பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 09, 2011

சிதம்பரம் - தொகுதி ரவுண்ட் அப் - இன்பா

சிதம்பரம். உலக புகழ் பெற்ற அருள்மிகு நடராஜர் ஆலயம், அங்கு வருடந்தோறும் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா, அண்ணாமலை பல்கலைகழகம் இவற்றுக்கெல்லாம் பெயர் பெற்ற சிதம்பரம் நகரம், கடந்த ஐந்து வருடங்கள் முன்புவரை வேறு ஒரு விஷயத்திற்கும், தமிழகம் முழுக்க பெயர் பெற்று இருந்தது....அது, ரவுடியிசம்.

தெலுங்கு படங்களில் பார்ப்பதை போன்ற கட்டபஞ்சாயத்துக்கள்,கடைக்கு கடை மாமூல் வசூல், ஒயின்ஸ் ஷாப் மற்றும் சைக்கிள் கடை ஏல அடிதடிகள் இவை எல்லாம் கொஞ்ச காலம் முன்பு வரை இங்கு சகஜம்.

"பண்ணையில கூப்புடுறாங்க" என்று யாருக்காவது அழைப்பு வந்தால், சென்றவர் சேதாரம் இல்லாமல் திரும்பி வந்தாலே அது எங்கள் ஊரை பொறுத்தவரை பெரிய விஷயம். ஒயின்ஸ் ஷாப் உட்பட அனைத்து சங்கதிகளையும், நகரின் முக்கிய பரிமாற்றங்களையும், கட்டபஞ்சாயத்துக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்த, இருக்கும் "பண்ணையின்" உரிமையாளர்களில் ஒருவரும் , தற்போது திமுக கூட்டணியில் உள்ள மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவரும்(!) ஆன, ஸ்ரீதர் வாண்டையார்தான், தற்போது திமுக கூட்டணி வேட்பாளர்.


மூவேந்தர் முன்னேற்ற கழகம் என்பது முக்குலத்தொருக்கான ஒரு சாதி கட்சி.இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்...தேவர் சமுகம் சிதம்பரத்தில் இரண்டு சதவீதம் கூட இல்லை. வன்னியர்கள் சுமார் நாற்பது சதவிதமும், தலித்துக்கள் சுமார் இருபத்தி ஐந்து சதவிதமும், செட்டியார்கள், முதலியார்கள்,பிராமணர்கள் உள்ளிட்டோர்தான் இங்கு அதிகம்.

தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சாதியின் பெயரால் இயங்கும் சாதிகட்சிக்கு, திமுகவில் சீட் கிடைத்ததின் மூலம், ஸ்ரீதர் வாண்டையாரின் செல்வாக்கை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

சிதம்பரம் நகரில் மாரியப்பா தியேட்டர், நவநீதம் காம்ப்ளெக்ஸ், ஜி,எம் திருமண மண்டபம் என்று இவர்களது சொத்துக்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் அவரது சகோதரர் பிரேம்குமார் வாண்டையார் ஆகியோரின் முழு கட்டுப்பாடு அல்லது ஆக்கிரமிப்பில் இருந்தது சிதம்பரம். இதில்,பிரேம்குமார் வாண்டையார், பசும்பொன் படத்தில், ஒரு பாடலில் சிவாஜி அவர்களுக்கு மாலை அணிவிப்பார்.

இத்தகைய கட்சிகளை நீங்கள் தமிழ் சினிமாவில்தான் பார்த்து இருப்பீர்கள். அப்போது, நீங்கள் ஒரு சிறிய பெட்டிக்கடை திறந்தாலும்,இவர்களின் படங்கள் கடையில் இருக்க வேண்டும். இவரகளுக்கு நிலமோ, வீடோ,வர்த்தக நிறுவனமோ வேண்டும் என்றால், அது உடனே இவர்கள் பெயருக்கு வந்தாக வேண்டும்.

நகருக்கு வரவேண்டிய மேம்பாலம், இவர்களது மாரியப்பா தியேட்டர் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால், பல வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள். சில வருடங்களுக்கு முன்புதான் அது கட்டப்பட்டு, திறக்கப்பட்டது.

இவர்களின் இந்த ஆட்சியை பார்த்து, சின்னக்கடை தெரு,தோப்பு செட்டு என்று இரண்டு பெரிய தாதா கோஷ்டிகள் நகரில் உருவாகின. மாமூல் வசூலால், சிறு வியாபாரிகளும், கிராமப்புறங்களில் இருந்து காய்கறி வியாபாரம் செய்தவர்களும் கூட கடுமையாக பாதிக்கபட்டனர்.

எல்லாரும் உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருந்த வேளையில், 1998 வருடம் பாமகவில் முக்கிய பிரமுகராக இருந்த பழனிவேல் என்பவர் பட்டபகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார். வாண்டையார் சகோதரர்களை, ஏல விவகாரங்களில் தொடர்ந்து எதிர்த்து செயல்பட்டவர் பழனிவேல்.

