'நிழல்கள்' ஹரன்பிரசன்னா புத்தகக் கண்காட்சி பற்றி எழுதி எங்களுக்கு அனுப்பிவிட்டு "போட முடியாது என்று சொன்னால் நான் என் பிளாகில் போடுவேன்" என்று பயமுறுத்தியதால் உடனே பதிவிடுகிறோம்... சரக்கு மாஸ்டராக இருந்தாலும், பிரசன்னாவின் மரியாதையை கண்டு வியக்கிறோம்....
சென்னை புத்தகக் கண்காட்சி 2010
ஒருவழியாக சென்னை புத்தகக் கண்காட்சி ‘இனிதே’ நேற்றோடு முடிவடைந்தது. ஜனவரியில் பொங்கல் சமயத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி சில காரணங்களால் சற்று முன்பே நடத்தப்பட்டது. இதனால் கூட்டம் வருமா வராதா என்கிற சர்ச்சைக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைத்தது அலை அலையாக வந்த மக்கள் கூட்டம். சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காகத்தான் புத்தகக் கண்காட்சி முன்னமே நடத்தப்பட்டது என்று சொல்லப்பட்டது. இதனால் விற்பனை என்னாகுமோ எனப் பயந்தவர்கள், இனி அப்படி நினைக்கமாட்டார்கள். அடுத்தடுத்த வருடங்களில் இதுவே பழகிவிடும்.
பபாஸியின் நிர்வாகம் மாறிய பின்பு நடக்கும் முதல் புத்தகக் கண்காட்சி இது. விளம்பரம், மக்களைக் கொண்டு வருதல் எனப் பல்வேறு விஷயங்களைச் சிறப்பாகவே செய்திருந்தது புதிய நிர்வாகம். பபாஸியின் மெம்பர்களில் ஒரு சிலர் இதை ஒரு பெரிய பதவியாக நினைத்துக்கொண்டு, ஒரு வித கர்வத்துடன் நடந்துகொண்டாலும், மொத்தத்தில் புதிய நிர்வாகம் சிறப்பாகவே செயல்பட்டது.
இதுவரை நான் பங்கேற்ற சென்னை புத்தகக் கண்காட்சிகளில் இதுபோன்ற மக்கள் கூட்டத்தை நான் பார்த்ததில்லை. விடுமுறை நாள்கள் தவிர மற்ற நாள்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது என்றாலும், விடுமுறை நாள்களில் (இரண்டு சனி இரண்டு ஞாயிறு) வரலாறு காணாத கூட்டம் வந்தது. ஒரு கட்டத்தில் கிழக்கு ஸ்டாலுக்குள்ளேயே நுழைய முடியாத அளவுக்குக் கூட்டம். கஸ்டமர் சர்வீஸ் செய்யக்கூட நேரமில்லை. அத்தனை கூட்டம். இதேபோன்று விகடன், உயிர்மை, காலச்சுவடு அரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இத்தனை பெரிய மக்கள்கூட்டத்தைக் கொண்டுவர முடியும் என்று சாதித்த பபாஸி, உள்கட்டமைப்பு வேலைகளில் தோல்வியையே சந்தித்திருக்கிறது என்று சொல்லவேண்டும். சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்கள் பங்கேற்பதை மெல்ல மெல்ல ஒரு பழக்கமாக மாற்றியிருக்கிறது பபாஸி. அது சாதாரண விஷயமல்ல. பெரிய சாதனை. பெங்களூரு புத்தகக் கண்காட்சியுடன் ஒப்பிடும்போது, இந்தக் கூட்டம் கற்பனைக்கு எட்டாதது என்றே சொல்லவேண்டும். ஆனால் அத்தனை கூட்டம் கூடும் இடங்களில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எந்த அளவில் இருந்தன என்றால், அதைச் சொல்லவே வேதனையாகத்தான் இருக்கிறது.முதலில் மிகவும் தேவையான பிரச்சினை கழிப்பிடப் பிரச்சினை. இப்படி மோசமான கழிப்பிடங்களே போதும் என்கிற மனப்பான்மையே இங்கு அடிப்படை பிரச்சினை. எங்கும் எதிலும் சுகாதாரம் பற்றிய உணர்வே இல்லை. அப்படியே ஊறிப்போயிருக்கிறோம் போல. பள்ளிச் சிறுவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்களையே இந்த முறை பயன்படுத்த வேண்டியிருந்தது. கழிப்பிடங்களில் மக்கள் வரிசையில் நின்ற கொடுமையெல்லாம் நடந்தது. கழிப்பிடத்தின் அருகில் செல்லும்போதே வரும் துர்நாற்றம் யாரும் சகிக்கமுடியாதது. பள்ளிக்குத் திரும்பிய மாணவர்கள் தங்களது கழிப்பிடங்களைக் கண்டு, அதைத் தங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத காட்சியாகவும், துர்நாற்றமாகவும் குறித்து வைத்திருப்பார்கள்.
