ராஜிவ் காந்தி எத்தனை முறைதான் கொல்லப்படுவார் என்று நீங்கள் கேட்கலாம். நேற்று ரகோத்தமன் சொன்ன சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவே இதனை எழுதுகிறேன். இவையெல்லாம் அவர் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தில் இல்லை என்பதால் இதனை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.
‘ராஜிவ் கொலை வழக்கு’ புத்தகத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக, கிழக்கு பதிப்பகத்தின் பணியாளர்கள் அனைவருக்கும் ரகோத்தமன் ஒரு விருந்து கொடுத்தார். அதில் அவராகச் சொன்னவையும், நாங்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலாகச் சொன்னவையும்.
* சிவராசன் கைதாவதற்கு முன்பாக சிவராசனைப் போன்ற ஒருவரை சைதாப்பாட்டையில் கைது செய்தனர் போலிஸார். அவர் அப்போதுதான் திருமணம் ஆனவர், தேன் நிலவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவர். அவரைப் பார்த்ததுமே ரகோத்தமன் சொல்லிவிட்டார், அவர் சிவராசன் இல்லை என. அவரும் ரகோதமனிடம், தான் சிவராசன் அல்ல என்று ஒரு கடிதம் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்! அதற்கு ரகோத்தமன், ‘உங்கள் தேன் நிலவை தள்ளிப் போடுவது நல்லது. அல்லது நீங்கள் எங்கே போனாலும் உங்களை மக்களே அடிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. நாங்கள் தரும் கடித்தத்தையெல்லாம் ஒருவர் பார்க்கக்கூட மாட்டார், அதற்கு முன்பே அடி விழுந்துவிடும்’ என்றாராம். சிவராசன் இறந்த பின்பு, அந்த மனிதர் மீண்டும் ரகோத்தமனைச் சந்தித்து, ‘இப்ப நான் ஹனி மூன் போலாமா’ எனக் கேட்டாராம்.
* சிவராசன் தேடுதல் வேட்டை உச்சத்தில் இருந்தபோது, யாருக்காவது யாரையாவது பிடிக்கவில்லை என்றால், ‘சார், இந்த மாதிரி இடத்துல சிவராசனும் கூட்டாளிகளும் தங்கியிருக்கிற மாதிரி இருக்கு’ என்று தகவல் கொடுத்துவிடுவார்களாம்.
* ஒரு பெண்மணி ஜோதிடம் மூலம் சிவராசனைப் பிடிக்க முயன்றிருக்கிறார். ஜோதிடத்தில் அவர் எங்கோ கடலோரத்தில் மறைந்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அந்தப் பெண்மணி உடனே, ‘சிவராசனை பெசண்ட் நகர் பீச்சில் பார்த்தேன்’ என்று புகார் தந்துவிட்டாராம். போலிஸ் இந்தப் பெண்மணியுடன் இரண்டு நாள்கள் சிவராசனைத் தேடி பெசண்ட் நகர் பீச்சில் சுற்றியிருக்கிறது. (அந்த பீச்சில் சுண்டல் கூட கிடைக்காதே என நினைத்துக்கொண்டேன்!)
* வழக்கு விசாரணையின் போது, நளினி குழந்தையைப் பெற்றெடுத்தார். அன்று நீதிமன்றத்தில் ஆஜரான முருகன் போலிஸிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏதோ ஓரிடத்துக்குப் போக முயன்றிருக்கிறார். அவர் தப்பிக்கப் பார்க்கிறாரோ என்று அலெர்ட் ஆன போலிஸ் அவரை இறுக்கிப் பிடித்திருக்கிறது. ‘இத்தனை நாள் அமைதியாக இருக்கும் முருகன் ஏன் திடீரென்று வயலெண்ட் ஆகவேண்டும்’ என நினைத்த ரகோத்தமன் அதனை முருகனிடமே கேட்டிருக்கிறார். தன் குழந்தையைப் பார்க்கக்கூட அனுமதிக்கமாட்டார்களா எனக் கேட்டிருக்கிறார் முருகன். அதற்குத் தான் ஏற்பாடு செய்வதாகச் சொன்ன ரகோத்தமன், குழந்தையைப் பார்க்க முருகனை அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தையை கையில் வைத்திருந்த பாட்டி, குழந்தையிடம் ரகோத்தமனைச் சுட்டிக்காட்டி, ‘இங்க பாரு மாமா வந்திருக்காங்க’ என்றாராம். ரகோத்தமன் தன் சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாய் எடுத்து குழந்தைக்குக் கொடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த முருகன் கண் கலங்கி ரகோத்தமன் காலிலேயே விழுந்துவிட்டாராம்.
