இலங்கையின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிப் பலர் கேட்கிறார்கள். உண்மையில் அங்கிருந்த 9 நாளில், பெரும்பாலும் புத்தகக் கண்காட்சியில் இருந்துவிட்டு, இலங்கையின் பெரும்பாலான, பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பார்க்காமல் இதைப் பற்றி எழுதுவது சரியல்ல. நான் கண்ட பகுதிகள் யாழ்ப்பாணமும், கொழும்பும்தான்.
இரண்டிலுமே பாதுகாப்பு மிக முக்கியமான விஷயமாக உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இதைவிட மிகக் கடுமையான பாதுகாப்பு இருந்ததாகவும், இப்போது மெல்ல மெல்ல பாதுகாப்பைக் குறைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள ராணுவ வீரர்களும் காவல்துறை வீரர்களும் ஒருவித அமைதியான மனநிலையில் இருப்பதாகத்தான் தோன்றியது.
போர் பற்றிய பயம் குறைந்துவிட்டதால், யாழ்ப்பாணத்தில் இரவுகளில் 9 மணி வரை எல்லாம் கடைகள் திறந்திருக்க ஆரம்பித்திருக்கின்றன. முன்பெல்லாம் கடைகளை மாலை 4 அல்லது 5 மணிக்கே பூட்டிக்கொண்டு போய்விடுவார்களாம்.
கொழும்பில் மிக இயல்பான வாழ்க்கையைப் பார்க்கமுடிந்தது. நாங்கள் வேனில் சென்றபோது கிட்டத்தட்ட 4 முறை நிறுத்தப்பட்டு, வேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனை என்றால், வேன் டிரைவரிடம் மட்டும் பேசி, ஆவணங்களைச் சரி பார்த்து அனுப்பிவிடுகிறார்கள். டிராக் மாறி வந்தால், அதிக வேகத்தில் வந்தால் உடனே அங்கே ஃபைன் கட்டச் சொல்லிவிடுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தின் விளையாட்டு மைதானங்களில் நிறைய சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. முன்பெல்லாம் விளையாடுவார்களா என்று உடனிருந்த இலங்கைத் தமிழர்களிடம் கேட்டபோது, விளையாடுவார்கள் ஆனால் எப்போது செல் வெடிக்கும் என்ற பயத்துடனேயே விளையாடுவார்கள் என்று சொன்னார்கள். இப்போது அந்தப் பயம் முற்றிலும் இல்லை.
இப்போதைக்கு இலங்கையின் முக்கியக் கவலை, அங்கிருக்கும் அண்டர் வேர்ல்ட் தாதாக்கள்தான் என்றார் ஒரு நண்பர். இவர்களை ஒழிப்பதையே இப்போதைக்கு முக்கிய லட்சியமாக அரசு வைத்திருக்கிறது என்றார் அவர். நிறையப் பேர் திடீர் திடீரென்று காணாமல் போகிறார்கள். இதைப் பற்றிய செய்தியைத் தொடர்ந்து தினசரிகளில் காணமுடிந்தது.
நாங்கள் அங்கிருந்த சமயத்தில் எதிர்பாராத விபத்தொன்றில் டேங்கர் ஒன்று வெடித்து இரண்டு சீனர்கள் உட்பட சிலர் பலியாகிவிட்டனர். கிட்டத்தட்ட அனைவருக்கும் இது சாதாரண விபத்தா அல்லது புலிகளின் எழுச்சியா என்னும் ஆசை தோய்ந்த சந்தேகம் இருப்பதை உணர முடிந்தது. ஒருவகையில் நிம்மதியுடனும் இன்னொரு நிலையில் இனி என்னாகும் என்னும் கவலையோடும் அவர்கள் இருப்பதாகத்தான் தோன்றியது. நான் பார்க்காத மற்ற இடங்களில் என்ன நிலை என்று தெரியவில்லை. மேலும், நான் பார்த்த இடங்களிலும் நான் சொன்னதுதான் சரியான நிலை என்று அறுதியிட்டும் கூற இயலவில்லை.
* - * -
இனி இங்கே எழுதப்போவது நாங்கள் கண்ட மனிதர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்டவை மட்டுமே. பெரும்பாலும் நானே நேரடியாகக் கேட்டவை, சில நான் நேரடியாகக் கேட்காமல், என்னுடன் வந்த நண்பர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டவை. இதை நான் அப்படியே பகிர்ந்துகொள்கிறேனே ஒழிய, இதன் அரசியல் சரி தவறுகளுக்குள் நான் நுழையவில்லை. இதில் உண்மை பொய் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கவில்லை. மேலும், தமிழர்கள் அவதிப்படும் இடங்களுக்குச் சென்று பார்த்தெல்லாம் எழுதவில்லை. அங்கிருந்த தமிழர்கள் ஓரிருவர் சொன்னதை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் ஆண்டுக் கணக்கோடு, நிலவியல் விவரணையோடு தெளிவாகச் சொன்னார்கள். என்னால் அதனை சரியாகச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. மேலும் அவர்களது யாழ்ப்பாண தமிழ் வழக்கு மொழி அதி வசீகரமுடையது. சோதனை என்னும் பெயரில் அதனை எழுதி அழகிய தமிழைக் கொடுமைப்படுத்த விரும்பவில்லை. எனவே அப்படியே எனக்குத் தெரிந்த தமிழில் எழுதுகிறேன். நம்மிடம் பகிர்ந்துகொண்ட நண்பர்களிடம் ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்து அதனையே வலையேற்றிவிடலாம் என்று எண்ணியபோது அனைவரும் பின்வாங்கிவிட்டார்கள். தங்கள் கருத்து உலகெங்கும் பரவவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது, (ஒருவர் ஆவேசமாக பிபிசி வரைக்கும் இதெல்லாம் தெரியணும் என்றார்) அதே சமயம் தங்கள் பெயர் வெளிவரக்கூடாது என்பதிலும் கவனம் உள்ளது. இனி நீங்களே படியுங்கள்.
அந்த நண்பருக்கு ஒரு மனைவி, மூன்று குழந்தைகள். முல்லைத்தீவில் பிறந்தவர். மட்டக்களப்பில் வாழ்பவர். வேலை நிமித்தம் சில ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்திருக்கிறார். தற்போது யாழ்ப்பாணத்தில், ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார். இன்னொருவர் வீட்டு மராமத்து வேலைகள். கலவையாக அவர்கள் தங்களது வாழ்க்கையில் இருந்து சொன்ன விஷயங்கள் இங்கே.
அவரது தம்பி இயக்கத்தைச் சேர்ந்தவர், அதாவது சேர்க்கப்பட்டவர். இயக்கத்தில் 4 மாதங்கள் மட்டுமே இருந்திருக்கிறார். காலில் ஒரு குண்டு பாய்ந்து, இன்னும் அக்குண்டு எடுக்கப்படாமலேயே உள்ளது. இப்போது அவருக்கு 29 வயது இருக்கலாம். திருமணம் ஆகிவிட்டது இப்போது. இயக்கத்தில் தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை குறைந்தபோது, இயக்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வந்து தமிழர் பகுதியில் இருக்கும் இளைஞர்களைக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். இதனை அறிந்த நம் நண்பரும் அவரது குடும்பமும், அந்த நண்பரின் தம்பியை மறைத்து வைத்துவிட்டது. இயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்தபோது அவரது தம்பி இல்லாததால், அவருக்குப் பதிலாக நம்மோடு பேசிய நண்பரையே கூட்டிக்கொண்டு போய்விட்டார்களாம். தம்பியைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, இவரைக் கூட்டிச் செல்லலாம் என்று சொல்லிவிட்டார்களாம். வேறு வழியின்றி, தம்பியை விட்டுவிட்டு, இவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி அங்கு சேர்ந்த அந்தத் தம்பி 4 மாதங்கள் அங்கே இருந்திருக்கிறார். பின்னர் கடைசி கட்டப் போரில் எப்படியோ அங்கிருந்து தப்பி வந்துவிட்டார். இயக்கத்திலுள்ளவர்களை சரணடையச் சொல்லியபோது இவரும் சரணடைந்துவிட்டார். இவர் இருந்தது 4 மாதங்கள் மட்டுமே என்பதாலும், இவர் மிக அடிப்படை நிலையில் மட்டுமே பணி புரிந்திருந்ததாலும் அவருக்கு ஒரு வருடம் 7 நாள்கள் சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார் நண்பர். இன்னும் பலர் வீட்டில் சிறார்களை அழைத்துச் சென்று, மறுநாளே ஒரு பெட்டியில் கொண்டு வந்து தருவார்களாம், அவன் இறந்துவிட்டான் என்று. இப்படி இறந்ததாக நினைத்துவிட்ட இரண்டு பையன்களை இப்போது உயிருடன் பார்த்துக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியானால் புதைக்கப்பட்டது யார் என்று தெரியவில்லை என்றார்.
யாழ்ப்பாணம் (1985?) இலங்கை அரசு வசம் இருந்த நேரம். புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வளைத்துவிட்டது. புலிகளின் கட்டளை, யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குச் செல்லவேண்டும் என்பது. அங்குள்ள தமிழ் மக்கள் புலிகளின் மீது பெரிய நம்பிக்கை இருந்ததால், கையில் கிடைத்த பொருள்களுடன் வன்னி நோக்கிச் சென்றது. கிட்டத்தட்டட் 5 லட்சம் பேர் என்றார் அவர். இரண்டு நாளாக கிட்டத்தட்ட 40 கிமீ நடந்ததாகச் சொன்னார். யார் உணவு தருவார்கள் என்றபோது, பல தமிழர்கள் அங்கங்கே உணவு உண்டாக்கிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் என்றும், வன்னியிலும் உணவெல்லாம் தயாராகவே இருந்ததாகவும் சொன்னார். ஆனால் அத்தனை எளிதில் அவர்களை வன்னிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை ராணுவம். இவர்கள் செல்லும் வழியெங்கும் குண்டுகள் வீசி, பல பொதுமக்களைக் கொன்றிருக்கிறார்கள். எப்போது என்ன நடக்கும் என்ற பதைபதைப்பில்தான் வன்னி சென்றதாகச் சொன்னார். இவர்கள் வன்னி சென்றதும், பின்னாலேயே இயக்கமும் வன்னி வந்துவிட்டது என்றும் சொன்னார்.
எப்போது எங்கே எதற்காக செல் வெடிக்கிறது என்பதே தெரியாது. வீடெங்கும் பங்கர் அமைத்து வைத்துக்கொள்வோம். கொஞ்சம் வசதி உள்ளவர்கள் பங்கரை நன்றாகவே வடிவமைத்துக்கொள்வார்கள். பலர் உடைந்துபோன பலகையின் மீது தென்னம்பாளையைப் போட்டு (இன்னும் நிறைய சொன்னார், ஞாபகமில்லை) பங்கர் உருவாக்கிக்கொள்வார்கள். செல் விழவும் குழந்தைகள் பழக்கப்படுத்தியதைப் போல அங்கே சென்று ஒளிந்துகொள்ளும். கடும் மழையில் பங்கரில் நீர் சேர்ந்திருக்கும். பாம்புகளும்கூட குடிவந்திருக்கும். அது தெரியாமல் அங்கே ஒளிந்துகொண்டு, பாம்பு கொத்தி இறந்தவர்கள் அநேகம்.
சண்டை என்பது எப்போதும் தமிழ் இயக்கங்களுக்கும் ராணுவத்துக்கும்தானே ஒழிய, தமிழ் மக்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பெரிய அளவில் இல்லை. ஒருவித இறுக்கம் இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், பெரிய பெரிய சண்டைகள் எல்லாமே இயக்கத்துக்கும் ராணுவத்துக்கும்தான் என்றார்.
கடைசி 3 மாத காலக்கட்டத்தில் ரொம்ப கஷ்டப்படுவிட்டோம். முல்லைத் தீவில் இருந்தோம். அரசு எச்சரிக்கை விட்டு சரணடையச் சொல்கிறது. இயக்கமோ எங்களை சரணடைய அனுமதிக்கவில்லை. மீறிச் சென்றால் இயக்கமே எங்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சம் நிலவியது. மட்டகளப்பு, சண்டை நடக்கும் பகுதி, அதைத் தாண்டி அந்தப் பக்கத்தில் கேம்ப். நாங்கள் இங்கிருந்து கேம்புக்குச் செல்லவேண்டும். கேம்ப்பில் இருந்து சண்டை நடக்கும் பகுதிக்கு அரணாக பல தடைகளை இயக்கம் ஏற்படுத்தியிருந்தது. சிறுவர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது. அவர்களும் சரியாகப் பயிற்சி அளிக்கப்படாதவர்கள். இயக்கத்தின் வசம் ஆளே இல்லை என்னும் நிலையில் சிறுவர்களை பணிக்கு கட்டாயமாக அமர்த்தவேண்டியது தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. இயக்கத்தைச் சேர்ந்த பலர் போரில் ஈடுபட மனமில்லாமல் ராணுவத்திடம் சரண்டைந்துகொண்டிருந்தார்கள். நம் நண்பர் முல்லைத்தீவிலிருந்து தன் மனைவி, மூன்று குழந்தைகளிடமிருந்து இயக்கத்திடமிருந்து தப்பித்து கேம்ப் சொல்ல முடிவெடுத்தார். இடையில் சிறிய சாக்கடை போன்ற ஒன்றைக் கடக்கவேண்டியிருக்கும். அங்கே இருப்பதெல்லாம் மல மூத்திரம்தான். வேறு வழியில்லை, அதனைக் கடக்கவேண்டும். நண்பர் தன் இரு மகன்களைக் கூட்டிக்கொண்டு அதில் இறங்கிவிட்டார். அவருடன் பல தமிழர்கள் அப்படிக் கடந்தார்கள். ஆனால் பாதியில் இயக்கம் தப்பிக்க நினைத்தவர்களை வளைத்து, அழைத்துக்கொண்டு சென்றுவிட்டது. நண்பரின் மனைவியும், மூன்றாவது கைக்குழந்தையும் (ஒன்றரை வருடம்) அந்தப் பக்கம் இயக்கத்தின் பக்கத்தில். எப்படியோ தப்பிய நமது நண்பரும் அவரது இரண்டு மகன்களும் இந்தப் பக்கம். ராணுவம் தப்பி வந்தவர்களையெல்லாம் வண்டி வைத்து கேம்புக்கு அழைத்துச் சென்றது. அங்கு, தப்பி வந்தவர்களிடம், இயக்கத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். தப்பி வந்தவர்களில் பலரது குடும்பம் அங்கேயே இருந்ததால், பலரும் தாங்களாகவே முன் வந்து இயக்கம் எப்படியெல்லாம் அரண் அமைத்திருக்கிறது, எந்த வழியில் சென்றால் பிடிக்கலாம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாள்களில் ராணுவம் அப்பகுதியை நோக்கி முன்னேறியது. இயக்கம் தன் பிடியில் உள்ளவர்களை இனி சமாளிக்க முடியாது என்று சொல்லி, தான் தப்பிக்க நினைத்து ஓடியிருக்கிறது. அப்போது நடந்த கடும் சண்டையில் உயிரிழந்த பொது மக்கள் பலர். நண்பரின் மனைவி தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு, தான் தப்பிக்கவேண்டிய பகுதியில் சண்டை நடப்பதால், அதன் எதிர்வழியாகச் சென்று கேம்ப்புக்குப் போய்விடலாம் என நினைத்து, எதிர்ப்பக்கமாக ஓடியிருக்கிறார். வழியெங்கும் பொது மக்களின் பிணங்கள், தலைகள், கைகள், ரத்தம். அதற்குமேல் அந்த வழிச் செல்ல முடியாது எனக் கருதி, வேறு வழியின்றி, முதலில் நண்பர் தப்பித்த அதே வழியிலேயே சென்றிருக்கிறார். அதே முத்திர மலக் குளத்தின் வழிச் செல்லும்போது, தன் முதுகில் சுமத்திக்கொண்டு வந்த கைக்குழந்தை அந்த நீரில் விழுந்துவிட, இவருக்கும் மயக்கம் வர, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. யாரோ ஒரு பெண் கைக்குழந்தையைக் கைப்பற்றித் தூக்கி எதிர்ப்புறம் விட்டிருக்கிறார். அவரே இவரது தலைமுடியைப் பிடித்துக்கொண்டு இழுத்துவந்து அக்கரையில் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். விழித்துப் பார்த்தவருக்கு பெரிய ஆச்சரியம். எப்படியோ தப்பித்து குழந்தையுடன் கேம்ப் சென்றிருக்கிறார். நமது நண்பர் ஒரு கிறித்துவர். மரியாள்தான் தன் குழந்தையைக் காப்பாற்றியது என்றும், யேசுவே தன் மனுஷி ஜீவித்திருக்கக் காரணம் என்றும் கூறினார். இப்படி தப்பித்து வந்தவர்களுள், கேம்ப் பக்கம் ஓர் ஆணும் அவரது ஒன்றரை மாத சிசுவும் மாட்டிக்கொண்டு விட்டது. மனைவியோ இயக்கத்தின் பிடியில். பசிக்கு அழும் குழந்தைக்கு, ஒரு பெண்ணைப் பிடித்து பால் புகட்டச் சொன்னதாம் ராணுவம். அன்று சமைந்த பெண்கள் பற்றியெல்லாம் பல கதைகளைச் சொன்னார் நண்பர்.
