பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 07, 2010

மண்டேனா ஒன்று 6/9/2010

சமீபத்தில் தனிப்பட்ட அலுவலாக சேலம் சென்றிருந்தேன். நேரம் கிடைத்தால் அருகிலிருக்கும் ஏற்காடு செல்லலாமென்ற எண்ணம். ஆனால் நான் சேலம் சென்ற சமயம் கடும் மழையாதலால் ஏற்காடு எண்ணம் கைகூடவில்லை. எனவே சேலத்திலிருந்து மேட்டூர் மற்றும் அங்கிருந்து கூப்பிடு தூரத்திலுள்ள மாலே மாதேஸ்வரன் மலை செல்லலாமென்று தீர்மானித்தேன். மாலே மாதேஸ்வரன் மலை!! தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில், கர்நாடகாவிற்குள் அமைந்துள்ள இவ்விடம் இரண்டு விஷயங்களுக்காகப் பிரசித்தம். ஒன்று, முன்னொரு காலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் உறைவிடம்; இரண்டாவதாக, இங்கு மலை மீதிருக்கும் மாலே மாதேஸ்வரன் கோவில் (சிவன்).

முதலில் சேலத்திலிருந்து மேட்டூர், ஒரு மணிநேரப் பயணம். அங்கு நண்பரொருவர் இருந்ததால் இருவரும் சேர்ந்து செல்லலாமென திட்டம். மேட்டூர் அணைக்கட்டிற்கு அருகிலிருந்த முனீஸ்வரனை தரிசித்துவிட்டு அங்கிருந்து மாதேஸ்வரன் மலைக்குக் கிளம்பினோம். வழக்கம்போல மேட்டூரில் அவ்வளவாக தண்ணீர் இல்லை. ஜூன் மாதம் வழக்கமாக திறந்து விடப்பட்டிருக்க வேண்டிய எட்டு மதகுகளில் ஒன்று மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. கர்நாடகத்திற்கு நன்றி. கர்நாடகாவில் பெயர் சொல்லும்படியாக அமைந்துள்ள கோவில் என்றாலும், இரு மாநில அரசுகளுமே இவ்விடத்திற்கு போதுமான பேருந்து வசதிகளை ஏனோ செய்யவில்லை. ஏதோ அவ்வப்பொழுது மணிக்கொருமுறை கடமைக்காக இயக்கப்பட்ட தமிழக அரசாங்கப் பேருந்துகளை வழியில் பார்க்க முடிந்தது. அவையும் ஏதோ ஸ்தூல சரீரமுடைய வயோதிகர்களைப் போல முக்கி முனகி ஏற முடியாமல் ஏறிக் கொண்டிருந்தன. மேட்டூரிலிருந்து மூலக்காடு, கொளத்தூர், கோவிந்தப்பாடி வழியாக சுமார் 60 கிமீ தொலைவு. கோவிந்தப்பாடியிலிருந்து துவங்கும் மலைப்பாதையில் மொத்தமாக 18 கொண்டை ஊசி வளைவுகள். மேட்டூரிலிருந்து துவங்கினால் மலையடிவார கிராமங்கள் அனைத்தும் டிபிகல் கிராமங்களாகவே நகரவாசனையின்றி கற்பிழக்காமல் இருந்தது சற்றே மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால் ஒரு மான்ஃபோர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியும், தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போன்ற தோற்றமுடைய ஒரு பொறியியல் கல்லூரி வணிக ஸ்தலமும் இருந்தது.

