“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்ற ஒரு பழமொழி உண்டு. 1960-களில் குமுதம் இதழில் ‘கடுகுச் செய்திகள்’ எழுதத் தொடங்கிய திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள் ‘கடுகு’ என்ற புனைப்பெயரினால் தமிழ் இலக்கிய உலகில் அனைவராலும் அறியப்படுபவர். எளிமையாக இருக்கும் அவரது எழுத்து நடையில் நகைச்சுவை இழையோடியிருக்கும். ‘கடுகு’ வலைத்தளத்தைப் பின்தொடரும் நான் அவரது “கமலாவும் நானும்” புத்தகம் கையில் கிடைத்ததும் ஆசையோடு படிக்கத் தொடங்கினேன்.
கண்ணுக்குத் தெரியாத ஒர் அணுவிற்கு உள்ளே எவ்வளவு சக்தி மறைந்து இருக்கிறது? அதேபோல் தான் ‘கடுகு’ என்ற பெயரும். புத்தகத்துக்கு உள்ளே போவதற்கு முன் சமீபத்தில் மறைந்த திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்களின் அணிந்துரை. 206 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் சுமார் 100 பக்கங்களில் “நானும்” கட்டுரைகள். கல்கி, குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., சாவி, தேவன், சுஜாதா போன்ற பலருடன் ஏற்பட்ட தன் அனுபவங்களை மிகவும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். அப்பக்கங்களைப் புரட்டிப் படித்த எனக்கு அவர்மேல் ஒரு வியப்பு அல்லது திகைப்பு ஏற்பட்டதில் ஆச்சர்யமில்லை.
அடுத்த 40 பக்கங்களில் எனக்குப் பிடித்த ‘கமலா புராணம்’ கதைகள். மீதி பக்கங்களில் சில கொசுறு கதைகள்.
கடுகு அவர்கள் குமுதத்தில் எழுதத் தொடங்கியதற்கு முன்னரே ‘கல்கி’ இதழில் அவரது ‘பொன் விளையும் பூமி’ என்ற கட்டுரை எழுத்தாளர் கல்கி அவர்களாலே வெளியிடப் பட்டிருக்கிறது. இரண்டு வருடங்கள் கல்கியுடன் பழகிய வாய்ப்பு கிட்டிய இவர் தனது டெல்லி இல்லத்திற்கு வைத்திருக்கும் பெயர் ‘கல்கி’. தமிழின் “குந்தவி, வந்தியத்தேவன், ராஜராஜன், தாரிணி, கரிகாலன், பொன்னியின் செல்வன்” போன்ற எழுத்துருக்கள் (fonts) இவர் உருவாக்கியவையே!
தனது எழுத்துத் திறமையை ஊக்கப்படுத்தியதில் கல்கிக்கு அடுத்ததாகக் குமுதம் ஆசிரியர் திரு.எஸ்.ஏ.பி. அவர்களைப் பற்றிக் கூறியிருக்கும் இவர், ஓர் அத்தியாயத்தில் ரா.கி.ர., பாக்கியம் ராமசாமி மற்றும் புனிதனுடன் குமுதம் அலுவலகத்தில் இருந்த அனுபவத்தைச் சொல்லியிருப்பார். காகிதங்கள், ப்ரூஃப்கள் என்று விரவியிருந்த அந்த அறைகளில் ‘அச்சு மை’யின் வாசனையை ‘உலகின் மிக உயர்ந்த சென்ட் மணத்தைவிட உயர்ந்த வாசனை’ என அவர் குறிப்பிட்டதில் இருந்து பத்திரிகைகளில் எழுதும் ஒரு டிபிகல் எழுத்தாளரின் ஆர்வமும் ஈடுபாடும் புலனாகியது.