மட்டக்கிளப்பில் இருந்து கிளம்பும்போது, பெரிய குழி வெட்டி, அதனுள்ளே பாலிதீன் பையைப் போட்டு, மூன்று டிவி, கிரைண்டர் மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷினெல்லாம் போட்டு, மூடி வைத்துவிட்டு வந்தாராம். எப்படியும் சில நாள்களில் திரும்பிவிடலாம் என்று நினைத்தாராம். ஆனால் இதுவரை அங்கே திரும்ப போகமுடியவில்லை. இன்னும் ராணுவத்தின் பிடியில் இருக்கும் அப்பகுதியில், கன்னி வெடிகள் பல இருப்பதால், அதனை நீக்கிய பின்பே மக்கள் வசம் ஒப்படைப்போம் என்று ராணுவம் கூறிவருகிறதாம். அழகான வீட்டைக் கட்டி இரண்டு ஆண்டுகள் அங்கே வாழ்ந்திருக்கிறார். இலங்கை மதிப்பில் 40 லட்ச ரூபாய் வீடு. அந்த வீட்டின் புகைப்படத்தைக் காட்டினார் நண்பர். இப்போது அந்த வீடு செல்லடித்து உருவமே இழந்துவிட்டிருக்கிறதாம். மேற்கூரைகள், விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் ராணுவத்தவர்களே கொண்டு சென்றுவிடுகிறார்களாம். அவரது பைக் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு வந்தாராம். அங்குள்ள பைக்களையெல்லாம் மக்களுக்கு மீண்டும் ஒப்படைப்பது என்று ஒரு கேம்ப் நடைபெற்றதாம். அதில் ஒன்றுக்கும் ஒப்பேறாத வண்டிகளை மட்டுமே மக்களுக்குத் தந்து, பெரிய கண் துடைப்பில் ஈடுபட்டார்களாம் ராணுவத்தவர்கள். இவரது நல்ல வண்டியை அவர்கள் தரவில்லையாம் இன்னும். இதே நிலைதான் இவரது நண்பரின் நல்ல வண்டிக்குமாம். இது போல பல வீடுகளின் பொருள்கள் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லையாம்.கடைசி மூன்று மாத காலத்தில் பலசரக்குப் பொருள்களின் விலை தாறுமாறாக விற்கப்பட்டதாம். ஒரு கிலோ அரிசியின் விலை 12,000 இலங்கை ரூபாய். ஒரு கிலோ சர்க்கரையின் விலை 3,000 இலங்கை ரூபாய். கேம்பில் ராணுவம் அரிசியும் சர்க்கரையும் வழங்குமாம். அதனை வாங்க பெரிய கியூ நிற்குமாம். காலையில் சென்றால் மாலைதான் வாங்கிவரமுடியுமாம். இப்போதெல்லாம் அங்கேயே ரேஷன் கடை அமைத்து பொருள்களை விநியோகிக்கிறார்களாம். பணமில்லாதவர்கள் எப்படி வாழ்வார்கள் என்றபோது, அப்படி அப்படித்தான் என்றார். கையில் பொருள் இருப்பவர்கள் உணவு தந்து உதவுவதும் உண்டாம்.ஒரு 20க்கு 20 அறையை நான்காக துணி போட்டுப் பிரித்து, ஒவ்வொரு இடத்திலும் ஒரு குடும்பம் தங்க வைக்கப்படுமாம். சிறிய வியாதிகளுக்குப் பார்க்க அங்கேயே மருத்துவமனையும் டெண்ட் அடித்துக்கொண்டு இருக்குமாம். லட்சக் கணக்கில் அங்கு இருந்த மக்களை ஒவ்வொரு பகுதியாக பரிசோதித்து பரிசோதித்து வெளியே அனுப்பியதாம் ராணுவம். மீண்டும் விடுதலைப்புலிகளின் தலை தூக்கிவிடக்கூடாது என்பதற்காக இந்த எச்சரிக்கையாம். தற்போது அந்த முகாமில் 30,000 பேர் இருப்பதாகச் சொன்னார். (நேற்று இலங்கை அரசு வெளியிட்டிருக்கும் குறிப்பில் முகாமில் 27000 பேர் உள்ளதாக அறிவித்திருக்கிறது.) இது போக கிட்டத்தட்ட 9,000 பேர் சரண்டைந்த புலிகள் சிறைகளில் உள்ளார்கள் என்றார். நமது நண்பர் எத்தனையோ முறை மனு அளித்தும் அவரை வெளியில் விடவில்லை ராணுவம். உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, வெளியில் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்து மனைவி குழந்தையுடன் தப்பித்திருக்கிறார் நம் நண்பர். ராணுவம் மீண்டும் தேடி வரவில்லையா என்று கேட்டதற்கு, அதெல்லாம் வரமாட்டார்கள் என்றார். அவர் கேம்ப்பில் இருந்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட ஐடி கார்ட்டை எல்லாம் காட்டினார் எங்களிடம்.
ராணுவம் சண்டையின்போது பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடத்தியதும் உண்மை. அதேபோல இயக்கமும் சிறுவர்களையும் பொது மக்களையும் கேடயமாகப் பயன்படுத்தியதும் உண்மை என்றார். ராணுவம் பயன்படுத்திய குண்டு பாஸ்பரஸ் குண்டுகள். ஒரு குண்டை எறிந்தால், அது ஒன்பது குண்டாகப் பிரிந்து தாக்குமாம். மேலே பட்டால் அந்த இடமே ரணமாகிக் கொப்பளித்துவிடுமாம். (ஒருவித புன்னகையுடன், இதை சப்ளை செய்தது உங்கட இந்தியாதான் என்றார்.)
மட்டகிளப்பிலிருந்து கேம்புக்கு தப்பிப்பதைத் தடுக்க, இயக்கம் பல்வேறு யுத்திகளைச் செயல்படுத்தியதாம். அதில் ஒன்று, அங்கே இருக்கும் ராணுவத்தவர்கள் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறார்கள் என்பது. ஆனால் அப்படி நடந்தது குறைவுதான் என்றார். உடனே அப்படி நடக்கவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது, நடந்தது என்றும் சொன்னார். ஆனால் புலிகள் சொன்ன அளவு நடக்கவில்லை என்றார். சட்டென, உங்கட ஐபிகேஎஃப் செய்ததைவிடக் குறைவுதான் சிங்களவர்கள் செய்தது என்றும் சொன்னார். ஐபிகேஎஃப்பும் எல்லா இடங்களிலும் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் சில இடங்களில் மிக மோசமாக நடந்துகொண்டது என்றும் சொன்னார்.
செஞ்சோலை படுகொலை பற்றிச் சொன்னார். பள்ளியில் படிக்கும் சிறார்களை இரு நாள் பயிற்சிக்கென வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது இயக்கம். பயிற்சி கொடுத்தால் நிச்சயம் ராணுவம் அழிக்கும் என்று தெரிந்தே இதைச் செய்தார்கள். ராணுவத்துக்கு பயிற்சி பெறுவது பள்ளி சிறார்களா எனத் தெரியுமா தெரியாதா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. முதல் குண்டு விழவும், பயிற்சி அளித்தவர்கள் சிறார்களை ஓடிச் சென்று வண்டியில் ஏறச் சொன்னார்கள். பயந்து போன பிள்ளைகள் வண்டியில் ஏறவும் வண்டியிலும் குண்டு விழுந்தது. படுகொலை ராணுவம் செய்ததுதான் என்றாலும், பயிற்சிக்கென அழைத்துச் சென்றது இயக்கம்தான் என்றார்.
பிரபாகரன் இறந்த அன்று எப்படி உணர்ந்தீர்கள் என்றேன். சட்டென அவர் இறந்துட்டதா இன்னும் தெரியலையே என்றார். பின்னர், 3 மாத காலம் நடந்த சண்டையின் வெறுப்பில் பிரபாகரன் மீது கடும் கடுப்பில் இருந்தோம். ஆனால் அவர் இறந்ததாகச் சொன்ன அன்று ரொம்ப வருத்தப்பட்டோம் என்றார். இனி ஏதேனும் பிரச்சினைகள் என்றால் என்ன செய்வது என்றும் தோன்றியதாகச் சொன்னார். ஆனால் இலங்கை ராணுவம் அவரது உடல் போன்ற ஒன்றையும், அவரது முகம் போன்ற ஒன்றையும் வைத்து பொய் சொல்லிவிட்டதாகச் சொன்னார். உண்மை என்றால் ஏன் அவரது உடலை பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
பிரபாகரனைப் பாத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, 1985ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானபோது, யாழ்ப்பாணம் அருகில் ஏதோ ஒரு கோவிலில் அவர் வந்தார் என்றும், அப்போது பார்த்ததுதான் என்றும் சொன்னார். கடைசியாக இயக்கத்தில் சேர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகாலம் இயக்கத்தில் இருந்திருந்தாலும் அவரைப் பார்த்திருக்க இயன்றிருக்காது என்றார்.இனி இயக்கம் துளிர்விடுமா என்று கேட்டோம். அதற்கான வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டது அரசாங்கம் என்றார். ஒருவேளை துளிர்விட்டால் நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேட்டோம். நிச்சயம் இல்லை என்றும், தெரிந்தால் அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடுவோம் என்றும், இன்னொருமுறை இப்படி போரின் இன்னல்களைத் தாங்கிக்கொள்ள இயலாது என்றும் சொன்னார். வெளி நாட்டிலிருந்து பணம் கொடுக்கிறவர்களுக்கு இங்கே நாங்கள் படும் வேதனை புரிவதில்லை என்றார். பின்னர் மீண்டும், இனி சில வருடங்கள் கழித்து ஏதேனும் பிரச்சினை என்றால் என்ன என்ன நடக்கும் என்றெல்லாம் தெரியவில்லை என்றார்.
புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நார்வே தூதுக் குழுவின் மூலம் நடந்த போர் அமைதி உடன்படிக்கைக் காலம்தான் புலிகளுக்கு இப்படி ஒரு வீழ்ச்சியைத் தந்துவிட்டது என்று சொன்னார். கிட்டத்தட்ட 4 வருடங்கள் போரில்லாமல் பழகிவிட்டவர்கள் மீண்டும் போருக்குத் தயாராக இருக்கவில்லை. காட்டிலும் மேட்டிலும் திரிந்தவர்களுக்கு போர் என்பது எளிமையான விஷயமாக இருந்தது. அது மாறி, இனி போர் செய்ய இயலாது என்னும் நிலைமைக்குச் சென்றதும், பலர் சரணடையத் தொடங்கியதும் பெரிய இழப்பு என்றார். கருணாவை விட்டிருக்கக்கூடாது என்றார். அதுவும் பெரிய பலவீனம் என்றார். கிழக்கு பகுதியில் கருணா பொருட்படுத்தத்தக்க ஒரு பெரிய பிரிவை தன் வசம் வைத்திருந்தார் என்றார்.
அமைதி ஒப்பந்தம் இருந்த காலத்தில், இயக்கத்தின் வசம் இருந்த தமிழர் பகுதிகளுக்குள் சரக்குகள் செல்ல, இயக்கம் வரி விதித்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தரை வழியாகச் செல்ல இன்று ஓர் இரவு போதும். யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையத்தில் இப்போதெல்லாம் கொழும்பு கொழும்பு என்று பஸ்ஸில் ஏறச் சொல்லிக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது நிலைமையே வேறு. சரக்கு வண்டிகளுக்கு, ராணுவத்துக்கு ஒரு வரி, இயக்கத்துக்கு ஒரு வரி என இரு முனை வரி கட்டவேண்டும். ஒரு சரக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர 4 நாள்கள் ஆகும். 15 நாள் ஆனதெல்லாம் உண்டு. அப்படி வரும் பணம் மூலமும், வெளிநாட்டிலிருந்து வரும் உதவிப் பணம் மூலமும் இயக்கத்துக்கு பெரிய அளவில் பணம் சேர்ந்தது. கடைசி சண்டையின்போது அந்தப் பணத்தை ஆளாளுக்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு செல் பட்டு அந்தப் பணம் அப்படியே தீ பிடித்து எரிந்ததைப் பார்த்ததாகச் சொன்னார்.
தமிழ் மக்களின் இன்னல்களுக்குக் காரணம் இயக்கமா, ராணுவமா எனச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் பட்ட கஷ்டம் யாரும் பட்டிருக்கமுடியாது. இது மட்டும் உண்மை. இந்தியா எங்களை கைவிட்டுவிட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களைப் பற்றி நினைப்பே இல்லை என்றார். இன்னொரு முதியவர், இந்திரா காந்தி இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது என்றார்.
நான் மேலே சொன்னவை எல்லாம், இரண்டு மூன்று மனிதர்களின் கருத்துகள். அவர்கள் யாருமே புலி/ராணுவ/இந்திய வெறுப்பு/ஆதரவு மனநிலையில் இருந்து பேசவில்லை என்பது என் அவதானிப்பு. ஆனால், இலங்கையில் வாழ்ந்த, இலங்கையின் அரசியல் பற்றிய தொடர் அவதானிப்பில் இருப்பவர்கள் வேறு மாதிரி இதனை எதிர்கொள்ளலலாம். அதற்கான அத்தனை நியாயங்களும் இருக்கின்றன. நான் கேட்டவரையில் என் நினைவில் உள்ளதைப் பகிர்ந்திருக்கிறேன். என் அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாக எதையும் திரித்து எழுதவில்லை என்பதை மட்டும் படிப்பவர்கள் நம்பினால் போதுமானது. என்னுடன் வந்த ஐவருமோ அல்லது ஐவரில் இருவரோ இதனை நான் கேட்கும்போது கூட இருந்தார்கள் என்பது முக்கியமானது.
முற்றும் :-)
அசினுக்கு அடுத்து தைரியமாக இலங்கை சென்று வந்துள்ள ஹரன்பிரசன்னாவிற்கு வாழ்த்துகள்
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Wednesday, September 29, 2010
இலங்கைப் பயணம் - பகுதி 3 - ஹரன்பிரசன்னா
Posted by IdlyVadai at 9/29/2010 02:45:00 PM 21 comments
Labels: அனுபவம், இட்லிவடை ஸ்பெஷல், புத்தகம், ஹரன்பிரசன்னா
Tuesday, September 28, 2010
இலங்கைப் பயணம் - பகுதி 2 - ஹரன்பிரசன்னா
சென்னை, பெங்களூரு, டெல்லி புத்தகக் கண்காட்சிகளுடன் இப்புத்தகக் கண்காட்சியை என் மனம் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தது. அது எப்படி சென்னை புத்தகக் கண்காட்சியையும் கொழும்பு புத்தகக் கண்காட்சியையும் ஒப்பிடலாம் என்பவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளவும். மிகப் பெரிய அளவுகோல்கள் இல்லாமல், நாம் இதனைச் செய்யவில்லையே என்னும் பெரிய ஆதங்கமே என் ஒப்பிடுதலின் மையப்புள்ளி.
டெல்லி புத்தகக் கண்காட்சியுடன் ஒப்பிட்டால், இந்தக் கொழும்பு புத்தகக் கண்காட்சி கொஞ்சம் சிறியது. ஆனால் உள்ளரங்க அமைப்புகளின் சுத்தம், டெல்லியில் காண இயலாதது. பெங்களூரு புத்தகக் கண்காட்சி நல்ல சுத்தத்துடன் நடைபெற்றாலும், கொழும்பு புத்தகக் கண்காட்சியில் பன்னாட்டுத் தரம் அதில் இல்லை. இவற்றோடு சென்னை புத்தகக் கண்காட்சியை ஒப்பிடுவதே நாம் இவற்றுக்குச் செய்யும் அவமரியாதை என்றாலும், இப்படி ஒப்பிடாமல் நம்மால் வளர இயலாது என்பதால்... எனக்கே முடியலை. சென்னையில் 33 வருடங்களாகப் புத்தகக் கண்காட்சி நடத்துகிறோம். நமக்குத் தெரிந்ததெல்லாம் வெற்று பரப்பு அரசியல் மட்டுமே. ஒரு பதிப்பகத்துக்கு இதுக்கு மேல இடம் கொடுக்காத, அங்க அதை வைக்காத, இது யார் ஏன் உன் புத்தகத்தை விக்கிறாங்க என்பது போன்ற மிகவும் மட்டமான அரசியல் மட்டுமே நமக்குத் தெரிந்தது. ஏனென்றால் நாம் பல புத்தகக் காட்சிகளைச் சென்று பார்ப்பதில்லை. எப்படியெல்லாம் மிக மோசமாகப் பின் தங்கியிருக்கிறோம் என்று ஆராய்வதில்லை. புத்தகக் கண்காட்சியைத் திறக்க ஜெயலலிதாவோ கருணாநிதியோ வருவார்களா என்பதில் குறி வைத்துத்தான் கண்காட்சியையே தொடங்குகிறோம். புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகம் விற்பது மட்டும்தான் என்னும் ஒற்றைக் குறிக்கோளில் ஊறிப் போய் இருக்கிறோம். என்றாவது கருணாநிதியாவது ஜெயலலிதாவாவது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள கழிப்பறைக்குப் போக நேர்ந்தால் அப்போது தெரியும் அதன் அவமானம் புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்களுக்கு.
கொழும்பு புத்தகக் கண்காட்சி முழுக்க முழுக்க மையப்படுத்தப்பட்ட குளிர் சாதன அறையில் நடந்தது. விளக்குகளால் அந்த இடமே பகல் போலப் பளபளத்தது. வழியெங்கும் புத்தகக் கண்காட்சியைப் பறை சாற்றும் பதாகைகள். கண்ணில் காணும் இடமெல்லாம் விளம்பரங்கள். புத்தகக் கண்காட்சி நடக்கும் சாலையின் இரு மருங்கும் புத்தகக் கண்காட்சியைச் சொல்லும் விளம்பரங்கள். கொஞ்சம் மிகையாகச் சொல்வதென்றால், அதைப் பார்வையற்ற ஒருவரால் கூட உணர்ந்துவிடமுடியும். இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை, முக்கிய இடங்களுக்கு இரண்டு இலவசப் பேருந்துகள். தொடர்ந்து உயர்தர மொழியில் அறிவிப்புகள். சென்னை புத்தகக் கண்காட்சியில் அறிவிப்பாளர்களுக்கு விசாரணையின்றி மரண தண்டனை தரலாம். யாரோ ஒரு நிர்வாகி பேசுவார். வணக்கம். ஹலோ, கொஞ்சம் பேசாம இருங்க. வணக்கம். புத்தகக் கண்காட்சிக்கு... புத்தகக் காட்சிக்கு வந்திருப்பவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.. வரவேற்கிறோம். புத்தகங்கள் விற்பனைக்கு வைத்துள்ளது. புத்தகங்களை தொலையாமல் பார்த்துக்கொள்ளப் படுவீர்கள் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இப்படி என்னவெல்லாமோ பேசுவார்கள். பேசிக்கொண்டிருக்கும்போதே அங்க என்னப்பா என்றெல்லாம் பக்கத்தில் பேசிக்கொள்வார்கள். அதுவும் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பாகும். நீண்ட அரங்கில் பின்னால் உள்ளவர்களுக்கு அவர்கள் பேசுவதே கேட்காது. அந்த அழகில் இருக்கும் ஒலிபெருக்கிகள். கொழும்பு பன்னாட்டுப் புத்தக நிலையத்தில் இந்த ஒலிபரப்புக்க்கென்றே தனியான தனித்துவம் பெற்ற குழு. கூட்டம் உள்ள நேரத்தில் அதிக ஒலி வைத்துப் பேசினார்கள். இதெல்லாம் சின்ன விஷயம் என்னும் மனப்பான்மைதான் நம்மை நசிந்து போகச் செய்கிறது. இத்தனைக்கும் கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடப்பது இது 12ம் வருடம். 33 வருடங்கள் அனுபவம் உள்ள நாம் கிட்டத்தட்ட 20 வருடங்கள் பின் தங்கியிருக்கிறோம். குறைந்தபட்சம் இதெல்லாம் தேவை என்னும் மனப்பான்மையாவது நமது புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்களுக்கு வருமா எனத் தெரியவில்லை.