உணவுப் பிரச்சினையை ஓரளவு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தீர்த்து வைத்தது என்றாலும், அங்கேயும் திட்டமிடுதல் இல்லாமல் திண்டாட வேண்டியிருந்தது. கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும்போது, பத்து நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று வந்தால், கூப்பன் வாங்கவே 25 நிமிடம் ஆயிற்று. மூன்று கேஷ் கவுண்ட்டர்கள் வைத்தால் நல்லது என்றுகூட ஏன் இவர்களுக்குத் தோன்றுவதில்லை எனத் தெரியவில்லை. கை கழுவிவிட்டுச் சாப்பிட நினைப்பவர்கள், கை கழுவ வைத்திருக்கும் நீரையும், அந்தச் சூழலையும் பார்த்தால் சாப்பிடும் எண்ணத்தையே கைவிட்டுவிடுவார்கள்!
வழக்கம் போல ஏடிஎம் செண்டர் வைக்கவில்லை.
இவையெல்லாம் என்று மாறுமோ அன்றே சென்னை புத்தகக் கண்காட்சியைக் குறித்து நாம் பெருமைப்பட முடியும்.
சென்னை புத்தகக் கண்காட்சியின் நிச்சயமான சாதனை அதன் கூட்டம் மட்டுமே. பத்து நாள்கள் திருவிழா போலவே நடந்தது.
முதல் நாள் கருணாநிதி வந்தார். அன்று முழுவதும் விற்பனை இல்லை. உள்ளே அரங்கில் இருந்த வாசகர்களையெல்லாம், பாதுகாப்பு என்ற பெயரில் வெளியேற்றினார்கள். அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர யாரும் அரங்கில் இருக்கக்கூடாது என்று சொல்லி, வேலைக்கு வந்திருந்தவர்களையும் வெளியேற்றினார்கள். நடைபாதையில் எதுவும் இருக்கக்கூடாது என்று சொல்லி மேஜை நாற்காலிகளை அரங்கின் உள்ளேயே போடச் சொன்னார்கள். கடைசியில் கருணாநிதி அரங்கின் உள்ளே வரவே இல்லை. கருணாநிதி கண்காட்சியைத் திறந்து வைக்க வருவது ஒரே ஒரு விதத்தில் மட்டுமே உதவக்கூடும். எல்லா ஊடகங்களும் அதைப் பெரிய அளவில் செய்தியாக வெளியிடும் என்பதே. மற்றபடிக்கு, இதைப் போன்ற கெடுபிடிகள் மட்டுமே மிச்சம். ஆனால் கிழக்குக்கு மட்டும் இன்னொரு வகையிலும் உதவியது, சென்னை மறுபடி கண்டுபிடிக்கப்பட்ட வகையில்.
