பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 06, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி - ரெண்டாம் நாளிலிருந்து தொடங்கும் ஆட்டம்

ஒரு வழியாக புத்தகப் பதிப்பாளர்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். மக்களும், பபாஸியும்கூட விழித்துக்கொண்டு விட்டார்கள். எல்லா அரங்குகளும் ஓரளவு தயாராகிவிட்டன. முகப்பு வளைவுகள் எல்லாம் வடிவம் பெறத் தொடங்கிவிட்டன. விளம்பரத் தட்டிகள் அடிக்கப்பட்டு ஆங்காங்கே ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. நாளை அவை விண்ணில் ஏகும் என நினைக்கிறேன். இனி வரும் வழியெங்கும் மக்கள் கருணாநிதியையும் வைரமுத்துவையும் பார்த்துக்கொண்டே நடந்துவரலாம்.

மெல்ல மெல்ல உணவுக்கடைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. கேண்டீன் கொஞ்சம் சுறுசுறுப்பாகவே செயல்படுவதாக உடனிருந்த நண்பர் தெரிவித்தார். நாளை சென்று பார்க்கவேண்டும். இன்றும் கிழக்கு அரங்கில் முன்கட்ட வேலைகளில் மாட்டிக்கொண்டதால் அதிகம் நகரமுடியவில்லை. மேம்போக்காக இரண்டு வரிசைகளை மட்டும் சுற்றிப் பார்த்தேன். முதலில் கண்ணில்பட்டது ராமகிருஷ்ண மடம். யாரோ ஒருவர் மிகவும் முயன்று தமிழ் பேசிக்கொண்டிருந்தார். அப்படியே சில ஸ்டால்களைச் சுற்றிப் பார்த்தேன். வெளியில் சென்று ஒரு ஐந்து நிமிடம் நின்றுகொண்டிருந்தேன்.

வெளிப்புற அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர், ”வெளிச்சம் இல்லாவிட்டால் இருள் என்கிறார்கள். ஆனால் நான் அதை வெளிச்சம் இன்மை என்றுதான் சொல்வேன்” என்று புல்லரிக்க வைத்துக்கொண்டிருந்தார். இறையன்பு ஐ.ஏ.எஸ் இன்னும் பல நூல்களை எழுதவேண்டும் என்று நூறாவது முறையாகக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இதற்கு மேல் தாங்காது என்று உள்ளே வந்துவிட்டேன்.

நிறைய வலைப்பதிவர்கள் வந்திருந்தார்கள். லக்கியதிஷா வந்திருந்தார். குகன் வந்திருந்தார். உண்மைத் தமிழன் வந்திருந்தார். நான் மிகவும் இளைத்துவிட்டதாக வருந்திவிட்டுப் போனார். டாக்டர் புருனோ வந்தது மட்டுமல்ல, தமிழில் பேசினார்! பாலபாரதி வந்திருந்தார்.

சென்ற முறை கிழக்கு அரங்கைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த பாரா, இந்தமுறை பக்கத்து அரங்கைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். உடன் அவரது சிஷ்யகோடிகள் சே நண்பர்கள் அமர்ந்திருந்தார்கள். லிச்சி ஜூஸ் வந்த மாதிரி தெரியவில்லை. வந்திருந்தால் பாரா அதைப் பற்றி எழுதுவார் எனக் காத்திருக்கிறேன்.

பல பதிப்பகங்களில் இன்னும் புதிய புத்தகங்கள் அச்சாகி வரவில்லை. உண்மையில் புத்தகக் கண்காட்சிக்கு முதல்நாளோ இரண்டாம் நாளோ வருவது தவறான முடிவு. நான்கைந்து நாள்கள் கழித்து வருவது நல்லது. அதுவும் விடுமுறைக்கு அடுத்த வேலை நாளில் வருவது மிகவும் நல்லது. ஓரளவு புத்தகங்கள் வந்திருக்கும். கூட்டமும் குறைவாக இருக்கும். நின்று நிதானித்து வாசித்துப் பார்த்து வாங்கலாம். இன்று புத்தகம் வாங்கியிருக்கும் நண்பர்கள் இதை உணர்ந்திருப்பார்கள். மிதமான கூட்டம், குறைவான விற்பனைதான். இது பதிப்பாளர்களைப் பாதிக்கும் என்றாலும், வாசகர்கள் பார்வையில் இப்படிக் குறைவான கூட்டம் இருப்பதுதான் வசதி. ஆனால் இன்று நிறைய புத்தகங்கள் அச்சாகி விற்பனைக்கு வராததால் அந்த ஏமாற்றம் நிச்சயம் வாசகர்களுக்கு இருந்திருக்கும்.

