பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 31, 2010

மண்டேனா ஒன்று 31/5/2010

ஒரு அரசாங்கம் எவ்வளவு தூரம் பொறுப்பற்ற தன்மைக்கு உதாரணமாக இருக்க முடியும் என்பதை மத்திய காங்கிரஸ் கூட்டணி சர்க்கார் மற்றொரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. மும்பையிலிருந்து கல்கத்தா செல்லும் ஞானேஷ்வரி எக்ஸ்பிரஸ் மேற்கு மித்னாபூர் அருகே நக்ஸல்களின் கொடூரமான வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி, எதிரே வந்த சரக்கு ரயிலுடனும் மோதி தடம் புரண்டுள்ளது, இரட்டை கோரம். இதில் இந்த நிமிடம் வரை 100 பேர் பலியாகியுள்ளனர். அதிக சேதமடைந்த F5, மற்றும் F6, பெட்டிகளை இன்னும் அகற்றும் பணியே துவங்கவில்லையாதலால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என தோன்றுகிறது. இறந்த 100 பேர்களுள் இதுவரை 11 பேர்களது சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசாங்க பிரதிநிதிகளான மந்திரிகள் இவ்விபத்து குறித்து மனம் போன போக்கில் பேசி வருகின்றனர். 100 பேர் இறந்த துக்கத்தை விட இவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களும், இவர்களையெல்லாம் மந்திரிகளாகக் கொண்ட இந்தியாவின் எதிர்காலமும் மிகுந்த கவலையளிக்கிறது.

முதலில் விபத்து ஸ்தலத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, இது திட்டமிடப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் என்றும், விபத்து ஸ்தலத்தில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிறகு பேசிய உள்துறையமைச்சர் சிதம்பரம், இது சதிச்செயலாக இருக்கலாமென்றும், ஆனால் வெடிகுண்டு தாக்குதலா என தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

பிறகு மேலும் பேசிய மம்தா பானர்ஜி, மாநில அரசின் சட்ட ஒழுங்கு சரியில்லை என்றும், இதனால் இவ்விபத்திற்கு முழுக்க முழுக்க மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும், ரயில்வே அமைச்சகம் இவ்விபத்திற்கு பொறுப்பேற்க முடியாதென்றும் தெரிவித்தார். இவருடைய இந்த பொறுப்பற்ற பேச்சு, ரயில்வே துறைக்கும், இவருக்குமே எள்ளளவும் சம்பந்தமில்லை என்பது போலிருந்தது. முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பேரில், மாநில கம்யூனிஸ்ட் அரசை பலிகடா ஆக்க முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. எந்த முகூர்த்தத்தில் இவர் ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றாரோ தெரியவில்லை, விபத்துக்களும், மரணங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.

அடுத்ததாகக் கருத்து தெரிவித்த ப்ரணாப் முகர்ஜி, முன்னவர் இருவரையுமே தூக்கி சாப்பிட்டுவிட்டார். அவர்களது இருவரது கருத்துக்களையுமே மறுத்து, இது சதிச்செயலாகவோ, அல்லது குண்டுவெடிப்பாகவோ இருந்திருப்பதற்குண்டான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று ஒரு போடு போட்டிருக்கிறார். என்னவாக இருக்குமென்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

இதற்கிடையே இத்தாக்குதல் குறித்து பேசிய மேற்கு வங்க காவல்துறை உயரதிகாரி ஒருவர், மாவோயிஸ்டுகளின் கிளை அமைப்பு ஒன்று இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருப்பதாகவும், அவர்களின் துண்டு பிரசுரங்கள் ஸ்தலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சொல்லி வைத்தாற்போல் அனைவருமே குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கின்றனர். அநேகமாக நக்ஸல் பிரச்சனையால் மத்திய அரசிற்கு புத்தி பேதலித்து விட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

இந்த லட்சணத்தில் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லிக் கொண்டேயிருந்தால், என்று விபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, விசாரணை நடத்தி, என்று, என்ன நடவடிக்கை (??!!) எடுக்கப் போகிறார்களோ? கடந்த ஒன்றரை மாதங்களில் இது மாவோயிஸ்டுகளின் ஐந்தாவது மிகப்பெரிய தாக்குதல் என்பது கவனிக்கத்தக்க அம்சம். இதுவரை இந்த ஐந்து தாக்குதலில் 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இன்னமும் மாவோயிஸ்டுகள் தொடர்பாக மத்திய சர்க்கார் ஒரு ஸ்திரமான முடிவெடுக்காமல் தவிப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை. சக்திமிக்க அரசாங்க யந்திரத்தை விட ஒரு பிரிவினைவாத, தீவிரவாத அமைப்பு பலம்பெறுவது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆனால் முதுகெலும்பற்ற மத்திய அரசும், கையாலாகாத மாநில அரசும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்வதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு சற்றும் நல்லதல்ல. இதே நிலை தொடர்ந்தால், இந்தியாவும் வெகு விரைவில், ஒரு பாகிஸ்தான் போலவோ அல்லது ஆப்கனிஸ்தான் போலவோ ஆவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. அதனை இனிமேலாவது அரசு உணர்வது அவர்களது ஓட்டிற்கு நல்லது.

கடைசியாக ஒரு குறிப்பு: இன்று இத்தாக்குதல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் கலைஞர், மாவோயிஸ நக்ஸல்களின் அடிப்படைக் கொள்கைகளில் தமக்கு உடன்பாடு உள்ளதாகவும், ஆனால் அதை அடைவதற்கான வழிமுறைகள் சரியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடைசியாக இரண்டாவது குறிப்பு: விபத்து (தாக்குதல்) நிகழ்ந்தவுடன் பிரதமர் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்து தனது கடமையை செவ்வனே முடித்துக் கொண்டார் (அவரென்ன செய்வார் பாவம்!!).

கடைசியாக மூன்றாவது குறிப்பு: இத்தாக்குதல் தொடர்பாக ரயில்வே துறை பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில் மாவோயிஸ்டுகளின் பெயரே இடம்பெறவில்லை. அரசாங்கம் ஊழல்வாதிகளைத்தான் காப்பாற்ற முனைகிறது என்றால் மாவோயிஸ்டுகளையும் காப்பாற்ற முனைகிறது போலும். நக்ஸல் தாக்குதல் என மேற்கு வங்காள காவல்துறை ஐஜியே உறுதிப் படுத்திய பிறகும், மீடியாக்கள் கதறிய பிறகும் கூட இப்படியொரு முதல் தகவலறிக்கை. இந்த அரசிற்கு இன்னும் 4 ஆண்டு காலம் பதவி பாக்கியிருக்கிறது. இந்தியாவை ஆண்டவன் காப்பாற்றட்டும்.Read More...

Friday, May 28, 2010

வெள்ளி வழக்காடு

தி.மு.கவில் குஷ்பூ :

நடிகை குஷ்பூ திமுகவில் இணைந்தார் என்பது விவாதிக்கும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லைதான்.நான் இங்கே விவாதிக்க விரும்புவது, குஷ்பூ கட்சியில் இணைந்த போது, சமத்துவ பெரியார் கலைஞர் அவர்கள் விட்ட அறிக்கையை பற்றி.

"பெரியார் படத்தில், மணியம்மையாக ஒன்றிப்போய் நடித்ததில் இருந்து நடிகை குஷ்பூவுக்கு திராவிட இயக்க கொள்கைகளில் இருக்கும் ஈடுபாட்டை நான் கண்டு கொண்டேன் "

போபாலில் பிறந்த, கவர்ச்சி வேடங்களில் நடித்த குஷ்பூவுக்கும், திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்???

குஷ்பூ மணியம்மையாக நடித்ததை விட, ஷங்கரின் 'முதல்வன்' படத்தில், அர்ஜுன் தமிழக முதல்வராக சிறப்பாக நடித்து இருந்தார். தமிழர்களுக்கு நிறைய நல்லது செய்தார். அதற்காக, அர்ஜுன்தான் இனி வருங்கால தமிழக முதல்வர் என்று அறிவிப்பாரா கலைஞர்???

அபத்தமாக பேசுவதற்கு ஒரு அளவு இல்லாமல் போய்விட்டது.

ஒரு குறிப்பிட்ட நடிகரோ, இல்லை நடிகையோ திமுகவில் சேர்ந்தால், அப்போது கலைஞரின் அறிக்கை எப்படி இருக்கும். இட்லிவடை வாசகர்கள் தங்கள் கற்பனை திறனை பின்னூட்டத்தில்காட்டலாம்.

திருமணதிற்கு முன் உடலுறவு குறித்த குஷ்பூவின் கருத்துக்கும், அதற்க்கு சாதகமாக வந்த தீர்ப்புக்கும் ஞானி தனது 'ஒ' பக்கங்களில் புகழ்ந்து தள்ளி, குஷ்பூவை ஒரு முஸ்லிமாக தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தினர் ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

அதற்க்கு பதில் அளித்த, த.மு.மு.வினர், "பாதுக்காப்பாக திருடலாம் என்று சொலவதற்க்கும், குஷ்பூவின் கருத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. யார் யார் முஸ்லிம் என்று அறிவிப்பதும் எங்கள் வேலை இல்லை" என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில், ஞானி பற்றி பேராசிரியர் அ. மார்க்ஸ் இப்படி தெரிவித்து இருக்கிறார்.

"வைதிக பார்ப்பனர்களை விட, முற்போக்கு பார்ப்பனர்கள் மிகவும் டேஞ்சரானவர்கள்"


ஈழ விடுதலை ஓங்குக :

"தமிழ் ஈழ மக்களுக்காக எனது அரசியல் வாழ்க்கையையே தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்"

இவ்வாறு ம.தி.மு.க நடத்திய ஒரு கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு அறிவித்து இருக்கிறார் வைகோ.

ஏற்கனவே மிக மோசமாக இருக்கும் கட்சி, இது போன்ற பேச்சுக்களால் மேலும் பலவீனம் அடையும், ஈழ தமிழர்களுக்கு எதற்காக இங்கு கட்சி நடத்துகிறார் என்றல்லாம் மதிமுக நிர்வாகிகளிடம் இருந்த வெளிப்படையான பேச்சுக்கள் வர தொடங்கி விட்டன.

வரும் சட்டமன்ற தேர்தலில், சிவகாசி தொகுதி மட்டும் போனால் போகிறது என்று வைகோவுக்கு அம்மா தருவார் என்று தோன்றுகிறது.

இவரை போன்று, ஈழ விடுதலையை தன் கையில் எடுத்து இருக்கிறார் சீமான்.

பிரபாகரனின் அன்பு தம்பி சீமான் அழைக்கிறார் என்று எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள். "இது ஒரு மற்றும் ஒரு அரசியல் கட்சி இல்லை. மாற்று அரசியல் புரட்சி " என்று தனது நாம் தமிழர் இயக்க கொள்கைகளை முழங்குகிறார் சீமான்.

முதலில், தமிழர் அமைப்புகள் எல்லாம் நம் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு என்ன செய்து விட்டார்கள்?
காவேரி நீர் , முல்லை பெரியார், மீனவர்கள் மீதான தொடரும் தாக்குதல்கள், விலைவாசி உயர்வு.... என இங்கு இருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இவர்களால் என்ன செய்ய முடிந்தது??

அன்றைக்கும் சரி. இன்றைக்கும் சரி.இலங்கையில், சிறு பான்மை இனமான தமிழ் மக்களிடையே ஒற்றுமை என்பது அறவே இல்லை.அவர்களுக்குள்ளாக வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், டெலோ என்றல்லாம் ஆயிரத்தெட்டு பிரிவுகள்..பிளவுகள்.

இங்கு அரசியல் நடத்தும் தமிழர் அமைப்புகளால், வைகோ போன்ற அரசியல்வாதிகளால் என்ன சாதித்து விட முடியும்? ??

ஒரு 'வருங்கால முதல்வர்' அறிமுகம் :

"தேசத்தின் திருப்புமுனை...மாற்றத்தின் ஏவுகணை ".

என்ன இது என்கிறீர்களா? டாக்டர் பாரிவேந்தர் என்பவர் "இந்திய ஜனநாயக கட்சி " என்று ஒரு புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் கட்சியின் விளம்பர வாசகம் தான் மேலே உள்ளது.

எந்த டிவியை திருப்பினாலும். IJK,IJK. என்கிறார்கள். கோட்,சூட் சகிதம் பேனர்களில் நவீன அரசியல்வாதியாக அடையாளம் கண்பித்து கொள்கிறார் அண்ணன் பரிவேந்தர். திருச்சியில் கட்சியின் முதல் மாநாடு நடத்த போகிறார்கள்.

தமிழ்நாட்டை விஜய்தான் காப்பாத்தனும்.

நான் ஒரு தடவை சொன்னா... :

ஒரு லைட்டான மேட்டர் பேசுவோம்.

ஒரு பழைய புத்தகத்தில் படித்தது.

கேள்வி : நீங்கள் எழுதிய "நான் ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்னா மாதரி" இவ்வளவு புகழ் பெரும் என்று எதிர் பார்த்தீர்களா?

திரு.பாலகுமாரன் : அந்த வசனத்தை நான்னெல்லாம் சொன்னால் யார் மதிப்பார்கள்.அந்த வசனம் பேசிய நபரால், பேசிய விதத்தால் மட்டுமே புகழ் பெற்றது.

சில படங்களை பார்த்து நான் மிகவும் வியந்து இருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் புதுசு போல இருக்கும். சும்மா அளவு எடுத்து தைத்த சட்டை போல படத்தின் கதை, கெட்டப், வசனம் எல்லாம் படத்தின் நாயகர்களுக்கு மிக பொருத்தமாக இருக்கும்.

அப்படி ஒரு பட்டியல்..

ரஜினிகாந்த் - பாட்ஷா
கமல்ஹாசன் - நாயகன்
விஜயகாந்த் - கேப்டன் பிரபாகரன்
சத்யராஜ் - நடிகன்
கார்த்திக் - உள்ளதை அள்ளித்தா
அஜீத் - தீனா
விஜய் - கில்லி
விக்ரம் - சேது.

உங்களிடம் இதை போன்ற பட்டியல் இருந்தால் சொல்லவும்.

(நன்றி...மீண்டும் அடுத்த வாரம்)

- இன்பா

இன்பா இதில் எங்கே வழக்குகள் இருக்கிறது ?/span>

Read More...

சிங்கம் - FIR

படம் ஆரம்பித்தவுடன் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் என்று தடபுடலாக ஆரம்பித்தவுடன். வேட்டைக்காரன், சுறா எல்லாம் கண் முன்னே வந்துவிட்டு போனது. தைரியத்தை வர வழைத்துக்கொண்டு உட்கார்ந்தால் சூர்யாவின் 25 படம் என்று போட்டார்கள். கடவுளை வேண்டிக்கொண்டு என்னைத் தயார் படுத்திக்கொண்டேன்.

”சென்னை” என்று காண்பித்துவிட்டு நல்ல வேளை கண்ணகி சிலையும், சென்டரல் ஸ்டேஷனும் காண்பிக்கவில்லை. அதற்காக இயக்குனருக்கு சபாஷ்.

வில்லன் பிரகாஷ்ராஜ் அதே கெட்டப், அதே மேனரிஸம், அதே குங்குமப் பொட்டு. கூட பங் தலையும், ஒத்த டோலாக்கு போட்ட அடியாட்கள். சென்னையை அறிமுகம் செய்து வைக்க சென்டரல் ஸ்டேஷன் பயன் படுத்தாமல் வில்லனை அறிமுகம் செய்து இவை எல்லாம் உபயோகப்படுத்திவிட்டார்.

ஊரில் இருக்கும் தாதாக்கள் எல்லாம் இவர் கட்டுப்பாட்டில் தான் என்று காண்பிக்க முதல் சீன், கூட இருந்தே குழி பறிக்கும் ஒரு தாதாவை போட்டு தள்ளி தான் ரொம்ப முரட்டு குணம் படைத்தவன் என்று நமக்கு சொல்ல முதல் சீன். பல சினிமாவில் நாம் பார்த்து பழகிப் போன டாட்டா சூமோ வில்லன் படம் என்று டைரக்டர் நமக்கு முதல் சீனிலேயே உணர வைக்கிறார்.


நல்லூரில் ஆரம்பிக்கிற கதை. நல்லூர் என்று தூத்துக்குடியில் இருக்கும் ஒரு பசுமையான கிராமம். வீடுகள், மரங்கள், விவசாயம், ஆடு, மாடுகள், பெரிய ஓட்டை போட்ட காதுகளை உடைய கிழவிகள் என்று எதையும் காண்பிக்காமல் ஒரு வீடு, ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்று காண்பித்த இயக்குனருக்கு அடுத்த சபாஷ்.

சூர்யா - அந்த ஓட்டு வீடு போலீஸ் ஸ்டேஷனில் தான் ‘பாரத் சிமிண்ட்ஸ்’ விளம்பரத்தில் தேவர் மகன் மீசையுடன் வரும் அதே சூர்யா எஸ்.ஐயாக வேலை பார்க்கிறார். கோயில் உண்டியலைத் திருடிக்கொண்டு போகும் சில்லரைத் திருடர்களை ஏதோ பெரிய ரவுடி கும்பல் போல துரத்தி துரத்தி துவம்ஸம் செய்கிறார். பெரிய ஹீரோ என்று எப்படி காண்பிக்க வேண்டாமா ? சரி கடைசியில் இதே மாதிரி காட்சிகள் பிரகாஷ் ராஜுடன் இருக்க போகிறது என்று நமக்கு தெரிந்தாலும், நம்மை உட்கார வைத்திருப்பது திரைக்கதையும் பணம் கொடுத்து வாங்கிய டிக்கெட்டும்.

