பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 11, 2011

புத்தகக் கண்காட்சி - ஏழாம் உலகம்

இரண்டு நாள்கள் நல்ல கூட்டத்தைப் பார்த்த பதிப்பாளர்களுக்கு சரியான வேலை இருந்திருக்கும். திங்கள் கிழமை என்பது ஒரு விடுமுறை நாள் போலத்தான். பெரும்பாலான பதிப்பாளர்கள் மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்திருப்பார்கள்.

காலச்சுவடு கண்ணன் இன்று கிழக்கு ஸ்டாலுக்கு வந்திருந்தார். தினமும் புத்தகக் கண்காட்சி பத்தி எழுதப்போறேன்னு சொன்னீங்களே என்று கேட்டார். இட்லிவடையில் எழுதுகிறேன் என்றேன். உட்கார்ந்த இடத்துலேர்ந்தே எழுதுறீங்களா என்றார். ஆமா, அதையும் சொல்லிட்டேதான் எழுதுறேன் என்றேன்.

இன்னொரு நண்பர் வந்திருந்தார். சார், இட்லிவடை என்று இழுத்தார். என்ன சொல்லுங்க என்றேன். இல்லை இட்லிவடை என்று மீண்டும் இழுத்தார். ஓ, நீங்கதானா அது என்றேன். இல்லை, நீங்கதானான்னு கேக்க வந்தேன் என்று பதறியபடி சொன்னார். இல்லை என்று, கிட்டத்தட்ட 4 வருடங்களாகக் கொடுத்துவரும் விளக்கத்தைக் கொடுத்தேன்.

இன்று மூன்று வரிசைகளைச் சுற்றிப் பார்த்தேன். சரியாகச் சொல்லவேண்டுமானால் இரண்டரை வரிசைகள். அதற்குள் பத்ரி தலைமை தாங்கும் காவிய நிகழ்ச்சி தொடங்கிவிட்டதால் அங்கே சென்றுவிட்டேன்.

கண்ணில் பட்ட சுவாரஸ்யமான/காமெடியான/கலக்கலான புத்தகங்கள்: (எது காமெடி, எது சுவாரஸ்யம், எது கலக்கல் என்பது உங்கள் தீர்ப்புக்கு விடப்படுகிறது.)

சில்மிஷ யோகா - ஏகம் பதிப்பகம். அது என்ன சில்மிஷ யோகா என்று எடுத்துப் பார்த்தேன். :)))யாக இருந்தது.

99ம் எண் அரங்கில் ‘இராவணன் நாடு மத்தியப் பிரதேசம்’ என்றொரு புத்தகம் கண்ணில்பட்டது. ராவணனின் நாடு மத்தியப்பிரதேசம் என்கிறது நூல்!

வசிய ஜால மந்திரங்கள் என்றொரு புத்தகமும் அதே அரங்கில் கண்ணில்பட்டது. என்ன என்ன வசியம் எல்லாம் இருக்கிறது பாருங்கள். பகைவரை முடக்கும் வசியம், வாலிபத்தை மெருகேற்றும் ராஜ வசியம், இணங்காத பெண்களை இணங்க வைக்க வசியம், அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்ள வசியம் என்று பல வசிய மந்திரங்கள்! இன்னொரு வசிய மருந்து கொஞ்சம் ஓவர் - சாமியை வசியப்படுத்த மையாம்! இதற்கு அந்தப் புத்தகத்தை மட்டும் வாங்கவாவது வசிய மருந்து கிடைத்திருந்தால் பதிப்பாளர் பணத்தை மூட்டையில் கட்டியிருக்கலாம். அப்படி வசிய மருந்து இல்லாதபோது இப்புத்தகத்தைப் போடாமல் இருந்திருந்தாலும் அதே அளவு பணத்தை அதே போன்ற ஒரு மூட்டையில் கட்டியிருக்கலாமோ என்னவோ.

