ஆரவாரமான எதிர்ப்புகள், ஆயிரம் குற்றங்குறைகள், ஏற்பாட்டுக் குளறுபடிகள், கூட்டம், நெரிசல், தள்ளுமுள்ளு, குழப்படி இன்னபிற. இவ்வரிசையில் பட்டியலிட இன்னும் பல நூறு இருந்தாலும் செம்மொழி மாநாடு சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. கணக்கற்ற கோடிகள் செலவில் எதற்காக இப்படியொரு மாநாடு என்று ஆரம்பித்து, இதனால் சாதித்தது என்ன என்பது வரை ஒரு புத்தகமே வெளியிடக்கூடிய அளவுக்குக் கேள்விகள் இருந்தாலும், உலகம் முழுதும் தமிழ்ப்பக்கம் திரும்பிப் பார்க்கும்படியான ஒரு தருணத்தைக் கலைஞர் வழங்கியதை மறுக்க இயலாது. சந்தேகமில்லாமல் இது ஒரு தனிநபர் சாதனை.
மாநாட்டு தினங்கள் முழுதும் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அவரவர் அடுத்த நிலை ஆள்கள், அடுத்ததற்கு அடுத்த நிலை, அதற்கடுத்த நிலை என்று ஆளும் வர்க்கம் முழுதும் கோவைக்குக் குடிபெயர்ந்துவிட்டது. எனவே தொண்டர்களும். அநேகமாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திமுகவினர் வழக்கம்போல் வேன் வைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். மேலிடத்து உத்தரவு போலிருக்கிறது. கட்சிக்கொடியை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டார்கள்.
கோவை மக்களுக்கு மிரட்சி கலந்த திகைப்பு. இப்படியொரு பிரம்மாண்டத்தை அவர்கள் (வேறு யாருமேகூட!) இதற்குமுன் எதிர்கொண்டதில்லை. என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காகவே புறப்பட்டு வந்துகொண்டிருந்தார்கள். பீளமேடு கொடிசியா வளாகம் கண்ணுக்குப் புலப்படத் தொடங்கும் தொலைவிலிருந்தே பிரமிப்பு ஆரம்பமாகிவிடுகிறது. தோட்டா தரணியின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமான கோட்டை முகப்பு. மாநாட்டு அரங்கம் மட்டுமே சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவு. செம்மொழியை உள்ளேயும் செம்மொழியானை வெளியேயும் வரவேற்கும் பதாகைகள். காது கிழிக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் செம்மொழிப் பாடல். அதை லூப்பில் போட்டு, ஐந்து நாளும் நிகழ்த்தப்பட்ட செவி வழி பயங்கரவாதத்தோடு ஒப்பிட்டால் வேறு எதுவும் அத்தனை மோசமில்லை.
பொதுமக்களுக்குப் பட்டிமன்றம், கருத்தரங்கம், இசையரங்கம், கண்காட்சிகள் என்றும் ஆய்வாளர்களுக்குத் தனி அரங்குகளில் இடமென்றும் தனித்தனியே ஏற்பாடுகள் இருந்தன. கலைஞரும் அமைச்சர்களும் அடியார் குழாத்தினரும் பெரும்பாலும் அந்த தோட்டா தரணி கோட்டையை விட்டு வரவில்லை என்பதால் கூட்டம் முழுதும் அங்கேயேதான் இருந்தது. கவியரங்கத் தீவிரவாதிகள்வேறு யாரையும் நகரவிடாதபடிக்கு ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை திரும்பத் திரும்ப உரக்கச் சொல்லி மிரட்டிஉட்காரவைத்துக்கொண்டிருந்தார்கள். அப்படியும் மீறி எழுந்து வெளியே வருவோர் கண்காட்சி க்யூவில் சிக்கிக்கொள்ள வேண்டியதுதான்.
தினசரி காலை பத்து மணி முதல் இரவு பத்து மணிவரை அந்த வரிசை குறைந்தது ஒரு கிலோமீட்டர் நீளத்துக்குக் குறையாமலேயே இருந்ததைப் பார்க்க முடிந்தது. போலீசார் ஒரு தவறு செய்துவிட்டார்கள். வளாகத்தில் இரண்டு கண்காட்சிகள் இருந்தன. செம்மொழிக் கண்காட்சி ஒன்று. தமிழ் இணையக் கண்காட்சி ஒன்று. இரண்டுக்கும் தனித்தனி வரிசை அமைத்திருக்கலாம். சற்று நெரிசல் தணிந்திருக்கும். மாறாக, தமிழ் இணையக் கண்காட்சி அரங்குக்குப் போய்விட்டு, அதே வரிசையில்தான் செம்மொழிக் கண்காட்சிக்குச் செல்லவேண்டும் என்று ஏற்பாடு செய்திருந்தபடியால் மக்கள் மிகவும் தவித்துவிட்டார்கள்.