கொழும்பில் போயா நாள் (பௌர்ணம் தினம், இலங்கைத் தமிழில் பூரண தினம் என்று அறிவித்தார்கள்) விடுமுறை நாள். பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை. மது விற்கக்கூடாது, மாமிசம் விற்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டார்கள். (உண்மையா எனத் தெரியவில்லை.) தனிப்பயிற்சியும் வைக்கக்கூடாதாம். அனைவரும் புத்த விகார்களுக்குச் செல்வதற்காக இந்த ஏற்பாடாம். என்ன ஒரு அதிகாரம்! தமிழ்நாட்டில் அமாவாசை அன்று விடுமுறை விட்டு, மது விற்கக்கூடாது, கோவிலுக்குச் செல்லுங்கள் என்று சொன்னால் என்ன ஆகும்? அப்படி செய்யாமல் இருக்கும்வரை மட்டுமே நம் நாடு இந்தியா. விடுமுறை நாளில் கூட்டம் குவிந்துவிட்டது. ஒரு கட்டத்தில் ஒன்றுமே செய்ய இயலவில்லை. நாங்களே வெறும் பார்வையாளராக மாறிப் போனோம்.
பல கடைகளில் வரிசையில் நின்று உள்ளே போனார்கள். சார்சவி, எக்ஸ்போ கிராபிக்ஸ் போன்ற அரங்குகள் எல்லாம், உள்ளே நுழையும் வழியை அடைத்துவிட்டன. கடைக்குள்ளே இருப்பவர்கள் புத்தகங்களை வாங்கிவிட்டு வெளியில் வந்த பின்புதான், வெளியில் இருப்பவர்கள் உள்ளே செல்லமுடியும் என்று சொல்லிவிட்டார்கள். வெளியில் இருப்பவர்கள் பொறுமையாக வரிசையில் நின்றார்கள். சொர்க்க வாசல் திறந்ததும் பக்தர்கள் திமுதிமுவென்று உள்ளே ஓடுவது போல, அரங்கின் கதவு திறந்ததும் வெளியில் காத்திருந்தவர்கள் உள்ளே ஓடினார்கள். நம் ஊரில் இப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததே இல்லை. கிழக்கு பதிப்பகத்தின் அரங்கை மூடி வைத்து, கொஞ்சம் காத்திருங்க என்றால், யார் காத்திருப்பார்கள் என நினைத்துப் பார்த்தேன். அப்படி காத்திருக்கும் நாள்தான் பதிப்பாளர்களுக்கான பொன்னாள்.
கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் அமைப்பாளர்கள் செய்த பிழை என்றால், அரங்க நடைபாதையைச் சிறியதாக அமைத்ததுதான். இதனால் கொஞ்சம் பேர் போனாலே அங்கே ஜாம் ஆகிவிடும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலும் விடுமுறை நாள்களில் யாராவது இது குளிரூட்டப்பட்ட அறை என்று சொன்னால் சிரிப்பார்கள். அந்த அளவுக்குக் கூட்டம், வெக்கை. மற்ற நாள்களில் அதே அரங்கத்தில் குளிரில் நின்றுகொண்டிருந்தோம். தேடித் தேடி ஏசியை அணைத்தோம்.கொழும்பு புத்தகக் கண்காட்சியின் இன்னொரு பிரச்சினை, அரசு பள்ளி கல்லூரிகளுக்குத் தரும் பண ஒதுக்கீடு. இதிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது உள்ளது.
புத்தகக் கண்காட்சியை ஒட்டி, இலங்கை முழுவதுமுள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என எல்லாவற்றுக்கும் அரசால் பண ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ், சிங்களப் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 65 ஆயிரம் இலங்கை ரூபாய்! ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய். கல்லூரிகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். பல்கலைக்கழகங்கள் எவ்வளவு வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாமாம்.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டும் என்பது விதி. எனவே இந்தத் தொகையைச் செலவிட, எல்லாப் பள்ளிகளும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகின்றன. கிட்டத்தட்ட 30 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். திரிகோணமலையிலிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து என எல்லாப் பகுதியிலிருந்தும் வந்து புத்தகங்கள் வாங்கினார்கள். இதன் தோல்வி என்று நான் பார்ப்பது, இங்கே வருபவர்கள் பள்ளிக்கு என பள்ளிப் பாடங்கள் தொடர்பான புத்தகங்களை மட்டுமே வாங்குவதைத்தான். இதனால் பள்ளிகளுக்கு விற்பதற்கென்றே ஒரு சந்தை உருவாகி, அது தொடர்பான புத்தகங்களையே பதிப்பிக்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியும் இந்த அரசு கல்லூரிகளையும் பள்ளிகளையும் சார்ந்திருப்பது போன்ற தோற்றம், குறிப்பாக பதிப்பாளர்கள் மத்தியில், ஏற்பட்டுவிடுகிறது. அரசு ஒதுக்கும் பணத்தை, பள்ளிப் பாடங்கள் அல்லாத, பொதுப் புத்தகங்களை வாங்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்குமானால் அது நல்லது. இல்லையென்றால், இந்த விற்பனையை மையப்படுத்தி மட்டுமே புத்தகங்கள் தயாரிக்கும் வழக்கம் நிலைப்பெற்றுவிடும். இதில் இன்னொரு விஷயம், பில்லில் உள்ள தொகையைவிடக் குறைவாகப் பணம் கொடுத்து, பில்லில் உள்ள பணத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்வது. இதை எல்லாருமே அங்கே ஏற்றுக்கொள்கிறார்கள். இல்லை என்றால், பள்ளிகள் வேறு பதிப்பாளரிடம் இருந்து வாங்கிடுவார்கள் என்று அச்சம் கொள்கிறார்கள். எல்லா பதிப்பாளர்களும் சேர்ந்து இதனை எதிர்த்தால், பள்ளிகள் செல்ல வேறு இடமில்லை என்பது இவர்களுக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டு அரசும் புத்தகக் கண்காட்சியை ஒட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுப் பள்ளிகளுக்கும், அரசு மானியம் பெறும் பள்ளிகளுக்கும் ஒதுக்கலாம். அதனை அந்த அந்தப் பகுதியில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டும் என்று கட்டாயப் படுத்தலாம். இதனால் பள்ளிகளுக்கு புத்தகம் வாங்கும் பழக்கம் ஏற்படுவதோடு, நாமே அறியாமல் ஒரு பெரிய நூலகம் பள்ளிகள் தோறும் உருவாகும். அதுமட்டுமின்றி, எங்கெல்லாம் புத்தகக் கண்காட்சி இல்லையோ அங்கெல்லாம் நடத்தியே தீர வேண்டிய வியாபார நிர்ப்பந்தமும் ஏற்படும். இது அந்த அந்தப் பகுதி மக்களுக்கும் நல்லது. கருணாநிதியின் கால்ஷீட் வாங்குபவர்கள் இதனையும் பேசி வாங்குவது நல்லது.நான் கொழும்பில் இருந்த மூன்று நாள்களில், முதல்நாள் மிதமான மழை. மற்ற இரண்டு நாள்கள் முழுவதும் நல்ல மழை. ஆனால் மழையோடு வாழப் பழகிவிட்டவர்கள் போல, மழை நாள்களிலும் குடையோடு புத்தகக் கண்காட்சிக்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியின் பெரிய சாதனை அதற்குக் கூடும் மக்கள் கூட்டம். விடுமுறை நாள்களில், கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு இணையான கூட்டத்தை நாம் சென்னையிலும் பார்க்கமுடியும். ஆனால் வேலை நாள்களில், கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் அதிகம். இன்னொரு ஆச்சரியம், காலை கடும் கூட்டம் தொடங்கி மாலையில் கூட்டம் ஓய்ந்துவிடுவது. சென்னையில், பெங்களூரில் எல்லாம் மாலைதான் கடும் கூட்டமே வரத் தொடங்கும்.
டெல்லியைப் போல கொழும்பிலும் பல்வேறு ஹால்களில் புத்தக அரங்கங்கள் அமைக்கப்படுவதால், சென்னை, பெங்களூருவைப் போல, இந்த வழியில் செல்லவேண்டும், நாளை அந்த வழியில் செல்லவேண்டும் என்னும் குழப்பங்கள் இல்லை. அதேபோல் ஒரு பதிப்பாளருக்கு ஓரிடம்தான் என்னும் பிரச்சினையும் இல்லை. ஒரு பதிப்பாளர் விரும்பினால் ஒவ்வொரு ஹாலிலும் அரங்கங்கள் அமைத்துக்கொள்ள முடியும். சென்னை புத்தகக் கண்காட்சியை பன்னாட்டுத் தரத்தில் டிரேட் செண்டரில் நடத்தினால், நாமும் இப்படிச் செய்யமுடியும். இல்லை என்றால், அரங்கம் எங்கே கிடைக்கிறதோ அதைப் பொருத்தே விற்பனை என்னும் நிலையை நம்மால் கடக்கவே முடியாது.
கிழக்கு அரங்கில் 5 பெண்கள் வேலை பார்த்தார்கள். சென்னையில் பெண்களை வேலைக்கு வைத்துக்கொள்வது பெரிய தொந்தரவு. (பெண்ணியவாதிகள் மன்னிக்க - இது யதார்த்தம் சார்ந்தது!) அவர்களுக்கு சரியான கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி சென்னையில் கிடையாது. மேலும் இரவு 8 மணிக்கே வீட்டுக்கு வந்து பழக்கப்பட்டுவிட்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கே இரவு 9 மணிக்கு புத்தகக் கண்காட்சி முடிந்து, பெண்கள் இரவு 11.30க்குத்தான் வீட்டுக்குப் போனார்கள். மறுநாள் காலை புத்தகக் கண்காட்சிக்கு வர 6.30 மணிக்கே தயாராகிவிடுகிறார்கள். நம் அரங்கில் ஏதேனும் பெண்களை வேலைக்கு வைத்தால், அங்கே ஓர் இளைஞன் வந்து ஏதேனும் கேள்வி கேட்டால், அந்தப் பெண் பதில் சொல்லாமல் மெல்ல விலகி விடும் ஆபத்து அதிகம். கொழும்புவில் பெண்கள் மிக சகஜமாக ஆண்களுடன் பேசுகிறார்கள். பெரிய அளவில் சங்கோஜமெல்லாம் இருக்கவில்லை. இத்தலைமுறையைச் சேர்ந்த கொழும்பு வாழ்த் தமிழ்ப் பெண்களுக்கு பெரும்பாலும் சிங்களம் தெரிந்திருக்கிறது. இதுவும் பெரிய பலம். அவர்கள் பொட்டு வைத்திருந்தால் தமிழர்கள் என்று கண்டுகொள்ளலாம் எனச் சொன்னார் ஒருவர். இது போக பொட்டு வைத்துக்கொள்ளாத கிறித்துவ, இஸ்லாமியப் பெண்களைக் கண்டுபிடிப்பது கடினம் என நினைத்துக்கொண்டேன். ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தமிழர்களே என்றும் சொன்னார் அவர். (இதையெல்லாம் நான் ஆராய்ந்து சரியா தவறா எனப் பார்க்கவில்லை. கேட்டதைப் பகிர்ந்துகொள்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்.)கொழும்பில் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதால், எங்களால் அதிகம் வெளியில் சுற்றிப் பார்க்க இயலவில்லை. கொச்சுக்கடை சிவன் கோவிலுக்குச் சென்றோம். சூர்யாஸ் ஹோட்டலுக்குச் சென்று சைவ உணவு சாப்பிட்டோம். மதுராஸ் கடைக்குச் சென்றோம். இலங்கைக்காரர் ஒருவர் நடத்தும் ஹோட்டல், தமிழ்நாட்டு வுட்லாண்ட்ஸுடன் தொடர்புடையது என்று அங்கிருப்பவர் சொன்னார். உணவின் தரம் உயர்தரம்.கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு மயூரன் வந்திருந்தார். அவர் பத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
கொழும்பின் 50 வருடப் பாரம்பரியமுள்ள ஒரு புத்தக விற்பனையாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். இந்த பத்து நாள்களில் 10 மில்லியன் இலங்கை ரூபாய்க்கு விற்பனை நடக்கும் என்றார். 60% ஆங்கிலப் புத்தகங்கள், 40% சிங்களப் புத்தகங்கள் என்றார். அப்படியானால் 4 மில்லியன் இலங்கை ரூபாய் சிங்களப் புத்தகங்கள் விற்பனை. அதாவது கிட்டத்தட்ட 16 லட்சம் இந்திய ரூபாய்க்கு சிங்களப் புத்தகங்கள் விற்பனை மட்டும். அப்படியானால் இதைவிட மிகப் பெரிய பதிப்பகங்கள் எப்படியும் இதைப் போல 5 மடங்கு விற்பனை செய்திருக்கலாம். இதில் சோகம் என்னவென்றால், இதில் பெரிய விழுக்காடு விற்பனை பள்ளி கல்லூரிகளை நம்பி மட்டுமே என்பதுதான். பல பதிப்பகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கென தனி பில்லிங் பிரிவே வைத்திருந்தன.
சிங்கள மொழியில் நிறைய தேவையான ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன என்றும், இது தமிழில் இன்னும் நிகழவில்லை என்றும் பத்ரி சொன்னார். அதன் சாதக பாதக விஷயங்கள் குறித்தும் பேசினார். இது பற்றி பத்ரி எழுதுவார் என நினைக்கிறேன்.
நான் அங்கிருக்கும் கடைகளைச் சுற்றிப் பார்த்தேன். புத்தகங்களின் விலை ஒப்பீட்டளவில் இந்திய விலையைவிட அதிகமாகவே இருந்தன. அங்கே புத்தகம் அச்சடிக்க ஆகும் செலவே அதற்குக் காரணம் என்று ஒரு பதிப்பாளர் தெரிவித்தார். அதிலும் தமிழ்ப்புத்தகங்களை 500 என்றளவில் மட்டுமே அச்சிடுகிறார்கள் என்பதால் விலையேற்றத்தைத் தவிர்க்கமுடியவில்லை என்றார் அவர். தமிழில் நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு என்பன வெகு சொற்ப அளவிலேயே இருந்தன. இலங்கையிலேயே பதிப்பிக்கப்பட்ட தமிழ்நூல்கள் எல்லாமே ஆய்வு நோக்கிலேயே எழுதப்பட்டிருந்தன. அதனால் நான் பலவற்றை வாங்கவில்லை. இலங்கையிலேயே பதிப்பிக்கப்பட்ட தமிழ்நூல்கள் வெகு சொற்பமே. பெருமளவில் இங்கே இருந்து அங்கே சென்று விற்கப்படும் புத்தகங்களே. அவற்றை அங்கே வாங்குவதில் பொருளில்லை என்பதால் வாங்கவில்லை. இலங்கை அரசாங்கமே பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அனைத்தும் முக்கியமான நூல்கள். கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்ட இப்புத்தகங்கள், பழைய புத்தகக் கடைகளில் நிறையக் கிடைத்தன. அந்தப் பழம் தமிழில் என்னால் தொடர்ந்து எல்லாப் புத்தகங்களையும் படித்துவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு வராததால் நான் நிறைய வாங்கவில்லை. நான் வாங்கிய புத்தகங்கள்: வியத்தகு இந்தியா (கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியீடு, The wonder that was India என்னும் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு, 1951ல் மொழிபெயர்க்கப்பட்டது!), அசன்பே சரித்திரம் (ஈழத்து முதல் தமிழ்நாவல் என்று அறியப்படுவது), இணைபிரியாத் தோழர் (அம்பயஹலுவோ என்னும் நன்கு அறியப்பட்ட சிங்கள சிறுவர் நாவலின் தமிழ்வடிவம்), சூள வம்சம் கூறும் இலங்கை வரலாறு (மகா வம்சம் போல, இலங்கையின் பின் வரலாற்றைச் சொல்லும் நூல் என நினைக்கிறேன், அந்த நூலில் தரப்பட்டுள்ள விவரத்தைப் பின்னர் பகிர்ந்துகொள்கிறேன்), இலங்கை நாட்டார் கதைகள் போன்றவை மட்டுமே.
அதே போல் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களை வாங்க நினைத்தேன். யாரிடம் கேட்டு எங்கே வாங்குவது எனத் தெரியவில்லை. நான் கேட்ட நண்பர்கள் எல்லாம் திரைப்படம் பார்க்காதவர்களாகவே இருந்தார்கள். அப்படியே பார்த்திருந்தாலும் விஜய், அஜித், ரஜினி, கமல் என்றுதான் சொன்னார்கள். அடுத்தமுறை வாங்கவேண்டும். யேசுராசாவின் கட்டுரை வழி, 1993 வரை 28 தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்பட்டதாக அறிகிறேன். குத்துவிளக்கு ஒரு முக்கியமான படம் என்று எழுதியிருந்தார். சில படங்கள் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும். கிடைக்கவில்லை. அல்லது நான் சரியாகத் தேடவில்லை.
இனி நான் சந்தித்த சில நண்பர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் தொடரும்...
Posted by IdlyVadai at 9/28/2010 01:07:00 PM 7 comments
Labels: அனுபவம், இட்லிவடை ஸ்பெஷல், புத்தகம், ஹரன்பிரசன்னா
Monday, September 27, 2010
இலங்கைப் பயணம் - பகுதி 1 - ஹரன்பிரசன்னா
சென்ற ஆண்டே கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருக்க வேண்டியது. எனது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டிருக்காததால் என்னால் செல்ல இயலவில்லை. இந்த முறை இலங்கைக்குச் சென்றேன். கொழும்பு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடக்கும் அதே தினத்தில், யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணக் கல்வியியல் கண்காட்சியும் நடைபெற்றது. அதிலும் பங்குபெற எண்ணி, இந்தமுறை கொழும்போடு யாழ்ப்பாணமும் (ஜாஃப்னா) சேர்ந்துகொண்டது எங்கள் திட்டத்தில். நான், பத்ரி, சத்ய நாராயண், மணிவண்ணன் (விற்பனை மேலாளர்), மணிகண்டன் (மார்க்கெடிங் டிசைனர்), சிவகுமார் (மண்டல விற்பனை பிரதிநிதி) என ஆறு பேர் மூன்று குழுக்களாக வேறு வேறு தினங்களில் இலங்கை சென்றோம்.
ஆய்புவன் என்ற பதாகைகளோடு வரவேற்றது கொழும்பு பன்னாட்டு விமான முனையம். எல்லா முக்கியமான இடங்களிலும் தமிழிலும் அறிவிப்பு வைத்திருந்தார்கள். சில அழகான தமிழ்ப் பயன்பாடுகளோடு, சமிஸ்கிருத பயன்பாடும் கலந்த தமிழாக இருந்தது அது. இது தரிப்பிடம் அல்ல (இது நிற்குமிடமல்ல) எனத் தொடங்கியது எங்களுக்கான இலங்கைத் தமிழ். டியூக் மோகன் எங்களை வந்து அழைத்துக்கொண்டு சென்றார். போன் பேசுவது, குறிப்பு எழுதுவது, சாலையைத் தவிர மற்ற இடங்களைப் பார்ப்பது, எங்களுடன் பேசுவது என்ற வேலைகளுக்கு இடையே, சாலையையும் பார்த்துக்கொண்டு வண்டி ஓட்டுவார். முதல் விமானப் பயணம் என்பதால் லேசாகப் பயந்தோம் என்று சொல்லிக்கொண்டு வந்த மணிகண்டன் முகத்தில் டியூக் வேன் ஓட்டுவதைக் கண்டு லேசான கலவரம் தெரிந்ததைப் பார்த்தேன். என் கண்ணிலும் அவர் அதைக் கண்டிருக்கக்கூடும்!
