பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 27, 2010

7 !


யார் கண்பட்டதோ தெரியவில்லை, கடந்த சில வாரங்களாக அலுவலகத்தில் அதிக வேலை. கடையை சரியாக கவனிக்க முடியவில்லை. இன்னும் சில வாரங்களில் திரும்பவும் வரலாம் என்று இருக்கேன். இந்த பதிவை பார்க்கும் என் மேனேஜர் எனக்கு அதிக வேலை கொடுக்காமல் இருக்க வேண்டும்.
அதுவரை ஓசி பதிவர்களுக்கு நன்றி.


இட்லி வடைக்கு ஏழாவது ஆண்டு. அதற்கு எனது வாழ்த்துகள். இத்தனை
வருடங்கள் ஆகியும் ஊசிப் போகாமல் சுவையாக இருப்பது அதன் சிறப்பு. சில சமயம், அதுவே ‘ஊசி’யாகப் போய் பலரைக் குத்திச் சட்னியாக ஆக்கியுள்ளது. அதுவும் அதன் சிறப்பு.

பாராட்டுவதுடன் இட்லி வடைக்கு என் நன்றியையும் தெரிவிக்க வேண்டும். கடுகு தாளிப்பின் CEO- வான நான் இட்லி வடைக்கு கடமைப்பட்டுள்ளேன். என் வலைப்பூவைப் பற்றி இட்லி வடையில் போட்டதும் திடிரென்று ஹிட்ஸ் ஏறியது, தொடர்ந்து இட்லி வடையில் எனக்கு ஒரு இடம் தந்து வருவது எனக்குப் பெருமை அளிப்பதாகவும் உள்ளது.

இட்லி வடை ஒரு பொறுப்பான வலைப்பூ. ஆனால் பல சமயம் சில்லறை விஷய்ங்களுக்கும், பதிவர்கள் குழாயடி சண்டைக்கும் முக்கியத்துவம் கொடுத்து விலாவாரியாக எழுதுவது ஏற்புடையதாக எனக்குப் படவில்லை. இதெல்லாம் ஆரம்ப கால் கட்டத்தில் செய்தால் தப்பில்லை. இ.வ. இன்று முன்னணி வலைப்பூ. ஆகவே பொறுப்புள்ள தளமாகச் செயல்பட வேண்டும். மனிதனை மேம்படுத்தும் தக்வல்களையும் கட்டுரைகளையும் நிறையப் போடவேண்டும். இது என் ஆசை. என் அட்வைஸ்!

தகுதியே இல்லாவிட்டாலும் கூட, யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசனைக் கூறலாம் மற்றும் அட்வைஸ் கொடுக்கலாம் என்பதால் இ.வ.க்கு நான் அறிவுரைக் கூறத் துணிந்தேன்!

இட்லி வடைக்கு மீண்டும் என் வாழ்த்துகள்!

- கடுகு
http://kadugu-agasthian.blogspot.com/


ஒரே சந்தோஷம் - நேற்று அசினுக்கு பிறந்த நாள், இன்று எங்களுக்கு :-)

Read More...

Tuesday, October 26, 2010

மண்டேனா ஒன்று 26/10/2010

கடந்த சில நாட்களாக கொஞ்சம் பிஸி அதனால் கடைப் பக்கம் வர முடியவில்லை. அதே போல யதிராஜும் பிஸி போல அதனால் அவரும் வரவில்லை. நேற்றி அவர் அனுப்பிய மண்டேனா ஒன்று பதிவு. ..