உடனே, களத்தில் இறங்கினார் "வன்னியர் குல தந்தை" டாக்டர் ராமதாஸ். அதுவரை காத்து கொண்டிருந்த அனைத்து கட்சிகளும், அனைத்து சாதி மக்களும்,ராமதாஸ் தலைமையில் வாண்டையார் சகோதரர்களுக்கு எதிராக அணி திரண்டனர்.இதன் பிறகு, நடந்த கண்டன ஊர்வலத்தில் பயங்கர கலவரம் வெடித்தது. வாண்டையாரின் சொத்துக்கள்,அவரது ஆதரவாளர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட, மதுரையில் இருந்து சுமார் 500 ஆட்களை கொண்டு வந்து இறக்கினார்கள் வாண்டையார்கள்.

தொடர் போராட்டங்களால், அன்று இருந்த திமுக அரசு, இதே முதல்வர் கருணாநிதி, பழனிவேல் கொலை தொடர்பாக வாண்டையார் சகோதரர்களை கைது செய்ய, உத்தரவு பிறப்பித்தார். அவர்களும், தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைந்தனர். பின்னர், ஜாமீனில் வெளி வந்த பிரேம்குமார் வாண்டையார், ஒரு சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

அதன்பிறகு, பேருந்து நிலையத்தையும், பல்கலைகழகத்தையும் இணைக்கும் மேம்பாலம் கட்டப்பட்டு, ரவுடியிசங்கள் குறைந்த, வர்த்தகம் நிறைந்த நகரமாக இப்போது வளர்ந்து வருகிறது சிதம்பரம்.

கொலை குற்றவாளிகள் என்று கூறி, வாண்டையாரை கைது செய்த கருணாநிதி, இன்று அவருக்கே சீட் வழங்கி இருக்கிறார்.

"கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலே, ரவுடிங்க தொல்லை அதிகமாகிவிடும்" என்று எனக்கு தெரிந்த ஒரு பெரியவர் சொன்னார். அந்த காலம் முதல் இந்த காலம் வரை சமுக குற்றவாளிகளுக்கு, திமுக ஆட்சியில் கிடைப்பது போன்ற சுதந்திரம் வேறு எந்த ஆட்சியிலும் கிடைக்காது.

யாரை எதிர்த்து கடலூர் மாவட்ட வன்னியர்களிடம் தனது செல்வாக்கையை நிலை நாட்டினாரோ, அவரை ஆதரித்து தற்போது பிரச்சாரம் செய்தார் டாக்டர் ராமதாஸ். சிதம்பரத்தில் நடந்த திமுக கூட்டணி பிரச்சார கூட்டத்தில், தலைமை தாங்கியதோடு,ஸ்ரீதர் வாண்டையாரை வெற்றி பெற செய்யவேண்டுமாய் ராமதாஸ் பேசியது, அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தை, சுயநலத்தையும் காட்டும் ஒரு மிக சிறந்த உதாரணம்.

போக்குவரத்து, சாலை வசதிகள் இல்லாததால் புகழ்பெற முடியாத பிச்சாவரம், நடராஜர் கோவிலில் பரம்பரையாய் இருந்துவந்த உரிமை, மாற்று ஏற்பாடுஇன்றி பறிக்கபட்டதால், பதட்டத்தில் வாழும் தீட்சிதர் குடும்பங்கள், சீர்படுத்த படாத பேருந்துநிலையம்,அதை சுற்றிஉள்ள சாலைகள், ஓவ்வொரு மழைகாலத்திலும், வெள்ளத்தில் தனித்தீவாய் தத்தளிக்கும் பகுதிகள்...இவை எல்லாம் வெற்றியை தீர்மானிக்கும் தொகுதின் பிரச்சினைகள்.

ஸ்ரீதர் வாண்டையாருக்கு எதிராக, அதிமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், திரு.பாலகிருஷ்ணன்.

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க செயலாளர். தொகுதிக்கு சுற்றி உள்ள கிராமபுறங்களில், இக்கட்சிக்கு கணிசமாக செல்வாக்கு உள்ளதால், கடந்த முறை திமுக கூட்டணியிலும், இந்த முறை அதிமுக கூட்டணியிலும், சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கே ஒதுக்கபட்டது.பாலகிருஷ்ணன் அவர்களின் சொந்த ஊரும் சிதம்பரம்தான் என்பதோடு, எளிமைக்கு மிகவும் பெயர் பெற்றவர் அவர்.

கடந்த 2006 ஆண்டு, சட்டமன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளர் திரு.அருள்மொழி தேவன், சுமார் 56000 பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்.

