பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 21, 2010

மண்டேனா ஒன்று 20/09/2010

இணையதளத்தில் நீங்கள் எவ்வாறெல்லாம் சுரண்டப்படலாமென்றும், உங்களின் க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கி விவரங்களை அறிந்து கொள்வதற்காக கழுகு போன்று உங்களை வட்டமிடும் ஆன்லைன் மோசடிக் கும்பல் பற்றியும், அவர்களிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் விளக்கும் விதமான விழிப்புணர்ச்சிக் கட்டுரையொன்று இம்மாத "ரீடர்ஸ் டைஜஸ்ட்" இல் வெளியாகியிருந்தது. கட்டுரை மிகவும் பெரிதாக இருந்த காரணத்தால், கூடியவரை அதன் விஷயம் குன்றாமல் சுருக்கித் தந்திருக்கிறேன்.
"டாம் ஃபார்மர்", என்ற 50 வயதாகும் கம்யூனிகேஷன்ஸ் கன்ஸல்டண்ட் ஃபேஸ்புக்கின் (Facebook) மூலம் தனக்கு கிடைக்கும் செளகர்யங்களைப் பெரிதும் விரும்புகிறார். பல ஆண்டுகளுக்கு முன் இவருடன் பணிபுரிந்த எலிஸா என்ற பெண்ணுடைய தொடர்பு மறுபடியும் கிடைத்ததில் இவருக்கு அளவற்ற மகிழ்ச்சி. அவருடன் இணையத்தில் நேரடி சம்பாஷணைகள், ஈ-மெயில் பரிமாற்றங்கள் என ஃபேஸ்புக்கின் அனைத்து அம்சங்களும் அவரைக் கவர்ந்தன. இந்நிலையில் எலிஸா திடீரென அவசர நிலைப் பிரகடனம் ஒன்றைச் செய்தார். அவரும், அவருடைய தோழர் ஒருவரும் லண்டன் நகரில் பெரும் சிக்கல் ஒன்றில் சிக்கியிருப்பதாக.

" அதாவது அதற்கு முந்தைய இரவு, துப்பாக்கி முனையில் எலிஸாவும், அவருடைய தோழரும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், தம் வசமிருந்த பணம், க்ரெடிட் கார்ட் மற்றும் செல்போன் என அனைத்துமே பறிபோனதாகவும் எலிஸா தெரிவித்தார்."

" அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசிக்கும் டாம் ஃபார்மர் பதறிப் போனார். நான் இங்கிருந்து உனக்கு எவ்வகையிலாவது உதவ முடியுமா? எனக் கேட்டார்."

" இதற்காகவே காத்திருந்தாற்போல், எலிஸா, ஹோட்டல் பில், ஏர்போர்ட் வரையிலான டாக்ஸி வாடகை போன்ற செலவுகளுக்காக ஒரு தோராயமான தொகையை ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யுமாறும், அதனை தான் ஊர் திரும்பியதும் திருப்பித் தந்து விடுவதாகவும் தெரிவித்தார்."

" தான் அந்த குறிப்பிட்ட ஹோட்டலைத் தொடர்பு கொண்டு க்ரெடிட் கார்ட் மூலமாக ஹோட்டல் பில்லை செட்டில் செய்து விடுவதாக டாம் ஃபார்மர் தெரிவித்த போதிலும், பணமாக ஆன்லைனில் தனது வங்கிக் கணக்கிற்கு பரிவர்த்தனை செய்து விடுமாறு பார்மரை எலிஸா தொடர்ந்து வற்புறுத்தியது பார்மருக்கு சிறிதே சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே முன்பு தாம் இருவரும் எந்த நிறுவனத்திற்காகப் பணி புரிந்தோமென்றும், தாம் முதலில் எங்கு சந்தித்தோமென்றும் ஃபார்மர் எலிஸாவிடம் கேட்டார்."

