இந்த வார கல்கியில் ஆர்.வெங்கடேஷ் அவர்கள் 'அனானிகளின் சொர்க்கம்!' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் எங்களுடைய பேட்டி வந்திருக்கிறது. நீங்களே படித்துப் பாருங்கள்.
நன்றி
இட்லிவடை
அனானிகளின் சொர்க்கம்! - ஆர்.வெங்கடேஷ்
கமலின் ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் பார்த்திருப்பீர்கள். கமல் அப்படத்தில் ஓர் அனானிமஸ். பெயர் இல்லாதவர். கடைசியாகப் பெயர் சொல்லும்போது, குரல் கேட்காது. அவர் அனைவரின் குரலையும் பிரதிபலிப்பவர் என்ற எண்ணத்தைச் சொல்ல இந்த முறையைக் கையாண்டு இருப்பார்கள்.
பெயர் சொல்லவில்லை என்றால் என்ன? அவருடைய உணர்வுகள் முக்கியமில்லையா? வலி முக்கியமில்லையா? எடுத்துச் சொல்லும் மறுப்புகள் முக்கியமில்லையா என்பதுதான் அனானிமஸ்களின் கோணம்.
முகத்தைக் காட்ட தைரியமில்லாதவன் என்று வேண்டுமானால் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால், முகத்தைக் காட்ட முடியாத சமூகச் சூழல் இங்கே நிலவும்போது, சொல்ல வேண்டிய உண்மைகளை வேறு எப்படியாவது தெரிவித்தே ஆகவேண்டும் என்ற அவா உந்தித்தள்ளுகிறது. விளைவு, அனானிமஸ்.
பத்திரிகைத் துறையிலோ, ஊடகத் துறையிலோ, முகமற்றவரை யாரும் நம்ப மாட்டார்கள். தனிநபர்கள் மேலும், நிறுவனங்கள் மேலும் வெறுப்பை உமிழவும் கோபத்தை வெளிப்படுத்தவும் அவதூறு களைப் பரப்பவும், முகமூடி பயன்படு வதைப் பார்த்திருக்கிறோம். இணையத்தி லும் அவதூறுகள் உண்டு என்றாலும் முழு மையாக அது விலக்கப்படுவதில்லை. முக மற்றவராக இருப்பதே இங்கே ஒரு ஃபே ஷன். பொருட்படுத்தத்தக்க கருத்துகளைச் சோல்பவராக முகமூடிகள் மாறிவிட்டார்கள்.
பிப்ரவரி 25ஆம் தேதி ஒரு முக்கியமான நாவல் வெளிவருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கதை என்று சொல்லப்படும் ‘ஓ - எ பிரசிடெண்ஷியல் நாவல்’ அன்று வெளிவருகிறது. இதன் சிறப்பு? இதை யார் எழுதினார் என்று தெரியாது. பெயர் இல்லாதவர் எழுதி இருக்கிறார். அனானிமஸ். ஆனால், இந்த அனானிமஸ், அதிபரின் அறையிலேயே பக்கத்தில் இருப்பவர் என்று ஒரு கூடுதல் க்ளூ கொடுத்து, டெம்ப்ரேச்சரை எகிற வைக்கிறார்கள்.
யார் எழுதி இருப்பார்? என்ன சொல்லி இருப்பார்? அனானிமஸுக்கு என்னவெல்லாம் தெரிந்து இருக்கக்கூடும்? ஏற்கெனவே, பில் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டனை வைத்து, ‘பிரைமரி கலர்ஸ்’ என்ற நாவலை எழுதிய அனானிமஸ்தான் இதையும் எழுதினாரா? பிற்காலத்தில், அந்த அனானிமஸ், நியூயார்க் டைம்ஸ் நிருபர், ஜோ க்ளென் என்று தெரிய வந்தது. ஆனால், தான் இந்த ‘ஓ’ நாவலை எழுதவில்லை என்று இப்போது க்ளென் சொல்லிவிட்டார்.
யார் எழுதியவர் என்று பெயர் வெளியிடாமல் எழுதப்படும் தகவல்களை, மொட்டை கடுதாசி, அனாமதேயம் என்றெல்லாம் சொல்வது வழக்கம். ஏன் பெயர் போட்டுக்கொள்ளத் தயங்க வேண்டும்? அல்லது வேறு புனை பெயரில் ஒளிந்துகொள்ள வேண்டும்? பயமே காரணம். கருத்து, கருத்தாக எடுத்துக்கொள்ளப்படாமல், தனிப்பட்ட பகையாக மாறி, இழப்புகள் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் அடிப்படை.
இணையத்தில் பெயர் அற்றவர்கள் ஏராளம். அனானிமஸ்களின் சொர்க்கம் இணையம். தம் முகத்தை மறைத்துக் கொண்டு இவர்கள் பல நல்லதையும் செய்கிறார்கள், அல்லதையும் செய்கிறார்கள்.
இட்லிவடை (http://idlyvadai.blogspot.com) என்ற வலைப்பதிவு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இன்றுவரை, இட்லி வடை யார் என்று தெரியாது. நண்பர்கள் சந்திப்பில் எல்லாம் இவர்தான் இட்லி வடை, அவர்தான் இட்லிவடை என்று ஊகங்களாகப் பேசப்படும். ஆனால், இட்லி வடை, ஆணோ பெண்ணோ, ஒருவரோ பலரோ, தம் முகத்தைக் காட்டிக் கொண்டதே இல்லை. ஆனால், அவர் கட்டுரைகள் அதிகம் வாசிக்கப்படுகின்றன.
சமீபத்தில் இணையத்தில் கவனம் பெற்றிருக்கும் இன்னொரு கேரக்டர், எழுத்தாளர் பேயோன். நல்ல நகைச்சுவையுடனும் கிண்டலுடனும் எழுதும் இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது. அவர் இணையத்தில் எழுதியவற்றைத் தொகுத்து, ‘பேயோன் 1000’, ‘திசைகாட்டிப் பறவை’ என்று இரண்டு நூல்கள் வெளிவந்துவிட்டன.
அனானிமஸ்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள, இட்லிவடை என்ற முகமற்ற வலைப்பதிவரையே கேட்போமே என்று அவருடன் கூகுள் சாட்டில் ஒரு பேட்டி எடுத்தேன். அதன் தொகுப்பு இது:
Venkatesh: இப்படி முகமற்றவராக இருப்பதில் என்ன சௌகரியம்?
idlyvadai2007: இட்லிவடை என்று பேர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசையா? என் சோந்த பெயரில்தான் எழுத வேண்டும் என்று ஆசை. கூகுளில் என் பெயரில் ஐ.டி. கிடைக்கவில்லை. கோபத்தில் இட்லிவடை என்று கேட்டேன். கொடுத்துவிட்டார்கள். பேரின் ராசி என்று நினைக்கிறேன், நிறைய கூட்டம் வர ஆரம்பித்தது. நீங்கள் யார் என்று எனக்கு ரொம்ப தெரிந்தவர்கள் கேட்க, அட இந்த ‘அனானிமஸ்’ வேஷம் நல்லா இருக்கே என்று அப்படியே வைத்துக்கொண்டேன். நண்பர்களை நல்லா திட்ட முடிகிறது என்பதுதான் இதில் உள்ள பெரிய சௌகரியம்.
Venkatesh: பெயர் போட்டுக்கொள்ளா திருப்பதால், என்ன புதிய விஷயங்களை உங்களால் எழுத முடிந்தது?
idlyvadai2007: அனானிமஸ் என்பதில் ஒரு சின்ன திரில் இருக்குகிறது. நான்தான் என்று பெயர் சொல்லி எழுதும்போது, ஒருவித பயாஸ்நெஸ் வந்துவிடுகிறது. ‘நீங்க இப்படி எழுதுவீங்க என்று நான் நினைக்கவில்லை’ போன்ற பாராட்டும் கிடைக்கலாம். குமுதம் எஸ்.ஏ.பி. எலக்ட் ரிக் டிரெயினில் சாதாரண பிரஜையாகப் போய் பல விஷயங்கள் எழுத முடிந்தது. அரசு பதில்கள் உட்பட. அரசியல், நாட்டு நடப்பு என்று எழுதும்போது மக்களுக்கு ‘இதேதான் என் கருத்து’ என்றும் ‘வாடா வெளியே கவனித்துக்கொள்கிறேன்’ என்று கமெண்ட் வருவதும் இந்த அனானிமஸ்னால்தான். அனானிமஸாக இல்லை என்றால் ‘நல்லா எழுதறீங்க, தொடர்ந்து எழுதுங்க’ என்ற கருத்துதான் வரும்.
Venkatesh: உங்கள் கருத்துகளுக்கு உரிய கவனம் கிடைக்கிறதா?
idlyvadai2007: பதிவு ஆரம்பித்து ஒரு நாள், என் தம்பி அமெரிக்காவிலிருந்து என்னைக் கூப்பிட்டு இட்லிவடை படி நல்லா இருக்கு என்றான். பல முக்கியமானவர்கள் இட்லிவடையைப் படிக்கிறார்கள் என்று அவர்களும், அவர்களின் நண்பர்களும் என்னிடம் சொல்லியுள்ளார்கள். பிரபல எழுத்தாளர்களும் இதில் அடக்கம். ஒரு சினிமா விமர்சனத்துக்கு அந்த நடிகரே ரொம்ப வருத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். ஒருமுறை ஒரு வார பத்திரிகையை ஏதோ சொல்லி யிருந்தேன். உடனே அந்த எடிட்டர் அப்படி இல்லை, தலைப்பை மாற்ற சொல்லுங்க என்று சொன்னார். மாற்றிவிட்டேன். இட்லிவடையில் ஏதாவது வந்தால் அது உண்மையாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். அதனால் சில செய்திகள் போடும்போது பலமுறை அது சரியா என்று கேட்டுவிட்டுதான் போட வேண்டியிருக்கிறது. ஒரே சந்தோஷம், பல உதவிகள் செய்ய முடிகிறது.
Venkatesh: உங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் யாரேனும் இறங்கியிருக்கிறார்களா?
idlyvadai2007: தினமும் யாராவது இந்த முயற்சியில் இறங்குவார்கள். முன்பு ரொம்ப அதிகம், தற்போது குறைவு. முக்கியமாக பெண்கள் விட மாட்டார்கள், உங்கள் வீட்டுப் படிக்கட்டு வரை வந்து விடுவார்கள். ஒருமுறை நான் என் சொந்தப் பெயரில் எழுதிவிட்டேன். மறதி. உடனே படித்தவர் என் நம்பரைக் கண்டுபிடித்து எனக்கு ஃபோன் செய்து ‘என்ன சார் உங்க பேரில் எழுதியிருக்கீங்க. உடனே மாற்றுங்கள்’ என்றார். உடனே மாற்றி விட்டேன். ‘ரொம்ப நன்றி’, என்று அவருக்கு ஃபோன் செய்து சொன்னேன். ‘அதை நான் சொல்லவில்லை, நீங்களும் கேட்கவில்லை’ என்று சொல்லிவிட்டார்.
Venkatesh: பெயர் இல்லாமல் அலைவது இம்சையாக இல்லையா?
idlyvadai2007: இருக்கு, என்ன செய்ய. கழற்றி வைக்க ஆசைதான். ஆனால் முடியவில்லை. ஒருமுறை நான் யார் என்று சொல்லப் போகிறேன் என்று அறிவிப்பு செய்தேன். உடனே நிறைய பேர் தயவு செய்து வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். என்னால் எதற்கு மற்றவர்கள் தீக்குளிக்க வேண்டும்(!) என்று விட்டுவிட்டேன். ஆனால் என்னிடம் சகவாசம் வைத்து சாட் செய்தவர்களின் பட்டியலை விட்டால் நீராராடியா டேப் எல்லாம் ஜுஜூபி.
Venkatesh: என்றைக்காவது இந்த முக மூடியைக் கழற்றுவீர்களா?
idlyvadai2007: கொஞ்சம் கொஞ்சமாகக் கழற்றிக்கொண்டு இருக்கேன். மக்களும் நான் அனானியாகவே இருப்பதையே விரும்புகிறார்கள். இப்படி இருப்பதால் எலக்ஷன் நியூஸ் எழுத முடியும். ஆனால் எலக்ஷனில் நிற்க முடியாது என்ற ஒரே வருத்தம்தான்!
( நன்றி: கல்கி - http://kalkionline.com/kalki/2011/feb/06022011/kalki0403.php
)
மஞ்சள் கமெண்ட் நீங்க பின்னூட்டத்தில் போடலாம் :-)
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Monday, January 31, 2011
இட்லிவடை பேட்டி - கல்கி
Posted by IdlyVadai at 1/31/2011 12:01:00 AM 26 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், கட்டுரை, பத்திரிகை, பேட்டி
Sunday, January 30, 2011
மேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன்
தியாகராஜர் மேல் கொண்ட அதீத பக்தியினால் 58 ஆண்டுகளுக்கு முன், திருவையாறு செல்ல ஆசைப்பட்டு அப்பாவிடம் அனுமதியும் கொஞ்சம் நிதியும் கேட்டு மறுக்கப்பட்டு வீட்டிலேயே ஆராதிக்க தன கையால் தியாகராஜ சுவாமி படம் வரைந்து கொடுக்க , தன் நண்பர் வீணை சிவா மற்றும் பிவி ராமன் பிவி லக்ஷ்மணன் இவர்களோடு இணைந்து ஸ்ரீ சத்குரு கான நிலையம் என்று தொடங்கி இன்றுவரை ஆண்டு தவறாமல் தியாகராஜ ஆராதனை உற்சவம் நடத்தி வருகிறார் மிருதங்க வித்வான் நாகை. சௌந்தர்ராஜன்(77).
58 ஆண்டுகளாக பிரதி ஜனவரி தடையில்லாமல் நடத்துவது அந்த தியாகராஜனின் கருணை என்கிறார். இவரது உற்சவத்தில் பிரதான ஆராதனை இவர் தந்தை வரைந்து கொடுத்த தியாகராஜர் படத்துக்குத்தான். இவரிடம் கற்றுக்கொண்டு அரங்கேறியவர் பட்டியல் பெரிது. உடல் தளர்ந்துவிட்ட இந்த 77 வயதிலும் இவருக்கு ஜனவரி வந்துவிட்டால் அளவில்லாத உற்சாகம் வந்து விடுகிறது.கூடவே இருக்கிறார்கள் திருவிடைமருதூர் ராதாகிருஷ்ணனும்,கணபதிராமனும்.
