பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 27, 2010

இலங்கைப் பயணம் - பகுதி 1 - ஹரன்பிரசன்னா

சென்ற ஆண்டே கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருக்க வேண்டியது. எனது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டிருக்காததால் என்னால் செல்ல இயலவில்லை. இந்த முறை இலங்கைக்குச் சென்றேன். கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடக்கும் அதே தினத்தில், யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணக் கல்வியியல் கண்காட்சியும் நடைபெற்றது. அதிலும் பங்குபெற எண்ணி, இந்தமுறை கொழும்போடு யாழ்ப்பாணமும் (ஜாஃப்னா) சேர்ந்துகொண்டது எங்கள் திட்டத்தில். நான், பத்ரி, சத்ய நாராயண், மணிவண்ணன் (விற்பனை மேலாளர்), மணிகண்டன் (மார்க்கெடிங் டிசைனர்), சிவகுமார் (மண்டல விற்பனை பிரதிநிதி) என ஆறு பேர் மூன்று குழுக்களாக வேறு வேறு தினங்களில் இலங்கை சென்றோம்.

ஆய்புவன் என்ற பதாகைகளோடு வரவேற்றது கொழும்பு பன்னாட்டு விமான முனையம். எல்லா முக்கியமான இடங்களிலும் தமிழிலும் அறிவிப்பு வைத்திருந்தார்கள். சில அழகான தமிழ்ப் பயன்பாடுகளோடு, சமிஸ்கிருத பயன்பாடும் கலந்த தமிழாக இருந்தது அது. இது தரிப்பிடம் அல்ல (இது நிற்குமிடமல்ல) எனத் தொடங்கியது எங்களுக்கான இலங்கைத் தமிழ். டியூக் மோகன் எங்களை வந்து அழைத்துக்கொண்டு சென்றார். போன் பேசுவது, குறிப்பு எழுதுவது, சாலையைத் தவிர மற்ற இடங்களைப் பார்ப்பது, எங்களுடன் பேசுவது என்ற வேலைகளுக்கு இடையே, சாலையையும் பார்த்துக்கொண்டு வண்டி ஓட்டுவார். முதல் விமானப் பயணம் என்பதால் லேசாகப் பயந்தோம் என்று சொல்லிக்கொண்டு வந்த மணிகண்டன் முகத்தில் டியூக் வேன் ஓட்டுவதைக் கண்டு லேசான கலவரம் தெரிந்ததைப் பார்த்தேன். என் கண்ணிலும் அவர் அதைக் கண்டிருக்கக்கூடும்!