தேர்தல் தீர்ப்பிற்கு பொதுக் கூட்டம் அளவுகோல் அல்ல! என்று முதல்வர் கருணாநிதி முத்துதிர்த்திருக்கிறார். இது யாருக்காக சொல்லியிருப்பார் என்று சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும். எல்லாம் அதிமுக வின் மதுரைப் பொதுக் கூட்டத்தின் ஆஃப்டர் ஷாக். பல்வேறு கொலை மிரட்டல்கள், இடையூறுகளையும் கடந்து கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றிருப்பது, அதுவும் மதுரையில் இவ்வளவு கூட்டம் கூடியது திமுகவின் கிலியை அதிகரித்துள்ளது. ஏற்கனவே சோனியாவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி பற்றி ஒன்றும் உறுதியான பேச்சு எழாததாலும், தவிர தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்தவே இக்கூட்டம் என சோனியா அடித்துப் பேசவும், அதன்பிறகு நடைபெற்ற மதுரைப் பொதுக் கூட்டம் இவ்வளவு கூட்டத்தை ஈர்த்ததால், திமுகவின் கிலி அதிகரித்துள்ளதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. இப்பொதுக் கூட்டத்திற்கு முந்தைய தினத்தில் வெளியிட்ட அறிக்கையில் எதிர்க்கட்சியினரின் பலத்தை கூட்டத்தைப் பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை; பிறகு எதற்கு அனாவசியமாக கூட்டத்தை கூட்டி சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும்? என்ற ரீதியில் கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு முன்னதாக இரண்டு காமெடிகள் நிகழ்ந்ததை நினைவு கூர்ந்தே ஆக வேண்டும். ஜெயலலிதாவிற்கு வந்தது போலவே தமிழக முதல்வருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தனவாம். ஒன்று மின்னஞ்சல் மூலமாகவும், மற்றொன்று குறுஞ்செய்தி மூலமாகவும் வந்ததாக செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் அவற்றை யார் அனுப்பினார்கள் என்ற தகவல் இல்லை. அதாவது கோபாலபுரத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தி கலைஞர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கப் போவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்லக்குடி போராட்டம், குடமுருட்டி குண்டு, ரயில் நிலையத்தில் ஸ்டாலின் கொலை முயற்சி போன்ற பல படு பயங்கரமான நிகழ்வுகளுடன் இந்த வான்வழித் தாக்குதல் நிகழ்வும் பிற்கால சந்ததி திமுகவினரால் நினைவு கூறப்படும் என்பது திண்ணம்.

இப்போது புதிதாக கலைஞருக்கு, பொதுக்கூட்டங்கள் தேர்தல் முடிவுகளின் அளவுகோல் அல்ல என்ற பகுத்தறிவு ஞானோதயம் பிறந்துள்ளது. முன்னதாக, திருச்சியில் நடைபெற்ற போட்டிப் பொதுக் கூட்டத்திற்கு ஆள் பிடிப்பதற்காக திருச்சியைச் சுற்றியுள்ள மனித வாடையற்ற குக்கிராமங்களுக்குக் கூட தமிழக அரசாங்கத்தின் சொகுசு பேருந்துகள் படையெடுத்தன. இப்போது அதிமுகவின் கூட்டத்தைப் பார்த்த பிறகு பிறந்த ஞானோதயம், சற்று முன்னதாகவே பிறந்திருந்தால் தமிழக மக்களின் வரிப்பணமாவது மிச்சமாகியிருக்கும். ஆளுங்கட்சித் தொலைக்காட்சியிலும் கழகத்தின் திருச்சி பொதுக்கூட்டத்தின் ஜனத்திரள் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டது ஏன் என்று புரியவில்லை.

முதலில் மத்திய அரசு உதவி பெறும் திட்டங்கள் மாநில அரசின் திட்டங்கள் போல தோற்றமேற்படுத்தப்பட்டது; பிறகு மத்திய அரசில் சிலர் விழித்துக் கொள்ளவும் மத்திய அரசின் பங்கு அரைமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது; இப்பொழுது சோனியா மத்திய அரசின் திட்டங்களைப் பட்டியலிட்ட பிறகு, திட்டங்களை ஏன் மாநில, மத்திய அரசினதாகப் பிரித்துப் பார்க்க வேண்டுமென முதல்வர் பகுத்தறிவு வியாக்யானம் பேசுகிறார். திருச்சி போட்டிக் கூட்டத்தில் ஆள் பிடிப்பதற்காக அரசாங்க இயந்திரமனைத்தையும் முடுக்கி விட்டபிறகு, இப்பொழுது மதுரை கூட்டத்தைப் பார்த்து கூட்டம் தேர்தல் முடிவின் அளவுகோல் அல்ல என்று திரும்பவும் ஒரு வியாக்யானம். இன்னும் தேர்தலுக்குள் என்னென்ன நடக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

