து 'களத்தில்' இறங்கவில்லை?
நவம்பர் 22, இதே வாரத்தில் ராமேஸ்வர மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே தாக்குதலை நடத்தி உள்ளது இலங்கை.
இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தால், முன்பொல்லாம் வெத்து அறிக்கையாவது கொடுத்துவந்த நம் தலைவர்கள், இப்பொது இவை அடிக்கடி நகழும் நிகழ்வாக மாறிவிட்டதால் பெரிதாக எடுத்துக்கொள்ளுவதில்லை.
பிரபாகரனை பற்றியும், ஈழத்தமிழர்களை பற்றியும் பேசும் தலைவர்களில்,அரசியல்வாதிகளில் யாராவது நம் தமிழகம் சார்ந்த முக்கிய பிரச்சினைகளான காவேரி,முல்லை பெரியார், பாலாறு, தமிழக மீனவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் எதற்க்காகவாவது நிரந்தர தீர்வை ஏற்ப்படுத்தி தந்து இருக்கிறார்களா??
இங்கே இருக்கும் நமது தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கில்லாத இவர்களுக்கு ஈழத்தமிழர்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்ன யோக்யதை இருக்கிறது?
காவேரி நதி நீர்ப்பங்கிடு சுமார் முப்பது வருடங்களாக தீர்க்கபடாமலே இருக்கிறது. வழக்கு என்ற பெயரில் பல கோடிகளை விழுங்கி வருகிறது உச்ச நீதிமன்றம் நமக்கு சாதகமாக தீர்ப்பு கூறியும், நமக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஈழத்து நிலை பற்றி உணர்ச்சி பொங்க வீர வசனம் பேசும் அரசியல்வாதிகளுக்கு தமிழகத்து உரிய உரிமையை நிலைநாட்ட முடியாமல் இருப்பது எதை காட்டுகிறது.?
"சொந்த மீனவர்களை கூட காப்பாற்ற முடியாத உங்கள் தலைவர்களால் எப்படி எங்களை காப்பாற்ற முடியும்" என்று கேட்கிறார் ஈழ எழுத்தாளர் சமயந்தன்.
உள்ளூரில் இருக்கும் "ஆணிகளை" பிடுங்க தெம்பில்லாதவர்கள், இலங்கையில் இருக்கும் "மலைகளை" பெயர்ப்பது பற்றி வாய்கிழிய பேசுவது எவ்வளவு அருவருப்பான,சாக்கடை அரசியல்?
"கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" - யாழ்ப்பாணப் பழமொழி.
செய்தி # 2
"பதினைந்து லட்சம் கொடுங்க. மாதம் முப்பதாயிரம் ருபாய் சம்பளம். காலை பத்து மணிக்கு போய் ஈவினிங் அஞ்சு மணிக்கு வந்துடலாம். அதிகம் வேலை கிடையாது. சுருக்கமா சொன்னா கவர்மெண்ட் வேலையை விட செம ரிலாக்ஸாக இருக்கலாம். ஒரு கைல கேஷ் கொடுத்தா, இன்னொரு கையல அப்பாயின்மெண்ட் ஆர்டர்."
- இப்படி என்னிடம் மார்கெட்டிங் செய்தார் ஒரு நபர்.
அவர் குறிப்பிட்ட அந்த ஜாலி(?) வேலை - லெக்சரர். இடம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம்.
உங்களிடம் இரண்டு அல்லது மூன்று லட்சம் மட்டுமே இருக்கிறதா? அதற்கு ஏற்றார்போல கூட்டுற அல்லது பெருக்கிற வேலையோ உங்களுக்கு அங்கு ஏற்பாடு செய்துவிடலாம்
அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்களில் 90 சதவீதம்பேர் இப்படி வேலையை "வாங்கியவர்கள்தான்" என்பது நூறுசதவீத உண்மை (நான் சிதம்பரத்துக்காரன்).
இங்கு என்ஜினியரிங், டாக்டர் போன்ற உயர்படிப்புகளில் சேர, Marks தேவையில்லை. Money மட்டுமே தேவை.
பெரிய இடத்து பிள்ளைகள் சும்மா ‘பெயருக்கு’ படிக்க தேர்ந்தெடுக்கும் இடமே இப்பல்கலை கழகம்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். இவ்வாறு சம்பாதிக்கும் பணத்தில்தான் ஒட்டுமொத்த நிர்வாகமே நடைபெற்று வருகிறது. ஒரளவுக்கு சிறப்பாக செயல்படுவது உலகமெங்கும் மாணவர்களை கொண்ட தொலைதூர கல்வி.
ஒவர் ஊழலின் விளைவாக பாரம்பரியமிக்க அண்ணாமலை பல்கலைகழகம் திவாலாகும் நிலைக்கு போய்விட்டது. பணிபுரியும் எல்லா ஊழியர்களுக்கும் அறுபது சதவீத் சம்பள குறைப்பு மற்றும் ஆள் குறைப்பு என நிர்வாகம் அறிவித்தது. இதை அடுத்து, காலவரையின்றி பல்கலைகழகம் மூடப்பட்டது,
பல்கலைகழக ஊழியர்களும், அவர்களின் வாக்குகளை கவர அனைத்து கட்சிகளும் தொடர் போராட்டத்தில் இறங்க, நிர்வாகமும் தற்போது பல்கலைக்கழத்தை திறக்கவும், ஊழியர்களுக்கு எதிரான அறிவிப்புகளை திரும்ப பெற நடவடிக்கை எடுப்பதாவும் அறிவிக்க, தற்காலிகமாக பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
"படிக்க ஸீட், படிக்காமலே டிகிரி, படித்தவுடன் வேலை - எல்லாவற்றுக்கும் பணம்".
இதுதான் அண்ணாமலையின் தாரக மந்திரம்.
நிதி நெருக்கடி குறித்து தற்பொது தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறது இதன் தலைமை.
இந்த நிலையை முற்றிலுமாக உடனடியாக மாற்றுவது என்பது இயலாத காரியம். .
"அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்" என்று வலியுறித்து இருக்கிறார். கருணாநிதி. இது ஒரு தனியார் பல்கலைக்கழகம்
முடிந்தவரை சுரண்டிவிட்டு, எடுத்துக்கொள்ளுங்கள் என்று அரசிடம் சொல்வதற்க்கு இது ஒன்றும் அரசு கஜானா இல்லை.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தை அந்த நடராஜர்தான் காப்பாற்ற வேண்டும்.
(நன்றி, இனி அடுத்தவாரம்)
-இன்பா
Posted by IdlyVadai at 11/25/2012 01:59:00 PM 16 comments
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
Friday, November 23, 2012
சாப்பா குருஸ் - மலையாளம்
இட்லி வடை (22 ஃபிமேல் கோட்டயம்) பதிவு பார்த்து, டிவிடி தேடும் அன்பு வாசகர்களே, உங்கள் லிஸ்ட்டில் இப்படத்தையும் தேடலாமே. நல்ல தரமான, ஒரு விருவிருப்பான படம் பார்த்த திருப்தி உங்களுக்கு கிடைக்கும்…. இது பற்றி சொல்லி தான் பெற்ற இன்பத்தை பகிர்ந்தளித்த திருப்தி இட்லிவடைக்கும் கிடைக்கும்.
கதை என பார்த்தால், அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட், வில்லன் ஹீரோ சடுகுடு, பாம் வைப்பது எடுப்பது என இல்லாமல், யதார்த்த நடைமுறை வாழ்வை சொல்லி, எளிமையாய் ஆழமாய் சுவாரசியமாய் சொல்லப்பட்ட படம். ஒரு நுண்ணிய உணர்வை சுற்றி பின்னப்பட்டதே இப்படத்தின் பலம்..
வாழ்வில் நம் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது நம் மன ஓட்டமே. வெற்றி தோல்வி என்பது நம் கையில் உள்ளது என ஆழமாய் சொல்லும் படம். குட்ட குட்ட குனிய தொடங்கும் போது தான் கோளாறே, நிமிர்ந்து நின்றால் நிச்சயம் ஜெயிக்கலாம் என அழுத்தமாய் சொல்லும் படம்.
கதை இரு இளைஞர்களை சுற்றி பின்னப்படுகிறது. ஒருவன் தொட்டதெல்லாம் துலங்கும், கோல்டன் மிடாஸ் டச் உள்ள இளைஞன். கோடிகளில் புரளும் ரியல் எஸ்டேட்டு பிசினசில் கொடி கட்டி பறக்கிறான். பளபளப்பான வீடு, கார், இளம் பெண்கள் என வாழ்க்கை ஓஹோ என ஓடுகிறது. இன்னொருவனோ, ஏழ்மையின் புண்ணியத்தில், அடிப்படை வசதிகள் இல்லாது அழுக்கு குடித்தனத்தில் ஒடுங்கி வாழ்கிறான். காலையில் வெறும் பரோட்டாவை சக்கரை துணையுடன் தின்னும் அளவுக்கு வசதியே அவனுக்கு. உணவகத்தில் இருக்கும் அனைவருமே, அதை கேலி செய்து கிண்டல் கிண்டுகிறார்கள். உலகின் கேலியை பொறுட்படுத்தாமல், அவன் தன் பாட்டுக்கு தன் வேலையை செய்கிறான். வேலை செய்யும் இடத்தில், அவன் மானேஜர் அவன் இளக்காரத்தை பார்த்து பச்சை குதிரை தாண்டுகிறார். சக ஊழியர் கூட அவனை கீழாகவே பார்க்கிறார்கள்.
மலைக்கும் மடுவுக்கும்மான இரு இளைஞர்களை பற்றி சொல்லும் ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் வேகக்குறைவு என்றாலும், அந்த காட்சிகள் பார்த்து பழகி, நம்மை தயார்படுத்துதல் நலம் என்றே சொல்லலாம்.
இப்படி தனித்தனி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பம்.
இரு வேறு திசைகளில் பயணித்து கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கை, ஒரு புள்ளியில் இணைகிறது. அவர்களை ஒன்று சேர்க்கிறது.
அது எப்படி அவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்பதுதான் அதிரடி திருப்பம்.
அதிரடி திருப்பம் என்றதும், கொலை, கொள்ளை, பாம் என்றெல்லாம் ஜேம்ஸ் பாண்டு ரேஞ்சுக்கு யோசிக்காமல், நடைமுறையில் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வுதான் என நினைவு படுத்திக் கொள்வோம்.
நடப்பது வேறோன்றுமில்லை. பணக்கார இளைஞனின் செல்போன் (ஐ பாட்) நழுவி தரையில் விழ, அதை ஏழை இளைஞன் எடுத்து கொள்ள என நடக்கும் சிறு திருப்பமே அந்த தடாலடி.
அதன் பின் சங்கிலித் தொடர் போல் நடக்கும் காட்சிகள் ஒரு ரோலர் கோஸ்டர் துடிப்புடன் நகர்கிறது. ஒரு துப்பறியும் கதையை ஒத்த திரைக்கதை அதன்பின் நம்மை கட்டிப் போடுகிறது.
நடிப்பவர் புதியவர்கள், பஞ்ச் டயலாக்குவதில்லை. பறந்து பறந்து ஃபைட் பண்ணுபவர்கள் இல்லை. என்றாலும் நம்மை ரசிக்க வைக்கிறார்கள்.
ஒரு ஒன்றரை அணா ஃபோனை சக ஊழியன் ஒருவன் கும்பலில் காட்டி, ஃபிலிம் காட்டுவதை பார்த்து விட்டு, நம் ஏழை இளைஞன் கால்சட்டை பையை தொட்டு அதை விட காஸ்ட்லியா நான் வைச்சிருக்கேன், என பெருமிதம் கொள்வானே. அதை வெளியில் எடுக்க முடியாமல் திணறுவானே…
அந்தரங்கமான தன் படுக்கை அறை கிளிப்பிங்கை ஃபோனோடு தொலைத்து விட்டு திணறுவதில் ஆகட்டும். அல்லது தொலைத்த ஃபோனை மீட்க துடிக்கும் உணர்வை கட்டுப்படுத்தி சமரசம் பேச இறங்கி வரும் சாதுர்யம், என சுவாரசியமாய் அமைத்த காட்சிகள் அற்புதம்.
பயந்து பயந்து, டிராபிக்கில் ரோடு கிராஸ் செய்யும் அதே இளைஞன், இன்று எப்படி தன்னம்பிக்கையுடன் சாலையை கடக்கிறான். அவ்வளவுதான் வாழ்க்கையின் ரகசியம் என ஒற்றை காட்சியில் காட்டிய இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும்.
உணர்வுகளை மெனக்கெட்டு செல்லூலாய்டில் கொண்டு வந்து, ஒரு ரசிக்கத்தக்க மூன்று மணி நேர சினிமாவாக தந்தது இயக்குனரின் புத்திசாலித்தனம் பாராட்டுதற்குறியது.
பொழுது போக்கும், சுவாரசியமும் தத்துவ சிந்தனையும் தரமான திரைப்படமும் வேண்டுவோர் நம்பி செல்லலாம்.
- லாரன்ஸ்
Posted by IdlyVadai at 11/23/2012 10:24:00 PM 4 comments
Labels: சினிமா, லாரன்ஸ், விமர்சனம், விருந்தினர்
ஷிட்! - பேஸ்வதா வில்சன் மற்றும் பாஷா சிங்
தேசிய அவமானம்
தேசிய அவமானத்திற்கு தேசம் முழுதுமே பொறுப்பு; ஆனால் இதற்கு யாரும் பொறுப்பெடுத்துக் கொள்ள தயாராயில்லை. முப்பது வருடங்களுக்கு முன், எங்கள் கண்ணியத்தைக் காக்க நாங்கள் போராடத்தொடங்கிய போது, இப்படியொரு மனிதத் தன்மையற்ற வழக்கம் இருப்பதும் அதன் வீச்சும் பல மக்களுக்குத் தெரியாது என்று நினைத்திருந்தோம். தங்களது கொல்லையில் தினமும் காலையில் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்கள் கையால் மனித மலத்தை அகற்றி அதை தலையில் ஏந்திக் கொண்டுபோய் அப்புறப்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது என்று நினைத்திருந்தோம். இந்த காட்டுமிராண்டித்தனமான வழக்கத்தை அவர்களுக்கு உணர்த்த முடியும் என்று நாங்கள் நினைத்தோம். அதுவே எங்கள் பிரசாரங்களில் மையப் புள்ளியாக இருந்தது. ஆனால், அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள், சட்ட வல்லுநர்கள், அறிவுஜீவிகள் என்று பல தரப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகும் கூட ஒன்றும் மாறவில்லை. மனிதர்கள் துப்பரவுச் செயலில் ஈடுபடுவதை துடைத்தெறிய வேண்டும் என்ற எங்கள் இலக்கு இன்னும் அப்படியே தான் இருக்கிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் மூலம், எத்தனை உலர் கழிவறைகள் இருக்கின்றன என்ற புள்ளிவிபரம் நம்மிடம் இருக்கிறது. ஆனால், தங்களுடைய ஆரோக்கியம், மானம் மரியாதை எல்லாவற்றிலும் சமரசம் செய்து கொண்டு மற்ற மனிதர்களின் மலத்தைச் சுமப்பவர்களுக்காக, மாற்றத்தின் சக்கரம் கொஞ்சம் கூடத் நகரவில்லை. இன்றைக்கு இது அறியாமை இல்லை; இதைப் பற்றிய விழிப்புணர்வு என்பது நம்மிடையே பல காலமாக வேருன்றியிருக்கும் சாதிய மனப்பான்மையால் தோற்கடிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் வேலைகள் சுத்தமானவை அசுத்தமானவை என்று பிரிக்கப்பட்டு, சாதிய நிலைகளில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு அசுத்தமான வேலைகளே விதிக்கப்படுகிறது.
