பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 26, 2012

விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி நோயாளி - ஞாநி + சில ...

விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி நோயாளி என்ற தலைப்பில் இந்த வார கல்கியில் ஞாநி எழுதியுள்ள இந்த கட்டுரை பலர் சரி என்று சொன்னாலும், நம் நாட்டில் க்யூ சிஸ்டம் மாறப்போவதில்லை.

கட்டுரை கீழே...நிறைய பேர் என்னை ஒரு வி.ஐ.பி என்று கருதுகிறார்கள். பத்திரிகைகளில் எழுதுவதால்,டி.வி களில் தோன்றுவதால், பரவலாக பலருக்கு என் முகம் பரிச்சயமாகியிருப்பதால், நான் ஒரு வி.ஐ.பி என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

வி.ஐ.பி என்ற ஜாதியே இந்தியாவுக்கே உரியது. மேலை சமூகத்தில் அதை ஏறத்தாழ ஒழித்துவிட்டார்கள். எல்லாரும் சமம், எல்லாரும் வி.ஐ.பி என்ற பார்வை நம் சமூகத்தில் கிடையவே கிடையாது.

வி.ஐ.பி என்றால் என்ன அர்த்தம் ? எல்லா பொது இடங்களிலும் முன்னுரிமை, சலுகைகளுக்கு உரியவர் என்றே இங்கே அர்த்தம். ஏர்போர்ட்டில் ஒரு முறை லிஃப்டுக்காகக் காத்திருந்தபோது பார்த்தேன். இன்னும் சிலர் இருந்தார்கள். ஒரு சினிமாப்பாட்டுசக்ரவர்த்தி வந்ததும் எல்லாரும் ஒதுங்கி அவர் முதலில் லிஃப்டுக்குச் செல்ல வழி விட்டுவிட்டார்கள். இப்படிப்பட்ட முன்னுரிமைகளைப் பெறக் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், உடற்குறையுடையோர் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என்பதே என் கருத்து.

நான் அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்கிறேன். பரிசோதனை நிலையங்களுக்குப் போகிறேன். டோக்கன் வரிசைப்படி என் முறைக்காகக் காத்திருக்கிறேன். நான் ஐநூறு ரூபாய் பீஸ் கொடுக்கும் டாக்டரை சந்திக்க இரண்டு மணி நேரமெல்லாம் வரிசையில் காத்திருந்திருக்கிறேன். காத்திருக்கும் மற்றவர்களும் அதே பீஸ்தான் கொடுக்கிறார்கள். அவர்களும் காத்திருக்கிறார்கள்.

கியூவில் நிற்காமல் முன்னே செல்லும் உரிமையுடையவர் வி.ஐ.பி என்பது நம் சமூகத்தில் நிலவும் கிறுக்குத்தனம். இதை ஓட்டுச் சாவடியிலிருந்து ஏர்போர்ட் வரை எங்கேயும் பார்க்கலாம். தங்கள் முறை வருவதற்காகக் காத்திருக்கக் கூட முடியாத நிலை ஒரு வி.ஐ.பிக்கு என்னதான் இருக்க முடியும் ? மலம் கழிக்கும் அவசரத்தை தவிர வேறெதற்கும் இந்த சலுகையைத் தரமுடியாது.

வி.ஐ.பியின் நேரம் பொன்னானது. அந்த நேரத்தில் அவர் சமூக மேம்பாட்டுக்காக உழைப்பது வீணாகிவிடும் என்றெல்லாம் கற்பனையாக சொல்லப்படுகின்றன. இந்த வி.ஐ.பி கலாசாரத்தை எல்லா இடங்களிலும் நிச்சயம் ஒழித்துக் கட்டவேண்டும்.

குறிப்பாக மருத்துவத் துறையில் ஒழித்துக் கட்ட வேண்டியிருக்கிறது. வி.ஐ.பிகளால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல. சுமார் 29 வருடங்களுக்கு முன்னால் என் அம்மா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அதிகாலையில் இறந்துபோனார். அந்த வார்டுக்குப் பக்கத்து வார்டில் ஒரு முன்னாள் அமைச்சர் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். என் அம்மா இறந்த உடனே மருத்துவமனை ஊழியர்கள் அடுத்த நிமிடமே பிணத்தை எடுத்துக் கொண்டு ஓடும்படி என்னை துரத்தினார்கள். காரணம் செத்துக் கொண்டிருக்கும் வி.ஐ.பியைப் பார்க்க சாகப் போகும் சில வி.ஐ.பிகள் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிடுவார்களாம். அப்போது வார்டில் பிணம் இருக்கக்கூடாதாம். மாடியிலிருந்து அம்மாவின் உடலை கீழே எடுத்து செல்ல ஸ்ட்ரெச்சர் கேட்டேன். வரவில்லை. அம்மாவின் உடலை என் இரு கைகளில் ஏந்திக் கொண்டு படிகளில் இறங்கி வெளியே வந்தேன். நான் வெளியேறவும் வி.ஐ.பிகளின் கார்கள் நுழையவும் சரியாக இருந்தது !