கொசுறுச் செய்தி:

கடந்த புதன் கிழமையன்று தில்லி விமான் நிலையத்தில் மத்திய அமைச்சர் அழகிரி, ஸ்பெக்ட்ரம் ராசாவை சக்கையாக ஒரு பிடி பிடித்து விட்டாராம். ஜெயா செய்திகளிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியிலும் மட்டும் இப்பிரச்சனை குறித்த செய்தி வெளியாகியது. மற்ற பத்திரிக்கைகளும், ஊடகங்களும் கழகத்தின் கண்ணியத்தை காற்றில் விடவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கருத்து கூற விரும்பவில்லை என்ற ரீதியில் தெரிவித்தார். அழகிரியோ, ராசாவிடமே கேட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டார்.

- யதிராஜ்

நாளை :-)

Read More...

Monday, October 18, 2010

மதுரையில் ஜெ

லைவாக இங்கே பார்க்கலாம் http://www.jayanetwork.in/live_show.html

Read More...

Thursday, October 14, 2010

பரத்தை கூற்று புத்தக வெளியீட்டு நிகழ்வு



சி.சரவணகார்த்திகேயன்
www.writercsk.com

Read More...

Wednesday, October 13, 2010

கர்நாடக குழப்பம்

எடியூரப்பா பல யாகம், கோயில்களை என்று சுற்று வந்தாலும் அவரை சூழ்ந்துள்ள தோஷம் விட்டபாடு இல்லை. கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவில் நடக்கும் கூத்தை படிக்க ஜாலியாக இருக்கிறது. தமிழகத்தில் ஏன் இந்த மாதிரி இன்னும் நடக்கவில்லை என்று எல்லோரும் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இது தான் அரசியல். அரசியலில் நாற்காலி முக்கியம் என்பது எழுதப்படாத விதி. ஆட்சி அமைக்க சுயேட்சை எம்.எல்.ஏக்கு மந்திரி பதவி கொடுத்து தன் பக்கம் எழுத்ததிலிருந்து நேற்று கவர்னர் கோதாவில் இறங்கியவரை சுவாரஸியமாகவே இருக்கிறது.

இரண்டு நாளைக்கு முன்பு ஜனாதிபதி ஆட்சிக்கு சிபாரிசு செய்துவிட்டு, நேற்று திரும்பவும் மெஜாரிட்டியை நிரூபிக்க மீண்டும் என்று கூறியுள்ளார் கவர்னர் பரத்வாஜ். ஏதோ அவரால் முடிந்தது. கவர்னர் செய்தது பெரிய டோங்கு வேலை என்றாலும், எடியூரப்பா ஒன்றும் நல்லவர் இல்லை. அவர் கிட்டதட்ட மன்கோகன் சிங் மாதிரி. அவர் நல்லவர் ஆனால் கெட்டவர்களை பாதுகாப்பாவர். தன் நாற்காலியை பாதுகாக்க ரெட்டி சகோதரர்கள் செய்த அட்டுழியங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். அனுபவிக்கிறார். காலில் முள்ளு குத்தினாலும் உடனே டெல்லிக்கு சென்று மேலிடத்தில் முறையிடுகிறார். பேசாம கர்நாடகா மக்கள் எல்லோரும் இனிமே டெல்லிக்கே சென்றுவிடலாம்.