டியூக்குடன் பேசுவது மிக எளிது. காரணம் நீங்கள் எதுவுமே பேசவேண்டியிருக்காது. நமக்கான விஷயங்களையும் சேர்த்து அவரே பேசிவிடுவார். அவரது தமிழ் மெல்ல விளங்கத் தொடங்கியதும், இலங்கைத் தமிழில் ஒரு மணி நேரத்தில் கரை கண்டுவிட்டோமே என நினைத்துக்கொண்டேன் - யாழ்ப்பாணத்து நாதனைச் சந்திக்கும் வரை. நாதன் ஒரு சுவாரஸ்யமான மனிதர். அவருக்கு எப்படியும் 34 வயது இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தபோது, தனக்கு 44 வயது எனச் சொல்லி அதிர வைத்தார். நாங்கள் நாதனைச் சந்தித்தது யாழ்ப்பாணத்தில். கொழும்பிலிருந்து ராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் சென்றோம். இதனை ஒரு சாகசப் பயணம் என்றே சொல்லவேண்டும். 15 பேர் மட்டுமே அமரமுடியும் ஓர் சிறிய விமானம். ஒப்பீட்டளவில் ஸ்டார் சிட்டி பைக்கைவிடக் கொஞ்சம் பெரியது என்று சொல்லலாம்! இரண்டாம் விமானப் பயணமே இப்படி உயிரைப் பிடித்துக்கொண்டு போகக்கூடியதாக இருக்கும் என மணிகண்டன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நான் ஏற்கெனவே துபாயிலிருந்து கிஷ் தீவுக்கு இதுபோன்ற ஒரு விமானத்தில் சென்றிருந்ததால் எனக்கு அதிகப் பயம் ஏற்படவில்லை. ஆனால் இதற்கும் சேர்த்து வரும்போது கலங்கிவிட்டேன் என்றே சொல்லவேண்டும். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரப் பயணம். பெரும்பாலும் கடல் மீது. அங்கங்கே சிறிது சிறிதாகத் தீவுகள். புங்குடுத் தீவு, நயினாதீவு எனப் பல தீவுகள். மரத்தடி இணையக் குழுமத்தில் மதி கந்தசாமி அவரது சொந்த ஊரான புங்குடுத் தீவு குறித்து எழுதிய மிகச் சிறந்த கட்டுரை நினைவுக்கு வந்தது. சமீபத்தில் யாழ்ப்பாணத்து ராஜா தியேட்டர் பற்றி கானா பிரபா எழுதிய இடுகையும் நினைவுக்கு வந்தது. இரண்டையுமே பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாண ராணுவ மையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் வந்தோம். வழியில் திருநெல்வேலி எல்லாம் வந்தது. பாதையெங்கும் பெரிய பெரிய வீடுகள், தோட்டங்கள், ராணுவ பதுங்கு குழிகள், செல்லால் கடுமையாகத் தாக்கப்பட்டு இடிந்து கிடந்த வீடுகள் என, எங்களுக்கு, புதிய தோற்றங்கள்.

நாதன் யாழ்ப்பாணத்துத் தமிழில் பேசினார். திடீரென்று ஓ என்றும் ஓய் என்றும் சத்தங்கள் எழுப்பினார். அது ஆமாம் என்பதற்கு இணையான வார்த்தைப் புழக்கம் என்பது எங்களுக்கு மெல்லப் புரிந்தது. டியூக்கின் தமிழ் புரிந்தது பெரிய காரியமில்லை, யாழ்ப்பாணத்துத் தமிழ்தான் உண்மையான சவால் என்றும் புரிந்தது. அவர் பேசிய பல வார்த்தைகள் விளங்கவில்லை, ஓ, ஓய் தவிர. நன்கு பழகிய பின்பு, நாங்கள் அவரை ஓ என்று கிண்டல் செய்ய, அவர் ஆமாம் ஆமாம் என்று கிண்டல் செய்து பழி தீர்த்துக்கொண்டார். யாழ்ப்பாணத்து பேருந்து நிலையத்திலிருந்து நாங்கள் தங்குமிடத்துக்கு வேனில் சென்றோம். இனி அனுபவங்களை சில பகுப்புகளாக எழுதிவிடலாம் என நினைக்கிறேன். சென்றதன் முதன்மை நோக்கம் புத்தகக் கண்காட்சி என்பதால் அதிலிருந்தே தொடங்குவதான் நாம் செய்யும் தொழிலுக்கு மரியாதை!