இருசக்கர வாகனத்தில் சென்றால்தான் இயற்கை அழகை முழுமையாக ரசிக்க இயலுமென்பதால் ஒரு இருசக்கர வாகனத்திலேயே கிளம்பினோம். முதலில் நண்பர், ஏதோ சந்தேகத்திற்கிடமான ஒரு ஒற்றையடிப் பாதை வழியாக பாறைகள் நிறைந்த இடுகாட்டிற்கு இட்டுச் சென்று இரு சமாதிகள் முன்பு நிறுத்தினார். அவற்றில் தேசியக் கொடிகள் செறுகப்பட்டு, ஏதோ பூஜைகள் நிகழ்த்தப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஏதாவது சுதந்திரப் போராட்டத் தியாகியா என்று யோசிக்குமுன்பு அவர் சொன்னது சற்றே திகைப்பையும், அதிர்ச்சியையும் அளித்தது. அது மூலக்காட்டிலுள்ள சந்தன வீரப்பன் சமாதி; அருகே சேத்துக்குளி கோவிந்தன். இவர்களுக்குத்தான் தேசியக் கொடியை நட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை, புனஸ்காரங்களை நிகழ்த்தியிருந்தனர். அரசியல்வாதிகள் துவங்கி ஆட்கொல்லிகள் வரை சமூகவிரோதிகளையே ஆதர்ஸமாகக் கொள்ளும் நமது பண்பாட்டிற்கு இது ஒரு கண்கூடான உதாரணம். எண்ணிலடங்கா கொலைகளை நிகழ்த்தியவனை ஏதோ எல்லை தெய்வமாகப் போற்றி பலி கொடுத்து கொண்டாடுகின்றனர். இது போதாதென்று நினைவு மண்டபம் கட்ட வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். அரசாங்கத்தின் கெடுபிடிகளால் அது இப்போதைக்கு ஏற்படவில்லை.

அங்கிருந்து கொளத்தூர் வழியாக காவேரிபுரம் மற்றும் கோவிந்தப்பாடி தாண்டினால் மலைப்பாதை துவங்குகிறது. இங்கிருக்கும் காவேரிபுரத்தில்தான் வீரப்பன் என்கெளண்டர் முறையில் கொல்லப்பட்டான். கோவிந்தப்பாடி தாண்டியவுடனேயே கர்நாடக எல்லை சோதனைச் சாவடி நம்மை வரவேற்று அழைத்துச் செல்கிறது. சுமார் 30 கிமீ தொலைவிற்கு ஆளரவமற்ற அடர்ந்த வனப்பகுதி. வீரப்பன் சுமார் 40 ஆண்டுகளாக எப்படி காவல்துறையினருக்கும், அதிரடிப்படையினருக்கும் டிமிக்கி கொடுத்து கோலோச்சினான் என்று இப்பகுதிகளைப் பார்த்தவுடன்தான் தெரியவந்தது. ஆங்காங்கே யானைகள் மற்றும் சிறுத்தைகளின் சஞ்சாரத்தை பறைசாற்றும் எச்சரிக்கைப் பல்கைகள் கன்னடத்திலும் ஆங்கிலத்திலுமாகத் தென்பட்டன. ஆனால் வழி நெடுகிலும் குரங்குகளைத் தவிர எதையுமே பார்க்கவில்லை. பாதை நெடுகிலும் ஒவ்வோர் அங்குலமும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான வனப்பகுதிகள். இவ்வளவு அழகுமிகுந்த பிரதேசங்கள் நமக்கு அருகிலேயே இருப்பது இவ்வளவு காலம் வரை தெரியாமல் போனது துரதிருஷ்டமே.

மேலே மலை உச்சியில் சற்றே பெரிய சிவன் (மாலே மாதேஸ்வரன்) கோவில். சுற்றிலும் பழம், வெற்றிலை பாக்குக் கடைகள். ஆனால் விலை அத்தனையும் பகல் கொள்ளை. கோவிலுக்குள்ளேயும் பணம் மட்டுமே பிரதானம் என்று சொல்லும்படியாக, அர்ச்சனைத் தட்டில் பணத்தைப் போட்டால்தான் தீபாராதனை காண்பிக்கிறார்கள். கோவிலின் பிரதான வாயிலில் உள்ள நந்தி சிலையின் மீது பத்து ரூபாய், ஐம்பது ரூபாய் என நோட்டுக்களை வரிசையாக மாலை போல் கட்டி சிம்பாலிக்காகத் தொங்க விட்டுள்ளனர். அதனருகே சிலர் ஏதோ தலை மயிற்றை முரம் போல செய்து தலையில் தட்டி, ஆசீர்வாதம் செய்வது போல் செய்து பணம் கேட்கின்றனர். அது என்னவென்று புரியவில்லை. கோவில் பெரிதாக உள்ள அளவுக்கு அங்கு வருவோருக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை. சாப்பிடுவதற்கு நல்ல உணவகங்களோ, சிற்றுண்டி சாலைகளோ எதுவுமே இல்லை. ஏதோ சாலை ஓர டீக்கடைகள் போன்று அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கிறது. அதிக சுத்தம் மற்றும் கெளரவம் பேணுபவர்களுக்கு இந்த ஹோட்டல்கள் (??) லாயக்கில்லை. கட்டுசாத மூட்டை ஒன்றுதான் கதி. ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில குறைகள் தென்படினும், நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்றும், ப்ரதோஷ தினத்தன்றும் நிற்கவே இடமில்லாமல் இம்மலை முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழியுமாம்; உள்ளூர் கடைக்காரர்கள் சொன்னார்கள். அனைவருக்கும் தமிழ் தெரிந்திருப்பினும், கன்னடம்தான் பேச்சு மொழி. கோவில் நடை காலை ஒன்பது முதல் முற்பகல் பனிரெண்டு வரையும், பிறகு மதியம் இரண்டு முதல் ஆறரை வரையும் திறந்திருக்கும். அதற்குப் பிறகு பேருந்துகள் கிடையாது. காரணம் இரவில் யானைகள் மலைப்பாதையில் வருவதுதான் என்று கூறப்படுகிறது.