முன்பு எம்.எல்.ஏக்கள் சட்டசபையை ஹோட்ட்டல் மாதிரி பாவித்து, தங்கி, குளித்து, சாப்பிட்டுவிட்டு தூங்கினார்கள். இந்த முறை கோவா, சென்னை என்று தனி விமானத்தில் உல்லாசமாக இருக்கிறார்கள். எங்கிருந்து எவ்வளவு பணம் இவர்களுக்கு ? கட்டுக்கோப்பான கட்சி என்று ஒரு காலத்தில் பிஜேபிக்கு பேர் ஆனால் இன்று ? கவர்னர் சரியில்லை என்று கோஷம் போடும் பிஜேபிகாரர்கள் யோசிக்க வேண்டும் "நீ என்ன ஒழுங்கா ?" என்று யாராவது அவர்களை கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் ?

Return on Investment மாதிரி பேசாமல் எல்லா எம்.எல்.ஏக்களும் 30 கோடிக்கு கவுடாவுக்கோ, காங்கிரஸுக்கோ விற்றுவிடலாம். நல்ல லாபம் கிடைக்கும். இவர்கள் காசி, ராமேஷ்வரம் என்று யாத்திரை கிளம்பிவிடலாம். அதற்கு தான் இவர்கள் லாயக்கு.


இதற்கு மேல் நான் ஒன்றும் எழுதவில்லை, எடியூரப்பா படித்தால் அழுதுடுவார் பாவம்.

Read More...

எந்திRun



வயசானாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான் :-)

Read More...

Monday, October 11, 2010

In God We Trust



குரல் ஓட்டு மூலம் எடியூரப்பா அரசு பிழைத்தது. தெய்வத்தின் குரலாக இருக்குமோ ?

Read More...

Saturday, October 09, 2010

போலீஸ் ஸ்டோரி பாகம் 4

மூத்த டி.ஜி.பி.க்களாக தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியலில் உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அந்த விதிமுறை படி தனது பெயரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடந்தார் நடராஜ்.

தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமனம் செய்ததில் சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, அவரை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.


தமிழக அரசு பல பெயர்களை பரிசிலீத்தோம் அதில் விஜயகுமார் பெயரும் உண்டு ஆனால் அவர் மாநில பணிக்கு அர விரும்பவில்லை என்று சொல்லியுள்ளது.

இதற்கு விஜயகுமார் அளித்த பதில் மனுவில் மாநில பணிக்கு வர விரும்பவில்லை என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. மாநில அரசு பணிக்கு நான் வர விரும்பவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்திருப்பது தவறு. நான், மத்திய அரசு பணிக்கு போயிருந்தாலும், என்னையும் டி.ஜி.பி. பணிக்கு பரிசீலனை செய்திருக்க வேண்டும். ஒரு அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு டெபுடேஷனில் போனால் அவர் மீண்டும் மாநில அரசுப் பணிக்கு வர மாட்டார் என்று அர்த்தம் கிடையாது. அவருக்கு மாநில அரசுப் பணி பிடிக்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. ( ஆக அழகிரி மத்திய அரசுக்கு சென்றாலும் மாநில அரசுக்கு வர வாய்ப்பு உள்ளது அது போல )

உயர்நீதிமன்றத்தில், உள்துறை முதன்மை செயலர் உண்மையான தகவலை தெரிவிக்கவில்லை. நான் தகவல்களை மறைத்தேன் என சொல்லி இருப்பது எனக்கு அவமரியாதை ஏற்படுத்துவது போல உள்ளது. நான் எந்த தகவலையும் மறைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இவ்வளவு நடக்கும் போது கலைஞர் ரத்தம் கொதிக்க தான் செய்யும். என்ன செய்வார் ? நானே கேள்வி நானே பதில் எழுதுவார் இல்லை முரசொலியில் டபுள் ஸ்டாராங்காக ஒரு கட்டுரை எழுதுவார். நீதியின் கதி என்னாவது? என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மத்திய அரசில் ஒரு குறிப்பிட்ட பதவியை அடைய வேண்டுமென்பதற்காக முதலமைச்சரை அணுகினார். முதலமைச்சரும் அந்தப் போலீஸ் அதிகாரி திறமையானவராயிற்றே என்ற எண்ணத்தில் பரிந்துரை செய்தார்.