விவேக் - சூர்யா இருக்கும் அதே ஸ்டேஷனில் ஒரு கண்ணைச் சிமிட்டிக்கொண்டு அசட்டு ஜோக் அடித்துக்கொண்டு ஏட்டாக இருக்கிறார். சிவாஜி படத்தில் ரஜினிக்கு பின்னாடி வருகிறார், இங்கே சூர்யாவிற்கு பின்னாடி. “எரிமலை எப்படிப் பொறுக்கும்?” என்ற பொங்கி எழுந்து ஜட்டிக்குள் இருக்கும் பல்பையும், பின்னாடி இருக்கும் எதையோ ஒன்றையும் அடிக்கடி ஃபூஸ் செய்துக்கொள்கிறார். நடிகர் சிவாஜி போல இதுலயும் இமிடேட் செய்தாலும் இந்த முறை சிரிப்பு வரவில்லை. சிவாஜி போலவே அவருக்கு வயசானது காரணமாக இருக்கலாம். இல்லை, பத்மஸ்ரீ வாங்கியதால் வயசாகிவிட்டதா என்று தெரியலை. பெட்டர் லக் நெக்ஸ் டைம்.

அனுஷ்கா - வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் சுட்டி ஹீரோயின். இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் ஏதாவது ஒரு பெண் இருந்தால் நிச்சயம் அடிவாங்குவார். ஆனால் சினிமாவில் இவர் ஹீரோவை லவ் செய்ய வேண்டும், அல்லது ஹீரோ இவளை லைவ் செய்ய வேண்டும். தேவர் மகன் மீசை வைத்திருந்தாலும், சூர்யாவிற்கு இவர் அக்காவாகத் தெரிகிறார். சன் பிக்சர்ஸுக்கு ஒரு படத்தில் நடித்தால் அடுத்த படம் ஃபிரியா நடித்துக்கொடுக்க வேண்டும் என்று ஏதாவது காண்டரக்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. அம்மணி ‘தாராளமா’கவே நடித்து கொடுத்திருக்கிறார். ஒரே ஆச்சரியம் இவர் வரும் சில காட்சிகள் கதை ஓட்டத்துக்கு ஒத்து போகிறது.

வசனம் : பஞ்சை நூலாக்கி, நூலை பெட்ஷீட்டாக்கிவிட்டார். பஞ்ச் மிஸ்ஸிங். இருந்தாலும் சில இடங்களில் நன்றாகவே இருக்கிறது. மசாலாப் படத்துக்கு ஏற்ற வசனங்கள்.

பாடல்கள்: சன் டிவியில் விளம்பரத்தில் வரும் பாடல்கள் மாதிரியே படத்திலும் வருகிறது. சரியான நேரத்துக்கு பாடல்கள் வருவதால் பிழைத்தது. அனுக்‌ஷா அப்பா கல்யாணத்துக்கு சம்மதித்தவுடன் ”பாட்டை போடுயா சீக்கிரம்” என்று பின் சீட்டிலிருந்து ஒருவர் கத்தினார். தமிழர்களுக்கு தான் எத்தனை ஐ.க்யூ ! கடைசி பாடல் நீல நிறத்தில் வேட்டைக்காரன் செட்டை நினைவு படுத்துகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களை பிழைத்துக் கொண்டார். பின்னனி இசை சிங்கம் போல உறுமுகிறது.

ஒளிப்பதிவு: மற்ற ஒளிப்பதிவாளர்களை போல தானும் சிலவற்றை செய்து பார்க்கலாம் என்று சில காட்சிகளில் முயன்று இருக்கிறார். பாடல் காட்சிகளில் பரவாயில்லை.

திரைக்கதை: இடைவேளியின் போதே க்ளைமேக்ஸ் ஆரம்பித்துவிடுகிறது ஒரு பிளஸ். பிரகாஷ் ராஜ் காய்களை நகர்த்த அதே காய்களை கொண்டு இவர் வில்லனுக்கு ஆப்பு வைக்க பல படங்களில் பார்த்தது தான் என்றாலும் போர் அடிக்காமல் போகிறது. தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் சூர்யா சென்னை போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது அங்கே காணும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. இப்படி பல காட்சிகள் இருப்பதால் படம் பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது. ஹரி எந்த சாமியை வேண்டிக்கொண்டு படம் எடுத்தார் என்று தெரியவில்லை ஆனால் பல காட்சிகளில் ‘சாமி’ பாதிப்பு இருக்கிறது.

மற்றவை: மனோரமா, நாசர், ராதாரவி, யுவராணி, போஸ், தியாகு என்று நமக்கு தெரிந்தவர்களையும், அருவாள், கப்படா, பைக், கார், ஹெலிகாப்டர், ரயில், கப்பல்னு மசாலா படத்துக்கு தேவையானவற்றை உபயோகப்படுத்தி கதையை நல்லூரில் ஆரம்பித்து நெல்லூரில் முடித்துவிட்டார் ஹரி.


சிங்கம்: ‘புலி’த்த மாவு தோசை

இட்லிவடை மார்க் : 5.5/10

பிகு: ஹரிக்கு ‘சிங்கம்’ பத்தாவது படமாக வெளிவருகிறது. அடுத்த படமும் இதே மாதிரி எடுத்தால் பத்தோடு பதினொன்று என்று சொல்லிவிடுவார்கள் :-)


Read More...

Wednesday, May 26, 2010

ஒரு பிரார்த்தனை, ஒரு கேள்வி

ஒரு பிரார்த்தனை, ஒரு கேள்வி...
அடுத்த பிறவியில் எல்லோரையும் கருப்பு பெட்டியாக படைத்துவிடு.மக்களுக்கு அவர் அல்வா கொடுத்தார், நீங்க அவருக்கு லட்டு கொடுக்கிறீங்க என்ன நியாயம் ?

Read More...

Tuesday, May 25, 2010

பாவம் ...தமிழ் மொழி - கி.அ.அ.அனானி

பெரிய பெரிய புகைவண்டி சந்திப்புக்களுக்குள் தொடர் வண்டி நுழையும் போது ஏற்படும் வெவ்வேரு விதமான இரைச்சல்களை அனுபவித்துணர்ந்திருக்கின்றீர்களா ?

அதுவும் குறிப்பாக ப்ளாட்பாரத்தில் இருந்து எழும் கலவையான ஓசைகள்..

காப்பி காப்பி..சூடான காப்பி என்று ஒருவர்,

டீ..சாயா..டீ...சாயா என்று மற்றொருவர்,

இட்லி,வடை... இட்லி வடை(பதிவரைத் தேடிக் கொண்டல்ல) என்று விற்றுக் கொண்டு ஒருவர்,

தோசே...சூடான மசால் தோசே...
ப்ரெட் ஆம்லேட்..
நைட் சாப்பாடு..பிரியாணி ,பரோட்டா
பால்..சூடான மசாலா பால்...
பிஸ்கேட் ..சாக்லேட்..வேஃபர், சிப்ஸ்...
ஐஸ்க்ரீம்..ஐஸ்க்ரீம்..

இதற்கு நடுவில்..அம்மா பசிம்மா..சார் தர்மம் பண்ணுங்க சார்....என்று இன்னும் பலப் பல குரல்கள்..

பலப்பல சுருதிகளில்..கேட்டிருக்கிறீர்களா?

இல்லை என்றால் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக திரு.கருணாநிதி எழுதி, திரு.ரகுமான் இசை அமைத்திருக்கும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்..அதே எஃபெக்ட் கிடைக்கும்.
திரு.ரகுமான் பெரிய இசை அமைப்பாளர்தான்..நல்ல இசையமைப்பாளர்தான்..ஆனால் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குக் கூட ஒரு பாடலை ..ஒரே ஒரு பாடலைக் கூட..மேற்கத்திய வாத்தியங்களுடனும்..மேற்கத்திய இசையமைப்பிலும் தான் வடிவமைக்க முடிகிறது என்றால் தமிழ் பாரம்பரிய இசைக் கருவிகளுக்கும்,இசைக்கும் இதை விட வேரென்ன கேவலம் ஏற்பட்டு விடப் போகிறது.

திரு.கருணாநிதி திறமையான அரசியல்வாதிதான்..அந்நாட்களில் சினிமாவிலும் இந்நாட்களில் பொதுமக்களுக்கும் நன்றாகக் கதை சொல்லக் கூடியவர்தான்..அடிக்கடி கவிதை என்ற பெயரில் எழுதுவார்தான் ..ஆனால் செம்மொழி மாநாட்டிற்காக ஒரு கவிதை..ஒரே ஒரு கவிதை ????!!! தமிழில்....எழுத இவரை விட்டால் வேறு தகுதியான ஆள் இல்லை என்று சொன்னால் இதை விட தமிழுக்கு வேரென்ன அவமானம் நேர்ந்து விட முடியும்? இவருக்கு நிரந்தரமாக சொம்பு தூக்கும் வைரமுத்துக்களும், வாலிகளும்,ப.விஜய்களும் நாண்டு கொள்ளலாம்.இல்லை இதை விட சிறப்பாக எங்களால் கூட எழுத முடியாது என்று பலமாக செம்படிக்கலாம்.

இந்த ரேஞ்சில் போனால் " வீழ்வது தமிழாக இருந்தாலும் வாழ்வது நானாக (என் குடும்பமாக) இருக்கட்டும் "-

என்பது தான் இந்தச் செம்மொழி மாநாட்டின் முக்கிய தீர்மானமாக இருக்குமோ?

பின் குறிப்பு : தமிழ் பதிவு போடும் நல்லுலகத்தில் உள்ள தமிழ் மொழி காக்கும் நல்லோர்கள் " பாட மறுக்கும் பாப்பாத்திகள் " "ஓட மறுக்கும் பீர் பாட்டில்கள் " என்று டிசம்பர் சீசனில் பதிவு போட்டு தன்னுடைய தமிழ்ப்பற்றை நிலை நாட்டும் அதே வேளையில் இந்த மாதிரி விடயங்களிலும் பொன்னான கருத்தைப் பதியலாம். இல்லை தமிழுக்குக் கிடைத்த மற்றுமொரு அரிய பொக்கிஷம் என்று சொம்பாவது அடிங்கய்யா.

--- கி.அ.அ.அனானிசரியான கிராமத்து ஆள் ஐயா நீர் நீங்கள் சொல்லும் இசை கருவிகள் எல்லாம் சங்கமம் நடத்த தான் உபயோகப்படும்.Read More...

கழட்டியது என்ன ?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஓராண்டு நிறைவை கொண்டாடும் வண்ணம் இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாருடைய போறாத வேளையோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மங்களூரில் விபத்துக்குள்ளாகி, கொண்டாட்ட விருந்து தற்காலிகமாக ஒத்திப் போடப்பட்டுள்ளது. உடனே ப்ரஃபுல் படேல் ராஜிநாமா என்று சொல்லி அது எதிரொலிப்பதற்கு முன்னமே பிரதமர் ராஜிநாமாவை ஏற்கவில்லை என செய்திகள் வந்துவிட்டன. ஆனால் இப்போது நமக்கு இது ஒரு பொருட்டல்ல. மீடியாக்கள் விருந்து ரத்து என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து செய்திகளுக்கு மத்தியில் அதி முக்கியத்துவம் கொடுத்து இச்செய்தியை சொல்லிக் கொண்டே இருந்தது.

இந்நிலையில் இன்று இந்த ஓராண்டில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பேசுவதற்காக பிரதமர் என்றழைக்கப்படும் திரு.மன்மோகன் சிங் அவர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து இன்று பேசியுள்ளார். வழக்கம்போல் அவரது பேட்டிக்கு ஆளுங்கட்சித் தரப்பில் பலமான வரவேற்பும், எதிர்கட்சித் தரப்பில் பலத்த அதிருப்தியும் தெரிவித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இனிதே இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பிரதமர் பின்வரும் சில வழக்கமான கேள்விகளுக்கு அதே வழக்கமான பதில்களை அளித்துள்ளார். அவற்றில் சில...

விலைவாசி உயர்வு மிகவும் கவலையளிப்பதாக பிரதமர் பேசியுள்ளார். ஒரு பொருளாதார மேதையாக மதிக்கப்படுபவரே இப்படி விலைவாசி உயர்வைப் பற்றிக் கவலைப்பட்டால், எழுபது கோடி சாமானியர்கள் என்ன செய்வார்கள்? இவ்வளவுக்குப் பிறகும் “ ஆம் ஆத்மி” என்று சொல்வதற்கு காங்கிரஸாருக்கு எப்படித்தான் மனது வருகிறதோ? ஒவ்வொரு வருடமும், விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், அதனை எப்போது கட்டுப் படுத்துவது? கவலைப்பட்டு முடிப்பதற்குள் அடுத்த தேர்தலே வந்து விடும். ஆனாலும் பிரதமர் இப்படி வெளிப்படையாக பேசுவது, அவருக்கு இன்னும் அரசியல் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. கலைஞர் பாணியில், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருக்கிறது என்று ஒரு போடு போட்டால், விலைவாசி உயர்வைப் பற்றி இடதுசாரிகள் கூட வாய் திறக்கமாட்டார்கள். இல்லை பக்கத்து தேசத்தில் பாருங்கள் என்று ஒரு புள்ளி விவரம் கொடுத்தால் முடிந்தது கதை. மன்மோகன் சிங் எப்போதுதான் இதை எல்லாம் கற்றுக் கொள்ளப் போகிறாரோ? கலைஞரின் வழிகாட்டுதல் சரியில்லையோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

அடுத்ததும் பிரதமரின் வழக்கமான வேதனைதான். ”நக்ஸல்வாதம் அதிகரித்திருப்பது வேதனை தருகிறது”. யாருக்காக வேதனைப் படுகிறார் என்று குழப்பமாக இருக்கிறது. நக்ஸலைட்டுகளுக்காக வேதனைப் படுகிறாரா அல்லது ஆம் ஆத்மிக்காக வேதனைப்படுகிறாரா என்பதைத் தெளிவு படுத்துதல் நலம். இவருடைய கேபினட்டில் இருப்பவர்களே, நக்ஸல்களைத் தீவிரவாதிகள் என்று சொல்ல முடியாது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்றால் எதற்காக இவர் கவலைப்படுகிறார்? அதுவும் புரியவில்லை. எது எப்படியாயினும் உயிரிழப்பது பொதுமக்களும், போலிஸ் ஜவான்களும்தானே? நாம் ஒரு கண்டனம் தெரிவித்தால் போதாதா? வேதனை, பசி தூக்கம் தொலைத்ததெல்லாம் போதுமே!!

அடுத்து சம்பிரதாயமான சமாதானம். “மத்திய அமைச்சர் ராசா மீது ஊழல் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்”. சி.பி.ஐ ரிபோர்ட் வெளியே வந்த பிறகும், ஒலி நாடா சந்தி சிரித்த பிறகும் என்ன நிரூபிக்கப்பட வேண்டும் என பிரதமர் எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. ராசாவே நான் செய்தது தப்பு என்று சொன்னால் கூட நிருபித்து காட்டுங்கள் என்று சொல்லுவார் போல. நடவடிக்கை எடுப்பதற்கு அவர் ஒன்றும் காங்கிரஸ் அமைச்சர் இல்லை என அபிஷேக் மனு சிங்வி கூறியதை விட என்ன நிரூபணம் வேண்டும்? ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது குரங்காட்டி கையிலுள்ள குச்சி என்று பொது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிட்டது. குச்சியை ஆட்டினால் குரங்கும் ஆடும்; அடி விழும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

அடுத்து, ”பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறோம்”. எப்போதுவரை என்பது தெரியவில்லை. அநேகமாக அடுத்த குண்டுவெடிப்பு வரை என்பதை நாமாக அனுமானம் செய்து கொள்ளலாம். பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடுத்த முறை இந்திய மண்ணில் நாச வேலையில் ஈடுபட்டால், உடனே பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு துணை போவதாக ஆவேசமான அறிக்கைகள் பறக்கும். அடுத்து சொல்லி வைத்தாற்போல் பேச்சுவார்த்தை இனி கிடையவே கிடையாது என்ற வீராவேச பேச்சுக்கள் வரும். பிறகு அமெரிக்கா மூலமாக ஆவண பரிமாற்றங்கள் நிகழும். பிறகு எங்காவது ஒரு உச்சி மாநாட்டில் இருநாட்டு பிரதமர்களும் கைகுலுக்கிக் கொண்டு, அடுத்த பேச்சுவார்த்தை தில்லியிலா லாகூரிலா என்பதனை முடிவு செய்வர். அதற்குள் மக்கள் அனைத்தையும் மறந்து விடுவர். இதுவும் புளித்துப் போன பேச்சுதான்.

அடுத்ததாக, மத வித்யாசம் பாராமல் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்கிறார். தீவிரவாதம் என்று வந்து விட்ட பிறகு அதில் எங்கு மதம் வந்தது? அப்படியென்றால் இதுநாள்வரை அஃப்ஸல் குருவை பாதுகாப்பதன் காரணம் என்ன? கருணை மனு ஜனாதிபதி வசம் உள்ளது என்று அரசு கூறுகிறது. ஆனால் அவரோ, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் மீதே கருணை மனு மீது முடிவு செய்யப்படுமென்கிறார். அப்படியானால் உள்துறை அமைச்சகம் அதனை ஏன் தாமதப் படுத்துகிறது? ஏற்கனவே நமது நீதிமன்றங்கள் ஆமை வேகத்தில் வழக்குகளை நடத்துகின்றன. இந்நிலையில் தீர்ப்பு வந்த பிறகும், தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டால் நீதித்துறை எதற்கு? கருணை என்பதே கிஞ்சித்தும் இல்லாமல் அப்பாவிப் பொதுமக்களை பலிவாங்கிய கொடுமையான தீவிரவாதிக்கு என்ன கருணை வேண்டிக் கிடக்கிறது? இதற்கிடையில் அஜ்மல் கஸாபிற்கு இந்த ஆண்டிற்குள் தண்டனை நிறைவேற்றப்படுமென வீரப்ப மொய்லி கூறியிருக்கிறார். இப்பொழுதுதான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருக்கிறது. இன்னும் அதனை பம்பாய் உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும். அதற்கு பிறகு கருணை மனு வேறு இருக்கிறது. ஆனால் இவர்கள் மைக்கையும், கேமராவையும் பார்த்துவிட்டால் மனம் போன போக்கில் உளற ஆரம்பித்து விடுகின்றனர்.