* நளினியின் காதல் ராஜிவ் கொலையில் பிரசித்தம் என்றால், இன்னொரு காதலும் அங்கே பிரசித்தமாம். வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆண்களும் பெண்களும் ஒரே போல் வரிசையில் உட்கார வைப்படுவார்களாம். ஒருவருடன் இன்னொரு பேச அனுமதியில்லை. அப்போது காதல் கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்படும் போல. ஆதிரைக்கு விக்னேஷ்வரனும் கடிதங்கள் பரிமாறிக்கொள்வார்களாம்.
* மல்லிகையில் சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டவர்களுக்கு இரவில் தடபுடலாக விருந்து நடக்குமாம். கிட்டத்தட்ட நூறு பேர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்களாம். எல்லாருக்குமே ராயல் டிரீட்மெண்ட்தானாம். இதிலேயே பலருக்கு உடல் பருத்துவிட்டதாம்.
* சுபா சுந்தரம் கனத்த உடல் உடையவராம். அவரால் கீழே உட்கார முடியாது என்பதால் அவருக்கு ஒரு கட்டிலும் நாற்காலியும் வழங்கப்பட்டிருந்ததாம்.
* ஒரு கான்ஸ்டபிள் ஒருநாள் எதையோ மறைத்து எடுத்து வந்து சுபா சுந்தரத்துக்குக் கொடுத்திருக்கிறார். உஷாரான போலிஸ் அதனைப் பார்த்ததில், அதில் அசைவ உணவு இருந்ததாம். அந்த கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சுபா சுந்தரம் தாந்தான் அதனைக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அசைவம் இல்லாமல் தங்களால் சாப்பிடமுடியாது என்றும் சொன்னாராம். ‘இனிமேல் ஏதேனும் தேவையென்றால் என்னிடமே கேட்கலாம்’ என்று சொன்ன ரகோத்தமன் அன்றே அனைவருக்கும் அசைவ உணவு ஏற்பாடு செய்தாராம். வாரத்தில் ஆறு நாள் அசைவம் உண்டாம்.
* சுபா சுந்தரத்துடன் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஜெயகுமார். அவர் கொடுத்த துப்பின் பேரில் கொடுங்கையூரில் இருந்த அவரது வீட்டிலிருந்து, சிவராசன் புதைத்து வைத்திருந்த பல பொருள்கள் தோண்டி கைப்பற்றப்பட்டன. அதில் ஒன்று, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த தடித்த ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் அகராதி. அதைத் திறந்து பார்த்தால் அதில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். பிஸ்டலை அதில் வைத்துவிட்டு, அகராதியை மூடிவிட்டால் அது பார்க்க புத்தகம் போலவேதான் இருக்குமாம்.
* விசாரணையில் இருந்த அனைவருக்கும் மிகச் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் வழங்கப்பட்டதாம்.
* நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் திடீரென்று எழுந்து நின்று, தான் நீதிபதியின் அருகில் சென்று பேசவேண்டும் என்றாராம். அலெர்ட்டான காவல்துறை கொஞ்சம் யோசிக்க, ரகோத்தமன் அவரை முன்னே வருமாறு அழைத்தாராம். ரகோத்தமன் அருகில் வந்த அவர், தான் நீதிபதியிடம் அருகில் சென்று பேசவேண்டும் என்று மீண்டும் சொன்னாராம். இன்னும் கொஞ்சம் முன்னே செல்ல அனுமதிக்கப்பட்ட அவர், நீதிபதியின் அருகில் சென்று, இரண்டு கைகளையும் தூக்கி, ‘ரொம்ப நன்றிங்க ஐயா’ என்றிருக்கிறார். எல்லாரும் ஒன்றும் புரியாமல் விழிக்க, ‘எனக்கு கால் இல்லை. செயற்கைக் கால் பொருத்துனக்கப்புறம் என்னால நல்லா நடக்கமுடியாது, ஊன்றுகோலே வேண்டாம்’ என்றாராம். அப்போதுதான் ஒட்டுமொத்த நீதிமன்றமே அவர் ஊன்றுகோல் இல்லாமல் நடந்து வந்ததைக் கவனித்ததாம். அனைவரும் டென்ஷனிலிருந்து விடுபட்டு வாய்விட்டுச் சிரித்தார்களாம்.
