பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 31, 2011

தேர்தல் பற்றி ஞாநி


இன்று நடந்த கிழக்கு மொட்டை மாடி கூட்டதில் ஞாநி தேர்தல் பற்றிய பேச்சு..


Read More...

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 31-3-2011

அன்புள்ள இட்லிவடை,

சம்மர் சூடு தகிக்குமுன் சும்மாத் தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. நீ எஸ்.வி.சேகர் பேட்டி எடுத்துப் போட்ட வேளை அவருக்கு சீட் கிடைக்காமல் தங்கபாலுவின் மனைவிக்குக் கிடைத்தது. ஆனால் 2B மனுக்களில் அந்தம்மா கையெழுத்துப் போடவில்லையாம். 'கை'யெழுத்து போட தெரியாதவர் எப்படிக் கை சின்னத்தில் நிற்கத் துணிந்தார் என்று தெரியல. அதனால் இப்போ அந்த தொகுதியில் தலையெழுத்தே என தங்கபாலுவே போட்டி போடுகிறாராம். என்னாமாப் பிளான் பண்ணி இருக்காரு! இந்த நேரத்தில் இளங்கோவன் எங்கே போனார் என்று தெரியவில்லை. திமுக முக்கிய தலைவர்களே பயந்துக்கொண்டு சென்னையை விட்டு ஓடி போய் படிக்க தெரியாத கிராம மக்கள் இருக்கும் இடத்தில் நிற்கிறார்கள். இதற்கு தான் நாலு எழுத்து படிக்க தெரிந்திருக்க வேண்டும். நாலு எழுத்து வேண்டாம் அட்லீஸ்ட் இரண்டு எழுத்து அதும் 2G இது படிக்க தெரிந்தால் போறும் மக்கள் புத்திசாலியாகிவிடலாம்.


கருணாநிதியின் கை சுத்தம். "கடைசியாக ஒரு ஏழை தமிழ்நாட்டில் இருக்கும் வரையில், ஏழைகளுக்கான இலவசத் திட்டங்களை நிறுத்த மாட்டேன். ஏழைக்காக நான் செய்கின்ற இந்த காரியங்களை பரம ஏழைகளுக்காக செய்யும் இந்த காரியங்களை நான் நிறுத்த மாட்டேன். என்னை இந்தப் பதவியிலே உட்கார வைத்ததற்கான காரணம் என்னை வாழவைப்பதற்காக அல்ல" என்று சொல்லுகிறார். கலைஞர் டிவிக்கு 200 கோடி, ஸ்பெக்டரம் போன்ற ஊழலில் விசாரிக்கப்படும் கட்சி இப்படி பேசுவது வேடிக்கை, கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? இப்படிக் கேட்கப் படும் கேள்விகளுக்கும் அண்ணன் ரெடியா பதில் வெச்சு இருக்காரு. கலைஞர் டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. என்னோட பெயரை மட்டும்தான் வெச்சு இருக்காங்க. எனது மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி சரத் குமார் ஆகியோருக்கு தான் அதில் பங்குகள் உள்ளன என்று தெளிவா இன்று ஒரு ஆங்கில டிவியில் பேட்டி குடுத்து இருக்காரு.


தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்து சில நாட்களே ஆன நிலையில் தேர்தல் ஆணையம் இன்று கோர்ட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க போலீஸ் அதிகாரிகளே ஜீப்பில் பணம் கடத்துகிறார்கள் என்று கூறியுள்ளது. இதில் திடுக்கிட ஒன்று இல்லை, இதுவரை வாகன சோதனை தொடர்பாக 2900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை மீறியதாக 48 ஆயிரம் வழக்குகள் பதிவாதி உள்ளன. போலீஸ் ஜீப்பில் பணம் கொண்டு சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளது. ஆனால் அந்த போலீஸ் இலாகாவுக்குத் தலைவர் "தேர்"தலில் நிற்கிறார்.


இந்த லக்ஷணத்தில் கருணாநிதி போட்டியிடுவதால் திருவாரூர் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று கனிமொழி பிரச்சாரம் செய்கிறார். ஆக இவர் 234 முறை முதலவர் ஆனால்தான் தமிழ்நாடே முன்னேற்றம் அடையும். அதுவரை ஸ்டாலின்தான் துணை முதல்வர் கவலைப்படாதீர்கள். ஆக இதுவரை திருவாரூர் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பது தெளிவாகிறது.


எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட். தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த தொகுதியில் நிற்பவர் கை கூப்பி நிற்கிறார். இரண்டு கேள்விகள். 1. அப்படி நிற்கும் போது அவர் மனநிலை எப்படி இருக்கும்? 2. அவருக்கு மூக்கு நுனியில் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்வார்? இந்த பழக்கம் எப்போது வந்தது என்று யாருக்காவது தெரியுமா?


எனக்கு இன்னுமொரு பெரிய டவுட். விஜய்காந்துக்கு ஜெ பிரச்சாரம் செய்யும் போது கேப்டன் இப்படி கை கூப்பி நின்று கொண்டு இருப்பாரா? இன்று கூவத்துடனா கூட்டணி வைக்க முடியும்? நான் நேசித்த கட்சியிடந்தான் கூட்டணி என்று அவர் பேசி இருப்பதைப் பார்த்தால் நின்னாலும் நிப்பாரு என்றுதான் தோணுது.


மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லாப்டாப் என்று எல்லாம் கொடுத்தாலும் பவர் கிடைக்குமா ? பவருக்கு வருபவர்கள் இதை பற்றி பேச மாட்டார்கள். எல்லோரும் விவசாயி ஆனால் தான் இலவசமாக மின்சாரம் கிடைக்கும். பேசாமல் எல்லோருக்கும் ஒரு இன்வர்டர் கொடுத்தால் நிச்சயம் இவர்களுக்கு ஓட்டு உண்டு. இப்ப வடிவேலு பேசிவது தான் ஹாட் டாப்பிக். இவர் பேசுவது நெகடிவ், சேர்ந்திருப்பது இன்னொரு நெகடிவ். இப்படி இரண்டு நெகடிவ் சேர்ந்தால் எப்படி கரண்ட் வரும்? ஆனால் இவர்கள் பவருக்கு வந்தால் நமக்கு நிச்சயம் ஷாக் அடிக்கும்.


மரம் வெட்டி விட்டு பசுமை தாயகம் சார்பில் மரம் வைக்கிறார் என்று ஒருவர் பேச, உடனே இந்த நடிகருக்குச் சொல்கிறேன். என்னை பற்றியோ எனது கட்சியை பற்றியோ இனி பேசினால், நான் பேச மாட்டேன். எனது தொண்டன் பதில் சொல்வான். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ராஜ்ய சபா சீட், தொண்டனுக்கு அடி என்பது அரசியல் நியதி.

"நான் வேட்பாளரை அடித்துவிட்டதாக ஊரெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள். அட ஆமாய்யா... நான் என் ஆளைத்தான் அடிச்சேன். என் கையில் அடிவாங்குபவன் நாளை மகாராஜா ஆவான்" என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அப்ப ஜெயலலிதாவை தான் அவர் அடிக்கணும். அப்ப தான் அவர் முதல்வராக முடியும்.. அரசியலில் அடிவாங்குவது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்கிறார் சோ. உண்மையாக இருக்கலாம், திராவிட கட்சிகள் கூட ஆள் வைத்து தான் அடிப்பார்கள், அல்லது அவர்கள் தோட்டத்துக்கு கூப்பிட்டு அடிப்பார்கள். ஆனால் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொள்ளும் இவர் தீவிரவாதிகளை அடிக்கிறாரோ இல்லையோ தன் உடன் இருப்பவரை போட்டு சாத்துகிறார். இவரை பற்றி வடிவேலுவின் நாகரிகமற்ற பேச்சு கூட சரிதானோ என்று தோன்றுகிறது. தேமுதிக வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் இலவச ஹெல்மெட் கொடுக்க சிபாரிசு செய்கிறேன்.

இப்ப பொறுப்பு உள்ள ஒரு நியூஸை பார்க்கலாம் மதுரை அண்ணாநகர் பகுதியில் இருக்கும் ஜான் தன் வீட்டுக்கு முன் இப்படி தொங்க விட்டு இருக்கிறார். இவரை போல எவ்வளவு பேர் செய்வார்கள்?

காந்திய வழியில் நேர்மையான வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்; காந்திய பிரசார குழுவை தொடங்கி வைத்த நரேஷ்குப்தா "காந்திய கொள்கை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரவேற்க கூடியது. மக்களுக்கு காந்தி என்றதுமே ராஜீவ்காந்தி, சோனியா காந்திதான் நினைவுக்கு வருகிறார்கள். மகாத்மா காந்தி நினைவுக்கு வரவில்லை. காந்திய வழியில் நடக்க முயற்சி செய்ய வேண்டும். அவர் பாதையில் நடக்க முன்வர வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் பணம், பிரியாணி, பரிசு பொருட்களை வாங்க கூடாது. தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய வேண்டும்" என்கிறார். ஆக ராஜிவ், சோனியா எல்லாம் காந்திய வழியில் இல்லை என்கிறார்.

சிங்கமுத்து தேமுதிகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருகிறார். ஓரிரு நாளில் அவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். திரையில் வடிவேலுவை காமெடியாகத்தான் பார்த்திருக்கிறீர்கள். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அதை தோலுறித்து காட்டப்போகிறேன் என்று புறப்பட்டுள்ளார் இன்னும் சில நாட்களில் ஜெயா மற்றும் கேப்டன் டிவிகளில் நாற்றம் அடிக்கத் தொடங்கிவிடும். சிங்கமுத்து அசிங்க முத்துவாக மாறிவிடுவார்.


நாடு வாழ நாம் புரிந்த சாதனைகளை சொல்லியிருக்கிறேன். அனுபவித்துவரும் தமிழக மக்கள் காட்டப்போகும் நன்றியை எதிர்பார்த்து நிற்கிறேன் என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார். இந்த நியூஸ்க்கு கீழே "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது." என்று வந்திருக்கிறது. நன்றி தமிழர்கள் பண்பாடு, டெல்லிக்காரர்களுக்கு தெரியாது.


"பொண்ணு எப்படி?" என்று ஒருவர் கேட்க "மீனாக்ஷி சேஷாத்ரி மாதிரி" என்று பதில் சொல்லுவார் இன்னொருவர். கேள்வி கேட்டவர் மீனாக்ஷி சேஷாத்ரி மாதிரி இருந்தால் பரவாயில்லை, ஆனால் சேஷாத்ரி மாதிரி இருந்தால்?" என்பார் அது மாதிரி குஷ்பு "'என்னை மாதிரி புசுபுசுன்னு குழந்தை பிறக்கணும்னா, கலைஞருக்கு ஓட்டுப் போடுங்க. கர்ப்பிணிப் பெண்களுக்கு பத்தாயிரம் கொடுக்கப் போறதா சொல்லியிருக்கார்.." என்று பேசியுள்ளார் குஷ்பு. குஷ்பு மாதிரி பிறந்தால் ஓகே வடிவேலு மாதிரி பிறந்தால்? மக்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.


இப்படிக்கு,
முனி


தேர்தல் சிறப்பு பக்தி படங்கள்(நன்றி: ஜூவி)






Read More...

Wednesday, March 30, 2011

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் -ஒரு முன்னோட்டம்

நாளை நடைபெறவிருக்கும் இந்தியா-பாக் செமிஃபைனல் ஆட்டம் பயங்கர பரபரப்பை எல்லா தளங்களிலும் ஏற்படுத்தியுள்ளது!. மீடியா இதை மூன்றாம் உலகபோருக்கு ஒரு curtain raiser அளவுக்கு ஏற்றி விட்டிருப்பது மகா கொடுமை. அது போல, பிரதமரே இந்த ஆட்டத்துக்கு வர இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், காசு கொடுத்து டிக்கட் வாங்கிய பொது மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கப் போகிறது!! இது போதாதென்று, இந்தியப்பிரதமர் பாக் பிரதமரையும், ஜனாதிபதியையும் வேறு வெத்தலை பாக்கு வைத்து அழைத்திருக்கிறார்! ஒரு பேட்டியில், சஷி தரூர் கிரிக்கெட்டை மட்டும் கிரிக்கெட்டர்கள் பார்த்துக் கொண்டால் போதும், இந்திய-பாக் பிரச்சினைகளை (இரு நாட்டு பிரதமர்கள்) Statesmen கவனித்துக் கொள்வார்கள் என்றார்! சஷி statesmen என்றால் "மாநில மனிதர்கள்" என்று அர்த்தப்படுத்திக் கொண்டாரோ என்னவோ !?!

பாக் உள்துறை அமைச்சர், பாக் அணியை fixing-ல் ஈடுபடவேண்டாம் என்று எச்சரித்திருப்பதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பாக் அணியின் fixing வரலாறு அத்தகையது! பாக் அணியினரை சத்திய சந்தர்களாக எண்ணிக் கொண்டு இம்ரான் கான் அமைச்சருக்கு எதிராக பொங்குவது சற்று அதீதமாகப் பட்டது! சரி, மேட்டருக்கு வருவோம்.

மொஹாலி ஆடுகளம் வேகத்துக்கும், bounceக்கும் சாதகமான ஒன்றாகவே இருந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே. அதோடு, ஆடுகளத்தின் கெட்டியான களிமண் காரணமாக பந்து அவ்வளவாக சுழலாது, skid ஆகும் அபாயம் உள்ளது! அதனால், அக்தர், உமர் குல், அஃப்ரிடி ஆகியோரைக் கொண்ட பாக் அணி பந்து வீச்சுக்கு இது சற்று அனுகூலமாக அமையும் என்றாலும், நமது ஜாம்பவான் மட்டையாளர்கள் அதை திறமையாக எதிர் கொள்வார்கள் என்று நம்பலாம் :) நமது தரப்பில், சாகீரும், அஷ்வினும் இந்த ஆடுகளத்தில் நிச்சயம் பரிமளிப்பார்கள்.

மொஹாலியில் இதற்கு முன் நடந்த 9 ஆட்டங்களில் 2 முறை தான் 300+ ஸ்கோர்கள் சாத்தியமாகியிருக்கிறது. டாஸில் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும், இந்தியா டாஸில் வென்று, முதல் மூவரில் ஒருவர் சதமும், மிடில் ஆர்டரில் ஒருவர் அரைச்சதமும் எடுத்தால், 300-ஐ சுலபமாக எட்டி விடலாம்! 280 என்பது ஒரு competitive இலக்காக இருக்கும் என்றும் எண்ணுகிறேன். மாலை நேரப்பனி புல்லின் மேல் தங்கும் காரணத்தால், 2வதாக பந்து வீசும் அணிக்கு ஈரம் காரணமாக பந்தை கிரிப் செய்வது சற்று கடினமாக இருக்கும். காற்று அதிகம் வீசினால், அவ்வளவு பிரச்சினை இருக்காது. மைதானத்தில் புல்லை குட்டையாக வெட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது!

முனாஃபுக்கு பதிலாக, நெஹ்ராவை சேர்ப்பது அத்தனை மோசமான ஒரு தேர்வாகத் தோன்றவில்லை. சச்சினின் 100வது international சதம் நாளை நிகழ்ந்தால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்! ஆனால், இந்தியா வெல்வது அதை விட முக்கியமானது என்பதால், அந்த நூறு பின்னாளில் காலம் தாழ்ந்து நிகழ்ந்தாலும் பிரச்சினையில்லை :)

Tail piece: Based on the performance, இந்திய அணியை விமர்சித்து எழுதுவதால், இந்தியா தோற்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதுவதாக அர்த்தமாகாது. அந்த விமர்சனத்துக்கு எதிராக கருத்துகளை முன் வைப்பதை விடுத்து, "மேரா பாரத் மஹான்", "ஸாரே ஜஹான்ஸே அச்சா" என்று பாய்ந்து பிறாண்டுவதால் யாருக்கும் பயனில்லை!

எனக்குப் பிடிக்காத ஸ்ரீலங்கா அணி செமி ஃபைனலில் வென்றிருப்பதால், அந்த ஆட்டம் குறித்து எழுத ஆர்வம் இல்லை! ஸ்ரீலங்காவுக்கு அதிர்ஷ்டம் அதிகம், எந்த ஒரு பலமான அணியையும் வெல்லாமல், ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்று விட்டார்கள். ஸ்ரீலங்கா கென்யா, கனடா, ஜிம்பாப்வே என்று 3 மகா மொக்கை அணிகளையும், ஒரு நாள் போட்டிக்கு லாயக்கில்லாத ஒரு ஆடுகளத்தை அமைத்து, அதே ஆடுகளத்தில், சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளையும் (முறையே கால் இறுதியிலும், அரை இறுதியிலும்!) வெற்றி பெற்றுள்ளதை என்னவென்று சொல்ல :( படு சுமாரான ஒரு அணி unfair-ஆக ஃபைனல்ஸுக்கு வந்திருப்பது உலகக்கோப்பையின் துர்பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும்!!!!

கடைசியில் கிடைத்த செய்தியின்படி, மொஹாலியில் மழை பெய்திருக்கிறது. அதனால், இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்து இலக்கைத் துரத்துவது சரியான தேர்வாக இருக்குமோ என்று ஒரு சின்ன சந்தேகம் எழுந்துள்ளது :) After all, India chased a good total successfully on a difficult pitch at Motera against the formidable Aussies!

என்றென்றும் அன்புடன்
பாலா
http://balaji_ammu.blogspot.com

இந்தியா நிச்சயம் ஜெயிக்கும். இறுதி ஆட்டத்தில் அவர்கள் இருந்தால் தான் பலருக்கு வர்த்தகம் நன்றாக இருக்கும்.


Read More...

