பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 31, 2011

மங்காத்தா - FIR

அஜித்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா பெண் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுடன் இன்று திரைக்கு வந்துள்ளது. அஜித்துக்கு வாழ்த்துகள்.

ரவுடிகளின் கூட்டத்தில் சிக்கிய இன்னொரு ரவுடியை காப்பாற்றும் 'தமிழ்' போலீஸ் அதிகாரியாக வருகிறார் அஜித். (போலீஸ்) தொப்பையுடன் வந்தாலும் எவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார் பார் என்று தியேட்டரில் பின் பக்கம் கமெண்ட் வந்ததையும் பொருட்படுத்தாமல் எல்லா ரவுடிகளையும் கை,கால், துப்பாக்கி என்று போட்டுத் தள்ளிவிடுகிறார். ஓப்பனிங் சீனில் இது கூட செய்யவில்லை என்றால் எப்படி ?
தல சும்மா சொல்லக்கூடாது 'தள தள' என்று இருக்கிறார்.



கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாகக் கொண்ட சீரியஸான படம் என்று நினைக்கும் போது "என்னென்னவோ செய்றோம், இதை செய்ய மாட்டோமா?" புகழ் ப்ரேம்ஜி வந்தவுடன் படம் காமெடியாகிறது. பிறகு படம் கடைசிவரை காமடியாகவே போகிறது. இத்தனைக்கும் படத்தில் வரும் அனைவரும் சுடப்பட்டு இறந்துவிடுகிறார்கள்.

படம் ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் வந்த பின் படம் கொஞ்சம் சூடு பிடிக்கிறது. கொடுத்த காசு வீண் ஆகவில்லை என்று நினைக்கும் போது, வழக்கம் போல படம் வலு இழந்து, ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தமிழ் நாட்டின் 'குடும்ப' படம் என்பதாலோ என்னவோ அடிக்கடி தல "மணி...மணி.... மணி.." என்று வசனம் பேசுகிறார். ( தியேட்டரில் "மணி உன்னை தாம்பா தல அடிக்கடி கூப்பிடுகிறார்" என்று திரும்பவும் பின்பக்கத்திலிருந்து கமெண்ட்).

படத்தில் பல கெட்ட வார்த்தைகளைச் சென்சார் ஊமையாக்கியுள்ளது. இடைவேளையின் போது அஜித் தன் திட்டத்தைச் சொல்லும் போது, நம்மளையும் அறியாமல் அதை உபயோகிக்க வேண்டும் போல இருப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.

இசை சில இடங்களில் ஆறுதலாக இருக்கிறது. பல இடங்களில் இறைச்சலாக இருக்கிறது.

த்ரிஷா தான் படத்தில் ஹீரோயின். ஏன் என்றால் அவர் தான் தலயுடன் ஒரு டூயட் பாடுகிறார்!. ஐபிஎல் சூதாட்டம் என்று வருவதாலோ என்னவோ, (தோனி புகழ்) லட்சுமிராயும் படத்தில் வந்துவிடுகிறார். சொல்ல மறந்துவிட்டேன் ஆண்டரியா சில காட்சிகளில் வருகிறார்.

படத்தில் ஒரே ஆறுதல் திரைக்கதை ஆனால் அதை நம்பியே படம் வெற்றி பெற முடியாது என்பதைக் காட்டுகிறது இந்த படம்.
Ocean Eleven போன்ற படம் என்று நினைத்து ஏதோ எடுத்துச் சொதப்பியிருக்கிறார்கள்.

இட்லிவடை மார்க் 50/100 ! ( தலயின் ஐம்பதாவது படம் என்பதால் இந்த மார்க் )


மங்காத்தா படம் தியேட்டர் 'உள்ளே' இருக்கும் போது, நீங்க 'வெளியே' இருந்தால் வெற்றி உங்களுக்கு, இல்லை என்றால் அஜித்துக்கு. முடிவு உங்கள் கையில் !

படத்தில் ஒரு காட்சியில் விஜய் படம் தியேட்டரில் ஓடுகிறது, அதற்குக் கைத்தட்டல் வருகிறது. வேலாயுதத்தில் சந்திப்போம் !

இன்றைய செய்தி: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, மகள் அஞ்சுக செல்வி மற்றும் பேரன், பேத்திகள் உள்பட 8 பேர் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். துரை தயாநிதி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்றாலும் அதற்கும் இந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லை

Read More...

Monday, August 29, 2011

சமீபத்திய இரண்டு ராஜினாமாக்கள்

சமீபத்திய இரண்டு ராஜினாமாக்கள்



ஸ்டீவ் ஜாப்ஸ்
டாலர் தேசத்திலிருந்து மெலிதான ஐ பாட் கொடுத்தவர்



பா.ராகவன்
இந்தியாவிலிருந்து டாலர் தேசம் என்ற தடியான புத்தகம் கொடுத்தவர்

இருவருக்கும் வாழ்த்துகள்!

Read More...

Sunday, August 28, 2011

சுவாமி அக்னி(வேஷம்) - கபில் உரையாடல்


ஹிந்தி தெரிந்தவர்கள் என்ன என்று சொல்லலாம் :-)

Read More...

Saturday, August 27, 2011

அன்னா - சோ கருத்து


இந்த வாரம் துக்ளக் தலையங்கம்....

இது டெலிவிஷன் நாயகம்!

ஒரு பிரச்சனையைப் போட்டுக் குழப்பி, ஊதி ஊதி எதிர்ப்பைப் பூதாகாரமாக்கி, தாங்களாகவே சிக்கலை உண்டாக்கி; அதிலிருந்து எப்படி மீள்வது என்று புரியாமல் விழித்து; பிடிவாதம், வரட்டுத்தனம், கவலை, பயம், பல்டி என்று மாறி மாறி நின்று; திக்கித் திணறுவது எப்படி என்று தெரிந்து கொள்ள யாராவது விரும்பினால், மத்திய அரசிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

‘அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரத உற்சவத்தை அவர் நடத்திவிட்டுப் போகட்டும்; அது போகிற போக்கை வைத்து அடுத்த நடவடிக்கையை முடிவு செய்யலாம்’ – என்று முதலில் முடிவெடுத்திருக்கலாம். இந்த நாடு பார்க்காத உண்ணாவிரதமா? காந்திஜி, மொரார்ஜி போன்றவர்களின் நீண்ட நாள் உண்ணாவிரதங்களிலிருந்து, கலைஞர் போன்றவர்களின் ‘பிட்வீன் நாஸ்தா அண்ட் லஞ்ச் உண்ணாவிரதம்’ வரை பலவகைப்பட்ட உண்ணாவிரதங்களையும் பார்த்தாகி விட்டது.

காந்திஜி, மொரார்ஜி போன்றவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள் என்றால் அது சீரியஸ் விஷயம். இப்போது நடக்கிற உண்ணாவிரதங்கள் அப்படிப்பட்டவை அல்ல. அது தொடங்கிய பிறகு, ‘உடல் நலத்திற்குக் கேடு’ என்று கூறி, அந்தப் போராட்டக்காரரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதுதான் – நமது ‘ஜனநாயக மரபு’. அல்லது, உண்ணாவிரதம் இருப்பவர்களின் ஆதரவுத் தலைவர் ஓரிருவர் ‘வேண்டாம், வேண்டாம்’ என்று கெஞ்ச, ஆரஞ்சு ஜூஸ் நைவேத்யம் நடைபெறும்.

அன்னா ஹஸாரேவின் முந்தைய லோக்பால் உண்ணாவிரதம் ஒரு சில நாட்களில் ‘வெற்றி, வெற்றி’ என்ற அறிவிப்புடன் முடிந்தது. அந்த மாதிரி வெற்றியை, இந்த உண்ணாவிரதத்திற்கும் மத்திய அரசினால் கொடுத்திருக்க முடியாதா, என்ன?

சரி. நிபந்தனைகள் விதிக்கப்பட்டன; அன்னா ஹஸாரே அவற்றில் சிலவற்றை ஏற்கவில்லை; சட்டப்படியான உத்திரவை அவர் மீறுகிற வரையில் கூடக் காத்திராமல், ‘என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. ‘பேசாமல் இருந்து விடுவேன்’ என்றா, அவரால் சொல்ல முடியும்? ‘உத்திரவை மீறுவேன்’ என்றார். கைது! எத்தனையோ சட்ட மீறல் ஆர்ப்பாட்டங்கள், பெரிய ஊர்வலங்கள் நடந்தபடி இருக்கின்றன. அவற்றில் சட்டத்தை மீறுபவர்கள், ‘கைது’ ஆகி, அங்கேயே எங்காவது வைக்கப்பட்டு, சில மணி நேரங்களில் ‘விடுதலை’ ஆவார்கள். இது வழக்கம்.

ஆனால், மத்திய அரசு என்ன செய்தது? அன்னா ஹஸாரே கைது; மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்; ஒரு வாரம் சிறை என்று, போலீஸ் கேட்காமலேயே மாஜிஸ்ட்ரேட் உத்திரவு பிறப்பித்தார்; திஹார் ஜெயிலுக்கு அன்னா ஹஸாரேவை அழைத்துப் போனார்கள்.

வேறு இடமா இல்லை? திஹார் என்றாலே, இன்று கேவலமான நினைப்புகள்தானே வருகின்றன! எத்தனையோ மைதானங்கள். அவற்றில் ஒன்றில் அவரை உட்கார வைத்து, உபசாரம் செய்து, மாலை நேரம் வந்தவுடன் விட்டிருக்க வேண்டியதுதானே?

திஹார் ஜெயில் வரை தம் பிடித்த மத்திய அரசு, இந்த நிலையில் நடுங்க ஆரம்பித்தது. அன்னா ஹஸாரேவிடம் பேரம் நடத்தியது. ‘மூன்று நாள் உண்ணாவிரதம்’ என்று அரசு ஆரம்பிக்க, அன்னா ஹஸாரே ‘முப்பது நாளுக்கு ஒரு நிமிடம் குறையாது’ என்று தொடங்க, கடைசியில், 15 நாள் உண்ணாவிரதம் என்று பேரம் படிந்தது.

வாடகை சைக்கிள் எடுக்கிறபோது, ‘நாள் முழுவதும் கொடு’ என்று வாடிக்கையாளரும், ‘அதெல்லாம் முடியாது; ஒரு மணிநேரம்தான்’ என்று கடைக்காரரும் ஆரம்பித்து, பேரம் பேசி, கடைசியில் ‘அரை நாள்’ என்று முடித்துக் கொள்கிற மாதிரி – அரசும், அன்னா ஹஸாரேவும் பேரம் பேசி, ‘அரை மாதம்’ என்று பேரத்தை முடித்துக் கொண்டார்கள். இது என்ன போராட்டமோ, என்ன உண்ணாவிரதமோ, என்ன அரசோ!

சரி; இருக்கட்டும். சாகும் வரை உண்ணாவிரதம், காலவரையற்ற உண்ணாவிரதம், ஒருநாள் உண்ணாவிரதம், அடையாள உண்ணாவிரதம் என்று பார்த்து விட்ட நமக்கு இப்போது, அன்னா ஹஸாரேவும் அரசும் சேர்ந்து ‘பேர நேர உண்ணாவிரதம்’ என்ற புதிய வகை உண்ணாவிரதத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது, ஒரு புரட்சிதான்.

அரசு ஏன் இப்படி நடந்து கொண்டதோ, தெரியவில்லை. அன்னா ஹஸாரே, ஜெயிலை விட்டு வெளியே போக மறுத்தார். ஜெயில் கைதியாகவோ, ஜெயில் அதிகாரியாகவோ இல்லாமல், அனுமதியின்றி ஜெயிலில் எப்படி இருக்க முடியும்? அது என்ன ஹோட்டலா, இல்லை சத்திரமா அல்லது எவரெஸ்ட் லாட்ஜா?

