பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 28, 2010

இலங்கைப் பயணம் - பகுதி 2 - ஹரன்பிரசன்னா

சென்னை, பெங்களூரு, டெல்லி புத்தகக் கண்காட்சிகளுடன் இப்புத்தகக் கண்காட்சியை என் மனம் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தது. அது எப்படி சென்னை புத்தகக் கண்காட்சியையும் கொழும்பு புத்தகக் கண்காட்சியையும் ஒப்பிடலாம் என்பவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளவும். மிகப் பெரிய அளவுகோல்கள் இல்லாமல், நாம் இதனைச் செய்யவில்லையே என்னும் பெரிய ஆதங்கமே என் ஒப்பிடுதலின் மையப்புள்ளி.

டெல்லி புத்தகக் கண்காட்சியுடன் ஒப்பிட்டால், இந்தக் கொழும்பு புத்தகக் கண்காட்சி கொஞ்சம் சிறியது. ஆனால் உள்ளரங்க அமைப்புகளின் சுத்தம், டெல்லியில் காண இயலாதது. பெங்களூரு புத்தகக் கண்காட்சி நல்ல சுத்தத்துடன் நடைபெற்றாலும், கொழும்பு புத்தகக் கண்காட்சியில் பன்னாட்டுத் தரம் அதில் இல்லை. இவற்றோடு சென்னை புத்தகக் கண்காட்சியை ஒப்பிடுவதே நாம் இவற்றுக்குச் செய்யும் அவமரியாதை என்றாலும், இப்படி ஒப்பிடாமல் நம்மால் வளர இயலாது என்பதால்... எனக்கே முடியலை. சென்னையில் 33 வருடங்களாகப் புத்தகக் கண்காட்சி நடத்துகிறோம். நமக்குத் தெரிந்ததெல்லாம் வெற்று பரப்பு அரசியல் மட்டுமே. ஒரு பதிப்பகத்துக்கு இதுக்கு மேல இடம் கொடுக்காத, அங்க அதை வைக்காத, இது யார் ஏன் உன் புத்தகத்தை விக்கிறாங்க என்பது போன்ற மிகவும் மட்டமான அரசியல் மட்டுமே நமக்குத் தெரிந்தது. ஏனென்றால் நாம் பல புத்தகக் காட்சிகளைச் சென்று பார்ப்பதில்லை. எப்படியெல்லாம் மிக மோசமாகப் பின் தங்கியிருக்கிறோம் என்று ஆராய்வதில்லை. புத்தகக் கண்காட்சியைத் திறக்க ஜெயலலிதாவோ கருணாநிதியோ வருவார்களா என்பதில் குறி வைத்துத்தான் கண்காட்சியையே தொடங்குகிறோம். புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகம் விற்பது மட்டும்தான் என்னும் ஒற்றைக் குறிக்கோளில் ஊறிப் போய் இருக்கிறோம். என்றாவது கருணாநிதியாவது ஜெயலலிதாவாவது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள கழிப்பறைக்குப் போக நேர்ந்தால் அப்போது தெரியும் அதன் அவமானம் புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்களுக்கு.

