பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 31, 2010

சன்டேனா இரண்டு (31-1-10) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்... சினிமா ஸ்பெஷல்செய்தி # 1


பிப்ரவரி 5 ஆம் தேதி வெளிவரப்போகும் "அசல்" படத்தின் சில ஹைலைட்ஸ்.


"கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் அப்படியே நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு பாடலை உருவாக்கி இருக்கிறோம் " என்றார் இயக்குநர் சரண்.

அவர் குறிப்பிடும் பாடல் "சிங்கம் என்றால் எம் தந்தைதான், தங்கம் என்றால் எம் தந்தைதான் " என்று அசல் படத்தில் இடம் பேரும் வைரமுத்துவின் பாடல். இசை அமைப்பாளர் பரத்வாஜ் சொந்த குரலில் பாடி இருக்கும் பாடல். அன்னை இல்லத்துக்கு இந்த பாடலை சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

படத்தின் சில காட்சிகளை முதல் முறையாக சிவாஜி அவர்களின் அன்னை இல்லத்திலேயே ஷூட் செய்து இருக்கிறார்கள்.

சிவாஜி பேனரில் படம் செய்து இருப்பதை திரை உலகில் தனது வளர்ச்சியாக கருதுவதாக அஜித் தெரிவித்தார்

படத்தின் டைட்டிலில் கதை-திரைக்கதை ஒத்துழைப்பு என்று அஜித் பெயரும் இடம் பெறுகிறது.

முதல் முறையாக அஜித்தின் பெயர் எழுத்தாளர் என்ற தலைப்பில் இடம் பெறுவது எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு பெருமை தரும் விஷயம். எழுத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருவதால்தான் தன்னையும் அதில் இணைத்து கொண்டு இருக்கிறார் அஜித் " என்று சொல்கிறார் படத்தின் விவாதம் மற்றும் ஸ்க்ரிப்டில் பணிபுரிந்த எழுத்தாளர் யூகிசேது.

வில்லன் மற்றும் ரமணா போன்ற பெரும் வெற்றி படங்களில் ஏற்கனவே யூகிசேது பங்குபெற்று இருக்கிறார்.


."அவர் 49 படங்களில் நடித்து இருக்கிறார். இதில் ஆர்வம் என்பதை விட, அனுபவம் அவருக்கு நிறைய உள்ளது. சொல்லும் கதை, எளிமையாக இருக்கவேண்டும். அப்போது தான் அது சி சென்டர் ரசிகர்களுக்கும் சென்றடையும் என்பதில் அஜித் தீர்மானமாக இருந்தார். முழுக்க வெளிநாடுகளில் எடுக்க பட்டாலும், ஆங்கில வசனம் அதிகம் இடம் பெறாமல் பார்த்துக்கொண்டார்" என்று தனது அனுபவங்களை பகிர்கிறார் சரண்.

"அவருக்கு இருக்கும் அனுபவத்துக்கு அவர் விரைவில் படம் டைரக்ட் செய்தாலும் ஆச்சிரிய படுவதார்க்கு இல்லை " என்று ஒரு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் சரண்.

"ஒரு படம் நல்லா வரணும்னா டீம் வொர்க் ரொம்ப அவசியம். நான் நடிக்கிற படம் சிறப்பா வர என்ன என்ன செய்யணும்மோ அதை செய்யறேன். ஒரு நடிகனா நிலையான இடம் கிடைச்சு இருக்கு.தனியா ஒரு படம் இயக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா கண்டிப்பா நான் பின் வாங்க மாட்டேன் ".என்று தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் அஜித்.

மசாலா நடிகர் என்ற இமேஜை உடைத்து ஸ்க்ரிப்ட், நல்ல தரம், தொழில் நுட்பம் என்று கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார் அஜித். அதற்கு முதல் கட்டமாக தன் பெயருக்கு முன்னால் 'அல்டிமேட் ஸ்டார் " போன்ற பட்டங்களை தவிர்க்க சொல்லி இருக்கிறார். இவரை தொடர்ந்து தனுஷ், விஷால், பரத் போன்ற நடிகர்களும் பட்டங்களை துறக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.


பி.கு : அசல் படத்துக்கு இ.வ. கிட்ட இருந்து நீங்க நல்ல மார்க் எதிர்பார்க்கலாம்.காரணம், ஆ. ஓ . மாதரி இதிலும் சமீரா, பாவனா என இரண்டு ஹீரொயின்ஸ்(!) இருக்காங்க.
.

செய்தி # 2
(இந்த செய்திக்கான படம் முதலில் இருக்கு )
"ஆரோமொளே " என்னும் ஒரு மலையாளப்பாடல் அர்த்தம் புரியாவிட்டாலும், கேட்கும் போதே நம்மை கிறங்க அடிக்கிறது. இந்த பாடலில் கிதார்கள் பயன்படுத்தபட்டு இருக்கும் விதம் இதம்.

ஆஸ்கர் வாங்கிய கையோடு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து இருக்கும் "விண்ணை தாண்டி வருவாயா " படத்தில் இடம் பேரும் பாடல்தான் அது.

"ஆரோமொளே" என்று சிறு பெண் குழந்தைகளை கேரளாவில் செல்லமாக அழைக்கிறார்கள்.இந்த படத்தில் ஆரோமொளே(?) த்ரிஷா.

இந்த பாடலை பாடி இருப்பவர் அல்பொன்செ ஜோசேப் என்னும் மலையாள திரை உலகின் இசை அமைப்பாளர். பாடலை எழுதி இருப்பவர் கத்தியபுரம் ராமசந்திரன். நம்ம ஊரு வாலி , வைரமுத்து போல கேரளாவில் இவர் பெரிய சினிமா கவிஞர் .

"ஓமணபெண்ணே" என்று படத்தில் தமிழும், மலையாளமும் கலந்த மற்றுமொரு இனிய பாடல். பாடி இருப்பவர்கள் பென்னி தயல் மற்றும் கேரளாவை சேர்ந்த பாடகி கல்யாணி மேனன்.

Blazee பாடி இருக்கும் Hosanna என்னும் பாடல் ஏ.ஆர். ரகுமான் பேட்டியுடன் பி. பி. சி யில் ஒளிபரப்பபட்ட தமிழ் பாடல் என்ற பெருமைக்கு உரியது.

ஏ.ஆர். ரகுமான் சொந்த குரலில் பாடி இருக்கும் "மன்னிப்பாயா " பாடலில் முதன் முறையாக 'அன்புடைமை ' அதிகாரத்தில் இருந்து திருக்குறள்கள் இடம் பெறுகின்றன.
படத்தில் வரும் தமிழ் பாடல்கள்(?) அனைத்தும் எழுதி இருப்பவர் கவிஞர் தாமரை.

"சிம்பு , இந்த படத்தில் கதாநாயகியை காதலிக்கும் இயக்குநராக நடிக்கிறார் " என்றார் கௌதம் மேனன்.(சொந்த கதை?)."ரொம்ப எளிமையான கதைதான். நடித்து கொடுத்த சிம்புவுக்கு நன்றி " என்று பேட்டி அளித்தார் .

தேசிய விருது பெற்று இருக்கும் கௌதம் மேனன் மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

அவன் இவன் - இது விருது பெற்ற கையோடு இயக்குநர் பாலா இயக்கும் படம். விஷால்,ஆர்யா என இரண்டு கதாநாயகர்கள். படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. ஏன் இளையராஜா இல்லை என்ற ஒரு கேள்விக்கு பாலா அளித்த பதில் " படத்தின் கதைக்கு சில ரீமிக்ஸ் பாடல்கள் தேவைப்படுகின்றன. ராஜாவிடம் எப்படி கேட்க முடியும். அதனால்தான் யுவனை போட்டு இருக்கிறேன் " .

வழக்கமான இருட்டு உலக மனிதர்களை பற்றி இல்லாமல் இந்த முறை முழு நீள காமெடி படம் பண்ணுகிறார் பாலா. படத்துக்கு வசனம் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.


(நன்றி, இனி அடுத்த வாரம்).

-இன்பா

Read More...

Saturday, January 30, 2010

தமிழ்நாட்டில் ஆயுத கலாச்சாரம் !

தமிழ் நாட்டில் பெருகி வரும் ஆயுத கலாச்சாரம் மேல் விவரங்கள் கீழே...


1. பிறந்த நாள் காணும் அழகிரியை, நான் முன்கூட்டியே வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். கடந்தாண்டு அவரது பிறந்த நாள், மாநாடு போல் நடந்தது. அதில், தி.மு.க.,வின் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக நானும், அழகிரியும் இருப்போம் என உறுதி எடுத்துக் கொண்டோம். - ஸ்டாலின் ஜனவரி 2010

2. எனது பெரியப்பா கருணாநிதியின் மனதில் நமக்கு தனி இடம் உண்டு. அவர் மனோகரா உள்ளிட்ட பல திரைப்பட வசனம் மூலம் நமது சமுதாயத்தை உயர்த்தி உள்ளார். அந்த வசனத்தை உச்சரித்த பெருமை நடிகர் திலகம் சிவாஜிக்கு உண்டு. கருணாநிதியும் நடிகர் திலகம் சிவாஜியும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றவர்கள். - நடிகர் பிரபு டிசம்பர் 2009

3. தி.மு.க.வும், திராவிடர் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி - கலைஞர் மு.கருணாநிதி செப், 2009

4. மூப்பனாருக்கு பிறகு அந்தக் கட்சி காங்கிரசுடன் இணைந்து விட்டது. மூப்பனாரும், நானும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இணைந்து செயல்பட்டோம். நானும், வாசனும் அதுபோல் இணைந்து செயல்படுகிறோம். - கே..வி.தங்கபாலு - ஜூலை, 2008

5. பா.ம.க.,வுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும், கொள்கை ஒன்று தான். ராமதாஸ், அண்ணன் என்றும், தான், தம்பி என்றும், இரண்டு கட்சிகளும், இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படும் - திருமாவளவன் செப், 2009


வலையுலகில் இட்லியும், வடையும் இரட்டை குழல் துப்பாகியாக செயல்படுகிறது - அனானி ஜனவரி, 2010


Read More...

Friday, January 29, 2010

கோவா - FIRநாம் நிறைய கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறோம். அடுத்த பந்து ஹாட்ரிக் என்று வரும் போது பிராபபிலிட்டி தியரியின் படி நிச்சயம் அது ஹாட்ரிக்காக இருக்காது. இருந்தாலும் ஆர்வத்துடன் பார்ப்போம் அதே போல் தான் கோவா படமும். அதே ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றேன், ஆனால் ஹாட்ரிக் இல்லை. அவ்வளவு ஏன்? வெறும் டிரிக் கூட இல்லை.

சவுந்தர்யா ரஜினிகாந்த் பெருமையுடன் வழங்கும் என்று முதலில் போடுகிறார்கள். நிச்சயமாக கடைசியில் போட முடியாது.

கதை: கிராமத்து இளைஞர்கள் மூன்று பேர் பெண்களை டாவு அடிக்க கோவா செல்கிறார்கள். சில சமயம் கரு சிதைவு நடக்க வாய்ப்புள்ளது. அது இந்த படத்தில் நடந்திருக்கிறது.

திரைக்கதை: மேலே சொன்ன கதையை திரையில் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சீனில் "நாகிர்தனா நகிர்தானா" என்று வந்தால் அடுத்த சீனில் 'கண்கள் இரண்டால்' என்ற பாடல் வருகிறது. வேட்டைக்காரன், சிவாஜி என்று பல படங்களின் காட்சிகள், பாடல் என்று spoof செய்து காமெடி பண்ணியிருக்கிறார்கள். ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் ஒட்டவே இல்லை.

இசை: யுவன் சங்கருக்கு லிட்டில் இசைஞானி என்று புதிய பட்டத்தை கொடுத்திருக்கிறார்கள். அதனாலே என்னவோ லிட்டிலாக இருக்கு இசை. இளையராஜா, எஸ்.பி.பி., சித்ரா சேர்ந்து பாடிய பாடல் கண்ணை மூடிக்கொண்டு கேட்பது நலம்.

சில வாரங்களுக்கு முன் இளையராஜா தன் பாடல்களின் முழு உரிமையையும் அகி என்ற நிறுவனத்துக்கு கொடுத்தார். "விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள், சீரியல் தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் அவர்களுடைய நிகழ்ச்சிகளில் அல்லது தயாரிப்புகளில் எனது இசையை அப்படியே பயன்படுத்தினாலோ, அல்லது வேறு வடிவத்தில் மறு பதிப்பு செய்தாலோ அதற்கான அனுமதியை அகி மியூசிக்கிடமிருந்து பெறவேண்டும்" என்றார் ஆனால் இந்த படம் முழுக்க 'கண்கள் இரண்டால்' என்ற பாடல் 10 நிமிஷத்துக்கு ஒரு முறை வருகிறது. அனுமதி வாங்கியிருப்பர்கள் என்று நம்புவோம்.

நடிப்பு: எல்லோரும் எதோ செய்திருக்கிறார்கள். பியா, பிரேம்ஜியின் காதலியாக வரும் வெளிநாட்டுப்(Melanie Marie) பெண் பார்க்க நல்லா இருக்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு 'ஃபென்டாஸ்டிக்' என்று ரஜினி சொன்னது இவர்களை பார்த்தா என்று எண்ண தோன்றுகிறது! சொல்ல மறந்துவிட்டேன், சினேகா பணக்கார பெண்ணாக வந்து அவரை காதலிக்கும் இரண்டாவது கணவனை அறைகிறார். அறை விடும் போது நல்ல மியூசிக், நமக்கு விழும் அறை மாதிரி ஒரு ஃபீலிங்.

வசனம்: ஜெய் தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசும்போது மக்கள் சிரிக்கிறார்கள். இதே மாதிரி யாராவது ஹிந்தி படத்தில் எடுத்திருந்தால், உடனே தமிழனை எப்படி நக்கல் செய்திருக்கிறார்கள் என்று வரிந்துக்கட்டிக்கொண்டு வருவார்கள்.

புதுமை: சம்பத் - ஆகாஷ் ஹோமோவாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். தமிழ் சினிமா ஹாலிவுட் ரேஞ்சுக்கு போயிருக்கிறது. பழைய ஃபிளாஷ் பேக் காட்சிகளில் படத்தில் 'சீ' செண்டரில் காண்பிக்கப்படும் கோடு விழுந்த பிரிண்ட் மாதிரி காண்பித்தது. தசாவதாரத்துக்கு போட்டியாக ஒருவர் பல கெட்டப்பில் வருகிறார் ஸ்கூல் வாத்தியாராக, கல்யாண மந்திரம் சொல்லும் பூசாரியாக, போலிஸாக, பைலட்டாக என்று.. எதற்கு வருகிறார் என்று தான் தெரியலை!