Monday, March 28, 2011

முக்கிய அறிவிப்பு - தொடர்கிறது

இட்லிவடை வாசகர்களுக்கு மீண்டும் வணக்கம்,

சனிக்கிழமை அன்று இட்லிவடை 'கை'மாற போகிறது என்ற அறிவிப்பு கேட்டு பலர் சாட்டிலும், பின்னூட்டத்திலும் தங்கள் 'ஃபிலிங்கை' தெரிவித்திருந்தார்கள். புகுந்த வீட்டை விட்டு மாமியார் வீட்டுக்கு போவது போல இருக்கு என்று ஒரு பெண் வாசகி உருகினார். இப்படி சிலர் வருத்தப்பட்டாலும், கலைஞர் குடும்பம் சந்தோஷத்தில் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்கள்.

இந்த வருடம் முட்டாள் தினம் ஏப்ரல் 13 அன்று தான் வருகிறது, நாங்கள் செய்த அறிவிப்பு சும்மா முன்னோட்டம் அவ்வளவு தான் ! கழக பெரியவர்கள் சொல்லும் பொய்யையே நம்புகிறவர்களுக்கு நான் சொன்ன இந்த சின்ன பொய்யை நம்புவதற்கு கஷ்டப்படவில்லை என்பதை பின்னூட்டங்களும், சாட் விசாரிப்புக்களும் தெரிவிக்கிறது. எனிவே வாழ்த்து சொன்ன அனைவருக்கு நன்றி, அவ்வளவு சீக்கிரம் உங்களை விடுவதாக இல்லை

உங்கள் ஆதரவை என்றும் விரும்பும்,
இட்லிவடை

பிகு: கைமாறூம் செய்தியை போட்ட கொஞ்ச நேரத்தில் இட்லிவடை பலர் நம்பினாலும் Ram Vibhakar இது ஏப்ரல் 1 ஜோக் என்று கண்டுபிடித்தார். அவருக்கு வாழ்த்துகள். உங்கள் முகவரியை எனக்கு idlyvadai2007 at gmail dot com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் புத்தகம் ஒன்று பரிசாக அனுப்புகிறேன் ( நிஜமாக தான் )

:-)

Read More...

Sunday, March 27, 2011

(Cricket) Match the following

கீழே உள்ள படத்தை பார்த்துவிட்டு நடிகைக்கு யாரை பிடிக்கும் என்று சொல்லுங்கள். தப்பாக சொல்லி வீரர்களின்.. வயிற்றெரிச்சல் கொட்டிக்கொள்ளாதீர்கள்.



கிரிக்கெட் வீரர்களின் பெயர் தெரியவில்லை என்றால் பரவாயில்லை, நடிகைகளின் பெயர் தெரியவில்லை என்றால் மன்னிக்க முடியாத குற்றம் !

தப்பாக சொல்லி எதும் மேட்ச் ஃபிக்ஸிங் ஆனால் நான் பொறுப்பு இல்லை :-)

Read More...

சன்டேனா (27-03-11) இரண்டு செய்திவிமர்சனம்

இந்த வாரம்..."தத்துவமும், கடவுள் சித்தாந்தமும்".

செய்தி # 1

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழுகிறாய்?

எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.

-பகவத் கீதையின் சாரம்

மாமன்னன் அலெக்சாண்டர், உலக நாடுகள் அனைத்தையும் தன் காலடியில் கொண்டுவந்த மாபெரும் அரசன். தனது வெற்றிப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினான். தன் தாயின் முகத்தை பார்க்க ஆவலுடன் விரைந்தான்.

ஆனால்,கிரீக்கு போகும் வழியிலேயே நடக்கவும் இயலாத அளவுக்கு கொடும்நோய்க்கு ஆளானான். தனது பணம்,படைகள், கொள்ளையடித்த சொத்துக்கள் யாவும் அர்த்தமற்று போனதை அவன் உணர்ந்த அந்த நிமிடம்.....

அலெக்சாண்டர் தி கிரேட் ஞானம் பெற்ற அந்த நிமிடம்...அவனது வாழ்க்கையில் மிகவும் அர்த்தமிக்கது...அவனது வெற்றிகளை காட்டிலும் மகத்தானது.

மரணத்தின் அழைப்பை உணர்ந்த அவன்,அப்போது அவனது உதவியாளர்களுக்கு தனது கடைசி ஆசைகளை மூன்று கட்டளைகளாக பிறப்பித்தான்.

ஒன்று, தான் இறந்த பின் தனது சவப்பெட்டியை தனது உடற்ப்பயிற்சியாளர்கள் மற்றும் போர்ப்பயிற்சியாளர்கள் சுமக்கவேண்டும்.

இரண்டு, கல்லறைக்கு தனது சவப்பெட்டி செல்லும் வழியெங்கும், அவன் தனது நாடுகளை வென்றதின் மூலம் சம்பாதித்த தங்கம்,வெள்ளி,வைரம் போன்ற கற்களை புதைக்க வேண்டும்.

மூன்று, அவன் தனது கடைசி ஆசையாக கூறியது "எனது திறந்திருக்கும் இரண்டு கரங்களும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு தொங்க விட படவேண்டும்".

தனது இந்த விசித்தரமான மூன்று கடைசி ஆசைகளுக்கு அவன் சொன்ன காரணங்கள்..."இவைகள்தான் இதுவரை நான் கற்ற பாடங்கள்..எனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு கிடைக்கும் படிப்பினைகள்" என்றான் அவன்.

முதலில் சொன்ன ஆசைக்கு காரணம்...."இந்த உலகில் மனிதனின் நோயை எந்த ஒரு மருத்துவனாலும் குணப்படுத்த இயலாது. சாவில் இருந்து ஒருவனை யாராலும் தடுக்க இயலாது".

இரண்டாவதாக சொன்ன ஆசைக்கு காரணம்...."எவ்வளவோ செல்வத்தை குவித்தும், நாடுகளை வென்றும் கடைசியில் எதுவும் கூட வராது".

மூன்றாவதாக சொன்ன அவன் ஆசைக்கு காரணம்...."வெறுங்கையோடு வந்தேன் வெறுங்கையோடு செல்கிறேன் என்ற எனது வாழ்வின் தத்துவத்தை உலகம் புரிந்து கொள்ளவேண்டும்".

இதே தத்துவத்தை அவன் காலத்துக்கு முன்பே பகவத்கீதையின் சாரம் சொல்லி இருப்பது இப்போது உங்களுக்கு புரிகிறதா??


மாவீரன் அலெக்ஸாண்டரின் தனது வாழ்வில் இருந்த கற்ற பாடங்களும், பகவத் கீதையின் சாரமும் ஒன்றாகவே இருக்கிறதே.


செய்தி # 2
கடவுள் ஒரு பெரும் சக்தி என்றால், அவரிடம் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று இது வேண்டும் என்று கேட்பதும் , நிறைவேற்றினால் அதற்க்கு பிரதிபலனாக நேர்த்திகள் செய்வதும் ஏன்? என்று கேட்டார் ஒரு நண்பர். கடவுளுக்குதான் எல்லாம் தெரியுமே?

இதற்க்கு மேற்கத்திய தத்துவத்தில் பதில் இருக்கிறது. எம்.ஜி. காப்மேயர் அவர்கள் எழுதிய, உலகில் மிகவும் புகழ் பெற்ற "நீ விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி" என்ற புத்தகத்தில் பதில் சொல்லப்பட்டு இருக்கிறது.

அதாவது, நாம் ஒரு விஷயத்தை அல்லது ஒரு குறிக்கோளை அடைய விரும்பினால், முதலில் நமக்கு என்ன வேண்டும் என்று நாம் உணரவேண்டும். இரண்டாவதாக, நாம் அதை அடைந்துவிடுவோம் என்று முழுமையாக நம்ப வேண்டும்.

உதாரணதிற்கு, இமயமலை அடிவாரத்தில் வெற்று உடம்போடு, அந்த கடும் குளிரை எளிதாக சமாளிப்பத்தின் ரகசியம்...அவர்கள் கடவுள் உண்டு, இறை சக்தி நம்மை பாதுக்காகிறது என்று உறுதியாக நம்புவதால்தான்.

நான் இறைவன் சந்நிதியில், எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வதாக வைத்து கொள்ளுங்கள். அத்தருணம், எனக்கு வேலைக்கு செல்லவேண்டும் என்கிற ஆர்வமும், தெளிவும் இருக்கிறது. அதுவே, முயற்சி என்னும் கதவுகளை திறக்கும். தகுதிகளை வளர்க்கும் அல்லவா?

அதாவது, இறை நம்பிக்கை என்பது ஒரு மிக சிறந்த நேர்மறையான நம்பிக்கை(positive thinking). தன்னம்பிக்கைக்கான தூண்டுதல் என்று சொல்லலாம்தானே?
மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்கள், கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கை குறித்து சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 2 மார்ச் 1919 ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு உரையாற்றி இருக்கிறார். அந்த சிறப்பு மிக்க உரை இங்கே..

"‘எல்லா உயிர்களும் ஒன்று’ என்பதை அவர் முதலில் ஸ்தாபித்தார். சக்தி இல்லாமல் வஸ்து இல்லை, வஸ்து இல்லாமல் சக்தி இல்லை’ என்றார் ஹாக்கெல். இவ்வுலகை வியாபித்திருக்கும் தெய்வாம்சத்தின் - பிரபஞ்சசாரத்தின் - இரு அடிப்படையான தன்மைகள் வஸ்துவும் ஜீவனுமாம். (ஹாக்கெல் எழுதிய) ‘புதிர்’ பிரசுரமான பிறகு வேதியியலில் பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஹாக்கெல் தம் ‘புதிர்’ என்ற நூலைப் பிரசுரித்தபோது அணுக்கள், எலெக்ட்ரான்கள் பற்றிய நவீனக் கோட்பாட்டையும் அதன் முழு முக்கியத்துவத்தையும் கணக்கிலெடுத்துக்கொள்ள இயலவில்லை. வஸ்துவின் பிளவுபடாத்தன்மையை எலெக்ட்ரான் கோட்பாடு மிகத் தெளிவாக நிறுவியுள்ளது. மிக அடிப்படையான கூறு மின்தன்மை உடையது என்பது கண்டறியப்பட்டு, வஸ்து என்பது சரீரமற்ற மின்தன்மைகளின் கூட்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘சரீரமற்ற’ எனில் அலௌகீகம் எனப் பொருள்படும்.

லார்மர் மற்றும் லாரெஞ்சு, தாம்சன் மற்றும் ஆலிவர் லாட்ஜ் ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மொத்த விளைவு என்னவென்றால் ‘வஸ்து’ என்பது சக்தியின் செம்மைப்படாத வடிவம் என்பதே. சக்தி என்பது மனத்தின் வெளிப்பாடே என்றும் பிரசங்கி மேலும் கூறினார். வஸ்துவின் முந்திய நிலையே சக்தி என்பதால், மனமே சக்தியின் மூல வடிவமாகும். ஒரு தனி மனம் பிரபஞ்சமாக வெளிப் படுவதில்லை; எல்லாம் தழுவிய பிரபஞ்ச மனமே எப்போதும் தன்னை வெவ்வேறு பிரபஞ்ச - பௌதீக, ஜீவாதாரமான, மனரீதியான, ஆன்மிக - மண்டலங்களாக வெளிப்படுத்திக்கொள்கின்றது. நெருப்பும் வெப்பமும் எங்கும் பொதிந்துள்ளது போலவே, உயிரும் பிரக்ஞையும் பிரபஞ்சத்தில் பொதிந்துள்ளன; ஆனால் சில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே அவை செயல்பட்டு வெளிப்படுகின்றன.

அணுவின் பிரக்ஞை பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்தவர்கள்கூட ஒரு மனிதன் அல்லது தவளைக்கு இருப்பதுபோல் ஓர் அணுவுக்குப் பிரக்ஞை உண்டு என்று கூறமாட்டார்கள். மனம் என்பது சக்தியின் ஒரு வடிவம் என்றார் ஹாக்கெல்; சக்தியே மனத்தின் வெளிப்பாடுதான் என்பதைப் பிரசங்கி நிறுவிக்காட்டினார்.

‘எல்லாம் ஒன்றே. எல்லாம் கடவுள்’ என்பதே ஸ்பினோஸா, கொய்தே, ஷொப்பன்ஹைர், ஷெல்லி ஆகியோரின் நிலைப்பாடு. வேத, உபநிஷத்துகள் மற்றும் எல்லா மதங்களின் ஞானிகள், புலவர்களின் நம்பிக்கையும் அதுவே. இக்கோட்பாட்டை உணர்த்தும் இரணியன், பிரகலாதன் பற்றிய ஒரு தமிழ்ப் பாடலையும் பிரசங்கி பாடினார். நித்தியத்தின் இன்பத்தை அறிந்தவர்க்கு அச்சம் இல்லை. எல்லா உயிர்களின் ஒருமைத் தன்மையும் தெய்வத்தன்மையும் உலக மதங்கள் எதனுடையதன் சாரத்திற்கும் பொருந்தாததன்று. இந்திய துவைதத்தில் சைவ, வைணவ வழிபாட்டு முறைகள் இதற்குப் போதுமான உதாரணங்களாகும். இவ்வுலகம் கடவுளின் வடிவமல்ல, அவனுடைய சிருஷ்டியே ஆகும் என்றாலும்கூட இவ்வுலகின் தெய்வத்தன்மையை எவரும் மறுக்க இயலாது. கடவுளின் கைவண்ணம் தெய்வீகமானதாகவே இருக்கவியலும். தந்தை கடவுளாயிருக்கும் பட்சத்தில் மைந்தன் தவளையாக இருக்க முடியாது.

எவர் ஒருவரும் கடவுளின் மைந்தனாகும் பட்சத்தில் அவனும் கடவுளேயாவான். விஷ்ணு புராணம், ‘நீயே சூரியன்; நீயே கிரஹங்களும்; வடிவம் கொண்டதும் கொள்ளாததும்; காணப்படுவதும் காணப்படாததுமான அனைத்தும் நீயே’ என்று விஷ்ணுவை நோக்கிப் பரவுகின்றது.

வசிஷ்டர் முதல் வாமதேவர்வரை, அரவிந்த கோஷ்முதல் ஸ்ரீமதி அன்னி பெசண்டுவரை ஆன்மிக தேசியவாதிகள் அனைவரும் உண்மையை அதன் தூய வடிவில் நேருக்கு நேர் கண்டனர். ‘இந்த ஒருமைத் தன்மையை அறிவது, எல்லாத் தத்துவங்களின் நோக்கம் மட்டுமல்ல, இயற்கை பற்றிய முழு ஞானத்தின் நோக்கமுமாகும். இறைவனும் உலகமும் ஒன்றே என்ற கோட்பாட்டைச் சில ஞானிகள் கண்டஞ்சியதற்குக் காரணம் பிரபஞ்சம் அழியக் கூடியது, கடவுள் அழியாதவர் என்று அவர்கள் கருதியதாலேயாகும்.

எல்லா வஸ்துக்களும் எல்லா ஜீவன்களும் ஒன்றேயாகவும் தெய்வீகமானவையாக - சமஅளவில் தெய்வீகமானவையாகையால் மனிதர்கள் தேவ, தேவதைகளை அணுகுவதைப் போலவே மக்கள் அனைவரும் எல்லா வஸ்துக்களையும் ஜீவன்களையும் அணுக வேண்டும். உலகின் பல்வேறுபட்ட தன்மையை, அதாவது கடவுளின் எண்ணற்ற வடிவங்களை அவை எதிர்ப்படும் வகையிலேயே கருத வேண்டும். எல்லா வடிவங்கள், வஸ்துக்களின் அடிப்படையான ஒருமையையும் சம தெய்வீகத்தன்மையையும் உணரும் அதே வேளையில் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாமே தெய்வீகம் என்பதால் சக மனிதரைக் கொல்வதோ ஏன் அடிப்பதோகூடத் தெய்வக் குற்றமும் பாவமுமாகும்.

ஆனால் ஒரு கல்லை உடைப்பதென்பது பாவமன்று. ஏனெனில் மனிதருள் உள்ள கடவுள் காயப்படுவார்; கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை. எந்த ஒரு சிருஷ்டியையும் தார்மீகமற்றதெனக் கூறக் கூடாது. எல்லாமே தெய்வீகமானதால், அனைவரும் கடவுளைப் போல் சிந்தித்து, பேசி, செயல்பட வேண்டும். பிரசங்கி பின்வரும் வார்த்தைகளுடன் தன் பேச்சை நிறைவு செய்தார்.

‘நாம் எல்லாரும் கடவுளராக உறுதிபூண்டு வேத தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்போம்'.

எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்மை, அன்பு, வலிமை, உறுதி, விடுதலை, அச்சமின்மை ஆகியவற்றைக் கொண்டிருப்போம். நீங்கள் உங்கள் தெய்வத்தன்மையை உணர்ந்து மற்றவர்களையும் தெய்வங்களாக நடத்தினால் அவர்களும் அவ்வாறே செய்வார்கள். ஏனெனில் அன்பு அன்பை ஈனுகிறது. எந்த உயிரையும் பறிக்காதீர். ஏனெனில் இயற்கை உங்கள் உயிரையும் பறித்துவிடும். எவரையும் துன்புறுத்தாதீர். எல்லார்மீதும் அன்பு செலுத்துக!’

-என்று மனதை தைக்கும் உரையை, சென்னையில் நிகழ்த்தினார் பாரதியார்.

இந்த உரைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.

இந்த நிகழ்ச்சியே மகாகவி பாரதி அவர்கள் கலந்துகொண்ட முதல் பொதுநிகழ்ச்சி மற்றும் இந்த உரையே அவர் ஆற்றிய முதல் சொற்ப்பொழிவு.

(நன்றி, இனி அடுத்த வாரம்)

-இன்பா

Read More...