டியூக்குடன் பேசுவது மிக எளிது. காரணம் நீங்கள் எதுவுமே பேசவேண்டியிருக்காது. நமக்கான விஷயங்களையும் சேர்த்து அவரே பேசிவிடுவார். அவரது தமிழ் மெல்ல விளங்கத் தொடங்கியதும், இலங்கைத் தமிழில் ஒரு மணி நேரத்தில் கரை கண்டுவிட்டோமே என நினைத்துக்கொண்டேன் - யாழ்ப்பாணத்து நாதனைச் சந்திக்கும் வரை. நாதன் ஒரு சுவாரஸ்யமான மனிதர். அவருக்கு எப்படியும் 34 வயது இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தபோது, தனக்கு 44 வயது எனச் சொல்லி அதிர வைத்தார். நாங்கள் நாதனைச் சந்தித்தது யாழ்ப்பாணத்தில். கொழும்பிலிருந்து ராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் சென்றோம். இதனை ஒரு சாகசப் பயணம் என்றே சொல்லவேண்டும். 15 பேர் மட்டுமே அமரமுடியும் ஓர் சிறிய விமானம். ஒப்பீட்டளவில் ஸ்டார் சிட்டி பைக்கைவிடக் கொஞ்சம் பெரியது என்று சொல்லலாம்! இரண்டாம் விமானப் பயணமே இப்படி உயிரைப் பிடித்துக்கொண்டு போகக்கூடியதாக இருக்கும் என மணிகண்டன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நான் ஏற்கெனவே துபாயிலிருந்து கிஷ் தீவுக்கு இதுபோன்ற ஒரு விமானத்தில் சென்றிருந்ததால் எனக்கு அதிகப் பயம் ஏற்படவில்லை. ஆனால் இதற்கும் சேர்த்து வரும்போது கலங்கிவிட்டேன் என்றே சொல்லவேண்டும். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரப் பயணம். பெரும்பாலும் கடல் மீது. அங்கங்கே சிறிது சிறிதாகத் தீவுகள். புங்குடுத் தீவு, நயினாதீவு எனப் பல தீவுகள். மரத்தடி இணையக் குழுமத்தில் மதி கந்தசாமி அவரது சொந்த ஊரான புங்குடுத் தீவு குறித்து எழுதிய மிகச் சிறந்த கட்டுரை நினைவுக்கு வந்தது. சமீபத்தில் யாழ்ப்பாணத்து ராஜா தியேட்டர் பற்றி கானா பிரபா எழுதிய இடுகையும் நினைவுக்கு வந்தது. இரண்டையுமே பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாண ராணுவ மையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் வந்தோம். வழியில் திருநெல்வேலி எல்லாம் வந்தது. பாதையெங்கும் பெரிய பெரிய வீடுகள், தோட்டங்கள், ராணுவ பதுங்கு குழிகள், செல்லால் கடுமையாகத் தாக்கப்பட்டு இடிந்து கிடந்த வீடுகள் என, எங்களுக்கு, புதிய தோற்றங்கள்.
நாதன் யாழ்ப்பாணத்துத் தமிழில் பேசினார். திடீரென்று ஓ என்றும் ஓய் என்றும் சத்தங்கள் எழுப்பினார். அது ஆமாம் என்பதற்கு இணையான வார்த்தைப் புழக்கம் என்பது எங்களுக்கு மெல்லப் புரிந்தது. டியூக்கின் தமிழ் புரிந்தது பெரிய காரியமில்லை, யாழ்ப்பாணத்துத் தமிழ்தான் உண்மையான சவால் என்றும் புரிந்தது. அவர் பேசிய பல வார்த்தைகள் விளங்கவில்லை, ஓ, ஓய் தவிர. நன்கு பழகிய பின்பு, நாங்கள் அவரை ஓ என்று கிண்டல் செய்ய, அவர் ஆமாம் ஆமாம் என்று கிண்டல் செய்து பழி தீர்த்துக்கொண்டார். யாழ்ப்பாணத்து பேருந்து நிலையத்திலிருந்து நாங்கள் தங்குமிடத்துக்கு வேனில் சென்றோம். இனி அனுபவங்களை சில பகுப்புகளாக எழுதிவிடலாம் என நினைக்கிறேன். சென்றதன் முதன்மை நோக்கம் புத்தகக் கண்காட்சி என்பதால் அதிலிருந்தே தொடங்குவதான் நாம் செய்யும் தொழிலுக்கு மரியாதை!
யாழ்ப்பாணத்தில் நடந்தது கல்வியியல் புத்தகக் கண்காட்சி. பள்ளி, கல்லூரி முடித்த மாணவர்களை ஈர்த்து, அடுத்து என்ன படிக்கலாம் எனச் சொல்லும் நோக்கத்துடன் (பெரும்பாலும் வெளிநாட்டில் படிக்க அழைத்துச் செல்லும் நோக்கத்துடன்) நடக்கும் கண்காட்சி. அதில் புத்தகம் விற்கும் நோக்கத்துடன் கடை பரப்பிய ஒரே அரங்கு எங்களது மட்டுமே. முதல் நாள் நாங்கள் கிட்டத்தட்ட 40 பெட்டிகள் புத்தகங்களுடன் அங்கே புத்தகங்களை அடுக்கத் தொடங்கினோம். மற்ற அரங்குகள் எல்லாம் அரை மணி நேரத்தில் ஃபிளக்ஸ், பிட் நோட்டிஸ் என தயாராகிவிட்டன. நாங்கள் புத்தகங்களை அடுக்கி முடிக்க 5 மணி நேரம் பிடித்தது. எல்லா அரங்கு நிர்வாகிகளும் எங்களைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள். எங்களுக்கே கூட இங்கே வந்தது பிழையோ என்னும் எண்ணம் தோன்றிவிட்டது. மறுநாள் கண்காட்சி நடந்தபோது, மற்ற எந்த அரங்கிலும் கூட்டமில்லை, கிழக்கு அரங்கைத் தவிர. எல்லா அரங்குகளின் பிரதிநிதிகளும் எங்கள் அரங்கைப் பார்வையிட்டார்கள். மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்கள். அனைவரும் புத்தகங்களும் வாங்கினார்கள். இது ஒரு புதுமையான அனுபவம். உதயன் பத்திரிகையில் ஒரு விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தோம். அதனுடன் பத்ரியின் சிறிய நேர்காணலும் வந்திருந்தது. அதைப் பார்த்துவிட்டு புத்தகம் வாங்க வந்தவர்கள் பலர்.இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகள் அங்கிருக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாக விளங்குகின்றன. இதனால் நாங்கள் தந்த விளம்பரம் பலரைச் சென்றடைந்தது. தமிழ்நாட்டு தனியார் சானல்களால் இப்போதுதான் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் இனி வரும் காலங்களில் இந்த பத்திரிகை ஒருங்கிணைப்பில் இருந்து விலகும் என்பதை நினைக்கவே வருத்தமாக இருந்தது. இலங்கையின் எழுத்தறிவு 96% முதல் 99% சதம் வரை என்று சொன்னார்கள். யாழ்ப்பாணத்து மக்கள் புத்தகம் வாசிப்பதை ஒரு முக்கியமான பழக்கமாகவே வைத்திருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. இன்னும் நல்ல விளம்பரம் செய்து புத்தகக் கண்காட்சி நடத்தினால் பெரிய அளவில் புத்தக விற்பனை நடைபெறும் என்பதில் ஐயமில்லை. முதல் முறை என்பதால் எங்களால் சிறப்பான முறையில் புத்தகங்களை டிஸ்பிளே செய்ய இயலவில்லை. எந்த புத்தகங்கள் விற்பனை ஆகும், ஆகாது என்பதில் குழப்பம் இருந்தது. அப்படி இருந்தும் நல்ல விற்பனை நடந்தது. எல்லாம் சரியாகச் செய்திருந்தால் இன்னும் 3 மடங்காவது விற்பனை கூடியிருக்கும்.
புத்தகக் கடைகள் என்று பார்த்தால், எனக்குத் தெரிந்து, பூபாளசிங்கம் புத்தகக் கடையும், அன்னை புத்தக நிலையமும் யாழ்ப்பாணத்தில் உள்ளன. பூபாளசிங்கம் புத்தகக் கடை இன்னொன்றும் யாழ்ப்பாணத்திலேயே உள்ளது.இரண்டுமே யாழ்ப்பாணத்து பேருந்துநிலையத்துக்கு அருகில் உள்ளன. இரண்டு கடைகளிலும் புத்தக விற்பனை நன்றாகவே நடைபெறுவதாக அறிந்தேன். இந்த இரண்டு புத்தகக் கடைகளிலும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் கிடைக்கின்றன.
இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் மரியாதையாகவே பார்த்தார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது வருத்தம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அது பேச்சில் வெளிப்பட்டாலும், நடவடிக்கையில் வெளிப்படவே இல்லை. யாழ்ப்பாணமும் தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாநிலத்தில் இருந்த உணர்வையே தந்தது. யாழ் நூலகத்துக்குச் சென்றோம். பார்வையாளர்கள் நேரத்தில் வரச் சொன்னார்கள். இரண்டாம் நாள் மீண்டும் சென்றோம். அப்போதும் பார்வையாளர்கள் நேரத்திலேயே வரச் சொன்னார்கள். அந்த நேரத்தில் புத்தகக் கண்காட்சியில் பிஸியாக இருப்போம் என்று சொல்லி, இப்போதே அனுமதிக்கக் கேட்டோம். இந்தியர்கள் இருவர் வந்திருக்கிறார்கள் என்று வெளியில் இருந்த பாதுகாவலர் அனுமதி கேட்டபோது, உள்ளிருந்து அனுமதி உடனே தரப்பட்டது. அங்கிருந்த முதன்மை நூலகரையும் சந்தித்திப் பேசினோம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. அதில் 40,000 நூல்களை மட்டுமே பட்டியலில் அச்சடித்து வைத்திருக்கிறார்களாம். மீதி புத்தகங்களையும் பட்டியலில் சேர்க்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்றார் நூலகர். அந்தப் பட்டியல் கிடைக்குமா என்று கேட்டேன். அது நூலகங்களுக்கான தனிப்பட்ட சாஃப்ட்வேர் ஃபைலாக இருப்பதாகச் சொன்னார். அதனை வாங்கிப் பயனில்லை என்பதால் விட்டுவிட்டேன். தமிழகத்தில் ஓர் அரசு அலுவலகத்தில் இது போன்று ஒரு பட்டியலையோ வேறு ஏதேனும் ஒன்றையோ கேட்டால் கொஞ்சம் பயந்துவிடுவார்கள். கொழும்பு புத்தகக் கண்காட்சியிலும், பள்ளியிலிருந்து புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வந்த தமிழ் வாத்தியார்கள் நாங்கள் கேட்ட ஆவணங்களையெல்லாம் உடனே எங்கள் பார்வைக்குத் தந்தார்கள். அவரிடம் கேட்கவேண்டும், இவரிடம் கேட்கவேண்டும் என்று சொல்லிப் பின்வாங்கவில்லை.
யாழ்ப்பாணக் கல்வியியல் கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடங்கி வைத்தார். பத்ரியும் குத்துவிளக்கு ஏற்றினார். (நல்லூரு முருகனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. பிற திருவிளையாடல்கள் பின்னர் வரும்!) கனிமொழி ராஜபக்ஷேவைப் பார்த்துச் சிரித்ததைக் கண்டு வெகுண்டவர்கள், பத்ரி டக்ளஸ் தேவானந்தாவுடன் சிரித்துக்கொண்டு பேசுவதைப் பார்த்து என்ன சொல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. கிழக்கு பதிப்பகம் என்பதைப் பார்த்துவிட்டு, கிழக்கு என்றால் என்ன என்று டக்ளஸ் தேவானந்தா கேட்டதாகச் சொன்னார்கள். பின்னர்தான் புரிந்தது, அங்கே கிழக்கு என்றால் மட்டக்கிளப்பு மாகாணம் என்னும் ஒரு பொருள் உண்டு என. புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்கள் பலரும் இதனைக் கேட்டார்கள்.யாழ்ப்பாணப் புத்தகக் கண்காட்சி நடந்த ஜாஃப்னா செண்ட்ரல் காலேஜ் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ளது. ஆறுமுக நாவலர் இந்தக் கல்லூரியில்தான் பயின்றார் (அல்லது பயிற்றுவித்தார்) என நினைக்கிறேன். யாழ்ப்பாணம் வலுவான, முதன்மையான கல்வியியல் மையமாக இருந்தது என்று பத்ரி குறிப்பிட்டார். யாழ்ப்பாணப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் யேசுராசாவைச் சந்தித்தித்தோம். அவரது வழக்கமான பாணியில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அவரது கருத்துகளை மறைக்காமல் பகிர்ந்து கொண்டார். சிறீதரணின் ‘ராமாயணக் கலகம்’ குறுநாவல் பற்றி ராயர் காப்பி க்ளப்பில் படித்திருக்கிறேன். அக்கதை உள்ள புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டபோது, சிறீதரணின் கதைகளின் தொகுப்பு விரைவில் வெளிவரும் என்றும், பத்மநாப ஐயர் அதற்கான முனைப்பில் உள்ளார் என்றும் குறிப்பிட்டார். சிறீதரணின் அக்கதை, ‘கண்ணில் தெரியுது வானம்’ என்னும் தொகுப்பில் உள்ளது என்றும் சொன்னார். ‘கண்ணில் தெரியுது வானம்’ புத்தகத்தை முன்னர் எனக்கு அனுப்பியிருந்தார் பத்மநாப ஐயர். மீண்டும் படிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். யேசு ராசா பல்வேறு எழுத்தாளர்கள், இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு வேலை இருந்ததால் அவருடன் நிறைய பேசமுடியவில்லை. சிறிது நேரம் பத்ரி அவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் விடைபெற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் கோவிலுக்குப் போயே திரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. புத்தகக் கண்காட்சி 6 மணிக்கு முடியவும் முருகன் கோவில் செல்லலாம் என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் 7 மணிக்கே யாழ்ப்பாணமே கிட்டத்தட்ட உறங்கிவிடுவதால், கோவில் திறந்திருக்குமா என்ற ஐயமும், அப்படியே திறந்திருந்தாலும், அங்கிருந்து திரும்ப வர ஆட்டோ கிடைக்குமா என்ற எண்ணமும் எழுந்ததால், மறுநாள் காலை செல்லலாம் என முடிவெடுத்தோம். பத்ரியும், சத்யாவும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களும் வருவதாகச் சொன்னதும், நல்லூர் முருகனின் சக்தி எனக்குப் புரிந்துபோனது. ‘நீ பாட்டுக்கு ஒரு பக்கம் சாமி கும்பிடு, நான் இன்னொரு பக்கம் நாத்திகம் பேசறேன்’ என்றார் பத்ரி. நாத்திகம் பேசாத இடத்தில் ஆத்திகம் மனப்பதில்லை என்பதால், அதுவும் முருகனின் திருவிளையாடலில் ஒன்றே என நினைத்துக்கொண்டேன். :> கோவிலில் பத்ரி விபூதி தரித்து காட்சியளித்தார். முருகனைக் கும்பிடுவதா இவரைக் கும்பிடுவதா எனக் குழம்பிய நிலையில், இதுவும் முருகனின் திருவிளையாடல் என்னும் தெளிவு வந்தது!
நல்லூர் முருகன் கோவிலில் ஓரளவு கூட்டம் இருந்தது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளியில் கடை போட்டு, டோக்கன் போட்டு, வரிசையில் விடும் அளவுக்குக் கூட்டம் வரும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. யாழ்ப்பாணத்தில் சண்டை நடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கோவிலில் யாருமே இருக்கமாட்டார்களாம். இப்போது யுத்தம் ஓய்ந்த பிறகு கோவிலின் புனரமைப்பு வேலைகள் தொடங்கியிருக்கின்றன. அக்கோவிலின் திருவிழா நடந்து முடிந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது என்றார் அன்னை புத்தக நிலையத்தின் நிறுவனர். அந்தத் திருவிழாவை ஒட்டி அங்கே புத்தகக் கண்காட்சி நடத்தியதாகவும் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் இன்னொரு கல்லூரியில் வேறு ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அடுத்த முறை அதிலும் பங்கேற்கவேண்டும் என நினைத்துக்கொண்டோம்.யாழ்ப்பாணத்தில் மலாயன்
என்னும் கடையில் சைவ உணவு சாப்பிட்டோம். அசைவ உணவுக் கடைக்குள் சென்றாலே மீனின் வாடை (வாசம்?!) மூக்கைத் திணறடிக்க, அக்கடையில் சைவ உணவைச் சாப்பிட என்னால் இயலவில்லை. நல்ல சைவக் கடை எது என விசாரித்து மலாயன் கடைக்குச் சென்றோம். மரக்கறி உணவு என்றார்கள். மரக்கறி என்றால் சைவம்தான் என உள்ளூரத் தோன்றினாலும், கறி என்னும் வார்த்தை கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. இலங்கையில் வெள்ளிக் கிழமைக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. அன்று, குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பலரும் மரக்கறி உணவையே சாப்பிடுகிறார்கள். அதனால் மலாயன்
கடையில் கடுமையான கூட்டம். உருண்டை உருண்டையாக சம்பா அரிசி பரிமாறி, அதன் மேலேயே ஒரு ஓரத்தில் சாம்பார், இன்னொரு ஓரத்தில் பொரியல், இன்னொரு ஓரத்தில் கூட்டு, இன்னொரு ஓரத்தில் சென்னா என எல்லாவற்றையும் பரிமாறிவிட்டார்கள். இங்கே எல்லாவற்றையும் தனித்தனியாக உண்ட எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதன் சுவை அசர வைத்துவிட்டது. இரண்டாவது முறையும் அதே போல் வாங்கி உண்டேன். மறுநாளும் அதே கடைக்கு வந்து அதே போல் சாப்பிட்டேன். அப்படி ஒரு சுவை. மலாயன் கடை மட்டும் அங்கே இல்லாவிட்டால் நான் மிகவும் ஆடிப் போயிருப்பேன். நாதனுக்கு அசைவம் இல்லாவிட்டால் உணவே உள்ளே இறங்காதாம். ஆனால் நாங்கள் அங்கிருந்த 3 நாளும் நாங்கள் சைவக் கடையில் சாப்பிட்டபோதெல்லாம் அவரும் சைவமே சாப்பிட்டார். சாப்பாடு என்றில்லாமல் டிஃபன் என்று பார்த்தால், எல்லாக் கடைகளிலும் இடியாப்பமே கிடைக்கிறது. அதுவும் சம்பா அரிசியில் செய்தது. தொட்டுக்கொள்ள எல்லா நாளும் சொதி தருகிறார்கள். நாம் சென்று அமர்ந்தவுடன் ஒரு தட்டில் 40 இடியாப்பம், 5 வடை, 5 தோசை என வைத்து விடுகிறார்கள். நமக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளவேண்டும். மீதியை எடுத்துக்கொண்டு போய், எவ்வளவு மீதி உள்ளதோ அதிலிருந்து நாம் உண்டதைக் கண்டுபிடித்து பில் போடுகிறார்கள். நாங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்பனையான புத்தகங்களை இப்படித்தான் கண்டுபிடிப்போம். இங்கே வந்தும் ரிகன்சிலேஷனா எனப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம்.