1968-ல் தினமணிக் கதிரிலும் எழுதத் தொடங்கிய கடுகு, அதன் ஆசிரியரும் பிரபல நகைச்சுவை எழுத்தாளருமான திரு.சாவி அவர்களை மிகவும் கவர்ந்த தனது எழுத்துகளால், கதிரின் ஆஸ்தான எழுத்தாளராக விளங்கியதைக் கூறியிருக்கிறார். கதிரில் பிரபலமாகிய இவரது ‘கேரக்டர் கட்டுரைகள்’ பின்னால் குங்குமம் இதழிலும் தொடர்ந்திருக்கின்றன! அப்போது டெல்லியில் இருந்ததால் சுஜாதா அவர்கள் கதிரில் தொடர்கதை எழுதத் தொடங்கியிருந்த காலத்தில் அவரது படைப்புகளையும் வாங்கி அவற்றைச் சென்னைக்கு அனுப்புவதையும் இவர் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
விகடன் அலுவலகத்திற்குச் சென்று தேவனைச் சந்தித்த இவரது அனுபவம் சுவாரசியமானது. மவுண்ட்ரோடில், வாலாஜா ரோடு சந்திப்பு மூலையில் அன்றைய அலுவலகம் இருந்ததாம். (நிற்க, தற்போது அந்த இடத்தில் ஓரு “இட்லி-வடை” ஹோட்டல் இருப்பதாக நினைவுகூறுகிறார் இவர்). அப்போதைய விகடனில் ‘கேள்வி-பதில்கள்’ தொடரில் ஆசிரியரிடம் ஸ்ரீமான் பொதுஜனம் கேள்விகள் கேட்பதாய் அமைந்திருக்கும். ஆசிரியரை நேரில் சந்திக்கச் சென்ற இவர் ஒரு துண்டு காகிதத்தில் “ஸ்ரீமான் பொதுஜனம்” என்று எழுதி மடித்து ஒருவரிடம் கொடுத்திருக்கிறார்! அதைப் படித்த தேவன் அவர்களும் உடனே இவரை வரச்சொல்லிப் பார்த்ததில் ஏதும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! 2006-ல் ‘தேவன் அறக்கட்டளையினர்’ சார்பில் கடுகு அவர்களுக்கு ‘தேவன் விருது’ கிடைத்திருப்பது கூடுதல் தகவல்.
இந்த “நானும்” சீரீஸில் என்னை மிகவும் கவர்ந்தது “ஸ்ரீதரும் நானும்” தான். ஏனென்று புத்தகத்தைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். கல்யாணப் பரிசு, வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா போன்ற பல வெற்றிப் படங்களைத் தந்த ‘சித்ராலயா ப்ரொடக்ஷன்ஸ்” ஸ்ரீதருக்கும் கடுகு அவர்களுக்கும் சுமார் 65 வருட ஆழமான நட்பு!
எம்.எஸ். அம்மாவைக் கடுகு அவர்கள் சந்திக்கச் சென்றதும் ஆர்வமூட்டும் ஒரு அத்தியாயம். பக்தியிலும் இசையிலும் ஊறியதால் அவர்களின் முகத்தில் தெரிந்த தெய்வீகக் களையும், சாந்தமான முகமும், பரிவையும் பாசத்தையும் பிரதிபலிக்கும் புன்முறுவலும் என இவர் குறிப்பிட்டிருப்பது மயிர்கூச்சரியச் செய்தது. “எம்.எஸ்.அவர்களைப் பார்த்தோம் என்று கூறுவது தவறு. தரிசித்தோம் என்று தான் சொல்ல வேண்டும்!” என்று எழுதியிருப்பார்.
“சிவாஜி கணேசன் அவர்களும் நானும்” என்னும் அத்தியாயத்தில் அவரது நாடகங்களைப் பார்க்கச் சென்றதும், அங்கே டேல் கார்னகியின் “How to win friends and influence people” புத்தகத்தின் உத்திகள் எந்த அளவுக்கு வேலை செய்தன எனவும் அவர் கூறியிருப்பது நல்ல நகைச்சுவை. “டைரக்டர் பாலச்சந்தரும் நானும்” பகுதியில் ‘வறுமையின் நிறம் சிறப்பு’ படத்திற்குத் தமிழ்நாடு அரசின் பரிசு கிடைத்தபோது முதன்முதலில் அவர் கடுகு அவர்களைத் தொலைபேசியில் அழைத்துச் செய்தியைத் தெரிவித்ததாக வந்த இடம் மனம் நெகிழச் செய்தது. அந்த அத்தியாயம் முழுவதுமே மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் பகுதி.
