பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 09, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி - ஐந்தாம் படை

இன்றைய புத்தகக் கண்காட்சி குறைவான மக்கள் கூட்டத்துடன் தொடங்கி, மாலையில் கடும் நெரிசலுடன் நடைபெற்றது. மாலை 3 மணியிலிருந்தே மக்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். ஐந்து மணிக்கெல்லாம் நல்ல கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது. எல்லா பதிப்பாளர்களும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாலகுமாரன்களாக பில் போட்டுக்கொண்டிருந்தார்கள். உயிர்மை, ஆனந்தவிகடன் ஸ்டாலிலெல்லாம் நல்ல கூட்டம்.


ஞாநி, அதியமான், பாரா, ஆசாத் பாய் ஆகியோருடன் நானும் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பத்ரி எழுதியிருக்கும் ‘ஸ்பெக்ட்ரம் சர்ச்சை’ புத்தகம் பற்றித்தான் பேச்சு. ஞாநி புத்தகம் படித்துவிட்டார். ஸ்பெக்ட்ரம் சர்ச்சை என்ற பெயரே கருத்தேற்றப்பட்ட பெயர் என்றும், நியாயமான பெயர் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றுதான் இருந்திருக்கவேண்டும் என்றும் ஞாநி சொன்னார். இப்புத்தகத்துக்கு எதிரான சில லாஜிக் பாயிண்ட்டுகளையும் அடுக்கினார். நிச்சயம் நீங்கள் இதை எழுதவேண்டும் என்று ஞாநியிடம் சொன்னேன். செய்வதாகச் சொல்லியிருக்கிறார். பின்பு பேச்சு ஜோதிடம், புத்தக வாசிப்பு, கிழக்கு பதிப்பகத்தின் முக்கியத்துவம் எனப் பலத் திசைகளில் இலக்கின்றித் திரும்பியது.

[ படம்: கருப்புச்சட்டையுடன் புத்தகம் தேடுவது இரா.முருகன் - கிழக்கு ஸ்டால் என் வலது கைப்புறம் ஓரமாக இருப்பது - கிழக்கு பதிப்பகம் இந்த ஆண்டு வெளியிட்ட என் 21-வது புத்தகமாகிய 'ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்' நான் தேடிக் கிடைக்காமல் போன புத்தகம் - Ghosts of Arasur]

மரத்தடி கால நண்பர் உகதி வந்திருந்தார். இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன். உகதியை எத்தனை மரத்தடி நண்பர்களுக்கு நினைவிருக்கும் எனத் தெரியவில்லை. அவரைப் பார்த்தபோது மரத்தடிக் கால நினைவுகள் மேலெழும்பின. ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், கேவிராஜா, மதி, உஷா என எல்லாரையும் நினைவுகூர்ந்தார். உகதியைப் பார்த்தது சந்தோஷமான விஷயம்.

இன்று வெளியரங்கில் நடந்த கவியரங்கத்துக்கு வாலி தலைமை தாங்கினார். முத்துலிங்கம், நெல்லை ஜெயந்தா, பழனி பாரதி என்று யாருக்குக்கெல்லாம் மற்றவரைப் பாராட்டத் தெரியுமோ அவர்கள் எல்லாம் பேசினார்கள். பழனியின் பஞ்சாமிருதமும், பாரதியின் த்மிழும் கலந்தது பழனி பாரதியின் கவிதை என்று என்னவோ சொன்னார் வாலி. இன்னும் கொஞ்சம் இருந்தால் பழனியும் பிடிக்காமல், பாரதியும் பிடிக்காமல் போயிவிடும் என்று நடையைக் கட்டினேன். கைத்தட்டலுக்கான அறிவுபூர்வமான வரிகள்தான் கவிதை என்று இவர்கள் நம்புகிறார்கள். நமக்கு இழப்பேதும் இல்லை என்றாலும், எரிச்சலுக்குக் குறைவில்லை.

நான், தோழர், ராம்கி - மூவரும் நறுக்கி வைக்கப்பட்ட பழங்கள் சாப்பிட்டோம். புத்தகங்கள் பற்றி எழுதாமல், புத்தகக் கண்காட்சியைப் பற்றியும் எழுதாமல் என்னவோ எழுதுகிறீர்களே என்பதை இருவரும் சுற்றி வளைத்துச் சொன்னார்கள். இதுதானே எளிது! இதுகூடவா தெரியாமல் நான் எழுதுகிறேன்? தினமும் புத்தகங்கள் பற்றி எழுதினால், நாக்கு நிஜமாகவே வெளியில் தள்ளிவிடும்.