சென்ற முறை ராஜிவ் காந்தி கொலை வழக்கு, இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க ப்ளீஸ், தகவல் அறியும் உரிமைச்சட்டம் போல, எந்தப் புத்தகம் மிக அதிக விற்பனை செய்யப்போகிறது என்று தெரியவில்லை. இன்னும் நான்கைந்து நாள் போனால்தான் தெரியும்.

புத்தகங்களின் விலை அதிகரித்திருப்பதால் விற்பனையில் என்ன என்ன மாற்றங்கள் நிகழும் என்பதையும் இனிமேல்தான் பார்க்கவேண்டும். சென்ற ஆண்டுக்கு இந்த ஆண்டு காகித விலை மட்டும் கிட்டத்தட்ட 24% விலை ஏறியிருக்கிறது. புத்தக விலையை ஏற்றுவதைத்தவிர வேறு வழியே இல்லை. எல்லா சிறிய பதிப்பகங்களும் குறைவான புத்தகங்களே கொண்டு வந்ததற்கு இதுவே முக்கியக் காரணம். காகிதப் பற்றாக்குறை அடுத்த பிரச்சினை. சிறிய பதிப்பகங்கள் இதனை உணர்வதில்லை. ஆனால் பெரிய பதிப்பகங்கள் மாட்டிக்கொண்டுவிடுகின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பு கடும் காகிதப் பற்றாக்குறை இருந்தது. அந்தப் பற்றாக்குறை தந்த சறுக்கலில் இருந்து பெரிய பதிப்பகங்கள் இன்னும் மீண்ட பாடில்லை.

டீப் திங்கிங் கார்னர்:

எப்போதும் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாள்கள் மக்கள் புத்தகங்கள் வாங்குகிறார்கள். அலை அலையாக வாங்குகிறார்கள். ஆனால் புத்தகக் கடைகளில் புத்தகங்கள் விற்பது மிகவும் குறைவு. சென்னையில் ஐந்து லட்சம் பேர் 10 நாளில் புத்தகங்கள் வாங்க வருகிறார்கள் என்றால், மீதி 256 நாள்களில் ஒரு லட்சம் பேராவது புத்தகங்கள் வாங்கியிருப்பார்களா என்றால், யோசிக்கத்தான் வேண்டும். இத்தனை பெரிய நகரத்தில் உள்ள புத்தகக் கடைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ்நாடு முழுக்கப் புத்தகக் கடைகள் என்று எடுத்தால், நாம் நொந்துகொள்ள நேரிடலாம். அதிகம் 200 புத்தகக் கடைகள் இருந்தால் அதிகம். புத்தகக் கண்காட்சியில் பங்குகொள்ளும் பதிப்பகங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்துள்ளன? என்ன செய்யமுடியும்?

கிழக்கு கார்னர்:

கிழக்கில் ஓரளவு புத்தகங்களை சரியாக அடுக்கிவிட்டோம். நாளை முழுமையாகக் கிழக்கு அரங்கம் தயாராகிவிடும். இன்று சுமாரான கூட்டம். மக்கள் அலை அலையாக வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஆர் எஸ் எஸ் புத்தகம் வாங்கினால் நான் லிச்சு ஜூஸ் வாங்கித் தருவேன் என்று பாரா சொன்னதை மக்கள் நம்பிவிட்டார்கள் போல. இன்றைய டாப் செல்லர் ஆர் எஸ் எஸும், காஷ்மீரும். அடுத்தது, அதேதான், உலோகம். ஸ்பெக்டரம் 4ம் இடம், அதுவும் கடைக்கு வந்த 3 மணி நேரத்தில் இந்த இடத்தை அடைந்திருக்கிறது. சனி, ஞாயிறுகளில் உண்மை நிலவரம் தெரியவரலாம்.

சிவகாமியின் சபதம் புத்தகத்தின் மலிவுவிலை பதிப்பு வந்திருந்தது. மலிவு விலைப் பதிப்பை இத்தனை அட்டகாசமாகப் போட்டு, மலிவுவிலைப் பதிப்பு என்பதன் மரியாதையையே கெடுத்தது கிழக்குதான் என்னும் அவப்பெயரிலிந்து தப்புவது கடினம்.