50-50 என்ற பிஸ்கெட் அசட்டு தித்திப்புடன் இருக்கும். சாப்பிட்டு முடித்தபின் இனிப்பா-உப்பா என்று தெரியாது. படம் முழுக்க அதே மாதிரி இருக்கு. சீரியஸ் படமா? காமெடி படமா? என்று தெரியாமல். என்ன படம்பா என்று கேட்க வைக்கிறார்.


அப்பறம் சொல்ல மறந்துவிட்டேனே சிம்பு, நயன் கூட கடைசியில் வருகிறார்கள். வெறுத்து போய் சீக்கிரம் வீட்டுக்கு வந்தவர்கள் அவர்களை பார்க்க முடியாது.

இட்லிவடை மார்க் - 4.5/10


Read More...

எஸ்.ராஜம் – மறையாத ஓவியம் - அஞ்சலி


91 வருடங்கள் நிறைவான வாழ்வு வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கலைக்காகவே செலவு செய்த ‘சங்கீத கலாச்சாரியா’ எஸ்.ராஜம், இன்று மாலை 7.35 மணி அளவில் காலமானார்.

அவர் கடைசியாக என்னிடம்(லலிதா ராம்) தெரிவித்த விருப்பம், கோடீஸ்வர ஐயருக்கென்று ஒர் தினம் கொண்டாடி, நாள் முழுவதும் அகண்டமாக அவர் பாடல்களைப் பாட வைக்க வேண்டும் என்றது.

அதை நிறைவேற்ற இறையருள் வேண்டும்.

- லலிதா ராம்

இட்லிவடை சார்ப்பில் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

Read More...

திமுக உருவானது ஏன்? விமர்சனத்தின் விமர்சனம்

திமுக உருவானது ஏன்? - புத்தக விமர்சனத்தை பற்றி மலர்மன்னன்..

நண்பர்கள் சொல்லக் கேட்டு இன்று ஸ்ரீ ஹரன் ப்ரசன்னா தி.மு.க. உருவானது ஏன் பற்றி எழுதிய விமர்சனத்தைப் படித்தேன். முதலில் இந்த நூலின் மீது அவர் எடுத்துக் கொண்ட ஈடுபாட்டிற்கு நன்றி. நூலாசிரியன் விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது வழக்க மில்லை. ஆனால் இந்த விமர்சனத் தைப் பொருத்த மட்டில் சில விளக் கங்களைத் தெரிவிக்க வேண்டியுள்ளது:1) தி.மு.க. உருவானதற்கான காரண காரியங்களை எனது கோணத்தில் தக்க ஆதாரங்களுடன் பதிவு செய் வதே நான் மேற்கொண்ட பணி. தி.மு.க. உருவான சமயம் அதில் ஸ்ரீ மு. கருணாநிதிக்கு எவ்விதப் பங்கும் இல்லை. 1953 கல்லக்குடி மறியலுக் குப் பிறகுதான் அவர் தி.மு.க.வில் முக்கியத்துவம் பெறலானார். எனவேதான் எனது பதிவில் அவரைப் பற்றிய பதிவு ஏதும் இல்லை. அண்ணாவின் அணுகுமுறையை விளக்குவதற்காகவே தி.மு.க. தோன்றியதற்குப் பிறகான சில நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் கருணாநிதி மீது எவ்விதப் பகையுணர்வும் இல்லை. அவரைப் புறக்கணிக்கும் உத்தேசமும் இல்லை. அடுத்தபடி அண்ணாவுக்குப் பின் தி.மு.க. என்றும் எழுதுமாறு எனக்கு தினமும் தொலைபேசிகளும் மின்னஞ்சல்களும் வந்துகொண்டிருக் கின்றன. அப்படி எழுத நேருமானால் அப்பொழுது கருணாநிதி பற்றி நிறை யவே எழுத வேண்டியிருக்கும்.

2.) தமது கழகத்தில் தொண்டர் படை ஒன்றை அமைத்து அதற்கு கருப்புச் சட்டையைச் சீருடையாக வைப்ப தென்றுதான் ஈ.வே.ரா. முதலில் தீர்மானித்தார். எனவே அண்ணாவும் அதனை ஆதரித்தார். பின்னர் கட்சி யினர் அனைவருமே அணிய வேண் டும் என்று ஈ.வே.ரா. வற்புறத்தலா னார். கருப்புச் சட்டை அணிவது ஒன்றும் பெரிய கொள்கை, கோட்பாடு சம்பந்தமானதல்ல. எனவே அண்ணா அதனை கம்பல்ஷன் என்று கருதி னார். மேலும் கருப்புச் சட்டை அணி வித்து கட்சிக்காரனை சமுதாயத்தில் தனிமைப் படுத்துவது சரியல்ல என்றும் அண்ணா கருதினார்.

3.) சுதந்திர தினம் பற்றி மூன்றே மாதங்களில் அண்ணா மாற்றிக் கொண்டதுப்ற்றி நான் தெளிவாகவே பதிவு செய்துள்ளேன். மேலும் நகர தூதன் திருமலைசாமி அண்ணாவின் போக்கு குறித்து எழுப்பிய சந்தேகத் தையும் பதிவு செய்துள்ளேன். அண்ணா மீதான எனது தனிப்பட்ட அபிமானம் என் பதிவுப் பணியில் குறுக்கிடவில்லை. அண்ணா மாத்திரம் அல்ல, மேலும் பல அரசியல் தலைவர்களூடனும் நான் நெருக்கமாகப் பழகியுள்ளேன். ஆனால் அண்ணாவைப்போல் ஒரு அன்பே உருவானவரைச் சந்தித்த தில்லை. நாற்பது வயதுக்கு முந்தைய அண்ணா வேறு, நாற்பது வயதுக்குப் பிறகான அண்னா வேறு. நான் அறிந்த அண்ணாவையே பதிவு செய்துள்ளேன். தி.மு.க. வை ஒரு ஜனநாயக இயக்கமாக அவர் தொடங்குவதற்கு முக்கிய தகுதிகளூள் ஒன்றென அவர் கருதியது அது சாதி அடிப்படையில் ஒரு பிரிவினரை ஒதுக்கி வைக்கலாகாது என்பதுதான். இதற்கான குறிப்பு எனது நூலில் உள்ளது. எனவேதான் எனது பதிவில் அவரது பழைய ஆரிய மாயை சமாசா ரங்கள் இல்லை.

4.) பக்க அளவு கருதி பதிப்பாசிரியர் கள் எனது நூலில் பல பகுதிகளை வெட்ட நேரிட்டுள்ளது. இது ஒன்றும் படைப்பிலக்கியம் அல்ல. எனவே அதில் எனக்கு எவ்விதப் பிரச்சினை யும் இல்லை. ஆனால் ஹரன் பிரசன்னா போன்ற அறிவாற்றல் மிக்க தீவிர வாச்கர்களுக்கு ஆங்காங்கே குறை தென்படக் கூடும். சில இடங்களில் தொடர்பு அறுபடுவதை யும் நூலாசிரியன் கருத்தா, எடுத்தாளப்படும் கருத்தா என்ற தெளிவு இல்லாமற் போவதையும் உணர்ந்தேன்.

5) திராவிட இயக்கத்தின் அடிப்படை யே பிராமண வெறுப்புப் பிரசாரம் என்று இருக்கையில் அதை விருப்பு வெறுப்பின்றி அணுகுகையில் பிராமணக் கண்ணோட்டமாக அது தோற்றமளிகக்கக் கூடும். ம்ற்றபடி எனக்கு தலித்துகள் தவிர வேறு எந்தவொரு பிரிவின் மீதும் விசேஷ அக்கரையில்லை.

இனி, தி.மு.க. உருவானது ஏன் நன்கு விற்பனையாகிறது என்கிற தகவல் தந்தமைக்கு நன்றி. எனக்கு வரும் தொலைபேசி, மின்னஞ்சல்க ளிலிருந்து இத்னை என்னாலும் யூகித்துக் கொள்ளமுடிகிறது.

மலர்மன்னன்

Read More...

Thursday, January 28, 2010

ராஜம் - ஓவியங்கள்

ஓவியர் ராஜம் பற்றி பலருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. பல புராணக் கதைகளுக்கு அஜந்தா பாணியில் ஓவியம் போடுவது இவர் ஸ்பெஷாலட்டி.
இன்று எல்லா கச்சேரிகளிலும், சபாக்களிலும் நாம் பார்க்கும் சங்கீத மும்மூர்த்திகள் படம் இவர் கைவண்ணம்தான். இதைத் தவிர திருவிளையாடல் காட்சிகள், திருக்குறள் ஓவியங்கள்.... என்று பல ஓவியங்களை வரைந்துள்ளார்.

அவர் ஓவியங்களை போட முடியுமா என்று சிலர் கேட்டதால் சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

மேலும் தகவல் இங்கே

Read More...

GO'A'

கோவா 'ஏ' படமாம் ! "ஏ" சான்றிதழ் படமா! என்று ஆச்சர்யபடுபவர்கள் பயப்பட வேண்டாம். இது ஜாலியான படம் ஆனால் படத்தின் மெசேஜுக்கு தான் 'ஏ' யாம். வெளிநாடுகளில் 18 வயசுக்கு கீழே இருக்கிறவங்க பெற்றவர்கள் துணையுடன் பார்க்கலாம்னு ஒரு சான்றிதழ் இருக்கு. இங்கே அது இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்த சான்றிதழ் தான் உங்கள் படத்திற்கு கொடுத்திருப்போம். என்று திரைப்பட தணிக்கைக்குழு அதிகாரிகள் கூறினார்கள். 'ஏ' கிளாஸ் விளக்கம்.


படத்தை பார்த்துவிட்டு யாராவது விமர்சனம் செய்யுங்க. நான் செய்வதாக இல்லை !

Read More...

ஒரு நிமிஷம் ப்ளீஸ் !ஆறு மாசமாய தமிழ்ஸ்டுடியோ.காம் உடன் இணைந்து எஸ்.ராஜத்தின் மீது ஆவணப்படம் எடுத்து வருகிறேன். ஷூட்டிங் எல்லாம் முடிந்தாகிவிட்டது. எடிட்டிங் வேலை முடிய இன்னும் ஒரு மாசம் ஆகும்.

விரைவிலேயே, ஒரு ஜீனியஸை அவர் இருக்கும் போதே ஆவணப்படுத்திய பெருமையை அடையப் போகிறோம் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தேன்.

போன ஞாயிற்றுக் கிழமை கூட அவரைச் சந்தித்தேன். கொஞ்சம் தளர்ந்திருந்தாலும், உற்சாகமாகப் பேசினார்.

திங்கள் முதல் மூச்சுத் திணரலாம். நேற்றிலிருந்து பல்ஸ் குறைந்து கொண்டே வருகிறதாம். என்ன சொல்லியும் மனது கேட்க மாட்டேன் என்கிறது.

Positive thoughts-க்கு பவர் உண்டாமே!

இணைய அன்பர்கள் எல்லோரும், அவர் பிழைத்தெழ ஒரு நிமிடம் பிரார்த்தியுங்களேன்.

நமக்குக் கொடுப்பினை இருப்பின், அவர் பிழைத்தெழக் கூடும்.

- லலிதா ராம்.

Read More...

௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்

நண்பர் யோசிப்பவர் பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும் என்று தெரியாது ஆனால் முன்பு வலைப்பதிவு (கிமு என்று வைத்துக்கொள்ளுங்கள் ) எழுத ஆரம்பித்த காலத்தில் 'பிங்க்' கலர் வலைப்பதிவு வைத்துக்கொண்டு ( பெண்களே இப்ப எல்லாம் அந்த கலர் வலைப்பதிவை வைத்துக்கொள்வதில்லை ) புதிர்களை கேட்டுக்கொண்டு இருந்தார். பல சமயம் சுவாரஸியமாக இருக்கும், இப்போழுதும் கலரை மாற்றிவிட்டு தொடர்ந்து அதே மாதிரி கேட்டுக்கொண்டே இருக்கிறார். வலைப்பதிவு வைத்துள்ளவர்கள் மூளையை உபயோகப்படுத்தி யோசிக்கவும் முடியும் என்று இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறார்.

அவர் விஞ்ஞான சிறுகதை தொகுப்பு... சரி நீங்களே கீழே படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்....

நண்பர்களே,


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், வருகின்ற பெப்ரவரி மாதம் 3ம் தேதி, எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகத்தார், இத்துடன் மேலும் ஒன்பது நூல்களை அன்று வெளியிடுகிறார்கள். விழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இடம் : ரோட்டரி புத்தகத் திருவிழா, தமிழ் அரசி திருமண மண்டபம், மணிமண்டபம் அருகில், தஞ்சாவூர்.
நாள் : 03-02-2010.
நேரம் : மாலை 6.30 மணி.

பி.கு.:- இந்தப் புக்கை கண்டிப்பா வாங்கிப் படிங்கன்னு நான் சொல்லலை. வாங்கிப் படிச்சீங்கன்னா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!!!:-)இந்தப் புக்கை கண்டிப்பா வாங்கிப் படிப்பேனு நான் சொல்லலை. ஓசியில அனுப்பினா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!!!:-). வாழ்த்துகள்

Read More...

Wednesday, January 27, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 27-1-2010

ஓடிப் போன இட்லிவடைக்கு முனி எழுதும் கடிதம்.

ஹலோ இட்லி,

லீவு நாளுல கூட நிம்மதியா என்ஜாய் பண்ண முடியாம கு[டியர]சு மேட்டர் எல்லாம் போட்டு மக்களைக் காலி பண்ணிட்ட! என்ன, நீ பத்திரமா இருக்கையா? 'Maa' படம் பார்த்தையா ? Amma meets Maa தான் தற்போது ஹாட் செய்தி! இந்த சந்திப்பு விஷயம் சுழியா பிள்ளையர் சுழியா என்று போக போக தான் தெரியும். தற்செயலான நிகழ்வு என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் சொன்னாலும், அம்மாவின் டெல்லி பயணத்துக்கு முன்பே இந்தியன் எஸ்பிரஸ் அம்மா-சோனியா சந்திக்க போகிறார்கள் என்று போட்டுவிட்டார்கள். அதுவும் தற்செயலாக தான் இருக்கும். யாருக்கு தெரியும் ? சரி ஏன் ஜெயலலிதா சோனியா சந்திப்பு மேட்டரை பற்றி ஒரு பதிவு கூட போடலை ? அம்மா கூட ஏன் இட்லிவடை இதை பற்றி கண்டுக்கவில்லை நினைத்தாராம். அம்மா அட்சிக்கு வந்தால் நீ காலி!

