பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 08, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி -நாலு பெண்ணுங்கள்

இன்றைய புத்தகக் கண்காட்சியின் கூட்ட நிலவரத்தை எடுத்த எடுப்பில் ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால், மெல்ல ஆடத் தொடங்கிய ஊஞ்சல், வேகமெடுத்து, இன்னும் வேகமெடுக்கும் என நினைக்கும் நேரத்தில் அடங்கிப் போவது போல என்றுதான் சொல்லவேண்டும். தொடக்கத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஐந்து மணி வாக்கில் நல்ல கூட்டம். சரி, இன்று சரியான கூட்டம் வரப்போகிறது என்று நினைத்தேன். நாளை விடுமுறை என்றால், முதல்நாள் மாலையே விடுமுறையைத் தொடங்கிவிடும் தமிழர்கள் புத்தகக் கண்காட்சிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் மகிழ்ச்சியோடு இருந்தேன். ஆனால் 7 மணிக்குப் பிறகு கூட்டம் வடியத் தொடங்கிவிட்டது.

இன்று புத்தகக் கண்காட்சிக்கு வைரமுத்து வருகிறார் என்பதால் அவர் பேச்சைக் கேட்க வந்தேன் என்று சொன்னார் என்னுடன் டாக்கில் வேலை பார்த்த நண்பர். ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதில் சொன்ன நேரத்தில் கூட்டம் தொடங்காதோ என்ற கவலையை எல்லாம் வைத்துக்கொண்டிருந்தார்.

நானும் பாராவும் பால்கோவாவும் கடலையும் சாப்பிட்டோம். பால்கோவா விற்பவருக்குச் சொத்தை எழுதி வைத்துவிட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகருவேன் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்த பாராவை, அங்கிருந்து இழுத்துக்கொண்டு வந்து, அவர் சொத்தைக் காப்பாற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒரு சின்னப் பையன் எழுத்தாளர் ஆகியே தீருவது என்று வந்திருந்தார் போலும். இதில் பிரச்சினையில்லை. ஆனால் அவரது முடிவு, இன்றே எழுத்தாளர் ஆகித் தீர்வது என்பதோ என்று எனக்குள் உதித்த ஐயம்தான் என்னைக் கலவரப்படுத்தியது. நான் சும்மா இருக்காமல், ஓர் ஆர்வத்தில் அவரிடம், ‘ஏன் எழுத்தாளர் ஆகணும்’ என்று கேட்டுவிட்டேன். மறுநொடியே அக்கேள்வியின் அபத்தம் என்னைக் கொன்றுவிட்டது. பாரா கிழக்கு சந்தில் உட்கார வைத்து, முதலில் அவர் படிக்கவேண்டிய புத்தகங்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். இதில் பட்ஜெட் வேறு உண்டு. கடைசியில் அந்தப் பையன் அன்றே எழுத்தாளர் ஆகிவிட்டாரா இல்லையா எனத் தெரியவில்லை. பாரா பாடு கஷ்டம்தான்.

அடுத்து கண்ணில் பட்ட நண்பர் குண்டைத் தூக்கிப் போட்டார். மதுமிதாவின் புத்தக வெளியீடாம். கவிதைப் புத்தகமோ என்ற நினைப்பே வியர்வை வழிய வைத்தபோது, ஆசுவாசமாக அவர் ‘கவிதை இல்லை’ என்றது நிறைவைத் தந்தது. அடுத்து வந்த பெண் - நிர்மலா. இவர் எப்போது கவிஞர் ஆவார் என்று அவருக்கே தெரியாது. கூடவே ராமசந்திரன் உஷா. இவர் கவிதையால் நம்மைக் கொல்வதில்லை. அடுத்ததாக அங்கே நின்றிருந்தது, பெண்மனம் தமிழ் சுஜாதா. (இன்னும் நாலு காரணப் பெயர் கூடிவிட்டால், அதை மட்டும் எழுதி ஒரு கட்டுரையை முடித்துவிடலாம்!) ஏன் இத்தனை பெண்கள் படை இன்று தெரியவில்லை. உலகத்தில் பெண்ணியம் மிகத் தேவையா, மிகமிகத் தேவையா என்று பட்டிமன்றம் நடக்க இருக்கிறதோ என்று யோசித்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த பாராவுக்கே நெஞ்சு வலி வந்தது போலத் தோன்றியது. நல்லவேளை நால்வரும் நாற்றிசைக்கொரு தலைப்பில் பேசிப் பிரிந்தனர்.