என்னதான் இருக்கிறது உள்ளே என்ற எதிர்பார்ப்புடன் மணிக்கணக்கில் காத்திருந்துவிட்டு, இணையக் கண்காட்சிக்கு உள்ளே வருபவர்கள், வெறுமனே ஆளுக்கு இரண்டு கம்ப்யூட்டர்களும் அழகு போஸ்டர்களுமாக உட்கார்ந்திருந்த தொழில்நுட்ப நிறுவன ஸ்டால்களைக் கண்டு பேய் முழி முழித்ததைக் காணமுடிந்தது. அத்தனை சிரமப்பட்டு உள்ளே வந்ததற்கு ஆளுக்கொரு இலவச சிடியாவது கொடுக்கமாட்டார்களா என்று ஏங்கிய தமிழுள்ளங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதுவுமில்லாதபோது இலவச பேம்ப்லட்களையாவது எடுத்துச் செல்ல மிகவும் விரும்பினார்கள்.
தினமும் அவ்வளவு கூட்டம் வரும் என்று முதல்நாள் எதிர்பாராதிருக்கலாம். இரண்டாவது, மூன்றாவது தினங்களிலாவது கண்காட்சி அரங்குகளுக்கு அருகே டால்லெட்டுகள், குடிநீர் வசதி செய்திருக்கலாம். மக்கள் உண்மையிலேயே தவித்துத் தள்ளாடியதைக் காண முடிந்தது.ஆய்வரங்குகளைப் பொருத்தவரை நான் செம்மொழி அரங்குகளில் அதிகம் கலந்துகொள்ளவில்லை. கலந்துகொண்ட ஓரிரு அமர்வுகளும் வெத்துவேட்டுகளாக இருந்தன. அபத்தமான ஆய்வுக்கட்டுரைகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள், எதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து இந்த ஆசாமிகளை விமானமேற்றி வரவழைத்தார்கள் என்று சில தருணங்களில் கோபமே வந்தது. உள்ளூர் ஆய்வாளர்கள் இன்னமுமே மோசம். அரை மணிநேரம் பேசினால் அதில் இருபது நிமிடங்கள் கலைஞரைப் புகழவே சரியாகப் போய்விடுகிறது. இவ்விஷயம் கேள்விப்பட்டு, தன்னை யாரும் புகழவேண்டாம் என்று அவர் ஓர் அறிக்கை வெளியிட்டால், அது பற்றிப் புளகாங்கிதமடைந்து பத்து நிமிடம் பேசுகிறார்கள். தமிழறிஞர்கள் திருந்தவே போவதில்லை.
மாறாக, தமிழ் இணைய மாநாட்டில் எனக்குப் பல உருப்படியான அமர்வுகள் வாய்த்தன. OCR தொடர்பான ஆராய்ச்சிகள், தமிழ் சொல் திருத்திகள் தயாரிப்பில் எதிர்கொள்ள நேரிடும் சிக்கல்கள், புத்தகப் பதிப்பில் யூனிகோட் பயன்படுத்த முடியாதிருப்பதற்கான காரணங்கள், என்ன செய்யலாம் என்கிற ஆராய்ச்சிகள், தமிழ் தரவுத் தளங்கள் - தேடுபொறிகள் தொடர்பான ஆய்வுகள், மொபைல் போனில் தமிழ் பயன்பாடு என எனக்குக் கேட்கக்கிடைத்த உரைகள் பெரும்பாலும் உபயோகமாகவே இருந்தன. தொழில்நுட்பத்தை வெகு எளிமையாக, என்னைப் போல் ஒரு தொழில்நுட்ப அறிவிலிக்கும் புரியும்படியாக விளக்கக்கூடிய சிலரை அங்கே சந்தித்தேன். குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள், பேராசிரியர் தெய்வசுந்தரம். முத்து நெடுமாறன். மைக்கல் காப்லன் [மைக்ரோசாஃப்ட்]. மதன் கார்க்கி [அண்ணா பல்கலை]. இணையமும் பதிப்பும் என்ற பொருளில் ஆழி பதிப்பகம் செந்தில்நாதன் நிகழ்த்திய பிரசண்டேஷனும் தொடர்ந்த விவாதமும் அற்புதமாக இருந்தது. மாநாட்டின் ஆகப்பெரிய லாபம் என்று எனக்குத் தோன்றியது இத்தகு அமர்வுகள்தாம்.
ஞாயிற்றுக்கிழமை இறுதிநாள் நான் கோவையில் இல்லை. அன்று காலையே புறப்பட்டு சென்னை வந்துவிட்டேன். தமிழக அரசு, Tab, Tam குழப்படிகளுக்குத் தலைமுழுகி, யூனிகோடை அரசு அங்கீகாரம் பெற்ற ஒரே பயன்பாட்டுக் குறியீடாக ஏற்றது, தமிழில் படிப்போருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் விருது போன்ற அறிவிப்புகளை அன்று வெளியிட்டதைச் செய்தியாகத்தான் பார்த்தேன்.
கவன ஈர்ப்பு என்னும் தளத்திலிருந்து நகர்ந்து, தமிழ் படித்தல் தொடர்பான ஒரு விழிப்புணர்வை இம்மாநாடு மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். ஒரு தமிழ் எழுத்தாளனாகவும் பதிப்பு நிறுவன எடிட்டராகவும் எனக்கு இது மகிழ்ச்சியளிக்கும் விஷயமே. இன்று ஆங்கிலவழிக் கல்விக்கூடங்களில் சேரும் தலைமுறை, பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாசகர்களாக வரும் தருணத்தில், தமிழில் வாசிக்கவே தெரியாதவர்களாக இருக்கக்கூடுமென்ற அச்சம் எனக்குண்டு. அதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளக்கூடிய மனப்பான்மையும் உள்ளதை இப்போதே சில இடங்களில் காண்கிறேன்.