சிகிச்சையில் ஒரு வி.ஐபிக்கு முன்னுரிமை உண்டா என்ற கேள்வி இந்த வாரம் மனதில் அலை மோதியது. காரணம் மத்திய அமைச்சரும் முன்னாள் மராட்டிய முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்தான்.

மரணப்படுக்கையில் இருந்த விலாஸ்ராவுக்கு கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் முழுக்கக் கெட்டுவிட்டன. அவற்றை உறுப்பு தானமாக வாங்கி அவருக்குப் பொருத்தி அவரைக் காப்பாற்ற முடியுமா என்று அவர் குடும்பத்தினர் முயற்சி செய்தார்கள்.

உறுப்பு தானத்தில்தான் வி.ஐ.பி பிரச்சினை நுழைகிறது. இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்கள் மிக மிகக் குறைவு. மூளைச் சாவு ஏற்பட்டதும் உறவினர் சம்மதத்துடன் ஒருவரின் உறுப்புகளை எடுத்துப் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமே நம் நாட்டில் தாமதமாகத்தான் வந்தது.

எப்போதுமே தேவைப்படும் உறுப்புகளின் எண்ணிக்கையை விட, கிடைக்கும் உறுப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எனவே உறுப்பு பொருத்தப்படவேண்டிக் காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உறுப்பு கிடைக்கக் கிடைக்க வரிசைப்படி அளிக்கப்படுகிறது. இதுதான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் பின்பற்றும் நடைமுறை.

விலாஸ்ராவ் இந்தப் பட்டியலில் முதலில் இருக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு முன்பே பலர் காத்திருந்தார்கள். ஆனால் விதிகளை வளைத்து விலாஸ்ராவுக்கு ஒரு கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பெற்றுவிடமுடியுமா என்று கொஞ்சம் முயற்சிகள் நடந்திருக்கின்றன.

காத்திருப்போரில் யாருக்கு முன்னுரிமை தருவது என்பதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. திடீரென உடல்நலம் குலைந்து உடனடியாக மாற்று உறுப்பு பொருத்தப்படாவிட்டால் இறந்துவிடும் ஆபத்தான நிலையில் இருப்பவரை அக்யூட் நோயாளி என்று சொல்வார்கள். இவர்களிலும் மிக அவசர நிலையில் இருக்கும் சிலரே முன்னுரிமைக்கு உரியவர்கள். நீண்ட காலமாக உடலின் ஒவ்வொரு பாகமாகப் பழுதடைந்து மெல்ல மெல்ல சீர்குலைந்துவந்த நிலையில் இருப்போர் க்ரானிக் எனப்படுவோர். இவர்கள் முன்னுரிமைக்கு உரியவர்கள் அல்ல.

விலாஸ்ராவ் தேஷ்முக்கின் கல்லீரல் பழுதாகிப் பல காலம் ஆயிற்று. அதன் பின் அதில் புற்று நோயும் ஏற்பட்டது. அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்தன. அவர் கிரானிக் நோயாளி நிலையில் இருந்தவர்.

வி.ஐ.பி என்பதற்காக அவருக்கு முன்னுரிமை தர மாற்று உறுப்புகள் தொடர்பான சட்டங்களில் ஒரு வழியும் கிடையாது. அவ்வளவு ஏன், இந்தியாவின் எந்த சட்டத்திலும் வி.ஐ.பி என்ற வரையறையோ யாருக்கும் சலுகையோ கிடையாது.

எனவே விலாஸ்ராவை க்ரானிக் கேட்டகரியில் இல்லாமல், ஹைப்பர் அல்ட்ரா க்ரிட்டிகல் கேஸ் என்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை அறிவித்தது. அந்த முன்னுரிமை பெற்றும் கூட, இன்னமும் அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லாத நிலையிலேயே அவர் காலமாகிவிட்டார்.

மும்பையில் கல்லீரல் பெற இயலாத நிலையில் அவரை சென்னைக்குக் கொண்டு வந்து இங்கே விதியை வளைக்க ஏதேனும் செய்யமுடியுமா என்ற முயற்சி நடந்திருக்கிறது. இங்கேயும் சிரமம் என்றபோது மறுபடியும் மும்பையில் முயற்சித்தார்கள். உறுப்பு தான விதிகளின்படி வி.ஐ.பி என்று யாரும் இல்லை. எனவே அவரை வி.ஐ.பியாகக் கருதி முன்னுரிமை தந்து உறுப்பை ஒதுக்கீடு செய்யமுடியாது என்று மும்பையில் சொல்லிவிட்டார்கள். ஆனால் க்ரானிக் நிலையில் இருந்த அவர் உறுப்பு கிடைக்கும் முன்பே காலமாகிவிட்டார்.