" நீண்ட மெளனத்திற்குப் பிறகு சரியான பதில் கிடைத்தது.இவ்விவரம் தனது ஃபேஸ்புக் ப்ரொபைலில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று யூகித்த பார்மர், தாங்கள் முன்பு பணிபுரிந்த நிறுவனத்தின் நிறுவனர் பெயரைக் கேட்டார். ஆனால் பதில் இல்லை. "

" விஷயம் மிகவும் தெளிவு. இணையத்தில் புதிதாக உதித்திருக்கும் மோசடிக் கும்பலின் ஓர் அங்கம்தான் இந்த எலிஸா போன்றவர்கள். மிகவும் நம்பகமானவர்கள் போல் நடித்து நமது க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கவர்ந்து நம்மைச் சுரண்டும் இணையத் திருடர்கள். நமது கணினியைச் சிதைப்பது அவர்களது நோக்கமல்ல. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் நம்முடைய பணம், அவ்வளவே! மாதா மாதம் மில்லியன் டாலர் அளவில் இவர்கள் இம்மாதிரியான மோசடி வேலைகள் மூலம் பணமீட்டுகிறார்கள்."

" அமெரிக்காவின், இணையக் குற்றவியல் புகார் மையத்தின் விவரங்களின்படி, சென்ற ஆண்டு மட்டும் சுமார் 560 மில்லியன் டாலர்கள் இவ்வாறான இணைய மோசடியின் மூலம் இழக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு சோஷியல் நெட்வொர்க்கில் அங்கம் வகிப்பவர்களாக இருக்கின்றனர். இணைய மோசடியாளர்கள் இம்மாதிரியான சோஷியல் நெட்வொர்க் மூலம் அதன் பயனாளர்களுக்கு "ஸ்பைவேர்" அடங்கிய ஒரு சுட்டியை அனுப்புகின்றனர். பெரும்பாலும் ஏதேனும் கவர்ச்சி விளம்பரம் போல் தோற்றமளிக்கும் அந்த சுட்டியை அணுகுவதன் மூலம், அந்த ஸ்பைவேர் நமது கணினிக்குத் தரவிறக்கம் செய்யப்பட்டு, நமது கணினியில் இருக்கும் பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை மோசடியாளர்களுக்குத் தெரிவிக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிப்பிற்குள்ளாவது இணையத்தை அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரே."

" இங்கே நீங்கள் எவ்வாறெல்லாம் மோசடி செய்யப்படலாமென்றும், அதை தவிர்ப்பது எவ்வாறு என்றும் பார்க்கலாம்."

"ஃப்ரீ ட்ரையல் ஆஃபர்"

நீங்கள் பெரும்பாலும் இணையத்தில் இவ்வாறான ஒரு விளம்பரத்தைப் பார்க்கலாம். குறைந்த செலவில் பற்களை வெண்மையாக்குவது அல்லது ஒரே மாதத்தில் எடையைக் குறைப்பது என்பன போன்ற விளம்பரங்கள். தபாற் செலவீனங்களுக்காக வெறும் ஆறு டாலர்கள் மட்டுமே என்றெல்லாம்.

ஆனால் அதே விளம்பரத்தில் பொடியான, மற்றும் கண்களுக்குப் புலப்படாத நிறத்தில் உங்களை மேலும் 80 முதல் 100 டாலர்கள் வரை செலுத்துமாறு கேட்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலும் இவ்வாறான விளம்பரங்களை ஆர்வமுடன் அணுகுபவர்கள் அவ்விளம்பர வாசகங்கள், மற்றும் நிபந்தனைகள் எவற்றையுமே முழுமையாகப் படிப்பதில்லை. இவ்வாறானவர்களுக்குத்தான் மோசடி வலை விரிக்கின்றனர் இணையக் கொள்ளையர்கள்.

"ஹாட் ஸ்பாட் ஏமாற்று வித்தைகள்"

நீங்கள் விமான நிலையத்திலோ அல்லது காபி ஷாப்பிலோ அமர்ந்திருக்கிறீர்கள். அங்கிருக்கும் Wi-Fi தளத்தின் உதவியுடன் இணைய இணைப்பைப் பயன்படுத்துகிறீர்கள். அது சிலவேளைகளில் இலவசமாக இருக்கலாம் அல்லது கட்டணத்துடன் கூடியதாகவும் இருக்கலாம். நீங்கள் அவ்வசதி பெற்று இணையத்தில் உலவுகிறீர்கள்.....இதுவரை எல்லாமே சரிதான்.