* வழக்கு விசாரணையின்போது முதல்கட்டத்தில் நீதிபதியாக இருந்தவர் சித்திக். அவரது உதவியாளர் ஒரு பிராமணராம். சித்திக் நல்ல நேரம், ராகு காலம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவராம். அவரது உதவியாளர் சித்திக்குக்காக ஜோதிடம் பார்த்து வந்தாராம். அதன்படி, சித்திக் இந்த வழக்கின் தீர்ப்பை எழுதமாட்டார் என்று சொன்னாராம். அதேபோல சித்திக்குக்கு பதவி உயர்வு கிடைத்து அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகச் சென்றுவிட்டாராம். வேறொரு நீதிபதிதான் ராஜிவ் கொலை வழக்குக்கு தீர்ப்பு எழுதினாராம்!
* போலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்த பல்வேறு குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் ரகோத்தமனிடம் தனக்கு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை என்றாராம். இதுவரை அவர் அப்படி சொன்னதில்லையே என்று ரகோத்தமன் கேட்டதற்கு அவர், ‘இதுவரை காவலில் இருந்த போலிஸ் நல்லா தூங்கிடுவார், நானும் தூங்கிடுவேன். இப்ப இருக்கிறவர் தூங்காம என்னயே கவனிச்சுக்கிட்டு இருக்கார். எனக்கும் தூக்கம் வரமாட்டேன் என்கிறது’ என்றாராம். அன்றே அந்த போலிஸை வெளியில் காவலிருக்கச் சொன்னாராம் ரகோத்தமன். மீண்டும் அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது தூக்கத்தைத் தொடர்ந்தாராம்.
* ராஜிவ் கொலை செய்யப்பட்ட மறுநாள் இரவு சிவராசன் தங்கியிருந்த வீட்டில் பாயாசம் செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பாயாசம் செய்வதற்கு அரிசி வெல்லம் எதுவுமே இல்லை. பக்கத்து வீட்டில் அரிசி வாங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில் டிவியில் ராஜிவ் கொலை பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, இவர்களும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார்கள். இன்னொரு வீட்டில் வெல்லம் வாங்கி பாயாசம் வைத்து உண்டிருக்கிறார்கள்!
இனி நான் கேட்ட சில கேள்விகளுக்கும், அதற்கான பதில்களுக்கும் வருவோம்.
* சென்னை புத்தகக் கண்காட்சியில் ஞாநியைச் சந்தித்தேன். ராஜிவ் கொலை வழக்கு புத்தகம் பற்றி தன்னுடைய கருத்துகளைச் சொன்னார். (அவரது கருத்துகளைப் பற்றி அவர் நிச்சயம் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.) அதில் முக்கியமானது: ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய ஆவணமான போட்டோ, ஹிந்து கையில் கிடைத்த பின்புதான் போலிஸுக்குக் கிடைத்தது. இதைப் பற்றி ரகோத்தமன் எழுதியிருக்கிறார். ஆனால், சிவராசன் விபி சிங் விழா ஒன்றில் செய்த ஆயத்தம் குறித்த வீடியோ எப்படி ரகோத்தமனுக்குக் கிடைத்தது என்பது பற்றி எழுதவில்லை. அதைக் கொடுத்து ஞாநி. அப்போது ஞாநி ஃப்ரண்ட் லைனில் இருந்தார். ஒரு பத்திரிகையின் தவறான செயல்பாட்டைச் சொல்லும்போது, அதே போன்ற இன்னொரு பத்திரிகையின் நேர்மையான செயல்பாட்டைச் சொல்லவேண்டும். இதுதான் ஞாநியின் வாதமாக நான் புரிந்துகொண்டது. இதில் நிச்சயம் உண்மை உள்ளது. ராஜிவ் புத்தகத்தில் நல்லது செய்யும் ஒவ்வொரு போலிஸின் பெயரும் வரவேண்டும் என்று நானும் விரும்பினேன். ரகோத்தமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அவர், ‘ஆமா, ஞாநி (அதாவது ஞாநி என்.ராமிடம் கொடுத்து, என். ராம் ரகோத்தமனிடம்)கொடுத்தார். யார் மூலமாகக் கொடுத்தால் என்ன, அதைப் பற்றி நிச்சயம் அடுத்த பதிப்பில் சேர்க்கவேண்டும். ஜெனியுன் கொஸ்டின்’ என்றார்.