பேசாமல், அவரை மரியாதையுடன் ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, சாமி பல்லக்குத் தூக்குகிற மாதிரி நாற்காலியோடு தூக்கிக் கொண்டு வந்து, ஜெயில் கதவிற்கு வெளியே மதிப்புடன் விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவருடைய ஆதரவாளர்கள், ‘அன்னா ஹஸாரேவை உள்ளே தள்ளு’ என்று போராடியிருக்க முடியுமா? அல்லது அவர்தான் ‘என்னை உள்ளே விடு’ என்று கூச்சல் கிளப்பி, ஜெயில் கதவுகளை மடால் மடால் என்று தட்டியிருக்க முடியுமா? ‘ஜெயிலில் என்னை போடுகிற வரை உண்ணாவிரதம்’ என்று அவர் கூறியிருந்தால், அவருடைய ஆதரவாளர்களுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டிருக்குமே!

அரசு, நிபந்தனைகளை விதிக்காமலே இருந்திருக்க வேண்டும். சரி, விதித்ததுதான் விதித்தார்கள்; அதற்குப் பிறகு ஏன் பதட்டம்? பாராளுமன்றத்தில் பிரதமர்தான் தெளிவில்லாமல் பேசினாரே தவிர, சிதம்பரம் தெளிவாகவே விளக்கினார். அவர் கூறியபடி, அரசு நிபந்தனைகளை விதித்தபோது, ஒரு ‘காந்தியவாதி’ என்கிற முறையில் அன்னா ஹஸாரேவுக்கு மூன்று வழிகள் இருந்தன. ஒன்று – நிபந்தனைகளை ஏற்பது; இரண்டு – நிபந்தனைகளை எதிர்த்து நீதிமன்றம் செல்வது; மூன்று – நிபந்தனைகளை மறுத்து, சட்டத்தை மீறி, அதன் விளைவுகளை ஏற்பது.

இதில் முதல் இரண்டு நடக்கவில்லை. மூன்றாவது? அன்னா ஹஸாரேவின் ஆதரவாளர்கள், சட்டத்தின் விளைவை அவர் சந்திப்பதை விரும்பவில்லை. அரசை எதிர்த்தார்கள். இது சாதாரணமாக நடப்பதுதான். ஆனால், மத்திய அரசு பயந்து விட்டது; பேரம் பேச முனைந்தது.

மத்திய அரசின் பயத்திற்கு அன்னா ஹஸாரே காரணம் அல்ல; அவருக்குக் கூடிய கூட்டமும் காரணம் அல்ல. அன்னா ஹஸாரேவுக்கு, டெலிவிஷன் சேனல்கள், ஒன்றுக்கு ஒன்று பரஸ்பரப் போட்டா போட்டியில் இறங்கி, வரிந்து கட்டிக் கொண்டு கூட்டம் சேர்க்கத் தொடங்கி விட்டன.

நேரில் வராதவர்களும் இன்புறும் வண்ணம், அவர்களுடைய மெஸேஜ்கள் கோரப்பட்டன. கிரிக்கெட் மேட்ச்களில் நடக்கிற மாதிரி, கூட்டத்தில் போஸ்டர்கள் பிடித்தவர்களைக் கேமிராக்கள் நன்கு கவனித்தன. குழந்தைகள் கூட, ஊழலுக்கு எதிராகப் பேசி, டெலிவிஷனில் தோன்றி, பெற்றோரைப் பெருமைப்படுத்தின. ஊழல், என்ன பெரிய ஊழல்! மழலைக்கு எதிரே ஊழல் எம்மாத்திரம்? சிதம்பரம் இனிது, கபில் சிபல் இனிது என் போர், டெலிவிஷனில் தம் குழந்தை மழலைச் சொல் கேளாதோர்!



நல்லவேளை. அரசு பிழைத்தது. டெலிவிஷன் சேனல்கள் ‘மெஸேஜ் அனுப்புங்கள், ஆதரவு தெரிவியுங்கள், உங்கள் பெயரைக் காட்டுகிறோம்’ என்று அறிவித்தனவே தவிர, ‘முதல் ஐந்து மெஸேஜ்களுக்கு மாருதி கார் பரிசு!’, ‘ஒரு வாக்கியம் முழுமையாகப் பேசுகிற குழந்தைக்கு ஒரு தங்க நகை இனாம்!’... என்றெல்லாம் அறிவிக்கவில்லை. அப்படி மட்டும், டெலிவிஷன் சேனல்கள் முனைந்திருந்தால், ஊழல் எதிர்ப்புப் போர், மேலும் உக்கிரம் அடைந்திருக்கும்.

இப்போதே, இந்த டெலிவிஷன் போரின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ‘15 நாள்’ என்ற பேரத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அன்னா ஹஸாரே, வெளியில் வந்து கூட்டத்தைப் பார்த்தபின், ‘எங்களுடைய லோக்பால் மசோதாவைத்தான் பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு 10 நாள் டைம் தருகிறேன். அப்படி நிறைவேற்றாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம்’ என்று அறிவித்திருக்கிறார். இது என்ன காந்திய வழியோ! ‘ஜெயிலில் அரசிடம் பேசியது ஒன்று; வெளியே வந்து பேசுவது வேறொன்று – என்பதுதான் காந்தியம்’ என்று சொல்பவர்கள், காந்தியத்திற்குப் பெருமை சேர்ப்பவர்கள் அல்ல.

இது சரியான வழிதான் என்றால், நாளையே ஒரு ஷாருக்கானோ, ஒரு அமிதாப்பச்சனோ, பெரும் கூட்டத்தைக் கூட்டி, ‘இந்திய கிரிமினல் சட்டம் சரியில்லை; நாங்கள் ஒரு கிரிமினல் சட்டம் தயாரித்திருக்கிறோம்; ஜன் கிரிமினல் சட்டம்! இதை பாராளுமன்றம் பத்து நாட்களில் நிறைவேற்றா விட்டால், சாகும் வரை உண்ணாவிரதம்’ என்று அறிவித்தால் – ஜன் கிரிமினல் சட்டம் வர வேண்டியதுதானா? கூட்டம்தானே கணக்கு? ஷாருக்கானுக்கும், அமிதாப் பச்சனுக்கும், அன்னா ஹஸாரேவுக்கு வருவது போல நூறு மடங்கு அதிக கூட்டம் வருமே! டெலிவிஷன் சேனல்களுக்கு அது லட்டு அல்லவா! வேறு நிகழ்ச்சியே டெலிவிஷனில் வராதே! குழந்தைகளுக்கும் ஜோர்! மெஸேஜ்களுக்கும் கன ஜோர்! அப்புறம் என்ன, வெற்றிதானே? இதுதான் ஒரு பாராளுமன்ற ஜனநாயகத்தை நடத்திச் செல்கிற வழியா? இது, ஜனநாயகம் அல்ல; டெலிவிஷன் நாயகம்.

இப்படியாகத்தானே, இந்த சேனல்கள் கொடுத்த ‘கீ’ நன்றாகவே வேலை செய்திருக்கிறது. அன்னா ஹஸாரேவே இதில் மயங்கிப் போய், தன்னுடைய இயக்கத்தை, ‘இது இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று வர்ணித்துக் கொண்டு விட்டார். மற்றவர்கள் ஜெயப்ரகாஷ் நாராயண் இயக்கத்தை மறந்து இருக்கலாம். இவர் மறக்கலாமா? ஊழலுக்கு எதிராக, ஜெ.பி. நடத்திய இயக்கத்திற்குக் கிட்டிய ஆதரவைக் கண்டு, அன்று பிரமித்தது – இன்றைய பிரதமரைப் போன்ற பலவீனமான ஆட்சியாளர் அல்ல – பலம் மிக்கவராகத் திகழ்ந்த இந்திரா காந்தி! மற்ற கட்சிகளை நம்பி நடத்தப்பட்டது அல்ல அவருடைய அரசு. அசுர பலம் பெற்றிருந்த அவரே திகைத்துப் போய், அரசுக்கு ஆபத்து என்று பயந்து, (ஒரு நீதிமன்ற உத்திரவும் சேர) எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்தார். பல தலைவர்கள், பத்தொன்பது மாதம் தனிமைச் சிறையில் இருந்தனர். ஜெ.பி. யின் அந்தப் போராட்டம் ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று பின்னர் பாராட்டப்பட்டது. ஆனால், அன்னா ஹஸாரே அதை அமுக்கி விட்டு, தன் இயக்கத்திற்கு ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று, தானே பட்டம் சூட்டுகிறார்!



சரி, மக்கள்? அன்னா ஹஸாரேவிடம் மன உறுதி இருந்தால், அவருடைய இயக்கத்தை நம்பலாம். ஆனால், தன்னுடைய உறுதியின்மையை, அவரே பிரகடனப்படுத்திக் கொண்டதை எப்படி மறப்பது?

குஜராத் அரசைப் பாராட்டி விட்டு – தன்னுடைய மதச்சார்பின்மை சகாக்கள் முணுமுணுத்த உடனே பயந்துபோய், ‘நான் அங்குள்ள முன்னேற்றத்தைத்தான் பாராட்டினேன். வேறு ஒன்றுமில்லை...’ என்று மழுப்பி – அப்போதும் மதச்சார்பின்மை கூட்டத்தின் முனகல்கள் ஓயாததால், ‘குஜராத்தில் மகா ஊழல். எதற்கெடுத்தாலும் லஞ்சம். எனக்கு இப்போதுதான், இங்கு வந்த பிறகுதான் இது தெரிந்தது’ என்று ஒரு குட்டிக் கரணம் அடித்து, கன்னத்தில் போட்டு கொண்டார் இவர்.

ஒன்று – காங்கிரஸ்காரர்கள் மாதிரி ‘குஜராத்தில் எல்லாமே அநீதி’ என்று கூறுகிற பிடிவாதமாவது இருக்க வேண்டும். அல்லது ‘இந்தியாவிற்கே முன் மாதிரி குஜராத்’ என்று கூறுகிற நேர்மைத் துணிவாவது வேண்டும். அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல், அப்படி ஒருநாள், இப்படி ஒருநாள் என்று பேசி, தன் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முனைகிற இவரிடம், எப்படி மன உறுதியை எதிர்பார்ப்பது?

மத்திய அரசு, முதலிலேயே இவருடன் பேச முனைந்தபோது, அதை சர்வ கட்சி முயற்சியாக மாற்றியிருந்தால், எல்லா கட்சியினருமே ‘லோக்பாலின் கீழ் பிரதமர் கிடையாது; நீதித்துறை கிடையாது’ என்ற நிலையை எடுத்திருப்பார்கள். அப்போது அன்னா ஹஸாரே பாடுதான் திண்டாட்டமாகி இருக்கும். ஆனால், ஆட்சியாளர்கள் ஆரம்பத்தில் தாங்களே பேசி, தாங்களே தீர்மானித்து, தாங்களே ஒரு சாதனை புரிந்துவிட்ட மாதிரி, காட்டிக் கொள்ள முனைந்தார்கள்.

அந்தத் தவறிலிருந்து, தொடர்ந்து தவறாகவே இந்த விவகாரத்தை அணுகி வருகிறது மத்திய அரசு. இறுதியில், அன்னா ஹஸாரே மீது அவதூறு பிரச்சாரத்தைக் கொட்டுவது என்று அரசு தரப்பு கேவலமாக முனைந்தபோது, அவர்களுடைய வீழ்ச்சி முழுமை பெற்றது.

லோக்பால் வந்து எதையாவது புதிதாகச் சாதிக்கப் போகிறதா? சட்டங்களா இல்லை? ஊழல் தடுப்புச்சட்டம், இந்திய கிரிமினல் சட்டம் போன்றவற்றின் கீழ், இப்போது யாரும் போராடாமலேயே பிரதமரும் வருகிறாரே? இன்று 2-ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்றவை விசாரிக்கப்பட யார் காரணம்? லோக்பாலா? அன்னா ஹஸாரேவா? சுப்ரீம் கோர்ட் முனைந்தது; தணிக்கை அதிகாரி முனைந்தார்; விசாரணைகள் நடக்கின்றன.

ஆக, சட்டம் மட்டும் ஊழலை ஒழிக்காது; அதை நிர்வகிப்பவர்கள் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும்; இன்றைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, மத்திய தணிக்கை அதிகாரியைப் போல, தேர்தல் கமிஷன் என்றும்தான் இருக்கிறது. ஆனால், அது இருப்பதே டி.என். சேஷன் வந்தபின்புதானே தெரிந்தது? அதுவரை தேர்தல் கமிஷன், அரசின் ஒரு இலாகா போல் அல்லவா செயல்பட்டது? பாட்டு முக்கியம்தான் – ஆனால் பாடகர் மிக முக்கியம்; இல்லாவிட்டால் பாட்டு கெடும்.