மனைவி மற்றும் சோனியா ஆகியோரின் வழிகாட்டுதலில் அரசை நடத்துகின்றேன் என்றிருக்கிறார். கூடவே நான் இன்னும் பிரதமராக பதவியேற்ற கடமையை முடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதுவும் எப்போது? பதவியேற்று ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு!! இப்போது புரிகிறதா இவருடைய கடமை ஏன் இன்னும் முடியவில்லை என்பது? நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

பால நாயகம், பகு நாயகம், ஸ்த்ரீ நாயகம், அ நாயகம் என்கிறது ஒரு ஸம்ஸ்க்ருத பழமொழி. அதாவது சிறுவனால் வழிநடத்தப்படும் அரசும், கூட்டணி அரசும், ஒரு பெண்ணின் வழிகாட்டுதலில் நடக்கும் அரசும் உருப்பட்டதாக சரித்திரமில்லை என்பது அதன் பொருள். இப்போது விளங்கும் இவருடைய கடமை ஏன் இன்னும் முடியவில்லை என்பது.


கடைசியாக இப்போது பிரதமர் கூறியதுதான் நிதர்சனம், மற்றும் உண்மையாக இருக்கும். “இளைய தலைமுறையினருக்கு வழிவிடக் காத்திருக்கிறேன்”. விட்டால் போதுமென்ற நிலைக்கு பிரதமர் வந்து விட்டார் போலும். ஐயோ பாவம்!! அவரும் ராகுல் எப்போது தலையசைப்பார் என்று காத்திருக்கிறார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ராகுலுக்கு மறுபடியும் அமைச்சரவையில் சேர அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் வந்து மட்டும் என்ன பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போகின்றன?? அயல்நாட்டு கருப்புப் பணம் திரும்பி விடப் போகிறதா? ஸ்பெக்ட்ரம் ஊழல் நிரூபிக்கப்பட்டு தொடர்புடையோர் மீது நடவடிக்கைகள் வரப் போகிறதா? தீவிரவாதம் குறைந்து விடப் போகிறதா அல்லது விலைவாசிதான் வீழ்ந்து விடப் போகிறதா? எதுவுமே இல்லை.


இனி நாம் என்னதான் செய்வது?? பேசாமல் பிரதமர் அடுத்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாமாண்டு நிறைவு செய்தியாளர் சந்திப்பு வரை காத்திருக்கலாம். அட்சரம் பிசகாமல் கிளிப்பிள்ளை போல் நேற்றைய தினம் சொன்ன அனைத்தையும் மறுபடியும் சொல்லுவார். நாமும், இதே கட்டுரையை அடுத்த ஆண்டும் மறுபிரசுரம் செய்து கொள்ளலாம்.

- யதிராஜ சம்பத் குமார்

கழட்டியது என்ன என்று இன்னுமா தெரியவில்லை ? நம்ம ஜட்டி தான்!Read More...

Monday, May 24, 2010

மண்டேனா ஒன்று - 24/5/2010

சுஜாதாவினுடைய ஸ்ரீரங்கத்து தேவதைகளில் “பெனின்ஸுலர் கஃபே” என்ற பெயர் அடிபடுவதைப் பார்த்திருக்கலாம். அங்கு அவர் இரண்டணாவிற்கு தோசையும், காபியும் சாப்பிட்டிருப்பதை எழுதியிருப்பார். இப்பொழுது இரண்டணா என்ற வார்த்தையே வழக்கொழிந்து மாமாங்கங்கள் ஆகின்றன. மொரார்ஜி தேஸாயின் ஜனதா அரசு, அனைத்து ஹோட்டல்களிலும் ஒரு ரூபாய்க்கு “ஜனதா மீல்ஸ்” என்ற அளவு சாப்பாடு போடப்பட வேண்டுமென்று கட்டாயமாக்கியது. அரசு கவிழ்ந்த கையோடு அந்த திட்டமும் கவிழ்ந்தது. இன்றைய தேதியில் சென்னையில் ஒரு சுமாரான ஹோட்டலில் டிபன் சாப்பிட வேண்டுமென்றால் கூட குறைந்தபட்சம் ஐம்பது ரூபாய் வேண்டும். இட்லிவடையே இருபது ரூபாய் விற்கிறது. தமிழக அரசு கூட தோசை இட்லி விலையைக் குறைக்க வேண்டும் என்று ஏதோ ஒரு உத்தரவிட்டு, ஐம்பது பைசா குறைக்கப்பட்டு, சில தினங்களிலேயே இரண்டு ரூபாய் மறுபடியும் ஏற்றப்பட்டது.


சமீபத்தில், தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலை 10.30 மணி விமானத்திற்காக, 9 மணிக்கே லவுஞ்சில் காத்திருக்கையில் பசி வயிற்றைக் கிள்ளியது. எப்படியும் விமானத்தில் வலுவாக எதாவது தருவார்கள் என்ற போதிலும், வயிற்றை நிரப்பி வைப்போமென்று விமான நிலைய கேண்டீனுக்குள் நுழைந்தேன். மெனு கார்டைப் புரட்டிய எனக்கு மாரடைப்பு வராத குறைதான். இரண்டு இட்லி ரூபாய் 125, வடை ஒன்று ரூபாய் 60, இரண்டு பரோட்டாக்கள் ரூபாய் 220, வரிகள் தனி. மாரடைப்பு வராமல் என்ன செய்யும்? இந்த விலைப்பட்டியலைப் பார்த்த பிறகு, பசியாவது ஒன்றாவது!! பத்தும் பறந்து விட்டது. ஆயினும், மெனு கார்டை ஆற அமரப் புரட்டிவிட்டு, வெறுமனே எழுந்து வருவதற்கு பாழாய்ப் போன வறட்டு கெளரவம் இடம் கொடுக்காததால், இட்லியை விழுங்கிவிட்டு பில்லை அழுது தொலைத்து விட்டு வந்தேன்.

இந்த ஒரு அனுபவத்திலேயே பாடம் கற்றிருந்தால் விஷயம் அதோடு போயிருக்கும். மிக சமீபத்தில், நமது சென்னை மீனம்பாக்கத்தில் நண்பர்களோடு விமானத்திற்காகக் காத்திருக்கையில், “அரைவல்” பகுதிக்கு நேர் எதிர்ப்புறமிருந்த பழச்சாறு கடை சபலத்தைக் கிளப்பியது. தில்லி அனுபவம் நினைவிலிருந்தாலும், 150 மில்லி சாத்துக்குடி ஜீஸ் என்ன பெரிதாக விலை இருந்துவிடப் போகிறதென்றெண்ணி, மூன்று சாத்துக்குடி ஜூஸ்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, பணம் எவ்வளவு என்று கேட்கையில் பகீர் என்றது. மூன்று பேப்பர் கப் ஜூஸ் ரூபாய் 225 (அது ஃப்ரெஷ் ஜூஸ் வேறு. சர்க்கரை இல்லாமல் கசந்தது.). குடித்த பிறகு என்ன செய்வது? இந்த பாடம் வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.

கிட்டத்தட்ட எல்லா விமான நிலையங்களிலுமே இதே கதைதான். வெளியே பெட்டிக் கடைகளில் ரூபாய் 10 ற்கும், 20 ற்கும் சீப்படும் லேஸ், குர்குரே போன்ற ஸ்நாக்ஸ் வகைகள் விமான நிலையத்திற்க்குள் 60 ரூபாய். பெப்ஸி, கோலாக்களும் அதே விலைதான். ஆனால் அதிகபட்ச விலை என்று முத்திரையிட்டிருப்பதென்னவோ அதே விலைதான். MRP ஐ விட ஓரிரண்டு ரூபாய்கள் அதிகம் வைத்து விற்பதே குற்றம் என்ற நிலையில், பலமடங்கு விலையை உயர்த்தி விற்பது மகா குற்றம். விமான நிலையத்திற்குள் விற்பனை செய்யப்படுபனவற்றிற்கு சிறப்பு விலை என்று எதும் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் இது நடந்து கொண்டுதானிருக்கிறது. இதெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியாமலா நடக்கும்? விமான நிலைய கேண்டீன் காண்ட்ராக்டை பல கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்தால் அதனை திரும்ப மீட்பது எப்படி? இதையெல்லாம் விட அதிர்ச்சி தரக்கூடிய ஒரு விஷயம், இம்மாதிரியான கேண்டீன்களில் விற்பனை அதிகரிக்க வேண்டுமென்பதற்காகவே, வேண்டுமென்றே விமானத்தைத் தாமதப் படுத்தக்கூடிய அவலங்களும் நடக்கின்றன. யாருக்கு நஷ்டம்? இவ்விஷயம் உலகிலேயே அதிக விற்பனையாகும் ஒரு ஆங்கில மாதாந்திரியில் வெளிவந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.

மிகப்பெரிய அளவிலான மெகா ஊழல்களும், முறைகேடுகளும் புரையோடிப் போய்விட்ட நமது அரசாங்கத்திற்கு, இப்பிரச்சனை ஒன்றும் பெரிதாகத் தெரியாதது வியப்பில்லைதான். இனி மறந்தும், விமான நிலையத்தில் எதுவும் வாங்கிவிடாதீர்கள் என்பதுதான் இவ்விடுகையின் நோக்கம்.

- யதிராஜ்

Read More...

Sunday, May 23, 2010

செம்மொழி பாடல்

”நான் தூங்கவில்லை. காரணம், நீங்கள் இங்கு கேட்டு ரசித்தீர்களே, அந்த பாடலை பலமுறை கேட்டுக்கொண்டே பார்த்தேன். அதே நினைவோடு தூங்காமல் விடியற்காலை வரை இருந்து இங்கே வந்துள்ளேன்” என்று முதல்வர் கலைஞர் செம்மொழி பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் பேசினார். முழு பேச்சு கூகிளில் கிடைக்கும்.

அந்த பாடலை பலர் கேட்டிருக்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அமைத்த இந்த பாடலை கேட்ட போது, வந்தே மாதரம் போல இருக்கிறது. ஜெயா டிவியில் மாலை 6 மணிக்கு வரும் பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே..” பாடலை கேட்கும் போது ஏற்படும் ஒரு கிக் இதில் இல்லை.

செம்மொழி பாடலை கேட்கவில்லை என்றால் இங்கே கிடைக்கும்.

சும்மா கெட்க வேண்டும் என்று நினைப்பாவர்கள் இங்கே செல்லவும்

ஏன் இந்த பாடலை வாலி எழுதி, இளையராஜா இசையமைக்க வில்லை ?

Read More...

Saturday, May 22, 2010

கனகவேல் காக்க - விமர்சனம்


விமர்சனம் கீழே...நல்ல படம். நன்றி பத்ரி


Read More...

Friday, May 21, 2010

வெள்ளி வழக்காடு - இன்பா

வணக்கம் அன்பு நண்பர்களே. ஒரு சிறிய இடைவேளைக்கு பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் "சன்டேனா இரண்டு " தொடங்க மேலும் சில வாரங்கள் பிடிக்கும் என்பதால் இந்த 'வழக்காடு மன்றத்திற்கு' ஏற்ப்பாடு செய்து இருக்கிறேன்.

வழக்காடு மன்றத்தின் இந்த முதல் பகுதியில் கடந்த சில வாரங்களில் நடந்த சில வழக்குகள்,அதன் தீர்ப்புகள் பற்றி விவாதிப்போம்.

மும்பை வெடிகுண்டு வழக்கில், 35 கோடி ரூபாய் செலவு செய்து பாதுகாக்கபட்ட(!) தீவிரவாதி அஜ்மல் கசாப் அவர்களுக்கு ஒரு வழியாக மரண தண்டனை நிறைவேற்றி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்க, இதற்காக நீதிபதிகளின் குழுவே கலந்து விவாதித்தது. "அவனை பிடித்தபோதே,சுட்டு இருந்தால் எவ்வளவு செலவுகள் அரசுக்கு மிச்சம் " என்றார் ஒரு நண்பர் என்னிடம்.

இதனை நாள், மட்டன் பிரியாணி சகிதம் கசாபை வைத்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள், அதன் மீதான நடவடிக்கைகள், இனி இப்படி நடைபெறாமல் இருப்பதற்க்கான செயல்திட்டங்கள்...ஒன்றுமே நமக்கு தெரியவில்லை

என் நண்பர் சொன்னது சரிதான் என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு???

போதாகுறைக்கு, குற்றவாளிகளின் மனதை ஆழ் நிலைக்கு மூழ்க வைக்கும் உண்மை அறியும் சோதனையை சட்டவிரோதம் என்று கோர்ட் அறிவித்துவிட்டது. இனி, தீவிரவாதிகள் யாராவது பிடிபட்டால், பிரியாணி,டாஸ்மாக் சகிதம் அவர்கள் காலில் விழுந்துதான், காவல் துறை அதிகாரிகள் உண்மையை வரவழைக்க வேண்டும் போலிருக்கிறது.

பரமஹம்ச நித்தியானந்தா மீது புதுவை நீதி மன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். அவர் காவி உடை அணிந்து, ஆன்மிகத்தின் பெயரால் மக்களை மோசடி செய்து விட்டார் என்பது அந்த வழக்கு.

இதன் தீர்ப்பை நான் மிக ஆவலுடன் எதிர் பார்க்கறேன். காரணம்,ஒரு வேளை நித்திக்கு எதிராக முடிவு வந்தால், இதன்படி, வெள்ளை வேட்டி சட்டை அணிந்து, அரசியலின் பெயரால் காலம் காலமாக நம்மை மோசடி செய்து வரும் அரசியல்வாதிகளை எல்லாம் தண்டிக்கலாம் அல்லவா!??

ரொம்ப நாளைக்கு பின், சுப்ரமணிய சுவாமியின் பெயர் செய்திகளில் அடிபடுகிறது.ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், அமைச்சர் ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நோட்டீஸ் தரக்கோரி டெல்லி உயர் நீதி மன்றத்தை அணுகி இருக்கிறார் நம்ம சு.சுவாமி.


நமது வழக்காடு மன்றத்தின் முக்கிய வழக்காக நான் முன்னிறுத்துவது "வாடிய பயிரை கண்டபோதல்லாம் வாடினேன்" என்று மிகவும் எளிய வரிகளில் அதே சமயம் அழுத்தமான மனித நேய கருத்துக்களால் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் வடலூர் இராமலிங்க அடிகளாரை பற்றியது.

"அருட்பெரும் ஜோதி..தனிப்பெரும் கருணை" என்று ஜோதி வழிப்பாட்டை பரப்பிய இராமலிங்க அடிகள் அவர்களுக்கு, சிவலிங்கத்தை வழிபடும் சைவர்கள் ஆறுமுக நாவலர் தலைமையில் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். "தேவாரம்,திருவாசகம் ஆகியவையே அருட்பாக்கள். மற்றது எல்லாம் வெறும் மருட்பாக்கள் " என்ற அவர்களின் பிரச்சாரத்திற்கு, "தன்னை உணர்ந்தோர் பாட்டு எல்லாம் அருட்பா. மற்றது எல்லாம் மருட்பா " என்று பதில் தந்தார் வள்ளலார். அப்போதே,கடலூர் நீதி மன்றத்தில், அடிகளாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதில் ஆஜராக வள்ளலார் நீதிமன்றம் வந்த போது, வழக்கு தொடர்ந்த ஆறுமுக நாவலரே அவரை பார்த்து எழுந்து வணங்கி நிற்க, அதை பார்த்த நீதிபதி,"எதிரிகளே வணங்கும் வள்ளலார்,தவறாக பேசி இருக்க மாட்டார்" என வழக்கை தள்ளுபடி செய்ததாக படித்தேன்.

அதை போன்ற ஒரு சம்பவம்..வடலூர் கருவறையில் லிங்க உருவத்தை சமிபத்தில் பிரிதிஷ்டை செய்தார் சபானந்த சிவாச்சாரியார் என்பவர். இதை ஏற்காமல் இந்து சமய அறநிலைய துறை தொடர்ந்த வழக்கில் ஒரு அழகான தீர்ப்பை தந்து இருக்கிறார் உயர் நீதி மன்ற நீதிபதி சந்துரு அவர்கள்.

அதன் சாரம் இதோ..

" அவரது ஆன்மிக எண்ணங்கள் யாவும் ஜோதியை அடிப்படையாய் வைத்தே இருக்கின்றன. 'ஆதியும்,நடுவும், அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி என் உளத்தே' என்கிற ஜோதி வழிபாட்டை முன் எடுக்கும் நோக்கத்துடன்தான் சத்திய ஞானசபை தொடங்கப்பட்டு, 1872 இல் ஜோதி வழிபாட்டு முறைகள் பின் வருமாறு வகுக்கப்பட்டு உள்ளன.

'தகர பெட்டியில் வைத்து, ஜோதியை ஏற்ற வேண்டும்.அது கண்ணாடியில் பிரதி பலிக்க வேண்டும்.எண்ணெய் பயன்படுத்தி ஜோதியை ஏற்ற வேண்டும். ஜோதி எரியும் போது, அனைவரும் மௌனமாக இருக்க வேண்டும்' என்கிறது அவை. மேலும், இதில் பங்கேர்ப்பவர்களுக்கு, இதிகாசங்கள், புராணங்கள்,வேதங்கள், சைவம்,வைணவம்,வேதாந்தம்,சித்தாந்தம் போன்ற நம்பிக்கைகள் கூடாது என்றும் விதி முறை கூறுகிறது. எனவே, லிங்க பிரதிஷ்டை செய்வது வள்ளலாருக்கு எதிரானது" என்று தீர்ப்பு வெளி வந்து இருக்கிறது.