கொழும்பு புத்தகக் கண்காட்சி முழுக்க முழுக்க மையப்படுத்தப்பட்ட குளிர் சாதன அறையில் நடந்தது. விளக்குகளால் அந்த இடமே பகல் போலப் பளபளத்தது. வழியெங்கும் புத்தகக் கண்காட்சியைப் பறை சாற்றும் பதாகைகள். கண்ணில் காணும் இடமெல்லாம் விளம்பரங்கள். புத்தகக் கண்காட்சி நடக்கும் சாலையின் இரு மருங்கும் புத்தகக் கண்காட்சியைச் சொல்லும் விளம்பரங்கள். கொஞ்சம் மிகையாகச் சொல்வதென்றால், அதைப் பார்வையற்ற ஒருவரால் கூட உணர்ந்துவிடமுடியும். இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை, முக்கிய இடங்களுக்கு இரண்டு இலவசப் பேருந்துகள். தொடர்ந்து உயர்தர மொழியில் அறிவிப்புகள். சென்னை புத்தகக் கண்காட்சியில் அறிவிப்பாளர்களுக்கு விசாரணையின்றி மரண தண்டனை தரலாம். யாரோ ஒரு நிர்வாகி பேசுவார். வணக்கம். ஹலோ, கொஞ்சம் பேசாம இருங்க. வணக்கம். புத்தகக் கண்காட்சிக்கு... புத்தகக் காட்சிக்கு வந்திருப்பவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.. வரவேற்கிறோம். புத்தகங்கள் விற்பனைக்கு வைத்துள்ளது. புத்தகங்களை தொலையாமல் பார்த்துக்கொள்ளப் படுவீர்கள் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இப்படி என்னவெல்லாமோ பேசுவார்கள். பேசிக்கொண்டிருக்கும்போதே அங்க என்னப்பா என்றெல்லாம் பக்கத்தில் பேசிக்கொள்வார்கள். அதுவும் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பாகும். நீண்ட அரங்கில் பின்னால் உள்ளவர்களுக்கு அவர்கள் பேசுவதே கேட்காது. அந்த அழகில் இருக்கும் ஒலிபெருக்கிகள். கொழும்பு பன்னாட்டுப் புத்தக நிலையத்தில் இந்த ஒலிபரப்புக்க்கென்றே தனியான தனித்துவம் பெற்ற குழு. கூட்டம் உள்ள நேரத்தில் அதிக ஒலி வைத்துப் பேசினார்கள். இதெல்லாம் சின்ன விஷயம் என்னும் மனப்பான்மைதான் நம்மை நசிந்து போகச் செய்கிறது. இத்தனைக்கும் கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடப்பது இது 12ம் வருடம். 33 வருடங்கள் அனுபவம் உள்ள நாம் கிட்டத்தட்ட 20 வருடங்கள் பின் தங்கியிருக்கிறோம். குறைந்தபட்சம் இதெல்லாம் தேவை என்னும் மனப்பான்மையாவது நமது புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்களுக்கு வருமா எனத் தெரியவில்லை.

கொழும்பில் போயா நாள் (பௌர்ணம் தினம், இலங்கைத் தமிழில் பூரண தினம் என்று அறிவித்தார்கள்) விடுமுறை நாள். பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை. மது விற்கக்கூடாது, மாமிசம் விற்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டார்கள். (உண்மையா எனத் தெரியவில்லை.) தனிப்பயிற்சியும் வைக்கக்கூடாதாம். அனைவரும் புத்த விகார்களுக்குச் செல்வதற்காக இந்த ஏற்பாடாம். என்ன ஒரு அதிகாரம்! தமிழ்நாட்டில் அமாவாசை அன்று விடுமுறை விட்டு, மது விற்கக்கூடாது, கோவிலுக்குச் செல்லுங்கள் என்று சொன்னால் என்ன ஆகும்? அப்படி செய்யாமல் இருக்கும்வரை மட்டுமே நம் நாடு இந்தியா. விடுமுறை நாளில் கூட்டம் குவிந்துவிட்டது. ஒரு கட்டத்தில் ஒன்றுமே செய்ய இயலவில்லை. நாங்களே வெறும் பார்வையாளராக மாறிப் போனோம்.

பல கடைகளில் வரிசையில் நின்று உள்ளே போனார்கள். சார்சவி, எக்ஸ்போ கிராபிக்ஸ் போன்ற அரங்குகள் எல்லாம், உள்ளே நுழையும் வழியை அடைத்துவிட்டன. கடைக்குள்ளே இருப்பவர்கள் புத்தகங்களை வாங்கிவிட்டு வெளியில் வந்த பின்புதான், வெளியில் இருப்பவர்கள் உள்ளே செல்லமுடியும் என்று சொல்லிவிட்டார்கள். வெளியில் இருப்பவர்கள் பொறுமையாக வரிசையில் நின்றார்கள். சொர்க்க வாசல் திறந்ததும் பக்தர்கள் திமுதிமுவென்று உள்ளே ஓடுவது போல, அரங்கின் கதவு திறந்ததும் வெளியில் காத்திருந்தவர்கள் உள்ளே ஓடினார்கள். நம் ஊரில் இப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததே இல்லை. கிழக்கு பதிப்பகத்தின் அரங்கை மூடி வைத்து, கொஞ்சம் காத்திருங்க என்றால், யார் காத்திருப்பார்கள் என நினைத்துப் பார்த்தேன். அப்படி காத்திருக்கும் நாள்தான் பதிப்பாளர்களுக்கான பொன்னாள்.

கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் அமைப்பாளர்கள் செய்த பிழை என்றால், அரங்க நடைபாதையைச் சிறியதாக அமைத்ததுதான். இதனால் கொஞ்சம் பேர் போனாலே அங்கே ஜாம் ஆகிவிடும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலும் விடுமுறை நாள்களில் யாராவது இது குளிரூட்டப்பட்ட அறை என்று சொன்னால் சிரிப்பார்கள். அந்த அளவுக்குக் கூட்டம், வெக்கை. மற்ற நாள்களில் அதே அரங்கத்தில் குளிரில் நின்றுகொண்டிருந்தோம். தேடித் தேடி ஏசியை அணைத்தோம்.

கொழும்பு புத்தகக் கண்காட்சியின் இன்னொரு பிரச்சினை, அரசு பள்ளி கல்லூரிகளுக்குத் தரும் பண ஒதுக்கீடு. இதிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது உள்ளது.
புத்தகக் கண்காட்சியை ஒட்டி, இலங்கை முழுவதுமுள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என எல்லாவற்றுக்கும் அரசால் பண ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ், சிங்களப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 65 ஆயிரம் இலங்கை ரூபாய்! ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய். கல்லூரிகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். பல்கலைக்கழகங்கள் எவ்வளவு வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாமாம்.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டும் என்பது விதி. எனவே இந்தத் தொகையைச் செலவிட, எல்லாப் பள்ளிகளும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகின்றன. கிட்டத்தட்ட 30 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். திரிகோணமலையிலிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து என எல்லாப் பகுதியிலிருந்தும் வந்து புத்தகங்கள் வாங்கினார்கள். இதன் தோல்வி என்று நான் பார்ப்பது, இங்கே வருபவர்கள் பள்ளிக்கு என பள்ளிப் பாடங்கள் தொடர்பான புத்தகங்களை மட்டுமே வாங்குவதைத்தான். இதனால் பள்ளிகளுக்கு விற்பதற்கென்றே ஒரு சந்தை உருவாகி, அது தொடர்பான புத்தகங்களையே பதிப்பிக்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியும் இந்த அரசு கல்லூரிகளையும் பள்ளிகளையும் சார்ந்திருப்பது போன்ற தோற்றம், குறிப்பாக பதிப்பாளர்கள் மத்தியில், ஏற்பட்டுவிடுகிறது. அரசு ஒதுக்கும் பணத்தை, பள்ளிப் பாடங்கள் அல்லாத, பொதுப் புத்தகங்களை வாங்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்குமானால் அது நல்லது. இல்லையென்றால், இந்த விற்பனையை மையப்படுத்தி மட்டுமே புத்தகங்கள் தயாரிக்கும் வழக்கம் நிலைப்பெற்றுவிடும். இதில் இன்னொரு விஷயம், பில்லில் உள்ள தொகையைவிடக் குறைவாகப் பணம் கொடுத்து, பில்லில் உள்ள பணத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்வது. இதை எல்லாருமே அங்கே ஏற்றுக்கொள்கிறார்கள். இல்லை என்றால், பள்ளிகள் வேறு பதிப்பாளரிடம் இருந்து வாங்கிடுவார்கள் என்று அச்சம் கொள்கிறார்கள். எல்லா பதிப்பாளர்களும் சேர்ந்து இதனை எதிர்த்தால், பள்ளிகள் செல்ல வேறு இடமில்லை என்பது இவர்களுக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டு அரசும் புத்தகக் கண்காட்சியை ஒட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுப் பள்ளிகளுக்கும், அரசு மானியம் பெறும் பள்ளிகளுக்கும் ஒதுக்கலாம். அதனை அந்த அந்தப் பகுதியில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டும் என்று கட்டாயப் படுத்தலாம். இதனால் பள்ளிகளுக்கு புத்தகம் வாங்கும் பழக்கம் ஏற்படுவதோடு, நாமே அறியாமல் ஒரு பெரிய நூலகம் பள்ளிகள் தோறும் உருவாகும். அதுமட்டுமின்றி, எங்கெல்லாம் புத்தகக் கண்காட்சி இல்லையோ அங்கெல்லாம் நடத்தியே தீர வேண்டிய வியாபார நிர்ப்பந்தமும் ஏற்படும். இது அந்த அந்தப் பகுதி மக்களுக்கும் நல்லது. கருணாநிதியின் கால்ஷீட் வாங்குபவர்கள் இதனையும் பேசி வாங்குவது நல்லது.