எப்போது நம்முடையை மனநிலையை மாற்றிக் கொள்கிறோமோ அப்போது தான் நம்முடைய கழிப்பறைகளையும் மற்ற முடியும். இந்த காரணத்தால் தான், அடுத்தடுத்து வந்த ஜனாதிபதிகளும் பிரதம மந்திரிகளும் உறுதியளித்த பின்னும் கூட இந்த விஷயத்தில் எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று கூட, என்றைக்கு மனிதர் கழிவுகளை மனிதர் சுத்தப்படுத்தும் என்றைக்கு ஒழியும் என்று எதிர்பார்க்கலாம் என்பதை இந்திய அரசாங்கம் சொல்லவில்லை. கொஞ்சம் கூட வெட்கப்படாமல் காலக்கெடுக்களை தொடர்ந்து மீறிக் கொண்டேயிருக்கிறோம். தன்னுடைய லட்சக்கணக்கான குடிமக்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்வை வழங்க வேண்டிய கடமையில் இந்நாடு தோல்வியடைந்திருக்கிறது.
இன்றைக்கும் அன்றைக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம், அன்றைக்கு நாம் இதைப் பற்றிப் பேசவில்லை என்பது மட்டுமே. இன்றைக்கு மனிதர்கள் மலம் அள்ளுவது செய்தியில் வருகிறது, தொலைக்காட்சிகளில் விவாதிக்கப்படுகிறது. அரசாங்கங்கள் கூட இதில் தீவிரம் காட்டுகிறார்கள். ஆனால், இது எல்லாமுமே வாய்ப்பாயாசம் வைப்பதோடு நின்றுவிடுகிறது. கைகளால் துப்பரவு செய்வதை ஒழிக்கவும் அதைச் செய்யும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் 2011-12க்கான நிதியாண்டில் மத்திய அரசாங்கம் ரூ.100 கோடி ஒதுக்கியிருந்தும், அதிலிருந்து ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யப்படவில்லை என்பதை வேறு எப்படிச் சொல்வது? துப்பரவுத் தொழிலாளர்கள் மற்றும் அசுத்தமான பணிகளில் ஈடுபடுபவர்களின் குழந்தைகளின் மெட்ரிக் படிப்புக்கு முந்தைய வகுப்புகளுக்கான உதவித்தொகை பயன்படுத்தப்படாமல் இருப்பதும், வேறு திட்டங்களுக்கு திருப்பிவிடப்படுவதும் இன்னும் மோசம். கோரிக்கை அதிகம் இல்லாததைக் காரணம் காட்டி திட்டக்கமிஷன் இத்திட்டங்களுக்கான தொகையை உயர்த்த மறுத்துவிட்டது. ஒரு அதிர்வு கூட இல்லை; ஒரு கேள்வி கூட எழுப்பப்படவில்லை. இருக்கும் நிலையை அப்படியே தொடரவும் சாதிய வரிசையை அப்படியே வைத்திருக்கவும் அமைப்பு எவ்வளவு அழகாக செயல்படுகிறது?
1993ல் இயற்றப்பட்ட சட்டம்
மலம் அள்ள தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக 1993லேயே ஒரு பொதுச் சட்டம் இருக்கிறது. பத்தொன்பது வருடங்களுக்கு பின் இன்றைக்கு, ஒரு புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கிறோம். இந்த பத்தொன்பது வருடங்களில் என்ன நடந்தது? ஒருவர் கூட அந்தச் சட்டத்தில் கீழ் தண்டிக்கப்படவில்லை. அந்த சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருந்தது உண்மை. ஆனால் ஒருவர் கூட அச்சட்டத்தின் கூட தண்டிக்கப்படவில்லை என்பதற்கு அவ்வோட்டைகள் காரணம் இல்லை. துப்பரவுத் தொழிலாளர்களுக்கு ஏன் எந்த மறுவாழ்வும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை? சட்டமியற்றுபவர்களுக்கு உறுதியும் நம்பிக்கையும் இல்லை என்பதே உண்மை.
மனிதர்களை மிகவும் கேவலமாக நடத்தும் இத்தகைய வழக்கத்திற்கு எதிராக ஒரு உறுதியான தடுப்பு வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. மக்களுக்கு ஆதரவாக இயற்றப்படும் உறுதியான ஒரு சட்டம் மற்றங்கள் ஏற்படுத்துவதற்கு உதவும். ஆனால், முதலில் நமது அரசாங்கங்கள் உண்மையை மறுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசாங்கங்கள் இணைந்து காலக்கெடுவுடன் கூடிய ஒரு திட்டத்தைக் அறிவிக்க வேண்டும். சஃபாய் கர்மாசாரி அந்தோலன் 2003ல் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்த பெட்டிஷனுக்கு பல மாநில அரசுகள், தங்களுடைய மாநிலத்தில் இது மாதிரி ஒரு துப்பரவுத் தொழிலாளியோ ஒரு உலர் கழிவறையோ இல்லை என்று பதில் சொல்லியிருந்தார்கள். இதுவொரு பச்சைப் பொய். 2010ல் எங்கள் அமைப்பு, இந்த கேவலமான வழக்கம் இன்னும் 252 மாவட்டங்களில் இருக்கிறது ஆதாரப்பூர்வமாக நீருப்பிக்கும் அவரை அவர்கள் அந்தப் பொய்யை விடாமல் படித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போதைய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுக்கான அமைச்சகம், இந்தத் அவமானகரமான வேலை எந்தளவுக்கு நாட்டில் இருக்கிறது என்பதை அறிய ஒரு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தது. கணக்கெடுப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க ஒரு செயற்குழுவையும் நியமித்தது. ஆனால், இதிலிருந்து அரசாங்கம் இந்தப் பிரச்சனையை தீவிரமாக அணுகியது என்று புரிந்துகொண்டுவிடக் கூடாது. செயற்குழுவில் நான்கு அமைச்சகங்கள் இடம்பெற்றன. அவர்கள் அறிக்கை சமர்ப்பித்தபின் நாடெங்கிலும் உள்ல துப்பரவுத் தொழிலாளர்களை அடையாளம் காண, நிதி அமைச்சகம் ரூ.35 கோடி ஒதுக்கியது. இதுவரை எல்லாம் நன்றாக நடந்தது, அதன் பின் பதிமூன்று மாதங்கள் கழிந்தும் ஒரு பேப்பர் கூட நகரவில்லை. இறுதியில், கணக்கெடுப்பைச் செய்ய தகுதியான அமைப்பு எதுவும் சிக்கவில்லை என்பதால் கணக்கெடுப்பை கைவிடுவதாக அறிவித்தது அரசு. நாட்டிலிருக்கும் துப்பரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கண்டுபிடிக்கும் முதல் மற்றும் முக்கியமான செயலை அரசாங்கம் கைவிட்டது.
இப்போது, திடீரென்று அரசாங்கம் சென்சஸ் தரவுகளை கண்டுபிடித்திருக்கிறது. இது இன்னும் ஆச்சரியம், ஏனென்றால் சென்சஸ் தரவுகள் சுகாதாரமற்ற கழிப்பறைகளுக்கு மட்டுமே: நாட்டிலிருக்கும் 7,94,390 உலர் கழிப்பறைகளில் மனிதர்களே மனிதர்களின் மலத்தை சுத்தம் செய்கிறார்கள். இதில் 73 சதவிகிதம் கிராமங்களிலும் 27 சதவிகிதம் நகரங்களிலும் இருக்கின்றன. மேலும் 13,14,652 கழிப்பறைகளிலிருந்து மலம் திறந்தவெளி சாக்கடைகளில் தள்ளிவிடப்படுகிறது. ஆச்சரியப்படும் விதமாக, 4,97,236 கழிப்பறைகளில் மலத்தை சுத்தம் செய்யும் பணியை மிருகங்கள் செய்வதாக சென்சஸ் சொல்கிறது.
இந்த தரவுகளில் இருந்து எத்தனைபேர் கையால் மலம் அள்ளுகிறார்கள் என்பதை எப்படி கணக்கிடுவது? இந்தக் குழப்பம் போதாதென்று, பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகள், இந்த தரவு எல்லாம் தவறு (அதாவது அம்மாநிலகங்களில் அத்தனை உலர் கழிப்பறைகள் இல்லையாம்) என்று சுப்ரீம் கோர்ட்டில் 2012 அக்டோபர்-நவம்பரில் ஒரு புதிய சான்றை அளித்திருக்கின்றன. எங்கள் அமைப்பு 2010ல் கொடுத்ததும் சரி, இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்பட்டதும் சரி, எந்தத் தரவுமே சரியாக இல்லையாம். இந்த மாநில அரசுகளிடமும் சரியாண எண் இல்லையென்றால், பிறகு எது தான் சரியான எண்ணிக்கை? சரியான தரவுகளை எப்படித்தான் பெறுவது? புனர்வாழ்வுக்கு எதை அடிப்படையாக எடுத்துக் கொள்வது? இவையெல்லாம் எங்களைப் போன்ற அமைப்புகளை, தங்கள் மாநிலத்திலும் கைகளால் மலம் அள்ளுபவர்கள் இருக்கிறார்கள் என்று அந்த அந்த அரசாங்கங்களை ஏற்றுக் கொள்ளவைக்க தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது.
பாலினம் பற்றிப் பிரக்ஞையில்லாத சட்டம்
விஷயம் இப்படியிருக்க இப்போது நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பழைய சட்டத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இது உதவுமா? சொல்ல முடியாது. இந்தச் சட்டத்தில் பாலினம் பற்றிய பிரக்ஞையே இல்லை. எல்லா துப்பரவுத் தொழிலாளர்களும், அரசு அதிகாரிகளும் ஆண்களே என்று கருதுகிறது இச்சட்டம். பெரும்பான்மையான துப்பரவுத் தொழிலாளர்கள் பெண்களாக இருக்கும் நிலையில், இது அபத்தம். புனர்வாழ்வுத் திட்டங்கள், சஃபாய் கர்மாசாரி சமூகத்தில் உள்ள பெண்களுடைய தேவைகள், பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களுக்கு பதில் சொல்லயான வேண்டும்.
அடுத்தது, இந்தச் சட்டம் துப்பரவுத் தொழிலாளர்களை அடையாளம் காண்பது அல்லது ஒரு புதிய கணக்கெடுப்பை நடத்தும் பொறுப்பை உள்ளாட்சி அமைப்புகளிடம் விட்டுவிடுகிறது. இந்த உள்ளாட்சி அமைப்புகள் எப்போதும் மறுப்பு நிலைப்பாட்டிலேயே இருந்ததோடு தவறான வாக்குமூலங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் வழங்கியிருக்கின்றன. கையால் மலம் அள்ளுபவர்களோ சுகாதாரமற்ற கழிப்பறைகளோ இல்லவே இல்லை என்ற வாதிட்ட மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடமே அந்தக் கணக்கெடுப்பைச் செய்யச் சொல்வது என்ன நியாயம்? இந்த வேலையை, சமூக நீதி அமைச்சகத்துடனும் சமூக குழுக்களின் அங்கத்தவர்களுடனும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடனும் நெருக்கமாக வேலை செய்யும் அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் வடிவமும் செயல்முறையும் எப்படியிருக்க வேண்டும் என்பதை இந்த அமைச்சகம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுவிட்டது.
இந்த சட்டத்தின் நோக்கம் கைகளால் மலம் அள்ளுபவர்களை அக்கொடுமையிலிருந்து விடுவிப்பதாக இருக்க வேண்டும். இந்த கண்ணோட்டத்திலேயே ஆரோக்கியமற்ற கழிப்பறைகளை அடையாளம் கண்டு, அவற்றை அழித்து மாற்றும் வேலையும் செய்யப்பட வேண்டும். சஃபாய் கர்மாசாரி சமூகத்துக்கு பல நூற்றாண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்த தேசம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இது நடக்கவில்லையென்றால் நீதி கிடைத்துவிட்டதாகச் சொல்லவே முடியாது. எந்த ஒரு சட்டமும் முறையான ஆழமான கணக்கெடுப்பு இல்லாமல் செயல்படவே முடியாது. இதை முடித்தபின், சாதிரீதியாகச் செய்யப்படும் இந்த அவமானகரமான செயலை இந்த நாட்டிலிருந்து நீக்க அரசாங்கம் காலக்கெடுவுடன் கூடிய ஒரு செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
“.... எங்களுடைய போராட்டம் அதிகாரத்திற்காகவோ செல்வத்திற்காகவோ இல்லை. இது சுதந்திரத்திற்கான போர். இது மனிதனை பண்படுத்துவதற்கான போராட்டம்” என்ற அம்பேத்காரின் வார்த்தைகளை மனத்தில் ஏற்றிக் கொண்டு, இம்மக்களை இந்த அநியாயத்திலிருந்து விடுவிக்கும் வேலையைத் தொடங்க வேண்டும்.
http://www.thehindu.com/opinion/lead/sht-caste-and-the-holy-dip/article4116247.ece
தமிழில் - நந்தி ( இட்லிவடைக்கு புதிய வரவு )
Posted by IdlyVadai at 11/23/2012 09:41:00 AM 6 comments
Labels: கட்டுரை, நந்தி, மொழிபெயர்ப்பு
Wednesday, November 21, 2012
Tuesday, November 20, 2012
#wordmint
உங்களுக்கு எல்லாம் ரொம்ப தெரிந்த எ.அ.பாலா அனுப்பிய சில வேர்ட்மிண்ட்கள் கீழே...
#wordmint தீர்த்தசுமங்கலி - PUB செல்லும் திருமணமான பெண் (ராமசேனை வானரங்களால் இவருக்கு "கட்டாய"க் கல்யாண ஆபத்தில்லை!) ;-)
#wordmint புலம்புச் செல்வர் - சதா புலம்பிக் கொண்டே இருக்கும் வயதான அரசியல்வாதி ;-)
சோகை மயில் - ஓவராக டயட்டிலிருந்து மெலிந்த ஒய்யாரமான பெண்
#wordmint தீபாவலி - தீபாவால் ஏற்பட்ட வலி
#wordmint தொல்லைபேசி - விடாமல் பேசி வெறுப்பேற்றுபவர்.
#wordmint மோதீய அரசியல் - இந்துத்வா சார்பு அரசியல் (திராவிடக் கட்சிகளின் சாதீய அரசியல் மாதிரி ;-) )
#wordmint ஜல்லிக்கூட்டு - ஒரு இடுகைக்குக் குரூப்பாகச் சென்று பின்னூட்ட ஜல்லி அடிப்பது.