இதை போன்று, முஸ்லிம் மக்களிடையே சமிப காலமாக "தர்கா வழிபாடு" காரணமாக கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. தர்கா என்பது இஸ்லாமிய பெரியவர்களின் சமாதி. ஒரு பிரிவு அங்கு சென்று வழிபடுவதுதான் சர்ச்சைக்கு காரணம்.

"தர்கா வழிபாடு இஸ்லாத்துக்கு விரோதமானது. ஆண்டவனுக்கு மத்தியில் மனிதர்களுக்கு இடம் இல்லை " என்று ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தவ்ஹீத் ஜமாஅத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.

"மார்க்க முறைகள் வழி வாழ்ந்து மறைந்த பெரியவர்களின் சமாதிக்கும், ஆண்டவனுக்கும் இடையே சூட்சும தொடர்பு உள்ளது. அதனால், தர்காவுக்கு சென்று வழிபடுவதும், தொழுகை செய்வதும் தவறு இல்லை " என்கிறது இன்னொரு தரப்பு. (எல்லா மதத்தினரும் செல்லும் நாகூரில் உள்ளது தர்கா).

இதை பற்றி நன்கு அறிந்த இஸ்லாமிய நண்பர்கள் விளக்கினால் நமக்கு இவ்விவகாரம் பற்றி மேலும் புரிந்து கொள்ள இயலும்.

ஜோதி வழிபாடு, தர்கா வழிபாடு போன்று 'சிலைகள்' பற்றி நீண்ட நாட்களாக ஒரு கேள்வி என்னை உறுத்தி வருகிறது. திராவிட கழக அபிமானிகளிடம் இருந்து, தர்க்க ரீதியான பதிலை நான் இந்த கேள்விக்கு எதிர்பார்க்கிறேன்.

ஊருக்கு ஊர், தந்தை பெரியாருக்கு சிலைகள் திறப்பது ஏன்? முற்போக்கு கோணத்தில் பார்த்தால் அது வெறும் 'கல்' தானே? அதில் எப்படி 'பெரியார்' தெரிகிறார்??

உடனே பார்ப்பன பதிவு என்று எழுதாமல், கொள்கைப்பூர்வமாக இந்த கேள்விக்கு பதிலை வரவேற்கிறோம்.

இன்னொரு வழக்கு..13 வருடங்களாக நடந்து வரும் வழக்கு..இதில் 7 முறை நீதிபதிகள் மாற்றம் நடந்து இருக்கிறது. அது.. தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக நிறுவனர் குணங்குடி ஹனிபா மீதான வழக்கு.

பாபர் மசூதி இடிப்புக்கு பதிலாக 1997 ஆம் ஆண்டு தேதி திருச்சி,ஈரோடு,திருச்சூர் ரயில் நிலையங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் அவர்.

" வன்முறையை ஒரு போதும் இஸ்லாம் போதிக்கவில்லை. யாருடைய உயிரையும் பறிக்க, யாருக்கும் மதத்தில் அனுமதி இல்லை. நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருவதற்கு 13 வருடங்களாக சிறையில் இருக்கும் நானே உதாரணம். என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் , எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் நிரபராதி " என்கிறார் திரு, ஹனிபா.

அவர், சொன்னது போலவே, ஒரு முக்கிய வழக்கை தவிர, அவர் மீது போடப்பட்ட ஏனைய வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. விரைவில், அவர் நிரபராதி என விடுதலை ஆவார் என தெரிகிறது. அவரது வழக்கறிஞரின் பெயர் என்ன தெரியுமா? சிவபெருமாள்.

10 வருடங்கள் சிறைக்கு பின் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அல் உம்மா மதானி, நிரபராதி என விடுதலை செய்யப்பட்டது உங்களுக்கு தெரிந்ததே.

எதாவது குண்டு வெடித்தால், முஸ்லிம் தலைவர்கள் உடனே கைது செய்யப்படுவதும், பல வருடங்களுக்கு பின் நிரபராதி என விடுதலை செய்யப்படுவதும் எப்படி என்றே புரியவில்லை.
அவர் நிரபராதி என்றால், இத்தனை வருடங்களை அவர் சிறையில் இழந்ததருக்கு யார் பொறுப்பு? எதன் அடிப்படையில் கைது நடந்தது? எதாவது 'உள் விவகாரம்' இருக்கிறதா? ஒன்றுமே புரியவில்லை.

ஒன்று மட்டும் நமக்கு நன்றாக புரிகிறது.

அல் உம்மா மதானியோ, சங்கர மட ஜெயேந்திரரோ யாராக இருந்தாலும், சாட்சிகளை மாற்றவோ , சட்டத்தை வளைக்கவோ உடைக்கவோ முடிகிறது. அதனால்தான், பின்வரும் வரிகளை அடிக்கடி நாம் கூறி வருகிறோம்.

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்".


(நன்றி..மீண்டும் ச(சி)ந்திப்போம்).


-இன்பா

இந்த கருத்துக்கள் இன்பாவின் கருத்து, இட்லிவடையின் கருத்துக்கள் அல்ல :-)

Read More...

Thursday, May 20, 2010

ஒன்பது படம், நான்கு செய்திகள்

ஒன்பது படம் நான்கு செய்திகள்..
தேர்தல் ஆணையத்துடன் ஆலோசிக்காமல் மேல்-சபைக்கு சிறப்பு அதிகாரியை நியமிப்பதா?
தலைமை தேர்தல் ஆணையத்துக்கு, நரேஷ்குப்தா கடிதம் ( 15 மே 2010 )
தமிழ்நாட்டில் மேல்-சபை அமைக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஒப்புதல் வழங்கினார். ( 19 மே 2010 )

நாளைக்கு ரிலீஸ் ஆகும் படங்கள்: 1.கனகவேல் காக்க.
2.குற்றப்பிரிவு.
3.மகனே என் மருமகனே.
4.ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்.
5.கொல கொலயா முந்திரிக்கா.
6.மாஞ்சா வேலு.
7.ஐயன் மேன் 2

சபாஷ் சரியான போட்டி :-)Read More...

Wednesday, May 19, 2010

திநகரில் கிழக்கு புத்தக ஷோரூம் !

திநகரில் கிழக்கு புத்தக ஷோரூம் இன்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது.


இன்று ஜோ என்று பேய்த மழையின் காரணமாக, ஷோரூம் அழகுபடுத்தும் வேலைகள் மட்டும் பாக்கியுள்ளது.

மற்றபடி, இன்றே தி.நகர் கிழக்கு ஷோரூம் செயல்படத் துவங்கியுள்ளது. அதாவது பிரசன்னா அங்கே இருப்பார்முகவரி:

கிழக்கு புத்தக ஷோரூம்,
3B, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்,
57, தெற்கு உஸ்மான் சாலை,
ரத்னா பவன் எதிரில், தி.நகர் பேருந்து நிலையம் அருகில்,
தி.நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி: 044-42868126
மொபைல்: 95000-45640

அனைவரும் தி.நகர் கிழக்கு புத்தக ஷோரூமுக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்று மழை கொட்டுவதால், ஷோரூமுக்குச் செல்ல நினைப்பவர்கள் ஒரு தடவை ஃபோனில் அழைத்துப் பேசிவிட்டுச் செல்லவும். ( இலவச குடை எல்லாம் கிடையாது. )

முதல் ஒரு வாரத்துக்கு மட்டும், திறப்பு விழா சிறப்புச் சலுகையாக, 10% கழிவு தரப்படும். மேலதிக விவரங்களுக்கு தி.நகர் கிழக்கு புத்தக ஷோரூமைத் தொடர்புகொள்ளவும்.

உங்களுக்கு தேவையாக புத்தகம் கிடைக்கவில்லை என்றால், ரத்னா பவன் வடைகறி நன்றாக இருக்கும், அதனால் கவலை வேண்டாம் :-)

நன்றி: சரக்கு மாஸ்டர்

Read More...

மாம்பழம் விலை உயர்வு - மக்கள் கவலை !

நக்சல்களை ஒடுக்குவதில் மாநில அரசுகளுக்கு உதவி செய்ய துணை ராணுவம் அனுப்பப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு நாள் கூறுகிறார். ஆனால் மறுநாள் அவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்கிறார். ஆனால் சிதம்பரம் பேச பேச ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. நக்சல்களை அழிக்க முப்படை எல்லாம் தேவையில்லை. நக்சல்கள் கொஞ்சம் பேர் தான் அவர்களை அழிக்க வேண்டும் என்ற நினைப்பு தேவை. இல்லை நாம் சந்தன கட்டை வீரப்பனை எவ்வளவு நாள் தேடிக்கொண்டு இருந்தோம் ? அதே போல தான் இதுவும் ஆகும்.
இன்னும் இரண்டு வருடங்களில் நக்ஸல்களை அடியோடு வேரறுப்போம் என்று, திருமாவளவன் தமிழக காங்கிரஸைப் பார்த்து முழங்கியது போல், உள்துறையமைச்சர் சிதம்பரம், நக்ஸல்களைப் பாராமலேயே முழங்கினார். கடைசியில் ஒரே மாதத்தில் 120 ஜவான்கள் மற்றும் 20 சிவிலியன்களைக் தண்டேவாடாவில் இரண்டு தவணைகளில் காவு கொடுத்ததுதான் மிச்சம். Enough is Enough என்று முழங்கியவர்கள் இன்று 72 மணிநேர போர் நிறுத்தம் வேண்டி நக்சல்கள் முன்பு மண்டியிடாக் குறையாக மன்றாடுகின்றனர். ஆயுதங்களைக் கைவிட மாட்டோம் என்று நக்ஸல்கள் முழங்குகின்றனர். இங்கு யார் அதிகாரம் பெற்றவர்கள் என்ற சந்தேகமே வலுக்கிறது.

விமானப்படையை கொண்டு ஒடுக்குவோம் என்று முன்னால் வீரமாக பேசிய சிதம்பரம், இப்போது மாநில அரசுகள்தான் நக்ஸல்களை ஒடுக்க வேண்டும்; மத்திய அரசு வேண்டுமானால் உதவுவோம் என்ற ரீதியில் பேசியிருக்கிறார். அப்படியாயின், இதற்கு முன்னால் நடைபெற்ற தாக்குதலுக்கு நானே முழுப்பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்று எதற்காகக் கூற வேண்டும்? யாரை ஏமாற்ற இந்த நாடகம்? எதற்காக முன்னோரு பேச்சு, பின்னொரு பேச்சு? வெளிப்படையாகவே நக்ஸல்களை ஒடுக்குவது அரசாங்கத்தின் சக்தியை மீறிய செயல்; எங்களால் எதுவும் ஆகாது என்று கூறிவிடலாமே? எல்லாவற்றையும் மறந்துவிடும் மக்களுக்கு, இதனை ஏற்பது ஒன்றும் பெரிய விஷயமல்லவே!!

உள்நாட்டு தீவிரவாதிகளை ஒடுக்க இவ்வளவு கூத்து என்றால் பாக் தீவிரவாதிகளை எப்படி ஒடுக்கப்போகிறார்கள் ?

பாருக்குள்ளே நல்ல நாடாம் பாரதநாடு இதுவரை பார்த்திராத முதுகெலும்பற்ற அரசாங்கம் இந்த மத்திய சர்க்கார்தான் என்பதை ராமதாஸ் பாணியில் பத்திரம் வேண்டுமானாலும் எழுதித் தரலாம். அவ்வாறான ஒரு மெத்தனம். அது விலைவாசி உயர்வாகட்டும், அல்லது அந்நிய ஊடுருவல், ஆக்ரமிப்பாகட்டும் அல்லது உள்நாட்டு பாதுகாப்பில் மெத்தனமாகட்டும். எல்லாவற்றிற்கும் கண்டனம் ஒன்றே நடவடிக்கை என்ற அளவில் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது. அடுத்து சிதம்பரம் என்ன செய்வார்? இறந்த ஜவான்கள் மற்றும் சிவிலியன்களுக்கு அஞ்சலி செலுத்துவார்; பிறகு வருஷ திவசம் ஆண்டுதோறும் அதே நாளில் ஒரு நிமிட அஞ்சலியாக செலுத்தப்படும். இது கேவலமல்லவா? இவ்வளவு நடந்த பிறகு அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சுவது என்னவொரு முதுகெலும்பற்றதனம்? காங்கிரஸ் தலைமையிலான அரசு எப்பொழுதுமே ஏன் தீவிரவாதிகள் தொடர்பான விஷயத்தில் மிகவும் மெத்தனமாகச் செயலாற்றுகிறது?

இவ்வளவு பெரிய அரசாங்க இயந்திரம், ராணுவம், உளவுத்துறை இவையெல்லாம் இருந்தென்ன? 36 ஜவான்கள், 15 சிவிலியன்கள் கொல்லப்பட்டுவிட்டனர். பிரதமருடைய வருத்தமோ, சிதம்பரத்தினுடைய கண்டனமோ இறந்தவர்களை மறுபடியும் உயிர்பித்துவிடவா போகிறது? பாஜக என்னவோ பெருந்தன்மையாக நக்ஸல் விவகாரத்தில் அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கூறுகிறது. ஆனால் இது வேறு விதமான பெருந்தன்மை!! நடப்பது ராமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி. மாநில அரசின் உளவுத்துறையின் மோசமான படுதோல்வி, கடந்த தண்டேவாடா தாக்குதலிலேயே வெட்ட வெளிச்சமாகியது. அதன் வடு மறைவதற்குள்ளாகவே அடுத்த தாக்குதல். மாநில உளவுத்துறையும், போலீசாரும் என்னதான் செய்து கொண்டிருக்கின்றனர்? பாஜகவிற்கு இந்நிலையில் மத்திய அரசைச் சாடினால், மாநில அரசும் விமர்சனத்திற்குள்ளாகும் என்று பெருந்தன்மை வேஷம் கட்டுகிறது. ஆக மக்கள் உயிர் என்பது இவ்விரு கட்சிகளுக்கிடையே பகடைக் காய் போலாகிவிட்டது.

ஆக மத்திய மற்றும் தொடர்புடைய மாநிலம் ஆகியவற்றில் நடப்பது மக்களாட்சி அல்ல. வெறும் துக்ளக் தர்பார்தான். ஸ்பெக்ட்ரம் ராசா, மாயாவதி, முலாயம், லாலு போன்ற ஊழல் பெருச்சாளிகளைக் காப்பதில் காட்டும் முனைப்பில், எள் முனையில் ஊசி முனையளவு முனைப்பைத் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் காங்கிரஸ் காட்டினால் கூட பாரதம் உருப்பட்டுவிடும். காங்கிரஸை துக்ளக்குடன் ஒப்பிட்டதற்காக, துக்ளக் என்னை மன்னிப்பாராக!!

நக்சல்வாதம் என்பது தீவிரவாதம் அல்ல என்றும், அது அரசின் தோல்வி என்றும் பிரபல இந்துத்வ சித்தாந்தவாதியும், பா.ஜனதா முன்னாள் தலைவருமான கே.என். கோவிந்தாச்சார்யா கூறியுள்ளார். அருண் ஜெட்லி சிதம்பரம் அடிப்பட்டவர் என்று கூறியிருக்கிறார். இதை எல்லாம் சொல்ல பா.ஜனதாவிற்கு எந்த யோக்கிதையும் கிடையாது என்று பக்கத்தில் இருக்கும் படம் கதை சொல்லும்.

- -யதிராஜ சம்பத் குமார் + இட்லிவடை

சிதம்பரத்தில் மாம்பழங்கள் விலை உயர்ந்துவிட்டதாம். அட்லீஸ்ட் இதுக்காவது நாம் கவலை படலாம்.


Read More...

Tuesday, May 18, 2010

படம் இரண்டு, செய்தி மூன்று !

படம் இரண்டு, செய்தி மூன்று :-) நேயர் விருப்பம்.தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக கதாநாயகிகளை தேடி மும்பைக்கும் கேரளாவுக்கு போவதை நிறுத்துங்கள். தமிழ் ‌பேச தெரிந்தவர்களை தமிழ் படங்களில் நடிக்க வையுங்கள் - குஷ்பு


கொள்கை பிடித்ததால் தி.மு.க.,வில் இணைந்தேன்: குஷ்பு

ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியில் இருந்து குஷ்பு நீக்கி, அதற்கு நல்ல தமிழ் நடிகையாக போடுவார்கள் என்று நம்புவோம் !


Read More...

படம் சொல்லும் செய்தி

இரண்டு படங்கள். முன்று செய்திகள்.செய்தி(15, மே ) : இளைஞன் படத்தில் தாம் நடிப்பதையொட்டி முதல்வர் கருணாநிதியை, கோபாலப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் வடிவேலு சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.செய்தி(18 மே ) வடிவேலு மானேஜருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்: நடிகர் சிங்கமுத்து கைது

மூன்றாவது செய்தி: :-)

Read More...

Monday, May 17, 2010

மண்டேனா ஒன்று - 17/5/2010

காமாக்ஷியம்மாள்

ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் வர்க்கத்தினரைச் சேர்ந்த மூவரைப் பற்றி கட்டுரைகள் எழுதித் தருமாறு சில எழுத்தாளர்களைக் கேட்டுக் கொண்டது. மூன்று கட்டுரையாளர்கள் முறையே, பூ விற்பனை செய்பவர், சமையற்கலை நிபுணர் மற்றும் தினசரி பத்திரிக்கை டெலிவரி செய்பவர் என மூவரைப் பேட்டி கண்டு தன்னம்பிக்கைக் கட்டுரைகளாக அனுப்பியிருந்தவற்றை ரீடர்ஸ் டைஜஸ்ட் பிரசுரித்திருக்கிறது. இதில் முதலாவதாக பூ விற்பனை செய்பவரைப் பற்றிய கட்டுரையின் மொழியாக்கம். இதன் மூலத்தை எழுதியவர் திருமதி. கமலா தியாகராஜன்.