ஒவ்வொரு முக்கியப் பதவியிலும் நேர்மையாளர்கள் அமைவதற்கு, மக்கள்தான் வழி செய்ய வேண்டும். தமக்குரிய வாக்கை, இதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மக்கள் முனைகிறபோதுதான், ஊழல் ஒழிப்புக்கு வழி பிறக்கும்.

அதுவரை, டெலிவிஷன் மெகா சீரியல் நடக்கும். வில்லனாக அரசும், ஹீரோவாக அன்னா ஹஸாரேவும், காமெடியனாக கிரண் பேடி போன்றவர்களும் நடிக்கிறார்கள். பார்த்தால் பொழுது போகும்.

அன்னாவிற்கு டில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் நன்றி கூற வேண்டும். கடந்த 11 நாட்களாக அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை !

Read More...

Friday, August 26, 2011

என்னங்ண்ணா



விஜய் அடிக்கடி 'ங்ண்ணா என்னங்ண்ணா' என்று சொல்லுவதன் அர்த்தம் இப்போது தான் புரிந்தது!

Read More...

Wednesday, August 24, 2011

அம்மா - 100 !




மற்ற 100 டிகிரி படங்கள் இங்கே - http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60083

நூற்றி எண்பது நூறாகக் குறைந்ததே இந்த நூறு நாள் ஆட்சியின் சாதனை.

Read More...

Tuesday, August 23, 2011

தமிழ் புத்தாண்டு தேதி மாற்றம்

மீண்டும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
முரசொலியில் ஒரு பெரிய கட்டுரையை எதிர்பார்க்கிறேன்

Read More...

Monday, August 22, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 23-8-2011

அன்புள்ள இட்லிவடை,
அன்னா பற்றி எது வேண்டும் என்றாலும் சொல்லலாம், கடைசியில் அன்னா சூப்பர் என்று பதிவுகளை முடிக்க தெரிந்துக்கொள்ளவும். முடிந்தால் அவர் ஆதரவுக்கு ஒரு குல்லா வாங்கி போட்டுக்கொள்ளவும். குல்லா என்றவுடன் தான் ஞாபகத்துக்கு வருது, டெல்லி ஜும்மா மசூதி இன் இமாம் புகாரி முஸ்லிம்களை அண்ணா ஹசாரே அவர்களின் ஜன லோக் பால் தொடர்பான உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கூடாது என அறிவித்துள்ளார் .காரணம் அந்த போராட்டத்தில் "பாரத் மாதா கி ஜெய்" என்றும் "வந்தேமாதரம் " என்றும் இஸ்லாமுக்கு விரோதமாக கோஷம் எழுப்புவதால். நல்ல வேளை ஊழலுக்கு எதிராக என்று சொல்லவில்லை. எது எப்படியோ குல்லா விற்பனை டெல்லியில் அதிகமாகிவிட்டதாம்.

இன்று பிரதமர் மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி ஆகியோரிடம் மட்டுமே லோக்பால் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். இந்த அறிவுப்புக்கு பின் ஊழல் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. அதைவிட அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிட்டது.

இந்தப் போராட்டம் குறித்து சீனாவில் பாராளுமன்றம் கூடி முக்கிய விவாதம் மேற்கொண்டார்கள். இந்தியாவிற்கு எப்படி விலை குறைந்த விலையில் குல்லா அனுப்புவது என்று விவாதித்தார்கள். எவ்வளவு குறை சொன்னாலும், அன்னா முயற்சியைப் பாராட்ட வேண்டும்!


அடுத்த பாராட்டு தமிழ்நாடு காவல் துறைக்கு!. பல மாதங்களாக தமிழ்நாட்டு மக்கள் தூங்க முடியாமல் இருந்தார்கள். இனி நிம்மதியாகத் தூங்கலாம். வேற ஒன்றும் இல்லை, வடிவேலு சிங்க முத்து பிரச்சனை தீர்ந்துவிட்டது. வடிவேலு சிங்க முத்துவிடம் நிலம் வாங்கி ஏமாந்தார். ஆனால் விஷயம் என்ன என்றால் சிங்க முத்து வாங்கியதும் போலியாம். அதன் நிஜ ஓனர் வேற யாரோவாம். ஏமாற்றியவர்கள் கண்டு பிடிக்க முடியாது. ஏன் என்றால் அம்மா ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா சொன்னது போல் அவர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு போய் விட்டார்கள். எது எப்படியோ தமிநாட்டில் ஒரு பெரிய பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.


இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று சந்தோஷம் அடைந்தால் அடுத்த பிரச்சனை வந்துவிட்டது. 'கோ' படத்தில் வாய்ப்பை இழந்த நடிகர் சிம்புவுக்கும், நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கும் நடிகர் ஜீவாவுக்கும் இடையே புகைச்சல் ஆரம்பித்திருக்கிறது. சிம்பு மறைமுகமாகச் சீண்ட, ஜீவா நேரடியாக பேட்டியில் "சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததில்லை. யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோதுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். அதை வரவேற்கலாம். ஆனால், பின்னால் மறைந்திருந்து குத்துவது ஆரோக்கியமான போட்டி அல்ல" என்கிறார். தல, 'இலை'ய தளபதி சண்டையைப் பார்த்த தமிழ்நாட்டு மக்களுக்கு இது எல்லாம் ஒன்றுமே இல்லை.

இவர்கள் சண்டையை எல்லாம் பார்த்தால் புதிய தலைமை செயலகத்தை மனநிலை மருத்துவமனையாக மாற்றிவிடலாம். புதிய தலைமை செயலகம் மருத்துவமனையாக மாற்றும் திட்டம் யாருக்கு வெற்றி? ஜெயலலிதாவிற்கா அல்லது கலைஞருக்கா? ராமர் சிவில் இஞ்சினீரிங் படிச்சு அவரு கையால தொட்டுத் தொட்டுக் கட்டிய பாலம் என்று கொஞ்ச நாட்கள் முன்னாடி சொன்ன முக தானே இப்போ ஒவ்வொரு செங்கலாக தொட்டுத் தொட்டுக் கட்டிய தரம் இல்லாத கட்டிடம் இது. டாக்டர்கள் ஊசி போட்டுச் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புவோமாக.

டாக்டர்கள் என்றவுடன் ராமதாஸ் பேசிய பேச்சு பற்றி சொல்லியே ஆகவேண்டும் "பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். இனிமேல் தனித்து போட்டி என்ற பேச்சில் மாற்றம் இல்லை" என்கிறார். காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. சில நாட்களுக்கு விஜயகாந்த் எப்படி செயல்படுகிறார் என்ற கேள்விக்கு "வாட் வாட்" என்று மதுபானத்தின் பெயரை குறிப்பிட்டுக் கிண்டல் அடித்திருக்கிறார். அட, இவருக்கு எரிச்சலில் கூட எம்புட்டுக் காமெடி வருது. கேப்டன் பையன் நடிக்கும் படத்துக்கு வடிவேலு லெவலில் காமெடியன் தேடறார் என்று மாங்கா மருவிடம் யாராவது சொன்னாத் தேவலை.:-)

எதையும் பதுக்கி வைக்க முடியாது என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்த கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள் செப்டம்பரில் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். என்னவோ, மக்கள் சந்தோஷமா இருந்தாச் சரிதான்.


ஜெகன் மோகன் கூடச் சேர்ந்து மறைந்த அவர் அப்பாவும் ஊழலில் மாட்டிக்கொண்டு விட்டார் சிபிஐயிடம் ! காங்கிரஸ் எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா? யார் என்ன எப்டிச் சொன்னாலும் அன்னா ஊழலை ஒழிச்சுட்டாறு. பாருங்க பத்துநாளா எந்த ஊழல் பற்றியும் பேச்சே இல்லை! :-)


இப்படிக்கு வாட் அடிக்கும்,
முனி

Read More...

கோகுலாஷ்டமி வாழ்த்துகள்....



Read More...

Friday, August 19, 2011

சௌமித்ரா சென் இம்பீச்மெண்ட் - பத்ரி சேஷாத்ரி


நேற்று சௌமித்ரா சென் பிரமாதமாக வாதாடினார் என்றால் இன்று மாநிலங்கள் அவையின் உறுப்பினர்கள் சிலர் அவரைப் பலமடங்கு விஞ்சினார்கள். நாடாளுமன்றம் என்றாலே ஜோக் என்று நாம் நினைக்கும் நேரத்தில் அந்த நினைப்பு தவறு என்று இன்று நிரூபித்தார்கள்.

முதலில் பேசியது அருண் ஜெயிட்லி. நல்ல வழக்கறிஞர். சௌமித்ரா சென் எப்படி தன் வாதத்தின்போது பொய்களை அடுக்கிவைத்தார் என்பதை ஆதாரங்களுடன் காண்பித்தார். நேற்றைய செஷன் பற்றி நான் எழுதிய பதிவில் சௌமித்ரா பிழைத்துவிடுவாரோ என்றுதான் நினைத்தேன். அவரது வாதம் அவ்வளவு திறமையாக இருந்தது. ஆனால் இன்று ஜெயிட்லி பாயிண்ட் பாயிண்டாக சௌமித்ரா சென்னின் வாதங்களைத் தகர்த்தெறிந்தார். நேற்று பேசும்போது சௌமித்ரா சென், வங்கியின் கணக்கு நகல் காணாமல் போய்விட்டது என்று சொல்லியிருந்தார். அது உண்மையல்ல என்றும் மாநிலங்களவைத் தலைவர் உருவாக்கிய குழு அந்த நகலைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்துள்ளது என்றும் ஜெயிட்லி எடுத்துக் காட்டினார். அதேபோல தான் ஒரு பைசாகூட எடுக்கவில்லை என்று சௌமித்ரா சென் சொல்லியிருந்தார். ஆனால் காசோலைகளின் நகலைக் காட்டிய ஜெயிட்லி எப்படி சென் self cheque போட்டுப் பணத்தை எடுத்துள்ளார், எப்படி அந்த டிரஸ்ட் பணத்தைக் கொண்டு தன் சொந்த கிரெடிட் கார்டு பில்லைக் கட்டியுள்ளார் என்பதையெல்லாம் காண்பித்தார். அவருடைய வாதம் முடிந்ததுமே இன்று சௌமித்ரா சென் காலி என்பது புரிந்துவிட்டது.

அடுத்து சுதர்சன நாச்சியப்பன் பேசினார். அவருடைய பேச்சில் புதிதாக எதுவும் இல்லை.
அவரும் சௌமித்ரா சென்னை இம்பீச் செய்யவேண்டும் என்று சொன்னார்.

ஆனால் அடுத்துப் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் சந்திர மிஷ்ரா, ஒரு மாற்றுப் பார்வையை மிக அழகாக முன்வைத்தார். முதலில் சௌமித்ரா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவிக்குக் கொண்டுவந்ததே அருண் ஜெயிட்லி சட்ட அமைச்சராக இருந்தபோதுதான் என்று ஒரு குட்டு வைத்தார். எப்படி due diligence மோசமாக இருந்துள்ளது என்று சுட்டிக்காட்டியபின் அடுத்து, எந்தக் காரணங்களுக்காக ஒருவரை இம்பீச் செய்யலாம் என்பதற்குள் நுழைந்து டெக்னிக்கலாக விவாதிக்க ஆரம்பித்தார். Mispparopriation of funds என்பதுதான் அவர்மீதான குற்றச்சாட்டு என்றால், இங்கு நடந்தது உண்மையில் misappropriation அல்ல, மாறாக diversion of funds; இரண்டும் ஒன்றல்ல என்றார். அடுத்து, இம்பீச்மெண்ட் செய்யப்படவேண்டும் என்றால் "proven misbehaviour" இருக்கவேண்டும் என்றவர், இங்கு ஒரு கிரிமினல் வழக்கைக் கையாள்வது போல (beyond reasonable doubt) இதனைக் கையாளவேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். கடைசியில், இம்பீச்மெண்ட் செய்யக்கூடாது என்று முடித்தார்.