கமல் வந்தார். என்னவோ பேசினார். விசில் சத்தம் மட்டுமே கேட்டது. அன்று கமல் புத்தகங்கள் நிறைய விற்றன!கிழக்கு பதிப்பகத்தைப் பொருத்தவரை, இந்த முறை ஒட்டுமொத்த பதிப்புலகமும் திரும்பிப் பார்க்கும் வகையிலான புத்தகங்களை வெளியிட்டிருந்தது என்றே கூறவேண்டும். போதாக் குறைக்கு கருணாநிதியும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். சோவும் சேர்ந்துகொண்டார். இவர்களைப் போல இன்னும் நிறையப் பேர் கிழக்கைத் திரும்பிப் பார்க்க வைத்தார்கள். அவர்களுக்குள்ளே ஏதேனும் ஒப்பந்தம் இருக்கிறதோ என்னவோ!
கிழக்கின் தீவிர வாசர்கள் நெடுநாள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த எம்ஜியார், அம்பேத்கர் புத்தகங்கள் வெளியாயிருந்தன. இவை கிழக்கு வாசகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். இது ஒருபுறம் என்றால், மறுபுறம் சுஜாதா, ஜெயமோகனின் புத்தகங்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருந்தது. தனிப்பட்ட முறையில், எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வழியாக வருவதும், அந்தப் புத்தகங்களில் (அச்சுப் பிழை பார்த்ததுதான்!) எனது பங்களிப்பு சிறிது இருப்பதும் எனக்கு மகிழ்ச்சியான விஷயங்கள். சுஜாதா, ஜெயமோகன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, இரா முருகன், வண்ண நிலவன் என ஒரு தீவிர வாசிப்பு வரிசைக்கான களமும் உருவாகி வருவது மகிழ்ச்சியானது. இது கிழக்கின் வாசகர்களுக்கு ஒரு புதிய பார்வையைத் தரும் என்பதில் ஐயமில்லை.
நலம் பதிப்பகத்தின் வழியாக வந்திருக்கும் உடல் நலம் சார்ந்த புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களும் ஒரு தேர்ந்த மருத்துவரால் எழுதப்பட்டது என்பதும் இந்த விற்பனைக்கு முக்கியக் காரணம்.
கடந்த ஆண்டுகளில் புத்தகக் கண்காட்சியை இரண்டு அல்லது மூன்று முறையாவது முழுமையாகச் சுற்றிப் பார்ப்பேன். இந்த முறை அதற்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. காலச்சுவடு கண்ணன், மனுஷ்யபுத்திரன் போன்றவர்களிடமெல்லாம் பேட்டி போல எடுத்து யூ டியூப்பில் போடலாம் என நினைத்திருந்தேன். நடக்கவில்லை.கிட்டத்தட்ட எல்லா நாள்களும் பா.ராகவன் வந்திருந்தார். கிழக்கு பதிப்பக அரங்கையே தாங்கிப் பிடிக்கும் வண்ணம், அரங்கத்தின் பக்கத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு பத்து பேர் எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படி என்னதான் பேசியிருப்பார்கள் என்பதே விளங்கவில்லை. திட்டமிட்ட கொலைச்சதியைப் போல தினமும் பேசினார்கள். பாரா வரும்போதெல்லாம் சரியாக அங்கே டீ வந்தது பெரிய ஆச்சரியம். இதுவும் ஒப்பந்தப் பிரச்சினையா எனத் தெரியவில்லை. பாராவை ஒரு தடவை நலம் பதிப்பகத்தில் பார்த்தேன். அடுத்த நிமிடம் கிழக்கு பதிப்பகம் வந்தால் அங்கேயும் பாரா நின்றிருந்தார். நித்யானந்தரை ஒரே சமயத்தில் இரண்டு இடத்தில் பார்த்த சாரு போல நான் மயிர்ச்செறிந்து நின்றேன். எப்படி இதெல்லாம் பாரானந்தாவிடம் கேட்டபோது, இதுதான் ஆன்மிகம் என்றார். கையில் கிருஷ்ணன் காப்பு கட்டியிருப்பதாகச் சொன்னார். பெங்களூரு புத்தகக் கண்காட்சியிலிருந்தே இவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்பது தெரியும். ஆனால் இத்தனை பாதிப்பு இருக்கும் என அன்றுதான் தெரிந்தது. நித்யானந்தருக்குப் போட்டியாக ராகவானந்தா கிளம்பும் நாள் தொலைவில் இல்லை. ஆனால் சாரு இவரைப் பற்றி என்ன எழுதுவார் என்பது எனக்குத் தெரியாது.