Saturday, March 26, 2011

இந்தியா vs ஆஸ்திரேலியா -வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்காரு வேட்டை

"செய் அல்லது செத்து மடி" என்ற வாசகத்துக்கு இணையாக அகமதாபாதின் Motera அரங்கம், போர்க்களமாக காட்சியளித்தது! ஆடுகளத்தின் ஒரு பக்கம் லேசான பசுமை தெரிந்தாலும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான, நின்று நிதானமாக ஆடவல்ல மட்டையாளர்களுக்கும் ஏற்ற, ஆடுகளம் என்று கூற பெரிய கிரிக்கெட் அறிவெல்லாம் தேவையில்லை.மற்றபடி, மைதானம் பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சி.

எதிர்பார்த்தது போல, டாஸில் வென்ற பாண்டிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா இரண்டாவதாக பேட் செய்யும்போது, ஆடுகளத்தில் பந்து மேலும் மெதுவாக மட்டையாளரை சென்றடையும் என்பதால், ஆஸ்திரேலியாவை 240 ரன்களுக்கு மேல் எடுக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியமானதாகப் பட்டது. அஷ்வின் முதல் ஓவரிலேயே பந்து வீச அழைக்கப்பட்டதால், Electrifying start எல்லாம் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையும் இருந்தது!

Both Ashwin and Zaheer bowled well within themselves, not giving many boundary scoring opportunities. சாகீரின் முதல் ஓவரிலேயே ஆடுகளத்தின் அபாயப் பகுதியில் ஓடியதற்காக, official எச்சரிக்கை தரப்பட்ட நிலையில் சாகீர் round the wicket-க்கு மாறி பந்து வீச வேண்டிய கட்டாயத்தை லேசான பின்னடைவு என்று தான் கூற வேண்டும். 10 வது ஓவரில், end மாற்றி, தோனி அஷ்வினை பந்து வீச வைத்ததில் (good captaincy) உடனடி பலன்! ஃபார்மில் இருந்த வாட்ஸன் அவுட்! This is a very important breakthrough! ரிக்கி பாண்டிங் களமிறங்கினார். பேட்டிங்கில் கவனம், நிதானத்துடன் பயமும் அப்பட்டமாகத்தெரிந்தது :)

முனாஃப் படேல் பந்து வீச்சில் ஒரு வித routine தன்மை வந்து விட்டது. அடுத்துஎன்ன மாதிரி பந்து வீசுவார் என்பதை எதிர்த்தாடும் மட்டையாளர்கள் கணித்து விடுகிறார்கள்! 14வது ஓவரில் ஹாடின் 3 பவுண்டரிகளை விளாசியதில், தோனி சுதாரித்துக் கொண்டு, அவரை நீக்கி விட்டார்! யுவராஜின் தங்கக்கரத்தால் ஹாடின் வீழ்ந்தார். ஸ்கோர் 110-2 (23 ஓவர்களில்). 30வது ஓவரை வீச சச்சின் அழைக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது! இது போன்ற ஒன்றை சதுரங்க ஆட்டத்தில் Novelty என்பார்கள் :) It was a good move by Dhoni to keep the batsmen in the middle, guessing.

அபாரமாகத் திரும்பிய ஒரு leg spinner-ஐ தவிர்த்து, சச்சின் ஓவரில் டிராமா எதுவும் இல்லை! ஆனால் அடுத்த யுவராஜ் ஓவரில் (சச்சின் ஏன் திடீரென்று பந்து வீச வர வேண்டும் என்று மூளை குழம்பிய நிலையிலிருந்த) கிளார்க், off-stump-க்கு வெளியே வீசப்பட்ட பந்தை கஷ்டப்பட்டு long-on பக்கம் வளைத்து தூக்கியடிக்க, சாகீர் கப்பென்று கேட்ச் பிடித்தார் :) ஸ்கோர் 141/3 (31 ஓவர்களில்). இந்திய அணியின் பந்து வீச்சும், முக்கியமாக ஃபீல்டிங்கும் முந்தைய ஆட்டங்களைக் காட்டிலும் சிறப்பாக இருந்தன. கோலி, ரெய்னா, யுவராஜ், அஷ்வின் ஃபீல்டிங்கில் பிரகாசித்தனர்!

For a change, India sensed blood :) இந்த சூழலில், ரிவர்ஸ் ஸ்விங்கை லேட்டாக கற்றுக் கொண்டாலும், லேட்டஸ்டாக விளங்கும் சாகீர் கானை தோனி பந்து வீச அழைத்தது, Smart Move! சாகீரின் (34வது) ஓவரில், மெதுவாக வீசப்பட்டு உள் வந்த பந்துக்கு பிஸி ஹஸ்ஸி தனது off-stump-ஐ பறி கொடுத்தார்! ஸ்கோர் 152/4 (RR 4.47). நடு ஓவர்களில் ஆஸ்திரேலிய பேட்டிங் தறிகெட்டு ஓடாததற்கு, 2 முக்கிய விக்கெட்டுகள்வீழ்ந்ததே காரணம் என்றால் அது மிகையில்லை.

ஒரு சில தினங்களில் நமது பந்து வீச்சு பிரமாதமானதாக மாறியதுஎன்றில்லை, தோனியின் ஃபீல்டிங் அமைப்பும், பந்து வீச்சு மாற்றமும் கச்சிதமாக இருந்தது. Dhoni surprised me again :) விராத் கோலி பந்து வீச வந்தார். தோனியின் ஃபேவரட் ரெய்னா பந்து வீச அழைக்கப்படாதது சற்று ஆச்சரியமாக இருந்தது. 40 ஓவர்களில் ஸ்கோர் 185/4. மீண்டும் சச்சின்! அருமையாக பந்து வீசினார், 4 ரன்கள் மட்டுமே! முன்னர் நடந்தது (கிளார்க் விக்கெட்!) போலவே, சச்சின் ஓவருக்கு அடுத்த (சாகீர்) ஓவரில், விக்கெட்! ஒயிட் மென்மையாக சாகீருக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று சொல்பவர்களை கட்டி வைத்து உதைக்க வேண்டும் ;)

ரிக்கி பாண்டிங் மெல்ல மெல்ல சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்ததைப் பார்த்து, பேட்டிங் பவர் பிளேயில் சாமியாடுவாரோ என்ற கவலை இருந்தது! ஆனால், it was David Hussey who played a neat little cameo (38 off 26) compensating for his brother's failure. 47வது ஓவரில் பாண்டிங் சதமடித்தார். அஷ்வின் மூளையை சரியாக பயன்படுத்தும்ஓர் எஞ்சினியர் என்பதை அவர் வீசிய 49வது ஓவர் நிரூபித்தது (4 ரன்கள் மட்டுமே)!

கடைசி ஓவரில் ஹர்பஜன் 13 ரன்கள் தாரை வார்த்ததில், ஆஸ்திரேலியாவின் மொத்த ஸ்கோர் 260/6. இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடினால், துரத்த வல்ல இலக்கு என்று தான் தோன்றியது. பற்றற்ற முனிபுங்கவர்களுக்கு நிகரான சிலர் போல, 'இந்தியா வெல்வதை விட நல்ல fight back தர வேண்டும்' என்ற வறட்டு சித்தாந்தமெல்லாம் என் "பொது" புத்திக்கு அப்பாற்பட்டது :) அது போல, ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வ வேண்டும் என்ற வெறியை விட, இந்தியா திறமையாக விளையாடி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற அவா அதிகமாக இருந்தது!

Second Innings: சச்சினும் சேவாகும் களமிறங்கினர். 100 கோடி+ மக்கள் இந்திய வெற்றிக்காக "அவரவர் தமதமது அறிவறி வகைவகை" விஷயங்களை செய்யத் தொடங்கினர்! முதல் ஓவரிலேயே ரென்ஷன், பாண்டிங் UDRS உதவி நாடியும், சேவாக் தப்பினார். சச்சினின் பேட்டிங்கில் இருந்த ஒரு வித purpose நம்பிக்கையைத் தந்தது. டைட்டின் பந்து வீச்சு சரியில்லாததால், ஜான்சன் அழைக்கப்பட்டார்.

9வது ஓவர் வரை அமைதி காத்த சேவாகால், அதற்கு மேல் "முடியல" :-) வாட்ஸனின் surprise பவுன்ஸருக்கு சேவாக் காலி, ஸ்கோர் 44-1. 11வது ஓவரில் சலசலப்பு, பாண்டிங் (கம்மனாட்டி) இவ்வளவு கிரிக்கெட் ஆடியும் திருந்தவே இல்லை என்பதை, கம்பீர் அடித்த பந்து தரையில் பட்டு அவர் கைகளில் விழுந்தும், அம்பயர்களிடம் அவர் செய்த அலம்பல் நிரூபித்தது!!!

ஜான்சனின் 12வது ஓவரில், சச்சின் அடித்த 2 பவுண்டரிகள் அற்புதமானவை.ஓன்று, முன்னேறி நடந்தபடி மிட்-விக்கெட் திசை நோக்கி செய்த Flick, மற்றொன்று, பாயிண்ட் திசையில் செய்த Steer! It was just pure timing from the little maestro! டைட் வீசிய 17வது ஓவரில், சச்சின் அரைச்சதம் பூர்த்தி, 61 பந்துகளில். டைட் கன்னாபின்னாவென்று பந்து வீசினாலும், ஹாடினின் விக்கெட் கீப்பிங் உலகத்தரமாக இருந்தது குறிப்பிட வேண்டியது. 19வது ஓவரில், டைட் வீசிய ஒரு unplayable பந்தில், ஹாடினுக்கு காட்ச் கொடுத்து சச்சின் விக்கெட் இழந்தார்! முடிவு மூன்றாவது அம்பயரின் ரெவ்யூவுக்கு சென்றதால், 'நோ பாலாக இருக்குமோ?' என்ற பலர் நப்பாசையில் மண்! 98/2, 19 ஓவர்களில்.

சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீச வந்த சமயமிது. Length சரியில்லாததால், இந்த ஆடுகளத்திலும், கிரைஃசாவின் பந்துவீச்சு பரிமளிக்கவில்லை! வார்ன் போன்ற ஒருவர் இருந்திருந்தால், ஒரு வழி பண்ணியிருப்பார் என்பது நிதர்சனம். கவனமாக ஆடிக் கொண்டிருந்த கோலி, ஒரு கேவலமான fulltoss-க்கு அவுட்டானது துரதிருஷ்டம். Enter Yuvaraj ! முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி வாயிலாக, he meant business என்று அறிவித்தார் :) இன்னொரு பக்கம், கம்பீர் நம்பிக்கைச் சின்னமாக 1,2 என்று ரன்களை சேர்த்து, ரன்ரேட் குறையாத வண்ணம் ஆடிக் கொண்டிருந்தார்.

33வது ஓவரில் கம்பீரின் அரைச்சதம். In the circumstances, this is a very special innings from Gautam. 34வது ஓவரில் ஒரு முறை தப்பிய கம்பீர், அடுத்த பந்தில் மீண்டும் "தலையிழந்த கோழி" போல ஓடி, அனாவசிய ரன் அவுட்! இதற்கு யுவராஜ் மேல் எந்த தவறும் கூற முடியாது. களமிறங்கிய தோனி ரொம்ப நேரம் தாக்கு பிடிக்காமல், லீ பந்தில், கிளார்க் பிடித்த ஒரு அபாரமான கேட்ச் வாயிலாக விக்கெட்டிழந்தார்.

38 ஓவர்களில் ஸ்கோர் 187/5. தேவையான ரன் ரேட் முதல் முறையாக ஆறைத் (6.2) தொட்டது! நான் சற்றே நம்பிக்கை இழந்த தருணம் இது தான்! ஆஸ்திரேலியர்களின் உடல்மொழி வேறு பயத்தை அளிப்பதாக இருந்தது! ரென்ஷனால் விளைந்த reflex செயலாக, வாய் ஸ்லோகங்களை உச்சரிக்கத் தொடங்கியது :) எனக்குப் பிடித்த ரெய்னா களமிறங்கினார்

பனி காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கு பந்தை grip செய்வது கடினமாக இருந்தது. ஆடுகளத்தில் புழுதி பறந்து கொண்டிருந்தது. Batting was becoming increasingly difficult. பவர் பிளே 45-46 ஓவர்களுக்குள் எடுத்து முடிந்திருக்க வேண்டும் என்று நானே பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனாலும், இந்தியா, BPP எடுக்காதது நல்லது என்று நான் கூறுவதற்கு 2 காரணங்கள்! 1. முந்தைய ஆட்டங்களின் அனுபவம் தந்த அச்சம் 2. தேவையான ரன்ரேட்டும் அத்தனை அதிகமில்லை. குஜராத்தின் "வெற்றி" நாயகர் நரேந்திர மோடி அரங்கில் இருந்ததால், மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது :)

40வது (லீ), 41வது (டைட்) ஓவர்களில் ஆட்டம் வேகமாக இந்தியா பக்கம் திரும்பியது :) மொத்தம் 27 ரன்கள்! ஸ்கோர் 220/5 (RRR 4.55). மிகுந்த அழுத்தமான சூழலில், உலகக் கோப்பையில் தனது 2வது ஆட்டத்தில் விளையாடும் ரெய்னாவின் ஆட்டத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை!!! Raina soaked all the pressure of a high voltage World cup match, displayed splendid maturity in a difficult situation and that immensely helped Yuvaraj to stay Cool & play solidly! தோனி தன் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை துளியும் குறையாத வகையில் (முந்தைய IPL-ல் ஆடியது போலவே) ரெய்னா பந்து வீச்சை அபாரமாக கையாண்டார்.

45வது ஓவரில் யுவராஜின் அரைச்சதம்! இந்திய பேட் செய்தபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு இன்னும் கடினமான ஒன்றாக மாறி விட்ட சூழலில், பாண்டிங்கின் சதத்தை விட முறையே யுவராஜ், கம்பீர் மற்றும் சச்சினின் அரைச்சதங்கள் மதிப்பு மிக்கவை! 46வது லீ ஓவரின் முதல் பந்தில் ரெய்னா நேராக அடித்த சிக்ஸர் pure timing! 47வது ஜான்சன் ஓவரில் 11 ரன்கள், வெற்றிக்கு 3 ஓவர்களில் நான்கே ரன்கள் தேவை, பாண்டிங் முகத்தில் ஈயாடவில்லை, ஆனால் அவர் மேல் துளியும் பச்சாதாபம் ஏற்படவில்லை! Fittingly Yuvaraj scored the winning runs and a historic win knocked out the 3-time champion team!

பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த (அரை இறுதி) ஆட்டம், இதை விடக் கடினமாக இருக்கும் என்று மீடியாவில் கூக்குரல் கேட்டாலும், this match is easily the best game of the world cup so far, even better than the famous Irish win over England.

என்றென்றும் அன்புடன்
பாலா
மஞ்சளாக எது இருந்தாலும் அது வெளியே போக வேண்டும் என்பது நியதி :-)

Read More...

முக்கிய அறிவிப்பு !

இட்லிவடை வாசகர்களுக்கு வணக்கம்,

ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இட்லிவடை படித்தும், அதில் எழுதிப் பங்குகொண்டும், அதை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு நன்றிசொல்லவேண்டிய நேரம் நெருங்கியிருக்கிறது.

ஒரு சிறந்த நிறுவனத்திடம் இட்லிவடையைக் கைமாற்றுவது பற்றி கடந்த ஒரு மாத காலமாகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில நாளில் அந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். தொடர்ந்து இட்லிவடையை இதே போன்று நடத்துவோம் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். மற்றும் தேர்தல் நேரத்தில் மேலும் பல புதுமைகளைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாங்களும் அந்த நிறுவனம் தற்பொழுது வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் அச்சு இதழில் அவ்வப்போது எழுதுவோம் என்பதை வாசகர்களுக்குச் சொல்லிவைக்கிறோம்.

வாசகர்களாகிய நீங்கள் தொடந்து இட்லிவடைக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் மனபூர்வமான நன்றிகளுடனும்...

இட்லிவடை.

கவலைப்படாதீர்கள் - மஞ்சள் கமெண்ட் தொடரும்.. !

Read More...

ஆரம்பம் !



இனிமேல் 'கை'புள்ள காமெடியை ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை

அடுத்த பதிவு இட்லிவடை பற்றி முக்கியமான அறிவிப்பு. காத்திருங்கள் !

Read More...

Thursday, March 24, 2011

ஹீரோயினா ? ஹெராயினா ?

இந்த ரெண்டு நாட்களில் வந்த தேர்தல் அறிக்கையை எல்லாம் பார்த்தால் தமிழ் நாட்டில் இவ்வளவு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது. இன்று ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை படித்தால் கலைஞரின் தேர்தல் அறிக்கையை ஸிராக்ஸ் செய்துவிட்டு கூட ஆடு, மாடு, ஃபேன் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்


வறுமைக் கோ‌ட்டு‌க்கு ‌கீழே உ‌‌ள்ளவ‌ர்களு‌க்கு 4 ஆடுக‌ள் இலவசமாக வழ‌ங்க‌ப்படு‌ம் என்று ஆட்டு புழுக்கை போல ஒரு அறிவிப்பை இன்று ஜெ அறிவித்திருக்கிறார். 4 ஆடுகள் கொடுத்துவிட்டால் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துவிடுவார்களா? இவர்களுக்கு முக்கியமாக தேவைப்படுவது கல்வி. அதை இவர்களுக்கு தரமாட்டார்கள், தந்துவிட்டால் இவர்களின் ஓட்டு இவர்களுக்கு எப்படி கிடைக்கும்?