நான் ஒவ்வொரு முறை சந்தடி நிறைந்த தியாகராய நகரில் அமைந்துள்ள வெங்கட் நாராயணா கோவிலுக்குச் செல்லும் போதும், காமாக்ஷி அம்மாளைச் சந்திக்கத் தவறுவதே இல்லை. அவர் அக்கோவில் முகப்பில் பூ விற்கும் ஒரு மூதாட்டி.

எனக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்ததால், காமாக்ஷி அம்மாளை சிறிது காலமாகச் சந்திக்க நேரவில்லை. இன்றைய தினம், கோவிலுக்குச் சென்ற போது, வாரிய தலையும், சுருங்கிய புடவையும், வெயிலில் வாடிய முகமுமாக காமாக்ஷியம்மாளைச் சந்திக்க நேர்ந்தது. அதே நேரத்தில், டாடா சஃபாரியிலிருந்து இறங்கிய ஒருவர் அவரிடம் தனது திருமண அழைப்பிதழை கொடுத்துக் கொண்டிருந்தார். அதைப் பெற்றபடியே அவரிடம், " ரொம்ப சந்தோஷம்பா!" என்று மலர்ந்த முகத்தோடு கூறிக் கொண்டிருந்தார் காமாக்ஷியம்மாள். அடுத்ததாக, சில மகளிர் காவல்துறையினர் அவரிடம் வந்து அளவளாவிவிட்டு வீட்டிற்கு பூக்களை வாங்கிச் சென்றனர். இவர்களெல்லாம் அவருடைய வாடிக்கையாளர்கள். அடுத்ததாக அவர் என்னைப் பார்த்ததும், கையை அசைத்து, "குழந்தை பிறந்தாயிற்றா?" என்று மகிழ்ச்சியாகக் கூவினார்.

காமாக்ஷியம்மாளை எனக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தெரியும். அவருடைய வாழ்க்கையானது, நம்பிக்கை, உதார குணம், கடின உழைப்பு மற்றும் மிகப்பெரிய வெற்றி ஆகியவற்றிற்கு மிகச் சிறந்த உதாரணம். நீங்கள் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து இதைப் படித்துக் கொண்டிருந்தால், நீங்கள் காமாக்ஷியம்மாளோடு தோளோடு தோள் சேர்ந்து பழகுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு; ஆனால் உங்களுடைய பேரக் குழந்தைகளுக்கு, காமாக்ஷியம்மாளின் பேரக் குழந்தைகளோடு பழகுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

"என்னுடைய ஒன்பதாவது வயதில் நான் அநாதரவாக்கப்பட்டேன்", என்று என்னிடம் கூறுகிறார் காமாக்ஷியம்மாள். " அதனால் நான் ஒரு வருட காலம் தெருக்களில் பிச்சையெடுத்து, பட்டினி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது". சென்னையிலுள்ள ஏதாவது ஒரு நல்ல நிலையிலுள்ள குடும்பம் அவரைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்தவர் ஷண்முகம், தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயது முதிர்ந்த பிச்சைக்காரர். " அப்பா தன்னுடைய குடிசைக்கு என்னை எடுத்துச் சென்று என்னைப் பார்த்துக் கொண்டார்" என நினைவு கூர்கிறார் காமாக்ஷியம்மாள். " அவருடைய நிலையைக் கூட பொருட்படுத்தாமல், உண்மையான அன்பு, பாசம் ஆகியவற்றின் அர்த்தம் என்னவென்பதை அவர் எனக்கு உணர்த்தினார்".

சில ஆண்டுகள் கழித்து, ஷண்முகம் தனக்கு அறிமுகமான இளவயதுடைய ஒரு நபரை காமாக்ஷியம்மாளுக்கு மணாளனாகத் தேர்ந்தெடுத்தார். அவரும் தனது வாழ்வாதாரத்திற்காக பிச்சையெடுப்பவர். மிகவும் மரியாதையான, அன்பான நபர். வெகு சீக்கிரமே காமாக்ஷியம்மாளுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. பிறந்த வேகத்திலேயே இறந்தும் விட்டன. பிறகு ஒரு ஆண் குழந்தை, அதேபோல் இறந்து விட்டது.

இதற்கிடையே , இத்தம்பதியருக்கு சென்னைக்கு ஒதுக்குப்புறமாக சிற்தளவு அரசாங்க நிலம் ஒதுக்கப்பட்டது. அதே வேளையில், பிரசவத்தின் போது இறந்து விட்ட ஒரு பிச்சையெடுக்கும் பெண்மணியின் இளம் பெண் குழந்தையைப் பற்றிக் கேள்வியுற்ற காமாக்ஷியம்மாள், அதனைத் தத்தெடுத்துக் கொண்டார்.

"அதுதான் என்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனை" என்று கூறுகிறார் காமாக்ஷியம்மாள். " இந்திராணியை என்னுடைய கையில் ஏந்தியபோது, என்னுடைய கரடு முரடான வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது" என்பதை உணர்ந்து கொண்டேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திராணிக்கு ஒரு சகோதரி வந்து சேர்ந்தாள். காமாக்ஷியம்மாளுக்கு பரிச்சயமான மற்றொரு பெண்மணி பிரசவத்தின் போது சோகமான முறையில் உயிரிழந்தார். அவருடைய குழந்தையையும் காமாக்ஷியம்மாள் ஸ்வீகரித்துக் கொண்டார், அக்குழந்தையின் பெயர் மல்லிகா. " நான் குழந்தைகளைப் பற்றி சிந்திக்க வேண்டியிருந்தது; அவர்களுக்கு ஒரு மரியாதைக்குரிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டுமெனில், அதற்கு பிச்சையெடுப்பது ஒரு தீர்வல்ல என்று உணர்ந்து கொண்டேன், பிறகு இக்கோவிலில் பூ விற்கத் துவங்கினேன். இது கடவுளுக்கு சேவை செய்வதற்கு ஒப்பானது.

இப்போது 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து விடும் காமாக்ஷியம்மாள், பேருந்தில் கோயம்பேடு சந்தைக்குச் சென்று, பூக்களைக் கொள்முதல் செய்துகொண்டு 5 மணிக்கெல்லாம் கோவில் வாசலுக்கு வந்து விடுவார். இரவு ஒன்பது மணி வரை ஓயாத உழைப்பு. " வாடிக்கையாளர்களுடன் நான் பிடிவாதமாக பேரம் பேசுவதில்லை". வழக்கத்தை விட அதிகமாகவே பூக்களைக் கொடுத்துவிடுவேன். அப்போதுதான் திரும்பவும் வருவர், என்று கூறுகிறார்.

காமாக்ஷியம்மாள் தினமும் ரூபாய் 250 வரை வருமானம் ஈட்டுகிறார். விழாக் காலங்களில் ரூபாய் 450 வரை ஈட்டுகிறார். எப்போதாவது ஒரு சமயம், வட்டிக்கும் கடன் வாங்குகிறார். ஆனால் வட்டி தனது வருமானம் முழுவதையும் விழுங்கி விடுவதாகக் கூறும் காமாக்ஷியம்மாளுக்கு சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு பிரச்சனைகள் இருக்கின்றன. "மாத்திரை மருந்துகள் மிகவும் விலை அதிகம், ஆனால் எனக்கு வேறு வழியில்லை". நான் ஆரோக்யத்துடன் இருந்தால்தான் எனது பேரக் குழந்தைகளுக்குச் செய்ய முடியும், என்று கூறுகிறார். இவர் தனது கணவரையும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இழந்து விட்டார்.

இந்திராணியின் கணவர் இந்திராணியையும், அவரது மூன்று குழந்தைகளையும் கைவிடும் வரை இந்நிலையில்லை. அதன் பிறகுதான் காமாக்ஷி கல்வியின் மேன்மையை உணர்ந்து கொண்டார். " இந்திராணி ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார், அதற்கு மேல் படிக்க நான் அப்பொழுதே வற்புறுத்தியிருக்க வேண்டும்". கணவன் எவ்வளவுதான் உதவாக்கரையாகவும், குடிகாரனாகவும் இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு கல்வியறிவு இருந்துவிட்டால் கவலையில்லை. அவள் தனது சொந்தக் காலிலேயே நிற்கலாம். அதனால்தான் எனது பேரக் குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கடினமாக உழைக்கிறேன்.

காமாக்ஷியம்மாள் மிகவும் கடினமாக உழைக்கிறார். இந்திராணியின் மகள், ஜான்ஸி வெகு விரைவில் பி.காம் பட்டதாரியாகப் போகிறார். அவருடைய இரண்டாவது மகள் ரோஸி நர்ஸிங் பயில்கிறார், கடைசி மகன் சாலமோன், பிஏ பயில்கிறார். மல்லிகாவினுடைய ஐந்து குழந்தைகளும் பள்ளி செல்கின்றனர்.

2005 இல், காமாக்ஷியம்மாளின் கணவர் இறந்த போது, காமாக்ஷியம்மாள் சுமார் 10 தினங்களுக்கு கோவில் முகப்பில் தென்படவில்லை. திரும்பவும் வரத் தொடங்கிய போது, அவருடைய மிகப்பெரிய நெற்றிப் பொட்டு அந்தர்தனமாகியிருந்தது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பொட்டு வைத்துக் கொள்ளத் துவங்கினார். " ஒரு விதவையிடமிருந்து மக்கள் பூ வாங்க விரும்ப மாட்டார்கள்" என்று நடைமுறை உண்மையை காமாக்ஷியம்மாள் கூறினார். கணவரின் மீது வைத்திருக்கும் மரியாதைக்காக விதவையாகத்தானிருக்க விரும்புகிறேன். ஆனால் வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டுமே!! பசியோடும், உயிரோடும் இருப்பது நாங்கள்தானே என்று யதார்த்தமாகக் கூறுகிறார்.

காமாக்ஷியம்மாளை ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு அவருடைய மகள்கள் வற்புறுத்துகின்றனர். ஆனால் வெறுமனே வீட்டிலிருக்கும் ஒரு வாழ்க்கையை அவர் விரும்பவில்லை. " இப்பொழுது என்னால் இதை விட முடியாது, இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது". கடவுள் கிருபையிருந்தால், என்னுடைய கொள்ளுப் பேரன்களையும் கல்லூரியில் படிக்க வைப்பேன் என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் காமாக்ஷியம்மாள்.

- யதிராஜ்

Read More...

Sunday, May 16, 2010

அனுராதா ரமணன் - அஞ்சலி9 June 1947 - 16 May 2010

அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Read More...

Saturday, May 15, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 15-5-2010

ரொம்ப நாள் கழித்து முனி கடிதம்...

டியர் முனி,

என்ன? சத்தத்தையே காணும்? ரெண்டு வாரம் முன்னாடி போட்ட லெட்டருக்கு பதில் கூடப் போடலை? அடிக்கற வெய்யில்ல சரக்கடிச்சுட்டு சுருண்டு படுததுட்டயா? சரி, பரவாயில்லை. இதப் படிச்சுட்டானும் பதில் போடு. நியூஸ் எல்லாம் கொஞ்சம் பழசா இருக்கும் கண்டுக்காதே. வலைப்பதிவுல தான் அரைச்ச மாவையே அரைப்பது ஃபேஷனாச்சே !

முதலில் இதை படிக்கும் அன்னையர்களுக்கு பிலேட்டட் “அன்னையர் தின வாழ்த்துகள்” சொல்லிவிடு. இந்த அன்னையர் தினம் எல்லாம் முன்பு கிடையாது. நம்ம பசங்க அமெரிக்கா சென்ற பிறகு அப்பா தினம், அன்னையர் தினம் என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். நமக்கு தெரிந்த்து எல்லாம் அண்ணன்/தம்பி அக்கா/தங்கைக்கு பச்சைப் புடவை வாங்கி தந்தார்கள் அவ்வளவு தான். அக்கா,தங்கை இல்லாதவர்கள் டாவடிக்காத ஃபிகர்களுக்கு வாங்கி தந்தார்கள். எனக்கு ஒரு சந்தேகம். ஏன் மாமியார் தினம் என்று ஒரு நாளை நாம் கொண்டாடுவதில்லை? யாராவது நல்லாப் படிச்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.

படிப்பு என்றதும் நம்ம மாணவர்களுக்கு உடனே ஞாபகம் வருவது சினிமா தியேட்டர் தான். தமிழ்நாட்டில் பல தியேட்டர்கள் கல்யாண மண்டபங்கள் ஆகிவிட்டது பலருக்கு தெரியும். ஏன் அப்படி ஆச்சு? நல்ல தரமான படங்கள் வரவில்லை, அதனால் வசூல் இல்லை. இப்ப பள்ளிக்கூடங்கள் கூட கல்யாண மண்டபங்கள் ஆகிவிடும் போல இருக்கு. போன வாரம் தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டணம் குறித்து தமிழக அரசில் அறிவிப்பு ஒன்று வெளியானது. நியாயமாக இருப்பதாக தெரிகிறது. உடனே தனியார் பள்ளிகள் இந்த அரசணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளார்கள். நல்ல வேளை பள்ளிக்களுக்கு எல்லாம் இப்போது விடுமுறை. இல்லையென்றால் போராட்டம் அது இது என்று ஆரம்பித்திருப்பார்கள். இதில் வேடிக்கை என்ன என்றால் இந்த கட்டணம் இவர்கள் கொடுத்த வரவு செலவு கணக்குகளின் அடிப்படையில் அமைத்தது. இவர்கள் இப்ப கோர்ட் படியேறுவதை பார்த்தால் இவர்கள் கொடுத்த கணக்குகள் தவறானவை என்று தெரிகிறது. பள்ளிகள் வருஷா வருஷம் பில்டிங் டொனேஷன் என்று வாங்குதற்கு பில்டிங் கட்டியிருந்தால் தமிழ் நாடு முழுக்க பில்டிங்காக இருந்திருக்கும். இந்த பிஸினஸ் புள்ளிகள் அரசு இந்த முடிவை மறு பரிசீலினை செய்யா விட்டால் பள்ளிகளை எல்லாம் கல்யாண மண்டபங்கள் ஆக்கிவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். எப்படியாவது இவர்களுக்கு வசூல் நடக்கணும். இந்த பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள்/என்ன செய்வார்கள் என்ற பயம் வருவது நியாயம்தானே?

எந்தப் பள்ளியில் படிச்சாலும், பிறகு ஏதோ ஒரு டிகிரி படிச்சு மேல படிக்க வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த உடனே பின் நம் மக்கள் அங்கே குப்பையே இல்லை, கோக், பெப்ஸி எல்லாம் ரொம்ப பெரிசாக இருக்கிறது என்று ஒரு வாரத்துக்குப் பேசுவார்கள். அது போல ஐ.ஐ.டி. மற்றும் அமெரிக்காவில் படிச்சு பின்னர் அமைச்சர் ஆகி, இப்போ சீனா சுற்றிப் பார்க்கப்போன ஜெயராம் ரமேஷ் (இவர் யார் என்று கேட்பவர்களுக்கு: கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பட்டமளிப்பு விழாவில் வெள்ளைக்கார சம்ப்ரதாயம் தேவை இல்லை என்று கோட்டைக் கழட்டி வீசிய மத்திய அமைச்சர்), சீனாவுடனான வர்த்தக விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மிகுந்த எச்சரிக்கை காட்டுகிறது. இது தேவை இல்லை என்று கமெண்ட் அடிக்க உடனே மன்மோகன் சிங் மற்ற இலாகா பற்றி கமெண்ட் அடிக்க கூடாது என்று அறிவுரை. 'கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி என்று சொல்லுவார்கள். அது போல ஸ்பெக்டரம் ராசா விஷயத்தில் இனி யாரும் வாய் திறக்க மாட்டார்கள், மன்மோகன் சிங் உட்பட. அவரே சொல்லிவிட்டாரே மற்ற அமைச்சர்களைப்பற்றிக் கமெண்ட் அடிக்க கூடாது என்று. இதுக்கு வேற ஒரு நல்ல வழியும் இருக்கு. யாருக்கும் தெரியாம வெளியூருக்குப் போனோமா வந்தோமா என்று இருக்க "நம்ம ஊரு" அமைச்சரிடம் எல்லா அமைச்சர்களும் ட்ரைனிங் எடுத்துண்டா அவங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே நல்லது.

அமைச்சர்கள் என்றாலே காசு வாங்கினார்கள், சொத்து சேர்க்கிறார்கள் என்று கொஞ்ச நாளா சத்தம் ஜாஸ்தியாக் கேக்குது. இதே மாதிரி உங்களுக்கும் நெறைய சேரணும்னா அக்ஷய திரிதியை அன்னிக்கு வாங்குங்க என்று சில வருஷங்களாகக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வாரம் தி.நகரில் தங்கம் வாங்கும் பைத்தியங்களைப் பார்க்கலாம். காழியூர் நாராயணன் வேற டிவியில் வந்து வெள்ளை வஸ்து வாங்கினால் நல்லது என்று ப்ளாட்டினத்துக்கு விளம்பரம் செய்கிறார். தங்கம் போய் இப்ப பிளாட்டினம். ப்ளாட்டினம் வியாபாரம் ஆக வேண்டாமா? எனக்கு ஒரு சந்தேகம் ஏஞ்சலினா ஜூலி போன்றவர்களும் கேதரின் ஜீடா ஜோன்ஸ் போன்றவர்களும் ப்ளாடினம் போட்டுக்கொண்டால் பரவாயில்லை. நம்ம ஊர்ப் பெண்களுக்கு இது எல்லாம் நல்லா இருக்குமா? நினைக்கவே ... எதுக்கு வீண் வன்பு. எனக்கு இன்னொரு சந்தேகம் அக்ஷய திரிதியைக்கு வெள்ளை நல்லது என்று சொல்லும் காழியூர் நாராயணன் டிவியில் தோன்றும் விளம்பரத்தில் ஏன் டை அடித்துக்கொண்டுள்ளார் ? அந்த பகவானுக்கே வெளிச்சம்.