நீங்கள் அங்கிருந்து பயன்படுத்தும் இணைய தளங்கள் அனைத்தும் நிஜமானது போலவே தோற்றமளிக்கலாம். ஆனால் அது பல சமயங்களில் மோசடியாளர்களின் லாப் டாப்களிலிருந்து இயக்கப்படுவதாகவும் இருக்கலாம். அவர்கள் உங்களுடைய சிஸ்டமில் புகுந்து உங்களுடைய வங்கி விவரங்கள் மற்றும் க்ரெடிட் கார்ட் விவரங்களைத் திருடி வேறு மோசடியாளர்களுக்கு விற்று விடுவர். இப்போதெல்லாம் இம்மாதிரியான போலி Wi-Fi ஹாட் ஸ்பாட் தளங்கள் பெருகி வருகின்றன. உண்மையானவற்றிலிருந்து இவற்றை இனம் காண்பது சற்று சிரமமானதாகவே இருக்கிறது.

"உங்களது கணினி தாக்கப்பட்டிருக்கிறது"

உங்களது கணினித் திரையில் திடீரென ஒரு தகவல் பலகை தோன்றலாம். உங்கள் கணினி ஒரு குறிப்பிட்ட வைரஸால் தாக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு நம்பகமான ஆண்டி-வைரஸ் நிறுவனத்தின் பெயரில் அறிவிப்பு வரும். உங்களது கணினியிலிருந்து அந்த வைரஸை சுத்தப்படுத்த கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும் என்று அறிவிப்பு வரும். அதைச் சொடுக்கினால் ஏதோ ஸ்கேன் செய்யப்படுவது போலவும், வைரஸ் இருப்பது போலவும் உங்களுக்குத் தெரியலாம். விஷயம் இதுதான். அந்த சுட்டியைச் சொடுக்குவதன் மூலம் உங்களது கணினியில் "malware" தரவிறக்கம் செய்ய்யப்பட்டு, உங்களுடைய க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் களவாடப்படும். ( malware எனப்படுவது ஒரு சிறிய கணினி ப்ரோக்ராம். கணினி பயனாளருக்கே தெரியாமல் கணினியில் புகுந்து உள்விவரங்களைத் திருடி எஜமானுக்கு அனுப்பும் பணியை செவ்வனே செய்யும்.)

(வெகு சமீபத்தில் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளரின் இணைய தளத்தில் மேற்கண்ட பிரச்சனை எழுந்தது. அவரின் தளத்திற்குச் சென்றவுடனேயே மேற்கண்ட வைரஸ் அறிவிப்பு தோன்றி உங்களது கணினியை ஸ்கேன் செய்யுமாறு கேட்கும்.)

"செல்போன் மோசடி"

உங்களது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்று உங்களது கிரெடிட் கார்ட் நிறுவனத்திடமிருந்து வரலாம். அதாவது உங்கள் கிரெடிட் கார்ட் தொடர்பாக கீழ்க்கண்ட எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உங்கள் விவரங்களைத் தெரிவியுங்கள் என்றோ அல்லது உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. கீழ்க்கண்ட எண்ணிற்குத் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றிடுங்கள் எனும் விதமாக.

நீங்கள் அவ்வாறான டோல் ப்ரீ எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உங்கள் க்ரெடிட் கார்ட் விவரங்களைத் தெரிவித்தீர்களோ, நீங்கள் தொலைந்தீர்கள். உங்கள் பரிசைப் பெற்றிட உங்களை ஏதாவது ஒரு தொகையை கட்டச் சொல்லியோ அல்லது ஏதாவது வாங்கச் சொல்லியோ அறிவுறுத்துவார்கள். இது ஒரு அக்மார்க் மோசடி.

(சமீபகாலமாக "நைஜீரியன் ஸ்கேம்" என்று மிகவும் புகழ்பெற்ற ஒன்று இவ்வாறான மோசடிதான். ஜாம்பியாவிலுள்ள வாரிசில்லாத செல்வந்தர் பல நூறு கோடி சொத்துக்களை விட்டு இறந்துவிட்டார். ராண்டமாக அந்த சொத்து முழுவதும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதனைப் பெற்றிட 20 லட்சம் செலுத்துங்கள் என்று சமீபகாலமாக குறுஞ்செய்திகள் மூலம் பல லட்ச ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.)