அடுத்துப் பேசிய ஜனதா தளம் யுனைடெட் உறுப்பினர் என்.கே.சிங்கும் மிக மிக அழகாகப் பேசினார். எப்படி சௌமித்ரா சென் மாநிலங்கள் அவையைத் திசை திருப்பியுள்ளார் என்பதைக் காட்டினார். அதன்பின் திருச்சி சிவா (திமுக) பேசினார். ஒரு தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர், பிஜு ஜனதா தள உறுப்பினர், சிவ சேனை உறுப்பினர், அஇஅதிமுகவின் மனோஜ் பாண்டியன், ஒரு சமாஜவாதிக் கட்சி உறுப்பினர் ஆகியோர் பேசினர்.

கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்தபோது ராம் ஜெத்மலானி எழுந்தார். சதீஷ் சந்திர மிஸ்ராவின் மாற்றுக் கருத்தை வெகுவாகப் பாராட்டியவர், அந்தக் கருத்து ஏன் தவறானது என்பதை மிக மிக அற்புதமாகக் கொண்டுவந்தார். The Indian Trusts Act-ஐ முன்வைத்து எப்படி சௌமித்ரா சென் செய்தது தவறு என்று சுட்டிக்காட்டினார். எங்கெல்லாம் குறுக்கு விசாரணை நடைபெறுமோ அங்கெல்லாம் சென் தான் வராமல் டபாய்த்துவிட்டார் என்பதை விளக்கினார். இங்கு மட்டும் சென்னைக் குறுக்கு விசாரணை செய்ய தனக்கு அனுமதி இருந்திருந்தால் மூன்றே கேள்விகளில் அவரை உடைத்து நொறுக்கியிருப்பேன் என்றார். தம் வாதத் திறமையால் தனித்துத் தெரிந்தவர்கள் ராம் ஜெத்மலானி, அருண் ஜெயிட்லி, சதீஷ் சந்திர மிஷ்ரா ஆகியோர்.

அடுத்து டி.ராஜா உட்பட வேறு சிலர் பேசினர். வாதத்தை நேற்று தொடங்கி, குற்றத்தை எடுத்துவைத்த சீதாராம் யெச்சுரிக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு தரப்பட்டது. அப்போது அவர் சௌமித்ரா சென்னும் அவருக்கு ஆதரவாக சதீஷ் சந்திர மிஷ்ராவும் முன்வைத்த வாதங்களை மறுத்துப் பேசினார்.

பிறகு குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மட்டும் ‘இல்லை’ என்று கத்தினர். பிறர் அனைவரும் ‘ஆம்’ என்றனர். முதலில் வாக்கெடுப்பு வேண்டாம் என்று முடிவெடுத்த அன்சாரிக்கு, பின்னர் இந்த விஷயத்தில் வாக்கெடுப்பு தேவை என்று வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடக்க, வந்திருந்த 206 பேரில் 189 பேர் இம்பீச்மெண்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் 16 பேர் எதிராக வாக்களித்தனர். ஒருவர் வாக்களிக்கவில்லை. ஆக மாநிலங்கள் அவையில் சென் இம்பீச் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்து மக்களவையில் இதே செயல் நடைபெறும். மாநிலங்கள் அவையின் திறமைக்கு மக்களவை ஈடுகொடுக்குமா அல்லது விவாதமே இல்லாமல் வாக்கெடுப்பு மட்டும் நடைபெறுமா என்று தெரியவில்லை. மாநிலங்கள் அவை வாக்கெடுப்பைப் பார்க்கும்போது கொறடா என்ன சொல்கிறாரோ அதனைக் கேட்டு வாக்களிக்கப்போகிறார்கள் என்பது தெரிந்துவிட்டது. ராமசாமி இம்பீச்மெண்ட் போல் நடக்காமல் இருக்குமா என்று பார்ப்போம்.

அடுத்து தினகரன் கதை எப்படிப் போகும் என்பது தெரியவில்லை. அவர் ராஜினாமா செய்தார்; பின் அதனைத் திரும்பப் பெறுவதாகச் செய்திகள் வந்துள்ளன. அதனை குடியரசுத் தலைவர் பிரதீபா பாடில் எப்படி எடுத்துக்கொள்வார் என்பதும் தெரியவில்லை.

இதே மாதிரி ராசாவை பேச வைத்து கேள்வி கேட்டால் என்னவாகும் ? ராம் ஜெத்மலானி என்ன செய்வார் ? பிரதமர் என்ன செய்வார் ?

Read More...

Thursday, August 18, 2011

சௌமித்ரா சென் பதவிநீக்கம் - பத்ரி சேஷாத்ரி

இந்தியாவில் உயர்/உச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றால் அதற்கு இம்பீச்மெண்ட் என்ற ஒரேயொரு வழிமுறைதான் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் தனித்தனியாக ஒன்றுகூடி வாக்கெடுப்பு நடத்தி அதில் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக வாக்குகள் விழுந்திருக்கவேண்டும்.

நீதிபதி சௌமித்ரா சென் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி. இவர் நீதிபதியாவதற்குமுன் வழக்கறிஞராக இருந்தார். அப்போது ஒரு வழக்கில் லிக்விடேஷன் என்று சொல்லப்படும் முறையைச் செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சம்பந்தபட்ட திவாலான கம்பெனியின் மிச்சமீதி சொத்துக்களை விற்று அந்தப் பணத்தை ரிசீவர் என்ற ஒருவர் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பின்னர் யார் யாருக்கெல்லாம் பண பாக்கி உள்ளதோ அவர்களுக்கு இந்தப் பணத்திலிருந்து கொடுக்கவேண்டும். சம்பந்தப்பட்ட வழக்கில் தொழிலாளிகள் தரப்பில் ஆஜரான சௌமித்ரா சென்னையே கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரிசீவராக நியமித்திருந்தது. இது நடந்தது 1980-களில்.

இந்தியாவில்தான் வழக்குகள் இருபது, முப்பது ஆண்டுகள் நடப்பது வாடிக்கையாயிற்றே. இதற்குள் சௌமித்ரா சென் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். தான் ஒரு வழக்கில் ரிசீவராக இருப்பதையும் அது தொடர்பாக பல லட்சம் பணம் தன் கையில் இருப்பதையும் சௌமித்ரா சென் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கவில்லை போலும்.

உச்ச நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இருந்தபோது, ஒவ்வோர் உயர்நீதிமன்றமும் ஒரு குழு ஒன்றை அமைத்து, தங்களைத் தாங்களே கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்பதாக முடிவு செய்துள்ளார்போல் இருக்கிறது. அப்படி அமைக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்றக் குழு, சௌமித்ரா சென் சில குழப்படிகளைச் செய்துள்ளார் என்ற முடிவுக்கு வந்துள்ளது.

திவால் கம்பெனியின் சொத்துகளை விற்றுப் பெற்ற பணத்தை சௌமித்ரா சென் தன் பெயரிலான ஓர் அக்கவுண்டில் வைத்திருந்தார் என்றும் அதிலிருந்த பணத்தை நீதிமன்ற அனுமதியின்றித் தன் சொந்தக் கணக்குக்கு மாற்றி, அதிலிருந்து லாபம் பெற்றார் என்றும் உயர்நீதிமன்றக் குழு அவர்மீது குற்றம் சாட்டியது. அதையடுத்து சௌமித்ரா சென்மீது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, சௌமித்ரா சென் குற்றம் இழைத்துள்ளார் என்று தீர்ப்பானது. ஆனால் அதனை எதிர்த்து சௌமித்ரா சென், இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்சிடம் மேல்முறையீடு செய்தார். அவர்கள் சௌமித்ரா சென்மீது எந்தக் குற்றமும் இல்லை என்று முடிவு செய்ததுடன் அவரைப் பணத்தைத் திருப்பித்தரச் சொல்லியுள்ளனர். அவரும் வட்டியுடன் பணத்தைத் திருப்பித் தந்துவிட்டார் என்று தெரிகிறது.

ஆனால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் விடவில்லை. சௌமித்ரா சென்னைத் தன் விட்டுக்கு அழைத்துள்ளார். அங்கே வேறு இரு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் இருந்துள்ளனர்.
சௌமித்ரா சென் பதவியிலிருந்து விலகச் சம்மதித்தால் அவருக்கு வி.ஆர்.எஸ் தருவதாகச் சொல்லியுள்ளார். சௌமித்ரா சென் மறுத்துள்ளார். பிறகும் அவர்கள் சென்னை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். சென் ஏற்றுக்கொள்ள மறுக்கவே, பாலகிருஷ்ணன் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி சௌமித்ரா சென்னை இம்பீச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு மாநிலங்கள் அவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவையில் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, சென்னை இம்பீச் செய்வது என்று முடிவெடுத்துள்ளனர். எனவே மாநிலங்கள் அவைத் தலைவர் (குடியரசுத் துணைத் தலைவர் அன்சாரி), மூவர் குழு ஒன்றை நியமித்து, இம்பீச்மெண்ட் செய்ய முகாந்திரம் உள்ளதா என்று கண்டறியச் சொல்லியுள்ளார். அந்த மூவர் குழுவில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி, பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முகுல் முத்கல், வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் ஆகியோர் சௌமித்ரா சென்னை நீக்கலாம் என்று அறிக்கை அளித்தனர்.

அதனால் நேற்று மாநிலங்கள் அவை கூடி, வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. மாநிலங்களை அவையில் உறுப்பினர்களாக இல்லாத அமைச்சர்களும் கலந்துகொண்டனர். ஆனால் அவர்கள் விவாதத்தில் பேசமுடியாது. சீதாராம் யெச்சுரி, அருண் ஜெயிட்லி ஆகியோர் சௌமித்ரா சென்னை ஏன் நீக்கவேண்டும் என்று பேசினர். ஆனால் சௌமித்ரா சென் மிகத் திறமையாக வாதாடினார். தன்மீது எந்தத் தவறுமே இல்லை என்றார். நிறைய டெக்னிக்கலான விஷயங்களைப் பேசினார் என்பதால் நான் அதற்குள் இங்கு செல்லப்போவதில்லை.

ஆனால் மிக முக்கியமான விஷயம் அவர் வெளிப்படையாகவே பாலகிருஷ்ணன்மீது வைத்த குற்றச்சாட்டுகள். அத்துடன் ஏன் தன்னை மட்டும் தனியாகக் கட்டம் கட்டி இப்படி இம்பீச் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஒன்றே அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் செய்த அட்டூழியங்களை திறந்த நீதிமன்றத்திலேயே கடுமையாகச் சாடியது (சொந்தக்காரர்களுக்கு இஷ்டத்துக்கு வேலை போட்டுக் கொடுத்தது தொடர்பாக). சௌமித்ரா சென் இதனைச் சுட்டிக்காட்டியதுடன் ஒரு நீதிபதியின் சாம்பரில் சூட்கேஸில் பல லட்சங்கள் இருந்தது மற்றும் நீதிபதிகள்மீதான வேறு சில குற்றச்சாட்டுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார். தான் ரிசீவராக இருந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள எந்த நபரும் தன்மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் சாட்டவில்லை என்ற சென், இதுவரை தன் நீதிமன்ற வாழ்க்கையில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டையாவது காண்பிக்க முடியுமா, ஏதேனும் ஒரு வழக்கில் தான் பக்கச்சார்பாகா நடந்துகொண்டதை நிரூபிக்க முடியுமா என்றார். இப்போது அவர்மீது இருக்கும் குற்றச்சாட்டுகூட அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்குமுன்பானது என்றும், அதிலும்கூட கொல்கத்தா நீதிமன்ற பெஞ்ச் அவர்மீது குற்றம் ஏதுமில்லை என்று தீர்ப்பு சொல்லியுள்ளது என்பதையும் எடுத்துவைத்தார்.
அப்படியும், அதையும்மீறி பாலகிருஷ்ணன் தன்னைப் பதவியிலிருந்து ஒழிக்க இதனைச் செய்துள்ளார் என்றார்.