கல்கி பகவான் எனும் விஜயக்குமாரைப் பற்றி சன் டிவி கொஞ்ச நாள் முன்னாடி சில வீடியோ காட்சிகளை போட்டு காட்டியது. ஆனால் ஃப்.எம் சேனலில் அம்மா சென்னை வருகைக்கு விளம்பரம் தூள் கிளப்புகிறது. எதை நம்புவது? சன் டிவியையா? அல்லது ரேடியோவையா அல்லது கல்கி பற்றி குங்குமத்தில் வரும் விளம்பரத்தையா ?

உலக செஸ் போட்டியில் ஆனந்த் மீண்டும் பட்டம் பெறுவாரா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. லலிதா ராம் உங்களுக்கு தான் ஜோசியரை எல்லாம் நல்லா தெரியுமே! சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெரும் என்று சரியாக சொன்னீர்களே! அது போல உங்க ஆஸ்தான ஜோசியரை கேட்டு சொல்லுங்க என்கிறார். ஆனந்த வெற்றி பெருவாரா என்று எனக்கு முன் கூட்டியே தெரியாது. ஆனால் இட்லிவடை படிப்பவர்கள் செஸ் பதிவுக்குத் தந்த ஆதரவினால் லலிதா ராம் வெற்றி பெற்றுவிட்டார். அவர் எழுதின விமர்சனத்திகாகவே ஆனந்த் கடைசி ஆட்டத்தில் ஜெயிச்சு சாம்பியன் ஆயிட்டார் என்பது ரொம்ப நல்ல செய்தி.

செஸ் வெற்றி ரொம்ப சந்தோஷம் என்றாலும் சுறா வெற்றி பெற முடியவில்லை. படத்தில் "இந்த அண்ணா" என்று வசனம் பேசியவர் வருத்தத்தில் இருப்பதாகச் செய்தி. இருந்தாலும், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் போல சன் பிக்சர்சின் சுறா பட டிக்கெட் 1 ரூபாய்க்கு விற்பனை என்ற செய்தியும் மக்கள் மத்தியில் வலம் வருது. ஆனால், பாதி படத்தில் வெளியே செல்ல வேண்டும் என்றால் 200 ரூபாயாம். இதனால் நல்ல வசூல் என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். விஜய்க்கு எப்படியோ, சன் பிச்சர்ஸ் போட்ட காசை எடுத்துவிடுவார்கள்.அஜித்துக்கு பெண் ரசிகைகள் ஜாஸ்தியா அல்லது விஜய்க்கு ஜாஸ்தியா என்று பார்த்தால் விஜய் என்று தான் சொல்ல வேண்டும். பெண்கள் இப்பல்லாம் சைடு பாரில் விஜய் பட வசனத்தை விளம்பரம் செய்கிறார்கள். எப்படியோ சன் பிக்சர்ஸ் சிங்கம் படத்தை தியேட்டர்களுக்கு கொடுத்து நஷ்டத்தை சரி செய்ய போகிறார்களாம். சிங்கம் சிங்கிளா வருமா? இன்னொரு சூப்பர் ஸ்டார் சிங்கம் ஒன்று டபுளா வர வேண்டும். அது எப்போ வரும் என்று யாருக்கும் தெரியாது ? ஆனா வரும். அது வரும் போது நாம் தான் மேக்கப் போட்டு தியேட்டருக்கு போகணும். நமக்கும் வயசாகிறது இல்லையா ? எதுக்கு இவரை பற்றி சொல்லி வீண் சர்ச்சை

சர்ச்சைப் புகழ் ராம் சேனா ப்ரமோத் முத்தலிக் இம்முறை தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே விரித்த வலையில் படு வசமாகச் சிக்கியுள்ளார். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக ஒரு மாநாடு நடத்தப் போவதாகவும், அதில் கலவரத்தை நிகழ்த்த ஆட்களைத் திரட்டி வருவதாகவும், அதற்கு 60 லட்சம் வேண்டும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போல் நடித்த ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் தெஹல்கா நிருபர்களிடம் கூறியுள்ளர். இவையனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, நேற்று ஹெட்லைன்ஸ் டுடே முதலான வட இந்திய மீடியாக்களில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீராம் சேனாவிற்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிக்ஷத் என்ற இரு அமைப்புகளுமே அறிக்கை வெளியிட்டுள்ளன.

முன்பே இவர்கள் கலாட்டா செய்த போது ஏன் இந்த அறிக்கை விடவில்லை? காவி கண்ணை மறைத்துவிட்டதா? நல்ல வேளை இவர் தமிழ் ஹிந்துவாக இல்லாமல் கன்னட ஹிந்துவாக இருக்கிறார். அதனால் தமிழ் ஹிந்துக்களுக்கு இது கண்ணில் படவில்லை. பி.ஜே.பிக்கு இது எல்லாம் தெரியாமலா இருக்கும் ? இந்த விவகாரத்தில் கர்நாடக பாஜக அரசு அசிரத்தை காட்டாமல், முத்தலிக் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அவர்கள் செய்வார்களா என்பது சந்தேகம் தான். அவர்கள் பாடே நாய்பட்ட பாடாக இருக்கிறது.

இதுநாள் வரை யார் இவர் என்று தெரியாமல் இந்த பாஜக தலைவர் நிதின் கட்கரி வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு கொஞ்சம் அவல் கொடுத்துள்ளார். வெட்டுத் தீர்மானத்தில் அரசிற்கு ஆதரவாக வாக்களித்த லாலு மற்றும் முலாயம் தொடர்பாக செய்தியாளர்களிடம் விமர்சித்த கட்கரி, “லாலுவும், முலாயமும் முன்னர் சிங்கம் போல பாய்ந்ததாகவும், சிபிஐயின் நடவடிக்கைக்குப் பிறகு, காங்கிரஸிற்கு நாயைப் போல நன்றியுடையவர்களாக இருப்பதாகவும்” ( காங்கிரஸ் காலை நக்கினார்கள் என்று நாய்க்கு கூட கோபம் வரும் வார்த்தையை ) தெரிவித்தார். ( படம் தற்செயலாக அமைந்தது )

சச்சின் செய்த சாதனைக்கு அவருக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே போல நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்று, 2007 முதல் இன்று வரை undisputed சாம்பியன் ஆக விளங்கும் ஆனந்த் செய்த சாதனைக்கு அவருக்கும் கொடுக்கலாம் என்று இன்றுவரை யாருமே சொல்லாதது ஏனோ? இத்தனைக்கும் ஆனந்த் அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகளை சச்சினுக்கு முன்பே பெற்றார் என்பதை சொல்லியே ஆகணும். மூளையை கசக்கி அறிவைக் கொண்டு விளையாடினால் கோரிக்கை வைக்க மாட்டார்களோ என்னவோ! யார் கண்டது. ரொம்ப வருஷம் கழித்து கொடுத்தால் Once a pawn a time என்று நாம் சொல்ல வேண்டியிருக்கும்.

கொஞ்சம் கொசுறுச் செய்திகள், உனக்காக ஸ்பெஷலா!


"அணு அணுவாய்ச் சாவதற்கு முடிவெடுத்த பின் காதல் சரியான வழிதான்...' என்ற அறிவுமதியின் கவிதை வரிகள். 2007 முதல், காதல் விவகாரத்தால் நடைபெறும் கொலைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்கிறது செய்தி. டிவியில் “ஐ லவ் யூ ...” என்று கீழே எஸ்.எம்.எஸ் போடும் டிவியில் தான் இந்த நியூஸும் படிக்கிறார்கள்.

ஹிருத்திக்ரோஷன் நடித்துள்ள கைட் திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ். இந்த படத்தில் முகம் காட்டாமல் இருப்பவர் பார்பரா மேரி. பார்பரா மேல் ஆடை இல்லாமல், ஹிருத்திக் ரோஷனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. உடனே அலைந்துக்கொண்டு போகாதே அந்த காட்ச் இ இந்தி மொழியில் நீக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் இருக்கிறதாம். உடனே நம்ம மக்கள் டவுலேட் செய்து பார்த்துவிடுவார்கல். இந்த படம் நல்லா வசூல் ஆக வேண்டும் என்று ஹிருத்திக் சாய்பாபாவை கும்பிட்டார் என்பது டெய்ல் பீஸ். ( தயவு செய்து இளகிய மனம் கொண்டவர்கள் , ஆண்கள், குழந்தைகள் இந்த லிங்கை கிளிக் செய்யாதீர்கள் )

இப்படிக்கு,
இட்லிவடை


சமையல் குறிப்பு எழுதுவது கஷ்டம் என்று தற்போது கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இது இரண்டுமே கஷ்டம் படிப்பதற்கு !


Read More...

Wednesday, May 12, 2010

ஆனந்த் டொபலோவ் - Game 11 & 12 - An Express Report

யாரோ செய்த பிளாக் மேஜிக் என்று நினைக்கிறேன், நேற்று இரவு சீக்கிரம் தூங்கிவிட்டேன். அதனால் ஆனந்தின் பிளாக் மெஜிக் பற்றி லலிதா ராம் எனக்கு அனுப்பிய கட்டுரையை சுட சுட போட முடியவில்லை. மன்னிக்கவும்.

இனி லலிதா ராமின் எஸ்பிரஸ் ரிப்போர்ட்...


ஆனந்த் டொபலோவ் - Game 11 & 12 - An Express Report

இது ரிப்போர்டாக இல்லாமல் நாவலாக இருந்தால், பத்து பக்கங்களுக்கு நீட்டி முழக்கி, சஸ்பன்ஸை வளர்த்து, நகம் கடிக்க வைத்து, சீட் நுனிக்கு இழுத்து இறுதியில் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கலாம்..

இப்போது அதற்கெல்லாம் வழியில்லை.

ஆனந்த் மீண்டும் (செஸ்ஸில்) ‘விஸ்வநாதன்’ ஆனார்.

ஒரு சின்ன recap:

************

போட்டியின் பெரும்பான்மையான ஆட்டங்களில் அதிரடியாய் ஆடுவதைத் தவிர்த்து, எதிராளியைத் தவறு செய்யத் தூண்டும் விதமாகவே ஆட முயன்றார் ஆனந்த். போட்டியின் முதல் பகுதியில் வெற்றியும் கண்டார். ஆனால், இரண்டாவது பகுதியில் டொபலோவ் விழித்துக் கொண்டு துல்லியமாக ஆடினார். பெரும்பாலான தவறுகளை ஆனந்தே செய்தார். இதனால் எட்டாவது ஆட்டத்தில் தோல்வியை அடைந்ததோடன்றி, ஒன்பதாவது ஆட்டத்தில் கிடைக்க வேண்டிய வெற்றி டிராவாகிப் போனது.

************

பதினோறாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு கடைசி வெள்ளை.

பத்து ஆட்டங்களில் சமநிலையில் முடியாத ஆட்டங்கள் அனைத்திலுமே வெள்ளைக் காய்களுடன் விளையாடியவரே வென்றிருந்தார். கிட்டத்தட்ட ஆனந்தின் வெற்றிக்கு அதுதான் கடைசி வாய்ப்பு.

இந்த சூழலில் ஆனந்த் தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்வாரா?

ஓபனிங்கைப் பொறுத்த வரை, நான்கு ஆட்டங்களில் விளையாடிய Catalan-ஐ டொபலோவ் மழுங்கடித்து விட்டார். ஒரு ஆட்டத்தில் விளையாடிய Nimzo Indian-ல் ஆனந்தின் கை ஓங்கியிருந்த போதும், கிடைத்த ஓய்வு நாளில் டொபலோவின் டீம் அந்த ஓபனிங்கை அலசித் தீர்த்திருக்கும். சர்வ நிச்சயமாய் வேறொரு ஓபனிங்கைத்தான் ஆனந்த் விளையாடியாக வேண்டும்.

ஐந்து ஆட்டங்களை 1.d4 என்ற நகர்த்தலில் தொடங்கிய ஆனந்த், ஆறாவது வெள்ளை ஆட்டத்தை 1.c4 என்ற நகர்த்தலில் தொடங்கினார்.

இந்த முடிவு டொபலோவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று ஆனந்த் எதிர்பார்த்திருக்கக் கூடும். English Opening-ல் ஆனந்த் ஆட்டத்தைத் தொடங்கிய போதும், ஆட்டம் சமமாகவே தொடர்ந்தது. ஆனந்தின் திட்டமென்ன என்று அறியும் வரை, டொபலோவ் கோதாவில் குதிக்கத் தயாராகயில்லை. ஆனந்தும் டொபலோவ் பொறுமையிழக்கும் வரை விடுவதாக இல்லை. இருவரும் சளைக்காமல் middle game-ஐ ஆடி, ஆட்டம் நிச்சயம் டிராதான் என்ற நிலைக்கு இழுத்துச் சென்றனர்.

48 நகர்த்தல்களுக்குப் பின், இருவரிடமும் 3 pawns, ஒரு குதிரை, ஒரு யானை மட்டுமே மிஞ்சியிருந்தது. 49-வது நகர்த்தலில் ஆனந்த் அதிரடியாய் விளையாடினார். தனது queen-side pawn-ஐ King-side play-க்காக தியாகம் செய்தார்.

ஆட்டம் சமநிலையிலிருந்து விலகியது.

கரணம் தப்பினால் மரணம்.

யாருக்கு? இருவருக்கும்தான்.

ஆனந்த் முதன் முறையாய் வெற்றிக்காக ஆட ஆரம்பித்தார். டொபலோவும் வெற்றியைப் பெற முனைந்தார்.

கடைசி வெள்ளை ஆட்டத்தில் ஜெயிக்க மிகப் பெரிய ரிஸ்கை ஆனந்த் எடுத்த போதும், இருவரும் துல்லியமாக ஆடினர்.

ஆட்டத்தை லைவாகப் பார்த்த ஆனந்த் ரசிகர்களுக்கு இதயத்துடிப்பு காய்கறி விலை போல எகிறியிருக்கும்.

கடுமையான போராட்டத்துக்குப் பின் ஆட்டம் டிராவில் முடிந்தது.

அடுத்த நாள் ஒய்வுக்குப் பின், கடைசி ஆட்டம். டொபலோவுக்கு வெள்ளை.

கருப்புக் காய்களுடன் கடைசி ஆட்டத்தை ஆடுவது ஆனந்துக்கு சிரமம்தான் என்ற போதும், டொபலோவுக்கு வேறு வகையில் நெருக்கடிகள்.

ஒரு வேளை ஜெயிக்கவில்லை என்றால், போட்டி ராபிட் ஆட்டங்களுக்குச் செல்லும். ஆனந்தான் Best ever rapid player. டொபலோவை பல முறை வென்றும் இருக்கிறார். 2006-ல் கிராம்னிக்குடனான போட்டியிலும் டொபலோவ் ராபிட் ஆட்டங்களில்தான் தோல்வியுற்றார்.

ஆனந்துக்கு கடைசி ஆட்டத்தை ஜெயித்துதான் ஆக வேண்டும் என்றில்லை.ஆனால், டொபலோவுக்கோ நிச்சயம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி.

போட்டியைத் தொடர்ந்து பார்த்த எனக்கே, ஓய்வு நாளில் மிகவும் சஞ்சலமாக இருந்தது. போட்டியாளர் இருவரும் எப்படிக் கழித்தனரோ! பாவம்.

ஆனந்தின் strategy,

1. டொபலோவின் preparation-ல் மாட்டிக் கொள்ளக் கூடாது.
2. டொபலோவை drawish ஆட்டத்துக்குள் இழுக்க வேண்டும்.
3.டொபலோவ் டிராவுக்கு இசைந்தால் சரி. டிரா கூடாது என்று நினைத்து அதீதமாய் அதிரடி ஆட்டத்தைப் பயன்படுத்தி, தோல்வியை அடைந்தால் நல்லதாய் போயிற்று!

இந்த strategy-க்கு ஏற்ற தொடக்கததை ஆனந்த் தயார் செய்ய வேண்டும்.

மூன்று முறை டிரா செய்த Slav defense-க்கே ஆனந்த் திரும்புவாரா? அல்லது சமீபத்தில் பயன்படுத்திய Grunfeld-ல் தொடங்குவாரா?

இரண்டிலும் இல்லை. காலம் காலமாய் black-ல் தொற்காமல் இருக்கும் சூழல்களை எண்ணற்ற ஆட்டங்களில் அளித்து வந்த Queen's Gambit Declined-ஐ தேர்வு செய்தார்.

முதல் இருபது நகர்த்தல்கள் கடகடவென்று வைத்தார் ஆனந்த். அந் நிலையில் அவரது C5 pawn சற்று weak-ஆக இருப்பினும், அவரது வெள்ளை பிஷப்பும் யானையும் டொபலோவின் back rank-ஐத் தாக்கத் தயாராக இருந்தன.

சில நகர்த்தல்களுக்குப் பின் ஆனந்தின் பிஷப் a8-h1 diagonal-ஐ வியாபித்து இருந்தது. அதே diagonal-ல் இருந்த ராஜாவை, டொபலோவின் e-pawn-ம், f-pawn-ம் காத்தன.

ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் டிராவை நோக்கிச் செல்வதை டொபலோவ் உணர்திருக்க வேண்டும். எதையாவது செய்து சமநிலையைக் குலைக்க விழைந்தார் டொபலோவ். தனது 31 & 32-வது நகர்த்தலில் முன் குறிப்பிட்ட e மற்றும் f pawn-கள் கொண்டு ஆனந்தின் pawn-கள் இரண்டை வீழ்த்தினார். இதனால் டொபலோவின் ராஜாவைத் தாக்குவது சுலபமானது.

இவ்விரு நகர்த்தல்களை விளையாடியதுமே ஆனந்தின் கை ஓங்கிவிட்டது. ஆட்டத்தை லைவாக விமர்சனம் செய்த வல்லுனர்களை டொபலோவின் blunder அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Tiger from Madras had smelt blood.

அடுத்தடுத்து அதிரடியாய் ஆடி டொபலோவை நெருக்கினார்.

டொபலோவ் தனது 40-வது நகர்த்தலில் செக் வைத்தார். ஆனந்த் தன் ராஜாவை நகர்த்தியதும், Susan Polgar என்ற commentator & GM, அந்த நகர்த்தலை blunder என்றார். அதனைப் படித்த போது ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது. .