* அடுத்து நான் கேட்டது - ரகோத்தமன் காங்கிரஸ் தலைவர்களுக்கெல்லாம், அது வாழப்பாடியாக இருக்கட்டும், மரகதம் சந்திரசேகராக இருக்கட்டும், ஒருவித நல்ல பிம்பத்தைக் கொடுத்துவிட்டு, அவர்களின் மீது யூகம் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால் வைகோவை யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார் - என்பது தொடர்பானது. இதை அடிப்படையிலேயே மறுத்தார் ரகோத்தமன். வைகோவின் ‘புலிகளின் குகை’ பேச்சை நீங்களெல்லாம் கேட்டிருந்தால் உங்களுக்குப் புரியும். அதுமட்டுமல்ல, நான் வைகோவின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தேவையான ஆதாரம் உள்ளது. நான் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், நிச்சயம் அவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்திருப்பேன் என்றார். அவரது கருத்து, அவரது புத்தகத்தில் உள்ளதுபோலவே, அவர் குமுதம் ரிப்போர்ட்டரில் சொன்னதுபோலவே, மிகவும் உறுதியாக இருந்தது.
* அடுத்த கேள்வி ஒன்றை பா.ராகவன் கேட்டார். ஸ்ரீபெரும்புதூரில் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்ததைப் பற்றிப் பேசும் நீங்கள், ஜெயலலிதாவின் கூட்டம் ரத்து செய்வதைப் பற்றி ஏன் பேசவில்லை என்பது தொடர்பானது. ‘இப்படி நிறையச் சொல்வாங்க. ஆனா உண்மையைத்தான் நாங்க பேசமுடியும். மரகதம் சந்திரசேகர் நடத்தும் கூட்டத்துக்கோ சிதம்பரம் நடத்தும் கூட்டத்துக்கோ ஜெயலலிதா வரவே விரும்பவில்லை. அவர் வருவதாகச் சொன்னது கிருஷ்ணகிரியில் வாழப்பாடி நடத்தும் கூட்டத்துக்கு. அதுவும் முடிந்தால் வருவேன் என்பது போன்ற ஒன்று. திட்டமெல்லாம் அமைக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முதல்நாளே ராஜிவ் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது அதைப் போன்றதல்ல’ என்றார்.
* நான் கேட்ட இன்னொரு கேள்வி - சிவராசனைப் போன்ற ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவரைப் பார்த்த கணத்தில் அவர் இல்லை என்று உங்களால் சொல்லிவிடமுடிந்தது. அதற்குக் காரணமாக நீங்கள் சொன்னது, சிவராசனது புகைப்படம் உங்கள் மனதில் ஊறிவிட்டது என்பது. ஆனால் அதேபோல் சின்ன சாந்தன் உண்மையாகவே கைது செய்யப்பட்டபோது, ராஜிவ் கொலைக்கு சில நிமிடங்கள் முன்பாக ராஜிவுக்கு மாலையிடும் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்பது. அதற்கு, ‘சின்ன சாந்தனைக் கைது செய்தது வேறொரு குழு. சின்ன சாந்தன் திட்டமிட்டு வழக்கை திசை திருப்ப, தான் வரதராஜ பெருமாளைக் கொலை செய்ய வந்ததாகச் சொல்லவும், அது குறித்த விசாரணை என்ற கோணத்தில் போய்விட்டது. மேலும் இப்போது உள்ளது போன்ற ரிலாக்ஸான நேரத்தில் யோசனை செய்வது போன்றதல்ல அப்போதுள்ள நிலை. எப்போதும் ஒரு ஸ்டிரஸ் இருக்கும். சின்ன சாந்தன் யாருக்கோ ஃபோன் செய்து பேசிக்கொண்டிருந்தபோது, அந்தப் புகைப்படத்தில் உள்ளது தாந்தான் என்று சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்ட போலிஸ் என்னிடம் சொன்னது. அப்போதுதான் எனக்கே சட்டென பிடிபட்டது அந்தப் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று. இது நடந்தது ராஜிவ் கொலை நடந்து 12 வருடங்களுக்குப் பின்பு! அந்தப் புகைப்படத்தில் உள்ள நபரைக் கண்டுபிடிக்க காஞ்சிபுரம் எல்லாம் சுற்றியிருக்கிறேன். அதே முகச்சாயலில் உள்ள நான்கைந்து பேரை விசாரித்தும் இருக்கிறேன்’ என்றார்.
இப்படி பல செய்திகளைச் சொன்னார் ரகோத்தமன். இதில் ஏதேனும் பெயர்ப் பிழைகளும் கருத்துப் பிழைகளும் இருக்குமானால், அது என்னுடையதே அன்றி ரகோத்தமனுடையது அல்ல. அவர் தேதி முதற்கொண்டு மனப்பாடமாக ஒப்பிக்கிறார். ராஜிவ் கொலை வழக்கு அவரது ரத்தத்திலேயே கலந்துவிட்டது!