காலி என்று சொன்னவுடன் எனக்கு அஞ்சாநெஞ்சன்தான் ஞாபகத்துக்கு வராரு!
அவர் டெல்லியை காலி செய்வாரா என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. அப்படி அவர் காலி செய்யும் பட்சத்தில் பாலுவிற்கு அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். அதே சமயம் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு இலாகாவை மீண்டும் பிடிக்க முடியுமா என்று முட்டி மோதி பார்க்கிறாராம்.

தயாநிதி மாறன் குடும்பத்தினர் தற்போது பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். தினகரன் மேட்டர் முடிவுக்கு வந்தாலும், சன் டிவிக்கு கலைஞர் டிவி டார்ச்சர் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறதாம். என்ன தான் டீலா-நோ டீலா என்று விளையாடினாலும், புது படம், விழாக்கள் எல்லாம் கலைஞர் டிவி ஹைஜேக் செய்துவிடுகிறதாம். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் முன்பு சன் டிவி மற்ற டிவிக்கு செய்த அதே மசாஜை இப்ப கலைஞர் டிவி சன் டிவிக்கு செய்கிறது. அரசியல் பண்ணறவனுக்கு அந்த அரசியல் மூலம்தான் ஆப்பு என்று சும்மாவா சொன்னாங்க!

கொஞ்ச நாளா அரசியல் பண்ணாம அடங்கி இருந்த தலைவர் தமிழ்க்குடிதாங்கியும் அவர் கட்சித் தொண்டர்களும் இடைத்தேர்தல் களத்தில் உற்சாகமாக செயல்படுகிறார்களாம்! விஜயகாந்த், அதிமுக, திமுக, பாமக என்று நான்கு முனை போட்டியை மும்முனை போட்டியாக செய்ய கம்யூனிஸ்ட் தோழர்கள் முயன்று வருகிறார்கள். எப்படி என்று கேட்டால் மண்டை குழம்பும். அதாவது அதிமுகவிடம் போய் நீங்க பேசாம பா.ம.கவிற்கு ஆதரவு தெரிவியுங்க என்று சொல்லியிருக்காங்க. அம்மாவும் யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. பா.ம.கவை ஒழித்துக்கட்ட அப்பப்போ பன்ச் வசனம் பேசும் "அவரே" நினைச்சாலும் கூட மற்றவர்கள் விட மாட்டார்கள் போல.

நான் போலீஸ் இல்லை, ரவுடி என்ற சாமி வசனம் மாதிரி இப்ப விஜய் ஒரு பன்ச் வசனம் பேசியிருக்கார். "நான் நடிகன் இல்லை Entertainer" என்கிறார். இந்த ஒரு தகுதி போறும் அரசியல்வாதி ஆவதற்கு. அரசியல் செய்வதற்கு நீங்க நல்ல Entertainerஆக இருப்பது தான் முதல் தகுதி. இதில மாற்று கருத்தே இருக்க முடியாது.

தகுதின்னு சொன்னதும் வேற ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. "நம்ம" விஜய்க்கு டாக்டர் பட்டம் குடுத்த நிகர் நிலைப் பல்கலைக்கழகம் உள்பட சில "கல்லூரிகளுக்கு" நிகர்நிலை பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து என்ற மத்திய அரசு முடிவால் மாணவர்கள் ஆத்திரம் அடைந்து, கல்லூரி அறைகள் மற்றும் கம்ப்யூட்டர்கள் நொறுக்கப்பட்டன, சூறையாடப்பட்டன என்ற செய்தி பல செய்திதாள்களில் வந்தது. "கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை." என்கிறது குறள். அதாவது "கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல" என்று பொருள். ஆனால் இன்று இந்தக் கேடு கெட்ட செல்வத்தால்தான் இந்த அங்கீகாரம் ரத்து என்று சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும். இங்கே இந்த படத்தில் இருக்கும் மாணவர்கள் நாளை நம் தேசத்தை ஆளப்போகிறார்கள் என்றால் இப்பவே எனக்கு பயமாக இருக்கிறது. இந்த மாதிரி கல்லூரிகளில் படித்தவர்கள், நாளை அரைவேக்காட்டுப் பட்டதாரிகளாக வந்து டீக்கடை வைக்க கூட லாயக்கு இல்லை என்ற நிலைமைதான் வரும்.

டீக்கடை கடை வைத்திருந்த பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா, கருணாநிதி செய்தாரா? என்று நடிகர் ராமராஜன் பேசியுள்ளார். அவர் அதிமுக சார்பில் பேசியிருக்கார். ஆனால் இதை படிக்கும் போது அப்படி தெரியவில்லை. அதனால் மாணவர்கள் கவலைப்படவேண்டாம். ஒளி மயமான எதிர் காலம் உள்ளத்தில் தெரிகிறது என்று பாட வேண்டும் போல இருக்கு.

ஜோதி என்றால் ஒளி....ஆனால் இந்த ஜோதி (பாசு) எவ்வாறு ஒரு மாநிலத்தை இருளில் மூழ்கடித்தார் என்று இங்கே விளக்கியிருக்கிறார்கள்.

ரொம்ப நாளாக கவலைப்பட்டுக்கொண்டும் ட்விட்டர்ல சண்டை போட்டுக்கொண்டும் இருந்த இசைஞானியின் ரசிகர்களுக்கு இளையராஜாவுக்கு பத்மபூஷன்
விருது என்பது சந்தோஷமான செய்தியே . ரொம்ப நாளைக்கு முன்பே இவருக்குக் கிடைத்திருக்க வேண்டியது விருது இது. இம்புட்டு நாள் அவார்டு குடுக்காம திடீர்னு எப்டி குடுத்தாங்கன்னு நேத்திக்கு பூரா தூங்காம் ரொம்பவே யோசனை பண்ணேன். கொஞ்சம் சீரியஸ்ஸாக தின்க் பிறகுதான் தெரிந்தது, சாரு இளையராஜா பற்றி தாறுமாறாக எழுதியது தான் காரணம் என்று. அட, சாரு ஒருவரைப் பற்றி தப்பாக எழுதினால் அவர் பெரிய ஜீனியஸாக இருப்பார் என்று உடனே முடிவு செய்து இவருக்கு இந்த விருது வழங்கியுள்ளது. யாருக்கு தெரியும் அடுத்தது ஞாநிக்கு கூட கிடைக்கலாம். உங்களுக்கு விருது வேண்டும் என்றால் சாரு உங்களை பற்றி மோசமாக எழுத வேண்டும். இதற்கு நீங்க 2000 ரூபாய் செலவு செய்ய வேண்டும். முடியுமா?

சாருவிற்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. பொங்கல் அன்று டாஸ்மாக் கலெக்ஷ்ன் 80 கோடியாம். அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் அதிகாரத்துக்கு ஏற்றவாறு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வைத்தார்கள். அதில் கள்ளுண்ணாமை என்ற அதிகாரமும் அடங்கும். தை முதல் தேதிதான் "புத்தாண்டு" என்று சொல்லிட்டார்களே! அதனால் பொங்கல் பொங்கவில்லை, அதுக்கு பதிலா பீர் பொங்கியிருக்கிறது. எது எப்புடி இருந்தாலும் கொஞ்சநாளா கள்ளச்சாராய சாவு செய்திகள் குறைந்திருக்கிறது என்பது டாஸ்மாக் நடத்தும் புண்ணியவான்களாலா என்றுகூட நினைக்கத் தோணுது.

கள்ளச் சாராயத்தில தீர்ந்து போன பேட்டரி ஒரு முக்கியமான மூலப்பொருள் என்று கேள்விப்படிருக்கிறேன். அது உண்மை என்றால் இளங்கோவன் போன்ற காங்கிரஸ்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். "இளங்கோவன் போன்ற காங்கிரஸ்காரர்கள் பயன் முடிந்து போன பேட்டரி; அதை ரீசார்ஜ் செய்யவே முடியாது" என்கிறார் விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு. இவர் யார் என்று நீங்க கேட்கலாம். இவர் பயன்படுத்தபடாத பேட்டரி! இருந்தாலும், ஏற்கனவே எக்ஸ்பைரி ஆனது. இந்த விஷயத்தை எல்லாம் அடக்கி வாசிக்காம நாம சத்தம் போட்டுப் பேசினா கொஞ்சநாள் முன்னாடி சத்தியமூர்த்திபவன் முன்னாடி நடந்த அடிதடி மாதிரி ஏதாவது நடந்துடும்.

இங்கே இவர்கள் இப்படி லோக்கல் அடிதடியில் ஈடுபட்டால், வடக்கே மக்கள் கொஞ்சம் பெரிய அடிதடியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக போர் நடைபெற்று வருகிறது. உடனே துப்பாக்கிப் போர் என்று நினைக்க வேண்டாம். வழக்கமான அறிக்கை போர். காரணம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்குண்டான முதற்கட்ட ஏலத்தில் எந்த பாகிஸ்தான் ஆட்டக்காரர்களும் ஏலம் போகவில்லை. இதற்கு இந்திய அரசுதான் காரணம் என பாகிஸ்தான் அரசு துவங்கி, எதிர்க்கட்சி வரை அனைவரும் இந்திய அரசு மன்னிப்பு கோர வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால் இந்திய அரசு, இதற்கும் அரசிற்கும் தொடர்பில்லை, இது முழுக்க முழுக்க பிசிசிஐ விவகாரம் எனக் கூறி மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று சொல்லிவிட்ட்து. நல்ல காலம்...தேர்தல் எதுவும் அருகில் இல்லை. இல்லாவிடில் சிறுபான்மை ஓட்டு பயம் காரணமாக மன்னிப்பு கேட்க வேண்டியதாகியிருந்திருக்கும். இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் இது தொடர்பாக ஐசிசியிடம் முறையிடப் போகிறதாம். அடுத்து என்ன நடக்குமென்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும். எனக்கு ஒரு பெரிய டவுட்டு - விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் தான் இந்த ஏலமா ? அல்லது சியர்-மங்கையர்களுக்குமா ?

ஆனால் வேற ஒரு சம்பவத்திற்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. சில நாட்கள் முன் செய்தித்தாளில் வெளியான மத்திய அரசு விளம்பரம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உடனே பிரதமர் அலுவலகம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு வேறு கோரியுள்ளது. இது என்னடா புதிய கதை என்று நீங்க யோசிக்கலாம். மேட்டர் இது தான். உலக பெண் குழந்தைகளுக்கான தினத்தை முன்னிட்டு, அரசு ஒரு விளம்பரத்தை வெளியிட்ட்து. அந்த விளம்பரத்தில் என்ன இருக்கும் ? கரக்ட் வழக்கம் போல சோனியா, பிரதமர் மன்மோகன் போன்றோர்களது போட்டோவுடன் பாகிஸ்தானின் விமானப்படைத் தலைவரது புகைப்படத்தையும் பிரசுரித்தது. வந்தது பிரச்சனை!. அவர்களை சொல்லி குற்றம் இல்லை. கூகிள் இமேஜ் தேடலில் கிடைத்திருக்கும். எடுத்து போட்டிருப்பார்கள். கொஞ்சம் நாள் முன்பு எய்ட்ஸ் விளம்பரத்துக்கு இதே மாதிரி ஒரு பிரச்சனை வந்தது ஞாபகம் இருக்கா ? மத்திய அமைச்சர் "விளம்பர வாசகம்தான் முக்கியமே தவிர வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் முக்கியமில்லை" என்று கூறியுள்ளார். நல்ல சமாதானம். அப்படி என்றால் சோனியாவிற்கு பதில் நாளை ஜெயலலிதா படம் கூட வரலாம். அழகிரிக்கு பதில் தயநிதி மாறன் படம் வரலாம், வேட்டைக்காரனுக்கு பதில் அசல் வரலாம், கலைஞருக்கு பதில் சோ படம் வரலாம். யார் கண்டது? நல்ல தமாஷ்!


இப்ப இந்த ஜோக்கை கேளு
"தலைவரே நேத்து ஃபுல் போதையில பன்றிகள் இருந்த சாக்கடைக்குள் விழுந்துவிட்டீங்களாமே?"
"ஆமாய்யா அதுக்கு என்ன?"
"இன்னிக்கு அந்த பன்றிகளுக்கு எல்லாம் காய்ச்சலாம்" ( பன்றி காய்ச்சல் என்பது இது தானோ ? )

உனக்கு சிரிப்பு வரலை எனக்கு தெரியும். இந்த நியூஸை பாரு நிச்சயமா சிரிப்பு வரும். மஹாராஷ்டிர அரசு சமீபத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது. மும்பை நகரில் இனிமேல் புதிய டாக்ஸி ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெற வேண்டுமெனில் அவர்களுக்கு மராத்தி பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டுமாம்; தவிர மஹராஷ்டிராவில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது வாழ்ந்து வருபவராக இருக்க வேண்டுமாம். ஏற்கனவே டாக்ஸி லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்குப் பிரச்சனையில்லை. நல்ல வேளை!. மராத்தி தெரிந்தால் டாக்ஸி ஓட்ட கூட தெரியவேண்டாம் போல. நல்ல சட்டம். பொதுவாக மும்பை மாநகரில் ஓடும் டாக்ஸி ஓட்டுநர்கள் பீஹார், உத்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். தவிர ஆண்டுக்கு 4000 புதிய டாக்ஸி உரிமங்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்கிறது புள்ளிவிவரம். ஏற்கனவே நவநிர்மான் சேனா என்ற அமைப்பு தீவிரவாதிகள் போல செயல்படுகிறது இப்ப அவர்களின் அராஜகத்திற்கு கொடி பிடிக்கும் விதமாக முதல்வர் அஷோக் சவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஒரு தேசியக் கட்சி ஒரு மாநிலக் கட்சியின் மொழி வெறிக்கு உரம் போட்டு அரசியல் ஆதாயம் தேட முனைகிறது. இது காங்கிரஸிற்கோ அல்லது மஹராஷ்டிராவிற்கோ நல்லதல்ல. சோனியா, மன்மோகன் சிங் எல்லாம் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தே மாதிரி செய்தால் பி.ஜே.பிக்கு ஏற்பட்ட கதி தான் காங்கிரஸுக்கு ஏற்படும். பைத்தியம் பிடிக்காத தோசைக்கல்லை தண்ணி தெளிச்சு விளக்குமாத்தால அடிக்கிறோம். ஆனால் .....