பத்ரி வந்தபோதெல்லாம், கிழக்கு அரங்கில் ஏதேனும் ஒரு வாசகர் ஒரு புத்தகத்தைக் கேட்பார், சரியாக அந்தப் புத்தகம் ஸ்டாக் இருக்காது! இதுவும் ஒப்பந்தப் பிரச்சினைதானா எனத் தெரியவில்லை. இந்த ஒப்பந்தங்கள் படுத்தும்பாடு...!
புத்தக விற்பனையைப் பார்ப்போம். கிழக்கைப் பொருத்த வரையில் ராஜிவ் கொலை வழக்குதான் நிறைய விற்றிருக்கும் என நினைக்கிறேன். சரியான முதல் பத்து புத்தகங்களை பத்ரி வெளியிடுவார் என நினைக்கிறேன்.
ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியிலும், இந்த வகைப் புத்தகங்களில் இப்புத்தகமே முதல் நிலையில் இருக்கலாம் என நினைக்கிறேன். இந்த வகை என்று சொல்வதன் அர்த்தம், இப்போது வெளியிட்ட, ஓரளவு விலையுள்ள என்று அர்த்தம். எப்படி சரியாகச் சொல்வது எனத் தெரியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்னும் புத்தகம் (விலை ரூ 25) 4000 பிரதிகள் விற்றது என்று கேள்விப்பட்டேன். அதேபோல் கோரக்பூர் கீதா பிரஸ்ஸின் பகவத் கீதை நிச்சயம் 5000 பிரதிகள் விற்றிருக்கும். இப்படிப்பட்ட புத்தகங்களை விட்டுவிட்டுப் பார்த்தால், ராஜிவ்காந்தி புத்தகமே அதிகம் விற்றிருக்கும். அவற்றை ஏன் விட்டுவிட்டுப் பார்க்கவேண்டும் என்றால், அவையெல்லாம் கிழக்கு வெளியிட்டவை அல்ல என்பதால்தான்!
சென்றமுறை கிழக்கு அரங்குக்கு வராத பல இலக்கியவாதிகள் (மற்றும் அப்படி தங்களை நினைத்துக்கொள்பவர்கள்) புத்தகம் வாங்க வந்து சேர்ந்தனர். நிறையப் பேரை எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்தது. எல்லாரையும் பார்த்துச் சிரித்து வைத்தேன். யதிராஜ சம்பத்குமார் என்னிடம் கையெழுத்து கேட்டார். அன்றெல்லாம் தூங்கவே இல்லை. என்னுடன் இருந்த நண்பர் சோழ நிலா புத்தகம் வாங்கியே தீருவேன் என்றார். அன்றும் தூக்கம் இல்லை.