பின்னர் பேசிய ஜெயிட்லி, வழக்கறிஞருக்கு உரிய வாதத்திறமையுடன் சென் குற்றம் இழைத்தவரே என்று சொல்ல, நேற்றைய செஷன் முடிந்தது. இன்று வழக்கு தொடரும். பிறகு வாக்கெடுப்புக்குச் செல்லும். அதன்பின் மக்களவையிலும் வாக்கெடுப்பு நடக்கும் (என்று நினைக்கிறேன்).
வாக்கெடுப்பில் சௌமித்ரா சென் இம்பீச் செய்யப்பட்டார் என்றால் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதப்படும். அவர் சென்னை நீக்குமாறு ஆணை இடுவார்.

இதற்குமுன் தமிழகத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற நீதிபதியின்மீது இம்பீச்மெண்ட் நடைமுறைக்கு வந்தது. ஆனால் கடைசியில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து மக்களவையில் வாக்கெடுப்புக்குச் செல்லாமல் அந்த இம்பீச்மெண்டைத் தோற்கடித்தனர்.

இம்முறை அண்ணா ஹஸாரேயின் திகார் ஜெயில் தமாஷா நடந்துகொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் காண்பிக்க, சௌமித்ரா சென்னுக்கு ஆப்படிப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் நேற்று சென் பேசியதைப் பார்த்தபோது அவரைப் பதவிநீக்கம் செய்வது நியாயமா என்று ஒரு கணம் தோன்றியது. பாலகிருஷ்ணன்மீதே எக்கச்சக்க குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

அன்னா ஹசாரேயை யாரென்று எனக்குத் தெரியாது என்று ராமதாஸ் கூறுகிறார். இவரை அரசியலை விட்டு இம்பீச்மெண்ட் செய்ய முடியாதா ?

Read More...

Tuesday, August 16, 2011

அன்னா பார்ட் - 2

அன்னா ஹஸாரே ஆகஸ்ட் இன்று இத்தனை மணிக்கு உண்ணா விரதம் இருக்கப் போகிறேன் என்று முன் அறிவிப்பு கொடுத்ததால், மீடியா கேமராவை எடுத்துக்கொண்டு ரெடியாக காத்துக்கொண்டு இருந்தார்கள். அர்னாப் கூட்டம் கொஞ்சம் கூடவே மெனக்கெட்டார்கள். அன்னா அசாரே தங்கள் குழுவினர் எழுதி கொடுத்த லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவில்லை என்றால் உண்ணாவிரதம் என்கிறார்.

பாராளுமன்றம் என்பது மக்களவை. அனால் இவர் மக்களுக்காக என்று சொல்லிக்கொண்டு மக்களவையை எதிர்க்கிறார். இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்பதே ஒரு காமெடி என்று நினைக்க வைத்தது இவர் சோனியாவிற்கு கடிதம் எழுத ஆரம்பித்த போது தான். "அன்னா, ஊழல் ஒழிப்பில் நீங்களும் நானும் ஒன்று’ என்று ஒரு போடு போட்டார் சோனியா. அன்னா பூரிப்பு அடைத்துவிட்டார். அட நாம் எழுதும் கடிதத்துக்குப் பதில் கூட வர ஆரம்பித்துவிட்டது என்று. ஆனால், ஏன் குவாட்ரோக்கியை பற்றி அன்னா அந்தக் கடிதத்தில் எழுதவில்லை என்பது வேறு விஷயம், யாருக் அதப் பத்திக் கேக்கப் படாது.

முதல் கடிதத்துக்கு பதில் வந்ததால் அடுத்த கடிதம் மன்மோகன் சிங்கிற்கு. உங்களுக்கு என்ன ரைட் இருக்கு கொடி ஏற்ற என்று ஜம்பமாகக் கடிதம் எழுத பிரதமர் வேலையில்லா திண்டாட்டம், கிராமங்களுக்கு மின்சாரம் போன்ற பேச்சை விட்டுவிட்டு 16 முறை ஊழல் ஒழிப்பு என்று தன் சுதந்திர தின உரையில் பேசியுள்ளார். ராசா 2G ஊழலை செய்யும் போது ஒன்று செய்யாத இவர், அன்னா கடிதம் எழுதியவுடன் மைக் பிடித்து பேச ஆரம்பித்துவிட்டார். இந்த வகையில் இது சந்தோஷமான நிகழ்வே!
தீவிரவாதிகள் மும்பை குண்டு வெடிப்பு போது பேசாமல் இருந்த பல அமைச்சர்களும் அன்னா கைது செய்த பின் கபில் சிபில், சிதம்பரம், அம்பிகா என்று ஒன்று கூடிக் கூட்டாகப் பத்திரிக்கையாளர் சந்தித்து பதில் அளிக்கிறார்கள். ஒரு பதிலில் சிதம்பரம் நேற்று 'ராகுல்ஜியிடன்' கலந்தாலோசித்தேன் என்கிறார். அடுத்து அன்னா ராகுலுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்துவிடுவார்.

கொஞ்ச நாள் முன்னாடி "ஊழல் அற்ற நரேந்திர மோடி" என்று பாராட்ட மீடியா அவரை கடுமையாக விமர்சிக்க நான் அப்படி சொல்லவில்லை வேறு மாதிரி சொன்னேன் என்று மழுப்பினார் அன்னா. குல்லா போட்டுக்கொண்டாலும் மீடியாவிற்கு பயந்துக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியது.

எது எப்படியோ இரண்டாவது சுதர்ந்திரப் போராட்டக் கூத்து ஆரம்பித்துவிட்டது. மக்கள் கொஞ்ச நாளைக்கு இந்தியா கிரிக்கெட் தோல்வியை மறந்து டைம்ஸ் நவ் கூவலைப் பார்த்துக்கொண்டு ஜாலியாக இருப்பார்கள். ஊழலுக்கு பிறகு கருப்பு பணம் வந்துவிடும், தீபாவளிக்கு பிறகு பொங்கல் வருவதில்லையா அது மாதிரி தான்.


திஹார் ஜெயிலுக்கு வெளியே பயங்கர கூட்டம். நைசா ராசா வெளியே வந்துவிட போகிறார்.
:-)

Read More...

Monday, August 15, 2011

மாலை செய்திகள் இரண்டு

செய்தி-1 : அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு நன்றாக உள்ளது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


செய்தி-2: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான வீட்டில் 6 அறைகளுக்கு மேல் உடைக்கப்பட்டு இன்று கொள்ளை நடைபெற்றுள்ளது - செய்தி

Read More...

லேட்டாக கோபப்பட்ட தமிழர்கள்

சென்னையில் SRM பல்கலைக்கழக நிகழ்ச்சில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க உதவி துணைத் தூதரான மவுரின் சோவ் என்பவர் தன் இந்தியா அனுபவங்களை பேசும் போது இப்படி பேசினர் "20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பதற்காக இந்தியா வந்த நான், டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய இடத்தை 72 மணி நேரமாகியும் அந்த ரெயில் போய் சேரவில்லை. இந்த பயணத்தின் போது எனது சருமம் தமிழர்களை போல கறுப்பாகவும், அழுக்காகவும் மாறிவிட்டது" என்ற பேச்சுக்கு பலத்த கண்டங்கள் வந்துள்ளது.

ஏன் ஒபாமாவே கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் தானே என்ற கேள்விகளும். இந்த நிகழ்ச்சியில் இதை பேசிய போது வட மாநில மாணவகள் கை தட்டி சிரித்ததாகவும், தமிழர்கள் மேடையிலும், அரங்கத்திலும் சும்மா இருந்தார்கள் என்றும் செய்தி வந்திருக்கிறது.

ஜெயலலிதா, ராமதாஸ், திருமா போன்றவர்கள் இந்த செய்தியை பார்த்துவிட்டு அறிக்கை விடுவதற்கு காத்துக்கொண்டு இருக்காமல், அந்த மேடையிலேயே அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி செய்தால் அமெரிக்காவில் வேலை கிடைக்காதோ என்று தமிழர்கள் சும்மா இருந்திருப்பார்கள்.

24 மணி நேரத்தில் போக வேண்டிய ரயில் 72 மணி நேரத்தில் போய் செர்ந்ததை பற்றியும், ரயில் கழிப்பறை பற்றியும், ஒழுங்காக குளிக்காமல், சுகாதாரம் பற்றிய விழிப்பு உணர்வு போன்றவற்றை பற்றி எல்லாம் பேசாமல், எருமை மாடு போல வாழும் நாம் சும்மா 'கருப்பு' 'அழுக்கு' என்று சொன்னவுடன் கண்டனம் தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் ?

இன்றைய பாரத் மேட்ரிமோனியை பார்த்தால், 'நல்ல சிகப்பு அழகுடன் இருக்கும்' பெண்கள் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் பலரை என்ன சொல்லுவது ?

சூர்யாவும் ஷ்ரேயாவும் சிகப்பழகு க்ரீம் விளம்பரத்தில் வந்தால் ஒரு வாரம் பூசுக்கொண்டு கண்ணாடி முன் நிற்பது எந்த வகையில் அடங்கும் ?

எது எப்படியோ அடுத்த தேர்தல் அறிக்கையில் இதை சாக்காக வைத்துக்கொண்டு பெண்களுக்கு "ஃபேர் அண்ட் லவ்லியும்" ஆண்களுக்கு "ஃபேர் அண்ட் ஹான்ட்சம்" கிரீம் இலவசமாக வழங்க முடிவு செய்யலாம். இரண்டும் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் செய்யப்படுகிறது என்றால் தமிழர்கள் இரண்டு டியூப் வாங்கி பூசிக்கொள்ளுவார்கள்.

எதை பூசிக்கொண்டாலும், ஏன் அதிலேயே குளித்தாலும் ஒன்று ஆகாது என்று சிவாஜி படத்தில் நம்ம ரஜினி சாரே நமக்கு சொல்லியும் புத்தி வரவில்லை என்றால் என்ன செய்வது ?



எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் !

Read More...

Saturday, August 13, 2011

ஆவணி அவிட்டம்

சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் பக்கங்கள் கிழிக்கப்பட்டது ஏன்? என்று கலைஞர் அறிக்கை கொடுத்திருக்கிறார்...

கல்வித்துறை சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் நீக்கப்பட வேண்டிய பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து விட்டும் சில இடங்களில் கறுப்பு நிற மார்க்கர் பேனா கொண்டு அடித்து விட்டும் வழங்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.

முதல் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 69, 70, 79, 80 ஆகிய நான்கு முழுப் பக்கங்களையும் நீக்க வேண்டுமாம். அந்தப் பக்கங்களில் "வண்ணம் தீட்டுவேன்'' என்ற தலைப்பில் ஒரு ஆப்பிள் படமும், அவ்வை, கவுதாரி, பவுர்ணமி, வவ்வால் ஆகிய படங்கள் உள்ளன. இந்தப் பக்கத்தை ஏன் கிழிக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்று பள்ளிக் கல்வித் துறைக்குத் தான் வெளிச்சம்.


3 வது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 26 வது பக்கத்தில், கடைசி பத்தி நீக்கப்பட வேண்டுமாம். அதிலே என்ன இருக்கிற தென்றால், "உலகத் தமிழ் மாநாடு 2010 ஜுன் மாதம் 23 ந்தேதி முதல் 27 ந்தேதி வரை கோவையில் நடைபெற்றது'' என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம்.


4 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 74 வது பக்கத்தில், "செம்மொழி மாநாட்டுப் படங்கள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள் மறைக்கப்பட வேண்டும். கவி பாரதி இடம் பெற்ற படம்தான் அந்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதை மறைக்க வேண்டுமென்கிறார்கள்.


75 வது பக்கத்தில், முதல் பத்தி நீக்கப்பட வேண்டும். அதாவது "செவ்வியல் மொழிகளிலே செம்மாந்த மொழி நம் செந்தமிழ் மொழி என்று தொடங்கும் அந்தப் பத்தி முழுவதும் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்'' இது சுற்றறிக்கை.


4 வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111 வது பக்கத்தில் சென்னை சங்கமம் பற்றிய பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பது குற்றமா என்று தெரியவில்லை.