புங்குடுத் தீவு, நைனாத்தீவுக்கு செல்ல நினைத்தோம். நேரமின்மையால் செல்ல இயலவில்லை. யாழ்ப்பாணத்து இளநீரைக் குடிக்க முடியவில்லை என்று நாதனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். மறுநாள் காலை, நாங்கள் கொழும்பு செல்லும் முன்பு, இரண்டு இளநீரைக் கொண்டுவந்தார். நானும் பத்ரியும் குடித்தோம். இலங்கையில் நான் குடித்த இள நீரைப் போன்ற சுவையில் தமிழ்நாட்டில் எங்கேயும் குடித்ததில்லை. நாதனின் அன்புக்கு நன்றி சொல்லிவிட்டு, ஜாஃபனா ராணுவத் தளத்திலிருந்து கொழும்புக்கு எங்களைத் தூக்கிச் செல்லும் ராணுவ விமானத்தை நினைத்து பயந்தபடியே எங்கள் பயணத்தை கொழும்பு நோக்கித் தொடர்ந்தோம்.
யாழ்ப்பாணம் மறக்கமுடியாத ஊர்.
இனி கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்வோம்....
( தொடரும்... )
Posted by IdlyVadai at 9/27/2010 11:16:00 AM 13 comments
Labels: அனுபவம், இட்லிவடை ஸ்பெஷல், புத்தகம், ஹரன்பிரசன்னா
Friday, September 24, 2010
இரண்டாம் இறையன்பு!
அபிமான நடிகர் நடித்த திரைப்படத்தை சொந்த ஊர் டெண்டு கொட்டாயில் பார்த்துவிட்டு, சினிமா ஆசையால் சென்னைக்கு ஓடிவருபவர்கள் நிறைய பேரை நாம் கேள்விப்பட்டதுண்டு. இதுமாதிரியே அரசியல் தலைவர்கள் மீதான அபிமானத்தால், அவர்களை மாதிரியே தலைவர்களாய் வளரவேண்டும் என்று விருப்பப்பட்டு பட்டணத்துக்கு மூட்டை கட்டிக்கொண்டு வருபவர்களும் உண்டு. சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் என்று பலருக்கும் இதுமாதிரி ரசிகர்கள் இருப்பது சகஜம்தான்.
முத்துவேல் கொஞ்சம் வித்தியாசமான இளைஞர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்புவின் மீது அபிமானம் கொண்டு அவரைப்போலவே ஐ.ஏ.எஸ். ஆவேன் என்ற சபதத்தோடு சென்னைக்கு வந்திருப்பவர். சிறுவயதில் இருந்தே இறையன்பு குறித்த செய்திகளை ஊடகங்களில் ஆர்வமாக படிப்பாராம். தொலைக்காட்சிகளில் இறையன்பு பேசுகிறார் என்றால் முத்துவேலுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. இறையன்புவின் தமிழ் மீது முத்துவேலுக்கு அவ்வளவு காதல். சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகே பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.
இறையன்புவாக என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தவர், நல்ல தமிழைப் பேசிப்பழக ஆரம்பித்தார். 1330 திருக்குறளையும் மனனம் செய்து குன்றக்குடி அடிகளார் முன்பாக ஒப்புவித்து விருது பெற்றார். பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் கலைஞர் கையால் பரிசு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வுக்காக நேரு யுவகேந்திரா நடத்திய பேச்சுப்போட்டியில் ப.சிதம்பரமிடமிருந்து பரிசு, சமீபத்தில் செம்மொழி மாநாட்டில் துணைமுதல்வர் ஸ்டாலின் கையால் பரிசு என்று அடுத்தடுத்து ஏராளமான விருதுகளையும், பரிசுகளையும் தமிழால் வென்றிருக்கிறார். இறையன்புவாக மாறவேண்டுமென்ற அவருடைய ஆசை, அதுவாகவே தன்னை வளர்த்துக் கொண்டு ஒரு நல்ல தமிழ்ப் பேச்சாளரை இன்று சமூகத்துக்கு கொடுத்திருக்கிறது. இறையன்புவும் ஒரு பேச்சாளர் என்பதை இங்கே நினைவில் கொள்க.
"என்னுடைய எட்டு வயதில் தந்தை எங்களை விட்டு பிரிந்து போய் விட்டார். கடுமையான வறுமை. அம்மா கிடைத்த வேலைகளை செய்து என்னையும், தம்பியையும் காப்பாற்றினார். அம்மாவுக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் வயிறு முழுமையாக நிறையாது.
ஒருமுறை மதியவேளையில் மோசமான பசி. பசியை வெல்ல என்ன செய்வதென்றே தெரியவில்லை. அருகிலிருந்து நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை புரட்டிப் படிக்க ஆரம்பித்தேன். வாசிப்பு பசியை மறக்கச் செய்தது. வறுமை தந்த பரிசு தமிழறிவு. இதனால் நூலகத்தில் கிடைக்கும் கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களையும் இலக்கணம், இலக்கியம் என்று பாரபட்சமில்லாமல் ஒருகட்டத்தில் என்னால் படிக்க முடிந்தது. இந்த காலக்கட்டத்தில்தான் இறையன்பு எழுதிய தன்னம்பிக்கை எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை மானசீக வழிகாட்டியாக மனதுக்குள் வரிந்துகொண்டேன்.
எனக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியையாக அமைந்த செண்பகவள்ளி தெய்வம். முடங்கிப் போனபோதெல்லாம் என்னை தட்டிக் கொடுத்து ஊக்குவித்தவர். மாநிலம் முழுக்க நிறைய பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளாக வாங்கிக் குவித்தேன். கிடைத்த பரிசுப்பணம் எனக்கும், தம்பிக்கும் கல்விச்செலவுக்கு உதவியது. நிறைய நல்ல உள்ளங்கள் உதவின. எப்படியோ தட்டுத்தடுமாறி இளங்கலை கணினி முதல் வகுப்பில் தேறிவிட்டேன். தமிழ்வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, இறையன்பு போல அதிகாரியாக வேண்டும் என்பதுதான் என் இலட்சியம்" என்கிறார் முத்துவேல்.
இவரது இலட்சியத்துக்கு இப்போது சிறு தடங்கல்.
இதுவரை உழைத்து இவரையும், இவரது தம்பியையும் காப்பாற்றி வந்த இவரது தாய் இப்போது உடல்நலமின்றி பணிக்கு செல்ல முடியவில்லை. எனவே உடனடியாக ஏதாவது வேலையில் சேர்ந்து குடும்பத்துக்கு சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம். இலட்சியத்தை தள்ளி வைத்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.
"அது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லைங்க. ஒரு காலத்தில் பள்ளிக் கல்வியே கிடைக்க வாய்ப்பில்லைங்கிற நிலைமை. அதையெல்லாம் தாண்டி இன்று பட்டம் வரைக்கும் வந்துட்டேன். இன்னும் கொஞ்சம் காலம் அதே மாதிரி கஷ்டப்பட்டு எட்டிப் பிடிச்சேன்னா ஐ.ஏ.எஸ். அவ்வளவுதானே? நான் கற்ற தமிழ் என்னை காப்பாற்றும்" என்று கம்பீரமாக சொல்கிறார் முத்துவேல்.
நல்ல கனவுகள் தோற்பதில்லை. முத்துவேலின் கனவும் விரைவில் நனவாக வாழ்த்துவோம்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்திப்பிரிவில் பணியாற்றும் இளங்கோவன் அண்ணன் மூலமாக முத்துவேல் எனக்கு அறிமுகமானார். ஒரு மதியப் பொழுதில் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவர் பேச்சில் ஒரு விஷயம் என்னை நெகிழச் செய்தது. அதாவது பசியை மறக்க நூல்களை வாசிப்பது. இதுநாள் வரை முத்துவேலையும், அவரது தம்பியையும் காப்பாற்றிக் கொண்டிருந்தவர் அவரது தாய். ஆண்டுக்கு நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் சொற்ப வருமானத்திலேயே ஒரு மகனை பட்டதாரி ஆக்கியிருக்கிறார். மறு மகனை கல்லூரியில் சேர்த்திருக்கிறார்.
இப்போது உடல்நலம் குன்றி அந்த தாய் பணிக்கு செல்ல இயலாத நிலை. உடனடியாக ஒரு பணியில் சேர்ந்து தாயையும், தம்பியையும் காப்பாற்றியாக வேண்டும். தனது கனவான ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் தயாராக வேண்டும் என்ற நிலையில் முத்துவேல் இருக்கிறார். சென்னைக்கு வந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று வந்திருக்கிறார். இந்நகரின் பிரம்மாண்டமும், அலங்காரமுமான சூழல் அவருக்கு கொஞ்சம் அச்சத்தையும், கூச்சத்தையும் கொடுத்திருக்கிறது.
இதுபோன்ற ஏழை இளைஞர்கள் சிலருக்கு சமூகப்பார்வை கொண்ட பதிவர் ஒருவர் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டி வந்தார். முத்துவேலின் கெட்டநேரமோ என்னவோ தெரியவில்லை. அந்தப் பதிவர் இப்போது ஒரு நெருக்கடியான சூழலில் இருக்கிறார். இவருக்கு உடனடியாக உதவமுடியாத நிலை. இப்பதிவை வாசிப்பவர்கள் யாரேனும் முத்துவேலுக்கு உதவலாம். தங்கள் நிறுவனத்தில் ஏதாவது காலியிடம் இருந்தாலோ, அல்லது நண்பர்களிடம் சொல்லிவைத்தோ ஒரு ஏழை இளைஞரின் வாழ்வில் விளக்கேற்றலாம். நம்மாலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உருவாகிவிட்டு போகட்டுமே! நிச்சயமாக பண உதவி வேண்டாம். வேலைவாய்ப்பு மட்டும் போதும்.
முத்துவேலுக்கு உதவ நினைப்பவர்கள் எனக்கு மடல் அனுப்பலாம் : yuvakrishna@gmail.com
( நன்றி: http://www.luckylookonline.com )
Posted by IdlyVadai at 9/24/2010 11:08:00 AM 5 comments
Labels: உதவி
Thursday, September 23, 2010
வடிவேலு - பழைய காப்பி, புதிய காப்பி
Posted by IdlyVadai at 9/23/2010 04:23:00 PM 15 comments
எந்திரன் படம் ரிலீஸ்
எந்திரன் படம் நாளை ரிலீஸாவதாக சொன்னார்கள், ஆனால் அயோத்தி வழக்கில் தீர்ப்பு நாளை என்பதால் அக்டோபர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். ரஜினி ரசிகர்கர்களுக்கு இது பெரிய ஏமாற்றம் அதனால் இட்லிவடையில் எந்திரன் படத்தை ரிலீஸ் செய்வது என்று முடிவு செய்துவிட்டோம். பார்க்க கீழே...சூர்யா காப்பி அடித்திருக்கிறார் பாருங்க
வடிவேலு கூட
அட விஜய்யும் இந்த லிஸ்டில இருக்கார்.
விவேக் கூட
லிட்டில் சூப்பர் ஸ்டார் இதையும் விட்டுவைக்கவில்லை.
இப்ப என்ன பண்ணுவீங்க ? அஜீத், கமல் எங்கே இருக்கீங்க ?
Posted by IdlyVadai at 9/23/2010 01:34:00 PM 12 comments
Wednesday, September 22, 2010
Common Wealth Shames
ஒரு திகில் படத்தின் கடைசி கட்ட காட்சிகள் பார்ப்பது போன்றதானதொரு உணர்வு காமன்வெல்த் போட்டிகளைப் பற்றிய செய்திகளுக்கு தினமும் பஞ்சம் இல்லை. டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் சில தினங்களில் ஆரம்பிக்க போகிறது. மீடியாவிற்கு இந்த போட்டியை நடத்தும் கல்மாடியின் மேல என்ன வெறுப்போ தெரியவில்லை. முதன் முதலில் மணி சங்கர் ஐயர் மணி அடித்து துவங்கி வைத்த மீடியா பிரச்சாரம் நன்றாகவே போய்க்கொண்டு இருக்கிறது. கல்மாடி என்ன செய்துவிட்டார், காங்கிரஸ் செய்யாத ஊழலையா இவர் செய்துவிட்டார் ? இது Common man's wealth தானே ? இதற்கு எதற்கு இத்தனை ஆர்பாட்டம்.
நேற்று நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே நடை மேம்பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. இது முக்கியமான விஐபி, மற்றும் விளையாட்டு வீரர்கள் உபயோகப்படுத்த கட்டப்பட்டது என்று முன்பு பெருமையாக சொன்னார்கள். நேற்று மீடியா இதை பற்றி கேட்டதற்கு டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் இது சாதாரண மக்கள் நடந்து செல்ல கட்டப்பட்டது தான் அதனால் கவலை பட தேவையில்லை என்று பல்டி அடித்தார். இந்த அம்மா தான் டில்லிக்கு (மக்களுக்கு) முதலமைச்சர். தன் மனசுல உள்ளதை வெளிப்படையா பேசிடுவாங்க. "இது ஒரு மைனர் விஷயம்" என்று சொல்லியிருக்கார். அப்ப மேஜர் விஷயம் என்றால் என்ன ? இனிமே தான் அது நடக்கும் போல. காத்திருப்போம். ஏன் மைனர் விஷயம் என்று சொன்னார்கள் என்று யோசித்து பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது படத்தை பார்த்த பிறகு நீங்களே அவர்களை பாராட்டுவீர்கள். இப்ப இந்த உடைந்த பாலட்தை சுற்றி பார்க் ஒன்றை கட்டிவிட்டால், குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும். இவ்வளவு பெரிய சறுக்கு மரம் வேறு எங்கும் பார்க்க முடியாது. இது மைனர் விஷயம் தானே ? அதுவும் குழந்தைகளுக்கு 10கோடி சரக்கு மரம். எந்த நாட்டில் இருக்கும் ?தில்லிக்கு செல்லுபவர்கள் ஒன்று செய்ய வேண்டும் போகும் போது ஹெல்மெட் வாங்கிக்கொண்டு போக வேண்டும். அதுவும் பாலத்துக்கு கீழே போகும் போது நிச்சயம் போட்டுக்கொள்ள வெண்டும்.
இன்று பளு தூக்கும் ஸ்டேடிய கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இதில என்ன ஆச்சரியம். பளுவை தூக்க முடியாமல் விழுந்திருக்கு என்று பிரஸை கூப்பிட்டு கல்மாடி விளக்கம் சொல்லுவார். இதை எல்லாம் கூட பரவாயில்லை, தீவிரவாதிகள் இருக்கிறார்களா என்று இப்ப சோதனை போடறாங்க, பாலம், கூரை எல்லாம் தன்னால விழுந்துவிடுகிறது. இதற்கு பாம் வைத்து அதை தீவிரவாதிகளா நாசப்படுத்த போகிறார்கள்? வெடிகுண்டை கேவலப்படுத்த கூடாது பாருங்க. அதுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கு. கையில வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிற மாதிரி தான் இது.ஆனாலும் கல்மாடிக்கு நாட்டுப்பற்று அதிகம் என்பேன். இப்ப நியுஸிலாந்து கலந்துக்கொள்ளலாமா என்று யோசிக்கிறது. இப்படியே பல நாடுகள் யோசிக்க தொடங்கியுள்ளது. இப்ப ஒரு நாடும் கலந்து கொள்ளவில்லை என்றால் எல்லா தங்கமும் நமக்கு தான். அப்பறம் அதை கொண்டாட ரஹ்மானை கூப்பிட்டு "ஜெய் ஹோ" என்று சத்தம் போட்டு பாடலாம்.
பல நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகள் சுகாதார வசதிகள் மிகவும் மோசம், எங்கு பார்த்தாலும் நாய்கள் இருக்கிறது, சில நாய்கள் படுக்கையில் உச்சா கூட போவதை கூட நாங்கள் பார்த்தோம், நீச்சல் குளத்தில் சின்ன சின்ன கொசுக்கள் என்று புகார் கூறியதை தொடர்ந்து தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல பிரஸை கூப்பிட்டு "வெட்கப்படுகிற அளவுக்கு இது பெரிய விஷயம் கிடையாது" என்று சொல்லிவிட்டார்கள். "தூய்மைத் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. எங்களை பொறுத்தவரை சுத்தமாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் பார்வைக்கு அது சுத்தமற்றதாக தெரிகிறது." இவர்கள் கை அவ்வளவு சுத்தம்.
பார்த்தார் பிரதமர் நேற்று ஒரு குழு அமைத்து கல்மாடியை விட்டு விட்டு நாய்களை துரத்த சொல்லிவிட்டார். இப்ப டெல்லியில் நாய்களே இல்லையாம். ஐ ஜாலி !
Posted by IdlyVadai at 9/22/2010 06:03:00 PM 21 comments
Labels: செய்தி விமர்சனம், விளையாட்டு
பரப்பிலக்கியத்தை விமரிசித்தல் குறித்து ...
‘மடித்துச் செருகியிருந்த கோமணத்திலிருந்து தூமை வாசனை அடித்தது’ என்ற ஒற்றை
வரியை நான் படிக்க, ‘யார், நம்ம தோமா கண்ணகி எழுதியிருக்காளா’ என்று எனக்காகத்
தேநீர் கலக்க உள்ளே சென்ற கரியதிருமேனி அடுக்களையிலிருந்து மெல்லக் கேட்டார்.
அது இன்னும் அவர் படிக்காத புத்தகம். சமீபத்திய வெளியீடு. அதை நான் கொண்டு
வந்திருப்பதையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த ‘தூமை’ என்ற ஒற்றைச்
சொல்லை வைத்து தோமா கண்ணகியைக் கண்டுபிடித்தாரோ என்று எண்ணியிருந்தேன்.