புது‌ச்சே‌ரி‌யி‌ல் சுனா‌மி பா‌தி‌த்த ‌மீனவ‌ர்க‌‌ளு‌க்கு தரமான ‌வீடுக‌ள் க‌ட்டி‌த்தர‌ப்படு‌ம் என்று அறிவிப்பு. சுனாமி வந்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது? நேற்று சுனாமி வந்த ஜப்பானில் கூட இன்று வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

கலைஞர் போன முறை ஆரம்பித்து வைத்த இந்த கேனைத்தனமான இலவச திட்டங்களை நேற்று வரை வசை பாடிய ஜெயலலிதா இன்று விடுத்த அறிக்கை மூலம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு போகிறார். திராவிட கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டை ஒழித்துக்கட்ட முடிவு செய்துவிட்டார்கள். 2000 ஆண்டிலிருந்து தமிழனின் வாழ்க்கைமுறையில் இலவசம் என்று ஒன்று வந்த பொற்காலம் என்று இனி வரலாறு போற்றும். இந்த இலவசங்களை பார்த்தால் அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம் இனி தமிழ்நாட்டில் வந்து செட்டில் ஆகிவிடுவார்கள் என்று நினைகிறேன். இறந்தவர்களுக்கு இலவச அடக்கம் என்ற ஒன்று மட்டும் தான் இவர்கள் சொல்லவில்லை. இதில் வேடிக்கை என்ன என்றால் இந்த இலவசங்கள் எல்லாம் சாத்தியம் இல்லை என்று ஜெ சத்தியம் செய்தார். ஒரு தேர்தல் அறிக்கையிலும் மக்களுக்கு நேர்மையான ஆட்சி கொடுப்பேன் என்று சொல்லாத இந்த தேர்தல் அறிக்கையை பைண்ட் செய்து பஸ்டாண்ட்/ரயில்வே ஸ்டேஷனில் இலவச ஆய் துடைத்துப்போடும் பேப்பராக உபயோகிக்கலாம். இதை தவிர்த்து வேறு நன்மை ஒன்றும் இல்லை. நதி நீர் இணைப்பு மாதிரி எல்லாம் நிதியையும் இணைக்கும் திட்டம் இல்லை என்றால் இவ்வளவு இலவசங்களை தர முடியாது. சில நாட்கள் முன் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பஃபே கூட இவர்கள் அறிக்கையை பார்த்தால் பயந்து ஓடியிருப்பார்.
கதாநாயகி என்று தேர்தல் அறிக்கையை சொல்லுவது சரியாக தான் இருக்கிறது. கதாநாயகிகள் போல மேகப் போட்டு கொஞ்சம் கவர்ச்சியாக காண்பித்து கதாநாயகிகள் எல்லாம் தோற்றுவிட்டார்கள். வழக்கமான மசாலா தமிழ் சினிமா போல ஒன்றுக்கு இரண்டு கதாநாயகிகள். வாழ்க !


இந்த இலவச தேர்தல் அறிக்கையின் ஒரே நன்மை. இலவச கிரைண்டரில் இட்லி/வடை மாவு, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து உங்களுக்கு இலவசமாக பரிமாரலாம்.

Read More...

காலிறுதி இந்தியா - ஆஸ்திரேலியா யாருக்கு வாய்ப்பு ?



இந்தியா இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பு படத்தில் இருப்பது போல 25% :-)

Read More...

இயமம் டிவியில் - வைகோ பேட்டி

இமயம் தொலைக்கட்சியில் வந்த வைகோ பேட்டி. நிச்சயம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டும். கலைஞர், ஜெயலலிதா, ரஜினி, மூப்பனார் என்று எல்லோரும் வருகிறார்கள் :-)









நோ கமெண்ட்ஸ் !

Read More...

Wednesday, March 23, 2011

கிருஷ்ணகிரி தொகுதி ரவுண்டப்

அன்புள்ள இட்லி வடையாருக்கு,

கிருஷ்ணகிரி தொகுதியின் தேர்தல் கட்டுரையை இங்கு அனுப்பியுள்ளேன்.
அக்னி.


கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் நிலவரம் பற்றி இதில் தெளிவாக அனுப்பியுள்ளேன்.

ஒரு காலத்தில் கிருஷ்ணகிரி என்பது ஆ.தி.மு.க வின் கோட்டை என்றாகவே பார்க்கப்பட்டது. கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் அதை உடைத்து வெற்றிப்பெற்றதின் மூலம் தி.மு.க அந்த இடத்தை நிரப்பியது போல தெரிந்தாலும் கிருஷ்ணகிரி தொகுதியின் வெற்றி யாருக்கு என்பதை அவ்வளவு சீக்கிரம் கணித்துவிட முடியாது. ஜாதி வாரியாக பார்த்தால், வன்னியர்கள் முதலாகவும், ஆதி திராவிடர்கள் இரண்டாவதாகவும் உள்ள தொகுதி இது. என்னதான் கொங்கு நாட்டில் சேர்ந்தாலும் வெள்ளாள கவுண்டர்கள் மூன்றாவது இடத்தில் தான் உள்ளனர். இது நாள் வரை இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பது தான் காணப்பட்டுள்ளது. ஆனால் தொகுதிகள் மறு சீரமைப்பின் போது வன்னியர்கள் அதிகம் இருந்த காவேரிப்பட்டினம் தொகுதி கிருஷ்ணகிரியில் இணைந்ததும், பிற மொழி பேசும் மக்கள் அதிகம் இருந்த வேப்பனப்பள்ளி தொகுதி பிரிக்கப்பட்டு தனியாக ஒரு தொகுதியானதும் வைத்து பார்க்கும்போது தி.மு.க அணி தான் வெற்றிபெறும் என்ற ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் தற்போதைய எம்.எல்.ஏ செங்குட்டுவன் மீது தொகுதி முழுவதும் பரவலான எதிர்ப்பு இருப்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே காண முடிந்தது.

கடந்த ஆட்சியாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை தர்மபுரி மாவட்டதில் இருந்து தனியாக பிரித்தது இந்த மாவட்டத்தின் வளர்ச்சியை பெருமளவு அதிகப்படுத்தியது என்றே ஒத்துக்கொள்ள வேண்டும். சென்ற தேர்தலில் ஜெயலலிதாவே விருப்பத்துடன் மனுத்தாக்கல் செய்த தொகுதி என்பதில் இருந்து ஆதிமுகவின் எவ்வளவு முக்கியமான தொகுதியாக இது இருக்ககூடும் என்பதை அறிந்துக்கொள்ளலாம். கடந்த ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் தி.மு.க இந்த மாவட்டத்தில் பெருமளவு திட்டங்களை கொண்டுவராததும் அந்த அணிக்கு பாதகமாக இருக்கும் என்பதில் மாற்றுகருத்தே இருக்க முடியாது. சாதரணமாகவே தண்ணீர் பிரச்சனை சாலை வசதிகள் போன்றவற்றில் பிரச்சனை இல்லாத தொகுதி என்பதால் மக்களின் எதிர்ப்பார்ப்பு உள்கட்டமைப்பை விட மற்ற விஷியங்களில் அதிகம் பார்க்கவைக்க கூடியதாகும். மக்கள் அதிகம் வாழும் கிருஷ்ணகிரி நகரத்தின் நகரசபையும் தி.மு.க விடமே இருப்பது அவர்களுக்கு சாதகமான ஒரு விஷயமாக தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் தி.மு.க வை பொருத்தமட்டில் இந்த தொகுதியில் மிகவும் மலிந்து போயிருக்கும் ஊழலும் ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கும் மிகப்பெரிய சரிவாக இருக்கப்போவது நிச்சியம். இதன் காரணமாக தான் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவனும் கிருஷ்ணகிரியை தவிர்த்து வேப்பனப்பள்ளியில் போட்டியிடுகிறார். பல வருடங்களாக இந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரசுக்கு தி.மு.க இந்த இடத்தை ஒதுக்கியுள்ளது.

இன்னும் காங்கிரசின் போட்டியாளர் யார் என்பதில் இந்த தொகுதிக்கு தெரியாமல் இருப்பது அவர்களுக்கு பின்னடைவு தான். மேலும் காங்கிரசின் கோஷ்டி பூசல் அதிகம் இருக்கும் ஒரு நகரம் இது. காங்கிரஸ் கட்சியின் உள்ளே மும்முனை போட்டி இந்த தொகுதியில் இருப்பது தொகுதி மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மேலும் இளைஞர் காங்கிரசின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் சமூகத்தில் நல்ல பெயருடையவர்களாக இல்லை என்பதும் சறுக்கல் தான். கடந்த இரு வருடங்களாக தே.மு.தி.கா வும் இந்த தொகுதியில் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது தி.மு.க விற்கு பாதகமே. சென்ற முறை தே.மு.தி.கா வின் நாடாளுமன்ற தேர்தல் போட்டியாளர் திரு.அன்பரசு என்பவரின் தொழிலை முடக்க தி.மு.க நிர்வாகிகள் செய்த களேபரங்கள் நிச்சயம் தே.மு.தி.கவின் தொண்டர்களை நிறைய வேலை செய்ய வைத்துவிடும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

அதிமுகவின் பல பெரிய தலைகள் இந்த தொகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அதிமுகவிற்கு இங்கு வேலை செய்வது சுலபம். முன்னாள் அமைச்சர்களான தம்பிதுரை, கே.பி.முனுசாமி, அன்பழகன் ஆகியோர் இந்த தொகுதியை பற்றி நன்றாக அறிந்தவர்கள். தம்பிதுரைக்கு இந்த தொகுதியில் அவர் சேர்ந்த சமூகத்தை சேர்ந்த கொங்கு இனத்தவர்களிடம் செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதையும் இங்கு மறுக்க முடியாது. காங்கிரசில் இந்த தொகுதியில் பேர் சொல்லிக்கொள்ளும் படி யாரும் இல்லை என்பது ஒரு பெரிய சறுக்கல் தான். நகர்மன்றத்தில் ஆட்சிபுரியும் தி.மு.கவின் தலைகள் பெற்ற வளர்ச்சி மிகவும் அபாயகரமானதாகவே இந்த நகரத்தில் பார்க்கப்படுகிறது.

இந்த தொகுதி மக்களின் மிக நீண்ட நாளைய விருப்பமான ரயில் நிலையம் அமைக்கும் கனவும் இன்னும் முதல் படி கூட எட்டாமல் தான் உள்ளது. சென்ற தேர்தலின் போது தி.மு.கவின் தேர்தல் வாக்காக இது இருந்தது என்பதை மறந்துவிடமுடியாது. தொழில் வளர்ச்சியை பொருத்தமட்டில், புளி ஏற்றுமதி மையம் அமைப்பதாக வாக்கு தந்த ஆட்சியாளர்கள் அதையும் நிறைவேற்றவில்லை. ரியல் எஸ்டேட் தொழிலை பொறுத்தவரையில் தி.மு.க தலைகளிடமே அனைத்து இருப்பது இன்னொரு கறும்புள்ளி. படித்தவர்கள் அதிகம் இருக்கும் கிருஷ்ணகிரி நகத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் நிச்சயம் எதிரொலிக்கும். மிக வேகமாக நகரம் விரிவடைந்து வரும்வேளையில், உள்க்கட்டமைப்புக்காக பெரியதாக எதையும் செய்யும் உத்தேசத்தில் ஆட்சியாளர்கள் இல்லை என்பதும் சறுக்கல்.

பல வருடங்களுக்கு முன்பே பாதாள சாக்கடை திட்டம் அமைக்க முடிவு செய்தும் தேர்தல் நெருங்கும் வேளையில் அதை ஆரம்பித்து ஊரில் இருக்கும் அத்தனை தெருக்களிலும் பள்ளம் நோண்டி மக்களின் வெறுப்புக்கு ஆட்சியாளர்கள் உள்ளாகியுள்ளதும் மக்களிடம் பேசும்போதே தெரிந்துக்கொள்ளலாம். கிராமங்களை பொருத்தமட்டில் மகளிர் சுய உதவி அமைப்புகள் தான் தி.மு.காவின் பலமாக இருந்தது.

மகளிர் சுய உதவி குழுக்கள் அதிகள் வெற்றிபெற்ற ஒரு தொகுதி இது. அதன் காரணமாகவே பல அமைப்புகள் சுய உதவி குழுக்களை ஆரம்பித்தது. ஆனால் போட்டியின் காரணமாக பல அமைப்புகளுக்கு வரவேண்டிய கடன்கள் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு கூட தரவில்லை என்ற புகாரும் தி.மு.கவின் வெற்றிக்கு தடை தான். தமிழகத்தின் மா உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் தொகுதி இது. ஆனால் மக்களின் விருப்பமான மா ஏற்றுமதி மையும் இன்னும் அமைந்தபாடில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மாங்கனி கண்காட்சி திட்டம் தி.மு.க ஆட்சிகாலத்தில் எறும்பாக தேய்ந்துவிட்டது என்பதும் உண்மை. இந்த மாவட்டத்தை சேர்ந்த எந்த ஒரு திமுக புள்ளியும் அமைச்சரவையில் இல்லை என்பதும், குறைந்த பட்சம் நன்றாக பெயர் உள்ளவர் இல்லை என்பதும் திமுகவின் பிரச்சனை தான்.

பக்கத்து தொகுதியில் இறுந்து வரும் மக்கள் கூட என்ன செய்தார் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் என்ற கேள்வியைவிட எவ்வளவு சம்பாத்திது இருப்பார் என்று ஆச்சர்யப்படும் நிலையில் தான் இந்த தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய உறுப்பினர் ஆறு மாத காலமாகவே வேப்பனப்பள்ளி தொகுதியில் வேலை செய்ய ஆரம்பித்தது தொகுதியில் இருந்த அனைவருக்கும் தெரியும். சென்ற மக்களவை தேர்தலின் போது பல கிராமங்களில் கிருஷ்ணகிரியின் சட்டமன்ற உறுப்பினரை ஊருக்குள் அனுமதிக்கவே இல்லை என்பது அநேகமாக அனைத்து தாள்களிலும் வந்த ஒன்று. இந்த முறை வேட்பாளர் பெயர் வருவதற்கு முன்பே தேர்தல் ஆணையத்திடம் இருந்து கண்டனம் வாங்கிய ஒருவராகவும் இருக்கிறார். தொகுதியில் உள்ள பல பா.ம.க புள்ளிகள் மீது வழக்குகள் இருப்பது பரவலாக அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் தான் மருத்துவர் ஐயாவும் பெரியதாக இந்த தொகுதி பொருத்தமட்டில் அலட்டிக்கொள்ளவில்லை. மேலும் தொகுதி சீரமைப்பின் பின் கிருஷ்ணகிரியுடன் இணைந்த காவேரிப்பட்டினம் தொகுதி முன்னர் பா.ம.க வின் தொகுதி என்பதையும் மறந்துவிட முடியாது. காவேரிப்பட்டினத்தின் கடந்த ஐந்து ஆண்டு கால வளர்ச்சி பின்னோக்கி சென்றிருப்பதாகவே தொகுதி மக்களின் புலம்பல். இதுவும் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக அணிக்கு பாதகமாக அமைந்துவ்டும்.

அதிமுகவை பொருத்தமட்டில் பெரியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. தேமுதிகவும் நல்ல வளர்ச்சியுடன் இருக்கும் தொகுதி. ஆதி திராவிடர் மக்களை பொருத்தமட்டில் இந்த தொகுதியில் முழுமையாக அவர்கள் சமூகத்து கட்சிகளுக்கு வாக்களிப்பார்களா என்பதை சொல்ல முடியாது. இந்த சமூகத்து மக்கள் கிருஷ்ணகிரி நகரத்தில் பெரும்பான்மையானவர்களாக இருந்தாலும் இதற்க்கு முன்னால் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற எந்த கட்சியினரும் பெரிய அளவில் வெற்றியை காண்பித்ததில்லை. மேலும் இந்த தொகுதியில் இந்த சமூகத்தினர் அதிகம் படித்தவர்களாக இருப்பதும் ஜாதி அரசியலை பின்பற்றமாட்டார்கள் என்பதே பரவலாக இருக்கும் உண்மை.

சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை துவங்கிய இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவனின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி அனைவரின் கண்ணை உறுத்தும் ஒன்றாகவே பார்க்கபடுகிறது. தொகுதியின் கேபிள், ரியல் எஸ்டேட், சில்லறை வணிகம், கல்லூரிகள் அனைத்தும் இவரின் சகாக்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது மிகப்பெரிய பலவீனம். நகரமன்ற தலைவராக இருக்கும் திமுக புள்ளியின் பணம் சம்பாதிக்கும் வேகம் மிகப்பெரிய அதிர்ச்சி தான்.

அதிமுகவின் வேட்பாளராக களமிறங்கும் கே.பி.முனுசாமி தொகுதியில் ஏற்கனவே பிரபலமானவர் தான். அதிகம் பரீட்சையம் இல்லாத காங்கிரஸ் வேட்பாளருடன் இவர் மோதும் போது இவர் தான் முன்னின்று தெரிவார் என்பது உண்மை. அந்த அளவு தொகுதியில் காங்கிரஸ் தலைகள் முகம் தெரியாதது அவர்களுக்கு பாதிப்பே. மேலும் தொகுதியில் இஸ்லாமிய ஓட்டுகளும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். என்னதான் நகர்மன்ற தலைவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் சமூகத்தில் நல்ல செல்வாக்குடையவராக பார்க்கபட்டாலும், இந்த ஓட்டுக்கள் தொகுதியில் திமுகாவிற்கு பயம் காட்டும் என்பதும் உண்மை. மற்ற கட்சிகளை விட இந்த தொகுதியில் அதிமுகவில் இஸ்லாமியகள் அதிகம் இருக்கின்றனர் என்பதே உண்மை. பல இலவசங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த தொகுதியின் கிராமப்புற மக்கள் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுக விசிறிகள் தான். சென்ற தேர்தலில் அதிமுக மீதான மக்களின் கோபம் அவர்களை தோற்கடித்திருந்தாலும் இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி திமுக அணிக்கு தலைவலியாக இருக்கப்போவது நிச்சயம். தொகுதியின் நிலவரம் தெரியாமல் காங்கிரஸ் இந்த தொகுதியை திமுகாவிடம் இருந்து வாங்கியிருப்பது தற்கொலைக்கு சமம். ஒரு ஆர்வத்தில் பேராசையில் கட்சியை சேர்ந்தவர்கள் சொல்லியிருந்தாலும் காங்கிரஸ் தலைமை கொஞ்சம் சிந்தித்தே இந்த தொகுதியை பெற்றிருக்க வேண்டும்.