அதே அரங்கில் மதுரை அன்றும் இன்றும் என்று எளிய தமிழில் (நான் லேசாகப் புரட்டிய்வரை அது எளிய தமிழாகத்தான் தோன்றியது) ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. எல்லா முக்கியமான நகரங்களைப் பற்றியும் இப்படி ஒரு நூல் எளிய தமிழில் வருவது அவசியம்.

அப்படியே வந்துகொண்டிருக்கும்போது மணாவைப் பார்த்தேன். தற்போது டிவி நிகழ்ச்சிகளுக்கு ஃப்ரீலேன்சராகப் பணிபுகிறார். ஜெயா டிவியில் ‘தமிழ் மண்ணில் சாமிகள்’ நிகழ்ச்சி இரண்டு வருடங்களுக்கு மேலாக வருகிறது என்றார்.

காலச்சுவடு அரங்குக்குள் நுழைந்தேன். இது இரண்டாவது முறை. ஆர்வத்தைக் கொடுத்த புத்தகங்கள்:

ஒரு சூத்திரனின் கதை - மொழிபெயர்ப்பு.
மௌனி படைப்புகள் - மிரட்டலான தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது இந்நூல். (அதேபோல் உயிர்மையில் பார்த்த மனுஷ்யபுத்திரனின் கவிதை நூல் ஒன்றும் கலக்கான தயாரிப்பில் வெளி வந்திருக்கிறது.)
இராமன் எத்தனை ராமனடி என்றொரு புத்தகம் - அ.கா. பெருமாள் எழுதியது.
மாதொருபாகன் - பெருமாள் முருகன் எழுதிய நாவல்.

அடுத்ததாக மித்ர வெளியீட்டில் கண்ணில்பட்ட புத்தகம் - மகாவம்ச. எஸ்பொ மொழிபெயர்த்தது என நினைக்கிறேன். பிரித்துப் படிக்க இயலாமல் கண்ணாடி கவர் போட்டு வைத்திருந்தார்கள். எனவே அந்நூலை புரட்டிப்பார்க்க இயலாமல் போய்விட்டது.

ஆனந்த நிலையம் என்றொரு அரங்கில் சில 3டி படங்களை வைத்திருந்தார்கள். கூர்ந்து பார்த்தால் சாய்பாபா தெரிவார் என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். இது உடலுக்கு, மனத்துக்கு, ஆரோக்கியத்துக்கு நல்லது என்றுகூடச் சொன்னார்கள் என நினைக்கிறேன்.

விஜயபாரதம் ஸ்டாலில் ஒரு புத்தகம் கண்ணில்பட்டது. Marx and Vivekananda - A comparitive study. தோழர்களாவது கொதித்தெழுந்து இந்தப் புத்தகத்தைத் தடைசெய்து விவேகானந்தரைக் காப்பாற்றவேண்டும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதுபோல, எந்த முக்கியமான ஹிந்துத்துவப் புத்தகமும் இல்லாமல் இருக்கலாம், இப்படி ஒரு புத்தகம் இருக்கலாமா என்று தோன்றியது. இந்நூலை யாரேனும் படித்திருந்தால் கொஞ்சம் விளக்கவும். விஜயபாரதம் போன்ற பகிரங்க ஹிந்துத்துவ ஸ்டாலில் இடம்பெற வேண்டிய அளவு இப்புத்தகத்தின் ஹிந்துத்துவ முக்கியத்துவம் என்ன என்று சொன்னால் புண்ணியமுண்டு. தமிழ்ஹிந்து வெளியிட்டிருக்கும் ‘சாதிகள் ஒரு முன்னோட்டம்’ என்ற நூல் உள்ளதா என்று கேட்டேன். அங்கே இங்கே என்று இரண்டு மூன்று இடங்களில் தேடினார்கள். பின்னர் ஒருவர் ஓரிடத்தில் இருந்து எடுத்துக்கொடுத்தார். பண்பாட்டைப் பேசுதல் புத்தகம் கண்ணில்படும்படி இருந்தது போல, இப்புத்தகம் சட்டென்று கண்ணில்படவில்லை.