#wordmint அனாமநேயம் - பின்னூட்டத்தில் திட்டாத அனானி
#wordmint ராஜகோட்சே - அமைதிக்கும் அஹிம்சைக்கும் எதிரான ராஜபக்சே
#wordmint யுத்தபிட்சு - சிங்களம் வாழ் புத்தபிட்சு
#wordmint கோலா'க'ரம் - சரியான அளவு கோலா கலக்கப்பட்ட ரம்
#wordmint விலக்குமாரு - 'பிட்' பட டைரக்டர் படப்பிடிப்பின்போது நடிகைக்குப் போடும் உத்தரவு!
#wordmint பரங்கிமலை ஜாதி - 'பிட்' படங்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர் கூட்டம்
#wordmint கிலிநொச்சி - ஈழத்தமிழர் (சிங்கள ராணுவம் உண்டாக்கிய) மரணபயத்தில் வாழ்ந்த இடம் #wordmint 'அடக்கு'மொழி - சிங்கள பாஷை
#wordmint இரட்டைக்கிழவி - 2 கல்யாணம் செய்த மாமனார் அமைந்தால், மருமகளுக்கு வாய்ப்பது :) #wordmint வாழைக்குமரி - வாழைப்பழத்தை விரும்பித் தின்னும் பெண்
#wordmint சவுரிமான் - செயற்கை முடி வைத்த பெண் (இவர் முடி இழந்தால், உயிரெல்லாம் துறக்க மாட்டார்
;-) )
#wordmint கன்னிவெடி - படபடவென பேசும், கோபப்படும் திருமணமாகாத பெண்
முகவுறை - ஃபேஸ் மாஸ்க்
கட்டணக் களிப்பறை - ஹோட்டலில் (அ) லாட்ஜில் போடும் ரூம் இலவசக் களிப்பறை - வீட்டில் இருக்கும் பெட்ரூம்
உவ்வேக் - வயிற்றைப் புரட்டும் விவேக் காமெடி
#wordmint பிட்டாபி- பரீட்சையில் பிட் அடிக்கும் (அ) பிட் படம் பார்க்கும் பட்டாபி.....
அனுகுண்டு - செக்ஸ் பாம் அனு
'உச்சா'விருத்தி - சிறுநீர் கழித்தல் :)
'உச்சா'கட்டம் - சிறுநீர் கழிப்பதற்கான நேரம் (Time to take a leak) ;-)
துண்ணுதல் - கடுப்போடு லேட் லஞ்ச் சாப்பிடுதல்
#wordmint பாலஜி - ஒரு கால் இழந்த பாலாஜி.....
பலஜி - 2 கால்களும் இழந்த பாலாஜி
SUN டிவி - பேரனின் சேனல்
SON டிவி - மகனின் சேனல் ;-)
காட்டு'பிராண்டி' - டாஸ்மார்க் 'அட்டு' சரக்கு
#wordmint 'காண்டு'பிடிப்பு - அனாவசிய வெறுப்பு ஏற்படுதல்
#wordmint முறுங்கை - முறுக்கப்பட்ட கை
#wordmint கத்திரிவாய் - வெட்டு ஒன்று துண்டு ரெண்டு எனப் பேசுபவர்
#wordmint 'காத்து'வரவாயன் - ஆஸ்த்துமா வியாதியால் பீடிக்கப்பட்டவன்
#wordmint நாறுமனம் - கெட்ட மனசு
#wordmint கண்ணிப்பெண் - மிக உரக்கப் பேசும் பெண்
#wordmint கிரிக்'கோட்டு' - துரைமார்களின் கிரிக்கெட்
#wordmint பென்மணி - லண்டனில் உள்ள Bigben pendulum
#wordmint கவுந்தமணி - தடுக்கி விழுந்த மணி
#wordmint அசத்தியராஜ் - கலக்கல் நடிப்பு சத்யராஜ்
#wordmint of the day: ஐயன்காரு - நைனா வாங்கின கார்
#wordmint பொடிஉடை - மினி ஸ்கர்ட் (அ) பிகினி
#wordmint கொன்சேகா - ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் பொன்சேகா
#wordmint பொடிசடை - பாப்கட் செய்யப்பட முடி
பாட்டிமன்றம் - துட்டிருக்கும் லேடிஸ் கிளப்
கொண்டைநாடு - அக்ரஹாரம்
#wordmint கலாசிறியர் - குள்ளமான கலா மாஸ்டர்
#wordmint குலக்கறை - குலத்துக்கு ஏற்பட்ட இழுக்கு
வோட்டுக்குத்து - 'வெட்டுக்குத்து' நடுவில் கள்ள ஓட்டு போடுதல்
தீர்த்தசாரதி - சரக்கடிக்கும் சாரதி
கொலைச்சேவை - துட்டுக்காக போட்டுத் தள்ளுதல்
இருளாதாரம் - இருண்டு போன பொருளாதாரம் (dark economy)
தீபாகர்ப்பம் - தீபா மாசமாக் கீறா ;-)
தீபாரோதனை - (மாஜி காதலி!) தீபாவால் தொல்லை
நோட்டுப்பற்று (நாட்டுப்பற்று திரிபு) - காசின் மேல் நாட்டம்
"போங்கு"தாரர் - ஏமாற்றும் பார்ட்னர் (அ) No dealing period-இல் பங்குகளை விற்பவர்
சம்மரசம் (சமரசம் திரிபு)- சூப்பரான மிளகு ரசம்
மரண ஆசனம் - எலெக்ட்ரிக் சேர்
பொந்தரவு (தொந்தரவு திரிபு) - புற்றில் இருக்கும் பாம்பு
அனு ஓலை (அணு உலை திரிபு) - அனு அனுப்பிச்ச லவ் லெட்டர்
பிரதிபா'லிப்பு' - பிரதிபாவின் அழகிய உதடு
கழிவிறக்கம் - 2 பாத்ரூம் :)
வாய்க்கரசி (வாய்க்கரிசி திரிபு) - துடுக்குப்பேச்சுக்காரி
ஓடிட்டர் - ’மலையாள’ ஆடிட்டர்
'கப்பு'நிதி (வைப்புநிதி திரிபு)- ஊழல் சொத்து
கடலைப்பயல் - பெண்களிடம் சதா அரட்டை அடிப்பவன்
நாய்வாய்ப்பட்ட (நோய்வாய்ப்பட்ட திரிபு) - நாயால் கடிக்கப்பட்ட
பாவடை - மிடி ஸ்கர்ட் (குட்டைப் பாவாடை!)
பவடை - மினி ஸ்கர்ட்
சொற்கொல்லர் - இவர் எழுதுவதில் நிறைய "டைப்போ" இருக்கும்
எ.அ.பாலா இதற்கு கூட சரியான #wordmint நீங்க டிரை பண்ணலாம். ஆனால் திட்டாதீங்க !
Posted by IdlyVadai at 11/20/2012 07:21:00 PM 9 comments
Sunday, November 18, 2012
சன்டேனா இரண்டு (18-11-12) செய்திவிமர்சனம்
இட்லிவடைக்கும், உங்களுக்கும் என் நன்றிகள்.
சாதி சர்ச்சை முதல் செய்தியில்.இரண்டாவதில் மத சர்ச்சை
செய்தி # 1
"திருவரங்கம் பிராமணாள் கபே பெயர் அழிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு விட்டு திரும்பும் சாதி ஒழிப்பு போராளிகளே வருக! வருக!"
இவண் பெரியார் திராவிட கழகம்.
- இப்படி ஒரு பிரம்மாண்டமான பேனர் பார்த்தேன் புதுச்சேரியில். கூடவே தந்தை பெரியாரின் படம்.
இவர்கள் கூறும் 'பகுத்தறிவு'படி பார்த்தால், படத்தில், சிலையில் எப்படி இவர்களுக்கு பெரியார் தெரிகிறார். பெரியார் படம் என்றால் அது வெறும் காகிதம், பெரியார் சிலை என்றால் அது வெறும் கல்தானே?
விடுங்கள். இங்கே நாம் பேச இருப்பது இந்த போராட்டம் குறித்து மட்டுமே.
ஸ்ரீ கிருஷ்ணய்யர் கபே என்று ஒரு ஹோட்டல் ஸ்ரீரங்கத்தில், ராஜகோபுரம் அருகே திறக்கப்பட்டது. வாடகைக்கு இடம் பிடித்து இந்த ஹோட்டலை திறந்தார் இதன் உரிமையாளர் கிருஷ்ணய்யர்.
அவ்வளவுதான். வீரமணியின் திராவிட கழகம், பெரியார் அமைப்புகள் எல்லாம் ஒன்று திரண்டு இந்த ஹோட்டலை மூடக்கோரி பெரும் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். காரணம், "பாரம்பரிய பிராமணாள் கபே" என்று போர்டில் குறிப்பிட்டு இருந்ததுதான்.
சாதிப்பெயரில் வர்த்தக நிறுவனங்கள் இல்லாத ஊர் என்று எதாவது உண்டா? நாயுடு ஹால் தொடங்கி தேவர் மெஸ், நாடர் கடை, முதலியார் சன்ஸ் இப்படி நம் தமிழக ஊர்களில் தடுக்கி விழுந்தால் இருக்கின்றனவே??
அவையெல்லாம் விட்டுவிட்டு இந்த பிராமணாள் கடைக்கு மட்டும் ஏன் இந்த "ஒவர் பில்டப்" போராட்டம்? புதுச்சேரியில் அதுவும் தீபாவளி நேரத்தில் எல்லா கடைகளுக்கும் கருப்புச்சட்டையொடு சென்று "நன்கொடை(!)" வசூலித்து, ஸ்ரீரங்கத்திற்க்கு வேன் ஏறி..... (மற்ற ஊர்களிலும் இதே பாணியில் கூட்டம் சேர்ப்பா என்று தெரியவில்லை).
இந்த கேள்விக்கு பின்வரும் அரிய விளக்கத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் இவர்கள்
"நாயுடு, தேவர், நாயர், செட்டியார், முதலியார், வன்னியர், பிள்ளை, கோனார், அய்யர், அய்யங்கார் - இவையெல்லாம் ஜாதிப் பெயர்கள்! பிராமணர்/ பிராமணாள் - வர்ணத்தின் பெயர்! நால்வருணத்தின் அடிப்படையில் இருக்கும் இந்துமத ஜாதி அமைப்பில், பிரம்மனின் முகத்தில் பிறந்ததால் உயர்ந்த வர்ணம் என்று சொல்லப்படுவதின் பெயர்! அது ஜாதிப் பெயர் அல்ல. யாரும் சுப்பிரமணிய பிராமணர் என்றோ, ராமசாமி பிராமணர், அனுஜா பிராமணத்தி, ஜனனி பிராமணத்தி என்றோ பெயர் வைத்துக் கொள்வதில்லை.
இந்த வர்ணாசிரமத்தின்படி தான் பிறப்பின் அடிப்படையில் ஜாதி புகுத்தப்படுகிறது. பிறப்பின் அடிப்படையிலேயே இழிவு சுமத்தப்படுகிறது. பிராமணர் என்பதை ஒப்புக் கொண்டால், மற்ற வர்ணங்களையும் ஒப்புக் கொள்ளவேண்டும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்றெல்லாம் பிரிவுகள் கிடையாது. இந்து மதத்தின் படி அனைவரும் சூத்திரர்களே என்பதை சமூகவியலாளர்கள் மட்டுமல்ல... நீதிமன்றமே சுட்டிக் காட்டியுள்ளது.எனவே, அவாள் பிராமணர் என்று சொன்னால், நாம் சூத்திரன் என்று ஆகிவிடுவோம்".
என்ன சொல்ல வருகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் அய்யா.
கடைசியில் இந்த ஹோட்டல் மூடப்பட்டுவிட்டது. 'சொந்த இடம் வாங்கி இதே பெயரில் கடை நடத்திக்காட்டுகிறேன்' என்று அறிவித்து இருக்கிறார் கிருஷ்ணய்யர்.
சாதி எதிர்ப்பு திராவிட கழக கண்களுக்கு எப்படி பிராமணாள் கபே மட்டும் தெரிகிறது? போஸ்டர் அடித்து தங்களை தாங்களே பாராட்டிக்கொள்ளும் அளவுக்கு இந்த கடையை மூடியதன் மூலம் என்ன சாதித்து விட்டார்கள் தி.க வினர்.??
நான் சொல்லவந்தது ஒன்றுதான். இப்படி பெயர் வைப்பதால் யாருக்கும் உயிர் அல்லது பொருள் சேதம் எதுவும் ஏற்ப்படவில்லை. இந்த ஹோட்டல் திறப்புக்கு பின், கடந்த மாதத்தில் தமிழ் நாட்டில் நடந்த இரண்டு சம்பவங்களை குறிப்பிடுகிறேன்.
தருமபுரி அருகே தலித் இளைஞன் ஒருவன் வன்னிய கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து, கலப்பு மணம் செய்துவிட, நாயக்கங்கொட்டாய் என்ற கிராமத்தில் சுமார் 200 தலித் குடும்பங்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக ஆண்டுதொரும் "தேவர் ஜெயந்தி" விழா, அதை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், கொடுரமாக பெட்ரோல் குண்டுகள் வீசி ஆறு படுகொலைகள் அடுத்தடுத்து நடந்தன.
முக்குலத்து வாக்குகளை கவர, அரசியல் கட்சிகள் அனத்தும் முக்கியத்துவம் தரும் இந்த "தேவர் ஜெயந்தி' (கவனிக்க, வெறும் "பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தி" என்று இல்லை) வருடா வருடம் அரசுக்கு எவ்வளவு பாதுகாப்பு செலவுகள் ?
திராவிட கழகங்கள் சாதிப்பெயரால் நடந்த தரும்புரி கலவரத்திற்க்கு காரணமான வன்னியர்களுக்கு எதிராக களத்தில்(!) ஏன் இறங்கவில்லை? இந்த சாதி ஒழிப்பு போராளிகள் சாதியை முன்னிறுத்தி நடைபெற்றுவரும் தேவர் ஜெயந்திக்கு எதிராக, திருவரங்கம் சென்றது போல பசும்பொன் கிராமத்துக்கு சென்று ஏன் போராடக்கூடாது/போராடவில்லை?
செய்தி # 2
தீபாவளிக்கு வெளியான "துப்பாக்கி" படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டியதால், படத்திற்க்கு அம்மக்களிடையே எதிர்ப்பு வலுத்துள்ளது. முஸ்லீம்களை விமர்சிப்பது போல இப்படம் உள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக நடிகர் விஜய்யின் வீட்டிற்க்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முஸ்லிம் லீக் கட்சியும் "துப்பாக்கி" படத்தை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
இதை தொடந்து, அடுத்து வெளிவர இருக்கும் கமலின் விஸ்வருபம் படமும் வெளிவரும் முன்பே, இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.
படத்தின் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை பார்த்துவிட்டு, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர், கமலுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.
"நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை.
எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது". என்று அதில் குறிப்பிடபட்டுள்ளது.
மேலும், "கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். " ன்றும் கூறி இருக்கிறது தமுமு.