5 வது வகுப்பு சமூக அறிவியலில் 80 வது பக்கத்தில் 3 வது படம் நீக்கப்பட வேண்டும். அதாவது புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 6 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் பக்கம் 129 ல் "தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் கவிதை தைத்தமிழ்ப் புத்தாண்டே வருக'' என்ற வார்த்தைகள் இடம் பெற்றதற்காக அந்தப் பக்கம் முழுவதையும் நீக்க வேண்டுமாம். அடுத்து 130 வது பக்கத்தில் இலவசப் பயண அட்டை விண்ணப்பப் படிவம் என்ற தலைப்பில் மாணவன் பெயர், பள்ளியின் பெயர், புறப்படும் இடம், சேரும் இடம் என்ற விவரங்களைப் பூர்த்தி செய்யும் படிவம் உள்ளது. அந்தப் பக்கத்தையே முழுவதுமாக நீக்க வேண்டுமென்று எதற்காகச் சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை.


6 ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் பக்கம் 53 ல் இரண்டாவது பத்தியில் உள்ள "தப்பாட்டம்'' என்ற பகுதியை முழுவதுமாக நீக்க வேண்டுமாம். தப்பாட்டம் என்றால் என்ன என்பதையும், சிலப்பதிகார காலத்திலே அது இடம் பெற்றிருந்தது என்பதையும் அந்தப் பத்தியில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். 6 ம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் 81 ம் பக்கத்தில் உள்ள சட்டக்காந்தம் படம் மறைக்கப்படவேண்டுமாம். காரணம் அந்தப் படத்தின் வண்ணம் கறுப்பு, சிகப்பு போல இருக்கிறதாம்.


6 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் பக்கம் 35 ல் சூரிய கிரகணம் குறித்த படமும், பகல் இரவு படமும் வெளிவந்துள்ளன. சூரிய கிரகணம் படத்தை முழுவதுமாக அழிக்க வேண்டுமாம். காரணம் அந்தப் படத்தில் ஒரு பகுதி கறுப்பு சிகப்பு வண்ணம் போல இருப்பதால் அதை முழுமையாக அழிக்க வேண்டுமாம்.


9 வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பக்கம் 203 ல் "தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கவிழா'' என்ற தொடர் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்க வேண்டும் என்கிறது சுற்றறிக்கை. பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் 89 வது பக்கத்தில் "அறிந்து கொள்வோம் என்ற பகுதி முழுவதும் நீக்கப்பட வேண்டும்'' என்கிறது சுற்றறிக்கை. அந்தப் பகுதியில் நான் எழுதிய கவிதை ஒன்று இடம் பெற்றுள்ளது. அதனை முழுவதும் நீக்க வேண்டுமாம்.


பத்தாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 177 வது பக்கம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமாம். அந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறதென்றால், தஞ்சை பெரிய கோவிலில் என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம். 10 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இரண்டு இடங்களில் தி.மு.க. அரசு என்ற வார்த்தைகள் இடம் பெற்ற காரணத்தால், அதனை அழிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். நான் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.


ஆனால் இந்த அரசு மற்றப் பாடப் புத்தகங்களில் நீக்கியுள்ள பகுதிகள் எல்லாம் எத்தகையது என்பதை நீங்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் பெரிதாக நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் தி.மு.க.வை பற்றியும், என்னைப் பற்றியும் பக்கம் பக்கமாக பாராட்டி சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்து விட்டதாகக் கூறி, அந்தப் புத்தகங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்கள். சமச்சீர் பாடப் புத்தகங்களில் அப்படி என்னதான் வார்த்தைகள் கடந்த கால அரசையும், என்னையும் பாராட்டி வந்துவிட்டன என்ற விவரம் அனைவருக்கும் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் இங்கே தொகுத்துள்ளேன்.


இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


இதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், கலைஞர் 1 முதல் 10 ஆம் கிளாஸ் படித்துவிட்டார். எல்லோரும் படித்துகிழிப்பார்கள், இவர் கிழித்ததை படித்துள்ளார். அடுத்து +1, +2 பிறகு காலேஜுக்கு தான் போக வேண்டும்.

Read More...

Tuesday, August 09, 2011

சமச்சீர் கல்வியை 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சமச்சீர் கல்வி 10 நாட்களில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. 25 காரணங்களை ஆய்வு செய்து, இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது என்றும், சமச்சீர் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் நாங்கள் தலையிடமுடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Read More...

வழக்குகளும் சமரசங்களும் !

'தீராத விளையாட்டுப்பிள்ளை' திரைப்படத்துக்கான வெளியீட்டு உரிமை பெறும் பிரச்சனையில், சக்சேனா மீது கே.கே.நகர் காவ‌ல்துறை‌யி‌ல் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரச்சனைகளை ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு வெளியே தீர்த்துக் கொண்டதை அடுத்து, 2 வழக்குகளு‌ம் ‌நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டன. - ஆகஸ்ட் 2, 2011 செய்தி

கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் சினிமா வினியோகஸ்தர்கள் 2 புகார்களை கொடுத்தனர். இந்த வழக்குகளில் சக்சேனா கைது செய்யப்பட்டார். கோர்ட்டுக்கு வெளியே புகார்தாரர்களுடன் சமரசமானதை அடுத்து, இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அந்த 2 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன.

முத்துக்குமுத்தாக என்ற படம் தொடர்பாக ராசு மதுரவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் போலீசிலும், வல்லக்கோட்டை படம் தொடர்பாக டி.டி.ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசிலும், சிந்தனை செய் படம் தொடர்பாக அருள் மூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசாரும், மாப்பிள்ளை படம் தொடர்பாக ஹித்தேஷ் ஜபக் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீசாரும் சக்சேனா மீது மோசடி மற்றும் மிரட்டல் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

கோர்ட்டுக்கு வெளியே இந்த பிரச்சினைகள் சம்பந்தமாக புகார்தாரர்களுடன் பேசி, சமரசம் ஏற்படுத்தியுள்ளதால் 4 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சக்சேனா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி சுதந்திரம் விசாரித்தார். இதுபோன்ற நிலையில் மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்துள்ளது. எனவே அவரது மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று நீதிபதி உத்தரவிட்டார். - ஆகஸ்ட் 9, 2011 செய்தி



இந்த வார சந்தேகம்! - சன் பிக்சர்ஸ் சக்சேனா மீதான மோசடி வழக்குகள் ஒவ்வொன்றாக நீதிமன்றத் துக்கு வெளியே சமரசமாகி, புகார்களையும் வழக்கையும் திரும்பப்பெறுவது நடந்து வருகிறது. எனக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றினார் என்ற புகாரைச் சொல்பவர், புகாரைக் கொடுத்ததும் தனக்கு வரவேண்டிய பணம் வந்துவிட்டது என்று சொல்லி வாபஸ் பெறுவது மட்டுமா நடக்கிறது? என்னை அறையில் அடைத்து வைத்து மிரட்டினார்கள். கொலை மிரட்டல் செய்தார்கள். குடும்பத்தையே அழிப்பதாக எச்சரித்தார்கள் என்றெல்லாம் புகார்களில் சொன்னதெல்லாம் என்ன ஆயிற்று? நீதிபதி அவற்றை விசாரிக்க வேண்டாமா? பணம் திரும்பி வந்துவிட்டால், மிரட்டல் குற்றமும் இல்லாமல் போய்விடுமா? மிரட்டல் குற்றமே பொய்க் குற்றச்சாட்டு என்றால், பொய்ப் புகார் கொடுத்து நீதிமன்ற நேரத்தை வீணடித்தவருக்குத் தண்டனை கிடையாதா? - ஓ-பக்கங்கள், ஞாநி

Read More...

Monday, August 08, 2011

இது சாம்பிள்



Removed !

Read More...

Saturday, August 06, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 6-8-2011

மைடியர் முனி,
மவனே ரெண்டு மாசமா ஆளையே காணும்? நானும் அப்டி இப்டி கொஞ்சம் பிஸியா இருந்து விட்டேன். நீயென்ன மன்மோகன் சிங் போல பேசாமல் இருந்தாலே நன்றாக இருக்கும் என்று நினைத்து விட்டாயா? அவர் என்னடாவென்றால் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் முன் எல்லோருக்கும் டீ, காபி கொடுத்துவிட்டு, எல்லோரும் கேள்வி கேட்காதீங்க என்று தாஜா செய்துள்ளார். அப்படியும் ஒரு நிருபர் ஊழல் பற்றி கேள்வி கேட்டால் நீங்க என்ன செய்வீங்க என்று கேட்க "அவர்கள் ஊழலை பற்றி பேசினால் நானும் அவர்கள் ஊழலை பற்றி பேசுவேன்" என்கிறார். எல்லாம் தெரிந்து இருந்தும் ஏன் ஊழலைப் பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதில் சொல்ல தெரியாமல் முழிக்கிறார்.பிரதமர் சுஷ்மா கேள்விக்கு எல்லாம் பயப்பட தேவையே இல்லை, அவர் பாராளுமன்றத்தில் டான்ஸ் ஆடினால் தான் பயப்பட வேண்டும்.

ராஜா என்னவோ இப்ப தான் பிரதமரை பற்றி நீதிமன்றத்தில் காட்டிகொடுத்துள்ளார் என்று பலர் நினைக்கிறார்கள். அவர் ரொம்ப நாளா நான் செய்தது எல்லாம் பிரதமருக்கு தெரியும் என்று தவராமல் எல்லாம் பேட்டியிலும் சொல்லி வந்துள்ளார். அப்ப எல்லாம் காங்கிரஸ்காரர்களும், பிரதமரும் ஒன்று வாய் திறக்காமல் இப்ப ஒப்பாரி வைக்கிறார்கள். இந்தக் கூட்டணி தொடரரும்வரை பிரதமர் எல்லா கேள்விக்கும் ஒரே ஒரு பதிலை சொல்லிவிடலாம் - கூட்டணி தர்மம்.



பிரதமர் பேசினால் ஆச்சரியம், ஸ்ரீசாந்த் பேசாமல் இருந்தால் அது இன்னொரு ஆச்சரியம். அடிக்கடி பேசி பேசி வம்பில் மாற்றிக்கொள்ளும் ஸ்ரீசாந்த் இப்ப "Silence is the speech of the spiritual seeker. I am spiritual now" என்கிறார். இவர் 'Spritual' என்றால் பரவாயில்லை, ஆனால் கர்நாடாகாவில் எந்த கோஷ்டி முதலமைச்சராக வந்தாலும் உடனே ஒரு சாமியார் காலில் விழுந்துவிடுகிறார்கள். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வருகிறார்களா அல்லது சாமியாருக்கா என்று தெரியவில்லை. பேசாமல் இந்த சாமியாரை கவர்னராக நியமித்துவிடலாம்.

எடியூரப்பா ராஜிநாமா செய்துவிட்டு நான் மக்களுக்கு என்னவெல்லாம் செய்தேன் என்று ஒரு பெரிய பேராசிரியர் போல பிரசங்கம் வேற செய்தார். இவர் குடும்பம் எவ்வளவு கொள்ளை அடித்தது என்று சொல்ல மறந்துவிட்டார். எடியூரப்பா எதிர் கோஷ்டியான ஜெகதீஷ் ஷெட்டாரும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேரும் முதல்வர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். பிஜேபி கட்டுக்கோப்பான கட்சி என்பது அந்த காலம். இப்ப பிஜேபி 'எக் புர்ஜி மாதிரி' ஆகிவிட்டது. எப்படியோ நியூஸில் மட்டும் இவருக்குப் பேர் வந்துவிடுகிறது. கலைஞர் பதவி இழந்ததும் குடும்பத்தாலே, எடியூரப்பா பதவி இழந்ததும் குடும்பாத்தாலே.

தற்போது தமிழ்நாட்டில் ஒருநாள் உண்ணாவிரதம் மாதிரி ஒரு மணி நேர கைது வைபவம் நடைபெறுகிறது. இதே மாதிரி சன் டிவி குழுவினர் கைதானால் ஸ்டாலின் மறியல் போராட்டம் செய்வாரா? தேர்தலில் தோல்வி என்பது சகஜம். போட்டிருக்கும் சட்டை கிழிந்து விடுவது போல’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். ஆனால் கிழிந்தது சட்டை இல்லை ஜட்டி என்று தமிழக மக்களுக்கு தெரியும்.