இம்மாதிரியான மாநாடுகள் இம்மனநிலையைக் கண்டிப்பாக மாற்றக்கூடும். சகிக்க ஒண்ணாத கோரம் என்றாலும் அந்த ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ பாடலைத் திரும்பத் திரும்ப ஒரு நாளைக்கு 1008 முறை ஒலிபரப்பி, வந்திருந்த [எத்தனை லட்சம் என்று சரியாகத் தெரியவில்லை. தினசரி குறைந்தது ஒன்றரை லட்சம் பேர் இருக்கலாம். முதல் நாள் கூட்டம் தனி.] அத்தனை பேருக்கும் உளவியல் ரீதியில் ஒரு தமிழ்த்தாக்குதலை அளித்திருப்பதைக்கூட, இந்த வகையில் வரவேற்கத்தான் தோன்றுகிறது!
படங்கள் உதவி: டாக்டர் மதன் கார்க்கி ( இன்னும் நிறைய படங்கள் இங்கே இருக்கு )
அத்தனை பேருக்கும் உளவியல் ரீதியில் ஒரு தமிழ்த்தாக்குதலை அளித்திருப்பதைக்கூட, இந்த வகையில் வரவேற்கத்தான் தோன்றுகிறது!. அட பழ.கருப்பையாவிற்கு செம்மொழி தாக்குதல் தான் நடந்திருக்கு !
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, June 28, 2010
செம்மொழி மாநாடு - பா.ரா ரிப்போர்ட் !
Posted by IdlyVadai at 6/28/2010 10:43:00 AM
Labels: கட்டுரை, நிகழ்ச்சி தொகுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
27 Comments:
//அதில் இருபது நிமிடங்கள் கலைஞரைப் புகழவே சரியாகப் போய்விடுகிறது. இவ்விஷயம் கேள்விப்பட்டு, தன்னை யாரும் புகழவேண்டாம் என்று அவர் ஓர் அறிக்கை வெளியிட்டால், அது பற்றிப் புளகாங்கிதமடைந்து பத்து நிமிடம் பேசுகிறார்கள். தமிழறிஞர்கள் திருந்தவே போவதில்லை.// அதெல்லாம் இருக்காது, நான் சொல்வது போல் சொல்கிறேன், நீங்கள் புகழ்ந்து கொண்டே இருங்கள் என்பதுதானே விருப்பம்/கட்டளையாக இருக்கும்..மக்கள் செலவில் இவ்வளவு பெரிய மாநாடு நடத்துவது வேறு எதற்காக..புரியாத ஆசாமியாக இருக்கிறாரே..இவ்வாறு புகழாவிட்டாலும் அதுவும் தூற்றுவதாக எடுத்துக்கொண்டு எங்கே பழ.கருப்பையாவுக்கு நடந்தது தங்களுக்கும் நடந்துவிடும் என்ற பயமாகத்தானிருக்கும்.. எப்படியோ மாநாட்டைச் சாக்கு வைத்து , சாக்கு சாக்காக பல காண்ட்ராக்டுகளில் பணத்தை மேலும் அள்ளியிருப்பார்கள்...
கருணாநிதியை மட்டும் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட இந்த மாநாட்டிற்கும், தமிழுக்கும் என்னா சார் சம்பந்தம்?
பழ.கருப்பையாவின் தாக்குதலுக்குப் பின்னால் திமுக தொண்டர்கள் இருப்பார்கள் என்று சந்தேகப்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அங்காடித் தெருவில் அவர் வில்லனாக நடித்திருந்ததைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்தான் இந்த காரியத்தை செய்திருக்கிறார்கள். சிபிஐ இந்த உண்மையை எப்படியும் சில நாட்களில் கண்டுபிடித்து வெளியிடும்வரை அமைதி காக்கவும்.
தனி நபர் சாதனை -இது நக்கலா இல்ல ’பாரா’ட்டா ?
பாரி முல்லைக்கு தேர் கொடுத்தான், ஓரி மயிலுக்கு போர்வை கொடுத்தான் -ன்னு சொல்ற சங்கப் பாடல்களை எல்லாம் எப்படி நம்பறதுன்னு இப்ப சந்தேகமே வந்திடுச்சு.
சங்க காலத்தில செம்மொழி மாநாடு எதாவது நடந்து அங்கே பாடியிருக்கமாட்டார்கள் என்பதென்ன நிச்சயம்.
”பாணபத்திர ஒணாண்டி” மாதிரி கவிதை படித்து தள்ளினார்கள்.
//இந்த மாநாட்டிற்கும், தமிழுக்கும் என்னா சார் சம்பந்தம்?//
"அனுபவிக்கனும்". ஆராயப்படாது!
:>
400 crores I believe the total expenditure..