"சண்டியர்" என்று பெயர் வைத்து, அதனால் வந்த எதிர்ப்பை தொட்ர்ந்து படத்தின் தலைப்பை "விருமாண்டி" என்று மாற்றி, அந்த பரபரப்பையே படத்தின் மார்க்கெட்டிங் உத்தியாக்கியவர் நம்ம கமல். விஸ்வருபம் ஒரு இன்டர்நேஷனல் படமல்லவா? இந்த 'மத சர்ச்சை' அவருக்கு பெரும் 'உதவி'யாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
(நன்றி...இனி,அடுத்தவாரம்)
-இன்பா
Posted by IdlyVadai at 11/18/2012 03:39:00 PM 53 comments
Saturday, November 17, 2012
அசைவ நியூஸ்
6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே' என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அசைவ உணவுப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படியா ? என்றால் தெரியாது அப்படி தான் செய்தி வந்திருக்கிறது.
2006ல் இட்லிவடை பதிவிலிருந்து...
"இந்து சமயம் என்றால் அது சைவ சமயம் தான். திருமாவளவன் சைவ உணவு தான் சாப்பிடுகிறேன் என்றார். அவரை நாம் ஆசீர்வதிக்கிறோம். தலைவன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி! தன் தொண்டர் களும் சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என திருமாவளவன் உத்தரவிட வேண்டும். விடுதலை சிறுத்தைகள் சைவ உணவை உட்கொள்ள வேண்டும். மீனை விட்டு விடுங்கள். மாடு, ஆடு, ஒட்டகத்தை வெட்டாதீர்கள். இதுதான் ஜீவகாருண்யம்..." - மதுரை ஆதீனம்
"உணவுக்கு காய்கறிகளை மட்டுமே நாம் எடுத்துக் கொண்டால் அது நடக்காத காரியம். சைவ உணவு என்பது பல இடங்களில் மாறுபடுகிறது. வங்காளத்தில் பிராமண ஓட்டலுக்குச் சென் றால் அங்கே சைவ உணவு விடுதியில் மீன் இருக்கும். மீன் அங்கே சைவம். ஆதீனம் கொல்கட்டாவிற்குப் போய் பார்க்க வேண்டும். இல்லையேல் அவரை நான் அழைத்து போகிறேன். திருமாவளவன் சைவம் என்பது ஆதீனம் மூலம் தான் தெரிந்தது. சிறுத்தைகள் சைவமாக இருக்கக் கூடாது. கூண்டில் உள்ள சிறுத்தைகள், புலிகள், சிங்கங்களுக்கு சைவ உணவு கொடுக்க முடியாது..." - தி.க., வீரமணி.
( செய்தி: தினமலர் )
2004ல் இட்லிவடை பதிவிலிருந்து...
திருக்குறளில்..
"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்."
தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக்
கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.(கலைஞர் உரை)
(புலால் மறுத்தல்-1)
படைகொண்டார் நெஞ்சம்போல நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை உண்டார் மனம்
ஒருமுறை சுவைத்த பின் கையில் கத்தி வைத்திருப்பவன் போல நல்லதையே நினைக்கத் தோன்றாது ( சுஜாதா உரை )
புதிய நீதி: ஆடு மாடு கோழியை சாகடிக்கும் போது அவை கத்தும். அதே மாதிரி புலி, சிங்கம் நம்மை கடிக்கும் போது நாம் கத்துவோம்.
Posted by IdlyVadai at 11/17/2012 11:47:00 AM 16 comments
Labels: செய்தி விமர்சனம்
Friday, November 16, 2012
22 ஃபிமேல் கோட்டயம்.
தனக்கு நடக்கும் அநியாயங்களுக்கு அவள் பொறுமையாய் இருப்பதாய் நினைத்தாலோ அல்லது என்ன செய்துவிடப் போகிறாள் எனநினத்தாலோ என்ன மாதிரி பழிவாங்கப்படலாம் என்பதை அருமையாக சொல்லி இருக்கின்றனர்.
டெஸ்ஸா.கே.ஆப்ரஹாம் போனில் டிகே என்றழைக்கப்படும் தினேஷுக்கு நன்றியும், தனது அன்பையும் சொல்கிறாள், முதல் காட்சியில்.
ஏன் இதெல்லாம், அவள் எங்கு செல்கிறாள், எதற்கு நன்றி என்பதுதான் மொத்தக்கதையும்.
கேரள சினிமாவில் அதிகம் தெரியாத முகங்கள்தான் படம் முழுக்க. எனக்குத் தெரிந்த ஒரே முகம் பிரதாப்போத்தன் மட்டுமே.
பெண்களை காதல் செய்வதுபோல வளைத்து சமூகத்தில் பலத்துடனும், வசதியுடனும் இருப்பவர்களுக்கு கூட்டிக்கொடுக்கும் நாகரிக பிம்ப் சிறிலுடன் காதல் வருகிறது டெஸ்ஸாவிற்கு. நர்ஸாக பணிபுரியும் டெஸ்ஸா, கனடா சென்று நர்சாக வேலை செய்ய முயல்கிறாள். அதற்காக ஏஜென்ஸிக்கு வரும்போது சிறிலை சந்திக்கிறாள். பின்னர் அது காதலாகி, அதன் பின்னர் காதலனால் அவள் அனுபவிக்கும் கொடுமைகளும், இவ்வளவு நம்பிய தனது காதலனின் நம்பிக்கைத் துரோகத்திற்கும், தன்னை கொடூரமாய்க் கற்பழித்த பிரதாப் போத்தனையும் பதிலடியாக பொறுமையாக டெஸ்ஸா பழிவாங்குகிறாள்.
பிரதாப் போத்தனுக்கு வித்தியாசமான மரன தண்டனையும் காதலனுக்கு வேறுவிதமான தண்டனையை கொடுக்கிறாள்.
பிரதாப்போத்தன் சமீபகாலமாக நிறைய திரைப்படங்களில் தலைகாட்டுகிறார். இந்தப்படத்தில் வித்தியாசமான வில்லன் வேடம். ஹெக்டேவாக வருகிறார். டெஸ்ஸாவிடம் கேன் ஐ ஹாவ் செக்ஸ் வித் யூ? எனக் கேட்கிறார். பதறும் டெஸ்ஸாவை அதிகபட்ச வன்முறையுடன் கற்பழிக்கிறார். மிக வன்முறையான காட்சி இது. பூந்த்தொட்டியால் டெஸ்ஸாவின் பின்மண்டையில் அடிக்கும்போது நமக்கு மயக்கம் வருகிறது.
இரண்டாம் முறை கற்பழிக்கப்பட்டு டெஸ்ஸாவால் பிரச்சினை வரும் என்ற நிலை வரும்போது நம்மூர் ஸ்டைலில் அவளது கைப்பையில் போதைப்பொருளை வைத்து அவளை சிறைக்கு அனுப்புகின்றனர், சிறிலும், ஹெக்டேவும்.
சிறையில் கிடைக்கும் ஒரு தமிழ்ப்பெண் நட்பால் எப்படி காதலனையும், பிரதாப்போத்தனையும் பழிவாங்குகிறாள் என்பதே மீதிக்கதை.
பெங்களூரில் வாழும் கேரள நர்ஸ்களின் வாழ்க்கை கான்பிக்கப்படுகிறது. எப்படி பல பெண்கள் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்கின்றனர் என்பதும், அவர்களுக்குள் நடக்கும் குறும்புகள், எல்லாம் இயல்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களில் சிலர் பனத்துக்காக சோரம்போவதுபோல கான்பித்திருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. மலையாளப்படத்தில் அவர்கள் ஊர்ப்பெண்களைத்தான் காட்டியுள்ளனர். இருப்பினும் இப்படி சித்தரித்திருக்க வேண்டாம்.
சிறிலின் பின்புறம் குறித்து டெஸ்ஸாவின் அறைநண்பி அடிக்கும் கமெண்ட் இன்றைய இளவட்டங்களின் ஸ்டைல்போல.
பெண்ணின் ஆயுதமும், பலவீனமும் உடம்புதான் என்கிறார் கொலைக்குற்றத்திற்காக உள்ளே இருக்கும் சுபைதா எனும் தமிழ் பெண். அதை வைத்துதான் வில்லன்களைப் பழிவாங்கவும் செய்கிறார் டெஸ்ஸா.
ரீமா கலிங்கல் என்பர்தான் டெஸ்ஸாவக வருகிறார். டைட்டிலில் அவர்பெயர்தான் முதலில். ஃபாஹத் ஃபாஸில் சிறிலாக வருகிறார். சிறிலாக வரும்பவரின் முகம் அந்த கேரக்டரின் பலம். குழந்தைத்தனமான முகத்துடன் வெகுளித்தனமாக காதலும்,வில்லத்தனமும் செய்கிறார்.
திரைப்படங்களில் வில்லன்களின் இலக்கணம் மாறிக்கொண்டே வருகிறது உண்மையில் இதுதான் நிதர்சனம். வில்லன்கள் எனில் கடா மீசை வைத்துக் கொண்டு ஓட ஓட கற்பழிப்பதெல்லாம் பழைய ஸ்டைல். நல்ல உத்தியோகத்தில் இருக்கும் மிகச் சாதாரணமான ஆள் போன்ற தோற்றம் அளிப்பவர்கள்தான் இன்றைய வில்லன்கள்.
மொத்தமே சில கேரக்டர்களை வைத்துக்கொண்டு நல்ல திரைக்கதையின் மூலம் நம்மையெல்லாம் கட்டிப்போடுகிறார், இயக்குனர் ஆஷிக் அபு.
நல்ல ஒளிப்பதிவு. இயல்பான காட்சிகள். தேவையான இசை இவையெல்லாம் படத்தில் நல்ல விஷயங்கள். இவ்வளவுதூரம் தன்னை கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கியவன்மீது இன்னும் கரிசனம் இருப்பதுபோலக் காட்டியிருப்பது கொஞ்சம் நெருடல். அதற்குக் காரணமாக சிறிலின் அம்மாவும் ஒரு நர்ஸ் என்பதால் உனக்கு இந்தத் தண்டனை என்கிறாள்.
மருத்துவமனையில் நோயாளியாக வரும் முதியவர் மனதைக் கவர்கிறார். அவரது சொத்தில் பாதியை டெஸ்ஸாவுக்கு எழுதிவைத்து அவர் டெஸ்ஸாவுக்கு எழுதும் கடிதம் அருமை.
பயங்கரமான ஃபைட் சீன்களோ, வெளிநாட்டு லொகேஷன்களில் பாட்டுகளோ, பஞ்ச் வசனங்களோ ஏதுமில்லை இப்படத்தில். ஆனால் எதோ ஒன்று முழுதும் கட்டிப்போடுகிறது.
கையில் காசும், பலமும் இருக்கிறது என்பதற்காக பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என நினைப்பவருக்கு ஒரு எச்சரிக்கை இப்படம். ஆனால் அதே ஆட்களைக் கொண்டுதான் தனது பழிவாங்கலையும் செய்கிறாள் என்பது ஒரு நகைமுரன்.
வெளியூர்களில் தனியாக வாழும் பெண்களுக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்பதையும் காதல் என்ற பெயரில் தவறான ஆட்களிடம் சிக்கினால் என்ன ஆகும் என்பதையும் இது கோடி காட்டுகிறது. இது கேரள பெண்ணின் கதை மட்டுமல்ல. இந்தியாவில் எந்த ஒரு பெண்ணுக்கும் இது நடக்கலாம்.
முதலில் ஒருமுறை பார்த்திருந்தேன். மீண்டும் ஒருமுறை பார்க்கத்தூண்டியது, இந்தப்படம்.
- ஜெய் ஹனுமான்
எச்சரிக்கை: இட்லிவடையில் பழைய ஆட்கள் திரும்ப வருகிறார்கள்...:-)
Posted by IdlyVadai at 11/16/2012 07:47:00 PM 6 comments
Labels: சினிமா, விமர்சனம், ஜெய் ஹனுமான்
துப்பாக்கி காமெடி சீன்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை ஒரு முறையல்ல இரண்டு முறை பார்த்துவிட்டு இயக்குனரை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்கப் போவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் இஸ்லாமிய சமுதாயத்தினரைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பிராயச்சித்தமாக விஜய்யின் அடுத்த படத்தில் அவர் ஒரு இஸ்லாமியராக நடிப்பார் - விஜயின் தந்தை
இதனால் தமிழ்நாட்டில் தற்போது அமைதி நிலவுகிறது!
Posted by IdlyVadai at 11/16/2012 10:59:00 AM 12 comments
Labels: சினிமா, செய்திவிமர்சனம்
அயர்லாந்து சட்டம்
இந்தியாவை சேர்ந்த பிரவின் - சவிதா தம்பதியினர் அயர்லாந்தில் மருத்துவர்களாக பணியாற்றிவருகின்றனர். பல் மருத்துவரான சவீதா 17 வார கர்ப்படைந்திருந்த வேளை அவரது வயிற்றில் கரு உயிரிழந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மேற்கு அயர்லாந்தின் கால்வே பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்று கருவை அகற்றுமாறு கோரியுளனர்.
சிக்கலாகக் கூடிய ஒரு கர்ப்பத்தைக் கருக்கலைப்பு செய்ய மறுத்ததால் உயிரிழந்தார். உயிரிழந்த ஒரு இந்தியப் பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர், அயர்லாந்தின் கருக்கலைப்புச் சட்டத்தைச் சாடியுள்ளனர்.
கர்ப்பத்திலுள்ள 17 வார சிசுவைக் காப்பாற்றும் பொருட்டு, தம்முடைய பெண்ணை மருத்துவர்கள் கொலை செய்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரத்தத்தில் விஷத் தன்மை ஏற்பட்டதால், அவருக்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதாக அயர்லாந்து அரசாங்கம் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது
கத்தோலிக்க மதவாத நாடென்பதால் அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு சட்டரீதியாக அங்கீகாரம் இல்லை.
Posted by IdlyVadai at 11/16/2012 08:21:00 AM 3 comments
Labels: செய்தி
Tuesday, November 13, 2012
ஞாநி பதில்கள்
இட்லிவடை 10ஆம் ஆண்டு ஸ்பெஷலாக பத்திரிகையாளர் திரு ஞாநி அவர்களின் பேட்டியை போட வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரை அணுகிய போது அவர் உடனே ஒத்துக்கொண்டார். பல கேள்விகள் வந்தது அதிலிருந்து சுமார் 50 கேள்விகளை தேர்ந்தெடுத்து அவரை யார் தைரியமாக பேட்டி எடுப்பார்கள் என்று யோசிக்கும் போது நமது நினைவில் பத்ரி மட்டுமே வந்தார். பத்ரியை கேட்ட போது உடனே ஒத்துக்கொண்டார். இருவருக்கும் இட்லிவடை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுமார் 2.5 மணிநேரத்துக்கு மேல் ஒரு விதமான உரையாடலாக இந்த பேட்டி அமைந்தது மகிழ்ச்சி.
பேட்டியில் உள்ள Keywords : இட ஒதுக்கீடு, ராகுல் காந்தி, மோடி, படித்த புத்தகம், கழிவறை புனிதமான இடம், கடவுள், மூடநம்பிக்கை, ஜெயமோகன், துக்ளக், பாரதி, பிள்ளையார் பூஜை, பார்ப்பனீயம், காந்தி, பெரியார், சோ, தலித், இலங்கை தமிழர், ராஜிவ் படுகொலை, கூடங்குளம், கலைஞர் செய்த நல்ல காரியங்கள்...