இன்னொரு ஸ்டாலில் Watch from anywhere என்று போட்டு நாலு காமரா கட்டியிருந்தார்கள். எங்கே இருந்தும் என்றால், அமெரிக்காவில் இருந்துகொண்டே, இங்கே அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்று இணையத்தின்வழியே பார்க்கலாமா என்று கேட்டேன். ஆமாம் என்றார்கள். தொழிலாளர்களின் நிம்மதியைக் கெடுப்பதற்காகவே இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தடைசெய்யவும் தோழர்கள் போராடவேண்டும். (அப்படி போராடுவதற்கு முன்பாகத் தாங்கள் முதலாளிகளாக இருக்கும் அலுவலகங்களில் நாலு காமரா மாட்டிவிடுவது நல்லது.)

அப்படியே நடந்துவந்தபோது இன்னொரு அரங்கில் ‘நந்தீசர் அகால மரண நூல்’ என்ற நூல் கண்ணில்பட்டது. நான்கைந்து பக்கங்கள் புரட்டிப் பார்த்தேன். சுவாரஸ்யமாகத்தான் இருந்தது உண்மையா, கண்கட்டு வித்தையா என்றெல்லாம் தெரியவில்லை. சே, வசிய மருந்து நூல்களைப் பார்த்ததில் இருந்து நடப்பதைக்கூட நம்பமுடியவில்லை.

அடுத்து ஒரு தெலுங்கு பதிப்பகம் கண்ணில்பட்டது. பதிமூன்று நாள் விடுமுறை அவருக்கு. அதிர்ஷ்டக்காரர்.இப்படி எனது விஜயம் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, பத்ரி தலைமை தாங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் சுதந்திரமாக நடந்துகொண்டிருந்த பத்ரியைக் கட்டிப் போட்டு விட்டார்கள். கேமராவும் இல்லாமல், மொபைலையும் எடுக்கமுடியாமல் பத்ரியைப் பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. லேனா தமிழ்வாணன் பேசினார். தலைப்பை மட்டும் சொன்னால் போதும், பிறகு என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற சடங்கை மீண்டும் நிகழ்த்தினார். சரியாக 30 நிமிடம் பேசினால் போதும் என்பதற்காகக் கையில் வாட்ச் கிளாக்குடன் வந்தது ஹைலைட் காமெடி. அவர் கிழக்கு பதிப்பகத்தைப் பாராட்டுகிறாரா, உள்குத்து போடுகிறாரா என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது, அவரது புதிய புத்தகத்தை பத்ரிக்குப் பரிசாகக் கொடுத்தது அடுத்த ஹைலைட் உள்குத்து! வெண்ணிலா ளகர உச்சரிப்பு சரியில்லாமல் பேசினாலும், கொஞ்சம் உருப்படியாகப் பேசினார். பெண்ணியம்தான் இடறிற்று என்றாலும், பேச்சில் சாரம் இருக்கவே செய்தது. அடுத்த சிவசங்கரி பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்கவில்லை.

கிங் விஸ்வா வந்திருந்தார். காமிக்ஸ் புத்தகங்கள் எந்தக் கடைகளில் கிடைக்கும் என்று கேட்டுக்கொண்டு, என் மகனுக்கு வாங்கவேண்டும் என்றபோது, அவரே இரண்டு காமிக்ஸ் புத்தகங்களைத் தந்தார். சந்தோஷமான ஆச்சரியம். இப்படியும் மனிதர்கள். வாழ்க வளமுடன். சென்றமுறை வந்து எனக்குப் புத்தகம் வாங்கித் தந்துவிட்டுச் சென்ற எனது ரசிக ரசிகைகள் இந்த ஆண்டு வரவில்லை. அவர்களும் வளமுடன் வாழ்ந்துத் தொலையட்டும். (த் ஓர் அழுத்தத்துக்காக வைக்கப்பட்டுள்ளது.)