யாழ்ப்பாணத்தில் நடந்தது கல்வியியல் புத்தகக் கண்காட்சி. பள்ளி, கல்லூரி முடித்த மாணவர்களை ஈர்த்து, அடுத்து என்ன படிக்கலாம் எனச் சொல்லும் நோக்கத்துடன் (பெரும்பாலும் வெளிநாட்டில் படிக்க அழைத்துச் செல்லும் நோக்கத்துடன்) நடக்கும் கண்காட்சி. அதில் புத்தகம் விற்கும் நோக்கத்துடன் கடை பரப்பிய ஒரே அரங்கு எங்களது மட்டுமே. முதல் நாள் நாங்கள் கிட்டத்தட்ட 40 பெட்டிகள் புத்தகங்களுடன் அங்கே புத்தகங்களை அடுக்கத் தொடங்கினோம். மற்ற அரங்குகள் எல்லாம் அரை மணி நேரத்தில் ஃபிளக்ஸ், பிட் நோட்டிஸ் என தயாராகிவிட்டன. நாங்கள் புத்தகங்களை அடுக்கி முடிக்க 5 மணி நேரம் பிடித்தது. எல்லா அரங்கு நிர்வாகிகளும் எங்களைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள். எங்களுக்கே கூட இங்கே வந்தது பிழையோ என்னும் எண்ணம் தோன்றிவிட்டது. மறுநாள் கண்காட்சி நடந்தபோது, மற்ற எந்த அரங்கிலும் கூட்டமில்லை, கிழக்கு அரங்கைத் தவிர. எல்லா அரங்குகளின் பிரதிநிதிகளும் எங்கள் அரங்கைப் பார்வையிட்டார்கள். மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்கள். அனைவரும் புத்தகங்களும் வாங்கினார்கள். இது ஒரு புதுமையான அனுபவம். உதயன் பத்திரிகையில் ஒரு விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தோம். அதனுடன் பத்ரியின் சிறிய நேர்காணலும் வந்திருந்தது. அதைப் பார்த்துவிட்டு புத்தகம் வாங்க வந்தவர்கள் பலர்.

இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகள் அங்கிருக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாக விளங்குகின்றன. இதனால் நாங்கள் தந்த விளம்பரம் பலரைச் சென்றடைந்தது. தமிழ்நாட்டு தனியார் சானல்களால் இப்போதுதான் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் இனி வரும் காலங்களில் இந்த பத்திரிகை ஒருங்கிணைப்பில் இருந்து விலகும் என்பதை நினைக்கவே வருத்தமாக இருந்தது. இலங்கையின் எழுத்தறிவு 96% முதல் 99% சதம் வரை என்று சொன்னார்கள். யாழ்ப்பாணத்து மக்கள் புத்தகம் வாசிப்பதை ஒரு முக்கியமான பழக்கமாகவே வைத்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. இன்னும் நல்ல விளம்பரம் செய்து புத்தகக் கண்காட்சி நடத்தினால் பெரிய அளவில் புத்தக விற்பனை நடைபெறும் என்பதில் ஐயமில்லை. முதல் முறை என்பதால் எங்களால் சிறப்பான முறையில் புத்தகங்களை டிஸ்பிளே செய்ய இயலவில்லை. எந்த புத்தகங்கள் விற்பனை ஆகும், ஆகாது என்பதில் குழப்பம் இருந்தது. அப்படி இருந்தும் நல்ல விற்பனை நடந்தது. எல்லாம் சரியாகச் செய்திருந்தால் இன்னும் 3 மடங்காவது விற்பனை கூடியிருக்கும்.

புத்தகக் கடைகள் என்று பார்த்தால், எனக்குத் தெரிந்து, பூபாளசிங்கம் புத்தகக் கடையும், அன்னை புத்தக நிலையமும் யாழ்ப்பாணத்தில் உள்ளன. பூபாளசிங்கம் புத்தகக் கடை இன்னொன்றும் யாழ்ப்பாணத்திலேயே உள்ளது.இரண்டுமே யாழ்ப்பாணத்து பேருந்துநிலையத்துக்கு அருகில் உள்ளன. இரண்டு கடைகளிலும் புத்தக விற்பனை நன்றாகவே நடைபெறுவதாக அறிந்தேன். இந்த இரண்டு புத்தகக் கடைகளிலும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் கிடைக்கின்றன.

இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் மரியாதையாகவே பார்த்தார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது வருத்தம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அது பேச்சில் வெளிப்பட்டாலும், நடவடிக்கையில் வெளிப்படவே இல்லை. யாழ்ப்பாணமும் தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாநிலத்தில் இருந்த உணர்வையே தந்தது. யாழ் நூலகத்துக்குச் சென்றோம். பார்வையாளர்கள் நேரத்தில் வரச் சொன்னார்கள். இரண்டாம் நாள் மீண்டும் சென்றோம். அப்போதும் பார்வையாளர்கள் நேரத்திலேயே வரச் சொன்னார்கள். அந்த நேரத்தில் புத்தகக் கண்காட்சியில் பிஸியாக இருப்போம் என்று சொல்லி, இப்போதே அனுமதிக்கக் கேட்டோம். இந்தியர்கள் இருவர் வந்திருக்கிறார்கள் என்று வெளியில் இருந்த பாதுகாவலர் அனுமதி கேட்டபோது, உள்ளிருந்து அனுமதி உடனே தரப்பட்டது. அங்கிருந்த முதன்மை நூலகரையும் சந்தித்திப் பேசினோம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. அதில் 40,000 நூல்களை மட்டுமே பட்டியலில் அச்சடித்து வைத்திருக்கிறார்களாம். மீதி புத்தகங்களையும் பட்டியலில் சேர்க்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்றார் நூலகர். அந்தப் பட்டியல் கிடைக்குமா என்று கேட்டேன். அது நூலகங்களுக்கான தனிப்பட்ட சாஃப்ட்வேர் ஃபைலாக இருப்பதாகச் சொன்னார். அதனை வாங்கிப் பயனில்லை என்பதால் விட்டுவிட்டேன். தமிழகத்தில் ஓர் அரசு அலுவலகத்தில் இது போன்று ஒரு பட்டியலையோ வேறு ஏதேனும் ஒன்றையோ கேட்டால் கொஞ்சம் பயந்துவிடுவார்கள். கொழும்பு புத்தகக் கண்காட்சியிலும், பள்ளியிலிருந்து புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வந்த தமிழ் வாத்தியார்கள் நாங்கள் கேட்ட ஆவணங்களையெல்லாம் உடனே எங்கள் பார்வைக்குத் தந்தார்கள். அவரிடம் கேட்கவேண்டும், இவரிடம் கேட்கவேண்டும் என்று சொல்லிப் பின்வாங்கவில்லை.

யாழ்ப்பாணக் கல்வியியல் கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடங்கி வைத்தார். பத்ரியும் குத்துவிளக்கு ஏற்றினார். (நல்லூரு முருகனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. பிற திருவிளையாடல்கள் பின்னர் வரும்!) கனிமொழி ராஜபக்‌ஷேவைப் பார்த்துச் சிரித்ததைக் கண்டு வெகுண்டவர்கள், பத்ரி டக்ளஸ் தேவானந்தாவுடன் சிரித்துக்கொண்டு பேசுவதைப் பார்த்து என்ன சொல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. கிழக்கு பதிப்பகம் என்பதைப் பார்த்துவிட்டு, கிழக்கு என்றால் என்ன என்று டக்ளஸ் தேவானந்தா கேட்டதாகச் சொன்னார்கள். பின்னர்தான் புரிந்தது, அங்கே கிழக்கு என்றால் மட்டக்கிளப்பு மாகாணம் என்னும் ஒரு பொருள் உண்டு என. புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்கள் பலரும் இதனைக் கேட்டார்கள்.