கடுகு அவர்களும் அவரது மனைவியும் ஒரு வருட காலம் உழைத்து ‘நாலாயிரத் திவ்யப் பிரபந்த’ப் பாசுரங்களைப் பதம் பிரித்து அழகாக ஒரு புத்தகமாக குறைந்த விலையில் வெளியிட்டிருக்கிறார்கள். பல காபிகள் விற்றுவிட்ட அந்தப் புத்தகத்தை சுஜாதா அவர்கள், “புத்தகச் சந்தையில் நான் வாங்கிய ஒரே ரத்தினம்” என்று எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இரண்டு பாகங்களையும் எப்போதும் தனது மேஜையில் சுஜாதா வைத்திருப்பார் என்று ‘சுஜாதா தேசிகன்’ சொன்னதாக அந்த அத்தியாயத்தில் கடுகு குறிப்பிட்டிருப்பார்.
Calligraphy துறையிலும் கடுகு அவர்களுக்கு மிகுந்த ஆர்வத்தைப் பற்றி ஓர் அத்தியாயம் உண்டு. கணினியும் இணையமும் பிரபலமாகிய நாட்களில் தமிழ் எழுத்துகளைத் திரையில் பார்ப்பது எத்தனை சுவாரசியாமனது என நம்மால் யூகிக்க முடியும். வாசன், மதன், குஷ்பூ, அழகியின் ‘சாய் இந்திரா’, சிவகாமி, புலிகேசி, ஆனந்தி, காவேரி, தாமிரபரணி, பாலாறு, வைகை, பொன்னி, பொருனை எனப் பல எழுத்துருக்களை இவர் உருவாக்கியுள்ள கதைகள் அடங்கிய அந்த அத்தியாயம் சிறப்பானது.
“ஆவிகளும் நானும்” (ஆ.வி. இல்லை), “டயரியும் நானும்” தொடர்ந்து “நகைச்சுவையும் நானும்” அத்தியாயம் மிக முக்கியமானதாக எனக்குப் பட்டது. அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து நான் படிக்கும் ஒவ்வொரு எழுத்திலும் கடுகு அவர்கள் சொன்ன கருத்துகள் கண்முன் வந்துபோவதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ‘நகைச்சுவை எழுதுவது எப்படி’ என்ற கட்டுரையைத் தான் நான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். அவ்வளவு சிறந்த கருத்துகள்.
“குஷ்வந்த் சிங்கும் நானும்” பகுதியும் அதில் “ILLUSTRATED WEEKLY”-யை இவர் வேறுமாதிரி பிரித்து எழுதியிருப்பதும் சிரிப்பூட்டுபவை. தாகூர், மெர்லின் மன்றோ, கார்ல் மார்க்ஸ் ஆகியவர்கள் காலமான சமயம் வீக்லியும் இருந்து, அதன் ஆசிரியராக குஷ்வந்த் சிங்கும் இருந்திருந்தால் ‘ஆசிரியர் பக்கத்’தில் அவர் எப்படி எழுதியிருப்பார் என்று ஒரு ஆங்கிலக் கட்டுரையைக் கடுகு அவர்கள் அழகாக எழுதியிருப்பார். மறுவாரமே அதை ‘ஆசிரியர் பக்கத்’தில் வெளியிட்ட குஷ்வந்த் சிங் தன்னுடைய ஜோக் புத்தகத்திலும் அதனைச் சேர்த்திருக்கிறாராம்.
இதற்கடுத்து புத்தகத்தில் வருபவை கமலாவின் பிரதாபங்கள். அவற்றின் சுவாரசியத்தை நீங்கள் படித்துத் தான் தெரிந்துகொள்ள முடியும். தொச்சு கதாப்பாத்திரமும், பின்னால் வரும் ‘ப்ரியம்வதா’ கதாப்பாத்திரமும் என்றும் மனதில் தங்குபவை. இவ்வளவு சொன்ன பிறகும் நான் எழுதாமல் விட்ட விஷயங்கள் பல அடங்கிய புத்தகம் இந்தக் ‘கமலாவும் நானும்’. ஒரே வார்த்தையில் சொல்வதானால் “சுவாரசியம்” என்று சொல்லலாம்.
நீண்ட தூர ரயில் பயணத்தின் போது இந்தப் புத்தகத்தை வாசிக்க நேரிட்டது மேலும் இனிய அனுபவமாக இருந்தது எனக்கு! ஆசிரியர் கடுகு பி.எஸ்.ரங்கநாதன் அவர்களுக்கும் எனது நன்றி மற்றும் நமஸ்காரங்கள்!