மலையிலிருந்து கீழே வரும் வழியில் நல்ல மழை. ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். மறுபடியும் சேலம் வந்து திரும்பும் வழியில் மனத்தை கனக்கச் செய்யும் காட்சிகள். ஆங்காங்கே இருந்த மலைக்குன்றுகள் வெடிகள் வைத்து தகர்க்கப்பட்டு பெரிதாக இருந்த மலைகள் சிதிலமாகக் காணப்பட்டன. சாலைகள், வீடுகளுக்கான கான்கிரீட் கற்கள் மற்றும் வேலிக்கல்களாக குன்றுகள் உருமாற்றம் பெற்றுக் கொண்டிருந்தன. அவையும் ஒரு காலத்தில் இயற்கை எழிலுடன் திகழ்ந்த மலைப்பகுதிகளாக இருந்திருக்கலாம். யார் கண்டது? இன்னும் சில காலத்தில் சுத்தமாகத் தகர்க்கப்பட்டு சமதளமாக்கப்பட்டு விடும். இதே போல இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுக் கொண்டே வந்தால் நமக்குப் பிறகு வரும் சந்ததியினர் மலை என்றால் என்னவென்று புகைப்படங்களில் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வாரம் அரசியல், காங்கிரஸ், கழகம் இவற்றுக்கெல்லாம் விடுமுறை. நன்றி யதிராஜ்

படங்கள்:














10 Comments:

(-!-) said...

ந. :>

Unknown said...

மேட்டூர் முனிய போட்டோ எடுக்கலையா? (பார்த்து ரொம்ப நாளாச்சு..)

ரோமிங் ராமன் said...

//இந்த வாரம் அரசியல், காங்கிரஸ், கழகம் இவற்றுக்கெல்லாம் விடுமுறை. நன்றி யதிராஜ்// சரி புதிருக்குமா லீவு??

கௌதமன் said...

சிறப்பான பயண, செய்திக் கட்டுரை. பல புதிய தகவல்கள். நன்றி.

துளசி கோபால் said...

அருமை.

போகச் சான்ஸ் கிடைக்குமான்னு தெரியலை.

இங்கேயே பார்த்துவச்சுக்கிட்டேன்.

நன்றி.

ராஜசுப்ரமணியன் said...

படங்கள் அருமை; இயற்கை எழில் பிரமிப்பூட்டுகிறது. பதிவும் நல்ல பல தகவல்களை அளிக்கிறது. நன்றிகள்.

அக மாற்றம் said...

//ஆங்காங்கே இருந்த மலைக்குன்றுகள் வெடிகள் வைத்து தகர்க்கப்பட்டு பெரிதாக இருந்த மலைகள் சிதிலமாகக் காணப்பட்டன. சாலைகள், வீடுகளுக்கான கான்கிரீட் கற்கள் மற்றும் வேலிக்கல்களாக குன்றுகள் உருமாற்றம் பெற்றுக் கொண்டிருந்தன. அவையும் ஒரு காலத்தில்...........//

மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய நிகழ்ச்சி... அனால் அதன் இன்னொரு பக்கத்தையும் நம்மால் பார்க்க முடிந்தால்தான் இதற்கு மூல காரணம் யார் என்று தெரியவரும்.