Prashanth
நல்ல கட்டுரை :
படித்துப் பார்க்கவும்
http://amuttu.com/index.php?view=pages&id=216
"......பல வருடங்களுக்கு முன்னர் ஃபிரான்ஸிலே சிறுவர் சிறுமியருக்கான தமிழ் கல்வித்திட்டம் ஒன்றை உருவாக்கப்பட்டது. அதை இன்று உலகத்து பல நாட்டு தமிழர்களும் பயன்படுத்துகிறார்கள். மதுரைத் திட்டம், நூலகத் திட்டம் மூலமாக ஆயிரக்கணக்கான நூல்கள் கணினி வழியாக இலவசமாக உலக முழுவதும் படிக்கக் கிடைக்கின்றன. தமிழ் விக்கிபீடியாவில் இன்றைய தேதியில் 22,645 கட்டுரைகள் ஏறிவிட்டன. தமிழ் விக்சனரியில் 115,000 வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றிற்காக எத்தனையோ புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவுசெய்து மௌனமாக உழைக்கிறார்கள். அவர்களைப்பற்றி வெளியுலகம் அறிவதே இல்லை.
ஈழத்து பூராடனார் என்ற பெரும் தமிழ் அறிஞர் கனடாவில் வாழ்கிறார். இதுவரை 250 தமிழ் நூல்கள் எழுதியிருக்கிறார். தமிழில் கணினியில் 1986ல் அச்சடித்து முதல் வெளியான புத்தகம் அவருடையதுதான். அதன் பெயர் 'பெத்தலேகம் கலம்பகம்'. அந்த நூலை அச்சடித்த தமிழ் எழுத்துருவை கணினியில் உருவாக்கியதும் அவர்தான். ஹோமரின் ஒடிசி, இலியட் ஆகிய காவியங்களை தமிழில் மொழியாகம் செய்திருக்கிறார். 48 ஆதிக்கிரேக்க நாடகங்களை மொழியாக்கம் செய்து 14 புத்தகங்களாக பதிப்பித்திருக்கிறார். ஒரு பல்கலைக் கழகம் செய்யவேண்டிய வேலையை தனியொருவராக செய்தவரை பலருக்கு தெரியாது. இவருக்கு செவ்வியல் மாநாட்டுக்கு அழைப்பு இல்லை.
கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத்தோட்டம் பத்து வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்டது. கனடிய அரசு இதை charitable organization ஆக அங்கீகரித்திருக்கிறது. ரொறொன்ரோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறப்பு இலக்கிய உரைகளை தொடர்ந்து ஏற்பாடு செய்கிறது. வருடா வருடம் இலக்கியத் தோட்டத்தின் சர்வதேச நடுவர்கள் உலகத்து சிறந்த தமிழ் படைப்பாளிகளை அடையாளம் கண்டு பரிசு கொடுத்து கௌரவிக்கிறார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும் பாய்ச்சல்களை சத்தமில்லாமல் நிகழ்த்துகிறார்கள். தமிழ் கணிமைத்துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு பெரும் தொகை முதலீடு செய்யப்படுகிறது. ஒலியில் இருந்து தமிழ் எழுத்துருவுக்கு மாற்றும் திட்டத்தில் தன்னார்வத் தொண்டர்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள். தமிழ்நாட்டு கவி சொன்னதில் பாதி உண்மை இருக்கத்தான் செய்கிறது. கிராமத்திலே ஒரு பழமொழி உண்டு. 'தானும் செய்யமாட்டான், தள்ளியும் நிற்கமாட்டான்.' தமிழ்நாடு ஒன்றுமே செய்யவேண்டாம். தள்ளி நின்றால் போதும், தமிழ் வளர்ந்துவிடும்".
Vayitherichalil ezhuthi irukeenga pola...
நான் தினமலரில் மாநாட்டுச் செய்திகள் படித்தும், சன் / கலைஞர் டி வி பார்த்தும் அநுபவித்தேன். கனிமொழி கவிதைகளை குதறி எடுத்ததை நீங்கள் எழுதவில்லயே? எல்லோரும் பழ கருப்பையா மாதிரி தாங்க முடியுமா? அட்லீஸ்ட் அவருக்கு நாளையே அம்மாவின் ஆசி கிடைக்கும் - நமக்கு? - ஜகன்னாதன்
//அத்தனை பேருக்கும் உளவியல் ரீதியில் ஒரு தமிழ்த்தாக்குதலை அளித்திருப்பதைக்கூட, இந்த வகையில் வரவேற்கத்தான் தோன்றுகிறது!.//
நமது மக்களிடையே குறைந்து வரும் கடவுள் பக்தியை மீண்டும் தூக்கி நிறுத்தவும், இளைய சமுதாயத்திற்கு நம் மதத்தின் அருமை பெருமைகளை புரிய வைப்பதற்கு நாம் ஏராளமான பொருட் செலவில் கோவில் திருவிழாக்களையும், கும்பாபிஷேகங்களையும், மகா யாகங்களையும் நடத்துவது எவ்வளவு அவசியமோ, அதைவிட அவசியம் தமிழே எழுதப் படிக்கத் தெரியாமல், அதையே பெருமையாக கூறிக்கொள்ளும் இளையத் தலைமுறைக்கு கொஞ்சமாவது தமிழ் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த இது போன்ற மாநாடுகளை நடத்துவதும் ஆகும்.
இல்லையென்றால் நம்
சமஸ்க்ருதத்திற்கு ஏற்பட்ட நிலை தான் தமிழுக்கும் ஏற்படும்.
'நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசிவது' போல் , இந்த மாநாட்டால் சுயநலவாதிகளுக்கு போக தமிழுக்கும் ஓரளவு நன்மை ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுத்தான் ஆக வேண்டும்.