தன்னுடைய ஆடை, அலங்காரம் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானிகர் கோபம் அடைந்துள்ளார். இவர் போட்டுக்கொண்ட ஷூ, கோட், சுடிதார், வைர கம்மல், முத்துமாலை, டிசைனர் கண்ணாடி, டிசைனர் பேக் என்று செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள், மும்பை குண்டு வெடிப்பு பற்றி மறந்துவிட்டார்கள். பத்திரிக்கைக்கு ஹாட் என்றால் அது இது மாதிரி செய்திகள் தான்.

இன்றைய ஹாட் டாப்பிக் சோனியா காந்தி அமெரிக்கா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது தான். இந்தியாவில் ராஜிவ் காந்தி பெயரில் எவ்வளவோ ஆஸ்பத்திரிகள் இருக்கிறது ஆனால் அது எல்லாம் ஏழைகளுக்கு தான். நம் அரசியல்வாதிகளுக்கு அமெரிக்கா அல்லது லண்டன் ஆஸ்பத்திரிகள் தான். ஆனால் அதிமுக அமைச்சர் கருப்பசாமி. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். பண கஷ்டம் தான் காரணம். இதை கேள்விப்பட்ட ஜெயலலிதா அவருக்கு அப்போலோ மருத்துவனையில் சேர்க்க உத்தரவிட்டாராம். சோனியா காந்தி இந்த சந்தர்பத்தில் ராகுல் காந்தியிடன் காங்கிரஸ் பொறுப்பை கொடுத்துவிட்டார். கொஞ்ச நாளா ராகுல் பாதை யாத்திரை எல்லாம் செய்தது இதற்கு தான் போல. ஸ்டாலினை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

சோனியா காந்தி அமெரிக்க பயணம் குறித்து சில உண்மையான ஜோக்ஸ் - காங்கிரஸ் தலைவர் சோனியா சுகவீனமாக இருப்பதால், தெலுங்கானா போராட்டத்தை அதன் தலைவர்கள் ஒத்திவைக்க வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே போல கலைஞர் பதிலுக்கு அன்னை நலம் பெறவேண்டி ஒரு தந்தியானும் அனுப்பிவிட்டார். ஷீலா தீக்ஷித் சோனியா வரும் வரை ராஜிநாமா செய்ய மாட்டார் இப்படி நாடே சோனியாவிற்கு காத்துக்கொண்டு இருக்கும். அன்னா கூட லோக் பால் உண்ணாவிருதத்தை ஒத்து வைத்தாலும் வைப்பார். பார்க்கலாம்.

இப்படி காங்கிரஸ் தினம் தினம் தினம் தினம் சந்திக்கும் தலைவலி காரணமாக தங்கபாலு ராஜினாமா கடிதம் கொடுத்து இரண்டு மாதங்களாகியும், தமிழக காங்கிரஸ் தலைமைக்கு வேறு ஒருவரை நியமிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. இளங்கோவன் ஒரு பேட்டியில் அடுத்த காங்கிரஸ் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு " காங்கிரஸ் கட்சியை வளர்ப்பவராக இருக்க வேண்டும். திராவிடக் கட்சிகளுக்கு ஜால்ரா போடுபவராக இருக்கக்கூடாது" என்கிறார். நடக்கிற விஷயமா?

கலைஞருக்கு ஜால்ரா அடித்த ஜாப்ர்சேட் நிலமை இப்ப பாவமாக இருக்கிறது. கலைஞர் ஜாபர்சேட் பற்றி அறிக்கையில் "தற்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர்தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர்சேட், ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை" என்று ஒரு போடு போட்டுள்ளார். ராஜாவை ஜெயிலில் போட்டால் தலித் என்பது, ஜாபர் சேட் மீது நடவடிக்கை எடுத்தால் இஸ்லாமியர் என்பது என்று கலைஞர் தான் எப்பவுமே ஒரே மாதிரிதான் என்று காட்டியுள்ளார். ஆனால் இந்த அறிக்கை எல்லாம் ஏனோ பரப்பரப்பாக பேசபடவில்லை.

இப்ப இண்டஸ்ட்ரியில் பரபரப்பு த்ரிஷா கல்யாணம் என்பது தான். ஏதோ ரெண்டு மாப்பிளைகள் ரெடியாம். அவர்களை ஒருவரை முடிவு பண்ணி அக்டோபரில் நிச்சயம் பிறகு அடுத்த வருஷம் கல்யாணம் என்று செய்தி போட்டு பத்திரிகைகள் காசு பாக்கின்றன. மாப்பிளைகள் ஜவுளி கடை புடவை மாதிரி ஆகிவிட்டார்கள். இன்று த்ரிஷாவே இப்டி சொல்லி இருக்காரு. "நான் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. அக்டோபரில் திருமண நிச்சயதார்த்தம் என தகவல் பரவியுள்ளது. அதில் உண்மை இல்லை. இப்போதைக்கு திருமணம் இருக்காது. எனக்கு மாப்பிள்ளையாக வருபவரை இதுவரை சந்திக்க வில்லை. சந்திக்கும்போது திருமணம் செய்வேன். என்னைப்பற்றிய திருமண வதந்திகள் உண்மையாக இருந்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன்." இன்னும் கொஞ்சநாளைக்கு ரசிகர்கள் சந்தோஷமா இருக்கலாம்.

லண்டனில் கிரிக்கெட் பால் அடிக்க தெரியாத இந்திய அணியை பார்த்து வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி - அமலாபால் தனுஷ் சேர்ந்து அடுத்த படம் நடிக்க போகிறார்கள். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா டைரக்டு செய்யும் படத்துக்கு பெயர் `3'. ரசிகர்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தும் அமலாபால் மாதிரி லோக் பால் பாராளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்துகிறது. படம் ஓடுமா என்று தெரியாது ஆனால்
ஓடிக்கொண்டு இருந்த 2G வழக்கு இப்ப மெதுவாக நடக்க ஆரம்பித்திருக்கிறதாம். சில மாதங்களில் கனிமொழிக்கு ஜாமின் கிடைத்து அவர் கேபினெட் அமைச்சர் ஆகிவிடுவார் என்கிறார்கள். எப்படியோ செம்மொழிக்கு கேபினெட் அந்தஸ்து கிடைத்தால் சரி.

தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கைவரி விலக்கு கிடையாது என்று ஜெ சொல்லிவிட்டார். இனி தரமான படமாக இருந்தால் தான் வரிவிலக்கு என்று சொல்லிவிட்டார். இனி தமிழ் பட இயக்குனர்களுக்கு தலைவலி தான், அவர்களால் எப்படி முடியும் ?



வடிவேலு ஜெயலலிதாவை சந்திக்க போகிறாராம். - இது எல்லாம் அரசியலில்...

Read More...

Monday, August 01, 2011

சமச்சீர் கல்வி பற்றி சோ

சமச்சீர் கல்வி பற்றி சோ எழுதிய துக்ளக் கட்டுரை வாசகர் விருப்பம்...


இதற்கு, ஜனநாயகம் உகந்தது அல்ல!

எம்.எல்.ஏ. : (இரு மாணவர்களைப் பார்த்து) நாட்டிலே படிப்பு மேலே அக்கறை இல்லை. உங்களையே கேக்கறேன். ஒளுங்கா படிக்கிறீங்களாய்யா நீங்க? என்ன படிக்கிறோம்னு உங்களுக்கே தெரியலை. நீங்க என்ன படிக்கிறீங்கன்னு உங்களுக்கு தெரியுமாய்யா?

ஒரு மாணவன் : எப்படி ஸார் தெரியும்? நீங்கதான் எங்க பாடங்களை தினம் தினம் மாத்தறீங்களே! தினம் ஒரு எஜுகேஷனல் பாலிஸி! காலண்டர்லே தேதி கிழிக்கிற மாதிரி, கிழிச்சுத் தள்றீங்க! என்ன படிக்கிறோம்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? இன்னைக்கு படிக்கிறதுக்கு நாளைக்கு மதிப்பு கிடையாது! எதுக்கு ஸார் படிக்கணும்?

– இது 1961-ல் எழுதி, நடிக்கப்பட்ட ‘கோ வாடிஸ்?’ (எங்கே போகிறாய்?) என்ற எங்கள் நாடகத்தில் வருகிற வசனம்.

ஐம்பது ஆண்டுகள் கழிந்துள்ளன; ஆனால் மாணவர்களின் நிலை மாறவில்லை.

சென்ற ஆட்சியாளர்கள் சமச்சீர் கல்வி என்ற பெயரில், ஒரு ஸ்டண்ட் அடித்தாலும் அடித்தார்கள் – ஆட்சி மாறியும், அதன் பாதிப்பு அகலவில்லை; குழப்பம் தீரவில்லை. புதிய ஆட்சி, ‘சமச்சீர் கல்வி முறையில் மாற்றங்கள் தேவை’ என்று முடிவு எடுத்தது; இதற்கு உயர் நீதிமன்றத் தடை வந்தது; தமிழக அரசு அப்பீல் செய்தது; சுப்ரீம் கோர்ட், ‘ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தேவை’ என்றும், ‘மற்றபடி இதை பரிசீலிக்க ஒரு கமிட்டி நியமிக்கப்பட வேண்டும்’ என்றும் உத்திரவிட்டது.

‘1-ஆம் வகுப்பில் சமச்சீர் முறையில் படித்துவிட்டு, பிறகு அது மாறினால், 2-ஆம் வகுப்பில் வேறு முறை; அதுபோல ஆறாம் வகுப்பில் சமச்சீர் முறை – அது மாறினால் 7-ஆம் வகுப்பில் வேறு முறை’ என்ற விளைவை ஏற்படுத்தக் கூடிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குழப்பத்தைத் தீர்க்கவில்லை; கூட்டியது. இத்துடன் உயர் நீதிமன்ற விசாரணைக்கு, விஷயத்தை அனுப்பி வைத்தது சுப்ரீம் கோர்ட்.

இப்போது சென்னை உயர் நீதிமன்றம், எல்லா வகுப்புகளுக்குமே சமச்சீர் கல்வி கற்பதற்கான புத்தகங்கள் ஜூலை 22-ஆம் தேதிக்குள் கொடுக்கப்பட வேண்டும் – என்று தீர்ப்பளித்து விட்டது.

தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டிற்குச் சென்றது. ‘ஹைகோர்ட் உத்திரவிற்குத் தடை கிடையாது; ஆனால் தமிழக அரசின் அப்பீல் பரிசீலிக்கப்படும்; அதே சமயத்தில் சென்னை ஹைகோர்ட் கூறியபடி, சமச்சீர் கல்விப் புத்தகங்கள் கொடுக்கப்படுவதற்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை அவகாசம்’ என்று உத்திரவிட்டிருக்கிறது.

ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு செய்துள்ள அப்பீல் முடிவாகவில்லை; அப்பீல் தமிழக அரசுக்குச் சாதகமாக முடிந்தால், சமச்சீர் புத்தகங்கள் தேவைப்படாது; ஆனால் சுப்ரீம் கோர்ட் ‘ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்கள் வினியோகிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது; அப்பீலில் இறுதி தீர்ப்பு வருவதற்குள், தமிழக அரசின் நிலைக்கு எதிராக அமைகிற இந்த உத்திரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்பது புரியவில்லை.

இதற்கிடையில் மாணவர்களின் கல்வி ஆண்டில், இரண்டு மாதங்கள் கோவிந்தா! என்ன படிக்கப் போகிறோம் என்பது அவர்களுக்கு இன்னமும் தெரியாது. சென்ற அரசின் சமச்சீர், சமத்தாழ்வுதான்; அதை நீதிமன்றம் ஏற்றது சரியல்ல; கொள்கை முடிவில் நீதிமன்றம் குறுக்கிட்டதாகத்தான் இது காட்சியளித்தது. ஆனால், சரியோ தவறோ, நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தபோது – நிச்சயமற்ற தன்மை தொடர்வதால், மாணவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சனையை மனதில் கொண்டு – புதிய அரசு, இந்த ஆண்டு அதையே அமல்செய்து, அடுத்த ஆண்டுக்கு மாற்றங்களுடன் கூடிய புதிய முறையை வகுத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல், ‘அப்பீல்கள் செய்து, தமிழக அரசு மாணவர்களின் குழப்பத்தை நீட்டித்தது; இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்’ – என்ற விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது. இனி சுப்ரீம் கோர்ட் இறுதியாகத் தன் தீர்ப்பைக் கூறிய பிறகு (ஜூலை 26-ஆம் தேதி), மாணவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டால்தான் உண்டு.