இந்த புத்தகம் எங்கே கிடைக்கும் எனக்கு ஒரு காப்பி கிடைக்குமா ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, August 22, 2012
கமலாவும் நானும் - புத்தக விமர்சனம் சுபத்ரா
Posted by IdlyVadai at 8/22/2012 10:08:00 PM
Labels: சுபத்ரா, புத்தகவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
எனது அருமை மகள் சுபத்ராவின் அருமையான விமர்சனம்.
வாழ்த்துகள் சுபத்ரா.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...
சுபத்ரா அவர்களுக்கு நன்றி.
சுபத்ரா அவர்களின் கட்டுரை அற்புதமாக இருக்கிறது என்று நான் சொன்னால் அது பொய். ஆகவே அதி அற்புதமாக இருக்கிறது என்று சொல்கிறேன்.
என் புத்தகத்தில் இட்லி-வடை என்று
குறிப்பிட்டு எழுதியதற்குப் பலன் கிடைத்தது!!!
ஆகவே இட்லி வடைக்கும் நன்றி.
கமலாவும் நானும் புத்தகம் வேண்டுவோர் டிசம்பர் 15’க்குப் பிறகு 938 102 4379-க்கு போன் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-கடுகு
அருமையான நடை!
வாழ்த்துக்கள்!
Good Advertisement ! Keep up Subathra..
கடுகு அவர்களைப் பற்றி ஏற்கனவே பலருக்கு தெரியும். ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு கூட மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கியுள்ளது இந்த கட்டுரை. இந்த புத்தகத்தையும், இந்த கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் புத்ததங்களையும் விரைவில் வாங்கி படித்து விடுவேன். கட்டுரை எழுதியவருக்கு நன்றி. இட்லி வடைக்கு நன்றி. மேலோர் என்றும் மேலோர் என்படை காட்டும் வகையில், பெருந்தன்மையாக பின்னூட்டம் இட்டு , போன் நம்பர் கொடுத்து இருக்கும் கடுகுக்கும் நன்றி
கடுகு எழுத்துக்கள் எல்லாம் அந்தக் காலத்திலேயே மகா அறுவை. அதுவும் இந்த கமலா சீரீஸ் மகா ப்ளேடு. இன்னமும் இவற்றை எல்லாம் படிப்பவர்கள் இருப்பதைப் பார்க்கையில் எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. இவர்களை எல்லாம் சாருநிவேதிதாவின் நூல்களை நூற்றியோரு தரம் படிக்க வைத்து வதைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அட போங்கப்பா.
I started reading the blo IDLYVADAI before 4 years. Now I am using the same blog to know what has been written by Kadugu Sir in his article under the title "ANBUDAIYEER". I am really happy to note that you have written abour Kadugu Sir in your article which is really interesting. Of course, you have touched only a tip of an iceberg. Thank you Subadra Madam.
I started reading the blog IDLYVADAI before 4 years. Now I am using the same blog to know what has been written by Kadugu Sir in his article under the title "ANBUDAIYEER". I am really happy to note that you have written abour Kadugu Sir in your article which is really interesting. Of course, you have touched only a tip of an iceberg. Thank you Subadra Madam.
அதான் கடுகு சாரே சொல்லிட்டாரே அற்புதமா இருக்குன்னு.சுபத்ரா உங்கள் கட்டுரை எப்பவும் குறை வைக்கிறதில்லை. உயிரோட்டமான நடை.
கவிதை எதாவது எழுதினீங்கன்னா இட்லி வடைக்கு அனுப்பாம இந்த மனல் அள்ளுகிறவர்கள் கிரானைட் கொள்ளை அடிக்கிறவங்களுக்கு அனுப்பி வைங்க. அது தான் அவங்களுக்கு சரியான தண்டனையா இருக்கும். ( சட்டபடி அவங்களுக்கு எங்கே தண்டனை கிடைக்கப் போவுது)
இட்லி, வடை, கடுகு, ப்ளாக்கின் தலைப்பு ஒரு வாழை இலையி்ன் மேல்(!) என எல்லாவற்றையும் கூட்டி கழித்துப் பார்த்தால் அனைத்தையும ஒருவரே சமைப்பது போல தெரிகிறது. இருந்தாலும் பார் போற்றும் இட்லி வடையை நான் சரியாக யூகித்தேன் என்பதை விட(?) யூகம் தவறாக அமையுமானால் நான் மிகுந்த உவகை அடைவேன்.