கருணாநிதி நடத்திய மாநாடு என்ற ஒரே காரணத்திற்காகவும், துதிபாடிகளின் ஜல்லி அடிக்கும் சத்தத்தை சகிக்கமுடியாத இன்னொரு காரணத்திற்காகவும், நாமும் இந்த மாநாட்டை மட்டம் தட்டி பின்னூட்டத்தில் ஜல்லியடிப்பதை விட்டுவிட்டு, இதனால் தமிழ் மக்களுக்கும் ,இளைய தலைமுறைக்கும் தமிழ் மீது ஓரளவாவது பற்றும், விழிப்புணர்ச்சியும் , எழுச்சியும் வந்திருக்கிறது என்பதைப் ஒத்துக்கொள்வோம்.
இன்று காலையில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுவனொருவன் எங்கள் தெருவில் 'செம்மொழியாம் எங்கள் தமிழ் தமிழ் மொழியாம் ' என்று உரக்கபாடிக் கொண்டு சென்றதைப் பார்த்தேன்.
//நமது மக்களிடையே குறைந்து வரும் கடவுள் பக்தியை மீண்டும் தூக்கி நிறுத்தவும், இளைய சமுதாயத்திற்கு நம் மதத்தின் அருமை பெருமைகளை புரிய வைப்பதற்கு நாம் ஏராளமான பொருட் செலவில் கோவில் திருவிழாக்களையும், கும்பாபிஷேகங்களையும், மகா யாகங்களையும் நடத்துவது எவ்வளவு அவசியமோ,//
சில குறைகளையும் மீறி மக்களின் வரவேற்புடன் இந்த மாநாடு தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றி இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. மிக முக்கியமாக கட்சியின் சாயம் மாநாட்டில் கொஞ்சமும் இல்லை என்பதையும் கூடிய கூட்டத்தில் பொதுமக்களே (அதிலும் மாணவர்கள், மகளிர், ம்ற்றும் இளம் தலைமுறையின்ர் பங்களிப்பு) அதிகம் என்பதையும் நோக்க வேண்டியிருக்கிறது.
இவர்கள் மத்தியில் தமிழின் தொன்மை, வரலாறு, இலக்கியங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள்து என்பதையும் மறுக்க முடியாது.
இதற்கு செலவழித்த பணம் வீண் என்று கொண்டால் தீபாவளி, பொங்கல் என்று நாம் விழா கொண்டாடுவதும் வீண்தானே.
*இன்று காலையில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுவனொருவன் எங்கள் தெருவில் 'செம்மொழியாம் எங்கள் தமிழ் தமிழ் மொழியாம் ' என்று உரக்கபாடிக் கொண்டு சென்றதைப் பார்த்தேன்.
*
கானா கபாலி அண்ணே. காட்டுக்கத்தலான அந்தப் பாட்டை கான்வென்ட் பையன் கத்திண்டு போன தமிழ் வளந்துடுமா?
கலி முத்திடுச்சுடா சாமி.
கட்சிக்கொடிதான் உபயோகப்படுத்தவில்லையே தவிர கரைவேட்கள் இல்லை என்று சொல்ல முடியுமா.
அரசியல் மாநாடு போல துதிகளை விடுங்கள், தொண்டர்களின் கோசங்கள் எங்கிருந்து வந்தன.
மதுபாட்டில்களும், பிரியாணிகளும் பரிமாறப்பட்டதை தினமலர் சுட்டிக்காட்டியுள்ளது.
மாநாட்டில் ஒரே ஒரு நன்மை, நம்மையும் மாநாட்டைப் பற்றி பேச வைத்ததே ஆகும். இதனால் இவர்கள்தான் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை நாமாவது ஏதேனும் செய்வோம் என்று நாம் நினைத்தால்.
-ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com
:(
சகிக்க ஒண்ணாத கோரம் என்றாலும் அந்த ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ பாடல்
என்ன கொடுமை இது??!!
செம்மொழி மாநாடு வெற்றிகரமாக (!!) நடந்து முடியும் வேளையில் பழ.கருப்பையாவின் மீது கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது..
மாநாடு முடியறதுக்குள்ள அவரை முடிச்சுடணும்னு நெனச்சு வந்த மாதிரி இருந்ததாம்...
பா ரா சார் நீங்களுமா இந்தக் கண்றாவியைப் பாராட்டுவது? இது கருணாநிதியைக் கொண்டாடுவதற்காக கருணாநிதி குடும்பத்தாரால் நடத்தப் பட்ட ஒரு தண்டம். இறுதியில் ஒரு கண் பட்டு விடக் கூடாது என்பதற்காக நேத்திக் கடனாக ஒரு ஆட்டை வெட்டுவதற்குப் பதிலாக மனிதனை பழ கருப்பையாவை வெட்டியிருக்கிறார்கள் காட்டுமிராண்டிகள்.