நான் கொழும்பில் இருந்த மூன்று நாள்களில், முதல்நாள் மிதமான மழை. மற்ற இரண்டு நாள்கள் முழுவதும் நல்ல மழை. ஆனால் மழையோடு வாழப் பழகிவிட்டவர்கள் போல, மழை நாள்களிலும் குடையோடு புத்தகக் கண்காட்சிக்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியின் பெரிய சாதனை அதற்குக் கூடும் மக்கள் கூட்டம். விடுமுறை நாள்களில், கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு இணையான கூட்டத்தை நாம் சென்னையிலும் பார்க்கமுடியும். ஆனால் வேலை நாள்களில், கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் அதிகம். இன்னொரு ஆச்சரியம், காலை கடும் கூட்டம் தொடங்கி மாலையில் கூட்டம் ஓய்ந்துவிடுவது. சென்னையில், பெங்களூரில் எல்லாம் மாலைதான் கடும் கூட்டமே வரத் தொடங்கும்.

டெல்லியைப் போல கொழும்பிலும் பல்வேறு ஹால்களில் புத்தக அரங்கங்கள் அமைக்கப்படுவதால், சென்னை, பெங்களூருவைப் போல, இந்த வழியில் செல்லவேண்டும், நாளை அந்த வழியில் செல்லவேண்டும் என்னும் குழப்பங்கள் இல்லை. அதேபோல் ஒரு பதிப்பாளருக்கு ஓரிடம்தான் என்னும் பிரச்சினையும் இல்லை. ஒரு பதிப்பாளர் விரும்பினால் ஒவ்வொரு ஹாலிலும் அரங்கங்கள் அமைத்துக்கொள்ள முடியும். சென்னை புத்தகக் கண்காட்சியை பன்னாட்டுத் தரத்தில் டிரேட் செண்டரில் நடத்தினால், நாமும் இப்படிச் செய்யமுடியும். இல்லை என்றால், அரங்கம் எங்கே கிடைக்கிறதோ அதைப் பொருத்தே விற்பனை என்னும் நிலையை நம்மால் கடக்கவே முடியாது.

கிழக்கு அரங்கில் 5 பெண்கள் வேலை பார்த்தார்கள். சென்னையில் பெண்களை வேலைக்கு வைத்துக்கொள்வது பெரிய தொந்தரவு. (பெண்ணியவாதிகள் மன்னிக்க - இது யதார்த்தம் சார்ந்தது!) அவர்களுக்கு சரியான கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி சென்னையில் கிடையாது. மேலும் இரவு 8 மணிக்கே வீட்டுக்கு வந்து பழக்கப்பட்டுவிட்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கே இரவு 9 மணிக்கு புத்தகக் கண்காட்சி முடிந்து, பெண்கள் இரவு 11.30க்குத்தான் வீட்டுக்குப் போனார்கள். மறுநாள் காலை புத்தகக் கண்காட்சிக்கு வர 6.30 மணிக்கே தயாராகிவிடுகிறார்கள். நம் அரங்கில் ஏதேனும் பெண்களை வேலைக்கு வைத்தால், அங்கே ஓர் இளைஞன் வந்து ஏதேனும் கேள்வி கேட்டால், அந்தப் பெண் பதில் சொல்லாமல் மெல்ல விலகி விடும் ஆபத்து அதிகம். கொழும்புவில் பெண்கள் மிக சகஜமாக ஆண்களுடன் பேசுகிறார்கள். பெரிய அளவில் சங்கோஜமெல்லாம் இருக்கவில்லை. இத்தலைமுறையைச் சேர்ந்த கொழும்பு வாழ்த் தமிழ்ப் பெண்களுக்கு பெரும்பாலும் சிங்களம் தெரிந்திருக்கிறது. இதுவும் பெரிய பலம். அவர்கள் பொட்டு வைத்திருந்தால் தமிழர்கள் என்று கண்டுகொள்ளலாம் எனச் சொன்னார் ஒருவர். இது போக பொட்டு வைத்துக்கொள்ளாத கிறித்துவ, இஸ்லாமியப் பெண்களைக் கண்டுபிடிப்பது கடினம் என நினைத்துக்கொண்டேன். ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தமிழர்களே என்றும் சொன்னார் அவர். (இதையெல்லாம் நான் ஆராய்ந்து சரியா தவறா எனப் பார்க்கவில்லை. கேட்டதைப் பகிர்ந்துகொள்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்.)