கிழக்கு பதிப்பகத்துக்கு வரும் குழந்தைகளுக்கு பலூன் தருகிறோம். பல குழந்தைகள் பலூனை விரட்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள். அடுத்தமுறை ஜெயிண்ட் வீல் வைக்க விருப்பம். பபாஸியிடம் அனுமதி கேட்டால் அவர்கள் எப்படி ரீயாக்ட் செய்வார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

அடுத்த வருடம் எந்த எந்தப் புத்தகங்களைக் கொண்டுவரலாம் என்பது பற்றிய வாசகர்களின் சர்வே ஒன்றை நடத்துகிறோம். தீவிர இலக்கிய வாசகர்களுக்கானது அல்ல இது. கிழக்கு வாசகர்களுக்கானது. ஆர்வத்தோடு பலர் சர்வேயில் பங்குபெற்றது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

கேண்டீன் கார்னர்:

வயித்தெரிச்சல், இன்னைக்கும் அந்தப் பக்கம் போகமுடியலை.

செல்ஃப் டெவலெப்மெண்ட் கார்னர்:

ஒருவர் என்னிடம் வந்து ‘நிழல்கள் ரெகுலரா பார்ப்பேன், ஏன் அடிக்கடி எழுதுறதில்லை’ என்றார்.

-ஹரன்பிரசன்னாஇட்லிவடை கார்னர்: ஏன் கிழக்கு தொப்பி பற்றி சரக்கு மாஸ்டர் எழுதவில்லை ?( நான் பார்த்திருக்கிறேன் திமுக மாநாடு நடக்கும் போது அவர்கள் தொண்டர்கள் கூட இப்படி ஒரே கலரில் தொப்பு போட்டுக்கொண்டு போவார்கள்)
அப்துல்லாஹ்வுக்கு கிழக்கு தொப்பி சப்ளை செய்கிறதா.

சிறுவர்களுக்கு பலூன் தந்து அவர்கள் பெரியவ்ர்கள் ஆவதை தடுப்பதை கண்டிக்கிறேன். ஆர்.எஸ்.எஸ், காஷ்மீர் புத்தகம் மட்டும் கொண்டுவந்து இறக்கிவிட்டு அது விற்பனை ஆகிறது என்று சொல்லுவது நல்ல கூத்து. இல்லை வந்தவர்கள் எல்லாம் உங்க தோஸ்தா ?

உங்க டீப் திங்கிங் கார்னர் அபாரம், ஏன் சார் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்கிவிட்டு அதை வருடம் முழுக்க படிக்கிறார்கள். போன முறை உங்க கவிதை புத்தகத்தை இன்னும் படித்துக்கொண்டு இருக்கேன் என்றால் பாருங்கள்.

வெங்காயம் கிலோ 30 ரூபாய் விற்கும் போது நான் ஒரு கிலோ வங்குவேன். இப்ப 60 ரூபாய் அதனால் அரை கிலோ தான் வாங்குவேன். வெங்காயத்துக்கே இந்த நிலைமை என்றால் காகித விலை ஏறி புத்தகம் விலை ஏறினால் தமிழன் அதே லாஜிக் தான் யூஸ் செய்வான். இல்லை பாதி புத்தகம் விற்கும் ஆப்ஷன் இருந்தால் சொல்லுங்க.

கேண்டீனுக்கும் ஸ்டாலுக்கும் ஓடி ஓடி நடந்தால் உடம்பு எப்படி இளைக்கும் ? இளைத்து எப்போது நீன்கள் கலைஞர் படத்தில்(இலைஞன்-2வில் ) நடிப்பது ? கடைசியாக "ஒருவர் என்னிடம் வந்து ‘நிழல்கள் ரெகுலரா பார்ப்பேன், ஏன் அடிக்கடி எழுதுறதில்லை’ என்றார் என்று எழுதியிருக்கிறீர்கள். அவர் மேலும் ஒன்று சொன்னார்( ஏன் இட்லிவடையும் இப்ப சரியா கவனிப்பதில்லை என்று ) அதை ஏன் எழுதவில்லை ?11 Comments:

Kannan.S said...

ஏன் இட்லிவடையும் இப்ப சரியா கவனிப்பதில்லை என்று ) அதை ஏன் எழுதவில்லை ?

ha ha

ரோமிங் ராமன் said...

இரண்டாம் நாளும்(என் வியாபார விஷயமாகத்தான்!!)அரங்கில்தான் இருந்தேன்!! ஓரளவு மக்கள் வருகை தொடங்கி விட்டது என்றே தோன்றுகிறது.