இவை ஒருபுறம் இருக்க, இந்த சமச்சீர் விவகாரம், வெறும் வாய்ச் சவடால் சீர்திருத்தம் என்பது, அந்த சமச்சீருக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கூறுகிற கருத்துக்களிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

சமச்சீர் வக்காலத்துக்கள் என்ன சொல்கின்றன? ‘வசதி உள்ளவர்கள் மட்டும், நல்ல தரமுள்ள கல்வியைப் பெறுவது; மற்றவர்கள் சாதாரண கல்வியைப் பெறுவது – என்கிற நிலை அநீதி அல்லவா?’

அதாவது, ‘சில வழிமுறைகளில் (மெட்ரிகுலேஷன் போன்ற) தரமான கல்வி புகட்டப்படுகிறது’ என்பதை இவர்கள் ஏற்கிறார்கள். இப்படி வசதியுள்ளவர்கள் பெறுகிற கல்விக்கு நிகராக, வசதி அற்றவர்களுக்குக் கிட்டும் கல்வியையும் உயர்த்த வேண்டியதுதானே? அது முடியவில்லை. அதற்கு வக்கில்லை. ஆகையால், உயர்ந்தவற்றையும் தாழ்த்தி, சமச்சீர் கல்வி தருவதுதான் நியாயம் – என்பது இவர்கள் வாதம்.

‘சிலர் விமானத்தில் போகிறார்கள்; சிலர் கார்களில் போகிறார்கள்; சிலர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள்; ஆனால், பலர் நடந்து போகிறார்களே! ஐயோ, இந்த அநீதி தொடரலாமா? இனி ‘கால் நடை’தான் எல்லோருக்கும் சமச்சீர் போக்குவரத்து’ என்று சொல்வதா நியாயம்?

இந்த சமச்சீர் வக்காலத்துகளுக்கு, வசதியிருப்பவர்களைப் பார்த்தால் துக்கம் பொங்கிக் கொண்டு வருகிறது. அந்தத் துக்கம் கல்வியுடன் மட்டும் நிற்பது என்ன நியாயம்? வசதியுள்ளவர்களின் பிள்ளைகள், நல்ல ஹோட்டல்களில் சாப்பிடுகிறபோது, வசதி அற்றவர்களின் பிள்ளைகள் டீக்கடைகளில் ‘ஸிங்கிள் டீ, டபுள் பொரை’ சாப்பிடுவது என்ன நியாயம்? எல்லோருக்கும் வசதியான ஹோட்டல் சாப்பாடு தர முடியாது; ஆனால் சம நிலை வேண்டும்; ஆகையால் இனி எல்லோரும் ‘ஸிங்கிள் டீ, டபுள் பொரைதான்’! சமச்சீர் சிற்றுண்டி!

இந்தப் பித்துக்குளித்தனத்திற்கு ஒரு எல்லை உண்டா என்ன? சமச்சீர் கல்வி மட்டும்தான் இன்றைய அவசியத் தேவையா? சமச்சீர் சாப்பாடு – சமச்சீர் போக்குவரத்து... என்று கொண்டு வந்து, சமச்சீர் என்ற பெயரில் எதிலும் தரமே கூடாது என்று செய்து விட்டால், அதன் பின்னர் உயர்வு ஏது? தாழ்வு ஏது?

இந்த சமச்சீர் சன்மார்க்கவாதிகளின் பார்வை, இப்போது அரசு அதிகாரிகளின் பக்கம் திரும்பி இருக்கிறது. ‘அதிகாரிகள், தங்கள் வீட்டுச் சிறுவர் சிறுமிகளை, அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும். அவர்களே இதைச் செய்யவில்லை என்றால், அப்புறம் அரசுப் பள்ளிகளுக்கு என்ன மரியாதை?’ என்று ஒரு வாதம் புறப்பட்டிருக்கிறது. இத்துடன் விடுவானேன்? ‘அரசு அதிகாரிகள் காரிலோ, வேறு எந்த வாகனத்திலோ போகக்கூடாது; அவர்கள் அரசு பஸ்ஸில்தான் – மன்னிக்கவும் – அரசுப் பேருந்தில்தான் செல்ல வேண்டும்; இல்லாவிட்டால், அரசுப் பேருந்துகளை யார் மதிப்பார்கள்?’ என்று வாதம் புரிந்து, அரசு அதிகாரிகளை ஒரு அமுக்கு அமுக்க வேண்டியதுதானே!

அதே மாதிரி, அந்த அதிகாரிகள் தங்கள் வீடுகளில் அல்லது ஃப்ளாட்களில் குடியிருக்கும் அக்கிரமத்தை நிறுத்த வேண்டும். பல பிள்ளைகள் குடிசைகளில் வாழ்கிறபோது, இந்த அரசு அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு வீடும், ஃப்ளாட்டும் வேண்டிக் கிடக்கிறதா? அட்டூழியம். குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில்தான் அவர்கள் இனி குடியிருக்க வேண்டும். அப்போதுதான் சமச்சீர் குடியிருப்பு உருவாகி, சமநீதி வேரூன்றி, சமத்தாழ்வு முழுமை அடையும்.

அதாவது, சமத்துவம்தான் நமது லட்சியம் என்றால், அதைக் கல்வியோடு நிறுத்துவானேன்? எங்கும் சமத்துவம், எதிலும் சமத்துவம் வேண்டாமா? உணவு, இருப்பிடம் போன்றவையும் தேவைகள் அல்லவா? அதில் எல்லாம் சமத்தாழ்வு வேண்டாமா? இதுதான் லட்சியம் என்றால் – பேசாமல், கம்யூனிஸப் பிரேதத்தை, அதன் சமாதியிலிருந்து தோண்டி எடுத்து, அந்தப் பிரேதத்திற்கு சமநீதி இயந்திரத்தைப் பொருத்தி, அதை இயக்கி, முழு சமத்தாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!

இந்த சமச்சீர் பேர்வழிகள், சென்ற அரசு, சமச்சீரினால் கல்வியைத் தாக்கியபோது, அதை ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்கள். தரம் தாழ்வது பற்றி அப்போது இவர்கள் பேசவில்லை. சரி. இப்போது, ‘சமச்சீர்தான் உயர்வு’ என்கிறார்கள். ஒரே பாடத் திட்டம் வந்தால், அது உயர்வாகி விடுமா?

தரமுள்ள கல்வி தரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முயற்சியில் நம்பிக்கை; பல வகைப்பட்ட திறன்களுக்கு ஊக்கம்; பொதுஅறிவு; நல்ல நடத்தை; ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிற திறமை; தன்னுடைய எண்ணத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிற திறன்; தன்னம்பிக்கை... போன்ற பல நன்மைகள் கிட்டுகின்றன.

அதனால்தான், நல்ல பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், தைரியமாகப் பேசுகின்றன; நன்றாக நடந்து கொள்கின்றன; நம்பிக்கையுடன் உலவுகின்றன. இந்த மாதிரி கல்வி தரக் கூடிய தன்னம்பிக்கை, ஆங்கில அறிவு, தைரியம் போன்றவற்றுக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் உதாரணமாகத் திகழ்கின்றனர்; இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கூட அவர்களில் ஒருவர். அதனால்தான், இம்மாதிரி கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக, சமத்தாழ்வு கல்வியை மாற்றுவதற்கான நடவடிக்கையை அவர் எடுத்தாரோ, என்னவோ!

இந்த மாதிரி கல்வியைப் புகட்டும் பள்ளிகளில் ஒரு தனி கலாசாரம் நிலவுகிறது; அது ஜாதிக் கலாசாரம் அல்ல; பணக் கலாசாரம் அல்ல; அது முனைப்பு கலாசாரம்; தன்னம்பிக்கையை தருகிற கலாசாரம். பாடத் திட்டங்களினால் மட்டும் அதை சாதிக்க முடியாது. நல்ல ஆசிரியர்கள் தேவை; நல்ல நோக்கம் தேவை. இன்றைய அரசுப் பள்ளிகளில் இவை இருக்கின்றன என்று கூறுவது அபத்தம் கூட அல்ல – அநியாயம்.

‘சரி, இதெல்லாம் வேண்டாம்; நம்மால் ஆகாது; ஆகையால், சமத்தாழ்வுதான் ஒரே வழி’ என்று தீர்மானித்த பிறகு – அதை ஏன் பள்ளிகளோடு நிறுத்த வேண்டும்? அது என்ன நியாயம்? கல்லூரியில் சமத்தாழ்வு வேண்டாமா? உதாரணத்திற்கு, சிலர் மட்டுமே – மருத்துவப் படிப்பு பெற முடிகிறது. அதாவது வசதி படைத்த வர்க்கத்தினர் மட்டுமே மருத்துவப் படிப்பு பெற முடிகிறது. அநியாயம் இல்லையா இது?

எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும், அலோபதி மருத்துவ முறையை போதிக்க முடியாது. ஆகையால், சித்த வைத்தியம்தான் இனி மருத்துவக் கல்லூரிகளில் போதிக்கப்படும் என்று சட்டம் இயற்றினால் – அடடா! நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது! சமச்சீர் மருத்துவம் வந்து விடுமே! சிலர் மட்டும், உயர்ந்த பயிற்சி பெறுகிற அவலநிலை மாறி எல்லோருக்கும் லேகியம், சூரணம் பற்றிய பயிற்சி! ஆஹா!

இந்த சமச்சீர் அபத்தத்தை ஆரவாரத்துடன் வரவேற்பவர்கள் யார் என்று பார்த்தாலே, இது வெறும் உடான்ஸ் என்பது புரியும். தங்கள் வீட்டுக் குழந்தைகளை, மிக நல்ல தனியார் பள்ளிகளிலும், அயல்நாடுகளிலும் கூட படிக்க வைக்கிற தலைவர்கள்; வசதிக் குறைவு இல்லாத அறிவாளிகள்... போன்றவர்கள்தான் இந்தச் சமச்சீர் வக்காலத்து ஆசாமிகள்... அதாவது, வசதியானவர்களால் வசதியானவர்களுக்காக நடத்தப்படுகிற, வசதியானவர்களின் பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்று. இந்த மேடை முழக்கத்தினால் அவர்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. இவர்களுடைய சமச்சீர் புரூடா, சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளும். அதனால் அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்களுடைய வீட்டுப் பிள்ளைகள், சென்ட்ரல் போர்ட் முறையில் படிப்பார்கள். சமச்சீர் சாமியாட்டம் அவர்களைப் பாதிக்கப் போவதில்லை.

ஆகையால், இந்த சமத்தாழ்வை வரவேற்கிற அப்பாவிகள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். தங்கள் மகன் அல்லது மகள் என்ன கல்வி பெறுவது என்பது, பெற்றவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது அல்ல என்றால் – அதற்கு ஜனநாயக ஆட்சி முறை உகந்தது அல்ல. பேசாமல், சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்துவிட வேண்டியது தான்.

இப்போது, சமச்சீர் குடாக்குத்தனம், சமூகத்தைப் பீடித்திருப்பதால் என்ன நடக்கும்? இந்த சமச்சீர் தாக்குதலினால் பாதிக்கப்படாதவர்கள் பலர் உண்டு; அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வீட்டுப் பிள்ளைகளை, மத்திய கல்வி முறைக்கு (சென்ட்ரல் போர்ட்) மாற்றி விடுவார்கள். இந்தச் சமச்சீர் பித்துக்குளித்தனம், தன்னுள்ளே அடக்கியுள்ள நன்மை இது ஒன்றுதான்!


சரி, தமிழகத்தின் கதி? அதற்கென்ன? இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்நாளும் காப்போம் – கல்வியின் தரத்தினை அழித்திடுவோம்!.
நன்றி: துக்ளக்

Read More...