" சாரிட்டி மோசடிகள்"

உங்களுக்கு இவ்வாறான ஒரு மின்னஞ்சல் வரலாம். ஹைதி அல்லது வேறு ஏதேனும் ஒரு பிந்தங்கிய நாட்டிலுள்ள ஒரு சாரிட்டியிலிருந்து நிதி கோரி. அந்த நிதியை ஆன்லைனில் வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்யுமாறும் கோரப்பட்டிருக்கும். பெரும்பாலும் நிதி கோரும் சாரிட்டி அமைப்புகள் காசோலை அல்லது க்ரெடிட் கார்ட் மூலமாக மட்டுமே நிதிகளைப் பெறும். நிச்சயமாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெறப்படமாட்டாது. அப்படியே நீங்கள் சாரிட்டிகளுக்கு நிதியளிக்க விரும்பினாலும், அவற்றின் அதிகாரப் பூர்வ இணைய தளத்திற்குச் சென்று, அவர்கள் கூறியிருக்கும் வழியின்படி உங்களது நிதியை வழங்கலாம்.

மேற்கண்ட மோசடிகளிலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது??

* உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்களை உங்கள் பிறந்த தேதியாகவோ அல்லது எளிதில் கண்டறியக் கூடிய விதமாகவோ அமைக்க வேண்டாம்.

* பாஸ்வேர்ட் செக்யூரிட்டி கேள்வியை உங்களது தாயார் பெயராக இருக்கும்படியோ அல்லது உங்கள் குடும்ப நபரின் பெயராக இருக்கும்படியாகவோ அமைக்க வேண்டாம். உங்களது இளம்பிராய செல்லப் பெயராகவோ அல்லது வேறு ஏதேனும் எளிதில் அறியக் கூடியதாக விதமாக இல்லாததாக அமைய வேண்டும்.

* உங்களது பாஸ்வேர்ட்களை எளிதில் தெரியும் விதமாக டெஸ்க்டாப் திரைகளிலோ அல்லது டைரிகளிலோ பதிந்து வைத்திருக்க வேண்டாம்.

* ஒரே விதமான பாஸ்வேர்டை எல்லாவற்றிற்கும் பயன்படுத்த வேண்டாம்.

* உங்கள் பாஸ்வேர்ட்கள் எட்டு முதல் பதினாறு எழுத்துக்கள்வரையுள்ளதாகவும், எண்கள் மற்றும் ஆங்கில கேபிடல் மற்றும் ஸ்மால் எழுத்துக்கள் கலந்ததாகவும் இருக்க வேண்டும்.

* பதினைந்து நாட்களுக்கொருமுறையோ அல்லது மாதத்திற்கொரு முறையோ பாஸ்வேர்ட்களை மாற்றிக் கொண்டேயிருங்கள்.

* முன்பின் தெரியாத, சந்தேகத்திற்கிடமான இணைய சுட்டிகளை அணுகுவதற்கு முன்பு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

( இக்கட்டுரையின் முழுமையான வடிவம் செப்டம்பர் 2010 ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் காணக் கிடைக்கும்.)

நன்றி : ரீடர்ஸ் டைஜஸ்ட்.


12 Comments:

Prathap Kumar S. said...

சூப்பர் இட்லிவடை...உபயோகமான தவல்கள்...

யோகி said...

இப்படியெல்லாம் கூட வழி இருக்கா? நன்றி!

கௌதமன் said...

பயனுள்ள கட்டுரை. இணையம் மூலம் வங்கிக் கணக்கு பரிமாற்றங்கள் செய்பவர்களும், கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களும் அவசியம் தெரிந்துகொண்டு, ஜாக்கிரதையாக செயல்படவேண்டும்.

R Vijay said...

Dear IV,

Please post a blog about details of H1N1 vaccination centres in chennai (other than kings institute, guindy) with their address, location and contact numbers.

Hope you know that Swine Flu is slowly on the rise in our city.

Vaccination information will be very useful to all. I am sure you will be able to get the information.

Thank you.

R.Vijayaraghavan
Chennai

Anonymous said...

நல்ல பதிவு... நான் இரண்டு மெயில் வைத்திருக்கிறேன்,. ஓரே நாள் இரண்டிலும் எனக்கு பல கோடி பரிசு விழுந்திருப்பதாகத் தகவல். அனுப்யியவர்கள் வெவ்வேறு பேர்கள். ஆனால் கடிதத்தின் வாசகம்- ஸ்பெல்லிங்க் தவறுகள் உட்பட -ஒன்றுதான்.
ஆன்லனின்ல் இலவச வைரஸ் ஸ்கேன் செய்கிறேன் எண்று வரும் அறிவிப்பைப் பார்த்து மயங்கக் கூடாது. -- நலம்விரும்பி

கிரி said...