""மீதி 256 நாள்களில் ஒரு லட்சம் பேராவது புத்தகங்கள் வாங்கியிருப்பார்களா""....

நல்ல கேள்வி..முதலில் வாசிக்க வைப்பதில் அக்கறை காட்டினால் இன்னும் நல்லது அல்லவா? இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் தலைமுறையைப் பார்த்தால், இன்னும் பயமாக இருக்கிறது. வாசிக்கின்ற பழக்கமே இல்லாத ஒரு சமுதாயம் வந்து கொண்டிருக்கிறதே-அப்போ நாளைக்கு வருஷம் முழுதும் புத்தகக் கண்காட்சி நடத்த வேண்டியிருந்தால் என்ன பண்ணுவது? பப்ளிஷர்ஸ் இப்பவே ஏதாவது செய்தால் தான் நல்லது..
ஹ பி யை ரொம்ப குறை சொல்லாதீர் இ.வ-
செருப்பு தைப்பவனுக்கு காலில்தான் கண்!!

துளசி கோபால் said...

குறை தீர்ந்தது!!!!!


நெசமாத்தான் சொல்றேன்.

(-!-) said...

//புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்துள்ளன? என்ன செய்யமுடியும்?
//

முகவோட டீல் போட்டு "இலவசமா" குடுங்களேன்! :>

ஒரு சிக்கல் இருக்கு. இலவசத்த வாங்கிட்டு, அதைப் பாதி விலைக்கு வித்துட்டு குவாட்டர் அடித்துசு கவுந்துடசான்ஸ் இருக்கு. :>

R.Gopi said...

எல்லார் கிட்டயும் என்னோட கையெழுத்து வேணும்னா, புத்தக கண்காட்சில இருக்கற ஸ்டால்ல வந்து வாங்கிகோங்க... சலிக்காம போட்டு தர்றேன்னு சாரு சொல்லி இருக்காராம்...

ஜெயமோகனோட “விஷ்ணுபுரம்” நாவல் வாங்கி, அதுல சாருவோட கையெழுத்து கேக்கலாம்னு இருக்கேன்...

பார்ப்போம்... என்ன சொல்றார்னு!!?

R.Gopi said...

//மானஸ்தன் said...
//புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்துள்ளன? என்ன செய்யமுடியும்?//

முகவோட டீல் போட்டு "இலவசமா" குடுங்களேன்! :>

ஒரு சிக்கல் இருக்கு. இலவசத்த வாங்கிட்டு, அதைப் பாதி விலைக்கு வித்துட்டு குவாட்டர் அடித்துசு கவுந்துடசான்ஸ் இருக்கு. :>//

*******

ஹா...ஹா...ஹா...

வாங்க மானஸ்தன்....

அதிரடி கமெண்டால்ல இருக்கு... இருந்தாலும் கேப்டன் டாக்டர் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...

Anonymous said...

சாரு நிவேதிதா சொல்வதைப் போல முழு அரங்கையும் ஏசி செய்யலாம் ஹைதராபாத் போல . செம்மொழி மாநாட்டு அரங்கை ஏசி வசதி செய்ய முடியும் பொது, இது முடியாதது அல்ல

சுபத்ரா said...

//அவர் மேலும் ஒன்று சொன்னார்( ஏன் இட்லிவடையும் இப்ப சரியா கவனிப்பதில்லை என்று ) அதை ஏன் எழுதவில்லை ?//

இது தான் ரியல் “SELF" டெவலப்மெண்ட் கார்னர்.

Boston Bala said...

//லக்கியதிஷா வந்திருந்தார்//

:)

//உடன் அவரது சிஷ்யகோடிகள் சே நண்பர்கள் அமர்ந்திருந்தார்கள். //

தூள்

CS. Mohan Kumar said...

//லக்கியதிஷா வந்திருந்தார். //
:))

//உண்மைத் தமிழன் வந்திருந்தார். நான் மிகவும் இளைத்துவிட்டதாக வருந்திவிட்டுப் போனார்//.

அவரை கண்ணாடியை மாத்த சொல்லணும் :))

virutcham said...

//ஒரு சிக்கல் இருக்கு. இலவசத்த வாங்கிட்டு, அதைப் பாதி விலைக்கு வித்துட்டு குவாட்டர் அடித்துசு கவுந்துடசான்ஸ் இருக்கு.//

பாதி விலைக்கு புத்தக விற்பனையாளர்களே வாங்கி அடுத்த புத்தக கண்காட்சியில் மலிவு விலை விற்பனையில் வச்சுடலாம்