ஒரு கல்லூரியிலிருந்து வந்த மாணவர்கள் தோழருடன் பேசிக்கொண்டிருந்தார்கள். இத்தனை இளைஞர்களின் வாழ்க்கை இப்படி கம்யூனிஸத்தால் வீணாகிறதே என்றாலும்கூட, அதிகம் கவலைப்படவில்லை என்றேன் தோழரிடம். ஏன் என்றார். எப்படியும் 40ல் ஹிந்துத்துவவாதிகளாகிவிடுவார்கள், நல்ல விஷயம்தானே என்றேன்.

இன்று என்னைப் பார்த்த பலர், இட்லிவடை பதிவில் நான் எழுதுவதைத் தவறாமல் படிப்பதாகச் சொன்னார்கள். இந்த ரீச்சுக்காகத்தான், கண்றாவி மஞ்சள் கமெண்ட்டையெல்லாம் பொறுத்துக்கொண்டு இட்லிவடையில் எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது. :-)

சொல்வனம் வெளியிட்டிருக்கும், சுகாவின் ‘தாயார் சன்னதி’ புத்தகமும், ராமன் ராஜாவின் ‘சிலிக்கான் கடவுள்’ புத்தகமும் விற்பனைக்கு வந்துவிட்டது. உடுமலை ஸ்டாலில் (அரங்கு எண் 302) கிடைக்கிறது. பிரதிக்கு உடனே முந்துவீர்!

கிழக்கு கார்னர்:

மறைந்துவிட்டாலும் தானே சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்தார் சுஜாதா. இன்று மட்டும் அவரது புத்தகங்கள் 500ஆவது விற்றிருக்கும்.

அடுத்த சந்தோஷம், உலோகம் நாவலின் இன்றைய விற்பனை. இரண்டாம் இடத்துக்கு வ்ந்திருக்கிறது உலோகம். (முதல் இடம் ராஜ ராஜ சோழன்.) கிழக்கு புத்தகக் கண்காட்சி வரலாற்றில், விற்பனையில் ஒரு புனைவு இரண்டாம் இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். இந்த சாதனையை சுஜாதா நாவலால்தான் தகர்க்க முடியும் என்றும் நினைக்கிறேன். பார்க்கலாம்.

(கிழக்கு டாப் 10: ராஜ ராஜ சோழன், உலோகம், முதல் உலகப் போர், காஷ்மிர், ஸ்பெக்ட்ரம், கிளியோபட்ரா, ஆர்.எஸ்.எஸ், திராவிட இயக்க வரலாறு, காந்தி கொலை வழக்கு, பார்த்திபன் கனவு.)

கிழக்கு ஸ்டாலில் நல்ல கூட்டம் இருந்தது. காலை நேரத்தில் பலூன் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால், கூட்டம் கூடக் கூட, வாசலில் குழந்தைகளும் பெற்றோர்களும் பலூன் கேட்டுக் கூட ஆரம்பித்தார்கள். இதனால் விற்பனையில் பிரச்சினை வரலாம் என்று, பலூன் தருவதை நிறுத்திவிட்டோம். இனி திங்கள்தான் பலூன்.

நாளை முதல் ஞாயிற்றுக் கிழமை. இன்று இருந்த கூட்டத்தைவிட நாளை கூட்டம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

நெகிழ்ச்சி கார்னர்:

ஆர்.பி.சாரதி வந்திருந்தார். இவரது மகன்தான் பா.ராகவன். :-) ஆர்.பி.சாரதிதான் ‘இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு’ நூலை மொழிபெயர்த்தது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகியிருக்கும் இந்நூலின் இரண்டாம் பாகத்தைக் கையில் எடுத்து, ஒரு மயிலிறகைப் பார்க்கும் குழந்தை போல் பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு சந்தோஷம் தந்த நிமிடம் அது. ஒரு கிழவரின் மகிழ்ச்சி எதற்கும் ஈடு இணையற்றது என்பது என் எண்ணம். ஆர்.பி.சாரதியின் மனைவியும் வந்திருந்தார். ஆர்.பி. சாரதி சொல்லச் சொல்ல, இவர்தான் பேப்பரில் கையால் எழுதினாராம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதுகூட ஆர்.பி.சாரதி ஈஸி சேரில் படுத்துக்கொண்டே மொழிபெயர்ப்பாராம், இவர் எழுதுவாராம். வாழ்க இவர்கள்.