இந்த ஆண்டு ஜனவரி 28 முதல் மூன்று நாள் உற்சவமாக மேற்கு மாம்பலம் எஸ்.எம் ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடக்கிறது. இந்தப்பள்ளி நிர்வாகமும் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இடமும் மின்சாரமும் சந்தோஷமாக(இலவசமாகவே) வழங்குகிறது. நாகை சௌந்தர்ராஜன் இசைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மிகவும் எளிய வாழ்க்கை நடத்திகொண்டிருப்பவர். இவரது நிஜமான பக்தியினால்தான் களக்காடு ராமநாராயணன், எம் எல் வி, மாம்பலம் சகோதரிகள், எம் சந்திரசேகரன்,பாம்பே சிஸ்டர்ஸ், Flute ரமணி, கே வி ராமானுஜம்(இந்த ஆண்டின் கலைமாமணி), திருவிடை மருதூர் ராதாகிருஷ்ணன் என்று பெரிய லிஸ்ட்டில் ஜாம்பவான்கள் இங்கு வந்து சந்தோஷமாக தியாகரஜரை ஆராதித்து விட்டுப் போகிறார்கள்.துளியும் விளம்பரம் விரும்பாத இவருக்கு பாரத் கலாசார்,ம்யூசிக் அகாடெமி,கிருஷ்ண கான சபா, சதாசிவ பிரம்மேந்திர சபா, காஞ்சி காம கோடி பீடம் என்று பலரும் விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கிரார்கள்.
முதல் நாள் நிகழ்ச்சியில்(வெள்ளிக் கிழமை) பி எஸ் நாராயணசுவாமி,. ஓ எஸ் தியாகராஜன், சீர்காழி ஜெயராமன்,கே ஆர் சாரநாதன்,எம்பார் கஸ்தூரி,சிறுகுடி சிஸ்டர்ஸ் இன்னும் இன்னும் வந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளால் கான மழை பொழிந்தனர்.
கூடவே தன் பேரனும் , பூங்குளம் ஸ்ரீ எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் சிஷ்யனும் ஆன விஷால் பிரபாகரனின் மிருதங்க அரங்கேற்றமும் நடந்தது.இரண்டாம் நாள் காலை 6.30 கே ஆராதனை தொடங்கி பல ஜாம்பவான்களின் இசை மழை. அவர்கள் இன்விடேஷனில் ஒரு நாற்பதுபேர் பெயர்கள் இருந்தால் ஒரு நூறு பேர் வந்து பாடி விட்டுப்போவதில் இருந்தே நாகை சௌந்தரராஜன் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பு/ மரியாதையும் சங்கீதத்தின் மேல் இருக்கும் பக்தியும் தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி காலை ஏழு மணிக்குத்தொடங்கி இரவு எட்டு மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.
-ரோமிங் ராமன்.
ஆசிரியர் குறிப்பு: தினமும் ஒரு நூறு கிமீ பைக்கில் சுற்றுவதால் இவர் பெயர் ரோமிங் ராமன்.சென்னை வாசி. தமிழ் மீது அளவு கடந்த ஆசை - குறிப்பாக பக்தி இலக்கியங்கள். அதிலும் திருப்பாவை இவருக்கு கல்கண்டு. ஒரு வேர்க்கடலைப் பொட்டலக் காகிதம் என்றாலும் தமிழாக இருந்தால் படித்து விட்டு தான் கீழே போடுவார். கம்ப்யூட்டர் டெக்னிஷியன். மற்றும் ஒரு சிறிய மார்க்கெட்டிங் கம்பெனியின் நிர்வாகி. இட்லிவடையில் அடிக்கடி கமெண்ட் போடுவார் மற்றபடி நல்லவர் :-)
Posted by IdlyVadai at 1/30/2011 12:25:00 PM 14 comments
Labels: அனுபவம், இசை, கட்டுரை, விருந்தினர்
சன்டேனா இரண்டு (30-01-11) செய்திவிமர்சனம்
இந்த வார செய்திகள்....""குடி, கொடி""
செய்தி # 1
முன்பெல்லாம் அந்த அந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது மட்டும் விலைவாசி உயரும். அதற்க்கு முன்பே அதை குறித்து அறிவிப்பார்கள்.அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடக்கும்.அரசியல்வாதிகள் கொஞ்சமாவது மக்களுக்கு பயந்தார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் ஏன்டா சுதந்திரம் இரவில் கிடைத்தது என்று வேதனைபடும் அளவுக்கு, ராவோடு ராவாக விலைவாசி உயர்ந்துவிடுகிறது. அதுவும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. இனி எதிர்காலத்தில் நடுத்தர, மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்கள் எப்படி காலம் தள்ளபோகிறதோ என்று பதற்றமாக இருக்கிறது.
"காசு கொடுத்தால் ஓட்டு போடுவாங்க" என்ற விஷ செடியை, ஏற்க்கனெவே சுயநலத்திலும், ஊழலிலும் ஊறிய நம் அரசியல்வாதிகள் மனதில் நாம் விதைத்துவிட்டதுதான் இதற்க்கெல்லாம் காரணம்.
அத்தியாவசிய பொருட்கள் எவ்வளவுதான், எத்தனைமுறைகள் விலை உயர்ந்தாலும், மிக குறைந்த விலையில் சாதாரணமாக கிடைப்பது அல்லது தொடர்ந்து கிடைக்கபோவது....டாஸ்மாக் சரக்குகள்தான்.
சமிபத்தில் பத்தாம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் பீர் அடித்து பார்ட்டி கொண்டாடியதாக ஒரு செய்தி படித்தேன். மழை வெள்ளத்தை மிஞ்சும் அளவுக்கு சாராயம் நம் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளின் தயவால். இதன் தொடர்ச்சியாக ரவுடியிசமும்,சாலை விபத்துக்களும் கணிசமாக அதிகரித்து இருக்கின்றன.
இதே தமிழக அரசு..விவசாயிகள் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்குவதையும், அதை விற்பனை செய்வதையும் தடை செய்து இருக்கிறது. அதற்க்கு அரசு கூறும் காரணம்....மது விற்பனையை தடுக்கிறார்களாம். 'கள்' விற்பனை சட்ட விரோதம் என்கிறது அரசு.
அப்படி பார்த்தால், தெருவுக்கு தெரு மதுபான கடைகளை திறந்து இருக்கும் இந்த அரசையே சட்டவிரோத அரசாக அறிவிக்கவேண்டும்.
தடையை மீறி கள் இருக்குமதி செய்ய, திரு. நல்லுசாமி என்பவர் தலைமையில் சேலம் அருகே அரச்சலூரில் விவசாயிகள் 'தமிழ்நாடு கள் இறக்குமதியாளர்கள் சங்கம்' என்ற அமைப்பின் கீழ் போராட்டத்தில் இறங்க முடிவு செய்தார்கள். ஏதோ ஒரு பெரும் தீவிரவாத அமைப்பை கைது செய்வதை போல, ஏராளமான போலீசாரை குவித்து, அவர்கள் அனைவரையும் கைது செய்துவிட்டது தமிழக அரசு.
" கோல் கொண்டு முக்காலோடு நடந்து வந்த கிழம் கூட, வேட்கொண்டு களம் நோக்கி விரைந்து செல்வாரே, கள்ளுணர்ந்து குடித்தோரே'' என்று ஒரு பழைய பாடல் இருக்கிறது.
நமது கிராமப்புறங்களில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்குவது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் பழக்கம்.இதன் மூலம் கள்ளச்சாராயம் பெருகுவது கட்டுபடுத்தபடுவதுடன், தென்னங்கள் உடல் நலத்திற்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்க கூடியதும் அல்ல.
தென்னை மரத்து கள்ளை நமது அரசு வரிந்துகட்டி கொண்டு தடுக்கும் காரணம்.... டாஸ்மாக் மூலம் கிடைக்கும் பல கோடி ரூபாய்கள் வருமானம் இதனால் அடிவாங்கிவிடும் என்ற சுயலாபமும், சுயநலமும்தான்.
கொஞ்சம் வசதி படைத்தவர்கள் ஒயின் ஷாப்புக்கு சென்றுவிட, டாஸ்மாக் கடைகளுக்கு பெருமளவில் வாடிக்கையாளர்களாக இருப்பது....கூலி தொழிலாளர்கள், அன்றாட சம்பளக்காரர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள். இவர்கள் தென்னை மரத்தில் இருந்து வரும், விலை குறைந்த கள்ளை குடித்துவிட்டால், அரசு மதுபான கடைகளுக்கு யார் வருவார்கள்??
"நாங்க வாங்கி வைக்கிற இங்கிலிஷ்க்காரன் சரக்கை மட்டுமே அடிக்கணும்" என்பதுதான் அரசின் லட்சியம்.
டாஸ்மாக் சரக்குகள் விவகாரத்தில், சசிகலா மற்றும் ஸ்டாலின் இருவருமே கட்சி வேறுபாடு இன்றி 'முதல்' போட்டு, கொள்ளை லாபம் பார்த்து வருகிறார்கள்.
இந்த இருவரும் பங்குதாரர்கள் என்பதால், ஜெயா அவர்கள் மற்றும் கருணாநிதி இருவருமே தென்னை மரத்தில் இருந்து கள் இறக்குவதை தடை செய்வதில் உறுதியாக, முதல் முறையாக ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
"தென்னை மர கள்ளை மது என்று கூறி தடை செய்யும் அரசு, மதுபான கடைகளையும் தடை செய்யவேண்டும்" என்று கொஞ்சம் உருப்படியாக பேசி இருப்பவர் சீமான் மட்டுமே. சரத்குமாரும் கைதுசெய்யப்பட்ட திரு.நல்லுசாமியை சந்தித்து பேசி இருக்கிறார்.
இப்படி எழுதியதால், இன்பா ஒரு சீமான் ஆதரவாளர் என்றும், சரத்குமார் ரசிகர்(!?) என்றும் எழுதிவிடாமல், நான் சொல்லும் நியாயத்தை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
தென்னை மரத்தில் இருந்து கள் இறுக்குவதும், அதை விற்பனை செய்வதும் நமது விவசாயிகளின் தனிப்பட்ட உரிமை. மதுபான கடைகளை நடத்தும் அரசு, தென்னங்கள்ளை 'மது' என்று கூறி தடை செய்வது அரசு இயந்திரத்தின் வரம்பு மீறலை காட்டுகிறது. கூடவே, அதன் அடக்குமுறையையும்.
செய்தி # 2"பஞ்சாப் மாநிலத்தில் எழுந்த காலிஸ்தான் தீவிரவாத குழுக்களை அடக்கிவிட்டீர்கள். ஆனால், அரை நூற்றாண்டாக இருந்து வரும் காஷ்மீர் தீவிரவாதத்தை ஏன் உங்களால் அடக்கமுடியவில்லை? அதற்க்கு காரணம், பஞ்சாபில் மக்கள் ஆதரவு இல்லை. ஆனால், எங்கள் காஷ்மீரில், தீவிரவாதிகளுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது"
-இப்படி சொன்னவர் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவை சேர்ந்த, ஒரு வளைகுடா நாட்டில் என்னுடன் பணிபுரிந்த ஒரு நண்பர்.
காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மீது வெறுப்பும், அங்கு குவிக்க பட்டுஇருக்கும் இராணுவத்தின் மீது அதிருப்தி மற்றும் அச்சமும் நிலவுவதாக அவர் கூறினார்.
இந்தியா, பாகிஸ்தான், தனிநாடு என்று அங்கு ஒரு நேர்மையான வாக்கெடுப்பு நடத்தினால், காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் தனி நாடு அல்லது பாகிஸ்தானுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றார் அவர்.
படை துருப்புகளை படிப்படியாக குறைப்போம் என்று மத்திய அரசு அறிவிக்க, ஆனால், துருப்புகளை குறைப்பதற்கு ஏற்றார்போல் அங்கு இன்னும் நிலைமை சீரடையவில்லை என்றும், எங்களோடு ஆலோசிக்காமல் ராணுவத்தை குறைப்பதுபற்றி முடிவெடுக்ககூடாது என்றும் ராணுவ தலைமை அறிவித்திருக்கிறது. சரி. இன்னும் எத்தனை ஆண்டுகளில் அங்கு நிலைமை சீராகும் என்று யாராவது கூறமுடியுமா?
முன்பு அங்கு வசித்த பண்டிட்கள் என்னும் இந்துக்கள், தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயந்து டெல்லி, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டனர். தற்போது, நம் இந்தியாவில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரே மாநிலமாக இருக்கிறது...காஷ்மீர்.
சுதந்திரம் வாங்கிய காலம்தொட்டே அங்கு நமது அரசு செய்த குளறுபடிகள், யார் குற்றவாளி யார் நிரபராதி என்று தெரியாத நமது இராணுவத்தின் அத்துமீறல்கள், மத உணர்வு, இதுவரை பதவி ஏற்ற எந்த மத்திய அரசும் அங்கு நேர்மையான தேர்தலை நடத்தாது என்று பல காரணங்களால் இந்தியாவிடம் இருந்து அன்னியப்பட்டு போயிருக்கிறது காஷ்மீர் மாநிலம்.
போதாகுறைக்கு, அங்கு மற்ற மாநிலத்தவர் வீடு,நிலம் வாங்க தடை உட்பட பல அந்தஸ்துகளை கொடுத்து மேலும் ஒதுக்கிவிட்டது இந்திய அரசாங்கம். நமது இந்த எல்லா பலவீனங்களையும் அங்கு தனது பலமாக்கி கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.
இந்தியாவின் எந்த பகுதியில் யார்வேண்டுமானாலும் குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி, ஜெய்ஹிந்த் என்று முழங்கலாம். ஆனால், காஷ்மீர் மாநிலத்தில் தேசிய கொடி ஏற்ற சென்ற பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாஜக தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மற்றும் அனந்தகுமார் ஆகியோர் விமான நிலையத்திற்கு உள்ளேயே கைது செய்யப்பட்டதோடு, காஷ்மீரில் நிலவிய பெரும் பதட்டம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இருப்பதாக நாம் கூறிகொள்ளும் ஒரு மாநிலத்தில், குடியரசு தினம் கொண்டாட முடியாத அளவுக்கு தடைகள், கெடுபிடிகள், பாதுகாப்பு.
பாஜக தலைவர்கள் அங்கு சென்றது தேசபக்தியை பறைசாற்றுவதற்கு அல்ல. காஷ்மீர் மக்களின் நிலையை நன்கு புரிந்த அவர்கள் அங்கு சென்றது வேண்டுமென்றே பிரச்சினை செய்து, காங்கிரசின் பெயரை கெடுப்பதற்கு, உள்நோக்கத்தோடுதான் அவர்கள் சென்றார்கள் என்பதே உண்மை.