தமிழ் ஆராய்ச்சி என்றால் அதற்கு ஏன் இந்த ஆடம்பரம் ஏதாவது ஒரு பல்கலைக் கழக வளாகத்தில் அமைதியாக சம்பந்தப் பட்டவர்களை வரவழைத்து 1 கோடி ரூபாய்க்குள் நடத்தி விட்டுப் போக வேண்டியதுதானே? கண்காட்சி நடத்துவது என்றால் ஊர் ஊருக்கு வருடா வருடம் நடத்தும் கண்காட்சியில் வைத்துத் தொலைக்க வேண்டியதுதானே? இப்படி கும்பல் கும்பலாக கரை வேட்டிக் கட்டிக் கொண்டு டாஸ்மாக் சரக்கை ஏற்றி வாந்தி எடுத்துக் கொண்டு இடுப்பு வேட்டி அவிழ புழுதியில் புரளுவதும் ஆபாசமாக கவிதை பாடுவதும்தான் தமிழ் வளர்ச்சியா? கருணாநிதியை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து ஜெ வை மாமி என்று ஏசி கவிதை பாடுவதற்கு ஒரு மாநாடா? இதைப் பாராட்ட நாலு ஜென்மங்கள் வேறு கிளம்பியுள்ளன த்தூஊஊஊஊஉ வெட்க்கக் கேடு.
இன்றைக்கும் தமிழ் நாட்டில் கக்கூஸ் கழுபவர்கள் டிரெயினேஜ் குழிக்குள் இறங்கிதான் சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. அதுக்கு ஒரு மெஷின் வாங்கிக் கொடுக்க வக்கில்லாத கருணாநிதிக்கு
இன்றைக்கும் தமிழ் நாட்டில் தாம்பரத்துக் குக் கீழே நாளுக்கு 8 மணி நேரம் கரண்ட் இல்லை அதற்கு ஒரு வழி பண்ணத் தெரியாத கருணாநிதிக்கு
இன்றைக்கும் தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் அடிமைகளாக மும்பையில் போய் வேலை பார்க்கும் மக்களுக்கு சென்னைக்குக் கீழே வேலை வாய்ப்பு உருவாக்கித் தரத் துப்பில்லாத கருணாநிதிக்கு
ரெக்கார்ட் டான்ஸ் ஆடி குத்தாட்டம் போட்டு ஆபாச கவிதை பாடி கொண்டாட இப்படி ஒரு ஆபாசமான மாநாடு அதையும் வெட்க்கம் இல்லாமல் கண்டு ஏமாறும் மக்கள் அதையும் பாராட்டித் தொலைக்கும் ஒரு பாரா தமிழ் நாடு உருப்பட வழியேயில்லை.
ஐயா யாராவது தமிழ் வளர்ச்சி தமிழ் உணர்வு இதெல்லாம் என்னவென்று கொஞ்சம் சொல்லுங்கள். நிச்சயம் இந்த மாநாடு அது இல்லை. ஆங்கிலத்துக்கு எவனாவது இப்படி ஒரு ஆபாச மாநாடு எடுக்கிறானா? ஏன் இந்த வெறியாட்டம்? ஏன் இந்த வக்கிரம்? ஏன் இந்த துதி பாடல்? ஏன் இந்த பண விரயம்?
//கானா கபாலி அண்ணே. காட்டுக்கத்தலான அந்தப் பாட்டை கான்வென்ட் பையன் கத்திண்டு போன தமிழ் வளந்துடுமா?//-Anony
பெயரிலி தம்பி,
"அக்கினி குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்தில்வைத்தேன்
வெந்து தணிந்தது காடு "
என்ற பாரதியார் பாடலை நீங்கள் படித்திருந்தால் இந்த கேள்வியை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் .
நீங்க இப்படி தமிழ் பற்றுதலை மட்டம் தட்டி பின்னூட்டம் போட்டுவிட்டால் தமிழ் வளர்ந்து விடுமா தம்பி?
வட நாட்டிலேயே பல வருடம் இருந்து விட்டு சென்ற வருடம் தான் தமிழகத்திற்கு திரும்பி வந்த என் நண்பனின் இரண்டு பிள்ளைகளுக்குமே தமிழ் தெரியவில்லை .இந்தியும் ஆங்கிலமும் தான் படித்திருந்தார்கள். நானே வ்ரும்பிச் சென்று அவர்களுக்கு தமிழ் எழுத படிக்க கற்றுக் கொடுத்தேன். இன்று அழகாக தமிழ் எழுதுகிறார்கள் , படிக்கிறார்கள்.
இது போன்ற செயலையாவது நீங்கள் செய்து ஓரளவிற்கேனும் தமிழை வளர்க்க சிறு தொண்டு செய்யுங்க தம்பி.
உங்களுக்கும் தமிழ் பற்று இருக்கும். அதை நான் மறுக்கவில்லை நீங்கள் இப்படி வெறுப்போடு எழுதுவது தனிப்பட்ட ஒருவர் மேலுள்ள வெறுப்பே அன்றி வேறேதுமில்லை என்பது எனக்கு புரிகிறது.
தொலைக்காட்சிகளில் (சூரியனும் பொதிகையும்)ஒளிபரப்பப் பட்ட சில பகுதிகளைப் பார்த்து, கேட்டு எனக்குத் தோன்றிய சில எண்ணங்கள்:
குடும்ப விழா. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆங்காங்கே தீவுகளாக. யார் முகத்திலும் சிரிப்பைக் காணோம். புகழ் உரைகளைக் கேட்ட மா மு கூட, முகத்தை இறுக்கமாக வைத்து அமர்ந்திருந்தார்.