உள்ளே நுழைந்து உடுமலை.காமுக்குச் சென்று தாயார் சன்னதிக்கு என்ன ஆனது என்று பார்த்தேன். போன் செய்தால் போதும் என்றொரு விளம்பரம் கண்ணில் பட்டது. க்ளிக்கி வைத்தேன். இதைப் படிக்கும் நண்பர்கள் அந்த போன் நம்பரை அழைத்து ஆர்டர் செய்யலாம்.

ஜாகிர் ராஜாவைப் பார்த்தேன். அவரது நாவல்களை வாங்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். ஆழி செந்தில்நாதனைப் பார்த்தேன். அவரது கடிதம் சாரு வலைத்தளத்தில் வந்திருக்கிற விஷயத்தைச் சொன்னேன். நண்பர்கள் சொன்னார்கள், நான் இன்னும் பார்க்கவில்லை என்றார்.

கிழக்கு கார்னர்:

கிழக்கு ஸ்டாலுக்கு வந்தபோது அங்கே லிங்குசாமி இருந்தார். சில பையன்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். படம் எடுத்தேன். அரங்கின் உள்ளே விக்ரமன் இருந்தார். அவரையும் க்ளிக்கி வைத்தேன்.

பின்னர் சாரு வந்தார். சென்று அவரிடம் ‘சார், பிரசன்னா’ என்றேன். தெரியும் என்றார். முன்பே ஒரு தடவை (சுஜாதா இறந்த தினத்தன்று சாருவை சுஜாதா வீட்டில் ஒரு நிமிடம் சந்தித்தபோது) இப்படி ‘பிரசன்னா’ என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது, ‘எனக்குக் கொஞ்சம் மறதி உண்டுன்னாலும், இத்தனைக்கு மறக்கமாட்டேன்’ என்று சொல்லியிருந்தார். ஆனால் எனக்கு எடுத்த உடனே சட்டென்று ‘பிரசன்னா’ என்றுதான் வருகிறது. தேகம், சரசம் சாமியார் சல்லாபம் படித்துவிட்டேன், இண்ட்ரஸ்டிங்காக இருந்தது என்றேன். வார்த்தையில் எத்தனை கவனம் என்றே எனக்கே தோன்றிவிட்டது. உங்க சைட்ல தேகம் எப்படி போகுது என்றார். நல்லா விக்குது என்றேன். உண்மையிலேயே தேகம் நாவல் nhm.inல் மிக நன்றாகத்தான் விற்கிறது. ஆனால் இந்த பதினைந்து நாள்கள் வந்த ஆர்டர்களை சரியாக அனுப்ப இயலவில்லை. ஜனவரி 20க்குப் பின்னர்தான் நிலைமை சீராகும் என்றேன். அவரிடம் கேட்டுக்கொண்டு அவரையும் க்ளிக்கி வைத்தேன்.

கேபிள் சங்கர் ஐந்தாவது முறையாக இன்றும் வந்திருந்தார். அதிகம் பணம் செலவழிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டே, தினமும் 300 ரூபாய்க்கு புத்தகம் வாங்கிக்கொண்டிருக்கிறார். ஒரே நாளில் வாங்கிட்டால் 1500 ரூபாயோடு முடிந்திருக்கவேண்டிய விஷயம்! உண்மைத்தமிழன், சுரேகா என்று பல வலைப்பதிவர்கள்/டிவிட்டர்கள் வந்திருந்தார்கள்.

கிழக்கு பதிப்பகத்தின் நேற்றைய டாப் 3 - ராஜ ராஜ சோழன், முதல் உலகப்போர், ஆர்.எஸ்.எஸ்.

இன்றைய டாப் 3 - ஆர்.எஸ்.எஸ், ராஜிவ் கொலை வழக்கு மற்றும் ஸ்பெக்ட்ரம் சர்ச்சை, காஷ்மிர்.