கொழும்பில் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதால், எங்களால் அதிகம் வெளியில் சுற்றிப் பார்க்க இயலவில்லை. கொச்சுக்கடை சிவன் கோவிலுக்குச் சென்றோம். சூர்யாஸ் ஹோட்டலுக்குச் சென்று சைவ உணவு சாப்பிட்டோம். மதுராஸ் கடைக்குச் சென்றோம். இலங்கைக்காரர் ஒருவர் நடத்தும் ஹோட்டல், தமிழ்நாட்டு வுட்லாண்ட்ஸுடன் தொடர்புடையது என்று அங்கிருப்பவர் சொன்னார். உணவின் தரம் உயர்தரம்.கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு மயூரன் வந்திருந்தார். அவர் பத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

கொழும்பின் 50 வருடப் பாரம்பரியமுள்ள ஒரு புத்தக விற்பனையாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். இந்த பத்து நாள்களில் 10 மில்லியன் இலங்கை ரூபாய்க்கு விற்பனை நடக்கும் என்றார். 60% ஆங்கிலப் புத்தகங்கள், 40% சிங்களப் புத்தகங்கள் என்றார். அப்படியானால் 4 மில்லியன் இலங்கை ரூபாய் சிங்களப் புத்தகங்கள் விற்பனை. அதாவது கிட்டத்தட்ட 16 லட்சம் இந்திய ரூபாய்க்கு சிங்களப் புத்தகங்கள் விற்பனை மட்டும். அப்படியானால் இதைவிட மிகப் பெரிய பதிப்பகங்கள் எப்படியும் இதைப் போல 5 மடங்கு விற்பனை செய்திருக்கலாம். இதில் சோகம் என்னவென்றால், இதில் பெரிய விழுக்காடு விற்பனை பள்ளி கல்லூரிகளை நம்பி மட்டுமே என்பதுதான். பல பதிப்பகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கென தனி பில்லிங் பிரிவே வைத்திருந்தன.

சிங்கள மொழியில் நிறைய தேவையான ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன என்றும், இது தமிழில் இன்னும் நிகழவில்லை என்றும் பத்ரி சொன்னார். அதன் சாதக பாதக விஷயங்கள் குறித்தும் பேசினார். இது பற்றி பத்ரி எழுதுவார் என நினைக்கிறேன்.