எனினும், குறிப்பிட்ட பதவி அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக, வேறொரு பதவியில் தலைநகரத்தை விட்டு வெளி மாநிலம் ஒன்றில் அவர் அமர்த்தப்பட்டார்.

அந்தப் பதவியில் அமர்ந்தது முதல், தான் முதலில் விரும்பிய பதவியை அடையவேண்டும் என்பதற்காக பல்வேறுவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு, கடைசியில் அந்தக் குறிப்பிட்ட பதவியிலிருந்த ஒரு அதிகாரியை வேறொரு பதவிக்கு அனுப்பிவிட்டு, அந்தப் பதவியில் அவர் தற்போது அமர்ந்துவிட்டார்.

தமிழகத்தில் முதல்முறையாக, ஒரு பெண்மணி தலைமை அதிகாரியாக வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதலமைச்சர் முடிவு எடுத்தார்.

ஆனால் அந்த முடிவினால், தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்லி, மற்றொரு உயரதிகாரி நீதிமன்றத்தை நாடினார். அவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஆட்சிக் கட்சியாக இருந்த அ.தி.மு.கவுக்கு அனுசரணையான அதிகாரி என்று பெயர் எடுத்ததால்; தேர்தல் ஆணையமே அவரை வேறொரு பதவிக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது.

நீதிமன்றத்திற்குச் சென்ற அந்த அதிகாரிக்கு ஆதரவாக மத்திய அரசு பதவிக்குச் சென்ற அந்த அதிகாரியும் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தமிழகத்தின் உயர் பதவியை நிரப்பும்போது, தன்னுடைய பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்படி நீதிமன்றத்தில் இங்கே குறிப்பிட்டவர், அங்கே குறிப்பிட்ட பதவியை அடைவதற்காக மற்றொருவரை வேறொரு பதவிக்கு அனுப்பிவிட்டு, தற்போது அந்தப் பதவியைப் பெற்றிருக்கிறார்.

உயரதிகாரிகளும், சந்தர்ப்பத்திற்கேற்றவாறு இங்கே ஒருவாதம், அங்கே ஒருவாதம் என்ற ரீதியில் போனால், நீதியின் கதி என்னாவது ?

பெண் அதிகாரி - லத்திகா சரண்
அந்த உயிர் அதிகாரி - நட்ராஜ்
ஆதரவாக மனு செய்வதர் - விஜயக்குமார்



பேசாம இதிலும் வாரிசு முறையை கொண்டு வந்துவிடலாம்....

Read More...

Wednesday, October 06, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!


தினமணியில் வந்த முக்கியமான தலையங்கம்.


ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

( நன்றி: தினமணி )

எந்திரன் கரூரில் ரிலீஸ் ஆகவில்லை என்ற கமெண்ட் மட்டும் வேண்டாம் :-)


Read More...

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்!

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்! என்ற தலைப்பில் வந்த கூட்டாஞ்சோறு நகைச்சுவை பதிவு :-)


ஜெய் ஹோ ஃபிலிம்ஸ்

நேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.

கலை நிகழ்ச்சி:
நமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.

முகத்திலே பரு
முளைக்காத சிறு உரு
ஆனாலும் கருவிலே திரு
அதற்கு காரணம் -
கலைஞர் என்ற கற்பகத் தரு
சளைக்காமல் போட்ட எரு!
உன்னிடம் சேர்ந்தாள் செந்திரு -
என்று பாற்கடலான் தொடுப்பான் செரு!

இந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு? I don’t understand this Tamil!” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.

கலைஞர் கேள்வி பதில்:

கம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்?

ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.

பத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது?

குறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா? உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.

பத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா?

சட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.

இருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே?

கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.

கலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.

ஜெயலலிதா கருத்து:
இதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ.பி. பன்னீர்செல்வம் பயந்து பயந்து பணிவோடு கருத்து தெரிவித்தார்.