இந்த முறையும், ஸ்ரீதர் வாண்டையாருக்கு எதிரான மக்கள் வெறுப்பு கூடுதலாக இணைய, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிக்கே வெற்றிவாய்ப்புகள் தெரிகின்றன.

ஆனால், செலவு செய்வதில் பெயர் பெற்ற திமுக அத்தோடு சிதம்பரத்தில் பெரும் பணக்காரரான ஸ்ரீதர் வாண்டையாரின் கூட்டணி, பணத்தை 'டாஸ்மாக் சரக்காய்' வாரி இறைத்து வருகிறார்கள். தேர்தல் ஆணையர் சொல்வதுபோல, பணம்தான் நம் தமிழகத்தில் வெற்றியை தீர்மானிக்கும் காரணியா? சரியான பதில்....வரும் சட்டமன்ற தேர்தலில்...சிதம்பரம் தொகுதியின் தேர்தல் முடிவுகளில் கிடைக்கும்.

-இன்பா


13 Comments:

Anonymous said...

இந்தக் கொள்ளையர்களை தவிர்க்க எத்தனை லோக்பால் வரவேண்டும்?

அப்பாதுரை said...

வாண்டையார் கதை சுவாரசியமாக இருக்கிறது - வன்முறை சினிமாவுக்கானக் கதை. தொகுதியில் அரசியல் நிலவரம் வெற்றி வாய்ப்பு பற்றியும் கொஞ்சம் விவரம் சேர்த்திருக்கலாம். பாலகிருஷ்ணனுக்கு ஆதரவு அதிகமாகியிருக்கிறதா?
தொகுப்புக்கு நன்றி.

உங்கள் தோழி கிருத்திகா said...

aagaa enga oora pathi achu pisagaama eluthi irukkinga!!!!!

கானகம் said...

சல்லிப்பயகளும், ரவுடிகளும்தான் அரசியலை தீர்மானிக்கிறார்கள் என்பதற்கு இந்தா ஆளின் சரித்திரமே ஒரு சாட்சி. கருணாநிதியின் தூய ஆட்சிக்கும்...

Cuddalore Ghouse said...

செழிப்புமிக்க
சிதம்பரத்தின்
சீர்கேடுகளை
சுருங்கிய
செய்தியாய்
சமர்ப்பித்து,
சிறப்பான
சமூக
சேவை
செய்திருக்கும், இனிய
சகோதரர் 'இன்பா', இன்றுபோல் இனியும்..
சுகமாய்
சுவாசிக்கணுமேயென்ற ...
சங்கடச்
சிந்தனையால்
சற்றே
சரிகின்றேன்...


தெளிவான அன்புடன்,

Anonymous said...

கருணாநிதிக்கு ஏன் ஓட்டு போடவேண்டும்?
1. பாமர மக்களின் வாழ்கை தரம் உயர காரணம் ( மேல் தட்டு மக்களின் அனைத்து சவுகர்யங்களும் அனைத்து பாமர மக்களும் அனுபவிகின்றனர், உதாரணம் செல் போன்)
2. அதிக இளைழர்கள் வேலை பெற பல தொழிற் சாலைகள் ,மென்பொருள் துறை மற்றும் ரோடு மற்றும் மேம் பாலங்கள் அமைத்து தமிழகத்தை முன்னேற செய்தது.
3. பட்டினி சாவு தவிர்க்க பாமர மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி மளிகை சாமான்கள்.
4. மின்துறையில் தன்னிறைவு பெற பல்வேறு மின் நிலையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. ( ஜெயா காலத்தில் எதுவும் கட்டாததால் தான் இப்போது மின்சார பற்றாக்குறை.( மின் நிலையம் கட்ட சுமார் ஐந்து வருடங்கள் ஆகும்) கருணாநிதி ஆட்சி காலத்தில் கட்டி வருகிற மின் நிலையங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் மின் உற்பத்தி தொடங்கும்.
உப்பு விலை அதிகரித்தால் நாட்டில் சுபிட்சம் என்று பொருள்( மழை பயத்தால் விளைச்சல் பெருகும், உப்பு உற்பத்தி செய்ய முடியாது.) அதே போல மின்சார உற்பத்தி பெருகியும் மின் பற்றாகுறை நிலவுகிறது. அதிக தொழிற்சாலைகள் வந்ததால் மின்சார தேவை அதிகரிப்பு.
5. கருணாநிதி மக்கள் மீது அன்பு செலுத்துபவர்.

Anonymous said...