யாழ்ப்பாணப் புத்தகக் கண்காட்சி நடந்த ஜாஃப்னா செண்ட்ரல் காலேஜ் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ளது. ஆறுமுக நாவலர் இந்தக் கல்லூரியில்தான் பயின்றார் (அல்லது பயிற்றுவித்தார்) என நினைக்கிறேன். யாழ்ப்பாணம் வலுவான, முதன்மையான கல்வியியல் மையமாக இருந்தது என்று பத்ரி குறிப்பிட்டார். யாழ்ப்பாணப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் யேசுராசாவைச் சந்தித்தித்தோம். அவரது வழக்கமான பாணியில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அவரது கருத்துகளை மறைக்காமல் பகிர்ந்து கொண்டார். சிறீதரணின் ‘ராமாயணக் கலகம்’ குறுநாவல் பற்றி ராயர் காப்பி க்ளப்பில் படித்திருக்கிறேன். அக்கதை உள்ள புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டபோது, சிறீதரணின் கதைகளின் தொகுப்பு விரைவில் வெளிவரும் என்றும், பத்மநாப ஐயர் அதற்கான முனைப்பில் உள்ளார் என்றும் குறிப்பிட்டார். சிறீதரணின் அக்கதை, ‘கண்ணில் தெரியுது வானம்’ என்னும் தொகுப்பில் உள்ளது என்றும் சொன்னார். ‘கண்ணில் தெரியுது வானம்’ புத்தகத்தை முன்னர் எனக்கு அனுப்பியிருந்தார் பத்மநாப ஐயர். மீண்டும் படிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். யேசு ராசா பல்வேறு எழுத்தாளர்கள், இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு வேலை இருந்ததால் அவருடன் நிறைய பேசமுடியவில்லை. சிறிது நேரம் பத்ரி அவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் விடைபெற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் கோவிலுக்குப் போயே திரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. புத்தகக் கண்காட்சி 6 மணிக்கு முடியவும் முருகன் கோவில் செல்லலாம் என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் 7 மணிக்கே யாழ்ப்பாணமே கிட்டத்தட்ட உறங்கிவிடுவதால், கோவில் திறந்திருக்குமா என்ற ஐயமும், அப்படியே திறந்திருந்தாலும், அங்கிருந்து திரும்ப வர ஆட்டோ கிடைக்குமா என்ற எண்ணமும் எழுந்ததால், மறுநாள் காலை செல்லலாம் என முடிவெடுத்தோம். பத்ரியும், சத்யாவும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களும் வருவதாகச் சொன்னதும், நல்லூர் முருகனின் சக்தி எனக்குப் புரிந்துபோனது. ‘நீ பாட்டுக்கு ஒரு பக்கம் சாமி கும்பிடு, நான் இன்னொரு பக்கம் நாத்திகம் பேசறேன்’ என்றார் பத்ரி. நாத்திகம் பேசாத இடத்தில் ஆத்திகம் மனப்பதில்லை என்பதால், அதுவும் முருகனின் திருவிளையாடலில் ஒன்றே என நினைத்துக்கொண்டேன். :> கோவிலில் பத்ரி விபூதி தரித்து காட்சியளித்தார். முருகனைக் கும்பிடுவதா இவரைக் கும்பிடுவதா எனக் குழம்பிய நிலையில், இதுவும் முருகனின் திருவிளையாடல் என்னும் தெளிவு வந்தது!

நல்லூர் முருகன் கோவிலில் ஓரளவு கூட்டம் இருந்தது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளியில் கடை போட்டு, டோக்கன் போட்டு, வரிசையில் விடும் அளவுக்குக் கூட்டம் வரும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. யாழ்ப்பாணத்தில் சண்டை நடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கோவிலில் யாருமே இருக்கமாட்டார்களாம். இப்போது யுத்தம் ஓய்ந்த பிறகு கோவிலின் புனரமைப்பு வேலைகள் தொடங்கியிருக்கின்றன. அக்கோவிலின் திருவிழா நடந்து முடிந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது என்றார் அன்னை புத்தக நிலையத்தின் நிறுவனர். அந்தத் திருவிழாவை ஒட்டி அங்கே புத்தகக் கண்காட்சி நடத்தியதாகவும் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் இன்னொரு கல்லூரியில் வேறு ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அடுத்த முறை அதிலும் பங்கேற்கவேண்டும் என நினைத்துக்கொண்டோம்.