9-வது ஆட்டத்திலும் ஆனந்த் 40-வது நகர்த்தலில்தான் தவறிழைத்து கை மேல் இருந்த வெற்றியைக் கோட்டை விட்டார்

மீண்டுமொருமுறை வெற்றியின் விளிம்பில் இருந்து வீழ்வாரா ஆனந்த்?

நல்ல காலம் அப்படியொன்றும் ஆகவில்லை. சூசன் போல்கர்தான் அவசரக் குடுக்கை!

“இந்த நகர்த்தலை ஆடியதும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். அப்புறம்தான் நான் செய்தது blunder அல்ல என்று உரைத்தது”, என்று press conference-ல் கூறியிருக்கிறார் ஆனந்த்

டொபலோவுக்கு தன் தவறு உடனே புரிந்திருக்க வேண்டும். இருப்பினும் தொடர்ந்து ஆடினார். ஒரு கட்டத்தில் தன் ராணியை ஆனந்தின் யானை மற்றும் பிஷப்புக்காக தியாகம் செய்தார்.

ஆனந்த் நிச்சயம் வெற்றி பெறப் போகிறோம் என்று உணர்ந்ததும், பொறுமையாக ஆட ஆரம்பித்தார். எண்ணற்ற வழிகளில் வெற்றியைப் பெறலாம் என்ற நிலையில்,உள்ளதில் பாதுகாப்பான வழியிலேயே ஆட்டத்தைத் தொடர்ந்தார். டொபலோவின் காய்களை வீழ்த்தாமல், zugzwang சூழல்களை உருவாக்கினார். (zugzwang என்பது நம் கையாலேயே நம் கண்ணைக் குத்திக் கொள்ளும் நிலை. எதை நகர்த்தினாலும் நிலைமை மோசமாகிவிடும்.)

ஒரு ராணியே பாடாய் அடுத்தும் நிலையில், இன்னொரு ராணியையும் ஆனந்த் passed pawn மூலம் பெற்றுவிடுவார் என்று உணர்ந்த போது, டொபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

பன்னிரெண்டு ஆட்டங்களில் முதன் முறையாய் கருப்புக்கு வெற்றி.

டொபலோவ் தோற்றாலும் நிச்சயம் பல இதயங்களை வென்றிருப்பார்.

போட்டியின் பல நேரங்களில் அவர் கையே ஓங்கியிருந்தது. இறுதியில் ஆனந்த் வென்றாலும், இருவரும் கடைசி நொடி வரை போராடினர்.

Kasparov-Karpov-க்குப் பின், மயிரிழையில் சாம்பியன் முடிவானது இந்தப் போட்டியில்தான். (கிராம்னிக்-டொபலோவ் ஆட்டங்கள் ராபிட் வரை சென்ற போதும், அங்கு ஏற்பட்ட சர்ச்சைகள் ஆட்ட முடிவை வெகுவாக பாதித்தன.)

Kasparov era-க்கும் carlsen era-க்கும் இடைப்பட்ட குறுகிய காலத்தை ஆனந்த் ஆக்கிரமித்தார் என்று நாளைய வரலாறு கூறுவதை ஆனந்த் இந்த வெற்றியின் மூலம் தவிர்த்துள்ளார்.

Post Kasparov era-வில் சிறந்த ஆட்டக்காரர்களான கிராம்னிக் மற்றும் டொபலோவை வீழ்த்தியதன் மூலம், ஆனந்த் தன் புகழை நிலைக்கச் செய்துள்ளார்..

இந்தப் போட்டியில் ஆனந்த் தோற்றிருந்தால், இன்னும் சில வருடங்கள் free-flowing chess விளையாடியிருப்பார். இப்போது, அடுத்த challenger-க்காகத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

Preview மட்டும் எழுதி கடைசியில் ஒரு round up எழுதலாம் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். இ.வ ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தில் ஏழு கட்டுரைகள்! இருபது நாட்களுக்குள்! என் போன்ற சோம்பேறியை இவ்வளவு எழுத வைத்ததற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்சத்தை அடைவது கடினம். அதைவிடக் கடினம் உச்சத்தில் நீடிப்பது.

அதைச் சாதித்துக் காட்டிய ஆனந்துக்கு hats off!


லலிதா ராம்
பெங்களூர் (1.15 AM)

பி.கு: 12-வது ஆட்டத்தில் டிரா செய்தால், ஆனந்தை ராபிட் ஆட்டங்களில் சந்திக்க வேண்டுமே என்று டொபலோவ் பயப்படவில்லையாம். 13-ம் தேதி ராபிட் ஆட்டங்கள் ஆட நேரிடுமே என்று பயந்தாராம். 2006-ல் கிராம்னிக்குடனும் 13-ம் தேதி விளையாடிதான் டொபலோவ் தோற்றாராம். அதனால்தான் ஆட்டத்தை ராபிட் ஆட்டங்களுக்கு செல்லவிடாமல் தடுக்க முயன்றாராம். பாவம் டொபலோவ்! சென்டிமெண்டால் வடை போச்சு!

Anand's interview after victory: http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1226927
தொடர்ந்து லலிதா ராம் இட்லிவடையில் எழுதுவார் என்று நம்புகிறேன் :-)


Read More...

Monday, May 10, 2010

மண்டேனா ஒன்று - 10/5/2010

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு வரலாற்றில் முதன் முறையாக இவ்வருடம் காஷ்மீரத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவிலேயே முதலாவதாகத் தேறியுள்ளார். ஷா ஃபைசல் என்ற இவர் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஒரு டாக்டர். பள்ளி ஆசிரியரான இவருடைய தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது தாயார் முபீனாவுடன் வசித்து வருகிறார். கடந்த வியாழனன்று அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இவர் இந்தியாவிலேயே முதலாவதாகத் தேறியுள்ளார். காஷ்மீரிலிருந்து ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதலாவதாக வருவது இதுவே முதன்முறை.


”என்னுடைய இம்மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை”, என்று கூறும் ஃபைசல் கடந்த ஆண்டுதான் எம்பிபிஎஸ் தேறியுள்ளார். தவிர, இதுதான் இவருடைய முதல் சிவில் சர்வீஸ் தேர்வு முயற்சி. “என்னுடைய இச்சாதனை எங்கள் காஷ்மீர் சமூகத்தைப் பற்றிய ஒருவிதமான மாறாத எண்ணத்தை மாற்ற உதவும்” என ஃபைசல் தெரிவிக்கிறார். இவருடைய இவ்வெற்றி காஷ்மீரிலுள்ள மற்றவர்களுக்க்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர், காஷ்மீரிலுள்ள ஒரு தினசரிப் பத்திரிக்கையில் கட்டுரையாளர், மருத்துவர் என பன்முகத் தன்மை கொண்ட ஃபைசல், மிகப்பெரிதாக ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் என்று அவருடைய தாயார் முபீனா கூறுகிறார்.

”இது மிகவும் மரியாதைக்குரிய தருணம்” என்று கூறும் கண்ணீர் மல்கக் கூறும் முபீனாவும் ஒரு ஆசிரியை. இம்மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள தனது கணவர் குலாம் முகமது ஷா இல்லையே என்று துக்கம் மேலிடக் கூறுகிறார். அவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் கொல்லப்ப்பட்டார்.

தனது தந்தை இத்தருணத்தில் இல்லையே என்று ஃபைசலும் வருத்தப்படுகிறார்.

ஃபைசலின் குடும்பத்தில் அவரது தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இரண்டாவது நபர். முதலில் ஃபைசலின் மாமாவும், முபீனாவின் சகோதரருமான இர்ஷாத் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார். இப்போது ஃபைசலின் ஒரே எண்ணம், காஷ்மீர மக்களுக்கும், மத்திய அரசிற்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டுமென்பதே.

கடந்த 2009 இல் சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய 875 பேர்களில், 680 ஆண்களும், 195 பெண்களும் அடங்குவர். தில்லி ஐஐடியிலிருந்து பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிரகாஷ் ராஜ்ப்ரோஹித் என்பவர் இரண்டாவதாகத் தேறியுள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலையைச் சேர்ந்த இவா சஹாய் என்ற பெண் மூன்றாவதாவும், பெண்களில் முதலாவதாகவும் தேறியுள்ளார்.பாகிஸ்தானின் ஃபைஸல், தீவிரவாதியாகப் பயிற்சி பெற்று அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்க முயல்கிறான்; இந்தியாவின் ஃபைஸல் தீவிரவாதத்திற்கு தனது தந்தையையும், மாமனையும் பலியாகக் கொடுத்து விட்டு, தனது கடின முயற்சியால் சிவில் சர்வீஸ் தேர்வில் முதன்மை பெறுகிறான். இதுதான் இரு தேசங்களுக்கிடையேயுள்ள வித்யாசம்.

- யதிராஜ்

Read More...

Sunday, May 09, 2010

ஆனந்த் - டொபலோவ் Game 9 & 10

கடைசியாக நடந்த இரண்டு ஆட்டங்களுக்கு முன், யாரேனும் இரண்டும் டிராவில்தான் முடியும் என்று சொல்லியிருப்பின், அந்த முடிவு ஆனந்துக்கு சாதகமான ஒன்று என்றே எண்ணியிருப்பேன். எட்டாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு ஏற்பட்ட சறுக்கலுக்குப் பின் டொபலோவின் பக்கம் இருந்த momentum இரு டிரா ஆட்டங்கள் மூலம் குறைந்திருக்கும் என்றும் கூறியிருப்பேன்.

இரு ஆட்டங்களைப் பார்த்த பின், இரு ஆட்டங்களும் சமநிலையின் முடிந்த போதும், முடிவு ஆனந்துக்கு சாதகமாக அமையவில்லை என்ற எண்ணமே எழுகிறது. அதற்கு முக்கிய காரணம், நான் bias இல்லாமல் இந்தக் கட்டுரைகளை எழுதவில்லை. 100% ஆனந்த் ரசிகனின் பார்வையிலேயே எழுதுகிறேன்.

ஒன்பதாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு வெள்ளை. நான்கு முறை Catalan Opening-ஐ ஆடிய ஆனந்த், ஒரு வழியாய் அதைத் தவிர்த்து, Nimzo Indian-ல் ஆட்டத்தை தொடங்கினார். ஆட்டம் Middle Game-ஐ அடைந்த போது, ஆனந்த் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று ஆடுவதை விட, நிச்சயம் தோற்றுவிடாமல் இருப்பதை உறுதிசெய்து கொண்டுவிட்டு, அதன் பின், ஜெயிப்பதைப் பற்றி யோசிக்கலாம் என்று ஆடுவது போலவே தோன்றியது. முதல் 19 நகர்த்தல்களுக்குப் பின், இருவரின் காய்களும் நல்ல நிலைகளை அடைந்திருந்தன. இருபதாவது நகர்த்தலில் டொபலோவ், ஆனந்தின் d-pawn-ஐ வெட்டியதன் மூலம், இரு யானைகளுக்காக ஆனந்த் தனது ராணியை தியாகம் செய்வதற்கான வாய்ப்பையளித்தார்.

அதன் பின், ஆனந்தின் வளர்ந்த நிலைக் காய்கள் கொஞ்சம் கொஞ்சமாய் முக்கியமான கட்டங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. 39-ஆவது நகர்த்தலில் ஆனந்தின் யானை டொபலோவின் 7-th rank-ஐ ஆக்கிரமித்து, கருப்பு ராஜாவை 8-th rank-ஐ விட்டு வெளி வர முடியாதபடிச் செய்திருந்தது. (ஆட்டம் தொடங்கும் போது, கருப்பு pawn-கள் அணி வகுத்து நிற்கும் கட்டங்கள் 7-th rank. அதற்கு பின் இருக்கும் கட்டங்கள் 8th rank.)

7th rank யானையை அங்கேயே நிலைக்க வைத்து, டொபலோவின் ராஜாவை 8-th rank-ல் எங்கு வைத்தாலும் check என்ற சூழலை ஏற்படுத்தினால் ஆட்டம் க்ளோஸ். எட்டாவது ராங்கிலும் ராஜா காலி, ஏழாவது ராங்குக்கும் வர முடியாது. Check and Mate. சாதாரண லாஜிக்தானே?

இதெல்லாம் வெளியிலிருந்து பார்க்கும் நமக்குச் சுலபமாகப் புரியும். உலக சாம்பியன் பட்டம் ஏற்படுத்தும் அழுத்தத்துக்கு இடையில், time control-ஐ அடைய இன்னும் ஒரு நகர்த்தல் வைத்தாக வேண்டும் என்ற நிலையில், சாதாரணமாய் புரியும் விஷயங்களில் கூட மிகச் சிறந்த ஆட்டக்காரருக்கும் தவறு ஏற்படலாம்.
ஏற்பட்டது!

ஆனந்த் தனது ஏழாவது ராங்க் யானையை எட்டாவது ராங்கில் வைத்து செக் வைத்தார். இதனால் கருப்பு ராஜா, சுலபமாக ஏழாவது ராங்குக்குத் தப்பித்து, அதன் பின், மெது மெதுவாய் queen side-ல் தப்பிக்க வாய்ப்பு உண்டானது.

டொபலோவ் ஆட்டத்தை சமன் செய்துவிடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டான சமயத்தில், அவரும் அவர் பங்கிற்கு 46-ஆவது நகர்த்தலில் ஆனந்தின் h-pawn-ஐ வெட்டி ஆனந்துக்கு இன்னொரு வாய்ப்பை அளித்தார். ஆனந்தின் கை ஓங்கியே இருந்த போதும், அவரது நகர்த்தல்களுக்கு நிறையவே நேரம் எடுத்துக் கொண்டார். ஆட்டம் ஐந்து மணி நேரத்துக்கு மேலும் தொடர்ந்த போது, ஆனந்தின் நகர்த்தல்களில் துல்லியம் சற்றே குறைய ஆரம்பித்தது. அதனால், ஒரு கட்டத்தில் தனது குதிரையை பலி கொடுத்து டொபலோவின் “ராணியான pawn-ஐ” வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

74-ஆவது நகர்த்தலுக்குப் பின் ஆனந்தின் யானைகள் a3, a4 கட்டங்களில் இருக்க, வெள்ளை ராஜாவோ G-file-ல் இருந்தார். டொபலோவ் தனது ராணியின் மூலம் எத்தனை நகர்த்தல்களுக்கு வேண்டுமானாலும் செக் வைத்துக் கொண்டே போகலாம். இதற்கு Perpetual Check என்று பெயர். முடியவே முடியாத செக் வரிசையை இறுதியில் டிராவாகத்தான் கொள்ள முடியும்.

டொபலோவின் சாமர்த்தியத்தை விட, ஆனந்தின் கவனக் குறைவே இந்த முடிவுக்குக் காரணம். வெற்றி கை நழுவிப் போனதில் ஆனந்த் பெரிய ஏமாற்றத்தை அடைந்திருப்பார். என் போன்ற ரசிகனுக்கே அடுத்த நாள் முழுவதும் இந்த முடிவு நெருடலாகவே இருந்த நிலையில், ஆனந்த் எப்படி கருப்புக் காய்களுடன் ஆடுவார், என்ற கவலையும் மேலிட்டது.

கடைசி மூன்று போட்டியின் டொபலோவுக்கு இரண்டு முறை வெள்ளை. இரண்டு முறை டிரா செய்ய உதவிய Slav defense-ம் எட்டாவது ஆட்டத்தில் கைவிட்ட நிலையில், ஆனந்த் மீண்டும் ஒரு முறை அதே ஓபனிங்கை ஆடுவாரா? அல்லது கைவிட்ட ஓபனிங்கை நிராகரிப்பாரா?

ஆனந்த் Slav defense-ல் ஆட்டத்தைத் தொடங்கவில்லை என்ற போதும், அவர் முதல் (தோல்வியை அடைந்த) ஆட்டத்தில் ஆடிய Grunfeld-யே மீண்டும் உபயோகித்தார். முதல் ஆட்டத்தில் தோல்வியுற்றாலும், அதற்கு ஓபனிங் காரணம் இல்லை. ஆனந்த் நகர்த்தல்களை மறந்ததே காரணம். அதனால், மீண்டும் ஒரு முறை Grunfeld-ஐ அரங்கேற்றியதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

பத்தாவது ஆட்டத்தில் டொபலோவ் தன் வழக்கத்துக்கு மாறாக ஆடினார் (Something really really fishy!!!!). டொபலோவ் ஆனந்த் தவறிழைப்பார் என்று எண்ணினார் போலும். தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை அரவே தவிர்த்தார். ஆனந்தே முதலில் novelty-ஐ விளையாடினார். டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் ஆடும் ஆட்டங்களில் ஆனந்தே நகர்த்தல்களுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வார். இந்த ஆட்டத்தின் டொபலோவே நேரத்தில் பின் தங்கினார். நிறைய exchange-களை டொபலோவ் சுலபமாகவே அனுமதித்தார். ஆட்டம் முப்பது நகர்த்தல்களைத் தாண்டுவதற்கு முன், இருவரும் யானைகளையும், ராணியையும் இழந்திருந்தனர்.

ஆட்டம் end game-ஐ அடைந்த போது, டொபலோவிடம் இரு பிஷப்களும் இருந்தன. அவரது ராஜாவும் நடு நாயகமாய் அவரது நன்கு முன்னேறிய d-pawn-ஐ காத்த படி வீற்றிருந்தது. ஆனந்திடம் ஒரு பிஷப்பும் ஒரு குதிரையும் இருந்தன. ஆனந்தின் நிலை மோசம் என்று சொல்ல முடியாவிடினும், டொபலோவ் தோற்க வாய்ப்பேயில்லை. ஆனந்த் தவறாக விளையாடினால் தோல்விதான்.