அடுத்து என்ன தொகுதி ?


Read More...

நாமக்கல் தொகுதி ரவுண்டப்

அன்புள்ள இட்லிவடை,

நாமக்கல் தொகுதியின் தேர்தல் நிலவரம் பற்றி என்னுடைய சில அவதானங்களை அனுப்பியுள்ளேன். ஏற்புடையதாக கருதினால் அதை நீங்கள் இட்லிவடையில் பிரசுரிக்கலாம்.

நன்றி.
அன்புடன்,
ராஜா,
நாமக்கல்.



தொகுதி: நாமக்கல்

முக்கிய போட்டியாளர்கள்:
கொ.மு.க: ஆர்.தேவராஜன்
அ.தி.மு.க: கே.பி.பி.பாஸ்கர்

நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை அது தனித் தொகுதியிலிருந்து பொதுத் தொகுதியாகி இருப்பதுதான் இந்த சட்டமன்ற தேர்தலின் முக்கியமான சிறப்பம்சம். தொகுதியில் பெரும்பான்மையினராகவும் செல்வாக்கு பெற்றவர்களாகவும் இருக்கும் கொங்கு வேளாள கவுண்டர்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பு இது.

இதில் சாதி ரீதியான மனசாய்வுகள் ஒருபுறம் இருக்க, தனித் தொகுதி என்பதால் உள்ளூரில் அறிமுகமில்லாத தொகுதிக்கு துளியும் சம்மந்தமில்லாத தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ., ஜெயகுமார் போன்றவர்களை அரசியல் கட்சிகள் கொண்டு வந்து நிறுத்திவிடுவது வாடிக்கையாக இருந்தது ஒரு குறையாக இருந்தது. மாநில அரசின் தலைமையை மனதில் கொண்டு வேறு வழியில்லாமல் அவர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு இக்காட்டான சூழ்நிலை இனிமேல் தவிர்க்கப்படும் என்பது தொகுதி மக்களிடையே பொதுவில் ஏற்பட்டுள்ள ஒரு ஆறுதல்.

இனி தேர்தல் கூட்டணிகள் முடிவாவதற்கு முன்பாக தொகுதியில் நிலவிய கருத்துக்களை ஆராய்வோம்.

சட்டமன்ற தேர்தல்கள் முடிந்து, அடுத்த தேர்தல்கள் வரும்போது எழும் முக்கியமான ஒரு கேள்வி ‘என்ன செய்தார் உங்கள் எம்.எல்.ஏ?’ என்பதாக இருக்கும். ஆனால், நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை ’யார் உங்கள் எம்.எல்.ஏ?’, ‘எப்படி இருப்பார் உங்கள் எம்.எல்.ஏ?’ என்னும் ரீதியில் தான் கேள்விகள் இருக்கும். அந்த அடுக்கடுக்கான எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான் — ‘தெரியாது’ என்பதுதான் அது.

அந்தளவுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2006-ல் நாமக்கல்லில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயகுமார், தொகுதியை அம்போவென விட்டு விட்டார். கடந்த முறையே அவர் மீது இதே போன்ற குற்றசாட்டு இருந்தது. ஆனால் இப்போதைய நிலைமையை எண்ணிப் பார்க்கையில் அதுவே எதேஷ்டம் என்பதாக இருக்கிறது. சென்ற முறை எம்.எல்.ஏ.,ஆக இருந்த பொழுதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது தொகுதியில் மருந்துக்காவது கண்ணில் பட்டார். ஆனால் 2006-ல் தேர்தல் முடிந்து பெரிதாக ஒரு கும்பிடு போட்டுவிட்டுச் சென்றதோடு சரி. அதற்குப் பிறகு எதற்காகவும் எட்டிப் பார்க்கவில்லை. ஒரு அரசு நலத் திட்ட விழா, ஒரு நல்லது கெட்டது... ம்ஹூம்... எம்.எல்.ஏ.,வை எந்த நிகழ்ச்சியிலும் பார்த்ததேயில்லை. நகைச்சுவைக்காக எம்.எல்.ஏ காணவில்லை என்று போஸ்டர் ஒட்ட வேண்டும் என்று எழுதுவார்கள். அதற்கு நடைமுறை எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டி வாளாவிருந்து விட்டார் எம்.எல்.ஏ ஜெயகுமார்.

இதற்கு லோக்கல் தி.மு.க மத்திய அமைச்சரின் உருட்டல் மிரட்டல்கள் தான் காரணம் என்பார்கள். அவருக்கு டெல்லி அரசியலில் நாட்டம் அதிகமாகிவிட்டது என்றும் சொல்வார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாக இருப்பது, தொகுதி மறுசீரமைப்பில் நாமக்கல் தனித் தொகுதிலிருந்து பொதுத் தொகுதியாக மாற்றப்படும் செய்திகள் வெளியானதுதான். அடுத்தமுறை இங்கே போட்டியிடப் போவதில்லை என்பதால் தொகுதிக்கு ரிட்டர்ன் டிக்கெட் எடுக்காமல் சமர்த்தாக சிக்கனம் பிடித்து விட்டார். இப்போது ஜெயகுமார் ஆத்தூர் (தனி) தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருக்கிறார் என்பது ஒரு தகவலுக்காக.

தொகுதிக்கு ஏன் எம்.எல்.ஏ வரவில்லை என்பதெல்லாம் அவருடைய தனிப்பட்ட பிரச்னைகள். தொகுதி நலனை பொறுத்தவரை அவர் பூஜ்ஜியம். அதனால் இம்முறை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியாகிய தி.மு.கவிற்கு எதிராக உள்ளூரில் பெரும் அதிருப்தி அலை நிலவுகிறது. அதனாலேயே காங்கிரசின் விருப்பத் தொகுதிப் பட்டியலில் பல ஆண்டுகளாக இடம்பிடித்துவந்த நாமக்கல்லை இம்முறை காங்கிரஸ் கைகழுவி விட்டது. கேட்டிருந்து, கிடைத்து, ஊருக்குள் ஓட்டுக்கேட்கவும் வந்திருந்தால் ரணகளமாகியிருக்கும்!

தமிழக அரசியல் கட்சிகளின் மாரத்தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருவழியாக முடிந்து தற்போது நாமக்கல்லில் கொ.மு.க.வும், அ.தி.மு.க.வும் போட்டியிடுகிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது.

கொ.மு.க.வை பொறுத்தவரை அவர்கள் இந்தத் தேர்தலில் தங்களின் சாதி ஓட்டு வங்கியை இரண்டாம் முறையாக நிரூபித்துக் காட்ட வேண்டிய ஒரு ’ஆசிட் டெஸ்ட்’ நிலையில் இருக்கிறார்கள். அதற்கான எல்லா வித சாதகமான அம்சங்களும் இருந்தன — அவர்கள் சென்று தி.மு.க அணியில் சேரும் வரை. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் சென்று தி.மு.க கூட்டணியில் இணைந்து சீட் வாங்கிக் கொண்டது கொங்கு வேளாள கவுண்டர்களிடையே மேலிருந்து கீழ் வரை ஒரு அதிருப்தி அலையை உண்டாக்கியுள்ளது.

காரணம் அடிப்படையில் கொங்கு வேளாளர்களுக்கு இணக்கமான கட்சி அ.தி.மு.க.தான் என்பது வெள்ளிடை மலை. அது மாத்திரமல்லாமல், கொங்கு வேளாளர்களின் அடிப்படையான சில கோரிக்கைகளை கூட தி.மு.க அரசு கண்டுகொள்ளாது காலம் தாழ்த்தியது குறித்து அவர்களின் சமுதாயத்தில் ஒரு கோபம் இருந்துவருகிறது. அதனுடன் பொதுவில் தி.மு.க ஆட்சி குறித்து இருக்கும் எதிர்மறையான கருத்துநிலையும் இணைந்துகொள்ள, கொங்கு சமுதாயத்தின் ஒட்டு மொத்த கருத்தோட்டமும் தி.மு.க.வுக்கு எதிராக மாறியிருந்தது.

இந்நிலையில் யார் அதிக சீட் கொடுத்தார்களோ அவர்களிடம் சென்று சேர்ந்துகொண்ட கொ.மு.க. தலைவர்களின் செயல் கொங்கு வேளாளர்களிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தியுள்ளது. விளைவாக, மணி கவுண்டர் போன்ற அவர்களின் சில தலைவர்கள் கொ.மு.க.வுக்கு எதிர்நிலை எடுத்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். ஏற்கனவே தனி அமைப்பு வைத்துக்கொண்டு தனியாவர்த்தனம் செய்துவரும் தனியரசு அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து ஒரு சீட்டும் வாங்கிவிட்டார். அவருக்கு ஓரளவு பரவலான தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அதனால் சாதி ரீதியான ஓட்டுக்கள் இம்முறை சிதறவே அதிக வாய்ப்புள்ளது.

அதை ஈடுகட்டும் விதமாக நாமக்கல்லில் கொங்கு வேளாளர்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.தேவராஜன் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அது எந்தளவு வேலை செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும், கொ.மு.க.வுடன் இணைந்து தி.மு.க உடன்பிறப்புகள் வேலை பார்ப்பதில் நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை பிரச்னை இருக்காது. இரண்டு கட்சிகளின் மாவட்ட அளவிலான தலைவர்களும், வேட்பாளரும் ஒரே இனம் என்பதோடு, சுற்றி பார்க்க தூரத்து உறவினர்களாக இருப்பார்கள்.

உடன்பிறப்புகளின் இனப் பாசம் ஒருபுறம் இருந்தாலும், வெகுசனமக்களிடம் இத்தேர்தலில் பொதுவில் நிலவும் பணப் பாச எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்படுமா என்பது கேள்விக்குறிதான். தி.மு.க என்றால் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்; உரிமையாக(?) கேட்கவும் செய்யலாம். கொ.மு.கவில் ஓட்டுக் கேட்டு வரும் மாமன், மச்சான், பங்காளிகளிடம் அதை எதிர்பார்க்க முடியுமா?

இது தி.மு.க கூட்டணியின் நிலைமை.

எதிர்புறம் அ.தி.மு.க கூட்டணியில் முதலில் வெளியான பட்டியலில் நாமக்கல் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அது அப்படியே தொடர்ந்திருந்தால் சிரமம் தான்; கொங்கு வேளாளர்களின் கணிசமான ஓட்டுக்களை இலகுவில் தேவராஜன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டிருந்திருப்பார். ஆனால் திருத்தப்பட்டு வெளியான இரண்டாவது பட்டியல்தான் நாமக்கல் தொகுதியின் கதாநாயகன். (இப்போதெல்லாம் கதாநாயகன், கதாநாயகி என்ற வார்த்தைகளை கட்டுரைகளில் சேர்த்துக்கொண்டால்தான் அதை சமகால அரசியல் கட்டுரை என்றே ஒப்புக்கொள்கிறார்கள்!).

அதன்படி, அதாவது கதாநாயகன் என்று சொன்னேனே அந்த அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட பட்டியலின்படி இந்த ஒட்டு மொத்தக் கட்டுரையையும் ஒரு வரியில் சுருக்கி இப்படி எழுதிவிடலாம் — ’அ.தி.மு.க.வில் உள்ளூரில் பொது மக்களின் செல்வாக்கு பெற்ற கே.பி.பி.பாஸ்கருக்கு சீட் கொடுக்கப்பட்டிருப்பதால் மற்ற எதையும் பரிசீலிக்க அவசியமின்றி ‘அட்வாண்டேஜ் அ.தி.மு.க’ என்று சொல்லிவிடலாம்’.

அ.தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாஸ்கர் உள்ளூரில் நன்கு அறிமுகமானவர். பொதுமக்களின் அபிமானத்திற்கு உரியவர். அதனாலே கட்சிகளை கடந்தும் ஓட்டுகளை பெறும் செல்வாக்கு படைத்தவர். அவருடைய தந்தை நாமக்கல் நகராட்சியில் சேர்மனாக இருந்தவர் என்பதால் பாரம்பரிய அரசியல் அடையாளமும் வாய்க்கப்பட்டவர். அதோடு கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி சேர்மனாக தேர்ந்தடுக்கப்பட்டு, பின்னர் தி.மு.க.வின் ஆள் கடத்தல் அரசியல் செப்பிடு வித்தையில் பதவியை பறிகொடுத்திருந்தது வேறு அவருக்கு மக்களிடையே ஒரு அனுதாப அலையை சம்பாதித்து கொடுத்திருந்தது. அதனால் அ.தி.மு.க. என்றால் வேட்பாளராக பாஸ்கர் அறிவிக்கப்பட வேண்டும் என்று பொதுவில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

மாறாக, முதலில் வெளியான பட்டியலில் அ.தி.மு.க பெயர் (பாஸ்கர் பெயர்) இடம்பெறாதது தொகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்போதும் ஒரு சிறிய ஏமாற்றத்திற்கு பிறகு அதில் வரும் மாற்றம் ஆர்பரிப்பை தருவதாக அமையும். பாஸ்கரின் தேர்வும் அப்படி ஒன்றை அளித்துள்ளது என்றுச் சொல்லலாம். இதில் நான் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

பாஸ்கருக்கு சாதகமாக இருக்கும் இன்னொரு அம்சம் - அவர் உள்ளூர் பிள்ளை என்பது. தேவராஜனின் வேர்களும், உறவுகளும் நாமக்கல்தான் என்றாலும், அவர் பல காலமாக திருச்சியில் நிலைகொண்டுவிட்டவர். அதனால் அசலூர்க்காரர் என்னும் எண்ணப்பூச்சு அவர் மேல் பூசப்படுவதை அவரால் தவிர்க்க முடியாது.

ஆக, நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை தற்சமயம் வரை முன்பே சொன்னது போல ‘அட்வாண்டேஜ் அ.தி.மு.க’ என்று சொல்லலாம். எனினும், இலவச அறிவிப்புகளைப் பற்றிய எதிர்பார்ப்புகள் - அலசல்கள், ஏற்கெனவே அளித்த இலவச பொருட்களை மனங்கோணாமல் வாங்கி பரணிலாவது கடாசிக் கொண்ட பாங்கு ஆகியவற்றை பரிசீலிக்கும்போது, நம் மக்கள் கடைசி நேரத்தில் எதற்காக எந்த பொத்தானை அமுக்குவார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். இன்னொரு முறை பாஸ்கர் தோற்பதை காண சகிக்க மாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஊர் நிலவரம் பற்றி பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த இட்லிவடையாருக்கு நன்றி. (அரசியல் என்று வந்து விட்டாலே வாய்ப்பளிப்போரை விதந்து இட்லியார், வடையார் என்று வாயாற விளித்து வைப்பது - அது நல்லது!).

--நாமக்கல் ராஜா.
twitter.com/nklraja


இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில், அட்லீஸ்ட் 100 தொகுதியாவது இட்லிவடையில் வந்தால் நன்றாக இருக்கும் :-)

Read More...

Tuesday, March 22, 2011

திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) தொகுதி ரவுண்டப்

அன்பு இட்லிவடை நண்பருக்கு/நண்பர்களுக்கு,

நான் தங்கள் blog -இன் வாசகன். போன வாரத்தில் நீங்கள் வெளியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் ரவுண்டப் பகுதியில் வாசகர்கள் தங்கள் தொதியின் தேர்தல் நிலவரங்களையும் அனுப்பலாம் என்று கூறியிருந்தீர்கள். எனது தொகுதியான திருசெந்தூர் தொகுதி தேர்தல் கள நிலவரங்களை இத்துடன் இணைத்துள்ளேன். இட்லிவடையில் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
முத்து செந்தில் குமார்


திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) தொகுதி ரவுண்டப் :




2009 டிசம்பரில் நடந்த இடைதேர்தலால் தமிழகம் முழுவதும் பிரபலமான தொகுதி திருச்செந்தூர். முற்றிலும் கிராம புறங்களை உள்ளடக்கிய கடலோர செம்மண் பிரதேசம். கடந்த 2006 ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் திரு.அனிதா ராதாக்ருஷ்ணன் வெற்றிபெற்றார். 2009 ம் ஆண்டு MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக சார்பாக நின்று சுமார் 43000 வாக்குகள் வித்யாசத்தில் அமோக வெற்றி பெற்றார். மீண்டும் அவரே திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2001 இல் இருந்து 10 வருட காலமாக அசைக்க முடியாத சக்தியாக இந்த தொகுதியில் அனிதா இருக்கிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் உடன்குடியை சேர்ந்த மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக வின் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் மாநில துணை செயலாளராக உள்ளார். இருவரும் இப்பகுதியில் அதிகமாக உள்ள நாடார் இனத்தை சேர்ந்தவர்கள். கோடீஸ்வரர்கள்.

தொகுதியின் வாக்களர்கள் நிலவரம்:


மொத்த வாக்காளர்கள் : 1,86,629
ஆண் வாக்காளர்கள் : 90,740
பெண் வாக்காளர்கள் : 95,889




கடந்த 14 தேர்தகளில் (2009 இடைதேர்தலையும் சேர்த்து) காங்கிரஸ் 3 தடவையும், அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றிருகின்றன. நாடார் இன மக்களும், மீனவ சமுதாய மக்களுமே இத்தொகுதியின் பிரதான வாக்கு வங்கி. இதை மெய்பிப்பது போலவே கடந்த தேர்தல்களில் இந்த சமுதாய வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர்.