யாழ்ப்பாணத்தில் மலாயன்
என்னும் கடையில் சைவ உணவு சாப்பிட்டோம். அசைவ உணவுக் கடைக்குள் சென்றாலே மீனின் வாடை (வாசம்?!) மூக்கைத் திணறடிக்க, அக்கடையில் சைவ உணவைச் சாப்பிட என்னால் இயலவில்லை. நல்ல சைவக் கடை எது என விசாரித்து மலாயன் கடைக்குச் சென்றோம். மரக்கறி உணவு என்றார்கள். மரக்கறி என்றால் சைவம்தான் என உள்ளூரத் தோன்றினாலும், கறி என்னும் வார்த்தை கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. இலங்கையில் வெள்ளிக் கிழமைக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. அன்று, குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பலரும் மரக்கறி உணவையே சாப்பிடுகிறார்கள். அதனால் மலாயன்
கடையில் கடுமையான கூட்டம். உருண்டை உருண்டையாக சம்பா அரிசி பரிமாறி, அதன் மேலேயே ஒரு ஓரத்தில் சாம்பார், இன்னொரு ஓரத்தில் பொரியல், இன்னொரு ஓரத்தில் கூட்டு, இன்னொரு ஓரத்தில் சென்னா என எல்லாவற்றையும் பரிமாறிவிட்டார்கள். இங்கே எல்லாவற்றையும் தனித்தனியாக உண்ட எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதன் சுவை அசர வைத்துவிட்டது. இரண்டாவது முறையும் அதே போல் வாங்கி உண்டேன். மறுநாளும் அதே கடைக்கு வந்து அதே போல் சாப்பிட்டேன். அப்படி ஒரு சுவை. மலாயன் கடை மட்டும் அங்கே இல்லாவிட்டால் நான் மிகவும் ஆடிப் போயிருப்பேன். நாதனுக்கு அசைவம் இல்லாவிட்டால் உணவே உள்ளே இறங்காதாம். ஆனால் நாங்கள் அங்கிருந்த 3 நாளும் நாங்கள் சைவக் கடையில் சாப்பிட்டபோதெல்லாம் அவரும் சைவமே சாப்பிட்டார். சாப்பாடு என்றில்லாமல் டிஃபன் என்று பார்த்தால், எல்லாக் கடைகளிலும் இடியாப்பமே கிடைக்கிறது. அதுவும் சம்பா அரிசியில் செய்தது. தொட்டுக்கொள்ள எல்லா நாளும் சொதி தருகிறார்கள். நாம் சென்று அமர்ந்தவுடன் ஒரு தட்டில் 40 இடியாப்பம், 5 வடை, 5 தோசை என வைத்து விடுகிறார்கள். நமக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளவேண்டும். மீதியை எடுத்துக்கொண்டு போய், எவ்வளவு மீதி உள்ளதோ அதிலிருந்து நாம் உண்டதைக் கண்டுபிடித்து பில் போடுகிறார்கள். நாங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்பனையான புத்தகங்களை இப்படித்தான் கண்டுபிடிப்போம். இங்கே வந்தும் ரிகன்சிலேஷனா எனப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம்.

புங்குடுத் தீவு, நைனாத்தீவுக்கு செல்ல நினைத்தோம். நேரமின்மையால் செல்ல இயலவில்லை. யாழ்ப்பாணத்து இளநீரைக் குடிக்க முடியவில்லை என்று நாதனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். மறுநாள் காலை, நாங்கள் கொழும்பு செல்லும் முன்பு, இரண்டு இளநீரைக் கொண்டுவந்தார். நானும் பத்ரியும் குடித்தோம். இலங்கையில் நான் குடித்த இள நீரைப் போன்ற சுவையில் தமிழ்நாட்டில் எங்கேயும் குடித்ததில்லை. நாதனின் அன்புக்கு நன்றி சொல்லிவிட்டு, ஜாஃபனா ராணுவத் தளத்திலிருந்து கொழும்புக்கு எங்களைத் தூக்கிச் செல்லும் ராணுவ விமானத்தை நினைத்து பயந்தபடியே எங்கள் பயணத்தை கொழும்பு நோக்கித் தொடர்ந்தோம்.