நாம், இந்த உடைக்கப்படும் குன்றுகள் உள்ள சமுகத்தின் அங்கங்கள், அந்த கற்களின் பயன்பாடு இல்லாமல் நமது வாழ்கையை நகர்த்தி செல்ல முடியுமா? ஒரு புறம் சாலை வசதிகள் இல்லை என்று புலம்புகிறோம், இன்னொரு புறம் சாலை இட குன்றுகள் உடைகிறது என கதறுகிறோம். இந்த சமுகத்தின் தேவைக்காக மட்டும்தான் இந்த மலைகள் உடைபடுகிறது, மண்ணின் எல்லா வளங்களும் சுரண்டப்படுகிறது. நாம் தான், அதாவது நாம் அங்கம் வகிக்கும் இந்த சமூகம் தான் அத்தனையையும் சுரண்டுகிறோம். நாம் நேரடியாக குன்றுகளை உடைக்கவில்லை. அதனால் கிடைக்கும் பணம் நமக்கு வந்த சேரவில்லை. ஆனால் நமது தேவைகளுக்காக மட்டுமே உடைக்கப்படுகிறது. நாம் மிக வசதியாக, நம் தேவைகளை மறந்து, அந்த பணத்தினால் பயன் பெறுபவர்களை மட்டும் சமூக விரோதிகளாக பார்க்கிறோம் அல்லது பார்க்கும்படி தூண்டப்பட்டிருக்கிறோம்.

நம் உணர்வின் ஒரு பகுதியை மட்டும் பார்த்து விட்டு, நமது தேவைகள் நிரம்பிய உணர்வின் இன்னொரு பக்கத்தின் மேல் எந்த ஒரு கவனமும் இல்லாமல் இருக்கிறோமே.
நமது மனதின் இந்த இரு பக்கங்களையும் நம்மால் சம நிலையுடன் பார்க்க முடிந்தால், ஒரு சமூகமாக இந்த மண்ணின் வளங்களை பாதுகாப்பது ஒருவேளை சாத்தியமாகலாம். அதுவரை இது போன்ற எழுத்துகள் நமது (ஒரு பக்கத்து) உணர்ச்சியின் வடிகால்கள் மட்டுமே!

அக மாற்றம் said...

//ஆங்காங்கே இருந்த மலைக்குன்றுகள் வெடிகள் வைத்து தகர்க்கப்பட்டு பெரிதாக இருந்த மலைகள் சிதிலமாகக் காணப்பட்டன. சாலைகள், வீடுகளுக்கான கான்கிரீட் கற்கள் மற்றும் வேலிக்கல்களாக குன்றுகள் உருமாற்றம் பெற்றுக் கொண்டிருந்தன. அவையும் ஒரு காலத்தில்...........//

மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய நிகழ்ச்சி... அனால் அதன் இன்னொரு பக்கத்தையும் நம்மால் பார்க்க முடிந்தால்தான் இதற்கு மூல காரணம் யார் என்று தெரியவரும்.

நாம், இந்த உடைக்கப்படும் குன்றுகள் உள்ள சமுகத்தின் அங்கங்கள், அந்த கற்களின் பயன்பாடு இல்லாமல் நமது வாழ்கையை நகர்த்தி செல்ல முடியுமா? ஒரு புறம் சாலை வசதிகள் இல்லை என்று புலம்புகிறோம், இன்னொரு புறம் சாலை இட குன்றுகள் உடைகிறது என கதறுகிறோம். இந்த சமுகத்தின் தேவைக்காக மட்டும்தான் இந்த மலைகள் உடைபடுகிறது, மண்ணின் எல்லா வளங்களும் சுரண்டப்படுகிறது. நாம் தான், அதாவது நாம் அங்கம் வகிக்கும் இந்த சமூகம் தான் அத்தனையையும் சுரண்டுகிறோம். நாம் நேரடியாக குன்றுகளை உடைக்கவில்லை. அதனால் கிடைக்கும் பணம் நமக்கு வந்த சேரவில்லை. ஆனால் நமது தேவைகளுக்காக மட்டுமே உடைக்கப்படுகிறது. நாம் மிக வசதியாக, நம் தேவைகளை மறந்து, அந்த பணத்தினால் பயன் பெறுபவர்களை மட்டும் சமூக விரோதிகளாக பார்க்கிறோம் அல்லது பார்க்கும்படி தூண்டப்பட்டிருக்கிறோம்.