பேசியவர்கள் பெரியாரைப் புகழ்ந்தார்கள். அவருக்கு அடுத்தபடியாக, கலைஞர்தான் பெரியார் என்றார்கள். தமிழுக்குப் பெருமை சேர்த்த அண்ணாதுரை என்ற மனிதரைப் பற்றி யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
ஒருவர் பேசினார்: " ராமன் நல்லவன் இல்லை என்பதை அறிந்தவர்கள் இருவர்தான். ஒருவர் சீதை, மற்றவர் பெரியார்....."
ஒரு நிகழ்ச்சியில், கலைஞர் குடும்பத்துப் பெண் ஒருவர், வீணையில் தமிழ்ப் பாடல் வாசித்தார். கலைஞர் பெயரில் கூட ஏதோ ஒரு கீர்த்தனை வாசித்தார். (ராகம், தானம், பல்லவி?)
மேல் நாட்டுத் தமிழறிஞர்கள், ஆங்கிலத்தில், தமிழைப் புகழ்ந்து எழுதி வந்ததைப் படித்தனர்.
தமிழ் தெரிந்த முன்னாள் ஜனாதிபதியை ஏனோ தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணித்தது.
தொலைக்காட்சியில் பார்த்த, கேட்ட நிகழ்ச்சிகளை வைத்துப் பார்த்தால், இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ் வளர்ந்ததோ இல்லையோ, வசை தமிழும், தாளத் தமிழும் வளர்ச்சி அடைந்துள்ளது தெரிந்தது.
தமிழ் வாழ்க!
செம்மொழியாவாது மாநாடாவது வெங்காயம்! எல்லாம் சுத்த அபத்தம், உளறல். தமிழை வாழ்த்துகிறேன் என்று கூறிக் கொண்டு ஜால்ராக் கவிஞர்கள் கருணாநிதியைத்தான் வழுத்தினார்கள். அது ஒருபுறம் என்றால் இந்தக் கட்டுரை வாசித்தவர்கள் எல்லாம் தப்பும் தவறுமாக வாசித்தார்கள்!
யாரோ வளன் அரசு என்பவர் பாரதியார் சங்கப் பாடல்களில் உள்ளதை அதன் தாக்கத்தால் எடுத்தாண்டிருக்கிறார் என்றார். என்ன கொடுமை! பாரதியார் சங்கத் தமிழ் நூல்கள் எதையும் வாசித்ததில்லை. அவர் காலத்தில் அவை அச்சாகவுமில்லை. ஏன் அப்படி ஒரு ஏட்டுசுச்வடி இருக்கிறது என்பது கூட பலருக்குத் தெரியாத காலம் அது.
எப்படி, எந்தச் சூழ்நிலையில் சங்கத்தமிழ் ஏடுகள் கிடைத்தன என்பதை’ உவேசாவின் ‘என்சரித்திரம்’ படித்துத் தெரிந்து கொள்ளலாம். விஷயம் இப்படி இருக்கையில் ஒரு பேராசிறியர் இப்படி தப்பும் தவறுமாகப் பேசலாமா?
அடுத்து சீதாராம் யெச்சூரியின் தமிழ் மொழிபெயர்ப்பு, அது மகா கொடுமை.
தண்டபாணி தீக்ஷிதர் (தேசிகரை அப்படித்தான் வாசித்தார்கள்) திருவையாறு தியாகராஜர் கூட்டத்தில் தமிழில் பாட முயன்றாராம். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டத்தாம்!
தியாகராஜர் ஆராதனை என்பது அவர் பாடிய பாடல்களை, அவரது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகப் பாடுவது. அதில் எப்படித் தமிழில் பாட முடியும்? தியாகராஜர் தமிழில் பாடவிலையே, தெலுங்கில் தானே பாடியிருக்கிறார், அப்படி இருக்கும் போது தமிழில் பாடல்களைப் பாடுவேன் என்பது சுத்த பேத்தல் இல்லையா?
தேசிகர் மட்டுமல்ல, சியாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீக்ஷிதர் பாடல்களைப் பாடக் கூட அங்கே அனுமதி இல்லை, நிலைமை அப்படியிருக்க, தமிழில் பாடு, இல்லாவிட்டால் ஓடு என்கிறது ஒரு வெற்றுக் கும்பல்.
ஈவேராவின் நினைவுநாளில் ’நான் மொட்டை அடித்துக் கொண்டு, அலகு குத்திக் கொண்டு காவடி எடுப்பேன்’ என்று கூறினால் அது எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது இந்த கும்பல்களின் கூக்குரல். அய்யகோ, அய்யகோ... ஒரே நகைச்சுவைதான்.
மாநாடாவது, மண்ணாங்கட்டியாவது, போய் வேலையப் பாருங்கப்பு....
- சென்னை பல்லி
மிஸ்டர் கானா கபாலி...
// "அக்கினி குஞ்சொன்று கண்டேன் -அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்தில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு " என்ற பாரதியார் பாடலை //
பாரதியார் இந்தப் பாடலை என்ன சூழ்நிலையில், எதற்காகப் பாடினார் என்பது தெரிந்தால், இந்த உதாரணத்தை இங்கே கூறியிருக்க மாட்டீர்கள். சர், போகட்டும்.
கான்வெண்ட் பசங்கள் செம்மொழி.. பாடலைப் பாடினால் தமிழ் வளர்ந்திடுமா? இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் தெருக் குழந்தைகள் ‘குனித்த
புருவமும்..’ பாடினார்கள்... அதனால் ராஜாவும், ரஜினியும்தான் வளர்ந்தார்கள். மாணிக்கவாசகரைப் பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.