Good One!

Anonymous said...

அருமையான கட்டுரை பாராட்டுக்கள யதிராஜ்.இத்தருணத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நண்பரின் அலுவகத்தில் உள்ள ஒருவர் எந்த ஜிமெயில் ஐடி கொடுத்தாலும் அதற்கான பாஸ்வேர்டை ஒரு மணிநேரத்தில் சொல்லிவிடுகிறார்.இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. அவர் அண்ணா பல்கலைகழகத்தில் படித்தவர் என்பது கூடுதல் தகவல்.

Phishing, Keylogging, Malware தவிர்த்து ஹேக்கிங் செய்ய முடிந்தால் அது எல்லாருக்கும் பெரிய தலைவலி. Probability மூலம் ஒரு பாஸ்வேர்டை கண்டுபிடிக்க பல மணிநேரம் ஆகும்போது இது எப்படி சாத்தியம்.

என்னுடைய பேஸ்புக் அக்கொவுன்ட் சுவிர்ச்சலாந்தில் ஓபன் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாள் நான் பேஸ்புக் தளத்திற்கு போகும்போது இதை அத்தளம் தெரியபடுத்துகிறது. அதை Recognize செய்கிறீர்களா என்றும் கேட்கிறது. என்ன ஒரு careless. நான் Nimbuzz மற்றும் snaptu வில் கொடுத்த அக்கொவுண்ட information கள் லீக் ஆகிறதோ என அதை எல்லாம் டெலிட் செய்து விட்டேன்.

Third party applications அது மொபைலோ அல்லது PC யோ கவனமாக கையாளுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்

ரோமிங் ராமன் said...

மிக நல்ல கட்டுரை!!! அதுவும் இப்போதுதான் டெபிட் கார்டு மூலம் பலர் மின் வாரிய மற்றும் தொலைபேசி பில் களை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!! எல்லோரையும் எச்சரிக்கும் நல்ல தகவல்கள் நிறைந்த ஒரு பிரமாதமான இடுகை!!!-- ரோமிங் ராமன்

R.Gopi said...

மிக நல்ல கட்டுரை ....

நன்றி இட்லிவடை.........

Gaana Kabali said...

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் , வெளிநாட்டில் நிறைய பணம் சம்பாதித்தவர். இந்தியா திரும்பிவந்து விட்டார்.

அவரை phishing வலையில் விழவைத்து, அவருடைய பேங்க் கணக்கிலிருந்து 9 லக்ஷ ரூபாய் எடுக்கப்பட்டுவிட்டது. பேங்க் இதில் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டது.

சைபர் க்ரைமில் புகார் செய்து இரண்டு வருடமாகியும் இதுவரை ஒன்றும் கிடைத்தபாடில்லை.

இது போல் மற்றவர்களும் ஏமாறாமல் இருக்க உங்கள் கட்டுரை உதவும் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்! ஒரு நல்ல கட்டுரையை வழங்கியதற்காக!

Unknown said...

Mr.Vijay
H1N1 Vaccine is available at SAVEETHA MEDICA &HOSPITAL THANDALAM NEAR QUEENSLAND CONTACT NUMBER = 2681 0299/099/299 at a concessional rate of Rs 150 per person.This includes Kit & vaccination.

geeyar said...

எனது மெயில்கு வாரத்திற்கு 4,5 பரிசு மெயில்கள் வந்துவிடுகின்றன. எல்லாமே 5000000000000000..... கோடியில். ஜோசியக்காரன் சொன்ன அதிர்ஸ்டமெல்லாம் இந்த மெயிலிலே போயிடுது. சுமார் 25 மெயில் எனது மெயிலில் வைத்திருக்கின்றேன். சைபர் கிரைம்கு தொடர்பு கொண்டு இந்த மெயில்கள் பற்றியும் இவர்களை பிடிக்க என்னால் ஏதும் உதவ வேண்டுமா எனவும் அனுப்பியும் இதுவரை எந்த தகவல்களும் இல்லை. உங்கள் யாருக்கும் அதிஸ்டம் வேண்டுமெனில் உங்கங் மெயில் ஐடியை தாருங்கள் பார்வர்டு செய்கிறேன்.