அமெரிக்கா, மும்பை, சென்னை, ஏர் ஆம்புலன்ஸ் என்றெல்லாம் அலைந்து விலாஸ்ராவுக்கு உறுப்பு தானம் பெற்று பொருத்த முயற்சித்தவர்கள் , அவர் இறந்தபின் அவரது கண்களையோ உடலையோ கூட தானமாகத் தரவில்லை. இதுதான் நம் சமூகத்தின் வி.ஐ.பி மனநிலை : எனக்கு எல்லாரும் தரவேண்டும். நான் யாருக்கும் எதையும் தரமாட்டேன் !

மருத்துவ சிகிச்சை பெறுவதில் வி.ஐ.பிக்கு முன்னுரிமை என்று எதுவும் இருக்க முடியாது. எல்லா உயிரும் சமமானவை என்பதே சரியான கோட்பாடு. ஆனால் நாம் உயிர்களை வி.ஐ.பி உயிர் , சாதா உயிர் என்று பிரித்தே நடத்துகிறோம்.

விலாஸ்ராவ் தொடர்பாக வெளியான இணைய செய்திகளில் கமெண்ட் அடித்த பல வாசகர்கள் , விலாஸ்ராவ் ஆதர்ஷ் ஊழலில் தொடர்புள்ள நபர். அவர் இருந்தால் என்ன, இறந்தால் என்ன என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். இதுவும் தவறான அணுகுமுறைதான். ஊழலில் தொடர்புடையவர் செத்து ஒழியட்டும் என்று விடமுடியாது. அவரை நீதிக்கு முன் நிறுத்தி குற்றத்தை நிரூபித்து தண்டிப்பதுதான் சரியான வழி. எந்த மனித உயிரும் காப்பாற்றப்படவேண்டியதுதான் – விலாஸ்ராவ் உட்பட. ஆனால் விலாஸ்ராவ் வி.ஐ.பி என்பதால் முதலில் காப்பாற்றப்படவேண்டும் என்பதே தவறான அணுகுமுறை.

உண்மையில் எல்லா உயிர்களையும் சமமாக மதித்து கவனிப்பவர்கள் மருத்துவமனையில் இருக்கும் நர்சுகள்தான். எங்கிருந்துதான் இப்படி அற்புதமான நர்சுகள் வருடந்தோறும் புதிதுபுதிதாக வந்துகொண்டே இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு முறை மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும்போதும் வியக்கிறேன். அவர்கள்தான் நம் நாட்டு மருத்துவத்துறையின் மிகப் பெரிய சொத்து.

( நன்றி: கல்கி )

இந்த கட்டுரை தொடர்புடைய செய்தி இரண்டு

செய்தி 1:

சென்னை கோவளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஜீவா என்ற 30 வயது பள்ளிக்கூட கார் டிரைவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஆம்புலன்ஸ் வேன் மோதி படுகாயம் அடைந்து சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் உறுதி செய்தனர். உடனே ஜீவாவின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு தானமாக பெற டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். இரவு 9 மணி அளவில் ஜீவாவின் குடும்பத்தினர் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த டாக்டர்கள் தேஷ்முக்கிற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தனர். பெரிய ஆஸ்பத்திரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு கல்லீரலை எடுத்துச்சென்று தேஷ்முக்கிற்கு பொருத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரைந்து செய்யப்பட்டன.
நள்ளிரவில் டாக்டர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, ஜீவாவின் உறவினர்களின் தயக்கம் மற்றும் விபத்து வழக்கு போன்ற காரணங்களால் கல்லீரலை தானமாக பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிகாலை 2.45 மணிக்கு ஜீவா இறந்துவிட்டார்.
அவருடைய இதய துடிப்பு அடங்கி விட்டதால் அதன்பிறகு ஜீவாவின் கல்லீரலை எடுத்து தேஷ்முக்கிற்கு பொருத்த முடியாது. இதனால் துரதிர்ஷ்டவசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கைநழுவிப்போனது.

செய்தி 2
டிவிட்டர் இணையதளத்தில் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், "கல்லீரல் பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வரும் விலாஸ்ராவுக்காக, விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்ட உடலில் இருந்து கல்லீரலை தானமாகப் பெற வேண்டும் என்று குஜராத் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார். கல்லீரலைத் தானமாகப் பெற அதிகாரிகள் மிகுந்த முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக, டிவிட்டர் இணையதளத்தில் உடனடியாக 150 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கல்லீரல் தானம் தேவைப்படும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவரைவிட, அமைச்சர் முக்கியத்துவம் வாய்ந்தவரா என்று சிலர் இந்த நடவடிக்கையை விமர்சித்தும் உள்ளனர்.