விஜயகாந்த் பேட்டி:
இப்படி தன குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

ராமதாஸ் கருத்து:
கூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.

சத்தியமூர்த்தி பவனில் கூட்டம்:
இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவருகிறது.

துக்ளக் தலையங்கம்:
குடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.

கலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார்? வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார்? ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்!

டி. ராஜேந்தர் பேட்டி:
வாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு சிங்கண்டா சிம்பு, வச்சுக்காதே வம்பு என்று எச்சரித்தார்.

ஜூவியில் கழுகு ரிப்போர்ட்:
சங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!

அழகிரி குமுறல்:
என் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.

கொசுறு செய்தி:
ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில் என் பேரு கலாநிதி, சன் டிவி உங்க தலைவிதி, மிச்ச சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.
( நன்றி: http://koottanchoru.wordpress.com )

துக்ளக் மாதிரி இருந்தால் கூட இட்லிவடையில் வரும் :-)


Read More...

Sunday, October 03, 2010

எந்திரன் பின் விளைவுகள் - மாயவரத்தான்

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியினால் ஏற்படவிருக்கும் ‘பின்’விளைவுகள்..

** ரஜினியை மீண்டும் வருங்கால முதல்வராக்க ஆரம்பித்து விடும் வாரமிருமுறை பத்திரிகைகள்.

** அவர் அப்படி அரசியலுக்கு எல்லாம் வந்துவிடக்கூடாது என்பதற்காக வாரம் ஒரு பாராட்டு விழா மஞ்சள் துண்டாருக்கு நடத்தி அதில் ரஜினியையும் கலந்து கொள்ள வைத்து விடுவார்கள்.

** அடுத்த படம் பற்றி பல ‘கதை’கள் வர ஆரம்பிக்கும்.

** ’வர்க்கமயமாக்கப்பட்ட சூழலில் எந்திரனின் மாசு ஏற்படுத்தியிருக்கும் தூசு’ என்கிற ரீதியில் தமிழ் வலையுலகில் ‘ஜெலூசில்’ புலம்பல்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்காக ஓடிக் கொண்டிருக்கும்.

** சன் பிக்சர்ஸின் ஏகாதிபத்தியத்தை கண்டித்து ‘படத்தை புறக்கணியுங்கள்’ என்று நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று எந்திரன் திரைப்படத்தை சோமாலியாவில் பெரும் தோல்விப்படமாக மாற்றிய ‘தோளர்’களுக்கு நன்றி என்று சில பதிவுகள் வரலாம்.

** படத்தில் கடைசி சீனில் வரும் அந்த விளம்பர பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலம். 2015-ல் தலைவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் பிரகாசம்!

** கூடிய விரைவில் ஒரு படத்தில் விவேக் ரோபோ மாதிரி வேஷமிட்டு அடி வாங்குவார்

** ’ரஜினி ரசிகர்கள்’ ரொம்ப நல்லவங்கய்டா.. காலைல 4.30 மணிக்கு ஷோ போட்டாலும் கூட்டமா கும்மிடுறாங்க என்று இனிமேல் நள்ளிரவு 12.30 மணிக்கெல்லாம் கூட திரையிடத் தொடங்குவார்கள்.

** ஜப்பானியர்கள் ஏற்கனவே காமிக்ஸ் பிரியர்கள். இனிமேல் ‘ரோபோ’ காமிக்ஸ் அங்கே வர ஆரம்பித்து விடும்.

** எந்திரன் எப்படி என்று மக்கள் தீர்ப்பு கொடுத்தாகிவிட்டது. எனவே இனிமேலும் அதை ஆதரித்து எழுதினால் நம்மை எவன் கவனிப்பான் என்ற கவலை சில பிரபலங்களுக்கு. எனவே எதிர்மறை கட்டுரைகள் வர ஆரம்பிக்கும்.