இது போன்ற நிலைகளில் டொபலோவ் திளைப்பார். அனால் இந்த ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறாய் ஆனந்தின் தவறுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். ஆனந்தின் பெரிய பலம், அவரது வேகம். இந்தத் தொடரில் பல ஆட்டங்களில் அந்த வேகம் காணக் கிடைக்கவில்லை. இந்த ஆட்டத்திலோ மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தி, டொபலோவை சங்கடப் படுத்தினார். ஒரு கட்டத்தில், டொபலோவ் தவறான நகர்த்தலை வைத்து ஆனந்தின் அடங்கியிருந்த குதிரையை விடுவித்தார். இந்த நகர்த்தலே அடுத்த சில நகர்த்தல்களில் Bishop Exchange நிகழ வழி வகுத்தது.

அறுபது நகர்த்தல்களுக்குப் பின், நிச்சயம் டிராதான் என்ற நிலை ஏற்பட்ட போது, ஆனந்த் draw offer செய்தார். டொபலோவோ draw offer கொடுக்கவும் மாட்டேன். ஏற்கவும் மாட்டேன் என்று கூறியிருந்தார். பல ஆட்டங்களில், டிரா என்று தெரிந்த பின்னும் offer செய்யாமல், repetition மூலம் டிரா ஆகும் வரை ஆடினார். இந்த ஆட்டத்தில் டிராவை ஆனந்த் முன் மொழிந்ததும், டொபலோவ் முரண்டு பிடிக்காமல், சமர்த்தாக ஏற்றுக் கொண்டார்.

போட்டி முடிய இன்னும் இரண்டு ஆட்டங்களே உள்ளன. Rest day-க்கு அடுத்த நாள் ஆனந்துக்கு வெள்ளை என்பது ஒரு நல்ல விஷயம் என்றாலும், ஆனந்த் safe-ஆக ஆடுவார் என்றே படுகிறது. ”கடைசி ஆட்டத்தில் டொபலோவின் டீம் முற்றிலும் புதிய சூழல்களுக்குள் ஆனந்தை இழுத்தால் என்ன ஆகும்? கடைசி ஆட்டத்துக்காக பிரம்மாஸ்திரத்தைப் பதுக்க வேண்டித்தான், பத்தாவது ஆட்டத்தில் பதுங்கினாரா டொபலோவ்?”, என்றெல்லாம் இப்போதே வயிற்றில் புளியைக் கரைக்கும் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

பன்னிரெண்டு ஆட்டங்களுக்குப் பிறகும் புள்ளிகள் சமநிலையில் இருந்தால், நான்கு Rapid ஆட்டங்கள் நடை பெறும். பொதுவாகப் பார்த்தால், அதில் ஆனந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஆனந்த்தான் best ever rapid chess player என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், இந்தத் தொடரில் ஆனந்தின் துல்லியமின்மையும், வேகமின்மையும் முன் கூறிய கூற்றுக்கு முரணாக இருக்கின்றன. rapid ஆட்டங்களுக்குப் பிறகும் சமநிலை என்றால் இரண்டு Blitz ஆட்டங்கள். அதிலும் முடிவு தெரியவில்லை எனில் ஒரு Armageddon ஆட்டம். இந்த ஆட்டத்தின் விதிமுறைகளை விருப்பம் இருப்பவர் தேடிப் பார்த்துக் கொள்ளலாம். சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில், கிட்டத்தட்ட டாஸ் போட்டு ஜெயிப்பவருக்குப் பட்டம் கொடுப்பது போன்ற முறைதான் இந்த ஆட்டம்.

போட்டியின் முடிவில் ஆனந்த் பட்டத்தை இழந்தால், ஒன்பதாவது ஆட்டத்தில் அவர் கோட்டை விட்டவை அவரை வாழ்நாள் முழுவதும் வாட்டும். அப்படி நிகழாமலிருக்க, ஒரு வலுவான திட்டத்தை ஆனந்தின் டீம் உருவாக்கியிருக்கும் என்று நம்புவோம்.


லலிதா ராம்


Read More...

Saturday, May 08, 2010

பவர் புரோக்கர் நீரா ராடியா - ஜூவி ரிப்போர்ட்

''முதல்வரின் டெல்லி விசிட் ரொம்ப சூப்பரா போச்சு. தலைவர் சொன்னது எல்லாத்தையும் சோனியாம்மா ஏத்துக்கிட்டாங்க. இனி கனிதான் டெல்லிக்கு ராணி...'' - இப்படியெல்லாம் உற்சாக பலத்துடன் இருந்த தி.மு.க. மேலிட தலைவர்கள், கடந்த புதன் இரவு வெளியாகத் தொடங்கிய தொலைபேசி டேப் செய்திகளைக் கண்டு ஆடித்தான் போனார்கள்.. நீரா ராடியா என்கிற பலம்

வாய்ந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி அடுத்தடுத்து சில பிரபலங்களுடன் பேசிய தொலைபேசிப் பேச்சின் சில பகுதிகள் என்று சொல்லி, அந்த டேப் விவரங்கள் செய்தியாகப் படிக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி முடிந்த கையோடு... தி.மு.க. தரப்பிலிருந்து யாருக்கு என்ன பதவி என்று மத்திய அரசோடு பேரங்கள் தொடங்கிய சமயத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்கள் அவை.

மறுபடி தொலைதொடர்புத் துறை கிடைக்குமா?' என்று ஆ.ராசாவுடனும்... 'அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய மூன்று குடும்பங்களுக்கும் மந்திரி பதவி வாங்கித் தருவதில் கருணாநிதி படும் சிரமங்கள்' குறித்து கனிமொழியுடனும் நீரா ராடியா பேசியதாக விவரங்கள் அந்த டேப் தொகுப்பில் இருந்தன.

ஆ.ராசாவுக்கு தொலை தொடர்புத் துறை கிடைத்தால் தயாநிதி மாறன் எப்படி எடுத்துக் கொள்வார் என்பது பற்றியும், டி.ஆர்.பாலுவின் மன ஓட்டங்கள் பற்றியும் இந்த நீரா ராடியாவுடன் ஆ.ராசாவும், கனிமொழியும் எதற்காக இத்தனை நம்பிக்கை வைத்து பேசவேண்டும் என்ற கேள்வியும் குழப்பமும் இயல்பாகவே இதனால் எழத்தான் செய்தது. மத்திய அமைச்சரவையின் முக்கிய இலாகாக்களை ஒதுக்கும் விஷயங்கள் குறித்து அப்படியரு அதிகாரத் தொனி மிக்க வார்த்தைகளில் அந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி பேசுவதாகச் சொன்னது டேப் தொகுப்பு!

விவகாரம் அதுமட்டுமல்ல.... தொலைதொடர்புத் துறையின் சார்பாக அதற்கு முன்பும் அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் இந்த நீரா ராடியாவும் பல மணி நேரங்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களின் தொகுப்பு, வருமான வரித்துறைக்கென்றே உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவின் வசம் இருப்பதாகவும் அடுத்தடுத்து வெளியாகத் தொடங்கிவிட்டன தகவல்கள். வருமான வரித் துறை டேப் செய்திருந்த இந்த உரையாடல்களை, சி.பி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அளித்து உதவும்படி டெபுடி ஐ.ஜி-யான வினித் அகர்வால் வைத்த வேண்டுகோள் கடிதம் என்று ஒரு நகலும்.... 'ஆமாம்... நிறைய விவகாரங்களை இது தொடர்பாக டேப் செய்திருக்கிறோம். உரியமுறையில் கேட்டு எங்களிடம் பெற்றுக் கொள்ளுங்கள். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக உங்கள் வசம் ஏதேனும் தகவல் வைத்திருந்தால், அதை எங்கள் விசாரணைக்கு நீங்களும் கொடுத்து உதவுங்கள்' என்று வருமான வரித்துறையின் இணை இயக்குநர் ஆஷிஷ் அப்ரால் என்பவர் பதில் எழுதியாக ஒரு நகலும் இப்போது டெல்லியில் கசிந்து... பெரும் புயலைக் கிளப்பத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் 2009 வருடம் நவம்பர் மாதத்தில் நடந்ததாக அந்த நகல்களில் உள்ள தேதி குறிப்பிடுகிறது.

அதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து புயலடிக்கத் தொடங்கிய சமயத்திலிருந்தே, அது தொடர்பான ரகசிய விசாரணைகளில் வருமான வரித் துறைக்கென்று உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவு இறங்கிவிட்டதாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வருமான வரி அதிகாரி அளித்த பதில் கடிதத்திலேயே இந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி நீரா நாடியா பற்றி அதிர்ச்சியும் பிரமிப்பும் கலந்த தகவல்கள் அடுக்கப்பட்டுள்ளன.

வைஷ்ணவி கார்ப்பரேட் கன்ஸல்டன்ட், நோயஸிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்வீஸ், விட்காம் மற்றும் நியூகாம் கன்சல்டன்ஸி என்று பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அச்சாணியாக இயங்கும் இந்த பெண்மணியின் தொலைபேசி உரையாடல்களை, மத்திய உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றே டேப் செய்து வந்ததாகக் கூறுகிறது வருமானவரி கடித நகல். விமானப் போக்குவரத்து மற்றும் பல துறைகளில் உள்ள பிரமாண்ட நிறுவனங்களுக்கு 'ஆலோசகராக' செயல்படும் நீரா ராடியாவின் நிறுவனங்கள், தொலை தொடர்புத் துறை தொடர்பான நிறுவனங்களுடன் இறுக்கமான நட்பில் இருப்பதையும் கடித நகல் கூறுகிறது. 'தொலைதொடர்புத் துறை தொடர்பான லைசென்ஸ்கள் பெற்றுக் கொடுப்பதில் இந்தப் பெண்மணிக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். கூடவே, முக்கிய மீடியாக்களையும் தன் கட்டுப்பாட்டில் இவர் வைத்திருக்கிறார். தொலைபேசி லைசென்ஸ் தொடர்பான சில நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவுக்குள் படிப்படியாகக் கொண்டு வரும்படி இவர் அறிவுறுத்தும் சில தொலைபேசி உரையாடல்களும் எங்களிடம் உள்ளது. இல்லையென்றால், லைசென்ஸ் பெற்றதன் மூலம் கொள்ளை லாபம் பெற்றது தெரிந்துவிடும் என்றும் இவர் அறிவுரை கூறுகிறார்' என்று சொல்லும் அந்த வருமான வரி கடிதம்...

'தொலைதொடர்பு அமைச்சருடன் நேரடியாகவே இவர் பேசிய உரையாடல்களை நாங்கள் வைத்துள்ளோம். டெலிகாம் லைசென்ஸை குறிப்பிட்ட நிறுவனங்களுக்குப் பெற்றுத் தருவதில் தனக்குள்ள முக்கியப் பங்கு குறித்து இந்த நீரா ராடியா பெருமையோடு மத்திய அமைச்சரிடம் பகிர்ந்துகொள்கிறார்' என்று கூறுகிறது. இது விவகாரமாக நீரா ராடியா தொடர்புகொண்டிருந்த மற்ற முக்கிய நபர் பற்றிய தகவல்களும் தங்களிடம் உள்ளதாகக் கூறுகிறது அந்தக் கடித நகல்.

மத்திய அமைச்சர் பதவியில் ஆ.ராசாவை தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்காக முதல்வர் கருணாநிதி காய்களை நகர்த்தி வரும் நிலையில், அடுத்தடுத்து ராசாவின் பதவிக்கு வெடி வைக்கும் விதமாகவே கடித நகல், டேப் விவகாரம் என்று பரவுவது எப்படி என்பதுதான் இப்போது டெல்லியில் மிக சுவாரஸ்யமான விவாதம். அந்தக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு சிலரை நோக்கி கைகள் நீள்வதையும் காண முடிகிறது.

''தொலைதொடர்பு தொடர்பான ரகசிய புலனாய்வு ஆவணங்கள் பகிரங்கமாக வெளியானது மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்!'' என்று ஒரு தரப்பினர் சொல்லிக் கொண்டிருக்க... ''தொடர்ந்து பிரஷர் கொடுத்து வரும் தி.மு.க-வை பின்வாங்கச் செய்வதற்கு இந்த விவகாரமெல்லாம் உதவும். அந்த வகையில் காங்கிரஸ் அரசுக்கு இதில் நிம்மதிதான்!'' என்று சொல்லி கண் சிமிட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

நமக்கும் அந்த ஆவண நகல்களில் சில கிடைத்தன. 'டாப் சீக்ரெட்', 'கான்ஃபிடன்ஷியல்' என குறியிடப்பட்ட அவையெல்லாம் யாரோ ஒரு உயர் அதிகாரிக்கு விசாரணை டீம் கொடுத்த தகவல் சுருக்கம் போலவே இருக்கிறது. அவை ஒரிஜினலான ஆவணங்கள்தானா... அதை வைத்து சி.பி.ஐ. தனது விசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்லும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க... 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தோடு இன்னும் ஏராளமான பல பகீர் விவரங்களையும் அதில் காண முடிகிறது.

நீரா ராடியாவை மையம் கொண்டு மொரீஷியஸ், ஆப்பிரிக்கா, கினியா என்று எல்லை தாண்டி நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் குறித்து ஒட்டுக் கேட்டதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன.

''இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற, மரியாதைக்குரிய ஒரு வடநாட்டுத் தொழிலதிபர், எக்காரணம் கொண்டும் தொலைதொடர்புத் துறைக்கு தயாநிதி மாறன் மீண்டும் அமைச்சராகிவிடக் கூடாது என்று நீரா ராடியாவிடம் கேட்டுக் கொள்ளும் உரையாடல் கிடைத்துள்ளது. அதையும் மீறி தயாநிதி மாறன் வந்துவிட்டால், தொலைதொடர்புத் துறையில் தான் செய்து வரும் பிசினஸ்களிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் தொழிலதிபர், நீரா ராடியாவிடம் கூறுகிறார்.

ஆ.ராசாவுக்கு குறிப்பிட்ட பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பெருந்தலைகளை பிரெயின்வாஷ் செய்யும் வேலையில் இந்தியாவின் பிரபல சேனல் முகங்கள் இருவர் செயல்பட்டனர். நீரா ராடியா மற்றும் அரசியல் பெண் வி.ஐ.பி. ஒருவருக்காகவே இவர்கள் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை நடத்தினர். தமிழகத்தைச் சேர்ந்த பவர்ஃபுல் பெண்மணி ஒருவருக்கு நீரா ராடியா மிக நெருக்கமானவர் போலவே போன் பேச்சுகளில் தொனிக்கிறது!'' என்று கூறும் இந்த ஆவணங்கள், 'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் சர்ச்சைப் புயலில் சிக்கிய ஸ்வான் டெலிகாமையும் இதில் தொடர்புபடுத்துகின்றன.

''ஜார்கண்ட் மாநிலத்தில் டாடாவின் சுரங்க உரிமத்தை நீட்டிக்க நீரா ராடியா அப்போதைய ஜார்கண்ட் முதல்வர் மதுகோடாவுடன் பேசிய உரையாடலில் மதுகோடா 180 கோடி ரூபாய் கேட்டது தெரிய வந்துள்ளது. அதே உரிமத்தை ஜார்கண்ட் ஆளுநரிடம் நீட்டித்து வாங்கியுள்ளார் இந்த 'சேவைக்காக' ஒரு கோடி ரூபாய் நீராவுக்கு வழங்கப்பட்டுள்ளது!'' என்று வேறு மாநில விவகாரங்களையும் இந்த 'டாப் சீக்ரெட்' ஆவண நகல்களில் காண முடிகிறது. மதுகோடா தொடர்பான ரெய்டுகளுக்கு இந்த 'டாப் சீக்ரெட்' ஆவணமும் ஒரு காரணமா என்பது தெரியவில்லை!

தொலைதொடர்புத் துறையின் 'கிங்'களில் ஒருவரான சுனில் மிட்டல்கூட நீராவின் 'சேவை'யை நாடினார் என்று தொலைபேசி மூலம் ஒட்டுக் கேட்டுச் சொல்கிறது இந்த ஆவணம். இந்த ரேஞ்சில் படிக்கப் படிக்க தலை சுற்ற செய்யும் தகவல்கள் கொண்ட ஆவணங்களில் தொழில் அதிபர்களுக்கும், மிகப் பெரிய அதிகாரிகளும், அரசியலின் உச்ச பதவிகளில் இருப்பவர்களுக்கும் இடையே எத்தனை 'சாலிட்'டான பேரங்களும், புரிந்துகொள்ளல்களும் இருக்க முடியும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மூன்று புள்ளிகளையும் இணைத்து வைக்கும் வேலையில் நீரா ராடியா போன்ற இன்னும் எத்தனை மெகா 'லாபியிஸ்ட்'கள் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்று யோசிக்கும்போது பயங்கரமாகத் தலை சுற்றுகிறது.

''குறிப்பிட்ட அந்த டேப் உரையாடல்களில் இருப்பது மத்திய அமைச்சர் ஆ.ராசா அல்லது ராஜ்யசபா எம்.பி-யான கனிமொழி ஆகியோரின் குரல்தானா என்பதற்கு என்ன ஆதாரம்? தி.மு.க-வை ஒழித்துக் கட்டுவதற்கு டெல்லியில் நடக்கும் பயங்கரமான சதிவலையின் அங்கம்தான் இதெல்லாம்!'' என்று மறுக்கும் தி.மு.க. தலைவர்கள்,

''அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல்... தலைவரின் குடும்பத்துக்குள் பதவிப் போட்டி ஏற்பட்டதாகச் சொல்லி, அதை வைத்து ஒருத்தர் இன்னொருத்தரைப் பற்றி பேசிக்கொண்டதாக விவகாரத்தை நாடறியப் பரப்பினால், அதை வைத்து குடும்பத்துக்குள் மறுபடி குழப்பம் வரும் என்பதும் எங்கள் எதிரிகளின் திட்டம்!'' என்று கூறுகிறார்கள் இந்த தி.மு.க. தலைகள்.( நன்றி: ஜூவி )

Read More...