ஆனால், அதே சமயம், அவர்கள் அங்கு பாஜகவின் தாமரை கொடியை ஏற்றவோ இல்லை கரசேவகர்களின் காவி கொடியை ஏற்றவோ முயலவில்லை. "நமஸ்தே ஸ்ததா வத்சலே மாத்ரு பூமே" என்று கோஷம் முழங்க "ஷாகா" வகுபெடுக்க செல்லவில்லை.(அய்யா, நான் ஆர்.எஸ்.எஸ். இல்லை!).
அதெல்லாம் பின்னாடி பார்த்துக்கொள்ளலாம் என்று நமது நாட்டின் தேசிய கொடி ஏற்றவே அங்கு சென்றார்கள் என்பதும் உண்மை.இதைபோல, நம் தமிழகத்திற்கு குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்ற அவர்கள் வந்திருந்தால், எங்காவது ஒரு மூலையில் ராஜ் டிவி செய்திகளில்(!) மட்டும் சொல்லிஇருப்பார்கள்.
ஆனால், அவர்கள் காஷ்மீருக்கு சென்றது தலைப்பு செய்திகளில் இருப்பதற்கு என்ன காரணம்? என்ன நடக்கிறது காஷ்மீரில்? அங்கு நடுக்கும் நிலவரங்களை, மக்களின் மனோநிலையை அறிய நமது மீடியாக்களுக்கு முழு சுதந்திரம் ஏன் தரப்படவில்லை? எப்போது அங்கு மற்ற மாநிலங்களை போல நிலைமை சீரடையும்?
இந்த கேள்விகளுக்கு விடைகளை நன்கு யோசித்து பார்க்குபோது, என் காஷ்மீர் நண்பரின் கருத்துக்கள் உண்மையாக இருக்குமோ என்ற அச்சமே எனக்கு மிஞ்சுகிறது.
நான் நக்சலைட்டுகளை ஆதரிப்பவன் என்று சொன்னார் ஒரு நண்பர். பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு சென்று பாருங்கள். அங்கு பல மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆட்சிதான் இன்னமும் நடக்கிறது. போலீஸ், அரசாங்கம் எல்லாம் அவர்களை நெருங்க முடியாது. அவர்கள் வைப்பதே சட்டம்.
காரணம், அச்சத்தையும் மீறி நிற்கும் மக்கள் ஆதரவு. இதனால், நக்சலைட்டுகளால் மறுமலர்ச்சி தரமுடியும் என்பதில்லை.
புறக்கணிக்கபட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடே தீவிரவாதம்.
அந்த மாநிலங்களில் இன்னமும் மின்சார வசதி மற்றும் ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம் கூட இல்லாத கிராமங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? மத்திய/ மாநில அரசுகளின் புறக்கணிப்பும், அரசியல்வாதிகளின் சுயநலமுமே தீவிரவாதம் உருவாக அடிப்படை காரணம் என்பதே என் வாதம்.
காஷ்மீர் தீவிரவாதிகளையும் சரி. நக்சலைட்டுகளையும் சரி. இவற்றை முற்றிலும் ஒழிக்கவேண்டுமானால், நமது அரசு செய்யவேண்டியது, அங்கு பாரபட்சமற்ற கல்வி, மின்சாரம்,சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை அங்குள்ள மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். வேலைவாய்ப்புகளை அதிகபடுத்தும் வளர்ச்சி திட்டங்களை உடனே செயபடுத்தவேண்டும். இவற்றோடு, தேர்தலை நேர்மையாக நடத்தவேண்டும்.
அதை விட்டு, "தீவிரவாதத்தை இரும்புகரம் கொண்டு அடக்குவோம்" என்று கிளம்பினால், இரண்டு தரப்பாலும் மேலும் கடுமையாக பாதிக்கபடபோவது அப்பாவி மக்கள்தான். இது, தீவிரவாதம் மேலும் வளரேவே உதவும்.
தீவிரவாதம் எந்த மாநிலத்தில் நிலவுகிறதோ வளர்ச்சி திட்டங்கள் மூலம் அந்த மாநில மக்களின் அன்பை பெறுவதே, தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் வழிமுறை.
சுயநலபோக்கும், ஊழலும் நிறைந்த நமது அரசுகள் திருந்தபோவதும் இல்லை. தீவிரவாதங்கள் ஒருபோதும் ஓயப்போவதும் இல்லை.
"Kashmir is an Integral Part of India "என்று நமது பாடபுத்தகங்களிலும், அரசியல் தலைவர்கள் மேடைக்கு மேடை முழங்குவதும் வெறும் பம்மாத்துதானா? அதை அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீர் மக்கள் அல்லவா சொல்லவேண்டும்??
(நன்றி...இனி அடுத்தவாரம்)
-இன்பா
Posted by IdlyVadai at 1/30/2011 08:01:00 AM 18 comments
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
Saturday, January 29, 2011
இரண்டு படங்கள் சில செய்திகள்
இவர் பெயர் சேகர் பாபு. இன்று திமுகாவில் தன்னை இணைத்துக்கொண்டார். படத்தை பாருங்கள் அப்பவே தாவுவதற்கு ரெடியாக இருந்திருக்கிறார். ஜெயலலிதாவிற்கு முன்பே தெரியும் போல இருக்கு - சிரித்துக்கொண்டு இருக்கிறார். நன்றாக உற்றுக்கவணித்தால் ஜெயலலிதா பக்கம் பிரிமியர் டிஷ்யூ பேப்பர் இருக்கு துடைத்து போட தான்! பன்னீர் செல்வம் எதற்கு கைத்தட்டுகிறார் ?
அழகிரி பிறந்தது ஸ்வாதி நட்சத்திரம். அதன்படி இந்த மணி விழா நடந்ததாக சொல்லுகிறார்கள். தலைவர் மாலை எடுத்துக்கொடுக்க இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். அழகிரி குங்குமத்துடன் ஷோக்காக இருக்கிறார். ஸ்பெக்டரம், விஜயகாந்த் கூட்டணி என்று இவர்களுக்கு மணி அடிக்க மக்கள் ரெடியாக இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். வீரமணி இந்த விழாவிற்கு வந்தாரா ?
Posted by IdlyVadai at 1/29/2011 05:53:00 PM 16 comments
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Friday, January 28, 2011
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 28-01-2011
அன்புள்ள முனி,
இளைஞன் படத்தை பார்த்துவிட்டு சுரேஷ்கிருஷ்ணாவிடன் "தமிழ்ப் படம் எடுப்பேன்னு பார்த்தா ஹாலிவுட் படம் எடுத்திருக்க..!" என்று செல்லமாகக் கடிந்துகொண்டாராம் அந்தப் படத்தின் வசனகர்த்தா கலைஞர். இவ்வளவு ஜாலியாகப் பேசும் அவருக்கு விஜயகாந்த் எதாவது சொன்னால் மட்டும் உடனே சுர் என்று கோபம் வந்துவிடுகிறது. அதுவும் தேர்தல் நெருங்க நெருங்க சுர் கூடுகிறது.விஜயகாந்த் தீவிரவாதிகளிடம் உதார் உடுவது போல "கருணாநிதியை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவேன்" என்று சொல்ல உடனே விழுப்புரத்தில் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் கலைஞர் விஜயகாந்துக்குப் பொங்கல் வைத்துள்ளார். கலைஞர் பழுத்த அரசியல் தலைவர் என்று இதுநாள் வரை நான் நம்பிக்கொண்டு இருந்தேன். ஆனால் அவரே விஜயகாந்த் ஜெயலலிதா கூட்டணி பற்றி வாய் ஓயாமல் பேச ஆரம்பித்துவிட்டார். ஜெயலலிதா, விஜயகாந்துக்கே அந்த எண்ணம் இல்லை என்றாலும், கலைஞரே சொல்லிவிட்டார் அப்ப நாம கண்டிப்பாக் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் போல என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது. விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டார் என்று எனக்கு தெரிகிறது ஆனால் கலைஞருக்கு தெரியவில்லையே ஏன் ?
முரசொலி கட்டுரையில் விஜயகாந்தைக் கூவம் கொசு என்று போட்டுத் தாக்கியுள்ளார். "தேவைப்பட்டால் இந்த யானையை எதிர்ப்பேன்! என்று கொக்கரிக்கிறது இந்தக் கூவம் நதிக்கரையோரத்து கொசு"...கலைஞரின் சூத்திர ஆட்சியை அகற்றுவது, பார்ப்பனத்தி ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவது என்பதுதான்.எல்லோருக்கும் தெரியும்..." என்று போகிறது முரசொலி அகராதிக் கட்டுரை. கூவம் கொசு கடித்து டெங்கு, சிக்கன்குனியா என்று வந்தால் பெரிய யானை கூட மூட்டு வலியால் முடங்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இவர் இப்படி என்றால் விஜய்காந்த் பற்றி ஏதாவது கேள்வி கேட்டால் "நோ கமெண்ட்ஸ்" என்று பதில் கூறிக்கொண்டு இருந்த டாக்டர் ஐயா இப்போது விஜயகாந்த் பற்றி நேராகப் பேச ஆரம்பித்துள்ளார். அவர் இப்போது புதிதாக சொல்லும் காரணம் திரைத் துறையினர் ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்க கூடாது என்பது தான். 1967 வரை காங்கிரஸ் ஆட்சி செய்தது பிறகு அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர். இப்போது விஜய்காந்த் வந்துள்ளார். அவரை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். பாவம் விருதாச்சலம் பித்தம் இன்னும் தெளியவில்லை போல. ஜி.கே.மணி ஒரு விழாவில் ஸ்நேகாவுடன் கலந்துக்கொண்டு அவரின் அழகைப் பாராட்டிப் பேசினார் என்பது ராமதாஸுக்குத் தெரியாது போல. சினிமாக்காரர்களுடன் கூட்டணி கிடையாது என்று சொல்ல தைரியம் இருக்கா இந்த மருத்துவத் தமிழ்க் குடிதாங்கிக்கு?
இட்லிவடை கொ.ப.செ ப்ரியா எழுதிய ரெண்டா...யிரம் நாலா...யிரம் ஆறா...யிரம் பதிவை பலர் படித்திருப்பீர்கள். அதை கொஞ்சம் பத்திரிக்கைக்கு ஏற்றார் போல செய்து தினத்தந்தியில் போன ஞாயிற்றுக்கிழமை ஒரு பக்(கா) கட்டுரையாக வெளியிட்டுள்ளார்கள். http://www.dailythanthi.com/thanthiepaper/2312011/febgl2301p10ph1.jpg மருந்துக்கு கூட ப்ரியா என்ற பெயர் அதில் வரவில்லை. பெண்கள் சமையல் குறிப்பு எழுதினால் தான் பேருடன் போடுவார்களோ என்னவோ. இத்தனைக்கும் இவர் ரைட்டர் முகில் போல வெளிநாட்டுல் கூட இல்லை.
கருணாநிதி ஜனவரி 30 டெல்லி செல்லப் போகிறார். ஏற்கனவே காங்கிரஸுக்கு சீட் ஒதுக்கியுள்ளார். அதை கேள்விப்பட்ட சோனியா காந்தி முகம் சுளிக்க, கலைஞரின் டெல்லி பயணம் முக்கியமாகிறது. வேறு முக்கியமான காரணம் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். கலைஞர் டெல்லி சென்றால் நிச்சயம் அது தேர்தல் பேரம் அல்லது மந்திரி பதவி இது இரண்டுக்கு மட்டும்தான். முதலமைச்சர் மாநாடு என்றால் ஸ்டாலின் என்ற பிரோடோகால் இருக்கு. வேற ஏதாவது நாட்டு மக்களின் முக்கியப் பிரச்சனை என்றால் இருக்கவே இருக்கு லாபத்தில் ஓடும் TNPL-ன் காகிதக் கப்பல்கள்.டெல்லியிலிருந்து திரும்பும் போது சோனியாவிடம் "பை" என்று சொல்லிவிட்டு மீடியாவை பார்த்து மீனவர்கள் பற்றி சொல்லுவார் என்று நம்பலாம். ஸ்பெக்டரமில் ஊழல் நடக்கவில்லை என்று பத்ரி கிளீன் சர்டிபிகேட் கொடுத்த மாதிரி மீனவர்கள் பற்றி பேசத்தான் கலைஞர் டெல்லி போனார் என்று பாக்கெட் சைஸ் புத்தகம் போட இல்லாமலா போய்விடும்?
இரண்டு நாட்கள் முன் கலைஞர் திருமண நிகழ்ச்சியில் பேசிய போது இந்து அறநிலையத்துறை அமைச்சரை பெரியகருப்பனை எப்படி தேர்வு செய்தார் என்ற ரகசியத்தை கூறினார் - "ஒரு கோயில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியிலே பூசிக் கொண்டு அவர் நின்ற காட்சியைப் பார்த்து - "இவர்தான் சரியான ஆள் - அறநிலையத் துறை அமைச்சராக இருப்பதற்கு'' என்று நான் அப்பொழுதே முடிவு செய்தேன்" என்று கலைஞர் கூறியிருக்கிறார். பெரிய நாமம் போட்டுக்கொண்டு நின்றால் அடுத்த டெலிகாம் மினிஸ்டர் ஆவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.
அதே திருமண விழாவில் மக்கள் எப்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் சொல்லியுள்ளார். தமிழக மக்கள் இவரை "முதலமைச்சர்'' என்று சொல்லுவதை விட "திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்'' என்று சொல்லும் போது தான் ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்களாம். இதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீங்க.போன வாரம் 23 ஆம் தேதி ராயப்பேட்டா அ.தி.மு.க. கட்சித் அலுவலகத்தில் 72 கல்லூரிகளில் இருந்து 5000 மாணவ மாணவிகள் கட்சியில் இணைந்துள்ளார்கள். ஒரே விசில், கைத்தட்டல் என்று அமர்களப்படுத்திவிட்டார்கள். அப்போது ஒரு தம்பதி தங்கள் குழந்தையைக் காட்டி, 'அம்மா நீங்கதான் பேர் வைக்கணும்’ என்று ஆசைக் குரல் கொடுக்க... அந்தக் குழந்தையை வாங்கிய ஜெ., 'ஜெயஸ்ரீ’ என பெயர் சூட்டியதோடு உச்சி முகர்ந்து முத்தமிட்டார். கூடிய சீக்கிரம் இந்த குழந்தையும் இட்லிவடையில் டயட் பற்றி வேண்டாம் டயப்பர் பற்றியாவது எழுதும் என்று நம்பலாம்.
கர்நாடகா கவர்னர் பேசாம பிரதமர் ஆகிவிடலாம். பெட்டிஷன் போட்ட உடனே எடியூரப்பா மீது நடவடிக்கை எடித்துவிட்டார். இவர் பிரதமராக இருந்தால் சாமி கொடுத்த புகார் பேரில் ராசா மீது உடனே நடவடிக்கை எடுத்திருப்பார்.