எனது நிழல்கள் புத்தகம் விருட்சம் பதிப்பக அரங்கில் விற்பனைக்கு இருந்தது. அங்கே விற்பனை செய்யும் பையன், எனது ஒவ்வொரு புத்தகம் விற்கும்போதும், என்னைக் கூப்பிட்டு, ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பது போலப் பதறி, ‘சார் உங்க புத்தகம் ஒண்ணு வித்துட்டு, யாருன்னே தெரியலை வாங்கிட்டாங்க’ என்றார். இன்னொரு நாள் யாரோ ஒரு வெளிநாட்டுக்காரர் வாங்கினார் என்று சொல்லிவிட்டு, ‘அவங்கள்லாம் ஏன் சார் வாங்குறாங்க’ என்றும் கேட்டான். அவனை சமாளிப்பதே பெரும்பாடாக இருந்தது. இன்னொருநாள் ஒரு வாசகர் வந்து, ‘நிழல்கள்’ புத்தகம் இருக்கா எனக் கேட்க, இவன் எடுத்துக் காண்பித்திருக்கிறான். ‘ஐய, இதுல எழுத்தாளர் பேர் தப்பா இருக்கே, நகுலன்னுல்ல இருக்கணும்’ என்றாராம். பெயரையுமா காப்பி அடிப்பாங்க என்று கடைப்பயன் நினைத்திருக்கவேண்டும்.ரஜினி ராம்கி வந்திருந்தார். விதவிதமாக போட்டோ எடுத்தார். அவரது ஜெபி சிறைக்கால நினைவுகள் புத்தகத்தைத்தான் (கிழக்கு வெளியீடு) நான் அடுத்து படிக்கப் போகிறேன். சுவாரஸ்யமாகவும் முக்கியமானதாகவும் இருக்கும் போலிருக்கிறது. முதலிரண்டு புத்தகங்களைப் போல அல்ல என்று சொல்லாதீங்க என்று என்னிடம் சொல்லியிருந்தார் என்பதால் அதைச் சொல்லாமல் விடுகிறேன்.
இரா முருகன் வந்திருந்தார். உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் அவரது வசனங்கள் சிறப்பாக இருந்ததைச் சொன்னேன். அவர் நடிக்கும் குறும்படம் பற்றிச் சொன்னார். இட்லிவடை போட்டிருந்தார் என்றேன். ஓ அதையும் போட்டுட்டாரா என்றார்.
நிறையப் பேர் என்னிடம் வந்து, ‘டிவில வருவாரே, அவர் இல்லையா’ என்று கேட்டார்கள். ‘பத்ரி ஷூட்டிங்க்குக்கு போயிருக்கார்’ என்று சொல்லிவிடலாமா என்றுகூட யோசித்தேன். அத்தனை பேர் கேட்டார்கள். எல்லாருக்கும் விளக்கம் சொன்னேன். ஒருவர் கிட்டத்தட்ட பத்து நிமிடம் என்னுடன் பேசியிருந்துவிட்டு, தேங்க்ஸ் பத்ரி என்றார். நான் பத்ரி இல்லை என்றவுடன், சாரி சொல்லிவிட்டு, அதான் டிவில பார்த்த முகமா இல்லையேன்னு நினைச்சேன் என்று சொல்லிவிட்டுப் போனார்.
எம்ஜியார் புத்தகம் விற்பனைக்கு வைத்திருந்தோம். அப்புத்தகத்தின் பெயர் வாத்யார். அதைப் பார்த்த ஒருவர், ‘இவரெதுக்கு வாத்யார்? சிலம்பம் சுத்துவாரா? சுத்தினாத்தான் வாத்தியார்’ என்றார். உடனே, ‘தலாய் லாமா புத்தகம் கொண்டுவாங்க. அது ரொம்ப முக்கியம்’ என்றார். எம்ஜியாரிலிருந்து ஒரே தாவாக தலாய் லாமாவுக்கு அவர் தாவியதை தோழரிடம் சொன்னேன். ‘எப்படி சரியா உங்ககிட்ட மட்டும் இதை கேக்கிறாங்க’ என்றார் தோழர். ஒப்பந்தம் எதுவுமில்லை தோழர், என்னவோ நடந்துட்டு என்றேன்.இன்னொருவர் என்னிடம் வந்து, உங்ககிட்ட சொல்லலாமான்னு தெரியலை என்றார். நலம் பதிப்பகம் பக்கத்து வரிசையில் இருக்கிறது என்று சொல்லிவிடலாமா என்று யோசிப்பதற்குள், ஏன் இட்லிவடையில சினிமாவே எழுதறாங்க என்றார். நல்லவேளை, எழுதுறீங்க என்று கேட்கவில்லை. நான் உடனே, என்கிட்ட கேட்டா என்ன சொல்றது என்றேன். இல்லை, நீங்களும் தொடர்ந்து படிக்கறீங்கள்ல என்றார். அது அவங்க அவங்க இஷ்டம், ஆனா இப்பத்தான் சினிமாவா எழுதறார்னு இல்லை, ரொம்ப வருஷமாவே அதுக்கு (அவருக்கு? அவர்களுக்கு?) அதுதான் பொழப்பு என்றேன். இருந்தாலும் இப்ப ரொம்ப ஓவர் என்றார்.