இந்த மாதிரி 'வெறி'யை நாட்டில் வைத்துக்கொண்டு இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவதற்கு நாம் இனவெறி, நிறவெறி என்று ஜல்லி அடிக்கிறோம். எப்படி ஆஸ்திரேலியாவை குற்றம் சொல்ல முடியும் ?

ஆஸ்திரேலியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஸ்ரீனிவாசன் என்பவரிடம் ஜெயா டிவியில் ரபி பெர்னார்ட் பேட்டி எடுத்தார். அவர் சொன்ன கருத்து கொஞ்சம் வித்தியாசமானது.

அவர் சொன்ன விவரம் இது தான் "அனைத்து நாடுகளிலுள் ரெளடிகள், சமூக விரோதிகள் இருப்பது போலத்தான் இங்கேயும் இருக்கின்றனர். மாணவர்கள் பயத்தின் காரணமாக புகார் கொடுக்க முன்வருவதில்லை. ஆனால் சமீபத்தில் கொல்லப்பட்ட சீக்கிய மாணவன் விவகாரத்தில்தான் இப்பிரச்சனை பூதாகாரமாகக் கிளம்பியுள்ளது" என்கிறார்.

அவர் சொன்ன இன்னொரு விஷயம் "ரயிலில் பின்னிரவு நேரத்தில் வீடு திரும்பும் போது அங்கிருக்கும் லோக்கல் தாதாக்கள் அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்க முயல்கின்றனர். பணத்தைக் கொடுத்து விட்டால் பிரச்சனையில்லை. அதை எதிர்த்து வாக்கு வாதம் செய்தால் அது அடிதடி துவங்கி பல விபரீதங்களுக்கு இட்டுச் செல்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர். இதில் தமிழர்களை மிரட்டினால் கொடுத்து விடுவார்களாம், ஆனால் சீக்கிய மாணவர்கள் அவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்வார்களாம். அதனால்தான் பிரச்சனை வருகிறதே தவிர, இதற்கும் இனவெறிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என அடித்துக் கூறினர்

நம்ம ஊரிலேயே மேற்படிப்பு படித்து குடும்பம்-குட்டி என்று சௌக்யமாக செட்டில் ஆகி கோயில்-கொளம் என்று போவதை விட்டுட்டு ஏன்தான் நம்ம இளைஞர்கள் இப்படி வேறு ஊர்களுக்கு சென்று வம்பை விலை குடுத்து வாங்குகிறார்களோ?!

ராகவேந்தரா கோயில் ஒன்றை சென்னையில் கட்டியுள்ள நடிகர் லாரன்ஸ் அனாதை குழந்தைகளை வைத்தே திறப்பு விழாவை நடத்தியுள்ளார். சினிமாக்காரர்களை அழைக்கவே இல்லையாம். ஏனென்றால் சினிமாக்காரர்களை பார்த்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கவனம் சிதறிவிடுமாம். நல்ல கருத்து!

இது இப்படி இருக்க, அமெரிக்காவில் சினிமாக்காரர்களை வைத்து வேறு மாதிரியான விளம்பரம் செய்துள்ளது ஒரு உயிரணு வங்கி. எங்களிடம் 'ஹாலிவுட்' நடிகர்கள் சிலரின் தோற்றத்தில் உயிரணு கொடையாளிகள் உள்ளனர். ஆகவே எங்களிடம் வாருங்கள், நடிகரின் சாயலில் குழந்தைகளைப் பெறுங்கள் என்று விளம்பரம் செய்துள்ளது. கோட்டு-சூட்டு தொடங்கி பீசா, பர்கர், ஹாலிவுட் படங்கள் என்று தொடர்ந்து இன்னிக்கு லேட்டஸ்டா டீலா-நோ டீலா வரைக்கும் ஒண்ணு விடாம எல்லாத்தையும் காப்பி அடிச்சே பழக்கப்பட்ட நம்ம ஊருல சீக்கிரமே மேற்படி விளம்பரங்களும் வரும் என்று எதிர்பாரு. வர்ட்டா! பை! பை! :-)

கடைசியாக ஒரு நம்பினால் நம்புங்கள் டைப் செய்தி: ஜனவரி மாதம் எப்போதுமே எழுத்தாளர்களுக்கு குஷியளிக்கும் மாதம். அம்மாதத்தில்தான் பதிப்பகத்தார் ராயல்டி செக்குகளை எழுத்தாளர்களுக்கு அனுப்பும் மாதம். முன்பெல்லாம் எழுத்தாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ராயல்டியைக் கொண்டு ஒரு இட்லிவடை கூட வாங்க இயலாது. ஆனால் இப்போது பேஜெரோ கார் வரை வாங்கலாம். தமிழ் உலகில் இல்லை ஆங்கில உலகில். இது கேலியல்ல. தருண் தேஜ்பாலுக்கு 2009 ஆ ஆண்டில் மட்டும் கிடைத்த ராயல்டி தொகை சுமார் 45 லட்சம், தவிர அவருடைய இரண்டு நாவல்கள் மூலமாக அவர் சம்பாதித்த தொகை சுமார் 3 கோடிகள்.

இப்படிக்கு
முனி

ஒரு வலைப்பதிவில் உங்களை மாதிரி + உங்களை பற்றி மஞ்சள் கமெண்ட் போடுகிறார்கள் பார்த்தீர்களா என்று ஒருவர் மெயில் அனுப்பியிருக்கார். அவருக்கு என் பதில் "முகத்துக்குப் போடும் க்ரீமை ஃபேஸ் க்ரீம்னு சொல்லலாம்; கண்களுக்குப் போடும் க்ரீமை ஐஸ்க்ரீம்னு சொல்ல முடியுமா ?" அது மாதிரி தான் அதுவும் :-)

Read More...

Tuesday, January 26, 2010

FLASH: இலங்கையில் குண்டுவெடிப்பு

இலங்கை யாழ்ப்பானத்தில் 13 இடங்களில் குண்டுவெடித்துள்ளது என்று செய்தி வந்துக்கொண்டு இருக்கிறது. பலர் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது...

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More...

Monday, January 25, 2010

நான் பார்க்காத முதல் குடியரசுதின விழா! - பாரதி மணி

அன்புள்ள இட்லிவடை:

முந்தைய கநாசு கட்டுரைக்கு நான் எதிர்பாராத வரவேற்பிருந்தது. பல பழைய நண்பர்கள் என்னை தொடர்புகொண்டு பாராட்டினார்கள். இட்லிவடைக்கு நல்ல வீச்சு!

கட்டுரையில் வரும் என் பக்கத்துவீட்டு இளைஞன் தான் இதை எழுதத்தூண்டுதல். இளைய தலைமுறைக்கு பல விஷயங்கள் தேவையற்றதாக இருக்கின்றது. தெரிந்துகொள்ள விருப்பமும் இல்லை. என்னைப்போன்ற ‘பெரிசு’களுக்கு இது கவலையைத்தருகிறது.

படித்துப்பாருங்கள். பிடித்திருந்தால், குடியரசு தினத்தன்று வெளியிடவும்.
பாரதி மணி


நான் பார்க்காத முதல் குடியரசுதின விழா! - பாரதி மணி

நான் தில்லிக்குப்போன பிறகு பார்த்த(?) முதல் குடியரசுதின விழா 1956-ம் ஆண்டு. உண்மையைச் சொன்னால் ஏதோ ஒரு படத்தில் பழம்பெரும் நடிகர் ’என்னத்தே’ கன்னையா சொன்னது போல் ‘பாத்தேன்….. ஆனா…. பார்க்கலே’ என்று சொல்வது தான் சரியாக இருக்கும். 150 சானல்களுள்ள டி.வி.யும் கையில் ரிமோட்டும் வராத காலம். அதற்கு முன்னால் எங்களூரில் சினிமாத் தியேட்டர்களில் மெயின் பிக்சருக்கு முன்னால் போடப்படும் Indian Newsreel No. 1049-ல் பிரதீப் ஷர்மா அல்லது மெல்வில் டிமெல்லோவின் விளக்கவுரையுடன் குடியரசுதின விழாவை திரையில் தான் பார்த்திருக்கிறேன்.

நான் 1955-ம் வருடம் தில்லி போனபோது, அந்த வருடத்திய குடியரசு விழா நடந்து முடிந்திருந்தது. 1956-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி விழாவுக்கு நேதாஜிநகர் அக்கா வீட்டுக்குப்பக்கத்திலிருந்த S.N. Depot-விலிருந்து அதிகாலை நான்கு மணியளவில் ஊர்வலம் நடக்கும் ராஜ்பத்துக்கு (அப்போது அந்தப்பெயர் சூட்டவில்லை Kingsway தான்) ஸ்பெஷல் பஸ்கள் விடுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது. சரி, போய்ப்பார்ப்போமே என்று தெரியாத்தனமாக முடிவு செய்தேன்.


தில்லிக்குளிரில், என் அக்கா மூன்று மணிக்கே எழுந்து, அவசர அவசரமாக தேங்காய்சாதம், பூரிக்கிழங்கு, தயிர்சாதம், வடாம் வற்றல்கள் தயார் செய்து கொடுத்தனுப்பினாள். காத்திராமல் பஸ் கிடைத்தது. ஆனால் டைவர்ஷன் என்கிற பெயரில் துக்ளக் ரோடு பக்கமாக இறக்கிவிட்டுவிட்டார்கள். அங்கிருந்து நடையோ நடை. இன்றைய போலீஸ் கெடுபிடியொன்றுமில்லாமல் ராஜ்பத் போய்ச்சேர்ந்தேன். விடியாத இருளில், கொண்டுபோயிருந்த ஜமுக்காளத்தை பனியால் நனைந்திருந்த புல்வெளியில் விரித்து குளிருக்கு இதமாக ஷாலை போர்த்திக்கொண்டு நாலரை மணிக்கே உட்கார்ந்துவிட்டேன். ஒன்பதரை மணிக்கு ராஷ்டிரபதிபவனிலிருந்து திறந்த குதிரை சாரட்டில் வரும் திரு. ராஜேந்திர பிரசாத் என்னைத்தாண்டித்தான் Saluting Base-க்குப்போகவேண்டும். பத்து நிமிடத்துக்குள் ராஜஸ்தானிலிருந்து ஒட்டகவண்டியில் ‘சப்பீஸ் ஜன்வரி’ பார்ப்பதற்காகவே தில்லி வந்த ஐந்தாறு ராஜஸ்தானி குடும்பங்கள் என்னை சுற்றி வளைத்து உட்கார்ந்துகொண்டன. அங்கே தண்ணீரில்லாத காரணத்தால் வருடத்திற்கொரு முறையே குளிப்பவர்கள். அணிந்திருக்கும் ஜிப்பா வேஷ்டி, நீண்ண்ட தலைப்பாகையை வருடத்திற்கு இருமுறை தோய்த்து விடுவார்கள்! தண்ணீரே கண்டறியாத அவர்கள் போர்த்தியிருந்த ரஜாய் நாற்றத்தையும் மீறின ஒட்டக வாசனை! ஐய்யோ, எப்படி இதை ஐந்துமணி நேரம் பொறுத்துக்கொள்வது என்ற யோசனையிலிருந்த போது ஆரம்பித்தது அதைவிட பெரிய பிராணாவஸ்தை! என்னைத்தவிர சுற்றியிருந்தவர்களுக்கு எல்லாம் தீவிர Gas Trouble! போதாததற்கு முந்தைய இரவு அளவுக்கதிகமாக வேர்க்கடலையும், மூலி என்றழைக்கப்படும் முள்ளங்கியும் பச்சையாக நிறைய சாப்பிட்டிருக்க வேண்டும். அவர்கள் போர்த்தியிருந்த கனமான ரஜாயையும் மீறி அவர்களது அபானவாயுத் தொல்லை தாங்கமுடியவில்லை. ’குடியரசு’ என்ற வார்த்தையின் முதல் எழுத்தையும் கடைசியெழுத்தையும் தன் பெயராகக்கொண்டிருந்தாலோ என்னவோ அந்த வாயு அன்று என்னை ரொம்பவே படுத்தியது. ’மெளனம் பிராணசங்கடம்’ என்ற பழமொழியின் பொருள் அன்றுதான் தெரிந்தது. ஒருவர் மாற்றி ஒருவராக முறை வைத்துக்கொண்டு என்னைப் பழிவாங்கினார்கள். எழுந்து ஓடிவிடலாமா என்ற யோசனையை தற்காலிகமாக ஒத்திப்போட்டேன். ஏனென்றால் நான் உட்கார்ந்த இடம் ஜனாதிபதி உட்காரப்போகும் Saluting Base அருகிலிருந்தது. தவிர இந்தியா கேட் வரை கூட்டம் நிரம்பிவிட்டது. குடியரசுதின விழா பார்க்க வந்ததற்கான தண்டனை இது. சகித்துத்தான் ஆகவேண்டும். ஆனால் எப்படி? பார்வதிபுரத்தில் நான் கற்றுக்கொண்ட பிராணாயாமம் கைகொடுக்குமென்று நினைத்து, எழுந்து நின்று மூச்சை உள்ளடக்கி நிறுத்திக்கொண்டேன். அதையும் மீறித்தாக்குகிறது. கொஞ்சநேரத்தில் இதுவும் பழகிவிடும் என்று நினைத்து மறுபடியும் உட்கார்ந்தேன். அன்று நான் பட்ட அவஸ்தை வேறு யாருக்கும் நேரக்கூடாது! அரைநூற்றாண்டுக்குப்பிறகும் இன்னும் மறக்காத அனுபவம்! கொஞ்ச நேரத்தில் கிழக்கு வெளுத்து விடிய ஆரம்பித்தது. நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே அதிகாலை பனிமூட்டத்தையும் மீறி சூரியவெளிச்சத்தில் பிரும்மாண்டமான இந்தியா கேட் தெரிகிறது. அப்போது மணி ஆறரை தான். இன்னும் மூன்றுமணிநேரத்தை இந்த நரகவேதனையில் எப்படி கழிக்கப்போகிறேன் என்பதுதான் அப்போதைய தலையாய -- இல்லை, மூக்காய --பிரச்னை!