சுகா, பாரதி மணி, பாவண்ணன் போன்றவர்கள் வந்திருந்தார்கள். சுகாவின் தாயார் சன்னதி புத்தகம் நாளை மறுநாளுக்குள் அச்சிலிருந்து வந்துவிடும் என நினைக்கிறேன்.

இன்று சில எதிர்பாராத வேலைகள் வந்துவிட்டால், முழு அரங்கையும் சுற்ற முடியவில்லை. நாளையும், நாளை மறுநாளும் விட்முறை நாள்கள் என்பதால் செல்லவே வாய்ப்பிருக்காது. இனி திங்களன்றுதான் எல்லா அரங்குகளையும் சுற்றிப் பார்கக்வேண்டும். அன்றிலிருந்துதான் மற்ற பதிப்பகங்களைப் பற்றியும், அவர்கள் வெளியிட்டிருக்கும், என்னைக் கவர்ந்த புத்தகங்கள் பற்றியும் எழுத முடியும்.

இன்று சில பதிப்பாளர்களிடமும், புத்தக விற்பனையாளர்களும், ஒற்றை அரங்கு எடுத்திருக்கும் சிறிய பதிப்பாளர்களிடமும் பேசினேன். எல்லாரும் விற்பனை படு மந்தம் என்றுதான் சொன்னார்கள். இத்தனைக்கும், புத்தகக் கண்காட்சியின் ப்ரைம் வரிசையாகக் கருதப்படும் முதல் வரிசையில் இருந்தவர்களும்கூட இதையே சொன்னார்கள். ஒரு சில பதிப்பகங்களில் ஒருவர் கூட இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன். சனிக் கிழமையையும், ஞாயிற்றுக் கிழமையையும் எதிர்பார்த்துத்தான் பதிப்பாளர்களும், புத்தக விற்பனையாளர்களும் காத்திருக்கிறார்கள்.

ஜடாயு வந்திருந்தார். ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வருகிறேன் என்று போனவர், இன்னும் வரவில்லை. ஹிந்துத்துவவாதிகள் ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்பது கொஞ்சம் உண்மைதான் என்றாலும், ஜடாயு புத்தகக் கண்காட்சியை இன்னும் இந்த இரவு நேரத்திலும் சுற்றிக்கொண்டிருப்பார் என நினைப்பது தர்மமல்ல என்பது எனக்குப் புரிகிறது. எதற்கும் நாளை சீக்கிரம் சென்று பார்க்கவேண்டும்.

கிழக்கு கார்னர்:

ஸ்பெக்ட்ரம், ராஜராஜ சோழன், ஆர்.எஸ்.எஸ் - இன்றைய டாப் 3 புத்தகங்கள். அதேதான் சொல்லி உலோகத்தைச் சொல்லவேண்டும் என்றால், இன்னும் 11 புத்தகங்களை நான் பட்டியலிடவேண்டும். ஆனாலும், உலோகம் இந்த அளவு விற்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இன்று ஒரு தந்தை புத்தகம் வாங்க வந்திருந்தார். அவரது மகன் அவரைப் புத்தகம் வாங்க அனுமதிக்கவே இல்லை. கடைக்குள் காலை வைக்கவிடாமல் அழுகை. பலூன் கொடுத்தவுடன் விளையாடப் போய்விட்டான். (மார்க்கெடிங்குக்காக எழுதிய ஸ்கிரிப்ட் போல எனக்கே தோன்றவில்லையா என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் இது உண்மை! இப்படித்தான் மெகா சீரியல்களின் காட்சிகள் உருவாகின்றன என நினைக்கிறேன்.)

அடுத்த வருடம் கிழக்கு கொண்டு வரவேண்டிய புத்தகங்கள் பற்றிய சர்வேயில் சில சுவாரஸ்யங்கள். ஒருவர் ஒரு பக்கத்துக்கு என்னவோ எழுதிக் கொடுத்தார். இனிமேல்தான் படிக்கவேண்டும். ஒருவர் ‘மஹிந்த ராஜபக்‌ஷே’ பெயரை அடித்துக் கொடுத்திருந்தார். அதாவது புத்தகம் வரக்கூடாதாம். இன்னொருவர் ‘ரஜினி’ பெயரை அடித்துக் கொடுத்திருந்தார். சர்வேயின் முடிவுகள் களை கட்டும் என்பதில் ஐயமில்லை.