1996 ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெனிபர் சந்திரன், மீன் வள துறை அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் 2001 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அனிதாவிடம் தோற்று போனார். பின்னர் 2004 ம் ஆண்டு வாக்கில் அம்மாவிடம் ஐக்கியமாகி இந்த தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதேபோல் 2001 மற்றும் 2006 இல் அதிமுக சார்பாக போட்டியிற்று வென்ற அனிதா ராதாக்ருஷ்ணன் 2009 இல் திமுக வில் ஐக்கியமாகி இடைதேர்தலிலும் வென்று தற்போதைய MLA வாக இருக்கிறார்.

தற்போதைய MLA அனிதாவிற்கு தொகுதியில் தனிப்பட்ட முறையில் நல்ல செல்வாக்கு உள்ளது. தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். கோவில்கள், பள்ளிகூடங்கள் மற்றும் சமுதாய நல கட்டிடங்களுக்கு உதவிகள் செய்து பெரியவர்கள் மனதை கவர்ந்துள்ளார். தொகுதியில் சொந்த செலவில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி இளைஞர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார். தொகுதியில் பெரிய திட்டம் என்று பார்த்தால் உடன்குடி அனல் மின்நிலையம் தான். அங்கும் மந்தகதியில் பணிகள் நடக்கின்றன. தவிர திருசெந்தூர் பஸ் நிலையம், சாலை வசதி, குடிநீர் தொட்டி என்று சம்பிரதாயங்களை நிறைவேற்றி இருக்கிறார். தொகுதியில் இருக்கும் கிறித்தவ முஸ்லிம் வாக்குகள் பெரும்பாலும் திமுக விற்கே கிடைக்கும். நாடார் இன பிரமுகரான தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனாரின் திமுக ஆதரவு நிலைப்பாடும் அனிதாவிற்கு சாதகமான அம்சங்கள்.

இவருக்கு இருக்கும் பெரிய மைனஸ் பலரும் இன்னும் இவரை அதிமுக ஆளாகவே பார்க்கிறார்கள். தவிர உடன்குடி அருகில் அமையவிருக்கும் அனல் மின் நிலையத்தால் மீன்வளம் மற்றும் சுற்றுசூழல் பாதிக்கபடும் என்று குலசேகரன்பட்டினம், மணப்பாடு மற்றும் ஆலந்தலை போன்ற மீனவ கிராம மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். தொகுதியில் கணிசமான அளவில் தாழ்த்தபட்டோரும் உள்ளனர். விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் எந்த அளவிற்கு அனிதாவிற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பது சந்தேகமாக உள்ளது. காரணம், சமீபத்தில் முத்துக்குமார் நினைவு நாள் நிகழ்ச்சிகளின் போது, நாடார் இன வியாபாரிகளுக்கும் சிறுத்தைகளுக்கும் நடந்த மோதல். தொகுதியில் சத்தமில்லாமல் நடக்கும் கந்து வட்டி, சிட்டை வட்டி சமாச்சரங்களும் ஆளுங்கட்சிக்கு எதிராக மாறலாம்.

அதிமுக வேட்பாளர் திரு மனோகரன் முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். சமீப காலத்தில் அரசியலுக்கு வந்து அதிமுகவில் மாநில அளவில் பொறுப்பு வகிக்கும் இளைஞர். தேங்காய் வியாபாரம் மற்றும் கொப்பரை தேங்காய் ஏற்றுமதி தொழில் செய்கிறார். உடன்குடி பகுதி மக்களிடையே அவரின் தந்தையார் பூக்கன்ராஜ் நாடாரின் பெயரில் அடையாளபடுத்த படுகிறார். தொகுதியில் உள்ள பிராமணர், விஸ்வகர்மா, பிள்ளைமார், தேவர், யாதவர் ஓட்டுகள் அதிமுகவிற்கு விழலாம். முதல் முறையாக களம் காண்பதால் தொகுதியில் பல காலமாக இருக்கும் அதிமுக புள்ளிகள் (அம்மன் நாராயணன், தாமோதரன்) இவருக்காக முழு மனதோடு வேலை செய்வார்களா என்பது சந்தேகம். இவருடைய மைனஸ் தொகுதியில் உடன்குடி பகுதி தவிர மற்ற பகுதிகளில் இவருக்கு அறிமுகம் இல்லை.

தொகுதியில் உள்ள முக்கிய பகுதிகள்:

திருசெந்தூர்
உடன்குடி
நாசரேத்
ஆறுமுகநேரி
காயல்பட்டினம்
மெய்ஞானபுரம்
பரமன்குறிச்சி
குலசேகரன்பட்டினம்
மணப்பாடு

திருசெந்தூர் மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக சமபலம் கொண்டவையாக உள்ளன. உடன்குடி பகுதியில் மண்ணின் மைந்தர் மனோகரன் முன்னிலை பெறலாம் . உடன்குடி பகுதியில் கோலோச்சும் விஸ்வகர்ம மக்களின் ஆதரவும் அதிமுகவிற்கு கிடைக்கலாம். நாசரேத் கிறித்தவ மக்கள் நிறைந்த பகுதி. காயல்பட்டினம் முஸ்லிம் சமுதாயத்தினரின் கோட்டை. அதனால் இந்த இரண்டும் திமுகவின் பலம். பரமன் குறிச்சி மற்றும் மெய்ஞானபுரம் அனிதாவிற்கு சாதகமாக அமையலாம். குலசேகரன்பட்டினம் மற்றும் மணப்பாடு மீனவ பகுதிகள், அனல் மின் நிலைய எதிர்ப்பு மற்றும் மீனவ கிராமங்களுக்கு இடையே உள்ள சண்டை காரணமாக ஆளுங்கட்சிக்கு எதிராக மாறலாம்.

2006 தேர்தலில் அனிதாவிற்கு எதிராக தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் A D K ஜெயசீலனை நிறுத்தி திமுக வே அனிதாவின் வெற்றியை உறுதி செய்தது. 2009 இடை தேர்தலில் பஞ்சாய் பறந்த பணம் மற்றும் இடைதேர்தலில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு காரணமாக அனிதா வெற்றி சுலபமானது.

ஆனால் இம்முறை நிற்கும் இருவருமே கோடீஸ்வரர்கள். இருவருமே சுமார் 5 கோடிக்கும் மேல் செலவழிக்க தயாராக இருப்பதாக தெரிகிறது.

கூட்டணி ஆதரவு என்று பார்த்தால், தொகுதியில் கொஞ்சம் செல்வாக்காக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுகள் திமுகவிற்கு சாதகம். சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீகிற்கு பெயரளவில் ஆதரவு உள்ளது. தவிர பாமக என்றால் என்ன என்று கேட்பார்கள் இத்தொகுதி மக்கள். அதிமுக அணியில் உள்ள தேமுதிகவிற்கு சொல்லி கொள்ளும் படியான ஓட்டு வங்கி இருப்பதாக தெரியவில்லை. நடுத்தர வர்க்க இளசுகள் விஜயகாந்தை ஆதரிக்கலாம். தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத பகுதியாதலால் காம்ரேடுகளும் சொல்லிகொள்ளும் படியான செல்வாக்குடன் இல்லை.

பிஜேபி தனது வேட்பாளராக ராஜகோபால் என்பவரை நிறுத்தி இருக்கிறது. பகுஜன் சமாஜ், ஐஜேகே முன்னணி மற்றும் சில குட்டி கட்சிகளும் தத்தமது வேட்பாளர்களை நிறுத்தலாம். இவர்கள் எல்லாம் டெபாசிட் வாங்குவதே கஷ்டம் தான்.

இப்போது இருக்கும் சூழ்நிலைகளை பார்க்கும் போது திமுகவின் அனிதாவே வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் தேர்தல் அறிக்கைகள், கட்சி தலைவர்களின் பிரச்சாரங்கள் எதிர்பார்ப்புகளை மாற்றலாம்.




முத்து செந்தில் குமார் அவர்களுக்கு மிக்க நன்றி. அடுத்த நிலவரம் நாமக்கல்

வாசகர்கள் தங்கள் தொகுதி நிலவரத்தை எழுதி அனுப்பலாம். நன்றி.


Read More...

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் -மீண்டும் மீண்டும் சொதப்பல்! -எ.அ.பாலா

இந்த ஆட்டத்தில் வென்றால், கால் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை சந்திக்க நேரும், தோற்றால் ஸ்ரீலங்காவை சந்திக்க நேரும் என்பது தவிர ஒரு முக்கியமான விஷயம் பற்றி தெரிந்து கொள்ள என்னைப் போலவே, பல ரசிகர்களும் ஆர்வமாக இருந்திருப்பார்கள். அதாவது, நமது மிடில் ஆர்டர் பேட்டிங் இங்கிலாந்து, தெ.ஆ விடம் சொதப்பியது போல இந்த ஆட்டத்திலும் சொதப்புமா என்பது தான் அது :)

டாஸில் வென்ற தோனி, இங்கிலாந்து, தெ.ஆ விடம் செய்தது போல பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். கனமான உருளையால் உருட்டப்பட்ட ஆடுகளம் என்பதால், bounce சற்று அதிகமாகவே இருக்கும் என்று பட்டது. இதை உணர்ந்த ராம்பால் short pitch வகை பந்துகளை வீச ஆரம்பித்தார். முதல் ஓவரிலேயே சச்சின் விக்கெட் இழந்தார். அம்பயர் அவுட் தராதபோதும், சச்சின் just walked!

தோனி இம்முறை பதானை அனுப்பி சொதப்பல் செய்ய விரும்பாமல், ஒழுங்காக கோலியை அனுப்பினார்! சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் பந்துவீச்சு சுமார் தான். ராம்பால் பந்து வீச்சில் கம்பீர் அவுட்! ஸ்கோர் 53/2 (9 ஓவர்களில்), ராம்பால் (5-0-25-2) மிக சிறப்பாக இருந்தது. யுவராஜ் களமிறங்கினார். 12வது, 13வது ஓவர்களில் வெ.இ கேப்டன் டேரன் சாமி, வயசான மாமி போல ஃபீல்டிங் செய்ததில், யுவராஜ் 2 முறை தப்பினார்!

யுவராஜும், கோலியும் ஜோடி சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் எடுத்தனர். ஸ்கோர் 173/2 (32 ஓவர்கள்). ரன்ரேட் 5.4. Even with 7 runs per over in the next 18 overs, a total of 300 was there for the asking! மீண்டும் ராம்பாலுக்கு விக்கெட், Kohli (59) bowled by a reverse swinging beauty! சுயநலக்கார தோனி தான் தடவித் தடவி ஆடி ஃபார்முக்கு வந்து விடும் நோக்கத்தில், களமிறங்கினார் (சொதப்பல்
1). அவரது தற்போதைய ஃபார்மை கணக்கில் கொண்டால், ரெய்னா தான் களமிறங்கியிருக்க வேண்டும். தோனி, ரெய்னாவை ஃபீல்டிங்குக்கு மட்டும் அணியில் சேர்த்தாரோ, என்ன எழவோ :) இந்த நிலையில் போலார்டும், பிஷுவும் நன்றாகவே பந்து வீசினர்.

42வது ஓவர் வரை கேவலமாக ஆடி கழுத்தறுத்த தோனி, பிஷு பந்து வீச்சில் அவுட். எடுத்தது 22 ரன்கள் (30 பந்துகள்) மட்டுமே! தெ.ஆ வுக்கு எதிரான ஆட்டத்தில் நிகழ்ந்த கூத்து மீண்டும் நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் பவர் பிளேயும் இன்னும் எடுக்கப்படவில்லை! தோனி களமிறங்கி 4-5 ஓவர்களில், அதாவது 37வது அல்லது 38வது ஓவர்களில் பவர் பிளே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் (சொதப்பல் 2) இப்போது அதுவும் சாத்தியமில்லை. It was Dhoni who killed the momentum by coming 3 -down when he is in such pathetic form!

ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரெய்னா அடிக்கப் போய் அவுட்டானர். இறுதி வரை நின்று ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த யுவராஜும் அடுத்த (45வது) ஓவரில் காலி! (சொதப்பல் 3). 46வது ஓவரில் கட்டாய பவர் பிளே :) மீண்டும் ராம்பால்! பவர் பிளே என்றால், ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பதான் ஆடியது பார்க்க பரிதாபமாக இருந்தது. Pathan's middle stump was uprooted by a reverse swinging yorker (சொதப்பல் 4). ஸ்கோர் 252-7 (47 ஓவர்கள்). ஹர்பஜன், சாகீர், முனாஃப் மொத்தமாக 2.2 ஓவர்கள் தாக்கு பிடித்தனர். இந்தியா 49.1 ஓவர்களில் 268க்கு ஆட்டமிழந்தது (சொதப்பல் 5)

இங்கிலாந்து, தெ.ஆ வுக்கு எதிரான ஆட்டங்களில் நடந்தது போலவே, இவ்வாட்டத்திலும், 218/3 என்ற நிலையிலிருந்து, 7.3 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது! நமது பந்து வீச்சு சுமார் ரகம் என்பது தெரிந்தது தான். ஆனால், பேட்டிங் இப்படி தொடர்ந்து சொதப்புவது தான் கவலைக்கிடமான விஷயம்!

WI Batting: இந்தியாவின் பந்து வீச்சை வெ.இ நம்பிக்கையுடன் எதிர் கொண்டது. எதிர்பார்த்தது போல அஷ்வின் அபாரமாக பந்து வீசினார். தோனி தொடர்ச்சியாக அவரை 8 ஓவர்கள் ஏன் பந்து வீச வைத்தார் என்று தோனியைத் தவிர வேறு யாருக்கும் புரிந்த மாதிரி தெரியவில்லை! (சொதப்பல் 6) ஹர்பஜன் பந்து வீச்சு மிகச் சாதாரணமாகவே இருந்தது. ரெய்னாவை ஃபீல்டிங்குக்கு அனியில் சேர்த்தது போல, தோனி முனாஃபை சுழற்பந்து வீசச் சொல்வாரோ என்று பயமாக இருந்தது :) பதான், யுவராஜ், ரெய்னா (முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்!) என்று எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்து விட்டு, போனால் போகிறது என்று முனாஃபுக்கு 25வது ஓவரில் வாய்ப்பு கொடுத்தார். This is captaincy at its worst denting the confidence of a new ball bowler! (சொதப்பல் 7)

ஸ்மித் ஆட்டம் அபாரமாக இருந்தது. 30 ஓவர்களில் ஸ்கோர் 154/2 (RR: 5.13, RRR: 5.75). ஸ்மித் 81 ரன்கள் (94 பந்துகள்). ராம்பாலுக்கு கை கூடிய reverse swing சாகீருக்கு வராதா என்ன! ஸ்மித் clean bowled! அடுத்த ஓவரில் ஹர்பஜனுக்கு ஒரு ஓசி விக்கெட். அதிரடி மன்னன் போலார்ட் அவுட்! ஹர்பஜனும், சாகீரும் வெ.இ பேட்டிங்கின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினர். அழுத்தம் கூடியதில், தேவையான ரன்ரேட் 6.8க்கு சென்றது (160/4) இந்த சூழலில், வெ.இ பேட்ஸ்மன் தற்கொலைப் படையாக மாறினர் :)

டேரன் சாமியை ரன் அவுட் செய்ய, முனாஃப் கையை நன்றாக உயர்த்தி, பின் செல்லமாக bails-ஐ தட்டி விட்டது, வடிவேலு காமடிக்கு நிகரான ஒன்று :) சாகீருக்கு 3 விக்கெட்டுகள், யுவராஜுக்கு 2 விக்கெட்டுகள். பிஷன் சிங் பேடி யுவராஜுக்கு சில tips கொடுத்தார் என்று செய்தி ஒன்று வாசித்திருக்கிறேன். யுவராஜ் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. யுவராஜ் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் பரிமளிப்பது, இந்தியாவுக்கு ஒரு ஆறுதலான விஷயம்.

இதற்கு மேல் வெ.இ பேட்டிங் குறித்து சொல்ல ஒன்றுமில்லை. 34 ரன்களில், 8 விக்கெட்டுகளை இழந்து, வெ.இ அணியினர் சொதப்புவதில் தாங்கள் இந்தியாவுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர் என்று நிரூபித்தனர். 43 ஓவர்களில் 188 ரன்களுக்கு வெ.இ ஆட்டமிழந்தது! இந்த வெற்றியின் மூலம், இந்தியா கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஸ்ரீலங்காவை எதிர்த்து ஆடுவதை விட இது பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது!

ஆரம்பத்தில், மீடியாவில் பயங்கரமாக ஏற்றி விடப்பட்ட இந்திய அணி, குரூப் ஆட்டங்களில் நல்ல அணிகளுடன் சொதப்பலாக விளைடியதில் ஒரு நன்மையும் இருக்கிறது. All the hype is gone now & no right thinking Indian cricket fan seriously feels that India has a great chance to win the World cup. இந்திய ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு இல்லாததால், கால் இறுதி அல்லது அரை இறுதி ஆட்டங்களில் (1996-இல் கொல்கத்தாவில் நடந்தது போல!) கலாட்டா/வன்முறை எதுவும் நிகழாது என்று நம்பலாம். இந்திய அணியை நான் கடுமையாக விமர்சித்தாலும், இந்தியா அடுத்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதற்கு என் வாழ்த்துகள்! "கடவுள்" தோற்கலாகாது என்பதால் என் பிரார்த்தனையும் தொடரும் :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Read More...

Sunday, March 20, 2011

சன்டேனா (20-03-11) இரண்டு செய்திவிமர்சனம்

இந்த வாரம்...இரண்டு அரசியல் பணம் பற்றிய கதை.

செய்தி # 1

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் வந்து முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார், மகள் கனிமொழி ஆகியோரிடம் விசாரணை நடத்தியது சி.பி.ஐ.