** தமிழ் சினிமாவின் குப்பை என்று ‘எனிமா’ முழுங்கி வாந்தி எடுத்திருக்கிறார் ஒரு ‘எளுத்தாளர்’. நல்ல வேளை. அவரெல்லாம் ‘நல்ல விஷயம்’ என்று சொன்னால் அது உருப்படாது போய்விடும் என்பது உலகறிந்த உண்மை.

** இந்த ‘எளுத்தாளர்’ குப்பை என்று சொன்னதற்காகவே அவரது ஜென்ம எதிரி ‘சூப்பர்’ என்று சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டது காலத்தின் கட்டாயம்!

** ஷாரூக்கான் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் நான்கு நாட்களாக ஐந்து வேளையும் தண்ணீரும் கம்பலையுமாக ரூம் போட்டு கண்ணீர் விட்டு வருவதாகக் கேள்வி.

** சில வலைப்பதிவர்கள் எந்திரன் குறித்து ஒவ்வொரு சைட்டிலும் ஒவ்வொரு விதமாக எழுதுகிறார்கள். ஒன்றில் வசி. இன்னொன்றில் சிட்டி வெர்ஷன் 1.0, மற்றொன்றில் சிட்டி வெர்ஷன் 2.0. (அந்நியன் ரெமோ உதாரணத்தை எவ்வளவு நாட்கள் தான் சொல்வதாம்?!) இன்னும் எவ்வளவு வெர்ஷன் போகுமோ தெரியவில்லை! (ஹரன்பிரசன்னாவைச் சொல்வதாக நினைத்துக் கொண்டால் நாம் பொறுப்பல்ல!)

** சிட்டி ரஜினி ரயிலில் ஓடும் போது எச்சில் துப்புபவரின் மூஞ்சியில் எட்டி உதைக்கும் காட்சி ஷங்கர் மற்றும் ரஜினியின் பார்ப்பனியத்துவத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது என்று ‘தோளர்’கள் எழுதப்போவதாகக் கேள்வி. வெற்றிலை, தாம்பூலம் போடும் சாஸ்திரிகளை காண்பித்து உதைக்கச் சொல்லியிருக்க வேண்டியது தானே என்பது தான் கேள்வியாம்!

** குப்பை படம், இந்த வார குட்டு, பரபரப்பு படம் என்று எழுத்தாளர்கள் எழுத ஆரம்பிப்பார்கள்.

- மாயவரத்தான்
** சாரு, ஜெயமோகன், ஞாநி இவர்களுக்கு யார் எந்திரன் டிக்கெட் வாங்கிதந்தார்கள் ?

Read More...

Friday, October 01, 2010

எந்திரன் - FIR

படம் முழுக்க ரஜினி வருகிறார் ஆனால் நமக்கு தெரிந்த ஸ்டைல் ரஜினி இல்லை. ரோபோ ரஜினி. ஓபனிங் சீனில் சுவிங்கம் போட்டுக்கொண்டு புழுதி பறக்க அடிக்கும் சீன் கிடையாது (பா.ராவும், ஹரன்பிரசன்னாவும் இன்னும் திட்டவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் :-))

ரொம்ப நாள் உழைப்பு என்று காண்பிக்க விஞ்ஞானி ரஜினியின் பெரிய தாடியைத் தவிர படத்தில் வேறு ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாது. பார்க்கப் போனால் இந்த தாடி ஷங்கருக்குதான் முளைத்திருக்க வேண்டும். உழைப்புக்கு சபாஷ். இந்த மாதிரி படம் எடுத்தால் நிச்சயம் திருட்டு விசிடி காரர்கள் கூட யோசித்துத், திருந்திவிடுவார்கள்.

ரஜினியா இது என்று வியக்கம் அளவிற்கு கிட்டார் வைத்துக்கொண்டு அவர் பாடும் பாடல் ஒன்றுக்கே காதல் மன்னன் என்ற பட்டத்தை இவருக்குக் கொடுத்துவிடலாம். இந்த Casual ஸ்டைல் எல்லாம் அவர் எங்கே கற்றுக்கொண்டார்?