காண்டீன் கார்னர்:

பால்கோவா நன்றாக உள்ளது. கடலையும் நன்று. நறுக்கி விற்கப்படும் பழங்கள் வெகு சுவை. தமிழறிஞர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டே கடலை சாப்பிட்டால், அச்சூழல் நம்மைக் கொள்ளை கொள்ளும். (தமிழ்நாடு சுற்றுலா புத்தகத்தைப் படித்ததால் வந்த பாதிப்பு!)

சரி, நாளை புத்தகக் கண்காட்சி 11 மணிக்குத் தொடங்குகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாளைதான் ரகளையான முதல்நாள்!

- ஹரன்பிரசன்னா

இட்லிவடை கார்னர்:

நேற்று கடைசியில் வந்த படம் என்ன என்று பலர் கேட்டிருந்தார்கள். சரியான விடை சொல்லுபவர்களுக்கு என் சார்பில் ஒரு புத்தகம் பரிசு. ( கிழக்கு இந்த மாதிரி அறிவு போட்டிக்கு ஸ்பான்சர் செய்யாது என்று எனக்கு தெரியும் :-)



17 Comments:

ரோமிங் ராமன் said...

ஏன் இப்படி படம் போடுறீங்க?? வாய் கிழியப் பேசுகிறவர் என்று சொல்றீரா என்ன??ஹபி கவனிக்க: ஒரு ரிக்வெஸ்ட்;- எவ்வளவோ பேர் டெய்லி பு.க.புக முடியாது. தினமும் இன்றைய பேச்சாளர் யார் என்று போட்டால், பிடித்த பேச்சாளர் வரும்(போதாவது)அன்று நேராக வர பலர் எத்தனிக்கலாமே!!

IdlyVadai said...

இங்கே பாருங்க - http://bapasi.com/DailyEvents_10_01.asp எல்லாம் விபரமா இருக்கு. 10ஆம் தேதி பத்ரியின் தலைமையில் ... கட்டாயம் வாங்க :-)

புரட்சித்தலைவன் said...

//நேற்று கடைசியில் வந்த படம் என்ன என்று பலர் கேட்டிருந்தார்கள். சரியான விடை சொல்லுபவர்களுக்கு என் சார்பில் ஒரு புத்தகம் பரிசு. ( கிழக்கு இந்த மாதிரி அறிவு போட்டிக்கு ஸ்பான்சர் செய்யாது என்று எனக்கு தெரியும் :-)//
உங்கள் கேள்விக்கு பதில் தெரியாது . ஆனா சரியான விடை ஹரன்பிரசன்னாவுக்கு மட்டுமே தெரியும். அவருக்கு ஒரு பால்கோவா பார்சல்.(அவருக்கு புத்தகம் வேண்டாம் )

துளசி கோபால் said...

உங்க நல்லகாலம் மதுமிதாவின் வெளியீட்டுக்கு அஞ்சாவது பெண்மணி வரலை:-))))

கவிதைன்னா நானும் காத தூரம்தான்.

Anonymous said...

//நான்கு பெண்கள் என்ற தலைப்பு போட்டு அவர்களின் படத்தை போடாமல் நான்கு ஆண்கள் படத்தை மட்டும் போடுவது male chauvinism//ரிப்பீட்டு
வலது பக்கம் இருப்பவர்கள் பெயர் என்ன?

(-!-) said...

//"சென்னை புத்தகக் கண்காட்சி - நாலு பெண்ணுங்கள்"//

(1 ) இந்த மாதிரி தமிழைக் கொலை செய்து டைட்டில் போடுவது இட்லியாக மட்டுமே இருக்க முடியும். கண்டிப்பா சரக்கு மாஸ்டர் இந்த டைட்டிலை வெக்கலை. :>

(2 ) மஞ்சள் கமெண்ட் மொளகாப் பொடி ரேங்கில் நெடி அடிக்கிறது. குறைத்துக் கொள்ளவும். இல்லையென்றால் மீன் பாடி வண்டி கிழக்கே இருந்து வர சான்ஸ் இருக்கு. :>

களிமிகு கணபதி said...