பேட்டியில் கேள்விகேட்டவர் பெயர்கள் சில இடங்களில் விடுபட்டு இருந்தால் அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. கேள்விகளை தொகுக்கும் போது விடுபட்டிருக்கலாம்...
இரண்டு ஆடியோவையும் இங்கே போட்டுள்ளேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.
கேள்விகள் - இட்லிவடை வாசகர்கள், பேட்டி & படம் : பத்ரி
பேட்டி ஒலி வடிவம் கீழே:
டவுன்லோட் வடிவம் இங்கே
http://archive.org/download/IdlyvadaiInterviewBadriSeshadriInterviewingJournalistGnani/Gnani_Idlyvadai_Interview_Part_01.mp3
http://archive.org/download/IdlyvadaiInterviewBadriSeshadriInterviewingJournalistGnani/Gnani_Idlyvadai_Interview_Part_02.mp3
Posted by IdlyVadai at 11/13/2012 06:47:00 PM 40 comments
Labels: இட்லிவடை 9-ஸ்பெஷல், இட்லிவடை ஸ்பெஷல், பத்ரி, பேட்டி
துப்பாக்கி FIR
மேதாவித் தனமான வசனமோ, ஸ்டைலுடன் பஞ்ச் டயலாக்கோ இல்லாமல் வெற்றி படம் எடுக்க முடியும் என்று மீண்டும் ஒரு முறை முருகதாஸ் நிரூபித்துள்ளார். தமிழ் படத்துக்கு இந்த கதை அரதப் பழசு என்றாலும் கதையை சொல்லிய விதம் அருமை.
தீவிரவாதித் தலைவன், ராணுவத்திலிருந்து விஜய், மும்பை, வெடி குண்டு என்ற மூன்று வார்த்தையை சொன்னாலே கதை முடிந்துவிடும். ஆனால் படம் நெடுகிலும் சஸ்பென்ஸ் வைத்து விஜய் விளையாடும் விளையாட்டு சூப்பர். இந்த விளையாடில் நாமும் ஆங்காகே உள்ளே போவதால் லாஜிக் ஓட்டை எல்லாம் மறந்து போய்விடுகிறது.
விஜய் படத்தில் கூட இருப்பவர்களே காமெடி செய்வார்கள் அதே மாதிரி தான் இந்த படத்திலும் தங்கைகள், அப்பா, நண்பன் சத்தியன் என்று எல்லோரும் அளவாக செய்துள்ளார்கள்.
வழக்கம் போல படத்தில் தீவிரவாதிகள் எல்லாம் இஸ்லாமியர்கள். ஆனால் கூடவே அவர்களுக்கு இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் உதவி செய்ய வேண்டும் என்ற செக்யூலரிசம் எதுவும் செய்யாமல் படம் எடுத்ததற்கு சபாஷ்.
காஜல் முட்டிக்கு மேல் உடை அணிந்துக்கொண்டு வருகிறார், பாடல் பாடுகிறார். சில இடத்தில் காமெடியும் செய்கிறார்.
சாதாரணமாக ஆரம்பிக்கும் ஓபனிங் சாங், சாதாரண ஒரு பஸ் குண்டுவெடிப்பு அதற்கு பிறகு ஜெட் வேகத்தில் போகும் படத்தில் விஜய் ஸ்டைலாக சுட்டுத்தள்ளுகிறார்.
ஜெயராம் காமெடி செய்கிறார். படம் ஆரம்பத்தில் 'படத்தில் வரும் மிருகங்களை சித்திரவதை செய்யவில்லை' என்று போடுகிறார்கள். எவ்வளவு பொய் :-)
இட்லிவடை மார்க் : 8/10
பிகு: "இந்த முறை தீபாவளிக்கே துப்பாக்கி பார்க்கவேண்டாமென்று முடிவெடுத்துவிட்டதால், டிக்கெட் ரிசர்வ் செய்ய ஆர்வம் காட்டவில்லை" என்று ஒரு பிரபலம் எழுதியுள்ளார். அவரே இந்த படத்தை இரண்டு முறை பார்ப்பார் என்று நினைக்கிறேன்.
துப்பாகியால் கில்லியும் அடிக்கலாம் என்று நிரூபித்துள்ளார்கள்.
Posted by IdlyVadai at 11/13/2012 03:12:00 PM 18 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம்
Monday, November 12, 2012
Sunday, November 11, 2012
தீபாவளி போட்டி

சரியான விடைக்கு பரிசு உண்டு!. தமிழர்களுக்கு Deepavalai வாழ்த்துகள்; மற்றவர்களுக்கு Diwali வாழ்த்துகள்.
Posted by IdlyVadai at 11/11/2012 12:17:00 PM 11 comments
இன்பாவின் Love Anthem
வாசக நண்பர்களுக்கு,
வணக்கம். என்னை(யும்) நினைவில் வைத்து இருப்பிர்கள் என்று நம்புகிறேன்.
இட்லிவடைக்கு இவ்வளவு லேட்டாக பிறந்த நாள் வாழ்த்து சொன்னவன் நானகவே இருப்பேன். "இட்லிவடையும், நானும்" என்று எழுதுவதற்க்கு பதிவுகள் தேவைப்படும். என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் இட்லிவடை என்று ஒரே வரியில் முடிக்கிறேன்.
தொடர்ந்து 50 வாரங்கள் வரை வெற்றிகரமாக வந்துகொண்டிருந்த எனது "சன்டேனா இரண்டு" தொடர் மீண்டும் விரைவில்.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வழக்கமான கட்டுரைகள் தவிர்த்து, இட்லிவடை - 9 ஸ்பெஷல் பதிவுக்கு ஒரு கவிதை அதுவும் யங் சூப்பர்ஸ்டார் (அதாங்க,சிம்பு) பாணியில் ஒரு 'காதல் ஆன்தம்' எழுத நான் செய்த ஒரு விபரித முயற்சி கீழ்வரும் பதிவாக முடிந்து விட்டது.
அன்புடன்,
இன்பா
Love Anthem
கல்விக்கடனுக்கு
அலையும்
கிராமத்து
ஏழை மாணவனாய்..
உன்
கடைக்கண் பார்வைக்கு
காத்திருக்கிறேன்.
யாருக்கும் தெரியாமல்
நள்ளிரவில் உயரும்
பெட்ரோல் விலை போலவே
ரகசியமாய்
என்னை பார்க்கிறாய் நீ.
பத்துமணி நேர
மின்வெட்டை விட
பத்து நொடி வரும்
உன்
கண்வெட்டுதான்
அதிகம்
வியர்க்கவைக்கிறது
என்னை.
தேங்கிய மழைநீரில்
தத்தளிக்கும்
தெருவாக்கிவிடுகிறது
என் மனதை
அது.
மக்கள் நலனுக்கு
அரசு போடும் திட்டங்கள்.
உனனை நினைத்து
நான் எழுதிவைத்திருக்கும்
காதல் கடிதங்கள்.
இரண்டும் ஏனோ
இலக்கை எட்டுவதேயில்லை.
மகளிர் இடஒதுக்கிடு
லோக்பால்
டெசோ
இப்படி
'இத்து'ப் போன வரிசையில்
சேர்ந்துவிட்டன
கொடுக்காமல் போன
என் 'லவ் லெட்டர்ஸ்'.
தனியார் பள்ளிக்கட்டணம்
குறைவது எப்பொழுது?
தனிமையில் நாம்
சந்திப்பது எப்பொழுது?
ஊழலை
ஒப்புக்கொள்ளாத
அரசியல்வாதி போலவே
என் மீதான
காதலை
ஒப்புக்கொள்வதில்லை நீ.
மதிய உணவுக்கும்
இரவு உணவுக்கும்
இடையில்
முன்னாள் முதல்வர்
இருந்த
உண்ணாவிரதமே
காதலை மறைக்கும்
உன் பாசாங்கு.
'சிறந்த மௌனம்'
என்னும் தலைப்பில்
போட்டி வைத்தால்
முதலிடம் உனக்கே.
இரண்டாமிடமே
இந்திய பிரதமருக்கு.
மணமேடையில்
இல்லாவிட்டாலும்
மருத்துவமனையிலாவது
சேர்த்துவைத்து
நம் பிரிவுக்கு
'சங்கு' ஊதுமா
'டெங்கு'?
-இன்பா
கவிதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, சுபத்ரா அல்லது ஹரன்பிரசன்னா தான் இதை பற்றி சொல்ல வேண்டும் :-)
Posted by IdlyVadai at 11/11/2012 12:01:00 AM 15 comments
Saturday, November 10, 2012
குருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )
பகுதி – 2
“யார் ஒளிந்தென்ன; யார் மறைந்தென்ன? அது வரப்போகிறது என்று தீர்மானமாய் நினைக்கையில் இந்த வீட்டின் பெரிய தூண்கள் நிறைந்த அந்த விசாலமான கூடத்தில் தன்னை ரோஜா மாலையிட்டுக் கிடத்தி வைத்திருக்கும் அந்தக் கோலத்தை ஒவ்வொரு அம்சமாய் நிதானமாகக் கண் முன்னால் கொணர்ந்து காட்சிகளாய்க் காண்பார் வேணுகோபாலன்...”
இதைப் படித்ததும் ஒரு நிமிடம் வேணுகோபாலனின் இடத்தில் என்னை வைத்துப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை.
“எந்த நிமிஷமும் இவன் கதை முடிஞ்சு போகலாம்” என்று சொல்லிவிட்டார் டாக்டர் மேனன். இதைச் சொல்ல டாக்டர் எதுக்கு? என் கதை முடியுமுன் இந்த டாக்டரின் கதைகூட முடிந்து போகலாம். மனுஷ ஜீவிதத்தின் கதையே அப்படித்தான். எவன் கதையும் எப்போதும் முடிந்து போகலாம். கதை முடிந்து போவதைப் பற்றிக் கவலை எதற்கு? கதை நடந்துகொண்டிருக்கும் போதுதான் கவலையெல்லாம்...”
அடுத்ததாக “விதியும் விபத்தும்”. ஒரு வித்தியாசமான சிறுகதை. எடுத்த எடுப்பில் ஒரு மாட்டுக்காரச் சிறுவன் நடந்துசெல்லும் எருமைமாட்டின் முதுகில் படுத்துக்கொண்டு மாம்பழம் தின்றுகொண்டே செல்லும் காட்சியைத் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர். ஒரு மாங்கொட்டையை வைத்து விதியையும் விபத்தையும் வேறுபடுத்திப் புரியவைத்த இந்தத் தத்துவக் கதை என்றும் நினைவில் நிற்கக்கூடியது.
சிறுவனால் எறியப்பட்ட மாங்கொட்டை ஒன்று சாக்கடையில் விழுகிறது. விழுந்த அதன்மேல் ஒரு புழு நெளிந்து அதனைத் துளையிட முயல்கிறது. முடியாமல் போகவே வேறு பொருளுக்குத் தாவிவிடுகிறது. அதன்பின் அந்த மாங்கொட்டை முளைவிட்டுத் தளிர்த்து மரமாக வளர்ந்து எண்ணற்ற மாம்பழங்களைத் தருவதாக விதிக்கப்படுகிறது.
அதுவே ஒரு மாம்பழத்தின் விதை அவ்வாறே எறியப்பட்டு ஒரு புழு வெற்றிகரமாக அதனைக் குடைந்து தின்று அழித்துவிட்டால் அது அந்த மாங்கொட்டையின் மரணம். அதுவே விபத்து.
“அந்த மாங்கொட்டையின் யோகம் விதி!
இந்த மாங்கொட்டையின் மரணம் விபத்து!”
“புது செருப்பு கடிக்கும்” எட்டாவது கதை. திருமணமாகிச் சில மாதங்களே ஆகியிருந்த நந்தகோபாலுக்குப் புது மனைவியுடனான அந்த வாழ்க்கை வெறுப்பாகியிருந்தது. இந்நிலையில் தான் இரண்டு மாதங்கள் ‘குடும்பம்’ நடத்திய தனது பழைய தோழி வத்சலாவின் நினைவு எழ, இரவு பதினொரு மணிக்கு அவளைத் தேடிச்செல்கிறான். தனியாக வாழும் அவளையே கல்யாணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அவளிடம் மனம் வருந்துகிறான்.
அவளோ, தான் ஏற்கனவே “ட்ரெயிண்ட்” ஆக இருந்ததால் தான் அவனோடு இரண்டு மாதங்கள் நன்றாகக் குடும்பம் நடத்தமுடிந்தது எனவும் ‘அந்த’க் காரணமே அவன் அவளைக் கல்யாணம் செய்யத் தடையாக இருந்ததாகவும் சொல்கிறாள். புதிதாக வந்திருப்பவளை இவன் தான் அவ்வாறு அக்கறையோடு பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் போகப் போகச் சரியாகிவிடும் என்றும் ‘புது செருப்பு’ உதாரணத்தை வைத்து அவனுக்குப் புரிய வைக்கிறாள்.
“அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்; “பார்த்தீங்களாங்கோ... செருப்புக்கூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ… அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?”
அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டான்.
ஒன்பவதாவது சிறுகதை “எங்கோ யாரோ யாருக்காகவோ”. ஆண்களிடம் பெண்கள் பேசுவதையே தவறாகச் சித்தரிக்கும் ஒரு கலாசாரத்தைப் பின்பற்றும் தேசத்தில் வாழும் தனிமனிதன் ஒருவனுக்கு ஏற்படும் பாலியல் தேவைகளையும் பற்றாக்குறைகளையும் சொல்லும் சிறுகதை. இரண்டு நாட்கள் சந்தோஷமாகக் கழிப்பதற்காக பாண்டிச்சேரி செல்லும் இரு நண்பர்கள் அங்கே தனியே நிற்கும் ஒரு இளம்பெண்ணை வேறொரு இடத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். அவளுக்குக் ‘கள்’ வாங்கிக் கொடுத்தும் அவளது இரண்டுநாள் பசிக்கு உணவு வாங்கிக் கொடுத்தும் அவளோடு பொழுதைக் கழிக்கின்றனர்.
சந்தித்த பொழுதிலிருந்தே தன்னை சென்னைக்கு உடன் அழைத்துப்போகச் சொல்லி முதல் நண்பனிடம் கேட்டுக்கொண்டேயிருக்கிறாள் அவள். தன்னுடைய நிலையற்ற குடும்ப வாழ்க்கையைச் சொல்லி அழுகிறாள். அவரது வீட்டில் எந்தத் தொல்லையும் தராத ஒரு வேலைக்காரியாக இருந்துவிடுவதாகச் சொல்லிக் கெஞ்சுகிறாள். தர்மசங்கடமாக உணரும் அவன் வீட்டில் எல்லா ஏற்பாடையும் செய்துவிட்டு அடுத்த திங்கட்கிழமை அவளை அழைத்துப்போய்விடுவதாக ஒரு பொய்யைச் சொல்லி அவளை ஏற்றிய அதே இடத்தில் இறக்கிவிட்டுச் செல்கிறான்.
அடுத்த திங்கட்கிழமையும் அதற்கடுத்த திங்கட்கிழமைகளிலும் அவள் அங்கே வந்து காத்திருப்பாள்! ...
அந்த மாசமே நண்பர் அமெரிக்காவுக்குப் போய்விட்டார். நான் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு தடவை அந்த ‘பா’ருக்கு அந்த இடத்துக்குப் போனேன்.