யாழ்ப்பாணம் மறக்கமுடியாத ஊர்.

இனி கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்வோம்....

( தொடரும்... )

13 Comments:

Unknown said...

தமிழ்நாட்டு தனியார் சானல்களால் இப்போதுதான் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் இனி வரும் காலங்களில் இந்த பத்திரிகை ஒருங்கிணைப்பில் இருந்து விலகும் என்பதை நினைக்கவே வருத்தமாக இருந்தது. //
அங்கேயும் இதே கொடுமை தானா

Vetri said...

ஒரு வேண்டுகோள்! இலங்கையின் தற்போதைய நிலையை பற்றி சற்று விரிவாக எழுதவும்.

ஹரன்பிரசன்னா said...

நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. மன்னிக்கவும்.

லெமூரியன்... said...

இலங்கை அரசியல் நிகழ்வை பற்றி...யாழ் தமிழர்களின் தற்ப்போதைய நிலை மற்றும் அவர்களின் அரசியல் பார்வை பற்றியும் எழுதியிருப்பீர்கள் என நினைத்து வந்தேன்.....தலைப்பை பார்த்து விட்டு..

ஹரன்பிரசன்னா said...

யாழ்ப்பாணத்தில் இருந்தது மொத்தம் 2 நாள்கள். அதில் புத்தகக் கண்காட்சியில்தான் பெரும் நேரம் செலவழித்தேன். இதில் அங்கிருக்கும் தமிழ் மக்களின் வாழ்க்கை, அரசியல் பார்வையை எல்லாம் ஆய்வு செய்து சொல்ல முடியாது. நாம் பார்த்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அதை எழுதினால் அது தவறான ஒன்றாகவே இருக்கும். எனவே, இது என் அனுபவம் சார்ந்த பதிவு மட்டுமே.

Anonymous said...

கிழக்கின் இலங்கை தொடர்புடைய புத்தகங்கள் விற்பனை எப்படி? பிரபாகரன் புத்தகம்...?

தமிழர்கள் நிலை எப்படி இருக்கிறது?

தனி ஈழம்...!

வருமா?


கனவுதானா..? கானல் நீர்தானா..?

ஹரன்பிரசன்னா said...

இலங்கை தொடர்பான புத்தகங்களை - பிராபகரன், ராஜிவ் கொலை வழக்கு உட்பட - எதையும் எடுத்துச் செல்லவில்லை. அதை அங்கே விற்பதில் பிரச்சினைகள் உள்ளதாக எங்கள் விற்பனையாளர் கருதியதால் எடுத்துச் செல்லவில்லை.

கானா பிரபா said...

நைனாத்தீவுக்கு// நயினாதீவு

மலயன் கடை//மலாயன் கபே

திருத்தி விடுங்கள்

ம.தி.சுதா said...

நம்ம யாழ்ப்பாணமுல்ல யாருக்கத்தான் பிடிக்காது... அடுத்த பதிவு எப்போது... காத்திருக்கிறேன்..

பாரதி மணி said...

நல்ல பதிவு! நன்றி பத்ரி.....ஸாரி...நன்றி பிரசன்னா!

கௌதமன் said...

ட்விட்டரில் ஹ பி ட்வீட்டுகளைப் படித்ததிலிருந்தே, இந்தக் கட்டுரைக்காக ஆவலுடன் காத்திருந்தேன். மிகவும் நன்றாக எழுதி இருக்கிறார். இரண்டு நாள் பயணத்தில் இவ்வளவுதான் எழுதமுடியும் என்பது சரிதான்.

Asokaa Photo said...

நல்ல பதிவு! நன்றி ! நன்றி!..

Asokaa Photo said...

நல்ல பதிவு! நன்றி.. நன்றி...!