நான் அங்கிருக்கும் கடைகளைச் சுற்றிப் பார்த்தேன். புத்தகங்களின் விலை ஒப்பீட்டளவில் இந்திய விலையைவிட அதிகமாகவே இருந்தன. அங்கே புத்தகம் அச்சடிக்க ஆகும் செலவே அதற்குக் காரணம் என்று ஒரு பதிப்பாளர் தெரிவித்தார். அதிலும் தமிழ்ப்புத்தகங்களை 500 என்றளவில் மட்டுமே அச்சிடுகிறார்கள் என்பதால் விலையேற்றத்தைத் தவிர்க்கமுடியவில்லை என்றார் அவர். தமிழில் நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு என்பன வெகு சொற்ப அளவிலேயே இருந்தன. இலங்கையிலேயே பதிப்பிக்கப்பட்ட தமிழ்நூல்கள் எல்லாமே ஆய்வு நோக்கிலேயே எழுதப்பட்டிருந்தன. அதனால் நான் பலவற்றை வாங்கவில்லை. இலங்கையிலேயே பதிப்பிக்கப்பட்ட தமிழ்நூல்கள் வெகு சொற்பமே. பெருமளவில் இங்கே இருந்து அங்கே சென்று விற்கப்படும் புத்தகங்களே. அவற்றை அங்கே வாங்குவதில் பொருளில்லை என்பதால் வாங்கவில்லை. இலங்கை அரசாங்கமே பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அனைத்தும் முக்கியமான நூல்கள். கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்ட இப்புத்தகங்கள், பழைய புத்தகக் கடைகளில் நிறையக் கிடைத்தன. அந்தப் பழம் தமிழில் என்னால் தொடர்ந்து எல்லாப் புத்தகங்களையும் படித்துவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு வராததால் நான் நிறைய வாங்கவில்லை. நான் வாங்கிய புத்தகங்கள்: வியத்தகு இந்தியா (கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியீடு, The wonder that was India என்னும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு, 1951ல் மொழிபெயர்க்கப்பட்டது!), அசன்பே சரித்திரம் (ஈழத்து முதல் தமிழ்நாவல் என்று அறியப்படுவது), இணைபிரியாத் தோழர் (அம்பயஹலுவோ என்னும் நன்கு அறியப்பட்ட சிங்கள சிறுவர் நாவலின் தமிழ்வடிவம்), சூள வம்சம் கூறும் இலங்கை வரலாறு (மகா வம்சம் போல, இலங்கையின் பின் வரலாற்றைச் சொல்லும் நூல் என நினைக்கிறேன், அந்த நூலில் தரப்பட்டுள்ள விவரத்தைப் பின்னர் பகிர்ந்துகொள்கிறேன்), இலங்கை நாட்டார் கதைகள் போன்றவை மட்டுமே.

அதே போல் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களை வாங்க நினைத்தேன். யாரிடம் கேட்டு எங்கே வாங்குவது எனத் தெரியவில்லை. நான் கேட்ட நண்பர்கள் எல்லாம் திரைப்படம் பார்க்காதவர்களாகவே இருந்தார்கள். அப்படியே பார்த்திருந்தாலும் விஜய், அஜித், ரஜினி, கமல் என்றுதான் சொன்னார்கள். அடுத்தமுறை வாங்கவேண்டும். யேசுராசாவின் கட்டுரை வழி, 1993 வரை 28 தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்பட்டதாக அறிகிறேன். குத்துவிளக்கு ஒரு முக்கியமான படம் என்று எழுதியிருந்தார். சில படங்கள் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும். கிடைக்கவில்லை. அல்லது நான் சரியாகத் தேடவில்லை.


இனி நான் சந்தித்த சில நண்பர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் தொடரும்...

7 Comments:

ஹரன்பிரசன்னா said...

சிறிய (!) தவறு...

//தமிழ் சிங்களப் பள்ளிகளுக்கு 65 லட்சம் இலங்கை ரூபாய். //

தமிழ், சிங்களப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 65 ஆயிரம் இலங்கை ரூபாய்!

இட்லிவடை, திருத்திவிடவும்.

கானா பிரபா said...

அதே போல் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களை வாங்க நினைத்தேன். யாரிடம் கேட்டு எங்கே வாங்குவது எனத் தெரியவில்லை. //


யாரிடமும் கேட்டாலும் வாங்கியிருக்க முடியாது, ஒரு சில படங்களைத் தவிர மற்ற எல்லாமே 83 இல் சாம்பல், அந்த ஒரு சிலவில் இரண்டு படங்கள் மட்டுமெ மூலப்பிரதியாக வெளிநாட்டில் இருக்கின்றன. விற்பனையில் பெற முடியாது

ஆகுலன் said...

மிக அருமையான விபரிப்பு.
கேட்கவே மிகவும் பெருமையாக இருக்குறது. நன்றி

செல்வா said...

உங்கள் கட்டுரை ஒரு பயண கட்டுரை போன்று சுவையாக உள்ளது. தொடர்ச்சியை ஆவலுடுன் எதிர்பார்கின்றேன்.

amuthapriyan said...

Thanks HaranPrassanna!!!!

Anonymous said...

இலங்கை தமிழனின் இன்றைய யதார்த்தம்!
http://maruaaivu.wordpress.com/2010/09/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AF/

Anonymous said...

அசின் போனா என்ன ஹரன் போனா என்ன were is endhiran FIR

u need not post this..