பாபு,
கோவை
/* கவிதை எதாவது எழுதினீங்கன்னா இட்லி வடைக்கு அனுப்பாம இந்த மனல் அள்ளுகிறவர்கள் கிரானைட் கொள்ளை அடிக்கிறவங்களுக்கு அனுப்பி வைங்க. */
அப்போ இட்லிவடையில பின்னூட்டக் கவிதயெல்லாம் எழுதுனது சுபத்ராவா?!!!
சூப்பரப்பு!!!
;)
மஞ்சள் கமெண்ட் - புத்தகம் கீழே சுட்டி யை கேட்டு பாருங்க
அமெரிக்கா அம்பிகள் காமெடி என்று போடும் மொக்கைகளுக்கு எல்லாம் எங்க அப்பத்தா கூட சிரிக்கமாட்டாங்க..... ஆனாலும் உங்கள் விமர்சனம் “பதிவை” படிக்க்த்தூண்டுகிறது
இட்லி,
என்னை இப்படி தொடர்ந்து நக்கலடித்தால், உன் மீது 'வெண்பாம்' வீசிடுவேன் என்று எச்சரிக்கிறேன்.
இவண்,
'ஆல்-இன்-ஆல் அழகுராஜா' என்கிற மு.க. (முனீஸ்வரன் கந்தசாமி)
புத்தகம் வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள். இனி அது உங்களைத் தேடி வரும். அது வரையில் கடுகு அவர்களுக்குத் தூக்கம்கூட வராது.
சுபத்ரா அவர்களின் புத்தக அறிமுகம் இது வரை புத்தகம் படிக்காதவர்களுக்கு எப்படியோ தெரியாது; எனக்கு முழு புத்தகத்தையும் மீணும் அசை போட ஒரு வாய்ப்பு கிடைத்தது!
-ஜெ.
புத்தக விமர்சனம் அருமை, பகிர்வுக்கு நன்றி
பெருமதிப்பிற்குரிய கடுகு அவர்கள், எனக்கும் அந்தப் புத்தகம் அனுப்பியிருந்தார்.
நான் விமரிசனமாக எழுத நினைத்திருந்தவை எல்லாவற்றையும் மிகவும் அருமையாக எழுதியுள்ளார், சுபத்ரா.
நான் எழுத நினைத்திருந்த, விட்டுப் போன ஒரே விஷயம், 'கமலாவும், ஓ சி யும்!' என்னும் கட்டுரை. (பக்கம் எண் : 131)
....." காய்கறி மார்க்கெட்டுக்கு நாங்கள் போகும் போது, அறிமுகமில்லாத இரண்டு பேர் போல் போவோம். தனியாக பை,
தனியாகப் பணம்! (சிலசமயம், தற்செயலாக ஒரே கடையில் நாங்கள் சந்திக்க நேர்ந்தால், என்னை பார்த்து, 'என்ன சௌக்கியமா? பாத்து நாளாச்சு.' என்பாள் கூலாக!. ஒரு சமயம், ''மாமி எப்படி இருக்கா?" என்று கேட்டாளே பார்க்கலாம்!.).
மிக மிக இரசித்து, படித்து, சிரித்த பல பகுதிகளில், இதுவும் ஒன்று!
பதிவைப் படித்துக் கருத்துகள் பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி!
இ.வ.க்கும் கடுகு அவர்களுக்கும் சிறப்பு நன்றிகள் :-)
நான் எப்பொழுதும் விமர்சனங்களை படித்துவிட்டு புத்தகத்திற்குள் நுழைபவன் அல்ல .... புத்தகத்தின் தலைப்பும் எழுத்தாளர் முதல் சில பக்கத்தில் கையாண்டிருக்கும் சொல்லாடலும் அதை நூலகத்தில் இருந்து எடுத்து சென்று படிக்க தூண்டும்...
ஆனால் இங்கே சுபா எழுதும் ஒவ்வொரு விமர்சனமும் ஒரு கதை போல் அவ்வளவு அழகாக இருக்கிறது... இது வரை படிக்காத புத்தகத்தை அவர் நாமே படிப்பது போல் விளக்கும் விதம் அருமை... மிக தேர்ந்த வரிகள் ...அதிகமான புத்தகங்கள் படித்து தெளிந்த அறிவுச் செழுமை சுபாவிடம் இருக்கிறது....
விமர்சனத்திற்கு விமர்சனம் எழுதத் தூண்டியது இந்த விமர்சனம்... உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள் சுபத்ரா....
நபநசு :)
100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்...click me...
Post a Comment