கோப்பையுடன் திரும்பிய கரிய திருமேனி சொன்னார். ‘இல்லை, இந்தச் சொல்லை
செவ்வியல் இலக்கியத்தில் பரவலாகப் பயன்படுத்துகிறார்களே. ஆனால் பொதுவாய் அதைச்
சொல்லும்போது கூடவே நெடி அல்லது வாடை என்பார்கள். கண்ணகி மட்டும்தான் வாசனை
என்று எழுதுவார்’ என்றார் சிரித்தபடி.
நான் கரியதிருமேனியிடம் மனம் வெதும்பிச் சொன்னேன். ’அய்யா, நானும் எவ்வளவோ
செவ்வியல் புத்தகங்களைப் படித்துப் பார்த்துவிட்டேன். ஆனால் இந்தப் ப்ரயோகங்கள்
எல்லாம் பிடிபடவே மாட்டேங்குது. சமயத்தில் இந்த தூமை சாண்டா இத்யாதி எல்லாம்
என்ன வித்தியாசம்னு கூட சரியா தெரிய மாட்டேங்குது. என்னய்யா பண்றது?’
கரியதிருமேனி கொஞ்சநேரம் யோசித்தபின் சொன்னார். ‘நீங்க கவலைப்பட வேண்டாம்னுதான்
படுது. இந்த அம்பது வயசுல செவ்விலக்கியம் புரிஞ்ச அய்யர நான் பாத்ததே இல்ல’.
ஆக இன்றுவரை அப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறேன். செவ்விலக்கிய ஆர்வம் உண்டு.
எப்போதுமே தேடிப் படிக்கிறேன். கரியதிருமேனி போன்ற விற்பன்னர்களிடம் இணையத்தில்
விவாதம் கூட செய்ய முயல்கிறேன். ஆனால் ஒன்றுமே ஏறுவதில்லை.
இலக்கிய விமரிசனத்துக்கும் எனக்கும் அதிக தூரம். விவாதங்கள் எனக்குப் புரிவதும்
இல்லை. என் பார்வையில் எல்லா எழுத்துமே நன்றாகத்தான் இருக்கின்றன. சில
படைப்புகள் இன்னும் நன்றாக இருக்கின்றன. ஏன் சிலர் எழுத்து நன்றாக இல்லை, சில
நன்றாக இருக்கின்றன என்கிறார்கள் என்ற மாபெரும் மர்மம் எனக்கு இன்னமும்
விளங்கவில்லை.
ஒருமுறை தமிழ் இலக்கியத்தை மிக நன்றாக அறிந்த நாலைந்து நண்பர்களுடன் அறைக்குள்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சிறந்த படைப்புகளை அவர்கள் நினைவை சலித்துச்
சலித்து பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். நான் சுஜாதாவின் ‘நிலாநிழல்’ என்ற கதையை
எனக்குப் பிடித்த படைப்பாகச் சொன்னேன். சட்டென்று என் நண்பர் அது சரியில்லை.பல
கொழப்பங்கள் அதிலே இருக்கு. ஒரு தந்திரம்தான் அது’ என்று சொல்லிவிட்டு அதே
எழுத்தாளரின் ’நகரம்’ என்ற இன்னொரு கதை ஒன்றுதான் ‘சரியான சமூகப்ரக்ஞை கொண்ட
செவ்விலக்கியத்துக்குக் கொஞ்சம் அருகில் வரும் படைப்பு’ என்றார்.
அது எனக்கு குழப்பத்தை அளித்தது. இப்படி விமர்சனபூர்வமாக தீர்மானிப்பதற்கு
இவர்களுக்கு இருக்கும் அளவுகோல் என்பது தமிழ் மரபிலக்கியத்தால்
உருவாக்கப்பட்டது. ஆனால் அதை வைத்து அந்தப்படைப்பை அளக்க முடியுமா?
பரப்பிலக்கியத்தை அளக்க செவ்விலக்கிய அளவுகோல்கள் பொருந்துமா?
எனக்கு அக்கதை மிக அந்தரங்கமானது. ஒன்று அதில் என் இளமை நினைவுகள் கலந்துள்ளன.
கிரிக்கெட்டும் முதல்காதலும் என்னை அலைக்கழித்திருந்த காலகட்டத்தில் ஓர்
அற்புதமான தருணத்தில் அதைப் படித்தேன். நான்குநாட்களில் கிட்டத்தட்ட மனப்பாடம்
அளவுக்குப் படித்தேன். நிலாநிழலில் வரும் முகுந்துடன் என்னை ஒப்பிட்டு என்னை
மேலும் செம்மைப்படுத்திக் கொண்டேன். அது தந்த தெம்பில் சின்னதாய் ஒரு கவிதை
எழுதி என் காதலியிடம் தந்தேன்.
'இருக்கும் சக்தியெல்லாம் கையில் திரட்டி இன்ஸ்விங்கர் போட எதிரே ஸ்டம்புகள்
எகிறிச் சுழல்கையில் உன்னை உன் இன்மையை பெரிதும் உணர்கிறேன்’ என்று அவள்
பார்க்க வராத ஒரு மேட்ச் முடிந்தவுடன் எழுதிக் கொடுத்தேன். என் காதல் ்கதை
ஒருபுறம் கிடக்கட்டும்.
பரப்பிலக்கியம் என்று சொல்லி இந்த அம்சங்களை கணக்கில் கொள்ளாமல் வெறும்
இலக்கணம் மூலம் அந்த அபாரமான கதையை மதிப்பிட முடியுமா என்ன?
பின்னர் ஒருமுறை கரியதிருமேனியிடம் கேட்டேன். ‘அது சுஜாதா சாரின் ஒரு
மாஸ்டர்பீஸ். ஆனால் செவ்விலக்கியத்தில் அதைச் சேர்ப்பது கஷ்டம் ’ என்றார்.
மரபிலக்கணத்தைக்கொண்டு பரப்பிலக்கியத்தை அளப்பது அபாயகரமானது என நான் உள்ளூர
உறுதிசெய்துகொண்டேன்.
செவ்வியல்கலையில் இக்கேள்விக்கே இடமில்லை. படைப்பின் வெகுஜனசெல்வாக்கு அங்கே
ஒரு பொருட்டே இல்லை. ஆனால் பரப்பிலக்கியத்தில் மக்களின் பங்கேற்பை
புறக்கணிக்கவே முடியாது. அதன் நோக்கமே மக்களைச் சென்றடைவதுதான். எது மேல்,
மக்கள் விரும்புவதா கலைநுட்பம் கொண்டதா? பரப்பிலக்கியத்தில் இந்தக்கேள்விக்கு
எளிய பதில்கள் இல்லை.
என்னைப் பொருத்தவரை சுஜாதாசாரின் வைரங்கள் ’காதர்’ அடிபட்டுச் சாகும்போது ஏதோ
என் தம்பி இறந்தது போல் அழுதிருக்கிறேன். 24ரூபாய்த்தீவு விஸ்வநாதனின் தங்கை
சிதைக்கப்பட்டு வீடு திரும்பி நடைபிணமாய் உட்கார்ந்திருப்பதைப் படித்து என்
வீட்டின் சோக நிகழ்வாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் இதற்கெல்லாம்
செவ்விலக்கியவாதிகள் சொல்லும் பதில் ஒன்றுதான். சுஜாதா போன்றோரின் எழுத்துக்கள்
மேலோட்டமானவை. ஆழம் போக விரும்பாமல் அவசர உலகுக்காகப் படைக்கப்பட்டவை.
முடிவாய் ஒன்று சொல்ல விரும்புகிறேன். பரப்பிலக்கியத்தை நாம் நம் தனி ரசனையில்
இருந்து தொடங்கியே விவாதிக்க முடியும். ஒவ்வொரு பரப்பியக் கலைப்படைப்புக்கும்
அதற்கான அளவுகோல்களை தற்காலிகமாக உருவாக்கிக்கொண்டு முன்னகர வேண்டியிருக்கும்.
நாம் நம் அந்தரங்க மதிப்பீடுகளை முன்வைத்து புறவயமான விவாதத்தை
உருவாக்கவேண்டும். அந்த விவாதம் மூலம் மையமாக உருவாகி வரும் அளவுகோல்களே
பயனுள்ளவை.
நன்றி!
- குமரம்
Posted by IdlyVadai at 9/22/2010 11:06:00 AM 29 comments
Labels: இசை, இலக்கியம், விமர்சனம், விருந்தினர்
Tuesday, September 21, 2010
மண்டேனா ஒன்று 20/09/2010
இணையதளத்தில் நீங்கள் எவ்வாறெல்லாம் சுரண்டப்படலாமென்றும், உங்களின் க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கி விவரங்களை அறிந்து கொள்வதற்காக கழுகு போன்று உங்களை வட்டமிடும் ஆன்லைன் மோசடிக் கும்பல் பற்றியும், அவர்களிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் விளக்கும் விதமான விழிப்புணர்ச்சிக் கட்டுரையொன்று இம்மாத "ரீடர்ஸ் டைஜஸ்ட்" இல் வெளியாகியிருந்தது. கட்டுரை மிகவும் பெரிதாக இருந்த காரணத்தால், கூடியவரை அதன் விஷயம் குன்றாமல் சுருக்கித் தந்திருக்கிறேன்.
"டாம் ஃபார்மர்", என்ற 50 வயதாகும் கம்யூனிகேஷன்ஸ் கன்ஸல்டண்ட் ஃபேஸ்புக்கின் (Facebook) மூலம் தனக்கு கிடைக்கும் செளகர்யங்களைப் பெரிதும் விரும்புகிறார். பல ஆண்டுகளுக்கு முன் இவருடன் பணிபுரிந்த எலிஸா என்ற பெண்ணுடைய தொடர்பு மறுபடியும் கிடைத்ததில் இவருக்கு அளவற்ற மகிழ்ச்சி. அவருடன் இணையத்தில் நேரடி சம்பாஷணைகள், ஈ-மெயில் பரிமாற்றங்கள் என ஃபேஸ்புக்கின் அனைத்து அம்சங்களும் அவரைக் கவர்ந்தன. இந்நிலையில் எலிஸா திடீரென அவசர நிலைப் பிரகடனம் ஒன்றைச் செய்தார். அவரும், அவருடைய தோழர் ஒருவரும் லண்டன் நகரில் பெரும் சிக்கல் ஒன்றில் சிக்கியிருப்பதாக.
" அதாவது அதற்கு முந்தைய இரவு, துப்பாக்கி முனையில் எலிஸாவும், அவருடைய தோழரும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், தம் வசமிருந்த பணம், க்ரெடிட் கார்ட் மற்றும் செல்போன் என அனைத்துமே பறிபோனதாகவும் எலிஸா தெரிவித்தார்."
" அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசிக்கும் டாம் ஃபார்மர் பதறிப் போனார். நான் இங்கிருந்து உனக்கு எவ்வகையிலாவது உதவ முடியுமா? எனக் கேட்டார்."
" இதற்காகவே காத்திருந்தாற்போல், எலிஸா, ஹோட்டல் பில், ஏர்போர்ட் வரையிலான டாக்ஸி வாடகை போன்ற செலவுகளுக்காக ஒரு தோராயமான தொகையை ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யுமாறும், அதனை தான் ஊர் திரும்பியதும் திருப்பித் தந்து விடுவதாகவும் தெரிவித்தார்."
" தான் அந்த குறிப்பிட்ட ஹோட்டலைத் தொடர்பு கொண்டு க்ரெடிட் கார்ட் மூலமாக ஹோட்டல் பில்லை செட்டில் செய்து விடுவதாக டாம் ஃபார்மர் தெரிவித்த போதிலும், பணமாக ஆன்லைனில் தனது வங்கிக் கணக்கிற்கு பரிவர்த்தனை செய்து விடுமாறு பார்மரை எலிஸா தொடர்ந்து வற்புறுத்தியது பார்மருக்கு சிறிதே சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே முன்பு தாம் இருவரும் எந்த நிறுவனத்திற்காகப் பணி புரிந்தோமென்றும், தாம் முதலில் எங்கு சந்தித்தோமென்றும் ஃபார்மர் எலிஸாவிடம் கேட்டார்."
" நீண்ட மெளனத்திற்குப் பிறகு சரியான பதில் கிடைத்தது.இவ்விவரம் தனது ஃபேஸ்புக் ப்ரொபைலில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று யூகித்த பார்மர், தாங்கள் முன்பு பணிபுரிந்த நிறுவனத்தின் நிறுவனர் பெயரைக் கேட்டார். ஆனால் பதில் இல்லை. "
" விஷயம் மிகவும் தெளிவு. இணையத்தில் புதிதாக உதித்திருக்கும் மோசடிக் கும்பலின் ஓர் அங்கம்தான் இந்த எலிஸா போன்றவர்கள். மிகவும் நம்பகமானவர்கள் போல் நடித்து நமது க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கவர்ந்து நம்மைச் சுரண்டும் இணையத் திருடர்கள். நமது கணினியைச் சிதைப்பது அவர்களது நோக்கமல்ல. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் நம்முடைய பணம், அவ்வளவே! மாதா மாதம் மில்லியன் டாலர் அளவில் இவர்கள் இம்மாதிரியான மோசடி வேலைகள் மூலம் பணமீட்டுகிறார்கள்."
" அமெரிக்காவின், இணையக் குற்றவியல் புகார் மையத்தின் விவரங்களின்படி, சென்ற ஆண்டு மட்டும் சுமார் 560 மில்லியன் டாலர்கள் இவ்வாறான இணைய மோசடியின் மூலம் இழக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு சோஷியல் நெட்வொர்க்கில் அங்கம் வகிப்பவர்களாக இருக்கின்றனர். இணைய மோசடியாளர்கள் இம்மாதிரியான சோஷியல் நெட்வொர்க் மூலம் அதன் பயனாளர்களுக்கு "ஸ்பைவேர்" அடங்கிய ஒரு சுட்டியை அனுப்புகின்றனர். பெரும்பாலும் ஏதேனும் கவர்ச்சி விளம்பரம் போல் தோற்றமளிக்கும் அந்த சுட்டியை அணுகுவதன் மூலம், அந்த ஸ்பைவேர் நமது கணினிக்குத் தரவிறக்கம் செய்யப்பட்டு, நமது கணினியில் இருக்கும் பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை மோசடியாளர்களுக்குத் தெரிவிக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிப்பிற்குள்ளாவது இணையத்தை அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரே."
" இங்கே நீங்கள் எவ்வாறெல்லாம் மோசடி செய்யப்படலாமென்றும், அதை தவிர்ப்பது எவ்வாறு என்றும் பார்க்கலாம்."
"ஃப்ரீ ட்ரையல் ஆஃபர்"
நீங்கள் பெரும்பாலும் இணையத்தில் இவ்வாறான ஒரு விளம்பரத்தைப் பார்க்கலாம். குறைந்த செலவில் பற்களை வெண்மையாக்குவது அல்லது ஒரே மாதத்தில் எடையைக் குறைப்பது என்பன போன்ற விளம்பரங்கள். தபாற் செலவீனங்களுக்காக வெறும் ஆறு டாலர்கள் மட்டுமே என்றெல்லாம்.
ஆனால் அதே விளம்பரத்தில் பொடியான, மற்றும் கண்களுக்குப் புலப்படாத நிறத்தில் உங்களை மேலும் 80 முதல் 100 டாலர்கள் வரை செலுத்துமாறு கேட்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலும் இவ்வாறான விளம்பரங்களை ஆர்வமுடன் அணுகுபவர்கள் அவ்விளம்பர வாசகங்கள், மற்றும் நிபந்தனைகள் எவற்றையுமே முழுமையாகப் படிப்பதில்லை. இவ்வாறானவர்களுக்குத்தான் மோசடி வலை விரிக்கின்றனர் இணையக் கொள்ளையர்கள்.
"ஹாட் ஸ்பாட் ஏமாற்று வித்தைகள்"
நீங்கள் விமான நிலையத்திலோ அல்லது காபி ஷாப்பிலோ அமர்ந்திருக்கிறீர்கள். அங்கிருக்கும் Wi-Fi தளத்தின் உதவியுடன் இணைய இணைப்பைப் பயன்படுத்துகிறீர்கள். அது சிலவேளைகளில் இலவசமாக இருக்கலாம் அல்லது கட்டணத்துடன் கூடியதாகவும் இருக்கலாம். நீங்கள் அவ்வசதி பெற்று இணையத்தில் உலவுகிறீர்கள்.....இதுவரை எல்லாமே சரிதான்.
நீங்கள் அங்கிருந்து பயன்படுத்தும் இணைய தளங்கள் அனைத்தும் நிஜமானது போலவே தோற்றமளிக்கலாம். ஆனால் அது பல சமயங்களில் மோசடியாளர்களின் லாப் டாப்களிலிருந்து இயக்கப்படுவதாகவும் இருக்கலாம். அவர்கள் உங்களுடைய சிஸ்டமில் புகுந்து உங்களுடைய வங்கி விவரங்கள் மற்றும் க்ரெடிட் கார்ட் விவரங்களைத் திருடி வேறு மோசடியாளர்களுக்கு விற்று விடுவர். இப்போதெல்லாம் இம்மாதிரியான போலி Wi-Fi ஹாட் ஸ்பாட் தளங்கள் பெருகி வருகின்றன. உண்மையானவற்றிலிருந்து இவற்றை இனம் காண்பது சற்று சிரமமானதாகவே இருக்கிறது.
"உங்களது கணினி தாக்கப்பட்டிருக்கிறது"
உங்களது கணினித் திரையில் திடீரென ஒரு தகவல் பலகை தோன்றலாம். உங்கள் கணினி ஒரு குறிப்பிட்ட வைரஸால் தாக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு நம்பகமான ஆண்டி-வைரஸ் நிறுவனத்தின் பெயரில் அறிவிப்பு வரும். உங்களது கணினியிலிருந்து அந்த வைரஸை சுத்தப்படுத்த கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும் என்று அறிவிப்பு வரும். அதைச் சொடுக்கினால் ஏதோ ஸ்கேன் செய்யப்படுவது போலவும், வைரஸ் இருப்பது போலவும் உங்களுக்குத் தெரியலாம். விஷயம் இதுதான். அந்த சுட்டியைச் சொடுக்குவதன் மூலம் உங்களது கணினியில் "malware" தரவிறக்கம் செய்ய்யப்பட்டு, உங்களுடைய க்ரெடிட் கார்ட் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் களவாடப்படும். ( malware எனப்படுவது ஒரு சிறிய கணினி ப்ரோக்ராம். கணினி பயனாளருக்கே தெரியாமல் கணினியில் புகுந்து உள்விவரங்களைத் திருடி எஜமானுக்கு அனுப்பும் பணியை செவ்வனே செய்யும்.)
(வெகு சமீபத்தில் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளரின் இணைய தளத்தில் மேற்கண்ட பிரச்சனை எழுந்தது. அவரின் தளத்திற்குச் சென்றவுடனேயே மேற்கண்ட வைரஸ் அறிவிப்பு தோன்றி உங்களது கணினியை ஸ்கேன் செய்யுமாறு கேட்கும்.)