ஒருவழியாக நான் மயக்கமடையாமல் அந்தவேளையும் வந்தது. குடியரசு மாளிகையிருந்த ராய்ஸினா குன்றிலிருந்து குதிரைப்படை முன்னே வர ஜனாதிபதி அமர்ந்து வந்த சாரட் வண்டியின் குளம்பொலி கேட்கத்தொடங்கியது. அடுத்தநொடியே எங்கள் நாகர்கோவில் கிருஷ்ணா தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த புதுப்படம் ரிலீஸாகும் முதல்நாள் முதல் ஷோ டிக்கெட் கெளண்டருக்கு முன்னால் இருப்பது போலிருந்தது. பின்னாலிருந்து முன்னேறி வரும் கூட்டத்தை தாக்குப்பிடிக்கமுடியாமல் கீழே விரித்திருந்த பெட்ஷீட், உணவுப்பொட்டலங்கள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு பின்னால் நகர்ந்தேன். கொஞ்சம்கொஞ்சமாக பின்னுக்குத்தள்ளப்பட்டு கடைசிஆளாக ஒரு கேனையனைப்போல் முழித்துக்கொண்டிருந்தேன். குதிரைகளின் குளம்புச்சத்தம் மட்டும் கேட்கிறது; ஆனால் முன்னால் முண்டியடித்துப்போனவர்களின் தலைகள் தான் தெரிகிறது. நானிருக்கும் உயரத்துக்கு எட்டியும் பார்க்கமுடியாது!

எனக்கு வந்த ‘நபும்சக’ கோபத்தில், கூட்டத்தைவிட்டு வெகுதூரத்தில் புல்தரையில் பெட்ஷீட்டை விரித்து தனியாக உட்கார்ந்து கொண்டுவந்திருந்த வாரப்பத்திரிகைகளை படிக்கத்தொடங்கினேன். கம்பத்துக்கு கம்பம் கட்டியிருந்த ஒலிபெருக்கியிலிருந்து ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நேர்முக வர்ணனை மட்டும் தெளிவாகக்கேட்டது. பக்கத்திலிருந்த மரத்திலேறிப்பார்ப்போமா என்று ஒரு சின்ன யோசனை. சிறுவயதிலிருந்தே மரமேறிப்பழக்கமில்லாததால், அந்த யோசனையை உடனே கைவிட்டேன்!


சிறிதுநேரத்தில், ‘வீட்டிலிருந்தால் இப்போது ரேடியோ கமென்டரியைத்தானே கேட்டுக்கொண்டிருப்போம்’ என்ற நொண்டி சமாதானத்தோடு பத்திரிகையை மீண்டும் கையிலெடுத்தேன். அப்போது ஒரு மூன்று-நான்கு வயது குழந்தையொன்று என்னை நோக்கி ஓடிவந்தது. வேற்றுமுகம் பாராமல் என் மடியில் உட்கார்ந்து என் கண்ணாடியை பிய்த்தெடுத்தது. என் மூக்குக்குள் தன் பிஞ்சுவிரலை விட்டு எதையோ தேடியது. தில்லி எருமைப்பால் ஊட்டி வளர்த்த கழுக் மொழுக் பஞ்சாபிக்குழந்தை. அழகான குழந்தை. என் சட்டைப்பாக்கெட்டில் என்ன, கொண்டுவந்த பையில் என்னவிருக்கிறதென்று ஆராய ஆரம்பித்தது. ’க்யா நாம் ஹை, பேட்டா?’ என்ற என் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியவில்லை. சுற்றுமுற்றும் குழந்தையின் பெற்றோர்கள் தென்படுகிறார்களாவென்று பார்த்தேன். ஊஹூம்...குழந்தையின் பக்கம் யாரும் திரும்பவில்லை. எல்லோரும் அப்போது மேஜர் பிரதாப்சிங் தலைமையில் அணிவகுத்துச்செல்லும் ராஜ்புட்டாணா ரைபிள்ஸ் ஜவான்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்தக்குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? ‘பிள்ளை பிடிப்பவன்’ என்று போலீஸ் வந்து ரெண்டு தட்டு தட்டினால் என்ன பதில் சொல்ல? நான் நல்லவன் தான் என்று சொல்ல குழந்தைக்கு பேசவும் தெரியாது! அக்கா கொடுத்துவிட்டிருந்த பொட்டலத்திலிருந்த நாடா பக்கோடாவை நானும் குழந்தையும் – நான் கொஞ்சமாக குழந்தை நிறைய்ய – சாப்பிட்டு முடித்தோம். திரும்பிப்பார்த்ததில் ஊர்வலத்தில் போய்க்கொண்டிருந்த ஆவடி டாங்க்கின் மூக்கு மட்டும் உயரத்தில் தெரிந்தது. இத்தனைதூரம் வந்ததற்கு, கொண்டுவந்த சாப்பாட்டையாவது ஒழுங்காக சாப்பிடலாமென்று நினைத்து, ஒலிபெருக்கிகளிலிருந்து வரும் ரன்னிங் கமெண்டரியைக் கேட்டுக்கொண்டே தேங்காய்சாதம், பூரிக்கிழங்கு, தயிர்சாதம் என்ற ஆர்டரில் ஒவ்வொன்றாகப்பிரித்து குழந்தைக்கும் ஊட்டிவிட்டு நானும் சாப்பிட்டேன். அந்த பஞ்சாபிக் குழந்தைக்கு இதுதான் முதல் தென்னிந்திய உணவாக இருந்திருக்கவேண்டும். என் மருமகன்களைப் போல் படுத்தாமல் சமத்தாக (நிறைய்ய்ய) சாப்பிட்டது. பக்கத்திலிருந்த ஃபெளண்டன் அருகில் போய் குழந்தைக்கு கைகழுவி வாயைத்துடைத்துவிட்டேன். சாப்பிட்ட தெம்பில் குழந்தை என்னைச்சுற்றி ஓடி விளையாடத்தொடங்கியது. குளிருக்காக கொண்டுவந்திருந்த (என் அத்தானின்) குரங்குக்குல்லாயை நான் வீசியெறிய, குழந்தை கொள்ளைச்சிரிப்புடன் ஓடிப்போய் அதை எடுத்து வந்தது. இதையே ஒரு விளையாட்டாக கொஞ்சநேரம் தொடர்ந்தோம். இதற்கிடையில், ஒலிபெருக்கிகளில் ‘கடைசி ஐட்டமாக விமான அணிவகுப்பு நடைபெறும்’ என்ற அறிவிப்பு வந்தது. ‘போங்கடா, இதைப்பார்க்க உங்க தயவு தேவையில்லை’ என்று மனதில் நினைத்துக்கொண்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே அண்ணாந்து பார்த்தேன். முதலில் மலர் தூவிக்கொண்டே வந்த இந்தியக்கொடியேந்திய ஹெலிகாப்டர்கள். தொடர்ந்து 2, 3, 4, 3, 2 என்ற Formation-ல் ஜெட் விமானங்கள், கடைசியாக ஆரஞ்ச், வெள்ளை, பச்சைக்கலரில் புகையுடன் ஆகாயத்தைக்கிழித்துக்கொண்டு மேலே போய் மறையும் மூன்று ஜெட் விமானங்கள். சுபம்! அந்த வருடத்து ரிபப்ளிக் டே பரேட் நான் பார்க்காமலே இனிதே நிறைவுற்றது. என்னை பார்க்கவிடாமல் பின்னுக்கு தள்ளிய நாசகாரக்கூட்டம் கலைந்து செல்ல ஆரம்பித்தது. ஆமாம், இப்போது இந்தக்குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய? சரி, கூட்டம் குறையட்டும் என்று சற்றுநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். அந்த அழகான குழந்தையின் பெற்றோர் கூட்டத்திலிருந்து விடுபட்டு வந்து, ‘அரே முன்னா, அங்க்கில் கே ஸாத் மஸ்தி கர் ரஹே ஹோ! அங்க்கில் கோ சுக்ரியா போலோ’ என்று குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு, என்னிடம் ‘படுத்தாமல் இருந்தானா? ரொம்ப தாங்க்ஸ்’ என்று விடைபெற்றுச் சென்றார்கள். அவர்கள் குழந்தைத்தொந்தரவு இல்லாமல் இரண்டுமணி நேரம் ‘சப்பீஸ் ஜான்வரி பரேட்’ பார்க்க, இந்த ‘அசமஞ்சம்’ Babysitting பண்ணி்க் கொண்டிருந்தது! அவர்கள் போனபின் தான் குழந்தையின் பெயரை கேட்டுவைத்துக்கொள்ளவில்லையே என்று தோன்றியது. அந்தக்குழந்தைக்கு இன்று 56 வயது ஆகியிருக்கும்! நிச்சயமாக என்னை அவருக்கு நினைவிருக்காது!

வீட்டுக்குப்போனதும், என் அக்கா கேட்ட ’எப்படீடா இருந்தது? எல்லாம் பாத்தியா?’ என்ற கேள்விக்கு, ‘நீ தந்துவிட்ட தேங்காய்சாதமும், பூரிக்கிழங்கும் நன்னா இருந்துது’ என்றுதான் என்னால் பதில் சொல்லமுடிந்தது!

அதற்குப்பிறகு தில்லியில் எனக்கென ஒரு விலாசமும் அதையொட்டிய ’வியாபகமும்’ வந்தபிறகு, பாதுகாப்பமைச்சகத்திலிருந்து VVIP Pass வாங்கி பலமுறை குடியரசுத்தலைவர் அமரும் பகுதியிலேயே உட்கார்ந்து பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தபோதும் என் முதல் அனுபவம் மறக்கமுடியாதது. 1982-க்குப்பிறகு இந்தியாவில் கலர் டிவி வந்தபின் தில்லி தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பை வீட்டிலிருந்தே பார்க்க வசதி வந்துவிட்டதால், அதற்குப்பிறகு போனதேயில்லை.

இந்தத்தலைமுற இளைஞர்கள் எத்தனை பேருக்கு Beating the Retreat என்பதன் பொருள் தெரியும்? போனவருடம் ஜனவரி 29-ம் தேதி மாலை என் சென்னைவீட்டில் எனக்கு மிகவும் பிடித்த, நான் ஆண்டுதோறும் தவறாமல் பார்க்கும் இந்த நிகழ்ச்சியை தில்லி தூர்தர்ஷனில் பார்த்துக் கொண்டிருந்தபோது, என் பக்கத்துவீட்டு இளைஞன் என்னைப்பார்க்க வந்தான். அவனுக்கு இதைப்பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. நீ இந்தியனாக இருக்கவே லாயக்கில்லாதவன் என்ற கோபத்துடன் ’உன் தந்தையிடம் போய்க்கேள்’ என்று சொல்லியனுப்பினேன். அந்த மகானுபாவருக்கும் பீட்டிங் தி ரெட்ரீட் பற்றி எந்த தகவலும் இல்லை. இன்னும் நான்கு இளைஞர்களிடம் கேட்டேன். They were also blissfully ignorant about this grand National Ceremony!

தமிழ்நாட்டில் இன உணர்வு என்று சொன்னவுடனேயே, பலருக்கும் ‘கல்தோன்றி மண்தோன்றாக்காலமும்’, ‘புலியும் முறமும்’ தான் முதலில் ஞாபகத்துக்கு வருகிறதென்று நான் சொன்னால், என் வீட்டுக்கும் ஆட்டோ வரலாம். நான் சொல்வதெல்லாம், Both our ancient Tamil Pride and National Pride can peacefully co-exist within ourselves without any quarrels என்பது தான்! அவை ஒன்றுக்கொன்று விரோதிகளல்ல. இதற்கு ஐம்பதுகளில் நமக்கு போதிக்கப்பட்ட ஹிந்திவெறுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். தேசியத்தையும் இந்தியையும் நாம் ஒருசேரப்பார்க்கிறோம். தமிழக அரசியலை வெளியிலிருந்து கவனித்துவருபவன் என்ற நிலையில், நம்மில் பலருக்கு தேசிய உணர்வு என்பது நீர்த்துப்போயிருக்கிறதென்பதே உண்மை. சென்னை கோட்டையில் ஆண்டுக்கொருமுறை கூடி தேசிய உறுதிமொழியை அச்சிட்ட காகிதத்தைப்பார்த்து படித்துவிட்டு, போகும்போது அதை காற்றில் வீசிவிட்டுத்தான் போகிறோம். தூக்கத்திலிருந்து எழுப்பிக்கேட்டாலும், ‘நான் ஓர் இந்தியன்’ என்று மிடுக்கோடு பதில் வருவதற்கு மாறாக, ‘I am also an Indian’ என்று யோசித்து சொல்லும் பதிலாக இருக்கிறது. தேசியம் என்பது நமக்கு தமிழ்நாட்டைத்தாண்டி, தில்லி போகும்போது குளிருக்கு போர்த்திக்கொள்ளும் ஒரு போர்வையாகவே உள்ளது. பட்டிமன்ற மேடைகளில் மட்டுமே பகத்சிங், லாலா லாஜ்பத் ராய், ராணி லட்சுமிபாய் போன்ற பெயர்களில் ஒரு பேசுபொருளாக உதவுகிறது. நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள், தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு நமது தேசியகீதத்தை முழுவதுமாக, கடைசி வரி வரை பிழையின்றி – ஆம், பிழையின்றி – உரக்கப்பாடத்தெரியும்? நிச்சயமாக அது இந்திமொழியில் இல்லை! பாராளுமன்றம் சென்னையிலிருந்து இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்! ‘இப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்ன சார் பிரயோசனம்?’ என்று பதில்கேள்வி கேட்ட என் பக்கத்துவீட்டு இளைஞன் தான் இன்றைய சமூகத்தின் முகம்!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ம் தேதி தொடங்கும் நமது குடியரசுதின விழா 29-ம் தேதி மாலை ஆறுமணிக்கு Beating the Retreat நிகழ்ச்சியுடன் இனிதே நிறைவடையும். Grand Finale! 2009-ம் ஆண்டு மட்டும் அந்த சமயத்தில் நம் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் இறந்துபோனதால் Beating the Retreat நடைபெறவில்லை. 1690-ல் இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ்-II காலத்திலிருந்து நடந்துவருகிறது. போருக்கு புறப்பட்ட படைகள் வெற்றிவாகை சூடி சூரிய அஸ்தமனத்துக்குப்பின் போரை நிறுத்திவிட்டு, மகிழ்ச்சியுடன் தங்கள் (Barracks) பாசறைகளுக்குத் திரும்பும் நிகழ்ச்சி. இந்தியா குடியரசான பின் 1950-ல் மேஜர் ராபெர்ட் தலைமையில் முதல்முறை நடைபெற்றது.