இனி நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல். ஏற்கெனவே வாங்கியிருக்கும் புத்தகங்கள் அப்படியே படிக்கப்படாமல் இருக்க, இவை எதற்கு என்று தெரியாமல், ஒருவித பழக்க நோய்க்கூறு மனநிலையில் இவற்றை வாங்கினேன். ஆனால் நான் அடுத்து தொடர்ந்து படிக்கப் போவது கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களையே. இவையெல்லாம் அதற்குப் பின்பே.
இனி பட்டியல்:
01. தேசப் பிரிவினையின் சோக வரலாறு (ஹொ.வெ. சேஷாத்ரி)
02. ஹிந்து, ஹிந்துத்துவம், ஹிந்துராஷ்ட்ரம் - சதானந்த காகடே
03. சந்தேகத்தைத் தெளிதல் - சுவாமி சித்பவானந்தர்
04. யுகாந்தா - ஒரு யுகத்தின் முடிவு - ஐராவதி கார்வே
05. சித்ரவதை முகாமில் - ஹமாசு ஜோஷி
06. சாப்பாட்டு புராணம் - சமஸ்
07. நிழல் வீரர்கள் - ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள் - பி.ராமன்
08. ஸ்கூப் - குல்தீப் நய்யார்
09. அனல் காற்று - ஜெயமோகன்
10. மனு சாஸ்திரம் - திருலோக சீதாராம்
நான் சமீபத்தில் படித்தவை (அனைத்தும் கிழக்கு வெளியிட்டவை):
01. இருவர் - அசோகமித்திரன்
02. ஒரு விழா மாலைப் போதில் - அசோகமித்திரன்
03. விடுதலை - அசோகமித்திரன்
04. நாவல் (கோட்பாடு) - ஜெயமோகன்
05. பனி மனிதன் - ஜெயமோகன்
06. நிறமற்ற வானவில் - சுஜாதா
07. மீண்டும் ஜீனோ - சுஜாதா
08. ஆஸ்டின் இல்லம் - சுஜாதா
09. தீண்டும் இன்பம் - சுஜாதா
10. நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா
உடனே படிக்க இருப்பவை:
01. எமர்ஜென்ஸி - ஜெபி வெர்சஸ் இந்திரா - கிழக்கு
02. இலங்கை இறுதி யுத்தம் - கிழக்கு
03. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன் - கிழக்கு
04. வாழ்விலே ஒருமுறை - ஜெயமோகன் - கிழக்கு
05. பண்பாட்டைப் பேசுதல் - தமிழ்ஹிந்து
நிறையப் பேர் (இது நான் எப்போதும் எழுதுவது போலல்ல, நிஜமாகவே நிறையப் பேர்) என்னிடம் ஏன் சென்றமுறை போல எல்லா நாளும் சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதவில்லை என்று கேட்டார்கள். சென்றமுறையே மிகவும் கஷ்டப்பட்டே அதைச் செய்தேன். இந்த முறை அதை நிச்சயம் செய்யக்கூடாது என்று அன்றே முடிவெடுத்துவிட்டேன். அதனால்தான் ஒரே தொகுப்பாக இப்போது. :-)
- ஹரன்பிரசன்னா
சரக்கு மாஸ்டருக்கு எதிராக மஞ்சள் கமெண்ட் அடிப்பது நாகரீகமாக இருக்காது அதனால் நோ மஞ்சள் கமெண்ட்ஸ்
படங்கள் உதவி: இட்லிவடை டிடக்டிவ் டீம் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, January 12, 2010
சென்னை புத்தகக் கண்காட்சி 2010 - LIR -ஹரன்பிரசன்னா
Posted by IdlyVadai at 1/12/2010 08:50:00 AM
Labels: இட்லிவடை ஸ்பெஷல், புத்தககண்காட்சி-2010, ஹரன்பிரசன்னா
Subscribe to:
Post Comments (Atom)
24 Comments:
புத்தகக் கண்காட்சி பற்றி இதுவரை வந்த பதிவுகளில் மிகச் சிறந்த பதிவு என்று இதை நான் நினைக்கிறேன்.