"செல்போன் மோசடி"
உங்களது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்று உங்களது கிரெடிட் கார்ட் நிறுவனத்திடமிருந்து வரலாம். அதாவது உங்கள் கிரெடிட் கார்ட் தொடர்பாக கீழ்க்கண்ட எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உங்கள் விவரங்களைத் தெரிவியுங்கள் என்றோ அல்லது உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. கீழ்க்கண்ட எண்ணிற்குத் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றிடுங்கள் எனும் விதமாக.
நீங்கள் அவ்வாறான டோல் ப்ரீ எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உங்கள் க்ரெடிட் கார்ட் விவரங்களைத் தெரிவித்தீர்களோ, நீங்கள் தொலைந்தீர்கள். உங்கள் பரிசைப் பெற்றிட உங்களை ஏதாவது ஒரு தொகையை கட்டச் சொல்லியோ அல்லது ஏதாவது வாங்கச் சொல்லியோ அறிவுறுத்துவார்கள். இது ஒரு அக்மார்க் மோசடி.
(சமீபகாலமாக "நைஜீரியன் ஸ்கேம்" என்று மிகவும் புகழ்பெற்ற ஒன்று இவ்வாறான மோசடிதான். ஜாம்பியாவிலுள்ள வாரிசில்லாத செல்வந்தர் பல நூறு கோடி சொத்துக்களை விட்டு இறந்துவிட்டார். ராண்டமாக அந்த சொத்து முழுவதும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதனைப் பெற்றிட 20 லட்சம் செலுத்துங்கள் என்று சமீபகாலமாக குறுஞ்செய்திகள் மூலம் பல லட்ச ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.)
" சாரிட்டி மோசடிகள்"
உங்களுக்கு இவ்வாறான ஒரு மின்னஞ்சல் வரலாம். ஹைதி அல்லது வேறு ஏதேனும் ஒரு பிந்தங்கிய நாட்டிலுள்ள ஒரு சாரிட்டியிலிருந்து நிதி கோரி. அந்த நிதியை ஆன்லைனில் வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்யுமாறும் கோரப்பட்டிருக்கும். பெரும்பாலும் நிதி கோரும் சாரிட்டி அமைப்புகள் காசோலை அல்லது க்ரெடிட் கார்ட் மூலமாக மட்டுமே நிதிகளைப் பெறும். நிச்சயமாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெறப்படமாட்டாது. அப்படியே நீங்கள் சாரிட்டிகளுக்கு நிதியளிக்க விரும்பினாலும், அவற்றின் அதிகாரப் பூர்வ இணைய தளத்திற்குச் சென்று, அவர்கள் கூறியிருக்கும் வழியின்படி உங்களது நிதியை வழங்கலாம்.
மேற்கண்ட மோசடிகளிலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது??
* உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்களை உங்கள் பிறந்த தேதியாகவோ அல்லது எளிதில் கண்டறியக் கூடிய விதமாகவோ அமைக்க வேண்டாம்.
* பாஸ்வேர்ட் செக்யூரிட்டி கேள்வியை உங்களது தாயார் பெயராக இருக்கும்படியோ அல்லது உங்கள் குடும்ப நபரின் பெயராக இருக்கும்படியாகவோ அமைக்க வேண்டாம். உங்களது இளம்பிராய செல்லப் பெயராகவோ அல்லது வேறு ஏதேனும் எளிதில் அறியக் கூடியதாக விதமாக இல்லாததாக அமைய வேண்டும்.
* உங்களது பாஸ்வேர்ட்களை எளிதில் தெரியும் விதமாக டெஸ்க்டாப் திரைகளிலோ அல்லது டைரிகளிலோ பதிந்து வைத்திருக்க வேண்டாம்.
* ஒரே விதமான பாஸ்வேர்டை எல்லாவற்றிற்கும் பயன்படுத்த வேண்டாம்.
* உங்கள் பாஸ்வேர்ட்கள் எட்டு முதல் பதினாறு எழுத்துக்கள்வரையுள்ளதாகவும், எண்கள் மற்றும் ஆங்கில கேபிடல் மற்றும் ஸ்மால் எழுத்துக்கள் கலந்ததாகவும் இருக்க வேண்டும்.
* பதினைந்து நாட்களுக்கொருமுறையோ அல்லது மாதத்திற்கொரு முறையோ பாஸ்வேர்ட்களை மாற்றிக் கொண்டேயிருங்கள்.
* முன்பின் தெரியாத, சந்தேகத்திற்கிடமான இணைய சுட்டிகளை அணுகுவதற்கு முன்பு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
( இக்கட்டுரையின் முழுமையான வடிவம் செப்டம்பர் 2010 ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் காணக் கிடைக்கும்.)
நன்றி : ரீடர்ஸ் டைஜஸ்ட்.
Posted by IdlyVadai at 9/21/2010 01:05:00 PM 12 comments
Labels: யதிராஜ சம்பத் குமார்
Monday, September 20, 2010
சென்னையில் ஜெ.வுக்கு கூடிய குபீர் கூட்டம்! - யுவகிருஷ்ணா
கடந்த 18ஆம் தேதி சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமியின் மகன் திருமண வரவேற்பு. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடந்தது. கொடநாட்டில் இருந்து அம்மா வருவாரா வரமாட்டாரா என்று அதிமுகவினருக்கு டென்ஷன். இந்த விழாவில் அம்மாவும், விஜயகாந்தும் சந்திக்கப் போகிறார்கள். கூட்டணியில் புதுக்கணக்கு எழுதப்படும் என்று அநாமதேயமாக பத்திரிகையாளர்கள் காதில் யார் யாரோ ஓதிவிட்டு டென்ஷனை கூட்டிக் கொண்டிருந்தார்கள். நந்தனம் முழுக்க மனிததலைகளால் உருவான அலை சுனாமியாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.
இதே வேளையில் அண்ணாசாலை பிலிம்சேம்பர் வளாகத்திலும் கூட்டம் கும்மிக் கொண்டிருந்தது. பிலிம்சேம்பரில் சுமார் 200 இருக்கைகள். அத்தனையும் நிரம்பி, கூடுதலாக 100 பேர் திமுதிமுவென்று அரங்குக்குள் நுழைந்து விட்டிருந்தார்கள்.
முந்தைய கூட்டத்துக்கு காரணம் அரசியல் ‘ஜெ’. பிந்தைய கூட்டத்துக்கு காரணம் இலக்கிய ‘ஜெ’. எப்படியோ ‘ஜெ’ என்றாலே ஜெயம்தான் போலிருக்கிறது. இலக்கிய விழாக்கள் என்றாலே காத்தாடும் என்ற தமிழ் சம்பிரதாயத்தை சில வருடங்களாக உயிர்மை உடைத்தெறிந்து வருகிறது. சாருவின் நூலாகட்டும். ஜெயமோகனின் நூலாகட்டும். விஜயமகேந்திரன் உள்ளிட்ட இளம் எழுத்தாளர்களின் நூலாகட்டும். எது குறித்த விழாவை உயிர்மை நடத்தினாலும் வாசகர்களின் நெரிசல் தவிர்க்க இயலாத ஒரு ‘ட்ரெண்டு’
உருவாகியிருக்கிறது. இனி உயிர்மை விழாக்களில் கூட்டத்தை நெறிப்படுத்த, மனுஷ்யபுத்திரன் காவல்துறையை நாடுவதைத் தவிர வேறுவழியேயில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் எல்.எல்.ஏ. கட்டிடத்தில் நடந்த உயிர்மை விழாவொன்றின் போது, ஜெயமோகனின் புத்தகத்தை மேடையில் சாருநிவேதிதா கிழித்தெறிந்தார். இதையடுத்து மனுஷ்யபுத்திரனுக்கும், ஜெயமோகனுக்கும் இடையிலான உறவு ‘கோயிங் ஸ்டெடி’யாக இல்லாமல் ‘போயிங் விபத்தாக’ மாறிப்போனது. அம்மா முன்பு, “இனி உ.பி.ச.வோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” என்று அறிவித்ததற்கு ஒப்பான ஒரு ஸ்டேட்மெண்ட் ஜெயமோகனால் வெளியிடப்பட்டது.
இத்தகைய சூழலில் இசைவிமர்சகர் ஷாஜியின் ‘தனிமையின் இசை’ நூல் கலந்துரையாடல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெயமோகன் கலந்துகொள்கிறார் என்று சொல்லப்பட்டதால் வாசகர்களிடையே பரபரப்பும், எதிர்ப்பார்ப்பும் தாறுமாறாக கூடிப்போனது.
ஆறு மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விழா, உலகின் மூத்தக்குடியின் பாரம்பரியத் தொடர்ச்சியை காக்கும் வண்ணம் அரைமணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. விழா தொடங்குவதற்கு முன்பாகவே அரங்கு ‘ஹவுஸ்ஃபுல்’.
மணிரத்னம், பாலா போன்ற நட்சத்திய இயக்குனர்களும், பாடகர் மலேசியா வாசுதேவனும் கலந்துகொள்கிறார் என்ற கவர்ச்சி காக்டெயிலான அறிவிப்பு இருந்தபோதிலும், மவுசு என்னவோ ஜெயமோகனுக்குதான். விழா நாயகன் ஷாஜி என்றாலும், சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக ஜெயமோகனே இருந்தார் என்பது மறுப்பதற்கில்லை. எண்பதுகளின் ‘ஜெண்டில்மேன்’ பாணி உடையலங்காரத்தில் (சாரு பாணியில் சொன்னால் குமாஸ்தா டிரெஸ்) அடக்கமாகத் தெரிந்தார் ஜெயமோகன்.
முழுக்க நரைத்த தலையோடு, சிரித்த முகமாக இருந்தார் மணிரத்னம். அவரோடு ஜெயமோகன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்ததை கண்டிருந்தால் பல சினிமா தலைகளுக்கு காதில் புகை வந்திருக்கும். ஜெ. வாய்திறந்து சிரிக்க மாட்டார். லேசான முறுவல் அவரிடமிருந்து வெளிப்பட்டாலே அதிசயம். மணிசார்தான் கஞ்சத்தனம் பார்க்காமல் சிரித்து வைத்தார். ஏனோ இயக்குனர் பாலா வரவில்லை. பிற்பாடு “பாலாவின் வாழ்க்கையில் இன்று மிக முக்கியமான தினம். அது என்னவென்று எல்லோருக்கும் பின்னால் தெரியும்” என்று சஸ்பென்ஸாக மேடையில் ஜாலி பஞ்ச் வைத்தார் ஷாஜி.
நிகழ்வை தொகுத்து வழங்கியவர் மகாவோ, மகானோ என்னவோ பேர் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ ஏதோ வானொலியில் பணிபுரிந்து வந்ததாகவும், இப்போது சென்னைக்கு வந்து சும்மா இருப்பதாகவும், சினிமா அல்லது ஊடக வாய்ப்பு வந்தால் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஒரு பெரிய ‘பிட்டு’ போட்டுவிட்டே நிகழ்வை தொகுக்க தொடங்கினார்.
விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். ஜெயமோகன் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் அரங்கு ஆர்ப்பரித்தது. அட, மனுஷ்யபுத்திரனுக்கு பக்கத்து சீட் ஜெமோவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இருவரும் கலைஞர், எம்.ஜி.ஆர். பாணியில் காதோடு காதாக கிசுகிசுத்துக் கொண்டு சிரித்துக் கொள்வார்கள். அந்த அதிசய அற்புதக் காட்சியை கேமிராவுக்குள் சுருட்டிக் கொள்ளலாம் என்று பேராசையோடு காத்துக் கொண்டிருந்த பல ஜோடி கண்களில் இந்த ஜோடி மண்ணை வாரிப் போட்டது. புன்னகை மன்னரான(?) ஜெ. அடிக்கடி கூட்டத்தையும், பேசிக் கொண்டிருந்தவர்களையும் மட்டுமே பராக்கு பார்த்துக் கொண்டிருந்தார். மனுஷ்யபுத்திரன் உயிர்மை விழாக்களில் மடைதிறந்த வெள்ளமாக சிரித்துக் கொண்டிருப்பார். ஏனோ இன்று நரசிம்மராவ் பாணியில் அமைதியாக இருந்தார். மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரை வழக்கம்போல நாகரிகமாகவும், மென்மையாகவும் இருந்தது.
பிரபஞ்சன் பேசும்போது, ஷாஜியை வானளாவப் புகழ்ந்துவிட்டு மற்ற இசைவிமர்சகர்களை பற்றி குறிப்பிடும்போது ‘சுப்புடுவோ, பப்புடுவோ’ என்றொரு வார்த்தையை உச்சரிக்க கூட்டத்தில் ஒரு பகுதி எரிச்சலடைந்தது. சட்டென்று சுதாரித்துக் கொண்டு சுப்புடுவையும் புகழ்ந்து தனது உரையை சமன் செய்தார். முன்னதாக மலேசியா வாசுதேவன், கடந்த பத்தாண்டுகளாக தான் கண்டுகொள்ளாமல் இருக்கப்படுவதாக ஆதங்கப் பட்டிருந்தார். அதை குறிப்பிட்ட பிரபஞ்சன், “கலைஞர்கள் எப்போதுமே கலைஞர்கள்தான்” என்று இலக்கியப் பஞ்ச் வைத்தார்.
அடுத்து ஜெயமோகன் பேச அழைக்கப்பட முப்பது வினாடிகளுக்கும் மேலாக கைத்தட்டல் தொடர்ந்தது. விசில் அடிக்கப்படாதது ஒன்றுதான் குறை. இசையறிவு குறித்த தனது போதாமையை சொன்னார். இசையைப் பொறுத்தவரை தான் ஒரு சாதாரணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் சின்ன சின்ன ஜோக்குகளாய் கோர்த்து பேச ஆரம்பித்த ஜெமொவின் பேச்சு ஒரு கட்டத்தில் புயல்வேகத்தை அடைந்தது. எளிமை அடிப்படையில் அவரது எழுத்துக்கும், பேச்சுக்கும் ஏணிவைத்தாலும் எட்டாத உயரமிருக்கிறது. கடைசியாக “மையமாக நின்று விமர்சிக்க வேண்டும்” என்று ஏனோ தானோவென்று ஒரு அறிவுரையை ஷாஜிக்கு வழங்கிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்.
தீவிர இளையராஜா விசிறியான ஜெமோ, ஷாஜியின் இளையராஜா எதிர்ப்பு விமர்சனங்களுக்கு காரசாரமாக ஏதேனும் பதிலளிப்பார் என்று எதிர்ப்பார்த்து (அதாவது வம்புகளை எதிர்நோக்கி) ஆவலோடு வந்திருந்த இளையராஜா ரசிகர்கள் பலருக்கும் இது பலமான ஏமாற்றம். ஆயினும் தான் இளையராஜா ரசிகன் தான் என்பதை அன்னக்கிளி வெளியானபோது ஒவ்வொரு டீக்கடையாக நின்று இளையராஜா இசையை ரசித்த அனுபவங்களை சொல்லி ஆணித்தரமாக நிரூபித்துவிட்டே சென்றார்.
ஜெமோவுக்கு அடுத்து பேசவந்தவர் எஸ்.ரா. “இசைன்னுலாம் நான் சொல்லமாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இசைன்னா பாட்டுதான். பாட்டுன்னு தான் சொல்லுவேன்” என்று ஜோவியலாக தொடங்கியவர், அடுத்தடுத்து சமகால உலக இசை, அது இதுவென்று அவரது ரேஞ்சுக்குப் போனார். ஒருக்கட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது எஸ்.ரா.வா அல்லது சமகால உலகத்தமிழ் எழுத்தாளர் பேயோனா என்று சந்தேகம் வந்துவிட்டது.
ஷாஜியின் ஏற்புரைக்கு முன்னதாக மணிரத்னம் ‘கொஞ்சூண்டு’ பேசினார். மணிரத்னம் படங்களின் வசனம் ஏன் இப்படியிருக்கிறது என்பதை அவரது பேச்சினைக் கேட்டவர்கள் உணரலாம். வெள்ளக்காரத்துர மாதிரியான ஒரு இரண்டரை, மூன்று நிமிட சினிமா டிரைலர் பாணி பேச்சு மணிசாருடையது.
இறுதியாக விழாநாயகர் ஷாஜியின் ஏற்புரை. எம்.எஸ்.வி.யில் தொடங்கி ஏ.ஆர்.ரகுமானின் பெருந்தன்மை வரை வாயாரப் புகழ்ந்தார். கவனமாக இசையராசாவை மட்டும் கண்டுகொள்ளாமல் தவிர்த்தார். “இசையை எப்படி விமர்சிக்க முடியும்? அனுபவிக்கத்தான் முடியும். இசை விமர்சகனென்றால் பாட்டு பாடத்தெரியுமா? பாடிக்காட்டுங்கள் என்றெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று பிட்டு, பிட்டாக கொஞ்சம் ஜாலியான மொழியில் பேசினார். பேச்சுக்கிடையே சாருவின் பெயரை ஓரிரு இடங்களில் குறிப்பிட இதற்கும் பலத்த கரகோஷம்.
நிகழ்வு சுபம்.
நிகழ்வை கண்ட சாதாரணர்களுக்கு சில சந்தேகங்கள் + ஆதங்கங்கள்.
மேட்டுக்குடியினரின் ரசனைக்கு மட்டுமே உரித்தாக இருந்த இசையை சாதாரணர்களுக்கும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகப் படுத்தியவர் இளையராஜா. அவரது ஹார்மோனியத்தில் இருந்து பிறந்தது நாட்டுப்புற இசை மட்டுமல்ல. பாரம்பரிய இசையின் நுணுக்கங்களையும் எளிமையாக்கி அனைவரையும் ரசிக்க வைத்தவர். தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இசை என்றால் நினைவுக்கு வருவது இளையராஜாவின் பெயர்தான். ஆனால், அவரைக் கண்டுகொள்ளாத, அவரது இசையை சரியான முறையில் மதிக்காத ஒருவர் எப்படி தமிழ்ச்சூழலில் மிக முக்கியமான இசை விமர்சகராக கருதப்பட முடியும்? அவரது தனிப்பட்ட ஆளுமையையோ அல்லது அவரது இசைப்படைப்பையோ விமர்சிக்கவே கூடாது என்பதில்லை. ஆனால் தமிழில் நடைபெறும் இசை தொடர்பான ஒரு கலந்துரையாடலில், ஒரு முக்கியமான இசைவிமர்சகர் இளையராஜாவை குறிப்பிடாமல் எப்படி பேசமுடியும்?