கடல் மட்டும் இரைந்து கொண்டிருக்கிறது. பீச்ரோடு ‘வெறிச்’சென்றிருக்கிறது. என் கார் வெயிலில் பழுக்கக் காய்ந்து கொண்டிருக்கிறது. நான் போய் அவள் நின்றிருந்தாளே அந்த இடத்தில் அதே மாதிரி நின்று கடலை வெறித்துப் பார்க்கிறேன்...
இடையில் சொல்லாமல் விட்ட மூன்றாவது கதை, “நிக்கி”. இந்த ஒரு கதைக்காகவே ஜெயகாந்தனின் விசிறி ஆகவிடலாம். இக்கதையை (சு)வாசித்தது மறக்கமுடியாத ஓர் அனுபவம். பிறந்து இரண்டு நாட்களேயாகித் தெருவில் தத்தளிக்கும் ஒரு நாய்க்குட்டியின் கதை. அதன் ஒவ்வொரு அசைவும் எழுத்தாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது.
தெருத் தெருவாக ‘ஊர்ந்து’ அலையும் அந்த நாய்க்குட்டி ஒரு தாயால் பள்ளி செல்ல அடம்பிடிக்கும் தன் பிள்ளைக்கு வேடிக்கைப் பொருளாகிறது. ‘நிக்கி’ என்ற பெயரையும் பெறுகிறது. அங்கிருந்து ஓடியபின் வழி தெரியாமல் எங்கெங்கோ அலைந்து ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நிக்கி, பசியில் அலைந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் ஒரு ஜாதிநாயுடன் கலக்கிறது. பின்னர் இடம் பார்த்து அழகான ஐந்து குட்டிகளை ஈன்றெடுக்கிறது. குட்டிகளின் அழகைக் கண்டவர்கள் ஒவ்வொன்றாக எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.
காரில் போகிற, சங்கிலியால் பிணித்துக் கையில் இழுத்துக்கொண்டு போகிற ஜாதி நாய்களைப் பார்த்து இப்போது நிக்கி ஓடுகிறது. ஒரு வேளை தனது குட்டியை அது தேடுகிறதோ? நிக்கி பெற்றதாகவே இருந்தாலும் அவை நிக்கியின் ஜாதியாகிவிடுமா, என்ன?
அதோ, பங்களா நாயையோ அல்லது இன்னுமொரு குப்பத்து நாயையோ தேடித் தெரு நாயாக நிக்கி அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு இப்போது ஒரு நாயின் தேவையை நாடுகிற ஸீஸன். தேவை என்று வந்துவிட்டால் ஜாதியையா பார்க்கத் தோன்றும்?
நிக்கி மறுபடியும் அனாதையாக அலைகிறது.
Posted by IdlyVadai at 11/10/2012 02:20:00 PM 4 comments
Labels: சுபத்ரா, புத்தகவிமர்சனம்
Thursday, November 08, 2012
குருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா
குருபீடம் – ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் ஒன்பது கதைகள். ஒவ்வொரு சிறுகதையும் எவ்வித ஜிகினாத்தனமும் இல்லாத எளிமையான எழுத்துக்களாலான பிரம்மாண்டம். தாயின் மடியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கேளிக்கை செய்துகொண்டிருக்கும் ஒரு சிறுமியின் கண்களில் வீதியில் ஊர்வலம் போகும் ஒரு கோவில் யானை ஏற்படுத்திய மனக்கலவரம். தான் பார்த்த தன்னைப் பாதித்த அக்காட்சி ஏற்படுத்திய திகிலைக் குறைக்கும் பொருட்டு எதிர்ப்படும் எல்லோரிடமும் அதனை விவரிக்க முயன்று தோற்றுப்போகும் சிறு குழந்தையாய் இந்தச் சிறுகதைகளைப் பற்றி சில வார்த்தைகள் விளம்ப விழைகிறேன்.
முதல் சிறுகதை தான் “குருபீடம்”. ஒரு பிச்சைக்காரன். பிச்சைக்காரனுக்குரிய எந்தவொரு அம்சத்தையும் விட்டுவைக்காத ஒரு அக்மார்க் சோம்பேறி அழுக்குப் பிச்சைக்காரன். திடீரென ஒருநாள் பவ்யமான இளைஞன் ஒருவன் அவனிடம் வந்து தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படிக் கேட்கிறான். குழப்பமடைந்த பிச்சைக்காரன் ஏதேதோ பேசியும் அந்த இளைஞன் அங்கிருந்து நகருவதாகத் தெரியவில்லை. ஒரு ‘டீ’யும் ‘பீடி’யும் வாங்கிவரச் சொல்கிறான். வந்ததும் டீயைக் குடித்துக்கொண்டே அந்த இளைஞனிடம் பேச்சு கொடுக்கிறான். இவன் சும்மா ஏதேதோ சொல்லப்போக அதையெல்லாம் மகா ஞான வாசகங்களைப் போல எண்ணி வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருக்கிறான் அவன் (படிக்கிறவங்களும் தான்).
“அப்போது குரு சொன்னான் : “பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா – ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா? ஒரு கேள்விக்கு எம்மாம் பதில்!” “
அதுமுதல் ஒரு குருவுக்குச் செய்யவேண்டிய அத்தனை உபச்சாரங்களையும் செய்து இறுதியில் அந்தப் பிச்சைக்காரனை அங்கிருக்கும் அனைவரும் மதிக்கும் ஒரு ‘சாமியா’ராக மாற்றிவிடுகிறான்.
ஒர் இரவு தூக்கம் வராமல் யோசித்துக்கொண்டிருந்த குருவிற்குக் கனவு போல் ஒரு காட்சி தோன்றுகிறது. ஏதோ உண்மையை அறிந்து கொண்டவனாய் அடுத்த நாள் காலையில் தனது சீடனை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறான். ஆனால் சீடன் வரவேயில்லை. உடனே அவனைத் தேடிக்கொண்டு அவனது மடப்பள்ளிக்குச் சென்று அங்கேயும் காணாமல் இறுதியில் அனைவருக்கும் ஒரு செய்தியைக் கூறுகிறான். அதாவது தனக்குச் சீடனாக இருந்தானே, அவன் தான் எல்லாருக்கும் ‘குரு’ என்று.
“...சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கிறான்...அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கிறான். எந்தப் பீடத்தில் இருந்தால் என்ன? எவன் கற்றுத் தருகிறானோ அவன் குரு. கற்றுக் கொள்கிறவன் சீடன். பரமசிவனின் மடி மீது உட்கார்ந்துகொண்டு முருகன் அவனுக்குக் கற்றுத் தரவில்லையா? அங்கே சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு...” எனத் தொடரும் வார்த்தைகள் இக்கதையின் சிறப்புக்கூறு.
இரண்டாவதாக “டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்”. பட்டணத்தில் நல்ல வருமானத்துக்கு வேலை பார்த்துப் பிள்ளைகள் அனைவரையும் கரைசேர்த்துவிட்ட வேதகிரி முதலியார் திடீரென ஒரு மாதம் தங்கியிருக்கப் போவதாகச் சொல்லிக் கிராமத்திலிருக்கும் தன் தாயிடம் வருகிறார். முதலியாரின் பையன் நாள்தோறும் அவருக்குத் தபால் அனுப்புகிறான். (அந்தக் காலத்தில் தபால் அடுத்த நாளே சென்று சேர்ந்துவிடும் எனத் திரு.கடுகு-அகத்தியன் அவர்களும் எழுதியிருந்ததாக ஞாபகம். எப்படி என்று தான் தெரியவில்லை?)
பேரூந்தில் வரும் தபாலுக்காக ஒரு மைல் தூரம் நடந்துவந்து ‘டீக்கடைச் சாமியா’ரின் கடையில் அமர்ந்து பத்திரிகை படித்துக்கொண்டும் அரட்டையடித்துக்கொண்டும் இருப்பார்.
“மொதலியாருக்குப் பட்டணத்திலே என்னாங்க உத்தியோகம்?”
ஒரு வெள்ளைக்கார கம்பெனியிலே மானேஜர் உத்தியோகம்”
“இப்பவும் வெள்ளைக்காரங்க இருக்காங்களா?”
“கம்பெனிங்க இருக்குது”
ஒரு மாதம் கழித்துப் பட்டணத்துக்குப் போவார் என எதிர்பார்க்கப்படும் முதலியார் திடீரென சுப்பராம ஐயரிடம் இருபதினாயிரம் ரூபாய்க்கு விவசாய நிலங்களை விலைபேசுவதைக் கண்டு அதிசயிக்கின்றனர் டீக்கடை நண்பர்கள். தனக்கு வேலை போய்விட்டது என்ற செய்தியை யாருக்கும் தெரிவிக்காமல் மனதுக்குள் புழுங்கிச் சங்கடப்பட்டுக்கொண்டிருக்கும் அவருக்குத் தன் மகனின் முயற்சியால் அதே வேலை கொஞ்ச நாட்களில் திரும்பக் கிடைத்துவிடுகிறது. ஆனால் முதலியாரோ,
“நான் இனிமே இங்கேதான் இருக்கப் போறேன். கண்டவன் காலிலேயும் விழற மாதிரி பல்லிளிச்சி நிக்கிற உத்யோகப் பெரும போதும் – எனக்கு அது வேணாம். அந்த ஆயிரம் ரூபாய்க்கு இங்கே சம்பாதிக்கிற நூறு ரூபாய் சமம். ஐயரே, இன்னிக்கே ரூபாய் இருபதினாயிரம் தர்றேன்...உம்ம கோரைவாய்க்கால்வரை நஞ்சையையும் நல்லாந்தோப்பையும் என் பேருக்குக் கிரயம் பண்ணி வச்சிடும்.. இனிமே எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கு.”
இவ்வாறு வேதகிரி முதலியார் ‘ட்ராக்டர் சாமியா’ராக அவதாரம் எடுக்கிறார்.
மூன்றாவது கதையைக் கடைசியாகக் கதைக்கிறேன் :-)
நான்காவது சிறுகதை “ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது”. பூட்டிக் கிடக்கும் ஒரு வீட்டை நோக்கிப் பயில்வான் போல ஒருவன் வருகிறான். அவர்களைப் பழிதீர்த்துக் கொள்வதற்காகத் திருப்பி அடிப்பதற்காக அங்கே வந்திருக்கிறான் என முதலில் அவன் வருகையைக் கண்டு தாறுமாறாக அச்சம்கொள்கின்றனர் அக்கம்பக்கத்தினர். அங்கிருந்த குழாயடியில் குளித்துவிட்டு பக்கத்தில் இருந்த ஒரு பூட்டிய வீட்டைச் சாவி போட்டுத் திறந்து உள்ளே செல்கிறான் அவன். சிறிது நேரத்தில் பக்கத்து ‘ஆ’த்துச் சிறுமி யாருக்கும் தெரியாதவாறு அவனிடம் வந்து பேச்சு கொடுக்கிறாள்.
“நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா?... உன்னைப் பார்க்கக்கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா...அம்மா கூடத்திலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா? திருடிண்டு வந்துடு... அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு...”
அவன் கை நிறைய சாக்லெட்டை வாங்கிவந்து அவளுக்குக் கொடுக்கிறான். அவள் கொஞ்சம் தின்றுவிட்டு மீதியை அப்புறம் வந்து எடுத்துக்கொள்வதாகச் சொல்லி மாடத்திலே பத்திரமாக வைத்துச் செல்கிறாள். இது ஒருபுறமிருக்க, விசாரித்ததில் அவன் அங்கே வாடகைக்குக் குடிவந்திருப்பது தெரிகிறது. அதையறிந்து அங்கிருப்போர் ஆத்திரம் கொள்கின்றனர். ஏனென்றால் அவன் ஒரு திருடன். திருடிவிட்டு அவர்கள் கையாலேயே அடிவாங்கியவன். ஆனால் சற்று நேரத்தில் அங்கு ஆஜராகும் அந்தக்காலனியின் சொந்தக்காரரோ மற்ற எல்லோரையும்போல் அவன் அங்கேதான் இருக்கப்போவதாகச் சொல்லிக் கூட்டத்தைக் கலைக்கிறார்.
எனினும் இந்நிகழ்ச்சியால் அவமானப்பட்ட திருடன் அடுத்தடுத்த நாட்களில் அந்த வீட்டுப் பக்கமே வரவில்லை. காலனிக்காரர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் அவ்வேளையில் அந்த நான்கு வயதுச் சிறுமி பூட்டியிருக்கும் அந்த வீட்டின் திண்ணை மீது ஏறித் திறந்திருக்கும் ஜன்னல் வழியே உள்ளே பார்க்கிறாள்.
“மாடம் நிறைய இருந்த சாக்லெட்டுகளைக் கலங்குகிற கண்களோடு பார்த்தது.
“ஏ, மிட்டாய் மாமா! நீ வரவே மாட்டியா?” என்று கண்களைக் கசக்கிக் கொண்டு தனிமையில் அழுதது குழந்தை”.
ஐந்தாவது சிறுகதை “தவறுகள், குற்றங்கள் அல்ல”. நாகராஜன் ஐம்பது வயது மதிக்கத்தக்க அதிகாரம், அந்தஸ்து மற்றும் செல்வாக்கு பொருந்திய ஒருவர். அவருக்குக் கீழ் ஸ்டெனோவாக வேலை பார்ப்பவள் தெரஸா. நோய்வாய்பட்ட மனைவியையுடைய நாகராஜன் தன்னிடம் சிரித்துப் பேசும் தெரஸாவைத் தவறாகப் புரிந்துகொண்டு ஒரு நாள் அவளுக்கு காமயிச்சையால் முத்தம் கொடுத்துவிடுகிறார். அதற்குத் தூண்டிவிட்டவனாக இருக்கிறான் நாகராஜனின் அத்தைமகனான கன்னையா என்பவன். இவருக்கு எடுபிடி வேலைகள் செய்பவன்.
தந்தை ஸ்தானத்தில் வைத்திருந்த ஒருவர் அவ்வாறு செய்ததையெண்ணி மனமுடைந்து அழுகிறாள் தெரஸா. எல்லாவற்றையும் ‘உணர்ந்து’ மனம் வருந்தும் அவர் அவளை அழைத்துத் தான் சொல்ல நினைப்பதை ஒரு கடிதமாகத் தட்டச்சு செய்ய அவளையே குறிப்பெடுக்கச் சொல்கிறார். குறிப்பு எடுத்துக்கொண்ட அவள் சற்று நேரத்தில் அந்தக் கடிதத்தைத் தயார்செய்து தருகிறாள். பார்த்தால் அது தன் தவறை உணர்ந்து வெளிப்படையாக மன்னிப்பு கோரிய நாகராஜனுக்கு அவள் எழுதிய பதில் கடிதமாக இருக்கிறது.
“ஜஸ்ட் எ ஸ்லிப், நாட் எ ஃபால்... நீங்கள் கூறுகிற மாதிரி அது ஒரு வியாதியெனில் அதற்குத் தண்டனையல்ல, சிகிச்சையே தேவை. அப்படிப்பட்ட முறைகேடான நடத்தைகள் தவறுகள் தான்; ஆனால் குற்றங்கள் அல்ல. குற்றங்கள்தான் தண்டிக்கப்படுவன. தவறுகள் திருத்தப்படுவன; மன்னிக்கப்படுவன...”