அடுத்த பிரதமாராக வர இருப்பவர் இது போன்று உணர்ச்சிவசப்பட கூடாது. அவர் நாட்டுக்கு பிரதமர் அரசியல்வாதிகளுக்கு இல்லை.

11 Comments:

dr_senthil said...

ஞாநி கூறியது முழுக்க உண்மை ., கீழ கூறிய டிரைவர் தொடர்பான செய்தியும் உண்மை தான்.. மருத்துவமனையில் உள்ள என் நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.. அவர் இங்கு அழைத்துவர பட்டதற்கு சென்னை என்றால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்பதும் ஒரு காரணம்.. நான் கண்ட வரையில் பிரபல அரசியல்வாதிகளுக்கு நல்ல சாவு வெகு அபூர்வம், இந்திரா, ராஜீவ், YSR

Anonymous said...

மோடி அண்ணாத்தே நீங்க ஒருத்தர் மட்டும் தான் இந்த நாட்டுக்குள்ள ஒரே நம்பிக்கை. உங்களை விட்டா உங்க கட்சியிலோ , கூட்டணிக் கட்சியிலோ கூட ஒரு ஈ, காக்கா கிடையாது. பெருச்சாளிகள் தான் இருக்குது.

உணர்ச்சி வசப்பட்டு ஜோதியில் கலந்துடாதீங்க. அண்ணாச்சி சீக்கிரமா பிரதமராகி முதல்ல இந்த கரண்டை நாடு முழுக்க சரி பன்னூங்கோ. கொசுத் தொல்லை தாங்க முடியலை. ஊழலைக் கூட அப்பறம் பார்த்துக்கலாம்.

Vikram said...

spot on (for once!) from gnani!!
like the following -
"இப்படிப்பட்ட முன்னுரிமைகளைப் பெறக் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், உடற்குறையுடையோர் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை.."
(may be pregnant women need to be included here)
"மலம் கழிக்கும் அவசரத்தை தவிர வேறெதற்கும் இந்த சலுகையைத் தரமுடியாது"...

but on this topic - though i agree with the essence of the article and in now way support the "VIP treatment" - practically it is difficult for the family members to be silent spectators - they would use all their muscle/financial/political power or whatever within their capacity to save the patient - unless they are too matured to accept the situation and realise that every life is equally precious....

long way to go :(

”தளிர் சுரேஷ்” said...

ஞானியின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்! வி.ஐ.பி முன்னுரிமைகள் தேவையில்லாத ஒன்று!

இன்று என் தளத்தில்
பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
கோப்பை வென்ற இளம் இந்தியா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

kothandapani said...

இட்லி வடை என்றாலே 50% லொள்ளு , 50% ஜாலி தானே.....மோடி அடுத்த பிரதமர் என்ற உங்களின் லொள்ளை , நாங்கள் ஜாலியாகவே எடுத்து கொள்கின்றோம்

Anonymous said...

Classic Gnani.

கண்ணன் said...

>வி.ஐ.பி என்ற ஜாதியே இந்தியாவுக்கே உரியது.

ஸ்டீவ் ஜாப்ஸ் எப்படி கல்லீரல் பெற்றார் என ஞாநி சற்று கூகுள் செய்யட்டும். அவருடைய கட்டுரையின் சாராம்சத்தில் எனக்கு உடன்பாடே, ஆனால், அங்கே இல்லை இங்கே இல்லை, ஆகவே இந்தியாவில் தேவையில்லை என்ற வாதம் அபத்தம்!

Anonymous said...

மனிதன் இந்தியாவுல இருந்த தான கரண்ட் வேணும் ,,நரபலி நரேந்திர மோடி வந்த அத்தன பேரையும் கொன்னுடுவான்னே ,,அப்புறம் கரண்ட் இருந்த என்ன ,,இல்லாட்டி என்ன .இந்தியாவ ஆள்வதற்கு இங்கே நெறைய திறமையும் ,,அறிவும் உள்ள ஆட்கள் இருக்குது ,,அதனால வந்தேறி பரதேசிபயலுக எல்லாம் இந்தியாவுக்கு வேண்டாம்.

Anonymous said...

//அதனால வந்தேறி பரதேசிபயலுக எல்லாம் இந்தியாவுக்கு வேண்டாம்.// நீங்க சொல்லிடீங்கள்ள..அதுனால தான் சோனியா காந்தி ஒதுங்கியே இருக்காங்க

பெசொவி said...

//அவர் இறந்தபின் அவரது கண்களையோ உடலையோ கூட தானமாகத் தரவில்லை. இதுதான் நம் சமூகத்தின் வி.ஐ.பி மனநிலை : எனக்கு எல்லாரும் தரவேண்டும். நான் யாருக்கும் எதையும் தரமாட்டேன் !//

Classic Lines!

Anonymous said...

Congress is a curse for india