நெகிழ்ச்சி கார்னர்:

இன்று வயதான பெண்மணி ஒருவர் புத்தகம் வாங்க வந்திருந்தார். அவரால் நின்றுகொண்டு புத்தகங்களைப் பார்க்க முடியவில்லை. கிழக்கு ஸ்டாலின் உள்ளே நாற்காலி போட்டுக்கொண்டு புத்தகங்களைப் பார்த்தார். சுஜாதாவின் தீவிர ரசிகை போல. சுஜாதா தவிர மற்ற புத்தகங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அருகில் இருப்பவர்கள் எல்லாம் அவரை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.

டீப் திங்கிங் கார்னர்:

இன்றுதான் உருப்படியாக ஏதோ எழுதி இருப்பது போல ஒருசிலருக்குத் தோன்றலாம். என்ன காரணம்? ஒரு பல்பும், ஒரு டேபிளும் போட்டுக்கொண்டு அரசியல் எழுதுவதற்கும், களவேலை செய்து அரசியல் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம்தான் காரணம்.


கேண்டீன் கார்னர்:

வாழைத்தண்டைப் போல உடம்பு அலேக் பாடலை நினைத்துக்கொண்டே வாழைத்தண்டு சூப் சாப்பிட்டேன். பாரா உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தில் நான் கேண்டீனில் இருந்துகொண்டே கிழக்கு ஸ்டாலை நிர்வகிப்பது போல எனக்கே தோன்றத் தொடங்கிவிட்டது.

அனௌன்ஸ்மெண்ட் கார்னர்:

நாளை முதல் வைரமுத்துவின் நூல்கள் கிழக்கு பதிப்பக அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும். ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல’ என்ற நூல்கூட விற்பனைக்குக் கிடைக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவரது ‘ஆயிரம் பாடல்கள்’ புத்தகமும் நாளை கிழக்கு அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஃபிக்ஸிங் கார்னர்:

உண்மையில் ஏழாம் உலகம் என்று இந்த புத்தகக் கண்காட்சி உலகத்தைத்தான் சொல்லவேண்டும். புத்தகக் கண்காட்சி நடக்கும் காலம் முழுவதும் எல்லா பதிப்பாளர்களுக்கும் இதுவே சிந்தனை. இதுவே உலகம். ஏழாம் உலகம்.

தலைப்பைச் சொல்லிவிட்டு, கடைசியில் அதைப் பற்றி எழுதினால்தான் எஸ்.வி.சேகருக்காவது இப்பதிவு பிடிக்கும்.

பின்குறிப்பு: நன்றாக விற்கும் நாவல்களில் ‘ஏழாம் உலகம்’ நாவலும் ஒன்று!

இட்லிவடை கார்னர்: பிரசன்னா இட்லிவடை இல்லை. நம்புங்க. ஆனா இதை பிரசன்னாவே நம்ப மாட்டார் என்பது வேறு விஷயம்.

படம் கார்னர்9 Comments:

Balakrishnan said...

// தமிழ்ஹிந்து வெளியிட்டிருக்கும் ‘சாதிகள் ஒரு முன்னோட்டம்’ என்ற நூல் உள்ளதா என்று கேட்டேன் //

அந்தப் புத்தகத்தின் பெயர் “சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்”. சிறிய புத்தகம் தான். வாங்கிப் படித்தேன். அட்டகாசமாக இருக்கிறது.

ரோமிங் ராமன் said...