நம் உணர்வின் ஒரு பகுதியை மட்டும் பார்த்து விட்டு, நமது தேவைகள் நிரம்பிய உணர்வின் இன்னொரு பக்கத்தின் மேல் எந்த ஒரு கவனமும் இல்லாமல் இருக்கிறோமே.
நமது மனதின் இந்த இரு பக்கங்களையும் நம்மால் சம நிலையுடன் பார்க்க முடிந்தால், ஒரு சமூகமாக இந்த மண்ணின் வளங்களை பாதுகாப்பது ஒருவேளை சாத்தியமாகலாம். அதுவரை இது போன்ற எழுத்துகள் நமது (ஒரு பக்கத்து) உணர்ச்சியின் வடிகால்கள் மட்டுமே!

துளசி கோபால் said...

ஒரு சமயம் மதுரையில் இருந்து காரைக்குடிக்குப் பயணித்தபோது, மார்பிள் கற்களுக்காக ஒரு மலையையே வெட்டித் தரைமட்டமாக ஆக்கி இருந்ததைப் பார்த்தேன்:(

சரியான மலை முழுங்கிய மகாதேவன்கள்!

Anonymous said...

முதல்வர் குடும்பத்தில் இருந்து திரை உலகில் கோலோச்சி கொண்டு இருப்பவர்கள்: மு. கருணாநிதி (வசன கர்த்தா) கலாநிதி மாறன் - பேரன் - (தயாரிப்பளர்) உதயநிதி ஸ்டாலின் -பேரன்- (தயாரிப்பாளர்) மு. க. தமிழரசு -மகன்- (தயாரிப்பாளர்) தயாநிதி அழகிரி -பேரன்- (தயாரிப்பாளர்) அருள் நிதி -பேரன்- (நடிகர்) மு. க. முத்துவின் மகன் (பெயர் தெரியவில்லை, யாராவது தெரிஞ்ச சொல்லுங்க) -பேரன்- பாடகர்.
முதல்வர் குடும்பத்தில் இருந்து அரசியல் உலகில் கோலோச்சி கொண்டு இருப்பவர்கள்: மு. கருணாநிதி -முதல் அமைச்சர் தயாநிதி மாறன் -பேரன்- மத்திய அமைச்சர் மு. க. அழகிரி -மகன்-மத்திய அமைச்சர் மு. க. ஸ்டாலின் -மகன்- துணை முதல் அமைச்சர் கனிமொழி (பாராளுமன்ற உறுப்பினர்) முரசொலி மாறன் (இருந்து இருந்தால்) -- மத்திய அமைச்சர்
முதல்வர் குடும்பத்தில் இருந்து ஊடக உலகில் கோலோச்சி கொண்டு இருப்பவர்கள்: மு. கருணாநிதி -- கலைஞர் டிவி கலைஞர் நியூஸ் இசை அருவி சிரிப்பொலி சுட்டி டிவி முரசொலி பத்திரிக்கை ரைசிங் சன் பத்திரிக்கை கலாநிதி மாறன் சன் டிவி கே டிவி சன் மியூசிக் சன் நியூஸ் ஆதித்யா டிவி சுமங்கலி கேபிள் விசன் ஜெமினி டிவி (தெலுங்கு ) ஜெமினி மியூசிக் (தெலுங்கு ) ஜெமினி நியூஸ் (தெலுங்கு) நவ்வுலு டிவி (தெலுங்கு ) உதயா டிவி (கன்னடம்) உதயா மியூசிக் (கன்னடம்) உதயா நியூஸ் (கன்னடம்) சூர்யா டிவி (மலையாளம்) சூர்யா மியூசிக் (மலையாளம்) சூர்யா நியூஸ் (மலையாளம்) சூரியன் ரேடியோ தினகரன் தினசரி நாள் இதழ் குங்குமம் வார பத்திரிக்கை (இன்னும் சன் ஸ்போர்ட்ஸ் மற்றும் சன் மொபைல் தான் பாக்கி -- அதுவும் சீக்கிரம் வந்துவிடும்) சற்றே சிந்தியுங்கள்! இவர்களை இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனுமதித்தால்? என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். சாமானியர்கள் எந்த தொழிலும் செய்ய முடியாது. ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி சாப்பிட்டுட் டு விட்டு வீட்டுல உட்கார்ந்து கலைகர் டிவி பார்த்து கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருக்க வேண்டியதுதான். மாற்றம் கண்டிப்பாக தேவை. நான் எந்த அரசியல் கட்சியும் கிடையாது. உங்கள போல ஒரு சாதாரண பொது ஜனம்தான். நன்றி