நான் தில்லியில் இருக்கும்போது ஒவ்வொரு வருடமும் நேரிலோ அல்லது தூர்தர்ஷனிலோ தவறாமல் கண்டுகளிக்கும் நிகழ்ச்சி. எத்தனைதடவை பார்த்தாலும் அலுக்காமல், ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் முப்படைகளின் Brass, Pipes and Drums இசைக்கருவிகளின் சங்கமம். சரியாக மாலை ஐந்துமணிக்கு ராய்ஸினா குன்றின் மேலிருக்கும் ராஷ்ட்ரபதி மாளிகையிலிருந்து தாளகதி தவறாமல் வாசிக்கும் இசைக்கேற்ப விஜய் செளக் நோக்கி அணிவகுத்து நடந்துவரும் முப்படை வீரர்கள் பார்க்க புற்றிலிருந்து வெளிவரும் எறும்பு வரிசை போலிருக்கும். எனக்கும் காந்திஜிக்கும் மிகவும் பிடித்த ‘Abide with me…’ என்ற hymn எப்போது வருமென்று காத்திருப்பேன். நடுவில் ட்ரம்கள் மட்டுமே பங்கெடுக்கும் Drummers’ Call தனியாவர்த்தனம். தொடர்ந்து முப்படைகளின் சக்ரவியூக ஃபார்மேஷனில் Veer Kargil, Deshon Ka Sartaj, Pyaari Bhoomi இப்படி வந்து காதையும் கண்ணையும் நிறைக்கும். ஒருமணிநேரம் போவதே தெரியாது. கடைசியாக கோரஸில் Saare Jahan Se Achchaa Hindustan Hamaaraa வாசித்துக்கொண்டு அனைவரும் திரும்பிப்போகும்போது நமது இந்தியமனம் இசையில் கரைந்து, அவர்களோடு போய்விடும். அந்த அந்தியிருட்டில், மணிச்சத்தத்துக்கிடையே ராஷ்டிரபதி பவன், செளத் ப்ளாக், நார்த் ப்ளாக், பாராளுமன்றக்கட்டடம் எல்லாம் ஒரே நேரத்தில் வரிசை விளக்குகளால் ஒளிமயமாகக் காட்சியளிக்கும். அந்த க்ஷணத்தில் ஒருதுளி தேசிய உணர்வுள்ளவருக்கும் நெஞ்சு இரண்டு இஞ்சாவது விம்மியிருக்கும். அதற்கு நான் காரன்ட்டீ!

என் மூத்தமகள் ரேவதியின் திருமணம் ஜனவரி 29-ம் தேதிதான் நடந்தது. அன்றுமாலை ரிசப்ஷனுக்கு வந்திருந்த விருந்தினர் நண்பர்கள் பார்க்க ஏதுவாக கல்யாண மண்டபத்தில் பெரிய திரையில் அன்று மாலை ஒளிபரப்பான Beating the Retreat திரையிடப்பட்டது. கல்யாணக்கச்சேரி, இசைநிகழ்ச்சிக்கு பதிலாக, ஆர்மியில் ‘பெரிய இடத்து’ சிபாரிசு மூலம் Indian Army Band தான் ஏற்பாடு செய்திருந்தேன். சாதாரணமாக ‘தனிநபர்’ நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் போவதில்லை. அந்த அளவுக்கு எனக்கு அதில் மோகம்.

இதுவரை இந்த Musical Bonanza-வை நீங்கள் பார்த்ததில்லையென்றால், இந்த மாதம் கடைசி வெள்ளிக்கிழமை 29-ம் தேதி மாலை ஐந்துமணிக்கு தில்லி தூர்தர்ஷனில் Beating the Retreat நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள். நமது ’அசட்டு’ தூர்தர்ஷன் தான் சில உருப்படியான நிகழ்ச்சிகளை இன்னும் தந்துகொண்டிருக்கிறது! இந்த ஒருமணி நேரம் மற்ற சானல்களில் வரும் மானாட மயிலாட...டீலா, பீலா?.....சூப்பர் 10.....அவனா அவளா?.....சிரி சிரி...’விடுமுறைதின’ சிறப்பு நிகழ்ச்சிகளை மறந்துவிட்டு இதை பாருங்கள். ’நான் ஓர் இந்தியன்!’ என்ற பெருமிதத்தில் உங்கள் நெஞ்சு ஒரு இஞ்சாவது விம்மிப்புடைக்காவிடில், பணம் வாபஸ்! அதற்கும் நான் தான் காரன்ட்டீ!
- பாரதி மணி
’காலச்சுவடு’ ஜனவரி 2010 இதழில் வெளிவந்தது

எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!

Read More...

Sunday, January 24, 2010

சன்டேனா இரண்டு (24-1-10) செய்திவிமர்சனம்


இந்த வார செய்திகள் .... 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்' ஸ்பெஷல்.

செய்தி # 1

"சுதந்திரம் அடைந்த பின் காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள்" என்று சொன்னார் காந்தியடிகள்.
ஆனால்,அவ்வாறு நடக்கவில்லை. மாறாக, இந்தியாவின் மூலை, முடுக்கு எல்லாம் பரவிகிடந்த காந்தியின் புகழை தனது அரசியல் லாபதுக்கு முழுமையாக பயன்படுத்தி கொண்டது காங்கிரஸ் கட்சி .

காந்தியின் கைத்தடி, பதவி நாற்க்காலியின் கால் என மாற்றப்பட்டது. பொது உடைமையாய் இருக்க வேண்டிய காதராடையும், கைத்தறியும் கட்சியின் தனி உடைமை என்று சொந்தம் கொண்டாடி கொண்டார்கள்.

நமது பள்ளி பாட புத்தகங்களிலும், வரலாற்றிலும் காந்தி அவர்கள் மட்டுமே முன்நிறுத்தபட்டார்.

காந்தி தாத்தா, நேரு மாமா என்று உறவுகளாய் குழந்தைகள் மனத்தில் அறிமுகபடுத்தபட்டு, பின்னர் காங்கிரஸ் கட்சியை காந்தி நிறுவினார் என்று திட்டமிட்ட பாடதிட்டம் உருவாக்கபட்டு, அது இன்றும் நடைமுறையில் இருக்கிறது. தங்களின் சுயநல அரசியலுக்காக காந்தியின் முகத்தில் வெளிச்சம் காட்டிய அரசியல்வாதிகள் , நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட பல தியாகிகள் முகத்தில் இருட்டு அடித்தனர்.

அவ்வாறு மறைக்கபட்ட மாவீரர்களில் முதன்மையானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். ஏப்ரல் 1891 இல் இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.

ஒருமுறை நேதாஜி சென்னை வந்தபோது மாடிப்படி ஏறுகையில், வரவேற்க இரண்டு, இரண்டு படிகளாக தாவிச் சென்றார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் . இவரிடம் அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தார் நேதாஜி. தமிழக பார்வர்ட் பிளாக்கின் கிளையை துவங்கி வைத்து, அதன் தலைவராக தேவரை அறிவித்தது மட்டுமல்லாமல், "தேவர் தென்னாட்டு போஸ்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் போஸ்.

சுவாமி விவேகானந்தர் அவர்களின் ஆன்மீக வழியில் நடந்த போஸ், "வேதாந்தமும், பகவத் கீதையுமே பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக மக்களை வழி நடத்தும் கருவிகள் " என்று அறிவித்தார்.

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல" என்று முழங்கினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அறிவிக்க பட, ஆனால் 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது.

சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு ஜனவரி 23ந்தேதி (நேற்று) , 113 வது பிறந்த நாள்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய முழு விவரங்களுக்கு இங்கே செல்லவும் .

http://www.netaji.org/செய்தி # 2

சென்னையில் நேதாஜி நினைவு இல்லத்தை எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் பராமறித்து வருவதாக ஒரு கட்டுரை படித்தேன்.

அந்த கட்டுரையில் இருந்து...

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு, 1939ம் ஆண்டு, செப்டம்பர் 3,4,5 ஆகிய தேதிகளிலும், பின் 1940 ம் ஆண்டு, ஜனவரி 10,11 ஆகிய தேதிகளிலும் வந்து தங்கியுள்ளார்.

தேச பக்தரான அய்யாசாமி என்ற பொறியாளர், 1930ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தங்கினார் நேதாஜி. இப்போது, அய்யாசாமியின் பேரனான, எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும், புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்.

நேதாஜி வந்து தங்கியிருந்த போது ஆன செலவு, தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போகிறது. கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட பல அரிய படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்தும் போட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் அவர் தங்கியிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும், இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது காங்கீரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது.

நேதாஜியின் தமிழக வருகையை சரியான ஆவணங்களுடன், நிறைய ஆதாரங்களையும் கொண்டு ஒரு சாட்சியாக நிற்கும் இந்த நினைவு இல்லத்தை பராமரிப்பது தற்போது தனஞ் ஜெயாவிற்கு சிரமமாக உள்ளது. வாடகைக்கு விட்டால், ஒரு நொடியில் வர்த்தகமயமாக்கி, இதன் அருமை தெரியாமல் செய்துவிடுவர்.

ஆகவே, நேதாஜியின் நினைவுகளை தாங்கி நிற்கும் இந்த இடத்தை, அதன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்க விரும்புவர்களும்,நேதாஜி நினைவு இல்லத்தை சுற்றிப் பார்க்க விரும்பு பவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 09381001793.

(நன்றி..இனி அடுத்த வாரம்)

-இன்பா
நேற்று அவர் பிறந்த நாள் என்று எவ்வளவு பேருக்கு நினைவு இருந்தது ?

Read More...

Friday, January 22, 2010

அம்புலிமாமா என்னும் ஆயிரத்தில் ஒருவன் - ஹரன்பிரசன்னா

ஹரன்பிரசன்னா ஆயிரத்தில் ஒருவன் பற்றி எழுதியிருக்கும் விமர்சனம்.
இதை எழுத செல்வராகவனைவிட நிறைய உழைத்திருக்கிறார்...

அந்த மந்திரவாதியின் உயிர் கிளிக்குள்ளே இருக்கிறது. அக்கிளி ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு தீவில் உள்ளது. அக்கிளியை அடைவது சுலபமல்ல. ஏழு கண்டங்களைத் தாண்டவேண்டும் விக்கிரமன். விக்கிரமந்தான் கார்த்தி. கிளிதான் சோழமன்னன் என்று சொன்னால் செல்வராகவனும், மிகக் கடுமையாக உழைத்த அவரது ஒட்டுமொத்த யூனிட்டும் கடும் விரக்தி அடையக்கூடும். ஆனால் அப்படித்தான் இருக்கிறது இப்படம்.

அனகோண்டா திரைப்படம் போல ஒவ்வொருவராகச் சாகிறார்கள். ஏற்கெனவே இதுபோன்ற எவ்வித உப்புச்சப்புமில்லாத பல ஆங்கிலப் படங்களைப் பார்த்து பழகிவிட்ட நமக்கு இத்திரைப்படம் தருவது வெறும் பொறுமையின்மையை மட்டுமே. சோழ மன்னன், பாண்டிய வம்சப் பகை என்றெல்லாம் கொஞ்சம் மசாலா சேர்த்துப் பார்த்திருக்கிறார்கள்.

எனது ரசனையில் மிகச் சமீபத்தில் வந்த மிகச்சிறந்த தமிழ்த்திரைப்படங்களில் ஒன்று புதுப்பேட்டை. தற்போதைய இயக்குநர்களில் எனக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இதனால் இத்திரைப்படமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி எதையோ எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை. படம் வருவதற்கு முன்பு அடிபட்ட பேச்சுக்கள் என்னை மிகவும் பரவசப்படுத்தின. சோழ வம்சம் என்றார்கள், அவரைத் தேடுதல் என்றார்கள். அவை எல்லாம் இப்படி வெறும் கற்பனைக்குள் அடங்கிப் போகும் என எதிர்பார்க்கவில்லை.

சோழ மன்னனும் சோழ வம்சமும் இப்படி ஏன் சித்தரிக்கப்பட்டார்கள் என்பதும் தெரியவில்லை. ஆயிரம் ஆண்டுகளாக வெளி உலகைப் பார்க்காதவர்கள் என்பதெல்லாம் சரி. சோழ மன்னன் நடந்து வரும்போது, சிலரின் தலை கொய்யப்பட்டு ஏன் ரத்த நடைபாதையில் அவன் நடந்து வரவேண்டும் என்பதெல்லாம் புரியவே இல்லை. அதிலும் ஒரு பெண் தன் மார்பைப் பிழிந்து ரத்தத்தைக் காண்பித்து உணவு வாங்கிப் போகிறாள். கிளாடியேட்டர் திரைப்படம் போல ஒரு சதுக்கத்தில் அனைத்து அடிமைகளும், பிறநாட்டுப் பிரஜைகளும் கல்லால் பந்தாடப் படுகிறார்கள். இதையெல்லாம் செல்வராகவன் பெரும் கவனத்தோடும், அதிகபட்ச உழைப்போடும் எடுத்திருக்கிறார். ஆனால் ஏன் என்றுதான் தெரியவில்லை. பழங்கால மக்கள் எல்லாருமே சூனியக்காரர்கள்தான் என்று நினைக்கத் தோன்றுவதுபோல, சோழ மண்ணை மிதித்ததும் எல்லாமே மாயமாக நிகழத் தொடங்குகிறது. செல்வராகவன் பாலகுமாரன் ஆனதெல்லாம் கொஞ்சம் அதிகம்.

இதில் முதல் பாதியில் கார்த்தி அடிக்கும் ஜோக்குகள் எல்லாம் படத்தோடு ஒட்டாமல் தனித்தே நிற்கின்றன. என்னென்னமோ பேசுகிறார். இதில் ரீமா சென்னும் இன்னொரு நாயகியும் ஆங்கிலத்தில் எல்லாம் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். எல்லாம் fucking சண்டை. அனகோண்டா, ப்ரீடேட்டர் போன்ற படங்களைப் போல் ஆகிவிட்டன இக்காட்சிகள். எனக்கென்னவோ இப்படமே அப்படிப்பட்ட ஒரு பாதிப்பில் எடுக்கப்பட்டதாகத்தான் தோன்றுகிறது.