பெண்களுக்கு மேக்கப் போட்டால் வயது தெரிந்துவிடும் என்பது ஐஸ்வர்யா கூட நிருபித்துவிடுகிறார். இன்னும் இரண்டு வருடம் படம் தள்ளி போயிருந்தால் ரசிகர்கள் நெஞ்சு பஞ்சராகியிருக்கும். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை சீக்கிரமாக எடுத்து முடித்ததற்கு நன்றி.

ரோபோ ரஜினி சென்னையில் முதலில் உலாவருவது, தமிழில் வெட்டி, போடு போன்ற வார்த்தை விளையாட்டு நல்ல நகைச்சுவை. கருணாஸ், சந்தானம் சில இடங்களில் என்கிட்ட இருப்பது உன்கிட்ட இல்லை, பெரிய அமெரிக்க விஞ்ஞான கூடம் போல இருக்கும் இடத்தில் மட்டன் பிரியாணி, சிகரட், தண்ணி... நாம் உட்கார்ந்துக்கொண்டு இருப்பது தமிழ்ப் படத்துல் தான் என்பதை நிருபிக்கிறார்கள். என்னிடம் பணம் இருந்தால் கிராபிக்ஸ் கொண்டு இவர்களை மறைத்திருப்பேன்.

இந்தியன் மாயா மச்சிந்திரா பாடலில் வரும் பாம்பு, முதல்வனில் வரும் 100 சிப்பாய்கள் எல்லாம் ஷங்கர் படத்தின் முத்திரை காட்சிகள் இதிலும் இருக்கிறது. ஒரே வித்தியாசம் அதுவும் ரஜினி !.

கடைசி காட்சிகளில் பல ரஜினிக்கள் விதவிதமாக உருவங்களில் வருவது கிரபிக்ஸ் கலக்கல். கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் செய்திருக்கிறார்கள். இனிமேல் ஹாலிவுட் தரம் என்று தைரியமாக சொல்லலாம். சபாஷ்.

பின்னனி இசை எ.ஆர்.ரஹ்மான் அவருக்கு யாராவது சுத்திபோட வேண்டும்.
கேமரா ரத்னவேல்; கலை சாபு சிரில் அருமையாக செய்திருக்கிறார்கள்.

வில்லனாக வருபவர் செய்யும் சூழ்ச்சி கொஞ்சம் ஆடினரி என்பதாலோ என்னவோ படம் ஆங்காங்கே கொஞ்சம் விறுவிறுப்பு கம்மியோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் சிட்டி வெஷன் 2.0 வந்த பிறகு களைகட்டிவிடுகிறது.

கடைசியாக ரோபோ ரஜினி தன்னைத் தானே... காட்சி பிரமாதம். சிட்டி எல்லோரையும் கலங்கடிக்கிறார் நடிப்பு வசனம் எல்லாவற்றிலும்.

கமல், ஷாருக், அஜித், விஜய் இவர்களுக்கு நன்றி. நிச்சயம் இவர்கள் நடித்திருந்தால் பிரமாண்டமாக இருந்திருக்கும் ஆனால் பிரமாண்டத்துக்கு பிரமாண்டம் ரஜினி இருப்பதால் இந்த படம் ஒரு பெரிய பிரைம் நம்பர் போல தனித்துவமாக இருக்கிறது.

சொல்ல மறந்துவிட்டேன் - ஐஸ், ரஜினி ஆடும் அந்த பிறந்த நாள் பார்ட்டி நடனமும், ரோபோ அறிமுக காட்சியில் கடவுள் இருக்கிறரா என்ற வசனமும் - கலக்கல் ரகம்.


இரண்டு மூன்று வாரம் கழித்து சத்தம் எல்லாம் அடங்கிய பின் நிச்சயம் குடும்பத்துடன் போய்வாருங்கள். அது உங்கள் கடமை :-)


மார்க் 8.5/10

பிகு: FIR - Film Information Report ;-)

Read More...