//...ஜடாயு வந்திருந்தார். ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வருகிறேன் என்று போனவர், இன்னும் வரவில்லை. ..//

சே சே. அவர் ரொம்ப சாது. அந்தப் பழக்கம் எல்லாம் கிடையாது.

புத்தகச் சந்தையை ரவுண்ட் அடிப்பதைப் பற்றித்தான் சொல்லி இருப்பார்.

ஆனால், கட்டாயம் ரவுண்ட் அடித்திருக்க மாட்டார்.

ஏனெனில், காபாவை சுற்றுவது மாதிரி இடமிருந்து வலமாகச் சுற்றும்படி இருக்கிறதாம்.

மறந்தும் புராக் விமானம் நம்பாத அக்மார்க் இந்துத்துவாவாதி அவர்.

புரட்சித்தலைவன் said...

சரியான "வடை" :-)
1. Dust Mask -- இது புத்தக கண்காட்சியில் பழைய எடிசன் புத்தகங்களை புரட்டும் போது அலர்ஜியால் வரும் தும்மலை தவிர்க்க உதவும்.
2. Face Mask -- உலக எழுத்தாளர் சாருவுக்கு, உலோகம் (ஜெ.மோ) புத்தகத்தை “கிழக்கு கார்னர்”(தாங்க்ஸ் ஹ.பி) வந்து வாங்கும் போது முகமூடியாக உதவும்.
More details. http://en.wikipedia.org/wiki/Mask

சுப்புரத்தினம் said...

நல்ல நகைச்சுவையான பகிர்வு....


நன்றி
சுப்புரத்தினம்

பாரதி மணி said...

பிரசன்னா! ரோமிங் ராமனுக்கு எப்படி தெரிந்தது?

பாரதி மணி

Krubhakaran said...

http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html

Part of Vaali's Speech in Book Fair

R.Gopi said...

இட்லிவடை....

ஃபோட்டோவில் அந்த பெரியவர் மேல் என்ன அப்படி கோபம்? வாயை நன்கு இழுத்து விட்டு இருக்கிறீர்கள்!?

இல்லேன்னா, சிம்பாலிக்கா வேற எதுவும் சொல்ல வர்றீங்களான்னு அப்பாலிக்கா எங்கிட்ட தனியா சொல்லுங்க!!

பாரதி மணி said...

இதனால் சகலமானவருக்கும் தெரிவித்துக்கொள்வதென்னவென்றால், அந்த ‘வாய் கிழிந்திருக்கும்’ பெரியவன் நான் தான்!

போட்டோ எடுத்தவர் அதை ஸிம்பாலிக்காக சொல்லியிருக்கிறார்!

பாரதி மணி

Boston Bala said...

//ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்பது கொஞ்சம் உண்மைதான் என்றாலும், ஜடாயு புத்தகக் கண்காட்சியை இன்னும் இந்த இரவு நேரத்திலும் சுற்றிக்கொண்டிருப்பார் என நினைப்பது தர்மமல்ல //

:) :))

ரோமிங் ராமன் said...

பெரியவர் பாரதி மணிஅவர்கள் மன்னிப்பாராக!(அந்தப்படத்தில் இன்னும் பெரியவராக!!) சற்றே நகைச்சுவைக்காகவும் மற்றும் ஹபி க்கும் இவ க்கும் படங்கள் எடுக்கும்போது கவனம் கூட்டவும்தான் மட்டுமே அந்த கமென்ட்..

பாரதி மணி said...

ஐயா ‘சுற்றும்’ ராமரே! எதற்காக உங்களை மன்னிக்கவேண்டும்?

என்னிடம் நகைச்சுவையுணர்வு அரசப்பிரதட்சிணத்துக்கு போடும் அளவு நிறைய இருக்கையா!

என்னிடம் நேரில் பழகினால் தெரிந்துகொள்வீர்!

I am above all these! In fact, I love these comments!

பாரதி மணி

R.Gopi said...

உங்களை பற்றி சுருங்க சொல்லி விளங்க வைத்தமைக்கு மிக்க நன்றி பாரதிமணி அவர்களே....