குடியரசு தினத்தன்று ஸ்ரீநகர் லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்ற பாஜக முயற்சி செய்து மீடியாவின் கவனத்தை பெற்றது. அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், அனந்த்குமார் என்று ஒரு பெரிய படையே போனது. ஆனால் இதே சுஷ்மா கர்நாடகாவில் ரெட்டி கொள்ளை கும்பலுக்கு முன்பு பரிந்து பேசியது. அத்வானி போல ஒரு தலைவரை பார்க்க முடியாது என்று சோ சொன்னாலும், அத்வானியால் எடியூரப்பாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. இவரை ஒன்று செய்ய முடியாத இவர் எப்படி காஷ்மீர் தீவரவாதிகளை ஒடுக்குவார்? பேசாம இவரும் கேப்டன் போல தீவிரவாதிகளை சினிமாவில் ஒடுக்கலாம். பிகு: எடியூரப்பா ஆர்.எஸ்.எஸ் காரர். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நல்லவர்கள் அடிக்கடி கோயிலுக்கு போவார்கள், சாமியார்களை கும்பிடுவார்கள், நேர்த்திக் கடன் செய்வார்கள், யாகம் வளர்பார்கள், கூடவே ஊழல் செய்வார்கள் போல. யாருக்கு தெரியும்?
இந்த இரண்டு படங்களுக்கும் என்ன ஒற்றுமை ?
இரண்டு பேரும் கழுத்தில் கலை அம்சத்துடன் மணி போட்டிருக்கிறார்கள். அதனால் இவர்களுக்கு கலைமாமணி விருது கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.
மஞ்சள் கமெண்ட் படங்கள்
மீண்டும் சந்திக்கும் வரை...
இட்லிவடை
Posted by IdlyVadai at 1/28/2011 10:02:00 PM 11 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Thursday, January 27, 2011
தினந்தோறும் வாங்குவேன் இதயம்...- ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
[ ராஜ்தீப் சர்தேசாய்யுடன் டிவிட்டரில் தமிழில் பேசும் தாளிக்கும் மாமி, புது கம்ப்யூட்டர் புது பிரிண்டர் வாங்கியிருப்பதாக டிவிட்டரில் படித்துவிட்டு அவசரமாகத் தொடர்புகொண்டோம். அங்கவை சங்கவையோடு பழகிப்பார்க்கவேண்டியிருப்பதால் தன் வலைப்பதிவில் எதுவும் புதிதாகப் பதியமுடியாத நெருக்கடியில் இருந்தவரிடம் இட்லிவடையில் போடலாம் என்று சொல்லி வாங்கிப் போட்டிருக்கிறோம். இது அவர் இட்லிவடையில் எழுதும் முதல் பதிவு என்பதால் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன் :-) ]
தினந்தோறும் வாங்குவேன் இதயம்...- ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்
டாக்டர்: ”உங்க சாப்பாடு ரொட்டீன் எப்படி?”
”சராசரி வெஜிடேரியன் மிடில் க்ளாஸ் ஹைவுஸ்ஃவைப் சாப்பிடற அதே சாப்பாடு.. அளவு.”
”அது சரியில்லை. நீங்க டயடீஷியனைப் பார்த்து அவங்க சொல்றதை ஸ்டிரிக்டா ஃபாலோ பண்ணுங்க. 3 மாசம் பார்க்கலாம்...”
டயட்டீஷியன்: உங்க சாப்பாடு, எக்ஸர்ஸைஸ் பத்தி சொல்லுங்க.
“சராசரி வெஜிடேரியன் மிடில் க்ளாஸ் ஹைவுஸ்ஃவைப் சாப்பிடற அதே சாப்பாடு... அளவு. தினம் காலைல ஒன்றரை மணி நேரம் ப்ரிஸ்க் வாக்; ஈவினிங் அரை மணிநேரம் சைக்ளிங். வழமையான வீட்டுவேலைகள்..”"ஓகே.. உங்களுக்கான பிரத்யேக சார்ட் இது. இனிமே ஃபாலோ பண்ணுங்க. பெரிய பிரச்சினை எதுவும் இல்லை," என்று சொல்லி தானும் ஒருமுறை சந்தேக நிவர்த்திக்காகப் படித்துக் காண்பித்தார். அடைப்புக்குறிக்குள் தமிழில் இருப்பவை அப்போது நான் ஹிந்தியில் சொன்னவை. “ஓ, அதனாலதான் வெயிட் போடாம இருக்கீங்க” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்துவிட்டு, ஆனால் இன்னும் மேம்பட்ட வாழ்க்கைநெறிக்கு தன் அறிவுரைப்படியே சாப்பிடவேண்டும் என்று எச்சரித்தார்.
Energy: 1775 kcal Protein: 50 gm
Morning:
1/4 tsp Fenugreek seeds (soaked overnight) [ஏற்கனவே இதைச் செய்துவருகிறேன்.]
7:oo am
1 Cup Tea/coffee (1/2 tsp sugar) + Milk (75 ml) [ஒரே தடவை என்பது கொஞ்சம் கடினம். இரண்டு தடவையாக அளவைக் குறைத்து சாப்பிடலாம். இனிப்புச் சுவை பிடிக்காததால் எப்பொழுதுமே சர்க்கரை அறவே போட்டுக்கொள்வதில்லை.]
Breakfast:
8:30 am:
1 chapattis [No oil/ghee/butter] with vegetable / 1 vati Poha/ upma/ Daliya (with vegetables) / 2 idli with Sambhar/ 1 1/2 dosa with Sambhar/ 1 katori oatsmeal/ 1 katori wheat flakes/ 1 katori muesli with one cup milk/ 2 pcs vegetable sandwich with whole wheat bread
11:00 am
1 fruit (100gm) [Pineapple, apple, orange, papaya, melons]
LUNCH 1:30 pm
2 Chapatti [no oil/ ghee]
1/2 Katori Rice
1 Katori Dal
1 Katori Veg. [preferably greens or gourd vegs]
1 Katori salad [1/2 beetroot + cucumber + tomato]
SNACKS 4:30 pm
1 Cup Tea/coffee (1/2 tsp sugar) + Milk (75 ml) [சர்க்கரை தேவையே இல்லை]
1 Fruit/ 1 katori sprouts/1 katori kurmura/ 1 handful roasted chana/ 1 katori dry bhel/ 1 vegetable sandwich
DINNER 9:00 pm
[மிகத் தாமதம். எவ்வளவு நேரம் வேண்டுமானால் இரவில் விழித்திருக்கலாம். ஆனால் சமையலறை வேலை 8 மணிக்குள் முடிந்துவிட வேண்டும்.]
2 Chapatti [no oil/ ghee]/ 1 jowar bhakari/ 1 nachani bhakari
1 Katori Dal
1 Katori Veg.
1 Katori salad
BED TIME: 1 cup milk [150 ml]
Notes:
• Avoid the use of fried food, sweets, sugar, honey, jaggery, groundnut, coconut (wet/dry), white bread, biscuit, bakery products, cakes and deserts, maida products, fruit juices, egg yolk. [இதில் பல பொருள்கள் இனிப்புச் சுவை என்பதால் என் சாப்பாட்டிலேயே இல்லை.]
• Incorporate lemon juice, mint, corriander, chillies and masalas to taste.
• Drink 12-14 glasses of water per day. [இது எனக்கு ஏற்கனவே சர்வசகஜமான விஷயம்தான்.]
• Incorporate more green leafy veg, salads and sprouts in your meal.
• Have 1-2 fruits per day.
• No fasting and feasting. Avoid eating outside. [முதல் பகுதி ஓக்கே. இரண்டாம் பகுதி கொஞ்சம் கடினம்.]
• Avoid chips, wafers, farsen or soda containg food items. [பிரச்சினையே இல்லை.]
• Salted cheese, butter and nuts should be avoided [பாதாம் தவிர எதுவும் சாப்பிடுவதில்லை.]
• Maintain meal timings
• Exercise Regularly. 1 hr brisk walking compulsory. [காலையில் ஒன்றரையிலிருந்து இரண்டு மணிநேரம் நடையும் அரை மணி நேரம் வீட்டினுள் சைக்கிளிங்கும் ஏற்கனவே செய்துவருகிறேன்.]
Oil: 3 tsp/day [ம்…]
(signature)
DIETICIAN
தானும் ஒருமுறை டயட் சார்ட்டை வாங்கிப் பார்த்து, விவரமாக எல்லாவற்றையும் சொன்ன டாக்டர், தன் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துப் போட்டுக்கொள்ளும்போது, தமிழ் சினிமாக்களில் எல்லாம் வருவது மாதிரி, “அதிர்ச்சி தர எதுவும் அவங்ககிட்ட சொல்லாதீங்க!” என்று குடும்பத்தினரிடம் எச்சரிக்காமல் விட்டுவிட்டார்.
”உடப்பைப் பார்த்துக்கன்னா கேக்கறியா? கண்ட நேரத்துல சாப்பிடறது. கம்ப்யூட்டர் பார்க்கும்(?)போதெல்லாம் சாப்பிடறது.. இனிமே நான் செக் வெக்கறேன். வெரைட்டியா பழங்கள் வாங்கிப்போடறதோட சரியா சாப்பிடறாயான்னு வேற நான் பார்க்கணும். எனக்குக் காத்திருக்காம நேரத்துக்கு சரியா சாப்பிடு.... மாசத்துக்கு 1 லிட்டருக்கு மேல எண்ணெய் வாங்கப்போறதில்லை... ” உள்ளே நுழைந்ததுமே, டயட் சார்ட்டை கண்படும் இடத்தில் மாட்டி... ஊரார் கண்படுவதுபோல் கவனித்துக்கொண்டு... ஒவ்வொரு வேளைக்கும் அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி, பொய் சொல்லுகிறேனோ என்று பெண்ணிடம் குறுக்குவிசாரணை செய்து...
“இனிமே நான் படுத்தாம, டென்ஷன் தராம இருக்கேன்மா. ஆர்கனைஸ்டா இருக்கேன்மா. நீ சொன்னதெல்லாம் கேக்கறேம்மா...” ஸ்கூல்விட்டு வந்து ஷூவைக் கழட்டி அதன் அலமாரியின் வைத்து, சாக்ஸைத் தோய்க்கப்போட்டு, யூனிஃபார்ம் மாற்றி, எனக்குச் சமைத்ததையே சமர்த்தாய் தானும் சாப்பிட்டு, சொல்லவேண்டிய அவசியமில்லாமல் சுயமாய் வீணை வகுப்புக்குக் கிளம்பி...
அதிர்ச்சியில் பேச்சுமூச்சில்லாமல் போனேன். அதீத அக்கறை காட்டும் கணவனும், அடங்கிப் போகிற பெண்ணும் சகிக்கமுடியாத கொடுமை என்பது இரண்டே நாளில் தெரிந்தது. நல்லவேளையாக “எல்லாம் ஒரு மாசத்துல ‘நார்மல்’ ஆயிடும், கவலைப்படாதே” என்று அப்பாதான் உலக யதார்த்தத்தைச் சரியான நேரத்தில் சொல்லி என்னை ஆறுதல்படுத்தினார். அப்படியே ஆனது.
சாப்பாட்டுக்கு முக்கால் அல்லது ஒரு மணிநேரம் முன்னால் ஃப்ரிட்ஜைத் திறந்து, ஒரே ஒருநிமிடத்தில் என்ன சமையல் என்று முடிவுசெய்து, அடுத்த முக்கால் மணிநேரத்தில் முழுச் சமையலும் முடித்துவிட்டு சமையலறையைவிட்டு வெளியே வருவது-- என்ற என் இத்தனைவருட வாழ்க்கை வெறும் வரலாறாகிப் போனது. நினைத்தபோது நினைத்ததை அல்லது கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த எனக்கு, இப்போது அடுத்தவேளைக்கு என்ன உணவு என்றுபார்த்து தயார்செய்துகொண்டு, விரதம் இருந்த குரங்கு மாதிரி நொடிக்கொருதரம் மணியைப் பார்த்து அடுத்தடுத்து சாப்பிடுவதும், சாப்பிட்ட கையோடு அடுத்தவேளைக்கு என்ன உணவு என்று குறித்துக்கொண்டு ஆவனசெய்வதுமே அன்றாட வேலையாகிப் போனது. ”எனக்கென்னவோ ஓவரா சாப்பிடறேனோன்னு தோணுது” என்ற என் பயத்தைக் காதுகொடுத்துக் கேட்க நாதியில்லை வீட்டில். ”எனக்கு அனுப்பு, நான் பார்க்கறேன்!” என்று சொல்லிவிட்டு, "/ போட்டா அதுல ஏதாவது ஒரு ஐட்டம் சாப்பிட்டா போதும்(OR)னு அர்த்தம். நீ AND-னு நினைச்சு எல்லாத்துலயும் வகைக்கு ஒன்னா வெட்றியா?” என்று தம்பி மட்டும் எரிச்சலில் எண்ணெய் வார்த்தான்.
ஒருவழியாய் 3 மாதம் கழிந்து டாக்டர் அறைக்குள் நுழைந்த நொடி, டாக்டர் பதற்றமா கோபமா என்று இனம்பிரிக்கமுடியாத வேகத்தில் அந்தக் கேள்வியைத் தூக்கிப் போட்டார்- “Why you have put this much weight?"
போங்கடா நீங்களும் உங்க டயட் கண்ட்ரோலும்...
- ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்
நமக்கெதற்கு இந்த வீர விபரீத விளையாட்டு? மூன்றே மாதத்தில் ’தாளிக்கும்’ வாழ்க்கையும் நார்மலுக்குத் திரும்பியிருக்கும் என்று நம்புவோம்! இன்னொரு விஷயம் இட்லிவடையில் எழுதுவது டயட்டில் சேர்த்தி கிடையாது, தொடர்ந்து எழுதினால் கொழுப்பு குறையும். ஓ.கே யாரு நெக்ஸ்ட் ?
பிகு படம்: An apple and a visit to idlyvadai.blogspot.com a day, keeps the doctor away!
Posted by IdlyVadai at 1/27/2011 10:20:00 PM 13 comments
Labels: அனுபவம், இட்லிவடை ஸ்பெஷல், மருத்துவம், ஜெயஸ்ரீ
Monday, January 24, 2011
பண்டிட் பீம்சென் ஜோஷி
இந்துஸ்தானி இசைக்கலைஞர் பண்டிட் பீம்சென் ஜோஷி உடல்நலக்குறைவால் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரின் பழைய வீடியோ கீழே
Posted by IdlyVadai at 1/24/2011 04:47:00 PM 9 comments
Sunday, January 23, 2011
சன்டேனா இரண்டு (23-01-11) செய்திவிமர்சனம்
இந்த வார செய்திகள்....இரண்டு "சட்ட மன்ற கூட்டத்தொடர்" செய்திகள்..