"வெண்ணிலா ளகர உச்சரிப்பு சரியில்லாமல் பேசினாலும், கொஞ்சம் உருப்படியாகப் பேசினார். பெண்ணியம்தான் இடறிற்று என்றாலும், பேச்சில் சாரம் இருக்கவே செய்தது"- சகோதரி வெண்ணிலா,மேடைப் பேச்சுக்கு இன்னும் ரொம்பவே தயாராக வேண்டும். ஹபி சொன்ன உச்சரிப்பு மட்டுமல்லாமல் தடையில்லாத தமிழ் பேச்சு பழக வேண்டும். பல நேரங்களில் பேசும்போதே "ஸ்பெல்லிங் மிஸ்டேக்" நிறைய வந்து விடுகிறது!! அது மட்டுமில்லாமல் அவர் எடுத்துக்கொண்ட மூன்று கதைகள் / சுயசரிதைகள் கூட சங்கடம்தான்(முதலிலேயே தாசி கதை!). பெண்களை கொடுமைப் படுத்துவது என்றால் பாலியல் பலாத்காரம் மட்டும் தானா என்ன? அந்த மூன்று கதை/சு.ச .. அப்பப்பா.. மிளகாய் மூட்டையோடு லாரியில் 300 கிமீ பயணித்தார் போல! சிவசங்கரி பேச்சு வெகு சுவாரஸ்யமானதாக இருந்தது பல புதிய தகவல்களுடன் !! அவரது பயணக்கட்டுரை பாரத தர்சனம் என்று வானதி போட்டிருக்கிறதாம் _ கட்டுப்படியாகும் விலையாய் இருந்தால் இன்று வாங்கி விடுவேன். அந்த பெயருக்காகவேனும்!! (லேனா பற்றி எழுதாததால் நான் போனது லேட் என்று எண்ணாதீர்.. நிகழ்ச்சிதான் இருபது நிமிடம் லேட் டாகத் தொடங்கியது!)

Boston Bala said...

//அப்படி போராடுவதற்கு முன்பாகத் தாங்கள் முதலாளிகளாக இருக்கும் அலுவலகங்களில் நாலு காமரா மாட்டிவிடுவது நல்லது.)

அப்படியே நடந்துவந்தபோது இன்னொரு அரங்கில் ‘நந்தீசர் அகால மரண நூல்’ என்ற நூல் கண்ணில்பட்டது. நான்கைந்து பக்கங்கள் புரட்டிப் பார்த்தேன். சுவாரஸ்யமாகத்தான் இருந்தது உண்மையா, கண்கட்டு வித்தையா என்றெல்லாம் தெரியவில்லை. சே, வசிய மருந்து நூல்களைப் பார்த்ததில் இருந்து நடப்பதைக்கூட நம்பமுடியவில்லை.

அடுத்து ஒரு தெலுங்கு பதிப்பகம் கண்ணில்பட்டது. பதிமூன்று நாள் விடுமுறை அவருக்கு. அதிர்ஷ்டக்காரர்.//

இன்று மெய்யாலுமே தூள்

ரிஷபன்Meena said...

//இன்னொரு நண்பர் வந்திருந்தார். சார், இட்லிவடை என்று இழுத்தார். என்ன சொல்லுங்க என்றேன். இல்லை இட்லிவடை என்று மீண்டும் இழுத்தார்//

பலூன் கொடுக்கிற மாதிரி இட்லி வடையும் தருவீர்களோ என்று கேட்டிருப்பார், நீங்களா இட்லிவடையாருன்னு கண்டுக்கிட்டாங்களோன்னு பயந்துட்டீங்க போல.

உண்மைத்தமிழன் said...

என் மூஞ்சியே தெரியலை. போட்டோவைத் தூக்குங்க பிரசன்னா..!

Anonymous said...

Lion காமிக்ஸ் புத்தகங்கள் எந்தக் கடைகளில் கிடைக்கும் ?

(-!-) said...

"ஏழாம்" நாள் போஸ்ட்டில் "பாதி"யில் இட்லி வடை பற்றி ஹபி எழுதறார். என்ன உள்குத்தோ! :>

Ganesan said...

அசத்துறிங்களே .. இட்லிவடை ,, சாரி, பிரசன்னா.

Ganesan said...

இன்னும் கேபிள் அங்க தான் இருக்காரா..

கிழக்கில் 850 ரூபாய்க்கு , போன ஞாயிற்றுகிழமை புத்தகங்கள் வாங்கினேன்.

அதை படித்து விட்டு, பொங்கல் லீவில் வருகிறேன்..