ஜெயாவுக்கு ஏன் வோட்டு போட கூடாது:
1. மக்கள், தொழிலாளர், ஆசிரியர், விரோதி. பிள்ளை பாசம் இல்லாதவர். 2. பாமர மக்களுக்கு உதவி செய்த பலகர்ப்பிணி பெண்களின் நல உதவி, மகளிர் நல உதவிகளை நிறுத்தியவர். 3. பதவி ஒன்றே குறிக்கோள்.பதவி இன்றேல் கோட நாடு.
4. ரோடு, பாலம், கட்டிடம், தொழிற்சாலை , மின் நிலையம் என்று எந்த ஒரு திட்டமும் கொண்டு வராதவர்.
5. கோட நாட்டிலிருந்து அறிக்கை மட்டும் விடுப்பவர்.
அதற்க்கு பதில் தந்தால், கப் சிப் ஆகி விடுவார். ஏன் பொய்யாக குற்றம் சொன்னோம் என்பதற்கு பதில் கிடையாது. பத்திரிகைகள் அதை கண்டு கொள்ளாது.
6. முழு பொய் சொல்லுபவர்.ஒரு லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ( மக்களுக்கு லாபம்-குறைந்த கட்டணத்தில் மொபைல் கட்டணம் , அனைத்து தரப்பு மக்களுக்கும் ) என்பதை ஒரு லட்சம் கோடி கருணாநிதி குடுப்பம் கொள்ளை அடித்து விட்டனர் என்று பொய் பிரச்சாரம் செய்தவர். அதை அப்படியே ஊதி பொய்யை மக்களை நம்ப வாய்த்த பத்திரிகைகள். ஒரு ரூபாய் கூட லஞ்சம் பிடிபட்டதாக இதுவரை நிருபிக்க வில்லை. அம்மாவின் லஞ்சம் , அடாவடி, ஊர் அறிந்தது. 7. தருமபுரி பஸ் எரிப்பை கண்டிக்கதவர்.பெண் குழந்தைகளின் அருமை தெரியாதவர். அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காதவர்.. கொடும் கொலையாளிகளை கண்டிக்காதவர்
8. ஒரு லட்சம் அரசு உழியர்களை டிஸ்மிஸ் செய்து அதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறக்க மற்றும் அவர்கள் பெண்களின் திருமணம் நின்று போக காரணம் ஆனவர்.

Anonymous said...

துணிச்சலான பதிவு. மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாய பதிவு. வாழ்த்துக்கள்.

பரங்கிப்பேட்டை, புவனகிரி தொகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு சிதம்பரம் தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறை பரங்கிப்பேட்டை மக்களின் வாக்கு சிதம்பரம் தொகுதிக்கு செல்லவிருப்பதால் அவசியம் பரங்கிப்பேட்டை மக்கள் இப்பதிவை படிக்க வேண்டும்.

***சுடர்***

Anonymous said...

few corrections in this document, Palanivel did not belong to PMK, he was holding town office of MDMK.

Pranesh Maruthavanan said...

Balakrishnan undertook many struggles for the farmers and social causes whereas Vanadayar family looted the whole town for years. This election verdict will show what the exact people strength to them.

ஹம்துன்அஷ்ரப் said...

வாண்டையார் கதை நல்லாத்தான் இருக்கு,இருந்தாலும் தமிழ்சினிமாவை பார்த்து...பார்த்து...ரவுடியிசம் நம்ம தமிழக மக்கள் மனதில் நீங்காஇடம்பெற்றிருப்பதால் "வாண்டையாரின்"கடந்தக்கால வாழ்க்கையைப்பற்றி சிதம்பரம் தொகுதியில் மக்கள் யாரும் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை.காரணம் அரசியல் என்றாலே இப்பெவெல்லாம் ரவுடியிசம் இல்லாமலா?
மேலும் திருவாருர் தொகுதியில் கலைஞரை எதிர்த்து போட்டியிடும் "குடவாசல்"ராஜேந்திரன் செய்யாத அலம்பல்களா?!

R.Gopi said...

வாண்டையார் பற்றிய செய்திகள் பகீர் ரகம்..

படமாக்கப்பட்டால் அதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும்?

எனக்கு தெரிந்து வாண்டையாரின் கொட்டம் சிதம்பரத்தில் அடங்க வேண்டுமென்றால் “இன்பா” நேரடியாக களமிறங்கினால் மட்டுமே சாத்தியம்..

இன்பாவுக்கு மட்டுமே வாண்டையாரை முழுமையாக அடக்கும் சக்தி உண்டு..

இன்பாவின் முடிவில் தான் சிதம்பரத்து மக்களின் வாழ்வே அடங்கி இருக்கிறது..

bgopi said...

Well written inba and it is very true. Lets wait for the results ... i am confident that, this election will teach them a lesson ..

I studied out of chidambaram and knew majority of the issues mentioned here. While, i agree "roudism" is part of many political parties and many politician do that, but, the difference here is that, Sridhar is a "don" who is now trying to become "politician" which is lot different from other politicians ...

in fact, other politicians in Chidambaram are afraid that, if he comes as MLA, their career in politics will be questioned since, they cannot oppose Sridhar.