சும்மா ஏதாவது சொல்ல வேண்டும் என்று சொல்லாதீர்கள். இந்த மாநாடு அபத்தத்தின் உச்சம்.
இந்தச் செலவுகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்...
சென்னை பல்லி
//
யாரோ வளன் அரசு என்பவர் பாரதியார் சங்கப் பாடல்களில் உள்ளதை அதன் தாக்கத்தால் எடுத்தாண்டிருக்கிறார் என்றார். என்ன கொடுமை! பாரதியார் சங்கத் தமிழ் நூல்கள் எதையும் வாசித்ததில்லை. அவர் காலத்தில் அவை அச்சாகவுமில்லை. ஏன் அப்படி ஒரு ஏட்டுசுச்வடி இருக்கிறது என்பது கூட பலருக்குத் தெரியாத காலம் அது.
///
Stupidity.. may be these ppl know tamil better than bharathi...?May be the comment is coz bharathi is IYER. (BTW he is the 1st person to say"jaadhigal illaiyadi pappa") the real concept of celebrating and improvising a beautiful language has been brutally raped by these jobless bootlickers.
தண்டபாணி தீக்ஷிதர் (தேசிகரை அப்படித்தான் வாசித்தார்கள்) திருவையாறு தியாகராஜர் கூட்டத்தில் தமிழில் பாட முயன்றாராம். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டத்தாம்!
// These ppl dontknow why they enjoy disturbing a particular sect of ppl..May be they need a psychic test.
Above all why these "pagutharivu"ppl forget to Invite DR Abdul Kalam,the only educated and cultured person (so far) in the Politics. May be they are allergic to ppl with knowledge... :)
Citizen
இவ்விழாவினால்(தமிழுக்கும் அவருக்கும்)ஒரு விதத்தில் நல்லதுதான் என்றாலும் கூட,தமிழுக்கு செம்மொழி என்ற அங்கீகாரம் பெற்றுத்தந்த (எல்லாருக்கும் பிடித்த)திரு கலாம் அவர்கள் இல்லாதது ஒரு குறையே! ஸ்ரீனி கவனிக்க!! நண்பர் ஒருவர் கூறியது..
ஐயா!!
எந்நாளும் உம் தேவை முகஸ்துதி !!
எனவே தான்,
மாநாட்டின் பிரதி கணமும் மு.க.துதி!
ஏனோ திடீரென்று இந்த விஷயம் நினைவுக்கு வந்தது!! சில ஆண்டுகளுக்கு முன்பு நமது முதல் PSLV ராக்கெட் ஏவப்படுவதற்கு ஆன செலவு இம் மாநாட்டுக்கு ஆனதை விட குறைவு!இந்த ராக்கெட்projectதோல்வி அடைந்தாலும் technically big success!...பயன்கள்:நமது தேசத்தின் மிக மிகப்பெரிய சாதனையானது.. ..மற்ற பெரிய நாடுகள் நம் நாட்டை பார்த்து மூக்கில் விரல் வைத்தன..உள் நாட்டு தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் மீது இளைஞர்களுக்கு மரியாதையும் நம்பிக்கையும் வந்தது ..etc etc.
தமிழ் செம்மொழி மாநாடு நடத்தி கண்ட பயன்கள்: சினிமா பாடலாசிரியர்கள் அறிஞர்கள் அந்தஸ்து அடைந்தனர்.(நல்ல வேளை: செம்மொழி அந்தஸ்து வாங்கித்தந்த திரு. கலாம் அவர்கள் வரவில்லை-அ- அழைக்கப்படவில்லை)பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள் ஓய்வெடுத்து மானாட மயிலாட மற்றும் அது போன்ற அறிவுக்கு விருந்தாகும் நிகழ்ச்சிகள் கண்டு களித்தனர்..டாஸ்மாக் வருமானம் உயர்ந்தது... etc.
நண்பர் ஒருவர் சொன்னது__ஸ்ரீனி கவனிக்க !!!
தலைவா!!
எந்நாளும் உன் ஆசை முகஸ்துதி !! அதனால்
மாநாட்டின் பிரதி பொழுதும் மு.க.துதி!
பேச வந்த ஒவ்வொருவருக்கும் 15 நிமிடங்கள் அளவு செம்மொழியாம் தமிழை பற்றியும், அதற்கான பிரம்மாண்டமான மாநாட்டை பற்றியும் பேச அனுமதி அளிக்கப்பட்டது...
ஆனால், அந்த 15 நிமிடத்தில், முதலில் கருணாநிதியை புகழ்ந்து 16 நிமிடங்கள் பேசிவிட்டு, பின்னர் தமிழை பற்றி பேசலாமென்றும் அறிவுறுத்தப்பட்டது...
தமிழ் விஞ்ஞானி அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் இல்லாதது மிக பெரிய கொடுமை, அதை விட இது ஒரு கட்சியின் வளர்ச்சியை காண்பிக்க நடந்த ஒரு பொதுக்கூட்டம் என்றே கூறவேண்டும்.
உங்களின் காதல் மற்றும் திருமண பொருத்தம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஒரு நல்ல இணையத்தின் முகவரியை உங்களுக்கு தருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
www.yourastrology.co.in
Post a Comment