செய்திகளுக்கு முன்னால், சபரிமலை விபத்து: இந்த வருட மகர ஜோதி 104 பக்தர்களின் வாழ்வை இருட்டாக்கி இருக்கிறது. இந்த விபத்துக்கு காரணம் பாதுகாப்பு குறைபாடுகளே தெரியவந்து இருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக தேவை என்றும், பெரிய அளவில் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் சில வாரங்களுக்கு முன்னாலே கேரளா உளவுத்துறை, கேரளா காவல்துறையை எச்சரித்து இருப்பதும், அதை கேரளா காவல்துறை கண்டுகொள்ளததும் இப்போது வெளிவந்துஇருக்கிறது.
"டாய்லெட், குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் அங்கு படு மோசம் " என்று அங்கு சென்று வருபவர்கள் கூறுகிறார்கள்.
பெரிய அளவில் கோவிலுக்கு வருமானம் வந்தும், நிர்வாக மற்றும் பாதுகாப்பு சீர்கேடுகளுக்கு காரணம் சபரிமலை தேவஸ்தானதிர்க்குள் இருக்கும் ஊழலும், முறைகேடுகளுமே.
கட்டமைப்பு செய்கிறோம் என்று அங்கு உள்ள வனப்பகுதிகளை அழிக்க கூடாது என்று ஒரு சாரர் தடுத்துவிட்டதாகவும், ஊழல் வெளிச்சத்தில் சிக்கிகொள்ளகூடாது என்று பயந்து அதிகாரிகள் யாரும் மேம்பாட்டு பணிகளுக்கு பொறுப்பேற்கவரவில்லை என்றும் கூறினார் பத்தன்திட்டாவில் வசிக்கும் என் நண்பர்.
.செய்தி # 1
நான் பார்த்த இரண்டு வெவ்வேறு விதமான சம்பவங்களை எழுதுகிறேன்.
இடம்: சென்னை சாந்தோம்.ஒரு பஸ் ஸ்டாப். காலை நேரம்.
நிறைய பள்ளிக்குழந்தைகள் நேரமாகிவிட்டதே என்று பதற்றத்தோடு காத்துகொண்டு இருக்க, அந்த வழியாக நான் சென்ற நகர பேருந்து அங்கு நிற்காமல் மிக வேகமாக சென்றுவிட்டது.
இடம் : சென்னை பேசன் பாலத்திற்கு முன்னால் ஒரு பேருந்து நிறுத்தம்.
ஆறாவதோ இல்லை ஏழாவதோ படிக்க கூடிய ஒரு சிறுமி. தலைதெறிக்க ஓடிவந்து பஸ்ஸில் ஏறினார். முச்சிரைக்க கையில் இருந்த பஸ் பாசை கண்டக்டரிடம் நீட்டியபோது, "இது எக்ஸ்பிரஸ் பஸ். பாஸ் எல்லாம் இங்கே செல்லாது" என்று அந்த சிறுமியிடம் எரிந்துவிழுந்த கண்டக்டர், அந்த சிறுமியை பஸ்ஸை விட்டு இறங்க சொன்ன இடம்... பேசன் பாலத்திற்கு நடுஇடம். அவரின் இந்த செயலை நான் உட்பட பேருந்தில் இருந்தவர்கள் கண்டித்து, பின் அந்த பள்ளி சிறுமியை தொடர்ந்து பயணிக்க செய்தோம்.
நடத்துனர் மற்றும் ஓட்டுனரை மனிதாபிமானம் அற்றவர்களாக பள்ளிக்குழந்தைகள், மாணவர்களிடம் நடந்து கொள்ள வைப்பது...வேறு என்ன? காசுதான். இவர்கள் பஸ்ஸில் ஏறினால் கூட்டம் ஆகி, பயணிகள் வாராமல் 'கலெக்சன்' போய்விடுமே என்ற பயமே அவர்களை ஆட்டிவைக்கிறது.
சென்னையில் மட்டும் அல்ல...தமிழகத்தின் எல்லா பெரிய அல்லது சிறிய நகரங்களில் நன்கு கவனித்து பாருங்கள். முதுகில் புத்தக மூட்டைகளை சுமந்துகொண்டு முதல்வகுப்பு முதல் பள்ளி இறுதியாண்டு வரை படிக்கும் பள்ளிக்குழந்தைகள்...பஸ்சுக்கு ஓடுவதையும், பேருந்து கூட்டத்தில் சிக்கிக்கொண்டு தவிப்பதையும்.
பள்ளி மாணவர்களின் இந்த போராட்டங்கள்...தமிழக அரசின் கதவுகளை தட்டி இருப்பதை ஒரு அரசியல் அதிசயம் என்றே சொல்வேன்.
"பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு என்று சிறப்பு பேருந்துகள் இயக்கபடும்" என்று அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார்.
முதல்கட்டமாக இதற்காக, சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிகம் உள்ள இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு,50 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பின்னர் இந்த முயற்சிக்கு கிடைக்கும் ஆதரவை பொருத்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கபடும் என்றும் தெரிவித்தார் அவர்.
அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்கு செல்லும் பயணிகள் பாதிக்காதவண்ணம் இந்த திட்டம் நிறைவேற்ற படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
வசதி படைத்த மாணவர்கள் ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தலாம். ஆனால், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, நகர பேருந்துகளை தவிர பள்ளி செல்ல வேறு வாகனங்கள் இல்லை.
பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கும் இந்த திட்டத்தை நாம் முழு மனதோடு, பாராட்டி வரவேற்போம். போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு நன்றிகள்.
இதை போல, தமிழக அரசை பாராட்ட வேண்டிய விஷயங்கள்..
1 . தமிழகத்தில் உள்ள 105 அணைகளை புதுபிக்கும் திட்டம்.
2 ரேஷன் கடைகள் மூலம் நியாயமான விலையில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கிடைக்க செய்தமை.
3 புதிதாக 25 உழவர் சந்தைகளை திறக்க முடிவுசெய்தது. .
ஆளும் கட்சியை எந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்கிறோமோ அந்த அளவுக்கு அவர்கள் செய்யும் நல்ல காரியங்களை பாராட்டுவதும் முக்கியம்தானே?
செய்தி # 2
ஆளும் கட்சியை இது கடுமையாக விமர்சிக்கபோகின்ற செய்தி.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட...முதன்மையானதும், முதலில் நிறைவேற்ற வேண்டியதுமான "தென்னக நதிகள் இணைப்பு திட்டம்" கிடப்பில் போடப்பட்டது குறித்து சட்டசபையில் யாரும் கேள்வி கேட்கவும் இல்லை...விளக்கம் சொல்லவும் இல்லை.
ஆளும் கட்சி ஆதரவு சானல்களை தவிர்த்து பாருங்கள். ஒவ்வொரு வாரமும் தவறாமல் நம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டே இருப்பது உங்களுக்கு தெரியவரும். எதோ ஒரு அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது...நமது மீனவர்களின் படகுகளை உடைப்பதும், வலைகளை அறுப்பதும், அப்பாவி மீனவர்களை தாக்குவதும்...இலங்கை கடற்படையினருக்கு.
இதன் உச்ச கட்டமாக அவ்வபோது மீனவர்களை அவர்கள் சுட்டுக்கொல்வதும் உண்டு. சென்ற வாரம் புதுக்கோட்டை மீனவர் பாண்டியன் என்பவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுகொல்லபட்டது உங்களுக்கு தெரியும்.
இதை இலங்கை கடற்படை செய்யவில்லை என்று மறுத்து இருக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. பின்னர் வேறு யார் இதை செய்து இருப்பார்கள்..இலங்கையின் அதிரடிப்படையா?
மீனவர் பாண்டியன் கொல்லப்பட்டதும், ஒட்டுமொத்த மீனவ சமுதாயமும் வெடித்து கிளம்பி இருக்கவேண்டுமே....அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு பெரும் போராட்டத்தை அவர்கள் நடத்தி இருக்கவேண்டுமே.
ஆனால், இத்தனை முறைகள் அவர்கள் தாக்கப்பட்டும் அப்படி ஒரு போராட்டத்தை அவர்கள் செய்யமுடியாத அளவுக்கு, சாதி, மத, இன, அரசியல் ரீதியான பிளவுகள் அவர்களுக்கு உள்ளே இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.
பொதுவான, மாநிலம் தழுவிய ஒரு போராட்டமாக இல்லாமல், ஒரு குறுகிய பகுதி அளவில் மட்டும் இருக்கிறது அவர்கள் போராட்டங்கள்.
மீனவர் படுகொலை சம்பந்தமாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் சட்ட மன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டது.
அதற்க்கு, பதில் அளித்த கருணாநிதி மீனவர் குடும்பத்திற்கு 5 லட்ச ருபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
அவ்வளவுதான் அவர் கடமை முடிந்துவிட்டது. மீனவர்களும் இத்துடன் அமைதி அடைந்துவிடுவார்கள்.
உள்துறை அமைச்சர் ஸ்டாலின் " மீனவர்கள் மீது அவ்வபோது நடக்கும் தாக்குதல்கள் எனக்கு வேதனை அளிக்கிறது" என்று சொன்னார்.
அய்யா ஸ்டாலின் அவர்களே, நீங்கள் இப்படி பேசியதுதான் எங்களுக்கு வேதனையை இருக்கிறது. வேதனை படுவதர்க்குதான் நாங்கள் இருக்கிறோம்.இது போன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்தவேண்டிய இடத்தில், பொறுப்பான பதவியில் நீங்கள் இருக்கிறீர்கள்.
மத்திய அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இது சமபந்தமாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தாராம்...அதுவும் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று. நான்றாக இந்த வார்த்தையை கவனியுங்கள்...முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று அவர் கண்டனம் தெரிவித்தார்.
"ஒரு அப்பாவி இந்தியன் அயல்நாட்டுநாட்டு கடற்படையால் சுட்டுகொல்லபட்டு இருக்கிறான்".
ஏன் உள்துறை அமைச்சகம் உடனே கடுமையான நடவடிக்கையில் இறங்கவில்லை? கருணாநிதி சொல்லித்தான் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிடவேண்டுமா?
ஏன், தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? நாம் எல்லாம் இந்தியர்கள் இல்லையா?
அமிதாப்பச்சன் வீட்டுக்கு முன்னால் மழைநீர் தேங்கி நிற்பதையும்,தீபிகா படுகோனே, சித்தார்த் மல்லையாவுக்கு 'கிஸ்' கொடுத்ததையும் சொன்ன கேடு கெட்ட வடஇந்திய சானல்கள், ஏன் ஒரு அப்பாவி இந்தியனின் படுகொலை பற்றி ஒரு சிறுசெய்தி கூட வெளியிடவில்லை?
தமிழ் பேசுபவர்கள் எல்லாம் விடுதலைபுலிகளா? வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் எல்லாம் வெறும் கோஷங்களா?
"மத்திய அரசு , டெல்லி போன்ற சில மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களை திரும்பிகூட பார்ப்பதில்லை" என்று சொன்னார் ஒரு நக்சல்பாரி இயக்க தலைவர். நக்சலைட்டுகள் பக்கம் பெரும் நியாயம் இருப்பதாகவே எனக்கு படுகிறது.
பின்னே, மத்தியில் இத்தனை செல்வாக்கு உள்ள நமக்கே இந்த மெத்தனம் என்றால், வட கிழக்கு மாநிலங்களை நினைத்துபாருங்கள்.
அறிக்கை விடுவது, கண்டனம் தெரிவிப்பது, பேச்சு வார்த்தை நடத்துவது எல்லாம் இருக்கட்டும். இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு முடிவு எப்போது? நிரந்திர தீர்வு எப்போது?
காவேரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய நியாயம் எப்போது கிடைக்கும்? சொந்த நாடே அதன் மக்களுக்கு இழைத்த அநீதியின் சின்னமாக இருக்கும் கச்சதீவில் நமக்கு உரிய உரிமை எப்போது நிலைநாட்டப்படும்?
இப்படியெல்லாம் துணிச்சலுடன் கேள்விகள் கேட்க ஒரு முதுகெலும்பு உள்ள தலைமை இல்லாமல் நாதியத்து கிடக்கிறோம் நாம்.... இலங்கையில் மட்டும் அல்ல...இந்தியாவிலும்தான்.
(நன்றி...இனி அடுத்த வாரம்)
-இன்பா
Posted by IdlyVadai at 1/23/2011 04:40:00 PM 16 comments
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
இரு துளிகள் - இன்று போலியோ தினம்
Posted by IdlyVadai at 1/23/2011 06:25:00 AM 8 comments
Labels: அறிவிப்பு
Friday, January 21, 2011
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 21-01-2011
அன்புள்ள முனி,
நலமா கேப்டன் மாநாடுக்கு போயிருந்தியா ? நல்ல தண்ணி என்று கேள்விப்பட்டேன்!
கேப்டன் மாநாடு பற்றி ஏன் இட்லிவடையில் வரவில்லை என்று பலர் கேட்டார்கள். இட்லிவடை என்ன தினத்தந்தியிலேயே கேப்டன் பற்றி ஒரு வரி போடவில்லை. நாளை அவர்கள் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம் இரண்டாம் பகுதி கொண்டு வந்தால் பாவம், கேப்டன் அதில் இருக்க மாட்டார். ஏன் என்று பலருக்குத் தெரியாது. அவர் தீவரவாதிகளிடம் கேள்வி கேட்பது போல தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனுக்கும் கேள்விக்கணை விடுத்தார் கேப்டன் பற்றி சுவடே இல்லாமல் பண்ணிவிட்டார்கள். “காசு கொடுத்தா எதை வேண்டுமானாலும் போடுவீங்களா? கருணாநிதி ஒழிகன்னு போடுங்க... நான் காசு கொடுக்கிறேன்” என்று விஜயகாந்த் பேசிய அந்த பேச்சு தான் அவர்களை டென்ஷன் ஆக்கிவிட்டது. ஒரு பத்திரிக்கை அதுவும் தினத்தந்தி, முரசொலி ரேஞ்சுக்கு போனது கொஞ்சம் வருத்தப்பட வேண்டிய விஷயம்.இனி வரும் மாதங்களில் வழக்கம் போல தேர்தல் 2011 என்ற தலைப்பில் முக்கிய நிகழ்வுகள் பற்றிப் போடலாம் என்று இருக்கேன். இப்பவே பலர் ரெடியாகிவிட்டார்கள். (இல்லை என்றாலும் அப்படி தான் சொல்லணும்). ஜெயலலிதா முதல்வர் ஆகவேண்டும் என்று பலர் கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு 100 சீட் வரும் என்று நேற்று வரை நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் இன்று அவருக்கு 234 சீட்டும் அவருக்கு என்று முடிவு கட்டிவிட்டேன். நேற்று ஜெயலலிதாவும், கார்த்திக்கும் நேருக்கு நேர் சந்தித்து கூட்டணி பற்றி பேசி கூட்டணியை உறுதி செய்தனர் என்ற செய்தி வந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் கார்த்திக் 10 தொகுதிகள் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு 2 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கும் என தெரிகிறது. ஒரு சீட் கொடுத்தாலே ஆச்சரியப்படுவேன்.