அடுத்ததாக பேசியவர்களில் பலரும் இங்கே இசைவிமர்சனம் செய்ய ஆட்கள் இல்லை என்றே ஒரு முன்தீர்மானத்தோடு பேசினார்கள். எளிய பாமரனான எனக்கே இதில் உடன்பாடு இல்லை. நம் சூழலில் இசை என்பது பாரம்பரிய இசை, திரை இசை என்று இருபிரிவாக இருக்கிறது. மேலைநாடுகளில் திரையிசை என்பது வெறுமனே பேக்கிரவுண்டு ஸ்கோர்தான். இங்கே திரைப்படங்களில் பாடல்கள் இன்றியமையாதது என்பதால் திரையிசை என்றொரு பிரிவு ஏற்பட்டுவிட்டது.
பல ஆண்டுகளாக வெகுஜனப் பத்திரிகைகளிலேயே டிசம்பர் சீசன்களில் இசைவிமர்சனம் அமளிதுமளிப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். இச்சூழலில் “இசையை விமர்சிக்க, ஷாஜியைத் தவிர்த்து விமர்சகர்களே இல்லை” என்று இலக்கிய ஜாம்பவான்கள் கருதுவார்களேயானால், அது பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டுவிட்டது என்று சொல்வதற்கு ஒப்பானதாகும். ஷாஜி ஒரு திரையிசை விமர்சகர். வேலை மெனக்கெட்டு மற்றவர்கள் திரையிசையை விமர்சிப்பதில்லை. ஒருவேளை நிஜமான இசை விமர்சகர்கள் திரையிசைக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்க்கலாம். ஷாஜி அதை செய்கிறார். அவ்வளவுதான். – இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பே தவிர, ஒட்டுமொத்த தீர்ப்பு அல்ல.
கடைசியாக இன்னொரு மேட்டர். இதுமாதிரி மேடைப்போட்டு இசையை இலக்கியவாதிகள் திருகலான மொழிகளில் பேசும்போது ஒரு அச்சம் மெல்ல அடிவயிற்றில் இருந்து மேலெழுந்து படர்கிறது. கடினப்பட்டு இளையராஜா வெகுஜனமாக்கிய இசையை, இவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு மீண்டும் அறிவுஜீவிகளுக்கான மேடைகளுக்குள் மட்டும் அடைத்துவிடுவார்களோ என்ற ஆதாரமான அச்சம்தான் அது.
கலைஞரை புகழாமல் லக்கி கட்டுரையா ? அவர் புகழவில்லை என்றால் என்ன நான் 'பச்சையாக' சொல்லுகிறேன் கலைஞர் வாழ்க!!
Posted by IdlyVadai at 9/20/2010 01:04:00 PM 25 comments
Labels: இசை, இட்லிவடை ஸ்பெஷல், இலக்கியம், சினி்மா, லக்கி, விமர்சனம்
Friday, September 17, 2010
ஒர் ஒற்றுமை, சில வித்தியாசங்கள்
நன்றி ரைட்டர் பாரா
நன்றி ரைட்டர் பேயோன்
பல ஒற்றுமைகள் சில வித்தியாசங்கள் என்று டைட்டில் வைக்க தான் ஆசை
Posted by IdlyVadai at 9/17/2010 08:23:00 AM 12 comments
Labels: புதிர்
Wednesday, September 15, 2010
எந்திரன் விமர்சனம் (டிரைலர்)
தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக, "சில மாதங்களே ஆன" என்ற பாடாவதியான திரைப்படத்தை விளம்பரங்களுக்கு இடையில் நல்ல நாட்களில் போடுவார்கள். எந்திரன் படத்தின் சில காட்சிகளை டிரைலர் என்று சன் டிவி ஞாயிறு அன்று காண்பித்தார்கள், சினிமா வரலாற்றில் முதன்முறையாக. (இனி, சன் குழுமத்தின் வரப்போகும் எல்லாப் படங்களுக்கும் இந்தக் கொடுமையை வேறு சகித்துக்கொள்ள வேண்டுமா சுரேஷ் கிருஷ்ணன் போனற சக தமிழர்கள் சலித்துக்கொண்டாலும் சகித்துக்கொள்ளவும் ஆரம்பித்துவிடுவார்கள்; எனவே கவலை வேண்டாம்.)
எல்லா ஊரிலும் செட்டப் செய்த பால் அபிஷேக ரசிகர்கள், கொடுத்த காசுக்கு நன்றாகவே அபிஷேகம் செய்து ஆடிப் பாடினார்கள். ரஜினி ராம்கி எந்த ஃபிரேமிலும் வரவைல்லை ஏனோ ? விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பதில் ரஜினி பட போஸ்டர்கள் விடாமல் பால்குடித்துக்கொண்டிருந்தன.
விழாவுக்கு சிறப்புப் பார்வையாளர்கள் (அதாவது பார்வையாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்) புதுப் பொண்ணும் மாப்பிள்ளையும். அடிக்கடி அவர்களையே காண்பித்துக்கொண்டு இருந்தார்கள்.
சென்ற விழாவிலேயே சுஜாதா என்ற பெயரை போகிறபோக்கில் ஷங்கர் குறிப்பிட்டுவிட்டுப் போய்விட்டார் என்று சுஜாதாவின் ரசிகர்கூட்டம் ஆதங்கமும் ஆத்திரமும் அடைந்ததாலோ என்னவோ இந்த முறை ஷங்கர் 'ரங்குஸ்கி' பற்றிச் சொல்லிவிட்டு ரங்கராஜனையும் புகழ்ந்தார்.விழாவில் விவேக் 'பற்றி, பற்றி' என்று பலரைப் பற்றினார். வைரமுத்து வெள்ளை உடையில் போப் ஆண்டவர் போல் வந்து போப் பற்றி ஜோக் சொன்னார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அநேகமாக ஷங்கரின் அடுத்த படத்துக்கு இவர் காமெடி டிராக் செய்தாலும் செய்வார். விவேக் சில காமெடி காட்சிகளில் வைரமுத்துவை போல இமிடேட் செய்வார். இந்த முறை போப் ஜோக் சொல்லி விவேக்கையும் மிஞ்சிவிட்டார்.
இசை சிடி வெளியீட்டைப் போலவே இங்கும் கருணாஸ், லாரன்ஸ் ராகவேந்திரா என்று வரிசையாக பலர் செஞ்சோற்றுக் கடன் கழித்தார்கள். ரஜினி பட விழாவுக்கு கருணாஸ் தான் கிடைத்தாரா ? ஏன் பெண்கள் யாரும் வரவில்லை ? அதே போல கலந்துக்கொண்டு பேசியவர்கள் எல்லோரும் ஆண்கள். ரொம்ப வெறுப்பேத்திவிட்டார்கள்.
அடுத்த படத்தில் தங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் ஷங்கரை அவர் செட் போல வானளாவப் புகழ்ந்தார்கள்; நிதி கிடைக்கும் என்ற நப்பாசையில் கலாநிதி மாறனைப் புகழ்ந்தார்கள். இசை விழா இல்லை என்பதாலோ, ஏ.ஆர்.ரஹ்மானே இல்லை என்பதாலோ அவரைக் குறித்தும் ஐஸ்வர்யா ராய் குறித்தும் சலம்பல் குறைவுதான். வைரமுத்துவே ஐஸை பற்றி சொல்லவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எல்லோரும், சொல்லிக்கொடுத்த மாதிரியே, "டிரைலரே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும்?" என்று பேசிவிட்டுப் போனார்கள்.
டிரைலரே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும் என்று நாமும் கொஞ்சம் யோசித்ததின் விளைவு இந்த விமர்சனம். படம் வந்த பிறகு இந்த விமர்சனத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.
விஞ்ஞானி என்றால் ஃபிரென்ச் தாடி வைத்துக்கொள்ள வேண்டும்; அதனால் ரஜினியும் வைத்துக்கொள்கிறார். (ப்ரென்ச் தாடியில் கிழத்தனம் கொஞ்சம் மறைந்து/குறைத்துத் தெரியும் என்பது கூடுதல் நன்மை.) அதுலும் கொஞ்சம் வித்தியாசமான ஃபிரன்ச் தாடி. ஸ்டைல் வேண்டாமா ? மேக்கப் அருமை!.
விஞ்ஞானியாக வரும் ரஜினி (வசீகரன்) 10 வருட உழைப்பில் "சிட்டி" என்ற எந்திர மனிதனை உருவாக்குகிறார். பரதம் முதல் குங்குஃபூ வரை எல்லாம் அதற்குத் தெரியும். ஆனால் அதற்கு மனிதனின் பொய், வஞ்சகம், பொறாமை, துரோகம், காதல் எதுவும் தெரியாது. இதை நான் சொல்லவில்லை, விஞ்ஞானி ரஜினியே சொல்லுகிறார்.
உருவாக்கிய எந்திரனை இப்போது ஊரில் உலாவவிடுகிறார் ரஜினி. அங்கே சில காமெடிக் காட்சிகள் நடக்கின்றன. உதாரணம் "வயசு என்ன?" என்ற கேள்விக்கு, "ஒரு நாள்" என்ற பதிலும், அதே போல "நக்கலா?" என்ற கேள்விக்கு "நிக்கல்! எல்லா போல்ட்டும் நிக்கலில் செய்தது" என்ற வசனத்துக்கும் நிற்காத கைத்தட்டல்.
ஐஸ்வர்யா ராய் பல இடங்களில் (தன்)வயதுக்கு ஏற்றாற்போல் சகிக்க முடியாமலும், சில இடங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாதிரி கொஞ்சம் அழகாகவும் இருக்கிறார்.தமிழ் படத்தில் மின்சார ரயில் வந்தால் அங்கே ரவுடிகள் வர வேண்டும். அங்கே அப்படி ரவுடிகள் வரும் போது ஓமக்குச்சி நரசிம்மனுக்கே கோபம் வரும்; எந்திரன் ரஜினிக்கு வராமல் இருக்குமா? வருகிறது. ரயிலின் பக்கவாட்டில் நடந்து வந்து எல்லோரையும் அடிக்கிறார். ரஜினி எதைச் செய்தாலுமே தமிழக மக்கள் நம்பத் தயாராகிவிட்ட நிலையில் எந்திரன் ரஜினி செய்தால் நம்பாமல் இருப்பார்களா? கைத்தட்டிக் கொண்டாடுகிறார்கள். கிராபிக்ஸ் கலக்கல். அதுவும் ரயில் பக்கம் இருக்கும் மின்சாரக் கம்பங்களில் தாவித் தாவி வரும் காட்சிகள் அயல்நாட்டில் நடக்கும் காமென் வெல்த் போட்டி பார்த்த எஃபெக்ட்!
முதன்முதலில் எந்திரன் கற்றுக்கொண்ட மனித அறிவு(?!) இது. இதற்குப் பிறகு விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட சாராவுக்குக் (ஐஸ்வர்யா ராய்) கோபம் வருகிறது. எந்திரன் தன் வேலையை ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யாவைப் பார்த்து பாவப்படுகிறது. ஐஸ்-உடன் கொஞ்சிக் கொஞ்சி பேசுகிறது, டூயட் பாடுகிறது. சாராவுக்கு எந்திரன் ரஜினி மேல் காதல் வருகிறது. எந்திரனுக்கும் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் எந்திரன் விஞ்ஞானி ரஜினியிடம் எனக்கு சாரா வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. "உன்னை உருவாகினவன் நான். இதற்குப் பேர்தான் தூரோகம்!" என்று ரஜினி கோபப்படுகிறார். "எனக்கு சாராவை விட்டுக்கொடு. அதற்குப் பேர்தான் தியாகம்" என்று பதிலுக்கு பன்ச் பேசுகிறது எந்திரன்.
இந்தக் குழப்பத்தில் வில்லன் என்று எக்ஸ்ட்ராவாக யாராவது வந்து மேலும் தொல்லையும் நெருக்கடியும் கொடுத்தால்தான் நமக்கு நன்றாக இருக்கும். அதனால் ரஜினியின் சக விஞ்ஞானி இவரை வீழ்த்த என்ன செய்யலாம் என்று யோசிக்க, எந்திரனைத் தன்வசப்படுத்துகிறார். அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார். இந்த இடத்தில் ஹெலிக்காப்டர் எல்லாம் வருகிறது.இனி என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். சில காட்சிகள் ஸ்பைடர் மேன், ரோபோ காப் போன்ற படங்களை நினைவுப்படுத்தி ஹாலிவுட் தரத்தில் என்ற சொல்லுக்கு ஏற்றார்போல படம் இருக்கிறது.
படம் எங்கே, எப்படிச் சுற்றினாலும் கிளைமாக்ஸ் காட்சிக்கு தமிழனை தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுத் தான் தியேட்டர் வெளியே அனுப்ப முடியும். எனவே...
கிளைமாக்ஸ் காட்சிகளை வெள்ளித்திரையில் காணவும்.
எந்திரன் டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ அதனால் இப்பவே இந்த விமர்சனத்தை எழுத வேண்டிய கட்டாயம் :-)
Posted by IdlyVadai at 9/15/2010 02:49:00 PM 95 comments
Tuesday, September 14, 2010
மண்டேனா ஒன்று 14/9/2010
இது விபரீதமான போக்கு
"கொள்கை", என்ற பதம் அரசியல்கட்சி வட்டாரங்களில் மிகவும் பிரபலம். ஆயினும் இவ்வார்த்தைக்கு அறிவார்ந்த விளக்கம் ஏதும் அவர்கள் வசம் இருப்பதாகத் தெரியவில்லை. கட்சித் தலைவர்களால் சந்தர்ப்பத்தைப் பொருத்து வசதிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை, அவ்வளவே!! இப்பொழுது இவ்வார்த்தையைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளவர் தமிழக காங்கிரஸின் முக்கிய கோஷ்டித் தலைவர்களுள் ஒருவரான கே.வி.தங்கபாலு அவர்கள் ( இவர் தமிழக காங்கிரஸின் தலைவரும் கூட.). காரணம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
சமீபகாலமாகவே ஈவிகேஎஸ் திமு கழகத்தை விமர்சித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இது கழகத்தினருக்கும், குறிப்பாக கருணாநிதிக்கும் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தங்கபாலுவிற்கும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. காரணம் அதிகம் தேவையில்லை. தன்னை மிஞ்சிய தலைவர் கட்சியில் யாரும் இருந்துவிடக் கூடாது என்ற டிபிகல் காங்கிரஸ் தலைமையின் போக்கு காங்கிரஸில் உள்ள ஒவ்வொருவருவரிடமுமே இருப்பதுதான்.
நேற்றைய தினம் நாகர்கோவிலில் ஒரு கூட்டத்தில் பேசிய இளங்கோவன், தனது வழக்கமான நையாண்டியுடன் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை, ரேஷன் அரிசி கடத்தல், மணற் கொள்ளை மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது என்பன போன்றவற்றில் தனது அதிருப்தியை வெளிப்படையாக தனது விமர்சனத்தின் மூலம் தெரிவித்தார். தவிர, ரேஷன் அரிசி கடத்தலில் "அவர்கள் கட்சியின்" முக்கியப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிவித்திருந்தார் (இதற்கு முன் தினம்தான் ஜெயலலிதாவும் இதே போன்றதொரு கருத்தை வெளியிட்டிருந்தார்). இதுதான் தங்கபாலுவின் தற்போதைய எரிச்சலுக்குக் காரணம். இது தொடர்பாக பதிலளித்துப் பேசிய தங்கபாலு, கட்சியின் தலைமைக்கும், கொள்கைக்கும் விரோதமாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தவிர, தனது தலைவர் பதவிக்கு வேட்டு வைக்கும் விதமாக இளங்கோவன் மேலிடத்தில் போட்டுக் கொடுப்பத்தாகவும், அதற்குத் தாம் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்தார். இப்பொழுது இதில்தான் நமக்கு சந்தேகம்.
இப்பொழுது இளங்கோவனது இந்தக் கருத்தால் கட்சித் தலைமைக்கும், கொள்கைக்கும் என்ன விரோதம் ஏற்பட்டுவிட்டது? இளங்கோவன் கூட்டணிக் கட்சியென்றும் பாராமல், அவர்களுடைய முறைகேடுகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் விமர்சித்து வருகிறார். இது எவ்வாறு காங்கிரஸின் கொள்கை விரோதமாகும்? அப்படியென்றால் காங்கிரஸின் கொள்கைகள்தான் என்ன? தங்கபாலுவின் கூற்றுப் படி வைத்துக் கொண்டால், முறைகேடுகளைக் கண்டும் காணாமலும் இருப்பதுவும், அதற்குத் துணை போபவர்களுக்குத் துதி பாடுவதுவும்தான் காங்கிரஸின் கொள்கை என்று அர்த்தமாகிறது. ஒரு தேசியக் கட்சிக்கு இப்பேர்ப்பட்ட அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய கருத்தைக் கூறியிருக்கும் தங்கபாலுதான் இங்கு கட்சியின் நடவடிக்கைக்குரியவறாகிறார்.
தனக்கில்லாத தைரியமும், அதனால் இளங்கோவனுக்குக் கிட்டும் விளம்பரமும் தங்கபாலுவின் வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக இருக்கலாம். தவிர, திமு கழகத்தின் இம்மாதிரியான முறைகேடுகளைக் கண்டும் காணாமலும் இருந்தால், காங்கிரஸாருக்கு மற்ற காரியங்களை கழகத்தினரிடம் சாதித்துக் கொள்வது எளிது என்ற எண்ணமாகவும் இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும், இம்மாதிரியான கூட்டணிக் கட்சியின் அராஜக நடவடிக்கைகளைக் கண்டு மெளனியாக இருப்பதுவும், அதனைக் கண்டிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ரீதியில் மிரட்டல் விடுப்பதுவும், தமிழகத்தில் எவ்வகையிலும் காங்கிரஸுக்கு நன்மைகளைச் செய்து விடாது. இது தங்கபாலுவுக்கும் தெரிந்திருக்கும். இந்நிலையிலும் இவர் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவது 2011 இல் மட்டுமல்ல, 2111 இந்திலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டில் ஏதாவதொரு கழகத்தையே சார்ந்திருக்கும் விதமான ஒரு துர்பாக்ய நிலையைத்தான் தோற்றுவிக்கும். அதுதான் தங்கபாலுவின் விருப்பம் போலும். எனவே இவ்விபரீதமான பாதையிலிருந்து விலக, தூங்குவது போன்ற பாசாங்கிலிருக்கும் தமிழக காங்கிரஸும், அதனை இயக்கும் மத்திய காங்கிரஸும் காலா காலத்தில் விழித்துக் கொள்வது அவரவர்களுக்கும் நலம், தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நலம்.
இதையெல்லாம் விட வேடிக்கையான விஷயமென்னவெனில், இளங்கோவனைப் பற்றி இவ்வளவும் பொறிந்து தள்ளியதற்குப் பிறகு, தாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருப்பதாகத் தெரிவித்ததுதான்.
எனக்கு என்னவோ யதிராஜ் கூட காங்கிரஸ் கட்சிக்காரர் என்ற சந்தேகம் வருது :-)
Posted by IdlyVadai at 9/14/2010 07:28:00 AM 17 comments
Labels: அரசியல், யதிராஜ சம்பத் குமார்