"கலைஞர் டிவிக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்று கலைஞர் டிவி தொடங்கப்பட்ட காலத்தில், ஒரு பேட்டியில் சொன்னார் கலைஞர். ஆனால், தற்போதைய விசாரணையில், அதில் தயாளு அம்மையாரும், கனிமொழியும்தான் முக்கிய பங்குதாரர்கள் என்று தெளிவாகி உள்ளது. மேலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்,கலைஞர் டிவிக்கு சுமார் 200 கோடி ருபாய் பண பரிவர்த்தனம் நடந்து இருப்பதும் தெரிய வந்து உள்ளது.

நமது முதல்வர் இதையெல்லாம் பற்றி கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாமல், தேர்தல் பணிகளில் பிசி ஆகி விட்டார்.

அவருக்கு முன்னால் தனது தனிப்பட்ட பண்புகள் மூலம் நிமிர்ந்து இருக்கிறார் கேரள முதல்வர் திரு.அச்சுதானந்தன்.

பொதுவாக நம்மூரிலும் சரி. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் அதிகம் சொத்துக்கள் இல்லாத, எளிமையானவர்களாக இருக்கிறார்கள். கேரளாவின் முதல்வரும் அப்படியே.

இந்திய அரசியவாதிகள் குறிப்பாக தங்கள் வாரிசுகளை நாற்காலியில் உட்க்கரவைக்க துடிக்கும் அரசியல் தலைவர்களுக்கு பாடம் நடத்தி இருக்கிறார் திரு.அச்சுதானந்தன்.

அவரது மகன் வி.ஏ. அருண் குமார் மீது மொத்தம் 11 குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் சுமத்தின.

அதில், கண்ணூர் பகுதியில் அனல் மின் திட்டம் அமைக்க, தொழிலதிபர் கே.பி.பி.நம்பியாரிடம் லஞ்சம் கேட்டது, பிஎச்.டி.,பட்டம் பதிவு செய்ய போலி சான்றிதழ்கள் அளித்தது, சந்தன மரங்கள் கடத்தும் மாபியா கும்பலுக்கு ஆதரவு அளித்தது, மாநில அரசு கோரி வரும் லாட்டரிச் சீட்டு முறைகேடு குறித்தான வழக்கில் ஈடுபட்டது என்று முக்கியமானவை ஆகும்.
இதுவே, நம் கருணாநிதி ஆக இருந்து இருந்தால், இது ஆரியர்களின் சதி, ஆரிய-திராவிட யுத்தம் என்று "புரட்சிகரமாக" பேசி இருப்பார்.

ஆனால், தற்போது முதல்வராக இருக்கும் அச்சுதானந்தன், தனது மகனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி, போலீஸ் எஸ்.பி., ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும் என, மாநில உள்ளாட்சித் துறைக்கு உத்தரவிட்டார்.

தனது மகனுக்கு தொடர்பு உடைய லாட்டரிச்சீட்டு மோசடி சம்பந்தமாக, சி.பி.ஐ.,விசாரணை கோரி ஒரு கடிதம் எழுதிய முதல்வர் அச்சுதானந்தன். அத்துடன் தனது மகனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்.

மத்திய அரசுக்கு அவரே இந்த கோரிக்கையை முன் வைத்து இருக்கிறார்.

விரைவில் நடைபெறப்போகும் கேரள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அவர் செயல்படவில்லை என்று நாம் சொல்ல வலுவான காரணம்...மத்தியில் இருப்பதும், கேரளாவில் எதிர்க்கட்சிகளாக இருப்பதும் காங்கிரஸ் கட்சியே.

அச்சுதானந்தன், ஒரு அரசியல் தலைவர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.

ஆனால், கேரள முதல்வர் தன் மகன் மீது இப்படி நடவடிக்கை எடுத்தும், அவரது கம்யுனிஸ்ட் கட்சியே அவரது மகன் மீதான குற்றசாட்டுகளை சுட்டிக்காட்டி, வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் அவர்க்கு மீண்டும் வாய்ப்பு தர மறுத்துவிட்டது, தேர்தலிலும் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது.

பின்னர், தனது மகன் மீதான வழக்குகளில் அவரின் நடுநிலைத்தன்மையை உறுதி செய்த பின்னரே, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் தலைமை அவர்க்கு மறுபடியும், மலம்புழா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்து இருக்கிறது.

ஆனால், நம்மூரிலோ, தனது வீட்டின் சமையலறை வரை ஸ்பெக்ட்ரம் விசாரணை வந்தும்,அது பற்றி வாயே திறக்காமல் கடந்த ஆண்டு ஜூன் மாதமே ஒய்வு பெறப்போவதாக அறிவித்து இருந்த கருணாநிதி, திமுக பொதுக்குழு(?) வற்புறுத்தல்(!) காரணமாக, தற்சமயம் மீண்டும் தேர்தலில் களம் காண, திருவாரூரில் போட்டியிட முடிவு செய்துவிட்டார்.

செய்தி # 2

தஞ்சாவூரில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சி எது தெரியுமா?

அங்கு நடக்கும் திராவிட கழக தலைவர், இரண்டாம் பெரியார்(?) திரு.கி.வீரமணியை, ஒரு பெரிய தராசின் ஒரு பக்கம் உட்காரவைத்துவிட்டு, தராசின் இன்னொரு தட்டில் அவரது எடைக்கு எடைக்கு தங்கம் அல்லது பணமுடிச்சுகள் வழங்கும் ஒரு விழாதான் அது.

என்ன ஒரு "முற்போக்குத்தனம்".
அங்குதான் அவருக்கு தங்கமுட்டை இடும் பெரியார் மணியம்மை கல்லூரிகள் இருக்கின்றன. கோடிக்கணக்கான ருபாய் சொத்துக்களை உடைய தனது டிரஸ்ட் எனப்படும் அறக்கட்டளையை காப்பாற்றவே பெரியார் தனது கடைசி காலத்தில் இன்னொரு திருமணம் செய்தார். ஆனால், தற்சமயம் அந்த பெரியார் மணியம்மை டிரஸ்ட்டை நிர்வகிப்பதிலும், அதை பெருக்குவதிலும் கி.வீரமணியை அடித்துக்கொள்ள யாரும் கிடையாது.

நமது கோவிலுக்கு முன்னால் நின்றுகொண்டு, கடவுளையும், அங்கு கோவிலுக்கு வந்த பக்தர்களையும் காட்டுமிராண்டிகள் என்று அவதூறாக பேசிவரும் திராவிட கழக பகுத்தறிவாளர்கள், இதே போன்று ஒரு மசூதிக்கு முன்னால் நின்று பகுத்தறிவை முழங்குவார்களா? நம்மை போல அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா? 'வெட்டி' விடுவார்களே.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்று விளக்கம் தருகிறார்கள் இவர்கள். முதலில், நமது மதத்தில் இருக்கும் 'களையை' எடுக்கவேண்டுமாம்.

கடவுளே இல்லை என்று சொல்பவர்களுக்கு மதம்,சிறுபான்மை,பெரும்பான்மை இவையெல்லாம் எதற்கு?

"நமக்குள் ஒற்றுமையும், பொறாமையற்ற கூட்டுவாழ்க்கை நடத்தும் திறனும், கட்டுப்பாடும் சுயநலமற்ற தன்மையும், பதவி மீது வேட்கையில்லா நிலையும் ஏற்பட்டு விடுமேயானால் நாம் வெற்றி காண்பது மாத்திரமல்லாமல் இந்திய நாட்டிற்கே ஒரு மாபெரும் புரட்சிக்கு வழிகாட்டியாக ஆகிவிடலாம் என்பது உறுதி"

ஜூலை 16, 1939 ஆம் அருப்புகொட்டையில் நடந்த ஒரு திராவிட கழக மாநாட்டில் இப்படி முழங்கினார் தந்தை பெரியார் அவர்கள். ஆனால், அவர் எதெல்லாம் கூடாது என்று அவர் சொன்ன நிபந்தனைகளை, வேண்டுகோள்களை அவருக்கு பின் வந்த திராவிட தலைவர்களும், கி.வீரமணி போன்றவர்களும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

"நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது." - என்கிறார் பெரியார்.

பெரியார் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை அச்சிட்டு தி.க. வெளியிட்டு வருகிறது. இவற்றை அச்சிட்டு வெளியிட பெரியார் திராவிடர் கழகமும் முன்வந்தது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தி.க. தலைவர் வீரமணி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். "பெரியாரின் படைப்புகள் மற்றும் எழுத்துக்கள் அனைத்தும் எங்களுக்கே சொந்தம். அதை வேறு யாருக்கும் தரமாட்டோம். எங்கள் உரிமையை விட்டு தரமாட்டோம்" என்று அப்போது தெரிவித்தார் கி.வீரமணி.

இந்த வழக்கை நீதிபதி சந்துரு விசாரித்து, ‘’பெரியார் படைப்புகளை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது’’ என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து வீரமணி அப்பீல் செய்தார்.அதிலும் அவர்க்கு தோல்வியே கிடைத்தது.

பெரியாரின் கொள்கைகள் பலப்பதிப்புகள் மூலம் பலருக்கு சென்று அடைவதைவிட, வீரமணிக்கு மிகவும் முக்கியம் என்ன புரிகிறதா? அந்த புத்தகங்கள் மூலம் வரும் காப்பி ரைட் வருமானமே.

தந்தை பெரியாரை,அவரது கொள்கைகளை தோற்க்கடித்தவர்கள், இவர்கள் சொல்லும் ஆரியர்களோ, பார்ப்பனர்களோ இல்லை. பெரியாருக்கு பின் வந்த பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களும், திராவிட கழகத்தினரும்தான்.

முன்பு, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அவரின் "ராஜகுரு" என்று தன்னையே அழைத்து கொண்டவர்தான் இந்த வீரமணி.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும்தான், அவருக்கு ஜெயலலிதா ஆரிய இனத்தை சேர்ந்தவர் என்கிற நினைவு வந்தது.

அதிமுக ஆட்சி ஒரு 'மனுதர்ம ஆட்சி' என்று அவர் இப்போது மட்டும் புரிந்துகொண்டு விட்டார்.

"இப்போது நமது வாக்காளர்கள் முன் உள்ள பிரச்சனை, பல்வேறு ஒப்பனைகளுடன் வரும் மனுதர்மத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா அல்லது பெரியார் அண்ணா கண்ட திராவிடர் இயக்க, சுயமரியாதை இயக்க இலக்கு நோக்கிய சமதர்ம ஆட்சியாக அனைவருக்கும் அனைத்தும் என்ற அடிப்படையில், ஐந்தாம் முறையாக பொற்கால ஆட்சியாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கலைஞர் தலைமையிலான சூத்திர பஞ்சம, மனிதத் தர்ம ஆட்சியை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்த, நடைபெற்ற சரித்திர சாதனைகளைத் தொடரச் செய்வதா என்பதேயாகும்"

-இவ்வாறு சமிபத்தில் பேசி இருக்கிறார் கி.வீரமணி.

"ஆரிய ஊடகங்கள், ஏடுகளின் பழி தூற்றல்கள், பொய்யுரைப் பரப்பல்கள், நடக்காதவைகளை ஊழல் குற்றச்சாட்டுகளாக்கிக் காட்டுதல் இவைகளையும் மீறி, முகிலைக் கிழித்து வரும் முழு மதி போல கலைஞர் ஆட்சி மீண்டும் மலரப் போவது உறுதியாகும்!

இவ்வளவு சாதனைகளைச் செய்த ஓர் கட்சிக்கு, ஆட்சிக்கு எதிராக ஆரியம் வரிந்து கட்டி நிற்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுவதுபோல, தன்மானத்தைப் பலி கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும்கூட பொதுவாழ்வில் ஏற்படும். இனமான வேட்கையின்முன் தன்மானம் வெகுச் சாதாரணமானது என்பது அறிவுப் பூர்வமாக சிந்திப்பவர்களுக்குத் தெள்ளத் தெளிய விளங்கும்!." என்றல்லாம் இப்போது அறிக்கை விடுத்து இருக்கும் வீரமணி சென்ற வாரம் பேசியது என்ன தெரியுமா?

திமுக - காங்கிரஸ் உறவு உடைந்து திமுக அமைச்சரவையில் இருந்து வெளியேறிவிட்டதாக கருணாநிதி அறிவித்தபோது,

"இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் திமுக இல்லை. எனவே, இதுபோன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை பெறும் அளவுக்கு திமுக செயல் வீரர்- வீராங்கனைகளுக்கு அவ்வாய்ப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெரு உரு கொள்ள வேண்டும்"

"தமிழ் மானம், தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் தி.மு.க.வின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள்வரை அனைவரும் வரவேற்கும் முடிவாக அமைந்துவிட்டது.பதவிகளைவிட கொள்கைகளே முக்கியம்".

- என்று பேசினார் வீரமணி இதே வாயால்.

முதல்வர் பதவியில் யார் இருந்தாலும் , அவர் ஜெயேந்திரர் ஆக இருந்தாலும், அவரின் முடிவுகளுக்கு ஆதரவாகவே நடந்துகொள்வார் வீரமணி. காரணம், அவர் நிர்வகித்துவரும் பெரியார் மணியம்மை சொத்துக்களுக்கு எந்த வித பங்கமும் வந்துவிடக்கூடாதே என்கிற அக்கறையும், "கொள்கைபிடிப்பும்" தான்..
"நமது கழகத்தில் சுயநலக்காரர்களுக்கு இடமில்லை. கழகத்தில் தன் சொந்த லாபத்தைக் கருதியிருப்பவனுக்கு இடமில்லை. கழகத்திற்காகத் தம் சொந்தப் பணத்தை, சொந்த உழைப்பைச் செலவு செய்பவர்களுக்குத் தான் கழகத்தில் மதிப்புண்டு. கழகத்தினிடம் ஊதியம் பெற்று வேலை செய்பவன் கழகத்தின் வேலைக்காரனாகத் தான் மதிக்கப்படுவான். எவனொருவன் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு அரைக்காசாயினும் கழகத்திற்குச் செலவு செய்கிறானோ அவனைத்தான் நான் என் நண்பனாக, என் துணைவனாக, என் தலைவனாகக் கூடக் கருதுவேன்.

கழகம் பாடுபடுகிறவனுக்குத் தான் சொந்தமே ஒழிய, கழகத்தின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நினைப்பவனுக்கல்ல. கழகத்தின் பேரால் வாழ்க்கை நடத்துகிறவன் கழகத்தின் வேலைக்காரன். கழகத்திற்காகத் தன் காசைக் கொடுப்பவன் கழகத்தின் நண்பன். எவனையும் இந்த உரை கல்லைக் கொண்டு தான் நம் இளைஞர்கள் மதிப்பிட வேண்டும்".

-08.05.1948-இல் தூத்துக்குடியில் திராவிடர் கழக 18-வது மாகாண மாநாட்டில் தந்தை பெரியார்.



(நன்றி..இனி,அடுத்தவாரம்).

-இன்பா



Read More...

உ.கோப்பை 2011 கால் இறுதிச் சுற்று குறித்து - எ.அ.பாலா

நேற்று நடந்த முக்கியமான 2 ஆட்டங்களில், தெ.ஆ வும், unpredictable பாகிஸ்தானும் வெற்றி பெற்றதில், குரூப் A இடங்கள் நிச்சயிக்கப்பட்டதுடன், க்ரூப் Bயில் தெ.ஆ, இந்தியா, வெ.இ, இங்கிலாந்து என்று 4 அணிகள் தகுதி பெற்று விட்டன. நிஜப்புலி என்று நான் வர்ணித்திருந்த பங்களாதேஷ் புலித்தோல் போர்த்திய சுண்டெலி என்பது எனக்கு சற்று லேட்டாக தெரிய வந்தமைக்கு மாப்பு கேட்டுக் கொள்கிறேன் :)

இன்று நடக்கவிருக்கும் இந்தியா-வெ.இ சேப்பாக்க ஆட்டம் is only of academic interest. அதாவது, இரண்டாவது இடத்தில் இந்தியாவா அல்லது வெஸ்ட் இண்டீஸா என்பதை இந்த ஆட்டம் தீர்மானிக்கும், அதாவது, இந்தியா கால் இறுதிச் சுற்றில் எந்த அணியுடன் விளையாடும் என்பதை. இந்தியா தோற்றால், நமது லட்சணம் தெரிந்து போய் விடும்! ஆனாலும், ever hopeful இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், டிக்கெட்டுக்காக போலீஸ் அடி வாங்கியதை மறந்து விட்டு, எப்போதும் போல பேராதரவு தருவது தொடரும்! இன்றைய ஆட்டத்தில், வெற்றி என்பது இந்திய அணிக்கு ஒரு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும் என்பது நிச்சயம்.