நிச்சயமாக 234 தொகுதியும் வெற்றி பெற வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு ல.தி.மு.க.வாக இருக்க வேண்டும். லதிமுக - அட நம்ம டி.ஆர் கட்சி மதுரையில் அவர் நீங்க யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு "இந்த தேர்தலுக்கு யார் என்னை அழைத்து, உரிய சீட் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரம் செய்வேன்." என்கிறார். ஜெயலலிதா காலம் தாழ்த்தாமல் உடனே டி.ராஜேந்தர் வீடு தேடிப் போய் அவர் கட்ச்சிக்கும் நாலஞ்சு சீட் கொடுக்க முன்வர வேண்டும்.
இந்தியன் படத்தில் இங்கே சந்துரு சந்துரு என்ற மானஸ்தன் இருந்தாரு அவரைக் காணோம். என்ற வசனம் வரும். சீமான் பேச்சு அப்படி தான் இருக்கிறது. நான் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை, ஆனால் அதிமுகவிற்கு ஓட்டு போடுங்க என்கிறார். நான் கடவுளை நம்பவில்லை ஆனால் கடவுளுக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று முன்பு ஒரு வசனகர்த்தா பேசினார் அதே போல தான் இது.
திமுக ஏன் ஒரு மந்திரி கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டது என்பது புரியாத புதிர். அட்லீஸ்ட் பாலுவிற்கு ஏதாவது ஒரு மந்திரி கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் எனக்கு என்னவோ அவர்களே எங்களுக்கு மந்திரி பதவி எதுவும் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. சட்டமன்ற தேர்தல் வரும் நேரம் இவர்கள் ஏதாவது மந்திரி பதவி வேண்டும் என்று கேட்க காங்கிரஸ் எங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டால்? தற்போது உள்ள நிலை காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் வராது. இன்று ஜெயலலிதா நான் எப்போது காங்கிரஸுடன் கூட்டணி என்று சென்னேன் என்று சொல்லுவதிலிருந்து தெரிகிறது. தேமுதிக - அதிமுக கூட்டணி வரும் என்று நம்புகிறேன். தேமுதிக மாநாட்டில் உங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் கையை தூக்குங்கள் என்று விஜயகாந்த் சொல்ல கூட்டத்தில் பலர் கையை தூக்கினார்களாம். சேலம் தங்கபாலுவின் ஊரு என்பதால் ஒருவேளை வந்தவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்காரர்களாக கூட இருக்கலாம்.இந்த தேர்தலில் ஒரே வருத்தம் என்ன தெரியுமா? சினேகா அரசியலுக்ககு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். "எனக்கு அரசியல் பற்றி தெரியாது. எனவே அரசியலுக்கு வரமாட்டேன். தேர்தலில் ஏதேனும் கட்சி பிரசாரத்துக்கு அழைத்தாலும் போகமாட்டேன்" திமுக பக்கம் இனி நடிகைகள் போக பயப்படுகிறார்களாம். பின்ன பா.விஜய்க்கு அம்மாவா நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டால். முன்பு ஜாக்பாட் நிகழ்ச்சியில் ஜாக்கெட் போட்டு அசத்தியவர் இன்று பா.விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார். திமுக கட்சியில் சேர்ந்ததால் வந்த பரிசு. சினேகா புத்திசாலி.
தற்போது ஹாட் டாபிக் பா.விஜய் வீடடில் கொள்ளை முயற்சி! அவர் இளைஞன் படத்தின் மூலம் நம்ம நெஞ்சை கொள்ளை அடிக்க முயற்சி செய்தார். பதிலுக்கு திருடர்கள் அவர் வீட்டை கொள்ளை அடிக்க முயற்சி செய்தார்கள். தானிக்குத் தீனி சரியாப் போச்சு.
எந்திரன் படம் பெரிய வெற்றி என்று சொல்லுகிறார்கள். ஆனால் போன மாதம் சன் பிக்சர்ஸ் ஊழியருடன் பேசிய போது அவர் எங்களுக்கு லாபம். ஆனால் வாங்கியவர்களுக்கு லாபம் இல்லை என்றார். தமிழை தவிர மற்ற மொழிகளில் டிஸ்டியூபூட்டர்களுக்கு நல்ல லாபமாம். இது ரஜினிக்குதெரியுமா? இல்லை அவர் ரசிகர்களுக்குத்தான் தெரியுமா?
ராகுல் காந்தியை சந்தித்த பிறகு விஜய்க்கு பிடித்தது சனி. சூரிய குடும்பம் காவலன் படத்துக்கு எவ்வளவு இடைஞ்சல் தர முடியுமோ அவ்வளவு தந்தார்கள். கடைசியாக விஜய் அப்பா ஜெயலலிதாவை போய் பார்த்து தன் பிரச்சனையை சொல்லியுள்ளார். நேற்று விஜய் நிருபர்களை சந்தித்து ஜெயலலிதாவிற்கு பிரச்சாரம் செய்வீர்களா என்று கேட்டதற்கு இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதில் சொல்லியுள்ளார். 3 இடியட்ஸ் படத்திலேயும் நடிக்காததற்கு அரசியல் தான் காரணம், விஜய் இல்லை என்றாலும் நமக்கு உண்மை தெரியும். இப்ப இன்னொரு முக்கியமான நியூஸ் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் ம.தி.மு.க.வில் இருந்து திடீர் என்று ராஜினாமா செய்துள்ளார். இவர் இவ்வளவு காலம் மதிமுகவில் இருந்தார் என்பதே இவர் ராஜினாமா செய்த பின் தான் நமக்கு தெரிய வந்தது. இவருடைய ராஜினாமா கடிதத்தில் " என்னோட முதல் தலைவனா உங்களை எடுத்துக்கிட்டு கன்னிப்பெண்ணா வந்தவன் நான். இத்தனை காலமும் வலிகளையும், வேதனைகளையும் தாங்கி, தாங்கி தழும்பேறி.. இப்போது வெளியேறுகிறேன்" என்று புலம்பியுள்ளார். இன்னொரு விஷயமும் நமக்கு தெரிகிறது அது - முன்பு இவர் கன்னிப்பெண் இப்போது கன்னிப்போன பெண். இதனால் கூட 2011 தேர்தலில் பெரிய மாற்றம் வரலாம். யார் கண்டது
இது போல வரும் நாட்களில் இன்னும் பல அரசியல்
கடிதங்களை எழுதப்போகும்
இட்லிவடை
தேர்தல் 2011 ஆரம்பம் :-)
Posted by IdlyVadai at 1/21/2011 04:17:00 PM 15 comments
Labels: அரசியல், தேர்தல் 2011, பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Thursday, January 20, 2011
இன்று முதல் MNP
இன்று முதல் MNP ( Mobile Number Portability ) அமலுக்கு வருகிறது. ஏர்டெல், BSNL போன்ற நிறுவனங்கள் இந்த சேவையை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. நிச்சயம் அவர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் வேறு சேவைக்கு சென்றுவிடுவார்கள் என்ற பயமாக கூட இருக்கலாம்.
இது என்ன என்று கேட்பவர்களுக்கு சின்ன விளக்கம் - உங்களிடம் இருக்கும் செல்போன் எண் உங்களுக்கே. நீங்கள் எந்த செல்போன் நிறுவத்துக்கு மாறினாலும் செல்போன் எண் மாறாது. இது பல நாடுகளில் இருந்தாலும் நம் நாட்டுக்கு இன்று தான் வருகிறது.
இந்த புதிய மாற்றம் காரணமாக, செல்போன் நிறுவனங்களுக்குள் தரமான சேவையை அளிப்பது குறித்த போட்டியும் மேம்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய முறையை தொடர்ந்து பிரிபெய்டு வாடிக்கையாளர்களில் 17 சதவீதம் பேரும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களில் 19 சதவீதம் பேரும் தங்களுடைய செல்போன் சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்வார்கள் என தொலைத்தொடர்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே ஐடியா, ஹட்ச் போன்ற நிறுவனங்கள் இதை பெரிதாக விளம்பரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்று போக போக தெரியும்.
இந்த சேவையினால் யாருக்கு அதிக நஷ்டம் இருக்கும் ? ஓட்டு பெட்டி தயாராக இருக்கிறது
தன் எம்.எல்.ஏ பதவியை இழக்காமல் அதிமுக கட்சியிலிருந்து திமுகவிற்கு சென்றார். அது MLA portability. கிட்டதட்ட அது போல தான் இதுவும். இக்கரைக்கு அக்கரைப் மஞ்சள் :-)
Posted by IdlyVadai at 1/20/2011 12:39:00 PM 14 comments
Labels: அறிவியல், செய்திவிமர்சனம்
Tuesday, January 18, 2011
துக்ளக் 41 ஆண்டுவிழா - வீடியோ
Posted by IdlyVadai at 1/18/2011 06:08:00 AM 14 comments
Labels: துக்ளக்-41, வீடியோ
Monday, January 17, 2011
இன்று காணும் பொங்கல்
Posted by IdlyVadai at 1/17/2011 12:48:00 PM 5 comments
13-ம் நம்பர் வீடு
இன்று நல்ல கூட்டம். ஆனாலும் விற்பனை குறைவுதான்.
இப்படி நான் சொன்னவுடன், ‘நான் வந்து பார்த்தபோது கூட்டம் கடுமையாக இருந்தது, கிழக்கு அரங்கில் கூட்டம் வழிந்தது’ என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள். இல்லையென்றால், ‘கூட்டம் நன்றாகத்தான் இருந்தது, கிழக்கு புத்தகங்கள் விற்கவில்லை’ என்கிறார்கள். எது உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறதோ அதைச் சொல்லிக்கொள்ளுங்கள். நான் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லுகிறேன்.
ஒரு வாசகர் ஒரு நேரத்தில் வரும்போது இருக்கும் கூட்டத்தைப் பார்த்துக் கூட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கும், ஒரு பதிப்பாளர் (அல்லது விற்பனையாளர்) கூட்டம் இருக்கிறதா இல்லையா என்பதற்கும் வித்தியாசம் உண்டு. இது முதல் விஷயம். இரண்டாவது விஷயம் மொத்த விற்பனை சார்ந்தது. இதுவும் பதிப்பாளர்தான் சொல்லமுடியுமே ஒழிய, ஒருநாள் அல்லது சில நாள்களில் சில மணி நேரங்கள் வந்து ஒவ்வொரு அரங்கையும் சில மணித்துளிகள் பார்த்துவிட்டுச் செல்லும் வாசகர்களால் முடியாது. நான் சொல்வதும் கூட இறுதி அறிக்கை அல்ல, ஒரு பார்வை மட்டுமே. நான் சொல்வதிலும் தவறு இருக்கலாம். ஆனால் வாசகர்கள் புத்தகக் கண்காட்சியை வந்து பார்த்துவிட்டுச் சொல்லும் அறிக்கையைவிட, நான் சொல்வது நம்பகத்தன்மை அதிகம் உள்ளதாகவே இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். மூன்றாவது விஷயம், கடந்த வருடங்களில் நடந்த விற்பனை, வந்த கூட்டம், விழுந்த பில்களின் எண்ணிக்கையிலான ஒப்பீடு. இதை வாசகர்களால் செய்யவே முடியாது. நான்காவது விஷயம், வாசகர்களின் மனநிலை சார்ந்தது. பொதுவாக ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு பில் கவுண்ட்டர் திறந்துவிடப்பட்டு, அங்கே டிக்கட் கொடுக்கப்பட்டாலும், மக்கள் சரியாக இடது கைப்பக்கம் உள்ள இடதுகோடி அரங்கில் இருந்துதான் தொடங்குகிறார்கள். இதனால் அந்த வரிசையில் கூட்டம் கடுமையாக இருக்கும். அடுத்த வரியில் மெல்ல குறையும். அடுத்தடுத்த வரிகளில் கூட்டம் மிகமிகக் குறைந்துவிடும். இரண்டு அல்லது மூன்று வரிசைகள் சுற்றியதுமே மக்கள் சோர்வடைந்துவிடுகிறார்கள். இதனால் அவர்கள், ஒன்று உணவகத்தின் பக்கம் போய்விடுகிறார்கள், அல்லது வேகமாக நடந்து சென்று நான்கைந்து வரிசைகளைப் பார்த்துவிட்டு, வெளியேறிவிடுகிறார்கள். ‘நான் வந்தபோது கூட்டம் இருந்ததே’ என்பது, நான் இப்போது சொன்னவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும், ஓர் அகவயமான ஒப்பீடு மட்டுமே. அல்லது அதனையும் தாண்டிய அரசியல் சார்ந்தது. நான் எழுதுவதில் எவ்வித அரசியலும் இல்லை. நான் எழுதாத சில விஷயங்களில் வேண்டுமானால் சில அரசியல் இருந்திருக்கலாம். :-)
இன்று சாரை சாரையாக வந்த மக்கள் கூட்டம், புத்தகக் கண்காட்சியைப் பார்ப்பதற்கென்று வந்த கூட்டமே என்ற எண்ணம் எனக்கு மேலோங்கிவிட்டது. மதியம் வெளி அரங்கில் நடந்த, மணிமேகலை பிரசுரத்தின் 34 புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் சோ, எஸ்வி சேகர், பாண்டியராஜன், சொர்ணமால்யா கலந்துகொண்டார்கள். இதனால் பெரும்பாலானவர்கள் அங்கேயே அமர்ந்துவிட்டார்கள். இதைக் கவனத்தில் கொள்ளாமல் பார்த்தாலும், கடந்த சனி மற்றும் ஞாயிறுகளில் வந்த கூட்டத்தை ஒப்பிட்டால், இன்று வந்த கூட்டம் குறைவே. ஆனால் சென்ற சனி, ஞாயிறுகளில் நல்ல காலநிலை நிலவியது. உள்ளரங்குகளில் குளுமை இல்லாவிட்டாலும், வியர்வையும் வெக்கையும் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அரங்குகளுக்குள்ளே வியர்வை, வெக்கை, தூசியால் வரும் அலர்ஜி. வெயில் காரணமாக இருக்கலாம். இரவில் புத்தகக் கண்காட்சி முடிந்து வெளியே வரும்போது, வெளியே குளிரிக்கொண்டிருந்தது.