நன்றி இட்லிவடை, வாழ்த்துகள் பிரசன்னா!
புத்தக கண்காட்சி நடத்த சிறந்த இடம் சென்னை Trade centre
மொத்த நாட்கள் : 17 (ஜனவரி முதல் வெள்ளி முதல்)
அனுமதி கட்டணம் :Rs 100
(இதில் Rs 80 gift coupons; to be used for books only)
Discount: min 15% max 50%
காட்சி நேரம்: காலை 11 முதல் மாலை 9 வரை
Invitees day: இந்த 17 நாட்களில் ஏதேனும் ஒரு நாள்
அனுமதி:அழைப்பிதழ் பெற்றவர் மட்டும்
stall size: min: 20' x 20'
சில வசதிகள்: pay at the respective stalls and collect all the books bought at a common counter at the exit showing the bill.
Only one copy per book should be exhibited at the stalls.Stock room should be separate
நல்ல பதிவு. கொஞ்ச நாள் சினிமா, கமல் இவற்றையெல்லாம் மூட்டை கட்டி விட்டு இப்படிபட்ட பதிவுகளை எழுதவும்.
நல்ல பதிவு நண்பர் பிரசன்னா. தங்களை முதல் முறை சந்தித்ததில் மகிழ்ச்சி.
நல்ல பதிவு. சரக்கு மாஸ்டருக்கு நன்றி.
ஒரு சின்ன உறுத்தல்.
//முதல் நாள் கருணாநிதி வந்தார்//.
அவர் கருணாநிதியாக வரவில்லை. தமிழக முதல்வராக வந்தார்.
பிரசன்னாஜி,
கண்காட்சியில் இடம் பெற்ற ஸ்டால்களில் மிக அதிக விற்பனை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்டாலில் தானே?
ஹரன் பிரசன்னா (புத்தகக்)காட்சி வர்ணனையும், புத்தகப் பட்டியலும், சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்.
please list best 10 books as u think in each category. People who buy books for first time can use this list! (of course, u can add yellow comment & a disclaimer!)
tamil fictions
experiences
history
self help
etc.
Thanks IV
(+ List of Worst books if you are dare enough!)
நீங்கதானா அது! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தோழர் இட்லி வடை
கிழக்கு சூரியனே - வாழி!
இட்லி வடையில் இப்படி ஒரு நல்ல பதிவு வந்து ரொம்ப நாளாகிவிட்டது..
பிரசன்னாவுக்கு என் நன்றியும் பாராட்டுகளும்..
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
// மானஸ்தன் said...
நல்ல பதிவு. சரக்கு மாஸ்டருக்கு நன்றி.
ஒரு சின்ன உறுத்தல்.
//முதல் நாள் கருணாநிதி வந்தார்//.
அவர் கருணாநிதியாக வரவில்லை. தமிழக முதல்வராக வந்தார்.
//
repeataiii
நன்றி இட்லிவடை.
உங்க புதுகேமிராவில் எடுத்த போட்டோக்கள் சூப்பர். மன்னிக்கவும், அன்று கூட்டநெரிசலால் உங்களுக்கு லிச்சி ஜூஸ் வாங்கி தரமுடியவில்லை!
லக்கிலுக் பிரசன்னா தவிர வேற யாரையும் இட்லிவடைனு நம்பவே மாட்டார் போலிருக்கு.. இட்லிவடையே வந்து சொன்னாக்கூட...