சரி, கால் இறுதிச் சுற்றில் யார் யாரை எதிர்த்து ஆடப் போகிறார்கள் என்று பார்க்கலாம்! இந்தியா இன்று வெற்றி பெற்றால், இந்தியா கால் இறுதியிலேயே, ஆஸ்திரேலியாவை சந்திக்க வேண்டிய (துர்பாக்கிய) நிலை ஏற்படும். சுழற்பந்து வீச்சுக்கு தோதான ஆடுகளம் அமைந்தாலொ மட்டுமே, நாம் அடுத்த சுற்றில் பிழைத்து முன்னேற முடியும். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான எந்த விஷயமும் ஆடுகளத்தில் இல்லாதவாறு இருத்தல் அவசியம்! இவ்வாட்டம், மிர்பூரில் நடைபெறுவதாலும், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலும், ஆடுகள மேட்டர் குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை :)

கால் இறுதி pairings இப்படி இருக்கும்:

பாகிஸ்தான் - வெ.இ
ஸ்ரீலங்கா - இங்கிலாந்து (இந்த ஆட்டம் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்!)
ஆஸ்திரேலியா - இந்தியா
நியூசிலாந்து - தெ.ஆ

இந்தியா வெ.இ யுடன் "சாதாரணமாக" தோற்றால், இந்தியா ஸ்ரீலங்காவை சந்திக்க நேரிடும்! இந்த ஆட்டத்துக்கு சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் அமைப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஈடானது :) ஒரு advantage உள்ளது, இந்தியாவில் நடைபெறும் ஆட்டமிது என்பதால்! சர்தார் படேல் (மோடேரா, அகமதமாத்) தான் காப்பற்ற வேண்டும் :-)

கால் இறுதி pairings இப்படி இருக்கும்:

பாகிஸ்தான் - இங்கிலாந்து (இந்த ஆட்டமும் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்!)
ஸ்ரீலங்கா - இந்தியா
ஆஸ்திரேலியா - வெ.இ
நியூசிலாந்து - தெ.ஆ

இறுதியாக, இந்தியா மகா மோசமாக இன்று தோற்றால், B குரூப்பில் நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, பாகிஸ்தானை சந்திக்க வேண்டிய அதி துர்பாக்கிய நிலையும் வரலாம். அதுவும், நம்மூரில் இல்லை, மிர்பூரில்! இந்த ஆட்டத்தில், எந்த அணிக்கு பங்களாதேஷ் மக்கள் ஆதரவு இருக்கும் என்று மிக எளிதில் சொல்லி விடலாம் தானே :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Read More...

WHY GO ?

அரசியலில் நண்பர்கள் கிடையாது என்பதை வைகோ உணர்ந்திருப்பார். கடந்த ஏழு ஆண்டுகளாக ஜெயலலிதாவிடம் நட்பு கொண்டு இருந்தவரை தேர்தலில் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த தேர்தலில் போது 35 தொகுதிகள் பெற்ற வைகோ இந்த தேர்தலில் அதை பெற முடியவில்லை. தொகுதி தகுதி அடிப்படியில் வழங்கப்படுகிறது என்று மதிமுகவிற்கு தெரியாமல் இல்லை, இருந்தாலும் தாங்கள் விஜயகாந்த் கட்சியை காட்டிலும் கீழ் இடத்தில் தான் இருக்கிறோம் என்று அவர்களுக்கு ஒத்துக்கொள்ள மனம் வரவில்லை என்பது தான் உண்மையான காரணம்.

ராஜிவ் காந்திக்கு பின் தமிழ், தமிழ் ஈழம் என்ற பஜனை பெரிய அளவில் எடுபடவில்லை என்பதை அவர் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை. தமிழ் ஈழம் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தால் கலைஞர் தன் அமைச்சர்களை வைத்துக்க்கொண்டு ராஜிநாமா நாடகம் அரங்கேற்றியிருப்பார். ஆனால் அந்த பருப்பு வேகாது என்று தெரிந்து தான் யாரும் அதை கையில் எடுக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்னரே அவர் அமெரிக்காவில் உள்ள தன் பெண் வீட்டுக்கு செல்வார் என்று பேசப்பட்டது. ஏப்ரல்-மே மாதம் வெயில் அதிகமாக இருக்கும், அம்மா வீட்டுக்கு போவதற்கு பதில் பெண் வீட்டுக்கு போவது தான் அவருக்கும் அவர் கட்சிக்கும் நல்லது. இந்த தேர்தலில் இவருடைய எழுச்சி மிகு பேச்சை கேட்க முடியாது என்பது ஒரு வருத்தமான செய்தி !


மூன்றாவது அணி என்று ஒன்று வந்தால் அது நிச்சயம் கலைஞருக்கு சாதகமாக இருக்கும் என்பதை உணர்ந்து தேர்தலிலிரிந்து ஒதுங்கியது பாராட்டுக்குறியது. இதற்காவதாவது ஜெ இவருக்கு நன்றிகடன் பட்டிருக்கிறார்.


Read More...

தொகுதி ரவுண்டப் - ஸ்ரீரங்கம்


ஸ்ரீரங்கம் வாசகர் ஜெய்சங்கர் ஜெகன்நாதன் இட்லிவடைக்காக ஸ்ரீரங்கம் தொகுதி பற்றி எழுதி தந்திருக்கும் பதிவு. அவர் பெயரிலேயே இரண்டு 'ஜெ' இருப்பதால் கூட இதை எழுதியிருக்கலாம். மற்ற ஊர் வாசகர்கள் தங்கள் தொகுதி நிலவரம் பற்றிய பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.
நன்றி
இட்லிவடை

போன ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதா இரண்டு முறை திருச்சிக்கு வந்தார். 14ஆம் தேதி பொதுக் கூட்டத்துக்கு வந்தார் பிறகு ஒரு முறை கோயிலுக்கு திடீர் என்று வந்துள்ளார். கோயிலில் அப்போது பக்தர் ஒருவர் 'நீங்கள் ஸ்ரீரங்கத்தில்தான் நிற்க வேண்டும்’ என்றதற்கு 'நான் இப்ப ஸ்ரீரங்கத்தில்தானே நின்னுக்கிட்டு இருக்கேன்’ என்று சொல்லியிருக்கார். சரி இனி ஸ்ரீரங்கம் தொகுதி நிலவரத்தை முதல்ல பார்ப்போம்.
இங்கே இது வரை நடந்த 13 தேர்தல்களில் அ.தி.மு.க. 6 தடவை வெற்றி பெற்றிருக்கிறது. 30% நகர்ப்புறமும் 70% கிராமப்புறமும் உள்ளது. இங்கே பெரும்பான்மையாக முத்தரையர்கள்(அதனால தான் தி.மு.க. ஆனந்த என்கின்ற முத்தரையர் இனத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது). அதற்க்கு இணையாக ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்கள். மூன்றாவதாக பிராம்ணர்கள்,உடையார்கள் இருக்கிறார்கள்.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,17,827
இதில் ஆண் வாக்காளர்கள் 1,08,715
பெண் வாக்காளர்கள் 1,09,111
திருநங்கை 1

கடந்த 2008ல் திருச்சி, பாராளுமன்றமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ப.குமார் எம்.பி. 4,335 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு, மேற்கு, கந்தர்வ கோட்டை, புதுக் கோட்டை, திருவெறும்பூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசை விட அ.தி.மு.க. குறைவான வாக்குகளை பெற்றிருந்தது. இதில் ஸ்ரீரங்கத்தில் மட்டும் 20,118 வாக்குகள் (சாருபாலா தொண்டைமனை விட)அதிகம் பெற்றார் ப.குமார்.

இதிலிருந்தே தெரிந்திருக்கும் ஏன் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தை தேர்ந்தெடுத்தார் என்று. ஜெயலலிதா ஆணைப்படி இந்த தொகுதியில் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணியை சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டனர்.

ஸ்ரீரங்கத்தில் எங்கு தங்குவது என்பது குறித்தும் ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும், பிராமண அக்ரஹாரத்தில் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்களாம். அதனால் ஜெயலலிதா தங்க ஒரு வீடு ஸ்ரீரங்கத்தில் தயாராக உள்ளது.

திமுக வேட்பாளர் ஆனந்த்

அனந்த் ஒரு கோடீஸ்வரர்(தேர்தல் செலவுக்கு பஞ்சமில்லை). இவரது வயது 29 தான். இவருக்கு பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், பழ மண்டிகள் உள்ளன
இவர் அமைச்சர் நேருவின் சிபாரிசு. இவரது ஜாதியினர் (முத்தரையர்) ஸ்ரீரங்கத்தில் அதிகம் என்பதால் அமைச்சர் நேருவின் சிபாரிசில் இவர் இறங்கி விடப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா பிராமண சமூகத்தினரின் ஓட்டுக்களை குறி வைக்க, தொகுதியில் அவர்களை விட அதிகம் வசிக்கும் முத்தரையர் ஜாதியினர் ஓட்டுக்களைக் குறி வைத்து ஆனந்தனை இறக்கியுள்ளார் நேரு. பிராம்ணர்கள் ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான். சுற்றியுள்ள கிராமங்களில் முத்தரையர் மற்றும் ஆதிதிராவிடர்கள் தான் அதிகம். அதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இழுப்பறி நிலவுகிறது.

இந்த முறை மக்கள் மனம் கணிக்க முடியவில்லை. 1 கிலோ அரிசி, கலர் டிவி, குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக மாற்றுதல் எல்லாம் மக்கள் மனது மாறியிருக்கும் என்றே தோன்றுகிறது. ஜெயலலிதா ஜெயித்தாலும் அது 10,000 ஓட்டு வித்தியசத்தில் தான் இருக்கும் என்ற நிலமை நிலவுகிறது
இப்ப மிக்ஸி, கிரண்டர் என்று வேறு சில ஐடங்கள் வந்துள்ளது. அதனால் ஒட்டு வித்தியாசம் இன்னும் குறையும் :-)

பிகு: உங்கள் ஊர் தொகுதி பற்றி கட்டுரை அனுப்பினால் இட்லிவடையில் பிரசுரிக்கப்படும்.

Read More...

Saturday, March 19, 2011

ஹாப்பி ஹோலி ஹை !



ஹாப்பி ஹோலி ஹை !!

Read More...

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 19-3-2011

அன்புள்ள கதாநாயகி முனிக்கு,
என்னடா கதாநாயகி என்று சொல்லுகிறேன் என்று பயப்பட வேண்டாம். கவர்ச்சி உடை டான்ஸ் எல்லாம் ஆட சொல்ல மாட்டேன். சும்மா கலைஞர் சொல்லுகிறாரே என்று நானும் சொன்னேன். அவ்வளவு தான். இந்த கடிதம் எழுதும் சமயம் மஞ்சள் கதாநாயகியை லைவாக ரிலீஸ் செய்துவிட்டார்.

"கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை மிக முக்கியமாக கதாநாயகன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்தது. இந்த தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்" என்று முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு என்ன அர்த்தம்? கதாநாயகி மாதிரி கவர்ச்சியாக இருக்கும் என்று அர்த்தமா? சினிமாவில் கொஞ்ச நேரம் மட்டும் வந்துவிட்டு போகும் டம்மி பீஸ் மாதிரி இருக்கும் என்று அர்த்தமா ஒன்றுமே புரியவில்லை. எது எப்படி இருந்தாலும், இந்த முறை கதாநாயகன் கூட்டணி உதிரி கட்சிகள் தான் திமுகவிற்கு காங்கிரஸ் என்றால் அதிமுகவிற்கு தேமுதிக. கொஞ்ச காலம் முன் காங்கிரஸ் மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்று இருந்தால்.....நிச்சயம் கழக ஆட்சிக்கு கொஞ்சம் ஆடி போய் தமிழகத்துக்கு நல்லது நடந்திருக்கும். ஹும். ..

கிட்டத்தட்ட நேற்று 6 மணி நேரம் உதிரிக்கட்சிகள் ஒருவர் பின் ஒருவராக போயஸ் கார்டன் சென்று திரும்பி வரும் போது அதிமுக அணி 234 தொகுதிகளிலும் ஜெயிக்கும் என்று பேட்டி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்கள். 160 தொகுதிகளில் லிஸ்ட் கொடுத்து பிரஷர் ஏற்றிய பிறகு உடனடியாக தொகுதிகளை முடிவு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். இன்று அல்லது நாளை கூட்டணி தொகுதிகள் முடிந்துவிடும். இப்போ வரை எவனும் வைக்கோவைக் கண்டுக்கல. தனக்குக் காரியம் ஆனாப் போதும் இல்லையா? தேர்தல் நாளுக்கு முதல் நாள் தான் இவர்கள் பேச்சுவார்த்தையை முடிப்பார்கள் போல.

இனி அரசியல் தெரியாத சினிமா நடிகர்கள் வாய்க்கு வந்தபடி உளற ஆரம்பிப்பார்கள். ஒரு நிகழ்ச்சியில் குஷ்பு 'வயிற்று வலியால் அவதிப்படுகிறேன்' என்று சம்பந்தம் இல்லாமல் பேசியுள்ளார். குஷ்பு தேர்தலில் சீட் கேட்டு மறுக்கப்படுள்ளதாக தகவல். அதனால் வயிற்றுவலியா என்று குஷ்பு பக்தர்களுக்கு தான் தெரியும். விஜய் அரசியலுக்கு வருவது பற்றி அவர் கருத்து என்ன என்று கேட்டதற்கு "மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது."

அம்மா வீட்டில் எல்லோரும் நாற்காலி நுனியில் பயந்துக்கொண்டு தான் உட்கார வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அ.தி.மு.க-வுக்கும் தொகுதி பங்கீடு கையெழுத்தான சமயம்... போட்டோகிராபர்கள் பேட்ச் பேட்சாகப் பிரிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டனர். முதல் முறை போட்டோகிராபர்கள் உள்ளே புகுந்தபோது, இருவரும் எழுந்து நின்று போஸ் கொடுத்தார்கள். அடுத்த பேட்ச் உள்ளே நுழைய எழுந்து நிற்க முனைந்தார் நல்லகண்ணு. ஜெயலலிதாவோ, 'நீங்க சும்மா சும்மா எந்திரிக்க வேண்டாம். அவங்க போட்டோ வாங்கிக்குவாங்க...’ என்று சொல்லி போட்டோகிராபர்களைத் திருப்பி அனுப்பினார் அம்மா! வயதுக்கு மரியாதை. இந்த செய்தி ஜூவி உபயம்

இவ்வளவு பரபரப்பாக இருக்கும் தமிழக தேர்தல் களத்தில் பி.ஜேபி காணாமல் போய்விட்டது தான் பரிதாபம். அப்படியும் வலைப்பதிவில் ஒருவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு போடுங்கள் என்று பின்னூட்டம் போடுகிறார். ( பொன் ராதாகிருஷ்ணனே கூட இருக்கலாம்) உங்களுக்கு $100,0000 பரிசு விழுந்திருக்கிறது என்று வரும் மெயிலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

நேற்று நம்ம ப்ளாகில் ஓட்டுப் பெட்டி வெச்சதப் பார்த்தாயா? ஓட்டு போடலை என்றால் சைடுல போட்டுவிட்டு மீது படிக்கவும். இங்கே விழும் ஓட்ட்டுக்கள் அனைத்தும் நகரப் பகுதியில் அல்லது வெளி நாடுகளில் பொழப்பு நடத்தும் மக்கள் போட்டதாகத்தான் இருக்கும். அதனால் உனக்கு ஒரு வேண்டுகோள். உனக்குத் தெரிந்த மக்கள் யாராவது கிராமப் பகுதிகளில் மக்களின் தேர்தல்/ஓட்டுப போடும் மன நிலையை அறிந்து சொன்னால் அதையும் வலையேற்றலாம் என்று எண்ணி இருக்கேன். யாராவது இருக்கிறார்களா ?

இன்று ஸ்டாலின் கொளத்தூரில் தேர்தல் வேலையை ஆரம்பித்தாராம். அதில் முதல் வேலை அவரின் தாய்க் கழகத்தைச் சேர்ந்த தந்தை பெரியாரின் தம்பி வீரமணியைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்கினேன் என்றார். வேண்டி இருக்கே.

முடிக்குமுன் ஒரே ஒரு செய்தி. மைலாப்பூரில் எஸ்வி சேகர் மீண்டும் நிற்க முதல் ஆளா விண்ணப்பம் கொடுத்தாராம். அவரும் மைலாப்பூரோட நிறுத்திட்டா தமிழகம் பூராவும் பிராச்சாரம் செய்ய காங்கிரசில் யார் இருக்கா என்று வருத்தமா இருக்கு.

கருணாநிதி கொஞ்ச நேரம் முன்னாடி தன்னோட கதாநாயகியை அறிமுகப்படுத்தினாரு. நாட்டை அழிக்கும் முடிவில் இருந்து மாற்றம் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை தெளிவா சொல்லிட்டாரு. காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டம், கச்சத்தீவு மீட்பு போன்ற இவை அனைத்தும் நடக்காததற்கு அவர்களின் தாமதம், அக்கறையின்மை காரணம் இல்லையாம். எவனோ முட்டுக் கட்டை போட்டானாம். எம்புட்டுத் தெளிவாப் பேசறாரு, இத விடக் காமெடி நதி நீர் இணைப்பு குறித்து தொடர்ந்து வலியுருத்துவாராம். வலிக்குது. மக்களைப் பிச்சைக் காரர்கள் ஆக்கியே ஒட்டு பெற்று விடும் திட்டம் தீட்டி அதை நல்ல முறையில் செயல் படுத்தும் இந்த அரசு, இந்த முறையும் அதை பெரிய ஸ்கேலில் தொடரும் என்று அறிவித்து இருக்காரு. தாய்மார்களின் கஷ்டம் அறிந்தவராம் அவர். அதனால் வீட்டுக்கு ஒரு கிரைண்டர் அல்லது மிக்சியாம். அதேபோல எல்லா இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் லேப்டாப் தராராம். எவன் ஊட்டுப் பணம் என்று தெரியல. அள்ளி விடறாரு. இலவச தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு வழங்குவது தொடருமாம். யாருக்கு என்று சொல்லலை. கடவுள் கூட இந்த நாட்டைக் காப்பாத்த முடியாது என்பதே உண்மை. இலவச தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு வழங்குவது தொடருமாம். யாருக்கு என்று சொல்லலை. இதைவிடுங்க உப்பு கூட இலவசமாம்.




ஒரு கிலோ உப்பு இலவசமாம். உப்பு தின்னவன் நிச்சயம் தண்ணி குடிப்பான். அது தான் இருக்கவே இருக்கு டாஸ்மார்க்


தேர்தல் முடியும் வரை அடிக்கடி தொடர்பில் இரு.

அன்புடன்
இட்லிவடை


Read More...