இராணுவ வீரர்களும், அரசு அதிகாரிகளும் எள்ளளவு கூட கருணை அற்றவர்கள் என்ற முடிவுக்கே வந்துவிட்டார் போல இயக்குநர். அதுவும் கடைசிக்காட்சிகளில் அவர்கள் செய்வதாகக் காட்டப்படும் வன்கொடுமைகளெல்லாம் அதிகபட்ச கற்பனை. காணாமல் போல ஓர் அதிகாரியைத் தேடிப் போகும் அரசு ஏன் இப்படி கண்ணில் தென்படும் எல்லா ஆதிவாசிகளையும் கொன்று குவிக்கவேண்டும்? என்னதான் கதை லாஜிக் இல்லாததாக இருந்தாலும், இப்படி எல்லாக் காட்சிகளுமா லாஜிக் இல்லாமல் இருக்கும்?

போதாக்குறைக்குப் பாடல்கள். முக்கியமான காட்சிகளில் எல்லாம் பாடல்கள். தமிழின் மாயா தலையெழுத்து. மணிரத்னம், கமல் உள்ளிட்ட பெரும் சாதனையாளர்களே இதிலிருந்து வெளியேற முடியாத நிலையில், செல்வராகவன் மட்டும் என்ன செய்துவிடமுடியும். சோழ தேசத்தைக் கண்டுபிடித்ததும் ‘உன் மேல ஆசைதான்’ என்று ஆடுகிறார்கள். தமிழர்களாகிய நம்மை நினைத்து நாமே பரிதாபப்பட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

செல்வராகவன் மிக அதிகமாக யோசித்து, உயிரை விட்டுப் படம் எடுத்திருக்கிறார் என்பதெல்லாம் உண்மைதான். அவரது உழைப்பிலோ, நோக்கத்திலோ பிழையில்லை. ஆனால் எதை எப்படி எடுக்கவேண்டும், இத்தனை உழைப்பும் சரியான இடத்துக்குப் போகிறதா என்பதை அறிந்துகொள்வதில் அவர் போகவேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்பதையே இப்படம் முகத்தில் அறைந்தாற் போலக் காட்டுகிறது. இத்தனை சீரியஸாகப் படம் எடுக்கும்போது, தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகளை வைப்பதும், பார்த்திபன் போன்ற அதிஉன்னதம் கூட்டப்பட்ட ஓர் அரசன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நவீன வில்லன் போல அதைச் சுட்டுப் பார்ப்பதுமாகிய காட்சிகள், சில நொடிகள்தான் வருகின்றன என்றாலும், இவை படத்தின் சீரியஸ் தன்மையைக் கடுமையாகச் சிதறடிக்கின்றன.

ஜி.வி. பிரகாஷ் இசை. பாடல்களிலெல்லாம் கொஞ்சம் தேறிவிட்டாலும், பின்னணி இசையில் அவரது வயதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்.

ரீமா சென்னின் நடிப்பு, கார்த்தியின் நடிப்பு என எதிலும் பிரச்சினையில்லை. பார்த்திபனின் வாழ்க்கையில் அவரைப் பொருத்தவரை இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். பழங்கால சோழர்கள் காலத்தில் பேசும் தமிழை அப்படியே கொண்டுவரப் பாடுபட்டதில் (வசனத்துக்கு உதவியர் கல்வெட்டாய்வாளர் ராமசந்திரன். எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட ‘மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக்கட்டுரைகள்’ என்ற நூலின் ஆசிரியர்) மிகக் கடுமையான உழைப்புத் தெரிகிறது. படத்தைப் பார்க்கும்போது இவையெல்லாம் பரிதாபமான விஷயங்களாகிவிட்டன.

இன்னொரு பரிதாபப்பட வேண்டிய விஷயமும் இருக்கிறது. சாரு நிவேதிதா குறித்து. அவர் ஒரு திரைப்படத்தையும் அத்திரைப்படத்தின் இயக்குநரையும் பாராட்டினால், அடுத்த படத்திலேயே அந்த இயக்குநர் அவர் வாயில் விழவேண்டியிருக்கிறது. அப்படி செய்துவிடுகிறார்கள் இயக்குநர்கள். சுப்ரமணியபுரம் திரைப்படத்தைப் பாராட்டினார் சாரு. அடுத்த படத்தைப் பார்த்த சாரு பொங்கி எழுந்துவிட்டார். நாடோடிகள் படத்தைப் பார்த்தபோது சாருவின் கோபம் எத்தனை சரியானது என்பது புரிந்தது. செல்வராகவனைப் பாராட்டிய சாரு இப்போது என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து கொஞ்சம் ஆவலாகத்தான் (பயமாகவும்) இருக்கிறது.

இது சீரியஸ் படம்தான் என்றாலும், குழந்தைகள் பார்க்கவேண்டிய திரைப்படம் என்று மார்க்கெட்டிங் செய்தால், படம் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. :-)

- ஹரன்பிரசன்னா

"நீங்க சொன்னதால தான் நான் இந்த படம் போனேன், உங்களால் எனக்கு 300/= வேஸ்ட்" என்றார். செல்வாவிடம் சொல்லியிருக்கேன், பிரசன்னாவிற்கு 300 ரூபாய் அல்லது அடுத்த படத்தில் நடிக்க ஒரு சான்ஸ் தருவதாக சொல்லியிருக்கார். எது வேண்டும் பிரசன்னா ?

Read More...

Wednesday, January 20, 2010

இலவச விளம்பரம் - அதிகாரம் 134

கடையில் நாம் ஏதாவது பொருள் வாங்கினால் இன்னொரு பொருளை இலவசமாகத் தருகிறார்கள். உடனே மகிழ்ச்சியாக இருக்கும் ஒன்றைத் தவிர!

பாத்திரம் தேய்க்கும் பவுடருடன் இன்னொரு பாக்கெட் கொடுத்தால் உடனே உங்க மனைவியின் முகத்தில் பரவசமும், உங்க முகத்தில் சோகமும் வரும் ஏன் என்றால் பாத்திரம் தேய்க்க போவது நீங்க தானே?

ஒரு 'விதி'விலக்கு இருக்கு. அந்த விதி உங்க அம்மா, அதாவது உங்க மனைவிக்கு மாமியார் இருந்தால் நீங்க தப்பிச்சீங்க. உங்க அம்மா இருக்கும் போது உங்களை பார்த்திரம் தேய்க்க சொல்ல மாட்டாள் உங்க மனைவி. இதற்காகவே நீங்கள் உங்க அம்மாவிற்கு கடன்பட்டுள்ளீர்கள்.

ட்விட்டர்ல மக்கள் ஒண்ணும் உருப்படியா செய்வது இல்லை என்று நாலு நாள் முன்னாடி சொன்னேன். ஆனால் பாத்திரம் தேய்க்கும் வேலையை செய்கிறார்கள் என்று தெரிகிறது. இன்று இலவசம் திருவள்ளுவருக்குப் போட்டியாக வாழும் வள்ளுவனின் நற்றமிழிலில் பாத்திரம் என்ற அதிகாரத்தில் போட்ட வெண்பாம்கள்.

அதிகாரம் - பாத்திரம்

1. துலக்கிவைக்க சொன்னாலே செய்திடு இல்லை
விலக்கியே வைப்பாள் உன்னை

2. அழுத்தித் தேய்த்திடு அழுக்கெல்லாம் போயிடணும்
கழுத்தில் இருக்குதுபார் கத்தி

3. தேங்காத பாத்திரம் தெளிவான ஸ்ட்ராட்டஜி
ஏங்காது இருப்பாயே நீயும்

4. துடைத்து வைக்காதது துக்கிரித் தனமென்பாள்
சடைக்கு மேல்விழுமே குட்டு

5. பாத்திரத்தை ஊறவெச்சுப் பதமாகத் தேய்த்திடு
ஆத்திரத்தில் ஆக்காதே ஸ்க்ராட்ச்

6. நான்ஸ்டிக் பாத்திரத்தை நல்லபடி தேய்த்திடு
வான்புகழும் வாய்க்கும் உனக்கு

7. ஓராயிரம் விளம்பரம் ஒருசொட்டுப் போதுமென்று
யாராலும் முடியாதது அது

8. குக்கர் பாத்திரத்தில் எலுமிச்சை தனையிட்டால்
மக்கர் செய்யாதே அழுக்கு

9. பீங்கான் கிண்ணத்தில் சிப்பொன்று பார்த்தாலே
தாங்காது தங்கமணி மனசு

10. மஞ்சப் பொடிக்கறை மறைந்தும் போயிடவே
கஞ்சப் படாதேநீ சோப்பில்


பாத்திரம் தேய்க்க வீட்டுக்காரி விம்முனா,
வச்சுகுடு வேலைக்காரிக்கு சபினா!


பொழுது போகாமல், இந்த வெண்பாம்களை இலவசமாய் எனக்கு அனுப்பிய இலவசத்தின் ரசிகருக்கு நன்றி!

Read More...

Tuesday, January 19, 2010

நேற்றைய செய்தி, இன்றைய கார்ட்டூன்
சினிமாவை மட்டும் தான் ரீமேக் செய்ய வேண்டுமா ? காட்டுனையும் ரீமேக் செய்யலாம் :-)

செய்தி உதவி:
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6314
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1858
படம் உதவி: பழைய துக்ளக்(25-May-2006)

Read More...

Monday, January 18, 2010

ASIAN OF THE YEAR

ரீடர்ஸ் டைஜஸ்ட்! இம்மாதாந்திரியைப் பற்றி அநேகருக்கு அறிமுகம் தேவையில்லை. காலச்சக்கரத்தின் சுழற்சியில் அகப்பட்டு, தன்னுடைய சுய அடையாளத்தை இழக்காமல், இன்னமும் அதே பொலிவுடன் திகழும் ஒரு மாத சஞ்சிகை. சமுதாயத்திற்கு எவ்வகையிலாவது உண்மையிலேயே உபகாரமாக இருப்பவர்களை இனம் கண்டு கவுரவிப்பதை இவ்விதழ் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அவ்வகையில், ”இவ்வருடத்திற்கான சிறந்த ஆசியர்கள்” (ASIAN OF THE YEAR) விருதை சமீபத்தில் சிலருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. அவ்விருதைப் பெற்றவர்களுள் ஒருவரைப் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

நன்னுஜி, தில்லியின் ஒரு சேரி பகுதியைச் சேர்ந்த நடுத்தர வயது கூலித் தொழிலாளி, தன்னுடைய ரேஷன் அட்டையைத் தொலைத்து விட்டிருக்கிறார். இதனால் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் மாதாந்திர ரேஷன் பொருட்களைப் பெற இயலாத நிலைமை. அதனால் வேறு ஒரு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அது வரவில்லை. அதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகளை நேரில் கண்டும் சரியான பதிலில்லை. காரணம், அவர்கள் கேட்ட லஞ்சத் தொகையை நன்னுஜி தர மறுத்ததே!

அத்தொகையைத் தந்திருப்பதன் மூலம் நன்னுஜி தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் செய்தது வேறு. உள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனமான “பரிவர்த்தன்” என்ற அமைப்பைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டிருக்கிறார். அங்கிருந்தவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், ஏன் அவருடைய குடும்ப அட்டை மறுக்கப்பட்ட்து? என்ற காரணத்தைக் கோரி விண்ணப்பிக்கச் செய்தனர். விண்ணப்பம் அளித்த சில நாட்களுக்குள் இவருக்கு ரேஷன் அட்டை வந்து விட்டது.

இந்த “பரிவர்த்தன்” அமைப்பின் சூத்ரதாரி, அர்விந்த் கெஜ்ரிவால் என்ற 41 வயது நபர். இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடியில் மெக்கானிகல் இஞ்சினியரிங்கில் பட்டம் பெற்ற இவர், தன்னுடைய சக வகுப்புத் தோழர்களைப் போல் அமெரிக்காவிற்குச் செல்லாமல், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி IRS (Indian Revenue Service) தேறியிருக்கிறார். பிறகு வருமானவரித் துறையில் கூடுதல் கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அங்கு சக அதிகாரிகளின் ஊழல்கள் மற்றும் முறைகேடான வழியில் வருமானமீட்டுதல் போன்ற செயல்கள் இவரை வெறுப்படையச் செய்திருக்கின்ற்ன.

இச்சமுதாயச் சீர்கேடுகளைக் களைய வேண்டுமென்ற உன்னதமான நோக்குடன் தனியொரு மனிதராக இவர் 2000 ஆவது ஆண்டில் ஸ்தாபித்த்துதான் இந்த “பரிவர்த்தன்” அமைப்பு. தகவல் அறிவதற்கு பிரத்யேகமாக ஒரு சட்டம் வேண்டுமென்று முதன் முறையாக இவ்வமைப்பின் மூலம் இவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பிறகு 2005 ஆம் ஆண்டு அச்சட்டம் நடைமுறைக்கு வந்த்து, அதே ஆண்டில் தனது IRS பணியை ராஜிநாமா செய்து விட்டு முழுநேர “பரிவர்த்தன்” ஊழியராகிவிட்டார்.

ஒருமுறை, தில்லி மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு இவருடைய பரிவர்த்தன் அமைப்பினர் கூடி, அங்கு வரும் பொதுமக்களிடம், தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள லஞ்சம் கொடுக்காதீர்கள். இலவசமாகவே உங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து தர அதிகாரிகளை வற்புறுத்துங்கள் என பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.

அதிலிருந்து, பரிவர்த்தன் அமைப்பின் மூலம் லஞ்சத்திற்கு எதிரான பிரச்சாரத்தை இந்தியா முழுவதிலும் மேற்கொண்ட இவர், ஆயிரக்கணக்கான பொதுமக்களை லஞ்சத்திற்கெதிராக குரல் கொடுக்கச் செய்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, அவர்களது பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்து வைத்திருக்கிறார். அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு சிறந்த முன்மாதிரி, ஒரு மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், மகசேஸே விருது பெற்றவருமான கிரண் பேடி தெரிவிக்கிறார்.