நாளை ஒருநாள் புத்தகக் கண்காட்சி உள்ள நிலையில் இந்தத் தொடர் பதிவுகளை இன்றோடு முடித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பொதுவாக புத்தகக் கண்காட்சி முடிந்த மறுநாள்தான் பேக்கிங் செய்வார்கள். ஆனால் இந்தமுறை நாளை இரவே பேக்கிங் செய்யச் சொல்லிவிட்டார்கள். எனவே இரவு அங்கே தங்கப் போகிறேன். இதனால் நாளை புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவு வராது. எனவே இன்றே மங்களம் பாடிவிடுகிறேன்.
* இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு புத்தகக் கண்காட்சியைக் காட்டிலும், தமிழ்நாட்டுப் புத்தகக் கண்காட்சிதான் மக்கள் கூட்டம் அதிகம் வருவது என்று நினைக்கிறேன்.
* புத்தகக் கண்காட்சியின் உள்ளரங்கக் கட்டுமானத்தைப் பொருத்தவரையில் பபாஸியின் செயல்பாடு மிகவும் பாராட்டுதலுக்குரியது.
* வழக்கம்போல கழிப்பறைகளின் நிலைமை மிகவும் மோசம்.
* குடிநீர், விடுமுறை நாள்களில் உணவு வழங்குதல் என எல்லாவற்றிலும், கடந்த வருடங்களைப் போல் அல்லாமல், சிறப்பாகச் செயல்பட்ட பபாஸிக்குப் பாராட்டுகள்.
* இதுவரை இருந்த கேண்டீன்களிலேயே சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட கேண்டீன் செட்டிநாடு கேண்டீந்தான். அவர்களுக்கும் பாராட்டுகள்.
* விளம்பரங்கள் மிகவும் மோசம். என்னவோ புத்தகக் கண்காட்சியை பயந்து பயந்து நடத்துகிற மாதிரி நடத்துகிறார்கள். பலருக்கு, இன்றும் நாளையும் புத்தகக் கண்காட்சி நடப்பதே தெரியவில்லை.
* பொங்கல் முடிந்தபின்பு வரும் சனி ஞாயிறு வரை புத்தகக் கண்காட்சி நடத்துமாறு புத்தகக் கண்காட்சியைத் தொடங்கவேண்டும் என்று பலர் சொன்னார்கள். (எனது 12ம் நாளுக்கான பதிவின் பின்னூடத்தில் ஒரு நண்பர் இதனைச் சொல்லியிருக்கிறார்.) இது சரியான கணிப்பு என்றுதான் நானும் நினைக்கிறேன். பொங்கல் தினத்தன்று, சென்னையில் தங்கியிருக்கும் பலர் தங்கள் சொந்த ஊருக்குப் போய்விடுகிறார்கள். இதனால் கூட்டம் வெகுவாகக் குறைய வாய்ப்பிருக்கிறது என்பது உண்மைதான். இதனையும் பபாஸி கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
* கிழக்கு அரங்கைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு விற்பனையைக் கடந்துவிட்டோம் என்பதில் மகிழ்ச்சி. ஆனால், நான் எதிர்பார்த்த விற்பனை இலக்கை எட்டமுடியவில்லை என்பதில் வருத்தம்தான். அடுத்த ஆண்டு அதனைச் செய்வோம். :-)
* ஒட்டுமொத்த புத்தக விற்பனையில் ‘சூடிய பூ சூடற்க’ புத்தகம்தான் முதலிடம் பிடிக்கும் என நினைக்கிறேன். சரியான தரவுகள் இல்லாத நிலையில், புத்தகக் கண்காட்சியில் நிலவும் பேச்சை வைத்துத்தான் இதனைச் சொல்லவேண்டியிருக்கிறது. கிழக்கு அரங்கைப் பொருத்தவரையில் ராஜ ராஜ சோழன் முதலிடத்தைப் பிடிக்கும் என நினைக்கிறேன். நாளை சரியான நிலவரம் தெரிந்துவிடும்.
* கிழக்கைப் பொருத்தவரை, சென்ற ஆண்டைப் போல் இல்லாமல், இந்த ஆண்டில் பல புத்தகங்கள் ஏறக்குறைய ஒரே அளவில் விற்றன. அவை: ராஜ ராஜ சோழன், ஆர் எஸ் எஸ், காஷ்மிர், உலோகம், முதல் உலகப்போர், கிமுகிபி, இரண்டாம் உலகப்போர் போன்றவை.
தினமும் பதிவு எழுதவேண்டும் என்று இட்லிவடை சாட்டிங்கில் கேட்டபோது, இது தேவையற்ற வேலை என்றுதான் நினைத்தேன். அவ்வளவு நேரம் புத்தகக் கண்காட்சியில் இருந்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் இதனைச் செய்வது பெரிய அறுவை என்றுதான் தோன்றியது. முடிந்தால் எழுதுவோம், இல்லையென்றால் விட்டுவிடுவோம் என்று நினைத்துத்தான் எழுதத் தொடங்கினேன். பத்ரியும் பாராவும் மருதனும் எழுதவும், நானும் எழுதவேண்டும் என்று முடிவெடுத்து, ஒரு வீம்புக்காகத்தான் எழுதினேன். இதனால் சில பதிவுகள் (அல்லது எல்லாமே) பெரும் மொக்கையாக இருந்திருக்கலாம். அதிலும் முதல் நான்கு நாள்கள், அதிகம் அலையாமல் இருக்கும் இடத்தில் இருந்து விவரங்கள் சேகரித்து எழுதியவை. ஒரு கண்காட்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்னும் அளவுக்கு மேல், நான் எழுதிய பதிவுகளில், விவரங்களோ, ஆழமோ இல்லை என்பது எனக்கே நிச்சயமாகத் தெரியும். மேலும், பல வரிகள் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை மனத்தில் நிறுத்தி எழுதப்பட்டவை. அதனையும் வெளிப்படையாகவே எழுதினேன். இதற்கு இடம் அளித்து தினமும் பதிவேற்றிய இட்லிவடைக்கு நன்றி.
எரிச்சலை மீறித் தொடர்ந்து படித்த அனைத்து நண்பர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் நன்றி.
சரி, பதிமூன்றாம் வீடு? கிழக்கின் ஸ்டால் எண் 13.
நன்றி :-)
Posted by IdlyVadai at 1/17/2011 07:04:00 AM 10 comments
Labels: கட்டுரை, புத்தககண்காட்சி-2011, ஹரன்பிரசன்னா
Sunday, January 16, 2011
சென்னை புத்தகக் கண்காட்சி - பன்னிரண்டாம் படி சரணம் பொன்னையப்பா
இன்றாவது கூட்டம் வரும் என்று ஏமாந்ததுதான் மிச்சம். வீட்டில் பொங்கல் வைத்த வாசகர்கள், எங்கள் விற்பனையிலும் பொங்கல் வைத்துவிட்டார்கள். பொங்கலோ பொங்கல். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நாளை ஒருநாளாவது கூட்டம் வரவேண்டும். இப்படி எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து காலங்கள் போய்விட்டது.
காலையில் வெறிச்சென்று இருந்தாலும், மதியம் வாக்கில் கொஞ்சம் சூடு பிடித்தது விற்பனை. இன்னும் சூடு பிடிக்கும் என நினைத்த நேரத்தில் அடி பிடித்துவிட்டது. ஏற்கெனவே மக்கள் வராத நேரத்தில், வெளியில் இசைமன்றம் வேறு. அங்கே ஓர் ஆயிரம் பேர் ஒட்டிக்கொண்டுவிட்டார்கள். விற்பனையில் இசை விழுந்தது.
புத்தகக் கண்காட்சி முடிந்து வெளியே வரும் வரையில் இசைமன்ற - பெரும்பட்டம் பெற்ற அவர் பெயர் மறந்துவிட்டது - நடுவர், பட்டுக்கோட்டையா கண்ணதாசனா என்று பெரிய போரே நடந்துகொண்டிருந்தார். என்னவோ முடிவும் சொன்னார். அவர் முடிவு சொன்னதும் அனைத்து மக்களும் கலைந்து வீட்டுக்குப் போய்விட்டார்கள். இதனாலெல்லாம் விற்பனை குறையாது என்று சிலர் சொல்கிறார்கள். நான் இதை ஒப்புக்கொள்ளவே மாட்டேன். இந்த ஆயிரம் வாசகர்களில் 500 பேர் புத்தகக் கண்காட்சிக்குள் இருந்தால், கண்ணில் பட்ட புத்தகங்களில் சுவாரஸ்யமானவற்றை வாங்கினாலும் வாங்கியிருப்பார்கள். புத்தகம் கண்ணில் பட்டால்தான் வாங்குவார்கள் என்பதுதான் எங்களது அனுபவமும் கூட. இதனைக் கருத்தில் கொண்டு பபாஸி செயல்படவேண்டும். இனிமேல் 5 மணிக்கெல்லாம் விழாவைத் தொடங்கி 7 மணிக்கு முடித்துவிடவேண்டும். விழாவை மட்டும் பார்க்க வருபவர்கள் சீக்கிரமே பாதுகாப்பாக வீடு போய்ச் சேரட்டும். மீதியுள்ள புத்தக ஆர்வலர்கள் ஒரு மணி நேரமாவது அரங்கைச் சுற்றட்டும்.
இன்று மனிதர்களுக்குப் பொங்கல் என்பதால் வீடு தங்கிக் கொண்டாடிய பெருமக்கள், நாளை மாட்டுக்குத்தான் பொங்கல் என்பதால் புத்தகக் கண்காட்சியைத் தேடி வருவார்கள் என நம்புவோம். [இல்லை என்றால், நாளை நானும் சாரு எஃபெக்டில் ‘புத்தகம் வாங்காத இந்த நாடு உருப்படுமா’ என்றுதான் எழுதவேண்டியிருக்கும். :-)]
சபரிமலையில் ஒவ்வொரு படி ஏறும்போதும் ஐயப்பா என்று சொன்னால் மனதில் தைரியமும் நம்பிக்கையும் பிறக்கும் என்பார் என் தாத்தா. 16 முறை சபரிமலை சென்றவர். நானும் சொல்கிறேன். பன்னிரண்டாம்படி சரணம் பொன்னையப்பா.
கிழக்கு கார்னர்:
இன்றைய டாப் 3: ஸ்பெக்ட்ரம் சர்ச்சை, ராஜ ராஜ சோழன், உலோகம்.
- ஹரன்பிர்சன்னா
பேசாம எந்திரன் உருவான கதை என்று புத்தகம் போட்டு, சன் டிவியில் விளம்பரம் கொடுங்க அப்ப தான் கூட்டம் வரும்
Posted by IdlyVadai at 1/16/2011 08:28:00 AM 9 comments
Labels: கட்டுரை, புத்தககண்காட்சி-2011, ஹரன்பிரசன்னா
சன்டேனா இரண்டு (16-01-11) செய்திவிமர்சனம்
இந்த வார செய்திகள்...."தேடல்கள்".
செய்தி # 1
அன்பே வா - எம்.ஜி.ஆர். , சரோஜாதேவி நடித்த இந்த படத்தை நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஒரு தொலைக்காட்சியில் சமிபத்தில் மீண்டும் பார்த்தேன். படத்தில், பங்களாவின் உரிமையாளரே எம்.ஜி.ஆர்தான் என்று அங்கு வேலை செய்யும் மனோரமாவிற்கு தெரியும். ஆனால், இந்த உண்மை தெரியாமல் அவரிடமே வாடகை வசூலிப்பார் நாகேஷ். நாகேஷிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மனோரமா படும் அவஸ்தைகள் படத்தின் ஹைலைட்.
அன்பே வா - மனோரமா அவர்களை பற்றிய பல நினைவுகளை எனக்கு கிளறிவிட்டது.
நடிகர் திலகம் சிவாஜியுடன் மனோரமா என்று பார்த்தால், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் "ஜில் ஜில் ரமாமணி" என்ற நாடகநடிகையாக வந்து குரலில் காட்டும் குழைவும், நடிப்பில் அவர் காட்டும் நளினமும் மறக்கமுடியுமா?
ரஜினி அவர்களுடன் "மன்னன்" மற்றும் "எஜமான்" உட்பட பல படங்களில் மனோரமாவின் பங்களிப்பை பற்றி குறிப்பிட்டு சொல்லமுடியும்.
கொஞ்ச காலம் முன்புவரை மனோரமா அவர்கள் இல்லாத கமல்ஹாசன் படங்களே இல்லை என்று கூறலாம். "ஐயோ அய்யய்யோ" என்று 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஜனகராஜ் கோஷ்டியை அதகளம் பண்ணும் காட்சி ஒன்றே போதும். மனோரமா அவர்களின் நடிப்பு திறமைக்கு.
அவர் செய்த வேடங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது....வயதான பாட்டுவாத்தியார் கெட் அப்பில் வரும் சத்யராஜை ஜொள்ளுவிடும் 'முதிர்கன்னியாக' அவர் அசத்தி இருந்த "நடிகன்" தான்.
பாசமிக்க பணக்கார பாட்டியாக 'பாட்டி சொல்லை தட்டாதே, தெற்றுபல் கிழவியாக ''சின்ன கவுண்டர்' இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்தானே.
உலக சினிமாவில் சுமார் 1000 படங்களுக்கும்மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்த மனோரமா அவர்கள் இப்போது என்ன செய்கிறார்?
சில மாதங்களுக்கு முன்னால் 'குமுதம்' பத்திரிக்கையில் அவரை பற்றிய ஒரு வேதனையான செய்தியை பார்த்தேன்.
அதில், மனோரமா அவர்கள் இரண்டு கால்களும் முடங்கி, ஆறு மாதத்திற்கும் மேலாக படுத்தபடுக்கையாய் இருப்பதாக தெரிந்தது.
மருத்துவமனையில் தான் சேர்ந்தபோது கமல் போன்ற ஒரு சிலரே வந்து பார்த்ததாகவும், பின்னர் யாரும்வந்து நலம்கூட விசாரிக்கவில்லை என்றும் கண்ணிருடன் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார் மனோரமா.
உள்ளதை சொல்கிறேன். இவரை போன்ற ஒரு நடிகை கேரளாவில் இருந்து இருந்தால், கலைபொக்கிஷமாக மதித்து கொண்டாடிஇருப்பார்கள்.