திடுக் கார்னர்:

கிழக்கு எடிட்டர்கள் கம் எழுத்தாளர்கள் ஐந்தாம் படையென நின்றிருந்தார்கள். புத்தகம் வாங்காமல் போனால், இவர்கள் என்ன செய்வார்களோ என்று அஞ்சியே கிழக்கு அரங்குக்குள் கூட்டம் சேர்ந்தது என்று சிலர் என் காதுபடப் பேசிக்கொண்டார்கள். பார்க்க படம்.கிச்சன் கார்னர்:

இன்று இந்தப் படம்தான் கிடைத்தது. ஸாரி கைஸ்.
இட்லிவடை கார்னர்: இன்று லீவு


8 Comments:

ரோமிங் ராமன் said...

"பழனியும் பிடிக்காமல், பாரதியும் பிடிக்காமல் போயிவிடும் என்று நடையைக் கட்டினேன். கைத்தட்டலுக்கான அறிவுபூர்வமான வரிகள்தான் கவிதை"-சபாஷ் சார்..நிஜமான வருத்தம்// பட்டி மன்றம், கவிதை எல்லாம் இப்படி மாறி பல ஆண்டுகள் ஆயாச்சு!-
வாலி யும் அந்த வாலியூமில் சேர்ந்தது காலத்தின் கொடுமை!!

"உயிர்மை, ஆனந்தவிகடன் ஸ்டாலிலெல்லாம் நல்ல கூட்டம்"-
நிஜமான சூப்பர் ஸ்டார் பாரா வின் வரலாற்றுச் சுவடுகள் தான்!! ஒரே புத்தகத்தை வைத்துக்கொண்டு தினத்தந்தி கலக்குதே.. உமக்குத் தெரியலியா- உங்க ஸ்டாலையும் கான்டீனையும்(வெளியரங்க நிகழ்ச்சிகள் கூட அது கான்டீன் பக்கம் இருப்பதால்தான் ) மட்டும் விசிட் பண்ணா எப்படித் தெரியும் ஹபி?

crazyidiot said...

wishing next expo should be in coimbatore..

http://ungalsarans.wordpress.com/

துளசி கோபால் said...

நெகிழ்ச்சி கார்னர் உண்மையாகவே மனதை நெகிழச்செய்தது.

படத்தைப் பகிர்ந்ததுக்கு நன்றி.

era.murukan said...

இரண்டாம் படத்தில் கருப்புச்சட்டையுடன் புத்தகம் தேடுவது - நான்

இடம் - கிழக்கு ஸ்டால்

என் வலது கைப்புறம் ஓரமாக இருப்பது - கிழக்கு பதிப்பகம் இந்த ஆண்டு வெளியிட்ட என் 21-வது புத்தகமாகிய 'ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்'

நான் தேடிக் கிடைக்காமல் போன புத்தகம் - Ghosts of Arasur

சுபத்ரா said...

நெகிழ்ச்சி கார்னர் மனதை நெகிழச் செய்தது!!

R.Gopi said...

//era.murukan said...
இரண்டாம் படத்தில் கருப்புச்சட்டையுடன் புத்தகம் தேடுவது - நான்

இடம் - கிழக்கு ஸ்டால்//

*******

முருகன் சார்...

அப்படியே இட்லிவடையையும் எங்களுக்கு அடையாளம் காட்டினால் சந்தோஷப்படுவோம்...

புரட்சித்தலைவன் said...

அப்படியே இட்லிவடையையும் எங்களுக்கு அடையாளம் காட்டினால் சந்தோஷப்படுவோம்..//

அப்படியே டாப் லெப்ட் கார்னர்ல ஒரு இலை இருக்குல்ல அத நல்லா உத்து பாருங்க.

சீனு said...

//ஆர்.பி.சாரதிதான் ‘இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு’ நூலை மொழிபெயர்த்தது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகியிருக்கும் இந்நூலின் இரண்டாம் பாகத்தைக் கையில் எடுத்து, ஒரு மயிலிறகைப் பார்க்கும் குழந்தை போல் பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு சந்தோஷம் தந்த நிமிடம் அது.//

750 கொடுத்து அந்த 2 புத்தகங்களையும் வாங்கிட்டோமே. அந்த காசுல வேற புத்தகங்கள் குறைந்த விலையிஒல் நிறைய வாங்கியிருக்கலாமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது நிறைவாய் இருக்கிறது. ஆர்.பி.சாரதி என்பவர் இந்த கிழவர் தான் என்று இப்பொழுது தான் தெரிந்தது. நன்றி இவ.