இந்நிலையில் வீட்டிலிருந்து ஐநூறு ரூபாயைத் திருடிவிட்டு ஓடிய தனது அத்தைமகன் கன்னையா திருந்திவந்து நாகராஜனிடம் தனது தவறுக்குத் தண்டனையளிக்கக் கோருகிறான்.
“வியாதிக்குச் சிகிச்சைதான் தேவை, தண்டனை இல்லே”... “உன் வியாதி நீங்கிப் போச்சு...மனப்பூர்வமா மன்னிக்கிறதுதான் இதுக்குச் சிகிச்சை. இந்தச் சிகிச்சையை உனக்கு யாருமே இதுவரை செய்ததில்லே. இனிமே சரியாயிடும்...” என்று அவர் சொல்வதைக் கேட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்த அவரது மகளும் மனைவியும் ‘எவ்வளவு பெருந்தன்மை மிக்க மனிதர் இவர்!’ என்று நாகராஜனைப் பற்றி எண்ணிப் பெருமிதம் கொண்டனர்.
அவர்களுக்கு என்ன தெரியும்?
மன்னிக்கப்பட்டவர்களே மன்னிக்கிறார்கள் என்பது” என முடிகிறது கதை.
அன்புடன்,
சுபத்ரா
@ subadhraspeaks.blogspot.in
மீதி பகுதி அடுத்த பதிவில்...
Posted by IdlyVadai at 11/08/2012 09:29:00 PM 9 comments
Labels: சுபத்ரா, புத்தகவிமர்சனம்
விஸ்வரூபம் ரிலீஸ்
எப்ப ரிலீஸ் என்று தேடிய போது இது தான் கிடைத்தது. சாரி
Posted by IdlyVadai at 11/08/2012 08:51:00 AM 11 comments
Wednesday, November 07, 2012
Tuesday, November 06, 2012
இராக்கில் ஒரு பயணம் - ஜெயக்குமார்
ஜெயகுமாரிடம் சாட் செய்த போது "இந்தியனாக மிகப் பெருமையுடன் உணர்ந்த தருணங்களிள் இராக்கில் இருந்த தருணங்களும் ஒன்று." என்றார். சரி இராக் பற்றி ஒரு கட்டுரை எழுதி தாங்க என்று கேட்டவுடன் எனக்கு அனுப்பினார்.
அது இங்கே.
சென்ற மாதம் 6 ம் தேதி முதல் 20 ம் தேதிவரை அலுவலக பணியாக இராக் சென்று வந்தேன். பாக்தாத், மற்றும் , பாஸ்ரா தான் எங்கள் பயண இலக்கு.
பாக்தாத் விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்தே ஆச்சரியங்கள் காத்து கிடந்தது. அன்பான இமிக்ரேஷன் அதிகாரிகள். வெளியே வந்ததும் விமான நிலைய வாடகைக் கரை எடுத்துக் கொண்டு ஓட்டலுக்குச் செல்லும் வழியெங்கும் பல சோதனைச்சாவடிகள். ஒவ்வொன்றிலும் இருக்கும் காவலர்கள் மற்றும் இராணுவத்தினர் கடவுச்சீட்டைக் கண்டதும் ஒரு மகிழ்ச்சியான பார்வை. கைகுலுக்கல்கள் எல்லாம்
சுத்த சாகபட்சிநியான எனக்கு உணவு கிடைப்பதுமட்டும்தான் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. அதிலும் ஒரு சில ஓட்டல்காரர்கள், நான் உணவு அருந்தாமல் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களது சமையலறை வரை அனுமதித்து எப்படிச் செய்தால் எனக்குப் பிடிக்கும் என கேட்டு செய்து கொடுத்தனர்.
இராக்கியர்கள்
அபுதாபியில் இருந்து கிளம்பும்போதே ஒருவித படபடப்பு இருக்கத்தான் செய்தது. தொடர் குண்டுவெடிப்புகள், ஆள்கடத்தல்கள் எல்லாம் இருக்கும் ஒரு இடத்திற்குப் போகிறோம். செலவுக்கு நிறையப் பணம் வேறு வைத்திருக்கிறோம். எப்படி சமாளிப்பது, திருட்டுப்போகாமல் எப்படி காப்பாற்றுவது என ஒரு வித பதட்டம். ஒரு வேலை என்னைக் கடத்தினால் எனது கம்பெனி உனக்குப் பணம் தராது என்னை விட்டுவிடுங்கள் என அரபியில் சொல்ல பயிற்சி எடுத்து கொண்டிருந்தேன்.
ஆனால் இறங்கியது முதல் அதாவது அக்டோபர் 6ம் தேதிமுதல் 25ம் தேதி காலை மீண்டும் விமானம் ஏறும்வரை என்னை அன்பினால் திக்கு முக்காடச்க் செய்துவிட்டனர் இராக்கிய மக்கள். எங்கு சென்றாலும் இந்தியன் என அறிந்ததும் ஒரு தனி மரியாதை. முன் அனுமதி இன்றி பெரிய பெரிய அதிகாரிகளை சந்திக்க அனுமதி. கம்பெனி விஷயமாக கேட்ட கேள்விகளுக்கு அன்புடனும், புன்னகையுடனும் பதில்கள். தேவைப்பட்ட சட்ட சம்பந்தமான காகிதங்களை தருதல் என அசத்தி விட்டனர்.
டெல்லியின் பாபுக்கள் மனோபாவம் ஏதுமின்றி எல்லோருடனும் சகஜமாய்ப் பழகும் அதிகாரிகள். தண்ணீரும், குளிர்பானமும் வழங்காமல் எந்த அதிகாரியும் என்னை வெளியே விடவில்லை.
இராக்கியர்களை பொறுத்தவரை அமிதாப்பும், கரீனா கபூரும்தான் இந்தியாவில் தெரிந்த ஆட்கள். வேறு யாரையும் தெரியவில்லை. இந்திப்பட சி.டிக்கள் நம்மூரில்கூட இவ்வளவு கிடைக்குமா எனத் தெரியாது. அவ்வளவு கலெக்ஷன்கள் 150 டாலர் கொடுத்தால் 500 ஜி.பி முழுக்க இந்திப்படங்கள் மற்றும் வீடியோ பாடல்களை பதிந்து தருகின்றனர். எல்லாம் திருட்டு விசிடி போலத்தான்.
ஊர் சுற்றுதல்
முன்னாளைய மெசபடோமியாதான் இன்றைய இராக். டைகிரிஸ் நதி ஓடும் பாக்தாத்தில் 10 நாட்கள் தங்கி இருந்தேன். அலாவுதின் மற்றும் அற்புத விளக்கு, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ரொம்ப பிரசித்தம் போல. இரண்டு, மூன்று ரவுண்டானாக்களில் பெரிய அளவில் அந்த சிலைகளை வைத்திருந்தனர். டைகிரிஸ் நதி அசுத்தங்கள் ஏதுமின்றி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. டைகிரிஸ் நதியின் மேற்புறம் கிரின் சோன் என அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதி. கிழக்குப் பக்கம் சாதாரண இடம். அதாவது எப்போது வேண்டுமானாலும் குண்டு வெடிக்கலாம் என இருக்கும் இடம். இந்தப் பகுதியில்தான ஓட்டல் எடுத்து தங்கி இருந்தேன். ஆனால் இருந்த நாட்களில் ஒருமுறை கூட சப்தங்கள் எதுவும் கேட்கவில்லை
பாக்தாத்தில் பாதுகாப்பு எப்படி என்பது குறித்து ஓட்டலில் கேட்டேன். 24 மணி நேரமும் எந்த பயமும் இன்றி சுற்றலாம் என சொல்லி இருந்தனர். பரிசோதனைக்காக முதல் இரு தினங்கள் ஊர் சுற்ற சென்று வந்தேன். சொல்லி வைத்தார்போல எல்லா பாதுகாப்பு சோதனைச் சாவடிகளிலும் மகிழ்ச்சியுடன் கூடிய முகமன், அன்பான வழிகாட்டல்.
சைவ சாப்பாடு என்ற ஒரு விஷயமே அவர்கள் அகராதியில் இல்லை. அவர்களிடம் எனது உடைந்த அரபியில் சொல்லி விளங்க வைத்தபின்னர் அவர்களே கடைக்கு அழைத்துச் சென்று பிலாபில் என்றழைக்கப்படும் வடைபோல ஒரு வஸ்துவை ( மத்திய கிழக்கில் நிறைய கிடைக்கும்) ஈராக்கிய ரொட்டியில் சுருட்டி சில தக்காளி துண்டுகளும் வெள்ளரிக்காயும் இட்டு தந்தனர். ஈராக்கிய தேனீர் முதல் சுவைத்தலிலேயே பிடித்துப் போயிற்று. எனவே எப்போது வெளியே கிளம்பினாலும் ஒரு கடையில் அடுத்தடுத்து இரு தேநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
சைவ சாப்பாடு வேண்டும் எனக் கேட்க வேண்டுமெனில் சில வழிகள் உள்ளன.
மாஃபி சிக்கன்
மாஃபி மட்டன்
மாஃபி பிஷ்
இதெல்லாம் கேட்டபின்னர் ஏதேனும் ஒன்று கொடுப்பார் அதற்க்கு முதலில் இருந்து அந்த மூன்று கேள்விகளையும் கேட்க வேண்டும்.. அவரும் மாஃபி..மாஃபி என்பார். அதன்பின்னர் குறைந்த பட்ச நம்பிக்கையுடன் சாப்பிடலாம்.
சமீபத்தில் குஷாரி என்றழைக்கப்படும் எகிப்திய சைவ உணவைக் கண்டுபிடித்திருக்கிறேன் அடுத்தமுறை இராக் செல்லும்போது அதைச் சாப்பிட்டாலே போதும் .
சீஷா என்றழைக்கப்படும் புகைப்பிடித்தல் அங்கு பிரசித்தம் குடும்பத்துடன் வந்து தேநீருடன் சீஷா வை புகைத்துவிட்டு அங்கேயே சாப்பாடும் சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள்.
நானும் சுவைத்து வைத்தேன். டபுள் ஆப்பிள் மற்றும் மின்ட் எனக்குப் பிடித்தது. எலைச்சியை ( ஏலக்காய் சுவை ) சுவைக்க முடியவில்லை.
மாலை நேரத்தில் புல்வெளியில் மூன்று நான்கு பேர்களாக அமர்ந்து கொண்டு சீஷாவைப் புகைப்பதே ஒரு அலாதியான அனுபவம். கத்தாரிலும் அபுதாபியிலும் பார்த்திருக்கிறேன் ஆனால் அவையனைத்தும் குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து புகைப்பதாக இருக்கும். சூக்குகள் எனப்படும் உள்ளூர் சந்தைகளில் கிடைக்கும். ஆனால் நாமெல்லாம் சென்று அமர்ந்து சாப்பிட நமக்கு பிடிக்காது.
உணவு
இராக்கிய ரொட்டிதான் எல்லாவற்றிற்ற்கும் அடிப்படை. சுட்ட மாமிசம் தான் இவர்களுக்குப் பிடித்த உணவு. மீனைப் பிடித்து அதை நடுவில் கீறி புத்தகத்தைப் பிரிப்பது போல பிரித்து விடுகிறார்கள் அதை தீயில் வாட்டி சாப்பிடுவது, பர்பெக்யு, கபாப் இவைகள்தான் பெரும்பாலும் கிடைக்கிறது.
காப்பி என்றாலே கடும் காபிதான். பால் ஊற்றி, சர்க்கரை பொதுக் கொண்டுவா என்றால் அதை எவ்வளவு மோசமாகச் செய்ய முடியுமோ அவ்வளவு மோசமாக செய்து தருகிறார்கள். கடும் காப்பியைக் குடிக்கும் தைரியம் புறப்படும் வரை வரவில்லை. ஒரே ஒருமுறை ஷெராட்டன் லாபியில் இராக்கிய பாரம்பரிய காப்பியைக் குடித்தேன். வேப்பங்கோட்டையை அரைத்து அதை டிகாக்ஷன் செய்தது குடித்தால் எவ்வளவு சுவையாக இருக்குமோ அவ்வளவு கசப்பு சுவை. 5 டாலரை அன்பளிப்பாக வாங்க கொண்டனர்.
சமோசா கிடைக்கிறது. அனால் அவைகள் அனைத்தும் மீன் அல்லது கோழியை பூரணமாக வைத்துச் செய்கிறார்கள். மாடு, ஆடு பூரணமாக வைத்த சமூசாக்களும் உண்டு.
இதுதவிர மாட்டுக்கறியை அல்லது ஆட்டுக்கறியை நைசாக அரைத்து அதை கம்பியில் கோர்த்து அனலில் வாட்டி செய்யப்படும் கபாப்கள் பிரசித்தம். தொட்டுக்கொள்ள வெள்ளரிக்காய், எலுமிச்சம்பழம், கபாப்ப் செய்த தக்காளி, உப்பு தரப்படும். அதை பக்குவமாக சேர்த்து நாம் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியது. எனது நண்பரும் கம்பெனியில் சகாவுமான ஒருவரும், பஸ்ராவில் அறிமுகமான திருச்சியைச் சேர்ந்த நண்பர் ஒருவரும் சாப்பிட்டுவிட்டு அருமை என்றனர். இந்தக் கடையில் சாப்பிட்டு முடித்ததும் நீங்கள் இந்தியர்கள் உங்களிடம் பணம் வாங்க மாட்டேன் என அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் வற்புறுத்தி பணம் கொடுத்து வந்தோம்.
இந்திய தூதரகம்.
பாக்தாதின் ஒதுக்குப் புறத்தில் ஒரு பிரம்மாண்டமான பழைய மாளிகையில் இந்திய தூதரகம் இயங்குகிறது. உள்ளே சென்றுபார்த்தால் ஒரே அதிர்ச்சி. ஒரு இந்தியர் கூட இல்லாத முதல் இந்திய தூதரகத்தை அப்போதுதான் பார்கிறேன். மொத்தம் ஆறுபேர், தூதரையும் சேர்த்து. தூதுவர் இந்தியாவில் விடுமுறையில். இன்னொருவர் வெளியூர் பயணம். இன்னும் இருவர்வரவில்லை. மற்ற இருவர் இராக்கியர்கள். அவர்கள்தான் தூதரகத்தை நடத்துகின்றனர். இந்தியன் என்றதும் அவர்களுக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் இந்திய கம்பெனிகள் குறித்த தகவல்களையும் தந்தனர்.
இந்திய தூதரகத்தின் மதிப்பின்படி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இந்தியர்கள் இருக்கலாம். முறையாக சரிபார்க்கப்படாத தகவல். தூதரகத்தின் முக்கிய பனி என்பது மருத்துவத்திற்க்காக இந்தியா செல்லும் இராக்கியர்களுக்கு விசா வழங்குவது. எப்போதாவது வரும் இந்தியர்களின் கடவு சீட்டை புதுப்பித்தல் இதுதான். நான் சென்றிருந்தபொழுது நமது தேசியக்கொடி கிழிந்திருந்தது. நான் அதை மாற்றும்படி வேண்டினேன். நான் கிளம்பும் முன்னரே புதுக்கொடி மாட்டப்பட்டு விட்டது.