தமிழ் திரையுலகின் நன்றிகெட்டத்தனங்களுக்கு கணக்கில் அடங்கா உதாரணங்கள் இருக்கின்றன. " அடிப்படையான நாகரிக இயல்புகள் கூட திரையுலகில் இருப்பதாக தெரியவில்லை" என்று 'ஒ' பக்கங்களில் திரு.ஞானி அவர்கள் ஒரு முறை எழுதியது என் நினைவுக்கு வந்தது.
மனோரமா இப்போது பூரணநலம் அடைந்துவிட்டாரா என்று தெரியவில்லை.
ஆனால், இனி வரும் திரைப்படங்களில், அவரது கனிவான குரலை கேட்கவே முடியாதா? பண்பட்ட அவரது நடிப்பை இனி நம்மால் காணவே முடியாதா? போன்ற கேள்விகள் என் மனதை கனக்க செய்தன.
தான் பங்கேற்ற கதாபாத்திரங்கள் மூலம், நம் தமிழ் குடும்பங்களில் ஒரு உறவாகவே ஆனவர் நடிகை மனோரமா அவர்கள்.
ஆச்சி மனோரமா, எங்கு இருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்?செய்தி # 2
முதல் செய்தியில் ஆச்சியை சீரியசாக தேடிவிட்டதால், இந்த செய்தியில் ஜாலியாக ஒருவரை தேடுவோம் என்று நினைத்ததில், ஆட்சியை யார்பிடிக்க போகிறார்கள்? அவர்களுடன் எப்படி கூட்டணி போடலாம் என்று மண்டை காய்ந்து கொண்டு இருக்கும் "அவர்" நினைவு வந்தது.
அவர்தான்...ஒரு கருத்து கணிப்பையே நடத்திவிட்டு பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யும் "மாற்று அரசியல்" மற்றும் அன்புமணி அவர்களின் தந்தை..மருத்துவர் அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
"அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது" என்று திரு.தா. பாண்டியன் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். மேலும், பிரேமலதா விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் சென்று ஜெயா அவர்களை சந்தித்து இருப்பதாகவும், 41 இடங்கள் என்று முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து இருக்கின்றன.
அதிமுக - தேமுதிக - கம்யுனிஸ்ட் கட்சிகள் - மதிமுக(தேறுமா?) என்று இந்த அணி கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த சூழலில், வரும் சட்டமன்ற தேர்தலில் அடுத்ததாக உள்ள, திமுக - காங்கிரஸ் - விடுதலை சிறுத்தைகள் அணியில்தான் சேர்ந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
ராமதாசும் சரி. திருமாவளவனும் சரி. தாங்கள் தனிப்பட்ட முறையில் அரசியலில் வளர்வதற்காக, தங்கள் 'இன' இளைஞ்சர்களை தூண்டிவிட்டதில், அங்க'ஹீனமாக' சுற்றிவருபவர்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருக்கிறார்கள். ஆனால், இந்த இரு 'தலைவர்களும்' ஒரே அணியில் நின்றுகொண்டு, கைகோர்த்துக்கொண்டு ஒட்டுகேட்க வரும் காலம் வரபோகிறது. அதுதாங்க...அரசியல்.
"கூட்டணியில் சேர பாமக சார்பில் தூது அனுப்பி இருகிறார்கள். விரைவில் கூட்டணி குறித்து பேசுவோம். ஆனால், எப்போது பேசுவோம் என்று தெரியவில்லை" என்று 'தெளிவாக' பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் முதல்வர் கருணாநிதி.
"இது அவர் நிருபர்களிடம் தெரிவித்த கருத்து" என்று சொல்லி இருக்கிறார் ராமதாஸ்.
"தமிழகத்தில் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது" என்று அவர் உறுதியாக சொன்னபோது, அவர் கால்கள் லேசாக ஆடுவதை டிவியில் பார்த்தேன். "பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மண்டு வீக்கு".
அந்த சமயத்தில் அவர் முகத்தில் தெரிந்த 'நம்மை யாருமே சேர்ந்துகொள்ள மாட்டாங்களோ' என்ற அவரது பயமே அவரை நான் தேட காரணம்.
பொங்கலுக்கு பின்னர் கூட்டணி குறித்து அறிவிப்பதாகவும், ஆனால், "யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், 50 இடங்கள் கேட்போம்" என்று அறிவித்து இருக்கிறார் ஐயோ பாவம் மருத்துவர் அய்யா.
அவர் எந்த அணியில் இருக்கபோகிறார். அவர் கேட்க்கும் 50 இடங்களை யார் தரபோகிறார்கள் போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய, நான் மட்டுமல்ல, நமது "மீடியா"வும் தேடிக்கொண்டு இருக்கிறது....டாக்டர் ராமதாசை.
(நன்றி...இனி, அடுத்த வாரம்)
-அன்புடன், இன்பா
Posted by IdlyVadai at 1/16/2011 07:00:00 AM 13 comments
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
Saturday, January 15, 2011
சென்னை புத்தகக் கண்காட்சி - குறிப்புகள் பதினொன்று
* இன்று விடுமுறை நாள் இல்லையாம். ஆனால் காலையிலேயே புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது. கூட்டம் சுத்தமாக இல்லை. அதுவும் மாலை 4 மணி வரை எல்லா பதிப்பாளர்களும் ஸ்டாலை விட்டு கேண்டீனுக்குப் படையெடுத்த்தவண்ணம் இருந்தார்கள்.
* மாலை 4 மணிக்குப் பிறகு ஓரளவுக்குக் கூட்டம் வந்தது. அதுவும் இல்லை என்றால், இன்றும் வேலை நாள் போல, விற்பனை படு மந்தமாக இருந்திருக்கும்.
* இன்று நான் பார்த்தவர்கள் - ஞாநி, ரோசா வசந்த், விமலாதித்த மாமல்லன், ஜ்யோவ்ராம், சுரேஷ்கண்ணன், பைத்தியக்காரன் @ சிவராமன், எழுத்தாளர் ராமதுரை, விருபா. அனைவரிடமும் சில நிமிடங்கள் பேசினேன். (யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்.)
* நான் நேற்றும் இன்றும் வாங்கிய புத்தகங்கள்: யுவான் சுவாங் 1, 2; தினத்தந்தி காலச்சுவடுகள், பாகிஸ்தான் சிறுகதைகள், நல்ல தமிழில் எழுதவேண்டுமா, மீன்குகை வாசிகள், கன்சாகிப். வாங்கவேண்டியவை: விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள், மனங்கொத்திப் பறவை, ஒரு சூத்திரனின் கதை, பர்ஸா, ஓ பக்கங்கள் 2009-10.
* சோம வள்ளியப்பனின் நாவல் ஒன்றை நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நாவலின் பெயர் வண்ணத்துப் பூச்சிகளின் கனாக்காலம் என நினைக்கிறேன்.
* எழுத்தாளர் பாலகுமாரன் வந்திருந்தார். பா.ராகவனின் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினார். ராகவனை வெகுவாகப் பாராட்டிப் பேசியதாக அங்கிருந்த நண்பர்கள் சொன்னார்கள். அவரது ‘இரும்பு குதிரைகள்’ ஆங்கில மொழிபெயர்ப்பை இண்டியன் ரைட்டிங் வெளியிடவிருக்கிறது. எங்கள் கடையிலிருந்த பையன் அவரிடம் ஏதோ கேட்க, அவர் வெகு சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பாலகுமாரன் பதினைந்து ஆண்டுகளாக மாறவே இல்லை.
* சுகி சிவம் நடுவராகப் பங்கு வகிக்க, ஜவஹர் பழனியப்பன் தலைமையில் இன்று பட்டிமன்றம். 8 மணிக்குப் பட்டிமன்றத்தை முடித்து, கூட்டத்தைக் கடைக்குள் அனுப்புவார் என்று பார்த்தால், புத்தகக் கண்காட்சி முடிந்து, மக்கள் எல்லாம் வெளியில் வந்து வீட்டுக்குப் போனதற்குப் பின்பும், 9.30 வரை பேசிக்கொண்டிருந்தார். புத்தகக் கண்காட்சி வெளங்கினா மாதிரிதான் என நினைத்துக்கொண்டேன்.
* உடுமலை ஸ்டாலில் தாயார் சன்னதி புத்தகம் விற்றுத் தீர்ந்துவிட்டது. நாளை வந்தால்தான் உண்டு. உடுமலை கலக்குகிறது.
* தமிழினி அரங்கில் விருபாவைப் பார்த்தேன். எவ்வித ஒளிவுமறைவுமின்றி, ‘சம்ஸ் நல்லா எழுதுறாருல்ல’ என்று கேட்டார் அவர். சபை நாகரிகம் தெரிந்தவர் என்பதால் நண்பர்கள் முன்னிலையில் கேட்டார் என நினைக்கிறேன். நான் ‘பேசுவோம்’ என்றேன். ’இன்னும் என் கமெண்ட் அப்ரூவ் பண்ணலையே’ என்றார். எனக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. பின்புதான் தெரிந்தது அவர் இட்லிவடையில் கமெண்ட் போட்டுவிட்டுக் காத்திருக்கிறார் என. நான்தான் இட்லிவடை என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்தே இல்லை என்பது அவரது முகபாவத்தில் தெரிந்தது. இப்போது அப்ரூவ் செய்துவிட்டேன் என நினைக்கிறேன். நடக்கப்போவதை நினைத்துவிடுவோம் என்பதுதான் எடுபடும் போல.
* நாளை நிஜமாகவே விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன், பார்க்கலாம்.
* யாரையும் கார்னர் செய்யாமல் குறிப்புகள் பதினொன்று நிறைவுபெறுகிறது.
கூட்டம் கம்மியாக இருக்கும் போது கமெண்ட் அப்ரூவ் செய்யலாம் இல்லையா ? அதை முதல்ல செய்யுங்க !
Posted by IdlyVadai at 1/15/2011 08:55:00 AM 4 comments
Labels: கட்டுரை, புத்தககண்காட்சி-2011, ஹரன்பிரசன்னா
Friday, January 14, 2011
துக்ளக் 41 ஆம் ஆண்டு விழா - ஸ்பெஷல் கவரேஜ்
[1]வழக்கம் போல இந்த வருடம் காமராஜர் அரங்கம் சோவிற்கு கிடைக்கவில்லை. "எலக்ஷன் வருது, இவர் 2G, சோனியா பற்றி பேசுவார் அப்பறம் எப்படி சார் தருவாங்க ?" என்று பேசிக்கொண்டார்கள்.
சரியாக 1 மணிக்கு சென்னை மியூசிக் அகடமிக்கு சென்ற போது இரண்டு மெயின் கேட்டிலும் 50 + 50 பேர் நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்த போது "சார் நாங்க 11 மணிக்கே வந்துட்டோம்" என்று மீதம் உள்ள சாம்பார் சாதத்தை சாப்பிட்டு முடித்தார். விட்டு போன முருங்கைக் காயை கடித்து துப்பிவிட்டு. பையிலிருந்து தினத் தந்தி வரலாற்று சுவடுகள் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார். இந்த புத்தகத்தை படித்து முடித்த பின் தான் கதவை திறப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
மணி 1:30 இன்னும் 5 மணி நேரம் என்ன செய்வது என்று யோசிக்கும் போது பக்கத்து க்யூ காரர் தின மலர் பேப்பர் தந்தார். அதை படித்துக்கொண்டு இருந்தேன். கூட்டம் 200 ஆகியது. பிறகு மூன்று மணிக்கு கூட்டம் நிறைய அதை ஜெயா டிவி காரர் படம் பிடித்துக்கொண்டு இருந்தார்.
சுமார் 3:30 மணிக்கு கதவை திறக்கும் போது ஒரு குண்டு ஐயர் மாமா க்யூவை மீற கூட்டம் அடிதடி ஆகியது. கோபாலபுரம் பக்கம் கூட்டம் நடப்பதால் இருக்குமோ என்று நினைத்துக்கொண்டேன்.
இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். முதலில் வந்த அந்த 200 பேரில் கிட்டத்தட்ட 100 பேர் 70 வயதை தாண்டி இருப்பார்கள். ஒருவர் போலியோவால் பாதிக்கபட்டவர் அவரை ஒருவர் சின்ன குழந்தை மாதிரி தூக்கிக்கொண்டு வந்தார். சிலர் வாக்கிங் ஸ்டிக், நிச்சயம் 33% மேல் பெண்கள் வந்திருந்தார்கள். அதில் 12 வயது பெண் குழந்தையும் அடக்கம். இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
[2] 3:30 மணிக்கு மேல் எல்லோரும் கையில் துக்ளக் வைத்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் தினமணி, தினமலர். நான் மட்டும் குமுதத்தில் நித்தியாவுடன் இருந்த நடிகை பேட்டியை படித்துக்கொண்டு இருந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். மூடி வைத்துவிட்டேன்.தலைக்கு மேலே போஸ் ஸ்பீக்கர்ஸ் இருந்தது. அட நல்ல ஆடியோ வரும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் பக்கத்தில் இருந்தவர் நான் மேலே பார்ப்பத்தை பார்த்து சார் வெளியாட்களுக்கு இந்த ஸ்பீக்கர் கிடையாது ஒன்லி ஃபார் கச்சேரி என்றார்.சின்னதாக ஒரு தூக்கம் போட்டு எழுந்த பின் மணி 4:45. அரங்கில் லேசாக
கைத்தட்டல்(3/10) ( அடைப்பு குறியில் இருப்பது கைத்தட்டல் அளவு ) கே.பாலச்சந்தர் வந்தார். பிறகு டிவி வரதராஜன்(0/10) இல.கணேசன் ( 5/10), குருமூர்த்தி ( 8/10) சரியாக 6மணிக்கு 10/10 வந்தார் ( சோ ). பிறகு பத்து நிமிஷம் கழித்து எஸ்.வி.சேகர் வந்தார் ( 2/10). பின் பக்கத்திலிரிந்து "யோவ் போய்யா !, இவர் எதற்கு வந்தார் போன்ற கமெண்ட் வந்துக்கொண்டே இருந்தது. பிறகு சினிமா நடிகர் சிவகுமார்(6/10). ஹி.முன்னனி ராமகோபாலன்(8/10).
சரியாக 6:30 மணிக்கு சோ மேடைக்கு வந்தார். பொங்கல் வாழ்த்துகள். மக்கள் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூச்சல் போட. உடனே மூன்று மாதத்துக்கு முன்பாகவே தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்று அதிரடியை தொடங்கினார்.
[ 3 ] ஆடியோ முதல் பகுதி
பகுதி - 2
பகுதி-3
பகுதி - 4
பகுதி - 5
படங்கள் சில
எல்லோருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் !
Posted by IdlyVadai at 1/14/2011 10:33:00 PM 29 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், துக்ளக்-41