- ஹரன் பிரசன்னா
தொடர்புடைய பதிவு
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, February 28, 2010
ரகோத்தமனுடன் ஒருநாள் - ஹரன்பிரசன்னா
Posted by IdlyVadai at 2/28/2010 06:00:00 PM
Labels: அரசியல், பதிப்பகம், புத்தகம், பேட்டி, ஹரன்பிரசன்னா
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
// வாரத்தில் ஆறு நாள் அசைவம் உண்டாம்.//
இது தெரிஞ்சா நானும் அந்த வழக்கில் கைது ஆகி இருப்பேன்.மிஸ் ஆயுடுச்சு தல
சே, ஒரே பதிவ எத்தனை தடவ வாசிக்கிறது? ஒரே ஆளு ரெண்டு வலைப்பதிவு வச்சிருந்தா இப்படித்தான்..
Was there no torture in Malligai.Do you know that journalists when asked to come to Malligai would inform their colleagues and ask them to call Malligai if they did not return after few hours.Google for the letter of Robert Payes and Perarivalan to know the other side of the story and you would know how humane those investigated the case were.Kizhakku would have made money from this book and Ragothaman too would have had his share.But does not mean that truth has trimphed.
உண்மையான இஸ்லாமியன்,
என் மேல ஏன் உங்களுக்கு இந்தக் கோபம். :)) விடாம துரத்துறீங்களேய்யா...
Wat a coincidence!!
Just in the morning I completed reading "RAJIV KOLAI VAZHAKU" and in the evening,, IV has posted this article of HP., that too mentioning it as, wat were left unsaid by Ragothaman sir in his book.
So I had a good finishing :)
Thank u IV..
I hope most of IV followers have read this book. It has no less excitement than a detective novel, besides being a true story, and that too related to the asssasination of our former PM, Rajiv Gandhi.
One of the most interesting books I've ever read !!!
புத்தகம் வாங்கிப் படித்ததும் அது தொடர்பான மற்ற செய்திகளும் வருவது சுவாரஸ்யம். நல்ல கவரேஜ்.
இந்த "லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு"ன்னு ஒரு தொடர் ஒரு தினசரியில படிச்ச ஞாபகம். அது மாதிரி எதுவும் தொடர் போட ஐடியா இருக்க, மிஸ்டர்(?) இட்லிவடை?
This was probably one of the best ever books i have read. Outstanding effort by Mr Ragothaman.Good posting by harran prasanna.People who have read this book would truly agree that nalini is no innocent in this assassination. Does she really deserve to walk free from prison???
She has not only played a role in killing a leader but has played a role in changing the history of this country
‘ராஜிவ் கொலை வழக்கு’ புத்தகத்தை படிக்கத் தூண்டிய இ.வ.-க்கு நன்றி.
Read this book completely at a stretch and one of the most intersting books i have read
Not related to this post but interesting interview by MGR to BBC.
http://www.youtube.com/watch?v=RUoGTNgRDNE
நான் வைகோவின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தேவையான ஆதாரம் உள்ளது.
If so why don't he give those evidence?
எனக்கொரு உண்மை தெரிந்தாகணும். பீரங்கி கொள்வனவில் கோடிகளை அள்ளிய ராஜீவ் காந்தி, கொள்ளப்பட்டார் என்ற ஒரே காரணத்தினால் மகாத்மாவாக போற்றப்படுவது ஏன்.
ரகோத்மன் ஒன்னும் வெட்டிப் புடுங்கள. யாருமே கஷ்டப்பட்டு கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கண்டு பிடிக்கவில்லை. உண்மை யாதெனில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் அந்நிகழ்ச்சியை ஆவணப்படுத்தும் முகமாக அதனை வீடியோ எடுத்ததினாலேயே பிடிபட்டார்கள். மேலும், தற்கொடைப்பெண் தனு என்று அறியப்பட்டாலும் அவரைப் பற்றிய விபரங்கள் யாவும் பிழையானவையே. அந்த விபரங்களுக்குரிய பெண் உயிருடனேயே இருக்கிறார்
Article about Mr. Rahothaman in connection with his Rajiv Assassination is quite interesting and enjoyable. Well. I have published a book on Indira Gandhi Assassination: Crime and Trial (in Tamil) in Feb. 2016 through Notion Press with minute details. Next I will be publishing the assassination of Rajiv Gandhi in the years to come. I expect your permission to include all these extra-investigational details in my book. Thank You. Mrs. Z.Y. Himsagar, M.A., M.L., Advocate. available at cdmkdganesh@gmail.com
Post a Comment