கிழக்குகூட சம்பந்தம் வச்சிகிட்டுமா இன்னும் சந்தேகம்?
ஜெயக்குமார், லக்கி சொல்வது ’வேறு யாரையோ.’ நீங்களாக ஏன் என்னை இழுத்துவிடுகிறீர்கள். :))
--பிரசன்னா
//படங்கள் உதவி: இட்லிவடை டிடக்டிவ் டீம் :-) /
:-))
வாழ்த்துகள் பிரசன்னா :-)
ஒலக நாயகன் சொல்லிருக்கர மாதிரி ஆராய்ச்சி பண்ணாதீங்க! அனுபவிங்க!!
மீறி செஞ்சு, யாருன்னு தெரிஞ்சா போன போஸ்ட் தலைப்பு மாதிரி "அப்டியே ஷாக்காயிடுவீங்க" !!
:>
அது என்ன “இட்லிவடை டிடக்டிவ் டீம்”? :-)
என்னோட பதிவுல இருந்து படங்களையெல்லாம் எடுத்து போட்டுட்டு, நீங்க செய்யுற பாவத்துல எனக்கும் பங்கு இருக்கிற மாதிரி ஒரு வரி வேற!
இந்த லட்சணத்துல உங்க டீமை சேர்ந்த லக்கிக்கும், அதிஷாவுக்கும் இருக்குற குசும்பு இருக்கே.. யப்பா.. அதுக்கு பிரசன்னாவோட ரிப்போர்ட்டே தேவலடா சாமி! :-)
ஹரன்
இட்லிவடைக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு இப்படி அரசியல்வியாதிகள் மாதிரி பிரிச்சுப் பேசுனா எப்படி..?
படிக்கிறவங்க குழம்பிருவாங்கள்ல..!!!
அப்புறம்.. நான் டெய்லி ரிப்போர்ட்டை எதிர்பார்த்தேன்.. மொத்த ரிப்போர்ட் சுருக்கமா இருக்கு.. அதுனால வருத்தமா இருக்கு..!!!
//சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காகத்தான் புத்தகக் கண்காட்சி முன்னமே நடத்தப்பட்டது என்று சொல்லப்பட்டது.//
உடனே வீணாப்போன சங்கமத்துக்கு கூட்டம் பிச்சுக்குதாக்கும். நல்ல தமாஷ்!
//இதனால் விற்பனை என்னாகுமோ எனப் பயந்தவர்கள், இனி அப்படி நினைக்கமாட்டார்கள். அடுத்தடுத்த வருடங்களில் இதுவே பழகிவிடும்.//
தேவையில்லாத பயம். விற்பனை நன்றாகவே தொடரும்.
-தமிழ்செல்வன்
Prasana ,
Entha pathipagam NIZHAL VEERARGAL
Puthagathai velliyitirikirargal would you pls post me ?
Prasana ,
Entha pathipagam NIZHAL VEERARGAL
Puthagathai velliyitirikirargal would you pls post me ?
pls tell me which publication release a RAW OFFICER BOOK (NIZHAL VEERARGAL)
புத்தக கண்காட்சி நல்ல ஒரு கண்காட்சி. எல்லா புத்தகங்களும் ஒரே இடத்தில் நாம் பார்க்க வாய்புக்கள் இருக்கு. என்ன சோகம் என்றால் நான் இந்த புத்தக கணகாட்சியை மிஸ் பன்னிட்டேன். இட்லி வடை இன்று தான் எனக்கு இந்த ப்ளாக் பார்க்க வாய்ப்பு கிடைத்து. அடுத்த முறை புத்தக கண்காட்சி வந்தால் எனக்கு முடிந்தால் தெரிய படுத்தவும். நன்றி இட்லி வடை.
நான் இனிமேல் தான் உஙக் எல்லா பதிவுகளும் படிக்க போகிறேன். அதுவரைக்கும் உங்கள்.
Post a Comment