இந்நிறுவனம் எந்த அமைப்புகளிடமிருந்தும் நன்கொடை பெறுவதில்லை. மாறாக, இதற்கென இருக்கும் உறுப்பினர்கள் அதன் தேவைகளை கவனித்துக் கொள்கின்றனர். தவிர இவ்வமைப்பின் ஊழியர்களுக்கான சம்பளம், இவ்வமைப்பின் சேவை மனப்பான்மையுடைய நலம் விரும்பிகளால் தரப்படுகிறதாம். மேலும் சில நேர்மையான அரசாங்க அதிகாரிகளும் மனமுவந்து இவ்வமைப்பிற்கு நிதியுதவி செய்கின்றனர் என்றும், தவிர அவர்கள் அனைவருமே தனிமனித சமுதாயத்தின் முன்னேற்றத்தில் விருப்பமுடையவர்கள் எனவும் தெரிவிக்கிறார்.

நமது கடின உழைப்பின் மூலமே நமது ஜனநாயகத்தைத் தழைய வைக்க முடியும் என்பது இவரது ஆழ்ந்த நம்பிக்கை.

நன்றி-ரீடர்ஸ் டைஜஸ்ட், தமிழில் யதிராஜ்


இவரைப் பற்றிப் படித்ததும், நம்ம ஊர் ட்ராபிக் ராமசாமி நினைவுதான் வந்தது. இவரைக் கூட ஏதாவதொரு பத்திரிக்கை, ரீடர்ஸ் டைஜஸ்டே கூட அடுத்த ஆண்டு கவுரவிக்கலாம். இவர் நிஜமான ஆயிரத்தில் ஒருவன்!Read More...

Sunday, January 17, 2010

ஆயிரத்தில் ஒருவன் - இட்லிவடை விமர்சனம்

டிஸ்கி: தமிழுக்கு இந்த மாதிரி படம் புதுசு. இவங்க என்னடா படம் எடுத்திருக்க போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு சென்ற பலருக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். செல்வராகவன்! அவருக்கும் அவர் குழுவினருக்கு பாராட்டுக்கள். தமிழிலும் இந்த மாதிரி படங்கள் எடுக்கலாம் என்று நிரூபித்ததற்கு.


கி.பி சோழர் பாண்டியர் வாழ்ந்த காலத்தில் தொடங்குகிறது கதை. பாண்டியர்களின் படையெடுப்பினால் சோழர்கள் வியட்நாமுக்கு தப்பி ஓடுகிறார்கள். போகும் போது பாண்டிய நாட்டு தெய்வ சிலையை திருடிக்கொண்டு போகிறார்கள்.

என்னடா ஒரே டுபாக்கூர் கதை என்று நினைப்பு கொஞ்சம் கூட வராமல் படத்தை எடுத்தவித்ததில் தான் வெற்றியே இருக்கிறது. இடைவேளைக்கு முன் பல ஆங்கில படங்களை நினைவு படித்தினாலும், அது உறுத்தலாக தெரியாதத்தற்கு காரணம், திரைக்கதையும், ஆர்ட் டைரக்ஷனுன், அதை எடுத்திருக்கும் விதமும் தான்.

தொல்பொருள் ஆராய்ச்சியை சேர்ந்த பிரதாப் போத்தன் இதை தேடிக்கொண்டு போய், காணாமல் போகிறார்.
தொல்பொருள் துறையை சேர்ந்த ரீமா சென், பிராதப் போத்தன் மகள் ஆன்டரியா அவரை தேடி செல்கிறார்கள். இவர்களுக்கு கூலி தொழிலாளியாக கார்த்திக் செல்கிறார்.

ஏழு விதமான ஆபத்துகளை கடந்து சென்று சோழர்கள் இருப்பிடத்தை கண்டுப்பிடுக்கிறார்கள். அதற்கு பிறகு நீங்களே வெள்ளித்திரையில் பார்க்கவும். திருட்டு வி.சி.டியில் பார்த்துக்கொள்ளாம் என்று நினைப்பவர்கள். ஏமாந்து போவீர்கள். தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் இது.

முதல் பாதியில் காமெடி, விறுவிறுப்பு, குளுகுளுப்பாக செல்கிறது. கார்த்திக் ரீமாசென், ஆன்டரியாவுடன் செய்யும் குறும்புகளை என் பக்கத்து சீட் பெண் ரசித்து பார்த்தார்.

ஆண்கள் பொறாமை பட்டார்கள். மலை, மேடுகள், காடுகள்... என்று அலையும் கேமரா இவர்களின் மேற்பரப்பிலும் மேய்ந்து செல்கிறது. கேமரா ராம்ஜி!

இடைவேளை போது, ஒரு பெண்மணி பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு 'வாவ், சூப்பர்' என்று எஸ்.எம்.எஸ் செய்துக்கொண்டு இருந்தார். பெண்களுக்கும் இந்த படம் பிடித்திருக்கு!

பாண்டியனின் வாரிசாக வரும் ரீமாசென், "நான் செம கட்டையில்ல..." என்று வசனம் பேசுகிறார். அவர் உண்மையை சொன்னதால் நமக்கு அந்த வசனம் தப்பாக தெரியவில்லை. இவருக்கு குரல் கொடுத்திருப்பவர் ஐஸ்வரியா தனுஷ் என்று போடுகிறார்கள், ஆனால் இரண்டாம் பாதியில் சுத்த தமிழில் இவர் பேசும் வசனம் ரோகினியின் குரல் மாதிரி இருக்கிறது. சூப்பர்!

ஆன்டரியா நான் என்ன சளைத்தவாளா என்று தன் அனாடமி காண்பித்து நிரூபிக்கிறார். ஆனால் ரீமாசென் கோப்பையை தட்டி செல்கிறார்.

கூலிதொழிலியாக வரும் கார்த்திக் சரியான பொறுக்கியாக நடித்திருக்கிறார். இரண்டு ஃபிகர்களையும் பார்வையாலேயே துவம்சம் செய்கிறார். கேமரா செல்லாத இடங்களுக்கு இவர் பார்வை செல்லுகிறது. முதல் பகுதியில், ஆண்டரியாவை பின்னாடி தள்ளிக்கொண்டு போவதும் "பாக்கெட்டிலேயே காண்டம்" வைத்திருக்கேன் என்று வசனம்பேசுவதும், குளிருக்கு ரீமா ஆண்டரியாவை இவர் 'கையாளும்' விதம் நம் வயிற்றை சூடாக்கிறது. பீர்க்கும், ஃபிகருக்கும் வாயை திறக்கும் இவர் எம்.ஜி.ஆர் ரசிகர் !

முதல் பகுதியில் ஆன்டரியாவுக்கும், ரீமாவுக்கு வெடிக்கும் "Fuck, Bitch" என்ற வசனம், ஆங்கில யுத்தம் என்றால் பிற்பகுதியில் சுத்த தமிழில் "லிங்க தரிசன" வசனம் தமிழ் பித்தம்!. மொழி எதுவாக இருந்தால் என்ன ?

சோழமன்னனாக வரும் பார்த்திபன், பில்லி சூனியக்காரர் போல இருந்தாலும், நடிப்பில் கம்பீரமாக இருக்கிறார்.

படத்தின் பிற்பகுதியில் 13ஆம் நூற்றாண்டு தமிழை கொண்டு வரும் வசனங்கள் முதலில் சிரிப்பாக இருந்தாலும், பிறகு அதுவே சுவாரஸியமாக இருக்கிறது. இவ்வளவு தமிழ் வார்த்தைகளையா நாம் தொலைத்துவிட்டோம் ?

படம் முழுக்க பிரமாண்டம்,பிரமிப்பு தான் இந்த படத்திற்கு ஹைலைட். தசாவதாரம் முதல் காட்சியில் வரும் அரச காட்சிகளை பார்த்து பிரமித்த நாம், இதில் அதைவிட 1001 பங்கு கலை நயத்துடன் வரும் காட்சிகள் நம் கண்களுக்கு விருந்து. ஆர்ட் டைரக்டருக்கு சுற்றி போட வேண்டும். பல காட்சிகளில் வரும் பழங்காலத்து ஓவியங்கள், அட போட வைக்கிறது.

பல இடங்களில், நாம் பார்ப்பது தமிழ் படம் தானா என்று வியக்க வைக்கிறது. பல ஓட்டைகள் இருந்தாலும், அதற்கு மேலே பல அதிரடி காட்சிகள் இருப்பதால் நமக்கு அந்த ஓட்டைகள் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

இந்த படத்தை தூக்கி நிறுத்தும் மற்றொன்று பின்னணி இசை - ‌ஜி.வி.பிரகாஷ். இன்னும் கொஞ்ச நாளில் ரஹ்மானுக்கு போட்டியாக இருப்பார். அதே மாதிரி சவுண்ட் எஃபெக்ட்ஸும் அருமை. சில இடங்களில் சின்ன சின்ன குருவி சவுண்ட், எங்கோ கேட்கும் வீணை இசை என்று கலக்கியிருக்கார்கள்.

படம் முழுக்க பலருடைய உழைப்பு தெரிகிறது, தமிழுக்கு புதிய முயற்சி, நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.


ஆயிரத்தில் ஒருவன் இல்லை, பலர்.


இட்லிவடை மார்க் 7.5/10

Read More...

அப் ( UP ) - சினிமா விமர்சனம்

கார்ட்டூன் படங்களுக்கும் மற்ற படங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், கார்ட்டூன் படங்கள் எல்லாம் நாம் இரண்டு மூன்று முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. Finding Nemo, Jungle Book, Lion King என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் வால்டிஸ்னி மற்றும் பிக்ஸார் குழுமத்தின் பத்தாவது படைப்பு'அப்' ( UP ) எனும் ஆங்கில முழுநீள நகைச்சுவை கலந்த அனிமேஷன் திரைப்படம்

இந்தப் படத்தின் முதல் ஆச்சரியம் குழந்தைகளை குறிவைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகன் 78 வயதான பலூன் விற்கும் கார்ல் பிரடெரிக்சன்.

அவரது வாழ்க்கையின் நோக்கம் தென் அமெரிக்கக் காடுகளின் வனாந்தரங்களில் அலைவது. ஒருநாள் முதியோர் இல்லத்திற்கு செல்லவேண்டிய நாளில், அவரது நேசிப்பிற்குரிய வீட்டுடன் பல்லாயிரக்கணக்கான பலூன்களின் உதவியுடன் பாரடைஸ் ஃபால்ஸ் என்ற இடத்திற்கு பறந்து செல்கிறார்.

கார்லுக்குத்தெரியாமல், பறந்துகொண்டிருக்கும் அவரது வீட்டில் வேண்டாத விருந்தாளியாக ரஸ்ஸல் எனும், எதையும் சாதகமாகவே சிந்திக்கும் எட்டு வயது சிறுவனும் பயணிக்கிறான்.

ரஸ்ஸலுக்கு ”சீனியர் வைல்டர்னஸ் எக்ஸ்ப்ளோரர்” என்ற பதக்கத்தைப் பெற முதியவர்களுக்கு உதவியிருக்க வேண்டும். அதற்காகத்தான் கார்லுடன் சேர்ந்து செல்கிறான். ரஸ்ஸலும், கார்லும் இணைந்து பயணிக்கின்றனர்.

இருவரும் இணைந்து தொலைந்துபோன உலகத்தில் விசித்திரமான விலங்குகளை சந்திக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இருவரும் தங்களுக்குள் நட்பை உணர்கின்றனர், இயற்கையான நட்பின் ஆழத்தையும் அறிகின்றனர்.

மான்ஸ்டர் இன்க் என்ற பிக்சார் குழுமத்தின் முதல் படத்தை இயக்கிய பீட் டாக்டர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இணை இயக்குனரும் கதாசிரியருமாக ஃபைண்டிங் நிமோ புகழ் பேட்டர்சனுடன் இணைந்து மிக அழகாக, அற்புதமாக வால்ட்டிஸ்னி / பிக்ஸார் குழுமத்தின் படைப்புகளில் ஒன்றாய் இதை ஆக்கியிருக்கின்றனர்.

இந்தப் படத்தின் விசேஷம் இன்பமும், துன்பமும் சம அளவில் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. வால்ட்டிஸ்னியின் எல்லாத் திரைப்படங்களிலும் இதைக் காணலாம்.

இந்தப்படத்தில் மகிழ்ச்ச்சியாக 13 அடி உயரம் கொண்ட கெவின் என்ற பறவையும், அதன் விசித்திர நிறங்களும், அதன் குடும்பமும்.

டக் எனப்படும் கெவினைத் தேடும் குழுவிலிருக்கும் ஒரு நாயும், அது கார்லுடனும், ரஸ்ஸலுடனும் நட்பு பாராட்டுவதும்

இந்தப் படத்தில் கண்ணீருக்குக் காரணம் கார்ல் மற்றும் எல்லியின் உள்ளார்ந்த நட்பும், பின்னர் காதலும், எல்லியின் மரணமும்.

கார்ல், ரஸ்ஸல், கெவின் மற்றும் டக் இவர்களுக்குள்ளான உள்ளார்ந்த அன்பும், பினைப்பும்.

கேன்ஸ் திரைப்பட விழாவிற்குச் சென்ற முதல் பிக்ஸார் குழுமத்தின் அனிமேஷன் திரைப்படம் இதுவே.

முதலில் சொன்னதுபோல குழந்தைகளுக்கான திரைப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக 78 வயது முதியவரையும், வயதாவதன் சோகத்தையும், மரணத்தையும் காண்பித்து ஆனால் அதை உணரவிடாத அளவு அழகாக திரைப்படத்தை எடுத்திருப்பதற்காக இந்த குழுவினரை எவ்வளவு பாராடினாலும் தகும்.

படத்தில் முதியகதாபாத்திரங்கள் அனைவரும் சதுரவடிவிலும், இளவயது பாத்திரங்கள் அனைவரும் வட்ட வடிவத்திலும் கான்பிக்கப்பட்டுள்ளனர்.

பிக்ஸார் குழுமத்தின் படங்களில் கார்களாகட்டும், மான்ஸ்டராகட்டும், மீன் ஆகட்டும் எதைவைத்து படம் எடுத்தாலும் அதை நாம் நம்பும் அளவு எடுப்பதிலேயே அவர்களது வெற்றி இருக்கிறது என நான் நம்புகிறேன்.

அனைவருக்குமான சிறந்த பொழுதுபோக்கு அனிமேஷன் திரைப்படமாக ”அப்” திரைப்படத்தை பரிந்துரைப்பேன்.

Read More...