நான் ஊரில் இருந்து கிளம்பி நாலாவது நாள் இந்திய தூதரகம் சென்றேன். அவர்கள் கொடுத்த தகவல்படி ஒரு இந்திய கம்பெனியின் மேலாளருக்கு போனில் நான் பாக்த்தாத்ன் வந்திருப்பதையும் , நானும் ஒரு இந்தியகம்பெனியைச் சேர்ந்தவன்தான் என்றதும் மதிய உணவுக்கும் சந்திப்புக்கும் அழைத்தார். கிட்டத்தட்ட நான்கு நாட்களில் நான் பார்த்த முதல் இந்தியர் அவர். மலையாளி. நல்ல சாப்பாடு உங்களுக்கு கிடைத்திருக்காது. இருங்கள் சமைக்கிறேன் என சமைத்து உணவு பரிமாறினார். அருமையான உணவு. அவர் சில தகவல்களை தந்தார்
இந்திய தூதரின் வீட்டிலேதான் இதர அலுவலர்களும் தங்கி இருக்கின்றனர். ஒரு ஆடிட்டர் கம்பெனியை பார்க்கச் செல்லும்போது ராணுவத்தினர் அழைத்து, உங்க நாட்டு தூதுவர் வீடு இதுதான் என தகவல் தந்தனர். அதனால் அங்கிருந்த அலுவலர்களைப் பார்க்க முடிந்தது. இந்திய அரசின் கட்டளைப்படி அவர்கள் தேவையின்றி வெளியே நடமாடக்கூடாது என உத்தரவிருப்பதாலும் இராக்கிய அரசாங்கம் அவர்களை பாதுகாப்பு வண்டிகள் இன்றி வெளியே செல்லக்கூடாது என சொல்லி இருப்பதாலும் அவர்கள் வேலை மற்றும் தங்கல் எல்லாம் அந்த வீட்டுக்கு உள்ளேதான். கிட்டத்தட்ட அறிவிக்கபடாத சிறை வாசம்.
அரசு அலுவலகங்கள்.
மத்திய கிழக்கில் எல்லா அரசு அலுவலகங்களும் கிட்டத்தட்ட ஐந்து நட்சத்திர விடுதிகள் போலிருக்கும். ஆனால் பாக்தாத்தில் மிகப் பழைய கட்டிடங்கள். நம்மூரில் ஒருகாலத்தில் இருந்த கதவு போல திறந்து வெளியே வரும் லிஃப்டுகள்.
எல்லோரும் மிக அன்புடனும், பொறுமையுடனும் பதில் அளித்தனர் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒருவராவது ஆங்கிலம் தெரிந்தவராக இருப்பார் அவர்தான் நமக்கு அறிவிக்கபடாத மொழிபெயர்ப்பாளர். நமக்கு வேண்டிய தகவல்கள் யாரிடம் இருக்கும் என அவரே அழைத்துச் சென்று அவருக்கு அரபியில் விளக்கி நமக்கு தேவையானதை செய்து தருகிறார்
லஞ்சம்
இராக்கில் கதவை திறந்து விடுவதில் தொடங்கி, காண்ட்ராக்ட் வரை பணம் இல்லையெனில் எதுவும் நடப்பதில்லை. கம்பெனி ஆரம்பிக்க எல்லா தாஸ்தாவேசுகளும் இருந்தாலும் போதாது. சரியான ஏஜெண்டும் பணமும் முக்கியம். எங்கள் கம்பெனியின் கிளையை பதிவு செய்ய ஒரு எஜெண்டைப் பிடித்திருந்தோம் நான் அங்கு செல்வதற்குள் எங்கள் கம்பெனியின் பதிவு எங்கள் கம்பெனியின் ஆட்கள் இன்றியே நடந்து முடிந்துவிட்டது. எல்லாம் பணம் செய்யும் மாயம்
காண்ட்ராக்ட் வேணுமா என கூவி விற்காத குறைதான். அவ்வளவுதூரம் ஊழல் புரையோடிப்போயிருக்கிறது. ஆனால் அதெல்லாம் தவறே இல்லை என நம்பவைக்கப்பட்டிருக்கிறது.. அல்லது வாழ்க்கை முறையை மாறிப் போயிருக்கிறது. டாக்சியில் சென்றால் பில் தரும்போது அவரது கையொப்பம் மட்டும் இட்டு சீட்டை உங்களிடமே தந்துவிடுவார். நீங்கள விரும்பிய தொகையை பூர்த்தி செய்து கொள்ளலாம். பெரும்பான்மையான கடைகளில் டாக்சிக்களில் பில் தரும் பழக்கமே இல்லை.
இராக்கின் பாக்தாத மற்றும் பஸ்ரா நகரங்கள்
கிட்டத்தட்ட காலத்தால் உறைந்துபோன நகரங்களாக இருக்கின்றன. புதிய பெயின்ட் அடித்த ஒரு கட்டிடம் கூட காணக் கிடைக்கவில்லை, அரசு அலுவலகம், ஹோட்டல், தியேட்டர், தனியார் கட்டிடங்கள் எல்லாம் ஒரே மாதிரி அழுக்கடைந்து இருக்கின்றது. புதிய மால்கள் கட்டப்பட்டு வருகிறது. தற்போதைக்கு பெரிய மால் எனில் மேக்சிமால் எனப்படும் துனிக்கடைதான்.
கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றது இந்திய பாஸ்மதி அரிசியிலிருந்து உப்பு, புளி, மிளகாய் என எல்லாம். சமைக்க தெரிந்துவிட்டால் ஹோட்டலில் சாப்பிடுவதில் 10ல் ஒரு பங்குகூட செலவாகாது.
குடிதண்ணிர் எனில் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர்தான். 500 மில்லி லிட்டர் ஹோட்டலில் ஒரு டாலர். 12 பாட்டில்கள் வெளியில் கடைகளில் 2 டாலருக்கு கிடைக்கிறது. இது தவிர 20 லிட்டர் கேனிலும் கிடைக்கிறது. ஆனால் அதன் தரம்தான் சந்தேகமாக இருக்கிறது.
மின்சாரம் என்பது ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான். அதனால் பெரும்பாலும் எல்லாருடைய வீடுகளிலும் ஜெனரேட்டர் வசதியும் இன்வேர்த்டார் வசதியும் உண்டு . இதுதவிர தெருவுக்கு ஒருவர் பெரிய ஜெனரேட்டர் வாங்கி விட்டிற்கு 10 ஆம்பியர் என சப்ளை செய்து சம்பாதிப்பவர்களும் உண்டு. 10 ஆம்பியர் ஒரு நாளைக்கு 10 டாலர். மாதம் 300 டாலர். 22 மணி நேரம் சப்ளை கிடைக்கும் 2 மணி நேரம் அரசாங்கத்தின் சப்ளை.
பாக்த்தாதிலும் பாஸ்ராவிலும் கிடைக்கும் தண்ணீரில் குளிக்க முடியாது அவ்வளவு உப்பு. ஆனால் அதில்தான் குளித்தோம். இவ்வளவு வசதிகள் இருந்தும் எண்ணெய்வளம் இருந்தும் மக்கள் தண்ணிருக்கு பெரும் பணம் செலவு செய்ய நேரிடுகிறது.
சாலைகள் எல்லாம் எந்த விதிமுறைக்கும் அடங்காத வாகன ஓட்டுனர்களால் ஆளப்படுகிறது. போக்குவரத்து காவலர் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.பெரும்பாலும் சீனாவில் மற்றும், இரானில் தயாரிக்கப்பட கார்கள் டாக்சிகளாக ஓடுகின்றன. டாக்சிக்காரர்கள் நீங்கள் பெசும்விதததி வைத்து உங்களுக்கு விலை சொல்வார்கள். பக்கத்து தெருவுக்கு 50 டாலர்கள் வாங்குபவர்களும் உண்டு ஒரு நாள் முழுக்க வாடகையாக 50 டாலரில் வருபவர்களும் உண்டு.
கம்பெனிகள்.
உலகின் எண்ணெய் கம்பெனிகள் அனைத்தும் இராக்கில் உள்ளன. இனி, டோட்டல், காஸ்ப்ரோம், எக்சான் மொபில், சி.என்.பி.சி., மற்றும் அதன் குட்டிக் கம்பெனிகள், பெட்ரோனாஸ், ஷெல் எல்லாம். அவர்களது இராக் அலுவலகம் துபாயில் இருக்கும். சிறு, சிறு அலுவலகங்களை மட்டும் அமைத்துக் கொண்டு இராக்கில் செயல்படுகின்றனர். எண்ணெய் துரப்பனப் பணிகள் மற்றும் அதன் சற்று வேலைகள் அனைத்தும் அவர்களால் செய்யப்படுகிறது. அவர்களுக்குக் கீழே வேலைசெய்பவர்களுடந்தான் எங்கள் வேலை.
இது தவிர, மொகமது என்ற இராக்கிய நண்பரும், கந்த ராஜ் என்ற திருச்சிக்கார நண்பரும் இராக்கில் கிடைத்தனர் இதுதவிர எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்புகொள் என நம்பரும் இமெயிலும் அளித்த நண்பர்கள் அதிகம்.
பயத்துடன் புறப்பட்டு மிக்க மகிழ்வுடன் திரும்பி வந்தேன், இராக்கிலிருந்து. வந்தவுடன் இராக் தூதரகம் சென்று புது விசாவுக்கு பாஸ்போர்ட்டைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். 04.11.2012 காலையில் எனது இறக்கிய அனுபவங்களை மகிழ்வை தூதருக்கு கடிதமாய் எழுதித்தந்தேன். 3 மாதத்திற்கு பலமுறை சென்று வருவதற்க்கான விசாவை வழங்கியுள்ளார். இராக் சென்ற பின்னர் மேலும் மூன்று மாதம் நீட்டித்துக்கொள்ளவும் தகவல் அனுப்பி விடுவதாக சொல்லி இருக்கிறார்.
மீண்டும் நவம்பர் மாத இறுதிக்குள் இராக்கில் வீடு எடுத்து தங்க ஆரம்பிப்பேன் என நினைக்கிறேன். இராக் வந்தா அவசியம் எங்க வீட்டுக்கு வரணும்.
ஜெயக்குமார்
மற்ற படங்கள் இங்கே பார்க்கலாம் :
நிச்சயம் வருகிறேன், அங்கே இட்லிவடை கிடைக்குமா ?
Posted by IdlyVadai at 11/06/2012 08:18:00 PM 21 comments
Labels: அனுபவம், கட்டுரை, பயணம், விருந்தினர்
Monday, November 05, 2012
தாவுத் கட்கரி
நிச்சயம் இவர் பிஜேபி தலைமை பொறுப்பிலிரிந்து ராஜிநாமா செய்ய வேண்டும். விவேகானந்தர் பற்றி சொன்னதற்கு இல்லை, இவர் மீது சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு!
தாலிபான் மாதிரி தான் ஆர் எஸ் எஸ் என்று நாளைக்கு சொல்லுவதற்குள் இவர் ராஜிநாமா செய்வாரா ?
Posted by IdlyVadai at 11/05/2012 11:14:00 PM 5 comments
Labels: செய்திவிமர்சனம்
Sunday, November 04, 2012
நோ கமெண்ட்ஸ்
பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அமெரிக்காவின் டைம்ஸ் நாளிதழ் எழுதியதற்காக, அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையை தீயிட்டு எரித்து தங்கள் விஸ்வாசத்தை காண்பித்த கட்சி இது
Posted by IdlyVadai at 11/04/2012 10:52:00 AM 6 comments
Friday, November 02, 2012
சுவாமி பதிலடி
நேற்று ராகுல், சோனியா மீது சு.சாமி குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். ஆனால் இன்று காலை ஆங்கில நாளிதழ்கள் அதற்கு பெரிய முக்கியத்துவம் தந்த மாதிரி தெரியவில்லை. நேற்று மாலையே ராகுல் காந்தி அலுவலகத்திலிருந்து 'வழக்கு தொடருவேன்' என்ற கடிதம் சாமிக்கு அனுப்பபட்டதாக செய்தி வெளியானது. இன்று சு.சாமி அதற்கு "வழக்குத் தொடருங்கள். அங்கு உங்களை சந்திக்கிறேன்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்துப் பேசிய சுப்ரமணிய சுவாமி, ராகுல் காந்தி முதலில் வளர வேண்டும். பிறகு நீதிமன்றத்துக்குச் சென்று என் மீது அவதூறு வழக்குத் தொடரலாம். அங்கு ராகுலை சந்திக்க தயாராக உள்ளேன். இது குறித்து ஏதாவது கடிதம் எனக்கு வந்தால், அதனை பிரித்துக் கூட பார்க்காமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவேன் என்று கூறியுள்ளார்.
வழக்கம் போல இதையும் ஆங்கில மீடியா கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்.
Posted by IdlyVadai at 11/02/2012 01:13:00 PM 8 comments
லிட்டில் கிருஷ்ணா
Posted by IdlyVadai at 11/02/2012 12:31:00 PM 0 comments
Labels: விளையாட்டு, வீடியோ
Thursday, November 01, 2012
சோனியா, ராகுல் மீது சுப்பிரமணியசாமி புகார்
இன்று மத்தியம் சு.சாமி ராகுல், சோனியா மீது 1600 கோடி முறைகேடு புகார் ஒன்றை சென்னார். அந்த பேட்டியில் 76 சத பங்குதாரர்களாக இருந்துக்கொண்டு ரூ1600 கோடி மதிப்பிலான மற்றொரு நிறுவனத்தை தங்களது நிறுவனத்திற்கு முறைகேடாக அபகரித்தார்கள் என்று குற்றம் சாட்டினார். பத்திரிக்கை சந்திப்பில் ராகுலை 'பச்சா' என்று கூறிய போது காமெடியாக இருந்தது. அபகரித்த்து மட்டும் இல்லாமல் சோனியா மற்றும் ராகுல் காந்தி பொது டிரஸ்ட்டுகளை தனியார் அறக்கட்டளைக்கு மாற்றியதாகவும் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டினார். அரசு கொடுத்துள்ள நம்பர் 10 இல்லத்தில் கம்பெனியின் மீட்டிங் எப்படி நடத்தலாம் என்று கேள்வி கேட்டார். டைம்ஸ் நௌ, சி.என்.என் ஐபிஎன் போன்ற செய்தி ஊடகங்கள் கட்கரி சம்பந்தப்பட்ட டுபாக்கூர் நிறுவனங்களை கண்டு பிடித்த மாதிரி சோனியா, ராகுல் சம்பந்தபட்ட இந்த நிறுவனத்தை கண்டுபிடிக்குமா என்று நக்கல் அடித்தார்.
பத்திரிகை சந்திப்பு இங்கே
அப்டேட்: ராகுல் காந்தி சு.சாமி மீது கேஸ் போட போவதாக கடிதம் எழுதியுள்ளார். அப்படி அவர் நிஜமாக போனால் நன்றாக இருக்கும்.
இது வெறும் செய்தி, இதனால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது என்று எல்லோருக்கும் தெரியும். சு.சாமியே சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லுவது காமெடியில் பெரிய காமெடி!
Posted by IdlyVadai at 11/01/2012 07:03:00 PM 3 comments